தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்
Showing posts with label சினிமா சினிமா. Show all posts
Showing posts with label சினிமா சினிமா. Show all posts

Tuesday, July 07, 2009

பாட்ஷா - வலையுலக விமர்சனங்கள்!!!

சூப்பர் ஸ்டார் நடித்த ”பாட்ஷா” படம் வரும் போது தமிழ்ல நிச்சயம் வலைப்பதிவு யாரும் எழுதிருக்க மாட்டாங்க. அதனால பாட்ஷா படம் இன்னைக்கு சூழ்நிலைக்கு வந்திருந்தா இல்லைனா அன்னைக்கு இந்த அளவுக்கு நாம எல்லாம் இருந்திருந்தா நம்ம ஆளுங்க எப்படி எல்லாம் விமர்சனம் எழுதிருப்பாங்கனு ஒரு கற்பனை.


ஏர்சிம் :


பாட்ஷா ‍..
தவறு செய்பவர்களை தண்டிப்பவருக்கு பாட்ஷா, கஷ்டப்படும் ஆட்டோக்காரர்களுக்கு மாணிக்கம். இது தான் முதல் முடிச்சு.


மாணிக்கம் ஏன் பாட்ஷாவாக மாறினான்? அவனுக்கு மட்டன் பிரியாணி கிடைக்காததினாலா? அப்படியே மட்டன் பிரியாணி கிடைத்தாலும் அதில் லெக் பீஸ் கிடைக்காததாலா? அவன் மறுபடி மாணிக்கமான பின்பு அந்த பாட்ஷாத்தனம் என்ன செய்யும்? இது இரண்டாவது முடிச்சி...


இந்த இரண்டு முடிச்சிக்களுக்கு இடையில் இருக்கும் நூலில் ஆட்டோக்காரர்களின் வாழ்க்கையையும் ஆட்டோவையும் தொங்கவிடுகிறது திரைக்கதை....


குறிப்பிட தகுந்த பின்னூட்டம்.


வைத்தியக்காரன் :


ஏர்சிம், நீங்கள் எழுதிய பதிவுகளிலேயே இதுதான் சிறந்தது என்று அடித்து சொல்லலாம்.


'பாட்ஷா' படத்தினுள் இன்னொரு படம் நுணுக்கமாக இருக்கிறது. பிளாஷ் பேக்கிற்குள் ஒரு ஃபிளாஷ் பேக். அதன் அடியை அழகாக பிடித்து இழுத்திருக்கிறீர்கள்.


படம் முழுக்கவே எதிர்மறைகளால் ஆனவைதான். உதாரணமாக, மாணிக்கம், ‍ பாட்ஷா; (இரண்டையும் சேர்த்தால் "மாணிக் பாட்ஷா" அது தான் படத்தோட கதை)


படத்தின் ஆரம்பத்தில் அறிமுகமாகும் மாணிக்கத்தை முதலில் காட்ட மாட்டார்கள். பூசணிக்காயைத் தான் காட்டுவார்கள். அது ஒரு குறியீடு. ஆனால் பாம்பேயில் நேராக பாட்ஷாவைக் காட்டுவார்கள். அதாவது இங்கு மட்டும் தான் அவன் பாட்ஷா. அவனை அவனாகவே ஏற்கிறார்கள்.


மொத்தத்தில் ஒவ்வொரு ப்ரேமிலும் ஒரு அர்த்தம், குறியீடு இருக்கிறது.


சாரி ஏர்சிம். பின்னூட்டம் பதிவை விட நீண்டுவிட்டது.


................................................


சாதுஷா :


பாட்ஷா அண்ணன்களின் காவியம்.


"தங்கச்சிக்கு அண்ணன்னா எனக்கு அண்ணன். எனக்கு அண்ணன்னா உங்களுக்கு அண்ணன். உங்களுக்கு அண்ணன்னா ஊருக்கெல்லாம் அண்ணன். அண்ணன்டா...". நடுமண்டைல பலமான இரும்பு கம்பியால ”நச்சு”னு அடிச்ச மாதிரி இருந்தது இந்த வசனம். தங்கச்சி இருக்குற அண்ணன்களுக்கு தெரியும் அதன் வலிமை.


இது நட்புக்கான படமா? இல்லை. பழிவாங்கும் படமா? இல்லை. அப்பா செண்டிமெண்ட் படமா? இல்லை. பின்ன?


"வள்ளி", சில ஆண்டுகளுக்கு முன் வந்து சினிமா பார்ப்பவர்களின் கண்ணில் காலை விட்டு ஆட்டியது. பீரு தன்னுடைய விமர்சனத்தில் அதை "மொக்கைகளின் காவியம்" என்று குறிப்பிட்டிருந்தார்.


இது ஏன் அண்ணன்களின் காவியம்?


எத்தனை வித அண்ணன்கள். தங்கைகளை, ரம்பையும் ஊர்வசியும் மாதிரி செம சைட்டுடானு ஆனந்த்ராஜ் சொல்லும் போது தலை குனிந்து நிற்கும் ஒரு அண்ணன். அதைக் கேட்டு கோபம் கொள்ளும் ஒரு அண்ணன். தம்பியை தடுத்து நிறுத்தும் ஒரு அண்ணன்.


விஜயக்குமாருக்கு டாட்டராக இருக்கும் யுவராணியை, நீ கண்டிப்பா டாட்டர் ஆகறனு, டாக்டருக்கும் டாட்டருக்கும் வித்தியாசம் தெரியாத ஒரு அப்பாவி அண்ணன். தங்கை ஃபெயிலானதும் அவளை வெறுப்பேற்றி வாசலில் ஆரத்தி எடுக்கும் ஒரு அண்ணன். தன் தங்கை ஒரு டுபுக்கு மண்டையனைக் காதலிக்கிறாள் என்று தெரிந்தவுடன் திருமணத்தை நடத்தி வைக்க போராடும் ஒரு அண்ணன். இப்படி அண்ணன்களில் பல பரிமாணங்கள்.


கஜேந்திரா எடுத்த சுரேஷ் கிருஷ்ணாவா? அடப்போங்கடா. இவரைப் போயி இத்தனை நாளா பாபா, ஆளவந்தானு எடுக்க வைச்சிட்டு வேஸ்ட் பண்ணிட்டீங்களேய்யா என்று எண்ணினேன்.


குறிப்பிட தகுந்த பின்னூட்டம்.


வராதகவுண்டன்:
நக்மா, யுவராணி என்ற இரண்டு அழகு தேவதைகள் பற்றி எழுதாத சாதுஷாவுக்கு கண்டனங்கள்.


....................................................................


காவி.மன்னன் :


பாட்ஷாவும் பார்ப்பனர்களின் சனாதன மதமும்


பழிக்கு பழி, நட்பு இவற்றை அடிப்படையாகக் கொண்ட எத்தனையோ திரைப்படங்கள் வெற்றிப் பெற்றிருக்கின்றன. பழிக்கு பழியும், நட்பும் தனிமனிதனுக்கு இன்றியமையாத ஒன்று என்பதால் திரையுலகினர் அனைவருமே அன்றாடம் புது அரியில் மாவு அரைக்கிறார்கள். பிறகு அந்த மாவில் இட்லி, தோசை என்று சுடுவார்கள். ச்சே. ஒரு ஃப்ளோல அப்படியே வந்துடுச்சி. இப்ப பாயிண்டை பிடிக்கிறேன்.


இந்துவாக இருப்பவன் அப்பாவியாகவும், நேர்மையாளனாகவும், பரோபகாரியாகவும் இருப்பது போல் காட்டியுள்ளார்கள். அதே நபர் முஸ்லீமாக மாறும் போது கொலை செய்பவராகவும், கொடுரமாக ஒரு கிருஸ்துவனின் கையில் கத்தியால் குத்துவதைப் போலவும் காட்டியுள்ளார்கள். அங்கே கூட ஒரு இந்துவின் கையில் கத்தியைக் குத்தவில்லை. பிள்ளையார் சதூர்த்தி கொண்டாடும் இந்துக்களை சென்று காப்பாற்றுகிறார். அதே போல் முஸ்லிமாக இருக்கும் அன்வர் பாட்ஷாவைக் கொல்கிறார்கள். இந்துவாக இருக்கும் மாணிக்கத்தை விட்டு விடுகிறார்கள்.


வில்லனாக ஒரு கிருஸ்துவனைக் காட்டியுள்ளார்கள். அவன் பல கொலைகளை செய்வது போலவும், கள்ளக்கடத்தல், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவது போலவும் காட்டியுள்ளார்கள். அவனை எதிர்க்க, இந்துவாக இல்லாமல் இஸ்லாமியனாக மாறி நாயகனும் கள்ளக்கடத்தல் மற்றும் தாதாவாக மாறுவது போல் காட்டியுள்ளார்கள். கடைசியில் மாணிக்கத்தின் ஆட்களில் ஒரு சீக்கியனைத் தான் கொல்கிறார்கள். அப்பொழுது கூட இந்துக்களுக்கு பிரச்சனை இல்லை.


முன்பெல்லாம் திரையில் வில்லன்களாக கூலிப்படையாக இயங்கும் ஒருவரையோ, அல்லது முரட்டு முகம் கொண்டவர்களையோ காட்டுவார்கள், தற்போதெல்லாம் வில்லன்கள் என்றால் அது கிருஸ்துவர்கள் என்பதாகவே காட்டப்படுகிறது. அதே போல் கள்ளக்கடத்தலில் ஈடுபடுபவர்கள் எல்லாம் இஸ்லாமியர்களாக காட்டப்படுகிறது. இது சனாதன மதத்தைப் பின்பற்றும் இந்துக்களின் பொறாமையே காரணம்.


குறிப்பிட தகுந்த பின்னூட்டம்.


fer0z 9@ndhi :


இதில் சில பொதுவான கருத்துகளில் எனக்கும் உடன்பாடு உண்டு. இந்துக்களின் மன நிலை மாற வேண்டும். எனக்குத் தெரிந்து மற்ற இரு மதத்தினரைவிட மிக ஆபத்தானவர்கள் இவர்கள். படத்தைப் பற்றி சொல்ல எதுமில்லை.. நான் பார்க்கவில்லை.


...............


புறநாழிகை மண் சகாதேவன், லேண்ட் லைனேந்திரன் விமர்சனம் எல்லாம் போடணும்னு பார்த்தேன். பதிவு ஏற்கனவே ரொம்ப பெருசாகிடுச்சி. பதிவு பிடிச்சிருந்தா சொல்லுங்க. அடுத்து நிறைய படத்துக்கு இப்படி விமர்சனம் பார்க்கலாம்.

Sunday, June 14, 2009

பசங்க

”பசங்க படத்தை நிச்சயம் மிஸ் பண்ணிடாத” இதை தேவ் அண்ணா, கைப்ஸ் அண்ணா ரெண்டு பேருமே சாட் பண்ணும் போது சொன்னாங்க.

நேத்து தான் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. என் ரூமெட்கிட்ட பயங்கர பில்ட் அப் கொடுத்துட்டு படம் பார்க்க ஆரம்பித்தோம். இந்த வருஷத்துலயே இதை சிறந்த படம்னு வேற சொல்றாங்க. இன்னொரு அஞ்சலினு சொல்றாங்க அப்படி இப்படினு பயங்கர பில்ட் அப். 



பெயர் போடும் போதே ஓரளவு கிரியேட்டிவிட்டி தெரிஞ்சிது. சின்ன பசங்க விளையாட்டு எல்லாம் பேக் க்ரவுண்ட்ல வரும், பெயர் அப்படியே ப்ளாக் ஸ்கிரின்ல ஓடிட்டு இருக்கும். அதுக்கு அப்பறம் அந்த மூணு வாண்டுகளைப் பத்தி போலிஸ்ல கம்ப்ளைண்ட் கொடுக்கும் போதும் அந்த பசங்களைக் காட்டும் போதும் ஓவர் பில்ட் அப்பா தெரிஞ்சிது. 

அதே மாதிரி அன்புக்கரசு அறிமுகமும் செம பில்ட் அப். அவன் வண்டி ஓட்டறதும், எக்ஸர்சைஸ் செய்யறதும் ஏதோ பத்ரி படம் பார்க்கற எஃபக்ட்ல இருந்தது. எனக்கு அதைப் பார்க்கும் போது செம கடுப்பு. இந்த படத்துக்கு இவ்வளவு பில்ட் அப்பானு. அதுவும் சின்ன பசங்களுக்குள்ள கேங் வார்னு காட்டும் போது அதைவிட எரிச்சல். ஆனா அதுவே போக போக அந்த பசங்களால பெற்றோர்களுக்கிடைய ஆரம்பிக்கும் பிரச்சனைனு களம் மாறும் போது சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது.

அதுக்கப்பறம் அப்பா, அம்மாக்கிடைய நடக்கும் பிரச்சனை பசங்கள எப்படி பாதிக்குதுனு பார்க்கும் போது ஏதோ மனசைக் குத்த ஆரம்பித்துவிட்டது. அன்புக்கரசு அப்பாவும் வாத்தியாரும் பேசிக் கொள்ளும் இடம் மிகவும் ரசித்தேன். இந்த மாதிரி கணவன், மனைவி சண்டை நான் நிறைய பார்த்திருக்கேன். அதனால பாதிக்கப்பட்ட பசங்களும் எனக்கு தெரியும். 

என் அப்பா, அம்மா கூட நாங்க சின்ன வயசுல இருக்கும் போது இப்படி நிறைய சண்டைப் போட்டிருக்காங்க. அன்புக்கரசு அழுத மாதிரி நான் கூட அழுதிருக்கேன். அப்பறம் நான் பெருசாக பெருசாக சண்டை ஓரளவு குறைந்தது. இப்பக்கூட எப்பவாது சண்டைப் போட்டா ”ஆமாம் புது மணத் தம்பதிகள். சண்டை போடறீங்க. நிறுத்துங்க” அப்படினு நான் கிண்டல் பண்றதுல ரெண்டு பேரும் சண்டையை நிறுத்திடுவாங்க.


அப்பறம் அன்புக்கரசு சித்தப்பாக்கும், ஜீவா அக்காக்கும் நடுவுல ஓடற காதல் ட்ராக் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. ரசிக்கும்படியா இருந்தது. அதுவும் பல நாடுகள்ல இருந்து ஃபோன் பண்ற கான்செப்ட் அட்டகாசம். நல்லா சிரிக்க வைத்தது.

ஜீவா, அன்பரசு ரோல் பண்ண சின்ன பசங்க ரெண்டு பேருமே அட்டகாசமா நடிச்சிருந்தாங்க. குறிப்பிட்டு சொல்லனும்னா எனக்கு ஜீவா ரோல்ல பண்ண குட்டிப் பையன் நடிப்பு ரொம்ப பிடிச்சிருந்தது. அதே போலவே பகோடா, குட்டிமணி, அப்பத்தா ரோல்ல நடிச்ச பசங்களும் அருமை. படத்துல நடிச்ச யாருமே குறை சொல்ற மாதிரி நடிக்கல. எல்லாமே இயல்பான நடிப்பு தான். 

சில காட்சிகள்ல இயல்புக்கு மீறி, பிஞ்சிலே முத்தின மாதிரி காட்டியிருந்தாலும் ரசிக்கும் படியாவே இருந்தது. இந்த படத்தை பசங்களுக்கு ரெக்கமெண்ட் பண்றதை விட பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நான் ரெக்கமெண்ட் செய்வேன். நிச்சயம் பாருங்க. முதல் பாதியை இன்னும் கொஞ்சம் நல்லா எடுத்திருந்தா மிகச் சிறந்த படமா வந்திருக்கும். சசிக்குமார் நல்ல இயக்குனர் மட்டுமில்ல நல்ல தயாரிப்பாளரும் கூடனு நிருபிச்சிருக்காரு. இயக்குனர் பாண்டிராஜுக்கு என் வாழ்த்துகளும், நன்றிகளும். 

தியேட்டரில் பார்க்க வாய்ப்பு கிடைத்தால் தவறாமல் பார்க்கவும். 

சும்மா கடைசியா ஒரு பஞ்ச் : “பசங்க” - பசங்களுக்கான படமல்ல. பசங்களைப் பற்றிய படம். பெரியவர்களுக்காக

Thursday, June 11, 2009

காதல்னா சும்மா இல்லை

இன்னைக்கு எங்கயே ஆன்லைன்ல மேஞ்சிட்டு இருக்கும் போது (மேயறதுக்கு நீ என்ன மாடானு கேட்டு புடாதீங்க) ராஜ் டீவி திரை விமர்சனம் பார்க்க வாய்ப்பு கிடைச்சிது. அதுல அ, ஆ, இ, ஈ விமர்சனமும், காதல்னா சும்மா இல்லை விமர்சனமும் பார்த்தேன். ரெண்டு படமும் நல்லா இருக்குற மாதிரி ஒரு எண்ணம். சரி இன்னைக்கு எப்படியும் பார்த்துடுவோம்னு களம் இறங்கினேன். காதல்னா சும்மா இல்லை பார்க்க வாய்ப்பு கிடைச்சிது.

”காதல்னா சும்மா இல்லை” இந்த படத்துக்கு பெரிய மைனஸா நான் நினைக்கிறது படத்தோட பேர் தான். எனக்கு படம் ரொம்ப பிடிச்சிருந்தது. கமிலினியைத் தேடி கதாநாயகன் புறப்படும் இடத்தில் ஆரம்பிக்கும் படம் ரயில்வே ஸ்டேஷனில் கண்டுபிடிக்கும் போது முடிகிறது. கதாநாயகியைத் (கமிலினி) தேடும் படலத்தில் வாழ்க்கையை புரிந்து கொள்கிறார் பணக்கார நாயகன். அவருடைய இருபது லட்ச ரூபாய் பைக்கை ஆட்டயைப்போட (திண்டிவனம் ஏரியால இந்த வார்த்தை எல்லாம் புழங்குவாங்களானு தெரியல) அவருக்கு உதவுவது போல சேருகிறார் ரவி கிருஷ்ணா. பிறகு அவரே நாயகனுக்கு நாயகியைக் கண்டுபிடிக்க உதவுகிறார். 

காதல்ல மொத்தம் மூணு வகை இருக்காம், லவ், பிக் லவ், க்ரேட் லவ். லவ் ரெண்டு மாசம் எஃபக்ட் இருக்குமாம், பிக் லவ் ரெண்டு வருஷம் எஃபக்ட் இருக்குமாம். க்ரேட் லவ்னா மொத்த வாழ்க்கையையே மாத்திடுமாம். இந்த படம் மூணாவது வகை காதலைப் பத்தி தான் பேச போகுதுனு படத்து பேரை வெச்சே சொல்லிடலாம்.

படத்துல எனக்கு பிடித்த விஷயங்களை சொல்லிடறேன்.

படம் பார்க்கவே ஜாலியா இருந்தது. ரவி கிருஷ்ணா இப்படி எல்லாம் கூட நடிப்பாரானு ஒரு சந்தேகம். ஒரு வகைல அவருக்கு ஏத்த கேரக்டர் தான். அதை அழகா செய்திருந்தார். அவர் பேசற தமிழ் எனக்கு ரொம்ப பிடிச்சது. டயலாக்ஸும் அருமை. “உங்க பைக்கு சும்மா பறக்குது பாஸு. ஜப்பான்காரன்னா சும்மாவா? அவன் மூக்கு தான் சப்பை. மூளை செம்ம ஷார்ப்பு” இந்த மாதிரி பல வசனங்கள் எனக்கு பிடிச்சிருந்தது. ரவி கிருஷ்ணா படத்துக்கு பெரிய ப்ளஸ். 7G படத்துக்கு பிறகு அவர் நல்லா பண்ண படமா இது தான் எனக்கு தெரிஞ்சிது. 


கமிலினி வழக்கம் போல ரொம்ப அழகு, ரொம்ப அமைதி. செம ஹோம்லி. 

அடுத்து கதாநாயகனா அறிமுகமான ஷர்வானந்தும் குறை சொல்ற மாதிரி இல்லை. முதல் படத்துக்கு நிறைவா செஞ்சிருக்காருனே சொல்லலாம். குறிப்பா ஆக்‌ஷன் சீன்ல அவரோட பாடி லேங்வேஜ் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. சரியா அழ வரலை. ஆனா முதல் படம்னு மன்னிச்சிடலாம். 

படத்துல டச்சிங் சீன்ஸ் நிறைய இருக்கு. கமிலினி அறிமுகமே அப்படி ஒரு டச்சிங் சீன்ல தான். 


”ஜெய் சம்போ சம்போ சம்போ” பாட்டு எனக்கு பிடிச்சிருந்தது.   

படத்துல சில குறைகளும் இருக்கு. அநேகமா இது தெலுகு படம் காப்பியா இருக்கும்னு நினைக்கிறேன். நக்சலைட் சீன்ஸ் எல்லாம் அப்படி தான் தெரியுது. திண்டீவனம் ஏரியால எங்க நக்சலைட்ஸ் இருக்காங்க? அந்த மாதிரி சீன்ஸ் எல்லாம் தெலுகு படத்துக்கு தான் ஒத்து வரும். அதையெல்லாம் தூக்கிட்டு தமிழ் படத்துக்கு ஏத்த மாதிரி மாத்திருக்கனும். 

அதே மாதிரி படத்தை இன்னும் ரொம்ப அழகா கவிதை மாதிரி சொல்லியிருக்கலாம்னு தோணுது. கொஞ்சம் வெட்டியிருக்கணும். அப்பறம் ரசிக்கிற மாதிரியான காட்சிகளை இன்னும் அதிகமாக்கியிருக்கலாம். 

பார்க்க வாய்ப்பு கிடைத்தா தவறாம பார்க்கலாம். 

Sunday, March 22, 2009

சிவாஜி ஸ்பெஷல்

இசை கேட்டால்



எங்கிருந்தோ வந்தான்




தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்




ஒரே ஒரு ஊரிலே




உள்ளதை சொல்வேன்



Happy இன்று முதல் Happy



அந்த நாள் ஞாபகம்.. நெஞ்சிலே வந்ததே நண்பனே




உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதடா



இதுக்கெல்லாம் நான் விளக்கம் சொல்றதை விட ஜி.ரா அருமையா வந்து சொல்லுவாரு... I am the waiting :)

Saturday, March 07, 2009

சிவாஜி ஸ்பெஷல்

ஆண்டவன் கட்டளை படத்திலிருந்து ... ஆறு மனமே ஆறு. அட்டகாசமான பாடல். நான் ஒன்பதாவது படிக்கும் போது, நாம பெருசாகி ஒரு படம் எடுக்கனும்னு நினைச்சிட்டு இருந்தேன். ஹீரோ The Perfect Manஆக இருக்கனும்னு காட்டற மாதிரி. இந்த படத்தை பார்த்தவுடன் எனக்கு ஒரே ஆச்சர்யம். நான் நினைச்ச கதைக்கு 60% ஒத்து வந்துச்சு. முதல் சீன்ல சிவாஜி காலேஜ் போகும் போது அதை பார்த்து ஒருத்தர் கடிகாரத்தை திருத்துவார். அந்த அளவுக்கு அட்டகாசமா ஒரே சீன்ல அவரோட கேரக்டரை விளக்கிருப்பாங்க. க்ளைமாக்ஸ் மட்டும் கொஞ்சம் சொதப்பல் (என்னை பொருத்தவரை). இந்த படத்துல எல்லா பாட்டும் அருமையான பாடல்கள் தான். சந்திரபாபு பாடுற புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி பெற்றதில்லை பாட்டு இந்த படம் தான்.



புதிய பறவை படத்திலிருந்து... பார்த்த ஞாபகம் இல்லையோ?
ஸ்டைல்னா என்னனு இந்த பாட்டை பார்த்து தெரிஞ்சிக்கோங்க. ரஜினி காந்த் சிவாஜியை ஸ்டைல் சாம்ராட்னு சொன்னது எவ்வளவு உண்மைனு இந்த ஒரு பாட்டை பார்த்தா தெரிஞ்சிக்கலாம். இந்த படத்துல வர  உன்னை ஒன்று கேட்பேன், ஆஹா மெல்ல நட, மெல்ல நட பாட்டும், எங்கே நிம்மதி எங்கே நிம்மதி எனக்கு ரொம்ப பிடிக்கும். சரோஜா தேவி இந்த படத்துக்கு எத்தனை மை டப்பா காலி பண்ணாங்கனு எனக்கு ஒரு சந்தேகம்.




பாவ மன்னிப்பு படத்திலிருந்து... வந்த நாள் முதல் இந்த நாள் வரை. Excellent lyrics. இந்த பாடல் வரிகள் எத்தனை உண்மை.




பட்டிக்காடா பட்டணமா படத்திலிருந்து... அடி என்னடி ராக்கம்மா. செம்ம குத்து. இது செம மசாலா படம். இந்த கதையை கொண்டு நிறைய படம் வந்துடுச்சி. ஜெயலலிதா இதுல சூப்பரா நடிச்சிருப்பாங்க.



ஆலயமணி படத்திலிருந்து... கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா? Excellent Lyrics

இந்த படத்துல சிவாஜி Anti-hero. பயங்கரமான சுயநலவாதி.  முதல் காட்சிலயே அதை விளக்கிடுவாரு இயக்குனர். கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியும் இதுல பாந்தமா இருப்பாங்க. வாய்ப்பு கிடைத்தால் தவறாமல் பாருங்க. இதுல எனக்கு பிடிச்ச இன்னொரு பாடல் சட்டி சுட்டதடா கை விட்டதடா. 





Last but Not least... Kathazha kannala Remix


இது தொடர் பதிவா வரும். ஏன்னா ஒரு பதிவுல சிவாஜியை அடைக்க முடியாது. 

இந்த பாடல்களை youtubeல் வலையேற்றியவர்களுக்கு என் நன்றி.

Monday, February 23, 2009

நான் கடவுள்! சில பதில்கள், பல கேள்விகள்

நேற்று ஒரு வழியாக நான் கடவுள் பார்த்தாகிவிட்டது. 

பல விமர்சனங்களுக்கிடையே எனக்கு படம் பிடித்திருந்தது. வலைப்பதிவில் பல கேள்விகளை முன் வைத்திருந்தனர் நம் நண்பர்கள். அந்த கேள்விகள் மனதில் பதிந்திருந்து படம் பார்த்ததால் சில எண்ணங்கள் உடனே என் மனதில் பட்டன. அதை பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு. இது விமர்சனமல்ல. எனக்கு விமர்சனம் பண்ணவும் தெரியாது. ஒரு படத்தில் எது பிடித்திருந்தது எது மனதை நெருடியது என்ற மட்டுமே சொல்ல தெரியும்.

முதல் கேள்வி : கண் பார்வையற்றவருக்கு அழகில்லாதவரை திருமணம் செய்து வைத்தால் என்ன தவறு?

என் மனதில் தோன்றிய பதில். இந்த உலகத்தை நாமே பல முறை நம் பெற்றவர்களும், நண்பர்களும், சுற்றி இருப்பவர்களும் போட்டுவிடும் கண்ணாடியால் தானே பார்க்கிறோம். நமக்கு ஒரு சட்டை பிடித்து அதை அணிந்து வருகிறோம் என்று வைத்து கொள்ளுங்கள். அதை பார்த்து ஒரு பத்து பேர் ”என்ன பாலாஜி, இந்த மாதிரி டிசைன்ல சட்டை போட்டிருக்க. உனக்கு இது எடுப்பாக இல்லை” என்று சொன்னால் அடுத்த முறை அந்த சட்டை அணிய எத்தனை முறை யோசிப்போம். அது போலவே அம்சவல்லி உலகை தன்னை சுற்றி இருக்கும் தன் நண்பர்கள் மூலமே அறிகிறாள். அவளை என்ன செய்ய போகிறார்கள் என்பதே அவளுக்கு சொல்லப்படவில்லை. அவளுக்கு ஏதோ பெரிய தீங்க ஏற்பட போகிறது என்பது மட்டுமே அவளுக்கு தெரியப்படுத்துகிறார்கள். 

அவளுக்கு தெரியப்படுத்துபவர்களும் அந்த விஷயத்தை அவர்கள் மனதில் மிகவும் கொடுமையானவன் என்று பதிந்த நாயர் மூலம் தெரிந்து கொள்வதாலே அப்படி ஒரு முடிவுக்கு வருகின்றனர். யாருக்கும் சிந்திக்க அவகாசமில்லை. அப்படி சிந்தித்து முடிவெடுக்கவும் அவர்களுக்கு உரிமையில்லை. அவர்கள் மேல் எதுவும் தப்பிருப்பதாகவும் எனக்கு தோன்றவில்லை. அவர்களால் அருவருப்பாக பார்க்கப்படும் அந்த நபரும் குணத்தால் நல்லவராகவே எனக்கு தெரிகிறார். நல்ல முறையில், அவளுக்கு வேண்டியவர்கள் சொல்லியிருந்தால் அம்சவல்லி அவரை மனந்திருக்கலாம்.

மாற்று திறன் கொண்டவர்களுக்கு\ வாழ முடியாதவர்களுக்கு மரணம் தான் வரமா? அவளுக்கு நல்ல வாழ்க்கையை கொடுத்திருக்க முடியாதா?

இங்கே கடவுள்\கடவுளாக தன்னை நினைத்து கொண்டிருக்கும் ருத்ரன் தானாக வரம் அளிக்கவில்லை. அப்படி அளித்திருந்தால் அங்கே எத்தனை பேருக்கு வரம் அளித்திருக்க வேண்டும். அது அம்சவல்லியாக கேட்ட வரம். அது ருத்ரனுக்கு நியாயமாக பட்டது. அதனால் அதை அவன் அளித்தான். அது ருத்ரனுக்கு மட்டும் தான் நியாயமாக பட்டதா? அப்படி இருந்தால் அவன் அம்சவல்லியை எரித்துவிட்டு வரும் பொழுது அங்கே நின்றிருப்பவர்கள் யாரும் கதறி அழுதிருப்பார்கள். அங்கே அவளை நேசித்தவர்களுக்கும் அது வரமாகவே பட்டது. 

திடீரென்று தாண்டவன் வருவதும்\ தனியாக சண்டை போடுவதும் படத்தில் ஒட்டவில்லை.

இதுல எனக்கு எதுவும் பெருசா ஒட்டாத மாதிரி தெரியல. நீதிமன்றத்தில் இருந்து ருத்ரன் வருவதை தாண்டவன் பார்க்கிறார். நீதிமன்றத்திற்கெதிரில் சண்டை போடவோ, தாக்கவோ முடியாது. ருத்ரன் அங்கிருந்து நேராக செல்லுமிடம் அந்த குன்று தான். அதனால் அதனருகில் சண்டை. அங்கேயும் தாண்டவன் ஏன் தனியாக வந்து சண்டை போடுகிறான். தாண்டவனுடன் இருப்பவர்கள் யாரும் மற்றவர்களை பெரிதும் அடிப்பதோ, காயப்படுத்துவதாகவோ காட்டப்படவில்லை. அது முழுக்க முழுக்க தாண்டவனால் நடத்தப்படுகிறது. தாண்டவனும் நல்ல உடல் வளம் கொண்டவன்தான். அதனால் தனியாக சண்டை போடுவது வித்தியாசமாக தெரியவில்லை.

எனக்கு மனதில் தோன்றிய சில கேள்விகள்\ நெருடல்கள்.

1. ருத்ரன் காசியிலிருந்து புறப்படும் போது உனக்கு எதுவும் உறவுகளில்லை. நீ அனைத்தையும் உதறிவிட்டு வா என்று சொல்லி அனுப்புகிறார். அவன் அதை அவன் தாயிடம் தூமைனா என்னனு தெரியுமில்லை என்ற காட்சியிலே முடித்துவிடுகிறான். அதற்கு பிறகு அவன் அவர்களை சந்திக்கவில்லை. அதன் பிறகு அங்கிருந்து கிளம்பாமல், இரண்டு தண்டனைகளையும், ஒரு வரத்தையும் கொடுக்கும் வரை அங்கு தங்கியிருக்க வேண்டிய அவசியமென்ன? அதற்கு பிறகு அங்கிருந்து காசி கிளம்ப வேண்டிய காரணமென்ன? அவன் காசியிலிருந்த வந்த காரணத்தில் இதுவும் ஒன்றா?

2. அம்சவல்லி பாடும் பாடல்களுக்கு அந்த பின்னனி இசை அவசியமா?

3. நீதிமன்ற காட்சியில் அவரை குற்றவாளியாக நீதிபதி ஏற்காமல் காவல் துறை ஆய்வாளரை கேள்வி கேட்குமிடம் சரியாக புரியவில்லை.

4. இவன் தான் என் பிள்ளை என்று ருத்ரனை அந்த தந்தை கண்டுபிடிப்பது கொஞ்சம் நெருடினாலும், ருத்ரன் தான் அவர்களின் பிள்ளையா? இல்லை ஒரு தாயின் குறையை போக்க அவன் குருஜி அனுப்பி வைக்கிறாரா? ருத்ரன் வீட்டிற்குள் நுழைந்தவுடன் ஒரு படத்தை பார்த்து நிற்பதும், பிறகு அவன் தந்தையிடம் இவனை நீதான் கொன்னயா?னு கேட்குமிடம் அவன் சின்ன வயதில் நம்மை காசியில் விட்டு சென்றார்கள் என்று கோபத்தில் கேட்டதா இல்லை மகனை காசியில் கொண்டு வந்து விட்டு சென்றவன் எதை வேண்டுமானுலும் செய்வான் என்று கேட்பதா?

5. தாண்டவனின் கையாள் முருகனிடம் வேலை செய்வோர், முருகன் கோவிலில் பிச்சை எடுப்பது எதை குறிப்பதற்காக? 

இன்னும் நிறைய கேள்விகள் இருக்கிறது... இன்னும் ஒரு நான்கைந்து முறை பார்த்துவிட்டு கேட்கிறேன்.

Monday, February 16, 2009

வெண்ணிலா கபடி குழு

எங்க ஏரியால தமிழ் படம் அதிகமா ரிலீஸ் ஆகாது. நிறைய தெலுகு படம் வரும். ஆனா தமிழ் படம்னு பார்த்தா ரஜினி, கமல், விஜய், அஜித் படங்கள் தான் ரிலிஸ் ஆகும். இதுல நாம விஜய், அஜித் படமெல்லாம் காசு கொடுத்தாலும் பார்க்க முடியாது. இப்ப பார்க்கனும்னு ஆசைப்படற படங்கள் எதுவும் இங்க ரிலிஸாகாததால சீக்கிரம் பார்க்க முடியாது. அதுக்குள்ள நம்ம ஆளுங்க அக்கு வேற ஆணி வேறயா பிரிச்சி மேஞ்சிடறாங்க. 

அந்த பிரச்சனைக்கு இப்ப ஓரளவு தீர்வு வர மாதிரி இந்த சைட் வந்திருக்கு. http://www.onlycinema.com. இதுல சில பிரச்சனைகள் இருக்கு. திடீர்னு ஸ்ட்ரக் ஆகிடுது. திரும்ப ஆரம்பிச்சா, நிறைய சீன் மிஸ் ஆகிடுது. ரெசல்யூஷனும் கொஞ்சம் சரி செய்யனும். மத்தபடி இது நல்ல ஐடியா. திருட்டு சிடில பார்க்கலனு நமக்கும் ஒரு திருப்தி.

சரி இப்ப நாம இந்த படத்துக்கு வருவோம். First thing first, படம் அருமை. நிச்சயம் பார்க்கலாம். படத்துல சில குறைகள் இருந்தாலும் இது நிச்சயம் பாராட்டற முயற்சி தான். சில இடங்களை தவிர, படம் பார்க்கற ஃபீலே வரலை. அப்படியே நிஜ மனிதர்களை நம் முன் உலவ விட்டிருக்கிறார் இயக்குனர். படத்துல யாரை பாராட்டறது யாரை விடறதுனு தெரியல. ஒவ்வொருத்தரையும் தனி தனியா பாராட்டினா பதிவு தாங்காது. 

கிஷோர் ஸ்லேங் அருமை. அவரை தமிழ் இயக்குனர்கள் இன்னும் அதிகமா பயன்படுத்தனும். அவரோட பார்வையே பாதி பேசி விடுகிறது. அதுக்காக அவரை வில்லனாவே போட்டு டார்ச்சர் பண்ணிடாதீங்கய்யா. 

இதுக்கு மேல படம் பார்க்கனும்னு ஆசைப்படறவங்க படிக்காதீங்க. May contain spoilers.


படத்துல எனக்கு ரொம்ப நெருடின இடங்கள். ஸ்லாக் ஓவர்னு சொல்ற இண்டர்வெலுக்கு முன்னாடி ஒரு இருபது நிமிடம், அதுக்கு அடுத்து வரும் ஒரு இருபது நிமிடமும் எப்படி ஓட்றதுனு தெரியாம ரெண்டு பாட்டு போட்ட மாதிரி இருக்கு. பாட்டும் ரொம்ப சுமார் தான். அடுத்து, கபடி ஆட்டம் ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்டைல் இருக்கும். ஒரு சிலர் தொடையை தட்டி கையை நீட்டி வாடா, வாடானு சொல்ற மாதிரி கபடி, கபடினு சொல்லுவாங்க (தயவு செஞ்சி இதை கில்லி விஜய் கூட கம்பேர் பண்ணிடாதீங்க). ஒரு சிலர் லைட்டா ஜம்ப் பண்ணிட்டே கபட், கபட், கபட்னு சொல்லுவாங்க, ஒரு சிலர் கையை ரொம்ப நீட்டாம காலால அடிச்சி பாயிண்ட் எடுப்பாங்க. இப்படி ஒவ்வொருத்தருக்கும் ஒரு ஒரு ஸ்டைல் இருக்கும். அது எல்லாம் விட்டுட்டு, அதிகமா ஜம்பிங்கே காட்டிட்டு இருந்த மாதிரி இருந்தது. 

அதுவுமில்லாம கபடி ஆடறவங்க கண்ணு எப்படி மூவ் ஆகும்ங்கறதே பார்க்க அட்டகாசமா இருக்கும். அவ்வளவு வேகமான கருவிழி நகர்வதும், அதுல இருக்குற ஒரு வெறியும் பார்க்க ஒரு புலி வேட்டையாடற மாதிரி இருக்கும். அது கொஞ்சம் மிஸ்ஸிங். ஆனா இந்த படத்துல காட்டிய மாதிரிக்கூட இது வரை எந்த படத்துலயும் காட்டியதில்லை.

அப்பறம் நிறைய க்ளிஷேக்கள். ஹீரோயின் நடக்கறது, சிரிக்கறது எல்லாம் பார்த்தா சுப்ரமணியபுரம் ஸ்வாதி மாதிரியே இருந்தது. கிராமத்து பொண்ணுங்களுக்கு இருக்கற துடுக்குத்தனம் சுத்தமா மிஸ்ஸிங். பொண்ணுங்களே பொதுவா வாயாடிங்க. அதுவும் மதுரைக்கார பொண்ணுங்கனா சொல்லனுமா. ஏதோ சும்மா சிரிச்சி சிரிச்சிட்டு போற மாதிரி இருக்கறது காப்பி, பேஸ்ட் மாதிரி இருக்குது. 

அப்பறம் ப்ராக்டீஸ் பண்றதுனா ஒரு உணர்ச்சிகரமான பாட்டு போடறது எல்லா படத்துலயும் தொடர்கிறது. லகான், சக் தே இந்தியா மாதிரி இந்த படத்துலயும் அந்த சீன்ல ஒரு பாட்டு. அப்பறம் முதல் ஆட்டத்துலயும், கடைசி ஆட்டத்துலயும், வெச்சா குடுமி செரைச்சா மொட்டைங்கற மாதிரி முதல் பாதி ஆட்டம் வரைக்கும் எதுவும் பாயிண்ட் எடுக்காத மாதிரியும், அடுத்த பாதில கிஷோர் அறிவுரையை கேட்டு ஜெயிக்கற மாதிரி காட்டறதும், நாம நிச்சயம் தமிழ் சினமா தான் பாக்கறோம்னு ஞாபகப்படுத்துது. அதே மாதிரி க்ளைமேக்ஸ்ல டிரால இருக்கறதும். ஒரு விறுவிறுப்பை கொண்டு வரணும்னு இந்த மாதிரி விளையாட்டை கதைக்களமா வெச்சி வர எல்லா படங்களும் இதையே ஃபாலோ பண்றாங்க. 

படம் பார்க்காதவங்க இதுக்கு மேல நிச்சயம் படிக்காதீங்க. 

அடுத்து இந்த கொடுமையை என்னால ஏத்துக்கவே முடியல. ஏன்யா நல்ல படம்னா கடைசியா யாராவது செத்து மக்கள் கனத்த இதயத்தோட போகனும்னு ஒரு விதி இருக்கா என்ன? தமிழ்நாட்ல நல்ல படம்னு பேர் வாங்கனும்னா கடைசியா ஹீரோ, ஹீரோயினை சாகடிச்சா போதும்னு ஒரு மோசமான க்ளிஷே உருவாயிடுச்சி. சேதுல ஆரம்பிச்சிதுனு நினைக்கிறேன். அதுல அது நேச்சுரலா இருந்துச்சு. மீதி எல்லா படத்துலயும் அது தினிக்கிற மாதிரி இருக்குது. அதுலயும் குறிப்பா இந்த படத்துல அந்த க்ளைமாக்ஸ் சுத்தமா தேவையே இல்லாத மாதிரி இருந்தது. இந்த படத்துக்கு அழகா எத்தனையோ க்ளைமாக்ஸ் வெச்சிருக்கலாம். ஹீரோ, ஹீரோயின் சேரனும்னு நான் சொல்லலை. ஆனா இப்படி செத்து தான் முடிக்கனும்னு அவசியமில்லை. 


என்னடா படத்துல இவ்வளவு குறையை சொல்லிட்டு படம் நல்லா இருக்குனு சொல்றானேனு பாக்கறீங்களா? இது எல்லாத்தையும் மீறி படத்தை நான் ரொம்ப ரசிச்சேன். அதுக்கு முக்கிய காரணம், படத்துல ரத்தமும், சதையுமாக நடமாடிய மனிதர்கள் தான். நிறைய இடங்கள்ல வாய் விட்டு சிரித்தேன். 

படத்துல நான் ரொம்ப ரசிச்ச சில இடங்கள்.

கதாநாயகன் வீட்ல அவுங்க அம்மா சமைக்கும் போது இட்லி தட்டுல போட்டிருக்கற துணி, அந்த இட்லி வெந்துடுச்சானு கையை விட்டு பார்க்கறது. அதை கை சுட சுட அவுங்க அம்மா எடுத்து போட்டு பாசமா சொல்றது. இதெல்லாம் அப்படியே வீட்டுக்கு கூப்பிட்டு போன மாதிரி இருந்தது.

டேய் தகப்பா, தாய் கிழவினு சொல்லி கொடுக்கற நம்ம தமிழ்சினிமால இப்படி அம்மா மேல பாசமா பையன், நான் நல்லா இருக்குனு சொன்னா எல்லாத்தையும் என்கிட்டயே வெச்சிடும்னு சொல்ற இடமும், அய்யப்பன், அவுங்க அப்புச்சி சைக்கிள்ல கனமா வெச்சி தள்ளிட்டு வரும் போது அதை வாங்கி, கொடு நான் உருட்டிட்டு வரேனு சொல்ற இடமும் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. 

பொங்கல் விழால நடக்குற போட்டியும், அங்க கொடுக்குற கமெண்ட்ரியும் அட்டகாசம். அதுவும் கிஷோர் எதிர் திசைல போகும் போது கொடுக்கற கமெண்ட்ரி அட்டகாசம். அப்பறம் சித்தப்பா புலிபாண்டியை சுத்திவிட்டே மயக்கம் போட வைக்கறது சான்சே இல்லை. அப்புக்குட்டி மாமியாரை அடிக்கறதும் வெயிட்டான சீன். அந்த மாமியார் கொடுக்கற கமெண்டும் செம அட்டகாசம். 

பரோட்டா சீனை எல்லாரும் சொல்லிட்டாங்க. ஆனா அதைவிட அவர் க்ளைமாக்ஸ்ல அழுவுற சீன்ல இன்னும் அருமையா நடிச்சிருக்காரு. 

சரண்யா மோகன் is cute. 

சுசீந்திரன், உங்களோட அடுத்த படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமா இருக்கும். இன்னும் நீங்க அதிகமா உழைக்க வேண்டியதிருக்கும். இப்பொழுதைக்கு ஒரு நல்ல படம் கொடுத்ததுக்கு நீங்க நிச்சயம் பெருமைப்படலாம், வாழ்த்துகள்!!!

Saturday, February 07, 2009

சூப்பர் ஸ்டார்ஸ்

மக்கள் திலகம் & நடிகர் திலகம்

சூப்பர் ஸ்டார் & உலக நாயகன்



இளைய தளபதி & தல





முதல் ரெண்டு வீடியோல இருக்கற நடிப்பையும் கடைசி வீடியோல இருக்கற நடிப்பையும் பாருங்க... என்ன கொடுமை சரவணன். அதுவும் விஜய் நடிப்பு... சான்சே இல்லை.

அந்த பாவத்துக்கு போனா போகுதுனு ஒரு வீடியோ

Monday, October 13, 2008

தமிழ் சினிமா - கேள்வி பதில் ஆட்டம்

நம்மல இந்த ஆட்டத்துக்கு கூப்பிட்ட முரளி கண்ணனுக்கு நன்றி.

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

எப்படியும் பிறந்த ஒரு மாசத்துலயே பார்க்க ஆரம்பிச்சிருப்பேனு நினைக்கிறேன். வீட்ல அந்த அளவுக்கு படம் பார்ப்பாங்க. அப்படி ஒரு மாசத்துல இல்லைனாலும் ஆறாவது மாசத்துல “தீராத விளையாட்டு பிள்ளை”க்கு என்னை தூக்கிட்டு போனாங்க. அங்க எங்க பக்கத்துல உட்கார்ந்து என்னை தூக்கினவங்களை எங்க அம்மாவுக்கு பிடிச்சி போச்சு. அப்பறம் விசாரிச்சு பார்த்த எங்க அம்மாவோட அண்ணனுக்கு கல்யாணம் பண்ணி வெச்சாங்க. எங்க மாமா இப்பவும் சொல்லுவாரு தீராத விளையாட்டு பிள்ளைக்கு போய் என்னை மாட்டிவிட்டுட்டியேடா மாப்பிளைனு. இது நடந்தது திருக்கோவிலூர் தனலட்சுமி தியேட்டர்ல.

நினைவு தெரிந்து பார்த்த முதல் படம்னா “நாயகன்”. அப்ப எங்க பாட்டி வீட்ல அடிக்கடி வாடகைக்கு டெக் எடுப்பாங்க. காலைல நல்ல மழை பெஞ்சுட்டு இருந்துச்சு. எழுந்தவுடனே டெக்ல நாயகன் படம் போட்டுட்டாங்க. கூரைல இருந்து தண்ணி சொட்டிட்டு இருந்ததெல்லாம் ஞாபகமிருக்கு. எங்க மாமா பசங்க எல்லாம் ஏமாத்தி பள்ளிக்கூடம் மட்டம் போட்டுட்டாங்க. எப்பவுமே பாலாஜி நல்ல பையனு சொல்லி சொல்லியே என்னை ஏமாத்திடுவாங்க. நான் மட்டும் பள்ளிக்கூடம் கிளம்பிட்டு இருந்தேன். சரியா நான் சாப்பிட்டு முடிச்சிட்டு கிளம்பும் போது தான் நிழல்கள் ரவி செத்து கமல் அழுவுற சீன். கிளம்பவே மனசில்லை. நான் போக மாட்டேனு சொன்னா எங்க அம்மாவுக்கு எங்க அப்பாக்கிட்ட இருந்து திட்டு விழும். அதனால போகறதுக்கு கொஞ்சம் கூட மனசில்லாம பள்ளிக்கூடம் போனேன். அந்த தென்பாண்டி சீமையிலே பாட்டு ரொம்ப நாளைக்கு காதுல ஒலிச்சிக்கிட்டே இருந்தது. 

மத்தபடி தியேட்டர்ல பார்த்த படம்னா, கள்ளக்குறிச்சில கீத்து கொட்டாய்ல பார்த்த ”வல்லவன் ஒருவன்”. அந்த படத்துக்கு போகும் போது சரியா வீட்டை பூட்டாம போயிட்டோம்னு பயிந்துட்டு படம் போட்ட கொஞ்ச நேரத்துலயே வந்துட்டோம். பூட்டினவங்க சரியா பூட்டாம வந்துட்டாங்களேனு கடுப்பா இருந்துச்சு.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

போன வாரம் சரோஜா பார்த்தேன். சென்னை 28 இயக்கிட்டு இப்படி ஒரு படம் இயக்கிருக்காரேனு வருத்தமா இருந்துச்சு. சென்னை 28 நம்ம படம்னு ஒரு ஃபீலிங் இருந்துச்சு. பொண்ணுங்களை கடத்தற படம் சமீபத்துல நிறைய பார்த்ததும் (அஞ்சாதே, Silence of the lambs, வேட்டையாடு விளையாடு, அப்பறம் நான் எழுதின ஆடு புலி ஆட்டம் இந்த மாதிரி நிறைய) படம் பிடிக்காம போனதுக்கு காரணமா இருக்கலாம்.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

வெள்ளி - ஐயா, தாம் தூம், நாயகன் (ரித்திஷ்)
சனி - Horton Hears a who, Iron Man, Pink Panther, You've got Mail, ஜெயம்கொண்டான்
ஞாயிறு - சக் தே இந்தியா
திங்கள் (இன்று) - அரசாங்கம். (இதை எழுதும் போது குருவி பார்த்துட்டு இருக்கேன். இண்டர்வெல் முடிஞ்சிருக்கு. தாங்க முடியல...)

அரசாங்கம்ல வேற யாராவது கதாநாயகனா நடிச்சிருக்கலாம். இல்லைனா விஜயகாந்த் இருபது வருஷத்துக்கு முன்னாடி இந்த படத்துல நடிச்சிருக்கலாம். கொஞ்சம் இங்கிலீஷ் பேசறதையும் Gaptain தவிர்த்திருக்கலாம். படம் விறுவிறுப்பா இருந்தது உண்மை. 

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா

உன்னால் முடியும் தம்பி

உதயமூர்த்தி கேரக்டரும், அந்த தாத்தா கேரக்டரும், அக்கம் பக்கம் பாராட சின்ன ராசா பாட்டும் எப்பவும் மனசை பிசைஞ்சிக்கிட்டே இருக்கும். நம்ம படிச்ச படிப்புக்கு இந்த சமுதாயத்துக்கு நல்லது ஏதாவது செய்யனும்.

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்

பாபா. 

படம் மட்டும் பாட்ஷா மாதிரி இருந்திருந்தா....


5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

மை டியர் குட்டிச்சாத்தான். 3-D.

ரீ-ரிலிஸ்ல பார்த்தேன். ரொம்ப ரசிச்சேன்.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

கைல எந்த பேப்பர்ல சினிமா பத்தி கிடைச்சாலும் தவறாம வாசிக்கறதுண்டு. ஆனா பாதிக்கு மேல டுபாக்கூரா இருக்கும்னு ஒரு நம்பிக்கை :)
குமுதம், விகடன், சினிக்கூத்து, வண்ணத்திரை, வாரமலர் இப்படி எதுவும் விடறதில்லை.

7.தமிழ்ச்சினிமா இசை?

பொதுவா எனக்கு காதல் பாட்டு எல்லாம் பிடிக்காது. தன்னிம்பிக்கை கொடுக்கற பாடல்கள் ரொம்ப பிடிக்கும். அதனால அதிகமா பிடிச்சது பட்டுக்கோட்டையார் பாடல்கள் தான். சோக பாட்டு எல்லாம் சுத்தமா பிடிக்காது. அதே மாதிரி ஃபீலிங்ஸ் பாட்டும். குத்து பாட்டு ஓகே :) 

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

நிறைய தெலுகு படம் பார்ப்பேன். அது ஊருக்கே தெரியும். அதிகம் தாக்கிய படம்னா “ஆ நலுகுரு”.  அட்டகாசமான படம். அதுக்கு அடுத்து பொம்மரில்லு.

உலக திரைப்படம்னா - ஆங்கிலப்படம் தான். அதுல ரொம்ப பிடிச்ச படம்னா "Terminal". "shawshank redemption"ம் ரொம்ப பிடிச்சிருந்தது. ஆனா அதை விட பிடிச்ச படம் Terminal. 

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

இதுவரை இல்லை. தொடர்ந்து டெவில் ஷோ எழுதியிருந்தா ஆட்டோ வந்திருக்கும்.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ரொம்ப நல்லா இருக்கு. வித விதமான படங்கள். ஒரு பக்கம் ஹை பட்ஜட் படங்கள், ஒரு பக்கம் லோ பட்ஜட்லயே கலக்கற படங்கள். இப்படி நிறைய வெரைட்டி படங்கள் நமக்கு காத்திருக்கிறது. 

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

எல்லார் வீட்லயும் நாடகம் பார்த்து உயிர வாங்குவாங்க. டீவியையும் ப்ளாக் பண்ணிட்டா ரொம்ப நல்லா இருக்கும். அப்படி நடந்தா நான் நிறைய புத்தகம் படிப்பேன். சின்ன பசங்க எல்லாம் சாயந்திரம் வீட்டை விட்டு வெளியே வந்து ஏதாவது ஓடி பிடிச்சி விளையாடுவாங்க. ஆனா இது ஒரு வருஷம்னு இல்லாம ஒரு ஏழு எட்டு வருஷமிருந்தா நல்லா இருக்கும் :)

சரி... அஞ்சு பேரை கூப்பிடுனுமாம்...

1. நாகை சிவா 
2. தேவ்
3.KRS
4. ராயல் ராம் 
5. இளா



Wednesday, August 13, 2008

கடைசியாக பார்த்த சில தெலுகு படங்கள்

கடைசியாய் பார்த்த சில தெலுகு படங்களை பற்றிய எண்ணங்கள்.



Happy Days:
இஞ்சினியரிங் காலேஜை கண் முன் நிறுத்தியிருக்கிறார்கள். அதிலும் அந்த சீனியரை லவ் பண்ணும் பையன் அட்டகாசமாக நடித்திருக்கிறார் (பேர் மறந்துடுச்சு). தமண்ணா சூப்பர் :-) படமும் அருமை. க்ளைமாக்ஸும் அருமை. ஜாலியாக பார்க்கலாம். பாடல்களும் படத்துக்கு ப்ளஸ். பொம்மரில்லுக்கு அப்பறம் நான் ரசிச்சி பார்த்த படம்...



ஆட்டா :
One and only ILEANA. கதை எல்லாம் எதுவும் கிடையாது. இலியானாவை நன்றாக பயன்படுத்தியிருக்கிறார்கள். பேச்சிலர் பசங்களுக்கு மட்டும் சிபாரிசு செய்கிறேன். இயற்கையை ரசிக்க தெரிந்தவர்களும் பார்க்கலாம் :-) (My Friend சித்தார்த்திற்காக பார்க்கலாம்)



தீ :
ஜாலியான படம். புத்தி உள்ளவன் பிழைத்து கொள்வான். அவ்வளவு தான் தீம். படம் நல்ல கலகலப்பா ஜாலியா போகும். ஜெனி வழக்கம் போல சூப்பர் :-). தமிழில் சிம்பு அப்படியே காப்பி பேஸ்ட் செய்தால் (விரலை ஆட்டாம) ஹிட் ஆக சான்ஸ் அதிகம். ஆனா ஸ்ரீ ஹரி ரோலை பிரபு செய்யக்கூடாது. என் சாய்ஸ் சரத்குமார்.

எம தொங்கா :
ஜீனியர் NTR உடம்பை குறைத்து ஸ்மார்ட்டாக இருக்கிறார். படம் ஓரளவுக்கு மோசம் தான். மோகன் பாபு நல்லா நடித்திருக்கிறார். ப்ரியா மணி தெலுகு படத்துக்கு ஒத்து வர மாட்டார்.



கோதாவரி:
அமைதியான அழகான படம். ரசிச்சி பார்க்கலாம். கமலினி சூப்பர். படமும் அழகா ஆர்ப்பாட்டம் இல்லாம அமைதியா போகும். நிச்சயம் பார்க்கலாம்.


ராக்கி:
ஜீனியர் NTR படம் தான். இலியானாக்காக தியேட்டருக்கு போய் பார்த்தேன். வழக்கமான NTR படம். இதுல வித்தியாசமா பாக்கெட்ல பெட்ரோல் வெச்சி, அதை முகத்துல அடிச்சி எரிச்சி கொல்றார். தப்பி தவறி கூட பார்க்க வேண்டாம் :-)



ஜல்சா :
அட்டகாசமான படம். பவன் கல்யாணிற்கு ஒரு ப்ரேக் கொடுத்திருக்கிறது. டோட்டல் ஹைதிராபாத் பிரியாணி (மசாலா). இலியானா சூப்பர். பார்வதி மில்டனை இன்னும் கொஞ்சம் யூஸ் பண்ணியிருக்கலாம். காமெடி கலக்கல். விஜய் ரீ-மேக் பண்ணலாம்.

அதித்தி (Athidhi):
மகேஷ் பாபு படம். நிறைய சண்டை. படம் சுமார். மோசம்னு கூட சொல்லலாம். ஆனா சைனிக்குடுவைவிட பரவாயில்லை.

இது தவிர கொஞ்சம் பழைய படங்கள்ல இதெல்லாம் பார்க்கலாம். ஆர்யா, அனுகோக்குண்ட ஒக்க ரோஜு, அத்தடு.

Friday, August 03, 2007

கிரீடம் - முள் கிரீடமா?

நேத்து கப்பிக்கு கொடுத்த வாக்குறுதியை மீற கூடாதுனு படம் பார்க்க ஆரம்பிச்சேன். கடைசி வரைக்கும் பார்த்தேன். அஜித் படம்னாவே ஒரு பயம் தான். அது சிட்டிசன்ல ஏற்பட்டது. இன்னும் இருந்துட்டே இருக்கு. இந்த மாதிரி ஒரு 3-4 படம் நடிச்சா மாறிடும்னு நினைக்கிறேன்.

முதல்ல இந்த கதைல நடிச்சதுக்கு அஜித்தை பாராட்டனும். மலையாளத்துல ஹிட்டான கதைனாலும், வாழ்க்கைல தோக்கற ஒருத்தனா, கமெர்ஷியல் ஹீரோவான அஜித் இதுல நடிச்சது கண்டிப்பா ஒரு ஆச்சர்யம்தான். படத்துல அஜித்துக்கு சமமான பாத்திரம் ராஜ்கிரனுக்கு. பின்னி பெடலுடுத்திருக்கிறார். த்ரிஷா தெலுகு படத்துல நடிச்சி அழகாயிட்டாங்க (நல்லா மேக்கப் போட கத்துக்கிட்டாங்க).

ஆரம்பத்தில் வரும் நகைச்சுவை காட்சிகள் நிஜமாலுமே சிரிக்க வைக்கிறது. சந்தானம் டபுள் மீனிங் ஜோக்ஸ் இல்லாம நடிச்சிருக்கார். யாருமே இல்லாத பஸ் ஸ்டாப்ல கூட்டமா இருக்குனு சொல்லி கூட்டமா இருக்கற ரெஸ்டாரண்டுக்கு கூப்பிட்டு போற சீன் சூப்பர். அதே மாதிரி தண்ணி தோட்டில த்ரிஷா பேசறதும், கீழ இருக்கறவங்க கேக்கறதும் நகைச்சுவை வர வைத்தது.

படத்துல பல இடங்களில் அஜித் நடிப்பில் மிளிர்கிறார். ஒரு சீன்னு சொல்ல முடியாது. பல இடங்களில் அவ்ர் முக பாவனை பல வசனங்களை நமக்கு சொல்லிவிடுகிறது. சில இடங்கள்ல வசனம் இல்லாததே ரொம்ப அருமையா இருந்துச்சு. ராஜ்கிரண் மாதிரி பல அப்பாக்கள் இன்னும் இருக்கத்தான் செய்றாங்க. ஒரு சிலருக்கு அது சிரிப்பை வர வைக்கலாம். ஆனா எனக்கு நினைவு தெரிஞ்சி நான் எங்க ஊர்ல இருந்து தனியா பஸ் ஏறி போற மாதிரி இருந்தா எங்க அப்பாதான் என்னை வந்து பஸ் ஏத்திவிடுவார். பெங்களூர்ல வேலைக்கு போகும் போது கூட வந்து என்னை பஸ் ஏத்திவிட்டு நான் கம்ஃபர்டபுல இருக்கனானு பார்த்து கண்டக்டரிடம் என்னை பத்திரமா இறக்கிவிட சொல்லி, (நான் எலக்ட்ரானிக் சிட்டில இறங்குவேன். தூங்கிட்டே போயிடுவனோனு ஒரு பயம்) தண்ணி பாட்டில், படிக்க ஏதாவது ஒரு புத்தகம் வாங்கி கொடுத்து பஸ் புறப்படும் வரை இருந்துவிட்டு தான் புறப்படுவார். இதுவரை அது மாறவே இல்லை. (இப்ப கூட ஃபிளைட்டுக்கு நான் கீழ இருந்தே உன் ஃபிளைட்ட பாக்க முடியுமானு கேட்டு என்கிட்ட நல்லா வாங்கி கட்டிக்கிட்டார்). சரி திரும்ப படத்துக்கு வருவோம்.

அப்படி ஒரு அப்பாவோ, குடும்பமோ இருக்கறது ஒரு சாதாரணமான விஷயம்தான். திரிஷாக்கு வேற இடத்துல கல்யாணம்னு சொன்னதுக்கப்பறம் அவுங்க கல்யாணத்தை ஒரு சோகப்பாட்டுல காட்டததுக்கு டைரக்டருக்கு ஒரு ஸ்பெஷன் நன்றி. க்ளைமாக்ஸ்ல அஜித் அழுவற சீன்ல பட்டைய கிளப்பியிருக்கார். படத்துல அஜித் வில்லன் கூட்டத்தை கண்டு ஓடுவதும், சண்டைக்கு ஏதாவது ஒரு தடியை பயன்படுத்துவதும் ஓரளவிற்கு இயல்பாக இருப்பதை போலவே பட்டது. தல தள படங்களை பார்ப்பதில்லை போலும்.

நீங்க சினிமா ரசிகரா இருந்தா கண்டிப்பா இந்த படம் பார்க்கலாம். படத்துல பாட்டு எல்லாம் இன்னும் நல்லா வந்திருந்தா இது கண்டிப்பா சூப்பர் ஹிட் ஆகியிருக்கும். எப்படி பார்த்தாலும் இது தலைக்கு முள் கிரீடம் கிடையாது.

Thursday, April 26, 2007

மொழி!!!

மொழி படம் நல்லா இருக்குதுனு ஃப்ரெண்டு ஒருத்தவன் ஃபோன் பண்ணி சொன்னான். சரி அப்படி என்னடா ஸ்பெஷல்னு கேட்டா படத்துல ரத்தமே இல்லைடானு சொன்னான். என்னது தமிழ் படத்துல ரத்த வாட இல்லாம இருக்கா? என்னடா ஆச்சுனு நானும் படம் பார்க்கலாம்னு முடிவெடுத்து ஒரு வழியா இன்னைக்கு பார்த்துட்டேன்.

பார்த்துட்டு யார பாராட்டறதுனு தெரியாம போன் பண்ணவனுக்கு முதல்ல நன்றி சொன்னேன். ஆனா முதல்ல பாராட்டப்பட வேண்டிய நபர் பிரகாஷ்ராஜ் தானுங்க. நடிகர் பிரகாஷ்ராஜ் அசத்தியிருந்தாலும் (இதெல்லாம் அவருக்கு ஜிஜிபி. பொம்மரில்லுல மனுசன் பொளந்து கட்டியிருப்பாரு) தயாரிப்பாளர் பிரகாஷ் ராஜிக்கு முதல் வாழ்த்துக்கள். இந்த மாதிரி படங்கள் அப்பப்ப வந்தா தான் நல்ல படங்களும் மக்கள் பார்ப்பாங்கனு ஒரு நம்பிக்கை மத்தவங்களுக்கும் வரும். அடுத்து இயக்குனர் ராதா மோகனுக்கு நன்றி சொல்லனும். படம் ரொம்ப அருமைங்க...

படத்துல கதைனு பார்த்தா பெருசா எதுவுமில்லாத மாதிரி தான் இருக்கு. காது கேட்காத, வாய் பேச முடியாத பெண்ணை காதலிக்கும் நாயகன் அவளுக்காக அவள் மொழியை (மொழினா பேசறது மட்டும்தானு நினைச்சிட்டு இருந்தேன். ஆனா தகவல் பரிமாற்றத்துக்கு உதவும் ஒரு கருவிதான் மொழினு புரிஞ்சிக்கிட்டேன்) கற்று கொண்டு அவளை கரம் பிடிப்பது தான் கதை. (நம்ம கொல்ட்டி கதையும் கிட்டதிட்ட இந்த மாதிரி தானே!)



ஆனா இதை ரொம்பவே ரசிக்கும் படியா பண்ணியிருக்காங்க. அதுல எனக்கு ரொம்பவும் பிடிச்ச காட்சி, ஜோக்கு கற்பனையா ஒரு குரலை பிரித்திவிராஜ் நினைத்து கொள்ள, அதற்கு ஜோ கோபப்பட்டு எனக்கு குரல் தேவையில்லை, இந்த மாதிரி கற்பனை பண்றத நிறுத்துனு அவுங்க சொல்லும் போது அந்த செய்கைக்கும் அவர் குரல் கொடுத்து கற்பனை பண்ணுவாரு.உடனே நிறுத்துனு அவுங்க சொல்லிட்டு போகும் போது தான் அவர் ஜோ திட்டும் போதும் அதுக்கும் குரல் கொடுத்து ரசிச்சிட்டு இருந்தாருனு நானும் உணர்ந்தேன். இந்த காட்சி ரொம்ப பிடிச்சிருந்துச்சி.

அடுத்து அந்த இசையை அவர் உணரும் போது ஜோ கொடுத்த முகபாவனை. ரொம்பவே நல்லா பண்ணியிருந்தாங்க. சிவக்குமார் சார், நீங்க உங்க குடும்பத்துல இருந்து 2 நல்ல நடிகர்களை (கார்த்தி எப்படியும் கலக்குவார்னு ஒரு நம்பிக்கைதான்) தமிழ் உலகுக்கு கொடுத்தாலும், அவுங்க 2 பேரையும் தூக்கி சாப்பிடற (சூர்யா அண்ணா! நோ பீலிங்ஸ். சில சமயம் அண்ணி உங்களை மிஞ்சிடுவாங்க) ஒருத்தவங்களை வீட்டுக்குள்ள வெச்சிக்கிட்டீங்களே. கொஞ்சம் யோசிங்களேன்...

அடுத்து ப்ரித்திவிராஜ். மனுசன் ரொம்ப நல்லா நடிக்கறாருங்க. நகைச்சுவை காட்சிகளாகட்டும், சீரியஸ் காட்சிகளாகட்டும். ரெண்டுமே கலக்கியிருக்காரு. படத்துல இவரும் பேசாமலே நடிச்சிருந்தாலும் நமக்கு புரியும்னு சொல்ற அளவுக்கு எக்ஸ்பிரஷன் கொடுத்து நடிக்கறாரு.பேச்சுல மலையால வாடை தெரியுது. ஆனா அதுவும் நல்லா தான் இருக்கு. (கோவைல நிறைய மல்லுங்களோட பேசி அதுவும் நமக்கு பிடிச்சி போச்சி). இயக்குனருங்களே! ஒரு நல்ல நடிகர் (ஸ்மார்ட்டாவும் இருக்காரு) கிடைச்சிருக்காரு. சரியா பயன்படுத்திக்கோங்க. சிம்பு, ஸ்ரீகாந்த், SJ சூர்யா இவுங்களை எல்லாம் வெச்சி எடுக்கறதுக்கு தாராளமா இவரை வெச்சி படம் எடுக்கலாம். ஈடுபாடோட நடிக்கற மாதிரி ஒரு ஃபீலிங்.

பிரகாஷ்ராஜ் கேரக்டர் இல்லைனா படம் ஒரு 10 - 15 நிமிஷத்துக்கு மேல பார்க்கமுடியாதுங்க. படத்துக்கு அந்த கதாபாத்திரம் அவ்வளவு முக்கியம். இந்த மாதிரி சீரியஸ் கதைய அவர் காமெடியால கலக்கியிருக்காரு. வடிவேலு பாணில அடிவாங்கறதோ, விவேக் பாணில மெசேஜ் சொல்றதோ இல்லாம இருக்கறதே இவர் இந்த படத்துல பண்ண காமெடிக்கு ஒரு பெரிய ப்ளஸ். சொர்ணமால்யாவை சர்ச்ல அவர் ரெண்டு தடவை மடக்கி பேசறதும் ரொம்ப நல்லா இருந்துச்சு. அதுவும் நான் CBI, லைசன்ஸ் இருக்கானு கேக்கறது கலக்கல். சொர்ணமால்யா இனிமே தாராளமா சொல்லிக்கலாம் நானும் படத்துல நடிச்சிருக்கேனு.

பாஸ்கர் கதாபாத்திரமும், பிரம்மானந்த் கதாபாத்திரமும், சித்தி புகழ் பாட்டியும் நல்லா பண்ணியிருக்காங்க.

பிரகாஷ்ராஜ் சார், இனிமே KB மாதிரி பெரிய தலைங்களுக்கு எல்லாம் சான்சு கொடுக்காம இந்த மாதிரி புதுசா வரவங்கள ஊக்குவிங்க. ரொம்ப நாளைக்கு அப்பறம் ஒரு நல்ல படம் பார்த்த ஃபீலிங்.

Sunday, January 14, 2007

Desamuduru - From the Director of Pokiri

தேசமுதுரு - மாபெரும் வெற்றிப்படம் போக்கிரியை இயக்கிய பூரி ஜகந்நாத்தின் மற்றோரு படம்.



அல்லு அர்ஜுனின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவக்கூடிய படம். படத்திற்காக கடினமாக உழைத்திருக்கிறார் அல்லு அர்ஜுன். அவரை அத்தனை விதத்திலும் சரியாக உபயோகப்படுத்திருக்கிறார் இயக்குனர். படத்தின் துவக்க காட்சியிலேயே அவரின் உழைப்பு தெரியும் விதத்தில் அமைத்திருப்பது இயக்குனரின் சிறப்பு.

கதை என்று பார்த்தால் பெரிதும் கவரும் விதத்தில் எதுவுமில்லை. ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தில் வேலை செய்கிறார் நாயகன். தூள் பேட் ஏரியாவில் நடக்கும் தவறுகளை யாருக்கும் தெரியாமல் படம் பிடிக்க செல்கிறார். அங்கே நடக்கவிருக்கும் ஒரு கொலையை தடுக்க வில்லன்களுடன் சண்டை. அங்கே வில்லனின் மகனை அவர் அடிக்க அவர் கோமாவிற்கு செல்கிறார் (போக்கிரியில் மகேஷ் பாபுவிடம் முதல் சண்டையில் அடி வாங்கும் அதே நபர்)

வில்லன்களிடமிருந்து அவரை காப்பாற்ற அவரை குலுமானியில் நடக்கவிருக்கும் ஒரு படப்பிடிப்பு குழுவுடன் அனுப்புகிறார்கள். அங்கே ஒரு சந்நியாசிகளின் கூட்டத்தை சந்திக்கிறார். அங்கே கதாநாயகி சந்நியாசியாக இருக்கிறார். பார்த்தவுடனே நாயகியின் மேல் காதல் வயப்படுகிறார் அல்லு அர்ஜுன். பிறகு அவர்களுக்குள் எப்படி காதல் மலர்கிறது,சந்நியாசினி எப்படி சம்சாரியாகிறார், கதாநாயகியின் பின்புலம் என்ன மற்றும் வில்லன்களை நாயகன் எப்படி சமாளிக்கிறார் என்பதே கதை.


சராசரியான இந்த கதையில் மிளிர்கிறார் அல்லு அர்ஜுன். அவருடைய எதார்த்தமான நடிப்பும் வசனமும் எப்போழுதும் போல் அருமை. சந்நியாசினியாக இருக்கும் நாயகியிடம் அவர் பேசுமிடங்களும் நன்றாக அமைந்திருக்கிறது.கதாநாயகி ஹன்சிகா - மெழுகு பொம்மை போல் இருக்கிறார். இதுவே சந்நியாசினி வேடத்திற்கு பொருந்துகிறது. ஒரு ஜாடையில் பூமிகாவை நினைவுப்படுத்துகிறார். பின்பாதியிலும், பாடல் காட்சிகளிலும் அவருடைய பணியை(?) செவ்வனே செய்துள்ளார்.

வில்லன் (கஜினி, தொட்டி ஜெயாவில் வருபவர்) தமிழ் நாட்டுக்காராக காண்பித்திருக்கிறார்கள். இருப்பினும் அவர்கள் பேசம் தமிழ் கொடுரம். வேண்டுமென்றால் அதை தமிலுகு (தமிழ் + தெலுகு) என்று சொல்லி திருப்திப்பட்டுக்கொள்ளலாம். அவருடைய சத்தத்தையே தாங்க முடியாதென்றால் அதற்கு போட்டியாக சகுந்தலா (சொர்ணா அக்கா) வேறு சத்தம் போடுகிறார்.ஆனால் தெலுகு படத்திற்கு இது சாதாரணம்.



பாடல்கள் போக்கிரி அளவிற்கு இல்லையென்றாலும் ஓரளவு நன்றாகவே அமைந்திருக்கிறது. சண்டை காட்சிகள் போக்கிரியை விட அருமையாக அமைந்திருக்கிறது. அல்லு அர்ஜுனினை பிழிந்து எடுத்திருக்கிறார்கள். அவரும் சந்தோஷமாக உழைத்திருக்கிறார். நடனத்திலும் படம் கிளப்புகிறார்.

கண்டிப்பாக இது மற்றொரு போக்கிரி கிடையாது. ஆனால் ஆக்ஷன் பிரியர்கள் சந்தோஷமாக பார்க்கலாம். தமிழில் ஆர்யாவை வைத்து ரீ-மேக் செய்யலாம்.

Monday, December 04, 2006

சைனிக்குடு

சைனிக்குடு - போக்கிரியின் மாபெரும் வெற்றிக்கு பிறகு மகேஷ் பாபு நடித்து வெளியாகியிருக்கும் படம்.


சைனிக்குடு என்றால் போர்வீரன் என்று பொருள். மக்களுக்காக போராடும் கல்லூரி மாணவர்களை(?) பற்றியும் அதற்காக அவர்கள் படும் கஷ்டங்களையும் சொல்ல முயன்றிருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன் (அறைகுறை தெலுகை வைத்து சொல்லவில்லை). படம் நன்றாக புரிந்தது ஆனால் என்ன சொல்ல வருகிறார்கள் என்றுதான் புரியவில்லை.



ஆரம்ப காட்சியில் வெள்ளத்திலிருந்து மக்களை காப்பாற்றும் கிராஃபிக்ஸ் காட்சிகளும், கேமரா கொண்டு சென்ற விதமும் அசத்தலாக வந்திருக்கிறது. அதன் பிறகு பல காட்சிகள் ஆயுத எழுத்தை நினைவு படுத்தியது. வழக்கம் போல 'குண்டா' அரசியல்வாதியாக இர்ஃபான் கான் நடித்திருக்கிறார். அவருக்கு வலது கை போல பிரகாஷ்ராஜ்.

படத்தில் ஏதாவது வித்யாசம் காட்ட வேண்டுமென்று த்ரிஷாவை இர்ஃபான் கானை காதலிக்க வைத்திருக்கிறார்கள். நகைச்சுவைக்கு அதையே பயன்படுத்தியிருக்கிறார்கள். த்ரிஷா பார்க்க நன்றாக இருக்கிறார். நடிக்கவும் செய்கிறார்.


மகேஷ்பாபு அவருக்கு கொடுத்ததை அருமையாக செய்திருக்கிறார். ஆனால் ப்ரிவியூ பார்த்தாரா? என்றுதான் தெரியவில்லை. ஹாரிஸ் ஜெயராஜிற்கு அந்நியனும், தொட்டி ஜெயாவும் தெலுகில் டப்பிங்காகி விட்டது என்று யாராவது சொல்லியிருக்கலாம். ரீ-ரெக்கார்டிங்கிற்கு மனிதனுக்கு நேரமில்லை போலும் அப்படியே cntr-c, cntrl-v செய்துவிட்டார். இதில் முக்கியமான சண்டை காட்சிக்கு அந்நியனை அப்படியே போட்டுவிட்டார். அப்பரச்சித்துடு (அந்நியன்) தெலுகில் பயங்கர ஹிட்டென்று அவருக்கு யாரும் சொல்லாதது வருத்தமே...




ஒக்கடு (கில்லி) இயக்கிய குணசேகரிடமிருந்து இந்த படம் வந்தது பலத்த ஏமாற்றமே! படத்தில் திரைக்கதையும், எடிட்டிங்கும் பயங்கர மோசம்.

சரி யாரையாவது பாராட்டியே ஆகனுமே... கேமரா மேனையும், கிராபிக்ஸ்க்கான காட்சிகளுக்காக உழைத்த டீமையும் நிச்சயம் பாராட்டலாம். முதலமைச்சரிடம் மகேஷ் பாபு பேசும் இந்த குறிப்பிட்ட வசனங்கள் பிடித்திருந்தது.
"வானத்திலிருந்து பார்க்கும் போது எல்லாமே பச்சையாத்தான் தெரியும். கீழ இறங்கி பார்த்தாதான் உண்மை புரியும்"
"ஒரு கோடி எண்ண ஆரம்பிக்க வேண்டுமென்றாலும் ஒன்றிலிருந்துதான் எண்ண ஆரம்பிக்க வேண்டும்" (இது ஒரு மாணவர் MLA ஆனதற்கு க்ளைமாக்ஸில் பேசும் வசனம். ஆயுத எழுத்து வசனம் ஞாபகம் வந்தால் நான் பொறுப்பல்ல.)

சரி கடைசியா நீ என்ன சொல்ல வரனு கேக்கறீங்களா? உங்களுக்கு மகேஷ் சுத்தமா பிடிக்காதா?. அவர் மேல பயங்கர வெறுப்பு அப்படினா நீங்க இந்த படம் பார்க்கலாம். அவர் கஷ்டப்பட்டு நடிச்சத எப்படி மோசமான திரைக்கதையால வீணாக்கியிருக்காங்கனு. யாம் பெற்ற துன்பம் யாரும் பட வேண்டாம் என்றே இந்த பதிவு!!!

Monday, November 27, 2006

ஏன் இந்த கொலை வெறி???

மக்கள்ஸ் கதை எழுதி போர் அடிச்சிடுச்சு... சரினு என்னோட முதல் தெலுகு பட அனுபவத்தை உங்களோட பகிர்ந்துக்கலாமனுதான் இந்த பதிவு... (எல்லா பதிவுக்கும் ஒரு விளக்கம் குடுக்க வேண்டியதா இருக்கே)

பெங்களூர்ல எலக்ட்ரானிக் சிட்டில தங்கி இருந்த சமயம். பக்கத்து ரூம்ல ஒரு பத்து ஆந்திர மக்கள்ஸ் ரூம் எடுத்து தங்கியிருந்தாங்க. ரொம்ப நல்ல பசங்க. நம்மகிட்டயும் ரொம்ப பாசமாவும் மரியாதையாவும் பேசுவாங்க.

ஒரு முக்கிய காரணம் நான் தினமும் எல்லாருக்கும் ஏதாவது சொல்லி கொடுத்துட்டு இருப்பேன். சொல்லி கொடுக்கறதுக்கு உனக்கு என்ன தெரியும்னு இங்க கேள்வி கேக்கப்படாது. அதே மாதிரி அவுங்களுக்கு தமிழ் படத்துல ஏதாவது டவுட்னாலும் நம்ம கிட்டதான் கேட்பாங்க. பாதி டிஸ்கஷன் ரீ-மேக் பத்திதான் இருக்கும்.

ஒரு நாள் ஞாயிற்று கிழமை மதியம், பாலாஜி இன்னைக்கு சிக்கன் செய்யறோம் நீயும் எங்க கூட வந்து சாப்பிடனும்னு ரொம்ப பாசமா கூப்பிட்டாங்க. சரி ஆந்திரா சாப்பாடும் காரமா நல்லாதான் இருக்கும்னு போனேன்.

அங்க போனவுடனே அவனுங்க என்னை கூப்பிட்டதுக்கான இன்னொரு காரணத்தை சொன்னாங்க. அவுங்க தலைவர் பாலக்கிருஷ்ணா நடிச்ச படத்தை நான் பார்க்கணும்தான் என்னைய கூப்பிட்டானுங்களாம். அந்த படம் ஆந்திரால பயங்கர ஹிட்டாம். படத்து பேரு "சமரசிம்மா ரெட்டி".

சரி சிக்கனுக்காக அந்த கொடுமைய தாங்கிக்கலாம்னு நானும் உக்கார்ந்திட்டேன். படத்துல பார்த்தா நம்ம சிம்ரனும் அஞ்சலா ஜவேரியும் இருந்தாங்க. சரினு ரொம்ப சந்தோஷமா அட நம்ம பசங்கனு கூட்டத்துக்கு நடுவுல போய் உக்கார்ந்துட்டேன். அதுதான் நான் பண்ண பெரிய தப்பு.

வழக்கம் போல ஒரு மணி நேரம் வரைக்கும் ஒரு பெரிய மேட்டரும் இல்லாம சாதரணமா போயிட்டு இருந்தது. திடீர்னு ஒரு ஃப்ளாஷ் பேக் . பொதுவா தெலுகு மசாலா படத்துல எல்லாம் ஒரு பயங்கரமான ஃப்ளாஷ் பேக் இருக்கும். அது எனக்கு அப்ப தெரியலை.

பாலைய்யா ஒரு பெரிய பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர்... ரெட்டிதான். வழக்கம் போல ஒருத்தர ஒருத்தர் மாத்தி மாத்தி கொன்னுக்கறானுங்க. அப்பறம் ஹை-பிட்ச்ல டயலாக் வேற அப்பப்ப...

பாலாஜி இப்ப வரப்போறதுதான் படத்துலயே சூப்பரானு சீனு. தொன தொனனு பேசாம படம் பாருனு ஒருத்தவன் சொன்னான். அவன் கண்ணில கொஞ்சம் லேசா கொலை வெறி தெரிஞ்சிது.

நானும் அப்படி என்னடா முக்கியமா சீன்னு பார்த்தா... வில்லனோட கைய பாலைய்யா தொரத்தி தொரத்தி வெட்டறார். அந்த வெட்டு பட்ட கையோட ரத்தம் ஒழுக ஒழுக அந்த வில்லன் தெரிச்சி ஓடறார். தெரு தெருவா ஓடறான். இவனுங்களா அங்க போறான் பிடி இங்க போறான் பிடினு சவுண்ட் விட்டுட்டு இருக்கானுங்க.

எனக்கா பீதி கிளம்புது. ஆஹா. இதுக்கு மேல இங்க உக்கார்ந்தா நம்மல போட்டு தள்ளிடுவானுங்களோனு பயந்து எழுந்திரிக்க முயற்சி செஞ்சேன். அப்ப பார்த்து பின்னாடி இருந்து ஒரு சவுண்ட்... டேய் எந்துக்குடா லேசாவு??? கூச்சோடானு.

ஆஹா!!! நடவுல உக்கார்ந்து இப்படி மாட்டிக்கிட்டேனே? அபிமன்யூ சக்கர வியூகத்துல மாட்ன மாதிரி சிம்ரன பார்த்து நடுவுல உக்கார்ந்து மாட்டிக்கிட்டேனே!!! ஓரமா உக்கார்ந்தாவாது அப்படியே எஸ்ஸாகிருக்கலாம். இப்ப அதுக்கும் வழியில்லாம போச்சே!!!

அதுக்கு அப்பறம் சும்மா ஒரு நூறு பேத்த மட்டும் வெட்டி கொன்னாருங்க... எங்க நடுவுல எழுந்திரிச்சா நம்மல போட்டு தள்ளுடுவானுங்களோனு ஒரு பயம். அப்படியே எதுவும் பேசாமல் அமைதியா உக்கார்ந்திருந்தேன். கடைசியா அந்த ஒத்த கைய வெட்னவற தலைய வெட்டி கொன்னுடறாரு... எல்லாரும் ஜோரா கை தட்னானுங்க...

அடப்பாவிகளா!!! இத்தன நாளா நல்லவங்கலாத்தானடா பழகனீங்க. உங்களுக்குள்ள இவ்வளவு கொல வெறியா??? நான் இத்தன நாளா கொல கார கும்பலோடவா சவகாசம் வெச்சிருந்தேன்???

சரி இதுக்கு மேலையும் எப்படி தெலுகு படம் பார்த்தனு கேக்கறீங்களா? அதுக்கு பேருதான் விதி :-)

தோழர்களே அடுத்த பதிவு ஒரு ஸ்பெஷல் பதிவு... என்னனு கெஸ் பண்ணி வைங்க பார்க்கலாம் ;-)

Wednesday, November 15, 2006

அந்த இரண்டு படங்கள்!!!

நான் முதன்முதலில் எழுதிய தெலுகு பட விமர்சனத்தில் இரண்டு படங்களை குறிப்பிட்டிருந்தேன் "ஆ நலுகுரு", "அனுகோகுண்ட ஒக ரோஜு". இந்த படங்களுக்கு விமர்சனம் எழுத சொல்லி ஒரு அனானி நண்பர் கேட்டிருந்தார். கொஞ்சம் நாளானதற்கு அவர் மன்னிப்பாராக.

ஆ-நலுகுரு
இதன் அர்த்தம் அந்த நால்வர். எந்த நான்கு பேர்? என்பதே படத்தின் கதை.
படத்தின் கதாநாயகன் ராஜேந்திர பிரசாத். பொதுவாக நகைச்சுவை படத்தில் நடிப்பவர். ஆனால் இதில் குணச்சித்திர பாத்திரம். (நம்ம சிவக்குமார் மாதிரினு வெச்சிக்கோங்க)

படத்தின் நாயகன் தன்னை சுற்றி உள்ள மனிதர்களுக்கு தன்னால் இயன்றவரை உதவுகிறான். யாருக்கு பண பிரச்சனையென்றாலும் இவரிடம் போனால் எப்படியாவது உதவுவார் என்ற நம்பிக்கை மக்களுக்கு இருக்கமளவுக்கு உயர்ந்த குணத்தை உடையவர்.

இவர் வசிக்கும் அதே தெருவில் வசிக்கிறார் கோட்டா சீனிவாசராவ். இவர் உலகை ஆள்வது பணமே என்ற கொள்கை உடையவர். பணமில்லையென்றால் பிணமும் மதிக்காது என்று தீவிரமாக நம்புபவர். யாராக இருந்தாலும் பத்திரம் எதுவுமின்றி பணம் தரமாட்டார்.

கதாநாயகனுக்கு அவன் பிள்ளைகள், மற்றும் மருமகனால் பிரச்சனைகள் வர ஆரம்பிக்கிறது. இவருக்கு இருக்கும் நல்ல பேரை பயன்படுத்தி ஃபைனன்ஸ் கம்பெனி ஆரம்பித்து மக்களை ஏமாற்றலாம் என்று முடிவெடுக்கிறார்கள். அதை தடுக்க வேறு வழியில்லாமல் கோட்டாவிடம் கடன் வாங்குகிறார் நாயகன்.

ஏற்கனவே ஒரு ஏழைக்கு உதவ தன் வீட்டு பத்திரத்தை அடகு வைத்ததால், வேறு எதுவுமின்றி கடன் கேட்கிறார் நாயகன். ஏற்கனவே இருவருக்கும் இருந்த போட்டியில் தோற்பதாக ஒத்துக்கொள்கிறார் நாயகன் (உலகில் முக்கியம் மனித நேயமா அல்லது பணமா?). பணமே வெள்கிறது.

அன்று இரவே இறந்துவிடுகிறார் நாயகன். கடன்காரர்களுக்கு பயந்து தலைமறைவாகிறார்கள் நாயகனின் பிள்ளைகளும், மருமகனும். நடக்கும் காட்சிகளை நாயகனின் ஆவியும் எமதூதர்களும் பார்க்கிறார்கள். தன் பிள்ளைகளின் செயலையும், மருமகனின் செயலையும் கண்டு துடிக்கிறார் நாயகன். அவரால் வேறு எதுவும் செய்ய முடியாதே!!!

இறுதியில் அவர் மரணம் தற்கொலை என்று அவர் குடும்பத்தாருக்கு மட்டும் தெரியவருகிறது. பிள்ளைகளின் இழிசெயலால் தற்கொலை செய்து கொள்கிறார். இவரின் மரணத்திற்காக ஊரே மரியாதை செய்கிறது. ஊரில் அனைத்து கடைகளும் மூடப்பட்டு அரசியல்வாதிகளும் வந்து மரியாதை செலுத்துகிறார்கள்.

கொள்ளி வைக்க பிள்ளைகள் வராததால் ஊர் மக்களே அவரை சுமந்து செல்கிறார்கள் (அந்த நால்வர்). அந்த நேரம் யாருக்கும் தெரியாமல் ஊரைவிட்டு போக பார்க்கிறார்கள் பிள்ளைகள். (அதுவரை அதே ஊரில் ஒரு ஹோட்டலில் மறைந்திருக்கிறார்கள்). அவர்கள் சவம் வரும் வழியில் தெரியாமல் சென்று ஊர் மக்களிடம் சிக்குகிறார்கள்.

மக்களும் இவர்கள் இதற்காகத்தான் வெளியூரிலிருந்து வந்திருக்கிறார்கள் என்று இவர்களை அழைத்து கொண்டு சுடுகாடு செல்கிறார்கள். அங்கே தன்னிடமிருந்து வாங்கிய பணத்தை கொடுத்தால்தான் எரிக்க விடுவேன் என்று கோட்டா சொல்ல, அவர் பிள்ளைகள் எங்களிடம் பணமில்லை, வேண்டுமென்றால் சவத்தை நீங்களே வைத்து கொள்ளுங்கள் என்று சொல்ல, ஊர் மொத்தமும் சேர்ந்து கோட்டாவிற்கு பணம் தருகிறார்கள்.

தான் பணம் கேட்டது நாயகனின் பெருமையை அவர் பிள்ளைகளுக்கு உணர்த்தவே என்று சொல்லி அவர்களை திருத்துகிறார். இறுதியில் அனைவரும் திருந்த மகிழ்கிறார் நாயகன். உடனே எமதூதர்கள் மறைந்து தேதூதர்கள் தோன்றுகிறார்காள்.

மக்களே நல்ல படத்தை கேவலமா சொல்லிட்டன்னு நினைக்கிறேன்... உண்மையாலுமே இது அருமையான படம்...

அனுகோகுண்ட ஒக ரோஜு த்ரில்லர் படம். காட்சிக்கு காட்சி நன்றாக இருக்கும். நான் கதை சொல்லி கெடுக்க விரும்பவில்லை... முடிந்தால் பார்க்கவும்... அனானி நண்பரே, நீங்கள் சொல்லி ஒரு மாதத்திற்கு மேலாகிறது என தெரியும். தாங்கள் இதை படித்து எனக்கு தெரியப்படுத்தினால் மகிழ்வேன்...


Tuesday, October 31, 2006

மதுர!!!

மதுரை மக்களே!!! இது உங்களை பத்தி இல்லை...
நம்ம இளைய தளபதி விஜய் நடிச்ச படம்... அப்ப பாக்காம விட்டுட்டேன். நேற்றுதான் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. பாத்துட்டு என்னால பதிவு போடாம இருக்க முடியலை.

இந்த படம் யார் யார் பார்க்கலாம்.
நம்ம முன்னால் பிரதம மந்திரி நரசிம்ம ராவ் மாதிரி சிரிப்பது எப்படினு தெரியாதா? கண்டிப்பா நீங்க இந்த படம் பாக்கனும். நம்ம வாழ்க்கையவிட இந்த உலகத்துல ஏதாவது கொடுமை இருக்கானு விரக்தில இருக்கீங்களா? இது உங்களுக்காகத்தான்.

படத்தோட கதை என்னனா? மன்னிச்சிடுங்க அப்படி எதுவும் இல்லை.

விஜய் மதுரைல கலக்டர். நான் கான்வெண்ட்ல படிச்சி கலெக்டராகல கவர்மெண்ட் ஸ்கூல்ல படிச்சி கலக்டரானவன்னு ஹை-பிட்ச்ல டயலாக் பேசிக்கிட்டே இருப்பாரு (இது எங்களை மாதிரி கவர்மெண்ட் பள்ளிகளில் படித்தவர்களை கேலி செய்வதற்காகத்தான்). சோனியா அகர்வாலை கொலை செய்துவிட்டார் என்ற குற்றத்திற்காக தலை மறைவாக மாறு வேடத்தில் வாழ்கிறார்.

எங்கனு கேக்கறிங்களா? சென்னைல கோயம்பேடு மார்க்கெட்ல. ஆனா 5 நிமிஷத்துக்கு ஒரு தடவை குத்துப்பாட்டுக்கு ஆட்டம் போட்டுட்டு சண்டை போட்டுட்டு இருப்பாரு. அதுவும் லாரி லாரியா ஆளுங்க வந்து அடி வாங்கிட்டு போறாங்க :-)

அப்பறம் மாறு வேஷத்தப்பத்தி சொல்லியே ஆகனும். மீசைய ட்ரிம் பண்ணிட்டு (பேரையும் ட்ரிம் பண்ணிடுவாரு... மதுரைவேல் IASஅ மதுரனு ட்ரிம் பண்ணிடுவாரு.. அடையாளம் தெரியக்கூடாதுனு), கைல டேட்டூ குத்திருப்பாரு. அப்பறம் கட் பணியன் வேற போட்டுருப்பாரு. ஒரு சின்ன சூச்சூவைக் கேட்டக்கூட சொல்லிடும் அது விஜய்னு. ஆனா தமிழ்நாடு போலிஸால கண்டுபிடிக்க முடியாது.

அப்பறம் டாக்டருங்கெல்லாம் இந்த படம் பார்த்தே ஆகணும். ஊமை குழந்தையை எப்படி பேச வைக்கனும்னு ஒரு ஐடியா தராரு நம்ம தலைவர். அதாவது அந்த குழந்தைய நீங்க பீச்சுக்கு கூட்டிட்டு போகனும். அப்பறம் நீங்க கடல்ல குதிச்சு உங்களை கடல் இழுத்துட்டு போற மாதிரி பாவ்லா பண்ணனும் (அப்படியே உங்களை கடல் இழுத்துட்டு போனா அதுக்கு நான் பொறுப்பில்லை). அதை பார்த்து அந்த குழந்தை பயிந்து பேசிடும். இப்பவே கண்ண கட்டுதேனு பாக்கறீங்களா... இன்னும் இருக்கு!!!

ஹீரோயின்னு ஒருத்தவங்க (ரக்ஷிதா) வறுமையில வாடறவங்க (பாவம் துணிய பாத்தா அப்படித்தான் தெரியுது... ஆனா மினிஸ்டர் பொண்ணு) அந்த மார்க்கெட்ல ஏதோ ரிசர்ச் பண்றாங்க. என்ன ரிசர்ச்னு யாருக்கும் தெரியாது... ஆனா விஜய சுத்தி சுத்தி படம் எடுக்கறாங்க. ஒரு வேலை அதுதான் ரிசர்ச்சானு தெரியலை. ஸ்கிரின்ல நாலுல மூணு பகுதி இவுங்க எடுத்துக்கறாங்க.

வில்லன் பசுபதிதான் படத்தோட பெரிய ப்ளஸ் பாயிண்ட். அவருக்கு படத்தில் இரண்டு ரோல். ஒன்று வில்லன் அடுத்தது காமெடியன். அவர் செய்யும் காமெடிக்கு அளவே இல்லை. அவரோட இண்ட்ரொடக்ஷன் அருமை. கண்ணாடி டம்ப்ளர்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி கொண்டிருப்பார். அப்போழுது (விஜயிடம் போட்டு கொடுத்த) கூட்டாளி ஒருவன் அவர் காலில் விழும் போது தவறி அந்த டம்ப்ளர்களை தட்டிவிடுகிறார். உடனே பசுபதி "நான் இவ்வளவு கஷ்டப்பட்டு கட்டின கோட்டைய ஒரே நிமிஷத்துல கலச்சிட்டயேடா"னு (டபுள் மீனீங்காம்!!! ) சொல்லிட்டு அவரை சட்டத்திடம்(?) ஒப்படைக்கிறார். அங்கே அவரே நீதிபதி மாதிரி வந்து காமெடியா அவரை சுத்தியளால் அடித்து கொல்கிறார்.

சோனியா அகர்வால் மதுரைல இவர் கலக்டரா இருக்கும் போது இவருக்கு அசிஸ்டெண்டா இருக்காங்க. வில்லன் வீட்ல ஏதோ ரகசிய டாக்குமெண்ட் எடுக்கறன்னு போயி மசாலா அரைச்சி அங்க இருக்குற 2 தினத்தந்தி கட்டிங்க பாத்ரூம்ல இருந்து விஜய்க்கு ஃபேக்ஸ் பண்றாங்க. (அந்த கட்டிங் கலக்டர் ஆபிஸ்ல இருக்கும்னு பாவம் அவுங்களுக்கு தெரியல.)

அத நம்ம தலைவர் பசுபதி எப்படி கண்டுபிடிப்பார்னா அவருக்கு அந்நிய மூச்சுக்காத்து அடிக்குமாம் (எப்படிடா இப்படி எல்லாம் சிந்திக்கறீங்க?) அதை வெச்சி அவர் சோனியா அகர்வாலை கண்டுபிடித்துவிடுவாராம். பிறகு வழக்கம் போல் விஜயை மிரட்ட விஜய் அந்த தினத்தந்தி கட்டிங்கை அடை மழையில் நினைந்து கொண்டு எடுத்து வருகிறார். பிறகு அங்கு நடக்கும் சண்டையில் படத்தில் இருக்கும் ஒரே நல்ல ஃபிகரான சோனியா அகர்வாலையும் கொன்று விடுகிறார்கள்.

படத்துல முழுக்க குத்து பாட்டுதான்... "மச்சான் பேரு மதுரை", "பம்பரக் கண்ணு", "எலந்தை பழம் எலந்தை பழம் உனக்குத்தான்" (நியாயமா பலாப்பழம்னுதான் பாடியிருக்கனும்) ...

படத்தின் க்ளைமாக்ஸ்தான் வெயிட்டான சீன். ஊருல இருக்குற எல்லாருக்கும் அஞ்சி ரூபா செல் போன் விற்கிறார் பசுபதி. அதில் பாம் வைத்து சரியாக பத்து நிமிடத்திற்கு முன் விஜயிடம் இதை தெரிவிக்கிறான். இதை விஜய் எப்படி சமாளிக்கிறார் என்பதை வெள்ளித்திரையில் காண்க!!!

(டைரக்டர் மாதேஷிக்கு தெலுகு ஃபீல்டில் நல்ல எதிர்காலம்ம் இருக்கிறது. ரவி தேஜாவை வைத்து இவர் படமெடுக்கலாம்)

Friday, October 13, 2006

சுக்கல்லோ சந்திருடு

மக்களே!!! உங்களுக்காக மீண்டும் ஒரு தெலுகு படம்...

படம் வந்து பல நாட்களானாலும் சமீபத்தில்தான் பார்க்க வாய்ப்பு கிடைத்தது.
சரி உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று இந்த பதிவு.

படத்தின் நாயகன் சித்தார்த். நாயகிகள் சதா, சார்மி, சலோனி (இந்த ஒரு காரணத்திற்காகத்தான் DVD எடுத்தோம் ;))

வெளிநாட்டில் சந்தோஷமாக வாழும் கதாநாயகன், தன் தாத்தா(ANR) வின் வற்புறுத்தலால் திருமணத்திற்கு சம்மதிக்கிறார். ஆனால் தனக்கு பிடித்த பெண்ணைதான் திருமணம் செய்வேன் என்று முடிவெடுக்கிறார்.

சிறுவயதில் தன்னுடன் பழகிய பெண்களில் யாராவது ஒருவரை காதலித்து திருமணம் செய்ய முடிவெடுக்கிறார் நாயகன். ஆனால் அவர்களுக்கு தான் யாரென்று சொல்லாமல் அவர்களும் தன்னை விரும்பும் பட்சத்தில் அதில் ஒருவரை மணக்க திட்டமிடுகிறார். அவருக்கு துணைக்க்கு நண்பனாக சுனில் (நம்ம விவேக் மாதிரி)


முதல் நாயகி சலோனி, டென்னிஸ் விளையாட்டு வீராங்கனை (சானியா மிர்சா மாதிரி). அவளை நாயகன் கவரும் விதம் அருமை. சித்தார்த்ட்துடன் ஊர் சுற்றுவதற்காக முக்கியமான ஆட்டத்தில் தோற்கிறார் சலோனி. அதற்காக சித்தார்த் மிக்க மகிழ்ச்சியடைகிறார். (இந்த இடத்தில் எனக்கும் என் நண்பனுக்கும் ஒரு வாக்குவாதமே நடைப்பெற்றது. இந்தியாவை ரெப்ரசண்ட் செய்யும் நாயகி காதலுக்காக வேண்டுமென்றே தோற்பது தவறான ஒரு செயலென்று அவன் சொல்ல. காதலுக்கு முன் எதுவுமே பெரிதல்ல... அதுவும் போக டென்னிஸ் நாடுகளுக்கிடையே நடுக்கும் போட்டியுமல்ல என்று நான் சொல்ல... இறுதியில் இருவருமே அவரவர் எண்ணமே சரியென்று முடித்து கொண்டோம்). ஆனால் இதனால் மனமுடையும் நாயகியின் தந்தை பிரதாப் போத்தனுக்காக காதலை தியாகம் செய்கிறார் சித்தார்த்.


இரண்டாவது நாயகி சார்மி (இவரை நாம் சரியாக பயன்படுத்தி கொள்ள தவறிவிட்டோம்). இவருக்கு அட்டகாசமான பாத்திரம், சமுதாயத்திற்காக உழைக்கும் பாத்திரம் (சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்). அடிக்கடி உணர்ச்சிவசப்படும் பாத்திரம். அருமையாக செய்திருக்கிறார். இவரிடம் மாட்டிக்கொண்டி சித்தார்த்தும், சுனிலும் தவிக்கும் காட்சிகள் அருமை. இவருக்கும் சித்தார்த்திற்கும் திருமணம் வரை கொண்டு சென்று இறுதியில் அவரை அவர் காதலன் பிரபுதேவாவுடன் இணைக்கிறார் சித்தார்த்.


மூன்றாவது நாயகி சதா, டாக்டருக்கு படிக்கும் சராசரி நடுத்தர வர்க்கத்து பெண். தன்னம்பிக்கையிழந்து ஓரளவு பயந்த சுபாவம் உள்ள இவரை மாற்றுகிறார் நாயகன். இறுதியில் சதா இவரை தவறாக புரிந்து கொண்டு வேறொருவரை மணக்க சம்மதித்து, திருமணம் வரை சென்று இறுதியில் சித்தார்த்தை கை பிடிக்கிறார்.

படத்தின் பாடல்கள் மனதை கவரும் விதமாக அமையாதது ஒரு பெரிய குறை. மேலும் நாயகனுக்கு நாயகி மேல் காதல் வரும் இடமும் அழுத்தமாக இல்லை. மூன்று நாயகிகளை வைத்து இன்னும் இளமையாக எடுத்திருக்கலாம். ஆனால் படத்தை தாராளமாக ஒரு முறை பார்க்கலாம்.

இது இயக்குனருக்கு முதல் படமென்று நினைக்கிறேன். அடுத்த படம் இன்னும் சிறப்பாக எடுப்பார் என்று நம்புவோம்.

Thursday, October 05, 2006

பொம்மரில்லு

தெலுகு படம்னா வெறும் மசாலா(மாஸ்) படம்னு ரொம்ப நாளா நினைத்து கொண்டிருந்தேன். ஆனால் அது தவறு என்று ஒரு சில படங்கள் எனக்கு புரிய வைத்தன.

அதில் குறிப்பிடத்தக்கவை "ஆ நலுகுறு" , "அனுகோக்குண்ட ஒக ரோஜு" மற்றும் சமீபத்தில் வெளியாகி வெற்றி நடை போட்டு கொண்டிருக்கும் "பொம்மரில்லு".


"பொம்மரில்லு" என்றால் "பொம்மை வீடு" என்று பொருள். அதாவது வீட்டில் உள்ள அனைவருக்கும் சாவி கொடுப்பது ஒருவர் மற்றவர்கள் எல்லோரும் இயங்கும் பொம்மைகளே என்பது தான் அதன் கதை.

முதல் காட்சியிலே படத்தின் கருவை சொல்லிவிடுகிறார் இயக்குனர். கடற்கரையில் குழந்தையின் கைப்பிடித்து அந்த குழந்தைக்கு நடை பழக சொல்லி கொடுக்கிறார் தந்தை. இதுவே அந்த தந்தை குழந்தை பெரியவனாகியும் அவன் கையை விடாமல் பிடித்து நடக்க சொல்லி கொடுத்து கொண்டிருந்தால் என்ன ஆகும்? இது தான் படத்தின் மையக்கரு.

கண்டிப்பான தந்தை என்று சொல்வதைவிட, எங்கே தனியாகவிட்டால் மகன் தடுக்கி விழுந்திடுவானோ என்று அளவுக்கு அதிகமாக பாசம் வைத்திருக்கும் தந்தையாக பிரகாஷ்ராஜ். வழக்கம் போல் அருமையாக நடித்திருக்கிறார். சராசரி அம்மாவாக ஜெயசுதா.

அப்பாவிடமிருந்து விடுதலை பெற்று தன் சொந்த காலில் நிற்க துடிக்கும் துடிப்புள்ள இளைஞனாக நடித்திருக்கிறார் சித்தார்த். ஆனால் தந்தை முன் அதை வெளிப்படுத்த முடியாமல் திணறுகின்ற பாத்திரம். தன் பாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார் சித்தார்த்.

இதற்கு நேரெதிராக பட்டாம்பூச்சி போல் சுதந்திரமாக சுற்றி திரியும் பாத்திரத்தில் ஜெனிலியா. படத்தில் அனைவரையும் கவரும் கதாப்பாத்திரம். காபி சப்ளை செய்யும் சிறுவன், பானி பூரி கடை வைத்திருப்பவர், ஐஸ் விற்பவர் என்று சகலமானவர்களும் இவருக்கு பேர் சொல்லி கூப்பிடுமளவுக்கு பழக்கம்.

இயற்கையின் நீதியான எதிர் துருவங்கள் ஈர்க்கப்படும் என்பது இங்கேயும் உண்மையாகிறது. முதலில் அவர்கள் இருவரும் நண்பர்களாகி வழக்கம் போல் காதலர்களாகிறார்கள். இறுதியில் காதலர்கள் எவ்வாறு இணைகிறார்கள். பிரகாஷ்ராஜ் எவ்வாறு தன் தவறை உணர்கிறார் என்பதே கதை.


யாராவது தலையில் ஒரு முறை முட்டினால் கொம்பு வரும் என்று நம்பும் அளவுக்கு குழந்தைத்தனம் மற்றும் ரசிக்கக்கூடிய பாத்திரம் ஜெனிக்கு. இறுதியில் பிரகாஷ்ராஜ் தலையில் ஒரு முறை தெரியாமல் முட்டிவிட, கொம்பு வருவதை தவிர்க்க இரண்டாவது முறை முட்ட ஜெனிலியா முயல்வதும் அதை தடுக்க சித்தார்த் தவிப்பதும் அருமையான காட்சி.

இது டைரக்டர் பாஸ்கருக்கு முதல் படம். முதல் படத்திலே அசத்தியிருக்கிறார் மனிதர். வழக்கமாக தெலுகு படத்தில் பாடல்களுக்கு குடுக்கப்படும் முக்கியத்துவம் இந்த படத்தில் இல்லை என்றே தோன்றுகிறது. பாட்டு சுமார் ரகம்தான்.

பார்க்க வாய்ப்பு கிடைத்தால் தவறாமல் பார்க்கவும். முடியாதவர்கள் காத்திருக்கவும். தமிழில் இந்த படத்தை எடுக்க கடும் போட்டி நிலவுகிறது. விஜய், ஜெயம் ரவி, பரத், ரவி கிருஷ்ணா முதலானோர் இந்த படத்தின் தமிழாக்கத்தில் நடிக்க முயற்சி செய்வதாக தெரிகிறது.