தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Monday, December 31, 2007

புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

ராத்திரி பனிரெண்டு மணி வரைக்கும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம். அப்படியே ஹொசூர் ரோட்டுக்கு போய் போற வர வண்டியெல்லாம் நிறுத்தி ஹேப்பி நியூ இயர்னு கத்திட்டு, ஒரு ரெண்டு மணிக்கா வீட்டுக்கு வந்து விடிய விடிய அரட்டை அடிச்சிட்டு, நடு ராத்திரி ஆறு மணிக்கு தூங்கின காலமெல்லாம் அது ஒரு கனா காலம்னு ஆகி போச்சு :-(

இன்னைக்கு இங்க எல்லாரையும் பாட் லாக் கூப்பிட்டிருக்காங்க. என்ன செய்யறதுனு தங்கமணி (யூ டூ பாலாஜி!!!) க்கு ஐடியா கொடுக்கனும். (ரொம்ப பொறுப்பான பையனா மாறிட்டே வறியே பாலாஜினு யாரும் சொல்லாததால நானே சொல்லிக்கிறேன் ;))

ஒரு வழியா இந்த வருஷம் 100 பதிவு போட்டுட்டேன். அடுத்த வருஷம் எப்படியும் பாதியா குறைஞ்சிடும்னு நினைக்கிறேன். பார்க்கலாம் ;)

சரி அனைவருக்கும் என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!!! ENJOY MAADI :-)

Sunday, December 23, 2007

பொறந்த வீடா? புகுந்த வீடா???

'பொறந்த வீடா புகுந்த வீடா
எந்த இடம் சொந்த இடம்' பாடல் ஒலித்து கொண்டிருந்தது...

"என்னங்க, அந்த காலிங் பெல் அடிக்குது இல்லை. நீங்க தான் போய் திறங்களேன்" மனைவியின் அதட்டல் கேட்டு போய் கதவை திறந்த சபாபதி, வெளியில் நின்றிருந்த போலிஸ் கான்ஸ்டிபலை கண்டு குழப்பமடைந்தார்.

"இது மிஸ்டர் ராம் குமார் வீடு தானே?"

"ஆமாம். அவர் என் சன் தான். ஏன் சார் எதாவது பிரச்சனையா?"

"அவரை கொஞ்சம் கூப்பிடறீங்களா?"

"அவன் வெளிய போயிருக்கான். இப்ப வந்துடுவான். என்ன விஷயம்னு கொஞ்சம் சொல்லுங்களேன். நானும் கவர்ன்மெண்ட் சர்வெண்ட் தான் சார்"

"உங்க மருமகள் உங்க எல்லார் பேர்லயும் வரதட்சனை கொடுமை கேஸ் போட்டிருக்காங்க சார். நீங்க கவர்ன்மெண்ட் சர்வெண்ட்னு தெரிஞ்சுது. அதனால எஸ் ஐ சார் இன்னும் கேஸ் ஃபைல் பண்ணல. உங்களை வர சொன்னார். எப்படியாவது பேசி காம்ப்ரமைஸ் பண்ணி பார்க்க சொன்னார். உங்க சன் செல் வெச்சிருக்காரா?"

"வெச்சிருக்கான் சார்"

"சரி சார். அப்ப அவரை ஸ்டேஷனுக்கு வர சொல்லுங்க. நீங்களும் உங்க வீட்டுக்காரம்மாவும் அப்படியே என் கூட கிளம்பி வந்துடுங்க. ஏன்னா இது நான் - பெயிலபுல் கேஸ்."

"நானும் என் சன்னும் வேணா வரோமே சார்"

"இல்லைங்க. உங்க வீட்டுக்காரம்மா மேல தான் கேஸ் முக்கியமா இருக்கு. நீங்க அவுங்களை கண்டிப்பா கூப்பிட்டு வரனும். இல்லைனா எங்களுக்கு பிரச்சனையாகிடும். கேஸ் கொடுத்தா வாங்காம, காசு வாங்கிட்டு தப்பிக்க விட்டுட்டாங்கனு சொல்லிடுவாங்க. நீங்க வேணா தனியா ஆட்டோல வாங்க. எப்படியாவது சமாதானம் பண்ண பாருங்க. எதுக்கும் அந்த பொண்ணு வீட்டு சைட்லயும் பெரியவங்க கிட்ட ஒரு தடவை ஃபோன் பேசி பாருங்க"

"சரிங்க"

குழப்பமான மனநிலையில் உள்ளே சென்றார் சபாபதி.

அழுது அழுது கண்கள் வீங்கிய நிலையிலிருந்தாள் கவிதா. எவ்வளவு பேசியும் அவள் மனதை மாற்ற முடியவில்லை.

"சம்பந்தி, டி.எஸ்.பி உங்க கிளாஸ் மேட்னு சொன்னீங்களே. கொஞ்சம் பேசி பாருங்களேன்" கவலையுடன் விசாரித்து கொண்டிருந்தார் சபாபதி.

"நான் நீங்க சொன்னவுடனே அவனுக்கு தான் ஃபோன் பண்ணேன். இந்த கேஸ்ல கண்டிப்பா யாருக்கும் உதவ முடியாதுனு சொல்லிட்டான். வரதட்சனை கொடுமைனா நான்-பெயிலபில் வேற"

"என் பொண்ணுக்கு நீங்க எதுவும் சொல்லல இல்லை. அவளுக்கு தெரிஞ்சா ரொம்ப கஷ்டப்படுவா"

"இல்லைங்க. நீங்கதான் ஃபோன்லயே சொல்லிட்டீங்களே யாருக்கும் தெரிய வேண்டாம்னு"

"ஏதோ சின்ன புருஷன் பொண்டாட்டி சண்டை தான். அவனும் ஏதோ டென்ஷன்ல ஒரு அடி அடிச்சிட்டான். அதுக்கு போய் கேஸ் கொடுத்துட்டா"

"எனக்கும் என்ன செய்யறதுனே புரியல" கவலை தொய்ந்த முகத்துடன் அடுத்து என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருந்தார் சபாபதியின் சம்பந்தி முருகானந்தம்.

ஒரு மாதம் முடிந்த நிலையில் கவிதாவை பார்க்க அவள் வீட்டிற்கே சென்றான் ராம் குமார். ராம்குமாரை பார்த்ததும் அழுது கொண்டே வீட்டிற்குள் சென்று விட்டாள் கவிதா.

"வாங்க மாப்பிள. உட்காருங்க. நாங்க எவ்வளவு சொல்லியும் கேட்க மாட்டேனுட்டா இந்த பாவி பொண்ணு. மன்னிச்சிக்கோங்க மாப்பிள" கெஞ்சி கொண்டிருந்தார் கவிதாவின் தந்தை.

"பரவாயில்லை மாமா. நான் அவள்ட கொஞ்சம் பேசலாமா?"

"தாராளமா மாப்பிள்ளை. அந்த ரூம்ல தான் இருக்கா" அவளிருந்த அறையை காட்டினார்

உள்ளே சென்று கதவை மூடினான் ராம் குமார். கட்டிலில் படுத்து அழுது கொண்டிருந்த கவிதாவின் அருகிலமர்ந்து அவள் தலையை தன் மடியில் வைத்து அவள் கண்ணீரை துடைத்தான்.

"கவிதா, என்னை மன்னிச்சிடு. வேற வழி தெரியல"

"இருந்தாலும் நீங்க இப்படி பண்ணியிருக்க கூடாது. என் வீட்டுக்காரர், மாமனார், மாமியார் ஜெயிலுக்கு போக நானே காரணமாயிட்டேனே. அநியாயமா பொய்யா கேஸ் போட வெச்சிட்டீங்களே"

"ஒரு நாள் தான. நீ தான் கேஸை வாபஸ் வாங்கிட்ட இல்லை. நீ செஞ்ச இந்த தியாகத்தை நினைச்சி இன்னும் அம்மா, அப்பா பெருமையா பேசிட்டு இருக்காங்க."

"இருந்தாலும் உங்க சொந்தக்காரவங்க எல்லாம் என்னை பத்தி என்ன நினைப்பாங்க"

"சொந்தக்காரவங்களை எல்லாம் விடு. சேர்ந்து வாழப்போறது நம்ம தானே. நீ அன்னைக்கு கொடுத்த அந்த ஷாக் ட்ரீட்மெண்ட் தான் இன்னைக்கு என் தங்கச்சிய சந்தோஷமா வாழ வெச்சிருக்கு. அன்னைக்கு பயந்தவங்கதான் அவ மாமியார்"

"அதுக்கு உங்க தங்கச்சியவேவிட்டு கேஸ் போட சொல்லியிருக்கலாங்க. நானும் யோசிக்காம விட்டுட்டேன். இங்க தினம் தினம் எங்க அப்பாக்கிட்ட நான் வாங்கற திட்டுக்கு உயிரையே விட்டுடலாம்னு தோனுச்சி"

"இங்க பாரு கவி, என் தங்கச்சி மாமியார் பண்ண கொடுமைக்கு கண்டிப்பா கேஸ் கொடுத்திருக்கலாம். அவுங்களை ஜெயிலுக்கும் அனுப்பியிருக்கலாம். ஆனா அடுத்து அவ அந்த வீட்ல போய் வாழ முடியாது. ஆனா இப்ப நிலைமை அப்படியில்லை. அவுங்களே ஜெயிலுக்கு பயந்து மாறிட்டாங்க. உன்னையும் இனிமே எங்க வீட்ல ராணி மாதிரி நடுத்துவாங்க. அடுத்து என் தங்கச்சி மாமனாரையே அன்னைக்கு மாதிரி சமாதானம் பேச கூப்பிட்டு வரோம். நீ தனிக்குடுத்தனம்னா மட்டும் வருவேனு சொல்லு. ரெண்டு மூணு மாசத்துல அம்மா, அப்பா கூட போய் சேர்ந்திடலாம். சரியா?"

"ஹிம்ம்ம்"

"ஒரு மாசம் உன்னை பார்க்காம எனக்கு ரொம்ப கஷ்டமாயிடுச்சிடா செல்லம். ஒண்ணு கொடேன்"

"ச்சீ. என்ன இது பகல்லயே? அதுவும் அப்பா வேற வெளிய இருக்காரு. நீங்க முதல்ல இங்க இருந்து கிளம்புங்க"

"உனக்கு ஒண்ணு தெரியுமா? தக்காளி விலை தங்கம் மாதிரி தினமும் ஏறிட்டே இருக்காம். உங்க அப்பாவை வேணா மார்கெட் போய் இன்னைக்கு என்ன விலைனு கேட்டு வர சொல்லுவோமா?"

"அடி வாங்க போறீங்க. ஒழுங்கா வீட்டுக்கு கிளம்புங்க"

அடுத்த நாள்

"கவிதா உன் தங்கச்சி லைன்ல இருக்கா, சீக்கிரம் வா" கவிதாவின் அப்பா கத்தியது தெரு முனை வரை கேட்டது.

"இருங்க வரேன்"

"சொல்லு அனிதா, எப்படிடி இருக்க?"

"நல்லா இருக்கேன். நேத்து மாமா வந்தாராமே?"

"ஆமா. அடுத்து தனிக்குடுத்தனம் போறோம். ஒரு மூணு மாசம் கழிச்சி மாமியார் வீட்டுக்கே போயிடறேன்"

"ஹிம்ம்ம்ம்"

"ஏன்டி அழற? மறுபடியும் உன்னை ஏதாவது திட்டினாளா உன் மாமியார்காரி?"

"இல்லை கவி. நீ கேஸ் கொடுத்ததுக்கப்பறம் மாறினவங்க தான். இப்பவும் என் மேல ஒரு பயத்தோட தான் இருக்காங்க. எனக்காக நீ எவ்வளவு ரிஸ்க் எடுத்திருக்க கூடாது கவி"

"என்னடி பண்ண? அவர் தங்கச்சிக்காக அப்படி ஒரு ப்ளான் பண்ணி அவரும் அவுங்க அப்பா, அம்மாவும் ஜெயிலுக்கு போகவே ரெடியாயிருந்தாங்க. எனக்கு தயக்கமாதான் இருந்துச்சி. ஆனா அவர் தங்கச்சி மாமியார் மாதிரி உன் மாமியார் பயந்து மாறினாங்கனா நமக்கும் நல்லது தானேனு ஒத்துக்கிட்டேன். எல்லாம் நல்ல படியா முடிஞ்சிது"

Friday, December 14, 2007

எங்கிருந்தாலும் வாழ்க!!!

சூர்யாவின் கைகளில் அந்த திருமண பத்திரிக்கை மின்னிக்கொண்டிருந்தது. ஆம் நீங்கள் எதிர்பார்த்தது சரிதான். அவன் தன் வாழ்க்கையே இவளுக்காகத்தான் என்று நினைத்து கொண்டிருந்த ராதிகாவின் திருமண பத்திரிக்கை தான் அது.

நாளை மறுநாள் அவளுடைய திருமணம். அவனை அறியாமல் அவன் கண்களில் கண்ணீர் வந்து கொண்டிருந்தது. யாரும் பார்த்துவிடாமலிருக்க அவசரமாக கண்ணீரை துடைத்தான்.

வேகமாக குளித்துவிட்டு வந்து அவனுடைய பீரோவை திறந்தான். மேலே அந்த சிகப்பு நிற டி-சர்ட் அழகாக மடித்து வைக்கப்பட்டிருந்தது. அவன் எவ்வளவோ வேண்டாமென்று சொல்லியும் அந்த டி-சர்டை அவனுடைய பிறந்த நாளுக்கு வாங்கி கொடுத்து அழகு பார்த்தவள் ராதிகா. கிராமத்திலிருந்து வந்ததாலோ ஏதோ காரணத்தால் அவனுக்கு இந்த மாதிரி துணிகள் பிடிப்பதில்லை. ஆனால் ராதிகாவின் பேச்சை தட்ட அவனுக்கு மனம் வராததால் அந்த டி-சர்ட் வாங்கி கொண்டான். அந்த பிறந்த நாள் அவனுக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்.

ராதிகா வாங்கி கொடுத்த அந்த டி-சர்டை அணிந்து கொண்டு அவளை அவனது ஸ்ப்ளெண்டரில் உட்கார வைத்து சினிமாவிற்கு அழைத்து சென்றான். அன்று இரவு டின்னர் கூட முருகன் இட்லி கடையில் சேர்ந்தே சாப்பிட்டனர். அவன் பிறந்த நாள் நியாபகம் வந்தவுடன் அவனுக்கு அவள் கொடுத்த கிரிட்டிங் கார்ட் ஞாபகமும் வந்தது. அதை அவன் பீரோ லாக்கரில் தேடி எடுத்தான்.

Many More Happy Returns Of the Day என்று எழுதியிருந்த வாழ்த்து அட்டையின் உள்ளே I Luv U So Much என்று ராதிகாவின் கையெழுத்து அழகாக தெரிந்தது. அதை பார்த்ததும் மீண்டும் அவனை அறியாமல் கண்ணீர் எட்டி பார்த்தது. அடுத்த நிமிடம் ஏதோ மனதை பிசைவது போலிருந்தது சூர்யாவிற்கு. எடுத்த பொருட்களை மீண்டும் பீரோவில் வைத்து வேகமாக அந்த இடத்தை காலி செய்தான்.

ராதிகாவின் திருமணம் முடிந்தவுடன் சென்னையை காலி செய்வது என்று முடிவு செய்து கொண்டான். சூர்யாவில் மனதை நன்கு தெரிந்த அவன் அக்கா அவனை கிராமத்திற்கு அவளுடனே வந்து தங்குமாறு வற்புறுத்தி கூறியிருந்தாள். அவனுக்கு அவளுடன் தங்கும் எண்ணமில்லை. அவள் வீட்டுக்காரர் சிடுமூஞ்சி. அவனால் அங்கு காலம் தள்ள முடியாது. வேறு எங்காவது சென்றுவிட வேண்டுமென்று முடிவு செய்திருந்தான். ஊரைவிட்டு சென்றால் ராதிகாவின் நினைப்பு மறந்துவிடுமா என்ன? பைத்தியக்காரன்.

அந்த திருமண மண்டபம் மக்கள் கூட்டத்தில் நிறைந்து வழிந்தது. சூர்யாவை பார்க்கும் பொழுது எல்லாம் ராதிகாவின் மனம் வேதனையால் துடித்து கொண்டிருந்தது. என்ன செய்வது? எல்லாம் விதியின் விளையாட்டு. சூர்யாவிற்கும் மனதில் வலியிருந்தாலும் அதை வெளியே காட்டி கொள்ளாமல் சிரித்து கொண்டிருந்தான். ஆண் பிள்ளையில்லவா?

சூர்யாவை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்த மாப்பிள்ளையின் தந்தையை அவன் கவனிக்க தவறவில்லை.

"ஐநூறு ரூபாய்க்கு சேஞ்ச் வெச்சிருக்கீங்களா? கொஞ்சம் அவசரமா தேவைப்படுது"

"இருங்க. தேடி பாக்கறேன்" வேகமாக பர்சை எடுத்து திறந்தான் சூர்யா. அதில் அவன் வைத்திருந்த ராதிகாவுடன் சேர்ந்து எடுத்திருந்த புகைப்படம் அந்த கழுகு கண்களிலிருந்து தப்பவில்லை. சூர்யாவும் அதை கவனித்துவிட்டான்.

"என்னங்க சம்பந்தி பர்ஸில கூட பொண்ணு ஃபோட்டோவா? வீடு முழுக்கத்தான் வெச்சிருந்தீங்கனு பார்த்தா. இதுலயுமா?"

"என்னங்க பண்றது? தாயில்லாத பொண்ணாச்சேனு ரொம்ப பாசத்தை கொட்டி வளர்த்துட்டேன். அதான் அவள் முகத்தை நினைக்கும் போதெல்லாம் பார்க்கலாமேனு பர்ஸில வெச்சிருக்கேன். அவளை இப்ப அமெரிக்காக்கு அனுப்பிட்டு எப்படி இருப்பனோனு புரியல"

"கவலைப்படாதீங்க. சீக்கிரம் என் பையனுக்கு பிராஜக்ட் முடிஞ்சதும் இந்தியா வந்துடுவாங்க. நீங்களும் நம்ம கூடவே வந்து தங்கிக்கோங்க. எல்லாம் சேர்ந்தே இருப்போம்...."

(சர்வேசன் போட்டில கலந்துக்கறது இந்த திருப்பம் போதுமானு கொஞ்சம் சொல்லுங்களேன்!)

Thursday, December 06, 2007

கமு... கபி

நவம்பர் 5
காலை 7 : அலாரம் ஸ்னூஸ் செய்யப்படுகிறது. 8 மணி வரை இது தொடர்கிறது.

டிசம்பர் 5
காலை 7: அலாரம் ஆஃப் செய்யப்படுகிறது. எழுந்திரிச்சி பல்லு விளக்கி ஃபேஸ் வாஷ் பண்ணிக்கோங்க. காஃபி போட்டு வரேன்
7:15: சுட சுட அருமையான காஃபி வருகிறது. அதை குடித்து கொண்டே புலி, தேவ் அண்ணா, ராயலிடம் சேட் நடந்து கொண்டிருந்தது.

நவம்பர் 5:
காலை 8: ஆபிஸிக்கு நேரமாச்சு. சீக்கிரம் குளிச்சிட்டு கிளம்பனும். கார்ன் ஃபிளேக்ஸ் சாப்பிடலாமா இல்லை பிரெட் ஜாம் சாப்பிடலாமா? நேத்து தான் பிரெட் ஜாம் சாப்பிட்டோம். இன்னைக்கு கார்ன் ஃபிளேக்ஸ்.

டிசம்பர் 5
காலை 7:45: பொறுமையாக குளிச்சிட்டு வரலாம். நேத்து தோசை சாப்பிட்டாச்சு. இன்னைக்கு இட்லி ஓகே.
8:30: சூடான இட்லி, வெங்காயச்சட்னி.

நவம்பர் 5
காலை 10: இந்தியால 8:30 ஆச்சு. ஃபோன் பண்ணனும். IP போனுக்கு இணைப்பு ஏற்படுத்தப்படுகிறது.

டிசம்பர் 5
காலை 9:15 : ஆபிஸ் வந்துட்டேன். மதியம் சாப்பாட்டுக்கா? ஏதாவது காய் போட்டு சாம்பார் வெச்சி உருளைக்கிழங்கு வறுத்துடு. எங்க அம்மா செஞ்ச மாதிரி செய்யி. ஞாபகம் இருக்கு இல்லை. ஏதாவது சந்தேகம்னா அம்மாக்கு ஃபோன் பண்ணி கேட்டுக்கோ. மதியம் 1 மணிக்கு வீட்ல இருப்பேன்.

காலை 10: சரி. வேலை செய்யலாம்.
அப்படியே தமிழ்மணம் பார்த்தும் மாசக்கணக்காச்சு. அதுவும் இல்லாம நாம ஒரு முன்னாள் வலைப்பதிவராயிட்டோம். அதை சரி செய்யலாம்.

நவம்பர் 5:
மதியம் 12:30: எல்லாம் எனக்காக வெயிட் பண்றாங்க. நான் சாப்பிட போகனும். ஃபோன் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. முதல் நாள் இரவு செய்த சாப்பாடு மைக்ரோ வேவில் சூடு செய்யப்பட்டு உள்ளே இறங்குகிறது.

டிசம்பர் 5:
மதியம் 12:30: மக்களே! நான் வீட்டுக்கு போய் சாப்பிட்டு வந்திடறேன். நீங்க கண்டினியூ பண்ணுங்க.

மதியம் 1: சுட சுட சாம்பார், ரசம், உருளைக்கிழங்கு வறுவல் எல்லாம் வயிற்றுக்குள் இறங்குகிறது. கொஞ்சம் கொஞ்சம் எங்க அம்மா செய்யற மாதிரி தான் இருக்கு. ஆனா ஏதோ மிஸ்ஸாகுது. எதுக்கும் இன்னைக்கு ராத்திரி ஃபோன் பண்ணும் போது கேட்டுக்கோ.

நவம்பர் 5:
மதியம் 2: வேலை செய்யலாம். போர் அடிக்குது.

டிசம்பர் 5:
மதியம் 2: வெளிய பனி ரொம்ப அதிகமா இருக்கு. பேசாம Working From Home போட்டுக்கலாம்.

நவம்பர் 5:
மாலை 5: இப்ப வீட்டுக்கு போய் என்ன பண்ண? இன்னும் கொஞ்ச நேரம் வேலை செய்யலாம்.

டிசம்பர் 5:
மாலை 5: சரி. மணியாச்சி. நான் நெட்வொர்க்ல இருந்து டிஸ்கனெக்ட் பண்ணிடறேன்.

நவம்பர் 5:
மாலை 7: சரி இப்ப பாத்திரம் விலக்கினாத்தான் 9 மணிக்கு சாப்பிட முடியும். அப்படியே Videoduniyaல படம் பார்த்துட்டே பாத்திரம் விலக்கலாம்.

டிசம்பர் 5:
மாலை 7: இன்னைக்கு சாப்பத்திக்கு தக்காளி கொத்ஸி பண்ணிடு. நேத்து மாதிரியே பட்டாணி குருமா எல்லாம் வேணாம்.

நவம்பர் 5:
இரவு 9: இராத்திரி சுட சுட சாதம் சாப்பிடற சுகமே சுகம் தான். அதுவும் ஐயா சமையலை அடிச்சிக்க ஆளே இல்லை.

டிசம்பர் 5:
இரவு 9: சாப்பாத்தி நல்லா இருக்கு. தக்காளி கொத்ஸி எங்க அம்மா வேற மாதிரி செய்வாங்க. இப்ப ஃபோன் பண்ணி கேட்டுக்கலாம்...

நவம்பர் 5:
இரவு 10: பெங்களூர் ஆபிஸிலிருந்து ஆஃப் ஷோர் கால் - இன்னைக்கு இது தான் வேலை. ஏதாவது சந்தேகமிருந்தா எப்ப வேணா ஃபோன் பண்ணுங்க.

டிசம்பர் 5:
இரவு 10: பெங்களூர் ஆபிஸிலிருந்து ஆஃப் ஷோர் கால் - இன்னைக்கு இது தான் வேலை. ஏதாவது சந்தேகமிருந்தா இப்பவே கேட்டுக்கோங்க. இதுக்கு மேல ஃபோன் பண்ணா ஃபோன் Switch off ஆகியிருக்கும்...