தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Friday, August 10, 2007

வேங்கையின் மைந்தன்

இந்த பொன்னியின் செல்வன் படிச்சதுக்கப்பறம் வரலாற்று புதினங்கள் படிக்கறதுல ஆர்வம் ரொம்ப அதிகாமாகி, நிறைய புத்தகம் வாங்கி வெச்சேன். அப்ப பார்த்து ஆன்சைட் வந்துடுச்சி. அதனால எல்லாத்தையும் படிக்க முடியாம ஊர்ல விட்டுட்டு வந்துட்டேன். ஆனா இந்த தடவை போனப்ப ஊர்லயே யவன ராணி படிச்சேன். அப்பறம் இங்க வரும் போது ஜல தீபம், ராஜ முத்திரை, வெற்றி திருநகர், வேங்கையின் மைந்தன் எடுத்துட்டு வந்தேன்.

என்கிட்ட ஒரு கெட்ட பழக்கம் என்னனா இந்த மாதிரி புக் படிக்க ஆரம்பிச்சிட்டா அப்பறம் உலகத்தையே மறந்துடுவேன். யவன ராணி படிச்சி வீட்ல செம தீட்டு வாங்கினேன். "இந்த சாண்டில்யன் எப்ப பாரு பொண்ணுங்களை வர்ணிச்சிக்கிட்டே இருப்பாரு. அதை உன் புள்ளை சாப்பிடாம கூட படிச்சிட்டே இருக்கானு" அப்பா, அம்மாட்ட சொல்லிட்டு இருந்தாரு. என் சோழ திருநாடு ஆபத்திலிருக்கும் போது எப்படிங்க சாப்பிட முடியும், தூங்க முடியும்? நீங்களே சொல்லுங்க. சரி அதை பத்தி இன்னோரு பதிவுல சொல்றேன்.

ரெண்டு நாளைக்கு முன்னாடி சரி ஏதாவது படிக்கலாம்னு பார்க்கும் போது இந்த நாலு புக்ல நம்ம வேங்கையின் மைந்தன் தான் ரொம்ப கவர்ந்திழுத்துச்சி. முக்கியமான காரணம் பொன்னியின் செல்வரோட மகன் தான் இந்த வேங்கையின் மைந்தன். அதனால அதோட தொடர்ச்சி இருக்கானு படிக்க ஆரம்பிச்சேன்.

இது அகிலன் எழுதி சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவல். அதுவோ ஒரு ஆர்வத்த ஏற்படுத்துச்சி. அப்பறம் நம்மோட எவர் கிரின் ஹீரோ, சூப்பர் சூப்பர் ஸ்டார் வந்தியத்தேவன் இருக்காரானு பார்க்கனும்னு ஆசை வேற. என்ன இருந்தாலும் வந்தியத்தேவனை மறக்க முடியல. (கதாநாயகில நம்ம ஃபெவரைட் யவன ராணி/மஞ்சளழகி). சரினு படிக்க ஆரம்பிச்சேன்.

ராத்திரி ஒரு 11 மணிக்கு படிக்க ஆரம்பிச்சிருப்பேன். அப்பறம் 7 மணி நேரம் தூங்கினா போதும்னு ஒரு பன்னிரெண்டு மணிக்கா படுத்துடலாம்னு பார்த்தேன். அது அப்படியே 6 மணி நேரம், 5 மணி நேரம், 4 மணி நேரம்னு வந்து 3 மணிக்கு படுத்தேன். அப்பறம் அடுத்த நாள் ஆபிஸிக்கு லீவ் போட்டு படிக்கலாமானு பார்த்தேன். ஆனா கண்டிப்பா போக வேண்டியதிருந்ததால போயிட்டேன். அவ்வளவு ஆர்வமா இருந்துச்சு கதை.

கல்கி அவர்களோட பொன்னியின் செல்வனளவுக்கு இல்லைனாலும் கண்டிப்பா எந்த இடத்திலும் போர் அடிக்கல. அதுவுமில்லாம நம்ம சாண்டில்யனோட வர்ணனையும் இதுல இல்லை, கதா நாயகன் அதிபுத்திசாலியாவும் இல்லை. அதுவே எனக்கு ரொம்ப பிடிக்க காரணம். கதைனா எனக்கு ஒரு விறுவிறுப்பு இருக்கனும். சும்மா கதாநாயகி எப்படி இருந்தானு 4 பக்கத்துக்கு வர்ணிச்சா நமக்கு பிடிக்காது. அந்த வகைல இதுல ரொம்ப வர்ணனையில்லாதது ஒரு சந்தோஷம். கதை ஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கும் ஒரே விறுவிறுப்பு.

கதையோட துவக்கமே ஒரு விறுவிறுப்பு வந்துடுது. கதாநாயகன் இளங்கோ, நம்ம கொடும்பாளுர் இளவரசர் (வானதி - அடிக்கடி மயக்கம் போட்டு விழுவாங்களே, அவுங்க குடும்பத்துல வந்தவர் தான்). இவரோட வீரமும், காதலும் கலந்து அன்று நடந்த அரசியல் மாற்றங்களை சொல்வது தான் இந்த வேங்கையின் மைந்தன். இதை படிச்சா தமிழனு கண்டிப்பா ஒரு பெருமை வருது. டீம்ல இருக்கற ஹிந்திக்காரவங்ககிட்ட எல்லாம் "டேய் நாங்க எல்லாம் அப்பவே அப்படிடானு சொல்லனும் போல இருந்தது".

கதைல நம்ம ஃபேவரைட் கதாநாயகன் வந்தயத்தேவன் இருக்காரு. இதுலயும் அவர் கிட்டதிட்ட கதாநாயகன் தான். வயசானாலும் அவர் குறும்பு இன்னமும் இருக்கு. அப்பறம் இதுல கவரும் இன்னோரு கதாபாத்திரம் ரோகிணி. அவர் ஈழத்திலிருக்கும் ஒரு சிற்றரசின் இளவரசி. இவர் காதலுக்கும், நாட்டு பற்று/குடும்ப பாசம் இவற்றுக்கு நடுவில் ஊஞ்சலாடும் பாத்திரம். ஆனா ரொம்ப அருமையான பாத்திரம். சில சமயம் காதலால் உருகுவதும், சில சமயம் தன் தம்பி மேல் கொண்ட பாசத்தால் காதலனுடன் சண்டை போடுவதும். பிறகு வருந்துவதும்னு இருப்பாங்க. கதாநாயகனும் அப்படியே.

வரலாற்று புதினம் புடிச்சவங்க கண்டிப்பா இந்த புத்தகம் வாங்கி படிக்கலாம்.

சரி கதைல இருக்கற சில முக்கியமான விஷயங்களை மட்டும் ஹிண்டா கொடுக்கறேன். கண்டிப்பா கதை படிக்க போறோம்னு நினைக்கறவங்க இனிமே படிக்காதீங்க...

ஈழத்திலிருக்கும் பாண்டிய மன்னனுடைய மணிமுடி தமிழகத்திற்கு மீண்டு வருகிறது. பொன்னியின் செல்வரால் முடியாததை வேங்கையின் மைந்தன் சாதிக்கிறார்.

பாண்டியர்களுடன் நடக்கும் போரில் இரு பாண்டிய மன்னர்கள் இறக்கிறார்கள். சுந்தர பாண்டியன் இறுதியில் வந்தியத்தேவரால் கைது செய்யப்படுகிறார்.

சாளுக்கியர்களை வென்று காசி வரை சென்று கங்கையை தமிழகத்திற்கு கொண்டு வருகிறார் வேங்கையின் மைந்தன். கங்கை கொண்ட சோழபுரம் அருமையாக கட்டி முடிக்க படுகிறது.

இறுதியில் கடாரத்தை வென்ற பிறகே மணம் முடிக்கிறார் இளங்கோ. கடாரத்தை ராஜேந்திரர் வென்றதை பத்தி கடல் புறால கூட பேசியிருப்பாங்க.

இளங்கோவுக்கும் நம்ம இளைய பல்லவனுக்கும் (கடல் புறா) ஒரு பெரிய தொடர்பு இருக்கு. க்ளைமாக்ஸ்ல... என்னனு கெஸ் பண்ணிக்கோங்க ;) (ஜினியர் NTR படம் பார்க்கறவங்களும் கண்டு பிடிக்கலாம்)

................

சரி அடுத்த இருக்கற மூணு நாவல்ல எதை படிக்கலாம்னு சொல்லுங்க. இந்த வார இறுதியில படிச்சிடலாம்...

Friday, August 03, 2007

கிரீடம் - முள் கிரீடமா?

நேத்து கப்பிக்கு கொடுத்த வாக்குறுதியை மீற கூடாதுனு படம் பார்க்க ஆரம்பிச்சேன். கடைசி வரைக்கும் பார்த்தேன். அஜித் படம்னாவே ஒரு பயம் தான். அது சிட்டிசன்ல ஏற்பட்டது. இன்னும் இருந்துட்டே இருக்கு. இந்த மாதிரி ஒரு 3-4 படம் நடிச்சா மாறிடும்னு நினைக்கிறேன்.

முதல்ல இந்த கதைல நடிச்சதுக்கு அஜித்தை பாராட்டனும். மலையாளத்துல ஹிட்டான கதைனாலும், வாழ்க்கைல தோக்கற ஒருத்தனா, கமெர்ஷியல் ஹீரோவான அஜித் இதுல நடிச்சது கண்டிப்பா ஒரு ஆச்சர்யம்தான். படத்துல அஜித்துக்கு சமமான பாத்திரம் ராஜ்கிரனுக்கு. பின்னி பெடலுடுத்திருக்கிறார். த்ரிஷா தெலுகு படத்துல நடிச்சி அழகாயிட்டாங்க (நல்லா மேக்கப் போட கத்துக்கிட்டாங்க).

ஆரம்பத்தில் வரும் நகைச்சுவை காட்சிகள் நிஜமாலுமே சிரிக்க வைக்கிறது. சந்தானம் டபுள் மீனிங் ஜோக்ஸ் இல்லாம நடிச்சிருக்கார். யாருமே இல்லாத பஸ் ஸ்டாப்ல கூட்டமா இருக்குனு சொல்லி கூட்டமா இருக்கற ரெஸ்டாரண்டுக்கு கூப்பிட்டு போற சீன் சூப்பர். அதே மாதிரி தண்ணி தோட்டில த்ரிஷா பேசறதும், கீழ இருக்கறவங்க கேக்கறதும் நகைச்சுவை வர வைத்தது.

படத்துல பல இடங்களில் அஜித் நடிப்பில் மிளிர்கிறார். ஒரு சீன்னு சொல்ல முடியாது. பல இடங்களில் அவ்ர் முக பாவனை பல வசனங்களை நமக்கு சொல்லிவிடுகிறது. சில இடங்கள்ல வசனம் இல்லாததே ரொம்ப அருமையா இருந்துச்சு. ராஜ்கிரண் மாதிரி பல அப்பாக்கள் இன்னும் இருக்கத்தான் செய்றாங்க. ஒரு சிலருக்கு அது சிரிப்பை வர வைக்கலாம். ஆனா எனக்கு நினைவு தெரிஞ்சி நான் எங்க ஊர்ல இருந்து தனியா பஸ் ஏறி போற மாதிரி இருந்தா எங்க அப்பாதான் என்னை வந்து பஸ் ஏத்திவிடுவார். பெங்களூர்ல வேலைக்கு போகும் போது கூட வந்து என்னை பஸ் ஏத்திவிட்டு நான் கம்ஃபர்டபுல இருக்கனானு பார்த்து கண்டக்டரிடம் என்னை பத்திரமா இறக்கிவிட சொல்லி, (நான் எலக்ட்ரானிக் சிட்டில இறங்குவேன். தூங்கிட்டே போயிடுவனோனு ஒரு பயம்) தண்ணி பாட்டில், படிக்க ஏதாவது ஒரு புத்தகம் வாங்கி கொடுத்து பஸ் புறப்படும் வரை இருந்துவிட்டு தான் புறப்படுவார். இதுவரை அது மாறவே இல்லை. (இப்ப கூட ஃபிளைட்டுக்கு நான் கீழ இருந்தே உன் ஃபிளைட்ட பாக்க முடியுமானு கேட்டு என்கிட்ட நல்லா வாங்கி கட்டிக்கிட்டார்). சரி திரும்ப படத்துக்கு வருவோம்.

அப்படி ஒரு அப்பாவோ, குடும்பமோ இருக்கறது ஒரு சாதாரணமான விஷயம்தான். திரிஷாக்கு வேற இடத்துல கல்யாணம்னு சொன்னதுக்கப்பறம் அவுங்க கல்யாணத்தை ஒரு சோகப்பாட்டுல காட்டததுக்கு டைரக்டருக்கு ஒரு ஸ்பெஷன் நன்றி. க்ளைமாக்ஸ்ல அஜித் அழுவற சீன்ல பட்டைய கிளப்பியிருக்கார். படத்துல அஜித் வில்லன் கூட்டத்தை கண்டு ஓடுவதும், சண்டைக்கு ஏதாவது ஒரு தடியை பயன்படுத்துவதும் ஓரளவிற்கு இயல்பாக இருப்பதை போலவே பட்டது. தல தள படங்களை பார்ப்பதில்லை போலும்.

நீங்க சினிமா ரசிகரா இருந்தா கண்டிப்பா இந்த படம் பார்க்கலாம். படத்துல பாட்டு எல்லாம் இன்னும் நல்லா வந்திருந்தா இது கண்டிப்பா சூப்பர் ஹிட் ஆகியிருக்கும். எப்படி பார்த்தாலும் இது தலைக்கு முள் கிரீடம் கிடையாது.