தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Friday, May 08, 2009

பாலம் - சங்கமம் போட்டிக்கு

கூரையிலிருந்து தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்த சத்தம் இரவு முழுக்க கேட்டு கொண்டிருந்தது. வானம் இன்னும் இருட்டாகவே இருந்தது. கோழிக் கூவும் சத்தமோ, பால் கறக்க கறவை மாடுகளை சொசைட்டிக்கு கூப்பிட்டு செல்லும் சத்தமோ கேட்கவில்லை. இருந்தாலும் எனக்கு தூக்கம் கலைந்துவிட்டது. இரவு முழுவதும் ஏதோ கெட்ட கனவாகவே வந்து கொண்டிருந்தது.

பாயிலிருந்து எழுந்து தாழ்வாரத்திற்கு சென்றேன். கிழவி அடுப்பங்கறையில் எருமுட்டையையும், விறகையும் வைத்து போராடிக் கொண்டிருந்தாள். அவள் ஊதாங்குழலை வைத்து ஊதியும் பெரிதாக பயனில்லாமல் இருந்தது. சீமெண்ணையை ஊத்தி முயற்சி செய்து கொண்டிருந்தாள். விட்டு விட்டு பொய்யும் மழையில் எல்லாம் ஈரமாகி இருக்கும்.

“என்னடா குமாரு, அதுக்குள்ள எழுந்திரிச்சிட்ட?”

“ஒண்ணுமில்ல. இந்த மழை சத்தத்துல சரியா தூங்க முடியல. அதான் சத்தத்துல எழுந்திரிச்சிட்டேன்”

“சரி சரி. இன்னைக்கு ஒங்க பள்ளியூடம் இருக்கா?”

“தெரியல. தொடர்ந்து மழை பெஞ்சிட்டே இருக்கு. எல்லா பள்ளிக்கூடமும் லீவு விட்டுட்டாங்க. இவுங்க புது பள்ளிக்கூடம், ரொம்ப ஸ்ட்ரிக்ட்டுனு பேர் வாங்கணும்னு லீவே விட மாட்றாங்க”

”ஏன்யா, அந்த பாலம் வேற விரிசல் விட்டுருக்குனு எல்லாம் பேசிக்கறாங்க. அதைத் தாண்டி பள்ளீயூடம் வெச்சிட்டு லீவு விடமாட்றானுங்களே. புள்ளைங்களுக்கு ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆகிடுச்சினா?”

எனக்கும் அந்த சிந்தனை தான் ஓடிக் கொண்டிருந்தது. நேற்றே அந்த விரிசலைப் பார்த்தேன். எப்படியும் மழை நின்றால் தான் அதை சரி செய்வார்கள். அந்த பக்கமாக நிறைய பேருந்துகளும், லாரிகளும் செல்வதில்லை. அதை கடந்து செல்லும் முப்பது, நாப்பது பெரிய வண்டிகளுள் நான் ஓட்டி செல்லும் பேருந்தும் ஒன்று. என்னுடைய வண்டி முழுதும் குழந்தைகள். ஊரிலிருக்கும் பணக்காரப் பிள்ளைகள் பெரும்பாலும் அந்த பள்ளியில் தான் படிக்கின்றனர். அனைவரும் என் பேருந்தில் தான்.

”அதெல்லாம் ஒண்ணுமில்ல. யாரோ சும்மா கதை கட்டி விட்டுருக்காங்க. அப்படி ஏதாவது இருந்தா நிச்சயம் லீவு விட்ருவாங்க”

சொல்லிவிட்டு போய் மீண்டும் படுத்துக் கொண்டேன். இன்னும் ஒரு மணி நேரம் தூங்கலாம். தூக்கம் வரவில்லை. ராத்திரி முழுக்க மழை பெய்து கொண்டிருந்திருக்கிறது. பள்ளி லீவு விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். கொஞ்ச நேரம் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தேன்.  மெதுவாக கண்விழித்து பார்த்தேன். சுவற்றில் சிவப்பாக மரவட்டை ஒன்று ஊர்ந்து கொண்டிருந்தது. சுவற்றின் சுண்ணாம்பு விழுந்து லேசான பள்ளமானப் பகுதி வந்ததும் அது அப்படியே நின்றுவிட்டது. பிறகு அப்படியே பின்னால் சென்று அதை சுற்றிக் கொண்டு சென்றது. 

எழுந்து போர்வையை மடித்து வைத்து பாயை ஓரமாக எடுத்து வைத்துவிட்டு, சட்டையை மாட்டிக் கொண்டு வெளியே கிளம்பினேன். நேராக லஷ்மி ஒயின்ஸிற்கு நடந்தேன். அது இருபத்தி நான்கு மணி நேரமும் இயங்கும் என்பது எனக்கு தெரியும். காலை நேரத்தில் அண்ணாச்சி இருப்பதற்கான சாத்தியங்கள் மிக அதிகம். நான் எதிர்பார்த்த படி அண்ணாச்சி அங்கே இருந்தார்.

“என்னடா குமாரு. இந்த நேரத்துல இங்க வந்திருக்க? சரக்கு போட்டுட்டு வண்டில ஏறுன, அப்படியே அறுத்துபுடுவேன். கால”

“இல்லைங்க அண்ணாச்சி. இன்னைக்கு பள்ளிக்கூடம் இருக்கானு கேட்டுட்டு போகலாம்னு வந்தேன்”

“இது என்ன கேள்வி. புதன் கிழமை அதுவுமா எதுக்கு பள்ளிக்கூடம் லீவு விடுவாங்க? இன்னைக்கு காந்தி பொறந்த நாளுக்கூட கிடையாதே”

”தொடர்ந்து மழை பெஞ்சிட்டு இருக்கு அண்ணாச்சி. அதான் கேட்டேன்”

“ஏன்டா புள்ளைங்க எல்லாம் மரத்தடியிலையா படிக்க போதுக? அவ்வளவு பெரிய பில்டிங் கட்டிருக்கறேன். எதுக்கு மழைக்கு லீவு விடணும்? எனக்கு ஒயின்ஸ் ஷாப் மாதிரி தான் பள்ளிக்கூடமும். அதுக்கு அவ்வளவு சீக்கிரம் லீவு எல்லாம் விட முடியாது. புரியுதா?”

“இல்லைங்க அண்ணாச்சி. பாலம் லேசா விரிசல் விட்டிருக்கு. அதான்”

”எவன்டா அவன். புரியாத பையனா இருக்கான். அது என்ன பெரிய பாம்பன் பாலமா? கண்ணை மூடி திறந்தா அதை தாண்டிட போற. அதுக்குள்ளவா அது உடைஞ்சிட போகுது. அதுவுமில்லாம நான் பள்ளிக்கூடம் லீவு விட்டா உடனே மத்த பள்ளீக்கூடக்காரனுங்க எல்லாம் இவன் மழைக்கு பள்ளிக்கூடம் லீவு விடறானே. ஒயின்ஸ் ஷாப்புக்கு லீவு விடுவானு கேட்டுடமாட்டாங்க?”

“அது இல்லைங்க அண்ணாச்சி”

“எவன்டா அவன். சொன்னதையே சொல்லிட்டு இருக்கான். ஒழுங்கா பஸ் எடுத்துட்டு பசங்களைக் கூப்பிட்டு போக முடியுமுனா சொல்லு. இல்லை இன்னையோட நின்னுக்கோ. நான் வேற ஆளைப் பார்த்துக்கறேன்”

அந்த இடத்தை விட்டு கிளம்பினேன். வீட்டிற்கு சென்று திண்ணையில் கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தேன். அவர் சொன்ன மாதிரி கண்ணை மூடி திறப்பதற்குள் பாலத்தை தாண்டிவிட முடியாது என்றாலும் பத்து இருபது நொடிக்குள் கடந்துவிடலாம் தான். ஆனால்... மனதில் ஏதோ ஒரு மூலையில் ஒரு மாதிரி பிசைந்து கொண்டிருந்தது. அது என்ன என்று புரியவில்லை.

குளித்து விட்டு கிளம்பினேன். ஏழு மணிக்கு கிளம்பினால் தான் சரியாக இருக்கும். பசங்களை விட்டுவிட்டு ஒன்பது முப்பது மணிக்கெல்லாம் வீட்டிற்கு வந்துவிடலாம். சரியாக ஏழரை மணிக்கு ஒயின்ஸ் ஷாப் எதிரில் இருக்கும் பேருந்தில் இருந்தேன். வழியில் மணிகண்டன் ஏறிக் கொள்வான். அவன் தான் கிளினர். கிளினர் என்று சொல்வதை விட பஸ்ஸில் வரும் வாண்டுகளை மேய்ப்பவன் என்று சொல்லலாம். அவன் இல்லை என்றால் ஒவ்வொரு குழந்தையும் என்ன அட்டகாசம் செய்யும் என்றே சொல்ல முடியாது. எப்படியும் அடுத்த மாதத்திற்குள் அனைத்து ஜன்னல்களையும் சின்ன சின்ன கம்பிகளால் அடைத்து விடலாம் என்று அண்ணாச்சி சொல்லியுள்ளார்.

மணிகண்டன், கணக்குபிள்ளைத் தெரு முனையில் நின்றிருந்தான்.

“பள்ளிக்கூடம் லீவா இருக்கும்னு நினைச்சேன். வழக்கம் போல சர்ருனு வந்துட்ட?”

“அண்ணாச்சிக்கிட்ட கேட்டேன். அதெல்லாம் இல்லைனு சொல்லிட்டாரு”

“நல்ல வேளை. லீவு இல்லை. ராத்திரி முழுசா கூரைல இருந்து வீட்டுக்குள்ள தண்ணி சொட்டிக்கிட்டே இருந்துது. தூங்கவே முடியல. தரையெல்லாம் ஜில்லுனு இருந்துது. பள்ளிக்கூடத்துல புதுசா கட்டுன ரூம்ல எதுலயாவது தூங்கலாம்னு தான் சீக்கிரமே கிளம்பி வந்துட்டேன்”

“சரி சரி. அந்தப் பாலம் எப்படி இருக்குனு யாராவது ஏதாவது சொன்னாங்களா?”

“அதான் நாம நேத்தே பாத்தோமே. விரிசல் விட்டிருக்கு. இப்ப எப்படி இருக்குனு தெரியல. நாம தான் மொதல்ல போறோம்னு நினைக்கிறேன். நீ தான் வந்து சொல்லனும்”


நன்றாக தூறிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு தெருவிலும் பெற்றோர்கள் ஒரு கையில் குடையும் மற்றொரு கையில் பிள்ளைகளை பிடித்து நின்று கொண்டிருந்தனர். பிள்ளைகளும் அவர்கள் தூக்கி கொண்டிருக்கும் அவர்களை விட அதிக எடை இருக்கும் புத்தக பைகளும் நனையாமல் காக்க போராடிக் கொண்டிருந்தார்கள். பெற்றோர்கள் பெரும்பாலும் நனைந்து கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு குழந்தையும் பேருந்தில் நுழைந்ததும் அவர்கள் ஷூவில் இருக்கும் சேறை படிகளிலே துடைத்துவிட்டு சென்று கொண்டிருந்தார்கள்.

ஒவ்வொரு பெற்றோர்களின் முகத்திலும் இந்த மழையிலும் பிள்ளையை பள்ளிக்கு அனுப்பி படிக்க வைக்கிறோம் என்ற பெருமிதம் இருந்தது. ஒவ்வொரு குழந்தையின் முகத்திலும் பள்ளி விடுமுறை விடவில்லை என்ற ஏமாற்றமும், விடமாட்டார்களா என்ற ஏக்கமும் இருந்தது. எனக்கு மட்டும் அடி மனதில் ஏதோ ஒன்று உறுத்தி கொண்டிருந்தது. இந்த பெற்றோர்கள் அண்ணாச்சிக்கு போன் செய்து சொல்லியிருந்தால் இன்று விடுமுறை விட்டிருக்கலாம். இப்படி அவுங்களே அனுப்பும் போது நமக்கு என்ன வந்துச்சு? இதுங்கள பள்ளிக்கூடத்துல விட்டுட்டு நிம்மதியா வந்து தூங்கலாம்.

திடீரென்று ஒரு எண்ணம் வந்தது. கடைசி தெருவில் இருக்கும் பிள்ளையாருக்கு சூடம் ஏற்றிவிட்டு செல்லலாம் என்று தோன்றியது. அந்தத் தெரு முனையில் நிறுத்திவிட்டு இறங்கினேன். மணிகண்டனுக்கு ஒன்றும் புரியவில்லை. இன்று எந்த குழந்தையும் சத்தம் போடாமல் அமைதியாக இருந்ததால் அவனுக்கு வேலை இல்லை. அவனும் என்னுடன் இறங்கினான்.

பக்கத்திலிருக்கும் நாயக்கர் கடையில் சூடமும் தீப்பெட்டியும் வாங்கி விட்டு அந்த தெரு முனை பிள்ளையாருக்கு ஏற்ற சென்றேன். சூடம் ஏற்றும் மாடமும் ஈரமாக இருந்தது. ஏற்றினால் அணைந்துவிடும் அபாயம் அதிகமா இருந்தது. அப்படி அணைந்தால் சுத்துமாக நொறுங்கிவிடுவேன் என்ற பயம் மனதை கவ்வியது. அதனால் அந்த சூடத்தை அப்படியே வைத்துவிட்டு வந்து வண்டியை எடுத்தேன். மணிகண்டனும் எதுவும் பேசாமல் வண்டியில் ஏறினான்.

கடைசித் தெருவில் இருக்கும் குழந்தையையும் ஏற்றி கொண்டு, திரும்பி பார்த்தேன். சில காலி இடங்கள் தெரிந்தாலும், நிறைய குழந்தைகள் வந்திருந்தனர். இன்னும் பத்து நிமிடத்தில் பாலத்தை கடந்து விடலாம். மணிகண்டனிடம் ஏதாவது பேசி நேரத்தைப் போக்கலாம் என்று யோசித்தேன். ஆனால் வார்த்தைகள் எதுவும் கிடைக்கவில்லை. மனம் முழுதும் வெறுமையாக இருந்தது. இப்படி என்றும் எனக்கு தோன்றியதில்லை.

சரியாக பாலத்தின் அருகில் வண்டி நின்றுவிட்டது. நின்று விட்டது என்று சொல்வதைவிட நான் சொல்லிய வேலையை செய்தது என்று சொல்லலாம். வண்டி நின்ற இடத்திலிருந்து பாலத்திலிருந்த விரிசல் சரியாக தெரியவில்லை. மழை பெய்யாமலிருந்தால் ஒரு வேளை தெரிந்திருக்கலாம். பாலத்திற்கு அடியில் தொடர் மழையால் ஓடும் ஆற்று நீரின் சத்தம் மட்டும் நன்றாக கேட்டுக் கொண்டிருந்தது.

வண்டி மீண்டும் ஊர் நோக்கி புறப்பட்டது. குழந்தைகளுக்கு ஒன்றும் புரியவில்லை. மணிகண்டனுக்கும்.

“ஏன்ன வண்டிய ரிவர்ஸ் எடுத்துட்டு ஊருக்கு திரும்ப போற?”

ஒரு நிமிட யோசனைக்குப் பிறகு சொன்னேன்...

 “இன்னைக்குப் பள்ளிக்கூடம் லீவு”

43 comments:

வெட்டிப்பயல் said...

இது கொஞ்சம் உண்மையும், கொஞ்சம் கற்பனையும் சேர்ந்து எழுதியது.

படித்து கருத்தை தெரிவிக்கவும்.

கார்த்திகைப் பாண்டியன் said...

கதை ரொம்ப நல்லா இருக்குங்க.. வெற்றி பெற வாழ்த்துக்கள்..:-)

Suresh said...

கதை நல்லா இருக்கும் பாலாஜி

Suresh said...

* கதை நல்லா இருக்கு பாலாஜி

சின்னப் பையன் said...

யப்பா சாமி. பயங்கர டென்சனா படிச்சிட்டு வந்தேன்...

நல்ல முடிவு....

மணிமகன் said...

//யப்பா சாமி. பயங்கர டென்சனா படிச்சிட்டு வந்தேன்...

நல்ல முடிவு....//

same pinch...

Simply superb!

வெட்டிப்பயல் said...

//கார்த்திகைப் பாண்டியன் said...
கதை ரொம்ப நல்லா இருக்குங்க.. வெற்றி பெற வாழ்த்துக்கள்..:-)//

மிக்க நன்றி கார்த்திகைப் பாண்டியன்.

வெட்டிப்பயல் said...

//Suresh said...
* கதை நல்லா இருக்கு பாலாஜி//

:-))

எங்க படிக்காமலே பின்னூட்டம் போட்டுட்டீங்களோனு நினைச்சிட்டேன் :-))

மிக்க நன்றி :-)

வெட்டிப்பயல் said...

// ச்சின்னப் பையன் said...
யப்பா சாமி. பயங்கர டென்சனா படிச்சிட்டு வந்தேன்...

நல்ல முடிவு....//

மிக்க நன்றி பாஸ். இப்படி ஒரு பின்னூட்டத்தை தான் எதிர்பார்த்தேன் :-)

வெட்டிப்பயல் said...

//மணிமகன் said...
//யப்பா சாமி. பயங்கர டென்சனா படிச்சிட்டு வந்தேன்...

நல்ல முடிவு....//

same pinch...

Simply superb!//

மிக்க நன்றி மணிமகன்...

Venkatesh Kumaravel said...

நீங்க ஹீரோ ரோலுக்கு தேவையில்லாம முரளியை போட்டு கதைய வேஸ்ட் பண்ணிட்டீங்க.. எங்க இளைய தளபதி டாக்டர் விஜயை போட்டிருந்தீங்கன்னா க்ளைமேக்ஸே வேற!

SaRa said...

நல்ல சிறுகதை படித்த உணர்வு ...ரொம்ப நல்லாயிருக்கு

வெட்டிப்பயல் said...

//வெங்கிராஜா said...
நீங்க ஹீரோ ரோலுக்கு தேவையில்லாம முரளியை போட்டு கதைய வேஸ்ட் பண்ணிட்டீங்க.. எங்க இளைய தளபதி டாக்டர் விஜயை போட்டிருந்தீங்கன்னா க்ளைமேக்ஸே வேற!
//

வெங்கிராஜா,
இந்த ரோலுக்கு முரளிக்கூட சரியா வர மாட்டாருனு தான் நினைக்கிறேன் :)

வெட்டிப்பயல் said...

//saran ramalingam said...
நல்ல சிறுகதை படித்த உணர்வு ...ரொம்ப நல்லாயிருக்கு
//

மிக்க நன்றி சரண் ராமலிங்கம்.

மணிகண்டன் said...

கதை நல்லா இருக்கு பாலாஜி. வாழ்த்துக்கள்.

ஒவ்வொரு முறையும் இதே மாதிரி கதை எழுதினா போட்டிலேந்து disqualify செய்யப்படுவீங்க !

****
சுவற்றில் சிவப்பாக மரவட்டை ஒன்று ஊர்ந்து கொண்டிருந்தது. சுவற்றின் சுண்ணாம்பு விழுந்து லேசான பள்ளமானப் பகுதி வந்ததும் அது அப்படியே நின்றுவிட்டது. பிறகு அப்படியே பின்னால் சென்று அதை சுற்றிக் கொண்டு சென்றது.
*****

இதை யாருமே கவனிக்கலையோன்னு உங்க மனம் வருத்தப்படக் கூடாது. அருமை. முடிவை நோக்கி போகும் ஒரு சிறுகதைல எதுக்கு spoiler. ஆனா எனக்கு இதுவும் பிடித்து இருந்தது.

ஒரு சின்னக் கதையில் சாராயக் கடை / பள்ளி, பள்ளியை மூடாதற்கு அவர் கொடுக்கும் காரணம் எல்லாம் சூப்பர். அவ்வளவும் நெருக்கி இருந்தாலும் நல்லாவே ஹேண்டில் பண்ணி இருக்கீங்க.

ஆனா ஒண்ணு மட்டும் எனக்கு உதைக்குது. பெற்றோர் முகத்தில் இருந்த பெருமிதம்ன்னு நீங்க சொல்லி இருக்கறது. பணக்கார பள்ளிக்கூடத்துக்கு அனுப்பும் பெற்றோரும் மழைல குழந்தைகளை அனுப்ப பெருமிதம் எல்லாம் படமாட்டாங்க !(வேலைக்கு போகணுமே, இதுங்கள என்ன பண்ண முடியும்ன்னு அலுத்துக்க வேணா செய்வாங்க). பட், இது உங்க கதை. உங்களோட கண்ணோட்டம்.

வெட்டிப்பயல் said...

மணிகண்டன்,
உங்க பின்னூட்டம் எனக்கு ஒரு டானிக் மாதிரி ஆகிடுச்சி. என்னடா இதே ஒரு காதல் கதை எழுதியிருந்தா இந்நேரம் நூறு பின்னூடம் வந்திருக்குமேனு யோசிச்சிட்டு இருந்தேன். பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி!

//ஒவ்வொரு முறையும் இதே மாதிரி கதை எழுதினா போட்டிலேந்து disqualify செய்யப்படுவீங்க ! //

அவ்வளவு மோசமா?

//இதை யாருமே கவனிக்கலையோன்னு உங்க மனம் வருத்தப்படக் கூடாது. அருமை. முடிவை நோக்கி போகும் ஒரு சிறுகதைல எதுக்கு spoiler. ஆனா எனக்கு இதுவும் பிடித்து இருந்தது.//

இது ஸ்பாய்லர் இல்லை. அப்படி வேற எதாவது வழில சுத்தி போகலாமானு அவன் மனசுல ஒரு எண்ணம் வந்து மறைந்துவிடுகிறது. இது வாசகர்கள் ஊகத்திற்கு விடப்பட்டுவிட்டது :)

//ஒரு சின்னக் கதையில் சாராயக் கடை / பள்ளி, பள்ளியை மூடாதற்கு அவர் கொடுக்கும் காரணம் எல்லாம் சூப்பர். அவ்வளவும் நெருக்கி இருந்தாலும் நல்லாவே ஹேண்டில் பண்ணி இருக்கீங்க.//

மிக்க நன்றி நண்பரே

வெட்டிப்பயல் said...

//ஆனா ஒண்ணு மட்டும் எனக்கு உதைக்குது. பெற்றோர் முகத்தில் இருந்த பெருமிதம்ன்னு நீங்க சொல்லி இருக்கறது. பணக்கார பள்ளிக்கூடத்துக்கு அனுப்பும் பெற்றோரும் மழைல குழந்தைகளை அனுப்ப பெருமிதம் எல்லாம் படமாட்டாங்க !(வேலைக்கு போகணுமே, இதுங்கள என்ன பண்ண முடியும்ன்னு அலுத்துக்க வேணா செய்வாங்க). பட், இது உங்க கதை. உங்களோட கண்ணோட்டம்.//

ஹா ஹா ஹா... இப்படியும் யோசிக்கலாம். ஆனா நான் நேர்ல பார்த்ததை வெச்சி எழுதியது. புது பள்ளிக்கூடம், ரொம்ப ஸ்ட்ரிக்ட் அதனால முகத்துல ஒரு பெருமிதம். அவ்வளவே!!!

இது நம்ம ஆளு said...

நல்ல பதிவு
அண்ணா உங்கள் தம்பி தனது சேட்டைகளை இன்று முதல அரம்பிகேரன் .வாங்க வந்து பாருங்க .பாத்துட்டு உங்க கருத்த சொல்லிட்டு போங்க.

Malini's Signature said...

கதை பிடிச்சு இருக்கு... ஓட்டும் போட்டாச்சு... வெற்றி பெற வாழ்த்துக்கள்..:-)

Poornima Saravana kumar said...

வாவ்!
அண்ணா கதை மிக அருமை!!
வாழ்த்துகள்:)

Poornima Saravana kumar said...

கூரையிலிருந்து தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்த சத்தம் இரவு முழுக்க கேட்டு கொண்டிருந்தது. வானம் இன்னும் இருட்டாகவே இருந்தது. கோழிக் கூவும் சத்தமோ, பால் கறக்க கறவை மாடுகளை சொசைட்டிக்கு கூப்பிட்டு செல்லும் சத்தமோ கேட்கவில்லை. இருந்தாலும் எனக்கு தூக்கம் கலைந்துவிட்டது//

அண்ணா ஆரம்பமே அசத்தலா இருக்கு!

Poornima Saravana kumar said...

சுவற்றில் சிவப்பாக மரவட்டை ஒன்று ஊர்ந்து கொண்டிருந்தது. சுவற்றின் சுண்ணாம்பு விழுந்து லேசான பள்ளமானப் பகுதி வந்ததும் அது அப்படியே நின்றுவிட்டது. பிறகு அப்படியே பின்னால் சென்று அதை சுற்றிக் கொண்டு சென்றது.
*****

இதை யாருமே கவனிக்கலையோன்னு உங்க மனம் வருத்தப்படக் கூடாது. அருமை//

இந்த வரிகளைப் படிக்கையில் நான் கூட இதைப் பற்றி சொல்லனும்னு நினைச்சேன்..
டைமிங் வரிகள்னு சொல்லலாம்:)

Poornima Saravana kumar said...

//
வெட்டிப்பயல் said...
மணிகண்டன்,
உங்க பின்னூட்டம் எனக்கு ஒரு டானிக் மாதிரி ஆகிடுச்சி. என்னடா இதே ஒரு காதல் கதை எழுதியிருந்தா இந்நேரம் நூறு பின்னூடம் வந்திருக்குமேனு யோசிச்சிட்டு இருந்தேன்
//

சரியா சொன்னீங்கண்ணா...

ஜியா said...

கதை நல்லா இருக்கு.. முடிவு இப்படித்தான் இருக்கும்னு யூகிக்க முடிஞ்சது... வாழ்த்துக்கள்.. கலக்குங்க :)))

வெட்டிப்பயல் said...

//இது நம்ம ஆளு said...
நல்ல பதிவு
அண்ணா உங்கள் தம்பி தனது சேட்டைகளை இன்று முதல அரம்பிகேரன் .வாங்க வந்து பாருங்க .பாத்துட்டு உங்க கருத்த சொல்லிட்டு போங்க.//

வாங்க நம்ம ஆளு... தொடர்ந்து கலக்கவும் :-)

வெட்டிப்பயல் said...

//ஹர்ஷினி அம்மா - said...
கதை பிடிச்சு இருக்கு... ஓட்டும் போட்டாச்சு... வெற்றி பெற வாழ்த்துக்கள்..:-)

//

வாங்க ஹர்ஷினி அம்மா. எங்கடா இன்னும் ஓட்டெடுப்பே ஆரம்பிக்களையேனு பார்த்தேன். தமிழ்மணத்துல ஓட்டு போட்டீங்களா?

அடுத்து சங்கமம்லயும் மறக்காம ஓட்டு போடுங்க...

வெட்டிப்பயல் said...

//Poornima Saravana kumar said...
வாவ்!
அண்ணா கதை மிக அருமை!!
வாழ்த்துகள்:)//

ரொம்ப நன்றி தங்கச்சி...

வெட்டிப்பயல் said...

//Poornima Saravana kumar said...
கூரையிலிருந்து தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்த சத்தம் இரவு முழுக்க கேட்டு கொண்டிருந்தது. வானம் இன்னும் இருட்டாகவே இருந்தது. கோழிக் கூவும் சத்தமோ, பால் கறக்க கறவை மாடுகளை சொசைட்டிக்கு கூப்பிட்டு செல்லும் சத்தமோ கேட்கவில்லை. இருந்தாலும் எனக்கு தூக்கம் கலைந்துவிட்டது//

அண்ணா ஆரம்பமே அசத்தலா இருக்கு!

//

எப்பவும் கதை ஆரம்பிக்கற இடத்துல தான் பிரச்சனை வரும். இந்த கதைல எந்த பிரச்சனையும் இல்லாம ஆரம்பிச்சிட்டேன்.

ரொம்ப நன்றிமா!!!

வெட்டிப்பயல் said...

//Poornima Saravana kumar said...
//
வெட்டிப்பயல் said...
மணிகண்டன்,
உங்க பின்னூட்டம் எனக்கு ஒரு டானிக் மாதிரி ஆகிடுச்சி. என்னடா இதே ஒரு காதல் கதை எழுதியிருந்தா இந்நேரம் நூறு பின்னூடம் வந்திருக்குமேனு யோசிச்சிட்டு இருந்தேன்
//

சரியா சொன்னீங்கண்ணா...//

அடுத்து ஒரு காதல் கதை தான் யோசிச்சிட்டு இருக்கேன் :-)

வெட்டிப்பயல் said...

//ஜியா said...
கதை நல்லா இருக்கு.. முடிவு இப்படித்தான் இருக்கும்னு யூகிக்க முடிஞ்சது... வாழ்த்துக்கள்.. கலக்குங்க :)))//

ரொம்ப நன்றி ஜியா...

மங்களூர் சிவா said...

கதை நல்லா இருந்தது. டிரைவர் கதாபாத்திரம் அருமையான படைப்பு.

மங்களூர் சிவா said...

/
மணிகண்டன் said...

கதை நல்லா இருக்கு பாலாஜி. வாழ்த்துக்கள்.

ஒவ்வொரு முறையும் இதே மாதிரி கதை எழுதினா போட்டிலேந்து disqualify செய்யப்படுவீங்க !
/

அதானே போட்டிக்குன்னு எழுதற கதைல ஒரு கிளுகிளுப்பு வேணாம்?????

Sridhar V said...

நல்லா எழுதியிருக்கீங்க பாலாஜி. நல்ல கதைக்களன். பரபரப்பா இருந்தது.

எளிமையான நடையில சொல்லியிருக்கீங்க. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் :)

Vinitha said...

பரவாயில்லை! வெற்றி பெற வாழ்த்துக்கள்!

வினோத் கெளதம் said...

தல நெகடிவ் கிளைமாக்ஸ் வச்சுற போறிங்கலோனு பயந்துகிதே படிச்சேன்..
நல்ல வேளை..
நல்லா இருக்கு..வெற்றி பெற வாழ்த்துக்கள்..

வெட்டிப்பயல் said...

// மங்களூர் சிவா said...
கதை நல்லா இருந்தது. டிரைவர் கதாபாத்திரம் அருமையான படைப்பு.//

மிக்க நன்றி சிவா...

வெட்டிப்பயல் said...

//மங்களூர் சிவா said...
/
மணிகண்டன் said...

கதை நல்லா இருக்கு பாலாஜி. வாழ்த்துக்கள்.

ஒவ்வொரு முறையும் இதே மாதிரி கதை எழுதினா போட்டிலேந்து disqualify செய்யப்படுவீங்க !
/

அதானே போட்டிக்குன்னு எழுதற கதைல ஒரு கிளுகிளுப்பு வேணாம்?????//

போட்டி தேதியைத்தான் மாத்திட்டாங்களே. அடுத்து கிளுகிளுப்பா ஒரு கதை எழுதிடுவோம் :-)

வெட்டிப்பயல் said...

//Sridhar Narayanan said...
நல்லா எழுதியிருக்கீங்க பாலாஜி. நல்ல கதைக்களன். பரபரப்பா இருந்தது.

எளிமையான நடையில சொல்லியிருக்கீங்க. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் :)//

தல,
நீங்க ஜெயிப்பீங்கனு நிச்சயம் தெரிஞ்சதுக்கப்பறம் தான் களம் இறங்கியிருக்கேன். சும்மா போட்டியில கலந்துக்கறேன். அவ்வளவு தான்.

நம்ம நடை எப்பவுமே எளிமை தான். ஏன்னா நமக்கு கஷ்டமான நடைல எழுத தெரியாது :-)

வெட்டிப்பயல் said...

//Vinitha said...
பரவாயில்லை! வெற்றி பெற வாழ்த்துக்கள்!

8:43 AM//

மிக்க நன்றி வினிதா. எழுத பழகிட்டு இருக்கேன்...

வெட்டிப்பயல் said...

//vinoth gowtham said...
தல நெகடிவ் கிளைமாக்ஸ் வச்சுற போறிங்கலோனு பயந்துகிதே படிச்சேன்..
நல்ல வேளை..
நல்லா இருக்கு..வெற்றி பெற வாழ்த்துக்கள்..

//

மிக்க நன்றி வினோத்... நெகடிவ் க்ளைமாக்ஸ் உண்மையாலுமே எங்க ஊர்ல நான் அஞ்சாவது படிக்கும் போது ஒரு பள்ளில நடந்தது.

நான் அது இப்படி ஆகியிருக்க கூடாதானு மாத்திட்டேன்...

Sridhar V said...

//சும்மா போட்டியில கலந்துக்கறேன். //

இதெல்லாம் ரொம்ப ஓவர். ஆமாம் சொல்லிட்டேன்.

உங்க எழுத்தோட வீச்சு இணையத்துல எவ்வளவு தூரம்னு எல்லாருக்கும் தெரியும் :)

அடிச்சு தூள் பண்ணுங்க.

கடைக்குட்டி said...

மழை பெய்யிதோன்னு வெளியில பாத்தேன் இப்ப...

கண்ணு முன்னாடி கொண்டு வந்துட்டீங்க!!!


வாழ்த்துக்கள்

Anonymous said...

முடிவு அருமை..