தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Sunday, May 31, 2009

உரையாடல் போட்டிக்கான எனது சிறுகதை

சிறுகதைப் போட்டி என்றால் முடிந்த வரை கலந்து கொள்ள வேண்டும் என்பது என் விருப்பம். வெற்றி தோல்வி பற்றி பயம் இருந்தாலும் அதை விட கலந்து கொள்வதே மகிழ்வாக உள்ளது. பெரும்பாலும் என் கதைகள் சாப்ட்வேர் இண்டஸ்ட்ரியைக் களம் கொண்டதாக இருப்பதாக ஒரு புகார் :). புதிதாக முயலும் பட்சத்தில், நன்றாக வருவதை விட்டுவிடாமல் இருக்கவும் வேண்டும் என்பது எனது ஆசை.

போட்டி என்று வரும் பொழுது நான் சாப்ட்வேர் இண்டஸ்ட்ரியைக் களமாக கொள்வது இல்லை. இந்த முறை அதையும் பொருட்படுத்தாது உரையாடல் போட்டிக்கு சாப்ட்வேர் இண்டஸ்ட்ரியையே களமாக வைத்து எழுதியிருக்கிறேன். அதற்கு முக்கிய காரணம், முதலாளித்துவம் எவ்வளவு கொடூரமானது என்பதை நான் உணர்ந்ததன் விளைவே.

Ethics, Values எல்லாம் வேலை செய்பவர்களுக்கே தவிர, நிறுவனங்களுக்கு இல்லை. அதைப் பதிவு செய்து வைப்பது என் கடமையாக நான் உணர்கிறேன். நாளை உலக பொருளாதாரம் சரியாகும் பட்சத்தில், புதிதாக வேலையில் வருபவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்க வேண்டும். பணத்தை இஷ்டத்திற்கு செலவு செய்து பிறகு ஆப்பை அசைத்த குரங்கு போல மாட்டிக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதே என் விருப்பமும் கூட.

ரொம்ப பேசாதடா வெண்ட்ரு. கதை எங்கனு கேட்டீங்கனா... கதையைப் படிக்க இங்கே சொடுக்கவும்

Tuesday, May 26, 2009

The Da Vinci Code - நினைவுகள்!

குசும்பனோட போட்டோ பதிவுல இருந்த டிஜிட்டல் ஃபோர்ட்ரஸ் நாவல் பார்த்ததும் எனக்கு டான் ப்ரௌன் நாவல்கள் பற்றிய நினைவுகள் வந்தது. அதைப் பத்தி எழுத தான் இந்தப் பதிவு.

பெரும்பாலோனோர்க்கு டான் ப்ரௌன் அறிமுகமானது அவருடைய தி டா வின்சி கோட் நாவலில் தான். எனக்கும் அப்படி தான். அந்த நாவலை மழை பெய்து கொண்டிருந்த ஒரு மாலைப் பொழுதில் படிக்க ஆரம்பித்தேன். இரவு சாப்பிட செல்லவில்லை. நண்பர்கள் எவ்வளவு கூப்பிட்டும் அதை வைக்க மனம் இல்லாமல் படித்து கொண்டிருந்தேன். முடிக்கும் போது விடிகாலை நான்கு மணி.

அதற்கு பிறகு ஒரு வாரம் கழித்து அவர் எழுதிய மீதி மூன்று புத்தகங்களும் வாங்கி படிக்க ஆரம்பித்தேன். அடுத்து படித்தது ஏஞ்சல்ஸ் அண்ட் டெமான்ஸ். எனக்கு அது தி டா வின்சி கோடை விட மிகவும் பிடித்திருந்தது. அடுத்து டிசப்ஷன் பாயிண்ட். பாதிக் கதையிலே சஸ்பென்சை கண்டுபிடித்து விட்டேன். டிஜிட்டல் ஃபோர்ட்ரஸும் சுமார் ரகம் தான்.


தி டாவின்சி கோட் படித்து முடித்துவிட்டு ஒரு வாரம் (மாதம்னு கூட சொல்லலாம்) எல்லார்கிட்டயும் அதைப் பத்தி தான் பேச்சு. அதுவும் நண்பர்களிடமெல்லாம் செம்ம பில்ட் அப்.

"மச்சி, உனக்கு கொல்டன் நம்பர் தெரியுமா?"

"அது என்னடா?"

"அது தெரியாம எப்படி தான் இத்தனை நாள் இருக்கீங்களோ?"

"சரி இப்ப சொல்றதுனா சொல்லு. இல்லைனா ஃபிரியா விடு"

"இருங்கடா சொல்றேன். கவனமா கேளு.இந்த உலகம் முழுக்க ஒரு ஒழுங்குல தான் நடந்துட்டு இருக்கு. ஒரு எடுத்துக்காட்டுக்கு, நம்ம ஹைட்டை தலைல இருந்து முழுங்கை வரை இருக்கும் நீளத்தால வகுத்தா வர வேல்யூ, அதே மாதிரி நம்ம முழுங்கை வர இருக்குற நீளத்தை நம்ம தொப்புள் வரை இருக்குற நீளத்தால வர வேல்யூ எல்லாமே ஒரே நம்பர். அதை ஃபைனு (Phi) சொல்லுவாங்க. அது 1.618"

"நிஜமாவாடா சொல்ற?" 

"ஆமாம். அது மட்டுமில்லை. ஒவ்வொரு பூவிலும் ஒரு லேயர் இதழ்களை அதுக்கு அடுத்த லேயர்ல உள்ள இதய்களின் எண்ணிக்கைல வகுத்தாலும் அது தான் வரும். அதே மாதிரி ஒரு கிளைகள்ல உள்ள இலைகளை அதுல இருந்து வர இன்னோரு கிளைல வர இலைகளின் எண்ணிக்கைல வகுத்தாலும் இதே தான் வரும்"

"காத்துல விழுந்தா கூடவா?"

"டேய் சீரியசா பேசும் போது காமெடி பண்ணாதடா"

"சரி இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்?"

"நான் நேத்து படிச்சேன் இல்லை அந்த புக்ல போட்டிருந்தது"

"தொர இங்கிலிஸ் புக் எல்லாம் படிச்சிட்டு என்ன என்னவோ பேசுது பாருடா"

"இப்படி படிச்சி ஜென்ரல் நாலேட்ஜை வளர்த்துக்கோங்கடா"

"சரி அப்பறம்"

"ஜீசஸ்க்கு கல்யாணமாகி குழந்தை இருக்கு. அதுவாது தெரியுமா?"

"டேய் பாலாஜி, இப்படி பேசி மத கலவரத்தை உருவாக்கிடாதடா. அப்பறம் நீ அடிக்கு பயந்து மதம் மாறி கண்வர்ட் ஆகிடுவ. நாங்க தாண்டா உதை வாங்கணும்"

"ம‌ச்சி. நீ எதுக்கும் ப‌ய‌ப்ப‌டாத‌. எல்லாத்துக்கும் சாட்சி இருக்கு. நான் அதைப் ப‌த்தி தான் இண்ட‌ர்நெட்ல‌ ஆராய்ச்சி ப‌ண்ணிட்டு இருக்கேன்"

"ஏன்டா வ‌ர‌ வ‌ர‌ கார்த்திக் மாதிரி பேச‌ ஆர‌ம்பிச்சிட்ட‌. அவ‌ர் தான் நான் உல‌க‌த்துல‌ ந‌ட‌க்க‌ற‌தை எல்லாம் இண்ட‌ர்நெட்ல‌ பார்த்துட்டு இருக்கேனு சொல்லிட்டு க‌ட்சி ஆர‌ம்பிச்சாரு. நீயும் இண்ட‌ர்நெட்ல‌ சாட்சி இருக்குனு க‌ல‌வ‌ர‌த்தை உருவாக்கிடுவ‌ போலிருக்கே"

"டேய் இதுக்கு நான் ம‌ட்டும் சாட்சி இல்லைடா. "பிரியாரி ஆஃப் ச‌யான்ஸ்" தெரியுமா?"

"என்னது பிரியாணியா??? “

“பிரியாணி இல்லடா டாக்... Priory Of Sions. அவுங்க தான் ஜீசசோட வம்சாவழியினரைக் காப்பாத்திட்டு வராங்க. கலிலியோ, லியனார்டோ டாவின்சி எல்லாம் அதுல மெம்பர்ஸ். அவுங்க தான் ஜீசசோட பசங்களுக்கு எல்லாம் பாதுகாப்பு”

“நண்பா கலிலியோ, லியனார்டோ டாவின்சி எல்லாம் அவுங்களுக்கு பாதுகாப்பா இருப்பாங்க. ஆனா நமக்கு யாரும் பாதுகாப்பு இல்லை. இப்படி கண்ட கண்ட புக் எல்லாம் படிச்சி கெட்டு போயிடாதடா. இப்படி ஏதாவது வெளிய பேசிட்டிருந்தா பெரிய கலவரமே உருவாகிடும்டா”

”உங்களுக்கு எல்லாம் இப்ப தெரியாதுடா. ஒரு நாள் இந்த ஆராய்ச்சி வெற்றி பெரும் போது தெரிஞ்சிக்குவீங்கடா” அப்படினு ஒரு பில்ட் அப்பை கொடுத்து வெச்சிருந்தேன். அப்படியே அது ஏஞ்சல்ஸ் அண்ட் டெமான்ஸ் படிக்கும் போது மாறிடுச்சி.

தி டாவின்சி கோட் படம் வந்தவுடனே முதல் நாளே போய் பார்த்தேன். புத்தகம் படிக்கிறதுல இருந்த விறுவிறுப்பு படம் பாக்கும் போது சுத்தமா மிஸ்ஸிங். அந்த காரணத்துக்காகவே ஏஞ்சல்ஸ் அண்ட் டெமான்ஸ் பார்க்காம தவிர்த்திட்டேன். தலைவரோட அடுத்த நாவல் The Lost Symbol வர செப்டம்பர் 15 வெளிவரப் போகுது. அதுல நம்ம இலவசக்கொத்தனார் (Freemasonry) பற்றிய ரகசியங்கள் இருக்கும்னு பேசிக்கறாங்க... எப்படியும் பதிவுலகத்துல ஒரு பரபரப்பு இருக்கும்னு நினைக்கிறேன். 


பி.கு : எல்லாம் எழுதி முடிச்சிட்டு ஒரு தடவை கன்ஃபர்ம் பண்ணிக்கலாம்னு குசும்பன் ஃபோட்டோ பார்த்தா அதுல இருக்குற புக் டிஜிட்டல் ஃபோர்ட்ரஸ் இல்லை. அதுக்காக இவ்வளவு பெரிய பதிவை போடாம இருக்க முடியுமா? ;)

Monday, May 25, 2009

சாப்ட்வேர் சக்கரம்!!!

காலங்காத்தால ஃபோன் பண்றதே இந்த அம்மாவுக்கு வேலையாப் போயிடுச்சி.

”என்னய்யா தூங்கிட்டு இருக்கியா?”

”இல்லை கபடி ஆடிட்டு இருக்கேன். ஏம்மா. எத்தனை தடவை சொல்லிருக்கேன். காலைல ஏழு மணிக்கு முன்னாடி ஃபோன் பண்ணாதீங்கனு. என்ன விஷயம்”

“இல்லய்யா, அந்த ரவி மாமா இருக்காரு இல்லை”

“ரவி மாமாவா? யார் அது?”

“என் அண்ணனோட சகலடா”

“சரி அவருக்கு என்னம்மா? சீக்கிரம் சொல்லுங்க. நான் இன்னும் ஒரு அரை மணி நேரம் தான் தூங்க முடியும்”

“உன் அத்தையோட தங்கச்சிப் பொண்ணு மீனாக்கு உங்க கம்பெனில வேலைக் கிடைச்சிருக்காம்”

“சரி. அதுக்கு?

“இப்ப தான் முதல் முறையா பெங்களூர் வருதாம். நேத்து தான் ரவி மாமா ஃபோன் பண்ணி விசாரிச்சாரு. நான் உன் நம்பரைக் கொடுத்திருக்கேன். ஏதாவது உதவி கேட்டா பண்ணுப்பா. சரியா?”

”ஏம்மா இப்படி எல்லாருக்கும் நம்பர் கொடுக்கற? எனக்கு இருக்குற வேலைக்கு அதெல்லாம் பண்ண முடியுமானு தெரியலை. காலைல எட்டரைக்கு போனா ராத்திரி பன்னிரெண்டு மணிக்கு தான் வரேன்”

“பாவம்யா. தனியா ஊரை விட்டு வருது. முடிஞ்ச வரைக்கும் உதவி பண்ணுயா. சரியா?”

“சரி சரி. இனிமே ஊருல இருந்து யாராவது வராங்கனு நம்பர் கொடுக்காதீங்க. நான் ராத்திரி பண்ணறேன்”

பேசிவிட்டு மீண்டும் படுத்தேன். கண்ணை மூடியவுடன் டார்டாய்ஸ் சுத்த துவங்கியது, திருக்கோவிலூர் தனலட்சுமி கல்யாண மண்டபத்தில் கொண்டு போய் என்னை நிறுத்தியது. நான் புது சட்டை, டிராயர் போட்டிருந்தேன். எனக்கு ஒம்பது வயதிருக்கலாம். அந்த அறை முழுக்க பெண்கள்.அந்த சிகப்பு, நீலம், வெள்ளை கலர் நிறைந்த ஜமக்கலத்தில் என் அக்காவுடன் அமர்ந்து  புளியங்கொட்டைகளை வைத்து ஏதோ விளையாடிக் கொண்டிருந்தேன். 

“ஏய் என் அத்தை மடியில நீ ஏண்டி படுத்திருக்க. எழுந்திரிடி” பானுவின் குரல்.

“ஏய் இது ஏன் அத்தை. நான் எழுந்திரிக்க மாட்டேன்” மீனாவின் குரல்

“அத்தை! நீங்க எனக்கு தானே அத்தை. அவளுக்கு நீங்களே சொல்லுங்க அத்த” பானு என் அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

“நான் ரெண்டு பேருக்கும் அத்தை தான்மா. நீ வேணா இந்த மடில தலை வெச்சி படுத்துக்கோ” சொல்லிவிட்டு பானுவை படுக்க வைத்தார்கள்.

“என்னடி இப்பவே ரெண்டு பேரும் அத்தைக்கு சண்டை போடறீங்க. நாளைக்கு யாரு வினோத்தை கல்யாணம் பண்ணிக்க போறாங்களோ அவுங்களுக்கு தான் அவுங்க அத்தை. யாரு கட்டிக்கறீங்க சொல்லுங்க” பக்கத்திலிருந்த காந்தா பாட்டி சொல்லிவிட்டு சிரித்தாள். இதை கேட்டதும் எனக்கு கோபம் வந்துவிட்டது. வேகமாக எழுந்து என் அம்மா அருகே சென்றேன்.

“ஏய் ரெண்டு பேரும் எழுந்திரிங்க. இது எங்க அம்மா. நான் தான் எங்கம்மா மடில தலை வெச்சி படுப்பேன். வேணும்னா நீங்க ரெண்டு பேரும் உங்க அம்மா மடில தலை வெச்சி படுத்துக்கோங்க. எழுந்திரிங்க” சொல்லிவிட்டு எட்டி உதைக்க ஆரம்பித்தேன். பானு எழுந்துவிட்டாள். அதற்குள் காந்தா பாட்டி என்னை கையை பிடித்து இழுத்துவிட்டார்கள்.

“பொம்பளை புள்ளைங்களை இப்படி எட்டி உதைக்கலாமா? மகாலஷ்மிங்கப்பா. இப்படி எல்லாம் பொம்பளை புள்ளைங்களை எட்டி உதைச்சா தரித்தரம் வந்துடும்பா. இனிமே என்னைக்கும் இப்படிப் பண்ணாத. புரியுதா” அதட்டினார்கள்.

“அப்பறம் நான் சொன்னா எழுந்திரிக்க வேண்டியது தானே. எங்கம்மா மடில எதுக்கு அதுங்க தலை வெச்சி படுக்கணும்?”

“அவுங்க அத்தை மடில தலை வெச்சி படுத்திருக்காங்க. அத்தை மடி மெத்தையடினு பாட்டு கூட இருக்கே. நீ வேணும்னா போய் உங்க அத்தை மடில படுத்துக்கோ. இல்லைனா வெளிய போய் விளையாடு. போ” துரத்திவிட்டார்கள். நானும் கோபத்தில் மீண்டும் ஒரு முறை படுத்திருந்த மீனாவை எட்டி உதைத்துவிட்டு ஓடி வந்துவிட்டேன். 

அதற்கு பிறகு அவளை பார்த்த நியாபகம் இல்லை. அவளைப் பற்றி அடிக்கடி கேள்விப்படுவதோடு சரி. என் அக்கா கல்யாணத்திற்கு கூட ரவி மாமா தான் வந்தாரே தவிர மீனா வரவில்லை.

குளித்துவிட்டு அலுவலகம் கிளம்பினேன். சரியாக எட்டரை மணிக்கு என் சீட்டில் இருந்தேன். ஆன்சைட் கால் ஆரம்பித்து ஒரு மணி நேரம் சென்றது. அவன் வாங்கிய திட்டை 10x ஆக மாற்றி எங்களுக்கு கொடுத்து கொண்டிருந்தாள். அதை நான் 20x ஆக மாற்றி டீமில் இருக்கும் ஜூனியர்களுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தேன். 

சரியாக பனிரெண்டரை மணிக்கு என் செல்போன் சிணுங்கியது.

“ஹலோ வினோத்?”

“யெஸ் ஸ்பீக்கிங்”

“நான் மீனா பேசறேன்”

“மீனா? எந்த மீனா”

ஃபோன் இணைப்புத் துண்டிக்கப்பட்டது.  அது தமிழ்நாடு நம்பர். இன்னும் பெங்களூர் நம்பர் வாங்கவில்லை போல. 

மறுபடி நான் அழைத்தேன்.

“மீனா, ஐ அம் டெரிபலி சாரி. காலைல அம்மா சொன்னாங்க. டென்ஷன்ல மறந்துட்டேன்”

“பரவாயில்லை. எனக்கும் என்ன ரிலேஷன்னு சொல்லனும்னு தெரியலை. அதான் வெச்சிட்டேன்”

“ஹா ஹா ஹா. தட்ஸ் ஃபைன். எங்க இருக்கீங்கனு சொல்லுங்க. நான் வரேன்”

பில்டிங் நம்பரை சொன்னாள். ட்ரைனிங் பில்டிங் தான். 

வேகமாக ட்ரெயினிங் பில்டிங்கை நோக்கி நடந்தேன். அங்கே இருந்த கூட்டத்தில் யார் மீனா என்று தெரியவில்லை. அவள் எண்ணுக்கு அழைத்தேன். லைட் மஞ்சள் நிற சுடிதார் போட்டு சோபாவில் உட்கார்ந்திருந்த ஒரு பெண்ணுடைய செல்ஃபோன் சிணுங்கியது. அது தான் மீனாவாக இருக்க வேண்டும் என்று நினைத்து கொண்டேன். ஆனால் அந்த பெண் வடநாட்டுக்காரி போல் இருந்தாள். 

”ஹலோ கிருஷ்ணா”

என் பின்னாலிருந்த படியிலிருந்து ஒரு பெண் குரல் கேட்டது. திரும்பி பார்த்தேன். வெள்ளை நிற சுடிதாரில் தேவதை மாதிரி தெரிந்தாள் மீனா என்று சொல்லுவேன் என்று நீங்கள் எதிர்பார்த்தால் நீங்கள் இன்னும் பாரதிராஜா படத்திலிருந்து வெளி வரவில்லை என்று அர்த்தம். 

“மீனா?”

”யெஸ்”

“வெஜ்ஜா நான் வெஜ்ஜா?”

“என்னது?”

“வெஜ் சாப்பாடு வேண்டுமா நான் வெஜ் சாப்பாடு வேணுமானு கேட்டேன். அதுக்கேத்த ஃபுட் கோர்ட்க்கு போகலாம்”

“வெஜ்”

“அப்ப பக்கத்துல இருக்கற ஃபுட் கோர்ட்டேக்கே போகலாம்”

வழியில் எதுவும் பேசாமல் ஏதோ சிந்தனையிலே வந்தாள்.

சாப்பாடு வாங்கி கொண்டு எதிரெதிரில் அமர்ந்தோம்.

“சொல்லுங்க மீனா. ட்ரெயினிங் எல்லாம் எப்படி போகுது?”

“சொல்லுங்கவா? நான் உங்கள விட சின்ன பொண்ணு. மோர் ஓவர் நீங்க எனக்கு அத்தைப் பையன். அந்த ஞாபகம் இருக்கா?”

“அத்தைப் பையனா? இது என்ன காமெடியா இருக்கு. பானுக்கு தான் நான் அத்தைப் பையன். என்ன ஞாபகம் இல்லையா?”

முறைத்தாள்.

“சரி சரி. சாப்பிடு”

“சாப்பிட்டு தான் இருக்கேன். அப்பறம் உங்களால என்னை அடையாளம் கண்டுபிடிக்க முடியல தானே? நான் எப்படி கண்டுபிடிச்சேன் பார்த்தீங்களா?”

“என்ன பண்றது நான் அப்ப மாதிரியே இருக்கேன். நீ தான் ஆளே மாறிட்ட?”

“நிஜமாவா?”

“ஆமாம். சின்ன வயசுல அழகா சின்னதா குட்டி குரங்கு மாதிரி இருந்த”

“ஏய்ய்ய்”

“இரு சொல்லி முடிக்க விடு”

“சொல்லுங்க”

“இப்ப பெரிய குரங்கா மாறிட்ட”

கைல வெச்சிருந்த ஸ்பூனால அடிச்சிட்டா. 

”அப்பறம் உனக்கு எல்லாம் எந்த அறிவாளி இந்த கம்பெனில வேலை போட்டு கொடுத்தான்?”

”ஹான்...உங்களுக்கே ஒரு அறிவாளி வேலை கொடுக்கும் போது எனக்கு கொடுக்காமலா போயிடுவான். அது மட்டுமில்லாமல் இந்த கம்பெனிக்குனே நான் தனியா ப்ரிப்பேர் பண்ணேன்”

“ஏன்?”

“சும்மா தான்”

“நம்பிட்டேன்”

“நல்லது”

ஒரு வழியாக சாப்பிட்டு முடித்து அவளை ட்ரைனிங் பில்டிங்கில் விட்டு வந்தேன். அவள் நினைவாகவே இருந்தது. சின்ன வயசுல எல்லாம் இவ்வளவு துடுக்குத்தனமா பேசின மாதிரி நியாபகமில்லை. ஒரு வேளை சின்ன வயசுல பயமா கூட இருந்திருக்கலாம்.

சரியாக ஐந்து மணிக்கு செல் ஃபோன் சிணுங்கியது. மீனா தான்.

“எனக்கு அஞ்சே காலுக்கு பஸ் இருக்கு”

“சரி”

“நான் அதுல போகவா?”

“ஒரு வாரம் கெஸ்ட் அவுஸ் தானே?”

“ஆமாம்”

“அடுத்து?”

“PG தேடணும். நீங்க ஹெல்ப் பண்றீங்களா?”

“நான் வேணா வீடு எடுக்கறேன். ரெண்டு பேரும் சேர்ந்து தங்கிக்கலாம்”

“”

“ஏய் சும்மா சொன்னேன். டென்ஷன் ஆகாத. வெயிட் பண்ணு. ஒரு சிக்ஸ் தேர்ட்டிக்கா கிளம்பலாம். நான் வண்டிலயே உன்னை கொண்டு போய் விடறேன். ஓகேவா?”

“ஹ்ம்ம்ம். அதுவரைக்கும் நான் எங்க வெயிட் பண்றது?”

“என் பில்டிங்கு வா. ஆனா எதுவும் தொந்தரவு பண்ணக்கூடாது. சரியா?”

“நான் எதுவும் தொந்தரவு பண்ணமாட்டேன். சமத்தா இருப்பேன்”

“சரி கீழ வந்து ரிசப்ஷன்ல இருந்து கூப்பிடு. நான் வந்து கூப்பிட்டு போறேன்”

அவளை என் க்யூபிக்களுக்கு அழைத்து வந்து அருகில் உட்கார சொல்லிவிட்டு வேலையை தொடர்ந்தேன். அரை மணி நேரத்திற்கு மேல் வேலை செய்ய முடியவில்லை. வேலை முடிந்த வரை ஆன்சைட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு புறப்பட்டோம்.

”அதுக்குள்ள முடிச்சிட்டீங்களா மாமா?”

“ஓய்... என்னது மாமாவா? ஒதை வேணுமா?”

“அப்பறம் வேற எப்படி கூப்பிடறது?”

“அத்தான்னு கூப்பிடு”

“நிஜமாவா? பக்கத்துல யாராவது கேட்டா சிரிக்க மாட்டாங்க?”

“ஏய்... சும்மா சொன்னேன். வினோத்னு கூப்பிடு”

“எப்பவுமேவா?”

“ஆபிஸ்குள்ள மாமானு கூப்பிடாத. புரியுதா?”

“அப்ப வெளிய கூப்பிடலாமா?”

“உன் ட்ரெயினர் கிருஷ்ணா எனக்கு ஃபிரெண்ட் தான். ட்ரெயினிங்ல பாஸ் ஆகணும்னு ஆசையில்லையா? ”

”சரி சரி இனிமே கூப்பிடல”.

அவளை என்னுடைய டூ-வீலரில் அழைத்து கொண்டு
 சில PGக்கு அழைத்து சென்று காண்பித்தேன். மாதம் இரண்டாயிரத்தி ஐநூறிலிருந்து நான்காயிரம் வரை இருந்தது. பொதுவாக ரூமிற்கு இரண்டு அல்லது நான்கு பெட். வீக் டேல பிரேக் ஃபாஸ்ட், டின்னர். வீக் எண்ட்ல லஞ்ச். எல்லாமே கேவலமா இருக்கும்னு தங்கியிருந்தவங்கல தனியா விசாரிச்சதல சொன்னாங்க. எப்படியும் ரெண்டு நாள்ல முடிவு பண்ணிடலாம்னு விட்டுட்டோம். 

மணி எட்டாகியிருந்தது. அப்படியே சுக் சாகரில் ஆளுக்கு ஒரு மசால் தோசை சாப்பிட்டு விட்டு அவளை கெஸ்ட் அவுஸில் விட்டுவிட்டு வீடு வந்து சேர்ந்தேன். வந்ததிலிருந்து அவள் நினைவாகவே இருந்தது. அவள் காலையிலிருந்து பேசியதெல்லாம் மீண்டும் ஒரு முறை மனதில் ஓடியது. எனக்கு இத்தனை வருடத்தில் அவளை பற்றிய நினைவு பெரிதாக வந்ததில்லை. 

எங்க அக்கா மட்டும் ஒன்றிரண்டு முறை அம்மாவிடம், மீனாவை நம்ம வீட்டுக்கு மருமகளா கூப்பிட்டு வந்திடலாம். நல்ல பொண்ணுனு சொல்லிட்டு இருப்பாங்க. அதுக்கு அம்மா, யாருக்கு யார்னு நம்ம கைல என்னமா இருக்கு. அதெல்லாம் நடக்கற அப்ப பார்த்துக்கலாம்னு சொல்லுவாங்க. அப்பவெல்லாம் என் மனசுல பெருசா எதுவும் தோன்றியது இல்லை. இன்னைக்கு ஒரே நாள்ல நானே மாறிட்டேன். எப்படியும் அக்காவை வெச்சி வழிக்கு கொண்டு வந்திடலாம். இல்லைனா பாவாக்கிட்ட சொல்லிக்கூட சொல்ல சொல்லலாம். மருமகன் பேச்சுக்கு வீட்ல எதிரா யாரும் பேசமாட்டாங்க.

அதுக்கு எல்லாம் முன்னாடி அவள் மனசுல என்ன இருக்குதுனு தெரிஞ்சிக்கனும். இது வரைக்கும் அவள் பேசினது தான் என்னை இப்படியே யோசிக்க வெச்சிருக்கு. இருந்தாலும் கடைசியா நான் உங்களை ரிலேட்டிவாதான் நினைச்சேனு சொல்லிட்டா, அலைபாயுதேல வர கார்த்திக் மாதிரி பல்பு வாங்க முடியாது. அவ மனசுல என்ன இருக்குனு தெரிஞ்சிக்குவோம். அதுக்கு அப்பறம் வீட்ல பேசலாம். 

இதுக்கெல்லாம் இப்ப அவசரம் இல்லை தான். ஆனா இப்படி ஒரு குழப்பத்துல என்னால இருக்க முடியாது, அவக்கிட்ட இப்படி ரெண்டுங்கெட்டான் தனமாவும் பேச முடியாது . இந்த வீக் எண்ட் எப்படியும் மீனாவோட தான் ஸ்பெண்ட் பண்ற மாதிரி இருக்கும். எப்படியும் அப்ப பேசிடலாம். இந்த வீக் எண்ட்ல எல்லாம் தெளிவாகிடலாம். அப்படி எதுவும் எண்ணம் அவளுக்கு இல்லைனாலும் ஓகே தான். இப்பவே எஸ்ஸாகிடலாம். மனசுல ஆசையை வளர்த்துக்கறது நியாயம் இல்லை. அவ ஆமாம்னு சொன்னா எப்படி இருக்கும். ஹார்ட்ல ஆக்சிஜன் சப்ளை குறைந்த மாதிரி இருந்தது. ஒரு பெருமூச்சு விட்டேன். வார இறுதிக்காக ஆர்வமாக காத்திருந்தேன்.

நான்கு நாள் ஓடிய வேகமே தெரியவில்லை. யாரோ கடிகார முள்ளை கையால வேகமா சுத்திவிட்ட மாதிரி இருந்தது. வெள்ளிக்கிழமை சரியாக நான்கு முப்பது ஆகியிருந்தது. திடிரென்று ராமகிருஷ்ணா ஹெக்டேவிடமிருந்து மெயில். அவர் க்யூபிக்கலிளிருந்த பக்கத்து கான்ஃபரன்ஸ் அறைக்கு வர சொல்லியிருந்தார்.
சரியாக ஐந்து நிமிடத்தில் அங்கு இருந்தேன். அவர் அங்கு இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் வந்து சேர்ந்தார்கள். அந்த அறைக்கு அவர் இது வரை வர சொல்லியிருந்த நேரங்களில் அங்கு கொண்டாட்டங்கள் தான் இருக்கும். இன்று என்ன கொண்டாட்டமென்று தெரியவில்லை. இன்று மீனாவுடன் ஏதாவது படத்திற்கு செல்லலாம் என்று திட்டமிட்டிருந்தேன். எங்கே நேரமாகிவிடுமோ என்று பயம்.

சரியாக நான்கு நாற்பத்தைந்திற்கு அவர் வந்து சேர்ந்தார். பொறுமையாக பேச ஆரம்பித்தார். குலோபல் எக்கனாமிக் கண்டிஷன்களினால் கம்பெனி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் சில நபர்களை வேலையை விட்டு நீக்க வேண்டிய நிலை கம்பெனிக்கு வந்துள்ளதாகவும், அதை ஒவ்வொரு கட்டமாக செய்ய வேண்டிய நிலையில் இன்று எங்களை நீக்குவதாகவும் தெரிவித்தார். அங்கே திடீரென்று சலசலப்பு  எழுந்தது. ஒவ்வொருவரும் எப்படி எங்களை அதில் தேர்ந்தெடுத்தீர்கள் என்று கேட்டார்கள். இது ஒவ்வொரு ப்ராஜக்டிலும் சீனியர் மேனஜர்கள் மேனஜர்களுடன் பேசி எடுத்த லிஸ்ட். இதை எதுவும் செய்ய முடியாது என தெரிவித்தார். எங்களுக்கு இரண்டு சாய்ஸ்கள் இருப்பதாக தெரிவித்தார்.

ஒன்று தற்கொலை. மற்றொன்று கொலை.

அங்கே யாருக்கும் சிந்திக்க நேரமில்லை. அனைவரும் மேனஜரை ஃபோனில் பிடிக்க முயன்று கொண்டிருந்தார்கள். யாரும் எடுக்கவில்லை போல. அனைவரையும் அங்கே ஒரு ஃபார்ம் கொடுத்து அதை நிரப்பிவிட்டு கிளம்ப சொன்னார்கள். யாரும் அவர் இடங்களுக்கு செல்ல கூடாது. அரை மணி நேரத்தில் கம்பெனியை விட்டு வெளியேறிவிட வேண்டும். அவர்களின் 
பொருட்கள் அவர்கள் கொடுத்துள்ள விலாசத்திற்கு வந்து சேரும். அனைவரும் அவர்களுடைய டேக் (ஐடி கார்ட்)ஐ கொடுத்துவிட்டு செல்ல வேண்டும். அனைவரின் கண்களும் கலங்கியிருந்தன. இப்படி ஒரு நிலை வரும் என்பதை யாரும் யூகிக்கவில்லை. என்னையும் சேர்த்து தான். இந்த டைட்டானிக் கப்பல் மூழ்குமா என்று இறுமாந்திருந்த கேப்டன் எட்வர்ட் ஸ்மித் நிலைக்கு நாங்களும் ஆளாகியிருந்தோம்.

ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க தவிர்த்தோம். தரையைப் பார்த்து கொண்டே பில்டிங்கை விட்டு வெளியே வந்தேன். கடைசி ஒரு முறையாக கம்பெனியை சுற்றி நடந்தேன். ஒவ்வொரு இடமும் ஒரு நிகழ்ச்சியை நினைவுப்படுத்தியது. ஃபுட் கோர்டில் இருந்த காபி டே, பல ட்ரீட்களை நியாபகப்படுத்தியது. பல சிரித்த முகங்கள் நினைவில் வந்து மறைந்தன.

 என் பிறந்த நாள் கொண்டாட்டத்தன்று அங்கு அனைவரும் என் முகத்தில் தடவிய கேக் சுவை நாவில் தோன்றி மறைந்தது. கால் செண்டர் பில்டிங் அருகே நடந்து கொண்டிருந்தேன். எத்தனை நாட்கள் இரவு ஒன்று இரண்டு மணி வரை வேலை பார்த்து இவர்களுடன் சேர்ந்து இரவு பணிரெண்டு மணிக்கு சுட சுட சாப்பிட்டது நினைவிற்கு வந்தது. மீண்டும் நான் வேலை செய்யும் பில்டிங் அருகே வந்து நின்றேன். ஐடி கார்ட் இல்லாமல் உள்ளே செல்ல முடியாது. அரை மணி நேரத்திற்கு முன்பு நான் இங்கு கோடிங் செய்து கொண்டிருந்தேன். 

மீனாவிடமிருந்து அழைப்பு வந்தது. அதை தவிர்த்து வீட்டிற்கு சென்றேன்.

இரவு முழுக்க தூக்கம் வரவில்லை. மீனாவிடமிருந்து நான்கைந்து SMSகள் மற்றும் மிஸ்ஸிடு கால்கள். அவளிடம் என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவள் வேலையில் சேர்ந்த ஒரு வாரத்திற்குள் எனக்கு வேலை போய் விட்டதை என்னால் ஜீரணிக்கவும் முடியவில்லை. அன்று வந்திருந்த டைம்ஸ் ஆஃப் இந்தியா எடுத்து பார்வையை ஓட்டினேன்.

அங்கே கொட்டை எழுத்தில் இருந்தது என் கவனத்தை ஈர்த்தது. 

”****** நிறுவனம் இந்த ஆண்டு புதிதாக பத்தாயிரம் பேரை வேலையில் அமர்த்துகிறது” 

Tuesday, May 12, 2009

கவுண்டர்'ஸ் டெவில் ஷோ - விஜய் பகுதி 2

க: ஏன்டா தமிழன் தமிழன்னு ஒரு படம் நடிச்சியே அது கதை கேட்டு தான் நடிச்சியா?

வி: டைரக்டர் ரெண்டே வரில எனக்கு கதை சொன்னாருணா... ஒரு தறுதலை தபால் தலையில் வருகிறான். இது தான்ணா அதோட கதை.

க: டேய் ரெண்டு வரில சொல்றதுக்கு அது என்னடா திருக்குறளா? கதை கேக்கறதுக்கு ஒனக்கு ஒரு மணி நேரமாகுமாடா? காசு போடறது எவனோ, படம் பாக்கறது எவனோங்கற தைரியத்துல நீ நடிச்சிட்டு இருக்க. யூத்னு ஒரு படம் நடிச்சியே அது நியாபகம் இருக்கா?

வி: அது மறக்கக்கூடிய படமாணா? ஆல் தோட்ட பூபதி பாட்டுக்கு தமிழ் நாடே ஆடுச்சேணா...

க: அது உன் ஆட்டத்துக்கு இல்லடி. சிம்ரன் ஆடனதால தமிழ் நாடே ஆடுச்சு.
அப்பறம் என்னடா அந்த படத்துக்கு கேப்ஷன் Life is Beautiful? ஏன்டா நீ படத்து கதையை காப்பி அடிச்ச, பரவாயில்ல. இப்படி காப்பி அடிச்ச படத்தோட பேரையே கேப்ஷனா வெக்கறியே உனக்கு எல்லாம் மனசாட்சியே கிடையாதா?

வி: என்னங்கண்ணா பண்றது. படத்துக்கு கேப்ஷன் இங்கிலிஷ்ல தான் வைக்கணுமாம். டைரக்டர்கிட்ட இந்த படத்துல நிறைய சீன் எந்த படத்துல இருந்து காப்பி அடிச்சதுனு கேட்டேன். அது நல்லா இருந்ததால அதையே கேப்ஷனா வெச்சாச்சுங்கண்ணா.

க: அடப்பாவிகளா! அதுல எதுக்குடா உனக்கு வெக்க வேண்டிய பேரை விவேக்குக்கு வெச்சிங்க?

வி: அது என்ன பேருங்கணா? நியாபகம் இல்லையே!!!

க: கருத்து கந்தசாமி. படம் முழுக்க கருத்து சொல்லியே மக்கள கொன்னுட்டனு உன் பேருல பொது நல வழக்கு வேற இன்னும் இருக்காம்.

வி: அண்ணா என்னங்கணா இதுக்கெல்லாம் போயி டென்ஷனாகிட்டு.

க: இதெல்லாம் விட இன்னோரு கொடுமை அந்த புதிய கீதை. அதுல உனக்கு எதுக்குடா ஆறு விரல்?

வி: கமல், விக்ரம், சூர்யா மாதிரி ஏதாவது வித்யாசமான கெட்டப்ல வரணும்னு ஆசைப்பட்டேண்ணா. அதனால தான் ஆறு விரல் வெச்சிக்கிட்டேன். உங்களால என்னை அடையாளம் கண்டு பிடிச்சிருக்கவே முடியாதே!!!

க:டேய்!!! கைல ஒரு விரல் அதிகமா வெச்சிக்கிட்டா அடையாளம் தெரியாதா? உன்னைய என்ன பண்றதுன்னே தெரியலையே. அதுல க்ளைமாக்ஸ் அதுக்கு மேல கொடுமை. வண்டில சைட் ஸ்டேண்ட் தட்டிவிட்டு ஆக்ஸிடெண்ட் ஆன ஒரே ஆள் நீதான்டா.

வி: என்னங்கணா இப்படி திட்றீங்க. நீங்க ரொம்ப மோசம்.

க: டேய் விஜய் மண்டையா! உன்னைய நம்பி காசு கொடுத்து தைரியமா வந்தா நீ இப்படி புதுமை பண்றேனு டகாட்டி வேலை பண்ணா உன்னைய என்ன பண்றது? நீயே சொல்லு அந்த திருமலை படமெல்லாம் மனுசன் பார்க்க முடியுமா? அதுல கடைசி சீன்ல நீ பேசற பஞ்ச் டயலாக் கொடுமை தாங்காம வில்லனே திருந்திடறான். நாங்க பாவம் என்ன பண்ணுவோம்?

வி: !@#$%

க: சரி.. கில்லி படத்துல எப்படிடா மதுரைல செமி ஃபைனல்ல தோத்துட்டு ஃபைனல்ல சென்னைல பஞ்சாப் டீம் கூட ஆடறீங்க?

(விஜய் தீவிரமாக சிந்திக்கிறார்)

க: சொல்லு மேன்!

வி: அது வேற மேட்சுங்கணா. அதுல லோக்கல் டீமோட கில்லி டீம் ஆடுதுண்ணா. இது ஆல் இந்தியா இண்டர்நேஷனல் மேட்ச்க்காக‌ கலந்துக்கற மேட்ச்ணா. (ஒரு வழியாக சமாளிக்கிறார் விஜய்)

க: டேய் டக்கால்டி மண்டையா. தமிழ் நாடு டீம்ல தான் ஓட்டேரி நரி, டுமீல் குப்பம் வவ்வாலு, ஆதி வாசி எல்லாம் இருக்கறாங்களாடா? சும்மா அடிச்சு விடாதடா.

வி: போங்கணா. என் படத்துல போய் லாஜிக் எல்லாம் பாக்கறீங்க.

க: அது சரி. கில்லி கூட பரவால. அந்த மதுரனு ஒரு படம் நடிச்சியே அது மனசன் பாப்பானாடா? மீசைய ட்ரிம் பண்ணி கைல டேட்டு கூத்துனா அடையாளம் தெரியாதுனு தமிழ் நாட்டுக்கு புது டெக்னிக் சொல்லி கொடுத்ததே நீ தான்டா.

வி: ஏன்ணா அவன் மட்டும் கோட்டு போட்டா அடையாளம் தெரியாதுனு நடிக்கல?

க: அவன் எவன்டா?

வி: பேரெல்லாம் நான் சொல்ல மாட்டேன். அந்த படத்த பேரோட க்ளூ தரேன். 'ஜ'ல ஆரம்பிச்சி 'னா'ல முடியும்.

க: ஏன்டா உங்க அக்கப்போர்ல எங்கள கொடுமைப்படுத்தறீங்க? உங்களுக்குனு இருக்கானுங்க பாரு ரசிகர்னு சொல்லிட்டு அவனுங்கள சொல்லனும்.
அது எப்படிடா தைரியமா அந்த பேரரசு படத்துல எல்லாம் நடிச்ச?

வி: அண்ணா. அவர் எவ்வளவு பெரிய டைரக்டரு. அவர மாதிரி புதுசா சிந்திக்கிற டைரக்டரே தமிழ்நாட்ல கிடையாதுங்கணா.

க: டேய் அவன் போன வாரம் தான் துவைச்சு காயப்போட்டேன். இந்த மூஞ்சில சந்தனத்த பூசினா அடையாளம் தெரியாதுனுங்கறதெல்லாம் பெரிய சிந்தனையாடா. அவனை சொல்லக்கூடாது. முதல்ல உங்கள போட்டு நாலு சாத்து சாத்தனா சரியா போயிடும். இனிமே அவன் கூட சேராத. புரியுதா?

வி: சரிங்கண்ணா.

க: அப்பறம் குஷி படத்துல எதுக்கு ரெண்டு தடவை நடிச்ச?

வி: இல்லைங்களேணா. ஒரு தடவை தானே நடிச்சேன்.

க: நான் சொல்றது சச்சின்னு ரெண்டாவது தடவை அதே கதைல நடிச்சியே அதை சொல்றேன்.

வி: ஓ! குஷி படத்துலயும் சச்சின் படத்துலயும் ஒரே கதையாணா? அது எனக்கு தெரியாதே!

க: அடங்கொக்கா மக்கா. நீ நடிக்கிற படத்து கத உனக்கே தெரியாதா? ஒழுங்கா கதைய கேட்டு நடி. உன்னைய நம்பி காசு கொடுத்து வந்து அடிக்கடி எல்லாரும் ஏமாந்து போறோம். அப்பறம் இன்னோரு விஷயம் தெலுகு படம் பாக்கறத குறைச்சிக்கோ. நம்ம ஊர்லயே நல்ல டைரக்டருங்க எல்லாம் அருமையான கதையோட இருக்காங்க. நீ ஒழுங்க கதை கேட்டு நடி. அப்பறம் பஞ்ச் டயலாக் பேசறத இன்னையோட நிறுத்திடு. ஓகேவா?

வி: சரிங்கண்ணா... இனிமே ஒழுங்கா நடிக்கிறேன்னா... அப்படியே எல்லாருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள். இனிமே உங்களை ஏமாத்தாம ஒழுங்கா கதை கேட்டு நடிக்கிறேங்க.
வாழ்க்கைங்கறது ஒரு வட்டம் அதுல கீழ இருக்கறவன் மேல வருவான் மேல இருக்கவன் கீழ போவான். ஆதி ஃப்ளாப் ஆயிடுச்சினு போக்கிரிய மிஸ் பண்ணிடாதீங்க...

க: டேய். இப்பதான சொன்னேன். இனிமே நீ மட்டும் பஞ்ச் டயலாக் பேசின உன் காத புடிச்சி கடிச்சி வெச்சிடுவேன். ஒழுங்கா ஓடி போயிடு...

(Part - 3 நாளைக்கு)

Monday, May 11, 2009

கவுண்டர்'ஸ் டெவில் ஷோ - விஜய்

முன் குறிப்பு: விஜய் ரசிகர்கள் இதை படித்து டென்ஷனானால் கவுண்டரை பிடிக்கவும்... இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக மட்டுமே!!!

எல்லா விசேஷத்துக்கும் டீ.வி பேட்டிக்கு முதல் ஆளா வந்து நிக்கறது நம்ம இளைய தளபதி தான். அவரையே இன்னைக்கு நம்ம நிகழ்ச்சிக்கும் புத்தாண்டு சிறப்பு விருந்தினரா கூப்பிட்டுருக்கோம். அவரும் வழக்கம் போல வர ஒத்துக்கிட்டாரு. சரி இனி நிகழ்ச்சிக்கு போவோம்.

க: வாப்பா விஜய். ஆரம்பத்துல நீ நடிச்ச கேவலமான படத்தை பார்த்துட்டு நீ இவ்வளவு பெரிய ஆளா வருவனு நான் நினைக்கவேயில்லப்பா...

வி: அண்ணா. என்னங்கணா இப்படி சொல்லிட்டீங்க? நான் நடிச்ச எல்லா படமுமே சூப்பர் ஹிட் தானுங்கணா.

க: ஏனுங்க தம்பி இந்த நாளைய தீர்ப்பு, செல்வா, தேவா, விஷ்ணு, சந்திரலேகா, மாண்புமிகு மாணவன், வசந்த வாசல், ராஜாவின் பார்வையிலே இந்த படத்தையெல்லாம் நீங்க தியேட்டர்ல போய் பார்த்துருக்கீங்களா தம்பி?

வி: அண்ணா. நானும் என் ஃபிரெண்ட்ஸும் இந்த படத்தை எல்லாம் தியேட்டர்ல போய் பாத்தோங்கணா.

க: தெரியும். எவனும் வரமாட்டானுங்கற‌ தைரியத்துல போய் பார்த்துருப்பீங்க. உங்க கெட்ட நேரம் எவனாவது தப்பி தவறி தியேட்டர் பக்கம் ஒதுங்கியிருந்தானா உங்களுக்கெல்லாம் அப்படியே பொதுமாத்துதான்டீ...

வி: ராஜாவின் பார்வையிலேல நானும் அஜித்தும் நடிச்சதைப் பார்த்து தான் பிதாமகன்ல சூர்யாவும் விக்ரமும் நடிச்சாங்க. பட கதை கூட ஒண்ணு தான். அதுல அஜித் சாகறதுக்கு நான் பழிவாங்குவேன். பிதாமகன்ல சூர்யா சாவுக்கு விக்ரம் பழிவாங்குவாரு.

க‌: ஆமா அதுல‌ விக்ர‌ம் வில்ல‌ன் க‌ழுத்தை க‌டிச்சி ப‌ழிவாங்குவாரு. நீ ந‌டிச்சி எங்க‌ளை ப‌ழி வாங்கிட்ட‌. அப்ப‌டித்தானே. ஏன்டா உன‌க்கு எல்லாம் ம‌ன‌சாட்சியே இல்லையா? அது சரி அந்த ரசிகன் படத்துல ஹீரோயினோட அம்மாவுக்கு சோப்பு போடற சீன் யாரோட சிந்தனைல வந்துச்சுப்பா?

வி: அது எங்க அப்பாவோட சிந்தனைதானுங்கணா. அந்த படம் ஹிட்டானது அதுவும் ஒரு முக்கிய காரணம்.

க: டேய்! கேவலமா இப்படி ஒரு சீன் வெச்சிட்டு இதுல உங்களுக்கு பெருமை வேற. உன் வாழ்க்கையிலே நீ பண்ண ஒரு நல்ல விஷயம் என்ன தெரியுமா?

வி: என்னங்கணா?

க: உங்க அப்பா டைரக்ஷன்ல நடிக்கறத நிறுத்தனதுதான். ஆனா அப்பவும், சுக்கிரன், சனினு ஏதாவது படத்துல தலையை காட்டி உன் பேரை கெடுத்துக்கற.

வி: இதையே தானுங்கணா எங்க அம்மாவும் சொன்னாங்க.

க: உங்க அம்மா பேச்ச கேளு. அப்பறம் கேப்டன் கூட ஒரு படம் நடிச்சையே அது என்ன படம்பா?

வி: அப்படிங்களா? நியாபகம் இல்லையே! (விஜய் தீவிரமாக சிந்திக்கிறார்)

க: அதாம்பா அந்த யுவராணியோட கபடி ஆடுனியே!

வி: ஓ! நம்ம செந்தூரப்பாண்டி

க: அடப்பாவி. கேப்டனோட நடிச்ச படம்னா நியாபகம் இல்லை யுவராணியோட நடிச்ச படம்னா அடுத்த நிமிஷமே அடிக்கறியே...

வி: அதெல்லாம் மறக்கமுடியுமாங்கணா... இன்னும் கண்ணுலயே இருக்கு. அங்க கபடி ப்ராக்டீஸ் பண்ணி தான் கில்லி படத்துல ஆல் இந்தியா இண்டர் நேஷனல் மேட்ச்ல ஜெயிச்சோம். அதெல்லாம் ஒரு பொற்காலம்னா. அப்பறம் இந்த பூவே உனக்காக வந்ததுக்கப்பறம் வாழ்க்கையே மாறிடுச்சிங்கணா.

க: நீ ஒழுங்கா நடிச்ச முதல் படமே அதுதான்.

வி: ஆமாங்கணா. அதுக்கப்பறம் வந்த எல்லா படமும் பயங்கர ஹிட்...

க: டேய்! சும்மா அடிச்சு விடாதடா. எல்லாமே லிஸ்ட்ல இருக்கு. இங்க அவனவனுக்கு தூக்கமே வர மாட்டீங்குது உனக்கு மட்டும் எப்படிடா கனவுல கண்ட இடத்துல எல்லாம் மச்சம் இருக்குற மாதிரி பொண்ணு வருது?

வி: ஏனுங்கணா, உங்க வயசுக்கு எப்படினா அதெல்லாம் வரும்? எங்கள மாதிரி யூத்துக்கு தானுங்க அதெல்லாம் வரும்... (சொல்லிவிட்டு நக்கலாக சிரிக்கிறார்)

இதை கேட்டு கவுண்டர் ஜெர்க்காகிறார்... (மனதிற்குள் நினைத்து கொள்கிறார். உனக்கு இருக்குடி)

க: அது சரி... இந்த ஷாஜஹானு ஒரு படம் நடிச்சியே. அதுல எதுக்குடா வேற படத்து ஃப்ளாஷ் பேக்கை எடுத்து வைச்ச?

வி: இல்லைங்களே! அது அந்த படத்து ஃப்ளேஷ் பேக் தானே?ஆனா படத்த பார்த்த எல்லாருக்குமே இப்படி ஒரு டவுட் இருந்துச்சாம். பாட்டு ஹிட் ஆனதுக்கு அப்பறம் படத்துல கதையை பத்தி யாராவது யோசிப்பாங்களா?எனக்கு என்னனே இன்னைக்கு வரைக்கும் புரியல

க: அது சரி... அது என்னடா புறாவுக்கு பெல்லடிக்கிறது?

வி: அதுங்களாணா? நம்ம படையப்பால வர பாம்பு புத்துல கை விடற டயலாக்கு இக்வளா இருக்கனும்னு யோசிச்சி வெச்சதுங்கணா.

க: ஏன்டா அடுத்தவனை பார்த்து காப்பி அடிக்கறீங்க? உங்களுக்குனு ஒரு ஸ்டைல வெச்சிக்கோங்கடா. அப்ப தான் வாழ்க்கையில பெரிய ஆளாக முடியும். அப்பறம் அந்த பகவதினு ஒரு படம் நடிச்சியே. அத கதை கேட்டு தான் நடிச்சியா?

வி: அது பாட்ஷா மாதிரி இருக்கும்னு எங்க அப்பா சொன்னாரு. அதனாலதான் கதை கேக்காமலே நடிச்சேங்கணா.

க: இனிமே நான் சொல்றேன். உங்க அப்பா பேச்சை கேக்காத. அப்பறம் உன்னை யாராலும் காப்பாத்த முடியாது...

(தொடரும்...)

(இன்னும் பல படங்கள் இருப்பதால் ஒரே பகுதியில் முடிக்க இயலவில்லை... அடுத்து பல சூப்பர் ஹிட் படங்கள் காத்திருக்கின்றன)

Sunday, May 10, 2009

ரியல் எஸ்டேட்டா? ரீல் எஸ்டேட்டா???

ரியல் எஸ்டேட். இந்த முறை நான் இந்தியா போயிருந்த போது கள்ளக்குறிச்சில இருந்து சென்னை போற வழி முழுக்க (250 கி.மீ) சாலையின் இரண்டு பக்கங்களிலும் வேலியெல்லாம் போட்டு, அன்னை நகர், மாரியம்மன் நகர், ஆரோக்ய மாதா நகர், பாலாஜி நகர், மகாலட்சுமி அவின்யூ இப்படி ஏதாவது ஒரு ரியல் எஸ்டேட் போர்ட். விவசாய நிலத்தை கூட விட்டு வைக்கலை. ஊர்ல இருக்குறப் பாதி பேருக்கு மேல ரியல் எஸ்டேட் தான் பண்றாங்க. 


என்ன நைனா இப்படி ஊர்ல இருக்குற எல்லாரும் ரியல் எஸ்டேட் பண்ணா, யார் தான் வாங்குவாங்குனு கேட்டேன். ”எனக்கும் அது தான் புரியல. சும்மா சுத்திட்டு இருந்தவங்க எல்லாம் இப்ப லட்சத்துலயும், கோடிலயும் தான் பேசறாங்க. அடிக்கடி வீட்டுக்கு வந்து பையன் தான் அமெரிக்கால இருக்கான் இல்லை, அந்த இடத்துல வாங்கிப் போடுங்க. இன்னும் மூணு மாசத்துல டபுல், ட்ரிபில் ஆகும்னு சொன்னாங்க” அப்படினு சொன்னாரு. ஏற்கனவே ஸ்டாக் மார்க்கெட்ல பலமா நான் பாடம் கத்துக்கிட்டதால இந்த டபுல், ட்ரிபில் எல்லாத்துலயும் நமக்கு பயம் தான். அப்படி அவுங்க சொல்ற இடத்தைப் பார்த்தாலும் ஊருல இருந்து ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப தள்ளி இருக்கும். கண்ணுக்கு எட்டின தூரம் வரைக்கும் ஒரு வீடு கூட தெரியாது.

அப்பறம் ரியல் எஸ்டேட்லயே சீட்டு கட்டி வாங்கறதும் இருக்கு. இவுங்க மாசத்துக்கு ஒரு அறுநூறு, ஆயிரம்னு கட்ட சொல்லுவாங்க. நாப்பது மாசம் இல்லை அறுபது மாசம் முடிஞ்ச உடனே நமக்கு ஒரு கிரவுண்ட். அது மட்டுமில்லாம மாசம் மாசம் குலுக்கல்ல ஏதாவது ஒரு பரிசு கொடுக்கறாங்க. அந்த பரிசு பெரும்பாலும் எலக்ட்ரிக்கல் சாமான்கள் தான். டீவிடீ ப்ளேயர், செல் ஃபோன், ஹோம் தியேட்டர், மைக்ரோ வேவ் இப்படி. இதுல என்ன சமாச்சாரம்னு கேட்டா, இந்த சீட்டு நடத்த இவுங்க பட்ஜட் போடும் போது சும்மா நூறு, ஆயிரம் சீட்டுனு கணக்கு வெச்சி போடறாங்க. பத்து பேர் வெச்சி நடத்துற சீட்டே உன்னை பிடி என்னை பிடி தான். இதுல இந்த அளவுக்கு நடத்தும் போது நிச்சயம் டவுசர் கிழிஞ்சிடும். 

அதுவுமில்லாமல் இவுங்க அதுக்கு ஒரு ப்ரவுச்சர் வெச்சிருப்பாங்க பாருங்க. அப்படியே கலர், கலரா வீடு இருக்கும். அழகான ரோடு, அதுல ஒவ்வொரு வீட்டுக்கு முன்னாடியும் ஒரு மரம். நிறைய தெரு விளக்குகள். அங்க ஷர்ட், மிடி போட்டுட்டு ஒரு ஃபாரின் பிகர், டை, கோட் எல்லாம் போட்டுட்டு ஒருத்தர். அப்பறம் அடுத்த பக்கத்துல யாருக்கும் புரியாத கணக்கு ஒண்ணு இருக்கும். அதுல நாம மாசம் கட்டுற பணம், மொத்தமா கட்டுற பணம் அப்பறம் அந்த நிலத்தோட மதிப்பு (அது அவுங்களே அடிச்சி விடறது), கடைசியா நமக்கு கிடைக்கிற லாபம். (பக்கத்துல அப்படியே ஒரு நாமத்தையும் போடலாம். அதை நாமலே போட்டுக்கணும்னு அவுங்க விட்டுடறாங்க). கடைசி பக்கத்துல இவுங்க குலுக்கல்ல கொடுக்குற இலவச ஐட்டங்கள். இந்த மாதிரி ஒரு நாலஞ்சி ப்ரவுச்சர் பார்த்துட்டேன். 

இப்படி நூறு, இரு நூறு சீட்டுனு நடத்தறீங்களே ரிஸ்க் இல்லையானு கேட்டேன். உடனே, இது சாதாரணமா நடத்துற சீட்டா இருந்தா, சீட்டு எடுத்துட்டு எவனாவது ஊரை விட்டு ஓடிப்போயிடுவான். ஆனா இதுல அப்படி இல்லை. நாப்பது சீட்டும் முடிஞ்சவுடனே தான் ரிஜிஸ்ட்ரேஷன். அப்படியே எவனாவது பாதில நிறுத்திட்டா, நமக்கு வந்த வரைக்கும் லாபம். அப்படினு சொன்னாங்க. அதே மாதிரி இடத்தோட விலை எப்படி சொல்றீங்கனு கேட்டேன். அதுக்கு ஒரு பத்து, இருபது ஏக்கர்ல இது பண்ணறோம். ரோடுக்கு கொஞ்சம் பக்கத்துல இருக்கறது தான் விலை அதிகம். பின்னாடி போக போக விலை ரொம்ப குறைவு. சீட்டு கட்டுற யாருக்கும் எந்த ப்ளாட் அவுங்களுக்கு கிடைக்கும்னு தெரியாது. அது கடைசியா குலுக்கல்ல தான் முடிவாகும்.
அதுவுமில்லாமல் முன்னாடி இருக்குற ப்ளாட் எல்லாம் குலுக்கல்லயே வைக்க மாட்டோம். அதை தனியா பின்னாடி வித்துடுவோம். மீதி இருக்கறதெல்லாம் தான் குலுக்கல்ல இருக்கும். அது யாருக்கும் தெரியாது அப்படினு சொன்னாங்க. நல்லா விவரமாத்தான்யா இருக்கீங்கனு நினைச்சிக்கிட்டேன்.

அப்பறம் எப்படி நூறு, இருநூறுனு சீட்டுக்கு ஆள் கிடைக்குதுனு கேட்டேன். சாதாரணமா சீட்டுக்கு பத்து பேர் கிடைக்கறதே கஷ்டம். மாசம் அறுநூறு, எழுநூத்தம்பதுனு வைக்கறதால நிறைய பேர் நாலஞ்சி சீட்டு போடறாங்க. பத்து, இருபது சீட்டு போடற ஆள் எல்லாம் கூட இருக்காங்க. பின்னாடி டபுல், ட்ரிபுல் ஆகும்னு எல்லாருக்கும் நம்பிக்கை தான். கடைசியா நான் இது தான் அவுங்ககிட்ட சொல்லிட்டு வந்தேன், ஒரு வருஷத்துல டபுல், ட்ரிபுல் ஆகும்னு நினைச்சா அது பேர் நம்பிக்கை இல்லை. பேராசை. அப்படி நினைச்சி இடம்னு இல்லை எது வாங்கினாலும் பெருநஷ்டம் வர வாய்ப்பிருக்குனு.

Friday, May 08, 2009

பாலம் - சங்கமம் போட்டிக்கு

கூரையிலிருந்து தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்த சத்தம் இரவு முழுக்க கேட்டு கொண்டிருந்தது. வானம் இன்னும் இருட்டாகவே இருந்தது. கோழிக் கூவும் சத்தமோ, பால் கறக்க கறவை மாடுகளை சொசைட்டிக்கு கூப்பிட்டு செல்லும் சத்தமோ கேட்கவில்லை. இருந்தாலும் எனக்கு தூக்கம் கலைந்துவிட்டது. இரவு முழுவதும் ஏதோ கெட்ட கனவாகவே வந்து கொண்டிருந்தது.

பாயிலிருந்து எழுந்து தாழ்வாரத்திற்கு சென்றேன். கிழவி அடுப்பங்கறையில் எருமுட்டையையும், விறகையும் வைத்து போராடிக் கொண்டிருந்தாள். அவள் ஊதாங்குழலை வைத்து ஊதியும் பெரிதாக பயனில்லாமல் இருந்தது. சீமெண்ணையை ஊத்தி முயற்சி செய்து கொண்டிருந்தாள். விட்டு விட்டு பொய்யும் மழையில் எல்லாம் ஈரமாகி இருக்கும்.

“என்னடா குமாரு, அதுக்குள்ள எழுந்திரிச்சிட்ட?”

“ஒண்ணுமில்ல. இந்த மழை சத்தத்துல சரியா தூங்க முடியல. அதான் சத்தத்துல எழுந்திரிச்சிட்டேன்”

“சரி சரி. இன்னைக்கு ஒங்க பள்ளியூடம் இருக்கா?”

“தெரியல. தொடர்ந்து மழை பெஞ்சிட்டே இருக்கு. எல்லா பள்ளிக்கூடமும் லீவு விட்டுட்டாங்க. இவுங்க புது பள்ளிக்கூடம், ரொம்ப ஸ்ட்ரிக்ட்டுனு பேர் வாங்கணும்னு லீவே விட மாட்றாங்க”

”ஏன்யா, அந்த பாலம் வேற விரிசல் விட்டுருக்குனு எல்லாம் பேசிக்கறாங்க. அதைத் தாண்டி பள்ளீயூடம் வெச்சிட்டு லீவு விடமாட்றானுங்களே. புள்ளைங்களுக்கு ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆகிடுச்சினா?”

எனக்கும் அந்த சிந்தனை தான் ஓடிக் கொண்டிருந்தது. நேற்றே அந்த விரிசலைப் பார்த்தேன். எப்படியும் மழை நின்றால் தான் அதை சரி செய்வார்கள். அந்த பக்கமாக நிறைய பேருந்துகளும், லாரிகளும் செல்வதில்லை. அதை கடந்து செல்லும் முப்பது, நாப்பது பெரிய வண்டிகளுள் நான் ஓட்டி செல்லும் பேருந்தும் ஒன்று. என்னுடைய வண்டி முழுதும் குழந்தைகள். ஊரிலிருக்கும் பணக்காரப் பிள்ளைகள் பெரும்பாலும் அந்த பள்ளியில் தான் படிக்கின்றனர். அனைவரும் என் பேருந்தில் தான்.

”அதெல்லாம் ஒண்ணுமில்ல. யாரோ சும்மா கதை கட்டி விட்டுருக்காங்க. அப்படி ஏதாவது இருந்தா நிச்சயம் லீவு விட்ருவாங்க”

சொல்லிவிட்டு போய் மீண்டும் படுத்துக் கொண்டேன். இன்னும் ஒரு மணி நேரம் தூங்கலாம். தூக்கம் வரவில்லை. ராத்திரி முழுக்க மழை பெய்து கொண்டிருந்திருக்கிறது. பள்ளி லீவு விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். கொஞ்ச நேரம் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தேன்.  மெதுவாக கண்விழித்து பார்த்தேன். சுவற்றில் சிவப்பாக மரவட்டை ஒன்று ஊர்ந்து கொண்டிருந்தது. சுவற்றின் சுண்ணாம்பு விழுந்து லேசான பள்ளமானப் பகுதி வந்ததும் அது அப்படியே நின்றுவிட்டது. பிறகு அப்படியே பின்னால் சென்று அதை சுற்றிக் கொண்டு சென்றது. 

எழுந்து போர்வையை மடித்து வைத்து பாயை ஓரமாக எடுத்து வைத்துவிட்டு, சட்டையை மாட்டிக் கொண்டு வெளியே கிளம்பினேன். நேராக லஷ்மி ஒயின்ஸிற்கு நடந்தேன். அது இருபத்தி நான்கு மணி நேரமும் இயங்கும் என்பது எனக்கு தெரியும். காலை நேரத்தில் அண்ணாச்சி இருப்பதற்கான சாத்தியங்கள் மிக அதிகம். நான் எதிர்பார்த்த படி அண்ணாச்சி அங்கே இருந்தார்.

“என்னடா குமாரு. இந்த நேரத்துல இங்க வந்திருக்க? சரக்கு போட்டுட்டு வண்டில ஏறுன, அப்படியே அறுத்துபுடுவேன். கால”

“இல்லைங்க அண்ணாச்சி. இன்னைக்கு பள்ளிக்கூடம் இருக்கானு கேட்டுட்டு போகலாம்னு வந்தேன்”

“இது என்ன கேள்வி. புதன் கிழமை அதுவுமா எதுக்கு பள்ளிக்கூடம் லீவு விடுவாங்க? இன்னைக்கு காந்தி பொறந்த நாளுக்கூட கிடையாதே”

”தொடர்ந்து மழை பெஞ்சிட்டு இருக்கு அண்ணாச்சி. அதான் கேட்டேன்”

“ஏன்டா புள்ளைங்க எல்லாம் மரத்தடியிலையா படிக்க போதுக? அவ்வளவு பெரிய பில்டிங் கட்டிருக்கறேன். எதுக்கு மழைக்கு லீவு விடணும்? எனக்கு ஒயின்ஸ் ஷாப் மாதிரி தான் பள்ளிக்கூடமும். அதுக்கு அவ்வளவு சீக்கிரம் லீவு எல்லாம் விட முடியாது. புரியுதா?”

“இல்லைங்க அண்ணாச்சி. பாலம் லேசா விரிசல் விட்டிருக்கு. அதான்”

”எவன்டா அவன். புரியாத பையனா இருக்கான். அது என்ன பெரிய பாம்பன் பாலமா? கண்ணை மூடி திறந்தா அதை தாண்டிட போற. அதுக்குள்ளவா அது உடைஞ்சிட போகுது. அதுவுமில்லாம நான் பள்ளிக்கூடம் லீவு விட்டா உடனே மத்த பள்ளீக்கூடக்காரனுங்க எல்லாம் இவன் மழைக்கு பள்ளிக்கூடம் லீவு விடறானே. ஒயின்ஸ் ஷாப்புக்கு லீவு விடுவானு கேட்டுடமாட்டாங்க?”

“அது இல்லைங்க அண்ணாச்சி”

“எவன்டா அவன். சொன்னதையே சொல்லிட்டு இருக்கான். ஒழுங்கா பஸ் எடுத்துட்டு பசங்களைக் கூப்பிட்டு போக முடியுமுனா சொல்லு. இல்லை இன்னையோட நின்னுக்கோ. நான் வேற ஆளைப் பார்த்துக்கறேன்”

அந்த இடத்தை விட்டு கிளம்பினேன். வீட்டிற்கு சென்று திண்ணையில் கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தேன். அவர் சொன்ன மாதிரி கண்ணை மூடி திறப்பதற்குள் பாலத்தை தாண்டிவிட முடியாது என்றாலும் பத்து இருபது நொடிக்குள் கடந்துவிடலாம் தான். ஆனால்... மனதில் ஏதோ ஒரு மூலையில் ஒரு மாதிரி பிசைந்து கொண்டிருந்தது. அது என்ன என்று புரியவில்லை.

குளித்து விட்டு கிளம்பினேன். ஏழு மணிக்கு கிளம்பினால் தான் சரியாக இருக்கும். பசங்களை விட்டுவிட்டு ஒன்பது முப்பது மணிக்கெல்லாம் வீட்டிற்கு வந்துவிடலாம். சரியாக ஏழரை மணிக்கு ஒயின்ஸ் ஷாப் எதிரில் இருக்கும் பேருந்தில் இருந்தேன். வழியில் மணிகண்டன் ஏறிக் கொள்வான். அவன் தான் கிளினர். கிளினர் என்று சொல்வதை விட பஸ்ஸில் வரும் வாண்டுகளை மேய்ப்பவன் என்று சொல்லலாம். அவன் இல்லை என்றால் ஒவ்வொரு குழந்தையும் என்ன அட்டகாசம் செய்யும் என்றே சொல்ல முடியாது. எப்படியும் அடுத்த மாதத்திற்குள் அனைத்து ஜன்னல்களையும் சின்ன சின்ன கம்பிகளால் அடைத்து விடலாம் என்று அண்ணாச்சி சொல்லியுள்ளார்.

மணிகண்டன், கணக்குபிள்ளைத் தெரு முனையில் நின்றிருந்தான்.

“பள்ளிக்கூடம் லீவா இருக்கும்னு நினைச்சேன். வழக்கம் போல சர்ருனு வந்துட்ட?”

“அண்ணாச்சிக்கிட்ட கேட்டேன். அதெல்லாம் இல்லைனு சொல்லிட்டாரு”

“நல்ல வேளை. லீவு இல்லை. ராத்திரி முழுசா கூரைல இருந்து வீட்டுக்குள்ள தண்ணி சொட்டிக்கிட்டே இருந்துது. தூங்கவே முடியல. தரையெல்லாம் ஜில்லுனு இருந்துது. பள்ளிக்கூடத்துல புதுசா கட்டுன ரூம்ல எதுலயாவது தூங்கலாம்னு தான் சீக்கிரமே கிளம்பி வந்துட்டேன்”

“சரி சரி. அந்தப் பாலம் எப்படி இருக்குனு யாராவது ஏதாவது சொன்னாங்களா?”

“அதான் நாம நேத்தே பாத்தோமே. விரிசல் விட்டிருக்கு. இப்ப எப்படி இருக்குனு தெரியல. நாம தான் மொதல்ல போறோம்னு நினைக்கிறேன். நீ தான் வந்து சொல்லனும்”


நன்றாக தூறிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு தெருவிலும் பெற்றோர்கள் ஒரு கையில் குடையும் மற்றொரு கையில் பிள்ளைகளை பிடித்து நின்று கொண்டிருந்தனர். பிள்ளைகளும் அவர்கள் தூக்கி கொண்டிருக்கும் அவர்களை விட அதிக எடை இருக்கும் புத்தக பைகளும் நனையாமல் காக்க போராடிக் கொண்டிருந்தார்கள். பெற்றோர்கள் பெரும்பாலும் நனைந்து கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு குழந்தையும் பேருந்தில் நுழைந்ததும் அவர்கள் ஷூவில் இருக்கும் சேறை படிகளிலே துடைத்துவிட்டு சென்று கொண்டிருந்தார்கள்.

ஒவ்வொரு பெற்றோர்களின் முகத்திலும் இந்த மழையிலும் பிள்ளையை பள்ளிக்கு அனுப்பி படிக்க வைக்கிறோம் என்ற பெருமிதம் இருந்தது. ஒவ்வொரு குழந்தையின் முகத்திலும் பள்ளி விடுமுறை விடவில்லை என்ற ஏமாற்றமும், விடமாட்டார்களா என்ற ஏக்கமும் இருந்தது. எனக்கு மட்டும் அடி மனதில் ஏதோ ஒன்று உறுத்தி கொண்டிருந்தது. இந்த பெற்றோர்கள் அண்ணாச்சிக்கு போன் செய்து சொல்லியிருந்தால் இன்று விடுமுறை விட்டிருக்கலாம். இப்படி அவுங்களே அனுப்பும் போது நமக்கு என்ன வந்துச்சு? இதுங்கள பள்ளிக்கூடத்துல விட்டுட்டு நிம்மதியா வந்து தூங்கலாம்.

திடீரென்று ஒரு எண்ணம் வந்தது. கடைசி தெருவில் இருக்கும் பிள்ளையாருக்கு சூடம் ஏற்றிவிட்டு செல்லலாம் என்று தோன்றியது. அந்தத் தெரு முனையில் நிறுத்திவிட்டு இறங்கினேன். மணிகண்டனுக்கு ஒன்றும் புரியவில்லை. இன்று எந்த குழந்தையும் சத்தம் போடாமல் அமைதியாக இருந்ததால் அவனுக்கு வேலை இல்லை. அவனும் என்னுடன் இறங்கினான்.

பக்கத்திலிருக்கும் நாயக்கர் கடையில் சூடமும் தீப்பெட்டியும் வாங்கி விட்டு அந்த தெரு முனை பிள்ளையாருக்கு ஏற்ற சென்றேன். சூடம் ஏற்றும் மாடமும் ஈரமாக இருந்தது. ஏற்றினால் அணைந்துவிடும் அபாயம் அதிகமா இருந்தது. அப்படி அணைந்தால் சுத்துமாக நொறுங்கிவிடுவேன் என்ற பயம் மனதை கவ்வியது. அதனால் அந்த சூடத்தை அப்படியே வைத்துவிட்டு வந்து வண்டியை எடுத்தேன். மணிகண்டனும் எதுவும் பேசாமல் வண்டியில் ஏறினான்.

கடைசித் தெருவில் இருக்கும் குழந்தையையும் ஏற்றி கொண்டு, திரும்பி பார்த்தேன். சில காலி இடங்கள் தெரிந்தாலும், நிறைய குழந்தைகள் வந்திருந்தனர். இன்னும் பத்து நிமிடத்தில் பாலத்தை கடந்து விடலாம். மணிகண்டனிடம் ஏதாவது பேசி நேரத்தைப் போக்கலாம் என்று யோசித்தேன். ஆனால் வார்த்தைகள் எதுவும் கிடைக்கவில்லை. மனம் முழுதும் வெறுமையாக இருந்தது. இப்படி என்றும் எனக்கு தோன்றியதில்லை.

சரியாக பாலத்தின் அருகில் வண்டி நின்றுவிட்டது. நின்று விட்டது என்று சொல்வதைவிட நான் சொல்லிய வேலையை செய்தது என்று சொல்லலாம். வண்டி நின்ற இடத்திலிருந்து பாலத்திலிருந்த விரிசல் சரியாக தெரியவில்லை. மழை பெய்யாமலிருந்தால் ஒரு வேளை தெரிந்திருக்கலாம். பாலத்திற்கு அடியில் தொடர் மழையால் ஓடும் ஆற்று நீரின் சத்தம் மட்டும் நன்றாக கேட்டுக் கொண்டிருந்தது.

வண்டி மீண்டும் ஊர் நோக்கி புறப்பட்டது. குழந்தைகளுக்கு ஒன்றும் புரியவில்லை. மணிகண்டனுக்கும்.

“ஏன்ன வண்டிய ரிவர்ஸ் எடுத்துட்டு ஊருக்கு திரும்ப போற?”

ஒரு நிமிட யோசனைக்குப் பிறகு சொன்னேன்...

 “இன்னைக்குப் பள்ளிக்கூடம் லீவு”

Sunday, May 03, 2009

சரத்பாபு - அந்தர் பல்டி அடித்த வெட்டி???

இது சரத்பாபு கவிதா அக்கா பேட்டியில் கொடுத்திருந்தது

கவிதா: இதுவரை மக்களுக்கு நீங்கள் தனிப்பட்ட முறையில் ஏதாவது செய்ததுண்டா?

நிறைய உண்டு இந்தியா முழுக்கவும் இது என்னுடைய மொத்த நேரத்தில் 400 நாட்கள் ஏழைக்குழந்தைகளுடன் செலவிட்டு இருக்கிறேன். அவர்களுக்கு கல்வி மற்றும் உழைப்பை பற்றிய விழிப்புணர்வு, விளக்கங்கள், ஊக்கங்கள் (Awareness) கொடுப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறேன். 850 நாட்கள் இளைஞர்கள் தொழில் தொடங்க தேவையான அறிவுரை, தொழில் சார்ந்த அறிவு, மனதளவில் அவர்களுக்கு ஊக்கம் கொடுத்து இதுவரை 50 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் என்னால் தொழில் அதிபர்களாக ஆகியிருக்கிறார்கள். நூற்றுக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்திருக்கிறார்கள். 3000 மேற்பட்ட மாணவ மாணவியருக்கு அவர்களின் career பற்றிய விழுப்புணர்வையும், ஊக்கத்தையும், ஆதரவையும் தந்திருக்கிறேன்.


இது சமுதாயத்தை நேசிப்பவர்களாலும், அக்கறை கொண்டவர்களாலும் தான் செய்ய முடியும். நான் என்னுடைய போன பதிவில் சொல்லியதையே இங்கேயும் சொல்கிறேன். வெறும் படித்திருக்கிறார், இளைஞர், கஷ்டமான நிலையிலிருந்து இந்த நிலைமைக்கு வந்திருக்கிறார், MNCயில் சேராமல் சொந்த காலில் நிற்கிறார் என்ற காரணங்களை வைத்து அவரை ஆதரிக்க என்னால் முடியவில்லை. பல நல்ல திட்டங்கள் புத்திசாலிகளை விட மக்களை அதிகமா நேசிப்பவர்களால் தான் கொண்டு வர முடிந்தது. இவர் சமுதாயத்தை நேசிக்கிறார், அதன் வளர்ச்சியில் அக்கரை கொண்டுள்ளார் என்பது இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

கவிதா:- மகளிர் மேம்பாட்டுக்கென அனைத்து இல்லத்தரசிகளுக்கும் வங்கிக் கணக்கு துவக்கப்படும். வீட்டில் உள்ள பெண்கள் வருவாய் ஈட்டும் வகையில் நல்ல வாய்ப்புகளும் திட்டங்களும் அறிமுகப்படுத்துவேன். இந்தத் திட்டத்தில் நான் நேரடியாகவே ஈடுபடுவேன். - எப்படிப்பட்ட வேலைவாய்ப்புகள் வழங்கப்படும், இதற்கான உங்களின் திட்டத்தின் தொகுப்பு ஏதாவது இருந்தால் விளக்கமுடியுமா?

கவிதா, முதலில் படித்தவர்கள், படிக்காதவர்கள் என்று பிரித்து, படிக்காத முன்னரே சிறுதொழில் செய்துவரும், அதாவது சின்ன சின்ன தொழில் பூ கட்டுதல், காய்கறி வியாபாரம், போன்றவற்றின் கொள்முதலை ஒவ்வொரு ஏரியாவிலும் மையப்படுத்துவேன். ஒரு பூ கட்டும் பெண் செலவு செய்து கோயம்பேடு சென்று வாங்கிவரும் செலவை குறைப்பேன். 50 பேருக்கு ஒருவர் சென்று வாங்கிவந்தால் போதுமே. எவ்வளவு பணம் மிச்சமாகும். இது போல் ஒவ்வொரு சிறுதொழிலிலும் எளிதான முறைகளை செயற்படுத்த தேவையான அறிவுரையை வழங்குவேன். படித்தவர்களுக்கு அவர்களுக்கு ஏற்றது போன்ற வேலை வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுப்பேன். அதற்கான முழு திட்டத்தையும் இன்னும் முடிக்கவில்லை.

நான் அவரிடம் எதிர்பார்த்ததும் இதை தான். அவர் கற்ற கல்வி, அவர் பட்ட கஷ்டங்கள் அனைத்தையும் இந்த சமூகத்திற்கு அவர் பயன்படுத்த முதலில் அவருக்கு சமூக அக்கறை இருக்க வேண்டும். அது இருக்கிற பட்சத்தில் அவரை ஆதரிப்பது நமது கடமை.

அடுத்து வலையுலகில் அவரை ஆதரிப்பவர்களுக்கு... எலக்‌ஷன்ல ஒருத்தர் நின்னா அவர் பப்ளிக் ஃபிகர். சினிமா நடிகர்களை எந்த அளவுக்கு விமர்சிக்கிறார்களோ அதே அளவுக்கு சரத் பாபுவையோ எலக்‌ஷனில் நிற்பவர் எவரை வேண்டுமானாலும் விமர்சிக்க முடியும். இசையை விமர்சிக்கும் சுப்புடுவிடம், எங்க நீ பாடி காட்டுனு சொல்றதும், திரைப் பார்வை மதன் கிட்ட எங்க நீ விஜய் மாதிரி நடிச்சி காட்டு, இல்லை அஜித் மாதிரி பேசிக்காட்டுனு சொல்றது எப்படி காமெடியோ, அதே மாதிரி தான் நீங்க போடற பல பின்னூட்டங்களும் இருக்கிறது. இங்க திரைவிமர்சனம் எழுதற யாராலும் குசேலன் மாதிரி குப்பைப் படத்தை கூட டைரக்ட் பண்ண முடியாது (ரீமேக்காக இருந்தாலும்) என்பது தான் நிதர்சனம்.

நமக்கு பிடிச்சிருக்கு ஆதரிக்கறோம், மத்தவங்களுக்கு விருப்பம் இல்லை அவுங்க ஆதரிக்கலை. அவ்வளவு தான். We should learn to "Agree to Disagree". கருத்து மோதல்களை தனி நபர் தாக்குதல் ஆக்காதீர்கள்.

இவர் கொடுத்துள்ள தேர்தல் வாக்குறுதியில் எனக்கு மிகவும் பிடித்தது, ஒரு நாளைக்கு அறுபது மரக்கன்றுகள் என்ற விகிதத்தில் ஐந்து ஆண்டுகளுக்குள் ஒரு லட்சத்தி எட்டாயிரம் மரக் கன்றுகளை நட்டு பராமரிப்பது. இது மட்டும் நிறைவேறினால்...... நினைக்கவே ஆனந்தமாக இருக்கிறது.

வலைப்பதிவை படிக்கறவங்க சொல்லி பத்து ஓட்டுக்கூட தேத்த முடியாதுனு பெரியவங்க சொல்லியிருக்காங்க.  சில நண்பர்கள் வீடு அந்த ஏரியால இருக்கு. மாமியார் வீடு அங்க தான் இருக்கு. அதை வைத்து ஒரு பத்து ஓட்டு கேன்வாஸ் பண்ணப் போறேன். அங்கயும் நம்ம எடுத்து தான் சொல்ல முடியுமே தவிர நிச்சயம் நீங்க அவருக்கு ஓட்டு போடணும்னு யாரையும் மிரட்ட முடியாது. ஏதோ என்னால் முடிந்தது. உங்களாலும் இதைப் போல் முடியும் பட்சத்தில் தெரிந்தவர்களிடம் சிலேட்டு சின்னத்தில் வாக்களிக்க சொல்லவும்.

Tenant Commandments - நான் பார்த்த நாடகம்

எனக்கு ரொம்ப நாளா மேடை நாடகம் பார்க்கணும்னு ஆசை. ஒரு வழியா நேத்து அது நிறைவேறியது. நியூ இங்கிலாந்து தமிழ் சங்கம் நடத்திய சித்திரை திருவிழாவில் ஸ்டேஜ் ஃபிரெண்ட்ஸ் (Stage Friends) நடத்திய டெனண்ட் கமெண்ட்மெண்ட் (Tenant Commandment) நாடகம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.


இது பல ஆண்டுகளுக்கு முன் எஸ்.வி.சேகர் நாடகக் குழுவில் க்ரேஸி மோகன் இருந்த பொழுது நடத்தப்பட்ட நாடகம். அதை தூசி தட்டி ஒரு சில மாற்றங்களுடன் ஸ்டேஜ் பிரெண்ட்ஸால் நடத்தப்பட்டது. கதை, வசனம் : க்ரேஸி மோகன். இயக்கம் : குரு. எஸ்.வி.சேகர் ஏற்று நடத்திய பாத்திரத்தையும் அவரே செய்தார். 

இது நாடகத்தைப் பற்றிய என் விமர்சனமல்ல. எனது எண்ணங்கள். அவ்வளவே.

நாடகத்தின் கதை இது தான், வீட்டு சொந்தக்காரரால் சிரமத்திற்குள்ளாகும் வாடகைக்கு குடியிருக்கும் குடித்தினக்காரர், சொந்தமாக வீடு கட்டி, அதில் வாடகைக்கு குடியேறுபவர்களை பத்து விதிகள் விதித்து கொடுமைப்படுத்தி வீட்டைவிட்டு துரத்துகிறார். அவருடைய லட்சியம் அதைப் போல் நூறு பேரைத் துரத்துவது தான். அவருடைய இந்த செயலை வெறுக்கும் அவர் மகனும், வீட்டு புரோக்கரும் சேர்ந்து அவருக்கு புத்தி வர வைக்கிறார்கள். இரண்டேகால் மணி நேர நாடகத்தை இரண்டு வரிகளில் சொல்வது கஷ்டம். சாது சங்கரனா நடிச்ச மோகன் கொன்னுட்டார். அட்டகாசமான நடிப்பு. செம எக்ஸ்ப்ரஷ்ன்ஸ் அண்ட் டைம்லி டயலாக் டெலிவரி. அவரால அட்டகாசமா காமெடி ரோல் பண்ண முடியும். அதே மாதிரி ரொம்ப ரொம்ப இயல்பா நடிச்சிருக்காரு அய்யாசாமி கேரக்டர்ல நடிச்ச ரமணி. அவர் நிஜமா நடிச்ச மாதிரியே தெரியல. அவ்வளவு இயல்பு. அவர் டயலாக் இல்லாதப்பவும் சரியான முகபாவம் காண்பித்து கொண்டிருந்தார். இவுங்க ரெண்டு பேர் நடிப்பும் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.


நாடகத்தை இயக்கி, பத்து வேடத்தை (உடனே தசாவதாரம் கமலுக்கு போட்டியானு நினைச்சிடாதீங்க. இது கேரக்டர் பேரு) ஏற்று எந்த குறையும் இல்லாமல் செய்தார் குரு. அவருடைய நடிப்பிலும் எந்த குறையும் இல்லை. நஷ்ட ஈடு நாதமுனி கேரக்டர் இன்னும் பலமாக அமைத்திருக்கலாம். அவர் எந்த குறையும் இல்லாமலே நடித்தார். அதே போல் செல்வராஜ் கேரக்டர் செய்த பாஸ்கர், கே.டி. பெருமாள் பாத்திரத்தில் நடித்த ராம், ஆரோக்கிய சாமி பாத்திரத்தில் நடித்த அரவிந்த், ஆதிகேசவன் கேரக்டரில் நடித்த ஸ்ரீநிவாசன், நவநீதமாக நடித்த சுரேஷ், குழந்தைசாமி பாத்திரத்தில் நடித்த கணேஷ் சந்திரா அனைவரும் நன்றாகவே நடித்திருந்தார்கள். குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா...

இனி என் இரண்டணாக்கள் :

அமெரிக்காவில் நடத்தப்படும் தமிழ் நிகழ்ச்சிகளுக்கு பெரும்பாலானோர் வருவது தங்கள் பிள்ளைகளுக்கு இதையெல்லாம் பார்க்க வைத்து, அவர்களும் பெருமைப்பட தான். அதனால் இங்கே நடத்தப்படும் நிகழ்ச்சிகள் சில்ட்ரெண் ஃபிரெண்ட்லியாக (Children Friendly) இருக்க வேண்டும். ஆனால் இந்த நாடகத்தில் நிறைய டபுல் மீனிங் டயலாக்ஸ், மேலும் நிறைய so called கெட்ட வார்த்தைகள். அதை இவர்கள் சரி செய்ய வேண்டும்.

அடுத்து டயலாக்ஸ் இன்னும் கொஞ்சம் பிரில்லியண்டாக இருந்திருக்கலாம். என்னடா இவன் க்ரேஸி டயலாக்கையே குறை சொல்கிறான் என்று நினைக்க வேண்டாம். எடுத்துக்காட்டிற்கு வீட்டு புரோக்கர் பரமசிவத்திடம் ஆதிகேசவன் ”உங்க வீட்டு ஓனர் உங்களை கொடுமைப்படுத்தினத்துக்கு நீங்க அவரை பழிவாங்காம டெனண்ட்ஸை பழி வாங்கறது என்ன நியாயம்?” அப்படினு கேக்கற இடத்துல அவர் சொல்ற டயலாக்ஸ் கச கசனு இருக்கு.

அதுக்கு பதிலா, 

ப்ரோக்கர் : உங்க வீட்டு ஓனர் உங்களை கொடுமைப்படுத்தினத்துக்கு நீங்க அவரை பழிவாங்காம டெனண்ட்ஸை பழி வாங்கறது என்ன நியாயம்?

ஆதிகேசவன் : வீட்டு ஓனரை பழி வாங்கறது எப்படினு உனக்கு தெரியுமா?

ப்ரோக்கர் : தெரியாதே

ஆதிகேசவன் : எனக்கும் தெரியலை. அதனால தான் வீட்டில குடியிருக்க வரவங்களை நான் பழிவாங்கறேன்.

அப்படினு சொல்லியிருக்கலாம்.அப்பறம் ப்ரோக்கர் பரமசிவமாக நடித்த ராஜகோபால் எதிர்ல இருக்கறவரைப் பார்த்தே பேச மாட்றார். எப்பவுமே ஆடியன்ஸை பார்த்தே பேசறார். செம காமெடியா இருந்தது. எதிர்ல இருக்கறவர் ஏதாவது பேசினா இவர் நேரா நம்மல பார்த்து பேசறார். அடுத்து கண்ணை சிமிட்டி சிமிட்டி பேசினா வெக்கப்படறதுனு நினைச்சிட்டார் போல கமலா கேரக்டர்ல நடிச்ச கிரித்திகா. அப்பறம் அவுங்க ரொம்ப டென்ஷனா நடிச்ச மாதிரி இருந்தது. இயல்பா இல்லை. அதே மாதிரி மகமாயி மங்களமா நடிச்ச ராதிகா மேடமும் ரொம்ப டென்ஷனா நடிச்ச மாதிரி இருந்தது.

அப்பறம் கவுண்டர்னு சொல்ற சாது சங்கரன், ஐயர் ஆத்து பாஷைல பேசறார். ரியலிஸ்டிக்கா இல்லை.

நியூ இங்கிலாந்து தமிழ் சங்கத்தினருக்கு ஒரு வேண்டுகோள். நாடகம் நடந்த வேகத்தை விட குழந்தைகள் அங்க இங்கனு ஓடிட்டு இருந்த வேகம் தான் அதிகமா இருந்தது. இது நாடகம் பார்க்கறவர்களை பாதிப்பதை விட நாடகத்தில நடிப்பவர்களுக்கு அதிக இடையூறாக இருக்கும். அவர்களுடைய கவனமும் சிதற வாய்ப்பிருக்கிறது. அதனால் பெற்றோர்களுக்கு முன்னெச்செரிக்கையாக இதை அறிவிக்கலாம். அதே போல் சினிமா தியேட்டர் செல்லும் போது செல்ஃபோன்களை அணைப்பதை போல நாடகம் ஆரம்பிப்பதற்கு முன் அனைவரையும் அதை அணைக்க சொல்லிவிடலாம். நடிப்பவர்களுக்கு இடையூறாக இல்லாமல் இருக்கும். அதே போல் அவர்களுக்கு மரியாதை செலுத்துவதை போலவும் இருக்கும்.

ஒரு நல்ல மாலை பொழுதை எங்களுக்கு அமைத்து கொடுத்த நியூ இங்கிலாந்து தமிழ் சங்கத்துக்கும், ஸ்டேஜ் ஃபிரெண்ட்ஸ் குழுவினருக்கும் என் நன்றிகள் பல. 

Stage Friends, You guys really rock. All the best!!!