தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Wednesday, July 18, 2007

நடிப்புக் கடவுள்

கைலாயத்தில் ஈசன் ஆழ்ந்த சிந்தனையிலிருக்கிறார்.

பார்வதி: ஸ்வாமி! தாங்கள் ஆழ்ந்த சிந்தனையிலிருப்பதன் காரணத்தை நான் அறிந்து கொள்ளலாமா?

ஈசன்: உமா! உனக்கு தெரியாததில்லை. என் பக்தன் ஈசானபட்டன் ஒரு வாரமாக அன்ன ஆகாரமில்லாமல் காட்டில் எம்மை தேடி கொண்டிருக்கிறான். இன்னும் அவன் அந்த இடத்தை நெருங்கக்கூட இல்லை.

பார்வதி: அவர் கனவில் தோன்றிய தாங்களே சரியான இடத்தை சொல்லியிருந்தால் அவர் இந்நேரம் ஆலயமே கட்ட ஆரம்பித்திருப்பார்.

ஈசன்: உமா! கஷ்டப்படாமல் கிடைக்கும் பொருளின் அருமை என்றுமே உணரப்படுவதில்லை. உனக்கு தெரியாதா என்ன? இன்றே அவருக்கு நாம் காட்சியளிப்போம். நீ கவலைப்படாதே.

பார்வதி: உங்கள் திருவிளையாடலால் நன்மை நடந்தால் சரி...

..........................

ஈசன்: தேவதத்தா! உன்னால் எனக்கு ஒரு காரியமாக வேண்டும். அதற்காகவே யாம் உன்னை இங்கே அழைத்தோம்!!!

தேவதத்தன்: கட்டளையிடுங்கள் ஸ்வாமி

ஈசன்: அதோ பார்...
என் பக்தன் ஈசானபட்டன் என்னை தேடி ஒரு வாரமாக அன்ன ஆகாரமில்லாமல் காட்டில் அலைந்து கொண்டிருக்கிறான். நீ அவன் முன் புலியாக தோன்றி அவனை அதோ அந்த காவிரி கரையை நோக்கி வர வைக்க வேண்டும். அங்கே அவன் தானாக எம்மை சந்திப்பான். அப்போது நீ மறைந்துவிட வேண்டும். புரிகிறதா?

தேவதத்தன்: நன்றாக புரிகிறது ஸ்வாமி.. இதோ புறப்படுகிறேன்.

புலியாக மாறிய தேவதத்தன், ஈசானபட்டரை துறத்த ஆரம்பித்தான். பசியால் உடல் இளைத்தாலும், ஈசன் கட்டளையிட்ட பணியை முடிக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் எழ, உயிர் பிழைக்க வேகமாக ஓடினார் ஈசானப்பட்டர். திடீரென அவர் கால் ஒரு கல்லில் (சிவலிங்கம்) தடுக்கிவிட கீழே விழுந்தார் ஈசானப்பட்டர். புலியாக வந்த தேவதத்தன் தன்னை மறந்து ஈசானபட்டர் மேல் பாய்ந்தான். ஈசானபட்டர் மேல் புலி நகங்கள் பட உதிரம் எட்டி பார்த்தது. தன் பக்தனின் உடலிலிருந்து வந்த உதிரம் தரையில் வீழ்வதற்குள் லிங்கத்திலிருந்து வெளிப்பட்ட ஈசன் புலியின் மேல் தன்னுடைய சூலத்தை பாய்ச்சினார். தேவதத்தன் தன் சுய உருவை அடைந்து அங்கே நிகழ்ந்ததை உணர்ந்து அதிர்ச்சிக்குள்ளானான்.

ஈசன்: தேவதத்தா! என் பக்தனை கொல்ல உனக்கு எவ்வளவு துணிச்சல். அவன் இரத்தம் சிந்த காரணமான நீ இந்த பூவுலகில் மனிதனாக பிறக்கக்கடவாய்!

தேவதத்தன்: ஸ்மாமி! என்னை மன்னித்தருளுங்கள். புலியாக உருவெடுத்தப்பின் நான் யாரென்பதையே மறந்துவிட்டேன். புலியின் குணங்கள் முழுதும் பெற்றதால் செய்வதறியாமல் தவறிழைத்துவிட்டேன். மன்னித்தருளுங்கள் ஸ்மாமி. இந்த ஏழைக்கு இரக்கம் காட்டுங்கள்.

ஈசன்: தேவதத்தா! நீ செய்த பாவத்திற்கு பலனை அனுபவித்தே ஆக வேண்டும்.

ஈசனப்பட்டரின் காயங்கள் மறைந்தன. அவருக்கு அருள் புரிந்துவிட்டு ஈசன் மறைந்தார்.

..................................

பார்வதி: ஸ்மாமி! இது என்ன அநியாயம்? உங்களுக்கு உதவ வந்த தேவதத்தனுக்கு இப்படி ஒரு அநீதி இழைத்துவிட்டீர்களே!

ஈசன்: உமா! நான் யாருக்கும் என்றும் அநீதி இழைப்பதில்லை. தேவதத்தனின் புகழை பரப்பவே யாம் இதை செய்தோம். புலியாக மாறிய அவன் புலியாகவே ஆனான். நடிப்பில் அவனை மிஞ்ச யாருமில்லை. பூமியில் பிறக்கும் அவன் மக்களை தன் நடிப்பால் மகிழ்விப்பான். நடிப்பு கலையை உலகுக்கு சொல்லி தருவான். என் திருவிளையாடலைக்கூட மக்களுக்கு நடித்து காட்டுவான். அவனே நடிப்புக் கடவுளாவான்... ஆமாம் அவனே நடிப்புக் கடவுள்.

(வரும் ஜீலை 21 நடிப்புக் கடவுளின் நினைவு தினம்... அதை முன்னிட்டு எழுதிய பதிவு)







சில காட்சிகள்








Wednesday, July 11, 2007

H-4

"ஆன் சைட்ல இருந்தா என்னுமோ வானத்துல இருந்து குதிச்ச மாதிரி நினைச்சிக்கிறானுங்க. இவனுங்க மட்டும் தப்பே செய்யாத மாதிரி" பொருமி கொண்டிருந்தாள் சங்கீதா.

"ஏன் சங்கி, என்னாச்சி?"

"நேத்து அனுப்பன டிஃபக்ட் லிஸ்ட்ல ஒண்ணு மிஸ் பண்ணிட்டேன். அதுக்கு என்னனா போன் பண்ணி கத்தறான் அந்த கார்த்தி. அவன் இதுவரைக்கும் எதுவுமே மிஸ் பண்ணாத மாதிரி. போன வாரம் கூட அவன் அனுப்பன மெயில்ல ஒரு டிஃபக்ட் ஸ்டேடஸ் சொல்லாம விட்டுட்டான். நான் தான் அது மறுபடியும் டெஸ்ட் பண்ணி ஸ்டேடஸ் தெரிஞ்சிக்கிட்டேன். நான் என்ன இப்படியா சத்தம் போட்டேன்" படபடப்பாக சொல்லிக்கொண்டிருந்தாள் சங்கீதா.

"கூல் சங்கி. அவன் அங்க க்ளைண்ட்கிட்ட ஏதாவது திட்டு வாங்கியிருப்பான். அதான் கொஞ்சம் டென்ஷனாகியிருப்பான். நீ ஃபீல் பண்ணாத. அவன்கிட்ட நான் பேசிக்கிறேன்" அவளை சமாதானப்படுத்தினான் ஆனந்த்.

ஆனந்த் ஆன்சைட்டிலிருந்து வந்து ஒரு மாதமாகிறது. சங்கீதா இரண்டு வருடமாக ஆறு ப்ராஜக்ட்கள் மாறி இந்த ப்ராஜக்ட்டுக்கு வந்து மூன்று மாதங்களாகிறது. அவளுக்கு போன மாதம் தான் H1 விசா கிடைத்தது. எந்த ப்ராஜக்டிற்கு பறக்கலாம் என்று கனவு கண்டு கொண்டிருந்தாள்.

"ஏன் ஆனந்த். அவன் போய் ஒன்றரை வருஷமாச்சி. நீ போய் ஆறு மாசம்தான் ஆச்சு. அவன் தானே நியாயமா வந்திருக்கனும். அப்பறம் ஏன் நீ வந்த? அவன்கிட்ட சண்டை போட்டிருக்கலாமே"

"அவன் ரிசோர்ஸ் குறைக்க போறாங்கனு தெரிஞ்சவுடனே, மேனஜருக்கு போன் பண்ணி, இந்தியா அனுப்பறதா இருந்தா நான் இங்கயே வேற கம்பெனி மாறிடுவேனு சொன்னான். அவரும் அதுக்கு பயந்து என்னை அனுப்பிட்டாரு"

"சீப் ஃபெலோ. நீயும் அதையே சொல்ல வேண்டியது தானே?"

"அவனுக்கு க்ளைண்ட் கிட்டயும் நல்ல பேர் இருக்கு. அதான் நான் எதுவும் பண்ண முடியல. மோர் ஓவர் என்னை 3 மாசத்துல வேற ப்ராஜக்ட்க்கு அனுப்பறனு சொல்லிதான் அனுப்பனாரு. எப்படியும் அடுத்த மாசம் ட்ரேவல் பண்ணுவேன்"

அவளுக்கு ஏனோ கார்த்திக் மேல் வெறுப்பு அதிகமாகி கொண்டே போனது.

திடீரென்று ஆனந்திற்கு டைபாய்ட் வந்து அவன் சொந்த ஊருக்கு சென்றுவிட்டான். சரியாக அந்த சமயத்தில் மேனஜர் சங்கீதாவை அழைத்தார்.

"சங்கீதா, நம்ம ப்ராஜக்ட்லயே புது மாட்யூலை கவனிக்க இன்னோரு ஆள் ஆன்சைட்ல இருந்தா நல்லா இருக்கும்னு க்ளைண்ட் ஃபீல் பண்றாங்க. இந்த வீக் எண்ட் நீ ட்ரேவல் பண்ண வேண்டியிருக்கும். ரெடியாயிக்கோ" தீர்க்கமாக சொல்லி முடித்தார்

"இன்னும் நாலு நாள்தான் இருக்கு. அதுக்குள்ள எப்படி ரெடியாக முடியும்? அடுத்த வாரம் போகவா?" கவலையாக கேட்டாள் சங்கீதா.

"அடுத்த வாரம் போற மாதிரி இருந்தா ஆனந்த்தான் ட்ராவல் பண்ணியிருப்பான். அர்ஜெண்ட்னு தான் உன்னை கிளம்ப சொல்றேன். ஈவனிங் சீக்கிரம் கிளம்பி போயிக்கோ. வெள்ளிக்கிழமை லீப் போட்டுக்கோ. திங்கள் இல்லைனா செவ்வாய்க்கிழமை நீ அங்க ரிப்போர்ட் பண்ணனும். புரியுதா?" கண்டிப்புடன் சொன்னார் மேனஜர்.

தயங்கியவாறே அங்கிருந்து சென்றாள் சங்கீதா. அந்த நான்கு நாட்களிலும் வேகமாக தயாரானாள் சங்கீதா. அவளுக்கு Air Franceல் டிக்கட் புக் செய்திருந்தார்கள். சென்னையிலிருந்து பாரிஸ் அங்கிருந்து நியூ ஜெர்ஸி அங்கிருந்து மேன்சிஸ்டர். முதல் முறையாக ஏரோப்ளேனில் செல்வதில் ஒரு வித மகிழ்ச்சி இருந்தாலும் இத்தனை இடங்களில் மாறி செல்வதாலும், தனி ஆளாக செல்வதாலும் ஒரு வித பயமே இருந்தது.

ஒரு வித பயத்துடன் கார்த்திக்கிற்கு போன் செய்தாள்.

"ஹலோ, கார்த்திக் ஹியர்"

"கார்த்திக், நான் சங்கீதா"

"சொல்லுங்க. எப்ப வறீங்க?"

"நான் சண்டே ராத்திரி ஏழு மணிக்கு வறேன்"

"ஹோட்டல் புக் பண்ணியாச்சா?"

"ஹிம்... ரெண்டு நாளைக்கு பண்ணிருக்கேன்"

"குட். அதுக்குள்ள இங்க அப்பார்ட்மெண்ட் பார்த்துடலாம்."

"ஹிம்... ஏற்போர்ட்ல இருந்து ஹோட்டலுக்கு எப்படி வறதுனுதான் புரியல"

"ஏற்போர்ட்ல டேக்ஸி இருக்கும். எதுக்கும் கைல டைரக்ஷன்ஸ் கொண்டு வாங்க. யாஹூ மேப்ல டைரக்ஷன்ஸ் பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க. அப்படியே திங்கக்கிழமை காலைல டேக்ஸி பிடிச்சி ஆபிஸ் வந்து எனக்கு போன் பண்ணுங்க. சரியா?"

அவனை ஏற்போர்ட்டிற்கு வர சொல்லலாம் என்று அவள் நினைத்திருந்தாள். அவனுடைய இந்த பேச்சால் அவன் மேலிருந்த வெறுப்பு இன்னும் கூடியது.

"சரிங்க. திங்கக்கிழமை பார்க்கலாம்" சொல்லிவிட்டு போனை வைத்து விட்டாள்.

பெற்றோர்கள் வழியனுப்ப ஒரு வழியாக ஃபிளைட் ஏறினாள். மனதிற்குள் ஒரு பயம் இருந்து கொண்டே இருந்தது. நல்ல படியாக நியூ ஜெர்ஸி வந்து சேர்ந்தாள். இமிக்ரேஷன் செக் எல்லாம் நல்லபடியாக முடிந்தது. ஆனால் மென்சிஸ்டர் செல்லும் விமானம் தாமதமாகிக்கொண்டே போனது. 5 மணிக்கு கிளம்ப வேண்டிய விமானம் பதினோரு மணிக்குத்தான் கிளம்பும் என்று அறிவிப்பு பலகையில் எழுதியிருந்ததை பார்த்ததும் அவளுக்கு மயக்கமே வந்துவிட்டது...

கார்த்திக்கிற்கு போன் செய்யலாமா என்று யோசித்தாள். அவனுக்கு போன் செய்வதைவிட தற்கொலை செய்வதே மேல் என்று அமைதியாக இருந்துவிட்டாள். ஆனால் உள்ளக்குள் ஒரு வித பயம் இருந்து கொண்டேயிருந்தது. அவனை நன்றாக சபித்தாள். அவன் நிச்சயம் ஒரு சைக்கோவாத்தான் இருக்க வேண்டும் என்கிற முடிவுக்கு வந்தாள். அங்கே அவள் அமர்ந்திருந்த 6 மணி நேரமும் அவனை திட்டிக்கொண்டேயிருந்தாள்.

மேன்சிஸ்டரில் அவள் இறங்கும் போது இரவு ஒரு மணி ஆகியிருந்தது. பேக்கேஜிக்காக காத்திருந்தாள். அவள் பின்னாலிருந்து யாரோ அவளை அழைப்பதை போலிருந்தது.

"மிஸ்.சங்கீதா?"

திரும்பி பார்த்தாள்.

"யெஸ்"

"ஐ அம் கார்த்திக்"

அவள் கண்கள் ஆச்சர்யத்தால் விரிந்ததை பார்த்தான். அவள் முகத்திலிருந்தே அவள் மனத்தில் நினைப்பதை புரிந்து கொள்ள முடியும் என்று அவனுக்கு தோன்றியது.

"நீங்க எப்படி இங்க வந்தீங்க?"

"உங்க ஐட்டினரி என்கிட்ட இருந்துச்சி. சரி தனியா வரிங்களேனு செக் பண்ணீட்டே இருந்தேன். ப்ளைட் டிலேனு தெரிஞ்சிது. இராத்திரியாச்சே கஷ்டப்படுவீங்களேனு வந்துட்டேன்"

"ரொம்ப தேங்க்ஸ்"

"நோ ப்ராப்ளம்"

அவள் பேக்கேஜ் சரியாக வந்து சேர்ந்தது. அதை எடுக்க அவளுக்கு உதவினான். ஒரு வழியாக அவள் பேக்கேஜை காரில் போட்டு வண்டியை ஸ்டார்ட் செய்தான்.

"ட்ரெவல் எல்லாம் எப்படி இருந்துச்சி?"

"நல்லா இருந்துச்சு. ஆனா 6 மணி நேர டிலே தான் கொடுமை"

"நீங்க அழகா பாஸ்டனே வந்திருக்கலாம். ஒரு முப்பது நிமிஷம் ட்ரேவல் தான் அதிகமாயிருக்கும்"

"ஆனந்த் தான் எனக்கு இந்த ஏர்போர்ட் சொன்னான்"

"ஒரே ஸ்டேட்னு சொல்லியிருக்கலாம். சரி ஃபீல் பண்ணாதீங்க. நாளைக்கு ரெஸ்ட் எடுத்துட்டு செவ்வாய்க்கிழமை வந்தா போதும்"

"இல்லைங்க. செவ்வாய்க்கிழமை வேண்டாம். நாளைக்கே வந்துடறேன். அப்பறம் நான் தான் சங்கீதானு எப்படி கண்டுபிடிச்சீங்க?"

"ப்ராஜக்ட் பார்ட்டி டீம் போட்டோவை ஆனந்த் அனுப்பி வைச்சான். அதுல இருந்து தெரிஞ்சிக்கிட்டேன்."

"பரவாயில்லை. நானும் உங்க போட்டோவை பார்த்திருக்கேன். நீங்க டூர் போன போட்டோவெல்லாம் ஆனந்த் காண்பிச்சிருக்காரு"

30 நிமிட பயணத்தில் அவள் ஹோட்டல் வந்தது. பேட்டியை கொண்டு போய் ரூமில் வைத்துவிட்டு வந்தான்.

"நாளைக்கு காலைல கண்டிப்பா ஆபிஸ் வரீங்களா?"

"ஆமாங்க. செவ்வாய்க்கிழமைல எதுவும் ஆரம்பிக்க கூடாதுனு எங்க அம்மா சொல்லுவாங்க. நான் நாளைக்கே வரேன்".

அவள் சொல்லியதை கேட்டு அவன் கண்கள் கலங்கியது.

"சரி நாளைக்கு எட்டு மணிக்கு ரெடியாகிடுங்க. நான் வரேன்" சொல்லிவிட்டு வேகமாக அங்கிருந்து நகர்ந்தான்.

அவளுக்கு அவன் நடத்தை விநோதமாக இருந்தது. அடுத்த நாள் சரியாக எட்டு மணிக்கெல்லாம் வந்து அவளை ஆலுவலகத்திற்கு அழைத்து சென்றான். இரண்டு நாட்களில் அவளுக்கு தங்குவதற்கு ஒரு வீடும் ஏற்பாடு செய்து கொடுத்து அவளுக்கு தேவையானதை வாங்க உதவினான். அதை போலவே வேலையிலும் அவளுக்கு தேவையான உதவிகளை செய்தான்.

இந்தியாவிலிருந்த போது அவளுக்கு அவன் மேலிருந்த எண்ணம் லேசாக மாற துவங்கியது. ஒரு வாரம் சென்ற நிலையில்

"ஹேய் என்னாச்சி ஏன் அழுவற?"

"ஒண்ணுமில்லை" சொல்லிக்கொண்டே கண்களை துடைத்து கொண்டிருந்தாள்.

"என்கிட்ட சொல்லனும்னு தோனிச்சினா சொல்லு. இல்லை லீவ் போட்டு வீட்ல போய் இரு. ஆபிஸ்ல உக்கார்ந்து அழுதா எல்லாரும் ஒரு மாதிரி பார்ப்பாங்க"

"சரி. நான் வீட்டுக்கு கிளம்பறேன். என்னால இங்க உட்கார்ந்திருக்க முடியாது"

"நான் வேணா வந்துவிடட்டுமா?"

"இல்லை நான் டேக்ஸி பிடிச்சி போயிடறேன்"

"இல்லை.. நான் வந்து விட்டுட்டு வறேன். வா"

அவளிடம் சொல்லிவிட்டு க்ளைண்ட் மேனஜரிடம் சென்று சங்கீதாவிற்கு உடல் நிலை சரியில்லை அதனால் வீட்டில் விட போகிறேன் என்று சொல்லிவிட்டு அவளை அழைத்து சென்றான்.

காரில் அழுது கொண்டே வந்தாள்.

"சங்கீதா. இங்க பாரு. இப்படி நீ அழுதுக்கிட்டே வந்தா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. ப்ளீஸ் என்னனு எனக்கு சொல்லு"

"எங்க அப்பாக்கு உடம்பு சரியில்லையாம். ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணியிருக்காங்க. நான் இந்தியா போகனும்"

"என்ன இந்தியா போகனுமா? உடம்புக்கு என்னனு சொல்லு. பார்த்துட்டு அப்பறம் போகலாம்"

"ஹார்ட்ல ஏதோ பிரச்சனையாம். உடனே ஆப்பரேஷன் பண்ணனும்னு சொல்றாங்க. அதனால நான் உடனே ஊருக்கு போகனும் கார்த்திக். நான் எங்க வீட்டுக்கு ஒரே பொண்ணு"

"சங்கீதா. உங்க அப்ப இப்ப எந்த ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணியிருக்காங்க"

"கொயம்பத்தூர் ராமகிருஷ்ணா ஹாஸ்பிட்டல்"

"அட்மிட் பண்ணிட்டாங்களா?"

"பண்ணியாச்சி. எங்க சித்தப்பாதான் கூட இருந்து எல்லாம் பார்த்துக்கறாரு. எப்படியும் செலவு 3-4 லட்சமாவது ஆகுமாம். நான் போய் எங்க காட்ட விக்க கையெழுத்து போடனும். நான் அங்க இருந்தாதான் அம்மாக்கும் சரியா இருக்கும். நான் இன்னைக்கே புறப்பட முடியுமா?"

"ஒரு நிமிஷம் இரு சங்கீதா"

அவள் அப்பார்ட்மெண்டில் காரை பார்க் செய்தான் கார்த்திக்.

அவன் செல்போனை எடுத்து இந்தியாவிலிருக்கும் அவன் மாமாவிற்கு போன் செய்தான்

"ஹலோ மாமா, நான் கார்த்தி பேசறேன்"

மறுமுனையிலிருந்து பேசியவரின் குரலும் அவள் காதில் விழுந்தது

"கார்த்திக், என்ன இந்நேரத்தில போன் "

"மாமா, நீ எங்க எங்க இருக்கீங்க?"

"நான் இப்ப தான் வீட்டுக்கு வந்துட்டு இருக்கேன்"

"மாமா ராமகிருஷ்ணால டாக்டர்ஸ் யாராவது தெரியுமா?"

"ஏன் என்னாச்சி? நானே அங்க பீடியாட்ரிக்ஸ்க்கு சர்வீஸ் பண்ணிட்டு தான் இருக்கேன்"

"இங்க என் ஃபிரெண்டோட அப்பாவுக்கு ஹார்ட்ல ப்ராப்ளம்னு அங்க சேர்த்திருக்காங்க. நீங்க உடனே பார்த்து ஸ்டேடஸ் சொல்ல முடியுமா?"

"ரொம்ப அர்ஜெண்டாப்பா? நான் வீட்டுக்கு பக்கத்துல போயிட்டேன்"

"மாமா, ரொம்ப அர்ஜெண்ட். அதுக்கேத்தா மாதிரி தான் அவுங்களுக்கு இங்க டிக்கெட் புக் பண்ணனும். நீங்க நேர்ல போய் பார்த்து சொன்னா நல்லா இருக்கும்"

"சரி டீட்டய்ல்ஸ் சொல்லுப்பா. நான் பார்த்து சொல்றேன்"

அவன் அவரை பற்றி எல்லாவற்றையும் சொல்ல அவர் குறித்து கொண்டார்.

"இன்னும் 30 நிமிஷம் கழிச்சி பண்ணுப்பா. நான் சொல்றேன். "

"சரி மாமா"

போனை வைத்தான்.

"சங்கீதா டோண்ட் வொரி. அந்த மாமா ரொம்ப நல்ல டைப். சீக்கிரமா பார்த்து எல்லாத்தையும் சொல்லுவாரு. இன்னைக்கு நீ கிளம்பனும்னா கஷ்டம். என்ன ஏதுனு விசாரிச்சி அதுக்கேத்த மாதிரி ப்ளான் பண்ணலாம். நீ அழாம இரு. அதுக்குள்ள ஒரு காபி குடிச்சிட்டு வந்துடலாம்" சொல்லிவிட்டு வண்டியை ஸ்டார்பக்ஸிற்கு விட்டான்.

அவள் எதுவும் பேசாமல் அழுது கொண்டே வந்தாள். சரியாக அரை மணி நேரத்திற்கு பிறகு அவளை காரில் அமர வைத்துவிட்டு வெளியே வந்து மாமாவிற்கு போன் செய்தான்.

"மாமா, கார்த்தி பேசறேன். என்ன ஸ்டேடஸ்"

" என் ஃபிரெண்ட் ராமமூர்த்தி தான் இந்த கேஸ் பார்த்துக்கறான். பெரிய ப்ராப்ளம் இல்லை. அப்பரேஷன் பண்ணா சரியாகிடும். எனக்கு தெரிஞ்சி லாஸ்ட் ஒன் இயர்ல எதுவுமே ஃபெயிலரானதே இல்லை. சோ அவுங்களை வருத்தப்பட வேண்டாம்னு சொல்லு. ஆப்பரேஷன் நாளைக்கு காலைல வெச்சிருக்காங்க. நான் பார்த்துக்கறேன். எனி திங் எல்ஸ்"

"மாமா, அவுங்க கைல காசு எவ்வளவு இருக்குனு தெரியல. சோ நான் உங்ககிட்ட இடம் வாங்க கொடுத்த காசை எடுத்து ஆப்பரேஷனுக்கு கொடுங்க. நான் மிச்சத்தை உங்களுக்கு காலைல பேசறேன்" சொல்லிவிட்டு போனை வைத்தான்.

காருக்குள் வந்து அவளிடம் பேச ஆரம்பித்தான்.

"சங்கீதா, உங்க அப்பாக்கு எந்த ப்ராப்ளமும் இல்லை. நாளைக்கு காலைல ஆப்பரேஷனாம். லாஸ்ட் ஒன் இயர்ல அந்த ஆப்பரேஷன் சக்ஸஸ் ரேட் 100%. சோ யூ டோண்ட் நீட் டு வொரி. எங்க மாமா எல்லாத்தையும் பார்த்துக்கறனு சொல்லிட்டாரு. ஆப்பரேஷன் பண்ண போறது கூட அவர் ஃபிரெண்ட் தான்"

"ஹிம்ம்ம். இருந்தாலும் நான் ஊருக்கு போகனும்னு பார்க்கிறேன். எங்க அப்பாக்கு உடம்பு சரியில்லாதப்ப நான் அவர் கூட இருக்கறது தான் சரி"

"சங்கீதா, நீ இப்ப ஊருக்கு போனா திரும்ப இங்க வர சான்ஸ் கிடைக்குமானு சொல்ல முடியாது. மோர் ஓவர் பணம் பத்தியும் நீ பயப்பட வேண்டாம். எங்க மாமா கொடுத்துடறேனு சொல்லிட்டாரு. என் காசு அவர்ட நிறைய இருக்கு. நீ எனக்கு பொறுமையா கொடுத்தா போதும். இப்ப வீட்ல இருந்தா நீ கண்டதையும் நினைப்ப. ஆபிஸ் போகலாம். நாளைக்கு ஆப்பரேஷன் முடிஞ்சதுக்கப்பறம் அம்மாட்ட பேசி முடிவெடு. இப்ப வா போகலாம்" சொல்லிவிட்டு அவளை ஆபிஸிற்கு கூட்டி சென்றான்.

அவளுக்கு அலுவலகத்தில் வேலையே ஓடவில்லை. அவனும் அவளுக்கு நிறைய வேலைகளை கொடுத்து அவளை மறக்க வைக்க முயற்சி செய்து கொண்டிருந்தான்.

அடுத்த நாள் காலை அவள் அம்மாவிற்கு போன் செய்து அப்பாவின் நிலையை அறிந்து கொண்டாள் சங்கீதா. இன்னும் ஒரு வாரம் ஆஸ்பிட்டலில் இருக்க வேண்டுமென்றும், எந்த பிரச்சனையும் இல்லை. அதனால் அவள் வர தேவையில்லை என்று அவள் அம்மா தெரிவித்தார். கார்த்தியின் மாமாவால் மருத்துவமனையில் அவர்களுக்கு எல்லா வேலைகளும் சுலபத்தில் முடிகிறது என்று கூறினாள். சங்கீதா இதனால் ஓரளவு திருப்தியடைந்தாள்.

கார்த்தியும் அவன் மாமாவிடம் பேசி அவர்களுக்கு தேவையானவற்றை செய்து தர சொல்லியிருந்தான். மேலும் அவளுடைய தந்தையின் உடல் நிலையை பற்றியும் தெரிந்து வைத்திருந்தான். அவளுக்கு தினமும் ஆறுதல் சொல்லி அவள் மகிழ்ச்சியாக இருக்க உதவியாக இருந்தான்.
மூன்று மாதம் ஓடியதே இருவருக்கும் தெரியவில்லை. தினமும் அவளை அலுவலகத்திற்கு அழைத்து வருவது, வீட்டுக்கு அழைத்து செல்வது, ஷாப்பிங் செல்வது என்று அனைத்திற்கும் உதவியாக இருந்தான்.

"கார்த்தி, இன்னைக்கு உனக்கு கடைசியா கொடுக்க வேண்டிய ரெண்டாயிரம் டாலரும் அனுப்பிட்டேன். நீ மட்டும் அப்ப எனக்கு ஹெல்ப் பண்ணலைனா என் நிலைமை என்ன ஆகியிருக்கும்னே சொல்ல முடியாது"

"இதுல என்ன இருக்கு. ஊர்ல இருந்து ரொம்ப தூரம் வந்திருக்கோம். ஒருத்தருக்கு ஒருத்தர் உதவலனா நல்லா இருக்காதில்லை"

"எனக்கு என்ன சொல்றதுனே தெரியல கார்த்தி. உன்னை பத்தி ஆஃப்-ஷோர்ல எல்லாரும் எவ்வளவு தப்பா நினைச்சிட்டு இருக்காங்க தெரியுமா? ஆனா நீ அதுக்கெல்லாம் அப்படியே ஆப்போசிட்டா இருக்க"

"தெரியும். ஆனந்த் இந்தியா போக நான் தான் காரணம். நாளைக்கே இங்க ஒரு ரிசோர்ஸ்தான் இருக்கனும்னு சொன்னா, ஒண்ணு நான் கம்பெனி மாறிடுவேன், இல்லை உன்னை அனுப்ப சொல்லி மேனஜருக்கு போன் பண்ணி சொல்லிடுவேன்"

"ஏன் இந்தியா உனக்கு பிடிக்காதா? ஏன் இப்படி இருக்க?"

"ஏனோ இந்தியால ஒர்க் பண்றது பிடிக்கல. அங்க ஒர்க் கல்ச்சரும் சரியில்லை. ரொம்ப வேலை அதிகம். அதான்"

"நீ என்னுமோ பொய் சொல்ற மாதிரி இருக்கு கார்த்தி. என்கிட்ட நீ எதையோ மறைக்கிற. விருப்பம் இல்லைனா விட்டுடு"

"அப்படியெல்லாம் இல்லை"

"நீ என்னை உன் ஃபிரெண்டா நினைச்சா சொல்லு. இல்லைனா வேணாம்"

"அப்பறமா சொல்றேன். இப்ப வேண்டாம்"

"சரிவிடு. உனக்கு எப்ப தோணுதோ சொல்லு"

"ஓகே"

இரண்டு மாதங்கள் ஓடிய நிலையில் கார்த்திக்கிற்கு திடிரென்று உடல்நிலை சரியில்லாமல் போனது. சங்கீதா அவனுடனிருந்து அவனுக்கு தேவையானதையெல்லாம் செய்துவிட்டு ஆபிஸ் சென்றாள். அடுத்த நாள் அவன் அலுலகலம் சென்ற போது அங்கே அவனுக்கு ஒரு இடி காத்திருந்தது.

கார்த்தியை அவன் கம்பெனி மேனஜர் அழைத்து தனியாக பேசினார்.

"கார்த்திக் மறுபடியும் டீம் சைஸ் குறைக்க சொல்லி சொல்லிட்டாங்க. ஆக்சுவலா உன் மாட்யூல் தான் முடியுது. ஆனா நேத்து சங்கீதா எனக்கு போன் பண்ணி அவளுக்கு இங்க இருக்க பிடிக்கல. அதனால இந்தியா போகறேனு சொல்லிட்டா. சோ பிரச்சனையில்லை. நீ அவக்கிட்ட எல்லாத்தையும் கத்துக்கோ"

அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

"சரி... எப்ப கிளம்பனும்?"

"இந்த வீக் எண்ட்... இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு"

அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. மாலையில் வேலை முடிந்ததும் அவளை அழைத்து செல்லும் போது அவளிடம் பேச ஆரம்பித்தான்.

"சங்கீதா, ஏன் எங்கிட்ட இதை சொல்லல?"

"எதை?"

"நேத்து ஆபிஸ்ல நடந்ததை"

"என்ன நடந்தது?"

"இங்க இருக்க பிடிக்கல. அதனால இந்தியா போறனு மேனஜருக்கு போன் பண்ணி சொன்னியா?"

"ஆமாம்"

"ஏன்?"

"இந்த ப்ராஜக்ட்ல ஒருத்தர் தான் இருக்க முடியும்னு தெரிஞ்சிது. நீ போறதுக்கு கஷ்டப்படுவ. சரி உன்னை கஷ்டப்படுத்த வேண்டாமேனு தான் நான் கிளம்பறேன்"

"நான் இந்தியாக்கு ஏன் போக மறுக்கறனு உனக்கு தெரியுமா?"

"தெரியாது. ஆனா அதுல நியாயமான காரணம் ஏதாவது இருக்கனும். உனக்கு யார்கிட்டயும் சொல்ல விருப்பமில்லை. எனக்கு உன்னை கஷ்டப்படுத்த மனசில்லை"

"ஹிம்ம்ம்.. ஒரு காபி குடிக்கலாமா?"

"சரி"

காரை ஸ்டார்பக்ஸிற்கு விட்டான். இருவரும் ஆளுக்கு ஒரு லேட்டே வாங்கி கொண்டு எதிரெதிரில் அமர்ந்தனர்.

"எங்க அப்பா போலிஸ்ல வேலை பார்த்தாரு. ரொம்ப ஸ்ட்ரிக்ட். எங்க அம்மாதான் எனக்கு எல்லாமே. எங்க அண்ணனைவிட எங்க அம்மாக்கு என் மேல தான் பாசம் அதிகம். எங்க அண்ணன் எல்லார்டையும் போவான். நான் சின்ன வயசுல இருந்து யார்கிட்டயும் அதிகம் பேச மாட்டேன். அதனாலயே என் மேல அம்மா அதிகமா அக்கறை எடுத்துக்க வேண்டியதா இருந்துச்சு.

சின்ன வயசுல இருந்தே நான் வீட்ல இருந்தே படிச்சிட்டேன். காலேஜ்ல கூட எனக்கு அதிக ஃபிரெண்ட்ஸ் இல்லை. நான் வேலைக்கு சேர்ந்து ஒரு வருஷத்துலயே ஆன்சைட் வந்துச்சி. நான் எங்க அம்மாவைவிட்டுட்டு வர மாட்டேனு சொல்லிட்டேன். ஆனா அடுத்த ஒரு மாசத்துல எங்க அம்மா மாடில துணி காய வெச்சி எழுத்து வரும் போது கால் தடுக்கி கீழ விழுந்து தலைல அடி பட்டுடுச்சி. எவ்வளவோ முயற்சி செஞ்சும் காப்பாத்த முடியல.

அதுக்கப்பறம் எனக்கு அந்த வீட்ல எங்க பார்த்தாலும் எங்க அம்மாவாதான் தெரிஞ்சாங்க. சாப்பிடும் போது முன்னாடி உக்கார்ந்து "போதுமா கார்த்தி"னு கேக்கற மாதிரி இருக்கு. இராத்திரி கரெண்ட் ஆஃப் ஆன பக்கத்துல உக்கார்ந்து விசிறி விடற மாதிரி இருக்கு. என்னை சுத்தி எப்பவுமே அம்மா இருக்கற மாதிரியே இருக்கு. நானே தனியா பாதி நேரம் பேசிக்கிட்டேன். எனக்கு பைத்தியம்னு எங்க அண்ணி பயந்துட்டாங்க. அப்பதான் மறுபடியும் ஆன்சைட் வந்துச்சி"

ஒரு நிமிடம் நிறுத்தி ஆஸ்வாசப்படுத்தி கொண்டான்.

"உடனே புறப்பட்டு வந்துட்டேன். என்னால திரும்பி அங்க போயி எங்க அம்மா இல்லாத வீட்ல ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது. எங்க அப்பா இப்ப என் அண்ணன் பசங்களை பார்த்துட்டு அங்கயே இருக்காரு. ஆனா என்னால இருக்க முடியாது. என்னை எல்லாரும் திட்டியும் நான் இந்தியா போகாததுக்கு காரணம் இதுதான். இங்க நீ வந்ததுக்கப்பறம் தான் நான் ஓரளவு பழசை எல்லாம் மறக்க ஆரம்பிச்சேன். இப்ப நீயும் என்னை விட்டுட்டு போற"

"கார்த்தி எனக்கு என்ன சொல்றதுனே தெரியல. வேற வழியில்லை. நான் போயிதான் ஆகணும்."

"ஹிம்ம்ம்"

நான்கு கண்களும் கலங்கியிருந்தன...

ஒரு வழியாக சங்கீதா இந்தியா செல்ல தயாரானாள். சாக்லேட், அப்பா/அம்மாவிற்கு வாட்ச், மசாஜர், கேமரா, லேப்டாப் என கிடைத்ததை வாங்கினாள். கார்த்தி அவளை ஏற்போர்ட்டிற்கு வந்து அனுப்பி வைத்தான்.

ஒரு வாரம் லீவ் முடித்து திங்களன்று கார்த்திக்கிற்கு போன் செய்தாள் சங்கீதா.

"கார்த்தி ஹியர்"

"ஹே நான் சங்கீதா பேசறேன்"

"சொல்லு. ஊருக்கு போய் போன் பண்ண உனக்கு ஒரு வாரம் தான் எடுத்துச்சா?"

"இல்லை. நான் இப்ப தான் ஆபிஸ் வந்தேன். ஏன் நீ எனக்கு போன் பண்ண வேண்டியதுதானே?"

"உங்க வீட்டுக்கு போன் பண்ணா எப்படி ஃபீல் பண்ணுவாங்கனு தெரியல. அதான்.." இழுத்தான்

"அதெல்லாம் எதுவும் தப்பா நினைக்க மாட்டாங்க. அப்பறம் ஒரு குட் நியுஸ்."

"என்ன?"

"நான் திரும்ப அங்க வரலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்"

"வாவ். கிரேட். எந்த பிராஜக்ட்"

"புது பிராஜக்ட். ஆனா நீ தான் எனக்கு ஹெல்ப் பண்ணனும்"

"என்ன ஹெல்ப். சொல்லு கண்டிப்பா பண்ணறேன்"

"எனக்கு H1ல வர முடியாதுனு சொல்லிட்டாங்க. நீதான் H4ல கூப்பிட்டு போகனும். கூப்பிட்டுபோவியா?"

சரியாக இரண்டாவது மாதத்தில் H-4ல் பறந்தாள் சங்கீதா...

(முற்றும்...)

கீழ கும்மி இருக்கேனு கவலைப்படாம உங்க கருத்தை சொல்லிட்டு போங்க... கும்மிய பார்த்தா கதை ரொம்ப கேவலமா இருக்கானு ஒரு டவுட்