தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Friday, April 27, 2007

தமிழ்மணத்துக்கு நன்றி

முதல்ல தமிழ்மணத்துக்கு நன்றியை சொல்லிக்கறேன். எல்லாருக்கும் பிடிச்ச மாதிரி பண்ணிட்டீங்க. டிசைன் ரொம்ப நல்லா இருக்கு. 41க்கு மேல தனியா ஒரு tab கொடுத்தது சூப்பர் :-)

குறிப்பா நட்சத்திர பதிவுகளையும் அதே இடத்துல கொடுத்தது இன்னும் அருமை. இன்னும் நிறைய பேர் படிக்க வாய்ப்பு அதிகம்...

வாழ்த்துக்கள் + நன்றி.

Thursday, April 26, 2007

மொழி!!!

மொழி படம் நல்லா இருக்குதுனு ஃப்ரெண்டு ஒருத்தவன் ஃபோன் பண்ணி சொன்னான். சரி அப்படி என்னடா ஸ்பெஷல்னு கேட்டா படத்துல ரத்தமே இல்லைடானு சொன்னான். என்னது தமிழ் படத்துல ரத்த வாட இல்லாம இருக்கா? என்னடா ஆச்சுனு நானும் படம் பார்க்கலாம்னு முடிவெடுத்து ஒரு வழியா இன்னைக்கு பார்த்துட்டேன்.

பார்த்துட்டு யார பாராட்டறதுனு தெரியாம போன் பண்ணவனுக்கு முதல்ல நன்றி சொன்னேன். ஆனா முதல்ல பாராட்டப்பட வேண்டிய நபர் பிரகாஷ்ராஜ் தானுங்க. நடிகர் பிரகாஷ்ராஜ் அசத்தியிருந்தாலும் (இதெல்லாம் அவருக்கு ஜிஜிபி. பொம்மரில்லுல மனுசன் பொளந்து கட்டியிருப்பாரு) தயாரிப்பாளர் பிரகாஷ் ராஜிக்கு முதல் வாழ்த்துக்கள். இந்த மாதிரி படங்கள் அப்பப்ப வந்தா தான் நல்ல படங்களும் மக்கள் பார்ப்பாங்கனு ஒரு நம்பிக்கை மத்தவங்களுக்கும் வரும். அடுத்து இயக்குனர் ராதா மோகனுக்கு நன்றி சொல்லனும். படம் ரொம்ப அருமைங்க...

படத்துல கதைனு பார்த்தா பெருசா எதுவுமில்லாத மாதிரி தான் இருக்கு. காது கேட்காத, வாய் பேச முடியாத பெண்ணை காதலிக்கும் நாயகன் அவளுக்காக அவள் மொழியை (மொழினா பேசறது மட்டும்தானு நினைச்சிட்டு இருந்தேன். ஆனா தகவல் பரிமாற்றத்துக்கு உதவும் ஒரு கருவிதான் மொழினு புரிஞ்சிக்கிட்டேன்) கற்று கொண்டு அவளை கரம் பிடிப்பது தான் கதை. (நம்ம கொல்ட்டி கதையும் கிட்டதிட்ட இந்த மாதிரி தானே!)ஆனா இதை ரொம்பவே ரசிக்கும் படியா பண்ணியிருக்காங்க. அதுல எனக்கு ரொம்பவும் பிடிச்ச காட்சி, ஜோக்கு கற்பனையா ஒரு குரலை பிரித்திவிராஜ் நினைத்து கொள்ள, அதற்கு ஜோ கோபப்பட்டு எனக்கு குரல் தேவையில்லை, இந்த மாதிரி கற்பனை பண்றத நிறுத்துனு அவுங்க சொல்லும் போது அந்த செய்கைக்கும் அவர் குரல் கொடுத்து கற்பனை பண்ணுவாரு.உடனே நிறுத்துனு அவுங்க சொல்லிட்டு போகும் போது தான் அவர் ஜோ திட்டும் போதும் அதுக்கும் குரல் கொடுத்து ரசிச்சிட்டு இருந்தாருனு நானும் உணர்ந்தேன். இந்த காட்சி ரொம்ப பிடிச்சிருந்துச்சி.

அடுத்து அந்த இசையை அவர் உணரும் போது ஜோ கொடுத்த முகபாவனை. ரொம்பவே நல்லா பண்ணியிருந்தாங்க. சிவக்குமார் சார், நீங்க உங்க குடும்பத்துல இருந்து 2 நல்ல நடிகர்களை (கார்த்தி எப்படியும் கலக்குவார்னு ஒரு நம்பிக்கைதான்) தமிழ் உலகுக்கு கொடுத்தாலும், அவுங்க 2 பேரையும் தூக்கி சாப்பிடற (சூர்யா அண்ணா! நோ பீலிங்ஸ். சில சமயம் அண்ணி உங்களை மிஞ்சிடுவாங்க) ஒருத்தவங்களை வீட்டுக்குள்ள வெச்சிக்கிட்டீங்களே. கொஞ்சம் யோசிங்களேன்...

அடுத்து ப்ரித்திவிராஜ். மனுசன் ரொம்ப நல்லா நடிக்கறாருங்க. நகைச்சுவை காட்சிகளாகட்டும், சீரியஸ் காட்சிகளாகட்டும். ரெண்டுமே கலக்கியிருக்காரு. படத்துல இவரும் பேசாமலே நடிச்சிருந்தாலும் நமக்கு புரியும்னு சொல்ற அளவுக்கு எக்ஸ்பிரஷன் கொடுத்து நடிக்கறாரு.பேச்சுல மலையால வாடை தெரியுது. ஆனா அதுவும் நல்லா தான் இருக்கு. (கோவைல நிறைய மல்லுங்களோட பேசி அதுவும் நமக்கு பிடிச்சி போச்சி). இயக்குனருங்களே! ஒரு நல்ல நடிகர் (ஸ்மார்ட்டாவும் இருக்காரு) கிடைச்சிருக்காரு. சரியா பயன்படுத்திக்கோங்க. சிம்பு, ஸ்ரீகாந்த், SJ சூர்யா இவுங்களை எல்லாம் வெச்சி எடுக்கறதுக்கு தாராளமா இவரை வெச்சி படம் எடுக்கலாம். ஈடுபாடோட நடிக்கற மாதிரி ஒரு ஃபீலிங்.

பிரகாஷ்ராஜ் கேரக்டர் இல்லைனா படம் ஒரு 10 - 15 நிமிஷத்துக்கு மேல பார்க்கமுடியாதுங்க. படத்துக்கு அந்த கதாபாத்திரம் அவ்வளவு முக்கியம். இந்த மாதிரி சீரியஸ் கதைய அவர் காமெடியால கலக்கியிருக்காரு. வடிவேலு பாணில அடிவாங்கறதோ, விவேக் பாணில மெசேஜ் சொல்றதோ இல்லாம இருக்கறதே இவர் இந்த படத்துல பண்ண காமெடிக்கு ஒரு பெரிய ப்ளஸ். சொர்ணமால்யாவை சர்ச்ல அவர் ரெண்டு தடவை மடக்கி பேசறதும் ரொம்ப நல்லா இருந்துச்சு. அதுவும் நான் CBI, லைசன்ஸ் இருக்கானு கேக்கறது கலக்கல். சொர்ணமால்யா இனிமே தாராளமா சொல்லிக்கலாம் நானும் படத்துல நடிச்சிருக்கேனு.

பாஸ்கர் கதாபாத்திரமும், பிரம்மானந்த் கதாபாத்திரமும், சித்தி புகழ் பாட்டியும் நல்லா பண்ணியிருக்காங்க.

பிரகாஷ்ராஜ் சார், இனிமே KB மாதிரி பெரிய தலைங்களுக்கு எல்லாம் சான்சு கொடுக்காம இந்த மாதிரி புதுசா வரவங்கள ஊக்குவிங்க. ரொம்ப நாளைக்கு அப்பறம் ஒரு நல்ல படம் பார்த்த ஃபீலிங்.

Wednesday, April 18, 2007

வ வா ச போட்டி முடிவுகள்

நண்பர்களே!
வ வா ச போட்டி முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. யாரோ வேண்டுமென்றே ராயல் ராமின் பேரில் போலியாக பின்னூட்டம் போட்டு கொண்டிருக்கிறார்கள்...

ஏம்ப்பா இந்த போலியா பின்னூட்டம் போடற நேரத்துல ஏதாவது ஒரு போஸ்ட் எழுதி போட்டிக்கு அனுப்பலாம் இல்லை. எப்படியும் போட்டி முடிவுகளை பின்னூட்டம் போட்டா சொல்லுவோம். அதுக்கு ஒரு பதிவு கூடவா போட மாட்டோம்.

ராயலு டென்ஷனாகாம படுத்து தூங்குங்க...

Monday, April 16, 2007

மன்னிப்பு கடிதம்

அப்பாலஜி லெட்டர்

காலேஜ்ல ஏதாவது தப்பு பண்ணா ஆனா ஊனானு எழுத சொல்லிடுவானுங்க. ஆனா இத எழுதறதுக்கும் ஒரு திறமை வேண்டுங்க... நான் ஒரு ரெண்டு மூணு இடத்துல எழுதி கொடுத்திருக்கேன். ஆனா அத படிச்சா என்னதுக்கு இவன் எழுதி இருக்கானே தெரியாது.

எங்க காலேஜ் ஹாஸ்டல்ல சீட்டு விளையாடக்கூடாது. நீங்களே சொல்லுங்க சீட்டு விளையாடம ஒரு மனுசன் எப்படி காலேஜ் படிக்கிறது? இதுல நாம வேற சின்ன வயசுல (4வதுல கத்துக்கிட்டேன்) இருந்தே இந்த சீட்டு விளையாட்டுல கொஞ்சம் பெரிய ஆளு. காசு வெச்சி விளையாடினா ஏமாத்த மாட்டேன். மத்த படி சீட்டு விளையாடும் பொது ஏமாத்தம விளையாடினா அதுல ஒரு மதிப்பே இல்லை. எப்படி ஏமாத்தறதுனு பின்னால சொல்லி தறேன். இப்ப அதப்பத்தி சொல்ல போறதில்லை.

பொதுவா இந்த சீட்டு விளையாட்டு பரிட்சைக்கு முன்னால ஸ்டடி லீவ் அப்ப ரொம்ப பிரபலமா இருக்கும். அந்த மாதிரி நாங்க ஒரு நாள் ரொம்ப தீவிரமா விளையாடிக்கிட்டு இருந்தோம். ராத்திரி ஒரு ரெண்டு, மூணு மணி இருக்கும். எவனோ ஒரு நாதாரி ஏமாத்திட்டானு எல்லாரும் சத்தம் போட ஆரம்பிச்சிட்டோம். சத்தம் கேட்டு கீழ தூங்கிட்டு இருந்த வார்டன் எழுந்து நேரா ரூமுக்கு வந்துட்டாரு. அந்த ரூம்ல கிட்டதிட்ட ஒரு பத்து, பதினஞ்சு பேரு இருந்திருப்போம். (ஒரு ரூம்ல நாலு பேர் தான் இருக்கணும்)

அவர் வர நேரம் எல்லாம் சத்தம் போட்டு இருந்ததால யார் கைலயும் கார்ட்ஸ் இல்லை. ஆனா டெபில்ல ஃபுல்லா சீட்டு இருந்துச்சி. அவருக்கு தூக்கம் கலக்கம் வேற. நாங்க எல்லாம் அவர பார்த்து சைலண்ட் ஆகிட்டோம் (செகண்ட் இயர் படிச்சோம். அதனால வார்டனுக்கு கொஞ்சம் கொஞ்சம் மரியாதை கொடுப்போம்). எங்களுக்குள்ள நடந்த உரையாடல் இதோ

வார்டன் : என்னடா பண்ணிட்டு இருக்கீங்க???

நாங்க: சும்மா பேசிட்டு இருக்கோம் சார்.

வார்டன் : ஏன்டா டேபில் ஃபுல்லா சீட்டா இருக்குது. நீங்க சும்மா பேசிட்டு இருந்தீங்களா? யார் யார் விளையாடீனீங்க?

நாங்க: சார். யார் கைலயாவது சீட்டு இருக்கா? நீங்களே பாருங்க. எல்லாம் சும்மா தான் பேசிட்டு இருந்தோம்.

வார்டன் : அப்ப யாரும் சீட்டு விளையாடல?

நாங்க: இல்லை சார்... நிஜமா சும்மா தான் உக்கார்ந்திருந்தோம்...

வார்டன்: சரி எல்லாரும் அப்பாலஜி லெட்டர் எழுதி கொடுங்க.

நாங்க: சார். நாங்க எதுவுமே பண்ணல. அதுக்கு எதுக்கு அப்பாலஜி லெட்டர் எழுதி தரணும்

வார்டன்: சரி நீங்க என்ன பண்ணீங்களோ அத எழுதி கொடுங்க. இனிமே அந்த மாதிரி பண்ண மாட்டொம்னு எழுதி கொடுங்க. நாளைக்கு காலைல 8 மணிக்கு அப்பாலஜி லெட்டர் ரூம்ல இருக்கனும். இல்லைனா எல்லாரும் ஹாஸ்டல்ல இருந்து பத்து நாள் சஸ்பெண்ட் பண்ணிடுவோம்

இப்படி சொல்லிட்டு வேகமா போயிட்டாரு.

அடுத்த நாள் ஒரு பத்து மணிக்கா எல்லாத்தையும் கூப்பிட்டாரு.

வார்டன் : என்னடா இது லெட்டரு?

நான்: அப்பாலஜி லெட்டர் சார்.

வார்டன்: என்ன எழுதிருக்குனு ஒரு தடவை படி.

நான்: (லெட்டரின் தமிழாக்கம்)
ராத்திரி வார்டன் வரும் போது ரூம்ல சும்மா உக்கார்ந்திருந்தேன். இனிமே ராத்திரி அவர் வரும்போது ரூம்ல இருக்க மாட்டேன்.
இப்படிக்கு,
பாலாஜி

வார்டன்: ஏன்டா உன்னை என்ன எழுத சொன்னா நீ என்ன எழுதியிருக்க?

நான்: சார் நேத்து ராத்திரி நீங்க சொன்னததான் நாங்க எழுதியிருக்கோம்.

வார்டன்: ஏன்டா ஹாஸ்டல்ல சீட்டு விளையாடறதே தப்பு. அதுவும் ராத்திரி மூணு மணிக்கு பதினஞ்சு பேர் பக்கம் ஓரு ரூம்ல இருந்தீங்க. இது அடுத்த தப்பு. அப்பறம் உங்களுக்கு ரெண்டு ஃப்ளோர் கீழ இருக்கறவன் எழுந்திரிக்க அளவுக்கு சத்தம் போட்டது அடுத்த தப்பு. நான் கேட்டும் பொய் சொன்னது அடுத்த தப்பு. இவ்வளவு பண்ணதும் இல்லாம ராத்திரி மூனு மணிக்கு இனிமே ரூம்ல இருக்க மாட்டொம்னு எழுதி கொடுத்துருக்கீங்க. உங்களை என்ன பண்ண?

நான்: சார் நாங்க யாரும் விளையாடலனு அப்பவே சொன்னோம். நீங்க தான் நீங்க என்ன பண்ணீங்களோ அதை எழுதி இனிமே அப்படி பண்ண மாட்டொம்னு எழுதி தர சொன்னீங்க. நாங்க என்ன செய்யறது?

வார்டன்: டேய் ஸ்டடி ஹாலிடேஸ்லயாவது ஒழுங்கா படிங்கடா... போங்க. இனிமே இப்படி பண்ணாதீங்க...

ஒரு வழியா ஃபிரியா விட்டுட்டார்... இதே மாதிரி இண்டர்னல் டெஸ்ட்ல பிட் அடிச்சி மாட்டி ஒரு முறை எழுதி கொடுத்தது (அது இதவிட காமெடி). அப்பறம் மன்மத ராசா பாட்ட சத்தமா கம்பெனில ட்ரெயினிங்கப்ப வெச்சி எழுதி கொடுத்ததுனு நிறைய இருக்கு... பொறுமையா சொல்றேன்...

-------------------------------------------

மக்கா: சிரிச்சிட்டு அப்படியே போயிடாதீங்க. இதே மாதிரி சும்மா ஜாலியா (மொக்கையா இருக்குனு சொல்லிடாதீங்கப்பு) ஏதாவது எழுதி சங்கம் போட்டிக்கு அனுப்புங்க. பரிசு 1000 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள். சொக்கா எனக்கில்லை எனக்கில்லை...

Saturday, April 14, 2007

நல்ல தமிழ் பேர் சொல்லுங்கப்பா

நம்ம வலைப்பதிவை தொடர்ந்து படிக்கும் நண்பர் ஒருவருக்கு அழகான குட்டி தேவதை பிறந்திருக்கிறாள். அவளுக்கு அழகான தமிழ் பெயர் வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அது தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகளில் எழுதுவதற்கும் எளிமையாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அதுக்கு நம்ம தமிழ்மணத்துல இருக்குற நீங்க எல்லாம் நல்ல பேரா சொல்லனும்னு ஆசைப்படறேன்...

யார் சொல்ற பேர் செலக்ட் ஆகுதோ அவருக்கு ஒரு பட்டம் கொடுத்துடுவோம். அத வேற பதிவுல போடுவோம்...

ரெடி ஸ்டார்ட் தி மீசிக் (My friend - நாந்தான் ஃபர்ஸ்ட்னு எல்லாம் சொல்லக்கூடாது. அப்படி எல்லாம் பேர் வைக்க முடியாது. கோபி ரீப்பிட்டுனு போட்டுடாத)

நாகர்கோவில் - வலைப்பதிவர் சந்திப்பு

அன்பு வலைப்பதிவர்களுக்கு!
"சற்றுமுன்" திரு.சிறிலலெக்ஸ் அவர்கள் கைத்தொலைப்பேசியில் தொடர்புகொண்டு தற்பொழுது நாகர்கோவில் வந்திருப்பதாகவும், திரு.மா.சிவக்குமார் அவர்களையும் அழைத்துக்கொண்டு வருவதாகவும் மதியம் 1 மணியளவில் கலெக்டர் அலுவலகம் முன்(எப்போதும் இங்கு போராட்டங்கள் மட்டுமே நடக்கும்) சந்திப்பு நடத்தலாம் என்றும் தெரிவித்தார். நேரம் மிகவும் குறைவாக இருக்கின்றது! நாகர்கோவில் மற்றும் அதன் அருகில் இருக்கும் நண்பர்கள் சந்திப்பில் கலந்துகொள்ள வேண்டி இந்தப் பதிவு.

தொடர்புகொள்ள: சிறில் அலெக்ஸ் - (9444846025)அன்புடன்...
சரவணன்.

Friday, April 13, 2007

புத்தாண்டு சுடர்

சுடர் என் கைகளில் வந்த நாளன்று அதை கொடுத்தவர் யாரென்று எனக்கு தெரியாது. தெரிந்து கொள்ளவும் முயலவில்லை. ஆனால் அது தெரிந்து கொண்ட பொழுது மனம் கனக்கவே செய்தது. அவர் ஆன்மா சாந்தியடையவும், அவர் இழப்பை அவரது குடும்பம் தாங்கி கொள்ளவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொள்கிறேன்.

மகேந்திரன் என்னிடம் கேட்ட கேள்விகளுக்கு என்னளவிளான பதில்கள்...

1. திராவிடன் என்பவன் யார் என்ற உங்கள் நெடுநாள் சந்தேகம் தீர்ந்ததா?

இந்த கேள்விக்கு பதில் ஆம்/இல்லை. கேள்விகள் தான் நிறைய இருக்கு.
கேள்வி கேட்டாலே தப்பா நினைக்கறாங்கனு நான் அதிகமா கேக்கறதில்லை. இப்பவும் மனசுல இந்த கேள்விகள் எல்லாம் இருக்கு.
1. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா எல்லாம் திராவிட நாடுகளா?
2. அப்படி இருக்கும் பட்சத்தில் அவர்கள் ஏன் அவ்வாறு சொல்லி கொள்வதில்லை?
3. பிராமணர்கள் தான் ஆரியர்கள் என்னும் பட்சத்தில், வட இந்தியாவில் உள்ள பிராமணர் அல்லாத சமூகம் என்ன இனம்?

இன்றைய என்னுடைய புரிதல். பார்ப்பணியத்திற்கு (பிறப்பால் மட்டுமே தான் உயர்ந்தவன் என்று நினைக்கும் குணம். பிறாப்பாலே தனக்கு எல்லா தகுதிகளும் வந்துவிடுகிறது என்று நினைக்கும் அகம்பாவம், ஆணவம் நிறைந்த கூட்டத்திற்கு) எதிராக பெரியாரால் வளர்க்கப்பட்டதே திராவிடம்.
ரொம்ப ஆராய வேண்டாமேனு விட்டுட்டேன்.

-----------------------------------------------------------------------------------

2. அனானி கழக தோழர்களால் வலைப்பூ உலகம் ஏற்றம் அடைகிறதா இல்லையா?

செந்தழல் ரவி போஸ்டா இல்லை லக்கி லுக் போஸ்டானு ஞாபகம் இல்லை இந்த கமெண்டை ஒரு 3, 4 மாசத்துக்கு முன்னாடி பார்த்தேன்... பொன்ஸ் அக்காவை பாரதி கண்ட புதுமை பெண்ணு சொல்லி இருந்தாரு. அதுக்கு உடனே ஒரு அனானி "தலைவா நீ பாரதி கண்ட புதுமை பையன்"னு சொல்லி போட்டிருந்தாரு. இதை அடிக்கடி நினைச்சி சிரிச்சிக்குவேன். ரொம்ப சாதாரணமா ரவுஸ் விட்டிருந்தாரு ஒரு அனானி.

ப்ளாகர் எப்படி ஆரம்பிக்கறது, ஆரம்பிச்சி என்ன எழுதறதுனு தெரியாதவங்க அனானிமஸா பின்னூட்டம் போடறாங்க. அனானிமஸா இருக்கவங்க படிக்கக்கூடாதுனு சொல்லி சட்டம் போட்டா இங்க யாராவது எழுதுவாங்களா??? ப்ளாக் எழுதறவன் நம்மல பாராட்டி பின்னூட்டம் போட்டா அதுக்கு பல காரணம் இருக்கலாம். முக்கியமா அடுத்து நமக்கும் ஒரு பின்னூட்டம் இவன்கிட்ட இருந்து வரும்னு கூட இருக்கலாம். ஆனா அனானியா ஒருத்தர் போடும் போது அந்த மாதிரி எதுவும் சொல்ல முடியாது.

பிரச்சனை சில சமயம் அனானியா அசிங்கமா பின்னூட்டம் போடறதுதான். வலைப்பதிவுளையும் அசிங்கமா எழுதறவங்க இருக்காங்க. அவுங்களால எல்லா வலைப்பதிவையும் தடை செய்ய சொல்லலாமா? எனக்கு ப்ளாக் இல்லாதப்ப நானே அனானியா கமெண்ட் போட்டிருக்கேன். செல்வன் பதிவுகளில் போட்டிருக்கிறேன் (கதைக்கு தான்.. ஆனா அவர் அதை முடிக்கவே இல்லை :-(()

அனானி தோழர்கள் தான் வலைப்பூ உலகின் ஏற்றத்திற்கு பெரும் காரணம். இதை நான் முழுதும் நம்புகிறேன்.

-----------------------------------------------------------------------------------------

3.உங்களுக்கு நெருக்கமானவர் ஒரு போலி என்று அறிய வந்தால் உங்கள் நிலைப்பாடு என்ன ?

நான் கொஞ்சம் ஓட்ட வாய். யார் எது கேட்டாலும் மனசுல இருக்கறத சொல்லிடுவேன். அதனால என்கிட்ட யார் பேசினாலும் மத்தவங்களை பத்தி சொல்லிடுவேன். அப்படி என்கிட்ட இருந்து ஒரு இன்ஃபர்மேஷனை வாங்கி அவரை அசிங்கப்படுத்தினால் கண்டிப்பாக அவரை மன்னிக்க மாட்டேன். அடுத்து பேசவும் மாட்டேன். ரொம்ப ரொம்ப வருத்தப்படுவேன்.

என்கிட்ட இருந்து என்னை பற்றி இன்ஃபர்மேஷன் வாங்கிட்டு என்னை மட்டும் அசிங்கமா திட்டி எழுதினா ஏன்டா நாயே இப்படி பண்ணனு உரிமையா கேட்பேன். என்னை திட்றதுனா நீ பேசும் போதே திட்லாம்டா. தனியா வேற பேர்ல திட்டினா உன் மனசுக்கே பின்னாடி கஷ்டமா இருக்கும்டானு சொல்லுவேன். சண்டை போடறதுக்கு நான் எப்பவுமே ரெடி தான். நான் எந்த கருத்து சொன்னாலும் பொதுவா எனக்கும் ஜி.ராக்கும் சண்டை தான் வரும். இருந்தாலும் அவர் என்னுடைய ஒரு சிறந்த வழிக்காட்டி. அந்த மாதிரி ஜாலியாவே சண்டை போட்டுக்கலாம்டானு சொல்லுவேன்.

அவரே ஒரு பெயரில் என் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வேறு பெயரில் பலமாக எதிர்ப்பு தெரிவித்தால் (உனக்கு என்ன பெருசா கருத்து இருக்கு? ஆதரிக்கவும் சண்டை போடவும்னு சொல்லப்படாது) சூப்பர்டா மச்சி... கலக்கறனு சொல்லுவேன். சில சமயம் நானே என் கருத்துக்கு பலமான எதிரி. அதனால இது சாதரணம்னு விட்டுடுவேன்.

வேற யாரையாவது அசிங்கமா திட்டியோ இல்லை அவுங்க குடும்பத்தை பத்தி திட்டியோ எழுதினான்னா கண்டிப்பா அவன்ட பேசி அதை நீக்க சொல்லுவேன். கருத்தை கருத்தால் எதிர் கொள்ள வேண்டும்னு சொல்லுவேன். கோழைகள் தான் அந்த மாதிரி செய்வாங்க. வீரனா எழுந்து சண்டை போடுனு சொல்லுவேன். என்ன சொல்லியும் கேக்கலைனா போட வெண்டரு உன்கிட்ட இனி பேசவே போறதில்லைனு சொல்லி விலகிடுவேன். ஆனா அது கடைசி வரை முடியாத பட்சத்தில்...

---------------------------------------------------------------------------------------------

4.உயர்கல்வியில் இடஒதுக்கீடும் க்ரீமி லேயரும் எல்லோருக்கும் புரியும் விதமாக விளக்கவும்

ஆஹா... சொல்றேன்
முதலில் இட ஒதுக்கீடு எதுக்குனு என்னுடைய புரிதலை சொல்லிடறேன்...
இன்னைக்கு என்னதான் சாதி பார்க்க கூடாதுனு நம்ம சவுண்ட்விட்டாலும் நம்மலையும் அறியாம சாதி பார்க்கத்தான் செய்யறோம். ஒரு உதாரணத்திற்கு ஒரு X சாதில இருக்கறவங்களே அதிக அளவுல வக்கீலா இருக்காங்கனு வைங்க. ஒரு சமயமில்லனா ஒரு சமயத்துல அந்த`சாதிக்காரன் சாதாரணமா தப்பு பண்ணி சுலபமா தப்பிக்கலாம். தப்பிக்கலாம்னு சொல்றத விட அவனுக்கு செக்யுரிட்டி கொஞ்சம் அதிகம். அதே மாதிரி`டாக்டர், போலிஸ் இப்படி ஒவ்வொரு துறையும் சொல்லலாம்.

ஒரு ஊர்ல போலிஸ்காரர்களெல்லாம் ஒரே சாதியிலிருந்தால் அல்லது மேல் அதிகாரிகள் எல்லாம் ஒரே சாதியிலிருந்தால் மற்ற சாதியிலிருப்பவருக்கு நீதி கிடைப்பதில் பிரச்சனையிருக்கும்.

எல்லாருக்கும் மனசுல நம்ம சாதிக்காரனு ஒரு பாசம் இருக்கு. சிலர் இல்லைனு சொல்லலாம். ஆனா சுத்தி இருக்கவங்க அந்த மாதிரி சிந்திக்க வெச்சிடுவாங்க. (ஆனா இந்த ஜென்ரேஷன்கிட்ட குறையிதுனு நினைக்கிறேன்). இந்த மாதிரி ஒரு சூழ்நிலைல சமுதாயத்தில் அனைத்து தரப்பு மக்களும் அனைத்து பணியிடங்களிலும் இருக்கனும்னு (Social Equality) கொண்டு வந்தது தான் இந்த இட ஒதுக்கீடு. அதனால குழலியோ செல்லாவோ சொல்ற மாதிரி இது ஒருவனுடைய வசதியை கணக்கில் கொண்டு வந்த திட்டமல்ல. They are right in that.

இதெல்லாம் ஒரு 40 - 50 வருஷத்துக்கு முன்னாடி நம்ம ஆளுங்க வகுத்த திட்டங்கள். (Except MBC, I beleive). இன்றைய நிலைமைல இந்த திட்டத்துல நிறைய ஓட்டைகள் இருக்கு. ரெண்டு மூணு ஜெனேரேஷனை கணக்குல வெச்சி எல்லாம் அவுங்க போடுவாங்கனு நம்ம ஆசைப்படக்கூடாது. அதுவும் இல்லாம அவுங்களும் உன்னையும் என்னையும் மாதிரி சாதாரண மனுஷங்க தான். அதனால அந்த திட்டத்துல இன்னைக்கு தப்பு இருக்குனு சொல்றதால அன்னைக்கு அவுங்க போட்ட திட்டத்தில தப்புனு அர்த்தமில்லை.

முதல்ல க்ரீமி லேயர்னா யாரு?
நல்ல கல்வி கற்கும் சூழலும், வசதி வாய்ப்புகளும் கிடைத்த மாணவர்கள்தான் இந்த க்ரீமி லேயர்ல வரான். இதுல வருபவர்கள் ஒரு ஒரு பிரிவிலும் 10% - 20% என்று எடுத்து கொண்டாலும், அவர்களே போதும் அனைத்து தரமான கல்லூரிகளிலும் இடம்பிடித்து கொள்ள.

சின்ன எடுத்துக்காட்டு தரேன்...
ஒரு 30 வருஷத்துக்கு முன்னாடி ஒரு SC ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு SSLC முடிக்கிறாருனு வைங்க (கண்டிப்பா அவர் அதை முடிக்கனும்னா அவரும் ரொம்ப அவமானங்களை சந்தித்திருக்கணும், அவர் அப்பாவும் நிறைய கஷ்டங்களை அனுபவித்திருக்க வேண்டும்). அவருக்கு அரசாங்க சலுகைல எப்படியோ ஒரு கான்ஸ்டெபில் வேலை கிடைக்கிறது.

அதிலும் அவர் பல அவமானங்களை அனுபவித்து கொஞ்சம் கொஞ்சமாக உயர்கிறார். அவர் மகனுக்கு இருபது வயதாகும் நிலையில் அவர் ஓரளவு நல்ல நிலையை அடைகிறார் (மினிமம் ஒரு இன்ஸ்பெக்டர்). கையில் நல்ல காசும் சம்பாதித்து வைத்திருக்கிறார். இவர் மகன் சென்னை SBOAவிலோ, இல்லை ஈரோடு BVBயிலோ படிக்கிறார் என்று வைத்து கொள்ளவும்.

இந்த நிலைமையில் இவருக்கு கோட்டாவில் அண்ணா யுனிவர்சிட்டியில் சீட் கிடைக்கிறது. இவர் இந்த இட ஒதுக்கீட்டை இரண்டாவது தலைமுறையாகவோ இல்லை மூன்றாவது தலைமுறையாகவோ பயன்படுத்துகிறார். ஆனால் முதல் முறையே இட ஒதுக்கீட்டால் பயன்பெறாத ஒரு பெரிய கூட்டம் நம்மிடையே இருக்கிறது என்பதை நாம் மறக்கக்கூடாது. இந்த உயர் போலிஸ் அதிகாரியின் மகனுக்கு கிடைக்கும் இட ஒதுக்கீட்டை விட அதே சாதியில் அதை பயன்படுத்தாத ஒரு கூட்டத்திற்கு சென்று அடைய வேண்டும் என்றே நான் சொல்கிறேன். சமத்துவத்தை ஏற்படுத்த கொண்டு வரப்பட்ட திட்டம் அது. காலத்திற்கு ஏற்றவாரு மாற்றம் கொண்டு வரப்பட்டு அனைத்து தரப்பு மக்களும் பயனடைய வேண்டும்.

இட ஒதுக்கீட்டால் தன் வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொண்டவர்கள் பலர். அவர்களை அப்படியே தூக்கிட்டு புதுசா வரவனுக்கு இடம் கொடுக்கணும். இல்லைனா அதே கூட்டம் எல்லா இடத்துலயும் சலுகையை அனுபவிச்சிட்டு இருக்கும். இந்த இட ஒதுக்கீட்டுமுறை முதலில் வந்தவனை மட்டுமே வாழ வைக்கிறது. விழித்து கொண்டோர் எல்லாம் பிழைத்து கொண்டார்னு புரட்சி தலைவர் சொன்ன மாதிரி முதல்ல விழிச்சிக்கிட்டவனுக்கு மட்டுமே திரும்ப திரும்ப பலனளிக்கிறது. ஒரு தலைமுறை பின்னாலிருக்கும் கூட்டத்திற்கு வழி அவ்வளவு சுலபமாக கிடைப்பதில்லை. அந்த வழியை ஏற்படுத்தி அனைவருக்கும் பலனளிக்கும் ஒரு திட்டமாக மாற்ற வேண்டும் என்பதே என் விருப்பம்.


இது சும்மா கொசுறு:

இப்ப பார்த்தீங்கனா, யாரும் சமுதாய சம நிலைக்காக வாழ நினைப்பதில்லை. எந்த தொழிலில் பணம் கிடைக்கிறதோ அதில் நுழையவே அனைவரும் ஆசைப்படுகிறார்கள். எந்த ஆசிரியரும் தன் பிள்ளைகள் ஆசிரியராக வேண்டும் என்று ஆசைப்படுவதில்லை. அனைவரும் ஒரு இஞ்சினியராகவோ, டாக்டராகவோ அல்லது MBAவோ படித்து பணம் சம்பாதிக்கவே ஆசைப்படுகிறார்கள். இது தான் உண்மையும் கூட. ஒரு வக்கில் தன் பிள்ளையை எப்போழுது வக்கிலாக்க வேண்டுமென்று ஆசைப்படுவாரென்றால், அவன் நன்றாக படிக்காத நிலைமையில் மட்டும் தான். பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக்க ஒரு திட்டம் இருப்பது எவ்வளவு சரியென்று நாம் யோசிக்க வேண்டும்.

அடுத்து ஒரிசால கேக்கல, பிகார்ல கேக்கல நீங்க மட்டும் ஏன் இட ஒதுக்கீடு கேக்கறீங்கனு கேக்கறவங்களுக்கு. அங்க அவங்களுக்கு இந்த மாதிரி எல்லாம் இருக்கறதே தெரியுமானு தெரியல. நான் இது வரைக்கும் ஒரு 300 - 400 வட இந்திய பசங்களை பார்த்திருக்கேன். பெரும்பாலும் எல்லாம் FC தான். அங்க இட ஒதுக்கிடு இன்னும் பலமா வரணும்.

----------------------------------------------------------------------------------------

5. நீங்கள் எழுதுவதெல்லாம் கற்பனை கதையா இல்லை சொந்த கதைகளா? அப்படி உண்மையாய் இருக்கும்பட்சத்தில் அவர்களுக்கு இது தெரியுமா?

என்னை முதன்முதலில் கதை எழுத தூண்டியது நீங்களும், கப்பியும் தான். சும்மா முயற்சி செய்னு நீங்க சொல்ல போக நான் அப்படியே செஞ்சி பார்த்தேன். ஓரளவு க்ளிக்காகிடுச்சி.

கதை எல்லாமே கற்பனை தான். கோழி காமெடி மட்டும் தான் உண்மை. அதிலும் எது எது உண்மை என்று அங்கங்கே சொல்லி விட்டேன். அவனுக்கு அது நன்றாக தெரியும் :-).

-------------------------------------------------------------------------------------

நண்பர்கள் அனைவருக்கும் என் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

சிரிக்க வெச்சா காசா?

தண்டோரா : உலகெங்கும் உள்ள நகைச்சுவை எழுத்தாளர்களுக்கு ஒரு நற்செய்தி. தொடர்ந்து ஒரு வருடமாக தலை கைப்புவிற்கு ஆப்படித்து அனைவரையும் மகிழ வைத்த சங்கத்தின் முதலாமாண்டு விழாவை முன்னிட்டு, நகைச்சுவை படைப்புகளுக்கான போட்டியை அறிவித்திருக்கிறது சங்கம்.


பெண்களின் கூந்தலுக்கு இயற்கையில் மணமுண்டா என்ற மிகப்பெரிய ஆராய்ச்சி எல்லாம் செய்ய தேவையில்லை. மண்டபத்தில் சிவா(ஜி)க்காக காத்திருக்க தேவையில்லை. 4 பேர நல்லா சிரிக்க வெச்சா போதும். அவ்வளவு தான் மேட்டர்...

சொக்கா சொக்கானு சொல்லி நேரத்த வீணாக்க நாம என்ன மக்கா, மக்கா???
உடனே அடிச்சி ஆடுங்க மக்கா :-)

மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்...

Thursday, April 12, 2007

தமிழ்மண நிர்வாகிகள் கவனிப்பார்களா? - 2

தமிழ்மண நிர்வாகிகள் கவனிப்பார்களா?னு போட்ட போன பதிவு 40 பின்னூட்டங்களை தாண்டி விட்டதால் அது தமிழ்மண முகப்பில் வராது போய்விடும். அதனால் அந்த பதிவில் நடக்கும் கருத்துப் பரிமாற்றங்கள்(?) தொடர்ந்து நடைபெற இந்தப் பதிவு.

அதில் பிரகாஷ் கேட்டு இருக்கும் சில கேள்விகளும் அதற்கு பாபா தந்த பதில்களும். இந்த விஷயத்தில் சீனியர் பதிவர்களுக்கு இருக்கும் கருத்து வேறுபாடுகளை நன்றாக புரியவைக்கிறது. (கொளுத்தி விட்டாச்சி... ஏதோ நம்மால முடிஞ்சது..)

நண்பர்களே, இங்க 40 பின்னூட்டங்கள் வந்த பின் மூன்றாவது பார்ட் ஆரம்பிச்சிக்கலாம்.

இந்த மாதிரி புது டெக்னிக்கை கண்டுபிடித்த சற்றுமுன்னிற்கு நன்றி.


அவருக்கு நம்ம பதில்,

ஐக்காரஸ் பிரகாஷ் அருமையா கேள்வி கேட்டிருக்காரு. ஒரு பக்கம் புலம்பலாக என் பதிவை நினைத்தவர்களும் புரிய வைக்கவே இதை தனிப்பதிவாக போடுகிறேன்.

//

icarus prakash said...

உங்களை எல்லாம் தமிழ்மணம் நல்லா கெடுத்து வெச்சிருக்கு :-). முதல்ல சில தகவல்கள்.

1. இந்திய மொழிகளிலே, தமிழிலே மட்டும் தான் , இது போன்ற சேவைகளைத் தரும் திரட்டி உண்டு. blogger என்ற மெகா வலைப்பதிவுச் சேவையில் கூட பின்னூட்டங்களைத் திரட்டும் வசதி கிடையாது.

2. தமிழ்மணம் இல்லாத ஒரு சூழ்நிலையைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். உங்க பதிவுக்கு வாசகரைத் திரட்டுவதற்குள் நாக்கு தள்ளிவிடும். உதாரணத்துக்கு, புதுசா ஒரு வலைப்பதிவு ஒன்றை ஆரம்பித்து, அதை தமிழ்மணம், தேன்கூடு போன்ற திரட்டிகளில் இணைக்காமல், கொஞ்ச நாள் நடத்திப் பாருங்கள். ரெண்டே நாளில் வாழ்க்கையே வெறுத்து விடும், அதாவது மறுமொழிகள், டிராக்பேக், எல்லாம் எதிர்பார்த்திருந்தால்.

3. இன்றைக்கு இரண்டாயிரத்து சொச்சம் பதிவுகள் இருக்கிற நிலையில், இது போல கேள்வி கேட்கிறீர்கள். இன்னும் இரண்டு வருடங்களில், பத்தாயிரம் பதிவுகளாகப் பெருகி விட்டால், தமிழ்மணம் உயரெல்லை கட்டுப்பாடு விதித்தாலும் விதிக்காவிட்டாலும், பதிவு செய்யும் frequency அதிமாகும் என்பதால் உங்க பதிவு தோன்றிய சில விநாடிகளிலேயே தொபுக்கடீர் என்று கீழே இறங்கிவிடும். அப்ப என்ன செய்வீங்க?

4. தமிழ்மணம் உருவான நோக்கம் உன்னதமானது - உருவான காலத்தில் பக்கத்தில் இருந்து பார்த்திருக்கிறேன் என்ற அடிப்படையிலும், பின்னர் கொஞ்ச நாள் நிர்வாகத்தில் பங்கு பெற்றிருக்கிறேன் என்ற அடிப்படையிலும் சொல்கிறேன். நூறோ என்னமோ பதிவுகள் மட்டும் இருந்த காலத்தில், feed reader, google reader போன்ற சேவைகள் இல்லாத நேரத்தில், தமிழ் வலைப்பதிவாளர்களை ஒன்றிணைக்கும் முயற்சியாகத்தான் துவங்கியதே தவிர, தனிப்பட்ட வலைப்பதிவாளர்களின் பாப்புலாரிட்டியை அதிகரிக்கும் நோக்கத்தில் அல்ல.

4 தமிழ்மணம் திரட்டி வேறு. பூங்கா வேறு. தமிழ்மணம், தன்னுடைய விதிகளுக்கு உட்பட்டு வரும் எல்லாப் பதிவுகளையும் திரட்டும். உள்ளடக்கம் பற்றி புகார் வந்தால் மட்டும், அங்கே மனிதத் தலையீடு இருக்கும். ஆனால் பூங்கா என்பது, வலை இதழ். ஆசிரியரின் விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்டுத்தான் வெளிவரும். ஆசிரியர் குழுவின் அரசியல் பற்றி விமர்சிக்க உங்களுக்கு முழு உரிமை உண்டு - எப்படி சோவைப் பற்றி விமர்சனம் செய்கிறோமோ அப்படி-ஆனால், என்னுதைப் போட மாட்டேன் என்கிறார்கள் என்று குற்றச்சாட்டு வைக்க முடியாது.

5. தமிழ்மணம் ஏற்படுத்திக் கொடுத்த, சொகுசுகளால், எவ்வளவு நன்மை ஏற்பட்டதோ, அதே அளவு தீமையும் ஏற்பட்டிருக்கிறது. எந்த கஷ்டமும் படாமல், நாலு வரி கிறுக்கிவிட்டு ( உங்களைச் சொல்லவில்லை பாலாஜி, ஆக்சுவலி நான் உங்க சினிமா விமர்சனங்களோட தீவிர வாசகன்), அதை தமிழ் மணம், தேன்கூடு மாதிரி இடங்களிலே பதிவு செஞ்சுட்டா போதும். டிராஃபிக் என்ன?... பின்னூட்டம் என்ன, ஒவ்வொரு பின்னூட்டம் வரும் போதும், முகப்புப் பக்கத்திலே வருகிற சொகுசு என்ன... அங்க இங்க போய்ப் பாருங்க... வலைப்பபதிவுகளுக்கு டிராஃபிக் வரவெக்கிறது எவ்ளோ சிரமமான காரியம்னு..

6, இறுதியா ஒரு அட்வைஸ்.... பதிவுகளுக்காகத்தான் மறுமொழியே தவிர, மறுமொழிகளுக்காகப் பதிவு அல்ல. பதிவு நல்லா இருந்தால், கண்டிப்பா பட வேண்டியவங்க கண்ணுல கண்டிப்பா படும்... இல்லே, ' என் பதிவுக்கு நூத்து சொச்சம் பின்னூட்டம் வரும்,,, அதனாலே நாந்தான் டாப்பு, எப்பவும், தமிழ்மணம் முகப்பில், வலப்பக்க மூலையில் என் பேர் வந்துகிட்டே இருக்கணும்னு சொன்னா... அப்பறம் உங்க இஷ்டம்.

[ps : i'm cross posting this comment in my blog.]//

நான் சின்ன வயசுல பஸ்ல போகும் போது சில சமயம் வண்டி ஸ்டார்டாகாம இறங்கி தள்ளிவிட சொல்லுவாங்க. அப்ப எல்லாம் இறங்கி தள்ளிவிடும் போது நான் எங்க தாத்தாக்கிட்ட சொல்றது. ஏன் இந்த பஸ்ஸ நல்லா ஓடற மாதிரி பண்ணா என்னனு?

அதுக்கு அவரு "உங்க காலத்துல இந்த பஸ் வந்திடுச்சினு நீ இவ்வளவு குதிக்கற. நான் வளரும் போது பஸ்ஸே கிடையாது. நாங்க எல்லாம் இந்த பஸ்ஸ குறையா சொல்றோம். இதுவே உங்களுக்கு எல்லாம் அதிகம்னு"

நீங்க சொல்றதும் எங்க தாத்தா சொல்ற மாதிரி பதில்தான். நாளைக்கு உங்களை யாராவது நீ எப்படி எழுத பழகிக்கிட்டனு கேட்டா நீங்க என்ன சொல்லுவீங்களோ எனக்கு தெரியாது. ஆனா என்னை கேட்டால் நான் தமிழ்மணம்னு ஒரு திரட்டி இருக்கு. அதுல நிறைய பேர் எழுதறத பார்த்து எழுத பழகிக்கிட்டேனு சொல்லுவேன். இது தான் உண்மை.

உங்களுக்கெல்லாம் தமிழ்மணம் ஹோட்டல் மாதிரி. வந்து பார்த்துட்டு சரியில்லைனா போயிடுவீங்க. ஆனா எங்களுக்கு வீடு மாதிரி. அதனால ஏதாவது தப்புனு பட்டுச்சினா சரி செய்ய ஆசைப்படுவோம். மனசுக்குள்ள இது சரியில்லைனு சொல்லிட்டு போக தெரியாது. விரும்பவுமில்லை.

நீங்க சொல்ற மாதிரி நான் என்னைக்கும் என்னை பெரிய பதிவர்னு சொல்லிக்கிட்டது கிடையாது. அது உண்மையும் இல்லை. நான் ஒவ்வொரு பதிவா எழுத பழகிக்கிட்டது இங்க தான். நான் தட்டு தடுமாறி எழுதி இப்ப ஓரளவு தமிழ்மணத்தில் பெயர் சொன்னால் தெரியுமளவிற்கு வந்தது இங்கு இருப்பவர்களின் ஊக்கத்தால் தான். என்னை மாதிரி தட்டு தடுமாறி வருபவர்களுக்கு உதவும் வகையில் இருக்க வேண்டுமென்பதே என் விருப்பம்.

Wednesday, April 11, 2007

தமிழ்மண நிர்வாகிகள் கவனிப்பார்களா?

தமிழ்மண நிர்வாகிகள் யாருனு நமக்கு தெரியல, மெயில் பண்ணாலும் விளக்கம் வராதுனு உறுதியா நம்பறேன் (நட்சத்திர வாரத்திற்கே உறுதி செய்யுமாறு ரெண்டு மூணு மெயில் அனுப்பியும் பதில் வராததால் வந்த ஒரு அபரிமிதமான நம்பிக்கை) அதனால தான் பொதுவுல இதை எழுதறேன். மன்னிக்கவும்...

திடீர்னு ஒருத்தர் வந்தாரு, தமிழ்மணத்துக்கு அறிவுரை சொன்னாரு. நீங்களும் விழுந்தடிச்சி செஞ்சிங்க. அவர் இது சரியில்லைனு போயிட்டாரு. தமிழ்மணத்தை தவிர எங்கயும் எழுதாத எங்கள மாதிரி ஆளுங்கள ஏன் நீங்க மதிக்க மாட்றீங்கனு தெரியல.

அடுத்து நீங்க சொன்ன காரணம் உண்மையிலும் வருத்தமளிக்க கூடியதாகவே இருக்கிறது. அதாவது ஒருவரே பல பெயர்களில் பல ஐடிக்களில் அவருக்கு பின்னூட்டமிட்டு கொள்கிறார்னு. நீங்க யார சொன்னீங்கனு புரியுது. அவருக்கு பிரச்சனைனு வந்தப்ப அத்தனை பேரையும் கமெண்ட் மாடரேஷன் பண்ண சொன்னீங்க. அவர் இப்படி ஏமாத்தரார்னு சொன்னவுடனே கமெண்ட் மாடறேஷன் தேவையில்லை அது அவரவர் பொறுப்புனு சொல்லிட்டீங்க. இப்படி அவரை வைத்தே நீங்கள் தீர்மாணம் எடுக்கும் பட்சத்தில் உங்க திரட்டில இருக்கற எங்களை எல்லாம் பார்த்தா உங்களுக்கு மனுஷனா தெரியலையா (I mean it). அவர் பேர என் பதிவுல சொல்லாததற்கு காரணம் இதையும் அவர் விளம்பரமா பயன்படுத்திக்குவாருனு ஒரு அபரிமிதமான நம்பிக்கை.

நீங்க சொல்ற காரணம் நல்ல பதிவுகள் தெரியாம போயிடுது. நல்ல பதிவுகள் எதுனு எப்படி சொல்றீங்கனு புரியல. வாசகர் பரிந்துரைனு ஒண்ணு இருக்கு, பூங்கா இருக்கு. இதெல்லாமே நல்ல பதிவுகளுக்கு விளம்பரம் கொடுக்க நீங்க செய்யற முயற்சி தானே? அப்படியும் முடியாம போய் இப்ப 40ல வந்து நிக்கறீங்க. எனக்கு தெரிஞ்சி 40 பின்னூட்டத்துக்கு மேல வரது பெரும்பாலும் நகைச்சுவை பதிவுகள் தான். இதனால பாதிக்கப்படுபதும் அவர்கள் தான். நீங்க நினைக்கிற மாதிரி நகைச்சுவை பதிவு எழுதறதும் அவ்வளவு சுலபமில்லைங்க. வேணும்னா யாருக்கும் தெரியாம ஒரு 4 பதிவு எழுதி உங்க வீட்ல படிக்க சொல்லுங்க. இந்த மாதிரி பதிவு எழுதறது ரொம்ப சுலபம். அதனால காமெடி பதிவெல்லாம் நல்ல பதிவில்லைனு அர்த்தம் கிடையாதுங்க.

புதிய எழுத்தாளருக்கு அங்கிகாரம் கிடைப்பதில்லைனு சொன்னீங்கனா, எல்லாருமே புதுசா இருந்து வந்தவங்க தாங்க. பதிவு போட போட நல்லா எழுதினா வாசகர் வட்டம் அதிகரிக்கும். அவ்வளவு தான். அபி அப்பாவும், கண்மணி அக்காவும் என்ன ஒரு வருஷமாவா எழுதறாங்க (நான் எழுத ஆரம்பித்தும் ஒரு வருடமாகவில்லை). இப்ப அவுங்களோட பதிவை நிறைய பேர் படிக்கறதில்லை? இந்த பின்னூட்ட மூலமா நிறைய நண்பர்கள் கிடைக்கறாங்க. அதை பறிக்காதீர்கள்...

சரி அடுத்து நீங்க வந்து சொல்லப்போறது பின்னூட்ட விளையாட்டு கொஞ்ச பேர் விளையாடறாங்கனு. பார்த்தீங்கனா ஒரு நாளைக்கு ஒரு பதிவுல யாராவது விளையாடுவாங்க. அதனால ஒரு லைன் வந்து நிக்க போகுது அந்த பதிவு. ஆனா இந்த ரூல்ஸால நிறைய பதிவுகள் படிக்க முடியாம போயிடுது. அதே மாதிரி 40 கமெண்டுக்கு மேல நல்ல கமெண்ட் வந்தாலும் அதில பெருசா ஈடுபாட்டோட பதில் சொல்ல முடியாம போயிடுது. அதுல முக்கியமானது உஷா அவர்களின் பெண்கள் டாப்பு, அப்பறம் கண்மணி அக்காவோட பதிவு. அப்பப்ப அபி அப்பா பதிவும் மிஸ்ஸாகிடுது.

ஏன் நீ தமிழ்மணத்த மட்டும் சொல்றனு கேக்கறவங்களுக்கு, நம்ம காலேஜ்ல படிக்கும் போது ஹாஸ்டல்ல சாப்பாடு சரியில்லைனா அங்க தான் பிரச்சனை பண்ணுவோம். பக்கத்து காலேஜ் ஹாஸ்டல்ல சாப்பாடு சரியில்லைனு யாரும் சண்டை போட மாட்டோம்.

பி.கு: ஒரு சின்ன அட்வைஸ். யாராவது சின்ன வயசு பசங்களையும் உங்க கூட்டத்துல சேர்த்துக்கோங்க. ரொம்ப வயசானவங்க வெச்சி நடத்தற மாதிரி ஒரு ஃபீலிங். அதனால தான் நகைச்சுவையை ரசிக்க உங்களுக்கு தெரியலைனு நினைக்கிறேன்.

Tuesday, April 10, 2007

க்ரீமி லேயரை ஏன் தூக்கணும்?

வெட்டி: டேய் பாலாஜி... எவ்வளவு நாள்தான் இப்படி தூங்கிகிட்டே இருப்ப. எழுந்திரிடா வெளக்கெண்ணெய். ஊரே பத்திக்கிட்டு எரியுது நீ பாட்டுக்கு தூங்கிட்டு இருக்க.

பாலாஜி : அடங்கமாட்டியா நீயி. ஆணி புடுங்கி ஆணி புடுங்கி தூங்கி ரொம்ப நாளைச்சுனு இப்ப தான் நிம்மதியா தூங்கறேன். மனுஷன நிம்மதியா இருக்க விடமாட்ட நீ. உனக்கு ஒரு டெவில் ஷோ போட்டாதான் அடங்குவ.

வெட்டி: அதெல்லாம் ஏற்கனவே நமக்கு போட்டாச்சி. நீ முதல்ல எழுந்து வந்து உங்க செந்தழல் ரவி பதிவ பாரு. உங்க ஸ்கூல் சீனியர்ஸ் ரெண்டு பேரும் எப்படி அருமையா விவாதம் பண்றாங்க பாரு. அதுல கடைசியா குழலி அண்ணே எப்படி பாயிண்ட் பாயிண்டா எடுத்து வெச்சிருக்காரு பாரு...

//
ரவி நீ ஒரு தாசில்தார் பையனையும் ஒரு புரோகிதர் பையனையும் பார்த்துவிட்டு பேசியிருக்கிறாய், கீழே இருக்கும் புள்ளிவிபரத்தை பார், தாசில்தார் பையன்கள் பிசியில் எத்தனைபேர் புரோகிதர் பிள்ளைகள் எஃப்சியில் எத்தனை பேர் என்று தெரியும்

http://www.annauniv.edu/tnea06/rama21.doc

CATEGORY OC BC MBC SC ST
ANNA UNIVERSITY 0 0 0 0 0
GOVT. & GOVT AIDED 0 0 0 0 1
SELF FINANCING 2839 4757 3804 4569 434

இலட்சக்கணக்கில் பணத்தை அழுது படிக்க வேண்டிய சுயநிதிக்கல்லூரிகளில் மட்டும் தான் இடம் நிரம்பாமல் உள்ளது,

31% OC யில் 2839 இடங்கள் மட்டுமே காலி ஆனால் 30% BC யில் 4757 இடங்கள் காலி (OCயை விட கிட்டத்தட்ட 70% அதிக காலியிடங்கள்)

20% MBC யிலோ 3804 இடங்கள் காலி (OCயை விட கிட்டத்தட்ட 107% அதிக காலியிடங்கள்)

18% SC யிலோ 4569 இடங்கள் காலி, (OCயை விட கிட்டத்தட்ட 177% அதிக காலியிடங்கள்)

இலவச அல்லது குறைந்த கட்டணத்தில் இடம் கிடைக்கவில்லையென்றாலும் OCயில் படிக்க முடிந்தவர்கள் அதிகம், ஆனால் அதே நிலை BC யில் OC யைவிட குறைவு ஆனால் MBCயைவிட அதிகம், இதே SC யை பார்த்தோமென்றால் காலியிடங்கள் MBCயைவிட அதிகம்.

வர்ணாசிரம அடுக்கு முறை ஏற்படுத்திய ஏழ்மைக்கு இந்த புள்ளிவிபரம் ஒரு உதாரணம்.

சுயநிதிகல்லூரிகளில் பிசியில் 4757சீட்டுகள் காலியாக உள்ளன, ஒரு பிசி ஓசி பிரிவில் சென்று காசு கொடுத்து சீட்டுவாங்குவதை விட பிசி பிரிவில் வாங்குவது இன்னமும் லாபம்... கல்லூரி பிரிவுகளை தேர்ந்தெடுக்கலாம் எனவே அவர்கள் ஓசியில் சேரமாட்டார்கள், அப்படியிருந்தும் பிசியில்,எம்பிசி,எஸ்சி, எஸ்டியில் இத்தனை காலியிடமென்றால் ஓசி முழுக்க எஃப்சி என்று தானே அர்த்தம்?
//


பாலாஜி: ஹிம்ம்ம்...

வெட்டி: ஹிம்ம்ம்னா என்ன அர்த்தம்? அவர் சொல்றது சரி தானே?

பாலாஜி: அவர் சொன்னதை இன்னொரு தடவை நல்லா படிச்சி பாரு. அப்படியே இந்த கதையையும் படி...

வெட்டி: படிச்சிட்டேன். அதுல என்ன இருக்கு ரெண்டாவது தடவை படிக்க?

பாலாஜி: என்னைக்காவது நீ கவுண்சிலிங் வந்திருந்தா உனக்கு ஏதாவது புரியும். ஆமாம்... நீ பொறந்தே ஒரு வருஷம் கூட ஆகல. உனக்கு எப்படி புரியும்.

வெட்டி: ரொம்ப பேசாத. உனக்கு என்ன தோனுதுனு என் சிற்றறிவுக்கு எட்டற மாதிரி சொல்லு.

பாலாஜி: "இலவச அல்லது குறைந்த கட்டணத்தில் இடம் கிடைக்கவில்லையென்றாலும் OCயில் படிக்க முடிந்தவர்கள் அதிகம், ஆனால் அதே நிலை BC யில் OC யைவிட குறைவு ஆனால் MBCயைவிட அதிகம், இதே SC யை பார்த்தோமென்றால் காலியிடங்கள் MBCயைவிட அதிகம்." இது குழலி அண்ணன் சொன்ன டயலாக்.

வெட்டி: ஆமாம். சரியாத்தானே சொல்றாரு.

பாலாஜி : இதுல OCனா என்னனு உனக்கு தெரியுமா?

வெட்டி: Forward caste... இந்த ஐயர் பசங்கதானே.

பாலாஜி: வெட்டினு நிருபிச்சிட்ட. அதான் இல்லை. OC - Open Competition.

வெட்டி: அப்படினா??? புரியற மாதிரி சொல்லுடா வெண்டரு...

பாலாஜி :அதாகப்பட்டது ஒரு காலேஜ்ல முதல்ல ஃபில்லாகக்கூடியது OC சீட் தான். அப்பறம்தான் BC எல்லாம் ஃபில் ஆகும்.

வெட்டி: சத்தியமா புரியல.

பாலாஜி: இரு விளக்கமா சொல்றேன். ஒரு BC பையன் 299 எடுக்கறானு வை. அவன் தான் கவுண்சிலிங்ல முதல்ல போறானு வெச்சிக்கோ. அவன் எந்த கேட்டகிரில சீட் எடுப்பான்?

வெட்டி: அவன் BC தானே அப்பறம் எதுல எடுப்பான். BCல தான் எடுப்பான்.

பாலாஜி: அது தான் கிடையாது. அவன் எடுக்கறது OC - Open Competition.

வெட்டி: ஓ... அப்ப MBC பையன் வந்தானா BCல எடுக்கலாமா?

பாலாஜி: அப்படி இல்லை. ஒண்ணு Open Competion இல்லைனா அவனுக்குனு ஒதுக்குன கேட்டகிரில எடுக்கலாம். MBC - OCல சீட் எடுக்கலாம். இல்லைனா MBCல எடுக்கலாம்.

வெட்டி: சரி. இது முதல்ல போறவனுக்கு கரெக்டா இருக்கலாம். ஆனா பின்னாடி வரவன பாரு. அவனுக்கு OCல இருக்குற சீட்டைவிட கோட்டா யூஸ் பண்ணா இருக்குற நல்ல காலேஜ்ல எடுப்பான் இல்லை. உதாரணத்திற்கு 295 எடுக்குறவனுக்கு அண்ணா யூனிவர்சிட்டில BC இருக்கு PSGல OC இருக்கு. அவன் எதை எடுப்பான்?

பாலாஜி: இந்த மாதிரி தான் நானும் கணக்கு போட்டு கவுண்சிலிங் போய் ஏமாந்தேன். உண்மையா பார்த்தினா எப்படி இருக்கும்னா அதே BC பையன் கொயம்பத்தூர் பக்கம் இருந்தா PSG இல்லை GCT இல்லைனா CITஎடுப்பான். திருச்சியா இருந்தா REC இல்லைனா ஷண்முகா எடுப்பான். அப்ப அவன் எடுக்கறது OC யா இருக்கும். அதே மாதிரி வெறும் காலேஜ் மட்டும் மேட்டரில்லை. டிப்பார்ட்மெண்ட்டும் மேட்டர். அண்ணா யுனிவர்சிட்டில
கம்ப்யூட்டர் ஃபில்லாணவுடனே அடுத்து PSG இல்லைனா REC கம்ப்யூட்டர் ஃபில் பண்ண ஆரம்பிச்சிடுவானுங்க. அதுல பார்த்தாலும் இந்த OC, BC, MBC குளறுபடி இருக்கும்.

வெட்டி: ரொம்ப குழப்பிட்ட.

பாலாஜி: தெளிவா சொல்றேன் கேளு. எந்த கேட்டகிரில எந்த சீட் ஃபில்லாச்சினு வெச்சி அவர் சொல்ற கணக்கு நடைமுறைக்கு ஒத்து வராது. Open competitionல எத்தனை BC, MBC உள்ள போயிருக்கானு பார்த்தா தான் தெளிவா புரியும். என் க்ளாஸ்லையே நிறைய BC, MBC பசங்க Open Competitionல தான் வந்தாங்க.

வெட்டி: "சுயநிதிகல்லூரிகளில் பிசியில் 4757சீட்டுகள் காலியாக உள்ளன, ஒரு பிசி ஓசி பிரிவில் சென்று காசு கொடுத்து சீட்டுவாங்குவதை விட பிசி பிரிவில் வாங்குவது இன்னமும் லாபம்... கல்லூரி பிரிவுகளை தேர்ந்தெடுக்கலாம் எனவே அவர்கள் ஓசியில் சேரமாட்டார்கள், அப்படியிருந்தும் பிசியில்,எம்பிசி,எஸ்சி, எஸ்டியில் இத்தனை காலியிடமென்றால் ஓசி முழுக்க எஃப்சி என்று தானே அர்த்தம்?" இதுக்கு என்ன அர்த்தம்?

பாலாஜி: இதுக்கா? முன்னாடி சொன்னதுதான். அதே OC கேட்டகிரில நம்ம பசங்க எத்தனு பேர் சேர்ந்தானுங்கனு தெரிஞ்சாதான் தெளிவா சொல்ல முடியும். அப்பறம் இது அவர் படிச்ச காலம் மாதிரி 50 இஞ்சினியரிங் காலேஜ் வெச்சி போட்டதில்லை. நான் படிக்கும் போது (03 Passed out) 250 - 300 காலேஜ் இருந்துச்சி. இதுல பாதி காலேஜ்ல கட்டடமே இப்பதான் கட்ட ஆரம்பிச்சிருப்பானுங்க. அதனால நல்ல டிப்பார்ட்மெண்ட் கிடைச்சா போதும்னு உள்ள போற BC/MBC பசங்க OCல கொஞ்ச பேர் சேருவானுக்க. அப்பறம் எவனும் சீண்டாம அப்படியே விட்டுட்டு போயிடுவாங்க. பேமண்ட்லயும் அதே கதைதான்.

வெட்டி: ஆஹா... இவ்வளவு கஷ்டமான விஷயமா அது? இதெல்லாம் எப்படி கணக்கெடுக்க முடியும்?

பாலாஜி: டேய் அமெரிக்க காரவன் கண்ணுலயே மண்ண தூவி அணுகுண்டு வெடிச்ச நாடுடா இது. இதெல்லாம் ஜிஜிபி மேட்டர். கம்ப்யூட்டர்ல அழகா ஒரு டேட்டாபேஸ்ல போட்டு ரிப்போர்ட் தயாரிச்சிடலாம். ஒரு கவுண்சிலிங்ல பண்ணா போதும்.

வெட்டி: சரி... இந்த பிரச்சனையெல்லாம் எதுக்காகப்பா?

பாலாஜி: எல்லா ப்ளாகும் படிக்கிறயே... நீ தான் சொல்லனும்

வெட்டி: போட்டு வாங்கறியா? இரு நானே சொல்றேன். ஏதோ இட ஒதுக்கீடுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதிச்சிருக்காம். 1931 கணக்க இப்ப வெச்சிக்க முடியாதாம். அதான் ஊரெல்லாம் பிரச்சனை.

பாலாஜி: ஹிம்....

வெட்டி: அதுக்கு என்ன அர்த்தம்?

பாலாஜி: உச்சநீதி மன்றம் சொன்னதுல உண்மையிருக்குனு அர்த்தம்.

வெட்டி: அப்படினா?

பாலாஜி: முதல்ல பார்த்தீனா, ஒரு சராசரி மாணவன் நல்லா படிக்க அவன் குடும்பமும், பள்ளியும் காரணமா இருக்கு. அப்படி பார்த்தனா உனக்கே தெரியும் இந்த நெய்வெலி, ராசிபுரம், திருச்சங்கோடு, ஈரோடு இந்த மாதிரி பள்ளிக்கூடத்துல இருந்து வர காசு இருக்குற BC, MBC பசங்க அண்ணா யுனிவர்சிட்டியிலும் அரசு கல்லூரியிலும் சேர்ந்து வசதி குறைவான பசங்களுக்கு ஆப்பு அடிச்சிடறானுங்க. அப்பறம் பார்த்தா இருக்குற Private காலேஜ் சீட் எடுக்க முடியாம வசதி குறைந்த BC/MBC மாணவர்கள் கஷ்டப்படறாங்க. இந்த பிரைவேட் காலேஜ்ல கொள்ளை அடிப்பானுங்க பாரு ஃபீஸ்னு... அப்பா சாமீ. நான் படிக்கும் போது அண்ணா பல்கலைகழகத்திலும் அரசு கல்லூரிகளிலும் 3000 ஃபீஸ். அதே ப்ரைவெட் காலேஜ்ல 13,100 (Free Seat, that may go to 30000), பேமண்ட் சீட் : 48000 (அது அப்படியே ஒரு அறுபது ஆயிரம் போகும்)

இப்ப பிரச்சனையே வசதியா விவரம் தெரிஞ்ச BC/MBC பசங்க விவரம் தெரியாத பசங்களுக்கு ஆப்பு அடிக்கனும்னு நினைக்கறதுதான்.

வெட்டி: க்ரீமி லேயர்னா வசதியான BC/MBCக்கு சலுகைகள் பறிக்குபடும்னு தானே அர்த்தம்.

பாலாஜி: ஆமாம். இங்க லட்சாதிபதிகள் எப்படி கோடிஸ்வரனாகறதுனு தான் பிரச்சனை. அதுக்குதான் IIT, IIM பத்தி பிரச்சனை கிளப்பறானுங்க. பசில இருக்கறவனுக்கு விவரம் தெரியாம பந்த் அன்னைக்கு காசேதான் கடவுளடா படத்த பார்த்துட்டு இருக்கான்.

வெட்டி: நீ பார்ப்பன அடிவருடி ஆயிட்டயோனு எனக்கு ஒரு டவுட்...

பாலாஜி: உன்கிட்ட பேசினன் பாரு. என் புத்திய செருப்பால அடிக்கனும். ஒரு முக்கியமான விஷயம் இதுல அவுங்களுக்கும் பெரிய ஆப்பு இருக்கு.

வெட்டி: நிஜமாவா? எப்படி சொல்ற?

பாலாஜி: இப்ப இந்த க்ரிமீ லேயரை கண்டுபிடிச்சிட்டு அடுத்து மிச்சமிருக்கவங்களுக்கு கோட்டா கொடுக்கும் போது இந்த க்ரிமி லேயரும் அந்த கூட்டமும் தான் அடிச்சிக்கும்.

வெட்டி: எப்படி?

பாலாஜி: இப்ப பார்த்தனா முக்கால்வாசி நல்ல மார்க் வாங்கிட்டு வரது இந்த க்ரீமி லேயர் கூட்டம் தான். அது பார்த்தனா OC சீட் இருந்தா OCல எடுக்கும் இல்லைனா BCல எடுக்கும். இப்ப அதை தூக்கி OCல மட்டும் தான் நீ எடுக்கனும்னு சொல்லிட்டா ரெண்டு பேருக்கும் செம சண்டையா இருக்கும் இல்ல. பாதி கூட்டம் தொலையுதுனு நினைக்காம க்ரீமி லேயரை கண்டுபிடிக்கனும்னு சொன்னதுக்கு என்னனே புரியாம பட்டாசு வெடிச்சி கொண்டாடிட்டு இருக்காங்க. அதுங்களும் ஒண்ணு புரிஞ்சிக்கனும் நாங்களும் உங்களுக்கு எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லைனு.

வெட்டி: சுத்தம் ஒரு மண்ணும் புரியல

பாலாஜி: தெளிவா கேளு. இப்ப 295 எடுத்த ஒரு BC பையன் இருக்கான். அவனுக்கு அடுத்து 294.98 எடுத்த FC பையன் நிக்கறான். இப்ப அண்ணா யுனிவர்சிட்டில BCல ஒரு சீட் இருக்கு PSGல ஒரு சீட் இருக்குனு வை. இந்த் Creamy layer பிரிக்கலைனா அந்த BC பையன் அண்ணா யுனிவர்சிட்டில BC கோட்டால எடுக்கனும்னா எடுக்கலாம்.இல்லைனா OCல எடுக்கலாம். ஆனா Creamy layer பிரிச்சிட்டானு வை அவன் கண்டிப்பா OCல தான் எடுப்பான். பின்னாடி நிக்கிற FC பையனுக்கு ஆப்பு... இப்ப புரியுதா?

வெட்டி: நல்லா புரியுது. இத நான் யோசிக்கவே இல்லை. ஆமாம் அப்ப நீ எந்த கேட்டகிரில வருவ?

பாலாஜி: நான் மட்டும் என்ன ஸ்பெஷலா. நானும் க்ரிமீ லெயர்லதான் வருவேன்.

வெட்டி: அப்ப உன் பசங்களுக்கும் ஆப்பு தாண்டி.

பாலாஜி: எங்கப்பா ஒவ்வொரு தீபாளிக்கும் இதையே தான் சொல்லுவாரு. "25 வருஷமா தீபாவளி அன்னைக்கு தான் நாங்க இந்த இட்லியே சாப்பிடுவோம்னு". மீதி நாளெல்லாம் வெறும் பழைய சோறுதானு. எங்க பாட்டி பூக்கட்டி எங்க அப்பாவ படிக்க வெச்சாங்க (அவரும் சாயந்திரமான பொட்டிக்கடைல பொட்டலமெல்லாம் மடிச்சாரு). அவர் க்ளார்க்கா இருந்து ரெண்டு பசங்கள நல்லா படிக்க வைக்க வசதியில்லாம பையன மட்டும் நல்ல பள்ளிக்கூடத்துல படிக்க வெச்சாரு (அவர் சக்திக்கு மீறி). எங்க அக்காவ அரசினர் பெண்கள் மேல் நிலைப்பள்ளிலதான் படிக்க வெச்சாங்க (அந்த ஸ்கூல +2ல முதல் மார்க்கே 900 கூட இல்லை. இத்தனைக்கும் இங்க அக்கா 1st Rank தான் எடுப்பாங்க. அவுங்கள நல்ல ஸ்கூல படிக்க வைக்கக்கூட வசதியில்லை). நாளைக்கு இந்த மாதிரி நிலைமைல இருந்து வர இன்னோரு க்ளார்க் பையன்கூட என் பையன் மல்லுக்கு
நின்னானா அது அவன் கொழுப்பு தானே தவிர வேற எதுவும் இல்லை.

வெட்டி: இதனால தான் ரொம்ப பொங்கறையா?

பாலாஜி: நான் பொங்கவும் இல்ல திங்கவும் இல்ல... தூக்கம் வருது தூங்கறேன்...

Monday, April 09, 2007

எல்லாமே அழகு தான்...

நம்மளையும் ஆறு அழகான விஷயங்களை பத்தி வல்லியம்மா எழுத சொல்லிட்டாங்க. ஆணி அதிகம் அதனால கொஞ்சம் தாமதமாயிடுச்சு.

அழகுனா உனக்கு என்ன ஞாபகம் வரும்னு தம்பி என்கிட்ட சேட்ல கேட்டப்ப நான் சொன்னது குழந்தைகள். குழந்தைகள் தான் எனக்கு எப்படி இருந்தாலும் அழகா தெரியறாங்க. கருப்போ, சிகப்போ, குண்டோ, ஒல்லியோ எப்படி பார்த்தாலும் அழகாக இருப்பது குழந்தைகள் தான். அவர்களுடன் விளையாடும் நேரங்களில் தான் நாம் நம் வயதையும் குறைப்பது போல் ஒரு உணர்வு. இங்கயும் எங்க பக்கத்து வீட்ல ஒரு எங்க டீம் லீட் குழந்தை இருக்கு. அந்த குழந்தைக்கூட தினமும் விளையாடும் போது ஒரு விதமான மகிழ்ச்சி. வேலை டென்ஷனெல்லாம் போய்விடும். நீங்களே பாருங்க எவ்வளவு அழகுனு


அழகுகள் ஆறுனு சொன்னவுடனே ஞாபகம் வந்தது நான் பிறந்த ஊரான திருக்கோவிலூரில் ஓடும் தென்பெண்ணை ஆற்றின் அழகு தான். (ஏன்டா எந்த ஆற சொன்ன உனக்கு எந்த ஆறு ஞாபகம் வருதுனு நீங்க திட்றது காதுல விழுது.) அதுவும் தென்பெண்ணை ஆற்றின் சுவையை சொல்ல வேண்டுமே. அதனால் தான் உலகை அளக்கும் திருமால் அங்கு கோவில் கொண்டு மகிழ்கிறான். சின்ன வயசுல அந்த ஆத்துல குளிச்சதெல்லாம் இப்பவும் இனிமையான நினைவாக இருக்கிறது. ஆத்துல தண்ணி ஓடற அழக பார்க்கனுமே. நாள் பூரா அதுல விளையாடிக்கிட்டே இருக்கலாம். ஆனா ஆத்துல நான் நல்லா தண்ணி ஓடி பார்த்து வருஷக்கணக்குல ஆச்சு.

அடுத்து எனக்கு அழகா தெரியறது முதுமைதான். அதுக்கு முக்கியமான காரணம் காந்தி தாத்தாவும், அன்னை தெரசாவும் தான். வயசானாலும் அவுங்க ரெண்டு பேரும் ரொம்ப அழகா இருக்கற மாதிரி எனக்கு ஒரு எண்ணம். காந்தி தாத்தாவோட சின்ன வயசு போட்டோ பார்த்ததுக்கப்பறம் இந்த எண்ணம் ரொம்ப உறுதியாயிடுச்சி. இப்ப லேடஸ்ட் நம்ம தலைவர் கலாம். வயசானவங்க நிறைய பேர பார்த்ததுக்கப்பறம் முதுமையும் ஒரு அழகு தான் முடிவுக்கு வந்துட்டேன்.

கிராமத்துக்காரர்களின் வெள்ளை மனசு. இது ரொம்ப அழகுங்க. நான் கடலூர்ல 7வது படிக்கும் போது எனக்கு டான்சில்ஸால அடிக்கடி உடம்பு சரியில்லாம போயிடும். எப்பவும் சிக் ரூம்ல தான் இருப்பேன். உடம்பு சரியில்லைனு வெறும் கஞ்சிதான் கொடுப்பாங்க. அதை குடிக்கறது அத விட கொடுமை வேற எதுவுமில்லை. அதுக்கப்பறம் ஆப்பரேஷம் செய்து உடம்பு சரியில்லாம போறதே நின்னுடுச்சி. அதுக்கப்பறம் 9வது பத்தாவது படிக்கும் போது தான் தமிழ் மீடியம் படிக்கற பசங்க எல்லாம் நல்ல நண்பர்களானாங்க. யாருக்காவது உடம்பு சரியில்லைனா என்ன வேணும்னாலும் ஹாஸ்டல் கேட்ட தாண்டி யாருக்கும் தெரியாம போய் வாங்கிட்டு வருவாங்க. அந்த மாதிரி போய் வரும் போது மாட்டினால் என்ன அடி விழும் என்று சொன்னால் புரியாது. ரெண்டு மூணு பிரம்பு உடையும் வரை அடி விழும். அதுக்கு அப்பறம் அவுங்க கூட நானும் சேர்ந்து இந்த வேலையெல்லாம் பண்ண ஆரம்பிச்சிட்டேன். கோபம் வந்தா கண்டபடி திட்டுவாங்க. சண்டை போட்டு பேசறத வேணா நிறுத்திக்குவாங்க. ஆனா மனசுல வெச்சி கூட இருந்தே என்னைக்கும் பழி வாங்க தெரியாது. அந்த மனசு பொதுவா சிட்டில இருந்து வரவங்ககிட்ட நான் பார்க்கல.

அப்பறம் அழகுனா கண்ணன் தான். குழந்தையா வெண்ணை திருடும் போதும் சரி. அதுற்கு பிறகு கோபியர்களோட விளையாடும் போதும் சரி, போர் களத்திலும் கூட கண்ணன் அழகு தான். அவன் அழகை நாள் பூரா சொல்லிக்கிட்டே இருக்கலாம்.லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்... யாருக்கும் கெட்டது நினைக்காத வரை நாம் அனைவரும் அழகு தான். அதை நாம் உணர்ந்தால் போதும் உலகமே அழகாகிவிடும்.

அழகுகள் ஆறுக்கும் டேக் பண்ணனுமா???

சரி நீங்க எல்லாம் சீக்கிரம் எழுதுங்கப்பா

புலி
போர் வாள் தேவ்
CVR

Tuesday, April 03, 2007

லொள்ளு - 4

வரலாறு

சுஜாதா : தம்பி, என்ன இப்படி பண்ணிட்டீங்க?

அஜித் : ஒருத்தனுக்கு ஆடத்தெரியலைனு சொன்னா ஆடிக்காட்டிடலாம், பாடத் தெரியலைனு சொன்னா பாடிக்காட்டிடலாம். ஆனா ஆம்பிளை இல்லைனு சொன்னா... (கையை சொடக்குகிறார்)

சந்தான பாரதி (மனதிற்குள்) : நல்ல வேளை நான் சொன்னது காதுல விழல...

-------------------------------------------------------------------------------------------------

போக்கிரி :

விஜய் : நான் ஒரு முடிவெடுத்தா என் பேச்சை நானே கேக்க மாட்டேன்

மனதிற்குள் : நான் ஒரு படம் நடிச்சா என் படத்த நானே பாக்க மாட்டேன்

--------------------------------------------------------------------------------------------------

போக்கிரி

அறிமுக சண்டை காட்சி...
விஜய் : கதவை தொறந்து வை... ஓடறதுக்கு வசதியா இருக்கும்

படம் பார்க்க வந்தவன் : டேய் மச்சான் எனக்கென்னுமோ இது நமக்கு சொல்ற மேசஜ் மாதிரி தெரியுதுடா...

--------------------------------------------------------------------------------------------------

சிட்டிசன்

அஜித் : நான் தனி ஆள் இல்லை

ப்ரொடியுசர் : இப்படி சொல்லி சொல்லியே ரெண்டு அன்லிமிடட் மீல்ஸ் சாப்பிட்டு தாலதான் உன் மார்க்கெட்டே போச்சு

Sunday, April 01, 2007

மாணவர்கள், ஆசிரியர்கள் யாராவது இருக்கிங்களா???

அன்பு நண்பர்களே!
நான் காலேஜ்ல படிக்கும் போது தமிழ் மீடியத்துல இருந்து ஒரு சில நண்பர்கள் படிச்சாங்க. அவுங்களுக்கு க்ளாஸ்ல ஆசிரியர்கள் இங்கிலிஷ்ல நடத்தும் போது எதுவும் புரியாம கஷ்டப்படுவாங்க. அதையே நாங்க தமிழ்ல சொல்லி கொடுத்தா ஈஸியா புரிஞ்சிக்குவாங்க.

பொதுவா ப்ரோக்ராமிங் லாங்குவேஜ் எல்லாம் நம்ம பசங்களுக்கு புரியற மாதிரி சொல்லி கொடுத்துட்டா அடிச்சிக்கவே முடியாது. ஆனா அதுக்கு தான் கொஞ்சம் கஷ்டம். Balagurusamy படிக்கவே பசங்க கஷ்டப்படறத நான் பார்த்திருக்கேன்.
அதையே ஜாலியா சொல்லி கொடுத்தா புரிஞ்சிக்குவாங்க.

எதுக்குடா இவன் இப்ப மொக்கைய போடறானு யோசிக்கறீங்களா??? திடீர்னு ஒரு யோசனை. வெட்டியா எழுதி கொஞ்ச பேரை சிரிக்க வெச்சிட்டு இருந்தேன். அதை தான் அப்ப அபி அப்பாவும், கண்மணி அக்காவும் ரொம்ப சாதாரணமா பண்றாங்க. கதையெல்லாம் கப்பியும், ஜியும் நம்மல விட அருமையா எழுதறாங்க. டெவில் ஷோ ராமண்ணாவும், தம்பியும் பிரிச்சி மேயறாங்க.

சரி நம்ம அதையெல்லாம் விட்டு ஏதாவது பயனுள்ளதா எழுதலாம்னு பாக்கறேன். ஏன் C தமிழ்ல சொல்லி தரக்கூடாதுனு யோசிக்கிறேன். எனக்கும் எல்லாம் கொஞ்சம் மறந்து போச்சி (Testingல இருக்கறதால Programming Language எல்லாம் மறந்து போச்சி. ஆனா திரும்ப படிச்சா ஞாபகம் வந்துடும்)

சும்மா ஜாலியா கதை சொல்ற மாதிரி C சொல்லி தரலாம்னு பாக்கறேன். ஆனா நான் எழுதின சாப்ட்வேர் இஞ்சினியராகலாம் வாங்க தொடர கடைசி வரைக்கும் வடுவூர் குமாரும், குமரனும் மட்டும் தான் படிச்சாங்க. அதுவும் குமரன் நான் புதுசுனு அப்ப என்னை வழி நடத்திட்டு வந்தார். இப்ப அவுங்களும் படிப்பாங்களானு தெரியல. (நான் அவுங்களுக்காக எழுதல)

சரி எனக்கு இருக்கற சந்தேகம் இங்க வலைப்பூவை யாராவது ஸ்டூடண்ட்ஸோ இல்லை ஆசிரியர்களோ படிக்கறீங்களானு தான். நான் இங்க எழுதினா உங்களுக்கு பயனுள்ளதா இருக்குமா? வியலுக்கு இறைத்த நீராக வேணாமேனு பாக்கறேன்.

நான் எழுதறத வெச்சி நீங்க Nasaக்கு ப்ரோக்ராம் எழுத முடியாது. ஆனா உங்க லேப் ப்ரோக்றாம்ஸ் புரிஞ்சி போடற அளவுக்கு சுலபமா சொல்லி தர முயற்சி செய்யறேன். Linked list எல்லாம் ஒரு 50 பேருக்கு சொல்லி கொடுத்திருப்பேன். உங்க கருத்த சொல்லுங்க.

ஒருத்தருக்கு பயனுள்ளதா இருந்தாக்கூட போதும் நான் தொடர் எழுத ரெடி. ஆனா அதுக்கப்பறம் கொஞ்ச நாளைக்கு வழக்கமா வெட்டி போஸ்ட் பார்க்க முடியாது.