தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Wednesday, August 12, 2009

மூன்று விரல் - வாசிப்பனுபவம்

பொதுவாக ஒரு புத்தகம் படித்தால் அதைப் பிடித்திருக்கும் பட்சத்தில் நண்பர்களுக்கு அந்த புத்தகத்தை சிபாரிசு செய்வேன். ஆனால் மூன்று விரல் என்னை மிகவும் குழப்பத்தில் ஆழ்த்திவிட்டது. இதை நண்பர்களுக்கு சிபாரிசு செய்யலாமா வேண்டாமா என்று இப்பொழுதும் தெரியவில்லை.

அப்படி குழப்பத்தில் ஆழ்த்தும் அளவிற்கு அதில் என்ன இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். முன்னூறு (335) பக்க நாவலில் முதல் நூற்றைம்பது பக்கத்தை மூன்று நாட்கள் விட்டு விட்டு படித்தேன். கடைசி நூற்றைம்பது பக்கத்தை, புத்தகத்தை கீழே வைக்காமல் படித்து முடித்தேன். இது இரா.முருகன் அவர்களின் முதல் நாவலாம். அவருடைய எழுத்தை நான் படிக்கும் முதல் நாவல் கூட. அதனால் இருவரில் ஒருவருக்கு ஸ்டார்டிங் ட்ரபில் போல என நினைத்து கொண்டேன். ஆனால் அதிக பக்கங்கள் ஸ்டார்டிங் ட்ரபிள் இருப்பது தான் பிரச்சனை.

மூன்று விரல் புத்தகத்தை எனக்கு சிபாரிசு செய்தது மலர்வனம் லக்ஷ்மி அக்கா. என்னுடைய ஆடு புலி ஆட்டம் கதையைப் படித்துவிட்டு அதைப் பற்றி பேசும் பொழுது மூன்று விரல் தவறாமல் படிக்கவும், சாப்ட்வேர் இஞ்சினியர்களின் வாழ்க்கையைப் பற்றி வந்த முக்கியமான (முதல்) நாவல் என்று சொன்னார். அதனால் எப்படியும் மூன்று விரல் படித்துவிட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.

முதல் நூறு பக்கம் தாண்டுவதற்குள் மூச்சு முட்டியது. பேசாம படிக்காம விட்டுடலாமா என்று சிந்தித்தேன். ஆனால் முழுதும் படிக்காமல் ஒரு புத்தகம் நன்றாக இல்லை என்று சொல்வது சரியா என்ற சந்தேகத்தில் அடுத்த ஐம்பது பக்கத்தை மிகவும் கஷ்டப்பட்டு படித்தேன்.அதன் பிறகு வேகம் எடுக்க ஆரம்பித்த புத்தகத்தை கீழே வைத்தது முதல் இப்பொழுது வரை சுதர்சனும், ராவும் என்னை விடாமல் துரத்துகிறார்கள்.

சுதர்சனுடன் பேங்காக்கிற்கு புறப்படும் குழுவில் ஒருவனாக நானும் பயணப்பட்டதைப் போலவே உணர்ந்தேன். ராவ் பாஸ்போர்ட் தொலைத்துவுடன் அதை நானும் சேர்ந்தே தேடினேன். விசா காலம் முடிந்து அவனுக்கு நடக்கும் நிகழ்ச்சிகளை என் டீமில் ஒருவனுக்கு நடப்பது போல பதறினேன். இந்திய மேனஜர் நீரஜை தமிழில் தெரிந்த அத்தனை “நல்ல” வார்த்தைகளிலும் அர்ச்சித்தேன்.

தாய்லாந்தில் க்ளைண்ட் டீம் இந்தியர்களை நடத்திய விதத்திற்கு எந்த விதத்திலும் குறைவில்லாமல் தான் எங்களையும் இங்கே அமெரிக்காவில் நடத்துவார்கள். அவ்வாறு நடத்தும் க்ளைண்டிற்கு மிக நேர்மையாக நடந்து கொள்ள முடியாமல் நம்மை குறைவாக நடத்தும் இந்திய மேளாலருக்கு நேர்மையாக நடந்து கொள்ளும் அபத்தம் சுதர்சனுக்கும் ஏற்படுகிறது.

வீட்டில் அப்பாவிற்கு பிரச்சனை வரும் போது ஊரிலிருக்கும் நண்பனை அழைத்து பார்த்து கொள்ள சொல்வது ஆன்சைட் வரும் ஒவ்வொருவர் வாழ்விலும் நடக்க கூடிய ஒன்று. பைத்தியம் பிடிக்கும் அளவிற்கு பிரச்சனைகளை சுதர்சன் சந்திக்கும் பொழுது அதில் எந்த வித அதிர்ச்சியும் ஏற்படவில்லை. இந்தியாவிலிருக்கும் போது அப்படி பைத்தியம் பிடிக்கும் நிலையில் கையில் குடையை வைத்து கொண்டு சொட்ட சொட்ட நினைந்து நடந்திருக்கிறேன். அப்படியே கழுத்திலிருக்கும் டேகை தூக்கி எறிந்துவிட்டு ஏதாவது ஒரு பேருந்தில் ஏறிவிடலாமா என்று தோன்றியிருக்கிறது.

உலகில் ஏதோ ஒரு மூலையில் நடக்கும் பிரச்சனை நம் வாழ்க்கையில் பெரிய சலனத்தை ஏற்படுத்த கூடிய வாய்ப்புகள் இந்த துறையில் இருக்கிறது. வெள்ளைக்காரர்கள் பற்றிய அனைத்து பிம்பங்களும் முதல் ஆன்சைட் ட்ரிப்புகளிலே அடித்து நொறுக்கப்படும். அதை மூன்று விரலிலும் காணலாம்.

வெறும் இரண்டு பாத்திரங்களைப் பற்றி மட்டும் அதிகம் பேசிவிட்டது போல தெரிகிறது. இங்கிலாந்தில் பிராஜக்ட் பிடித்து கொடுக்கும் ஜெஃப்ரி, க்ளைண்டாக வந்து காதலியாக மாறிய‌ சந்தியா, உடன் படித்து இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவான மிளகாய் மண்டி நண்பன் ராஜேந்திரன், அம்மா அப்பா பார்த்து வைத்த புஷ்பவல்லி (புஷ்பா, இந்த பெயர் படித்ததும் இருவர் பட ஐஸ்வர்யா ராய் நினைவிற்கு வந்தார்), எப்படா ஆஃபிஸ் முடியும், பாய் ஃபிரெண்டுடன் ஊர் சுற்ற வேண்டும் என்று காத்திருக்கும் பேங்காக் அழகி னாய் என அனைவரும் மனதில் இடம் பிடிக்கிறார்கள்.

இந்த நாவலை முடித்த விதத்தில் எனக்கு சிறிதும் உடன்பாடில்லை. ஏதோ பதற்ற‌த்தில் முடித்ததைப் போல தோன்றியது. வெண்ணிலா கபடி குழு படம் இறுதி காட்சியில் இயக்குனருக்காக எப்படி வருந்தினேனோ அவ்வாறே இரா.முருகனுக்காக வருந்தினேன். இவ்வளவு சூப்பரா கொண்டு வந்துட்டு இப்படி முடிச்சிட்டாரேனு.

சரி, படிக்கலாமா வேண்டாமானு சொல்லுனு கேட்டீங்கனா, முதல் சில பக்கங்களை வேகமாக உருட்டிக் கொண்டு சுதர்சனுடன் பேங்காக் புறப்படுங்கள் என்றே சொல்வேன். முடிந்தால் ஏதாவது பயணத்தின் பொழுது படியுங்கள். இந்த நாவலை வீட்டில் அமைதியாக படிப்பதை விட பயணத்தின் பொழுது படிப்பது சுகமானதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

புத்தகம் கிடைக்குமிடம் :

கிழக்கு பதிப்பகம்
விலை - 150 ரூ

Monday, August 03, 2009

உரையாடல் போட்டி முடிவுகள் - சில‌ எண்ண‌ங்க‌ள்

உரையாடல் போட்டி முடிவுகள் வரும் சனிக்கிழமையன்று வெளிவரும்னு நம்ம அண்ணன் சிவராமன் (பைத்தியக்காரன்) அறிவித்திருக்கிறார்.


போட்டியில் பங்கேற்றவன் என்ற முறையில் எனக்கு இருக்கும் சில எதிர்பார்ப்புகளை கொடுக்கவே இந்த பதிவு. சில பல போட்டிகளை நடத்தியும் நடுவராக இருந்தும் இருக்கிறேன் என்பதால் நான் சொல்லப் போகும் விஷயங்களில் இருக்கும் கடினமும் தெரியும் என்றாலும் இதனால் கிடைக்கும் பலன் அதிகமாக இருக்கும் என்பதால் இதை இப்பொழுதே சொல்லி விடுகிறேன்.


மேலும் முடிவுகள் வெளியான பின்பு இதை சொன்னால் தோற்றதினால் வந்த வெறுப்பில் சொல்கிறான் என்றோ, வென்றதனால் வந்த திமிரில் சொல்கிறான் என்றோ சொல்லக்கூடும் என்ற எண்ணமும் இருக்கிறது.


போட்டி நடத்துனர்களிடம் இருந்து எதிர்பார்ப்பது :

கலந்து கொண்ட அனைத்து கதைகளுக்கும் நடுவர்களின் எண்ணங்கள் மற்றும் அவர்கள் கொடுத்த மதிப்பெண்களை வெளிப்படையாக வைக்க வேண்டும்.


நன்மைகள் :

கலந்து கொண்ட அனைவருக்கும் இதில் ஒரு வகைத் திருப்தி இருக்கும். தோற்றிருந்தாலும் தான் தோற்றதற்கான காரணமும், ஒரு கதை ஏன் வெற்றி பெற்றது என்ற காரணமும் தெரிவது நல்லது. இல்லையென்றால் இது நிச்சயல் தவறாகவே பார்க்கப்படும்.


மேலும் அண்ணன் சிவராமன் சென்னையில் இருப்பதாலும், பிரபல(?!*@#)ப் பதிவர்கள் குழுமம்(?) என்ற ஒன்று மறைமுகமாக செயல்படுவதாகவும் வலைப்பதிவர்கள் மனதில் இருக்கும் எண்ணம் வலுவாகவும் வாய்ப்புகள் அதிகம். இது பிறகு நடத்தப்படும் போட்டிகளை பாதிக்கும். இந்த குழும அரசியலில் எனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை என்பதை இங்கே தெளிவாக்கிவிடுகிறேன்.


சிரமங்கள் :

பொதுவாக வலையில் நடக்கும் போட்டிகளில் முதல் கட்ட தேர்வு வாசகர்களின் ஓட்டுக்கள் அடிப்படையில் இருக்கும். அதில் தேர்வாகும் பத்து அல்லது இருபது கதைகளை நடுவர்களிடம் கொடுத்து படிக்க சொல்வார்கள். அதைப் படித்து நடுவர்கள் மதிப்பெண்களும் கருத்துக்களும் தெரிவிப்பார்கள். அதைத் தொகுப்பது ஓரளவு எளிது. ஆனால் இங்கு இருக்கும் இருநூற்றம்பது கதைகளுக்கு கருத்துக்களைத் தெரிவிப்பதும் மதிப்பெண்கள் கொடுப்பதும் மிகவும் கடினம்.


குறைந்த பட்சம் வெற்றி பெற்ற கதைகளை ஏன் தேர்ந்தெடுத்தார்கள் என்பதற்கு தெளிவான விளக்கம் கொடுத்தால் பரவாயில்லை.

இனி பதிவர்களிடம் இருந்து எதிர்பார்ப்பது


"மாமா நான் ஒண்ணு சொல்லட்டுமா? கேள்விக் கேக்கறது ரொம்ப சுலபம். பதில் சொல்லிப் பார்த்தா தான் அதோட கஷ்டம் தெரியும்" இது பஞ்சதந்திரத்தில் கமல் சொல்வது.


அது போலவே குறை சொல்வது ரொம்ப சுலபம். அதை செய்து பார்த்தால் தான் கஷ்டம் தெரியும்.


நமது விமர்சனம் போட்டியாளரை இன்னும் சிறப்பாக செயல்பட வைக்க வேண்டுமே தவிர, அவர் மனதை புண்படுத்தி, "ஏன்டா இதை நடத்தினோம்"னு ஃபீல் பண்ண வைக்க கூடாது.

இந்த ஒரு போட்டியில் எழுதி தோற்றால் சிறுகதை எழுத தெரியாது அல்லது முடியாது என்ற எண்ணக்கூடாது. அதே போல இது அந்த ஒரு கதைக்கான விமர்சனம் மட்டுமே. நம் மொத்த எழுத்திற்கும் நமக்குமான விமர்சனம் என்றும் எடுத்துக் கொள்ளாதீர்கள்.

அதேப் போல பிரபலப் பதிவர்கள் தான் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அவர்களுடைய கதையை விட என் கதை சிறப்பாக இருக்கிறது. எப்படி அதற்கு கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. எனக்கு வந்த பின்னூட்டங்களும் கிடைத்த ஓட்டுக்களுமே அதற்கு சாட்சி என்று வாக்குவாதம் செய்ய வேண்டாம். முடிவுகளை ஏற்றுக் கொள்ளுங்கள். இப்பொழுது எழுதுவதை விட சிறப்பாக எழுத முயலுங்கள். மிகச் சிறந்த சிறுகதை இதுவரை எழுதப்படவில்லை என்று எண்ணிக் கொள்ளுங்கள்.

ஊத‌ வேண்டிய‌ ச‌ங்கை நான் ஊதிவிட்டேன். இதுக்கு மேல உங்க‌ விருப்ப‌ம்.

போட்டியில் க‌ல‌ந்து கொண்ட‌ அனைவ‌ருக்கும் என் வாழ்த்துக‌ள்!!!

Sunday, August 02, 2009

சென்னைல இருக்கீங்களா?

நண்பர்களே!

நாளையிலிருந்து அதாவது ஆகஸ்ட் மூன்றாம் தேதியிலிருந்து பதினைந்தாம் (பத்தொன்பதிலிருந்து மாற்றப்பட்டுள்ளது) தேதி வரை, ”The Alliance Française of Madras”ல் நம் அருமை நண்பர் CVR அவர்களின் புகைப்படக் கண்காட்சி நடக்கிறது.

நீங்கள் சென்னையில் இருந்து, புகைப்படக் கலையில் ஆர்வம் இருந்தாலோ, அல்லது புகைப்படம் எடுக்கும் CVR மேல் ஆர்வம் இருந்தாலோ (இது பெண்களாக இருக்கும் பட்சத்தில் மட்டும்) உங்களுக்கு ஒரு அருமையான வாய்ப்பு. CVR மூன்றாம் தேதியும், வார இறுதி நாட்களிலும் அங்கு இருப்பார். நீங்கள் அவருடைய புகைப்படங்கள் பற்றி (மட்டும்) விளக்கங்களைக் கேட்கலாம்.

சக பதிவரை ஊக்குவிக்க வேண்டும் என்று ஆர்வம் இருப்பவர்களும் சென்று பார்க்கலாம்.

இது CVR பதிவிலிருந்து காப்பி (டீ, ஹார்லிக்ஸ், போர்ன்விட்டா எப்படி வேணா வெச்சிக்கோங்க)


Greetings to all of you!

As we prepare ourselves to celebrate MADRAS DAYon the 22nd of August, the Alliance Française of Madras, is proud to be part of this city that is rich in culture and tradition, yet contemporary and modern. We have a series of events to celebrate Madras, starting with an exhibition by a young and talented individual who interprets Chennai with his captivating pictures.
The Alliance Française of Madras invites you to an exhibition of photography by C V Ramanujan.
IMAGES OF CHENNAI
3rd to 19th August 2009
Timing is from 9 to 7 on all days of the week except sunday
AFM GALLERY
Inauguration on August 3rd at 5 PM

CVR is a photo enthusiast working in an IT company. When he is not busy coding you can find him in the streets of Chennai, photographing the interesting people, sights and wonders this great city has to offer.
In his own words
'"Like a kid jumping across the skies to catch hold of the stars, I set out with my camera, in an effort to capture the beauty around me.

How much am I successful, I leave it to you to decide. But the art of photography both fascinates me and humbles me. And with Chennai as an inspiration, I hope to learn more and more about this magic art of freezing time."


Dakshin Chitra Potter - Wonder what my maker's design is....
This picture was taken at Dakshin Chitra. DakshinaChitra is a center for the living traditions of art, folk performing arts, craft and architecture of India with an emphasis on the traditions of South India. It contains meticulously recreated replicas of traditional houses from Tamilnadu, Kerala, Andhra pradesh and Karnataka. The place is also home to performances from the staff enacting and teaching many of the traditional practices and art forms of South India.Chennai Central jail inside - Gods of all colors


The Chennai Central jail is more than 150 yrs old and has been a host to many leaders and freedom fighters.
The government has decided to demolish the buildings and use the place for other purposes.
The campus was opened for the public before it can be demolished. Inside one could find clear signs of the former inmates' devotion.
Chennai MRTS Train - Chennai MRTS train
This picture was taken at the MRTS station at Velachery. The Chennai local train has a unique majestic look. One can’t help admiring the pride and arrogance in its face of not having to stop for anyone. The bold and confident attitude clearly evident, the Chennai local train is the representation of the character of the people of Chennai who are high on self-respect. May be that’s why we love the local trains so much.

For further information please contact C V Ramanujan
www.simplycvr.blogspot.com
http://cvrintamil.blogspot.com/

www.flickr.com/photos/seeveeaar

Contact AFM at 2827 9803/ 2827 1477

-------------------------------------------------------------------------

All the Very best CVR!!!

Saturday, August 01, 2009

சமீபத்தில் படித்த புத்தகங்கள்!!!

புத்தகங்களை விமர்சிக்க எனக்குத் தெரியாது என்பதால் இது வெறும் வாசிப்பனுபவம் மட்டுமே.

வேர்பற்று - இந்திரா பார்த்தசாரதி
இந்திய சுதந்திர போராட்டத்தின் இறுதி கட்டத்தில் துவங்குகிறது கதை. சாதியத்தை வெறுக்கும் ஒரு பிராமண இளைஞனை (கேசவன்) மையமாக கொண்டு எழுதப்பட்டது. நாவலின் கதையை சொல்லி அதை வாசிக்கும் அனுபவத்தை கெடுக்க விரும்பவில்லை. மேலும் புத்தகம் தற்பொழுது என் கையில் இல்லாததால் சரியான வாக்கியங்களை எடுத்து தர

இயலவில்லை. நினைவில் இருந்து எழுதுகிறேன்.

எனக்கு இந்த நாவலில் பிடித்த சில விஷயங்களை மட்டும் சொல்லி விடுகிறேன்.

சாதி பற்று, சாதி எதிர்ப்பு என்று இரு தரப்பு மக்களையும் விட மனசாட்சிக்கு மட்டுமே கட்டுப்படும் கேசவனுடைய தந்தை நம் மனதில் உயர்ந்து நிற்கிறார்.

ஒரு பெண் அருகில் இருக்கும் போது ஆண்கள் எப்படியெல்லாம் தங்களை வெளிப்படுத்தி கொள்ள முயல்வார்கள் என்பதை அழகாக காட்டியிருப்பார் இ.பா. இதை நான் பல முறை அனுபவத்திருக்கிறேன். சாதாரணமாக நான்கு ஆண்கள் பேசிக் கொள்ளும் போது நடக்கும் உரையாடலில் ஒரு பெண் வந்துவிட்டால், அது சதுரங்க ஆட்டமாக மாறிவிடும். ஒவ்வொரு உரையாடலும் ஒரு சதுரங்க ஆட்ட காய் நகர்த்தலைப் போல இருக்கும். இது இந்நாவலில் அப்பட்டமாக தெரிந்தது. ஆனால் இந்த சதுரங்க ஆட்டத்தில் சில காய்களை அந்த பெண்ணே வெட்டுவது எனக்கு பாலச்சந்தர்தனமாகப் பட்டது. இது என் எண்ணம் மட்டுமே.

கேசவன் ஆதாயத்திற்கு (சைக்கிளுக்காக) கொள்கையை விட்டுக் கொடுத்துவிட்டு, ஏங்கல்ஸை வைத்து நியாயப்படுத்த முயலும் போது, “ஏங்கல்ஸே இவ்வாறு சொல்லியிருக்கிறார்”

(எப்படியும் சக தோழருக்கு ஏங்கல்ஸ் இப்படி சொல்லியிருக்க மாட்டார் என தெரியாது என்ற நம்பிக்கையில்), “அவர் அதை வேற சந்தர்ப்பத்தில சொன்னார்”னு சக தோழர் சொல்லும் போது நம்மை அறியாமல் சிரித்து விடுவோம்.

அதேப் போல கேசவனுடைய பெரியப்பாவை சாமியார் ஆக்க முயலும் போதும் நம்மை அறியாமல் சிரிக்க வைத்து விடுகிறார் இ.பா.

இதை விட நான் ரசித்த இடம், கேசவனுடைய அறைத் தோழன் கிருஷ்ணன் சொல்லும் ஒரு விஷயம். “வார்த்தைகளின் பயன்களை தெரியாமல் நாம் அவற்றை அளவுக்கு அதிகாம பேசி அவற்றின் சாரத்தை இழந்து விட செய்கிறோம். ஒரு வேளை இதை உணர்த்துவதற்க்காகத்தான் காந்திஜி மௌன விரதம் இருக்கிறார் போல”

அதே போல் இந்த வரியும், “நாட்டிற்கு விடுதலை கிடைத்ததும் முதல் பலி. தேசத்தின் தந்தை”

காந்திஜியின் மரணத்தின் பொழுது நம்மை அறியாமல் ஒரு சோகம் மனதில் அப்பிக் கொள்கிறது.

சாதியை எதிர்க்கும் பிராமணனிற்கு மார்க்ஸை விட்டால் வேறு வழியில்லை என கேசவன் நினைப்பதாகவே என் மனதில் பட்டது. பிறகு தன்னுடைய சாதி எதிர்ப்பைக் காட்டவே தமிழில் மேற்படிப்பை படித்து பெரு அவதிக்குள்ளாகிறான். இறுதியில் திருப்பாவை(திருவாய்மொழி?) பாடி வேலை வாங்குகிறான். சாதியை எதிர்த்து பயணப்பட்டவன், திருமண் இட்டுக் கொண்டு வேலைக்கு செல்ல ஆரம்பிக்கிறான். நாவல் முடிகிறது.

மானசரோவர் - அசோகமித்திரன்
ஒரு தமிழ் கதாசிரியனுக்கும் (கோபால்) ஒரு மிக பிரபலமான (சத்யன் குமார்) இந்தி நடிகருக்கும் இடையே இருக்கும் நட்பை அடிப்படையாக கொண்ட நாவல். நல்ல புத்தகம் படிக்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு நிச்சயமாக இந்த புத்தகத்தை நான் சிபாரிசு செய்வேன். (இந்த வாக்கியத்தில் புத்தகம் என்ற வார்த்தை இரண்டு முறை வருகிறது. இதைப் போல ஒரு வாக்கியத்தை அந்த கதாசிரியன் கண்டிப்பாக எழுத மாட்டான்). மானசரோவரை, எளிமையாகப் புனையப்பட்ட கனமான கதை என்று சொல்லலாம்.

எனக்கு நாவலில் பிடித்த விஷயங்களை சொல்வதாக இருந்தால் முழு நாவலையும் கொடுக்க வேண்டியதிருக்குமோ என்ற பயம் ஏற்படுகிறது. பிடித்த இடங்களை குறிக்க ஆரம்பித்து கடைசியில் பார்த்தால் பாதி புத்தகத்திற்கு மேலாக குறிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. முதல் வாசிப்பில் தெரியாத ஒரு தவறு இரண்டாம் வாசிப்பில் பட்டது. இதைத் தான் முத்துலிங்கம் அவர்களுடன் பேசிக் கொண்டு வந்ததாக முந்தையை பதிவில் சொன்னேன். நாவலைப் படிக்காதவர்கள் அடுத்த பத்தியை தயவு செய்து வாசிக்க வேண்டாம்.

கதை முழுக்க தன்மை (First Person) நிலையிலிருந்து சொல்லப்பட்டுள்ளது. அதாவது கதை சொல்லியின் மனவோட்டத்திலிருந்து. இப்படி சொல்லப்படும் கதைகளின் பலவீனமாக நான் கருதுவது, சஸ்பன்ஸைக் காப்பாற்ற முடியாது. அதுவும் ராஜா இறந்த நிலையில், ஜம்பகம் இரும்பு சங்கிலியால் பிணைக்கப்பட்ட ஒரு நிலையிலிருக்கும் போதும் நிச்சயம் சத்யன் குமார் மனதில் அவர்கள் மூவரும் சம்பந்தப்பட்ட அந்த சஸ்பன்ஸ் காட்சி ஓடியிருக்க வேண்டும். அது தான் சாதாரண மனிதனின் மனநிலை. மேலும் சத்யன் குமார் குற்றவுணர்ச்சியில் நடந்த சம்பவத்தை நினைத்து பார்க்காமல் இருந்திருக்க மாட்டார். அப்படி நினைத்துப் பார்க்கும் போது அது நமக்கு சஸ்பன்ஸாக இருக்க முடியாது. இது ஒரு பெரிய சறுக்கலாக என் மனதில் பட்டது. ஆனால் இது இரண்டாம் வாசிப்பில் ஒரு எழுத்தாளனாக பார்க்கும் போது ஏற்பட்டது தானே ஒழிய முதல் வாசிப்பில் அது தோன்றவில்லை.

காலவெள்ளம் - இந்திரா பார்த்தசாரதி
மீண்டும் இந்திரா பார்த்தசாரதி. மீண்டும் பிராமணக்குடும்ப கதை. இந்த கதையின் களம் திருவரங்கம். இது தான் இ.பாவின் முதல் நாவலாம்.

வேர்பற்றில் வரும் அதே வசனம் காலவெள்ளத்திலும் வருகிறது. “மக்களுக்காக புரட்சியா அல்லது புரட்சிக்காக மக்களா?” இது இ.பாவில் மனதில் பல நாட்களாக இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த கதையை நாடகமாக எடுத்தால் ஆயிரம் எபிசோடுகள் எடுக்கலாம். நிச்சயம் ஹிட். என்னைப் பெரிதும் கவரவில்லை.

ஆகாயத் தாமரை - அசோகமித்திரன்
அசோகமித்திரன் எழுத்து என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. ஏன் என்று புரியவில்லை. ஒருவேளை கதையின் அடித்தளத்தில் ஒரு சோகம் ஓடிக் கொண்டிருந்தாலும் கதையில் பல இடங்களில் வாய் விட்டு சிரிக்க வைப்பதினாலா என்று தெரியவில்லை. கசப்பான காபியில் சர்க்கரையின் சுவைத் தெரிவதைப் போல. இவருக்கு நல்ல நகைச்சுவை உணர்வு இருக்க வேண்டும். எவ்வளவு கடினமான விஷயத்தையும் எளிமையாக சொல்லிவிடுகிறார்.

அகாயத் தாமரை, ஒரு இருபத்தைந்து வயது இளைஞனின் கதை. நான்கு நாட்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு மனதிற்கு பிடித்த ஒரு காரியம் செய்யப் போக அதனால் அவன் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றத்தை முன் வைத்து எழுதப்பட்ட கதை. மானசரோவருடன் இதை ஒப்பிட முடியாது என்றே தோன்றுகிறது. சென்னை வாசிகளுக்கு இந்த நாவல் பிடித்து போக வாய்ப்புகள் மிக அதிகம். சென்னைப் பிடிக்காத என்னைப் போன்றோர்களுக்கும் பிடிக்கும் :)

இந்த நான்கு புத்தகங்களுமே கிழக்கு பதிப்பகத்தில் கிடைக்கிறது.

மானசரோவர்
ஆகாயத்தாமரை
வேர்பற்று

தற்போது சுதேசமித்திரனின் ஆஸ்பத்திரி படித்துக் கொண்டிருக்கிறேன். படிக்க வித்தியாசமாக, சுவாரஸ்யமாக பல இடங்களில் நகைச்சுவைக் கலந்து சிந்திக்க வைக்கிறது. படித்து முடித்தவுடன் பகிர்ந்து கொள்கிறேன்.