தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Thursday, April 30, 2009

போட்டியில் வென்று வாங்கிய புத்தகங்கள்!!!

சங்கமம் போட்டிக்கு கதை எழுதறதுக்கு செலவிட்ட நேரத்தை விட புத்தகம் வாங்கறதுக்கு அதிக நேரம் செலவழிக்க வேண்டியதா போச்சு. என் கதைக்கு குறைவா மார்க் போட்ட பாவத்துக்கு (ஹி ஹி) பாபாவையும் பிரிச்சி மேஞ்சாச்சு. நமக்கு தெரிஞ்ச எழுத்தாளர்கள் கல்கி, சாண்டில்யன், அகிலன், சுஜாதா, பாலகுமாரன். அதுவும் சுஜாதா, பாலகுமாரன் கதை போன நவம்பர்ல இந்தியா வந்தப்ப தான் படிச்சேன். அதனால இந்த முறை 1250க்கு என்ன புத்தகம் வாங்கறதுனு தெரியல. சரினு uyirmmai.com ல போய் சுஜாதாவோட குறுநாவல்கள் எல்லாம் செலக்ட் பண்ணேன். அப்பறம் இன்னும் ரெண்டு சுஜாதா புக். பார்த்தா 1250 தாண்டிடுச்சி. 

எழுத்துலகுல எப்பவும் நமக்கு வழிகாட்டி (ஹி ஹி. தமிழ்ல எப்படி எழுதறதுனே அவர் தான் எனக்கு சொல்லி கொடுத்தாரு) பாபா தானே. அதான் அவருக்கு லிஸ்ட்டை அனுப்பினேன். அவர் அப்படியே ரிஜக்ட் பண்ணிட்டாரு. ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன் (மறைவாய் சொன்ன கதைகள்), ஆதவன், அ.முத்துலிங்கம் (உண்மை கலந்த நாட்குறிப்புகள்) இப்படி கலவையா வாங்க சொன்னாரு. ஜெயமோகன் எல்லாம் புரியாத மாதிரி எழுதுவாரு (நான் கடவுள் பார்த்த எஃபக்ட்) அப்படினு நான் சொன்னவுடனே, அப்படியெல்லாம் இல்லை. படிச்சா நிச்சயம் புரியும். அதனால தவற விடாதேனு சொன்னாரு. 

அப்பறம், இதை எல்லாம் நல்லா ஆராய்ச்சி பண்ணிட்டு, கிழக்கு பதிப்பகத்துல என்ன இருக்குதுனு பார்க்கலாம்னு போனேன்.

இந்திரா பார்த்தசாரதி பேர் முதல்ல இருந்தது. நான் கேள்விப்பட்டது குருதிப்புனல் மட்டும் தான். அதுவும் கமல் நடிச்சதுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லைனு கேள்விப்பட்டதால ஞாபகம் இருக்கு. வேற எதுவும் தெரியலை. அதனால அதை மட்டும் செலக்ட் பண்ணேன். அப்பறம் பா.ராகவனோட என் பெயர் எஸ்கோபர், நிலமெல்லாம் ரத்தம் செலக்ட் பண்ணேன். அடுத்து இரா.முருகனோட அரசூர் வம்சம், மூன்று விரல், இரா.முருகன் சிறுகதைகள் செலக்ட் பண்ணி அவர்ட்ட கருத்து கேட்டு அனுப்பியிருந்தேன். முன்னாடி அனுப்பன லிஸ்ட்க்கும் இதுக்கும் சம்பந்தமேயில்லை. இருந்தாலும் அவர் அதைப் பத்தியெல்லாம் எதுவும் சொல்லாம, எல்லாமே நல்ல புத்தகம் தான். தாராளமா வாங்கலாம்னு சொன்னாரு. அரசூர் வம்சம் மட்டும் எடுத்தவுடனே படிக்க கொஞ்சம் கஷ்டமா இருக்கலாம்னு சொன்னாரு.

நாம அப்பவும் விடுவோமா, கடைசியா அவருக்கு ஃபோன் போட்டே பேச ஆரம்பிச்சிட்டேன். அப்படி பேசி கடைசியா கொண்டு வந்த லிஸ்ட் தான் இது. 

Ashokamithran - 

தண்ணீர் - http://nhm.in/shop/978-81-8368-087-5.html 

கரைந்த நிழல்கள் - http://nhm.in/shop/978-81-8368-082-0.html

18வது அட்சக்கோடு - http://nhm.in/shop/978-81-8368-102-5.html

மானசரோவர் - http://nhm.in/shop/978-81-8368-107-0.html

Indira Parthasarathy

வேர்ப்பற்று - http://nhm.in/shop/978-81-8368-152-0.html

சுதந்தர பூமி - http://nhm.in/shop/978-81-8368-121-6.html

தந்திர பூமி - http://nhm.in/shop/978-81-8368-129-2.html

குருதிப்புனல் - http://nhm.in/shop/978-81-8368-072-1.html


Aadhavan


Devan

ஸ்ரீமான் சுதர்சனம் - http://nhm.in/shop/978-81-8368-303-6.html

ராஜத்தின் மனோரதம் - http://nhm.in/shop/978-81-8368-314-2.html

வாங்கணும்னு லிஸ்ட் போட்டு வாங்காம விட்டதெல்லாம் சொந்த காசுல வாங்கிட வேண்டியது தான். ஆனா முதல்ல வாங்கினதை எல்லாம் படிக்கணும். வீட்டுக்கு எல்லா புத்தகங்களும் வந்துடுச்சாம்.

முக்கியமான விஷயம். இந்த பரிசை தர Oviam Hosting நிறுவனர் கணேஷ் சந்திரா ரொம்ப அக்கறையோட பேசினாரு. அவரும் நிறைய ஆப்ஷன்ஸ் சொன்னாரு. நான் புத்தகம் பாக்கற சமயத்துல Anyindian.com வேலை செய்யலை. எல்லா புத்தகங்களையும் தூக்கிட்டாங்க. (இப்ப மறுபடியும் வேலை செய்ய ஆரம்பிச்சிடுச்சி). அதனால உயிர்மை, கிழக்கு பதிப்பகம் இப்படி பிரிச்சி வாங்கிக்கறதுனா கூட ஓகே தானு சொல்லி 25$ கிப்ட் கார்ட் கொடுத்துட்டாரு. பக்கா ஜெண்டில் மேன். 

அப்பறம் கிழக்கு பதிப்பகம் பத்தியும் சொல்லி ஆகணும். ஆர்டர் பண்ணவுடனே ஆர்டர் ஸ்டேடஸ் பத்தி மெயில் அனுப்பினாங்க. அதே மாதிரி புத்தகத்தை அனுப்புன உடனே ஒரு மெயில். அதே மாதிரி ஒரு புத்தகத்தோட விலை அதிகமா இருந்ததுனு மீதி காசையும் அனுப்பிட்டாங்க. ஆனா உயிர்மைல அதுக்கு ரெண்டு வாரம் முன்னாடி ரெண்டு புத்தகம் ஆர்டர் பண்ணினேன். என்ன ஆச்சுனே தெரியல. மெயில் அனுப்பி கேட்கணும். சுஜாதாவோட திரைக்கதை எழுதுவது எப்படி? புத்தகம் தான். அடுத்து சினிமா இண்டஸ்ட்ரி தான் நம்ம டார்கெட் :-)

இனிமே புத்தகம் கிடைக்கலனு கடை கடையா ஏறி இறங்கறதுக்கு பதிலா அழகா இப்படி ஆன்லைன்லயே ஆர்டர் பண்ணிடலாம். மூணே நாள்ல வீட்டுக்கு வந்துடும்.

கடைசியா வழக்கம் போல எல்லாருக்கும் நன்றியை சொல்லிடுவோம். போட்டி நடத்தின சங்கமம், பரிசு கொடுத்த oviam hosting, கதைக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்த வாசகர்கள், நடுவர்கள், புத்தகங்களை தேர்ந்தெடுக்க உதவிய பாபா அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

தருண் கதைகள்

கடவுள் நம்பிக்கை சின்ன வயசுல சொல்லி சொல்லி தான் வருதுனு நிறைய பேர் சொல்றாங்க. அதைப் பற்றி பெரிய விவாதம் எல்லாம் கூட என் வலைப்பதிவுல நடந்திருக்கு. ஆனா நாத்திகம் வயது வந்து பக்குவம் வந்தவுடன் ஏற்பதுனு அங்க சொல்லியிருந்தாங்க. அது எந்த அளவுக்கு உண்மைனு தெரியலை.

என் அக்கா பையனுக்கு சின்ன வயசுல இருந்து கடவுள் நம்பிக்கை இல்லை. சின்ன வயசுனா மூணு வயசுல இருந்தே. இப்ப ஆறு வயசு தான் ஆகுது. இங்க ஆத்திகமா, நாத்திகமானு நான் விவாதிக்க விரும்பல. சில அழகான விஷயங்களை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்.

அவனுக்கு மூணு வயசாகும் போது சாமி கும்பிட வர மாட்றான், கோவிலுக்கு வர மாட்றான், அப்படியே வந்தாலும் அழுது ஆர்ப்பாட்டம் பண்றானு அக்காவுக்கு ரொம்ப வருத்தம். அப்படியே வந்தாலும் நிறைய கேள்வி.

பிள்ளையாரு இவ்வளவு குண்டா இருக்காரு, அவரு ஏன் எலி மேல போறாரு. எலி வேணா யானை மேல போகலாம், யானை போய் எலி மேல போக முடியுமா?இது தான் எங்க அக்கா என்கிட்ட அவனைப் பத்தி கம்ப்ளைண்ட் பண்ண முதல் கேள்வி.

அடுத்து, சாமி எல்லாம் ஏன் கல்லா இருக்கு? (கல்லுல ஏன் சாமி செய்யறாங்கனு கேக்கல)

ராமருக்கு துப்பாக்கி சுட தெரியுமா?

இந்த மாதிரி தினமும் ஏதாவது கேள்வி கேட்டுட்டு இருந்தான். இப்ப கேள்வி கேக்கறதை விட்டுட்டு கதை சொல்ல ஆரம்பிச்சிட்டாரு. தினமும் ஏதாவது ஒரு கதை.

அவர் கடைசியா சொன்ன கதை கேட்டு எனக்கே ஒரே சிரிப்பு. ஜெய் ஹனுமான் பார்த்துட்டு இருந்தான். உடனே அக்காகிட்ட கதை சொல்ல ஆரம்பிச்சிட்டானாம்.

அம்மா "அனுமான் பொறக்கும் போது க்ரிஸ்டியனா பொறந்தாரும்மானு."

உடனே அக்கா, "என்னடா உளர்ற?" அப்படினு கேட்டுருக்காங்க.

"ஆமாம்மா. சீரியஸா தான் சொல்றேன். அவர் முதல்ல க்ரிஸ்டியனா பொறந்தாரு. அப்பறம் அவருக்கு கல்யாணம் பண்ணனும்னு ஆசை வந்துடுச்சி. உடனே பெருமாள் சாமிட்ட போய் எனக்கு கல்யாணம் பண்ணி வைனு சொல்லிருக்காரு.

அப்ப பெருமாள் தான் இவரை ஹிந்துவா மாறினா தான் உனக்கு கல்யாணம் பண்ணி வைப்பேனு சொல்லிட்டாரு. உடனே இவரும் மாறிட்டாரு. அப்பறம் பெருமாள் இவரை உன் அழகுக்கு பொண்ணே கிடைக்கலனு சொல்லி ஏமாத்திட்டாரு."

அப்படினு சொல்லிருக்கான். அக்கா இதை என்கிட்ட சொல்லி, இவனுக்கு எப்படித்தான் இதெல்லாம் தோணுதுனே புரியலனு சொல்லி ஃபீல் பண்ணாங்க.

அவர் பேரு தருண். இனிமே அவர் கதைகளை எல்லாம் என் வலைப்பதிவுல தொகுக்கலாமானு யோசிச்சிட்டு இருக்கேன்.

குழந்தைகளின் உலகம் அழகானது மட்டுமல்ல ஆச்சரியமானதும் கூட.

Tuesday, April 21, 2009

சரத்பாபுவிற்கு ஓட்டுப் போட போறீங்களா?

வலைப்பதிவுல இப்ப அதிகமா சரத்பாபு என்கிற ஐஐஎம் கிராஜுவேட் எலக்‌ஷன்ல நிக்கறதைப் பத்தி தான் பேசறாங்க. அவரோட சாதனைகள் நிச்சயம் பாராட்ட வேண்டிய ஒன்று தான். ஆனா இந்த ஒரு காரணத்தை வைத்து அவருக்கு ஆதரிப்பதில் என்ன நியாயம். மாற்றம் கொண்டு வருவோம்னு சொல்றது கேட்டு கேட்டு போர் அடிச்சி போச்சு. ஓபாமால ஆரம்பிச்சி, விஜயகாந்த, சரத்குமார் வரைக்கும் அதை தான் சொல்றாங்க. இப்ப கார்த்திக் கூட அதை தான் சொல்றாராம். இப்ப இந்த புது அரசியல்வாதிகள் எல்லாம் மாறாம சொல்றது மாற்றம் தான். இப்படி வார்த்தைல சொல்றதை வெச்சிட்டு ஒருத்தரை எப்படி நம்ப முடியும்.

ஏழ்மைல இருந்து ஐஐஎம்க்கு போயிருக்காரு. இதே மாதிரி ஏழ்மைல இருந்து அரசியலுக்கு வந்திருக்கவங்க நிறைய பேர். அவுங்க கொள்ளை அடிக்காம விட்டாங்களா? இல்லையே. ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு திறமை மூலமா மக்களை வந்தடைஞ்சாங்க. எம்ஜிஆர் ஏழ்மைல இருந்து சினிமா மூலமா அரசியலுக்கு வந்தார். கலைஞர் ஏழையா இல்லைனாலும் வசதியானவர் இல்லை. அவரும் அவரோட தமிழ் மூலமா மக்களை வந்தடைந்தார். இவர் படிப்பு மூலமா வரார். அவ்வளவு தான் வித்தியாசம். இவுங்களோட ஆட்சில இல்லாத ஊழலா, கொள்ளையா? வசதியான இடத்துல இருந்து வந்து கொள்ளை அடிச்சவங்க ஜெயலலிதா மட்டும் தான். மத்தபடி ஏழ்மைல இருந்து வந்திருக்காரு, மக்களோட கஷ்டம் தெரியும் அதனால மக்களுக்கு நல்லது செய்வார்னு எல்லாம் நிச்சயம் சொல்ல முடியாது. 

அடுத்து நல்லா படிச்சிருக்காரு. அதனால நல்லது செய்வாரு. நல்லா படிச்ச ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிங்க ஊழல் பண்றதில்லையா இல்லை அராஜகம் பண்றதில்லையா? அவரைவிட பெரிய இடத்துல (ஹார்வேர்ட் பிஸினஸ் ஸ்கூல்) படிச்ச ப.சிதம்பரத்தை எத்தனை பேர் ஆதரிப்போம். இவ்வளவு படிச்சவங்களை விட காமராசர் நிறைய நல்லது செய்யலையா? பெரிய இடத்துல படிச்சிருக்காரு அதனால புத்திசாலித்தனமா நல்லது பண்ணுவாருனு எல்லாம் நம்ப முடியாது. அப்படியே போன எலக்‌ஷன்ல கூட்டம் கூட்டமா ஆதரித்த லோக் பரித்ரனையும் நினைவில் கொள்ளுங்கள்.

அப்ப இவருக்கு ஆதரவு தெரிவிக்க கூடாதுனு சொல்றயானு கேக்கறீங்களா? நிச்சயம் ஆதரவு தெரிவிக்கலாம். ஆனா எப்ப? 

அவரோட திட்டம் என்னனு கேளுங்க. அதை எப்படி செயல்படுத்த போறாருனு கேளுங்க. வெறுமனே இளைஞர், படித்தவர், ஏழ்மையில் இருந்து வந்து சாதித்தவர் அப்படிங்கற காரணத்துக்காக அவரை கண்ணை மூடிட்டு ஆதரிக்காதிங்க. அதுவே பெரிய தப்பு தான். கேள்வி கேளுங்க. மக்கள் விழிப்போட தான் இருக்காங்கனு அவர் புரிஞ்சிக்கட்டும். யாரையோ எதிர்க்கணும்னு ஒருத்தரை ஆதரிக்காதிங்க. கேள்வி கேட்டா தான் கொஞ்சம் பயம் இருக்கும். நம்ம பதில் சொல்ற இடத்துல இருக்கோம்னு அவருக்கு நினைப்பு இருக்கும். பதில்கள் நேர்மையாக இருக்கும் பட்சத்தில் அவரை ஆதரிப்போம். அவசரம் வேண்டாம். 

Friday, April 17, 2009

தல, தள ரசிகர்களுக்கு...

ஆர்குட்ல அடிச்சிக்கிட்டீங்க விட்டாச்சு. யூ ட்யூப்ல அடிச்சிக்கிட்டீங்க, பார்த்து சிரிச்சிட்டு விட்டாச்சு. இப்ப வலைப்பதிவுலயும் ஆரம்பிச்சிட்டீங்களா?

விஜய் வில்லுல நடிச்சா, அஜித் போட்டி போட்டு ஏகன்ல நடிப்பாரு. அதாவது அவர் தம்பி டைரக்ட் பண்ற படத்துல நடிச்சா, இவர் அண்ணன் டைரக்ட் பண்ற படத்துல நடிப்பாராம். ரெண்டுமே கேவலமா இருந்தது அடுத்த விஷயம்.

இப்படி ரெண்டு பேருமே போட்டி போட்டு மக்களை டார்ச்சர் தான் பண்றாங்க. அப்படி இருக்கும் போது நீங்க இப்படி அலப்பற கொடுக்கறீங்களே. உங்களுக்கே இது நியாயமா இருக்கா?
நீங்க எல்லாம் கொடுக்கற அலப்பறைல தான் ரெண்டு பேரும் மாத்தி மாத்தி பஞ்ச டயலாக் சாரி சாரி.. பஞ்ச் டயலாக் பேசி டார்ச்சர் பண்றாங்க. ஒருத்தர் தெலுகு படத்தை ரீமேக் பண்ணா இன்னொருத்தர் போட்டி போட்டு தமிழ் படத்தையே ரீமேக் பண்றார். இந்த கொடுமைக்கு நீங்க இவ்வளவு பில்ட் அப் கொடுத்துட்டு இருக்கீங்க.

ஒழுங்கா பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, லவ் டுடே, துள்ளாத மனமும் துள்ளும்னு நடிச்சிட்டு இருந்த விஜயையும், வாலி, அமர்க்களம், முகவரினு நடிச்சிட்டு இருந்த அஜித்தையும் ஏத்திவிட்டு ஏத்திவிட்டு உருப்படியில்லாம பண்ணிட்டீங்க. இப்பவாவது நீங்க அடங்கினா தானா அவுங்களும் நல்ல படத்துல நடிக்க ஆரம்பிப்பாங்க. அது தான் எல்லார் ஆசையும்.

பேயை ஏமாற்ற முடியுமா?

13B படம் பார்த்ததுக்கு அப்பறம் இந்த 13 நம்பர் பத்தியே சிந்தனை ஓடிட்டு இருந்தது.

எங்க ஆபிஸ் கட்டடம் 13 ஃபிளோர். ஆனா 13க்கு பதிலா 14 போட்டிருப்பாங்க. லிப்ட்ல 12க்கு அப்பறம் 14 தான் இருக்கும். போன வாரம் மதியம் சாப்பிட்டு வரும் போது என் டீம் லீட் கூடவே வந்தாரு. அவர் இந்த 13 கான்செப்ட்ல தீவர நம்பிக்கை வெச்சிருக்கறவரு. 13ம் தேதி வெள்ளிக்கிழமை வந்துச்சுனா, அன்னைக்கு எதுவும் வேலை செய்யாதுனு பரிபூர்ணமா நம்புவாரு. அதுவும் மதியம் 2 மணிக்கு மேல எந்த வேலையும் ஆரம்பிக்க வேண்டாம்னு சொல்லிடுவாரு. இது நமக்கு சாதகமா இருக்கேனு விட்டுடுவேன்.

லிப்ட்ல வரும் போது இதைப் பத்தி பேச ஆரம்பிச்சேன். ”ஏன் ரோஜர் இந்த 12க்கு அப்பறம் 14 போட்டிருக்கீங்களே. ஏன் அப்படினு கேட்டேன்”

உடனே அவர், “பேய் லிப்ட்ல ஏறுச்சுனா 13ம் நம்பரைத் தான் தேடும். அப்படித் தேடி, அது இல்லைனா ஏமாந்து போயிடும்” அப்படினு சொன்னாரு.

உடனே நான், “பேய் லிப்ட்ல வராம படிக்கட்டுல வந்துச்சுனா என்ன பண்ணுவீங்கனு” கேட்டேன்.

”ஒரு ஒரு ஃப்ளோர்லயும் படிக்கட்ல ஏறும் போது கதவுக்கு முன்னாடி ஃப்ளோர் நம்பர் போட்டிருக்கும். அங்கயும் 12க்கு அப்பறம் 14 தான். அதனால மேல கீழனு மாறி, மாறி ஏறி, இறங்கி ஏமாந்து போயிடும்”னு சொன்னாரு.

விடுவோமா நாம. “பேய்க்கு இந்த நம்பர் சிஸ்டம் தெரியாம, மம்மி பேய் மாதிரி இருந்தா என்ன பண்ணுவீங்க. இல்லைனா ரோமன் நம்பர் மட்டும் தெரிஞ்சா என்ன பண்ணுவீங்க”னு கேட்டேன். மனுஷன் அப்படியே ஷாக் ஆகிட்டாரு.

அப்பறம் ஒரு வழியா சமாளிச்சி, “அந்த பேய் எல்லாம் ஈஜிப்ட்ல தான் இருக்கும். இங்க வெறும் அமெரிக்க பேய் மட்டும் தான் இருக்கும்”னு சொன்னாரு.

”அப்படினா அந்த பேய்க்கு ஏற்கனவே தெரியுமில்லை. 13வது ஃப்ளோரைத் தான் இவனுங்க ஏமாத்தி நம்பர் மாத்தி வெச்சிருக்காங்கனு. அப்ப ஈசியா அந்த ஃப்ளோருக்கு போயிடுமே”னு சொன்னேன்.

“புரியலை”

“இப்ப ஒரு எடுத்துக்காட்டுக்கு நீங்களே நாளைக்கு செத்து பேயாகறீங்கனு வெச்சிக்கோங்க. அப்ப உங்களுக்குனு இந்த பில்டிங்ல 13வது ஃபிளோர் ஒதுக்கி வெச்சா, உங்களுக்கு 14தான் உண்மையிலே 13னு தெரியுமில்லை. அப்பறம் கரெக்டா வந்துட மாட்டீங்க” அப்படினு சொன்னேன். மனுஷன் ஜெர்க்காகிட்டாரு.

“அடப்பாவி. இதுக்கு என்னைய சாகடிச்சி பேயாக்கிட்டியே. சரி உங்க ஊர்ல இந்த பேய் எல்லாம் எப்படி சமாளிப்பீங்க” அப்படினு கேட்டாரு.

”அப்படி கேளுங்க. இந்த மாதிரி வீட்டுக்குள்ள இல்லை பில்டிங் உள்ள வரக்கூடாதுனா, முன்னாடி வேப்பிலையைக் கட்டணும்”

“வாட் இஸ் தட்”

“அது ஒரு மரத்துல இலை. அதுல லேடி காட் (உம்மாச்சி) இருப்பாங்க. அதை சொருகி வெச்சா பேய் வராது”

“வாவ். திஸ் இஸ் சூப்பர்”

“இது என்ன. இதை விட இன்னும் சூப்பரா எல்லாம் இருக்கு. கைல தாயுத்து கட்டினா கூட பேய் வராது. ஆனா அதுல ஒரு பிரச்சனை இருக்கு”

“என்ன பிரச்சனை”

“அந்த பேயே ஒரு சூப்பர் ஃபிகரா வந்து, ஒரு டான்ஸ் போட்டு, தாயத்தை கழிட்டிடும்”

“ரியலி?”

“இல்லை பெருச்சாளி. எவண்டா இவன். எதை சொன்னாலும் நம்பறான். பேயை பார்க்கறதுக்கும் சில டெக்னிக்ஸ் இருக்கு. தெரியுமா?”

“அது என்ன டெக்னிக்?”

“கல்யாணம் பண்ணி பாரு. தினமும் பேயைப் பார்க்கலாம்”

“யா யா. தட் இஸ் ட்ரூ”

பல நாடுகள்ல, பல பேய்கள் இருந்தாலும், எல்லாரும் ஒத்துக்கறது இந்த ஒரு பேயை தான்.

சரி சின்ன வயசுல பேய் எப்ப எப்ப நம்ம பின்னாடி வரும்னு சொன்ன சம்பவங்கள்.

1. மதியம் பனிரெண்டு மணிக்கோ, ராத்திரி பனிரெண்டு மணிக்கோ தனியா நடந்து போனா வரும்.

2. சட்டில கறி சோறு எடுத்துட்டு தனியா போனா பின்னாடி வந்து கேக்கும்.

3. பொண்ணுங்க மல்லைகைப் பூ வெச்சிட்டு போனா பின்னாடி வரும்.

4. ராத்திரி சுடுகாட்டுல போய் முட்டையை உடைச்சா, பின்னாடி பொடனியிலே தட்டும். (அங்க போய் எதுக்கு முட்டையை உடைக்கணும்னு தெரியல)

5. ஞாயிறு சாயந்தரம் ராகுகாலத்துல சுடுகாட்டு பக்கமோ, ஆத்து பக்கமோ போனா பேய் வந்து பிடிச்சிக்கும்.

6. பேய் பிடிச்சவங்க முடியை எடுத்து ஆலமரத்துலயோ, அரச மரத்துலயோ ஆணி வெச்சி அடிச்சி வெச்சிருப்பாங்க. அதை எடுத்த அந்த ஆவி நம்மல பிடிச்சிக்கும்.

7. கறி சோறு சாப்பிட்டு ராத்திரி தனியா நடந்து போனா பேய் வந்து பிடிச்சிக்கும்.

8. பேய் ஓட்டும் போது அங்க போய் நின்னு சிரிச்சா, அந்த பேய் நம்மல வந்து பிடிச்சிக்கும்.

9. சிலுவைப் போடலனா ரத்தக்காட்டேரி வரும்.

10. வயசுப்பசங்க பின்னாடி மோகினிப் பேய் வரும். அது வரது பூ வாசனை, கொலுசு சத்ததுல தெரிஞ்சிக்கலாம் (அது பின்னாடி பசங்க போகாம இருந்தா சரி)

11. இவ்வளவையும் படிச்சிட்டு நீங்க பின்னூட்டம் போடாம போனீங்கனா, நிச்சயம் இன்னைக்கு ராத்திரி வந்து பேய் உங்களைப் பிடிக்கும். அப்படி இல்லைனா சீக்கிரம் கல்யாணம் ஆகும். (ஏற்கனவே கல்யாணம் ஆகியிருந்தா அப்படினு புத்திசாலித்தனமா கேள்வி கேக்காதீங்க. உங்களுக்கு தான் முதல்லயே சொல்லிட்டனே.)

Sunday, April 12, 2009

கோழியின் அட்டகாசங்கள் - 8

இது காலேஜ்ல மூணாவது வருஷம் படிக்கும் போது நடந்தது.

OP ரூமேட் யாரோ ஒரு டேஸ்காலர் பையனோட டிபன் பாக்ஸை ஹாஸ்டலுக்கு எடுத்துட்டு வந்துட்டான். அதைப் பார்த்த உடனே OPக்கு திடீர்னு ஒரு ஐடியா வந்துடுச்சி. அன்னைக்கு பார்த்து ஹாஸ்டல்ல தக்காளி சாதம் போட்டாங்க. போய் அந்த டிபன் பாக்ஸ் முழுசா தக்காளி சாதம் எடுத்துக்கிட்டான்.

ராத்திரி ஒரு பதினோரு மணி இருக்கும். கோழி ரூம் ஒரு செகண்ட் ஃப்ளோர்ல மூலைல இருக்கும். அதுக்கு அடுத்த மூலைல இருக்குற ரூமூக்கு டிபன் பாக்ஸோட போனான் OP. திடீர்னு அங்க இருந்து கத்த ஆரம்பிச்சான், ”டேய் இருமீ சீக்கிரம் வாடா... இங்க சிக்கன் பிரியாணி இருக்கு. தீரப்போகுது சீக்கிரம் வாடா”னு கத்தினான். இருமியும், கோழியும் ஒரே ரூம் தான்.

இருமிக்கு இந்த ப்ளான் ஏற்கனவே தெரியும். அதனால ரூம்ல இருந்து கொஞ்சம் பொறுமையா நடந்து வந்தான். கோழி வேகமா ஓட ஆரம்பிச்சிட்டான். உடனே இருமி, OP கோழி வராண்டா அதை எடுத்துட்டு இந்தப் பக்கம் வந்துடுனு கத்த ஆரம்பிச்சான். உடனே OP அந்த டிபன் பாக்ஸை எடுத்துட்டு வெளிய வந்தான். வெளிய கோழி வேகமா ஓடி வந்துட்டு இருந்தான்.

உடனே OP அந்த பக்கம் படிக்கட்டுல இறங்கி ஓட ஆரம்பிச்சிட்டான். கோழியும் அவனை விடாம துரத்தினான். இப்படியே ஹாஸ்டலயே மூணு ரவுண்ட் சுத்தி வந்துட்டானுங்க. ஒரு இருபது முப்பது நிமிஷம் ஓடிருப்பானுங்க. ஒரு வழியா OP கோழி ரூம் முன்னாடியே மாட்டிக்கிட்டான். கோழி அந்த டிபன் பாக்ஸை எடுத்துட்டு ரூமுக்கு ஓடினான். உடனே அந்தப் பக்கம் இருந்த பசங்க எல்லாரும் கோழி ரூமுக்கு ஓடினாங்க.

வேகமா டிபன் பாக்ஸை திறந்து சாப்பிட ஆரம்பிச்சான். எல்லா பசங்களும் ஆளுக்கு ஒரு வாய் சாப்பிட்ட உடனே கண்டுபிடிச்சிட்டாங்க. கோழி மட்டும் அதைக் கவனிக்காம டிபன் பாக்ஸ் முழுசா சாப்பிட்டுட்டான். யாருமே அவன்கிட்ட அவன் சாப்பிட்டு முடிக்கற வரைக்கும் எதுவும் சொல்லலை. அவன் சாப்பிட்ட வேகத்தைப் பார்க்கணுமே. முப்பது செகண்ட்ல டிபன் பாக்ஸ் காலி. சாப்பிட்டு முடிச்சிட்டு பாக்கறான். எல்லாரும் அவனை ஒரு மாதிரியாப் பார்க்கறானுங்க. ”இது மெஸ்ல போட்ட தக்காளி சாதம்டா கோழி”னு பொறுமையா ஒருத்தன் சொல்றான்.

உடனே, அவனை டேப்பரா பார்த்துட்டு, கோழி சொன்னான் “இந்த மாதிரி ஹாஸ்டலை மூணு சுத்து சுத்தி வந்தா தக்காளி சாதம் கூட சிக்கன் பிரியாணி மாதிரி தாண்டா தெரியும்”.

Friday, April 10, 2009

நன்றி! நன்றி!! நன்றி!!!

வழக்கமா எல்லாக் கதைப் போட்டிகளிலும் கலந்து வெற்றிகரமா தோத்து நன்றி சொல்லுவேன். அப்ப எல்லாம் நிச்சயம் நம்ம கதை ஜெயிக்கும்னு ஒரு நம்பிக்கை இருக்கும். ஆனா இந்த முறை வித்தியாசமா இந்தக் கதை நிச்சயம் ஜெயிக்காதுனு தான் நினைச்சேன். போட்டிக்கு வேற ஒரு கதை எழுதலாம்னு நினைச்சிட்டு இருந்தேன்.

கடைசி நாள் வெள்ளிக்கிழமை எப்படியும் எழுதிடனும்னு நினைச்சிட்டு இருந்தேன். கடைசியா பார்த்தா வெள்ளி மதியம் போட்டிக்கு சமர்ப்பிக்கும் நேரம் முடியும்னு இருந்ததை நான் கவனிக்கல. தமிழ்மணம், தேன்கூடு எல்லாம் ESTல தான் சொல்லுவாங்க. இது ISTல இருந்ததை கவனிக்காம விட்டுட்டேன். என் தப்பு தான்.

ஓட்டெடுப்புலயும் நமக்கு பெருசா வராதுனு தெரியும். நடுவர்களுக்கும் நமக்கும் ராசியே இருக்காது. எல்லாம் ஜெயிச்சி வந்து ஒரு தடவை எழுத்துப் பிழை நிறைய இருக்குனு மார்க் குறைச்சி தோத்து போனேன் :-). அதனால இந்த முறையும் அப்படி ஏதாவது நடக்கும்னு நினைச்சேன். பாபா வேற அதுக்கு ஏத்த மாதிரி விமர்சனம் எழுதி கும்மாங்குத்து குத்திட்டாரு. எப்பவும் என் கதைக்கு அவர் சொல்ற அதே கமெண்ட். முடிக்க தெரியாத பாரதிராஜா கதை மாதிரி இருக்கு.

இப்படி நான் நினைச்சதுக்கு எல்லாம் எதிரா நடந்து மக்கள் ஓட்டெடுப்புல சுமாரா மார்க் வாங்கி, நடுவர்கள் தீர்ப்புல நல்ல மதிப்பெண்ணோட கல்லூரிப் பயணம் இனிதே முடிந்தது.

என் கதைல காதலர்கள் பிரியறதும், சில பல சாவுகள் வரதும் தடுக்க முடியாத ஒண்ணா மாறிடுச்சி. வீட்டு அம்மணிக்கிட்ட இதுக்கு எல்லாம் நல்லா திட்டு வாங்கறது வேற. கொலை செய்வது எப்படினு ஒரு கதைல ஒரு பாட்டியை கத்தியால குத்தி கொல்ற மாதிரி ஒரு சீன் இருக்கு. அதை சொல்லி சொல்லி தினமும் எனக்கு திட்டு தான். பாவம் அந்த பாட்டி என்ன பண்ணுச்சு, அதை போய் கொல்ற மாதிரி எழுதறீங்களேனு. என்ன பண்றது. வேற மாதிரி இனிமே எழுத முயற்சி செய்யறேனு சொல்லிருக்கேன்.

அப்படி மத்த கதைல காதலர்கள் பிரியும் போதோ, சாகும் போதோ கொஞ்சம் கூட எனக்கு கஷ்டம் இருக்காது. சிரிச்சிக்கிட்டே எழுதிடுவேன். கதை எப்பவுமே மனசுல இருந்து வராது. அறிவு சொல்றதை தான் கேட்பேன் (யார் அந்த அறிவுனு கேக்கப்படாது). மனசும் கஷ்டப்படாது. ஆனா இந்தக் கதை எழுதும் போது என்னனு தெரியல. கடைசியா கண்ணுல இருந்து தானா தண்ணி வந்துச்சு. ஏதோ மனசே பாரமா ஆகிடுச்சி. இவங்க வாழ்க்கை இப்படி ஆகிடுச்சேனு இருந்துச்சு.

கதையை எழுதி ஜி.ராக்கிட்ட அனுப்பினா, டோட்டல் டேமேஜ் பண்ணிட்டாரு. அப்பறம் நிறைய இடத்துல எடிட் பண்ண சொல்லி சொன்னாரு. திரும்ப ஒரு நாலைஞ்சி தடவைப் படிச்சி பார்த்து எடிட் பண்ணேன். அப்பறம் ராயல் அண்ணா படிச்சிட்டு, நீ சொல்ற ஃபீலிங் எதுவுமே வரலப்பா. நீ அதை சரியான வார்த்தைல வடிக்கலைனு சொல்லிட்டாரு. நான் மறுபடி படிச்சி பார்த்தாலும் எனக்கு அந்த வலி இருந்துச்சு. எப்பவும் படிச்சி சொல்ற என் ஃபிரெண்ட் தனாக்கு அனுப்பினேன். அவன் நல்லா இருக்குனு சொன்னான். கொஞ்சம் நம்பிக்கை. இருந்தாலும் நான் மனசுல நினைச்ச அளவுக்கு சொல்லலைனு நினைக்கிறேன். படிச்சிட்டு மனசு பாரமாகற அளவுக்கு ஒரு அன்னோன்யத்தை ஏற்படுத்த தவறிட்டேனு நினைக்கிறேன்.

சரி, ஒரு கதைக்கு இவ்வளவு பெரிய கதையானு கேட்காதீங்க. சும்மா சொல்லணும்னு தோனுச்சு.

இது நிஜமா சொல்லணும்னு தோனுச்சு...

ஓட்டு போட்டவர்களுக்கும், நடுவர்களுக்கும், போட்டியை நடத்திய சங்கமத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

கலந்து கொண்ட அனைவருக்கு என் நன்றிகள். போட்டினா நூறு தடவை தோக்கறதும், ஒரு தடவை ஜெயிக்கறதும் தான் நம்மல மாதிரி வீரனுக்கு அழகு.

இது வரை படிக்க தவறியவர்கள் இங்கே சொடுக்கவும்

Monday, April 06, 2009

கள்ளக்குறிச்சி - மும்முனைப் போட்டி

இந்த முறை எங்க ஊர் ஸ்டார் தொகுதி அந்தஸ்தைப் பெற்றுவிட்டது. கள்ளக்குறிச்சி பேரு வரலாறுல என்னால தான் ஃபேமஸ் ஆகனும்னு நினைச்சிட்டு இருந்தேன். இப்ப அதுக்கு நிறைய தடங்கல். சரி. அதை விடுங்க.

ரொம்ப நாளா ராசிபுரம்\ரிஷிவந்தியம் தொகுதில கள்ளக்குறிச்சி இருக்கறதை நினைச்சி ரொம்ப வருத்தப்பட்டிருக்கிறேன். இப்ப அதுக்கு ஒரு விடிவு காலம் வந்துடுச்சு. ரொம்ப சந்தோஷம்.
இந்த முறை மும்முனைப் போட்டியும் பலமா இருக்கப் போகுது. அப்படி என்னடா இருக்குனு நினைக்கறவங்களுக்கு. வன்னியர் ஏரியாவான தென்னாற்காடு மாவட்டத்துல தான் கள்ளக்குறிச்சி இருக்கு. அடுத்து திமுக சார்புல நிக்கற ஆதிசங்கர் திருக்கோவிலூர்காரர். அவருக்கு வேலை செய்ய பெரிய இளைஞர் படை இருக்கு. அதுவுமில்லாமல் இது போன முறை திமுக வெற்றி பெற்ற இடம் தான். அப்ப பாமக இருந்தாங்க. இப்ப அவுங்க ஓட்டைப் பிரிப்பாங்க.

இது எல்லாத்தையும் விட நான் எதிர்பாராத ஆச்சரியம் சுதிஷ் எங்க தொகுதில போட்டியிடறது தான். எங்க தொகுதில விஜயகாந்த ரசிகர்கள் ஏராளம். அவரோட மொக்கைப் படங்கள் எல்லாம் கூட நூறு நாள் தாண்டி ஓடும். அதுவும் இல்லாமல் விஜயகாந்த் அரசியல் பிள்ளையார் சுழி போட்டது எங்க ஊர்ல தான். எங்க ஊர் டைரக்டர் முருகதாஸ் கல்யாணத்துக்கு வந்த விஜயகாந்த பாமகவை பற்றி தாறுமாறாக விமர்சித்தது இங்கு தான். எலக்‌ஷன்ல நிக்காம சீட்டு வாங்க முடியுது, காவிரில தண்ணி கொண்டு வர முடியலையானு அவர் பேசி, கஜேந்திரா படத்துக்கு பிரச்சனை வந்தது எங்க ஊர்ல பேசின பேச்சால தான்.

அப்பறம் எங்க தொகுதில ஓரளவு கனிசமான நாயுடு ஓட்டும் இருக்கு. அது விஜயகாந்த்க்கு போகுமானு தெரியலை. ஆனா எனக்கு தெரிஞ்சி நாயுடு ஓட்டை விட அவர் எதிர்பார்க்கறது அவர் ரசிகர்கள் ஓட்டு தான். நான் முதல்ல விஜயகாந்த எங்க ஊர்ல தான் போட்டியிடுவார்னு நினைச்சேன். கொஞ்சம் மாறி விருத்தாச்சலம் போயிட்டாரு. அதுவும் பக்கத்து ஊரு தான். அதனால இந்த முறை எங்க ஊர்ல அவர் மனைவியை களம் இறக்குவார்னு நினைச்சேன். ஆனா மச்சானை நிறுத்திட்டாரு.

பாமக பற்றி சொல்லவேத் தேவையில்லை. இது தென்னாற்காடு மாவட்டம். கனிசமான வன்னியர் ஓட்டு இருக்கு. அதே சமயம் ஆதிமுக கூட்டணி பலமும் இருக்கு. எங்க ஏரியால மலைவாழ் மக்களும் அதிகம். அவுங்க எல்லாம் இன்னும் MGRக்கு தான் ஓட்டு போட்டுட்டு இருக்காங்க. அந்த பலமும் சேர்ந்தால் இதுவும் சமமான பலம் உள்ள கட்சி தான். இந்த நிலைமைல எங்க வீட்ல அப்பா, அம்மா யாருக்கு ஓட்டுப் போடுவாங்கனுக்கூட என்னால சொல்ல முடியல.

சரி, இப்படி இவங்க போட்டி போடறது இருக்கட்டும், எங்க தொகுதில என்ன என்ன பிரச்சனைனு சொல்றேன், அதை யாராவது சரி பண்றனு வாக்குறுதியாவது தராங்களானு பார்க்கலாம்.

* முதல் பிரச்சனை தண்ணீர் தான். சுத்தமா காஞ்சிப் போன ஏரியா. இப்ப ஓரளவு தண்ணீர் பிரச்சனை தீர்ந்து இருக்குனு சொன்னாலும் அது நிரந்தர தீர்வா தெரியல. என்னோட தண்ணீர்
தண்ணீர் பதிவுல கூட நான் சொல்லியிருந்தேன். எங்க ஊரை காஞ்சிப் போன கள்ளக்குறிச்சினு தான் எல்லாரும் சொல்லுவோம்னு.

* வேலை வாய்ப்பு - விவசாயம் மிகவும் பாதிக்கப்பட்டு, நிறைய பசங்க ஊரை விட்டு பெங்களூர், சென்னைனு போய் கொளுத்து வேலை செஞ்சிட்டு இருக்காங்க. அவுங்களுக்கு ஏதாவது வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தா நல்லா இருக்கும். தமிழ் நாட்லயே அதிகமா சர்க்கரை உற்பத்தி பண்றது எங்க ஊர்ல தான். அதே மாதிரி விசு அரட்டை அரங்கத்துல சொன்ன மாதிரி தமிழ்நாட்டின் இரண்டாவது நெல் களஞ்சியம்னு சொல்ற மாதிரி நிறைய அரிசி ஆலைகளும் இருக்கு. ஆனா அது எல்லாமே இப்ப பெருசா இயங்கற மாதிரி தெரியலை. அதை எல்லாம் மறுபடியும் பழைய படி கொண்டு வரணும்.

* சுகாதாரம் - கள்ளக்குறிச்சில இன்னும் முக்கியமான தெருல எல்லாம் கூட மூக்கை மூடிட்டு தான் நடக்க வேண்டியது இருக்கு. இத்தனைக்கும் பாரதி ஸ்கூல் தெரு (சிதம்பரம் பிள்ளை

தெரு இல்லை, மகாலட்சுமில இருந்து வர தெரு) இன்னும் கப்படிச்சிட்டு தான் இருக்குது. அதே மாதிரி இன்னும் பல இடங்களில் சாக்கடை வசதி சரியாக இல்லை. கலைஞர் ஆட்சியில் சிமெண்ட் ரோடும் சாக்கடையும் போடப்பட்டது ஆனால் இரண்டையும் தனித்தனியாக காண்ட்ராக்ட் விட்டிருக்கிறார்கள். அதனால் சாக்கடை காண்ட்ராக்ட் எடுத்தவர் ஒரு அடிக்கூட சரியாக சாக்கடைக்கு குழி வெட்டாமல் இன்னும் கொடுமையாக நாற்றம் அடித்து கொண்டும், கொசு உற்பத்தி தொழிற்சாலையாகவும் இருக்கிறது.

* கல்வி - எங்க ஊர் அரசு பள்ளி மாதிரி ஒரு கேவலமான பள்ளிக்கூடத்தை பார்க்கவே முடியாது. அந்த அளவுக்கு கேவலமான ரிசல்ட் தான் வரும். எல்லா டீச்சர்ஸும் இன்னும் டியூஷன் வெச்சி கொள்ளை அடிச்சி பசங்க வாழ்க்கையை கெடுத்துட்டு இருக்காங்க. எங்க ஊர் பசங்க எல்லாம் கடலூர், ராசிபுரம், நாமக்கல்னு போய் ஹாஸ்டல்ல தான் தங்கி படிக்கறாங்க. நான் பத்தாவதுல எடுத்த மார்க் தான் (நான் படிச்சது கடலூர் மாவட்டம்), விழுப்புரம் மாவட்டத்தின் முதல் மதிப்பெண்ணாக இருந்தது. அதே மாதிரி பணிரெண்டாவதுல நான் ராசிபுரம் SRVல எடுத்த மதிப்பெண்ணை விட எங்க ஊர்ல முதல் மார்க் குறைவு (AKTல கூட அதைவிட குறைவு. அப்ப அரசு பள்ளில கேட்கவே தேவையில்லை).

அதே மாதிரி நல்ல கல்லூரிகளும் இல்லை. நல்ல பள்ளியே இல்லைனு சொல்லும் பொது நல்ல கல்லூரிக்கு எங்க போறது. எங்க பக்கத்துல இருக்குற நெய்வேலி, ராசிபுரம், திருக்கோவிலூர்ல எல்லாம் கூட நல்ல பள்ளிக்கூடம் இருக்கு. ஆனா எங்க ஊர்ல இல்லை.

* கந்துவட்டி - எங்க ஊர்ல இந்த கந்துவட்டி பிரச்சனை ரொம்ப அதிகம். இதை யாராலயும் திருத்த முடியாதுனு தான் நினைக்கிறேன். பொதுவா இந்த கந்து வட்டி எப்படி இருக்கும்னா காலைல ஆயிரம் ரூபாய் கடன் அப்படினு சொல்லி 900 ரூபாய் வாங்கி போய் காய்கறி எல்லாம் வாங்கிட்டு வருவாங்க. சாயந்திரம் எட்டு மணிக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கனும். இது தின வியாபாரம் செய்யறவங்களுக்கு. ஆனா இவுங்களுக்கு எல்லாம் கடன் கொடுத்து உதவ கூட்டுறவு வங்கிகள் முன்வருவதில்லை.

* சாலை வசதி - எங்க ஊரு NH 68 ல இருக்குதுனு தான் பேரு. அந்த அளவுக்கு மோசமான ஒரு ஹைவே தமிழ்நாட்லே பார்க்க முடியாது. வருஷம் வருஷம் ரோடு போடுவாங்க. அந்த வருஷம் மழைல ரோடே அடிச்சிட்டு போயிடும். வெள்ளக்காரன் போட்ட ரோடெல்லாம் இன்னும் நல்லா இருக்கு. ஆனா நம்ம ஆளுங்க போடறது ஒரு வருஷம் கூட தாங்க மாட்டீங்குது. இத்தனை குண்டுங்குழியுமா ரோடு வேற எங்காவது பார்க்க முடியுமானு தெரியலை. இதை எப்ப சரியா பண்ணுவாங்கனு தெரியல.

* ரயில் வசதி - எங்க ஊருக்கு ட்ரெயின் வரப்போகுதுனு ஒரு அம்பது வருஷமா சொல்லிட்டு இருக்காங்களாம். இன்னும் ட்ரெயின் வர வழியைக் காணோம். போன முறை எங்க ஊர்ல இருந்து மத்திய அமைச்சர் ஆன வேங்கடபதி ஏதாவது செய்வார்னு பார்த்தேன். அவர் எங்க ஊருக்கு மட்டுமில்லை, தமிழ்நாட்டுக்கே எதுவும் செய்யல. எப்படியாவது ட்ரெயின் வந்துடும்னு நினைச்சேன். ஆனா வரலை. இந்த முறையாவது யாராவது கொண்டு வருவாங்களானு தெரியலை.

விழிப்புணர்வு - கல்வராயன் மலைல இன்னும் மலைவாழ் மக்கள் சுத்தமா படிப்பறிவே இல்லாம இருக்காங்க. அவர்களிடையே கல்வி பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கு முதல்ல அவுங்களோட சமூக பொறுப்புகளை எடுத்து சொல்லி கல்வியறிவைப் பெருக்க வேண்டும்.

இப்பொழுதைக்கு இவ்வளவு தான். இதை யாராவது சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி எங்க தொகுதில ஏதாவது நல்லது நடந்தா சரி.

Thursday, April 02, 2009

டாக்டர் ’விஜய்’ சன் டீவி கலக்கல் காமெடி

Get this widget | Track details | eSnips Social DNA


இது நான் பண்ணல. யாரோ சில புண்ணியவான்கள் தயாரிச்சிருக்காங்க. எனக்கு மெயில்ல வந்துச்சு. கலக்கல் காமெடி. என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள். செம கிரியேட்டிவிட்டி, தத்ரூபமா பண்ணியிருக்காங்க.

விஜய் ரசிகர்கள் டென்ஷனாக வேண்டாம். வேட்டைக்காரன்ல தள எல்லாத்துக்கும் பதில் சொல்லுவாருனு நம்புவோமாக.

விருது விருது!!!

இந்த விருதை சில மாதத்துக்கு முன்னாடி தங்கச்சி தமிழினி கொடுத்த பொழுது, நன்றிமா... கொஞ்ச நாள் கழிச்சி இதை தொடருகிறேனு சொல்லிட்டேன். முதல் காரணம், அந்த விட்ஜெட். ஏனோ இந்த மாதிரி விட்ஜெட் போட்டுக்கறதுல எனக்கு விருப்பம் இல்லை.சர்வேசனோட விட்ஜட்டே அவர் கொடுத்த நூறு டாலருக்கு மரியாதை கொடுத்து தான் போட்டு வெச்சிருக்கேன். அதை ஒவ்வொரு முறை பார்க்கும் பொழுதும் எப்படி இருந்த நீ, இப்படி ஆகிட்டயேனு ஒரு கஷ்டம் வரும். 2006ல ஆறு மாசம் எழுதன அளவுக்கு கிரியேட்டிவா அதுக்கு அப்பறம் நான் எழுதல. அப்பவும் என்னை விட நல்லா எழுதின பல பேர் அவுங்க பேரை போட்டில இருந்து நீக்க சொல்லிட்டாங்க :-)
சரி இப்ப எதுக்கு இந்த எஸ்டீடீ எல்லாம்னு கேக்கறீங்களா? இந்த பட்டாம்பூச்சி விருதுல இருந்து நான் எஸ்கேப் ஆக முயற்சி செஞ்சதுக்கு இது தான் காரணம். அப்பறம் எப்படியும் எல்லாரும் எல்லாருக்கும் விருதை கொடுத்து எல்லார் வலைப்பதிவுலயும் தேவையில்லாம விட்ஜெட்டா இருக்கும்.
இதை சொல்லும் போது பத்தாவதுல எங்க எஸ்டீடீ வாத்தியார் சொன்னது தான் ஞாபகம் வருது. அரசியல் மீட்டீங் பத்தி சொன்னவரு, இந்த பன்னாடை அந்த பன்னாடைக்கு பன்னாடை போத்தும், பதிலுக்கு அந்த பன்னாடை இந்த பன்னாடைக்கு பன்னாடை போத்தும். இது தான் அரசியல்.


அப்பறம் பட்டாம்பூச்சி விருது முடிஞ்சி, தும்பி, ஈ, காக்கா, குருவி (இது நம்ம கார்க்கி ரிசர்வ் பண்ணிருப்பாருனு நினைக்கிறேன்) இப்படி பல விருதுகள் வர ஆரம்பிச்சிடும். அப்பறம் அதையும் எடுத்து டெம்ப்ளேட்ல போட்டு படிக்கிறவங்களை டார்ச்சர் பண்ணனுமா?


அத‌னால‌ விருது கொடுத்த‌ த‌ங்க‌ச்சி த‌மிழினி, அண்ண‌ன் கைப்ஸ், ந‌ண்ப‌ர் ஆ! இத‌ழ்க‌ள் மூவ‌ருக்கும் என் ம‌ன‌மார்ந்த‌ ந‌ன்றிக‌ள். அப்பறம் இதை என் டெம்ப்ளேட்ல சைட்ல போடாததுக்கு என்ன மன்னிச்சிடுங்க.


இதுக்கு மூணு பேரை மாட்டிவிடணுமாம் (அதெல்லாம் நமக்கு ரொம்ப பிடிக்கும்). கொஞ்சம் யோசிச்சி பார்த்தா, மூணு பேருக்கு கொடுக்கறதை விட, என் மூணு பதிவை விட ஒரு பதிவை நீஈஈஈஈஈஈஈஈளமா எழுதற ஒருத்தருக்கு கொடுக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். அது "Coolest blog I ever know " இல்லை "Lengthiest blog I ever know "

அண்ணே உண்மைத்தமிழன் அண்ணே...நீங்க இதை வெச்சி ஒரு பதிவு போடுங்க.

Wednesday, April 01, 2009

ஓட்டு குத்தியாச்சா?

என்னடா எலக்‌ஷனுக்கு இன்னும் நிறைய நாள் இருக்கே அதுக்குள்ள ஓட்டு போட சொல்றானேனு பார்க்கறீங்களா?

இது அந்த ஓட்டு இல்லைங்க. நம்ம ப்ளாகுட்ல நடத்தின கல்லூரி போட்டிக்கு. இந்த முறை போட்டில இருக்கற படைப்புகள் கொஞ்சம் சுமார் தான் (என் கதையையும் சேர்த்து தான் சொல்றேன்). அதனால ஓட்டு குத்தாம போயிடாதீங்க. இப்ப நீங்க கொடுக்கற உற்சாகம் தான் அடுத்த போட்டிக்கு டானிக்கா இருக்கும். 

என் படைப்புக்கான லிங் இதோ. படிச்சிட்டு ஓட்டு போடுங்க. அப்படியே நர்சிம்மோட இந்த தொடரை தவற விட்டவங்களும் படிங்க. எனக்கு ரொம்ப பிடிச்ச படைப்பு இது தான்.

மத்த படைப்புக்கான லிங் எல்லாம் ஓட்டு போடற பக்கத்துலயே இருக்கு. படிச்சி பக்குவமா குத்துங்க மக்கா.  அப்பறம் கள்ள ஓட்டு குத்தினா ஐயாயிரம் கொடுக்க இது திருமங்களம் இடை தேர்தல் இல்லை. அதனால ஒரு படைப்பு ஒண்ணு மட்டும் குத்துங்க.


யாவரும் நலம் - 13 B

பேய் படம் பார்க்கறதுனு முடிவு எடுத்ததுக்கு அப்பறம் லாஜிக் பார்க்கக் கூடாது. பேய் டீவில எப்படி வருது, கரண்ட் போனதுக்கு அப்பறம் எப்படி டீவி தெரியும், மாதவன் ஃபோட்டோ மட்டும் ஏன் கோணலா தெரியுது, நாய் ஏன் வீட்டுக்குள்ள வரலை இப்படி எல்லாம் கேள்வி கேக்கக்கூடாது. இந்த மாதிரி படத்தை எல்லாம் அனுபவிக்கணும். ஆராயக்கூடாது.

எங்க ஏரியால யாவரும் நலம் வரலை. 13B தான். இங்கிலிஷ் சப் டைட்டிலோட பார்த்தாச்சு. உங்களுக்கு அட்ரனலின் சுரக்கறது பிடிக்கும்னா இந்த படம் நிச்சயம் பிடிக்கும். பல இடங்களில் உங்களுக்கு அட்ரனலின் சுரப்பது நிச்சயம். அனைத்து பேய் படத்திலும் இருக்கும் பழிவாங்கல் தான் கதை என்றாலும் அதைப் பிடித்த விதம் அருமை. படத்தின் முதல் நாயகன் PC ஸ்ரீராம் தான். கேமராவை எங்க எங்க வெச்சி எடுத்திருக்காருனு யோசிக்கறதுக்குள்ள அடுத்த ஆச்சரியத்துக்கு எடுத்துட்டு போயிடறாரு.

அடுத்து எல்லாப் பேய் படத்துக்கும் பலம் இசை. ம்யூட் பண்ணி பார்த்தா நிறைய பேய் படம் சிரிப்பு படமாகிடும். இந்த படத்துலயும் பின்னனி இசை பெரிய பலம். நிறைய காட்சிகளில் நமக்கு பயத்தை ஏற்படுத்த இந்த இசை முக்கியமான பணியை செய்கிறது. ஹாரிஸ் ஜெயராஜ் மாதிரி பண்ணாம சில இடங்களில் பின்னனி இசை இல்லாம அமைதி காத்து நமக்கு நம்ம இதய துடிப்பைக் கேட்க வைத்ததற்கு இசை அமைப்பாளரை நிச்சயம் பாராட்டி ஆகணும்.

இது பேய் படம்னாலும் எந்த ஒரு இடத்திலும் முகம் ஃபுல்லா பவுடர் பூசியோ இல்லை உருவம் மோகன் மாதிரி சந்தனம் பூசியோ பயமுறுத்த முயற்சிக்கவில்லை. அங்க நடக்கற ஒவ்வொரு நிகழ்ச்சியும் மாதவன் முகத்துல ஏற்படுத்துற கிலிக்கு குறையாம நமக்கும் ஏற்படுத்துற காட்சி அமைப்புகளுக்காக இயக்குனரை நிச்சயம் பாராட்ட வேண்டும்.
படத்தோட கதையை எங்கயும் சொல்லி உங்களுக்கு கிடைக்க வேண்டிய ஒரு அருமையான அனுபவத்தை கெடுக்கக் கூடாதுனு தான் எந்த காட்சியையும் சொல்லலை. அட்ரனலின் சுரக்கறதை ரசிக்கிற ஆளா நீங்க இருந்தா இந்த படத்தை தவறாம தியேட்டர்ல போய் பாருங்க. நிச்சயம் ஒரு நல்ல அனுபவம் கிடைக்கும். ராத்திரி ஷோக்கு தனியா போயிடாதீங்க.

படத்துல சில பல குறைகள் இருந்தாலும் ஒரு நல்ல த்ரில்லர் கொடுத்ததுக்காக அதை எல்லாம் கண்டுக்காம விட்டுடலாம்.