தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Tuesday, October 30, 2007

பயணக் கட்டுரை 3

நான் போன அன்னைக்கு ஊரே பரபரப்பா இருந்ததுக்கு காரணம் "சிவாஜி" ரிலிஸ். நான் இங்க கிளம்பற அப்ப கூகுள் ஸ்டேடஸ்ல கூட "அண்ணன் வந்தா தமிழ்நாடும் அமெரிக்கானு" பில்ட் அப் கொடுத்துட்டு தான் கிளம்பினேன். எங்க ஊர்ல ராத்திரி முழுக்க முழுக்க தேங்காய் உடைச்சிருக்காங்கனு சொல்லிட்டு (எவன் எல்லாத்தையும் அள்ளிட்டு போனானோனு புலம்பிட்டு) இருந்தாங்க. முதல் நாள் டிக்கெட் நூறு ரூபாயாம். அவ்வளவு கொடுத்து எத்தனை பேர் பார்த்திருப்பாங்கனு தெரியல. ஆனா ரெண்டு தியேட்டர்ல போட்டாங்க. ஈஸியா டிக்கெட் கிடைச்சிதுனும் பேசிக்கிட்டாங்க. நான் தியேட்டர் பக்கம் போகலை.

மொக்கை படமா இருந்தாலும் முதல் நாள் பார்க்கற ரகம் நான். ஆனா அன்னைக்கு போனா வீட்ல செம திட்டு விழும்னு முதல் நாலு நாள் போகவேயில்லை. அப்பறம் போனா தியேட்டர்ல ஒரு முப்பது நாப்பது பேர் தான் இருந்திருப்போம். நாப்பது ரூபாய் டிக்கெட் கொடுத்து எவன் பார்ப்பானு பேசிக்கிட்டாங்க. ரொம்ப சந்தோஷமா இருந்துச்சி. நம்மலும் பார்க்காம இருந்திருக்கலாம்னு தோனுச்சி. யாருமே வரலைனா அடுத்த நாளே இருபது ரூபா ஆக்கிடுவான் இல்லை.

வீட்டுக்கு போனவுடனே அம்மா காப்பி போட்டு கொடுத்தாங்க. ஆஹா... இந்த கேப்பசினோ குடிச்சி குடிச்சி நல்ல காப்பி எப்படா கிடைக்கும்னு நினைச்சிட்டு இருந்தேன். அம்மா போட்டு கொடுத்த காப்பி எப்பவும் போல அருமையா இருந்துச்சு. பொதுவா நான் டிபன் சாப்பிட்டு தான் காப்பி குடிப்பேன். சீக்கிரமா போனதால ஒரு காப்பி தேவைப்பட்டுச்சு.

அப்பறம் பொட்டியில இருந்ததையெல்லாம் எடுத்து அம்மாக்கிட்ட கொடுக்க ஆரம்பிச்சேன். சாக்லேட் எல்லாம் எடுத்து ஃபிரிட்ஜ்ல வைக்க கொடுத்தேன். ஒவ்வொன்னும் விலை எவ்வளவுனு கேட்டு ஏன் இவ்வளவு காசு செலவு பண்ணி வாங்கிட்டு வந்தனு கேட்டுட்டு இருந்தாங்க. ஒரு காப்பி 3$ பக்கம் ஆகும்னு சொன்னவுடனே, என்ன ஒரு காப்பி 130 ரூபாயா?னு சொல்லி சொல்லி ஆச்சரியப்பட்டாங்க. அப்படியே இட்லி தோசையெல்லாம் எவ்வளவுனு கேட்டு ஆச்சர்யப்பட்டாங்க. இவ்வளவு காஸ்ட்லியாவா அங்க இருக்கும்னு அப்பாவும் கேட்டுட்டு இருந்தாரு. (இதையே ஒவ்வொருத்தவங்க வரும் போதும் சொல்லிட்டே இருந்தது வேற கதை).

அப்பறம் காலைல சுட சுட இட்லி, மல்லாட்டை சட்னி. மல்லாட்டைனா என்னனு யோசிக்கறீங்களா? அது தான் நிலக்கடலை. எங்க ஊர் பக்கமெல்லாம் அப்படித்தான் சொல்வாங்க. எனக்கு அந்த சட்னி தான் ரொம்ப பிடிக்கும் (மல்லாட்டை வறுத்து, தோல் நீக்கிட்டு, அப்பறம் கொஞ்சம் தேங்காய், காஞ்ச மிளகாய், உப்பு, கொஞ்சம் புளி வைச்சி அரைக்கனும்). அப்பறம் ஒரு வழியா சாப்பிட்டு ஒவ்வொரு சொந்தக்காரவங்க வீட்டுக்கும் சாக்லேட் பிரிச்சி எடுத்துட்டு கிளம்பியாச்சு. ஒவ்வொருத்தவங்க வீட்டுக்கா போய் நல்லா மொக்கையை போட்டுட்டு வந்தேன்.

மதியம் தூங்க வேணாம்னு பார்த்தேன். கண்ணெல்லாம் சிவந்திருக்கு ஒரு அஞ்சு நிமிஷமாவது படுத்து எழுந்திரினு கம்பெல் பண்ணி படுக்க வைச்சாங்க. ரெண்டு மணிக்கு படுத்துட்டு ராத்திரி 9 மணிக்கு எழுந்திரிச்சேன். என்னை எழுப்ப எவ்வளவோ முயற்சி செஞ்சாங்களாம். பழசெல்லாம் மறந்துட்டாங்க போலனு நினைச்சிக்கிட்டேன். சின்ன வயசுல இருந்து என்னை எழுப்பறதுக்கு எங்க வீட்ல ரொம்ப கஷ்டப்படுவாங்க. பாலாஜி எழுந்திரி, பாலாஜி எழுந்திரினு சொல்லிக்கிட்டே இருங்கம்மா உங்களுக்கு புண்ணியம் அதிகமா சேர்ந்துடும் எப்பவும் கிண்டல் பண்ணிட்டு இருப்பேன். அப்பறம் ஒன்பது மணிக்கு மேல தூக்கம் வரலை. வீட்ல இண்டர்நெட்டுல் செம ஸ்லோ. என்ன பண்றதுனு தெரியல. நான் அமெரிக்கா வரதுக்கு ஒரு மாசத்துக்கு முன்னாடி நிறைய சாண்டில்யன், அகிலனோட நாவல் எல்லாம் வாங்கி வெச்சது நியாபகத்துக்கு வந்துச்சு.

ஒரு வழியா தேடி கண்டுபிடிச்சி முதல்ல என் கைல வந்தது யவன ராணி. அப்படியே யவன ராணில முழுகிட்டேன். அடுத்த நாள் வீட்டுக்கு வந்தவங்க யார்கிட்டயும் சரியா பேச விடாம என்னை யவன ராணி பிடிச்சிக்கிட்டா. அப்பறம் வந்த அடுத்த நாள் எங்க அக்கா குழந்தைக்கு மொட்டை அடிச்சி காது குத்த திருச்சி கிளம்பியாச்சி. நான் எங்க அக்கா குழந்தையை முதல் முறை அங்க தான் பார்த்தேன். பதினோரு மாசம் கழிச்சி பார்த்ததுல ஒரு வகைல வருத்தம்னா இன்னொரு வகைல சரியா தாய் மாமன் பேரை காப்பாத்த வந்தாச்சேனு ஒரு சந்தோஷம் (ஒரு மாசம் கழிச்சி போயிருந்தா வேற யார் மடியிலயாவது உக்கார வெச்சி பண்ணிருப்பாங்க). முதல் முறை என் மடில உக்காரும் போது மொட்டையடிச்சாங்க. அடுத்த முறை உக்காரும் போது காது குத்தினாங்க. இவன் சரியான வில்லன் போலனு நினைச்சிதோ என்னுமோ தெரியல. அப்பறம் என்கிட்ட வரவேயில்லை :-((((

யவன ராணி படிச்சிக்கிட்டே திருச்சி போனப்ப காவிரி நிலையை பார்த்துக்கிட்டே போனேன். ரொம்ப வருத்தமா இருந்துச்சு. அப்ப இங்க எப்படி ஓடியிருப்பா இந்த காவிரி. இன்னைக்கு வெறும் மண்ணா இருக்கேனு வருத்தமா இருந்துச்சு. வண்டில போகும் போதும் யவன ராணி படிச்சிக்கிட்டே போனேன். அம்மா, அப்பா ரெண்டு பேரும் சேர்ந்து திட்டினாங்க. ஏன்டா அங்க இருந்து புக் படிக்கவா வந்தனு. நமக்கு தான் திட்டு வாங்கி வாங்கி பழகி போச்சே. அப்படியே திட்டு வாங்கிட்டே படிச்சி முடிச்சிட்டேன்.


அப்பறம் ஊருக்கு போய் ஒரு நாலு நாள் அம்மா, அப்பாவோட மட்டும் டைம் ஸ்பெண்ட் பண்ணேன். அதனால யாருக்கும் போன் பண்ணவுமில்லை. நான் போன் எடுத்தா ஒரு மணி நேரமாவது மொக்கை போடற டைப். ஒரு வாரம் கழிச்சி கப்பி நிலவனுக்கு போன் பண்ணப்ப தான் தெரிஞ்சிது வ.வா.ச பத்தி திணமணில வந்திருக்குனு. ஆஹா நம்ம போட்டோவெல்லாம் வந்திருக்கு, பார்க்காம போயிட்டமேனு ஃபீல் ஆயிட்டேன். அப்பறம் ஒரு வழியா பேப்பரை கண்டு பிடிச்சி பார்த்தேன். ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.

அடுத்த நாள் ஒரு ஃபோன் வந்துச்சு. எங்க அப்பாதான் ஃபோன் எடுத்தாரு. ஏதோ சிங்கப்பூர்ல இருந்து ஃபோனு சொல்லி கொடுத்தாரு. வாங்கி பார்த்தா "சிங்கப்பூர்ல இருந்து கோவி.கண்ணன் பேசறனு". சொல்லுங்க தள கலாய்த்தல் எல்லாம் எப்படி போகுதுனு பேச ஆரம்பிச்சிட்டேன். அப்படியே ராயல், தேவ் எல்லாருக்கும் போன் பண்ணி நான் வந்த விஷயத்தை சொன்னேன். அடுத்து ஒருத்தர் போன் பண்ணாரு. பேரை சொல்லாம ஒரு மணி நேரம் பேசினாரு.

அப்பா போன் எடுத்ததால நான் நம்பர் பார்க்கல. ஹைதிராபாத்ல இருந்து பேசறேனு சொன்னாரு. எவ்வளவு கேட்டும் பேர் சொல்லலை. அனானிமஸ்கிட்ட பேச மாட்டீங்களானு கேட்டாரு. நம்ம எல்லாம் பேர் தெரியலைனாலும் மொக்கை போடுவோம்னு சொல்லிட்டு ஒரு மணி நேரம் பேசிட்டு இருந்தேன். வலை அரசியல் எல்லாம் சொன்னாரு. நமக்கு அந்த அளவுக்கு ஞானமில்லைனு கொஞ்ச நேரத்துல புரிஞ்சிக்கிட்டாரு. ஃபோன் வெச்சதுக்கு அப்பறம் நம்பர் பார்த்தேன். பெண்களூர்னு தெரிஞ்சிது. உடனே புரிஞ்சிடுச்சி அது நம்ம புரட்சி குட்டி ஆணியவாதினு ;). அடுத்து நம்ம சென்ஷி போன் பண்ணார்.

அந்த வாரம் வலைப்பதிவர் சந்திப்புக்கு போக முடியுமானு சந்தேகமா இருந்துச்சு. முதல் நாள் ராத்திரி கோவை பயணம் ரத்தானதுல சென்னை கிளம்பிட்டேன்...

(தொடரும்...)

Monday, October 29, 2007

சாப்ட்வேர் இஞ்ஜினியர்களும் சமூக அவலங்களும்

கற்றது தமிழ் படம் பாக்கலைனாலும் அதை பற்றி படித்த விமர்சனங்கள் மென்பொருள் துறையினரை சாடுவதாக தெரிகிறது. இன்னைக்கு விலைவாசி ஏறனதுக்கு சாப்ட்வேர் இஞ்சினியர்கள் தான் காரணம்னு நிறைய பேர் சொல்லி கேட்டிருக்கேன். ஒரு வகைல அது உண்மையும் கூட. போன தடவை நான் இந்தியா போயிருந்தப்ப என் அண்ணன் (பெரியம்மா பையன்) இதை தான் சொன்னான் (அவன் சாப்ட்வேர் இல்லை).

மெட்ராஸ்ல இருந்து திருச்சி போகறதுக்கு ஏர் பஸ்ல போகலாம்னு போய் விசாரிச்சிருக்கான். ஒரு சீட் தான் இருக்குனு சொல்லியிருக்காங்க. அதே சமயம் ஒரு சாப்ட்வேர் இஞ்சினியரும் அங்க வந்திருக்கான். உடனே பஸ் கண்டக்டர் (ஏர் பஸ்ல இருக்கறவர் பேரு கண்சக்டரா இல்லை க்ளீனரா?) 100 ரூபாய் அதிகமா சொல்லியிருக்கான். உடனே என் அண்ணன் சாதாரண பஸ்ல போனா அந்த 100 ரூபாய்க்கு திருச்சிக்கே போயிடலாம்னு ஏர் பஸ்ல போகாம சாதாரண பஸ்லயே போயிருக்கான். நம்ம ஆளு (சாப்ட்வேர் தான்) நூறு ரூபா அதிகமா செலவு பண்ணி ஏர் பஸ்ல போயிருக்கான்.

இந்த இடத்துல தப்பு யார் மேலனு எனக்கு தெரியல. ஏமாந்தவன் ஒருத்தன் வரான், நூறு ரூபாய் ஏத்தி சொன்னாலும் சேர்த்து வாங்குவானு சொன்ன அந்த பஸ்காரன் மேல ஏங்க யாருமே தப்பு சொல்ல மாட்றீங்க? ஏமாத்தறவனைவிட ஏமாறவன் மேல ஏன் உங்களுக்கு எல்லாம் இந்த கோபம்? யாரும் விருப்பட்டு ஏமாறதில்லைங்க.

பெங்களூர்ல வீட்டு வாடகை ஏறிடுச்சினு எல்லாரும் சாப்ட்வேர் இஞ்சினியரை திட்றாங்க. ஆனா தலைக்கு ரெண்டாயிரம். நாலு பேர் தங்கினா எட்டாயிரம், இன்னொருத்தவன் வந்தா பத்தாயிரம்னு சொல்ற வீட்டு ஓனருங்க மேல ஏன் உங்க கோபம் போகலை? இன்ஃபோஸிஸ் இருபத்தைந்தாம் ஆண்டு விழாக்கு போனஸ்னு தராங்கனு சொன்னவுடனே பெங்களூர்ல வீட்டு வாடகையை ஏத்தனவங்க நிறைய பேர். ஆனா அவுங்க பேப்பர்ல கொடுத்த விளம்பரமும் கைல கொடுத்த காசும் கணக்கு பண்ணா மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்யாசம்.

இது மட்டுமில்லை. இந்த ஹோட்டல் எல்லாம் அதுக்கு மேல. ஒரு சிக்கன் பிரியாணி அறுபது ரூபாய். சைட் டிஷ் எல்லாம் நூறு நூத்தியிருபது. இப்படி தான். ஒரு ட்ரீட்னு 5 பேரோட போனா ஆயிரத்துல இருந்து இரெண்டாயிரம் வரைக்கும் தாராளமா செலவு ஆகும்.நம்ம ஆளுங்களுக்கு வாரத்துக்கு ஒரு தடவை இப்படி போயாகனும். ஆனா இருபத்தி அஞ்சு ரூபாய்க்கு கொடுத்த ஐட்டத்தையே அறுபது ரூபாய்க்கு ஏத்தனவங்க மேல ஏன் யாருக்குமே கோபம் வரல?

சாப்ட்வேர் இஞ்சினியர் இவ்வளவு சம்பாதிக்கிறானு சொல்றீங்களே. அவன் எவ்வளவு சேமிக்கிறானு யாருக்காவது தெரியுமா? ஒரு கிராமத்துல இருக்குற கவர்மெண்ட் பள்ளிக்கூட ஆசிரியர் சேமிக்கிறதைவிட கொஞ்சம் அதிகமா அவன் சேர்த்து வைக்கலாம். அவ்வளவு தான். அவனோட வாழ்க்கை முறை அவனை அதுக்கு மேல சேமிக்க விடறதில்லை. அதுல அவன் தப்பு எதுவுமில்லைனு நான் சொல்லலை. ஆனா அவன் தப்பு மட்டுமேனு எல்லாரும் சொல்றது தான் கஷ்டமா இருக்கு.

இருபத்தியொரு வயசுல எப்படியோ படிச்சி முடிச்சிட்டு வரான். கேம்பஸ்ல வேலை கிடைச்சா பரவாயில்லை. ஆனா அப்படி கிடைக்கலைனா அந்த வேலை கிடைக்க அவன் படற கஷ்டம் வேற எந்த துறைக்கும் குறைவானதில்லை. அப்படியே கஷ்டப்பட்டு வேலைக்கு போனவுடனே அவன் வாங்கற சம்பளம் அவனுக்கு ஒரு பெருமையையும், தலை கனத்தையும் தருது. நம்ம அப்பா இத்தனை வருஷம் கஷ்டப்பட்டு வாங்கறதைவிட அதிக சம்பளம் வாங்கறோம்னு ஒரு பெருமிதமும் (தெரியாமலே கொஞ்சம் கர்வமும் தானா வந்துடுது) வருது. ஆனா அவனுக்கு அந்த காசோட அருமை அவ்வளவா தெரியாது என்பது தான் உண்மை. அதுவுமில்லாம அந்த வயசும் அப்படி தான். ஜாலியா இருக்கனும். அவ்வளவு தான்.

ஆனா அந்த வயசுக்கே உரிய இரக்க குணமும் அவன்கிட்ட தாராளமா இருக்கும். சுனாமி வந்தப்ப காசை அள்ளிக்கொடுத்தவங்க நிறைய பேர். அதே மாதிரி நிறைய பசங்களுக்கு படிக்க உதவி செஞ்சவங்க நிறைய பேர் இருக்காங்க. நண்பர்களிடமிருந்து இந்த மாதிரி மெயில் வந்தா, அது உண்மைனு தெரிஞ்சா குறைஞ்சது ஆயிரம் ரூபாயாவது யோசிக்காம செய்யறவங்க நிறைய பேர். பத்து பேர் தங்கியிருக்குற இடத்துல ரெண்டு மூணு பேர் வேலைக்கு போனா அடுத்து எல்லாருக்கும் வேலை கிடைக்கிற வரைக்கும் அந்த வேலைக்கு போற மூணு பேர் மொத்த வாடகையையும் சாப்பாட்டு செலவையும் ஏத்துக்குவாங்க. வேலைக்கு சேர்ந்தவுடனே அந்த பசங்க எந்த ஊருக்கு போவாங்கனு யாருக்கும் தெரியாது. இங்கயும் அவன் காசை அதிகமா நேசிக்கறதில்லை.

சாப்ட்வேர் இஞ்சினியருங்க வாங்கற சம்பளமெல்லாம் மொத்தமா ரியல் எஸ்டேட்காரவங்ககிட்டயும், செல் போன் கம்பெனிகளிடமும், ஹோட்டல் ஓனருங்ககிட்ட தான் போய் சேருது. கொஞ்சம் கொஞ்சம் தியேட்டர் ஓனருங்ககிட்டயும், ஏர் பஸ்காரங்கட்டயும் போய் சேருது. இன்னைக்கு நம்ம பார்க்கிற ஏற்றத்தாழ்வுக்கு இது தான் முக்கிய காரணம். பணக்காரன் ரொம்ப பெரிய பணக்காரன் ஆகறதுக்கு இது தான் காரணம். இப்படி சாப்ட்வேர் இஞ்சினியருங்ககிட்ட வர பணம் மொத்தமாக வேற ஒரு கும்பலால் பெறப்படுகிறது.

இதை கண்டிப்பா சாப்ட்வேர் மக்களால சரி செய்ய முடியாது. அரசாங்கம் ஏதாவது செஞ்சாதான் உண்டு. நம்ம அரசியல்வாதிகள்ல நிறைய பேருக்கு இதை புரிய வைக்கவே ரொம்ப கஷ்டப்படனும். சரி அதி புத்திசாலிங்களான மன்மோகன் சிங்கும், பா.சிதம்பரமும் இதையெல்லாம் பத்தி ஏதாவது செய்யறாங்களானு தெரியல.

கார், Furnished 3 BHK (Bed Room, Hall, Kitchenஆம்), சிக்கன் பிரியாணி இதையெல்லாம் விட ஒரு டூ-வீலர், அப்பா, அம்மாவோட இருக்குற வீடு, அம்மா கைல சமைச்ச ரசம், துவையல் இதெல்லாம் தாங்க சொர்க்கம். பெரு நகரங்களிலிருக்கும் சாப்ட்வேர் கம்பெனியெல்லாம் கொஞ்சம் சிறு நகரங்களுக்கு கொண்டு வந்து பாதி சம்பளம் கொடுத்தாக்கூட போதும். நம்ம ஆளுங்க எல்லாம் ஓடி வந்துடுவாங்க. அதை விட்டுட்டு நீ எப்படி நாற்பதாயிரம் சம்பாதிக்கலாம்னு சண்டை போடறதோ, புலம்பறதோ சரியில்லைங்க.

Tuesday, October 23, 2007

இலையுதிர் காலம்

பாஸ்டன்ல இருந்து இதுக்கூட போடலைனா அவமானம்...

தல CVR ரேஞ்சுக்கு இல்லைனாலும் ஏழைக்கேத்த எள்ளுருண்டை
Monday, October 22, 2007

பயணக் கட்டுரை - 2

தமிழ் பேசறவங்கனு முகத்துலயே நல்லா எழுதி ஒட்டியிருந்தது.

அப்படியே பேச ஆரம்பிச்சதுல வலைப்பதிவை பற்றிய பேச்சு வந்தது.

நீங்க தான் வெட்டிப்பயலானு கேட்டு ஒரே ஆச்சரியம். உங்க ப்ளாக் தினமும் படிப்பேன். கதை எல்லாம் அருமையா எழுதறீங்க. உங்களை பார்ப்பேனு நான் நினைச்சி பார்க்கவேயில்லை. என் ஃபிரெண்ட்ஸ் கிட்ட எல்லாம் உங்க கதையை பத்தி நிறைய பேசியிருக்கேன். கொல்ட்டி உண்மைக் கதையில்லைனு நம்பவே முடியல. தூறல் சான்சேயில்லைங்க... ஆனா சோகத்தை பிழிஞ்சிட்டீங்க. கரிக்கை சோழினு எப்படிங்க பேர் வைச்சிங்க. சூப்பர் பேரு சான்சேயில்லை. அது எப்படிங்க கவுண்ட மணியை வெச்சி இப்படி சூப்பரா எழுதறீங்க. உங்களை பார்த்தேனு போய் ஃபிரண்ட்ஸ்க்கு எல்லாம் மெயில் பண்ணனும்.

"இருந்தாலும் ஆட்டோகிராஃப் கேக்கறதெல்லாம் ரொம்ப ஓவர்ங்க. நான் அவ்வளவு பெரிய ஆள் எல்லாம் இல்லை. ப்ளீஸ் வேண்டாங்க."

"ஏக்ஸ்கியுஸ் மீ... நீங்க கொஞ்சம் முன்னாடி இருக்கற சீட்டுக்கு மாற முடியுமா?" அந்த விப்ரோ பெண்ணின் குரல் கேட்டு நினைவு திரும்பியது. அவள் பின்னால் ஒரு விப்ரோ பையன் நின்றிருந்தான். ஆஹா வலைப்பதிவரா இருக்கறதுல இது ஒரு பிரச்சனை. ஒரே நிமிஷத்துல எவ்வளவு யோசனை போகுது. சரி அவுங்க ஒரு VIPக்கூட ட்ராவல் பண்ற சான்சை மிஸ் பண்ணிட்டாங்கனு நினைச்சிக்கிட்டு முன்னாடி போய் அந்த பையனோட ஜன்னல் ஓர சீட்ல உக்கார்ந்தேன்.

அந்த ஃபிளைட்ல அனுஷ்கா, ரீமா சென் நடிச்ச ரெண்டு படமும், கோபிகா நடிச்ச எமட்டன் மகன் படமும் பார்த்துட்டே போனேன். ஏற்கனவே பார்த்திருந்தாலும் திரும்பவும் பார்த்துட்டு போனேன். குறிப்பிட்ட நேரத்தில் விமானம் சென்னையை சென்றடைந்தது. இரவு ஒரு மணிக்கும் சென்னை பளிச்சென்றிருந்தது... லக்கேஜ் வந்து சேர்வதற்கு ஒரு மணி நேரமானது.

வெளியே நின்ற கூட்டத்தில் அம்மா, அப்பா, தீபன் (என் ஃபிரெண்ட்) மூணு பேரும் அவ்வளவு கூட்டத்திலும் நன்றாக தெரிந்தார்கள். 16 மாதத்திற்கு பிறகு அம்மா, அப்பாவை பார்த்ததில் ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. நான்கு மணி நேரமாக எனக்காக ஏர்போர்டில் நின்று கொண்டேயிருந்ததால், அம்மா சோர்வாக இருந்தாலும் முகத்தில் மகிழ்ச்சி அதிகமாகவேயிருந்தது. 20 மணி நேர பயண் அலுப்பும் அவர்களை பார்த்த ஒரு நொடியில் சென்றுவிட்டது.

அப்பாவும், என் நண்பனும் என்னிடமிருந்து பெட்டியை ஆளுக்கொருவராக வாங்கி கொண்டனர். காருக்கு சென்றவுடன் அம்மா தண்ணி, ஸ்வீட் எல்லாம் கொடுத்தாங்க. ஃபிளைட்ல ரெண்டு நாளா வெறும் கோக் மட்டும் குடிச்சிட்டு போனது அப்ப தான் நியாபகம் வந்துச்சி. எனக்கு ஸ்விட்னா ரொம்ப பிடிக்கும். ஆனா இங்க வந்ததுல இருந்து அதிகமா சாப்பிடறதில்லை. நமக்கு நாமே திட்டத்துல அதெல்லாம் எங்க தோணுது.

ஒரு வழியா நண்பனுக்காக வாங்கி சென்ற Sony DSC H2 கேமராவை அவனிடம் கொடுத்துவிட்டு, கள்ளக்குறிச்சிக்கு புறப்பட்டேன்... வண்டி ஏற்போர்டிலிருந்து வரும் போதே எதிர்ல வந்த வண்டிகளை பார்த்து கொஞ்சம் ஜெர்க்கானேன். எல்லா திசைல இருந்தும் கண்டபடி வண்டி வந்து பார்த்து ஒரு வருஷத்துக்கு மேல ஆயிடுச்சா. அந்த எஃபக்ட் தான். ஒரு வாரத்துக்கு இந்த எஃபக்ட் இருந்துச்சு.

விழுப்புரத்துல ஒரு டீ வாங்கி குடிச்சோம். ஆஹா... இந்த ரோட்டோர டீக்கடைல குடிக்கிற டீக்கு இருக்குற ருசியே தனிதான். ரொம்ப ரசிச்சி குடிச்சேன். அப்பறம் விழுப்புரத்துல இருந்து உளுந்தூர்பேட்டை போற வழியில செம ட்ராஃபிக் ஜாம். என்னனு விசாரிச்சா யாருக்குமே தெரியல. எங்க டிரைவர் விவரமா தார் ரோட்டுக்கு கீழ இருக்குற மண் ரோட்டுலயே ஓட்டிட்டு போயிட்டாரு. கடைசியா பார்த்தா வழியில ஒரு ரயில்வே கேட்ல கொஞ்சம் முன்னாடியே கேட் போட்டிருக்காங்க. அதனால நிறைய டிரைவருங்க அப்படியே தூங்கிட்டாங்க. போற வழியில நாங்க நிறைய பேரை எழுப்பீட்டே போனோம்...

ஒரு வழியா ஊருக்கு 7 மணிக்கு போய் சேர்ந்தாச்சு. எல்லாம் வாசல்ல தண்ணி தெளிச்சி கோலம் போட்டிருந்தாங்க. கள்ளக்குறிச்சில ஒரு வருடத்தில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. 7 மணிக்கு திருக்கோவிலூர் பெண்ணையாற்றிலிருந்து வரும் தண்ணீர் வந்து கொண்டிருந்ததால் எல்லாரும் வெளி பைப்ல தண்ணி பிடிச்சிட்டு இருந்தாங்க.

விடியறதுக்கு முன்னாடி வந்துடனும் இல்லைனா எல்லாரும் பார்த்தா கண்ணு போட்ரூவாங்கனு எங்க பாட்டி சொல்லிருந்தாங்க போல. ஆனா ட்ராபிக் ஜாம் அவுங்களுக்கு எதிரா சதி பண்ணி கரெக்டா தெருவுல எல்லாரும் பார்க்கும் போது தான் விட்டுக்கு வந்து சேர்ந்தேன். வழியெல்லாம் ஒரே விசாரிப்பு. எல்லார்டயும் பேசிட்டு வீட்டுக்கு போனேன். வீட்டுக்குள்ள போனவுடனே அப்படி ஒரு சந்தோஷம். என்ன இருந்தாலும் 20 வருஷமா இருக்குற வீடாச்சே. ரொம்ப பாதுகாப்பான இடத்துல இருக்குற மாதிரி ஒரு மகிழ்ச்சி...

அன்னைக்கு வர வழியில பல இடங்களில் பயங்கரமா பட்டாசு வெடிச்சாங்க. எங்க ஊருல ராத்திரி முழுக்க ஒரு லோடு தேங்காய் உடைச்சிருக்காங்க. இருந்தாலும் இது ரொம்ப ஓவர் இல்லையா? சரி அதை பத்தி அடுத்த பாகத்துல பார்ப்போம்...

தொடரும்...

Friday, October 19, 2007

பயணக் கட்டுரை...

சின்ன வயசுல ரொம்ப ஆசைப்படற விஷயங்கள் கிடைத்த பிறகு வெறுத்து போய்விடவதுண்டு. அதுல எனக்கு தெரிஞ்சி முதலிடம் இந்த விமானப்பயணம் தான். சின்ன வயசுல இருக்கும் போது ஒரு தடவையாவது ஃபிளைட்ல போகனும்கறது என் வாழ்க்கையின் லட்சியமாக இருந்திருக்கிறது.

விட்டில இருக்கும் போது ஃபிளைட் போச்சுனா வெளிய வந்து வேடிக்கை பார்ப்போம், டாட்டா காட்டுவோம் (ஆமாம் இந்த கை ஆட்டறதுக்கு டாட்டா காட்டறதுனு எப்படி பேர் வந்துச்சுனு யாருக்காவது தெரியுமா?). அந்த சத்தமே ஒரு மகிழ்ச்சியை கொடுத்துவிடும். க்ளாஸ்ல இருக்கும் போது ஃபிளைட் போச்சுனா ஜன்னல் வழியா தெரியாதுனு வானத்தை பார்த்து க்ளாஸ் முழுக்கும் வாத்தியாரிடம் திட்டு வாங்கும். அந்த அளவுக்கு பிடித்த விஷயம் இப்ப சுத்தமா பிடிக்காம போயிடுச்சி.

பஸ்ல போகறது ரொம்பவும் பிடிக்கும். வித விதமான மனிதர்கள் ஏறி இறங்குவதை பார்ப்பதற்கு ஒரு விதமான சந்தோஷம் இருக்கும். ஆனா இந்த ஃபிளைட்ல தொடர்ந்து 10 மணி நேரம் உக்கார்ந்து போகறது மரண கடி. இந்த ஜீலைல நான் இந்தியா போன போது அப்படித்தான் இருக்கும்னு நினைச்சிட்டு பயணத்தை ஆரம்பித்தேன்.

கிளம்ப வேண்டிய நாளன்று WFH (Working From Home) போட்டுவிட்டு வேலை பார்த்துக்கொண்டே(செய்து கொண்டேனு சொல்லல. நல்லா கவனிச்சிக்கோங்க) கிளம்பினேன். கிளம்ப வேண்டியதற்கு 10 நிமிடத்திற்கு முன்னால் சங்கத்து சிங்ககளுக்கு நான் இந்தியா வரேனு சொல்லி ஒரு மெயில் தட்டிவிட்ட வந்தேன். நான் கிளம்புவது கடைசி வரை கேள்விக்குறியாகவே இருந்தது. நான் ஊருக்கு கிளம்புவதற்கு சரியாக ஒரு வாரத்திற்கு முன்னால் என் டீம் லீட் பேப்பர் போட்டுட்டாரு. என் நல்ல நேரம் (??? இந்த கேள்விக்குறிக்கு விடை கடைசி பாகத்தில் தெரியலாம்) எனக்கு லீவ் கொடுத்து அனுப்பினாங்க.

நான் தங்கியிருக்குமிடத்திலிருந்து பாஸ்டன் லோகன் ஏர்போர்ட் செல்ல குறைந்தது ஒரு மணி நேரமாகும். என் டீம் லீட் எனக்காக லீவ் போட்டு, அவருடையை புது ப்ரையஸ் காரில் என்னை அழைத்து வந்து ஃபிளைட் ஏற்றிவிட்டார். அமெரிக்கா வந்து முதல் முறையாக செல்வதால் எக்கச்சக்கமாக போருட்கள் எடுத்து சென்றேன். குறிப்பிட்ட அளவைவிட 5 கிலோ அதிகமிருந்ததால் 50$ தண்டம் கட்டி எடுத்து சென்றேன்.

ஏர் ஃபிரான்ஸில் எப்பவும் போல் ஏர் ஹோஸ்டஸ் எல்லாம் அழகாக இருந்தார்கள். எங்க இருந்து தான் பிடிக்கிறானுங்னு தெரியல. நல்லா சிரிச்சி வர வேற்றார்கள். ஒரு வழியா என் இடத்துல போய் உக்கார்ந்துட்டேன். புக் பண்ணும் போது Aisle சீட் தான் வேணும்னு சொல்லி புக் பண்ணிருந்தேன். நான் தான் முதல்ல போய் உக்கார்ந்தேன். பக்கத்துல யார் வர போறாங்களோனு ஆவலா பார்த்துட்டு இருந்தேன்.

எப்பவுமே ஃபிளைட்ல என் பக்கத்துல ஏதாவது பொண்ணுங்கதான் உக்காரனும்னு விதி போல. இந்த முறையும் ஒரு வெள்ளைக்கார அக்கா வந்து உக்கார்ந்தாங்க. இங்கிலிஸ்ல கடலை போடறதுக்கு பேசாம தூங்கலாம்னு தூங்கிட்டேன். அப்ப அப்ப சாப்பிட கொண்டுவரும் போது என்னையறியாமல் என் கண்கள் திறந்து கொண்டன. நல்லா சாப்பிட்டு சாப்பிட்டு தூங்கிட்டு இருந்தேன். ஏதாவது படம் பார்க்கலாம்னு பார்த்தா என் விதி என்னோட டீவி மட்டும் வேலை செய்யல. இது தான் சாக்குனு நானும் ஏர் ஹோஸ்டஸ் ஒருத்தங்களை கூப்பிட்டு சொன்னேன். என்னனு பார்த்துட்டு வரேனு எங்கயோ போனாங்க. போயிட்டு வந்து எதுவும் செய்ய முடியாதுனு சாரி சொல்லிட்டு போயிட்டாங்க.

ஒரு வழியா ஃபிரான்ஸ் போய் சேர்ந்தேன். அங்க ஏர்போர்ட் அட்டகாசமா இருந்துச்சு. சென்னை போற ஃபிளைட்டுக்கு 4 மணி நேரம் காத்திருக்க வேண்டியதிருந்தது. என்ன செய்யறதுனே தெரியல. நமக்குள்ள இருந்த வலைப்பதிவன் முழிச்சிக்கிட்டான். சரினு பாரிஸ் ஏர்போர்ட்ல உக்கார்ந்து எழுத ஆரம்பிச்சிட்டேன். அப்ப எழுதிட்டிருந்த ஆப்பரேஷன் கில்மா நாலாவது பகுதி பாதி எழுதினேன். அடுத்து அலைபாயுதே படத்து விமர்சனம். அப்பறம் பெரியார் பட விமர்சனம். இதெல்லாம் ஊர்லயே விட்டுட்டு வந்தது வேற கதை. பெரியார் படத்துக்கு எழுதன விமர்சனத்தோட முதல் 4 வரிகள் இதோ (வார்த்தைகள் மாறலாம். நாலு மாசமாயிடுச்சி இல்லையா?)...

"நிறைய படிச்சிவங்க இருக்கும் போது வெறும் நாலாவது வரைக்கும் படிச்சிருக்கிற உனக்கு எதுக்கு இந்த வேலைனு நீங்க கேக்கலாம். ஆனா இதையெல்லாம் அவுங்க யாரும் செய்யல. அதனால தான் நான் செய்யறேன்- இது சாக்ரடீஸ் முன்னாடி பெரியார் பேசற வசனம். இதையே தான் நான் படத்தோட இயக்குனர் ஞான.ராஜசேகரனுக்கும் சொல்றேன். பெரியார் படம் சரியில்லைனு நொட்டை சொல்றவங்களுக்கும் இது தான் பதில்..."

அப்ப நான் தீவிரமா எழுதிட்டு இருக்கறதை பார்த்து ஒருத்தர் பக்கத்துல வந்து உட்கார்ந்து "என்ன சார் கவிதை எழுதறீங்களானு கேட்டாரு". சென்னை ஃபிளைட் வர இடங்கறதால அங்க தமிழர்கள் நிறைய பேர் இருந்தாங்க. நான் முன்னாடியே வந்துட்டதால யாரையும் கவனிக்காம எழுத ஆரம்பிச்சிட்டேன். என் பக்கத்துல இருக்கவர் வந்து கேட்ட பிறகு தான் சுத்தி இருந்தவங்களையே பார்த்தேன். அதுலயும் நம்மல பார்த்து கவிதை எழுதறீங்களானு கேட்கும் போது அவர் ரொம்ப அப்பாவியாத்தான் இருக்கனும்னு ஒரு முடிவுக்கு வந்து அந்த பேப்பரையெல்லாம் உள்ள வெச்சிட்டு ஒரு மணி நேரம் அவர்ட மொக்கை போட்டுட்டிருந்தேன்.

அப்பறம் ஒரு வழியா ஃபிளைட் வந்து வழக்கம் போல என் Aisle சீட்ல போய் உட்கார்ந்து என் பக்கத்துல வர போற பொண்ணு யாருனு பார்த்துட்டு இருந்தேன். Wipro Bag எடுத்துட்டு ஒருத்தவங்க வந்து என் சீட் பக்கத்துல நின்னு நம்பர் சரி பண்ணாங்க. தமிழ் பேசறவங்கனு முகத்துலயே நல்லா எழுதி ஒட்டியிருந்தது. வந்தவுடனே என்னுடன் பேச ஆரம்பித்தாள்...

(தொடரும்...)

Thursday, October 18, 2007

சாப்ட்வேர் இஞ்ஜினியர் ஆகலாம் வாங்க-5 (மீள்பதிவு)

சரி, ரெசுமே தயார் செய்வது எப்படினு பாத்தாச்சி.

முதல் சுற்றான Aptitude Testக்கு தயார் செய்வது எப்படினு பார்ப்போம்.

Aptitude Testல என்ன மாதிரி கேள்விகள் எல்லாம் கேட்கலாம்???
1) Numerical Problems (எண்கணிதம்)
2) Logical/Analytical Puzzles
3) Verbal skills
4) C Programming Fundamentals

இனி ஒவ்வொன்றுக்கும் தயார் செய்வது எப்படினு பார்ப்போம்:
1) எண்கணிதம்:
இதற்கு எனக்கு தெரிந்த ஒரே தெய்வம் "Qunatitative Aptitude" by R.S. Aggarwal
இதில் முதல் 4-5 chapters வெட்டி மாதிரி தெரியும். ஆனால் அதுதான் முக்கியமான ஒன்று. எல்லா கணக்கையும் போட்டு பாருங்கள். பார்த்தா தெரிஞ்ச மாதிரி இருக்கு அதனால போட்டு பார்க்க தேவையில்லைனு விட்டுவிடாதீர்கள்.
கணக்கை பொருத்தவரை திரும்ப திரும்ப போட்டு பார்த்தால்தான் வரும்.

எனக்கு தெரிந்த வரை முக்கியமான chapters:
1) Problems on Numbers.
2) Problems on Ages
3) Time and Work
4) Pipes and Cisterns
5) Percentages
6) Profit and Loss
7) Series or Find the Odd ones
8) Venn Diagram (Satyam, CTS...)

Probability & Permutation and Combination அந்த புத்தகத்தில் இருக்காது. அதனால் இதை CAT/GRE படிப்பவர்களிடமிருந்து நகல் எடுத்துக் கொள்ளுங்கள்.
HCL Cisco முதல் சுற்றில் 20ல் 14 கேள்விகள் Probability & Permutation and Combinationல் இருந்து வந்தன. அந்த தேர்வில் நான் தேர்ச்சி பெற அதுவே உதவியது. ஏனென்றால் அனைவரும் R.S. Aggarwal படித்திருந்தனர். (இண்டெர்வியுல ஊத்திக்கிச்சு :-))

2) Logical/Analytical Puzzles:
இதற்கு நான் பயன்படுத்தியது IMS GRE Material. நான் GRE படிக்கவில்லை. ஆனால் நண்பனிடமிருந்து வாங்கி பயன்படுத்திக் கொண்டேன். இதற்கு எல்லாம் பெரிய புத்திசாலிதனம் தேவையில்லை. எல்லாமே 8-10 மாணவர்கள்கூட போட்டுவிடுவார்கள்.
ஒவ்வொரு மாதிரியான puzzlesம் எப்படி அணுக வேண்டுமென்று அந்த புத்தகத்தில் இருக்கும். மகிழ்ச்சியாக படியுங்கள் சுலபமாக கற்றுக் கொள்ளலாம்.
படித்ததை தெரியாதவருக்கு சொல்லிக் கொடுங்கள்.

3) Verbal skills :
இதை பற்றி ஒரு பதிவே போட்டாச்சு.

4) C Programming Fundamentals:
"Let us C", "Pointers in C", "Test ur C Skills"- Yashwant Kanitkar.
இதற்கு மேல் எதுவும் தேவையில்லை. முதலில் "Let Us C"ல் ஆரம்பிக்கவும்.
பிறகு "Pointers in C". "Test ur C Skills"ல் கேள்வி பதில்கள் இருக்கும். தேர்வுக்கு முன்னால் கண்டிப்பாக ஒரு முறையாவது படிக்கவும்.

அடப்பாவி நீ பாட்டுக்கு உன் இஷ்டத்துக்கு இத்தனை புத்தகத்தை சொல்லிட்ட. படிக்கற கஷ்டம் எங்களுக்கு தான தெரியும்னு சொல்லறீங்களா?
கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது கண்ணா...

ஒரு நாள் முழுக்க Quants, அடுத்த நாள் Verbal, அடுத்து Analytical, அடுத்து technicalனு படிக்காதீங்க!!! தினமும் ஒவ்வொன்றிற்கும் 2-3 மணி நேரம் ஒதுக்கி படியுங்கள். இது பெங்களூர், சென்னைனு போய் mansionல தங்கி வேலை தேடுபவர்களுக்கான நேர ஒதுக்கீடு. மற்றவர்கள் அவரவருக்கு தகுந்த மாதிரி ஒதுக்கி கொள்ளவும்.

தொடரும்....

Monday, October 15, 2007

சாப்ட்வேர் இஞ்ஜினியர் ஆகலாம் வாங்க-4 (மீள்பதிவு)

மென்பொருள் துறையில் புதிதாக வேலையில் சேர்பவர்களுக்கான தேர்வு முறை எப்படி இருக்கும்????

பொதுவாக இப்படிதான் எல்லா கம்பெனியும் வேலைக்கு ஆள் எடுப்பார்கள் என்று சொல்ல முடியாது. ஒவ்வொரு கம்பெனியும் ஒவ்வொரு முறையை கையாள்கிறார்கள்.

ஆனால் பெரும்பாலான கம்பெனி கையாளும் முறை என்னவென்றால்,
முதல் சுற்று: Aptitude Test.
இரண்டாவது சுற்று: Technical Interview
மூன்றாவது சுற்று: HR Interview
இதில் ஒரு சில கம்பெனிகளில் Technical Interviewவும், HR Interviewவும் சேர்ந்தே இருக்கும்.

சரி இனி ஒவ்வொரு சுற்றுக்கும் தயார் செய்வது எப்படி, முக்கியமாக ரெசுமே தயார் செய்வது எப்படி என்று பார்ப்போம். வேலை தேட முக்கியாமன ஒன்று ரெசுமே (Resume).

நாங்க வேலை தேடும் போது செய்த பெரிய தவறு, நம்மை முதலில் தயார் செய்து கொண்டு ரெசுமே தயார் செய்யலாம் என்று யோசித்துக் கொண்டுருந்தது. ஆயுள் முழுக்க படித்தாலும் எந்த ஒரு டெக்னாலஜியுலும் அனைத்தையும் தெரிந்து கொள்ள முடியாது என்று உணர்ந்தோம்.

ஆகவே வேலை தேடும் போது முதலில் தேவைப்படுவது ரெசுமே தான்.
ரெசுமே எப்படி இருக்க வேண்டும் என்று எனக்கு தெரிந்தவரை சொல்கிறேன்.

1) முக்கியமாக 2-3 பக்கங்களுக்குள் இருப்பது நல்லது.
2) SSLC, +2, டிகிரி மதிப்பெண்கள் இருக்க வேண்டும்.
3) எனக்கு நிறைய தெரியும் என்று காட்டிக்கொள்ள நினைத்து தெரியாததை எல்லாம் போடாதீர்கள். டிகிரியில் படித்த அனைத்தையும் Area Of Interestல் போடாதீர்கள். நன்றாக தெரிந்ததையே முடிந்த அளவு போடுங்கள். இல்லையென்றால் ரெசுமேவில் இருப்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

நான் பார்த்த ரெசுமே ஒன்றில் இருந்தது:
Known:
Operating System: DOS, Windows 9x/ME/XP, Linux, Unix
Languages: C, C++, Java, COBOL...
Packages: VB, .NET...
DataBase: Oracle 8, MS Access, DB2, Sybase
Area Of Interest**: Data Structure, Object Oriented Concepts, DBMS, Computer Networks, Compiler Design, Microprocessor...
உண்மையில் அவனுக்கு (எனக்கும்) இதில் எதுவுமே ஒழுங்காக தெரியாது. இதில் இருக்கும் அனைத்தையும் தினமும் படிக்க வேண்டும் என்று நினைத்து எதையும் படிக்கமாட்டான்.
4) அதிக பில்ட் அப் கொடுக்காதீர்கள். (Achievements: உண்மையாக ஏதாவது இருந்தால் போடுங்கள் இல்லை என்றால் விட்டுவிடுவது நல்லது. College Symposium எல்லாம் போடுவது தேவையில்லை என நினைக்கிறேன்)
5) ரெசுமேவில் பிறந்த நாள் இருப்பது நல்லது. (ஏனென்றால் இன்போஸிஸ் போன்ற கம்பெனிகள் பார்ப்பது பெயர், பிறந்த நாள், மதிப்பெண்கள் தான். Name, DOB, Marks are the primary keys) . பாஸ்போர்ட் விவரங்கள் எல்லாம் தேவை இல்லை.

**Area Of Interest:
நான் படிக்கும் போது ரொம்ப யோசிச்சி எல்லாம் படிச்சதில்லை. எனக்கு வேலை கிடைத்தால் போதும் என்று நினைப்பவர்கள், Object Oriented Conceptsஐ தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இதில் Freshers க்கு கேட்கும் கேள்விகள் ஒரளவிற்கு சுலபமாகத்தான் இருக்கும்.
(Abstraction, Encapsulation, Inheritance, Diff Bw Structural Approach and OOPs...).
முடிந்த அளவு AOI 1 அல்லது 2க்கு மேல் போட வேண்டாம் என்பது என் எண்ணம்.

படிக்கும் போதே நான் நன்றாக புரிந்து படித்தேன். எனக்கென்று ஒரு லட்சியம் இருக்கிறது. நான் ஜாவா டெவலப்பராகவோ/நெட் ஒர்க் அனலிஸ்டாகவோ/ டேடாபேஸ் அட்மினிஸ்ட்ரேட்டராகவோ தான் ஆவேன் என்பவர்கள் அதற்கான முயற்சியை மட்டும் மேற்கொள்ளுங்கள். கொஞ்சம் லேட் ஆனாலும் நீங்கள் விரும்பிய பணியை செய்யலாம்.

Aptitude Testக்கு தயார் செய்வது எப்படி என்று அடுத்த பதிவில் பார்க்கலாம்.

தொடரும்...

PS:

வைக் அவர்களின் பின்னூட்டம்:
AOI, final year project சம்மந்தப்பட்டதா இருந்தால் நல்லது, அதை பத்தி கேள்வி கேட்டு interview ஓட்டிடலாம் (அதாவது சொந்தமா செஞ்ச project'ஆ இருந்தால் :))

அதாவது அவுங்க கேள்வி கேக்கறதுக்கு முன்னாடி, எனக்கு இது தெரியுங்கற மாதிரி பில்ட் அப் குடுத்தா , உனக்கு என்ன தெரியும்னு அவங்களுக்கு சோதிக்க தோனும் அதனால வேற எதுலேயும் கேள்வி கேட்க மாட்டாங்க.

Friday, October 12, 2007

சாப்ட்வேர் இஞ்ஜினியர் ஆகலாம் வாங்க-3 (மீள்பதிவு)

நாங்க பெங்களூர் வந்தவுடன் புரிந்து கொண்ட விஷயம் நம்மைத்தவிர (தமிழர்களை) எல்லாரும் நல்லா இங்கிலீஸ் பேசுறானுங்க (ஆந்திராக்காரர்கள் நம்மைவிட மோசம்). நம்ம ஊர் பொண்ணுங்களும் பட்டையைக் கிளப்புறாங்க. (இதுக்கு தான் கடலை போடும் போது இங்கிலீஸ்ல பேசறாங்கனு புரிஞ்சிது).

எங்க கூட வந்த ஒருத்தனுக்கு இங்கிலீஸ்ல பேசனா வேலை கிடைத்துவிடும்னு நம்பிக்கை. நம்ம முதல் ரவுண்ட் கிளியர் பண்ணாதான இண்டர்வியூ. அதுக்கு முதல்ல தயார் பண்ணுவோம்னு நான் சொன்னன். அவன் என் பேச்சைக் கேக்காம "Call Center Training"ல 5000 குடுத்து சேர்ந்தான்.

முதல் வாரம் அவர்கள் எடுத்தது Basic Grammer (Tense, Verb, Noun, Adjective...). நம்ம எல்லாம் அதை எட்டாவதுல படித்து இருப்போம். இரண்டாவது வாரம் ஒரு தலைப்பை கொடுத்து 10 நிமிடம் பேச சொன்னார்கள். மூன்றாவது வாரம் GD.கடைசி வாரம் திடீரென்று தலைப்பை கொடுத்து பேச சொல்வார்கள்.இந்த Trainingக்கு எதற்கு 5000?

இதை நாங்களே ரூம்ல செய்யலாம்னு யோசிச்சி பண்ண ஆரம்பித்தோம்.
முடிந்தவரை ஒருவருக்கொருவர் இங்கிலீஸ்லயே பேசிக் கொண்டோம் (இது பயங்கர ஜோக்காக இருக்கும்). தினமும் ஒருவர் மற்றவர்களுக்கு தலைப்பை குடுத்து பேச ஆரம்பித்தோம்.முதலில் மிகவும் சுலபமான தலைப்பை குடுத்துக் கொண்டோம். பிறகு ஒருவனுக்கு நான் சுலபமான தலைப்பு என்று குடுத்தது அவனுக்கு கடினமாக தோன்ற பதிலுக்கு அவன் அடுத்தவனுக்கு கடினமான தலைப்பை குடுக்க... நல்லா சூடு பிடிக்க ஆரம்பித்தது.

கண்ணாடியைப் பார்த்து பேசிப்பழகுவது என் நண்பன் ஒருவன் சொன்ன அறிவுரை. அது எங்கள் அனைவருக்கும் பயன்பட்டது. 2 மாசத்துல எங்களுக்கே நம்பிக்கை வர ஆரம்பித்தது.

நான் சந்தித்த நபர்களில் பெரும்பாலும் எங்களை போலவே ஆங்கிலம் பேச தயங்குபவர்கள் அதிகம். அவர்களுக்கு நான் சொன்னதெல்லாம் இதுதான். ஆங்கிலம் என்பது நம் தாய் மொழியல்ல. அது நம் அறிவின் அளவுகோலும் அல்ல. அதில் நாம் பண்டிதர்களாக வேண்டிய தேவையுமில்லை. ஓரளவிற்கு திக்காமல் திணராமல் நாம் சொல்ல நினைத்ததை சொன்னாலே போதும்.

தினமும் "The Hindu" editorial page சத்தம்போட்டு படிக்கவும். தினமும் குறைந்தது 1-2 மணி நேரம் ஆங்கில செய்தித்தாள் படிக்கவும், GD அல்லது தலைப்பைக் கொடுத்துப் பேச பயன்படுத்திக் கொள்ளலாம். தெரியாத வார்த்தைகளை எழுதி வைத்துக்கொண்டு அதை எப்படியும் தினமும் பயன்படுத்தவும்.

பேசுவதற்கு ஆள் இல்லை என்றால் Airtel/Hutch customer careக்கு போன் செய்து பேசவும். என் பக்கத்து ரூம்ல இருப்பவன் இதை தான் செய்வான். அவனுடைய கேள்விகள் எதுலயும் logic இருக்காது. இருந்தாலும் அவன் தயங்காமல் முப்பது நிமிடம் பேசுவான். (eg. Is Airtel better than Hutch, Y there is no signal in Electronic City?, which is the better plan in Airtel....)

யார் கிண்டல் செய்தாலும் வருத்தப்படாதீர்கள். கிண்டல் செய்ற எந்த நாயும் சுண்டல் கூட வாங்கி தரமாட்டானுங்கனு மனதிற்குள் சொல்லிக்கொள்ளவும் :-).

தயவு செய்து பணத்தை "Call Center training"க்கு குடுத்து வீணாக்காதீர்கள். எந்த மொழியையும் நமக்குள் யாரும் திணிக்க முடியாது, பழக பழக தானாக வந்துவிடும்...

தொடரும்....

Wednesday, October 10, 2007

சாப்ட்வேர் இஞ்ஜினியர் ஆகலாம் வாங்க-2 (மீள்பதிவு)

இப்ப நான் சொல்ல போறது, காலேஜ் முடித்து வேலை தேடுபவர்களுக்கு. (நான் சொல்வது எல்லாம் average மற்றும் Below average மாணவர்களுக்கு. புத்திசாலி மாணவர்களுக்கு சொல்லி தரும் அளவுக்கு என்னிடம் சரக்கு இல்லை)

நீங்க எந்த இஞ்ஜினியரிங் (even MCA/ MSc) வேண்டுமென்றாலும் படித்திருக்கலாம். கம்ப்யூட்டர் இஞ்ஜினியர்களுக்கு மட்டும் தான் Software field என்று நினைக்காதீர்கள்.

எனக்கு மேனாஜராக இருந்தவர்கள் மெக்கானிக்கல் மற்றும் சிவில் படித்தவர்களே. கம்ப்யூட்டர் படித்தவர்களுக்கு கொஞ்சம் ஈஸியாக இருக்கலாம். ஆனால் யார் வேண்டுமென்றாலும் கம்ப்யூட்டர் கற்றுக்கொள்ளலாம். அதற்கு தேவையான ஒன்று ஈடுபாடு மட்டுமே.

நீங்க Fresherஆக வேலை தேடுபவர்கள் என்றால் உங்களிடம் இந்த புத்தகங்கள் இருப்பது அவசியம்.
1) Quantitative Aptitude by R.S. Aggarwal
2) Dictionary (even u can have the E-copy, its OK)
3) Let Us C
4) Pointers in C

இதை எப்படி படிப்பது என்பது பின்னால் சொல்கிறேன். இப்ப எங்க கதைய சொல்றேன்.

நம்ம பசங்களுக்கு எல்லாம் (என்னையும் சேர்த்து) இங்கிலிபிஸ் அவ்வளவு நல்லா பேச வராது. காரணம் காலேஜ்ல நாமாலும் இங்கிலிபிஸ்ல பேச மாட்டோம். பேசறவனையும் விட மாட்டோம். ஏன்னா காலேஜ்ல படிக்கும் நம்மளைப் பொருத்தவரை

இங்கிலீஸில் பேசவது ஒரு பாவச்செயல்.
இங்கிலீஸில் பேசவது ஒரு பெருங்குற்றம்.
இங்கிலீஸில் பேசவது ஒரு மனிதத்தன்மையற்ற செயல்.

கடலை போடுபவர்கள் மட்டும் தான் இங்கிலீஸில் பேசுவார்கள். நம்மல மாதிரி ஆளுங்க எல்லாம் காலேஜ்க்கு வந்தாலே பெரிய விஷயம். அதுல போயி இங்கிலீஸ்ல பேசிட்டாலும் (இதுக்கெல்லாம் பின்னாடி அனுபவித்தோம்).
ஆனால் எங்களை மாதிரி கூட்டம் தான் எல்லா காலேஜ்லயும் அதிகம்.
Cosmopoliton cityல படித்த நாங்களே இப்படினா (சும்மா build-up :-)), மத்த ஊர்ல படித்தவர்களின் நிலைமை இன்னும் மோசம்.

எதுவுமே தெரியலனாலும் Software Industryக்கு நல்லா இங்கிலீஸ் பேச தெரிஞ்சா பொதும். வேலையும் வாங்கிடலாம், வாழ்க்கையும் ஓட்டிடலாம். ஆனால் நமக்கு அங்க தான் தகராறு. Linked List Programகூட 15 நிமிஷத்துல போட்டுடுவன். ஆனால் 15 நிமிஷம் தொடர்ந்து இங்கிலீஸ் பேசனும்னா??? ஆண்டவா ஏன் இப்படி சோதிக்கிறனு தோணும்!!!

ஆனால் நாங்களும் இங்கிலிஸ்ல பேசி வேலை வாங்கனோம். அதுக்கு நாங்க நிறையா கஷ்டப்பட்டோம். நாங்க என்ன செய்தோம்.....

----தொடரும்

Friday, October 05, 2007

சாப்ட்வேர் இஞ்ஜினியர் ஆகலாம் வாங்க-1 (மீள்பதிவு)

இந்த தொடர் மூலம் சாப்ட்வேட் இண்ட்ஸ்ட்ரில வேலை தேடுவது எப்படினு எனக்கு தெரிஞ்ச அளவுக்கு எழுதலாம்னு இருக்கிறேன்.
ஆங்கிலம் அதிகமா பயன்படுத்துவேன். தமிழ் கூறும் நல்லுலகம் என்னை மன்னிக்குமாக.

சாப்ட்வேர் இண்டஸ்ட்ரில வேலை வாங்குவதற்கு கடின உழைப்பைவிட புத்திசாலித்தனமான அணுகுமுறையே போதும். (We need to do Smart Work, no need for Hard work). புத்திசாலித்தனமான அணுகுமுறைக்கு புத்திசாலியா இருக்கனும்னு அவசியமில்லை :-).

சில தவறான புரிதல்கள்: (இதெல்லாம் நாங்க படிக்கும் போது நினைத்துக் கொண்டிருந்தது)
1) இண்டஸ்ட்ரில புதுசா வர டெக்னாலஜி எல்லாம் தெரிஞ்சாதான் வேலை கிடைக்கும்.

2) ஜாவா தெரிஞ்சா தான் வேலை வாங்கலாம்.

3) Resume அதிக பக்கம் இருக்கணும். Area of Interest நிறைய இருக்கணும்.

4) Quants, analytical, Verbal எல்லாம் GRE, GMAT, CAT படிப்பவர்களுக்கு தான்.

5) Shakuntala Devi Puzzles படிச்சா போதும் இன்போஸிஸ்ல வேலைக்கு சேர்ந்துடலாம்.

6) முக்கியமான ஒன்று: பெங்களூர் போன சுலபமா வேலை வாங்கிடலாம். சென்னைல openings கம்மி.

7) அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்குதான் வேலை சுலபமா கிடைக்கும்.

8) தினமும் எல்லா companyக்கும் போய் Resume கொடுக்க வேண்டும்.
(இன்னும் நிறைய இருந்தது. எல்லாம் மறந்து போச்சு. ஞாபகம் இருப்பவர்கள் சொன்னா நல்லா இருக்கும்)

இது எல்லாம் முட்டாள்தனம்னு வேலை தேடும்போது தான் தெரிந்தது.

நான் BE முடித்தது 2003ல். அந்த வருடம் கோவைல PSG, CIT, GCT தவிற மத்த காலேஜ்ல எல்லாம் Campus Placement ரொம்ப கம்மி. சொல்லப் போனால் எங்க காலேஜ்ல எல்லாம் Placementஏ இல்லை. சரி வேலை தேடி எங்கு போகலாம்னு யோசிக்கும் போது சென்னை அல்லது பெங்களூர்னு முடிவு பண்ணோம்.
பெங்களூர்ல தான் சாப்ட்வேட் இண்ட்ஸ்ட்ரிஸ் அதிகம் இருக்கு, அதானால அங்கயே போகலாம்னு முடிவு செய்து அங்கே சென்றோம்.

அந்த நாள்ல Openings கம்மியா இருந்ததால ஒரு சிலர் எல்லாம் வேலை தேடாம சொந்த ஊரிலே விவசாயம் மற்றும் சொந்த பிஸினஸ் பார்க்க சென்று விட்டனர்.

மொதல்ல போன எங்களுக்கு வேலை கிடைக்க 6-10 மாசமானது. அதற்கு பிறகு எல்லா companyயும் போட்டிப் போட்டுக் கொண்டு ஆள் எடுக்க ஆரம்பித்தன.
ஊருக்கு போனவர்கள் எல்லாம் விஷயம் தெரிந்து பெங்களூர் வந்தனர்.
எங்க ரூம் வேடந்தாங்கல் மாதிரி, வேலைத் தேடி வருபவர்களுக்கு வேலை கிடைத்தவுடன் அடுத்த batch வரும் (பொதுவாக வேலை கிடைப்பவர்கள் hyderabad, Noida, Chennai, மைசூர் சென்று விடுவார்கள்) . எப்பொதும் வேலை தேடி வருபவர்கள் ஒரு 3-5 பேர் இருப்பார்கள்.

நான் பெங்களூர்ல இருந்த வரையில் 20-30 பேருக்கு மேல் எங்க ரூம்ல தங்கி வேலை தேடி நல்ல பணியில் சேர்ந்திருக்கிறார்கள். இந்த அனுபவத்தை வைத்து தான் இந்த தொடரை எழுதுகிறேன். இதுல எனக்கு தெரிந்த வரையில் practicalலாக எழுதுகிறேன்.

Tuesday, October 02, 2007

புரட்சி செய்வோம்!!!

இன்னைக்கு காலைல நம்ம கப்பி நிலவர் ஆன்லைன்ல வந்தாரு.

நான்: வாங்க கப்பி. எப்படி இருக்கீங்க?

கப்பி: நல்லா இருக்கேன் தம்பி. நீ எப்படி இருக்க?

நான்: நல்லா இருக்கேன் அண்ணே. நேத்து நீங்க கீத்து கொட்டாய்ல எழுதன விமர்சனம் பட்டைய கிளப்புச்சி.

கப்பி: இதுக்கே இப்படி அசந்துட்டா எப்படி? அடுத்து நான் எழுத போற மலைக்கோட்டை விமர்சனத்தை படிச்சு பாரு. அரண்டு போயிடுவ.

நான்: அது என்னணா மலைக்கோட்டை? உச்சி பிள்ளையார் கோவில் இருக்கே. அதுவா?

கப்பி: என்னது மலைக்கோட்டை தெரியாதா? நம்ம "புரட்சி" தளபதி விஷால் நடிச்ச படம்பா.

நான்: என்னது "புரட்சி" தளபதியா? அவர் எந்த நாட்டுக்கு தளபதியா இருந்தாரு? இல்லை என்ன புரட்சி பண்ணாரு?

கப்பி: ஏன்பா இப்படி உலகம் புரியாத பச்சை மண்ணா இருக்கியே. புரட்சி பண்ணா தான் புரட்சி பட்டம் தரனுமா என்ன? நம்ம Gaptain விஜயகாந்த் என்ன இந்திய கிரிக்கெட் டீமுக்கு கேப்டனாவா இருந்தாரு? சும்மா அப்படியே வைச்சிக்க வேண்டியது தான். புரட்சினு வைச்சா ஒரு கெத்தா இல்லை?

நான்: ஆமாண்ணே...

கப்பி: அதான். பேருலையே ஒரு கெத்து இருக்கனும்னு தான் அப்படி வைச்சிக்கறது. சரி நான் ஆபிஸிக்கு போகனும். அப்பறம் பார்க்கலாம். பை

இதுக்கு அப்பறம் தான் நான் தீவிரமா சிந்திக்க ஆரம்பிச்சேன். புரட்சினு பேர்ல வைச்சா ஒரு கெத்தா தான் இருக்கு. சரி இன்னும் கொஞ்சம் நாள் போனா எல்லா நடிகர்களும் அவுங்க பேருக்கு முன்னாடி புரட்சி சேர்த்துக்குவாங்க போல இருக்கு. அதுக்கு முன்னாடியே நம்மளால முடிஞ்சதை ரிசர்வ் பண்ணிடுவோம். ஏதோ எனக்கு தெரிஞ்ச வரைக்கும் நம்ம வலைப்பதிவர்களுக்கு நான் யோசிச்சி வைச்சது...

புரட்சி பதிவர் - கப்பி (இது அவரே வைக்க சொன்ன பேர் இல்லை. பாசத்துல வைச்சது)

புரட்சி ஆன்மீக செம்மல் - KRS

புரட்சி தோழி - My Friend

புரட்சி தல - கைப்புள்ள

புரட்சி பாகவதர் - தேவ்

புரட்சி கவுஞ்சர் - ராயல்

புரட்சி கதையாசிரியர் - ஜி.ரா

புரட்சி பி.ந வாதி - தம்பி

புரட்சி பின்னூட்டவாதி - மின்னல், இம்சை

புரட்சி நட்சத்திரம் - அபி அப்பா

புரட்சி வீரன் - ஜி

புரட்சி டிபன் - இட்லி வடை

புரட்சி ப்ரோக்ராமர் - பாலபாரதி

புரட்சி வழிகாட்டி - பாபா

புரட்சி மாரியாத்தா - துர்கா

புரட்சி ஆணியவாதி - ஆசிப் மீரான்

புரட்சி குட்டி ஆணியவாதி - மொகன் தாஸ்

புரட்சி கலாய்ப்பவர் - தளபதி சிபி

புரட்சி புலி - நாகை சிவா

புரட்சி போட்டோகிராஃபர் - CVR

புரட்சி ரிப்பீட்டர் - கோபி

புரட்சி டைம்பாஸ் - லக்கிலுக்

புரட்சி போலிங் ஆபிசர் - சர்வேசன்

புரட்சி சித்தர் - VSK

புரட்சி பேயோட்டி - வினையூக்கி

புரட்சி கடவுள் - செல்வன்

புரட்சி புதிர் - யோசிப்பவர்

புரட்சி பில்டிங் காண்ட்ராக்டர் - இலவசக்கொத்தனார்

புரட்சி கடிகாரம் - கோவி.கண்ணன்

புரட்சி நாடோடி - ஓசை செல்லா

புரட்சி கொலைவெறிப்படை தலைவர் - செந்தழல் ரவி

புரட்சி டீச்சர் - துளசி டீச்சர்

புரட்சி கேள்வியாளர் - தருமி

புரட்சி மருத்துவர் - டெல்பின்

புரட்சி கவிதாயினி - காயத்ரி

புரட்சி நினைவாளர் - விக்கி

புரட்சி ஸ்பீக்கர் - சவுண்ட் பார்ட்டி உதய்

புரட்சி மாப்பிள்ளை - கார்த்திக் பிரபு

புரட்சி ஓமப்பொடி - சுதர்சன் கோபால்

புரட்சி புகைப்படபொட்டி - இளவஞ்சி

புரட்சி விவசாயி - இளா

புரட்சி பிளாஷ் - பினாத்தல் சுரேஷ்

புரட்சி சொல்லாளர் - குமரன்

புரட்சி ஆனை - பொன்ஸ்

புரட்சி ஆராய்ச்சியாளர் - ஜொள்ளு பாண்டி

புரட்சி காதலன் - அருட்பெருங்கோ

புரட்சி வெண்பா வாத்தி - ஜீவ்ஸ் ஐயப்பன்

புரட்சி கில்லி - ஐகாரஸ் ப்ரகாஷ்

புரட்சி பொருளாளர் - மா.சிவக்குமார்

புரட்சி பெரும்பதிவர் - உண்மை தமிழன்

புரட்சிக்கே புரியாதவர் - அய்யனார்

புரட்சி சங்கம் - வவாச

புரட்சி திரட்டி - தமிழ்மணம்

நான் விட்டதை நீங்க வந்து பின்னூட்டத்துல சொல்லுங்க... புரட்சி பண்ணுங்க