தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Thursday, July 31, 2008

ஆடு புலி ஆட்டம் - 3

"எக்ஸ்க்யூஸ் மீ! நீங்க ஃப்ரெஷ்ஷரா வேலை தேடறீங்களா?"

"ஆமாங்க... நீங்க என்ன பண்றீங்க?"

"எனக்கு இங்க நாலு கம்பெனில வேலை கிடைச்சிருக்கு. எதுல சேரலாம்னு யோசிச்சிட்டு இருக்கேன்" சொல்லிவிட்டு லேசாக சிரித்தாள்.

"கலக்கறீங்க. எப்படிங்க ஒரே சமயத்துல நாலு கம்பெனில வேலை? ஒரு கம்பெனில வேலை கிடைச்சா சேராம திரும்பவும் வேலை தேடுவீங்களா?"

"இல்லைங்க. போன மாசம் இன்ஃபோஸிஸ் அட்டெண்ட் பண்ணேன். இந்த மாசம் அக்சண்சர், ஐபிஎம், சத்யம் மூணும் அட்டெண்ட் பண்ணேன். எல்லாத்துக்கும் இந்த வாரம் தான் ரிசல்ட் வந்துச்சு. ஃபிரெண்ட்ஸ்க்கு எல்லாம் ட்ரீட் கொடுத்துட்டு இன்னைக்கு தான் ஊருக்கு கிளம்பறேன். அங்க போய் எங்க வீட்ல அப்பா, அண்ணாகிட்ட எல்லாம் பேசி ஏதாவது ஒரு முடிவு செய்யனும்"

"நீங்க என்ன முடிவு செஞ்சிருக்கீங்க?"

"எனக்கும் எதை டிசைட் பண்றதுனு இன்னும் தெரியல. அனேகமா அக்சண்சர் தான் சேருவேனு நினைக்கிறேன்"

"ஆல் தி பெஸ்ட்ங்க"

"தேங்க்ஸ்ங்க. நீங்க வந்து ஆறு மாசமாச்சுனு சொன்னீங்க இன்னும் வேலை கிடைக்கலயா?"

"என்னங்க பண்ண. லக்கே இல்லைங்க"

"லக் எல்லாம் சொல்லாதீங்க. எல்லாத்துக்கும் முயற்சி தாங்க முக்கியம். இதே என்னை எடுத்துக்கோங்க. இன்ஃபோஸிஸ் மட்டும் அட்டெண்ட் பண்ணிட்டு நிறுத்தியிருக்கலாம். விடா முயற்சியால தான் இப்ப கைல நாலு ஆஃபர் வெச்சிருக்கேன்"

"என்னங்க பண்ண. எவனும் கால் லெட்டரே அனுப்ப மாட்றானுங்க. நானும் எவ்வளவோ முயற்சி செஞ்சி தான் பாக்கறேன்"

"நீங்க எப்படி எல்லா கம்பெனிக்கும் அப்ளை பண்றீங்க?"

"நான் ஒவ்வொரு கம்பெனிக்கா ரெஸ்யும் எடுத்துட்டு போய் அந்த கம்பெனி வாட்ச் மேன்கிட்ட கொடுப்பேங்க. அவர் வாங்கி வெச்சிக்குவார்"

"அப்பறமா அதை எல்லாம் எடைக்கு போட்டு சுண்டல் வாங்கி சாப்பிட்டுடுவாரு. என்னங்க இது தமிழ் சினிமா ஹீரோ மாதிரி பண்றீங்க? யாராவது தெரிஞ்சவங்க இருந்தா ரெஃபர் பண்ண சொல்றதை விட்டுட்டு இப்படி பண்ணிட்டு இருக்கீங்க?"

"எனக்கு தெரிஞ்சவங்க யாரும் இங்க இல்லைங்க. நாங்க தான் எங்க காலேஜ்ல முதல் செட்டு. அதனால சீனியர்ஸும் இல்லை. நாங்க நாலு ஃபிரெண்ட்ஸ் வீடு எடுத்து தங்கி வேலை தேடிட்டு இருக்கோம். ஒருத்தவனுக்கும் இன்னும் கால் லெட்டரே வரல"

"இப்படி வேலை தேடினா கால் லெட்டர் வராது. கால் வலி தாங்க வரும். ஆன் லைன்ல ஒழுங்கா அப்ளை பண்ணுங்க. அப்படியே உங்க மெயில் ஐடியும், ஃபோன் நம்பரும் எனக்கு கொடுங்க. எனக்கு ஏதாவது தெரிஞ்சா உங்களுக்கு அனுப்பறேன்"

"சரிங்க"

"உங்களுக்கு என்ன லாங்வேஜ் தெரியும்?"

"தமிழ், இங்கிலிஷ்"

"ஏன் கன்னடம், மலையாளம் எல்லாம் கத்துக்க வேண்டியது தானே? இந்த ஜன்மத்துல உங்களுக்கு வேலையே கிடைக்காதுனு நினைக்கறேங்க"

"ஏங்க இப்படி சொல்றீங்க?"

"நான் என்ன ப்ரோகராமிங் லாங்வேஜ் தெரியும்னு கேட்டேன். நீங்க என்னனா கற்றது தமிழ், இங்கிலிஷ்னு கதையை விட்டுட்டு இருக்கீங்க?"

"என்னங்க பண்ண உங்களை மாதிரி நிறைய இண்டர்வியு அட்டெண்ட் பண்ணிருந்தா தெரியும். எனக்கு C கொஞ்சம் கொஞ்சம் தெரியுங்க"

" 'C' யே கொஞ்சம் கொஞ்சம் தான் தெரியுமா? இப்பல்லாம் பொறக்கற குழந்தையே லினக்ஸ், ஜாவானு எல்லாம் தெரிஞ்சிட்டு தான் பொறக்குதுங்க. நீங்க என்னனா 'C' யே கொஞ்சம் தான் தெரியும்னு சொல்றீங்க"

"என்னங்க பண்றது. சட்டில இருக்கறது தான் அகப்பைல வரும்"

இவ்வளவு கேள்விக்கு பேசாம கூகுல வேலை செய்யறனே சொல்லியிருக்கலாம் போல இருக்குங்க. நல்லா கடலை வறுத்திருக்கலாம். இப்ப மொக்கையா போச்சு.

"ஹிம்ம்ம்... ஊருல இருந்து வந்தவுடனே எனக்கு மறக்காம ஃபோன் பண்ணுங்க. என் ஃபிரண்டு ஒருத்தன் 'C'ல பிஸ்து. அவன்கிட்ட உங்களுக்கு இண்ட்ரோ பண்ணிவிடறேன்"

"சரிங்க. கண்டிப்பா. ஆமா நீங்க திருண்ணாமலையேவா?" பேச்சை திசை திருப்பியே ஆகனுங்க.

"இல்லைங்க. நான் கள்ளக்குறிச்சி. திருண்ணாமலைல இருந்து பஸ் மாறி போகனும்"

"ஆமாம் இன்னைக்கு பௌர்ணமியாச்சே. நீங்க ஏன் சேலம் போய் போகாம இந்த ரூட்ல வறீங்க?"

"இன்னைக்கு பௌர்ணமியா? எனக்கு அது தெரியாதே. இந்த பக்கம் கொஞ்சம் சீக்கிரமா போகலாம்னு வந்துட்டேன். அப்படி போனா ரெண்டு மணி நேரம் பக்கம் அதிகமாகுமே"

"சரி விடுங்க. ஸ்பெஷல் பஸ் ஏதாவது இருக்கும் மாறி போயிக்கலாம்"

"சரிங்க. நீங்க எப்ப மறுபடியும் பெங்களூர் வறீங்க?"

"நான் திங்ககிழமை இங்க இருப்பேன். நீங்க?"

"நான் ஒரு வாரம் கழிச்சி தான். ஜாயினிங் டேட் இன்னும் ரெண்டு வாரம் கழிச்சி தான் இருக்கு. சீக்கிரம் வந்து மட்டும் என்ன செய்ய போறோம் சொல்லுங்க"

"அதுவும் சரிதான்"

"ஒண்ணு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே?"

"சொல்லுங்க"

"உங்க பேரு என்னானு சொல்லவேயில்லையே?"

"என் பேரு நித்யா. உங்க பேரு?"

"ரவி சங்கர்"

ஒரு வழியாக திருவண்ணாமலைக்கு வந்துட்டோங்க. அடப்பாவிகளா பஸ்ஸ எதுக்கு இங்க நிறுத்தனானுங்க? அநியாயமா ரெண்டு கிலோ மீட்டருக்கு முன்னாடியே நிறுத்திடானுங்களே. ஏன்டா திருவண்ணாமலைக்கு பௌர்ணமி அன்னைக்கு வரவனுங்க எல்லாருமே கிரிவலத்துகா வரானுங்க. உங்க பக்திக்கு ஒரு அளவே இல்லையா? ஒரே சாமியார் கூட்டமா தெரியுதே.

"என்னங்க இது பஸ் ஸ்டாண்ட் மாதிரி தெரியலையே?" தூக்க கலக்கத்திலிருந்தாள் நித்யா.

"ஆமாங்க. பஸ்ஸை மலை பக்கத்துல நிறுத்திட்டானுங்க. பாருங்க திருவிழா மாதிரி இருக்கு"

"ஆமாம். இப்ப என்ன பண்றது?"

"அப்படியே நடந்து போனா பஸ் ஸ்டேண்ட் வந்துடும் வாங்க"

ரெண்டு பேரும் பேசிக்கிட்டே வந்ததுல ரெண்டு கிலோ மீட்டர் நடந்ததே தெரியலைங்க. பேசாம பத்து கிலோ மீட்டருக்கு முன்னாடியே வண்டிய நிறுத்தியிருக்கலாம் போல. அண்ணாமலையார் மகிமையே தனிதான் போல.

கள்ளக்குறிச்சில இருந்து வந்த ஸ்பெஷல் பஸ்ஸெல்லாம் எடுக்காம நிறுத்தி வெச்சிருக்காங்க. எல்லாம் கூட்டமா இருக்காங்க ஆனா எவனும் அங்க இருக்குற ஆபிசர்ஸை போய் கேக்க மாட்றாங்கங்க. இருங்க நானே போய் கேக்கறேன். என்னங்க எல்லா பஸ்ஸும் நாலு மணிக்கு மேல தான் எடுப்பனு சொல்றானுங்க.
பாவம் இந்த பொண்ணை விட்டுட்டு போகவும் மனசு வரலை. இப்ப நான் என்ன பண்ண? மூணு மணி நேரம் பஸ் ஸ்டாண்ட்ல உக்காரதா?

நான் கேட்க ஆரம்பிச்சதும் எல்லா மக்களும் இந்த ஆபிஸ் பக்கம் வர ஆரம்பிச்சிட்டாங்க. எல்லாரும் கேட்டா எப்படியும் ஒரு பஸ்ஸாவது விடுவான். எப்படியும் ஏத்தி விட்டுட வேண்டியது தான்.

என்னடா கூட்டத்திலிருந்து வெளிய வந்துட்டனு பாக்கறீங்களா? அப்ப தானே பஸ்ல இடம் பிடிக்க முடியும். எப்பவும் கூட்டத்தோட கோவிந்தா போடவே கூடாதுங்க. ஆஹா அங்க ஒரு பஸ் வர மாதிரி தெரியுதே. ஆமா கள்ளக்குறிச்சி பஸ் தான். திருப்பதில இருந்து வந்துட்டு இருக்கு. எல்லாரும் உள்ள சண்டை போட்டுட்டு இருக்கறாங்க. எப்படியோ நமக்கு உதவறதுக்கு அந்த திருப்பதி பாலாஜியே பஸ் அனுப்பியிருக்கான்.

ஒரு வழியா பஸ்ல நித்யாக்கு சீட்டு போட்டு உக்கார வெச்சாச்சுங்க. வெள்ளிக்கிழமைங்கறதால ரிட்டர்ன் ட்ரிப்ல கூட்டம் இல்லை. ஜன்னல் சீட்லயே உக்கார வெச்சாச்சு. இருங்க அவ ஏதோ எங்கிட்ட பேசனும்னு முயற்சி பண்ற மாதிரி இருக்கு. ஒரு நிமிஷம் வெயிட் பண்ணுங்க.

"ஏ ரவி... ரொம்ப ரொம்ப தேங்க்ஸ். கண்டிப்பா பெங்களூர் வந்தவுடனே உனக்கு கால் பண்றேன். அப்பறம் ஒரு முக்கியமான விஷயம். எனக்கும் வேலையில்லை. நானும் உன்னை மாதிரி தான் வேலை தேடிட்டு இருக்கேன். பெங்களூர் வந்ததும் ரெண்டு பேரும் சேர்ந்து வேலை தேடலாம்..."

(தொடரும்...)

Wednesday, July 30, 2008

ஆடு புலி ஆட்டம் - 2

என்னங்க இப்படி அநியாயமா நம்மள நடுசீட்ல உக்கார வெச்சிட்டாங்க. இன்னும் அஞ்சு மணி நேரம் இந்த சீட்ல உக்கார்ந்துட்டு போகனும். அதுவும் அந்த பக்கம் கொஞ்சம் நிறைய இடம் விட்டு. ஏன்னா இந்த காலத்துல பசங்களை எவனும் நம்ப மாட்றானுங்க. அதனால தான். ரொம்ப புழுக்கமா இருக்குற மாதிரி இருக்குது இல்லைங்க. இருங்க வரேன்

"அண்ணே! அந்த ஜன்னலை கொஞ்சம் திறங்களேன். வண்டி புறப்பட்டதுக்கப்பறம் மூடிக்கலாம்"

"நானும் தொறக்க முயற்சி செஞ்சேன்பா. முடியல. நீ வேணா முயற்சி செஞ்சி பாரேன்"

"கொஞ்சம் நகருங்க"

...

"அதான் சொன்னேன் இல்லை தம்பி. என்னால தொறக்க முடியலைனு. பாத்தீங்களா. உங்களாலையும் முடியல"

ச் சே!!! இன்னைக்கு நமக்கு நேரமே சரியில்லைங்க. அந்த ஜன்னலை தொறக்க முடியலைங்கறது கூட பிரச்சனையில்லைங்க. என்னால தொறக்க முடியலைனு அவர் சொன்னவுடனே அந்த பொண்ணு "களு"க்குனு சிர்ச்சதுதான் அசிங்கமா போயிடுச்சி. இதுக்கு கூடவாங்க சிரிப்பாங்க.

"தம்பி திருண்ணாமலையேவா?"

"இல்லைங்க. பக்கத்துல திருக்கோயிலூருங்க. திருண்ணாமலை போய் மாறி போகனும்"

"இன்னைக்கு பௌர்ணமியாச்சே! பஸ்ல இடம் கிடைக்குமா?"

"மணி இப்ப 8 தானே ஆகுது. பன்னெண்டு, ஒரு மணிக்கெல்லாம் பஸ் திருண்ணாமலைக்கு போயிடும். நாலு அஞ்சு மணிக்கு தான் எல்லாம் கிரிவலம் சுத்தி முடிப்பாங்க. அதனால ஸ்பெஷல் பஸ்ல அட்டகாசமா உக்கார்ந்துட்டே போயிடலாங்க"

"அதுவும் சரிதான். தம்பி பெங்களூர்ல என்ன பண்றீங்க?"

ஆஹா... ஆரம்பிச்சிட்டாங்கய்யா. என்ன சொல்லலாம்? இதுக்கு முன்னாடி ஒருத்தர்கிட்ட இப்படி தாங்க கூகுல்ல வேலை செய்யறேனு சொன்னேன். அதுக்கு அவர் அங்க என்ன தம்பி பண்றீங்கனு கேட்டாரு. நானும் என்ன சொல்றதுனு தெரியாம, கம்யூட்டர்ல ஏதாவது தேடறவங்களுக்கு கண்டு பிடிச்சி கொடுக்கறதுனு சொன்னேன். உடனே அவர் பக்கத்துல உக்கார்ந்திருந்த அந்த பாட்டி, "தம்பி! என் சுருக்கு பைய ஒரு வாரமா காணோம். கொஞ்சம் கண்டு பிடிச்சி கொடு"னு கேட்டுட்டாங்க. இந்த தடவை மறுபடியும் நல்லவனா மாறிட வேண்டியது தான்.

"நான் இங்க வேலை தேடிட்டு இருக்கேங்க"

"என்ன படிச்சிருக்கீங்க தம்பி"

"நான் கம்ப்யூட்டர் இஞ்சினியரிங் படிச்சிருக்கேங்க. ஆறு மாசமா வேலை தேடிட்டு இருக்கேன்"

"இங்க தான் அந்த படிப்புக்கு நிறைய வேலை இருக்குனு சொல்றாங்களே?"

"அதெல்லாம் சும்மாங்க. அதுக்கும் நிறைய இருக்கு. முக்கியமா நல்ல காலேஜ்ல படிச்சா கேம்பஸ்லயே வேலைக்கு சேர்ந்திருக்கலாம். நான் சுமாராதான் படிச்சேன். அதான் கொஞ்சம் லேட்டாகுது"

"கவலைப்படாத தம்பி. பௌர்ணமி அன்னைக்கு மலைல கால் வெக்கற இல்லை. சீக்கிரமே வேலை கிடைக்கும்"

"சரிங்க. ரொம்ப நன்றி"

என்னங்க. இவர் எதுவும் அதிகமா பேச மாட்றாரு. இதுக்கு முன்னாடி வந்தவங்க நிறைய பேர் அவுங்க சொந்தக்கார பசங்க இங்க வேலை செய்யறதை பத்தி எல்லாம் கதை அளந்து விட்டுட்டு இருப்பாங்க. கம்பெனி பேரு, சம்பளம் இதை எல்லாம் சரியா தெரிஞ்சி வெச்சிருப்பாங்க. ஆனா யாருக்கும் அதுல டேக்ஸ் எவ்வளவு கட்டறாங்கனு தெரியாது.

"எக்ஸ்க்யூஸ் மீ! நீங்க ஃப்ரெஷ்ஷரா வேலை தேடறீங்களா?"

என்னங்க அந்த பொண்ணு பேச ஆரம்பிச்சிடுச்சி... சரி விடுங்க கடலைய ஆரம்பிப்போம்...

மனதில் தோன்றிய குறள்
கடலைபோட்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
மொக்கைபோட்டு பின் செல்பவர்

(ஆட்டம் தொடரும்...)

Tuesday, July 29, 2008

ஆடு புலி ஆட்டம் - 1

Warning : : இந்த தொடரில் நிறைய Adult Content வருமென்பதால் 18 வயதிற்கு குறைந்தவர்களும், இளகிய மனம் கொண்டவர்களும் படிக்க வேண்டாம் என கேட்டு கொள்கிறேன். இது பரபரப்பிற்காக சொல்லவில்லை.

அப்பாடா ஒரு வழியா மெஜெஸ்டிக் வந்து சேர்ந்தாச்சுங்க. இந்த பெங்களூர் ட்ராபிக் ஜாம் இருக்கே. கொடுமைலயும் கொடுமைங்க. MGரோட்ல இருக்குற எங்க ஆபிஸ்ல இருந்து மெஜெஸ்டிக் வந்து சேரதுக்குள்ள எங்க ஊர்ல இருந்து கடலூர்க்கே போயிடலாங்க. ஓ எங்க ஊர் என்னனே உங்களுக்கு சொல்லலை இல்லை. எங்க ஊர் பேரு திருக்கோவிலூர்ங்க. திருவண்ணாமலைல இருந்து அரை மணி நேரத்துல போயிடலாம்.

இப்ப கூட திருவண்ணாமலை பஸ் தான் பிடிக்க போறேன். இன்னைக்கு வேற பௌர்ணமியா போயிடுச்சி. பஸ்ல எப்படியும் சீட் கிடைக்கறது கஷ்டம் தான். அதான் மடிவாலா போகாம நேரா மெஜெஸ்டிக்கே வந்துட்டேன். மெஜெஸ்டிக் பஸ் ஸ்டாண்ட்ல கொஞ்சம் கஷ்டப்பட்டா சீட் பிடிச்சிடலாம்.

மெஜெஸ்டிக்ல உள்ள நுழைஞ்சதும் முதல்ல ஒரு காபி குடிச்சிடறது நம்ம பழக்கங்க. அதுவும் அந்த கோத்தாஸ் காபிதாங்க நம்ம ஃபேவரைட். அஞ்சு ரூபாய்க்கு இவ்வளவு சூப்பரான காபி நம்ம ஊர்ல கிடைக்காதுங்க. இருங்க ஒரு காபி குடிச்சிட்டு வந்திடறேன்.

காபி வழக்கம் போல சூப்பரா இருந்துச்சுங்க. அதுவும் நமக்கு ஏத்த மாதிரி ஸ்டராங்கா, சக்கரை கொஞ்சம் கம்மியா. சுருக்கமா சொன்னா நம்ம கோயமுத்தூர் அண்ணபூர்ணா காபி மாதிரி. சரி காபி புராணத்த நிறுத்துவோம். நான் அதை பத்தி பேச ஆரம்பிச்சா பேசிட்டே இருப்பேன்.

இவ்வளவு நேரம் பேசிட்டே இருக்கோம். என் பேரை சொல்லல பாருங்க. என் பேரு... ஐயோ அங்க வர பஸ் திருவண்ணாமலை பஸ் மாதிரி தெரியுது. இருங்க முதல்ல பஸ்ல போய் இடம் பிடிப்போம்.

ஆஹா... அந்த பஸ்ல உக்கார இடமில்லைங்க. அதான் இந்த பஸ்ல ஏறிட்டேன். அஞ்சு மணி நேரம் நின்னுட்டு போக முடியாது இல்லையா? இந்த மூணு பேர் உக்கார சீட்ல உக்காரவே எனக்கு பிடிக்காது. இருந்தாலும் வேற வழியில்லாததால உக்கார்ந்துக்கிட்டேங்க. அடுத்து யாராவது வந்தா நடு சீட்ல உக்கார சொல்லனும். ஜன்னல் சீட்ல இருக்கற அந்த ஆளை எப்படியும் நகர சொல்ல முடியாது. நடுல உக்கார்ந்து போறதை விட வேற கொடுமை இல்லை. அதான் இப்படி ஓரமாவே ஒட்டிட்டு உக்கார்ந்து இருக்கேன்.

என்னங்க இவ்வளவு பேசியும் என் பேரை சொல்ல நேரமில்லை பாருங்க. நான் தாங்க ரவி. ரவி சங்கர். இந்த ட்ராபிக் ஜாம் ஊர்ல தான் கூகுள்ல வேலை செய்யறேன். அண்ணா யுனிவர்சிட்டி கேம்பஸ்ல நானும் என் எதிரி மாலதியும் செலக்ட் ஆனோம். அவ MS பண்ண போயிட்டா. நான் மூணு வருஷமா அங்க தான் குப்பை கொட்டிட்டு இருக்கேன்.

நான் நல்ல பையங்க. ஆனா அப்பப்ப கொஞ்சம் பொய் மட்டும் சொல்லுவேன். அதுல முக்கியமான ஒண்ணு பஸ்ல போகும் பக்கத்துல இருக்குற யார் கேட்டாலும் வேலை தேடிட்டு இருக்கறனு சொல்றது. கொஞ்சம் நல்லா கல கலனு போகும். நிறைய பேர் அட்வைஸ் கொடுப்பாங்க. அட்டகாசமான டிப்ஸ் எல்லாம் கொடுப்பாங்க. நானும் நல்ல பையனா கேட்டுக்குவேன். ஏன்னா வேலைக்கு போறனு சொன்னா சம்பளத்தை பத்தி தான் அதிகம் பேசுவாங்க. அதான் இப்படி.

இன்னைக்கு யாரும் சிக்க மாட்டாங்க போல. சரி பார்க்கலாம். எப்படியும் பக்கத்துல ஒரு ஆள் வருவான் இல்லை.

ஆஹா... என்னங்க அந்த பொண்ணு நம்ம பக்கத்துல வந்து நிக்குது. இடத்தை மாத்த சொல்ல போறாங்களா? திரு திருனு முழிச்சிட்டு நிக்குது.அனேகமா நகுந்து உக்கார சொல்லுதுனு நினைக்கிறேன்...

நடு சீட்டுக்கு போக வெச்சிட்டாளே!!! என்னை நடு சீட்ல உக்கார வெச்ச அவளுக்கு இருக்குங்க ஆப்பு...

(தொடரும்...)

Wednesday, July 09, 2008

PPIகளின் அட்டகாசங்கள்

NRI னா Non Returning Indiansனு மாறி பல வருஷமாயிடுச்சி. எங்கள மாதிரி ப்ராஜக்ட்க்காக வந்தவங்களுக்கு இனிமே PPIனு தான் சொல்லனும். அது என்ன PPI னு கேக்கறீங்களா? அதான் பொழைப்புக்காக புலம்பெயர்ந்த இந்தியர்கள் இல்லைனா பொட்டி தட்ட புலம்பெயர்ந்த இந்தியர்கள்னு வேணாக்கூட வெச்சிக்கலாம்.

ஆனா அப்படி ப்ராஜக்ட்டுக்காக வந்துட்டு ஒரு வருஷமோ ரெண்டு வருஷமோ இருந்துட்டு இவுங்க எல்லாம் இந்தியா வந்து பண்ற அலும்புக்கு அளவேயில்லை. (Not me.. I am a good guy.. u know) அமெரிக்காவுல இருந்த இந்த மாதிரி வரவங்க எல்லாம் என்ன என்ன அலும்பு பண்றாங்கனு சொல்ற பதிவு தான் இது.

முதல் விஷயம் யாரும் ட்ராபிக் ரூல்ஸயே மதிக்கறதில்லை. லேன் சேஞ்ச் பண்ணும் போது யாரும் இண்டிக்கெட்டரே போட மாட்றானுங்கனு ஃபீல் பண்ணுவானுங்க. (ஏன்டா, நம்ம ஊர்ல இருந்த வரைக்கும் லேன் எதுக்குனு தெரியுமா? கவர்மெண்டே கைல காசு நிறைய இருக்குனு என்ன பண்ணனும்னு தெரியாம ரோடுல கோடு போட்டு வெச்சிருக்கானுங்க. நம்ம டூ வீலர்ல போறவங்க எல்லாம் அந்த கோட்டு மேலே போனா ஜாலியா இருக்கும்னு போவானுங்க. கார்ல போறவங்க ப்ராக்டீஸ் பண்ணறதுக்கு வசதியா இருக்கும்னு அந்த கோடு காருக்கு நடுவுல வர மாதிரி ஓட்டி பழகுவானுங்க. இதுல லேன் சேஞ்ச்க்கு இண்டிக்கேட்டரா? அவன் அவன் திரும்பறதுக்கே இண்டிக்கேட்டர் போட மாட்டானுங்க இதுல இது வேறையா?)

"Z" - இதை இசட்னு சொல்ல மாட்டானுங்க. Zeeனு தான் சொல்லுவானுங்க.

Curdனு சொல்ல மாட்டானுங்க. Yogurtனு தான் சொல்லுவானுங்க.

Sauceனு சொல்ல மாட்டானுங்க. Ketch Upனு தான் சொல்லுவானுங்க.

"301" இதை த்ரி சீரோ ஒன்னுனு சொல்ல மாட்டானுங்க. த்ரி "ஓ" ஒன்னுனு தான் சொல்லுவானுங்க.

Purseனு சொன்னா சிரிப்பானுங்க. Walletனு தான் சொல்லனும்னு சொல்லுவானுங்க. (பர்ஸ் பொண்ணுங்க தான் யூஸ் பண்ணுவாங்கனு சொல்லுவானுங்க)

பீசாக்கு சாஸ் தொட்டு சாப்பிடறதை பார்த்தா கிண்டல் பண்ணுவானுங்க.

மைக்ரோவேவ் இல்லாம எப்படி சமையல் செய்யறதுனு கேள்வி கேட்பானுங்க. (என்னுமோ Father of Foreign Country மாதிரி பில்ட் அப் கொடுப்பானுங்க.)

ரோட்டை க்ராஸ் பண்றதுக்குள்ள கூட வர நம்ம உயிர வாங்கிடுவானுங்க. கேட்டா நடந்து போறவனுக்கு கார்ல போறவன் வெயிட் பண்ணனும்னு சொல்லுவானுங்க. (அப்படி நம்ம ஊர்ல நின்னா கண்ணகி சிலைக்கு பக்கத்துல அதே மாதிரி நாமலும் சிலையா நிக்க வேண்டியது தான்)

வீட்டு அட்ரஸ் சொன்னா Map Questல வழி பார்ப்பானுங்க.

இண்டர் நெட்ல படம் டவுன்லோட் பண்ணி பார்க்கலாம்னு சொல்லுவானுங்க. (வெண்ட்ரு.. இங்க படம் DVDயே 20 ரூபாய்ல வாங்கிடலாம்னு சொன்னா. "Oh Yeah.. I forgot that" அப்படினு பில்ட் அப் கொடுப்பானுங்க).

அமெரிக்காவுல எடுத்த போட்டோவை எல்லாம் காட்டி தினமும் உயிர வாங்குவானுங்க.

பெங்களூர்ல இருந்த வரைக்கும் லால் பாக் கூட போயிருக்காது. ஆனா அமெரிக்கா போனவுடனே இயற்கையை ரசிச்சி ஃபோட்டோ எடுத்துன்னே சொல்லி நம்மல கொல்லுவானுங்க.

Petrolனு சொல்ல மாட்டானுங்க.. Gasனு தான் சொல்லுவானுங்க.

போலிஸ்னு சொல்ல மாட்டானுங்க. காப்னு தான் சொல்லுவானுங்க. (கிடைக்க போறது என்னுமோ ஆப்பு. அதுல என்ன காப்பு?)

அமெரிக்கால இருக்கும் போது எல்லாத்தையும் ரூபாய்க்கு மாத்தி யோசிப்பானுங்க. இந்தியா வந்தவுடனே எல்லாத்தையும் டாலர்ல கணக்கு பண்ணுவானுங்க. ஒரு தோசை 45 ரூபாய்னா, ஒரு டாலர் தானே. ரொம்ப சீப்னு சொல்லுவானுங்க.

...............

உங்களுக்கு தெரிஞ்சதையும் சொல்லலாம்... இதெல்லாம் கண்டிப்பா நான் பண்ணமாட்டேனு இப்பவே வாக்கு கொடுத்துக்கறேன்...