தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Monday, June 30, 2008

மணல் கயிறு = Linked List

மணல் கயிறு படத்தை ரீமேக் பண்ண சொல்லி நம்ம புதுகை தென்றல் அக்கா விசு சாருக்கு ஒரு கோரிக்கை வெச்சிருந்தாங்க. விசு சார் பிஸியா இருக்கறதால நாமலே முயற்சி செய்வோம்னு கற்பனை செஞ்சி பார்த்ததால வந்த எஃபக்ட்

சாப்ட்வேர்ல வேலை பார்க்கற பொண்ணு போட்ட கண்டிஷன்ல அவுங்க அப்பா, அம்மா கதி கலங்கி நம்ம நாரதர் நாயுடு கிட்ட கூப்பிட்டு வராங்க. அந்த பொண்ணுக்கு ஏதாவது பேரு வைக்கனுமே. போன பதிவுல அட்வைஸ் பண்ண பொண்ணு பேரையே (வித்யா) வெச்சிடுவோம்.

நாரதர் நாயுடு: வாம்மா வித்யா. நீ போட்ட கண்டிஷன்ல உங்க அப்பா, அம்மாக்கு ஒரு மாசமா சாப்பாடே இறங்கலயாமே. எங்க அந்த கண்டிஷனெல்லாம் எங்கிட்ட சொல்லும்மா. நான் நல்ல பையனா பாக்கறேன்.

வித்யா: நான் MCA படிச்சிருக்கேன்.

நா.நா: அதுக்கென்னம்மா. ஒரு நல்ல இஞ்சினியர் படிச்ச பையனா பார்த்துடலாம்.

வித்யா: BE படிச்ச பையனா? அது UG தானே. நான் PG படிச்சிருக்கேனே.

நா.நா: சரிம்மா. ME படிச்ச மாப்பிள்ளையா பார்த்துடுவோம்.

வித்யா: ME MCAவைவிட பெரிய படிப்புனு என்னை மட்டம் தட்டுவாரே.

நா.நா: சரிம்மா. அப்ப MCA படிச்சவரே பார்த்துடலாம்.

வித்யா: எனக்கு சமமா மாப்பிள்ளை பார்த்தா, என் மதிப்பு குறைஞ்சிடுமே.

நா.நா: என்னம்மா, BE படிச்ச மாப்பிள்ளைனா வேண்டாங்கற, ME, MCAவும் வேண்டாங்கிற. அப்ப என்ன தான் படிச்சிருக்கனும்.

வித்யா: PG பண்ணிருக்கனும். ஆனா அது 6 வருஷ கோர்ஸா இருக்க கூடாது. MSc Software Engineering இந்த மாதிரி ஏதாவது 5 வருஷம் படிச்சிருக்கனும்.

நா.நா: முதல் கண்டிஷனே சூப்பரா இருக்குமா. அடுத்து

வித்யா: எனக்கு என் கெரியர் தான் முக்கியம்?

நா.நா: டிபன் கெரியரா? அதுக்கென்னமா நல்லதா பார்த்து வாங்கி தர சொல்றேன்.

வித்யா: அங்கிள். நான் சொல்றது என்னோட ப்ரஃபஷன். எந்த காரணத்துக்காகவும் என்னை வேலையை விட சொல்லக்கூடாது.

நா.நா: சரிம்மா. அதுக்கென்ன, வேலைக்கு போற பொண்ணு வேண்டும்னு சொல்ற மாப்பிள்ளையை பார்த்துட்டா போகுது.

வித்யா: அப்படி கண்டிஷன் போடற மாப்பிள்ளை எல்லாம் வேண்டாம். இப்படி சொல்ற மாப்பிள்ளை நாளைக்கே மாற வாய்ப்பிருக்கு. அவர் இஷ்டப்படறார்னு எல்லாம் நான் வேலைக்கு போக முடியாது. என் இஷ்டப்படி தான் நான் வேலைக்கு போவேன்.

நா.நா: சரிம்மா. உன் இஷ்டப்படி விடற மாப்பிள்ளையே பார்த்துட்டா போச்சு.

வித்யா: கண்டிஷன் நம்பர் 3. பையன் என் கண்ணுக்கு பாக்கறதுக்கு சல்மான் கான் மாதிரி தெரியனும், பேசறதுல ஷாருக்கான் மாதிரி இருக்கனும், டேலண்ட்ல அமிர்கான் மாதிரி இருக்கனும். ஆனா மத்தவங்க கண்ணுக்கு பார்க்கறதுக்கு விஜய் மாதிரி தெரியனும், பேசறதுல அஜித் மாதிரி தெரியனும், டெலண்ட்ல ரவி கிருஷ்ணா மாதிரி இருக்கனும்.

நா.நா : மொத்ததுல உன் கண்ணுக்கு ரெமோவா தெரியனும். மத்தவங்க கண்ணுக்கு மண்ணு லாரில ஆக்ஸிடெண்ட் ஆன சுமோவா தெரியனும். அப்படித்தானே?

வித்யா : ஆமாம். மாப்பிள்ளைக்கு குறைஞ்சது ஒரு 7-8 பேருக்காவது Non-Veg சமைக்க தெரியனும். ஏன்னா என் ஃபிரெண்ட்ஸ் எல்லாரும் வீக் எண்ட் வீட்டுக்கு வருவாங்க. அவுங்களுக்கு எல்லாம் டேஸ்டா சமைக்க தெரியனும். நானும் பக்கத்துல நின்னுட்டு ரெசிப்பி எல்லாம் படிச்சி கைடன்ஸ் பண்ணுவேன். அதனால பயப்பட வேண்டாம்.

நா.நா: ஹிம்ம்ம்... கேஷ்மீரீ பிரியாணில இருந்து செட்டிநாடு சிக்கன் வரைக்கும் செய்ய தெரிஞ்ச பையனா பிடிச்சிடுவோம்.

வித்யா: கண்டிஷன் நம்பர் 5. பையனுக்கு அமெரிக்கன் அக்செண்ட்ல பேச தெரிஞ்சிருக்கனும்.

நா.நா: ஏம்மா. நீ என்ன கால் சென்டருக்கா ஆள் எடுக்கற? விட்டா மதர் டங் இண்ஃப்ளூவன்ஸ் எல்லாம் இருக்க கூடாதுனு சொல்லுவ போல.

வித்யா: அதெல்லாம் இல்லை அங்கிள். இந்த தடவை எப்படியும் எனக்கு விசா கிடைச்சிடும். அங்க போனா கம்பெனில நான் எப்படியும் சமாளிச்சிக்குவேன். ஆனா பார்ட்டிக்கெல்லாம் கூப்பிட்டு போனா அக்சண்ட்ல பேசனா தான் பெருமையா இருக்கும்னு சொல்லி கேள்விப்பட்டிருக்கேன்.

நா.நா: சரிம்மா. நம்ம சப்போர்ட்ல இருக்கற பையனா பார்த்து பிடிச்சிடுவோம். அடுத்த கண்டிஷன சொல்லு.

வித்யா: கண்டிஷன் நம்பர் 6. எந்த காரணத்தை கொண்டும் என்னை டிபண்டண்ட் வீசால கூப்பிட்டு போக முயற்சி பண்ணக்கூடாது. எனக்கு வீசா கிடைச்சா அவர் விருப்பப்பட்டா என் கூட டிபண்டண்ட் வீசால வரலாம். அதுல எனக்கு எதுவும் பிரச்சனையில்லை.

நா.நா: சரிம்மா. உனக்கு தான் விசா கிடைச்சிடுமே. அப்பறம் என்ன?

வித்யா: இப்பவெல்லாம் விசா, லாட்ல பிக் அப் பண்றாங்க. எனக்கு கிடைக்காம போகவும் வாய்ப்பிருக்கு. அதான்.

நா.நா: சரிம்மா. உன் கூடவே வர மாப்பிள்ளையையா பார்த்துடுவோம்.

வித்யா: இது தான் ரொம்ப முக்கியமான கண்டிஷன். நான் கொஞ்ச ஜாலி டைப். அதனால என் டீம்ல இருக்கற ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் எனக்கு அடிக்கடி கால் பண்ணுவாங்க. அதை தப்பா நினைக்கக்கூடாது.

நா.நா: உன் பிரெண்ட்ஸ் கூட நீ பேசறதால என்னமா பிரச்சனை. உன் பிரெண்ட்ஸ் கூட அவர் அதிகமா பேசினா தானே பிரச்சனை.

வித்யா: அங்கிள். நான் சொல்ற பிரெண்ட்ஸ் எல்லாம் பசங்க. என்னைக்கு பொண்ணுங்க, மத்த பொண்ணுங்களுக்கு செலவு பண்ணி ஃபோன்ல பேசுவாங்க. எப்பவும் பசங்க தான் செலவு பண்ணி ஃபோன் பேசி, ஜாலியா மொக்கை போடுவாங்க.

நா.நா: சரிம்மா. நீ உன் பசங்க பிரெண்ட்ஸ் கிட்ட பேசும் போது பிரச்சனை பண்ணாம, அந்த பையனை அவனோட பிரெண்ட்ஸ் கிட்ட பேச சொல்லிடுவோம்.

வித்யா : நாங்க இந்தியால இருக்கற வரைக்கும் அவுங்க அப்பா, அம்மா எங்க வீட்டுக்கு சனிக்கிழமை ஃபுல் டே வந்து தங்கிட்டு போகலாம். ஆனா என்னை சமைக்க சொல்லக்கூடாது.

நா.நா : இது ஒரு கண்டிஷனாம்மா. முதல் வாரம் நீ சமைச்சு போட்டா அவுங்க உன் வீட்டு பக்கமே தலை வைக்க மாட்டாங்க. இன்னும் ஏதாவது இருக்கா?

வித்யா: இது தான் கடைசி கண்டிஷன். எங்க ரெண்டு பேருக்கும் ஏதாவது பிரச்சனை வந்து டைவர்ஸ் ஆகிடுச்சினா

நா.நா: ஏம்மா இப்படி அபசகுனமா பேசற. வாய கழுவும்மா.

வித்யா: இருங்க அங்கிள் சொல்லி முடிச்சிடறேன். ஏதாவது பிரச்சனை வந்து டைவர்ஸ் ஆகிடுச்சுனா அவர் கண்டிப்பா வேற கல்யாணம் பண்ணிக்கனும்.

நா.நா: இங்க தாம்மா. இங்க தாம்மா. நீ தமிழ் பொண்ணுனு நிருபிக்கற.

வித்யா: அதெல்லாம் இல்லை அங்கிள். அதுக்கப்பறம் அந்த பையன் எப்படி சந்தோஷமா இருக்கலாம். அதான்

நா.நா மயக்கம் போட்டு விழுகிறார்...

Wednesday, June 25, 2008

சாப்ட்வேர் மாப்பிள்ளை தேடும் பெண்களுக்கு

ஏதோ நம்ம தங்கச்சி "டிப்ஸ்" திவ்யா ரேஞ்சுக்கு இல்லைனாலும் நம்ம ரேஞ்சுக்கு கொஞ்சம் சிப்ஸ் ;)

வித்யா : என்னடி திடீர்னு ஃபோன் பண்ணியிருக்க என்ன விஷயம்?

நித்யா: வீட்ல மாப்பிளை பார்க்கலாம்னு நிறைய இடத்துல ரிஜிஸ்டர் பண்ணாங்க இல்லை? நிறைய ஜாதகமா வந்திருக்கு. அதுல 4-5 ஒத்து வர மாதிரி இருக்கு. எதை செலக்ட் பண்ணலாம்னு தெரியலை. அதான் குழம்பி போய் இருக்கேன்.

வித்யா : என்ன குழப்பம்?

நித்யா : நிறைய சாப்ட்வேர் இஞ்சினியருங்க ஜாதகம் வந்திருக்கு. இப்ப எல்லாம் சாப்ட்வேர் இஞ்சினியருங்க வேற ஃபீல்ட்ல இருக்கற

பொண்ணுங்களை தான் கல்யாணம் பண்ணிக்கனும் யோசிக்கறாங்களாம். அதான் இதுல யாரை செலக்ட் பண்றதுனு தெரியல. நீதான்

சாப்ட்வேர் இஞ்சினியராச்சே. எனக்கு கொஞ்சம் சஜஷன் சொல்லு.

வித்யா : சொல்லிட்டா போகுது. ஒவ்வொருத்தரும் என்ன பொசிஷனு சொல்லு.

நித்யா: முதல் மாப்பிள்ளை மேனஜரா இருக்காரு.

வித்யா : மேனஜரா? அப்படினா எப்பவுமே எதோ பிஸியா இருக்கற மாதிரி ஒரு பில்ட் அப் கொடுப்பாரு. ஆனா உருப்படியா ஒண்ணும் செய்ய மாட்டாரு. ஒரு கிலோ அரிசில ஊருக்கே சாப்பாடு செய்ய சொல்லுவாரு. ஆட்டுக்கறி வாங்கிட்டு வந்து கொடுத்துட்டு சிக்கன் 65 செய்ய சொல்லுவாரு. அது முடியாதுனு சொன்னாலும், ஒத்துக்க மாட்டாரு. எப்படியாவது ராத்திரி பகலா கஷ்டப்பட்டு உழைச்சாவது அதை செஞ்சி முடிக்கனும்னு சொல்லுவாரு. வேணும்னா நைட் கேப் (cab) அரெஞ்ச் பண்றனு சொல்லுவாரு. டேய் ராத்திரி பகல் முழிச்சா மட்டும் எப்படிடா செய்ய முடியும் கேட்டாலும் ஒத்துக்க மாட்டாரு.

வித்யா: ஆஹா. அவ்வளவு ஆபாத்தானவரா? அப்ப நம்ம எஸ்கேப். அடுத்து இருக்கறவரு டெஸ்ட் இஞ்சினியரு.

நித்யா: இவரு அவரை விட ஆபத்தானவரு. எது செஞ்சாலும் அதுல இருக்கற குறையை மட்டும் கரெக்டா சொல்லுவாரு. நீ பத்து வெரைட்டி சமைச்சு அவரை அசத்தனும்னு நினைச்சாலும் அதுல எதுல உப்பு கம்மியா இருக்குனு மட்டும் சொல்லுவாரு. நல்லா இருக்குனு எதுவுமே சொல்ல மாட்டீங்களானு கேட்டா, நல்லா செய்ய வேண்டியது தான் உன் வேலை. அதனால அதை எதுக்கு சொல்லனும்னு கேட்பாரு. ரொம்ப நல்லவரு.

வித்யா: அப்ப இவருக்கும் நோ சொல்லிடலாம். அடுத்து இருக்கறவரு பெர்ஃபார்மன்ஸ் டெஸ்ட் இஞ்சினியராம்.

நித்யா : இது அதுக்கும் மேல. எல்லாமே நல்லா இருந்தாலும், இதை செய்ய இவ்வளவு நேரமானு கேட்பாரு. காபி போட 10 நிமிஷமாச்சுனா, காபி நல்லா இருக்கானு பார்க்க மாட்டாரு. 5 நிமிஷத்துல போட வேண்டிய காப்பியை 10 நிமிஷமா போட்டிருக்கனு சத்தம் போடுவாரு. நீங்க சொல்றது இன்ஸ்டண்ட் காபி, நான் செஞ்சது பில்டர் காபினு சொன்னாலும் கேட்க மாட்டாரு. அதே மாதிரி தான் எல்லா வேலைக்கும். அப்ப நீ மேக் அப் பண்ற நேரத்துக்கு நீ எல்லாம் இவரை யோசிக்கவே கூடாது.

வித்யா: அப்ப சாப்ட்வேர் மாப்பிளையே வேண்டாம்னு சொல்றியா?

நித்யா: யார் அப்படி சொன்னா? சாப்ட்வேர்லயே இளிச்ச வாய் கூட்டம் ஒண்ணு இருக்கு. அது தான் டெவலப்பர் கூட்டம். எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்கும்.

வித்யா: அவுங்களை பத்தி சொல்லேன்.

நித்யா: நீ எதுவுமே செய்ய வேண்டாம். எல்லாமே இவுங்களே செஞ்சிடுவாங்க. நாம பின்னாடி இருந்து உற்சாகப்படுத்தினா போதும். ஆனா இவுங்க கிட்ட இருக்கற பிரச்சனை என்னனா எது கேட்டாலும் தெரியும்னு சொல்லிடுவாங்க. நம்ம "அறிவாளி" படம் தங்கவேல் பூரி சுட்ட கதை மாதிரி. அப்படினாலும் ஓ.கே தான். எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்குவாங்க. ஆனா அடிச்சிட்டு அடிச்சிட்டு "நீ ரொம்ப நல்லவனு" சொல்லனும். அவ்வளவு தான்.

வித்யா: இது சூப்பரா இருக்கே. அப்ப அந்த மாதிரி மாப்பிளையை தேடிடுவோம்...

Monday, June 23, 2008

கவுண்டரும் நடிகர்களின் டைரக்டர் அவதாரமும்

வீட்டைவிட்டு வெளிய வந்தே பல நாட்கள் ஆன கடுப்பில் யாருக்கும் தெரியாமல் செந்திலுக்கு போன் போட்டு வர சொல்லி, வெளியே சாப்பிட கிளம்புகிறார் கவுண்டர். பார்க் ஷெரட்டன் ஹோட்டலில் ஓரமாக ஒரு டேபிளில் உட்கார்ந்து ஆர்டர் செய்கிறார்கள் இருவரும்.

க: என்னடா மண்டையா எப்படி இருக்க?

செ: என் நிலைமை ட்ராவிட் மாதிரி ஆகிடுச்சுண்ணே. கங்குலிக்கிட்ட திட்டு வாங்கிட்டே இருந்தப்பவாது பரவாயில்லை. இப்ப தோனி வந்தவுடனே டீம்லயே சேர்த்துக்க மாட்றாங்க. அந்த மாதிரி உங்ககிட்ட மிதி வாங்கிகிட்டாவது நடிச்சிட்டு இருந்தேன். இப்ப நீங்க இல்லாம என் நிலைமையை பார்த்தீங்களாண்ணே.

க: சரி விடு. பீல் பண்ணாத.

பக்கத்து டேபிலில் இருந்து கேட்ட குரல்கள் மிகவும் பரிட்சையமாக தெரிந்ததால் திரும்பி பார்க்கிறார்கள். கோடம்பாக்கமே அங்கே ஆஜராகி இருந்ததை பார்த்து ஜெர்க்காகிறார்கள்.

க: ஹாய் ஹீரோஸ். என்ன இங்க எல்லாருமே சேர்ந்து வட்ட மேஜை மாநாடு நடத்திட்டு இருக்கீங்க? ஹிந்தி படம் மாதிரி எல்லாரும் சேர்ந்து ஒரே படத்துல நடிக்க போறீங்களா?

விஜய்: ண்ணா. வாங்கண்ணா. பார்த்து ரொம்ப நாளாச்சி. ரொம்ப இளைச்சி போயிருக்கீங்க. ரெண்டு பாட்டில் குலுகோஸ் ஏத்தினா பழைய படி ஜம்முனு ஆகிடுவீங்கண்ணா.

க: டேய் வயசானவனுக்கும் உடம்பு சரியில்லாதவனுக்கும் வித்தியாசம் தெரியாதவனுக்கெல்லாம் டாக்டர் பட்டம் கொடுத்தான் பாரு. அவனை
சொல்லனும்டா. நான் இங்க இருந்தா ரணகளம் ஆகிடும். நான் கிளம்பறேன்.

விஜய்: ண்ணா. என்னங்கண்ணா இப்படி சொல்லிட்டீங்க? நாங்க இங்க ஒரு முக்கியமான விஷயம் பேச வந்திருக்கோம்ணா. நீங்க தான் எங்களை எல்லாம் நல்லா வழி நடத்தணும்.

க: சரி. ஹெல்ப்னு கேட்டுட்டா நாம எல்லாம் கர்ணன் மாதிரி. மேட்டரை சொல்லு

விஜய்: ண்ணா. S.J சூர்யால ஆரம்பிச்சி கரு.பழனியப்பன் வரைக்கும் நடிக்க வந்துட்டாங்க. போற போக்குல தமிழ்நாட்ல எங்களை எல்லாம் வெச்சி டைரக்ட் பண்ண ஆளே இல்லாம போயிடும் போலிருக்கு. அதுக்கு தான் ஒரு முடிவெடுக்கணும்னு இங்க கூடியிருக்கோம்.

க: ஒரு விதத்துல தமிழ் நாட்டு மக்கள் தப்பிச்சிட்டாங்கனு சந்தோஷப்பட்டாலும் அந்த கலர் மண்டையன் எல்லாம் நடிக்கறதை பார்க்கறது அவுங்களுக்கு தண்டனை தான். சரி, அதுக்கு இப்ப என்ன பண்ணலாம்னு முடிவு பண்ணியிருக்கீங்க. ஹாலிவுட் டைரக்டர்ஸை யாரையாவது இம்போர்ட் பண்ண போறீங்களா?

விஜய்: ண்ணா. என்னங்கண்ணா இப்படி சொல்றீங்க. அவுங்களுக்கு எல்லாம் திருப்பாச்சி மாதிரி சூப்பர் படம் எடுக்க தெரியுமா? அதான் நாங்களே படம் டைரக்ட் பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டோம்.

க: டேய் குருவி மண்டையா. நீ நடிச்சாலே மக்கள் தாங்க மாட்டாங்க. நீ டைரக்ட் பண்ணா எப்படிடா தாங்குவாங்க? கதையை எங்க இருந்து பிடிப்ப?

விஜய்: என்னங்கண்ணா. இதுக்கூட தெரியாம இருக்கீங்க. இதுக்கூட யோசிக்காமலா முடிவெடுப்பேன். போன வாரமே பழைய தெலுகு படமெல்லாம் பார்த்தேன். 'டாக்டர்' NTR நடிச்ச "ராமுடு பீமுடு"வை ரீ மேக் பண்ணலாம்னு இருக்கேன்ணா. படம் கண்டிப்பா கில்லி மாதிரி ஓடும்னா.

க: அதான்னே. ரீமேக் படத்தை எந்த டைரக்டர் டைரக்ட் பண்ணா என்ன? அது என்னடா கில்லி மண்டையா அதுல அப்படி ஒரு சூப்பர் கதை?

விஜய்: ண்ணா. தமிழ்நாட்ல அப்படி ஒரு கதையோட எந்த படமும் இது வரைக்கும் வந்ததில்லை. அப்படி ஒரு கதை.

செந்தில் : அண்ணே. அந்த கதையை கொஞ்சம் சொல்ல சொல்லுங்கண்ணே. எனக்கு கேக்கணும்னு ஆசையா இருக்கு.

கவுண்டர்: டேய் அவிஞ்ச மண்டையா அவனுக்கு அவன் படத்து கதையே தெரியாது. இவன் நடிச்ச குஷி படத்தை தெலுகுல ரீ-மேக் பண்ணதை பார்த்துட்டு தமிழ்ல இப்படி ஒரு கதையோட படமே வரலைனு சொல்லி சச்சின்னு அதே படத்தை தமிழ்ல ரீ-மேக் பண்ணான். அதுக்கே அவனுக்கு டபுல் டாக்டர் பட்டம் கொடுத்திருக்கணும். இவன் சொல்றானு கதையை கேக்கனும்னு சொல்றீயே.

செந்தில்: அண்ணே. நாம கதைல ஏதாவது சேஞ்ச் பண்ணி அப்படியே ஒரு சீன்ல நுழைஞ்சிடலாம்ணே.

கவுண்டர்: சரி விடு. ஏம்பா டாக்டர் மண்டையா. குழந்த புள்ள ஆசைப்படுது இல்லை. அப்படியே அந்த கதையை கொஞ்சம் சொல்லேன்.

விஜய் : ண்ணா. இதுல ஹீரோ டபுல் ஆக்ட்ண்ணா. ரெட்டை பிறவிங்க. ஒருத்தர் அக்கா வீட்ல பணக்கரணா, கோழையா வளர்றாரு. இன்னொருத்தர் பாட்டிக்கிட்ட வீரமா வளர்றார். கோழையா வளர்றவர் அவுங்க மாமாக்கிட்ட பயங்கரமா அடி வாங்கிட்டு வீட்டை விட்டு வெளியேறிடறாரு. அதுக்கு அப்பறம் ஆள் மாறாட்டம். அதுல பாருங்களேன், அந்த வீரமா இருக்கறவர் அவுங்க மாமாவை சவுக்கால அடிப்பாரு பாருங்க. அப்படி இருக்கும். இதுல இன்னொரு ஸ்பேஷாலிட்டி என்னன்னா வீரமா இருக்கறவருக்கு குத்து பாட்டுண்ணா, கோழையா இருக்கறவருக்கு மெலடி பாட்டுண்ணா. தமிழ் நாடே அலற போகுது பாருங்கண்ணா.

கவுண்டர்: டேய் போக்கிரி மண்டையா, இந்த படம் வந்து தமிழ் நாடே அலறிடுச்சிடா. நான் ஆணையிட்டால்னு MGR பாடின பாட்டை இன்னைக்கும் எல்லா எலக்ஷனுக்கும் போட்டுட்டு தான்டா இருக்காங்க.

விஜய்: ஆஹா. இதை MGR ஏற்கனவே நடிச்சிட்டாரா? அப்ப நான் என்ன பண்ண?

கவுண்டர்: நீ வேணா 'டாக்டர்' ராஜசேகர் நடிச்ச "இது தான்டா போலிஸ்" படத்தை ரீ-மேக் பண்ணு.

விஜய்: ண்ணா. சூப்பருங்கண்ணா. அவரும் டாக்டர் நானும் டாக்டர். அட்டகாசமா ப்ரஃபஷன் மேட்ச் ஆகுங்கண்ணா. இன்னைக்கே DVD வாங்கிடறேண்ணா.

சொல்லிவிட்டு விஜய் அங்கிருந்து எஸ் ஆகிறார்.

கவுண்டர் அடுத்த நபரை பார்க்கிறார்.

கவுண்டர்: ஏன்டா இந்த மெட்ராஸ் வெயில்ல கருப்பு கோர்ட், கருப்பு கண்ணாடி போட்டுட்டு வந்திருக்க?

அஜித்: ஏ! நா இந்த கர்ப்பு கலர் கன்னாடியும் கோர்ட்டும் போட்டு நட்ச்சா தான் படம் ஓடுது. அதான் இப்படி வந்துருக்கேன்.

கவுண்டர்: டேய் தல மண்டையா எல்லாரும் எழுதும் போது ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ணுவாங்க. நீ ஒருத்தன் தான் பேசும் போதே ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ற. அது சரி நீ என்னா படம் டைரக்ட் பண்ண போற?

அஜித்: ஏ நான் தன் இ ஆள் இல்ல. முன்னூறு அசிஸ்டண்ட் டைரக்டர்களின் மூச்சு

கவுண்டர்: நீ பேசறது ஒரு பேச்சு. இதுல நீ மூன்னூறு பேரோட மூச்சா? உதை வாங்கறதுக்கு முன்னாடி ஓடிப்போ.

அஜித்: நான் முழுச்சிட்டேன். இதோ வரேன்.

சொல்லிவிட்டு எஸ் ஆகிறார்.

கவுண்டர்: அடப்பாவி. அப்ப இவ்வளவு நேரம் தூங்கிட்டு தான் பேசிட்டு இருந்தியா?

செந்தில்: அண்ணே. அவர் முப்பது படம் தூங்கிட்டே நடிச்சிருக்காரு. இப்ப தான் அட்டகாசம் படத்துல எழுந்திரிச்சாரு.

கவுண்டர் : டேய் ஆஃப் பாயில் மண்டையா. அது பஞ்ச் டையிலாக்காம்.

அடுத்து கவுண்டர் கண்ணில் சிக்குகிறார் ஜெயம் ரவி.

கவுண்டர்: டேய் வளர்ந்து கெட்டவனே. நீ என்னடா இங்க பண்ணிட்டு இருக்க.

ஜெ.ரவி: இவுங்க பண்ற வித்தியாசத்தையே எங்க குடும்பத்துல நாங்க வித்தியாசமா பண்ண போறோம்?

கவுண்டர்: அப்படி என்னடா வித்யாசமா பண்ண போறீங்க? சொந்தமா கதை எழுதி நடிக்க போறீங்களா?

ஜெ.ரவி: அதெல்லாம் வித்யாசமாண்ணா? நாங்க அதைவிட வித்யாசமா பண்ண போறோம். அதாவது ஒரு நல்ல தெலுகு படத்தை ரீ மேக் பண்ண போறோம்.

கவுண்டர்: டேய் ரீ-மேக் மண்டையா என்னை டென்ஷனாக்காத.

ஜெ.ரவி: நான் இன்னும் சொல்லியே முடிக்கலைண்ணா. இதுல வித்யாசம் என்னன்னா, படத்தை நான் டைரக்ட் பண்ணறேன். எங்க அண்ணன் ஹீரோவா நடிக்கிறார். இன்னும் நல்ல படம் எதுவும் வராததால நாங்க வெயிட் பண்ணிட்டு இருக்கோம். எப்படி எங்க வித்தியாசம்?

சொல்லிவிட்டு ஒரு பக்க புருவத்தை மட்டும் உயர்த்தி காட்டுகிறார்.

கவுண்டர்: டேய் ஒழுங்கா ஓடிப்போயிடு. இந்த பக்கமே வராத.

அவர் அருகிலிருக்கு தனுஷை பார்க்கிறார் கவுண்டர்.

கவுண்டர் : ஏன்டா நீயும் உங்க அண்ணனை நடிக்க வெச்சி படம் எடுக்க போறியா? வேணாம்டா தமிழ் நாட்டு மக்கள் பாவம்டா. விட்டுடுங்கடா.

தனுஷ் : இல்லைங்கண்ணா. நான் தான் ஹீரோவா நடிக்க போறேன். கதை ரெடி. படத்துக்கான டைட்டில் தான் யோசிச்சிட்டு இருக்கேன்.

கவுண்டர்: ஓ. இந்த சின்ன உடம்புக்குள்ள இவ்வளவு திறமையிருக்கா. எங்க கதை சொல்லு பார்ப்போம். நான் வேணா டைட்டில் சொல்றேன்.

தனுஷ் : ரெண்டு அரியர் வெச்ச ஒரு பையன் இருக்கான். அவனுக்கு தம்மு, தண்ணி எல்லா பழக்கமும் இருக்கு. வேலை தேடாம தறுதலையா சுத்திட்டு இருக்கான். அவுங்க அப்பா எப்பவுமே அவனை தண்ட சோறுனுதான் திட்டிட்டு இருப்பாரு. திடீர்னு ஒரு நாள் அப்பாக்கும் மகனுக்கும் பிரச்சனையாகிடுது. உடனே மகன் பொறுப்பாகி வேலை தேடி வேலைல சேர்ந்திடறான். அப்படியே அவன் டாவடிக்கிற பொண்ணும் செட் ஆகிடுது. அப்படியே ஒரு குத்து பாட்டு. ரெண்டு ஃபைட்டு. இதுக்கு டைட்டில் என்ன வைக்கலாம்னு தெரியல. படிக்காதவன், அண்ணாமலை, தளபதி, பாட்ஷா இதுல ஏதாவது ஒண்ணு வைக்கலாம்னு இருக்கேன்.

கவுண்டர் : "பாபா"னு வை படம் பிச்சிக்கிட்டு ஓடும். டேய் ஓணான் மண்டையா ஒரே படத்து கதையை வெச்சிக்கிட்டு பேர் மட்டும் மாத்தி போட்டு மக்களை ஏமாத்தலாம்னு பார்க்காதீங்கடா. திருந்துங்கடா...

சொல்லிவிட்டு கவுண்டர் திரும்பி பார்க்கிறார். எல்லாரும் அந்த இடத்திலிருந்து எஸ் ஆகியிருந்தார்கள்.

Friday, June 13, 2008

தசாவதாரம் - மனதை கவர்ந்த பூவராகன்

தசாவதாரம் ஒரு வழியாக பார்த்தாகிவிட்டது.

எந்த காரணத்தை முன்னிட்டும் தாமதமாக போய் விடாதீர்கள். பத்து நிமிஷம் லேட்டாக போக வேண்டிய நிலை வந்தால் அடுத்த காட்சிக்கு செல்வதே மேல். இது தான் என் சீரியஸ் அட்வைஸ். அடுத்து குழந்தைகளோடு இந்த படத்திற்கு போவதற்கு முன் கொஞ்சம் யோசித்துவிட்டு செல்லுங்கள். படத்தில் பயங்கரமான கொலைகள் ஒரு இருபதாவது இருக்கும்.

படம் முழுக்க கமல ஹாசன் தான். அடுத்து பாராட்டப்பட வேண்டியவர்கள் படத்திற்கு கிராபிக்ஸ் செய்தவர்கள். இது வரை வந்த தமிழ் படத்தில் நிச்சயம் இது தான் கிராபிக்ஸில் பெஸ்ட் என நிச்சயம் சொல்வேன். அடுத்து கேமரா மேன்.

படத்தை பார்க்கும் முன் கதை கொஞ்சமும் தெரிந்து கொள்ள விருப்பமிள்ளாதவர்கள் இதற்கு மேல் இந்த பதிவை படிக்காதீர்கள். பெட்டர் தசாவதாரம் பற்றி எந்த பதிவையும் படிக்காதீர்கள். கமல் கேரக்டர் சொன்னாலே கதை பாதி தெரிஞ்சிடும்.

படத்தில் ஆரம்பித்த உடனே இரண்டு மூன்று நிமிடத்தில் ஃபிளாஷ் பேக். ரங்கராஜ நம்பி என் மனதில் நீங்காத இடம் பிடித்துவிட்டார். (KRS ஆசைப்பட்ட மாதிரி கற்பனையும் கலந்திருக்கிறோம்னு டிஸ்கி போட்டுட்டாங்கப்பா). ஆரம்பமே அசத்தலான சண்டை. பிறகு கைதியானவுடன் பஞ்சாட்சரத்தை (ஓம் நமச்சிவாயனு சொல்ல சொல்றாங்க. ) சொல்ல சொல்லி மன்னன் ஆணையிட. ஜாக்கெட் போடாத அசின் கெஞ்ச, அவர் குடும்பமே கெஞ்சுகிறது. ஓம் என்று கமல் ஆரம்பிக்கும் போது சீட்டின் நுணிக்கே வந்துவிட வைத்தது. எப்படியும் ஓம் நமோ நாராயணாய தான் சொல்ல போறார்னு தெரிஞ்சுடுச்சி. இருந்தாலும் அதை அவர் சொல்லும் விதம் மிகவும் பிடித்திருந்தது.

அவரை கட்டி இழுத்து செல்லும் போது கருடாழ்வார் வந்து அமர, அதன் மேல் நூற்றுக்கணக்கில் அம்பு விடப்படுகிறது. கொஞ்ச நேரம் தாக்குபிடித்து பிறகு பறக்கிறது. கமலும் அந்த தில்லை கோவிந்தராஜ பெருமாலோடு கடலில் வீசப்படுகிறார். பிறகு அசின் அங்கிருக்கும் ஒரு கற்சிலையின் மீது மோதி உயிரை விடுகிறார்.

இப்போது மீண்டும் 21ம் நூற்றாண்டிற்கு கதை திரும்புகிறது. அமெரிக்காவில் Bioweapons பிரிவில் வேலை செய்கிறார் கமல். அங்கு அவர்கள் கண்டுபிடிக்கும் ஒரு கிருமி பெரும் நாசத்தை உண்டாக்கவல்லது என தெரிந்து அந்த ப்ராஜக்டை நிறுத்த சொல்கிறார் கமல். அவர் சீனியர் அதை ஒருவருக்கு விற்க முயற்சி செய்ய. கமல் அதை ஆட்டையை போடுகிறார். அந்த கிருமியை ஒரு டப்பியில் போட்டு வைக்கிறார். அது பயணிக்கும் இடமெல்லாம் அதை தேடி கமலும் பயணிக்கிறார். க்ளைமாக்ஸில் சுனாமி வந்து அந்த கிருமியிடமிருந்து தமிழ் நாட்டை காக்கிறது. சுனாமியை அட்டகாசமாக காட்டியிருக்கிறார்கள். அதுல கடலில் வீசிய சிலையும் மீண்டு வந்துவிடுகிறது. (பெருமாள் காக்கும் கடவுள்னு கமல் சொல்ல வராறானு தெரியல ;) )

இது தான் கதை. கொஞ்சம் இழுவை மாதிரியும் தெரிந்தது.

படத்தில் என்னை கவர்ந்த கமல் - பூவராகன். மணல் கொள்ளையை எதிர்க்கும் பாத்திரம். இந்த பாத்திரத்தை படைத்ததற்காகவே கமலை நிச்சயம் பாராட்ட வேண்டும். அடுத்து தெலுகு பேசும் கமல். இவர் தான் படத்துல காமெடியன். சூப்பரா கமல் தெலுகு பேசியிருக்கிறார். அதுவும் அவர் பேசற தமிழ் இன்னும் சூப்பர். நரசிம்ம ராவ்னு சொல்லும் போது "தெலுகுவாடா?"னு அவர் கேட்கற இடத்துல தியேட்டரே கை தட்டி சிரித்தது. அடுத்து சிரிக்க வைப்பவர் ஜார்ஜ் புஷ் கமல். ரங்கராஜன் நம்பி - என் மனதில் இடம் பிடித்த கேரக்டர். மத்த கமல் எல்லாம் படத்துல நிறைய இடத்துல இருக்காங்க.

அசின் சூப்பர்... மல்லிகா ஹாட்...

இதை K.S ரவிக்குமார் டைரக்டர் பண்ணவில்லை என்று சொல்வதை என்னால் நிச்சயம் ஒத்து கொள்ள முடியாது. ஏன்னா படத்துல ஒரு ரேப் சீன் இருக்குது ;)

மொத்தத்தில் படம் சூப்பர்...

Tuesday, June 10, 2008

என்ன எழுதலாம்?

எழுதி ரொம்ப நாள் ஆகுது... என்ன எழுதலாம்னு யாராவது ஐடியா கொடுத்தா பரவாயில்லை. ஒரு வாரமா யோசிக்கிறேன், எதுவுமே தோன மாட்டீங்குது.

பாபா மாதிரி தசவதாரம் பத்தி எங்கயாவது நியூஸ் கிடைச்சா, எடுத்து போட்டு டேக் பண்ணிடலாமா?

லக்கி லுக் அண்ணாத்தை "மாதிரி தானே கேள்வி, தானே பதில்"னு பதிவு போடலாமா?

சின்ன பையன் மாதிரி சினிமா நடிகர்கள் எல்லாம் சாப்ட்வேர் இஞ்சினியரானால்னோ இல்லை 2030ல் வலையுலக டெண்டுல்கர்னு பதிவு போடலாமா?

கப்பி மாதிரி ஒலக திரைப்படம் ஒண்ணு பார்த்து விமர்சனம் எழுதலாமா?

பினாத்தல் சுரேஷ் மாதிரி ஜெயலலிதா60-ICICI-நாயகன்-விஜய்-ஜாஸ்மின்-250 அப்படினு உப்புமா பதிவு போடலாமா?

கொத்தனார் மாதிரி புதசெவி - 10/06/2008 (கொத்தனார் அமெரிக்கன் ஸ்டைல்ல MM/DD/YYYY போடலாம். அதுக்காக நாம அப்படி இருக்க முடியுமா?). அப்படியே டிஸ்கில - புதசெவி - புண்ணாக்கு தடியா செவில்லே விட்டேண்ணா அப்படினு கவுண்டர் தானுங்க திட்டினார். அதுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லைனு போட்டிடலாம். டிஸ்கி 2 : புதசெவி - புண்ணாக்கு தவிடு செருப்பு விளக்குமாரு அப்படினு யாராவது திட்டினா அதுக்கு நான் பொறுப்பில்லை.

டாக்டர் புருனோ மாதிரி "குருவியும், அழகிய தமிழ் மகனும் மட்டும் மண்குடம்; சிவகாசி, திருப்பாச்சி மட்டும் பொன்குடமானு?" ஒரு பதிவு போடலாமா?

வினையூக்கி மாதிரி பேய் கதை எழுதலாமா?

கார்த்திக்கிற்கு ஜெனியின் நினைவாகவே இருந்தது. பத்து வருடங்களுக்கு முன்னால் ஜெனியும் கார்த்திக்கும் உயிருக்குயிராக காதலித்தனர். ஜெனியின் தந்தை அவர்கள் காதலுக்கு சம்மதிக்காத்தால் ஜெனி அந்த விபரீத முடிவை எடுத்திருந்தாள்.

அன்றிலிருந்து கார்த்திக் எப்போதும் பித்து பிடித்தவன் போலவே சுற்றி கொண்டிருந்தான்.

அன்று அமாவாசை. அந்த அறையில் நிலவிய அமைதியை கெடுத்து மணி பண்ரெண்டாகியதை அறிவித்து கொண்டிருந்தது அந்த கடிகாரம். அந்த சத்தத்தில் கண் விழித்தான் கார்த்திக். அவன் திரும்பி படுக்க புரண்ட பொழுது.... அவன் எதிரில் ஜெனியின் உருவம்...

அவனை அறியாமலே அலறினான்...

"ஏன் இப்படி பயப்படறீங்க? கல்யாணமாகி இத்தனை வருஷமாகுது... இன்னும் பயந்தாங்கொளியாவே இருங்க"

"இல்லை ஜெனி.. இப்படி நீ மேக் அப் போடாம இருக்கறதை பார்த்து பேய் எல்லாம் பயந்து போச்சுனா என்ன பண்ணறது. அதுவும் போன வாரம் என் கனவுல ரெண்டு பேயிங்க பேசிக்கிச்சுங்க.. அவன் பொண்டாட்டிய மேக் அப் இல்லாம பார்த்து நாங்களே பயந்துட்டோம்... அவன் அவ்வளவு கொடுமையையும் தாங்கிக்கிறாண்டா... அவன் ரொம்ப தைரியசாலிடாஆஆஆஆனு"

......

இல்லை தம்பி மாதிரி எலக்கியவாதி ஆகிடலாமா?

வைகாசி மாதத்தில் தான் பள்ளிகள் துவங்குவார்கள். எங்க ஊர்ல பாவடை சட்டை போட்ட ஜிகிடியிலிருந்து, பாவடை தாவணி போட்ட ஜிகிடி வரை அனைவருக்கும் ஒரே பள்ளி என்பதால் எங்களுக்கு எல்லாம் கொண்டாட்டம் தான். அப்படி ஆரம்பிச்சி... அண்ணாச்சிக்கிட்ட இருந்தோ இல்லை அய்யனார்கிட்ட இருந்தோ ஆட்டைய போட்ட ஒரு புத்தகத்தை பத்தி எழுதி முடிச்சிடலாம்...

........

கோவி.கண்ணன் ஸ்டைல்ல ஒரு பதிவு போடலாமா?

1. பிட்டுக்கு மண் சுமந்த சிவன் இன்று பிட்டு(PIT)க்கு போட்டோ அனுப்பாதது ஏன்?

2. மன்னராட்சியில் பல அவதாரங்களை எடுத்து இறைவன் ஏன் மக்களாட்சியில் எதுவும் எடுப்பதில்லை. முதல் இரண்டு வர்ணங்களில் அவதாரம் எடுத்த கடவுள் ஏன் சூத்திரனாக அவதாரம் எடுத்து வாழ்ந்து காட்டவில்லை? மன்னனாக அவதாரம் எடுத்து வாழ்ந்து காட்டியது சாதனையா? வாழ்ந்து காட்ட நினைத்தால் சூத்திரனாக அவதாரம் எடுத்து வாழ்ந்து காட்டியிருக்க வேண்டியது தானே? இல்லை இன்று மக்களாட்சியில் அவதாரம் எடுத்து வாழ்ந்து காட்டட்டுமே.

3. பெண்களின் கூந்தலுக்கு மணம் இயற்கையா செயற்கையானு ஒரு மொன்ன கேள்விக்கு பதில் சொல்ல வந்த கடவுள் இன்னைக்கு இருக்கற உணவு பற்றாக்குறைக்கும், விலை வாசி உயர்வை கட்டுபடுத்தவும் பதில் சொல்ல வரது? அட்லீஸ்ட் கடவுள் இருக்காரா இல்லையாங்கற கேள்விக்கு பதில் சொல்ல வரட்டுமே.

4. தமிழோடு விளையாடும் கடவுள் ஏன் ஆங்கிலம், பிரென்ச், மலாய், ஸ்பானிஷோடு எல்லாம் விளையாடவில்லை? தமிழ் என்ன புட் பாலா, கிரிக்கெட்டா அதுக்கூட விளையாடறதுக்கு?

..........

ஜி.ரா மாதிரி சி.யா டி.யா?னு பதிவு போடலாமா? (சி - சில்க் ஸ்மிதா, டி- டிஸ்கோ சாந்தி)

...........

மங்களூர் சிவா எழுதற ஒவ்வொரு முத்தம் கவுஜைக்கும் இரத்தம் 1, யுத்தம் 2, சத்தம் 3 னு பதில் கவுஜ எழுதலாமா?

..........

இதெல்லாம் இருக்கட்டும்... நீ முதல்ல அந்த தொடர்கதையை எழுதி போடுனு சொல்லிடாதீங்க மக்கா... கண்டிப்பா இந்த வாரத்துக்குள்ள எழுதி முடிக்க முயற்சி பண்றேன்...