தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Sunday, June 28, 2009

உயர் கல்வியை தேர்ந்தெடுக்க வேண்டியது யார்?

சமீபத்துல விஜய் டீவி நீயா? நானா? நிகழ்ச்சி பார்க்க நேர்ந்தது. அட்டகாசமான ஒரு தலைப்புல பேசிட்டு இருந்தாங்க. உயர்கல்வி படிப்பில் துறையை தேர்ந்தெடுக்க வேண்டியவர்கள் பிள்ளைகளா? பெற்றோர்களா?

இந்த ஒரு தலைப்பை எடுத்து விவாதித்ததற்காகவே கோபிநாத்தை பாராட்ட வேண்டும். ஆனால் அங்கே படித்து கொண்டிருக்கும் மாணவர்களை மட்டுமே கூப்பிட்டு வந்தது தவறாக தோன்றியது. படித்து முடித்து வேலைக்கு சென்ற சிலரையும் அல்லது வேலைத் தேடிக் கொண்டிருக்கும் சிலரையும் கூப்பிட்டு வந்திருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும்.

என்னோட கேஸ்ல நான் டாக்டருக்கு படிக்க வேண்டும் என்பது என் பெற்றோர்களின் விருப்பம். அதனாலே SRVல எங்களுடைய சக்திக்கு மீறி கொண்டு போய் சேர்த்தார்கள். நானும் டாக்டருக்கு தான் படிக்க வேண்டும் என்று படித்து கொண்டிருந்தேன். SRVல என் கூட படித்த டாக்டர் பிள்ளைகள் மிக அதிகம். அவர்களுடன் பேசிக் கொண்டிருந்த பொழுது தான் அந்த தொழிலில் உள்ள கஷ்டங்கள் தெரிய ஆரம்பித்தது.

முதல் தலைமுறை டாக்டர்கள் மிகவும் பாவம் செய்தவர்கள் எனவும், அவர்கள் முதல் பத்து பதினைந்து வருடத்திற்கு மிகவும் கஷ்டப்பட்டார்கள் எனவும், அதன் பிறகே வசதி வாய்ப்பு வந்தது என்றும் என் நண்பர்கள் சொன்னார்கள். எனக்கு மனதில் மூன்று விதமான எண்ணங்கள், டாக்டருக்கு படித்தால் அதை வெறும் சேவை மனப்பாண்மையோடு செய்ய வேண்டும். காசு, பணத்தில் அக்கரை இருக்க கூடாது. ஆனால் இது சாத்தியமில்லை. முதல் சில வருடங்கள் அப்படி இருந்தாலும் பின்னால் காசு, பணம், புகழ் இதை தேடி தானாக சென்று விடுவேன். அப்படி செல்லும் பட்சத்தில் என்னுடைய பெற்றோர்கள் அதை அனுபவிக்க சாத்தியமில்லை. எனக்கு அடுத்த தலைமுறை மட்டுமே அதை அனுபவிக்கும்.

அடுத்து எனக்கு பாடத்தில் பிடித்தது Nuclear Physics. அதைப் படிக்க வேண்டும் என்ற ஆவல் இருந்தது. ஆனால் B.Sc Physics படிக்க போகிறேன் என்று சொன்னால் நிச்சயம் செருப்படி கிடைக்கும். அல்லது பைத்தியக்காரன் என்ற பெயர் கிடைக்கும். நன்றாக படிப்பவன் நன்றாக சம்பாதிக்கும் தொழிலிற்கு செல்ல வேண்டும் என்பது நம் சமுதாயத்தில் எழுதப்படாத சட்டம். இதை உடைக்கும் தைரியம் எனக்கு இல்லை.

மூன்றாவது ஐடி. இதை நான் தேர்ந்தெடுக்க ஒரே காரணம் பணம். சின்ன வயதிலே சம்பாதித்து நல்ல நிலைக்கு வந்துவிடலாம். அப்பா, அம்மாவிற்கும் பெருமை இருக்கும். இது தவறாக கூட தெரியலாம். ஆனால் என் நான்கு தாய் மாமாக்களும் பெரும் பணக்காரர்களாக இருக்கும் பொழுது, ஒரு சாதாரண கிளார்க் மகனான எனக்கு சின்ன வயதிலிருந்தே பணம் சேர்ப்பது தான் குறி.

புனித வளனார் பள்ளிக்கு மட்டும் போகாமல் இருந்திருந்தால் ஒரு மனிதாபிமானமில்லாத பிஸினஸ் மேனாக நான் இருந்திருப்பேன். பள்ளியிலே தினமும் குறைந்தது இரண்டு மூன்று ரூபாய் சம்பாதிப்பேன். பிடி பீரியட் முடிந்து தண்ணி தாகத்தில் இருக்கும் மாணவர்களுக்கு ஒரு மூடி தண்ணிர் ஒரு ரூபாய்க்கு விற்றுருக்கிறேன். இப்படி இருந்த என்னை மாற்றியது நான் ஹாஸ்டலில் படிக்கும் போது ஏற்பட்ட அனுபவங்கள் தான்.

நியாயமான ஒரு முறையில் அரசாங்கத்தை ஏமாற்றாத, ஒழுங்காக டேக்ஸ் கட்டி நிறைய சம்பாதிக்க வாய்ப்பு இருக்கும் ஒரு காரணத்திற்காகவே IT எடுப்பது என முடிவு எடுத்திருந்தேன். இந்த முடிவு நான் எடுத்தது பரிட்சைக்கு ஒரு மாசத்திற்கு முன்பு தான். அதுவரை நான் தூங்கும் போது கூட பயாலஜி புத்தகம் என் கையில் இருக்கும். அதற்கு பிறகு தீர்மானமாக முடிவு எடுத்த பிறகு நான் பயாலஜி படிக்கவே இல்லை.

மதிப்பெண்கள் வந்த பிறகு பார்த்தால் பயாலஜியில் தான் அதிக கட் ஆஃப். 1.5 மதிப்பெண் கட் ஆஃப் சேர்த்து வந்திருந்தால் டாக்டர் சீட் கிடைத்திருக்கும். கடைசி ஒரு மாதத்தில் படித்ததால் இஞ்சினியரிங் கட் ஆஃப் மிகவும் குறைவு தான். வீட்டில் இம்ப்ரூவ்மெண்ட் செய்ய சொன்னார்கள். என் ரூமேட் இருவர் மீண்டும் இம்ப்ரூவ்மெண்ட் சேர்ந்துவிட்டார்கள். அதனால் என்னையும் அதில் சேர்ந்து டாக்டருக்கு படிக்க வைக்க அப்பா அம்மா முடிவு செய்தார்கள். நான் நிச்சயம் முடியாது என்று சொல்லிவிட்டேன். பஞ்சாயத்து பண்ண எங்க மாமா வீட்டிற்கு வந்தார். டாக்டருக்கு சமூகத்தில் கிடைக்கும் அங்கிகாரம் மற்ற இத்யாதிகள் அனைத்தையும் விளக்கினார். எனக்கு தெரியாதது புதிதாக எதுவும் சொல்லிவிடவில்லை.

கடைசியாக என் அம்மாவிடம், உங்களுக்காக நான் படிக்கணும்னா டாக்டருக்கு படிக்கிறேன். ஆனா என் விருப்பம் இஞ்சினியரிங் படிக்கறது தான் அப்படினு சொன்னேன். என் அம்மாவிற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. எனக்காக நீ படிக்க வேண்டாம். உனக்கு என்ன படிக்குதுனு தோணுதோ அதே படினு சொல்லிட்டாங்க. இன்னைக்கு வரைக்கும் அதை சொல்லுவாங்க.

அப்பறம் கவுன்சிலிங் போகும் போது அப்பா கூட வந்தாரு. நான் ஐடினு முடிவு பண்ணிட்டேன். எங்க செட்ல முதல்ல ஃபில் ஆனது ஐடி. அடுத்து கம்ப்யூட்டர் சயின்ஸ். சேரும் போது இது ரெண்டுக்கும் எனக்கு வித்தியாசம் தெரியாது. உள்ள சீட் செலக்ட் பண்றதுக்கு போகும் போது கூட அப்பா, PSGல ஏரோநாட்டிகள் இருக்கு. எடுத்துக்கறயா? இல்லை அண்ணா யுனிவர்சிட்டில சிவில் இருக்கு எடுத்துக்கறயானு கேட்டேட்டே வந்தாரு. நான் எதுவும் சொல்லல. உள்ள போய் முதல் ஆப்ஷன் கோவை ராமகிருஷ்ணா ஐடி, ரெண்டாவது திருவண்ணாமலை அருணைல ஐடி. முதல் ஆப்ஷனே கிடைத்துவிட்டது.

இது நான் இஞ்சினியரிங் சேர்ந்த கதை. எதுவுமே தெரியாம தான் நான் ஐடி சேர்ந்தேன். நான் சேர்ந்த அடுத்த ஆண்டு ஐடி சரியத் துவங்கியது. தவறு செய்துவிட்டோமோ என்று தோன்றியது. ஆனா இது நான் எடுத்த முடிவு. அதை நான் தான் எதிர் கொள்ள வேண்டும். இதையே பெற்றோர்கள் முடிவு செய்திருந்தால் நிச்சயம் பழியை அவர்கள் மேல் போட்டிருப்பேன். நீங்க தான சேர்த்து விட்டீங்க. இப்ப நீங்க தான் செலவு பண்ணனும் என்று திமிர் தனம் செய்திருப்பேன். ஆனால் அதற்கு எல்லாம் வழி இல்லை. அதனால் நன்றாக படிக்க வேண்டும் என்று படித்தேன். எங்க க்ளாஸ்லயே நான் ஒருவன் தான் எல்லா லேபிலும் 90 சதவிகிதத்திற்கு மேல்.

படித்து முடித்த பின்பும் வேலை இல்லை. வீட்டில் உட்கார்ந்திருந்தால் நிச்சயம் எல்லாரும் என்னை கேலி பேசுவார்கள். நாங்க சொன்னதை கேட்டிருக்கலாம் இல்ல. சும்மா ஒரு போர்ட் மாட்டி கிளினிக் வெச்சிருந்தா கூட காசு வரும், இப்ப பார்த்தியானு கூட சொன்னார்கள். இந்த கோபத்தில் உடனே பெங்களூர் கிளம்பினேன். ரொம்ப கஷ்டப்பட்டிருக்கோம். ஆறு மாசம் வெறும் உப்புமா மட்டும். காபி குடிக்க ஆசையாக இருக்கும். ஆனா செலவாகும்னு போகறதுக்கு யோசிப்போம். அஞ்சு பேர் மூணு ரூபாய் போட்டு காபி குடிக்கறதுக்கு வீட்டுக்கு பால் வாங்கி வந்து காபி போட்டா பதிமூணு ரூபாய்ல முடிச்சிடலாம். ரெண்டு ரூபா மிச்சம்னு கணக்கு போட்டு காபி போட்டிருக்கோம். இந்த கஷ்டத்தை எல்லாம் மனசு ஏத்துக்கிட்டதுக்கு ஒரே காரணம் இது நான் தேர்ந்தெடுத்த வழி. எவ்வளவு கஷ்டப்பட்டாலும் இதை நான் தான் தாண்டியாகனும். ஆறு மாசம் கஷ்டத்திற்கு பிறகு ஒரு நல்ல வழி கிடைத்தது. ரெண்டு வேலை வாங்கினேன்.

என் சொத்தக்காரவங்க ஒருத்தர் கூட அப்ப ஐடி துறைல இல்லை. இன்னும் ஒருத்தர் கூட அமெரிக்கால இல்லை. இங்க மூணு, நாலு நாள் லீவு விட்டா நிறைய பேர் சொந்தக்காரவங்க வீட்டுக்கு போவாங்க. ஒரு வழிக்காட்டி கூட இல்லாத நிலையிலும் இந்த துறைல வந்து வெற்றி பெற முடிந்ததுனா ஒரே காரணம், இது நான் தேர்ந்தெடுத்த வழி. கை கொடுத்து தூக்கிவிட ஆட்கள் இருக்க மாட்டார்கள். அதே நேரத்தில் நான் பழி போட்டு தப்பிக்க வழியும் இல்லை. போராடி தான் வெற்றி பெற முடியும். போராட துணிவை இந்த நான் என்ற Ego கொடுக்கும்.

இப்ப நீ என்ன தான் மேன் சொல்ல வரனு கேட்டா, பெற்றோர்களே, பிள்ளைகளை அவர்கள் வழிகளில் விடுங்கள். அவர்கள் முடிவு தவறாகவும் இருக்கலாம். ஆனால் அதை எப்படியும் போராடி வெல்ல துணிவு அவர்களுக்கு இருக்கும். இது அவர்கள் தேர்ந்தெடுத்த வழி என்பதை மட்டும் அவர்களும் நினைவுப் படுத்துங்கள். நல்ல வழியிலே செல்வார்கள்!!!

தலைவர் பாணில சொல்லணும்னா ”உன் வாழ்க்கை உன் கையில்”னு அவுங்களுக்கு சொல்லிடுங்க. நல்லது கெட்டதை சொல்லுங்க. வழியை பிள்ளைகள் தேர்ந்தெடுத்து கொள்ளட்டும்.

Thursday, June 25, 2009

உரையாடல் போட்டிக்கான கதை

சாப்ட்வேர் களம் இல்லாம ஒரு நல்ல கதை எழுதணும்னு ஆசைப்படும் போது, தானா ஒரு செய்தி வந்து மாட்டியது. அந்த உண்மை சம்பவத்தை வைத்து எழுதியது இந்த கதை.


தலைப்பு உபயம் : பெனாத்தலார்

வழக்கம் போல உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன்.

Saturday, June 20, 2009

பர்மிதா குட்டிக்கு - 2

அன்புள்ள பர்மி குட்டிக்கு,
இது நான் உனக்கு எழுதும் இரண்டாவது கடிதம். நம்ம நைனாக்கு வேற வேலையே இல்ல போல, சும்மா லெட்டரே எழுதிட்டு இருக்காருனு நீ நினைக்கலாம். நீ என் பக்கத்துல இருந்தா இது எல்லாம் எழுத நிச்சயம் எனக்கு நேரம் கிடைக்காது. நீ அவ்வளவு அட்டகாசம் பண்றதா உங்க அம்மா கம்ப்ளைண்ட் பண்றாங்க. இருந்தாலும் யாருக்கும் தொந்தரவு கொடுக்காம ரொம்ப சமத்தா இருக்கனு இது வரைக்கும் வந்த ரிப்போர்ட்ஸ் சொல்லுது. நீ எங்க போனாலும் அங்க இருக்குற எல்லாரையும் அட்ராக்ட் செஞ்சிடறனு எல்லாருமே சொல்லிட்டாங்க. உனக்கு தினமும் திருஷ்டி சுத்தி போட சொல்லி தான் சொல்றாங்க. இதைப் படிக்கும் போதும் அதே மாதிரி எங்களுக்கு பேர் வாங்கி தர மாதிரி இருந்தா சந்தோஷம்.

இது என் லாப்டாப்பில் இருக்கும் படம்.

சரி, நான் ரொம்ப் ப்ளேட் போட விரும்பலை. இன்னைக்கு ஒரு கதை சொல்லப் போறேன். இந்தக் கதையைப் படிக்கும் போது ரொம்ப வித்யாசமா இருக்கும். இந்த மாதிரி ஒரு கதையை நான் எங்க நைனா டயரில படிச்சிருக்கேன். 1982வது வருஷ டைரி அது. அந்த வருஷம் தான் நான் பொறந்தேன். அது படிச்சிட்டு உன் பாட்டிக்கிட்ட திட்டு வாங்கினேன். படிச்ச பையன் தானே நீ, என்ன இருந்தாலும் அப்பா டைரியைப் படிக்கலாமானு? அந்த மாதிரி எல்லாம் நீ திட்டு வாங்க வேண்டாம்னு தான் நானே அதை உனக்கு எழுதி வெச்சிடறேன்.

குழந்தை பிறக்கப் போகுதுனு தெரிந்தவுடனே, நிச்சயம் அது இந்தியாவில் தான் பிறக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டேன். காரணம் பெரிதாக ஒன்றுமில்லை, இன்று அனைவரையும் வரவேற்று நல்வாழ்வு கொடுக்கும் அமெரிக்கா கடைசி வரை அப்படி இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. சிறுபான்மையினராக இந்த இடத்தில் என் சந்ததியினர் வாழ்வதில் விருப்பமும் இல்லை. பிற்காலத்தில் எனக்கு பிறகு நீங்கள் வந்து இங்கே வாழலாம். அதை என்னால் தடுக்க முடியாது. ஆனால் இதை நான் ஆரம்பிக்க வேண்டாம் என்ற ஒரு எண்ணம் தான். மேலும் சின்ன வயசுல இருந்து ஹாஸ்டல்லயே படிச்சிட்டேன், அம்மா, அப்பாவோட கொஞ்ச நாளாவது சந்தோஷமா இருக்கணும் என்ற எண்ணமும் இருக்கிறது.

உன் பாட்டி சமையலுக்கு ஈடு இணையே இல்லை. நான் சும்மா சொல்லல. இது நம்ம சொந்தக்காரவங்க எல்லாருமே சொல்ற ஒரு விஷயம் தான். ஆனா அதை தொடர்ந்து சாப்பிடும் கொடுப்பினை எனக்கு இல்லை. அவர்களை இந்த நாட்டிற்கு கொண்டு வர முடியாது. என் அம்மாவால் ஒரு வாரம் கூட இங்கு தங்க முடியாது. அவர்களை இங்கு அழைத்து வரும் எண்ணமும் இல்லை. இங்கே பணம் சம்பாதிக்க வந்திருக்கிறேன். ஓரளவு சம்பாதித்தவுடன் இந்தியா வந்துவிடுவேன். இப்படி பல காரணம். அதனால் உனக்கு இந்த நாட்டின் குடியுரிமை கிடைக்கும் வாய்ப்பு கொடுக்க விரும்பவில்லை. நான் எடுத்த இந்த முடிவு முட்டாள் தனமாக இருக்கலாம். அப்படி இருந்தால் என் முட்டாள் தனத்தை நீ உன் புத்திசாலித்தனத்தால் ஈடுகட்டி கொள்ளவும்.

உன் அம்மா 2008 ஜூன் மாதம் இந்தியா சென்றாள். என்னை 2008 அக்டோபர் 26 ஆம் தேதி இந்தியா அனுப்பி விட்டார்கள். அது என் விருப்பத்தின் பேரில் தான். நீ பிறக்கும் போது உன்னுடன் இருக்க வேண்டும் என்ற ஆசை. அதை விட என் மனைவியுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணம் தான் அதிகம். வந்தவுடன் ஒரு வாரம் விடுமுறை எடுத்திருந்தேன். நீ நவம்பர் இருபத்தி நாலு அன்று பிறப்பாய் என்று டாக்டர்கள் சொல்லியிருந்தார்கள். அதனால் அப்பொழுது ஒரு வாரம் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்திருந்தேன்.

சென்னையில் மூன்று நாட்கள் தங்கியிருந்துவிட்டு, கள்ளக்குறிச்சி சென்றுவிட்டேன். திங்கள் அன்று பெங்களூரில் ரிப்போர்ட் செய்ய வேண்டும். என்னுடைய திட்டம் சனி இரவு புறப்பட்டு, ஞாயிறு காலை பெங்களூர் சென்று, ஒரு நாள் ஓய்வெடுத்துவிட்டு அடுத்த நாள் அலுவலகம் செல்லலாம் என்று. அது மட்டுமில்லாமல் ஞாயிறன்று நண்பர்களுடன் ஊர் சுற்றலாம் என்றும் ஒரு திருட்டு எண்ணம்.

சனிக்கிழமை காலையில் வந்த என் மாமா (பக்தவச்சலம்), ”ஏன் பாலாஜி சனிக்கிழமையே போற? ஞாயிறு காலைல இட்லி கறிக்குழம்பு எல்லாம் சாப்பிட்டு புறப்படலாம் இல்லைனு” சொன்னாரு. எனக்கு பகல்ல ட்ராவல் பண்றது சுத்தமா புடிக்காது. ஒரு நாள் முழுக்க வீணாகிவிடும் என்ற எண்ணம் வேறு. அதனால் அவர் பேச்சை நான் கேட்கவில்லை. அவர் பல முறை சொல்லியும் நான் கேட்கவில்லை. பொதுவாக அவர் சொன்னால் நான் கேட்பேன். அன்றும் கேட்டிருக்கலாம்.

சனிக்கிழமை புறப்பட்டு பெங்களூர் சென்றுவிட்டேன். 2006 பிப்ரவரில தான் நான் பெங்களூர்ல இருந்து பாஸ்டன் புறப்பட்டேன். 2008 நவம்பர் 2 அன்று நான் பெங்களூர் சென்ற பொழுது எனக்கு நான் இறங்க வேண்டிய இடமே தெரியவில்லை. எலக்ட்ரானிக் சிட்டிக்கு நான் வைத்திருந்த அடையாளங்கள் முழுதும் அழிக்கப்பட்டிருந்தன. ரோடிலிருந்து இன்ஃபோஸிஸ் பில்டிங்கே தெரியவில்லை. மடிவாளா சென்று அங்கிருந்து எலக்ட்ரானிக் சிட்டிக்கு ஆட்டோவில் வந்து சேர்ந்தேன். ஆட்டோ டிரைவர் ரொம்ப நல்லா பேசினார். சார் காலைல நாலரை மணிக்கு வந்து விடறேன், ஒரு பத்து ரூபாய் சேர்த்து கொடுங்க சார்னு கேட்டாரு. மத்த எல்லாரும் ஆட்டோ ஸ்டாண்ட்ல அடாவடியா விலை பேசிய போது இவர் அன்பாக பேசினார். அதற்காக அவர் கேட்டதை விட பத்து ரூபாய் சேர்த்தே கொடுத்தேன். ஆல்பம்னு ஒரு படத்துல க்ளைமாக்ஸ்ல விஜயகுமார் சொல்வது, ஒருத்தன் நல்லது பண்ணும் போது அதற்குரிய பலனை நாம அவனுக்கு கொடுக்கணும். அப்ப தான் நல்ல விஷயங்கள் பரவும்னு. அது எனக்கு மறக்கவே இல்லை.

கெஸ்ட் அவுஸ்ல போய் நான் என் ரூமில் செட்டில் ஆகும் பொழுது மணி ஐந்து. தூக்கம் வரவில்லை. டீவி பார்த்து கொண்டிருந்தேன். ஒரு ஏழரை மணி வாக்கில் என் நண்பன் பரட்டைக்கு ஃபோன் செய்தேன் (அவன் பெயர் அருள் மாதரசன். One of my Best Friend). என்னிடம் செல்ஃபோன் இருந்தது, ஆனால் சிம் கார்ட் இல்லை. அன்று தான் சென்று வாங்க வேண்டும் என்பது திட்டம். பத்திரமாக ஊர் போய் சேர்ந்தேனா என அம்மா, நைனா பயந்து கொண்டே இருப்பார்கள். அதனால் அவனுக்கு ஃபோன் செய்து, கள்ளக்குறிச்சிக்கு ஃபோன் செய்து சொல்லிவிட சொன்னேன். அவனுக்கு அன்று MBA க்ளாஸ் இருந்ததால் மதியம் ஒரு மணிக்கு வந்து என்னை வெளியே அழைத்து சொல்வதாக சொல்லியிருந்தான். அவனால் என்னை அழைக்க முடியாது. அதனால் அவனை மதியம் நான் அழைப்பதாக சொல்லியிருந்தேன்.

கொஞ்ச நேரத்தில் நான் தூங்கிவிட்டேன். பிறகு பத்து மணி வாக்கில் எழுந்து குளித்துவிட்டு, கம்பெனியை சுற்றிப் பார்க்கலாம் என்று நினைத்து சென்றேன். என்னடா சுத்திப் பாக்கற அளவுக்கு என்ன இருக்குது நினைக்காதே. நடந்து சென்றால் இன்போஸிஸை சுற்றிப் பார்க்க குறைந்தது முப்பது நிமிடமாவது எடுக்கும், நன்றாக சுற்றிப் பார்க்க ஆசைப்பட்டால் இரண்டு மணி நேரம் கூட ஆகலாம். உள்ளே STD செய்ய ஒரு டெலிஃபோன் பூத் இருந்தது. அதைப் பிடித்தால் உன் அம்மாவிற்கும், என் அம்மாவிற்கும் ஃபோன் செய்யலாம் என்ற திட்டமும் இருந்தது. அன்று ஞாயிறு என்பதால் கடை மூடியிருந்தது.

மீண்டும் கெஸ்ட் அவுஸ் வந்து சேரும் போது மணி பதினொன்று முப்பது ஆகியிருந்தது. ஒரு அரை மணி நேரம் டீவி பார்த்து கொண்டிருந்தேன். பசி எடுக்க ஆரம்பித்துவிட்டது. பரட்டைக்கு ஃபோன் செய்துவிட்டு அவனுடைய திட்டத்தை தெரிந்து கொண்டு சாப்பிட செல்லலாம் என்ற எண்ணத்தில் அவனை அழைத்தேன். அவனுடைய காலர் ட்யூன் “அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடைமையடா” என்ற பாடல். இரண்டாவது ரிங்கில் எடுத்துவிட்டான்.

”பாலாஜி, நானே உனக்கு எப்படி ரீச் பண்றதுனு ரொம்ப நேரமா முயற்சி பண்ணிட்டு இருக்கேன். உன் வீட்ல பெயின் வந்துடுச்சினு, ஹாஸ்பிட்டல்ல சேர்த்துட்டாங்களாம். உடனே கிளம்பு. நான் எலக்ட்ரானிக் சிட்டி தான் வந்துட்டு இருக்கேன். எந்த கேட்டுக்கு வரதுனு சொல்லு நான் இன்னும் அரை மணி நேரத்துல அங்க இருப்பேன்”னு சொன்னான்.

எனக்கு ஒரு நிமிஷம் ஒன்றுமே புரியவில்லை. உடனே அனைத்தையும் பேக் செய்துவிட்டு கிளம்பினேன். மூன்று வருடத்திற்கு முன்பு உள்ளே வருவதற்கும் வெளியே செல்வதற்கும் ஐந்து வழிகள் இருந்தன. பாதுகாப்பு காரணமாக அதை இரண்டாக்கி விட்டார்கள். பரட்டைக்கு அதில் ஒரு கேட் தான் தெரியும். அதனால் அவனுக்கு தெரிந்த கேட் ஒன்றிற்கு வர சொல்லிவிட்டு, சைக்கிளில் புறப்பட்டேன். நான் வெளியே சென்று பத்து நிமிடத்தில் அவன் வந்து சேர்ந்துவிட்டான். உடனே அவனிடமிருந்து ஃபோன் வாங்கி உன் அம்மாவிற்கு அழைத்தேன். உன் தாத்தா தான் எடுத்தார்.
”மாப்பிளை, காலைல அஞ்சு மணிக்கு எல்லாம் பெயின் வர ஆரம்பிச்சிடுச்சி. உடனே ஹாஸ்பிட்டலுக்கு கூப்பிட்டு வந்துட்டோம். எப்படியும் சுகப்பிரசவம் ஆகிடும்னு டாக்டர் சொல்றாங்க. நீங்க உடனே புறப்பட்டு வாங்க மாப்பிளை”னு சொன்னாரு. அப்படியே உன் அம்மாவிற்கும் பேசினேன். ரொம்ப வலிப்பதாக கூறினாள். சுமார் நான்கு மணி நேரமாக இப்படி வலி இருப்பதாக கூறினாள். பொறுத்து கொள்டா, பாப்பா வந்துட்டா எல்லாம் சரியாகிடும். நான் உடனே புறப்பட்டு வரேனு சொன்னேன். நான் சொன்னது சரியா தப்பானு கூட எனக்கு தெரியாது. ஏதாவது சொல்ல வேண்டும் என்ற காரணத்திற்காக சொன்னேன்.

என் அம்மா, நைனாவும் சென்னைக்கு சென்று கொண்டிருந்தார்கள். நான் ஃபோன் செய்யும் போது அவர்கள் தாம்பரத்தில் இருந்தார்கள். நான் டென்ஷனாக இருப்பதைப் புரிந்து கொண்ட பரட்டை, என்னை ஊருக்கு எப்படி சீக்கிரம் அனுப்புவது என்று வழிகளை ஆராய்ந்து கொண்டிருந்தான். ஊருக்குள் சென்று டிராவல்ஸ் வண்டியை பிடித்து செல்வதை விட, ஓசூர் சென்று அங்கிருந்து செல்வதே நல்ல திட்டமாகப்பட்டது. எலக்ட்ரானிக் சிட்டியிலே என் பெயரில் லீஸ் எடுத்த வீடு ஒன்று இருந்தது. ஐந்து வருடத்திற்கு முன்பு எடுத்த வீடு, ஆள் மாறி ஆள் வந்து கொண்டிருந்தார்களே தவிற அதை யாரும் காலி செய்யவில்லை. அங்கே சென்று என் பெட்டியை எல்லாம் வைத்துவிட்டு, பரட்டையின் பல்சரில் ஓசூருக்கு புறப்பட்டோம்.

வழி முழுதும் ஃபோன் மேல் ஃபோன். எப்படியும் ஒரு மணி நேரத்தில் நீ பிறந்துவிடுவாய் என்பது தெரிந்தவுடன், அதைத் தெரிந்து கொண்டு புறப்படலாம் என்று திட்டமிட்டேன். ஓசூர் சரவண பவனில் சென்று இருவரும் நன்றாக சாப்பிட்டோம். பிறக்க போவது பையனா பெண்ணா என்பது எங்களுக்கு தெரியாது. அமெரிக்காவில் சொல்கிறோம் என்று சொல்லியும் நாங்கள் கேட்கவில்லை. அனைவரும் பையன் என்றே நினைத்திருந்தோம். அதற்கு முக்கிய காரணம் எனது நாடி ஜோதிடம். அதுவரை அதில் சொல்லியது எல்லாம் துல்லியமாக நடந்து வந்தது. எங்களுக்கு தெரிந்து நாங்கள் சொல்லவில்லை என்பது என் அம்மாவின் எண்ணம்.

சாப்பிட்டு விட்டு ஓசூர் பேருந்து நிலையம் வந்தோம். அது தற்காலிகமாக அமைக்கப்பட்ட பேருந்து நிலையம். சென்னை பேருந்துகள் அங்கே நிறைய இருந்தன. ஆனால் பஸ் ஏறிவிட்டால் யாரையும் தொடர்பு கொள்ள முடியாது என்று, நீ பிறக்கும் வரை அந்த பேருந்து நிலையத்தில் காத்திருக்கலாம் என்று முடிவெடுத்திருந்தேன். என் வாழ்வில் மிகவும் பரபரப்பாக இருந்த நிமிடங்கள் அவை. அதை எதனுடனும் ஒப்பிட எனக்கு தெரியவில்லை.

இந்த நிமிடங்கள் என் மனைவியுடன் இருக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் இந்தியாவே வந்திருந்தேன். ஆனால் சம்பந்தமில்லாத ஏதோ ஒரு இடத்தில் இருந்தேன், அங்கே இருந்த சிமெண்ட் பெஞ்சில் சில பிச்சைக்காரர்கள் படுத்திருந்தார்கள். நான் போய் அவர்களுக்கு நடுவில் உட்கார்ந்து கொண்டேன். என் டென்ஷன் எதுவும் அவர்களை தொற்றி கொள்ளாமல் அவர்கள் நிம்மதியாக தூங்கி கொண்டிருந்தார்கள்.

என்னுடைய டென்ஷனைப் பார்த்து பரட்டை என் அருகே வந்து அமர்ந்து கொண்டான். ”டென்ஷன் ஆகாதடா பாலாஜி. எல்லாம் நல்லபடியா நடக்கும்”னு சொன்னான். அது எனக்கும் தெரிந்திருந்தது. உடனே என் மாமனாரிடமிருந்து அழைப்பு. “சிசேரியன். பெண் குழந்தை மாப்பிளை. ரெண்டு பேரும் நல்லா இருக்காங்க. எந்த பிரச்சனையும் இல்லை”னு சொன்னாரு. உடனே பரட்டையிடம் சொன்னேன், “மகாலஷ்மியே வந்து பிறந்திருக்காடா. கங்கிராட்ஸ்”னு சொன்னான். எனக்கு கண் கலங்கிவிட்டது (பரட்டை ரோமன் காத்தலிக். இருந்தாலும் அவன் மகாலஷ்மினு தான் சொன்னான். இதை எதுக்கு இங்க சொல்றேனு பாக்கறியா? நீ என்னை மாதிரி இருந்தா, அவர் க்ரிஸ்டியனாச்சே, அவர் நிஜமாலுமே மகாலஷ்மினு தான் சொன்னாரானு நீ கேட்டாலும் கேட்கலாம்). சென்னை செல்லும் அல்ட்ரா டீலக்ஸ் பஸ்ஸில் ஏற்றிவிட்டான்.

நான் சென்னை வந்து சேரும் பொழுது மணி எட்டரை இருக்கும். உதயம் தியேட்டர் ஸ்டாப்பில் இறங்கினேன். உன் தாத்தா வந்து என்னை அழைத்து சென்றார். வழியெல்லாம் உன்னைப் பற்றிய புராணம் தான். நீ பிங் கலரில் இருப்பதாகவும் அங்கே இருந்த டாக்டர்கள் அனைவரும் உன்னைப் பற்றி பெருமையாக பேசியதாகவும் சொன்னார். அந்த மருத்துவமனையில்
முதல் மாடியில் உங்கள் அறை இருந்தது. நீ என் அம்மா மடியில் இருந்தாய். நேராக உள்ளே வந்த நான், உன்னைப் பார்க்காமல் என் மனைவியைப் பார்க்க சென்றேன். அவள் கையைப் பிடித்து நெற்றியில் ஒரு முத்தம் வைத்தேன். என் அம்மா, நைனா, மாமா, மாமியார் இருந்ததைப் பற்றி கவலைப்படவில்லை. அனைவரது கண்ணும் என் மேல் தான்.

என் அம்மா தான் பேச ஆரம்பித்தார்கள். ”நான் சொன்னேன் இல்லை. நேரா உன்னைப் பார்க்க தான் வருவான்னு” அப்படினு. நான் வருவதற்கு முன்பே அங்கே ஒரு வாக்குவாதம் நடந்ததாம், நான் வந்ததும் யாரை முதலில் பார்ப்பேன் என்று. உன்னைத்தான் பார்ப்பேன் என்று உன் தாத்தா சொல்லியிருந்தாராம். ”இல்லை, அவன் பொண்டாட்டியைத் தான் முதல்ல பார்ப்பானு” எங்க அம்மா சொல்லியிருந்தாங்களாம். அம்மா சொல்லைக் காப்பாற்றிய பிள்ளை. “சிசேரியனா இல்லாம நார்மல் டெலிவரியா இருந்திருந்தா நான் முதல்ல பாப்பாவைப் பார்த்திருக்கலாம்” அப்படினு சொன்னேன். அப்பவும் பார்த்திருப்பேனானு தெரியல.

இது செல்ஃபோன்ல எடுத்தது. உன்னோட முதல் ஃபோட்டோ. நீ பிறந்த இரண்டு நாட்கள் கழித்து எடுத்தது. உன் பாட்டி மடியில் இருக்கிறாய். நீ பிறக்கும் போது இந்த துணில இருக்கும் கலரை விட பிங்காக இருந்தாய்.

ஒரு நிமிடத்தில் உன்னை வந்து பார்த்தேன். இவ்வளவு பிங் நிறத்தில், இவ்வளவு அழகாக ஒரு குழந்தையை நான் பார்த்ததில்லை. இது பொய் இல்லை. சத்தியம். அவ்வளவு அழகு நீ. உன் கையை தொட்டுப் பார்த்தேன். என் வாழ்வின் மிகவும் சந்தோஷமான தருணம் அது. I was proud. அப்படியே உன்னையே கொஞ்ச நேரம் பார்த்து கொண்டிருந்தேன்.

எனக்கு தூக்க தெரியாது. இருந்தாலும் என் அம்மா உன்னை என் மடியில் படுக்க வைத்தார்கள். அப்ப நான் எப்படி உணர்ந்தேனு எனக்கு வார்த்தைல எழுத தெரியலை. ரொம்ப சந்தோஷமா இருந்தேனு மட்டும் சொல்லலாம். நீ பிறந்து ஒரு மணி நேரம் வரை உன்னை வெளியே கொண்டு வரவில்லையாம். சரியாக உன் தாத்தா, பாட்டி இருவரும் கள்ளக்குறிச்சியிலிருந்து வந்த பிறகு தான் கொண்டு வந்தார்களாம். முதலில் உன் அம்மாவின் பாட்டியிடம் கொடுக்க சொல்லி என் அம்மா சொல்லிவிட்டார்களாம். வயதில் பெரியவர் கையில் கொடுத்து ஆசிர்வாதம் வாங்கலாம் என்ற எண்ணத்தில். அடுத்து உன் பாட்டி கைகளில் நீ வந்தாய். ஒரு மணி நேரம் மருத்துவமனையில் இருந்து விட்டு வீட்டிற்கு கிளம்பினேன். என் அம்மாவும், மாமியாரும் அங்கு இருந்து உன்னைப் பார்த்துக் கொண்டார்கள்.

இது ஒரு மாதத்திற்குள் எடுத்தது. நீ உன் அம்மாவின் பாட்டி கையில் இருக்கிறாய்.

அன்று இரவு நீ சரியாக தூங்காமல் அனைவருக்கும் வைகுண்ட ஏகாதசியை கொடுத்தாயாம். நான் அடுத்த நாள் காலை வந்தவுடன் உன் மேல் வந்த முதல் கம்ப்ளைண்ட் அது தான். அன்று முழுதும் உன்னுடன் தான் இருந்தேன். உன் தாத்தாவிற்கு தான் அலைச்சல் அதிகம். அன்று இரவு நான் வீட்டிற்கு செல்வதற்கு முன்,
“குட்டி. இன்னைக்கு ஒழுங்கா தூங்கணும். அவ்வாக்கு எல்லாம் கஷ்டம் கொடுக்க கூடாது. நல்ல பொண்ணுனு பேர் வாங்கணும். சரியா” அப்படினு சொல்லிட்டு போனேன். அடுத்த நாள் வந்தா ஆச்சரியம். நீ அன்னைக்கு சமத்தா தூங்கினயாம். நைனா சொன்னவுடனே கேட்டுட்டாளேனு எங்க அம்மாக்கு ஆச்சரியம். எனக்கு பெருமை.

அன்பு முத்தங்களுடன்,
நைனா...

Thursday, June 18, 2009

மணல் கயிறு = Linked List

மணல் கயிறு படத்தை ரீமேக் பண்ண சொல்லி நம்ம புதுகை தென்றல் அக்கா விசு சாருக்கு ஒரு கோரிக்கை வெச்சிருந்தாங்க. விசு சார் பிஸியா இருக்கறதால நாமலே முயற்சி செய்வோம்னு கற்பனை செஞ்சி பார்த்ததால வந்த எஃபக்ட்

சாப்ட்வேர்ல வேலை பார்க்கற பொண்ணு போட்ட கண்டிஷன்ல அவுங்க அப்பா, அம்மா கதி கலங்கி நம்ம நாரதர் நாயுடு கிட்ட கூப்பிட்டு வராங்க. அந்த பொண்ணுக்கு ஏதாவது பேரு வைக்கனுமே. போன பதிவுல அட்வைஸ் பண்ண பொண்ணு பேரையே (வித்யா) வெச்சிடுவோம்.

நாரதர் நாயுடு: வாம்மா வித்யா. நீ போட்ட கண்டிஷன்ல உங்க அப்பா, அம்மாக்கு ஒரு மாசமா சாப்பாடே இறங்கலயாமே. எங்க அந்த கண்டிஷனெல்லாம் எங்கிட்ட சொல்லும்மா. நான் நல்ல பையனா பாக்கறேன்.

வித்யா: நான் MCA படிச்சிருக்கேன்.

நா.நா: அதுக்கென்னம்மா. ஒரு நல்ல இஞ்சினியர் படிச்ச பையனா பார்த்துடலாம்.

வித்யா: BE படிச்ச பையனா? அது UG தானே. நான் PG படிச்சிருக்கேனே.

நா.நா: சரிம்மா. ME படிச்ச மாப்பிள்ளையா பார்த்துடுவோம்.

வித்யா: ME MCAவைவிட பெரிய படிப்புனு என்னை மட்டம் தட்டுவாரே.

நா.நா: சரிம்மா. அப்ப MCA படிச்சவரே பார்த்துடலாம்.

வித்யா: எனக்கு சமமா மாப்பிள்ளை பார்த்தா, என் மதிப்பு குறைஞ்சிடுமே.

நா.நா: என்னம்மா, BE படிச்ச மாப்பிள்ளைனா வேண்டாங்கற, ME, MCAவும் வேண்டாங்கிற. அப்ப என்ன தான் படிச்சிருக்கனும்.

வித்யா: PG பண்ணிருக்கனும். ஆனா அது 6 வருஷ கோர்ஸா இருக்க கூடாது. MSc Software Engineering இந்த மாதிரி ஏதாவது 5 வருஷம் படிச்சிருக்கனும்.

நா.நா: முதல் கண்டிஷனே சூப்பரா இருக்குமா. அடுத்து

வித்யா: எனக்கு என் கெரியர் தான் முக்கியம்?

நா.நா: டிபன் கெரியரா? அதுக்கென்னமா நல்லதா பார்த்து வாங்கி தர சொல்றேன்.

வித்யா: அங்கிள். நான் சொல்றது என்னோட ப்ரஃபஷன். எந்த காரணத்துக்காகவும் என்னை வேலையை விட சொல்லக்கூடாது.

நா.நா: சரிம்மா. அதுக்கென்ன, வேலைக்கு போற பொண்ணு வேண்டும்னு சொல்ற மாப்பிள்ளையை பார்த்துட்டா போகுது.

வித்யா: அப்படி கண்டிஷன் போடற மாப்பிள்ளை எல்லாம் வேண்டாம். இப்படி சொல்ற மாப்பிள்ளை நாளைக்கே மாற வாய்ப்பிருக்கு. அவர் இஷ்டப்படறார்னு எல்லாம் நான் வேலைக்கு போக முடியாது. என் இஷ்டப்படி தான் நான் வேலைக்கு போவேன்.

நா.நா: சரிம்மா. உன் இஷ்டப்படி விடற மாப்பிள்ளையே பார்த்துட்டா போச்சு.

வித்யா: கண்டிஷன் நம்பர் 3. பையன் என் கண்ணுக்கு பாக்கறதுக்கு சல்மான் கான் மாதிரி தெரியனும், பேசறதுல ஷாருக்கான் மாதிரி இருக்கனும், டேலண்ட்ல அமிர்கான் மாதிரி இருக்கனும். ஆனா மத்தவங்க கண்ணுக்கு பார்க்கறதுக்கு விஜய் மாதிரி தெரியனும், பேசறதுல அஜித் மாதிரி தெரியனும், டெலண்ட்ல ரவி கிருஷ்ணா மாதிரி இருக்கனும்.

நா.நா : மொத்ததுல உன் கண்ணுக்கு ரெமோவா தெரியனும். மத்தவங்க கண்ணுக்கு மண்ணு லாரில ஆக்ஸிடெண்ட் ஆன சுமோவா தெரியனும். அப்படித்தானே?

வித்யா : ஆமாம். மாப்பிள்ளைக்கு குறைஞ்சது ஒரு 7-8 பேருக்காவது Non-Veg சமைக்க தெரியனும். ஏன்னா என் ஃபிரெண்ட்ஸ் எல்லாரும் வீக் எண்ட் வீட்டுக்கு வருவாங்க. அவுங்களுக்கு எல்லாம் டேஸ்டா சமைக்க தெரியனும். நானும் பக்கத்துல நின்னுட்டு ரெசிப்பி எல்லாம் படிச்சி கைடன்ஸ் பண்ணுவேன். அதனால பயப்பட வேண்டாம்.

நா.நா: ஹிம்ம்ம்... கேஷ்மீரீ பிரியாணில இருந்து செட்டிநாடு சிக்கன் வரைக்கும் செய்ய தெரிஞ்ச பையனா பிடிச்சிடுவோம்.

வித்யா: கண்டிஷன் நம்பர் 5. பையனுக்கு அமெரிக்கன் அக்செண்ட்ல பேச தெரிஞ்சிருக்கனும்.

நா.நா: ஏம்மா. நீ என்ன கால் சென்டருக்கா ஆள் எடுக்கற? விட்டா மதர் டங் இண்ஃப்ளூவன்ஸ் எல்லாம் இருக்க கூடாதுனு சொல்லுவ போல.

வித்யா: அதெல்லாம் இல்லை அங்கிள். இந்த தடவை எப்படியும் எனக்கு விசா கிடைச்சிடும். அங்க போனா கம்பெனில நான் எப்படியும் சமாளிச்சிக்குவேன். ஆனா பார்ட்டிக்கெல்லாம் கூப்பிட்டு போனா அக்சண்ட்ல பேசனா தான் பெருமையா இருக்கும்னு சொல்லி கேள்விப்பட்டிருக்கேன்.

நா.நா: சரிம்மா. நம்ம சப்போர்ட்ல இருக்கற பையனா பார்த்து பிடிச்சிடுவோம். அடுத்த கண்டிஷன சொல்லு.

வித்யா: கண்டிஷன் நம்பர் 6. எந்த காரணத்தை கொண்டும் என்னை டிபண்டண்ட் வீசால கூப்பிட்டு போக முயற்சி பண்ணக்கூடாது. எனக்கு வீசா கிடைச்சா அவர் விருப்பப்பட்டா என் கூட டிபண்டண்ட் வீசால வரலாம். அதுல எனக்கு எதுவும் பிரச்சனையில்லை.

நா.நா: சரிம்மா. உனக்கு தான் விசா கிடைச்சிடுமே. அப்பறம் என்ன?

வித்யா: இப்பவெல்லாம் விசா, லாட்ல பிக் அப் பண்றாங்க. எனக்கு கிடைக்காம போகவும் வாய்ப்பிருக்கு. அதான்.

நா.நா: சரிம்மா. உன் கூடவே வர மாப்பிள்ளையையா பார்த்துடுவோம்.

வித்யா: இது தான் ரொம்ப முக்கியமான கண்டிஷன். நான் கொஞ்ச ஜாலி டைப். அதனால என் டீம்ல இருக்கற ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் எனக்கு அடிக்கடி கால் பண்ணுவாங்க. அதை தப்பா நினைக்கக்கூடாது.

நா.நா: உன் பிரெண்ட்ஸ் கூட நீ பேசறதால என்னமா பிரச்சனை. உன் பிரெண்ட்ஸ் கூட அவர் அதிகமா பேசினா தானே பிரச்சனை.

வித்யா: அங்கிள். நான் சொல்ற பிரெண்ட்ஸ் எல்லாம் பசங்க. என்னைக்கு பொண்ணுங்க, மத்த பொண்ணுங்களுக்கு செலவு பண்ணி ஃபோன்ல பேசுவாங்க. எப்பவும் பசங்க தான் செலவு பண்ணி ஃபோன் பேசி, ஜாலியா மொக்கை போடுவாங்க.

நா.நா: சரிம்மா. நீ உன் பசங்க பிரெண்ட்ஸ் கிட்ட பேசும் போது பிரச்சனை பண்ணாம, அந்த பையனை அவனோட பிரெண்ட்ஸ் கிட்ட பேச சொல்லிடுவோம்.

வித்யா : நாங்க இந்தியால இருக்கற வரைக்கும் அவுங்க அப்பா, அம்மா எங்க வீட்டுக்கு சனிக்கிழமை ஃபுல் டே வந்து தங்கிட்டு போகலாம். ஆனா என்னை சமைக்க சொல்லக்கூடாது.

நா.நா : இது ஒரு கண்டிஷனாம்மா. முதல் வாரம் நீ சமைச்சு போட்டா அவுங்க உன் வீட்டு பக்கமே தலை வைக்க மாட்டாங்க. இன்னும் ஏதாவது இருக்கா?

வித்யா: இது தான் கடைசி கண்டிஷன். எங்க ரெண்டு பேருக்கும் ஏதாவது பிரச்சனை வந்து டைவர்ஸ் ஆகிடுச்சினா

நா.நா: ஏம்மா இப்படி அபசகுனமா பேசற. வாய கழுவும்மா.

வித்யா: இருங்க அங்கிள் சொல்லி முடிச்சிடறேன். ஏதாவது பிரச்சனை வந்து டைவர்ஸ் ஆகிடுச்சுனா அவர் கண்டிப்பா வேற கல்யாணம் பண்ணிக்கனும்.

நா.நா: இங்க தாம்மா. இங்க தாம்மா. நீ தமிழ் பொண்ணுனு நிருபிக்கற.

வித்யா: அதெல்லாம் இல்லை அங்கிள். அதுக்கப்பறம் அந்த பையன் எப்படி சந்தோஷமா இருக்கலாம். அதான்

நா.நா மயக்கம் போட்டு விழுகிறார்...


------------------------

இதை இங்கயும் படிக்கலாம் :)

நான் எவ்வளவு சொல்லியும் என் பேரு முரளிதரன் தான், நான் திண்டுக்கல்ல இருக்குற ஒரு காலேஜ் Professorனு உலகத்துக்கு எடுத்து சொல்லும் சாருவுக்கும், விவாதங்களே பிடிக்காதபட்சத்திலும் எனக்கு அறிவுரைக் கூற தனது பொன்னான நேரத்தை வீணாக்கி என் மேல் இருக்கும் பாசத்தால் தனிப்பதிவு போட்ட என் அருமை நண்பர், உலகமகா எலக்கியவாதி தம்பி உமாக்கதிருக்கும் நன்றி :)

Sunday, June 14, 2009

பசங்க

”பசங்க படத்தை நிச்சயம் மிஸ் பண்ணிடாத” இதை தேவ் அண்ணா, கைப்ஸ் அண்ணா ரெண்டு பேருமே சாட் பண்ணும் போது சொன்னாங்க.

நேத்து தான் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. என் ரூமெட்கிட்ட பயங்கர பில்ட் அப் கொடுத்துட்டு படம் பார்க்க ஆரம்பித்தோம். இந்த வருஷத்துலயே இதை சிறந்த படம்னு வேற சொல்றாங்க. இன்னொரு அஞ்சலினு சொல்றாங்க அப்படி இப்படினு பயங்கர பில்ட் அப். 



பெயர் போடும் போதே ஓரளவு கிரியேட்டிவிட்டி தெரிஞ்சிது. சின்ன பசங்க விளையாட்டு எல்லாம் பேக் க்ரவுண்ட்ல வரும், பெயர் அப்படியே ப்ளாக் ஸ்கிரின்ல ஓடிட்டு இருக்கும். அதுக்கு அப்பறம் அந்த மூணு வாண்டுகளைப் பத்தி போலிஸ்ல கம்ப்ளைண்ட் கொடுக்கும் போதும் அந்த பசங்களைக் காட்டும் போதும் ஓவர் பில்ட் அப்பா தெரிஞ்சிது. 

அதே மாதிரி அன்புக்கரசு அறிமுகமும் செம பில்ட் அப். அவன் வண்டி ஓட்டறதும், எக்ஸர்சைஸ் செய்யறதும் ஏதோ பத்ரி படம் பார்க்கற எஃபக்ட்ல இருந்தது. எனக்கு அதைப் பார்க்கும் போது செம கடுப்பு. இந்த படத்துக்கு இவ்வளவு பில்ட் அப்பானு. அதுவும் சின்ன பசங்களுக்குள்ள கேங் வார்னு காட்டும் போது அதைவிட எரிச்சல். ஆனா அதுவே போக போக அந்த பசங்களால பெற்றோர்களுக்கிடைய ஆரம்பிக்கும் பிரச்சனைனு களம் மாறும் போது சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது.

அதுக்கப்பறம் அப்பா, அம்மாக்கிடைய நடக்கும் பிரச்சனை பசங்கள எப்படி பாதிக்குதுனு பார்க்கும் போது ஏதோ மனசைக் குத்த ஆரம்பித்துவிட்டது. அன்புக்கரசு அப்பாவும் வாத்தியாரும் பேசிக் கொள்ளும் இடம் மிகவும் ரசித்தேன். இந்த மாதிரி கணவன், மனைவி சண்டை நான் நிறைய பார்த்திருக்கேன். அதனால பாதிக்கப்பட்ட பசங்களும் எனக்கு தெரியும். 

என் அப்பா, அம்மா கூட நாங்க சின்ன வயசுல இருக்கும் போது இப்படி நிறைய சண்டைப் போட்டிருக்காங்க. அன்புக்கரசு அழுத மாதிரி நான் கூட அழுதிருக்கேன். அப்பறம் நான் பெருசாக பெருசாக சண்டை ஓரளவு குறைந்தது. இப்பக்கூட எப்பவாது சண்டைப் போட்டா ”ஆமாம் புது மணத் தம்பதிகள். சண்டை போடறீங்க. நிறுத்துங்க” அப்படினு நான் கிண்டல் பண்றதுல ரெண்டு பேரும் சண்டையை நிறுத்திடுவாங்க.


அப்பறம் அன்புக்கரசு சித்தப்பாக்கும், ஜீவா அக்காக்கும் நடுவுல ஓடற காதல் ட்ராக் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. ரசிக்கும்படியா இருந்தது. அதுவும் பல நாடுகள்ல இருந்து ஃபோன் பண்ற கான்செப்ட் அட்டகாசம். நல்லா சிரிக்க வைத்தது.

ஜீவா, அன்பரசு ரோல் பண்ண சின்ன பசங்க ரெண்டு பேருமே அட்டகாசமா நடிச்சிருந்தாங்க. குறிப்பிட்டு சொல்லனும்னா எனக்கு ஜீவா ரோல்ல பண்ண குட்டிப் பையன் நடிப்பு ரொம்ப பிடிச்சிருந்தது. அதே போலவே பகோடா, குட்டிமணி, அப்பத்தா ரோல்ல நடிச்ச பசங்களும் அருமை. படத்துல நடிச்ச யாருமே குறை சொல்ற மாதிரி நடிக்கல. எல்லாமே இயல்பான நடிப்பு தான். 

சில காட்சிகள்ல இயல்புக்கு மீறி, பிஞ்சிலே முத்தின மாதிரி காட்டியிருந்தாலும் ரசிக்கும் படியாவே இருந்தது. இந்த படத்தை பசங்களுக்கு ரெக்கமெண்ட் பண்றதை விட பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நான் ரெக்கமெண்ட் செய்வேன். நிச்சயம் பாருங்க. முதல் பாதியை இன்னும் கொஞ்சம் நல்லா எடுத்திருந்தா மிகச் சிறந்த படமா வந்திருக்கும். சசிக்குமார் நல்ல இயக்குனர் மட்டுமில்ல நல்ல தயாரிப்பாளரும் கூடனு நிருபிச்சிருக்காரு. இயக்குனர் பாண்டிராஜுக்கு என் வாழ்த்துகளும், நன்றிகளும். 

தியேட்டரில் பார்க்க வாய்ப்பு கிடைத்தால் தவறாமல் பார்க்கவும். 

சும்மா கடைசியா ஒரு பஞ்ச் : “பசங்க” - பசங்களுக்கான படமல்ல. பசங்களைப் பற்றிய படம். பெரியவர்களுக்காக

Thursday, June 11, 2009

காதல்னா சும்மா இல்லை

இன்னைக்கு எங்கயே ஆன்லைன்ல மேஞ்சிட்டு இருக்கும் போது (மேயறதுக்கு நீ என்ன மாடானு கேட்டு புடாதீங்க) ராஜ் டீவி திரை விமர்சனம் பார்க்க வாய்ப்பு கிடைச்சிது. அதுல அ, ஆ, இ, ஈ விமர்சனமும், காதல்னா சும்மா இல்லை விமர்சனமும் பார்த்தேன். ரெண்டு படமும் நல்லா இருக்குற மாதிரி ஒரு எண்ணம். சரி இன்னைக்கு எப்படியும் பார்த்துடுவோம்னு களம் இறங்கினேன். காதல்னா சும்மா இல்லை பார்க்க வாய்ப்பு கிடைச்சிது.

”காதல்னா சும்மா இல்லை” இந்த படத்துக்கு பெரிய மைனஸா நான் நினைக்கிறது படத்தோட பேர் தான். எனக்கு படம் ரொம்ப பிடிச்சிருந்தது. கமிலினியைத் தேடி கதாநாயகன் புறப்படும் இடத்தில் ஆரம்பிக்கும் படம் ரயில்வே ஸ்டேஷனில் கண்டுபிடிக்கும் போது முடிகிறது. கதாநாயகியைத் (கமிலினி) தேடும் படலத்தில் வாழ்க்கையை புரிந்து கொள்கிறார் பணக்கார நாயகன். அவருடைய இருபது லட்ச ரூபாய் பைக்கை ஆட்டயைப்போட (திண்டிவனம் ஏரியால இந்த வார்த்தை எல்லாம் புழங்குவாங்களானு தெரியல) அவருக்கு உதவுவது போல சேருகிறார் ரவி கிருஷ்ணா. பிறகு அவரே நாயகனுக்கு நாயகியைக் கண்டுபிடிக்க உதவுகிறார். 

காதல்ல மொத்தம் மூணு வகை இருக்காம், லவ், பிக் லவ், க்ரேட் லவ். லவ் ரெண்டு மாசம் எஃபக்ட் இருக்குமாம், பிக் லவ் ரெண்டு வருஷம் எஃபக்ட் இருக்குமாம். க்ரேட் லவ்னா மொத்த வாழ்க்கையையே மாத்திடுமாம். இந்த படம் மூணாவது வகை காதலைப் பத்தி தான் பேச போகுதுனு படத்து பேரை வெச்சே சொல்லிடலாம்.

படத்துல எனக்கு பிடித்த விஷயங்களை சொல்லிடறேன்.

படம் பார்க்கவே ஜாலியா இருந்தது. ரவி கிருஷ்ணா இப்படி எல்லாம் கூட நடிப்பாரானு ஒரு சந்தேகம். ஒரு வகைல அவருக்கு ஏத்த கேரக்டர் தான். அதை அழகா செய்திருந்தார். அவர் பேசற தமிழ் எனக்கு ரொம்ப பிடிச்சது. டயலாக்ஸும் அருமை. “உங்க பைக்கு சும்மா பறக்குது பாஸு. ஜப்பான்காரன்னா சும்மாவா? அவன் மூக்கு தான் சப்பை. மூளை செம்ம ஷார்ப்பு” இந்த மாதிரி பல வசனங்கள் எனக்கு பிடிச்சிருந்தது. ரவி கிருஷ்ணா படத்துக்கு பெரிய ப்ளஸ். 7G படத்துக்கு பிறகு அவர் நல்லா பண்ண படமா இது தான் எனக்கு தெரிஞ்சிது. 


கமிலினி வழக்கம் போல ரொம்ப அழகு, ரொம்ப அமைதி. செம ஹோம்லி. 

அடுத்து கதாநாயகனா அறிமுகமான ஷர்வானந்தும் குறை சொல்ற மாதிரி இல்லை. முதல் படத்துக்கு நிறைவா செஞ்சிருக்காருனே சொல்லலாம். குறிப்பா ஆக்‌ஷன் சீன்ல அவரோட பாடி லேங்வேஜ் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. சரியா அழ வரலை. ஆனா முதல் படம்னு மன்னிச்சிடலாம். 

படத்துல டச்சிங் சீன்ஸ் நிறைய இருக்கு. கமிலினி அறிமுகமே அப்படி ஒரு டச்சிங் சீன்ல தான். 


”ஜெய் சம்போ சம்போ சம்போ” பாட்டு எனக்கு பிடிச்சிருந்தது.   

படத்துல சில குறைகளும் இருக்கு. அநேகமா இது தெலுகு படம் காப்பியா இருக்கும்னு நினைக்கிறேன். நக்சலைட் சீன்ஸ் எல்லாம் அப்படி தான் தெரியுது. திண்டீவனம் ஏரியால எங்க நக்சலைட்ஸ் இருக்காங்க? அந்த மாதிரி சீன்ஸ் எல்லாம் தெலுகு படத்துக்கு தான் ஒத்து வரும். அதையெல்லாம் தூக்கிட்டு தமிழ் படத்துக்கு ஏத்த மாதிரி மாத்திருக்கனும். 

அதே மாதிரி படத்தை இன்னும் ரொம்ப அழகா கவிதை மாதிரி சொல்லியிருக்கலாம்னு தோணுது. கொஞ்சம் வெட்டியிருக்கணும். அப்பறம் ரசிக்கிற மாதிரியான காட்சிகளை இன்னும் அதிகமாக்கியிருக்கலாம். 

பார்க்க வாய்ப்பு கிடைத்தா தவறாம பார்க்கலாம். 

ஒட்டுக் கேட்டதும் பாட்டுப் போட்டதும்!!!

நேத்து ஏதேச்சயா மேனஜர் ரூம் பக்கம் போயிட்டு இருந்தேன். பார்த்தா அங்க அவர் எங்க டீம் லீட் கிட்ட பேசிட்டு இருந்தாரு, என்னடா நம்மல பத்தி ஏதோ பேசறாரேனு பார்த்தா,

மேனஜர் : டீம் லீட்! சீக்கிரமே நம் கம்பெனி சொர்கபுரி ஆகிவிடும் போலிருக்கிறது.

டீம் லீட் : எல்லாம் இந்த சாப்ட்வேர் இஞ்சினியர்களின் உழைப்பால் தானே?

மேனஜர் : சந்தேகமென்ன? நமக்கு வாய்த்த டீம் மெம்பர்கள் மிக மிக திறமைசாலிகள். ஆனால் வாய் தான் காது வரை நீளம்.


உடனே என் மனசுல பாட்டு கேட்க ஆரம்பிச்சிது.

ஓப்பனிங்ஸ் ரெசஷனில் குறைந்திருக்கும்
சரியானதும் ரெஸ்யூமேக்கள் பாய்ந்திருக்கும்

ஓப்பனிங்ஸ் ரெசஷனில் குறைந்திருக்கும்
சரியானதும் ரெஸ்யூமேக்கள் பாய்ந்திருக்கும்
நம் கோட் வலியால் அந்த நாள் வரலாம்
அன்று சாப்ட்வேர் இஞ்சினியர்கள் பலன் பெறலாம்.


ரெசஷன் என்பதெல்லாம்
அமெரிக்கா திவாலானதினாலே
கோடிங்கை செய்வதெல்லாம்
பில்லிங்கு வேண்டுவதாலே


ஏன் என்ற கேள்வி
இங்கு கேட்பவருக்கு வாழ்க்கையில்லை
லே ஆஃப் என்ற எண்ணம்
கொண்ட மேனஜர் வாழ்ந்ததில்லை!!!


...........

இப்ப முழுப் பாட்டு

ஏன் என்ற கேள்வி
இங்கு கேட்பவருக்கு வாழ்க்கையில்லை!
லே ஆஃப் என்ற எண்ணம்
கொண்ட மேனஜர் வாழ்ந்ததில்லை!!!

ஏன் என்ற கேள்வி
இங்கு கேட்பவருக்கு வாழ்க்கையில்லை
லே ஆஃப் என்ற எண்ணம்
கொண்ட மேனஜர் வாழ்ந்ததில்லை!!!


(மீசிக் ஸ்டார்ட் )

அப்ரைஸல் பிறந்ததெல்லாம்
கேள்விகள் கேட்டதனாலே

அப்ரைஸல் பிறந்ததெல்லாம்
கேள்விகள் கேட்டதனாலே
ப்ரோமோஷன்களை பெறுவதெல்லாம்
ஜால்ரா அடிப்பதனாலே!!!

ப்ரோமோஷன்களை பெறுவதெல்லாம்
ஜால்ரா அடிப்பதனாலே!!!


ஏன் என்ற கேள்வி
இங்கு கேட்பவருக்கு வாழ்க்கையில்லை
லே ஆஃப் என்ற எண்ணம்
கொண்ட மேனஜர் வாழ்ந்ததில்லை!!!


(மறுபடியும் மீசீக்)

(டீம் மெம்பர்ஸ் ஒன் பை ஒன்... ஹை பிட்ச்ல)

கால காலத்துக்கும் இப்படியே நாம சாப்ட்வேர் இஞ்சினியரா இருக்க வேண்டியது தானா?

நாம மேனஜர் ஆகறது எப்ப?

இன்னும் எத்தனை நாளைக்கு தான் நாம கோடிங் பண்ணிட்டு இருக்கறது?

ஓராயிரம் லைட் இயர் ஆகட்டுமே
நம் கோடிங்கின் ஸ்டாண்டர்ட் மட்டும் நிலைக்கட்டுமே

ஓராயிரம் லைட் இயர் ஆகட்டுமே
நம் கோடிங்கின் ஸ்டாண்டர்ட் மட்டும் நிலைக்கட்டுமே
வரும் காலத்திலே நம் தலைமுறைகள்
நாம் சாப்ட்வேர் இஞ்சினியரில்லை என்ற முழங்கட்டுமே


ஏன் என்ற கேள்வி
இங்கு கேட்பவருக்கு வாழ்க்கையில்லை
லே ஆஃப் என்ற எண்ணம்
கொண்ட மேனஜர் வாழ்ந்ததில்லை!!!


மேனஜர் : டீம் லீட்! சீக்கிரமே நம் கம்பெனி சொர்கபுரி ஆகிவிடும் போலிருக்கிறது.

டீம் லீட் : எல்லாம் இந்த சாப்ட்வேர் இஞ்சினியர்களின் உழைப்பால் தானே?

மேனஜர் : சந்தேகமென்ன? நமக்கு வாய்த்த டீம் மெம்பர்கள் மிக மிக திறமைசாலிகள். ஆனால் வாய் தான் காது வரை நீளம்.

ஓப்பனிங்ஸ் ரெசஷனில் குறைந்திருக்கும்
சரியானதும் ரெஸ்யூமேக்கள் பாய்ந்திருக்கும்

ஓப்பனிங்ஸ் ரெசஷனில் குறைந்திருக்கும்
சரியானதும் ரெஸ்யூமேக்கள் பாய்ந்திருக்கும்
நம் கோட் வலியால் அந்த நாள் வரலாம்
அன்று சாப்ட்வேர் இஞ்சினியர்கள் பலன் பெறலாம்.


ரெசஷன் என்பதெல்லாம்
அமெரிக்கா திவாலானதினாலே
கோடிங்கை செய்வதெல்லாம்
பில்லிங்கு வேண்டுவதாலே

ஏன் என்ற கேள்வி
இங்கு கேட்பவருக்கு வாழ்க்கையில்லை
லே ஆஃப் என்ற எண்ணம்
கொண்ட மேனஜர் வாழ்ந்ததில்லை!!!

அப்படியே இது மனசுல ஓடி முடியறதுக்கும், Balaji, Can you please do this?னு என் டீம் லீட் பிங் பண்றதுக்கும் சரியா இருந்தது.

அப்படியே தலைவர் பாட்டையும் பார்த்துட்டு போங்க...


Wednesday, June 03, 2009

பத்தாம் நாள் (சிறுகதை போட்டிக்கு)

பாரதப் போரின் ஒன்பதாம் நாள் இரவு.

துரியயோதனன் அந்த‌ கூடார‌த்திலிருந்து வெளியேறி சில‌ நாழிகைக‌ள் ஆகியிருந்த‌ன‌. பிதாம‌க‌ருக்கு உற‌க்க‌ம் வ‌ர‌வில்லை. கூடார‌த்திற்குள் அங்கும் இங்கும் ந‌ட‌ந்து கொண்டிருந்தார்.

வெளியே பிண‌க்குவிய‌ல்க‌ளை போர்களத்திலிருந்து எடுப்பதில் இரு த‌ர‌ப்பு வீர‌ர்க‌ளும் மும்ம‌ர‌மாக‌ ஈடுப‌ட்டிருந்த‌ன‌ர். காய‌ம‌டைந்த‌ வீர‌ர்க‌ளுக்கு ம‌ருத்துவ‌ சேவைக‌ளும் ஒரு ப‌க்க‌ம் ந‌ட‌ந்து கொண்டிருந்த‌து. கை கால்க‌ளை இழ‌ந்த‌ வீர‌ர்க‌ளும் சிகிச்சைப் பெற்றுக் கொண்டிருந்த‌ன‌ர். போர் கள‌த்திற்கு உள்ளே வ‌ந்துவிட்டால் வெற்றி அல்ல‌து ம‌ர‌ண‌ம் ம‌ட்டுமே என்ப‌து அவ‌ர்க‌ளுக்கு தெரிந்திருந்த‌து. ஊன‌த்தைக் கார‌ண‌ம் சொன்னால் உடலில் உயிர் தங்க‌ கார‌ண‌மிருக்காது என்ப‌து அங்கே எழுத‌ப்ப‌டாத‌ விதி.

எதையும் பார்க்க‌ பிடிக்காம‌ல் சிறிது நேர‌ம் க‌ண்மூடி இருக்க‌லாம் என்ற‌ எண்ண‌த்தில் அங்கே இருந்த‌ ப‌டுக்கையில் த‌ன் பெரும் ச‌ரீர‌த்தை சாய்த்தார்.

அவர் அறியாம‌லே அவ‌ரை நித்திரா தேவி அணைத்துக் கொள்ள‌ முய‌ன்றாள்.

"தேவவிரதா"

"ம‌க‌னே தேவவிரதா. எழுந்திரு. உன்னைப் போன்ற‌ மாவீர‌ர்க‌ள் போர் க‌ள‌த்தில் உற‌ங்க‌லாமா?"

திடுக்கிட்டு எழுந்தார் பிதாம‌க‌ர். இது நிச்ச‌ய‌ம் அன்னையின் குர‌ல் தான். ச‌ந்தேக‌மே இல்லை. இந்த அற்புத குரலைக் கேட்டு எத்த‌னை ஆண்டுக‌ளாகின்ற‌ன‌.

"தாயே! தாங்க‌ளா? எங்கிருக்கிறீர்க‌ள்? த‌ங்க‌ள் குர‌லைக் கேட்டு எத்த‌னை ஆண்டுக‌ளாகின்ற‌ன‌? த‌ய‌வு செய்து என் க‌ண் முன்னால் வ‌ந்து த‌ரிச‌ன‌ம் தாருங்கள்"

"மக‌னே! அத‌ற்கான‌ நேர‌ம் வ‌ரும் பொழுது நானே உன் கண் முன் தோன்றுவேன். இப்பொழுது உன‌க்கு வ‌ர‌ இருக்கும் அவ‌ப்பெய‌ரை நீக்க‌வே ஓடோடி வ‌ந்தேன்"

"அவ‌ப்பெய‌ரா? என‌க்கா? என்ன‌ தாயே சொல்கிறீர்க‌ள்"

"உல‌கில் யாரும் செய்ய முடியாத காரிய‌த்தை செய்து தேவவிரத‌னாக‌ இருந்த‌ நீ அன்று பீஷ்ம‌ன் ஆனாய். ஆனால் அந்த‌ பெய‌ருக்கே க‌ள‌ங்க‌ம் வ‌ரும் செய‌லில் நீ ஈடுப‌ட‌லாமா?"

"என்ன‌ தாயே சொல்கிறீர்க‌ள். நான் என்ன‌ த‌வ‌று செய்தேன்?"

"ம‌க‌னே! இந்த‌ப் போரில் துரியோதனன் உட‌னிருந்து பாண்ட‌வ‌ர்க‌ளுக்கு எதிராக‌ போரிடுகிறாயே. இது அநீதியல்லவா?"

"நான் என்ன‌ செய்வேன் தாயே. த‌ந்தையில்லாத‌தால் தான் வ‌ஞ்சிக்க‌ப்ப‌ட்ட‌தாக‌ நினைத்திருக்கும் யுதிஷ்டிர‌னுக்கும், த‌ந்தை க‌ண் பார்வை இழ‌ந்த‌தால் தான் வ‌ஞ்சிக்க‌ப்ப‌ட்ட‌தாக‌ நினைத்திருக்கும் துரிய‌னுக்குமிடையே மண் ஆசையால் ந‌ட‌க்கும் போரில் நானும் ஒரு ப‌கடைக்காய் ஆக்க‌ப்ப‌ட்டுள்ளேன்"

"ம‌க‌னே! இது ம‌ண்ணிற்காக‌ ந‌ட‌க்கும் போர் அல்ல‌. இது ப‌ல‌ பெண்க‌ளுக்கு நீ இழைத்த அநீதிகளுக்காக‌‌ ந‌ட‌க்கும் போர்"

"நான் பெண்க‌ளுக்கு அநீதி இழைத்தேனா? என்ன‌ கொடுமை இது தாயே? என் மீது இப்ப‌டி ஒரு அபாண்ட‌மான‌ ப‌ழியா?"

"ம‌க‌னே எந்த‌ தாயும் த‌ன் ம‌க‌ன் மீது எந்த‌ கால‌த்திலும் ப‌ழி சும‌த்திய‌தாக‌ வ‌ர‌லாறு இல்லை. உன்னை ப‌ழியிலிருந்து காப்ப‌த‌ற்காக‌வே ஓடோடி வ‌ந்துள்ளேன்"

"என்ன‌ ப‌ழி என்று த‌ய‌வு செய்து சொல்லிவிடுங்க‌ள் தாயே. என் த‌லையே வெடித்துவிடும் போல் தோன்றுகிற‌து"

"விசித்ர‌வீரிய‌ன் திரும‌ண‌த்திற்கு காசி ராஜ‌னின் ம‌க‌ள்க‌ளை க‌வ‌ர்ந்தாயே. நினைவு இருக்கிறதா ம‌க‌னே?"

"ச‌த்ரிய‌ த‌ர்ம‌த்திற்கு எதிராக‌ எதுவும் செய்ய‌வில்லையே தாயே"

"எது ச‌த்ரிய‌ த‌ர்ம‌ம் ம‌க‌னே? உன் பொறுப்பில் வ‌ளர்ந்த‌ த‌ம்பியை வீர‌மாக‌ வ‌ளர்த்து அவ‌னை சுய‌ம்வ‌ர‌த்திற்கு அனுப்பி க‌வ‌ர்வ‌து தானே த‌ர்ம‌ம். அதைவிடுத்து மாபெரும் வீர‌னான‌ நீ, உன் த‌ம்பிக‌ளை உன‌க்கு நிக‌ராக‌ வ‌ள‌ர்க்காம‌ல் விட்டாய். க‌ந்த‌வ‌ர்க‌ளின் வீர‌ம் தெரிந்திருந்தும் சத்ய‌வ‌தியின் முத‌ல் ம‌க‌ன் சித்ராங்கதனைப் போருக்கு அனுப்பினாய். அவ‌ன் வீர‌ சொர்க‌ம் அடைந்தான். அடுத்த‌ ம‌க‌னை சிறுவ‌ய‌திலே அரிய‌னையில் ஏற்றி நீயே ஆட்சி புரிந்தாய். அவ‌னை ம‌ற்ற‌வ‌ர்க‌ள் இக‌ழ‌ வேண்டும் என்று அவ‌ன் சார்பில் நீ சென்று பெண்க‌ளை க‌வ‌ர்ந்து வ‌ந்தாய்"

"போதும் தாயே! த‌ய‌வு செய்து நிறுத்தவிடுங்க‌ள். இது எதுவும் நான் திட்டுமிட்ட‌ செய்த‌த‌ல்ல‌. எல்லாம் த‌ற்செய‌லான‌தே"

"நீ சொல்வ‌தை இன்று இந்த‌ உல‌க‌ம் ஏற்றிருக்கிற‌து ம‌க‌னே. அது என்றும் ஏற்கும் என்று சொல்ல‌ முடியாது. நான் சொல்ல‌ வ‌ந்த‌தை சொல்லிவிட்டு சென்றுவிடுகிறேன். ம‌ற்ற‌து உன்
விருப்ப‌ம்"

"சொல்லுங்க‌ள் தாயே"

“மகனே! பெண்களை நீ கைப்பாவை என்று நினைத்தாய். அதனால் தான் உன் முன்னால் ஹஸ்தினாபுர அரசவையில் உங்கள் நாட்டு மருமகளையே துகிலுருகினான் பாவி துச்சாதனன்”

"தாயே அது என் த‌வ‌றில்லை. நாட்டிற்காக‌ ம‌னைவியை வைத்த‌வ‌ன் யுதிஷ்டிர‌ன்"

"அதைத் த‌ட்டிக்கேட்காம‌ல் வேடிக்கைப் பார்த்த‌வ‌ன் நீ"

"வார்த்தைக‌ளால் என்னைக் கொல்லாதீர்க‌ள் தாயே"

"ம‌க‌னே! இதையெல்லாம் விட அவ‌ப்பெய‌ர் உன‌க்கு வ‌ர‌ப்போகிற‌து"

"இதையெல்லாம் மிஞ்சும் அவ‌ப்பெய‌ரா? என்ன‌ தாயே அது?"

"காந்தார‌ நாட்டு ம‌ன்ன‌ன் ம‌க‌ளைக் க‌வ‌ர்ந்து வ‌ந்து பார்வைய‌ற்ற‌ திருதிராஷ்டிர‌னுக்கு க‌ட்டி வைத்தாயே. நினைவிருக்கிற‌தா?"

"நான் க‌வ‌ர்ந்து வ‌ர‌வில்லை. அவ‌ளாக‌ விரும்பியே வ‌ந்தாள்"

"ம‌க‌னே! பெண் த‌ர‌வில்லையென்றால் உன் நாட்டின் மேல் என் ப‌டைக‌ள் பாயும், உன் நாடு சின்னா பின்ன‌ம் ஆக்க‌ப்ப‌டும் என்று நீ சொன்ன‌தைக் கேட்டு எந்த‌ப் பெண் தான் வராம‌ல் போவாள். அப்பொழுதும் அவ‌ளைக் காக்க‌ அவ‌ள் ச‌கோத‌ர‌ர்க‌ள் நூறு பேர் வ‌ந்தார்க‌ளே. அந்த‌ மாவீர்க‌ளை சிறைப்பிடித்தாய்"

"என் வீர‌த்திற்கு முன்னால் அவ‌ர்க‌ள் கால் தூசு பெறாத‌வ‌ர்க‌ள் தாயே"

"ம‌க‌னே எது வீர‌ம்? வெற்றி பெறுவோம் என்று தெரிந்து போரிடுவ‌தா? ப‌ல‌ தெய்வீக‌ அஸ்திர‌ங்க‌ளை வைத்துக் கொண்டும், இச்சை ம‌ர‌ண‌ம் என்று வ‌ர‌த்தையும் வைத்துக் கொண்டு போரிடுவ‌தா வீர‌ம்? வெற்றி பெறுவோம் என்ற‌ ந‌ம்பிக்கையில்லை என்றாலும் ஒரு பெண்ணைக் காக்க‌ போரிட்டார்க‌ளே காந்தார ம‌ன்ன‌ன் குமார‌ர்க‌ள். அது வீர‌ம்"

"தாயே. இப்பொழுது என்னை சூழ்ந்துள்ள‌ அவ‌ப்பெய‌ர் தான் என்ன‌? அதை ம‌ட்டும் சொல்லிவிட்டு த‌ய‌வு செய்து இங்கிருந்து அக‌ன்று விடுங்க‌ள் தாயே!"

"சொல்கிறேன் ம‌க‌னே. அதை தடுக்கத் தானே வ‌ந்துள்ளேன்"

"சொல்லுங்க‌ள் தாயே. அதை நிச்ச‌ய‌ம் செய்கிறேன்"

"கௌர‌வ‌ர்க‌ளுக்காக‌ நீ போரிடுவ‌து வேறு எந்த‌ கார‌ண‌த்திற்காக‌வும் அல்ல‌, அவ‌ர்க‌ள் உன் மைந்த‌ர்க‌ள் தான் என‌ ப‌ர‌ப்ப‌த் திட்ட‌மிட்டுள்ளார்க‌ள் ம‌க‌னே. காந்தாரியை உன் ஆசைக்கு இணங்க வைக்கவே அவள் சகோதர்கள் நூறு பேரையும் நீ சிறையிலடைத்தாய் என பரப்பத் திட்டம். அது ம‌ட்டுமில்லாம‌ல் நீ செய்த‌ த‌வ‌றுக‌ள் அனைத்தையும் ப‌ட்டியிலிட‌ போகிறார்க‌ள். உண்மையும் பொய்யும், பாலும் நீரும் போல‌ க‌ல‌க்க‌ப்ப‌ட‌ உள்ளது மகனே, கலக்கப்பட உள்ளது. அதைப் பிரிக்க‌ அந்த‌ ஈச‌னாலும் முடியாது என்ப‌து உன‌க்கே தெரியும்"

"தாயே! என்ன‌ கொடுமை இது. காந்தாரியை என் ம‌க‌ள் போல‌ நினைத்து வாழ்ந்து வ‌ருகிறேன். நான் ப‌ல‌ த‌வ‌றுக‌ளை செய்திருக்க‌லாம். ஆனால் நான் என் தந்தைக்கு கொடுத்த‌ வாக்குறுதியைத் த‌வ‌றிய‌தில்லை"

"ம‌க‌னே! உன்னை அறியாத‌வ‌ளா நான்? என் ம‌க‌ன் உத்த‌ம‌ன் என்ப‌து என‌க்கு யாரும் சொல்லி தெரிய‌ தேவையில்லை ம‌க‌னே! நீ செய்த அரும்பெரும் காரிய‌த்தை உன‌க்கு முன்னும் உன‌க்கு
பின்னும் செய்ய‌ப்போகிற‌வ‌ர்க‌ள் யாரும் இல்லை. இருப்பினும் நீ செய்த‌ சில‌ த‌வ‌றுக‌ள் எல்லாம் இன்று ஒன்று சேர்ந்து உனக்கு எதிராக ராட்சச‌ உருவ‌ம் எடுத்துள்ள‌ன‌. அதிலிருந்து நீ
த‌ப்பிவிடு ம‌க‌னே! ச‌த்ரிய‌னுக்கு உயிரை விட‌ மான‌ம் தான் முக்கிய‌ம். நான் வ‌ருகிறேன்"

"தாயே! தாயே!!!"

பிதாம‌க‌ர் த‌ரையில் விழுந்து அழ‌தார்.

..................

அந்த கூடாரத்தின் உள்ளே ஒரு உருவம் புகுந்தது

"மகனே காரியம் முடிந்தது” அற்புதக் குர‌ல்

”விதுரரே! இன்னும் எதற்கு கங்கையின் குரல்?”

“மாற்ற மறந்துவிட்டேன் கண்ணா. நாளை அந்த பிதாமகன் ஆட்டம் முடிந்துவிடும்”

யுதிஷ்டிரன் அருகே கையில் புல்லாங்குழலுடன் உட்கார்ந்திருந்தான் கருநீலக் கண்ணன்.

“நாங்கள் வேறு ஏதாவது செய்ய வேண்டுமா சித்தப்பா?”

“ஆமாம் யுதிஷ்டிரா. அந்த துருபதன் மகளை பார்த்தனின் தேரில் ஏற்றி செல்ல சொல்”

“திரௌபதியையா?”

“திரௌபதியை இல்லை மகனே. தன்னை ஆண் என்று சொல்லிக் கொள்கிறாளே அவள் சகோதரி சிகண்டி. அவளை ஏற்றுங்கள்”

“புரிகிறது விதுரரே!. அதற்கு தகுந்த கதையை நான் கட்டிவிடுகிறேன்”

“கதை கட்டுவதில் உன்னை மிஞ்ச முடியுமா கண்ணா!”

...................

கௌரவ சேனையின் அந்த கூடாரத்தின் வெளியே குறுக்கும் நெடுக்குமாக ஒரு உருவம் நடமாடிக் கொண்டிருந்தது. சுமார் ஏழு அடி உயரத்தில் இருந்த அவனுடைய கைகள் அவனுடைய கால் முட்டி வரை நீண்டிருந்தது. ஒன்பது நாட்களாக போர் நடந்தும் தான் எதிர்பார்த்த எந்த ஒரு நிகழ்ச்சியும் நடக்காததில் வருத்ததில் இருந்தான். அவனுடைய கூடாரத்தில் ஏதோ சத்தம் கேட்க வேகமாக உள்ளே நுழைந்தவன், அங்கே நின்றிருந்த உருவத்தைப் பார்த்ததும் மகிழ்ச்சியடைந்தான்.

“வாருங்கள் விதுரரே!”

“காரியம் கச்சிதமாக முடிந்து விட்டது சகுனி. நாளை பிதாமகன் வீழ்வான்”

”நிச்சயமாகவா?”

“ஆமாம். நீ இனி உன் சபதத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம். எனக்கு கொடுத்த வாக்கையும் மறந்துவிடாதே”

“நிச்சயமாக. போரில் அந்த கிழட்டு பிரம்மச்சாரி விழுந்துவிட்டால் மொத்த குருகுலமும் சர்வநாசம் தான். நீங்கள் தான் ஹஸ்தினாபுரத்தின் சக்ரவர்த்தி”

“குருகுலமா?ஹா ஹா ஹா.
பீஷ்மனைத் தவிர இங்கு யார் குருகுலம்? இது வியாச குலம், பராசர குலம்”

“ஆமாம். நீங்கள் சொல்வதும் சரிதான்”

”சகுனி, உனக்கு மேலும் ஒரு காரியம் இருக்கிறது. நான் போரிலிருந்து ஒதுங்கியதைப் பார்த்ததும், கர்ணனை ஒதுக்கி வைத்துவிட்டான் அந்த கிழவன். அதில் ஏதாவது சூழ்ச்சி இருக்கலாம். நாளை கிழவன் விழுந்ததும் கர்ணனையும் சேர்த்துக் கொள். பார்த்தனைக் கொல்ல சக்தி அஸ்திரம் அவனிடம் தான் இருக்கிறது”

“கர்ணன் தானாக வந்து சேர்வான் விதுரரே. துரியன் என்ற மகுடி என் கையிலிருக்கும் வரை கர்ணன் என்ற பாம்பைப் பற்றி கவலை வேண்டாம். இருப்பினும் கர்ணன் மேல் உங்களுக்கு ஒரு பிரியம் இருப்பதாகத்தான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன். பார்த்தன் கையில் அவன் வீழவும் வாய்ப்புகள் அதிகம்.”

“அதைப் பற்றி கவலை வேண்டாம். பிறப்பால் எனக்கு இழைக்கப்பட்ட அநீதியைப் போலவே அவனுக்கும் பல இடங்களில் அநீதி செய்யப்பட்டதால் அவன் மேல் எனக்கு பிரியம் இருந்தது உண்மை தான். ஆனால் இந்த பிதாமகர் அவனை ஒதுக்கி வைத்ததும் எனக்கு ஏதோ சந்தேகம் வந்துவிட்டது. அவன் பிறப்பில் பல ரகசியங்கள் இருக்கலாம். அது வெளிவர நான் விரும்பவில்லை. மேலும் அவனுக்கு பல அநீதிகள் இழைக்கப்பட்டிருந்தாலும், மன்னன் ஆனான். ஆனால் மன்னாள ஆரோக்கியமான ஒருவன் வேண்டும், என்ற நிலையில் உருவாக்கப்பட்ட நான், இன்று குருடனுக்கும், பொறாமைக்காரனுக்கும் கைக்கட்டி சேவகம் செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறேன். நினைவில் வைத்து கொள் சகுனி, ஒருவரும் மிஞ்சக் கூடாது. அந்த சூதாடி யுதிஷ்டிரனையும் சேர்த்து!”

”நிச்சயமாக விதுரரே! நமக்கு இழைத்த அநீதிகளுக்கு இவர்கள் பதில் சொல்லும் காலம் வந்துவிட்டது. நாட்டை ஆள பிறந்த தங்களை தாசியின் மகன் என்று ஒதுக்கி வைத்து துரோகம் செய்ததற்கு பலனை இவர்கள் அனுபவித்தே தீர வேண்டும்”

”தாசியின் மகன் என்று மட்டுமா சொன்னார்கள்? வேசியின் மகன் என்று நடுசபையில் சொன்னான் என் குருட்டு அண்ணன் மகன் துரியோதனன். விசித்ரவீரியனை மணந்து என் தந்தை வியாசருக்கு முந்தானை விரித்த அம்பிகா, அம்பாலிகா பேரர்களுக்கு நிருபிக்கிறேன் யார் வேசி மகன் என்று”

(முற்றும்)