தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Friday, January 25, 2008

பனி விழும் மலர் வனம் - 1

அப்பாடா ஒரு வழியா மெஜெஸ்டிக் வந்து சேர்ந்தாச்சுங்க. இந்த பெங்களூர் ட்ராபிக் ஜாம் இருக்கே. கொடுமைலயும் கொடுமைங்க. MGரோட்ல இருக்குற எங்க ஆபிஸ்ல இருந்து மெஜெஸ்டிக் வந்து சேரதுக்குள்ள எங்க ஊர்ல இருந்து கடலூர்க்கே போயிடலாங்க. ஓ எங்க ஊர் என்னனே உங்களுக்கு சொல்லலை இல்லை. எங்க ஊர் பேரு திருக்கோவிலூர்ங்க. திருவண்ணாமலைல இருந்து அரை மணி நேரத்துல போயிடலாம்.

இப்ப கூட திருவண்ணாமலை பஸ் தான் பிடிக்க போறேன். இன்னைக்கு வேற பௌர்ணமியா போயிடுச்சி. பஸ்ல எப்படியும் சீட் கிடைக்கறது கஷ்டம் தான். அதான் மடிவாலா போகாம நேரா மெஜெஸ்டிக்கே வந்துட்டேன். மெஜெஸ்டிக் பஸ் ஸ்டாண்ட்ல கொஞ்சம் கஷ்டப்பட்டா சீட் பிடிச்சிடலாம்.

மெஜெஸ்டிக்ல உள்ள நுழைஞ்சதும் முதல்ல ஒரு காபி குடிச்சிடறது நம்ம பழக்கங்க. அதுவும் அந்த கேத்தோஸ் காபிதாங்க நம்ம ஃபெவரைட். அஞ்சு ரூபாய்க்கு இவ்வளவு சூப்பரான காபி நம்ம ஊர்ல கிடைக்காதுங்க. இருங்க ஒரு காபி குடிச்சிட்டு வந்திடறேன்.

காபி வழக்கம் போல சூப்பரா இருந்துச்சுங்க. அதுவும் நமக்கு ஏத்த மாதிரி ஸ்டராங்கா, சக்கரை கொஞ்சம் கம்மியா. சுருக்கமா சொன்னா நம்ம கொயம்பத்தூர் அண்ணபூர்ணா காபி மாதிரி. சரி காபி புராணத்த நிறுத்துவோம். நான் அதை பத்தி பேச ஆரம்பிச்சா பேசிட்டே இருப்பேன்.

இவ்வளவு நேரம் பேசிட்டே இருக்கோம். என் பேரை சொல்லல பாருங்க. என் பேரு... ஐயோ அங்க வர பஸ் திருவண்ணாமலை பஸ் மாதிரி தெரியுது. இருங்க முதல்ல பஸ்ல போய் இடம் பிடிப்போம்.

ஆஹா... அந்த பஸ்ல உக்கார இடமில்லைங்க. அதான் இந்த பஸ்ல ஏறிட்டேன். அஞ்சு மணி நேரம் நின்னுட்டு போக முடியாது இல்லையா? இந்த மூணு பேர் உக்கார சீட்ல உக்காரவே எனக்கு பிடிக்காது. இருந்தாலும் வேற வழியில்லாததால உக்கார்ந்துக்கிட்டேங்க. அடுத்து யாராவது வந்தா நடு சீட்ல உக்கார சொல்லனும். ஜன்னல் சீட்ல இருக்கற அந்த ஆளை எப்படியும் நகர சொல்ல முடியாது. நடுல உக்கார்ந்து போறதை விட வேற கொடுமை இல்லை. அதான் இப்படி ஓரமாவே ஒட்டிட்டு உக்கார்ந்து இருக்கேன்.

என்னங்க இவ்வளவு பேசியும் என் பேரை சொல்ல நேரமில்லை பாருங்க. நான் தாங்க ரவி. ரவி ஷங்கர். இந்த ட்ராபிக் ஜாம் ஊர்ல தான் கூகுள்ல வேலை செய்யறேன். அண்ணா யுனிவர்சிட்டி கேம்பஸ்ல நானும் என் எதிரி மாலதியும் செலக்ட் ஆனோம். அவ MS பண்ண போயிட்டா. நான் மூணு வருஷமா அங்க தான் குப்பை கொட்டிட்டு இருக்கேன்.

நான் நல்ல பையங்க. ஆனா அப்பப்ப கொஞ்சம் பொய் மட்டும் சொல்லுவேன். அதுல முக்கியமான ஒண்ணு பஸ்ல போகும் பக்கத்துல இருக்குற யார் கேட்டாலும் வேலை தேடிட்டு இருக்கறனு சொல்றது. கொஞ்சம் நல்லா கல கலனு போகும். நிறைய பேர் அட்வைஸ் கொடுப்பாங்க. அட்டகாசமான டிப்ஸ் எல்லாம் கொடுப்பாங்க. நானும் நல்ல பையனா கேட்டுக்குவேன். ஏன்னா வேலைக்கு போறனு சொன்னா சம்பளத்தை பத்தி தான் அதிகம் பேசுவாங்க. அதான் இப்படி.

இன்னைக்கு யாரும் சிக்க மாட்டாங்க போல. சரி பார்க்கலாம். எப்படியும் பக்கத்துல ஒரு ஆள் வருவான் இல்லை.

ஆஹா... என்னங்க அந்த பொண்ணு நம்ம பக்கத்துல வந்து நிக்குது. இடத்தை மாத்த சொல்ல போறாங்களா? திரு திருனு முழிச்சிட்டு நிக்குது.அநேகமா நகுந்து உக்கார சொல்லுதுனு நினைக்கிறேன்...

நடு சீட்டுக்கு போக வெச்சிட்டாளே!!! என்னை நடு சீட்ல உக்கார வெச்ச அவளுக்கு இருக்குங்க ஆப்பு...

(தொடரும்...)

Tuesday, January 22, 2008

டங்கா டுங்கா தவுட்டுக்காரி - ஜே லோ செம குத்து டான்ஸ்

மக்கா, இங்க பாருங்க... செம குத்து

Wednesday, January 16, 2008

விஜய்க்கு டாக்டர் பட்டம் சரியே!!!

எல்லா விசேஷத்துக்கும் சன் டீவில விஜய் பேட்டி வரது ஒரு சம்பிரதாயமாகி போச்சு. இந்த வருஷம் அந்த கொடுமையை பார்க்கல. அதனால அது எப்படி இருந்திருக்கும் ஒரு கற்பனை.

விஜயசாரதி : எல்லாருக்கும் என் பொங்கல் வாழ்த்துக்கள். பொங்கல்னா உங்களுக்கு எல்லாம் என்ன ஞாபகம் வரும், காலைல ஒருத்தவங்க பாடுவாங்களே அந்த புரியாத பாட்டு, அப்பறம் பொங்கல் சிறப்பு பாடல்கள், பொங்கல் புதுப்படங்கள் சிறப்பு திரைப்பார்வை, சாலமன் பாப்பையா சிறப்பு பட்டி மன்றம். ஆனா இங்க அது மட்டுமில்லைங்க டாக்டர் விஜயோட சிறப்பு பேட்டியும் இருக்கு. வாங்க இப்ப நிகழ்ச்சிக்கு போகலாம்.

விஜய், உங்களை அறிமுகப்படுத்திக்கோங்க.

வி: தமிழ்நாட்ல என்னை அறிமுகப்படுத்திக்கோனு சொன்ன முதல் காம்பைரர் நீ தான்.

வி.சா: (மனதிற்குள் : ஆஹா. ஆரம்பத்துலயே பஞ்ச் டையலாக் பேசறதுக்கு சான்ஸ் கொடுத்துட்டனே) நீங்கள் கேட்டவை ஞாபகத்துல சொல்லிட்டேன். வணக்கம் டாக்டர்.

வி: வணக்கங்கணா. எல்லாருக்கும் என் பொங்கல் வாழ்த்துக்கள்.

வி.சா: பொங்கல் பண்டிகையை பத்தி என்ன நினைக்கறீங்க.

வி: பொங்கல் பண்டிகை எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுவும் போக்கிரி பொங்கல் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

வி.சா: ஆமாம் நீங்க கூட ரவுடியா நடிச்சி கடைசில பார்த்தா NCCல முதல் ப்ரைஸ் வாங்கன மாதிரி காண்பிச்சாங்களே அந்த படம் தானே. எனக்கு கூட ரொம்ப பிடிக்கும்.

வி: ஏய்!!! அது NCC இல்லை போலிஸ்.

வி.சா: நிஜமாவா? உங்களை அந்த ட்ரெஸ்ல பார்க்க NCC மாதிரி தான் இருந்துச்சு. எதுக்கும் கீழ இது NCC பெரெட் இல்லைனு எழுதியிருந்தா தெளிவா பார்த்திருக்கலாம். சரி, அழகிய தமிழ் மகன் படம் நடிக்க எப்படி ஒத்துக்கீட்டீங்க?

வி: எவ்வளவோ கேவலமான படம் பண்ணீட்டீங்க இதை பண்ண மாட்டீங்களானு என்கிட்ட டைரக்டர் கேட்டாரு. அவர் அப்ரோச் எனக்கு ரொம்ப பிடிச்சி போச்சு. அதான் நடிச்சேன்.

வி.சா: கேக்கவே இண்ட்ரஸ்டிங்கா இருக்கு. அப்பறம்?

வி: மக்களும் என்னோட எவ்வளவோ (மட்டமான) படத்தை பாத்திருக்காங்க இதை பார்க்கமாட்டாங்களானு பார்த்தேன். ஏமாத்திட்டாங்க.

வி.சா: உங்களோட அடுத்த படத்துல என்ன ரோல் பண்ண போறீங்க?

வி: சூப்பர் ஸ்டார் நடிகரா அடுத்த படத்துல வர போறார்னு தெரிஞ்சதும் நானும் என் ரியல் லைஃப் கேரக்டர்ல நடிக்கலாம்னு இருக்கேன்.

வி.சா: அது என்ன ரோல்?

வி: என்னங்க பொங்கல் அதுவுமா விளையாடறீங்க? டாக்டர் ரோல் தான்.

வி.சா:ஓ... அதுல என்ன பஞ்ச் டைலாக் பேசுவீங்க?

வி: கையில் அருவாளுடன்
"ஆயிரம் பேரை கொன்னா அரை வைத்தியன்
நான் முழு வைத்தியண்டா" (ஹை பிச்சில் சொல்கிறார்)

வி.சா: (மனதிற்குள் : இது வரைக்கும் உங்க படம் பார்த்து செத்தவங்க லிஸ்ட் எடுத்தா உங்களுக்கு நாலஞ்சி டாக்டர் பட்டம் கொடுக்கலாமே)

Monday, January 14, 2008

எழுதிக் கிழிச்சது :-)

எல்லாருக்கும் என் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்!!!

வர வர வெறும் விளம்பர பதிவு மட்டும் போட வேண்டிய நிலைமைக்கு வந்துட்டேன். ஒரு வேளை பழம் பெரு(று)ம் பதிவராயிட்டனோனு எனக்கே ஒரு சந்தேகம் வந்துடுச்சி. சரி மொக்கை போடாத, மேட்டருக்கு வானு சொல்றீங்களா? அதுவும் சரிதான்.

நம்ம சர்வேசனுக்கு ஏதாவது புதுசா பண்ணிட்டே இருக்கனும் போல. நச் கதைக்கு அடுத்து ஒரு விளையாட்டை ஆரம்பிச்சி வெச்சிட்டார். எழுதியதில் பிடித்ததாம். ஒரு தாய்க்கு எப்படி தன்னோட எல்லா பிள்ளைகளும் பிடிக்குமோ அது போல ஒரு எழுத்தாளனுக்கு தன்னோட எல்லா படைப்புகளும் பிடிக்குமாம். நான் எழுத்தாளன் இல்லை என்பதனால் எனக்கு இந்த விதி ஒத்துவராது ;)

தல சிவிஆர் 2007ல அவர் எழுதன பதிவுல பிடிச்ச பதிவ போட்டிருக்கார். ஆனா நான் 2007ல 100 பதிவு எழுதியிருந்தாலும் சொல்லிக்கிற மாதிரி ஒண்ணு கூட எழுதலங்கறது தான் உண்மை. அதனால இதுவரை நான் எழுதனதுல எனக்கு பிடிச்ச பதிவ மட்டும் சொல்றேன் ;) (டார்டாய்ஸை சுத்த ஆரம்பிக்கிறேன்)

ஒரு காலத்துல நான் அதிகமா எழுதனது நகைச்சுவை (மாதிரி) பதிவுகள் தான். அதுக்கு அதிகமா பயன்படுத்துனது கவுண்டர் தான். ஒரு வேளை நம்ம கேரக்டருக்கு அவர் தான் அதிகமா ஒத்துவரார்னு நினைக்கிறேன். முதல்ல நமக்கு நகைச்சுவையா எழுத வருமானு ரொம்ப யோசிச்சி எழுதனது கரகாட்டக்காரனோட உல்டா "கவுண்டர், செந்தில் இணைந்து கலக்கும் கம்ப்யூட்டர்காரன்!!! ".

இதுக்கு வரவேற்பு அதிகம் கிடைச்ச உடனே கோழியின் அட்டகாசம் ஆரம்பிச்சாச்சி. அதுக்கும் நல்ல வரவேற்பு கிடைச்சுது. அப்படியே டெவில் ஷோ, லொள்ளு, ஆர்குட் அலும்பல்கள்னு நிறைய நகைச்சுவை (மாதிரி) பதிவுகள் எழுதினேன். ஆனா இது எல்லாத்தையும் விட இன்னைக்கு வரைக்கும் எனக்கு பிடிச்ச என்னோட நகைச்சுவை பதிவு "கவுண்டரும் கடையேழு வள்ளல்களும் தான"

அப்படியே நகைச்சுவை பதிவுல இருந்து கதைக்கு தாவினேன். முதல் கதை கொல்ட்டி. இன்னைக்கு வரைக்கும் நிறைய பேருக்கு நான் எழுதனதுல பிடிச்ச கதை இது தான். ஆனா அதிகம் ஃபார்வேர்டான கதை தூறல். பதிவுலகுல நிறைய பேர் பாராட்டின கதை தீயினால் சுட்ட புண். அதுல வர கரிக்கை சோழி இன்னைக்கு வரைக்கும் எனக்கு பிடிச்ச பேர். இந்த வருஷம் H-4, முட்டாப்பய எல்லாம் எழுதியிருந்தாலும் எதுவும் ரொம்ப பெருசா எனக்கு பிடிக்கல :-)

நெல்லிக்காய்-
இந்த தொடர் ஒரு காலத்துல ரொம்ப விரும்பி எழுதனது. லிப்ட் ப்ளிஸ் - எனக்கு மிகவும் பிடித்த க்ரைம் தொடர். நிறைய பேருக்கு இந்த கதை புரியல. அதுவே ஒரு சக்ஸஸ் தான் ;)

அப்பறம் வித்யாசமான பதிவு எழுதறது எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் எழுதன வித்யாசமான விளம்பர பதிவு இது. தேன்கூடுல ஒரு போட்டில என் படைப்புக்கு நான் கொடுத்த விளம்பரம் இது - அதிசய எண். அதே மாதிரி நடிகர் திலகத்து நினைவு தினத்துக்கு எழுதின பதிவு இது - நடிப்பு கடவுள். அதே மாதிரி இந்த குத்து பாட்டை கண்ணன் பாட்டாக்கியதும் ;)

அடப்பாவி ஏதாவது ஒண்ணு சொல்லுடானு சொன்னா அநியாயத்துக்கு அலம்பல் பண்றையேடானு சொல்றீங்களா? சரி நான் எழுதனதுலயே எனக்கு ரொம்ப பிடிச்ச பதிவு இது தான்...

"புது வெள்ளம்"

ஏன்னு நீங்களே படிச்சி தெரிஞ்சிக்கோங்க...

சரி நான் 5 பேரை கூப்பிடனுமாம்... இதோ என் லிஸ்ட்

1. லக்கி லுக்
2. தேவ்
3. குமரன்
4. அரை பிளேடு
5. கொத்ஸ்

Friday, January 11, 2008

குமரனின் புல்லாகி பூண்டாகி - என் எண்ணங்கள்

புல்லாகி பூண்டாகி - நான் ரொம்ப நாளைக்கப்பறம் படிக்கிற ஆன்மீக புனைவு!. இது இந்த கதைக்கான விமர்சனமல்ல. என் எண்ணங்கள். அவ்வளவே!!!

புல்லாகி, பூடாய், புழுவாய், மரமாகி
பல்விருகம் ஆகி, பறவையாய், பாம்பாகி,
கல்லாய், மனிதராய், பேயாய், கணங்களாய்
வல் அசுரர் ஆகி, முனிவராய் தேவராய்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்

என்ற மாணிக்கவாசகரின் பாடல் தான் கதையின் கரு.

கலியுகத்தில் திருவண்ணாமலையில் தொடங்கும் கதை நம்மை துவபரயுகத்து கண்ணனிடம் அழைத்து சென்று, அங்கிருந்து பழனி மலையில் குமரனின் நவபாஷான சிலை உருவாவதை அருகிலிருந்து பார்க்கும் பேற்றை கொடுத்து, பெரிய கோவில் கும்பாபிஷேகத்திற்கு அழைத்து சென்று பிறகு கிருஷ்ண பஜனில் பங்கெடுக்க வைத்து அங்கிருந்து பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரை தரிசிக்கும் பேற்றை கொடுத்து மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே கொண்டு வந்துவிடுகிறது.

புல்லாகி பூண்டாகி என்ற தலைப்பே கதையை ஓரளவு விளக்கிவிடுகிறது.

பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றானதும் மலையே இறைவனின் திருமேனி என்று புகழ்பெற்றதுமான திருவண்ணாமலையின் சிறப்புகளை சொல்லி ஆரம்பிக்கிறது கதை.

பொதுவா எனக்கு கோவிலுக்கு போனா அவசரம் கூடாது. பொறுமையா நிதானமா பார்த்துட்டு வரணும். பத்து கோவிலுக்கு வேக வேகமாக செல்வதைவிட ஒரு கோவிலில் அமைதியாக சாமி கும்பிடலாம்னு நினைக்கிற ஆள். இந்த கதையை ஆரம்பிச்சப்ப எனக்கு அது தான் பிரச்சனை, வேகமா ப்ளைட் பிடிக்க போற மாதிரி கோவிலை விட்டு வந்த மாதிரி இருக்கு.

தல வரலாறு (தலயோட வரலாறு படம் இல்லைங்க) கதையா மாறிடுமோனு ஒரு பயத்துல கூட இதை செஞ்ச மாதிரி தெரிஞ்சிது. ஆனா இந்த மாதிரி கதைகள்ல வாசகர்களுக்கு ஆயிரம் கதை கேட்டாலும் அலுக்காது என்றே தோன்றுகிறது. கோவிலை இன்னும் பொறுமையாக சுற்றி காண்பித்திருக்கலாம். ஃப்ளாஷ் பேக் போகற வரைக்கும் ஒரு பதட்டம் தெரிஞ்சது. ஆனா ஃப்ளாஷ் பேக்ல அந்த பதட்டம் போய் நிதானம் வந்து அருமையாக பயணிக்க தொடங்கியது. அதை எப்படி இணைக்க போகிறார் என்று தெரிந்திருந்தாலும் எப்பொழுது இணைக்க போகிறார் என்ற ஒரு தவிப்புமிருந்தது உண்மையே (இன்னும் எத்தனை பிறவியப்பானு) .

கதை ஒரு விதத்துல பக்தி மார்க்கத்திற்கு முக்கியத்துவம் தருவதாக இருக்கிறது. எனக்கும் அது தான் பிடிச்சதுங்கறதால ஒட்டுதல் ஏற்பட்டுச்சு. அதே சமயம் ராம கிருஷ்ணரோட அருளுரை கேட்கலாம்னு ஆவலோட இருந்த எனக்கு அது கிடைக்காதது ஒரு விதத்துல ஏமாற்றமே :-( (ஆனா அவரை அருகிலிருந்து பார்க்கும் வண்ணம் எழுதியதற்கு என் பாராட்டுக்கள்)

என் மனதில் எழுந்த பல கேள்விகளில் முக்கியமானவற்றை கந்தன் அந்த தத்தாவிடம் கேட்டதும் ஒரு விதத்தில் என்னை திருப்தி படுத்தியது. அதில் முக்கியமானவை
"பாகவதத்தைச் சுகர் வாயாலேயே கேட்ட எனக்கு ஏன் தாத்தா அப்பவே முக்தி கிடைக்கலை?",

"தாத்தா. வந்த கனவு எல்லாம் இந்தியாவுல தான் நடந்ததா இருக்கு. இதெல்லாம் நான் படிச்ச கதைங்களை என் மனசு கனவுங்களா ஏன் காமிச்சிருக்கக் கூடாது? இதெல்லாம் என்னோட முந்தையப் பிறவிங்கன்னா நான் வெளிநாட்டுல பொறக்கவே இல்லையா?"


"அப்ப ஏன் அதெல்லாம் என் கனவுல வரலை?"

"உனக்கு இந்தப் பிறவியில எது புரியுமோ அது மட்டும் தான் வந்திருக்கு. சவுத் அமெரிக்கா பிறவியும் கொஞ்சம் கனவுல வந்தது. ஆனா உனக்கு நினைவில்லை. ஏன்னா அது உனக்குப் புரியலை"

கதையை முடித்த விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதே போல் அவர் தேர்வு செய்த படங்களும் அருமை.

குமரன், அடுத்த கதைக்கு கதையோட ஓட்டத்தை ஒரு முறைக்கு இரு முறை யோசித்து ஆரம்பித்தால் கதை பட்டையை கிளப்பும் என்பது என் எண்ணம் (ஃப்ளாஷ் பேக்கும், நிகழ் காலமும் ஒன்றாக கொண்டு சென்று ஒரு புள்ளியில் இணைத்திருக்கலாம் என்பது என் எண்ணம்)... சரி சீக்கிரமே நெக்ஸ்ட் கதைல மீட் பண்ணலாம் ;)

கதையை படிக்க தவறியவர்கள் இங்கே சொடுக்கவும்

பட்டையை கிளப்பும் டிபிசிடி

என்னடா இதுனு பாக்கறீங்களா? இந்த வாரம் வலைச்சரத்தை தொடுக்கிறார் TBCD. இவர் தொடுக்கும் சரம் எல்லாம் பட்டையை கிளப்புது. இந்த வாரம் முழுக்க அவர் கொடுத்த லிங் மட்டும் தான் படிச்சிட்டே வரேன் (பாதி பதிவு வழக்கம் போல புரியல). அருமையா பண்ணிட்டு வரார்... பாராட்டுக்கள் (பாராட்டணுமா இல்லை நல்ல பதிவுகள் லிங் தரார்னு நன்றி சொல்லனுமா? :-/)

எதுக்கும் நீங்களும் ஒரு எட்டு போய் பார்த்துட்டு வந்திடுங்க... இங்க கிளிக்குங்க

Thursday, January 10, 2008

மறுபடியும் Fake

Fake போடறது எப்படினு ஒரு தொடர் ஆரம்பிச்சி பாதியிலே நிறுத்தியாச்சி. அதை தொடரலாம்னு யோசிக்கும் போதே கண்டிப்பா அதை எழுதி தான் ஆகனுமானு மனசுல ஒரு கேள்வி வந்துச்சு. ரொம்ப பழக்கமானவங்க எல்லாம் வந்து வேண்டாம்பானு சொன்னதுக்கப்பறமும் எழுதறது ஒரு மாதிரி தான் இருக்கு.

சரி எதுக்கு இவ்வளவு சிந்திச்சிட்டு, ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி இந்த மாதிரி வேலைல சேர்ந்த என் நண்பர்கள் ஒரு சிலருக்கு ஃபோன் பண்ணி கேட்டுடலாம்னு முடிவு பண்ணி ஃபோன் பண்ணேன். அதை கேட்டதும் எல்லாருமே சொன்னது "வேண்டாம்டா... எழுதாத".

ஏண்டா இப்படி சொல்றீங்கனு கேட்கும் போது தான் அவுங்க பட்ட கஷ்டமெல்லாம் சொல்ல ஆரம்பிச்சாங்க. முதல் நாள்ல இருந்து பிரச்சனை தான். ஏதாவது ஒன்னு தெரியுமானு கேட்டா, அது நம்ம ஃபேக் போட்ட ப்ராஜக்ட்ல வேல செஞ்சிருந்தா தெரிஞ்சிருக்கனுமா இல்லை சும்மா தெரியுமானு கேக்கறாரானு தெரியாது.

இதுவே செத்து செத்து பிழைக்கிற மாதிரி தான் இருக்கும். அடுத்து ஏதாவது டீம் லஞ்ச்னு போனா அங்க யாராவது நீங்க முன்னாடி எந்த கம்பெனில வேலை செஞ்சிங்க? அங்க இவரை தெரியுமா அவரை தெரியுமானு கேட்கும் போதெல்லாம் திக் திக்னு இருக்கும்.

வேலை கிடைச்சிடுச்சினு வீட்ல எல்லாம் பெரிய பெரிய ப்ளான் போடும் போதும் திக் திக்னு இருக்கும். ஏதாவது இன்சூரன்ஸ் எடுக்கலாம்னு வீட்ல சொல்லும் போது அடுத்த மாசமே நம்ம மாட்டிக்கிட்டு வேலை போயிடுச்சினா என்ன பண்றதுனு யோசிச்சி வேண்டாம்னு சொல்லும் போது அப்பா, அம்மாக்கு காரணம் சொல்றதும் ரொம்ப கஷ்டம். அது இல்லாம இது வெளிய தெரிஞ்சிடுச்சினா சொந்தக்காரவங்க எல்லாம் என்ன பேசுவாங்களோனு ஒரு பயம் இன்னும் இருக்க தான் செய்யுது. சில சமயங்கள்ல கனவுல கூட வந்திருக்கு.

நாளாக நாளாக இந்த பயம் மறைஞ்சாலும் இன்னும் கொஞ்சம் ஒட்டிக்கிட்டு தான் இருக்குது. வீட்ல கல்யாண பேச்சு அடிபடும் போது கூட "ஐயய்யோ இப்ப மாட்டிக்கிட்டா எல்லாருக்கும் தெரிஞ்சிடுமேனு" பயத்துல இன்னும் ரெண்டு வருஷம் தள்ளி போகட்டும்னு சொல்ல வேண்டியதா போகுது. இப்ப கல்யாணம் பண்ணிக்கிற ஐடியா இல்லை தான். இருந்தாலும் இந்த பயம் வந்து மனசுல உக்காருவதை தவிர்க்க முடியல. இன்னும் ஒரு ரெண்டு வருஷம் எக்ஸ்பீரியன்ஸ் சேர்ந்துட்டா வேலை போனா கூட ஈஸியா வேலை வாங்கிடலாம்னு தோணுது.

எல்லாரும் பண்றாங்களேனு கூட்டமா சேர்ந்து பண்ணதுதான். ஆனா இப்ப ஒரு ஸ்டேடஸ் வந்ததுக்கப்பறம் பயம் வந்து ஒட்டிக்கிட்டே தான் இருக்கு. கீழ நிக்கிறப்ப விழுந்தா பிரச்சனையில்லை. ஏணில ஏறிட்டு இருக்கும் போது எல்லாரும் நம்மல பார்க்கும் போது விழுந்தா ரொம்ப அசிங்கம் தானே?

நீ கேட்டியேனு தான் இவ்வளவும் சொல்றோம், வெளில பார்க்க சந்தோஷமா இருக்காங்களே அதனால நல்லா தான் இருக்காங்கனு நினைச்சிடாத. இன்னும் நிறையா இருக்கு...

எது எப்படியோ, நீ இதை பத்தி எழுதாத. அவ்வளவு தான்...

..................................

ஹிம்ம்ம்ம்... இதுக்கு மேல என்ன சொல்லறதுனு புரியாம தான் இருக்கேன்!!!

Friday, January 04, 2008

பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல் - 9

ஆம்பலில் இதுவரை..

சிறில் அலெக்ஸ் எழுதிய முதல் ஆம்பல்
லக்கிலுக் எழுதிய இரண்டாவது ஆம்பல்
வினையூக்கி எழுதிய மூன்றாவது ஆம்பல்

ஜிரா எழுதிய நான்காவது ஆம்பல்
ஜி எழுதிய ஐந்தாவது ஆம்பல்
தம்பி எழுதிய ஆறாவது ஆம்பல்
கப்பி எழுதிய ஏழாவது ஆம்பல்
தேவ் எழுதிய எட்டாவாது ஆம்பல்"ஏ அஞ்சலி! நம்ம பானு வரதுக்கு லேட் ஆகுமாம் எப்பவும் போல ஏணியை இறக்கி வெச்சிடு" சொல்லி கொண்டே அஞ்சலி அருகில் சாப்பாட்டு தட்டுடன் அமர்ந்தாள் மீனா.

"மகராணி எங்க போயிருக்காங்க?"

"அவ சுரேஷோட ஷாப்பிங் போனாளாம். அப்படியே படத்துக்கு போயிட்டு வரலாம்னு போயிட்டாங்களாம்"

"அது என்னடி படிக்கும் போதே படம் கிடம்னு சுத்திட்டு இருக்கா?"

"ஏய்! நீ ஏன் இப்படி சீன் போடற? அவ லவ் பண்றா, படத்துக்கு போறா. இதுல என்ன இருக்கு? சுரேஷும் ரொம்ப நல்ல பையன் தான்"

'சுரேஷ் நல்ல பையனு இவ எனக்கு சொல்றா' மனதிற்குள் சொல்லி கொண்டாள்

"சரி அப்ப நீயே ஏணியை இறக்கி வெச்சிடு. நான் லைட் ஆஃப் பண்றதுக்குள்ள தூங்கிடுவேன். அதுவுமில்லாம இந்த வார்டனுக்கும் எனக்கும்

நேத்து தான் சண்டை"

"செல்லம் இல்லை. எனக்காக இதை செஞ்சிடு அஞ்சலி. கார்த்திக் ராத்திரி ஃபோன் பண்றனு சொல்லிருக்கான்பா. ப்ளீஸ்"

"யாரு அந்த கெமிக்கல் கார்த்தியா? எக்கேடோ கெட்டு போ!"

"ஏணி எடுத்து வெச்சிடற இல்லை? சரியா ஒரு மணிக்கு எல்லாம் எடுத்து வெச்சிடுடா. ப்ளீஸ்"

"சரி"

ஒரு மணி வரை என்ன செய்வதென்று புரியாமல் அடுத்த அறைக்கு சென்றாள் அஞ்சலி. அங்கே லதாவின் பழைய டைரி அவள் படுக்கை மேல்

கிடந்தது. அவள் வரும் வரை அவளுக்கு தெரியாமல் படிக்க ஆரம்பித்தாள் அஞ்சலி. காலேஜ் முதல் நாள்

"எங்க க்ளாஸ்ல ஆறே பொண்ணுங்க தான்.
Anita - மெட்ராஸ் பொண்ணு. எதுக்கெடுத்தாலும் இங்கிலீஷ்லயே பேசறா
Anjali - விழுப்புரம் பக்கத்துல ஒரு ஊர். பேர் மறந்து போச்சு. ரொம்ப நல்ல பொண்ணு. நல்லா பேசறா
Meena - இவ ஊர் சேலம். வாய திருந்தா மூடவே மாட்டா போல தெரியுது.
Banu - இவ மதுர பக்கத்து பொண்ணு. இன்னைக்கு முழுக்க அமைதியா இருந்தா.
Archana - இவ ஊரு திண்டுக்கல். இன்னும் இவக்கிட்டயும் பேசல.

ஸ்கூல்ல இருந்த மாதிரி எங்க எல்லாரோட பேரையும் சேர்த்து குருப்பா ஒரு பேர் வைக்கனும். என்ன வைக்கலாம்?

ஹிம்ம்ம்... எல்லாரோட முதல் எழுத்தையும் சேர்த்து பார்க்கலாம்.
AAMBAL கரெக்ட்- "ஆம்பல்"

"வேங்கையும் பூங்கொடி"ல படிச்ச பூ...

"ஆம்பல் பூத்த
அதரங்கள் நெகிழ
அன்றைய கடமைகள்
ஆற்ற வந்தாள்."

.....................................................

"இங்க பாருப்பா சுரேசு.. உங்க ஐயாரு கண்டிப்பா சொல்லிட்டாக நீ அவுக தங்கச்சி புள்ளய தான் கட்டிக்கனுமாம்"

"அம்மா உனக்கு எத்தனை முறைமா சொல்றது. அவுக ரொம்ப வசதியான இடம். அந்த பொண்ணும் நிறையா படிச்சிருக்கு. என்

உத்யோகத்துக்கு அதெல்லாம் ஒத்து வராதுமா"

"இங்க பாரு. அவக தங்கச்சி தான் இதை பத்தி உங்க அயாருக்கிட்ட பேசிருக்காங்க. பொட்ட புள்ள என்ன படிச்சா என்ன? வேலைக்கா போக

போகுது. உன் கூட நல்லா குடும்பம் நடத்துவாய்யா. நீ எதுவும் பயப்படாத"

"அம்மா. எனக்கு என்னுமோ இது சரியாப்படல. மெட்ராஸ்ல படிக்கிற புள்ள. அதுவுமில்லாம என் உத்யோகம் வேற ஒரு மாதிரி. எப்ப

வீட்டுக்கு வருவேன், எப்ப போவேனு எனக்கே தெரியாது"

"அதெல்லாம் நீ ஏண்டா பயப்படற. கயலு ரொம்ப தங்கமான பொண்ணு. உன்னைய நல்லா வெச்சி பார்த்துக்குவா"

"எதுக்கும் நீயே ஒரு தடவை பேசி பாரும்மா"

"அவளுக்கு நீயே வேணும்னா ஃபோன் பண்ணி கேட்டுக்கோ. உங்க ஐயா அந்த காலெண்டர்ல அவ நம்பர் எழுதி வெச்சிருக்காரு. அப்பறம்

ஃபோன் பண்ணி கயல்னு கேக்காத லதானு கேளு"

"தெரியும்மா..."

(தொடரும்...)
.....................

இதை ஆன்மீக முற்போக்குவாதி(???) KRS தொடருவார்...