தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்
Showing posts with label tortoise. Show all posts
Showing posts with label tortoise. Show all posts

Friday, September 16, 2011

வெட்டிப் பேச்சு - 09/16/2011

2011ல் ஒரு பதிவு கூட இன்னும் எழுதலயேனு தோணுச்சு. சரி எப்பவும் போல ஏதாவது ஒரு மொக்கைப் பதிவு எழுதி ஜீப்ல ஏறிடுவோம்னு முடிவு பண்ணியாச்சு.

.....

நியூ யார்க் அளவிற்கு ஜார்ஜியாவில் வேலைப் பளு இல்லை. அதே போல அங்கு இருந்து அளவிற்கு கட்டுப்பாடும் இல்லை. ஓரளவு ஜாலியாவே வாழ்க்கை போகுது.

நியூ யார்க் விட்டு நாம வந்த நேரம், நில அதிர்வு, புயல், வெள்ளம்னு அங்க நிறைய லீவ் போல. ங்கொய்யாலே, அவன் அவன் கரண்ட் இல்லாம கஷ்டப்பட்டா நீ ஜாலியா லீவு கிடைக்கலையேனு ஃபீல் பண்றியானு நீங்க திட்டலாம். என்ன பண்ண, மழைப் பெஞ்சா பள்ளிக் கூடம் லீவ்னு கொண்டாடியே பழக்கப் பட்டாச்சு.

அதுவும் நான் பத்தாவது படிக்கும் போது (1997) கடலூர்ல அடிச்ச புயல்ல என் அரையாண்டு பரிட்சையே ஒரு மாசம் தள்ளி போச்சு. சாப்பாடு போட முடியாம ஹாஸ்டல்ல இருந்து எல்லாரும் ஊருக்கு போங்கனு சொல்லிட்டாங்க. கஷ்டப்பட்டு பஸ் புடிச்சி போனோம். கண்ணு முன்னாடியே ரோடெல்லாம் அடிச்சிட்டு போச்சு. பாலம் எல்லாம் உடைஞ்சி, சூப்பரா இருந்துச்சு.

.....

பள்ளிக் கூடம்னு சொல்லும் போது தான் ஞாபகம் வருது. சம்ச்சீர் கல்வி எல்லாம் நாம படிக்கும் போதே வந்திருக்க கூடாதானு ஒரே ஏக்கம். மூணு மாசமா பசங்க ஜாலியா ஸ்கூலுக்கு போயிட்டு எதுவும் பாடம் படிக்காம, ஜாலியா கதை பேசிட்டு, அரட்டை அடிச்சிட்டு வந்தாங்களாம்.

ப்ளாக் எல்லாம் படிச்சி ஒரு சமுதாய புரட்சியாளரா உங்களுக்கு கோபம் வரலாம். ஆனா நான் ஸ்கூல் படிக்கும் போது இப்படி இருந்தா ஜாலியா இருந்திருப்பேன். சமச்சீர் வேலை நான் இந்தியா வந்த பிறகு நடக்கணும்னு திருப்பதி பாலாஜியை வேண்டியிருக்கிறேன். பார்க்கலாம்.

......

போன முறை இந்தியா வந்த பொழுது நல்ல படியாக கிரஹப் பிரவேசம் முடிந்தது. வீடு வாடகைக்கு விட்டு வந்தது மட்டும் தான் ஒரு வருத்தம். எப்படியும் ஆறு மாதத்தில் கோவை வந்து செட்டிலாக வேண்டும். பார்க்கலாம்.

......

விஜய் டீவி புகழ் சிவகார்த்திகேயன் சினிமாவில் கதாநாயகனாக நடிக்கிறார் என்று கேள்விப்பட்டேன். சிவா மனசுல சக்தி மாதிரி படங்கள் அவருக்கு நன்றாக செட் ஆகும் என்பது என் எண்ணம். டீவியில் காம்பயரிங்கை நிறுத்தி அவர் சினிமாவில் சீரியசாக முயற்சி செய்தால் ஓரளவு சமாளிக்க முடியும் என்று நினைக்கிறேன். இல்லைனா தெலுகுல சித்தார்த் நடித்த படங்கள் கூட இவருக்கு செட் ஆகும்.

இப்ப உன்கிட்ட யார் கேட்டானு நீங்க நினைக்கலாம். ஏதோ சொல்லணும்னு தோணுச்சு அவ்வ‌ள‌வு தான்.

......

இந்த பதிவு எழுத பத்து நிமிஷம் கூட ஆகலை. "ஆமா இவர் பெரிய காவியம் எழுதிட்டாரு, அப்படியே ஃபீல் பண்றாரு. இதுக்கு பத்து நிமிஷமே அதிகம்"னு நீங்க நினைக்கலாம். ஆனா மாரல் ஆஃப் தி ஸ்டோரி என்னனா, இப்படி வாரத்துல ஒரு பத்து நிமிஷமாவது இந்த வலைப்பதிவுக்கு ஒதுக்கலாம்னு ஒரு முடிவு பண்ணிருக்கேன். பார்க்கலாம்.

Sunday, July 05, 2009

கசினோவில் காசு சம்பாதிப்பது எப்படி?

வெட்டிப்பேச்சு பேசி ரொம்ப நாளாச்சு.

முதல் காரணம், வாழ்க்கைல பெருசா இண்டரஸ்டிங்கா எதுவும் நடக்கவில்லை. இந்தியாவில் இருந்தா நிறைய விஷயங்கள் இருக்கும். இங்கு மொனொடானஸாக வாழ்க்கை இருப்பதால் பெரிதாக பகிர்ந்து கொள்ள எதுவுமில்லை. அடுத்த மாதம் எப்படியும் பர்மிதா பாப்பா இங்கே வந்துவிட்டால் கொஞ்சம் சுவாரசியமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

..............

இந்த ஆறு மாசத்துல நிறைய தடவை கசினோ சென்று வந்துவிட்டேன். அதிகமாக காசு தேத்தவில்லை என்றாலும் பெரிதாக எதுவும் இழக்கவுமில்லை. அங்க எனக்கு பிடித்த விஷயமே அந்த டென்ஷன் தான்.

நான் ரோலே மட்டும் தான் விளையாடுவேன். அதுவும் அவுட்டர்ல வைக்க மாட்டேன். உள்ளே நம்பர்களில் தான் வைப்பேன். ஆனா பல தடவை அவுட்டரில் நான் சொல்லியது வந்துவிடும். குறிப்பாக எந்த பனிரெண்டில் வரும் என்பது. ஒண்ணு வெச்சா மூணு :)

நான் விளையாடும் போது நடந்த சில சுவாரஸியங்கள். நம்ம லிமிட் எப்பவும் இருநூறு டாலர் தான். அதுக்கு மேல நிச்சயம் விளையாட மாட்டேன். ஒரு தடவை நான் விளையாடிட்டு இருக்கும் போது ஒரு வயசான தாத்தா வந்து பக்கத்துல நின்னு ஒரு ரெண்டு ஆட்டம் பார்த்தாரு. அப்பறம் ரெண்டாயிரம் டாலருக்கு சிப் வாங்கினாரு. எல்லாமே ப்ளாக் (100$) சிப். அதை அப்படியே நம்பர்ல பிரிச்சி வெச்சாரு. ஒரு சில நம்பர்ல ஒரு சிப், ஒரு சில நம்பர்ல ரெண்டு சிப் வெச்சாரு.




விளையாட்டு தெரியாதவங்களுக்கு இங்க ஒரு விஷயம் சொல்லிடறேன். ரோலேல மொத்தம் முப்பத்தி எட்டு நம்பர் இருக்கும். 0, 00, 1-36. இதுல நம்பர்ல வெச்சி, வந்ததுனா ஒரு சிப்க்கு முப்பத்தி ஆறு தருவாங்க (வெச்சதையும் சேர்த்து). Odd, Evenல வெச்சா ஒரு டாலருக்கு ரெண்டு. 0-12, 13-24, 24-36ல வெச்சா ஒரு டாலருக்கு மூணு டாலர். அப்படி எல்லாம் Probability பேஸ் பண்ணி தான்.

இப்ப அவர் இருபது சிப் வாங்கி சில, பல நம்பர்ல வெச்சாரு. கடைசியா சுத்தறதுக்கு முன்னாடி, முப்பத்தி அஞ்சில இருந்த ஒரு சிப் எடுத்து முப்பத்தி நாலுல மாத்தினாரு. முப்பத்தி நாலுல ஏற்கனவே ஒரு சிப் வெச்சிருந்தாரு. இப்ப முப்பத்தி அஞ்சில எந்த சிப்பும் இல்லை. முப்பத்தி நாலுல இருநூறு டாலர் சிப். நான் எப்பவுமே முப்பத்தி நாலுல ஒரு நாலு, அஞ்சி வைப்பேன்.

அவர் முப்பத்தி அஞ்சில இருந்து எடுத்து வெச்சவுடனே எனக்கு டென்ஷன் அதிகமாகிடுச்சி. இப்ப முப்பத்தி அஞ்சில எந்த சிப்புமே இல்லை. சரினு கடைசி நேரத்துல நான் ஒரு ரெண்டு சிப் எடுத்து முப்பத்தி அஞ்சில வெச்சேன்.

அவர் என்னை பார்த்து சிரிச்சிட்டு, May be I am wrongனு சொன்னாரு. எனக்கும் முப்பத்தி நாலுல வந்தா சந்தோஷம் தான். எல்லாருமே செம டென்ஷன். கடைசியா பார்த்தா முப்பத்தி..... நாலு வந்துடுச்சி... ஒரே கொண்டட்டம் தான். இப்ப அவருக்கு ஏழாயிரம் டாலர் கொடுத்தாங்க.

மறுபடியும் சிங்கம் ரெண்டாயிரம் டாலரோட களம் இறங்குச்சு. மறுபடியும் நிறைய நம்பர்ல ஒரு சிப், சில நம்பர்கள்ல ரெண்டு சிப். அந்த தடவை அவர் ஒரு நம்பர்ல வெச்சிருந்தது வந்துச்சு. இப்ப மூவாயிரத்தி ஐநூறு டாலர் ஜெயிச்சாரு.

அடுத்து மறுபடியும் களம் இறங்கினாரு. இந்த தடவை எதுவும் ஜெயிக்கல. உடனே ஒரு இருநூறு டாலர் டிப் கொடுத்துட்டு கிளம்பிட்டாரு. நான் திக்கி, திணறி நானூறு டாலர் தான் ஜெயிச்சேன்.

இது நடந்தது Foxwoodsல.

..............

போன மாசம் நண்பனை பார்க்க Delaware போயிருந்தேன். உடனே அடுத்த நாள் Atlantic City போகலாம்னு முடிவு பண்ணோம். ஒரு தடவை Atlantic Cityக்கு போய் பயங்கர கஷ்டப்பட்டோம். ஆனா அந்த தடவை மூணு ஆட்டம் தான் ஆடினோம். மூணு தடவையும் ஜெயிச்சோம். அது 0-12, 13-24, 24-36ல வெச்சி ஜெயிச்சது. சீசர்ஸ் காசினோல.

இந்த தடவை தாஜ் மகால் கேசினோ போனோம். மூணு பேரா போனதால விளையாடக்கூடாதுனு முடிவு பண்ணிருந்தேன். ஏன்னா மூணு பேர் போனா விளங்காதுனு ஒரு செண்டிமெண்ட். ஒரு தடவை அப்படி போய் இருநூறு டாலரும் போச்சு. ஆனா உள்ள போனவுடனே என் கண்ணு வழக்கம் போல ரோலே டெபில்ல, முன்னாடி ஜெயிச்ச டேபில் நம்பர் எல்லாத்தையும் நோட் பண்ண ஆரம்பிச்சிடுச்சு. அதுல ஒரு டேபில்ல எல்லாமே என் நம்பர் தான். நான் எப்பவும் சில குறிப்பிட்ட நம்பர்கள்ல வைப்பேன். அதே நம்பர்ஸ் வந்திருந்தது. உடனே நண்பன்ட ஒரு நூறு டாலர் கடன் வாங்கி களம் இறங்கினேன்.

முதல் ரவுண்ட், 0 வந்து ஆப்பு அடிச்சிது. ஆஹா... ஆரம்பமே அசத்துதேனு தோணுச்சு. ஆனா அன்னைக்கு என்னுமோ நாம இன்னைக்கு நிச்சயம் பணம் விட மாட்டோம்னு மனசுல தோணுச்சு. சரினு அடுத்த ரவுண்ட். மறுபடியும் 0. நிச்சயம் ஆப்பு தானு முடிவாகிடுச்சி. அடுத்து பதினெட்டு. இதுக்கு முன்னாடி நான் இருநூறு தோக்கும் போதும் கடைசியா முடிச்சி வெச்சது பதினெட்டு தான். நூறு டாலர் அவுட். தாஜ் மகால் ராசி இல்லை. ஏன்னா அது அழுவாச்சி மஹால்னு அப்ப தான் தோணுச்சு.

சரி, விட்றா சண்முகம்னு சீசர்ஸ்க்கு கிளம்பினோம். சீசர்ஸ்ல ஏற்கனவே ஜெயிச்ச ஹிஸ்டரி இருக்கு. ஆனா மூணு பேர்ல விளையாடணும்னு வந்த ரெண்டு பேரும் வேடிக்கை மட்டுமே பார்த்துட்டு வந்தாங்க. சரி ஏழுரையை எவ்வளவு நேரம் தான் நாமலே சுமக்கறதுனு அவுங்களை களம் இறங்க சொன்னேன். ஒரு நண்பன் சீசர்ஸ்ல ரொம்ப நேரமா விளையாடி நூறு டாலரை விட்டான். அப்ப தான் சரி, ஏழரையை பாஸ் பண்ணியாச்சி, இனிமே நாம களம் இறங்கலாம்னு முடிவு பண்ணேன்.

அப்பறம் சாப்பிட்ட Bally's கசினோ போனோம். ரொம்ப நேரமா சுத்திட்டே இருந்தோம். என் நம்பர்ஸ் வர டேபில் எதுவுமே இல்லை. எல்லாமே பயங்கரமான வேரியேஷன் இருந்தது. கொஞ்ச நேரம் போனவுடனே என் நம்பர் வர டேபில் ஒண்ணு பிடிச்சோம். இந்த தடவை சேஃப் கேம் ஆடணும்னு ஆட்டத்துக்கு இருபத்தி அஞ்சி டாலரா பிரிச்சிக்கிட்டேன்.



முதல் மூணு ஆட்டம் அவுட். கடைசி இருபத்தி அஞ்சி. இந்த இருநூறும் போச்சுனா இதுக்கு மேல கசினோ பக்கமே கால் வைக்க கூடாதுனு முடிவு பண்ணினேன். கடைசியா நான் ரெண்டு சிப் வெச்சிருந்தது வந்தது. எழுபது டாலர். மறுபடி எழுபதையும் உள்ளே வெச்சேன். அது அப்படியே இருநூறுக்கு மேல வந்துடுச்சி. நண்பன், வாடா பாலாஜி கிளம்பிடலாம்னு சொன்னான். நல்ல நேரம் இருக்கும் போது கிளம்பறது முட்டாள் தனம்னு அதிகமா பெட்டிங் ஆரம்பிச்சேன்.

ஒரு ஐநூறு, அறுநூறு டாலர் பக்கம் வந்துடுச்சி. இப்ப தான் சரி, ரிஸ்க் எடுக்கலாம்னு முடிவு பண்ணேன். அந்த ட்ரிப்புக்கு மொத்த செலவு எவ்வளவோ அதை எடுத்து பாக்கெட்ல போட்டுக்கிட்டேன். மீதி ஜெயிச்ச காசு ஒரு நானூறு இருந்தது. அதை ரெண்டா பிரிச்சி ரெண்டு ஆட்டம் வைக்கலாம்னு முடிவு. ஜெயிச்சா லம்பா கிடைக்கும். தோத்தா நஷ்டம் எதுவுமில்லை. ஒரு சில நம்பர்ல இருபது சிப்புக்கு மேல கூட வெச்சேன்.

அஞ்சில வைக்கலாமா ஏழுல வைக்கலாமானு கடைசியா ஒரு குழப்பம். கிட்டதிட்ட பத்து டோக்கன் இருந்தது, ரெண்டிலும் பிரித்து வைத்திருக்கலாம். ஆனா இதுவே ரிஸ்க் எடுக்க வேண்டும்னு முடிவு பண்ணிட்டு ஆடற கேம். அதனால நோ சேஃப் பெட். ஏழுல வெச்சேன். கரெக்டா அஞ்சு வந்துடுச்சி. சூப்பர்.

அடுத்து கடைசி இருநூறு. இந்த தடவையும் போன முறை மாதிரியே ஹை பெட்ஸ் தான். கடைசியா பதினெட்டுல வந்து நின்னுச்சி. பதினெட்டுல மட்டும் இது வரைக்கும் மூணு தடவை மாட்டி வெளிய வந்திருக்கேன். அப்படி என்னடா இந்த நம்பருக்கும் நமக்கும் எப்ப பார்த்தாலும் தகராறுனு நானும் ரொம்ப யோசிச்சிட்டு இருந்தேன்.

என் கூட வந்த நண்பர் ஒருத்தர் விளையாட ஆரம்பிச்சிட்டாரு. அவரு வெளிய ரெட் ப்ளாக்ல விளையாடிட்டு இருந்தாரு. அப்ப ஒரு சிங்கி வந்தாரு. ரெண்டாயிரத்துக்கு ப்ளாக் சிப் வாங்கினாரு. ஆஹா இன்னைக்கும் ஒருத்தனா? அப்படினு பாக்க ஆரம்பிச்சேன். மனுஷன் அவுட்டர்ல விளையாட ஆரம்பிச்சாரு. தொடர்ந்து அஞ்சு ரெட் வந்திருந்தது. ஆயிரம் டாலரை ப்ளாக்ல வெச்சாரு.

எங்களுக்கு டென்ஷன். கூட வந்தவரு என்ன பண்றதுனு தெரியாம வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சாரு. டீலர் சுத்த ஆரம்பிச்சாரு. நமக்கு டென்ஷன் எகிற ஆரம்பிச்சிது. பார்த்தா ரெட். திரும்பவும் ப்ளாக்ல வெச்சாரு. நமக்கா இங்க ஹார்ட் பீட் எகிறுது. மறுபடியும் ரெட். ரெண்டாயிரம் அவுட்.

திரும்ப ரெண்டாயிரம் டாலர்க்கு சிப் வாங்கினாரு. மறுபடியும் ப்ளாக்லயே வெச்சாரு. மொத்தம் ஏழு தடவை ரெட். நிச்சயம் இப்ப ப்ளாக் தான் வரும்னு கூட இருந்த நண்பரும் ப்ளாக்ல வெச்சாரு. மறுபடியும் டென்ஷன். எல்லாரும் இப்ப அந்த சிங்கி ஜெயிக்கணும்னு வேண்டிக்க ஆரம்பிச்சாங்க. இந்த தடவை.... யும் சிகப்பு தான். எல்லாருக்குமே ஷாக். அவன் அசராம அடுத்து கருப்புலயே வெச்சான். மறுபடியும் சிகப்பு வந்தா நமக்கு ஹார்ட் அட்டாக் வந்துடும்னு அதைப் பாக்கற தைரியம் இல்லாததால நாங்க கிளம்பிட்டோம்.

அப்பறம் பதினெட்டு நம்பரைப் பத்தி யோசிக்க ஆரம்பிச்சேன். எங்க காலேஜ்ல பதினேட்டு ரோல் நம்பர் யாரு, அவனுக்கும் நமக்கும் ஏதாவது தகராறு இருந்திருக்கா, பதினெட்டாவது வயசுல நமக்கு ஏதாவது கஷ்டம் இருந்திருக்கா, சபரி மலைக்கு போகும் போது ஏதாவது தப்பு பண்ணோமா? இப்படி பல சிந்தனை. அப்பறம் பார்த்தா தான் தெரியுது, தங்கமணியோட பிறந்த நாள் பதினெட்டாம் தேதி வருதுனு. இதுக்கு மேல நீ விளையாடின, அவ்வளவு தான் காலி. பேசாம நீ கிளம்புனு வார்னிங் கொடுக்க தான் அப்ப அப்ப வந்து ஆப்பு வெச்சிருக்குனு புரிஞ்சிது.

................

கடைசியா...

கசினோல எப்படி காசு சம்பாதிக்கணும்னு கேட்டா....

ஒரே வழி...

கசினோ நடத்தி தான். விளையாடி எல்லாம் பெருசா எதுவும் ஜெயிக்க முடியாது.

Saturday, July 04, 2009

விடாது கருப்பு - மர்ம தேசம்

ஊன் மெய்க்கு பிரதானம்
மைதூனத்தின் விதானம்
சூதானமாய் யோசித்தால்
விடையோ இரண்டு
நிதானமாய் யோசித்தால்
உண்டு விருந்து

இந்த விடுகதையில் தொடரோட முதல் பகுதி ஆரம்பிக்குது. ஊருக்கே தெரியும் இந்த விடுகதையின் விடையில் தான் ஊரே தேடும் பொன்பானை பொதிந்திருக்கும் ரகசியம் இருக்கிறது.

விடாது கருப்பு, மர்ம தேசம் தொடரின் இரண்டாவது தொடர். இது நான் பனிரெண்டாவது படிக்கும் போது வந்தது. அப்ப ஹாஸ்டல்ல இருந்ததால பார்க்க முடியல. ஆனா க்ளைமாக்ஸ் ஏப்ரல்ல வந்திருக்கும்னு நினைக்கிறேன். ஏன்னா நான் இந்த நாடகத்தோட க்ளைமாக்ஸ் மட்டும் பார்த்தேன். அப்படி ஒரு க்ளைமாக்ஸ் பார்த்ததுக்கு அப்பறம் அந்த நாடகத்தைப் பார்த்தே தீரணும்னு நினைச்சிட்டு இருந்தேன்.

ராஜ் டீவில மறுபடியும் போடும் போதும் பார்க்க முடியல. அப்பறம் இங்க வந்ததுக்கப்பறம் மே லாங் வீக் எண்ட்ல வீட்ல தனியா இருந்தேன். செம போர். அப்ப இண்டர்நெட்ல மேயும் போது இந்த தொடர் முழுதும் rajshri.comல இருந்தது. பார்க்க ஆரம்பித்தேன். மூணு நாள் முழுதும் உட்கார்ந்து எண்பத்தி இரண்டு பகுதியும் பார்த்து முடிச்சிட்டேன். இப்படி ஒரு சீரியல் (வேண்டும்னா சினிமாவையும் சேர்த்துக்கலாம்) என்னை கவர்ந்தது இல்லை. அட்டகாசமான டைரக்‌ஷன்.

இந்த அளவுக்கு ஒரு மர்மம் நிறைந்த திரைக்கதை தமிழ்ல வந்திருக்குமானு சந்தேகம் தான். சினிமாவைப் பொருத்தவரை மர்மம் நிறைந்த திரைப்படங்கள்னு பார்த்தா அந்த நாள், அதே கண்கள் வேற எதுவும் இருக்கானு சட்டுனு நினைவுக்கு வரல. அதிலும் அதே கண்களை லிஸ்ட்ல சேர்த்துக்க முடியாது. ஏன்னா என்னைப் பொருத்தவரை அத்தனை கதாபாத்திரங்களும் முதலிலே தெளிவாக காட்டப்பட வேண்டும். சடார்னு எங்கயோ இருந்து வர மாதிரி காட்றதுல புத்திசாலித்தனம் இல்லை. அந்த வகைல அந்த நாள் அட்டகாசமான படம்.

விடாது கருப்பு நாடகத்தை அந்த விஷயத்தில் பாராட்ட வேண்டும். அதுவும் அன்றும், இன்றும்னு ஒரே பாகத்துல காட்டினது புத்திசாலித்தனம். அதுவும் அன்றும் முழுக்க முழுக்க ராசுவின் பார்வையில் காட்டப்பட்டிருக்கும். அத்தனை சீன்களிலும் அவன் இருந்திருப்பான்.

கதை இது தான். தொட்டக்கார மங்கலம்னு ஒரு கிராமம். அந்த கிராமத்துல நடக்குற தப்புக்கு எல்லாம் கருப்பு சாமி தண்டனை நிச்சயம் உண்டு. அந்த ஊருக்கு தோழியின் காதலை சேர்த்து வைக்க வரும் ஒரு டாக்டர் கம் எழுத்தாளர், அந்த கருப்பு நிச்சயம் கடவுள் அல்ல, மனிதன் தான் என நிருபிக்க முயலுவது தான் கதை. ஆனா கடைசில நாடகம் முடிந்த பிறகும் இது மனிதனின் செயலா அல்லது நம்மை மீறிய சக்தியின் இயக்கமா என யோசிக்க வைப்பது கதாசிரியரின் புத்திசாலித்தனம்.

இந்த கதைக்குள்ளே பல கதைகள், ஊரையே ஏமாற்றி நகைகளை புதைத்து வைத்து செத்துப் போகும் பேச்சிக் கிழவி, வாலிப வயதில் பல பாவங்களை செய்து கருப்புவினால் கையை இழுந்து அதற்கு பிறகு எப்பொழுதும் பேசாத கட்டயன், பொன் பானையைத் தேடும் ஆனைமுடியான் (ஆண்மை உடையார்), கருப்பு தான் கண் கண்ட தெய்வம் என நம்பும் ஆனைமுடியான் மனைவி,
சின்ன வயதிலிருந்தே பேச்சிக்கிழவி, கட்டயன் செய்யும் பாவங்களைப் பார்த்து வளரும் ராசு, திருடனாய் இருந்து திருந்தி, தான் திருடிய நகைகளை அதை சேர்ந்தவர்களிடம் ஒப்படைக்க துடிக்கும் பிரம்மன், இந்த உண்மைகளை எல்லாம் கண்டுபிடிக்க துடிக்கும் ரீனா, இந்த உலகில் தன்னுடைய பங்கு என்ன என தெரிந்து கொள்ள பித்து பிடித்து அலையும் டாக்டர் நந்தா, ஊரையும், ஆனைமுடியான் குடும்பத்தையும் ஆட்டிப் படைக்கும் பூசாரி. இப்படி அட்டகாசமாக படைக்கப் பட்டிருக்கும் பாத்திரங்கள்.

எண்பத்தி ஓராவது பாகம் முடியும் போது இது மனிதனின் செயல் தான் என புரிந்து கொள்ளும் நாம், கடைசிப் பகுதியைப் பார்த்ததும், இது நிஜமாலுமே மனிதனின் செயலா என சிந்திக்க துவங்கிவிடுவோம். அது தான் கதையின் வெற்றி. அதே போல் இது மனிதனின் செயலா அல்லது நம்மை மீறிய சக்தியா என ஆராய்ச்சியை செய்யாமலே இருந்திருக்கலாம் என்றும் தோன்ற ஆரம்பித்தது.

என்னைப் பொருத்தவரை நாடகத்தின் பலமே அன்று பகுதியில் வரும் பேச்சிக்கிழவி, ராசு, கட்டயன் தான். அதுவும் பேச்சிக்கிழவியும் ராசுவும் அட்டகாசமான நடிப்பு. பேச்சிக்கிழவியின் திமிர், இதுவரை நான் பார்த்த வில்லன்களை எல்லாம் தூக்கி சாப்பிட்டு விட்டது போல் தோன்றியது. இவ்வளவு சாமார்த்தியமான கிழவியை (பாத்திரத்தை) இதுவரையில் பார்த்தே இல்லைனு கூட சொல்லலாம். பின்னாடி இந்த கிழவியை அசுரினு சொல்லும் போது, அது எந்த விதத்திலும் குறைவு இல்லைனு தான் தோணும். கருப்பு நிச்சயமா மனுஷன் தான் பின்னாடி ரீனா நம்பறதை விட, கிராமத்திலே இருந்து கருப்பு மனுஷன் தானு அந்த பாட்டி அத்தனை வருஷத்துக்கு முன்னாடி கண்டுபிடிப்பதே அதோட திறமைக்கு சான்று. அப்பறம் ஊரையே ஆட்டிப்படைக்கும் திருடன் மொக்க மாயனை கொன்று அவன் திருடின நகைகளையே கொள்ளை அடிப்பது, பிரம்மனை போலிஸ்ல பிடித்து கொடுப்பது, நியாயம் கேட்டு வரும் ஊர் மக்களை அக்கு வேறு ஆணி வேறாக பிரிப்பது என துவம்சம் செய்திருக்கும் அந்த பாட்டி பாத்திரம். அதுவும் நியாயம் கேக்க வர ஊர்மக்களை பிரிச்சி மேயறது அட்டகாசமான சீன். பேச்சிக்கிழவி பேசும் போது அந்த வீடே அதிர்வது போல் எதிரோலிப்பது அருமை.

சின்ன வயது ராசுவாக நடித்திருக்கும் மாஸ்டர் லோகேஷ் பத்தி சொல்லலைனா என்னை விடாது கருப்பு. அவ்வளவு அட்டகாசமான நடிப்பு. மொத்த நாடகத்தோட கனத்தையும் தாங்கறது அந்த பாத்திரம் தான். ஒவ்வொரு பாகத்திலும் புதிது புதிதாக ஏதாவது விளையாடிக் கொண்டிருப்பான். நல்லவர்கள் கெட்டவர்கள்னு எல்லாருக்குமே அவனைப் பிடிக்கும். அதைப் பார்க்கும் நமக்கும் அவனை நிச்சயம் பிடிக்கும்.

இந்த தொடரைப் பார்க்க விரும்புவர்கள் இங்கே சொடுக்கலாம்.

நாடகம் பார்க்க வேண்டும் என நினைப்பவர்கள் இதற்கு மேல் படிக்காதீர்கள். Contain spoilers...

நாடகம் பார்த்து முடிக்கும் போது மனம் முழுவதும் சின்ன வயது ராசு தான் நிறைந்து இருந்தான். கண்ணு முன்னாடியே நடக்குற அநியாயத்தைப் பார்த்து தட்டிக் கேட்க முடியாமல் துடித்து, மனம் நொந்து அவனுக்குள் கருப்பு ஒரு ஆல்டராக உருவாகுவது அனைவரும் ஏற்றுக் கொள்ள கூடிய ஒன்று. ஆனா பின்னாடி அவனே தப்பு செய்யும் போது அவனுக்கு கிடைக்கும் தண்டனை ஏனோ மனதை பாதிக்கவே செய்தது.

ராசுவோட பாத்திரத்தை அப்படியே உளி கொண்டு செதுக்கும் சிற்ப கலைஞரைப் போல செதுக்கியிருக்கிறார் இயக்குனர் (கதாசிரியர்). இவனுக்கு மல்டிப்பில் பர்சனாலிட்டி டிஸ் ஆர்டர் வருவதற்கான அத்தனை சாத்தியங்களும் நமக்கு புரிந்திருக்கும். ஆனா கடைசியா அவனுடைய கருப்பு ஆல்டரே அவனுக்கு தண்டனைக் கொடுப்பது பாக்கறதுக்கே ரொம்ப கஷ்டமா இருந்தது.

அவனுக்கு இப்படி ஒரு மனநோய் வருவதற்கு காரணம் பேச்சிக்கிழவி மட்டுமல்ல, அவனுடைய அம்மாவும் தான். கருப்பு மேல் அவள் வைத்திருக்கும் தீவிர நம்பிக்கையும் ஒரு வகையில் காரணம் தான். இல்லைனா அவனுக்கும் நம்பிக்கை இருந்திருக்காது. அவனும் அந்த பாட்டியுடன் சேர்ந்திருப்பான். அதே போல கிழவியின் மரணத்திற்கு பிறகு அவளுடைய நம்பிக்கையால் தான் குடும்பமே அந்த பூசாரியின் பேச்சுக்கு அடிமையாகி இருக்கும். இப்படி பல விஷயங்கள் மனதில் ஓடின.

அதே மாதிரி ரீனா அவளுடைய வாழ்க்கையில் நடந்த துன்பத்தை வைத்து இந்த கிராமத்தில் நடக்கும் விஷயங்களை அளந்தது தவறு. அவள் அமைதியாக ஊரை விட்டு போயிருந்தாலும் ராசுவின் மரணம் தவிர்க்க பட்டிருக்கும். எது எப்படியோ, சந்திரமுகி, அந்நியனை விட இது சிறந்த திரைக்கதை அமைப்பு கொண்டது. நாகா, இந்த தொடரை இயக்கியதற்காக பெருமை கொள்ளலாம்.

மின்பிம்பங்கள் இந்த நாடகத்தை ஒரு DVDயில் தர முயற்சி செய்யலாம். மகாபாரதம் சீரியல் இப்படி CDக்களில் பார்த்திருக்கிறேன். பல மொக்கைப் படத்தைப் பார்ப்பதற்கு இப்படி நல்ல சீரியல்களைப் பார்க்கலாம்.

Sunday, June 28, 2009

உயர் கல்வியை தேர்ந்தெடுக்க வேண்டியது யார்?

சமீபத்துல விஜய் டீவி நீயா? நானா? நிகழ்ச்சி பார்க்க நேர்ந்தது. அட்டகாசமான ஒரு தலைப்புல பேசிட்டு இருந்தாங்க. உயர்கல்வி படிப்பில் துறையை தேர்ந்தெடுக்க வேண்டியவர்கள் பிள்ளைகளா? பெற்றோர்களா?

இந்த ஒரு தலைப்பை எடுத்து விவாதித்ததற்காகவே கோபிநாத்தை பாராட்ட வேண்டும். ஆனால் அங்கே படித்து கொண்டிருக்கும் மாணவர்களை மட்டுமே கூப்பிட்டு வந்தது தவறாக தோன்றியது. படித்து முடித்து வேலைக்கு சென்ற சிலரையும் அல்லது வேலைத் தேடிக் கொண்டிருக்கும் சிலரையும் கூப்பிட்டு வந்திருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும்.

என்னோட கேஸ்ல நான் டாக்டருக்கு படிக்க வேண்டும் என்பது என் பெற்றோர்களின் விருப்பம். அதனாலே SRVல எங்களுடைய சக்திக்கு மீறி கொண்டு போய் சேர்த்தார்கள். நானும் டாக்டருக்கு தான் படிக்க வேண்டும் என்று படித்து கொண்டிருந்தேன். SRVல என் கூட படித்த டாக்டர் பிள்ளைகள் மிக அதிகம். அவர்களுடன் பேசிக் கொண்டிருந்த பொழுது தான் அந்த தொழிலில் உள்ள கஷ்டங்கள் தெரிய ஆரம்பித்தது.

முதல் தலைமுறை டாக்டர்கள் மிகவும் பாவம் செய்தவர்கள் எனவும், அவர்கள் முதல் பத்து பதினைந்து வருடத்திற்கு மிகவும் கஷ்டப்பட்டார்கள் எனவும், அதன் பிறகே வசதி வாய்ப்பு வந்தது என்றும் என் நண்பர்கள் சொன்னார்கள். எனக்கு மனதில் மூன்று விதமான எண்ணங்கள், டாக்டருக்கு படித்தால் அதை வெறும் சேவை மனப்பாண்மையோடு செய்ய வேண்டும். காசு, பணத்தில் அக்கரை இருக்க கூடாது. ஆனால் இது சாத்தியமில்லை. முதல் சில வருடங்கள் அப்படி இருந்தாலும் பின்னால் காசு, பணம், புகழ் இதை தேடி தானாக சென்று விடுவேன். அப்படி செல்லும் பட்சத்தில் என்னுடைய பெற்றோர்கள் அதை அனுபவிக்க சாத்தியமில்லை. எனக்கு அடுத்த தலைமுறை மட்டுமே அதை அனுபவிக்கும்.

அடுத்து எனக்கு பாடத்தில் பிடித்தது Nuclear Physics. அதைப் படிக்க வேண்டும் என்ற ஆவல் இருந்தது. ஆனால் B.Sc Physics படிக்க போகிறேன் என்று சொன்னால் நிச்சயம் செருப்படி கிடைக்கும். அல்லது பைத்தியக்காரன் என்ற பெயர் கிடைக்கும். நன்றாக படிப்பவன் நன்றாக சம்பாதிக்கும் தொழிலிற்கு செல்ல வேண்டும் என்பது நம் சமுதாயத்தில் எழுதப்படாத சட்டம். இதை உடைக்கும் தைரியம் எனக்கு இல்லை.

மூன்றாவது ஐடி. இதை நான் தேர்ந்தெடுக்க ஒரே காரணம் பணம். சின்ன வயதிலே சம்பாதித்து நல்ல நிலைக்கு வந்துவிடலாம். அப்பா, அம்மாவிற்கும் பெருமை இருக்கும். இது தவறாக கூட தெரியலாம். ஆனால் என் நான்கு தாய் மாமாக்களும் பெரும் பணக்காரர்களாக இருக்கும் பொழுது, ஒரு சாதாரண கிளார்க் மகனான எனக்கு சின்ன வயதிலிருந்தே பணம் சேர்ப்பது தான் குறி.

புனித வளனார் பள்ளிக்கு மட்டும் போகாமல் இருந்திருந்தால் ஒரு மனிதாபிமானமில்லாத பிஸினஸ் மேனாக நான் இருந்திருப்பேன். பள்ளியிலே தினமும் குறைந்தது இரண்டு மூன்று ரூபாய் சம்பாதிப்பேன். பிடி பீரியட் முடிந்து தண்ணி தாகத்தில் இருக்கும் மாணவர்களுக்கு ஒரு மூடி தண்ணிர் ஒரு ரூபாய்க்கு விற்றுருக்கிறேன். இப்படி இருந்த என்னை மாற்றியது நான் ஹாஸ்டலில் படிக்கும் போது ஏற்பட்ட அனுபவங்கள் தான்.

நியாயமான ஒரு முறையில் அரசாங்கத்தை ஏமாற்றாத, ஒழுங்காக டேக்ஸ் கட்டி நிறைய சம்பாதிக்க வாய்ப்பு இருக்கும் ஒரு காரணத்திற்காகவே IT எடுப்பது என முடிவு எடுத்திருந்தேன். இந்த முடிவு நான் எடுத்தது பரிட்சைக்கு ஒரு மாசத்திற்கு முன்பு தான். அதுவரை நான் தூங்கும் போது கூட பயாலஜி புத்தகம் என் கையில் இருக்கும். அதற்கு பிறகு தீர்மானமாக முடிவு எடுத்த பிறகு நான் பயாலஜி படிக்கவே இல்லை.

மதிப்பெண்கள் வந்த பிறகு பார்த்தால் பயாலஜியில் தான் அதிக கட் ஆஃப். 1.5 மதிப்பெண் கட் ஆஃப் சேர்த்து வந்திருந்தால் டாக்டர் சீட் கிடைத்திருக்கும். கடைசி ஒரு மாதத்தில் படித்ததால் இஞ்சினியரிங் கட் ஆஃப் மிகவும் குறைவு தான். வீட்டில் இம்ப்ரூவ்மெண்ட் செய்ய சொன்னார்கள். என் ரூமேட் இருவர் மீண்டும் இம்ப்ரூவ்மெண்ட் சேர்ந்துவிட்டார்கள். அதனால் என்னையும் அதில் சேர்ந்து டாக்டருக்கு படிக்க வைக்க அப்பா அம்மா முடிவு செய்தார்கள். நான் நிச்சயம் முடியாது என்று சொல்லிவிட்டேன். பஞ்சாயத்து பண்ண எங்க மாமா வீட்டிற்கு வந்தார். டாக்டருக்கு சமூகத்தில் கிடைக்கும் அங்கிகாரம் மற்ற இத்யாதிகள் அனைத்தையும் விளக்கினார். எனக்கு தெரியாதது புதிதாக எதுவும் சொல்லிவிடவில்லை.

கடைசியாக என் அம்மாவிடம், உங்களுக்காக நான் படிக்கணும்னா டாக்டருக்கு படிக்கிறேன். ஆனா என் விருப்பம் இஞ்சினியரிங் படிக்கறது தான் அப்படினு சொன்னேன். என் அம்மாவிற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. எனக்காக நீ படிக்க வேண்டாம். உனக்கு என்ன படிக்குதுனு தோணுதோ அதே படினு சொல்லிட்டாங்க. இன்னைக்கு வரைக்கும் அதை சொல்லுவாங்க.

அப்பறம் கவுன்சிலிங் போகும் போது அப்பா கூட வந்தாரு. நான் ஐடினு முடிவு பண்ணிட்டேன். எங்க செட்ல முதல்ல ஃபில் ஆனது ஐடி. அடுத்து கம்ப்யூட்டர் சயின்ஸ். சேரும் போது இது ரெண்டுக்கும் எனக்கு வித்தியாசம் தெரியாது. உள்ள சீட் செலக்ட் பண்றதுக்கு போகும் போது கூட அப்பா, PSGல ஏரோநாட்டிகள் இருக்கு. எடுத்துக்கறயா? இல்லை அண்ணா யுனிவர்சிட்டில சிவில் இருக்கு எடுத்துக்கறயானு கேட்டேட்டே வந்தாரு. நான் எதுவும் சொல்லல. உள்ள போய் முதல் ஆப்ஷன் கோவை ராமகிருஷ்ணா ஐடி, ரெண்டாவது திருவண்ணாமலை அருணைல ஐடி. முதல் ஆப்ஷனே கிடைத்துவிட்டது.

இது நான் இஞ்சினியரிங் சேர்ந்த கதை. எதுவுமே தெரியாம தான் நான் ஐடி சேர்ந்தேன். நான் சேர்ந்த அடுத்த ஆண்டு ஐடி சரியத் துவங்கியது. தவறு செய்துவிட்டோமோ என்று தோன்றியது. ஆனா இது நான் எடுத்த முடிவு. அதை நான் தான் எதிர் கொள்ள வேண்டும். இதையே பெற்றோர்கள் முடிவு செய்திருந்தால் நிச்சயம் பழியை அவர்கள் மேல் போட்டிருப்பேன். நீங்க தான சேர்த்து விட்டீங்க. இப்ப நீங்க தான் செலவு பண்ணனும் என்று திமிர் தனம் செய்திருப்பேன். ஆனால் அதற்கு எல்லாம் வழி இல்லை. அதனால் நன்றாக படிக்க வேண்டும் என்று படித்தேன். எங்க க்ளாஸ்லயே நான் ஒருவன் தான் எல்லா லேபிலும் 90 சதவிகிதத்திற்கு மேல்.

படித்து முடித்த பின்பும் வேலை இல்லை. வீட்டில் உட்கார்ந்திருந்தால் நிச்சயம் எல்லாரும் என்னை கேலி பேசுவார்கள். நாங்க சொன்னதை கேட்டிருக்கலாம் இல்ல. சும்மா ஒரு போர்ட் மாட்டி கிளினிக் வெச்சிருந்தா கூட காசு வரும், இப்ப பார்த்தியானு கூட சொன்னார்கள். இந்த கோபத்தில் உடனே பெங்களூர் கிளம்பினேன். ரொம்ப கஷ்டப்பட்டிருக்கோம். ஆறு மாசம் வெறும் உப்புமா மட்டும். காபி குடிக்க ஆசையாக இருக்கும். ஆனா செலவாகும்னு போகறதுக்கு யோசிப்போம். அஞ்சு பேர் மூணு ரூபாய் போட்டு காபி குடிக்கறதுக்கு வீட்டுக்கு பால் வாங்கி வந்து காபி போட்டா பதிமூணு ரூபாய்ல முடிச்சிடலாம். ரெண்டு ரூபா மிச்சம்னு கணக்கு போட்டு காபி போட்டிருக்கோம். இந்த கஷ்டத்தை எல்லாம் மனசு ஏத்துக்கிட்டதுக்கு ஒரே காரணம் இது நான் தேர்ந்தெடுத்த வழி. எவ்வளவு கஷ்டப்பட்டாலும் இதை நான் தான் தாண்டியாகனும். ஆறு மாசம் கஷ்டத்திற்கு பிறகு ஒரு நல்ல வழி கிடைத்தது. ரெண்டு வேலை வாங்கினேன்.

என் சொத்தக்காரவங்க ஒருத்தர் கூட அப்ப ஐடி துறைல இல்லை. இன்னும் ஒருத்தர் கூட அமெரிக்கால இல்லை. இங்க மூணு, நாலு நாள் லீவு விட்டா நிறைய பேர் சொந்தக்காரவங்க வீட்டுக்கு போவாங்க. ஒரு வழிக்காட்டி கூட இல்லாத நிலையிலும் இந்த துறைல வந்து வெற்றி பெற முடிந்ததுனா ஒரே காரணம், இது நான் தேர்ந்தெடுத்த வழி. கை கொடுத்து தூக்கிவிட ஆட்கள் இருக்க மாட்டார்கள். அதே நேரத்தில் நான் பழி போட்டு தப்பிக்க வழியும் இல்லை. போராடி தான் வெற்றி பெற முடியும். போராட துணிவை இந்த நான் என்ற Ego கொடுக்கும்.

இப்ப நீ என்ன தான் மேன் சொல்ல வரனு கேட்டா, பெற்றோர்களே, பிள்ளைகளை அவர்கள் வழிகளில் விடுங்கள். அவர்கள் முடிவு தவறாகவும் இருக்கலாம். ஆனால் அதை எப்படியும் போராடி வெல்ல துணிவு அவர்களுக்கு இருக்கும். இது அவர்கள் தேர்ந்தெடுத்த வழி என்பதை மட்டும் அவர்களும் நினைவுப் படுத்துங்கள். நல்ல வழியிலே செல்வார்கள்!!!

தலைவர் பாணில சொல்லணும்னா ”உன் வாழ்க்கை உன் கையில்”னு அவுங்களுக்கு சொல்லிடுங்க. நல்லது கெட்டதை சொல்லுங்க. வழியை பிள்ளைகள் தேர்ந்தெடுத்து கொள்ளட்டும்.

Thursday, April 02, 2009

விருது விருது!!!

இந்த விருதை சில மாதத்துக்கு முன்னாடி தங்கச்சி தமிழினி கொடுத்த பொழுது, நன்றிமா... கொஞ்ச நாள் கழிச்சி இதை தொடருகிறேனு சொல்லிட்டேன். முதல் காரணம், அந்த விட்ஜெட். ஏனோ இந்த மாதிரி விட்ஜெட் போட்டுக்கறதுல எனக்கு விருப்பம் இல்லை.



சர்வேசனோட விட்ஜட்டே அவர் கொடுத்த நூறு டாலருக்கு மரியாதை கொடுத்து தான் போட்டு வெச்சிருக்கேன். அதை ஒவ்வொரு முறை பார்க்கும் பொழுதும் எப்படி இருந்த நீ, இப்படி ஆகிட்டயேனு ஒரு கஷ்டம் வரும். 2006ல ஆறு மாசம் எழுதன அளவுக்கு கிரியேட்டிவா அதுக்கு அப்பறம் நான் எழுதல. அப்பவும் என்னை விட நல்லா எழுதின பல பேர் அவுங்க பேரை போட்டில இருந்து நீக்க சொல்லிட்டாங்க :-)




சரி இப்ப எதுக்கு இந்த எஸ்டீடீ எல்லாம்னு கேக்கறீங்களா? இந்த பட்டாம்பூச்சி விருதுல இருந்து நான் எஸ்கேப் ஆக முயற்சி செஞ்சதுக்கு இது தான் காரணம். அப்பறம் எப்படியும் எல்லாரும் எல்லாருக்கும் விருதை கொடுத்து எல்லார் வலைப்பதிவுலயும் தேவையில்லாம விட்ஜெட்டா இருக்கும்.




இதை சொல்லும் போது பத்தாவதுல எங்க எஸ்டீடீ வாத்தியார் சொன்னது தான் ஞாபகம் வருது. அரசியல் மீட்டீங் பத்தி சொன்னவரு, இந்த பன்னாடை அந்த பன்னாடைக்கு பன்னாடை போத்தும், பதிலுக்கு அந்த பன்னாடை இந்த பன்னாடைக்கு பன்னாடை போத்தும். இது தான் அரசியல்.


அப்பறம் பட்டாம்பூச்சி விருது முடிஞ்சி, தும்பி, ஈ, காக்கா, குருவி (இது நம்ம கார்க்கி ரிசர்வ் பண்ணிருப்பாருனு நினைக்கிறேன்) இப்படி பல விருதுகள் வர ஆரம்பிச்சிடும். அப்பறம் அதையும் எடுத்து டெம்ப்ளேட்ல போட்டு படிக்கிறவங்களை டார்ச்சர் பண்ணனுமா?


அத‌னால‌ விருது கொடுத்த‌ த‌ங்க‌ச்சி த‌மிழினி, அண்ண‌ன் கைப்ஸ், ந‌ண்ப‌ர் ஆ! இத‌ழ்க‌ள் மூவ‌ருக்கும் என் ம‌ன‌மார்ந்த‌ ந‌ன்றிக‌ள். அப்பறம் இதை என் டெம்ப்ளேட்ல சைட்ல போடாததுக்கு என்ன மன்னிச்சிடுங்க.


இதுக்கு மூணு பேரை மாட்டிவிடணுமாம் (அதெல்லாம் நமக்கு ரொம்ப பிடிக்கும்). கொஞ்சம் யோசிச்சி பார்த்தா, மூணு பேருக்கு கொடுக்கறதை விட, என் மூணு பதிவை விட ஒரு பதிவை நீஈஈஈஈஈஈஈஈளமா எழுதற ஒருத்தருக்கு கொடுக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். அது "Coolest blog I ever know " இல்லை "Lengthiest blog I ever know "

அண்ணே உண்மைத்தமிழன் அண்ணே...நீங்க இதை வெச்சி ஒரு பதிவு போடுங்க.

Saturday, March 28, 2009

தண்ணீர் தண்ணீர்

இந்தப் பதிவு நான் ரொம்ப நாளா எழுதனும்னு நினைச்சிட்டு இருந்த ஒண்ணு. இன்னைக்கு தான் சரியா நேரம் கிடைச்சிருக்கு.

இன்னைக்கு எல்லாம் பைப்பத் திறந்தா தண்ணி வருது. மோட்டார் போட்டா வீட்ல தண்ணி தொட்டி ரொம்பிடுது. அதை நம்ம இஷ்டத்துக்கும் பயன்படுத்தறோம், நிறைய பேர் தண்ணீரை தேவைக்கு அதிகமா பயன்படுத்தறதும் பார்த்திருக்கேன். ஆனா இந்த தண்ணிக்காக ஒரு காலத்துல நாங்க பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமில்லை. 

எங்க ஊர்ல ஆறுனு பேருக்கு தான் ஒண்ணு இருக்கு. மழை காலத்துல நிறையா தண்ணி ஓடும், ஆனா அது ரெண்டு மூணு மாசத்துலயே வறண்டு போய் மண்ணு தெரிய ஆரம்பிச்சிடும். இன்னமும் அப்படி தான். ஆனா இப்ப திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆத்து தண்ணி எங்க ஊருக்கும் கிடைக்குது. அப்ப எல்லாம் அப்படி இல்லை.

நான் சொல்றது தொன்னூறுகளின் ஆரம்பத்தில். எங்க ஊரை நான் எப்பவும் காஞ்சிப் போன கள்ளக்குறிச்சினு தான் சொல்லுவேன். எப்ப பார்த்தாலும் தண்ணி பஞ்சம் தான் இருக்கும். வீட்டு உபயோகத்துக்கு தேவையான தண்ணீரை (குளிக்கறது, துணி துவைக்கிறது) கிணத்துல இருந்து இறைச்சி தான் பயன்படுத்தனும். அப்ப நான் நாலாவது, அஞ்சாவது தான் படிப்பேன். ஒரு குடத்து தண்ணீரை என்னால முழுசா இறைக்க முடியாது. பொதுவா அப்பா, அம்மா தான் இறைப்பாங்க. ஆனா சில சமயம் அவசரத்துக்கு நானும், அக்காவும் சேர்ந்து தண்ணி இறைப்போம். எங்க கிணறு ஒரு அம்பது அடி ஆழம் இருக்கும். தண்ணி எப்பவும் குறைவா தான் இருக்கும். 

கிணத்துல தண்ணி இறைக்கறதும் ஒரு கலை தான். குடத்தை கீழ விடும் போது ரொம்ப வேகமா விடறோம்னு விட்டா கயிறு கையை கிழிக்கும். கொஞ்சம் பொறுமையா பார்த்து விடணும். அப்பறம் குடத்தை இந்த பக்கம், அந்த பக்கம்னு ஆட்டி முழுசா நிரப்பணும். அப்பறம் ரெண்டு பேர் சேர்ந்து இழுக்கும் போது மாத்தி மாத்தி இழுக்கறதுல ஒரு சின்க் இருக்கனும். இதை விட பெரிய விஷயம், அந்த குடம் மேல வந்தவுடனே, அதிக தண்ணி கீழ சிந்தாம கிணத்தை விட்டு வெளிய எடுக்கனும். கொஞ்சமும் தண்ணீரை வீணாக்காம அதை அண்டா, குண்டா, பக்கெட் எல்லாத்துலயும் ஊத்தணும். எப்படியும் ஒரு நாளைக்கு இருபது குடமாவது தேவைப்படும். 

இது சாதா தண்ணிக்கு, அதே குடிக்கிற தண்ணி பிடிக்கிறது இதை விட ரொம்ப கஷ்டமான விஷயம். ஊரை விட்டு தள்ளி அடிக்கிற பம்ப் இருக்கும். அங்க தண்ணி பிடிக்க சைக்கிள்ல குடத்தை கட்டிக்கிட்டு காலங்காத்தாலயே அப்பா போவாரு. ரொம்ப விடிஞ்சதுக்கு அப்பறம் போனா கூட்டம் அதிகமா இருக்கும். சில சமயம் தண்ணியும் வராம போற வாய்ப்பு இருக்கும். அதனால காலைல அப்பா போகும் போது என்னையும் சைக்கிள்ல உக்கார வெச்சி கூப்பிட்டு போவாரு. 

இந்த சைக்கிள்ல குடத்தை வெச்சிட்டு போறதே ஒரு டெக்னிக் தான். ரெண்டு குடத்தை கயிறு போட்டு கட்டி பின்னாடி கேரியர்ல வைப்பாங்க. இது ரெண்டு பக்கமும் தொங்கிட்டு வரும். ஒரு குடத்தை சைக்கிள் கேரியர் மேல நிக்க வெச்சி, முன்னாடி சீட்ல இருந்து சைக்கிள் டயர் டியூப் போட்டு மாட்டியிருப்பாங்க. அது அப்படியே நிக்கும். சில பேர் இன்னும் ரெண்டு குடத்தை முன்னாடி இருக்குற பார்ல தொங்கவிட்டு எடுத்துட்டு வருவாங்க. ஆனா நான் அப்பாவோட போறதால அந்த முன்னாடி இருக்குற பார்ல நான் உக்கார்ந்துட்டு போவேன். அப்பாவோட அட்லஸ் சைக்கிள்ல முன்னாடி அந்த பார்ல சின்னதா ஒரு குஷன் வெச்ச சீட்டு இருக்கும். அது எனக்கு தான். இதெல்லாம் இப்ப நினைச்சா ஆச்சரியமா இருக்கு.

அப்படி குடத்தை எடுத்துட்டு தண்ணி அடிக்கிற பம்ப்க்கு போனா அங்க நாலு மணில இருந்து க்யூ இருக்கும். எப்படியும் நமக்கு முன்னாடி ஒரு இருபது பேராவது இருப்பாங்க, ஆளுக்கு நாலு அஞ்சி குடத்தோட. இந்த மாதிரி தினமும் தண்ணி பிடிக்க வந்து நண்பர்கள் ஆனவங்களும் இருப்பாங்க. அவுங்க் எல்லாம் அடிச்சி முடிச்சதுக்கு அப்பறம் அப்பா அடிக்க ஆரம்பிப்பாரு. முதல்ல குடத்தை கழுவிட்டு அப்பறம் குடத்து மேல ஒரு துணி போட்டு அடிப்பாங்க. மண்ணு ஏதாவது வந்தா வடிகட்டிடும். நானும் சில சமயம் அடிக்கறனு பிரச்சனை பண்ணுவேன், ஆனா அதுக்கு நேரமாகும் பின்னாடி இருக்கறவங்க எல்லாம் பிரச்சனை பண்ணுவாங்கனு சொல்லி என்னை அடிக்க விட மாட்டாங்க. சில சமயம் கூட்டம் இல்லாத போது நான் முயற்சி செஞ்சி பார்ப்பேன். ஆனா அதுல தண்ணி அடிக்கறது ரொம்ப கஷ்டம்.

இதெல்லாம் எங்களை மாதிரி ஊருல இருந்து ஒரு கிலோ மீட்டர் தள்ளி இருக்கறவங்களுக்கு. டவுன்லயே இருக்கறவங்களுக்கு தெருலயே தண்ணி வரும். ஒரே ஒரு பைப் தான் இருக்கும். அதுல அந்த தெருவே தண்ணி பிடிக்கனும். இது பெண்கள் ராஜியம். ஒரு ஆம்பிளை கூட இந்த இடத்துக்கு வர மாட்டாங்க. எங்க பாட்டி வீட்டுக்கு எதிர்லயே இந்த பைப் இருக்கும். அங்க திண்ணைல உட்கார்ந்து பார்த்தா போதும், ஊருல இருக்குற அத்தனை கெட்ட வார்த்தையும் தெரிஞ்சிக்கலாம். தண்ணி பைப் சண்டை அப்படி நடக்கும். யாராவது குடத்தை வெச்சிட்டு வீட்டுக்கு போயிடுவாங்க. பின்னாடி வரவங்க அதை நகர்த்திட்டு தண்ணி பிடிக்க ஆரம்பிச்சிடுவாங்க. இது தான் தொன்னூறு சதவீதம் நடக்கும். அப்ப திட்டிக்குவாங்க பாருங்க. அப்படியே காதுல தேனா பாயும். குடும்பத்துல ஒருத்தவங்களை விட மாட்டாங்க. டோட்டல் ஃபேமிலி டேமேஜ் தான்.

சில சமயம் எங்க ஏரியால தண்ணி லாரி வரும். இது பொதுவா மே மாசம் தான் வரும். அந்த லாரி வருதுனு தெரிஞ்சவுடனே எல்லாரும் குடத்தோட ரெடி ஆகிடுவோம். வண்டி எங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்குற க்ரவுண்ட்ல தான் வந்து நிக்கும். இப்ப எல்லாம் அங்க ஃபுல்லா வீடு கட்டிட்டாங்க. லாரி வரும் போது அது பின்னாடி தெருவே ஓடுவோம். ஏன்னா லாரில தண்ணி தீரதுக்கு முன்னாடி கிடைக்கணும்னு தான். அதுவும் இதுல ஆளுக்கு ஒரு குடம்னு ரூல்ஸ் இருக்கும். அதனால வீட்ல நாலு பேருமே குடத்தை எடுத்துட்டு ஓடுவோம். அந்த லாரி எப்பவும் உச்சி வெயில்ல தான் வரும். 

வேர்க்க விறுவிறுக்க தண்ணி குடத்தோட ஓடிப்போய் க்யூல நின்னு தண்ணி பிடிக்கனும். இதுல நான், அக்கா எல்லாம் பிடிச்ச உடனே குடத்தை கொஞ்ச தூரம் தள்ளி வெச்சிடுவோம். அப்பா, அம்மா அதை கொண்டு போவாங்க. இங்கயும் பல சண்டைகள் நடக்கும். யாரு முன்னாடி வந்தா, யாரு பின்னாடி வந்தானு செம சண்டை நடக்கும். சில சமயம் பொம்பளைங்க முடிய பிடிச்சி சண்டை போடறதையும் பார்க்கலாம்.

இப்படி கஷ்டப்பட்டு பிடிக்கிற தண்ணீரை கொஞ்சமும் வீணாக்காம சிக்கனமா பயன்படுத்தறது ரொம்ப முக்கியம். எங்க அம்மா அதை ரொம்ப வலியிருத்துவாங்க. இப்ப கூட எங்க அம்மா தண்ணீரை சிக்கனமா தான் பயன்படுத்துவாங்க. எனக்கும் அது தான் பிடிக்கும். இன்னைக்கும் தண்ணி எடுக்க ஏழு எட்டு கிலோ மீட்டர் நடக்குற மக்கள் இருக்காங்க. அதனால தண்ணியோட 
சிறப்பை உணர்ந்து சிக்கனமா பயன்படுத்துங்க மக்களே. தண்ணி சிக்கனமா பயன்படுத்தறவங்க வீட்ல தான் மகாலட்சுமி தங்குவானு எங்க பெரியம்மா சொல்லுவாங்க. அது எந்த அளவுக்கு உண்மையோ தெரியாது ஆனா தண்ணி சிக்கனமா பயன்படுத்துலனா சீக்கிரமா அவுங்க அக்கா நம்ம வீட்டுக்கும், நாட்டுக்கும் வந்துடுவாங்கனு மட்டும் எனக்கு தெரியுது.

தண்ணிரை சிக்கனமாக பயன்படுத்த சில ஆலோசனைகள்.

பல்லு விளக்கும் போது பைப்பை திறந்து விட்டுட்டு விளக்காதீங்க. முடிஞ்ச வரை Mugல தண்ணி பிடிச்சி பயன்படுத்துனா நல்லது.

ஷவர்ல குளிக்கறதை விட பக்கெட்ல தண்ணி பிடிச்சி குளிக்கறது நல்லது.

வெஸ்டர்ன் டாய்லட் பயன்படுத்தினா தேவையில்லாம ஃபிளஷ் பண்ணாதீங்க. (அதுக்குனு தேவையானப்ப ஃபிளஷ் பண்ணாம விட்டுட்டாதீங்க).

ஷேவ் பண்ணும் போது பைப்பை திறந்து விட்டுட்டே ஷேவ் பண்ணாதீங்க. ரேசரை கழுவும் போது மட்டும் தண்ணீரை திறந்து விடவும்.

ஏதாவது பைப்ல இருந்து தண்ணி சொட்டிட்டு இருந்தா பைப்பை டைட்டாக மூடவும். அப்படி இல்லைனா கீழ பக்கெட் ஏதாவது வைத்து தண்ணிரை சேகரிக்கவும்.

பாத்திரம் விளக்கும் போதும் தேவையில்லாமல் பைப்பைத் திறந்து வைக்காதீர்கள்.

ரஜினியோட ஒரு துளி வியர்வையை விட ஒரு துளி தண்ணீருக்கு மதிப்பு அதிகமா குடுங்க. அதான் ஒரு பவுன் காசுக்கு கொடுக்கற மதிப்பை கொடுங்கனு சொன்னேன்.

Sunday, March 22, 2009

கசினோ, காதல் கதைகள் - 2

“What is this story man? I will tell you a story" அப்படினு மொனிஷ் ஆரம்பிச்சாரு. சரி, இதுக்கு மேல தமிழ்ல சொல்றேன்.


“நானும் அந்த பொண்ணும் மூணாவதுல இருந்து பத்தாவது வரைக்கும் ஒண்ணா படிச்சோம். நாங்க ரெண்டு பேரும் நல்ல நண்பர்கள். நான் அந்த பொண்ணை பத்தாவதுல ப்ரொப்போஸ் பண்ணேன். அதை அவள் ஏத்துக்கல. அதுக்கு அப்பறம் காலேஜ் எல்லாம் வேற வேற இடத்துல. அதாவது டென் ப்ளஸ் டூ, இஞ்சினியரிங் எல்லாம். ஒரே ஏரியாவுல இருந்ததால அடிக்கடி பார்த்துக்குவோம். ஆனா பேசிக்கல. நான் யூ.எஸ்க்கு MS படிக்க புறப்பட்டேன். சரியா நான் செக் இன் பண்ண போறதுக்கு முன்னாடி எங்க இருந்தோ வந்தா. என் கைலை ஒரு பிள்ளையார் சிலையை கிப்ட் பண்ணா”


“வாவ்”


“நான் யூ எஸ் வந்தா ஆறாவது நாள், சரியா அவளும் இங்க MS படிக்க வந்தா”


எல்லாருக்கும் ஆச்சரியம்.


"அதுக்கு அப்பறம் ரெண்டு வருஷம். நானும் அவளும் தினமும் பேசிக்குவோம். ரெண்டு பேரும் வேற வேற யுனிவர்சிட்டி. ரெண்டு வருஷம் கழிச்சி நான் மறுபடியும் ப்ரொப்போஸ் பண்ணேன். இந்த தடவை அவ அதை ஏத்துக்கிட்டா”


“வாவ். சூப்பர்”


“அதுக்கு அப்பறம் மூணு வருஷம். நானும் அவளும் அமெரிக்காவுல சுத்தாத இடமே இல்லை. Florida, Vegas அப்படினு எல்லா இடமும் சுத்தினோம். We had lots of fun. ரொம்ப சந்தோஷமா இருந்தோம். அப்பறம் கல்யாணம் பண்ணிக்கலாம்னு வீட்ல பர்மிஷன் கேட்டோம். எங்க வீட்ல ஒத்துக்கிட்டாங்க. ஆனா அவுங்க வீட்ல பயங்கர பிரச்சனை. அவுங்க வேற ஜாதி. அதனால அவுங்க கொஞ்சம் கூட ஏத்துக்கற மாதிரி இல்லை. அவுங்க அம்மா சூசைட் பண்ணிக்குவோம்னு அவளை மிரட்டினாங்க. அவள் வீட்டுக்கு ஒரே பொண்ணு. என்ன பண்றதுனு என்கிட்ட கேட்டாள். உங்க வீட்ல சொல்ற மாதிரி செய்னு சொல்லிட்டேன். அடுத்த மூணாவது மாசத்துல அவ வீட்ல மாப்பிள்ளை பார்த்தாங்க. அவள் கல்யாணம் பண்ணிக்கிட்டா. ரெண்டு வருஷத்துல ஒரு பையன். நான் இங்க இப்படி இருக்கேன்”


ஒரு அஞ்சு நிமிஷம் கார்ல யாரும் பேசாம வந்தோம். என்ன பேசறதுனு யாருக்கும் தெரியலை.


செந்தில் பேச ஆரம்பிச்சாரு. “அதுக்காக நீ இன்னும் கல்யாணம் பண்ணிக்காம இருக்கறது சரியா? நீயும் கல்யாணம் பண்ணிக்கலாம் இல்லை”


“நான் அவ கல்யாணம் பண்ண அந்த சமயத்துலயே கல்யாணம் பண்ணிக்கலாம்னு யோசிச்சேன். ஆனா அது ஏதோ சரியா தெரியலை. கல்யாணம் பண்ணிக்கறது இந்த மாதிரி காரணத்துக்காகவானு யோசிச்சி விட்டுட்டேன்”


“இருந்தாலும் வயசாகிட்டே போகுதில்லை” மறுபடியும் செந்தில். எனக்கு என்ன பேசறதுனே தெரியலை. மொனிஷ்க்கு முப்பது வயசுக்கு மேல ஆச்சு.


“Is age is the only criteria for marraige? I think I am still not ready for the marraige”


“ஆனா இந்த தனிமை கஷ்டமா இல்லையா?” ஏதாவது கேக்கனுமேனு கேட்டேன்.


“நான் தான் எப்பவுமே பசங்களோட இருக்கனே. எனக்கு எதுவும் கஷ்டமில்லை. நிஜமா பார்த்தா காதல்னு ஒண்ணு இல்லை. நமக்கு அந்த பொண்ணு வேண்டும்னு நினைக்கிற எண்ணம் தான் அது. உண்மையான பாசம்னா அது பிள்ளைங்க மேல அப்பா, அம்மாக்கு இருக்குறது தான். மத்தது எல்லாம் பொய்”


மறுபடியும் அமைதி. கொஞ்ச நேரம் கழிச்சி பேச ஆரம்பிச்சாரு.


“பசங்க எப்பவுமே ரொம்ப எமோஷனல். பொண்ணுங்க அப்படி இல்லை. Their brains are segregated. They can change their mind soon. They are very practical. ஆனா பசங்களுக்கு தான் கஷ்டம்”


“அந்த பொண்ணு அதுக்கப்பறம் உங்களுக்கு எதுவும் ஃபோன் பண்ணி உங்களை கல்யாணம் பண்ணிக்க சொல்லி சொல்லலையா?” இது நான்.


“இல்லை. அதுக்கு அப்பறம் அவக்கிட்ட நான் எதுவும் பேசல”


ஒரு பத்து நிமிஷம் எல்லாரும் அமைதியா இருந்தோம்.


அடுத்து பாட்டு சிடி மாத்தினோம்.ஹாய் மாலினி. ஐ அம் கிருஷ்ணன் அப்படினு ஆரம்பிச்சது. நான் அவர்ட பேச ஆரம்பிச்சேன்.


”இந்த படம் தெலுகுல கூட வந்துச்சு. சூர்யா சன் ஆஃப் கிருஷ்ணா அப்படினு வந்துச்சு. அதுல ஹீரோ ஹீரோயினை முதல்ல ட்ரைன்ல பார்ப்பான். உடனே ப்ரப்போஸ் பண்ணிடுவான்...” அப்படினு படத்து கதையை சொன்னேன். முதல் ஹீரோயின் பாம் ப்ளாஸ்ட்ல செத்து போறதோட கதை முடிஞ்சிடுச்சினு நான் சொன்னேன்.


”இதை விட சில கொடுமைகள் எல்லாம் நிஜத்துலயும் நடந்திருக்கு” அப்படினு அவர் ஆரம்பிச்சாரு.


“என் ஃபிரண்ட் ஒருத்தன். காலேஜ்ல அவனும் ஒரு பொண்ணும் ரொம்ப நல்லா பழகிட்டு இருந்தாங்க. சம்மர் வெக்கஷனுக்கு அந்த பொண்ணு அவுங்க வீட்டுக்கு போச்சு. காலேஜ் ஆரம்பிச்சி மூணு மாசமாகியும் வரலை. அவன் ஒரு வழியா அவுங்க வீட்ல விசாரிக்கும் போது தான் தெரிஞ்சிது, அந்த வெக்கஷனுக்கு போகும் போது பஸ் ஆக்சிடெண்ட்ல அந்த பொண்ணு இறந்துடுச்சினு. அதுக்கு அப்பறம் அந்த பையன் தண்ணி, ட்ரக்னு தடம் மாறிட்டான். அவன் வாழ்க்கையே வீணா போயிடுச்சி”


இரண்டு நிமிஷம் கழிச்சி அவரே சொன்னாரு, ”கதையா கேக்க தான் இதெல்லாம் நல்லா இருக்கும். நிஜத்துல இந்த வலி எல்லாம் அனுபவிக்கறது ரொம்ப கொடுமை.” அவரோட குரல்ல அந்த வலி தெரிஞ்சிது.

சிவாஜி ஸ்பெஷல்

இசை கேட்டால்



எங்கிருந்தோ வந்தான்




தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்




ஒரே ஒரு ஊரிலே




உள்ளதை சொல்வேன்



Happy இன்று முதல் Happy



அந்த நாள் ஞாபகம்.. நெஞ்சிலே வந்ததே நண்பனே




உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதடா



இதுக்கெல்லாம் நான் விளக்கம் சொல்றதை விட ஜி.ரா அருமையா வந்து சொல்லுவாரு... I am the waiting :)

Wednesday, March 11, 2009

வெறுத்துப் போனவை!

சில சமயம் நாம பார்த்து ரொம்ப ஏங்கிய பொருட்கள், கிடைத்த சில நாட்களில் அதன் மேல் இருக்கும் மோகம் குறைந்து வெறுத்துப் போவது உண்டு. அப்படி நான் வெறுத்துப் போன சில விஷயங்களை பற்றிய பதிவு தான் இது.

ஏரோப்ளேன் பயணம்:
சின்ன வயசுல இருந்து ஏரோப்ளேன்னா அவ்வளவு ஆசை. எப்ப ஏரோப்ளேன் சத்தம் கேட்டாலும் வானத்தைப் பார்க்க பெரிய கூட்டமே இருப்போம். வகுப்பறைல‌ உட்கார்ந்திருக்கும் போது சத்தம் கேட்டுச்சுனா எல்லாரோட பார்வையும் ஜன்னல் வழியா வானத்துல தான் இருக்கும்.

சில சமயம் சத்தம் மட்டும் கேட்கும், ஏரோப்ளேன் எங்க இருக்குனு தெரியாது. மேகத்துக்கு நடுவுல ஒளிஞ்சிக்கிட்டு இருக்கும். வெளிய வந்தவுடனே யாராவது பார்த்து "அங்கப் பாரு, அங்கப் பாரு"னு சொன்னவுடனே எல்லாரும் அதை பார்த்து சந்தோஷமாயிடுவோம்.

வீட்ல இருக்கும் போது சத்தம் கேட்டுச்சுனா மொட்டை மாடிக்கு ஓடிப்போய் வேடிக்கைப் பார்ப்போம். அப்ப எங்க எல்லாரோட லட்சியமும் ஒரு தடவையாவது ஏரோப்ளேன்ல போகனும்னு தான்.

இப்ப‌டி சின்ன‌ வ‌ய‌சுல‌ இருந்து ஏங்கிய‌ ஏரோப்ளேன் ப‌ய‌ண‌ம், முத‌ல் முறையா சென்னைல‌ இருந்து பாஸ்ட‌ன் வ‌ந்த‌ ப‌ய‌ண‌த்துல‌யே வெறுத்துப் போச்சு. சென்னைல‌ ஜெட் ஏர்வேஸ்ல‌ ஏறும் போது இருந்த‌ ச‌ந்தோஷ‌மும், குறுகுறுப்பும், பாரிஸ்ல‌ வ‌ந்து இற‌ங்கும் போதே குறைஞ்சி போச்சி.

ஏதோ பஸ் பயணத்துல‌ இருக்குற‌ ஒரு உயிரோட்ட‌ம் ஏரோப்ளேன் ப‌ய‌ண‌த்துல‌ இல்லை. ஒரே இட‌த்துல‌ உட்கார்ந்திருக்க‌ற‌து ம‌ட்டும் தான் கார‌ண‌மா, இல்லை ப‌க்க‌த்துல‌ உட்கார்ந்திருக்க‌ற‌ ம‌னித‌ர்க‌ளின் இறுகிய‌ முக‌ம் தான் கார‌ண‌மானு தெரிய‌ல‌. ஏரோப்ளேன் ப‌ய‌ண‌த்தை ரொம்ப‌ வெறுக்க‌ ஆர‌ம்பிச்சிட்டேன்.

ஒரு வேளை ரெண்டு ம‌ணி நேர‌ம், மூணு ப‌ணி நேர‌ம் ப‌ய‌ண‌மாக‌ இருந்திருந்தால் பிடித்திருக்கும் போல‌. சின்ன‌ வ‌யசுல‌ ஏங்கி இன்று பிடிக்காம‌ல் போன‌ லிஸ்ட்ல முக்கியமான‌ இட‌த்துல‌ இது தான்.

தொலைக்காட்சி :

சின்ன வயசுல டீவி பார்க்கறதுனா அவ்வளவு ஆர்வம் இருக்கும். தூர்தர்ஷன் வந்த புதுசுல எப்படி ஏங்கி ஏங்கி பார்த்திருக்கோம். முன்னோட்டம்னு ஒரு நிகழ்ச்சி இருக்கும், அதுல அடுத்து வாரம் வர போற எல்லா நிகழ்ச்சியை பத்தியும் சொல்லுவாங்க. அதை விடாம பார்த்து முக்கியமான நிகழ்ச்சியை எல்லாம் குறித்து வைத்துப் பார்ப்போம்.

வெள்ளிக்கிழமை ராத்திரியும், ஞாயிறு சாயந்திரமும் எங்க வீட்ல டீவி பார்க்க ஒரு பெரிய பட்டாளமே இருக்கும். எங்க வீட்ல டீவி வரதுக்கு முன்னாடி எங்க பக்கத்துத் தெருல தான் இருக்கும். நாங்க அங்க போய் பார்க்கறது பிடிக்காம எங்க அப்பா டீவி வாங்கினார். அதுவும் இல்லாமல் எங்க அப்பா டீவி எல்லாம் வாங்க மாட்டாரு, டீ தான் வாங்குவாருனு நான் கிண்டல் பண்ணது கூட காரணமா இருக்கலாம். அப்ப நான் அஞ்சாவது படிச்சிட்டு இருந்தேன். அப்பவே நக்கலு, திமிரு எல்லாம் இருந்தது ;)

சில சமயம் டீவி திடீர்னு மக்கர் பண்ணும். உடனே ஆன்டனாவை திருப்பறதுக்கு ஒரு கூட்டமே இருக்கும். பொதுவா எங்க ஏரியால இருந்து ஊட்டி, கொடைக்கானல் ஸ்டேஷன் தான் தெரியும். ஏதாவது மக்கர் பண்ணுச்சுனா, ஆன்டெனா திருப்பறதுக்கு ஒரு கம்பி இருக்கும். அதை எடுத்துட்டு ஒரு நாலஞ்சி பேர் ஓடுவோம். ஊட்டி பக்கம் இருந்தா கொடைக்கானல் பக்கம் திருப்புவோம். அப்படி திருப்பும் போது பார்த்து பார்த்து திருப்பனும்.

ஒரு நாலஞ்சி டிகிரி மாறினாலும் தெளிவா தெரியாது. மாடில இருந்து தெரியுதா தெரியுதானு கீழ நிக்கறவர்கிட்ட கேட்போம். அவுங்க உள்ள இருக்கறவங்க கிட்ட கேட்டு சொல்லுவாங்க. தெரிய ஆரம்பிச்ச உடனே வேகமா கீழ ஓடி வருவோம். சில சமயம், இப்படி செஞ்சி தெரிய ஆரம்பிக்கறதுக்குள்ள ஒலியும் ஒளியும் முடிஞ்சிடும்.

இப்படி ரசிச்சி ரசிச்சி பார்த்த டீவி நிகழ்ச்சிகள், கேபில் வந்தவுடனே மாற ஆரம்பித்தது. ஊட்டி, கொடைக்கானல் மறந்து போனோம். தடங்கலுக்கு வருந்துகிறோம் மறந்து போனோம். அப்ப ரொம்ப சந்தோஷமா இருந்தது. அதன் பிறகு வந்த தொடர் நாடகங்களை எல்லாரும் ரசித்துப் பார்க்க ஆரம்பித்தோம்.

ஆனால் இப்ப அந்த டீவியை பார்த்தாலே எனக்கு எரிச்சல் தான் வருது. கொஞ்ச நேரம் டீவி பார்க்கறேனேனு கெஞ்சிக் கொண்டிருந்த காலம் மாறி கொஞ்சம் டீவியை ஆஃப் பண்ணுங்களேன், ஒரே தலைவலினு சொல்ற மாதிரி இருக்கு. இன்னைக்கு ரேஞ்ச்ல அறிவியல் வளர்ச்சியில் ஏற்பட்ட மாற்றத்தின் முதல் வில்லன் யார் என்று கேட்டால் நான் யோசிக்காமல் சொல்வது டீவியை தான்.

க்ளாடியேட்டர் படத்துல கமாடஸ் மக்கள் எதை பத்தியும் சிந்திக்கக் கூடாதுனு க்ளாடியேட்டர் ஆட்டத்தை நடத்தற மாதிரி, இன்னைக்கு மக்கள் எதைப் பத்தியும் சிந்திக்கக் கூடாதுனு டீவி நிகழ்ச்சிகளை நடத்துற மாதிரி ஒரு எண்ணம்.

செல் ஃபோன் :

வேலைக்குப் போனவுடனே முதல்ல வாங்கனும் நான் நினைச்சது செல் ஃபோன் தான். அது வரை என்னிடம் செல் ஃபோன் இல்லை. சம்பளம் வந்த முதல் மாசமே வாங்கினேன். அந்த அளவுக்கு செல் ஃபோன் மேல ஒரு க்ரேஸ் இருந்தது.

செல் ஃபோன்ல எந்நேரமும் பேசிட்டு இருந்தது எல்லாம் கூட ஒரு கனாக்காலம் மாதிரி தான் இருக்கு.

இப்ப ஏனோ எனக்கு செல் ஃபோன் பிடிப்பதில்லை. ஏதோ என் தனிமையைக் கலைக்க வந்த ராட்சசன் மாதிரி இருக்கு. அதுவும் ஒரு வாரம் விடாம சனி, ஞாயிறு காலைல ஃபோன் பண்ணி, பாலாஜி ரொம்ப முக்கியமான ஒரு பிரச்சனை, உடனே நீ லாகின் பண்ணனும்னு சொல்ற இந்த ஃபோன் கால் தான் எனக்கு இது மேல வெறுப்பு வர முதல் காரணம்.

அடுத்து ஆறு மணிக்கு வீட்டுக்கு போய் ஒரு ஒரு மணி நேரத்துல, பாலாஜி இப்ப ஒரு முக்கியமான டெஸ்ட் ரன் பண்ணனும், நீ கொஞ்சம் பார்த்து ஆரம்பிச்சிடறயா? ஆறு மணி நேரமும் பார்க்க வேண்டியதில்லைனு சொல்லும் போது அதை தூக்கி போட்டு உடைக்கலாமானு ஒரு கோபம் வருது.

லேப் டாப் :

நான் முத‌ன் முத‌லா லேப் டாப் தொட்டு பார்த்த‌து எங்க‌ ஃபைன‌ல் இய‌ர்ல (2003) தான். அதுவும் எங்க டிப்பார்ட்மெண்ட் செக்ர‌ட்ரி (எங்க‌ க்ளாஸ் மேட் தான்), சிம்போசிய‌ம் அப்ப‌ லேப் டாப் எடுத்துட்டு வ‌ந்தான். அவுங்க‌ அப்பா யூ.எஸ்ல‌ இருந்து அதை வாங்கி வ‌ந்து ஒரு வார‌ம் தான் ஆகியிருந்த‌து. அதை தொட்டு பார்க்க‌ற‌துக்கு அப்ப‌ அவ்வ‌ள‌வு போட்டி இருந்த‌து.

அதுக்கு அப்ப‌ற‌ம் நான் க‌ம்பெனில‌ ஜாயின் ப‌ண்ண கொஞ்ச‌ நாள்ல‌ எங்க‌ மேன‌ஜ‌ர் என்னை கூப்பிட்டு சில‌ ச‌ந்தேக‌ங்க‌ளை கேட்கும் போது அவ‌ர் லேப் டாப்பை என்கிட்ட‌ கொடுத்து அந்த‌ குறிப்பிட்ட‌ அப்ளிகேஷ‌னை ப்ர‌வுஸ் ப‌ண்ணிக் காட்ட‌ சொன்னாரு. என‌க்கு அதுல‌ ம‌வுஸ் இல்லாம‌ எப்ப‌டி நேவிக‌ட் ப‌ண்ற‌துனு தெரிய‌லை. அதை அவ‌ர் தான் சொல்லி கொடுத்தாரு.

அப்ப‌ற‌ம் ஆன்சைட் வ‌ரும் போது என‌க்கு எங்க‌ க‌ம்பெனில டொஷிபா லேப்டாப் கொடுத்தாங்க‌. வாங்கும் போது அவ்வ‌ள‌வு ஆசையா வாங்கினேன். ரொம்ப‌ நாள் அது எப்ப‌வும் என்கூட‌வே இருக்கும். ப‌டுக்கும் போது கூட‌ ப‌க்க‌த்துல‌ தான் இருக்கும். தூங்க‌ற‌ வ‌ரைக்கும் ஏதாவ‌து ப‌ண்ணிட்டே இருப்பேன். அப்ப‌ அப்ப‌ எழுந்து பின்னூட்ட‌த்தை வெளியிடுவேன் (2006ல‌).

எங்க ரூம்ல இப்ப ரெண்டு பேருக்கு, மொத்தம் ஆறு லேப் டாப். ஆளுக்கு மூணு லேப் டாப். எங்க கம்பனி லேப் டாப் ஒண்ணு, க்ளைண்ட் லேப் டாப் ஒண்ணு, பர்சனல் லேப் டாப் ஒண்ணு. இதுல‌ க்ளைண்ட் லாப் டாப்பால‌ தான் நிறைய‌ பிர‌ச்ச‌னை. எல்லா நேர‌மும் ஃபோன் ப‌ண்ணி க‌னெக்ட் ப‌ண்ண சொல்லுவாங்க‌. செம‌ டார்ச்ச‌ரா இருக்கும். லேப் டாப் எடுத்தாலே இப்ப‌வெல்லாம் க‌டுப்பா இருக்குது. இதை எவ‌ன்டா க‌ண்டுபிடிச்சான்னு கோப‌ம் வ‌ருது.

இந்த‌ப் ப‌திவுல‌ இருக்க‌ற‌தெல்லாம் நான் ரொம்ப‌ விரும்பி இப்ப‌ வெறுத்து போன‌ விஷ‌ய‌ங்க‌ள். ஒரு சில‌ர் இதை எல்லாம் கொஞ்ச‌ம் முன்னாடியே வெறுத்திருக்க‌லாம், ஒரு சில‌ர் இவைக‌ளை இன்னும் நேசித்து கொண்டிருக்க‌லாம். இதை நீங்க‌ள் வெறுக்க‌ ஆர‌ம்பிக்கும் போது என் ஞாப‌க‌ம் வ‌ர‌லாம்.

Sunday, March 08, 2009

கல்லூரிப் பயணம்

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தை அடையும் பொழுது மணி சரியாக ஏழு ஆகியிருந்தது. இன்னும் கோவை மாநகரம் ஆறு வருடத்திற்கு முன் இருந்ததை போலவே மிதமான குளிரோடு இருந்தது. கோவையில் தங்கியவர்கள் வேறு எங்கும் போக முடியாததற்கு அங்கிருக்கும் பண்பான மக்கள், சிறுவாணி தண்ணிருக்கு அடுத்த காரணம் இந்த குளிர்ச்சி தான்.

பேருந்து நிலையத்தை விட்டு வெளியே வந்தேன். மேட்டுப்பாளையம் செல்லும் தனியார் பேருந்து ஒன்று ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தது. வெளியே தொங்கி கொண்டிருந்த அந்த பதின்ம வயது நடத்துனரிடம், துடியலூர் என்றேன்.

“ஏறிக்கோங்க”

ஏறி அமர்ந்தேன். சத்தமாக பாட்டு ஓடிக்கொண்டிருந்தது. சாய்பாபா காலனியை கடந்து செல்லும் போழுது ”தாலு சே தாலு மிலா” என்று என்னை பார்த்து கொண்டே ஆடிய ஷாலினி ஒரு நிமிடம் மனதில் வந்து மறைந்தாள். எட்டு ஐந்து மணிக்கு துடியலூர் சென்றடைந்தேன். துடியலூர் சுத்தமாக மாறியிருந்தது. நிறைய பேக்கரிகள் அழகழகான சீரியல் லைட்டுடன் இருந்தன. ஆலமரத்தடியில் இருந்த பெஞ்ச் கடை இல்லை.

ஐந்து நிமிட நடையில் மினி பஸ் நிற்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தேன். நான் இரண்டாமாண்டு படிக்கும் போது தான் மினி பஸ் அறிமுகமாகியிருந்தது. அதற்கு முன் டவுன் பஸ் தான்.
அதுவும் காலேஜிலிருந்து இரண்டு கிலோ மீட்டருக்கு முன்னாலே வட்டமலைப்பாளையம் பிரிவில் இறக்கிவிடுவார்கள். முதல் வருடம் முழுவதும் அந்த டவுன் பஸ் தான். மினி பஸ்
வந்தபிறகு டவுன் பஸ்ஸை எல்லோரும் மறந்து போனோம்.

நான் வந்த இரண்டாவது நிமிடம் பஸ் வந்து சரியாக என் முன்னால் நின்றது. நான் எந்த தயக்கமும் இல்லாமல் ஏறி ஒரு ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து கொண்டேன். ”ஏ அசைந்தாடும் காற்றுக்கும், அழகான பூவுக்கும் காதலா, காதலா” ஓடிக்கொண்டிருந்தது. இந்த படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் மினி பஸ்களின் தேசிய கீதம் போல. அடுத்த முப்பது நொடிக்குள் பேருந்து நிரம்பியது. ஐந்தாவது நிமிடத்தில் பயணம் ஆரம்பித்தது. என்னை சுற்றிலும் கல்லூரி மாணவர்கள். என் ஜூனியர்ஸ். எந்த வித பதட்டமோ, வருத்தமோ இன்றி ஒருவரை ஒருவர் கலாய்த்து கொண்டிருந்தனர். இருக்கை கிடைத்த மாணவிகள் அவர்களது வகுப்பு தோழர்களின் பைகளை வாங்கி காலுக்கு அடியிலும், பிடித்தமானவர்களின் பையை மடியிலும் வைத்து கொண்டார்கள்.

அனைவரது முகமும் மலர்ச்சியாக இருந்தது. ஆறு வருடத்திற்கு முன்பு என் முகமும் இப்படி தான் இருந்தது. எந்த வித வருத்தமும் இல்லாமல் அடுத்த நாளை பற்றி கவலைப்படாமல்
மிகவும் சந்தோஷமாக இருந்தேன். என் நினைவுகள் பின்னோக்கி செல்வதை தவிர்க்க நான் முயலவில்லை.

ஆகஸ்ட் இருபத்தி மூன்று, தொன்னுற்றி ஒன்பதாம் ஆண்டு. இந்த நாள் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். அன்று தான் என் கல்லூரி வாழ்க்கையின் முதல் நாள். விடுதிக்கு ஒரு
நாள் முன்பே வந்துவிட்டதால் ஒரு சிலர் நண்பர்களாகி இருந்தார்கள். அவர்களுடன் முதல் நாள் வகுப்பிற்கு சென்று அமர்ந்தேன். அறுபது பேர் வகுப்பில் இருபது பெண்கள் இருந்தார்கள்.

எனக்கு ஒருத்தி மட்டும் தான் கண்ணுக்கு தெரிந்தாள். அவள் பெயர் என்னவாக இருக்கும் என்று நானே யோசிக்க ஆரம்பித்தேன்.

முதல் வகுப்பு கெமிஸ்ட்ரி வகுப்பு. கம்ப்யூட்டர் சயின்ஸிற்கும் கெமிஸ்டிரிக்கும் என்ன சம்பந்தம் என்று புரியவில்லை. இருந்தாலும் பனிரெண்டாவதில் படித்த பாடம் என்றதால் கொஞ்சம் மகிழ்ச்சி. ஒவ்வொருவராக பெயர்களை சொல்லி கொண்டு வந்தார்கள். அவள் எழுந்திரிக்கும் பொழுது அவளை விட எனக்கு பதட்டம் அதிகமா இருந்தது. அவள் ஷாலினி என்று சொல்லி முடித்ததும் ”என்னை தாலாட்ட வருவாளா” பாடல் மனதில் ஒலித்தது.

ஹாஸ்டலுக்கு சென்றவுடன் ரேகிங் தொடங்கியது. தமிழில் உள்ள அனைத்து கெட்ட வார்த்தைகளாலும் திட்டப்பட்டு மிச்ச மீதி இருந்த சொரனையை இழந்தோம். சீனியரை முறைத்தவர்கள்

அதிகமாக ரேகிங் செய்யப்பட்டார்கள். எகத்தாளம் பேசியவர்கள் அடி வாங்கினார்கள். ஒரு முறை என் அருகிலிருப்பவனிடம் ஒரு கெட்ட வார்த்தையை சொல்லி சொல்ல சொன்னார்கள்.
அவனோ ’புத்திசாலி’த்தனமாக “நான் நல்ல குடும்பத்துல இருந்து வந்தவன். நான் கெட்ட வார்த்தையெல்லாம் பேச மாட்டேன்”னு சொல்ல ”அப்ப நாங்க எல்லாம் என்ன @#$%&^ குடும்பத்துல இருந்து வந்தமா?” சொல்லிவிட்டு அவன் கன்னத்தில் ஒரு அரை கொடுத்தார். அவர் கையிலிருந்த சோறும் சாம்பாரும் அவன் கன்னத்தில் இருந்தது. கன்னத்தை தொடைக்காம சாப்பிட சொன்னார்கள். இந்த நல்ல குடும்பத்திலிருந்து வந்தவன் அந்த நான்கு ஆண்டுகளில் பேசாத “நல்ல” வார்த்தைகளே இல்லை என்று மாறி போனான்.

இந்த எல்லா கொடுமைகளிலும் எனக்கு மகிழ்ச்சியான ஒரு விஷயம் காலேஜ் லேப் தான். முதல் ஆண்டில் பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, கம்ப்யூட்டர் சயின்ஸ், வொர்க் ஷாப். மொத்தம் நான்கு லேப். இதில் மகிழ என்ன இருக்கு என்று நீங்கள் யோசிக்கலாம். அட்டெண்டென்ஸில் செந்தில்லுக்கு அடுத்த பெயர் ஷாலினி.

இருவரும் பிசிக்ஸ் லேபில் ஒரே குரூப். மீதி லேப்களில் அருகருகே இருந்தோம். ஷாலினி சாய்பாபா காலனியிலிருந்து வந்து கொண்டிருந்தாள். அவள் பிறந்தது படித்தது எல்லாமே கோயமுத்தூர் தான். கொஞ்சம் கொஞ்சமாக என்னுடன் பேச ஆரம்பித்தாள். பிசிக்ஸ் லேபிள் ஸ்பெக்ட்ரோமிட்டர் பிரசம் வைக்கும் போது அது முக்கோண வடிவத்திற்கு பதிலாக ஹார்டின் வடிவத்தில் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றியது. ரெசனன்ஸ் காலம் அப்பேரட்டஸ் செய்யும் போது கையில் வைத்திருக்கும் இரண்டு ஃபோர்க்கையும் அடித்து பக்கத்திலிருக்கும் மாணவர்கள் காதில் நான் வைக்க அவர்கள் அலறியதை பார்த்து சிரித்தாள். நான் மும்மரமாக ஏதோ செய்து கொண்டிருக்கும் போது என் காதுக்கருகில் அதை வைத்தாள். நான் அலறியதை பார்த்து பழிப்பு காட்டி சிரித்தாள். மத்தவங்களுக்கு இப்படி தானே இருக்கும் என்றாள். அவள் தான் அதை செய்கிறாள் என்று தெரிந்திருந்தால் அது இளையராஜா இசையை விட நன்றாக இருந்தது என்று தோன்றியிருக்கும்.

கெமிஸ்ட்ரி லேபில் அவளுக்கு பிப்பட்டை சரியாக பயன்படுத்த தெரியவில்லை. அவளுடைய பிப்பட்டை வாங்கி உதவ நான் முயலும் போது அவளுடைய துப்பட்டாவால் நன்றாக துடைத்து
கொடுத்தாள். ஒரு மாதிரி இருந்தது. பிப்பட் இனித்ததை போல் இருந்தது. இல்லை வேறு ஏதோ மோசமான சுவை. என்ன என்று நான் யோசிக்கும் முன் சிரிக்க ஆரம்பித்துவிட்டாள். தவறுதலாக சோடியம் ஹைட்ராக்சைடை வேகமாக இழுத்துவிட்டேன். எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் மாதிரி பேசன, இப்படி ஆகிவிட்டதே என்று சொல்வதை போல் இருந்தது அவள் பார்வை. இருந்தாலும் அழகாக சிரித்து கொண்டிருந்தாள். இப்படி நாளொரு லேபும், பொழுதொரு தவறுமாக எங்கள் நட்பு வளர்ந்து கொண்டிருந்தது.

முதல் வருடம் முடிந்து இரண்டாம் வருடத்தில் காலடி எடுத்து வைத்திருந்தோம். பத்து நாட்கள் சென்ற நிலையில் லெட்ரல் எண்ட்ரி மாணவர்கள் வந்து சேர்ந்தனர். அன்று தான் கேசவனும் வந்தான். எங்கே அமர்வது என்று அவன் யோசித்து கொண்டிருக்கும் பொழுது நான் நகர்ந்து இடம் விட்டேன். அவன் பார்வையில் ஒரு அலட்சியம் இருந்தது. இண்டர்வெலில் எங்கள் வகுப்பு மாணவர்களே லேட்டரல்களை ரேகிங் செய்ய ஆரம்பித்தார்கள். நாட்டு சரக்கடிப்பவனை ”எங்க இந்த பீர் அடிச்சிட்டு பேசு”னு சொல்வதை போல் இருந்திருக்கும் . கேசவனை கூப்பிட்டு பாட சொன்னார்கள். அரை நிமிடம் யோசித்தவன், ”சில்லென்று பூத்த சிறுநெருஞ்சி காட்டினிலே, நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாலே” என்று கண்ணை மூடி பாட ஆரம்பித்ததும் அனைவரும் அமைதியானோம். நான்கு நிமிடத்தில் அவன் முடித்ததும் அனைவரும் கை தட்டினார்கள். எதையும் மதிக்காமல் வெளியே சென்றுவிட்டான். அடுத்த ரெண்டு வகுப்பிற்கு அவன் வரவில்லை.

அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக எங்களுடன் பழக ஆரம்பித்தான். அவன் வீடு காலேஜிலிருந்து மூன்று கிலோமீட்டர் தூரம் தான். அதனால் அடிக்கடி அல்லு போட்டு இடிகரைக்கு சாப்பிட போகும் போது அவன் வீட்டிற்கும் செல்வோம். சில சமயம் சனி, ஞாயிறன்று சிக்கன் சாப்பிட அவன் வீட்டிற்கு அழைக்கப்படுவோம். வெக்கம் மானமில்லாமல் அனைவரும் பேய் தீனி தின்று வருவோம். அது மட்டுமில்லாமல் இண்டர்வெலில் அவனுடைய டிபன் பாக்ஸை காலி செய்துவிடுவோம். ஹாஸ்டலில் காலையில் டிபன் சாப்பிடுபவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். சில சமயம் அவனிடம் முதல் நாள் மெனு சொல்லிவிடுவோம். அதிகமாக சொல்லப்படுவது அரிசி, பருப்பு சாதமும் உருளைகிழங்கு வறுவலும் தான். அவனும் சரியாக கொண்டு வந்துவிடுவான்.

எங்களுள் ஒருவனாக அவன் சீக்கிரம் மாறி இருந்தான். ஆனால் பெண்களுடன் பேசுவது அவனுக்கு சுத்தமாக பிடிக்காது. அவன் முதல் நாள் பாடிய பாட்டிற்கு அவனுக்கு ஒரு வழக்கமான ஒரு லவ் ஃபெயிலியர் ஃப்ளாஷ் பேக் இருக்கும் என்று நினைத்து கொண்டிருந்தேன். பின்பு ஒரு நாள் விசாரிக்கும் போது அப்படி எதுவும் இல்லையென்றும் ஏதோ அவனுக்கு பெண்களை பிடிப்பதில்லை என்றும் சொன்னான். அழக ரசிக்க கத்துக்கணும்னு நான் சொன்னவுடன், பருவத்துல பன்னிங்க கூட அழகா தாண்டா இருக்கும் என்றான். கண்டிப்பா ஆண் பன்னிகளுக்கு அழகாத்தான் தெரியும் என்று சொல்ல நினைத்து பேக் ஃபையர் ஆகிவிடும் என்று சொல்லாமல் விட்டுவிட்டேன்.

இந்த நேரங்களில் ஷாலினியுடன் என் நட்பு லேப் தவிற பிற நேரங்களிலும் தொடர்ந்தது. கேசவன் இல்லாத நேரங்களில் அவளுடைய இருக்கைக்கு எதிரில் சென்று அமர்ந்து பேசி கொண்டிருந்தேன். அவளுடைய தம்பி முதல் நாள் அவளிடம் சண்டை போட்டதிலிருந்து கடைசியாக அவள் வாங்கிய புஜ்ஜி வரை என்னிடம் பகிர்ந்து கொண்டாள். புஜ்ஜி அவளுடைய பிங் நிற டெட்டி பொம்மை. பூனைக்கு தான் புஜ்ஜி என்று வைப்பார்கள் என்று நான் சொன்னதை அவள் ஏற்று கொள்ளவில்லை. கடைசியாக டெட்டியிடமிருந்து எனக்கு அந்த பெயர் வந்துவிட்டது. செந்தில் என்று அவள் கூப்பிடுவதை விட புஜ்ஜி என்று கூப்பிடுவது எனக்கு பிடித்திருந்தது. கேசவனுக்கு அந்த பெயர் தெரிந்ததும் என்னடா புஜ்ஜி, பஜ்ஜி என்று கிண்டல் செய்தான்.

மினி பஸ் காலேஜ் நிறுத்தத்தில் வந்து நின்றது. பஸ் முழுதும் காலியானது. இடிகரைக்கு செல்பவர்கள் இரண்டு மூன்று பேர் தான் இருந்தார்கள். காலேஜ் முழுதாக மாறியிருந்தது. தெரிந்த முகங்கள் ஏதாவது தெரிகிறதா என்று பார்த்தேன். வாட்ச்மேன் மாறியிருந்தார். வேறு யாரும் தெரியவில்லை. வண்டி புறப்பட்டது. காம்பவுண்ட் சுவரையும் மீறி பிரமாண்டமான ஆடிட்டோரியம் கண்ணில் பட்டது. அங்கே நடந்த முதல் நிகழ்ச்சி நினைவிற்கு வந்தது.

அப்பொழுது நாங்கள் மூன்றாம் ஆண்டு படித்து கொண்டிருந்தோம். கல்சுரல்ஸ் நிகழ்ச்சி. ”தில் யே பே செனு வே, ரஸ்தே பே நெயின் வே” ஷாலினி வட இந்திய ஆடையுடன் ஆடி கொண்டிருந்தாள். வேகமாக சென்று முதல் சீட்டிலிருந்த ஜீனியர் ஒருவனை எழுப்பிவிட்டு அமர்ந்தேன். ”தாலு சே தாலு மிலா” என்னை பார்த்து கொண்டே ஆடி கொண்டிருந்தாள். அட்டகாசமான நடனம். அவள் நடனம் முடிந்ததும் மேடைக்கு பின்னால் சென்று அவளை வாழ்த்தலாம் என்று புறப்பட்டேன். சரியாக அந்த நேரம் பார்த்து கதவருகே கேசவன் நின்றிருந்தான். இறுதியாக நடக்கும் பாட்டு போட்டியில் அவனை கலந்து கொள்ள சொல்லி அனைவரும் வற்புறுத்தி கொண்டிருந்தனர். அவனை கேட்காமலே அவன் பெயரை நான் கொடுத்திருந்தேன். என்னை பார்த்ததும் பிடித்து கொண்டார்கள்.

எப்படியும் ஷாலினி ஒரு ப்ரைஸ் வாங்கிடுவா. பசங்க சைட்ல இருந்து ஒருத்தவங்க கலந்துக்க வேண்டாமா? சும்மா பாடுடா, நிச்சயம் ப்ரைஸ் நமக்கு தான். எவ்வளவோ ஏத்திவிட்டு அவனை ஒத்துக்கொள்ள வைத்தோம். பிறகு அந்த இடத்தை விட்டு நழுவி ஷாலினியை தேடி சென்றேன். அங்கே ஷாலினி குனிந்து கொண்டு உட்கார்ந்திருந்தாள். நான் அவளை கூப்பிட்டேன். திரும்பவில்லை. விசும்பல் சத்தம் கேட்டது. ஷாலினி அழுது கொண்டுருந்தாள்.

என்ன நடந்தது என்று கேட்டதற்கு எதுவும் சொல்லவில்லை. விசும்பல் மட்டும் வந்து கொண்டிருந்தது. ”என்னடா ஆச்சு. சொல்லுடா” என்று நான் சொன்னதும் என்னையே ஒரு நிமிடம் பார்த்தாள். பிறகு பேச ஆரம்பித்தாள். அவள் ஆடி முடித்து வந்ததும் அவள் மேல் யாரோ மோதிவிட்டானாம். அவள் திரும்பி முறைத்ததற்கு, ”என்னடி பெரிய பத்தினியாட்டம் முறைக்கற. எப்ப பார்த்தாலும் அந்த செந்திலோட உரசிக்கிட்டே தானே சுத்துவ. நான் உரசுனா என்ன வந்துச்சாம்” என்று சொல்லி கொண்டிருக்கும் போதே அவன் டிப்பார்ட்மெண்ட் பசங்கள் அவனை இழுத்து கொண்டு சென்றுவிட்டார்களாம். அவன் MSc சாப்ட்வேர் நான்காம் ஆண்டு மாணவன் என்றும், பெயர் தெரியவில்லை என்றும், தண்ணி அடித்திருந்தான் என்றும் சொன்னாள்.

ஷாலினியுடன் ஆடிய MSc மூன்றாம் ஆண்டு மாணவியின் துணை கொண்டு அவன் யாரென்று கண்டுபிடித்தேன். அவனை தேட ஆரம்பித்தேன். அவன் ஆடிட்டோரியத்திற்கு பின்னால் நின்று
யாராவது வருகிறார்களா என்று பார்த்து கொண்டு தம் அடித்து கொண்டிருந்தான். அவனுடன் நான்கைந்து பேர் இருந்தார்கள். என்னை பார்த்ததும் ஒரு நிமிடம் குழம்பி பிறகு நான் யார் என்பதை புரிந்து கொண்டான். ”சில்லென்று பூத்த சிறுநெருஞ்சி காட்டினிலே, நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாலே” கேட்டு கொண்டிருந்தது. ”வந்துட்டாருடா ரோமியோ” என்று நக்கலாக சொல்லி சிரித்தான். ஒரு நிமிடத்தில் அவன் கண்ணாடி உடைந்திருந்தது. என் சட்டை கிழிந்திருந்தது. என் இடது கண்ணத்தில் லேசாக ரத்தம் வந்து கொண்டிருந்தது. அவன்
நெற்றியில் லேசாக ரத்தம். அவனுடன் இருந்த ஒருவனுடைய சட்டை கை மட்டும் கிழிந்திருந்தது. அங்கே கேட்ட சத்தத்தில் EEE HOD அந்த பக்கம் வந்துவிட்டார். அனைவரும் இருந்த இடம் தெரியாமல் ஓடி விட்டோம்.

நான் ஹாஸ்டலில் என் அறையில் இருந்தேன். இருபது நிமிடத்தில் கேசவன் அங்கே வந்து சேர்ந்தான். அவனுக்கு என்னை அடித்துவிட்டார்கள் என்று மட்டும் தெரிந்திருந்தது. காரணம் தெரியவில்லை. பயங்கர கோபமாக வந்தான். எவன்னு சொல்லுடா, நாளைக்கு ஒருத்தவனும் NGGO காலனியை தாண்ட மாட்டானுங்க. துடியலூர்ல இருந்து பசங்கள வர சொல்லிடறேன். அவனுங்களுக்கு எல்லாம் சூ#$ கொழுப்பெடுத்து ஆடுது போல. நாளைக்கு வாங்கினா தான் தெரியும். சரி, இப்ப நீ என் கூட வா. இன்னைக்கு ராத்திரி எங்க வீட்ல தங்கிக்கோ. நாளைக்கு பார்த்துக்கலாம் என்றான். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவனுக்கு காரணம் சொல்லவும் விருப்பமில்லை. வேறு சட்டை எடுத்து போட்டு கொண்டு கிளம்ப சொன்னான். தயங்கி கொண்டே கிளம்பினேன்.

ஆடிட்டோரியத்திற்கு முன்னால் நின்ற கேசவனுடைய சாமுராயை எடுத்து கொண்டு கிளம்பினோம். யாரோ, ”கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே” பாடி கொண்டிருந்தார்கள். முடிந்தவுடன் யாருக்கு பரிசு என்பதை கேட்டுவிட்டு செல்லலாம் என சொல்ல நினைத்து சொல்லாமல் விட்டுவிட்டேன். அங்கிருந்து கிளம்பி ஒரு கிலோமீட்டர் தூரத்தில் எங்கள் வண்டி நிறுத்தப்பட்டது. MSc நான்காம் ஆண்டு மற்றும் ஐந்தாம் ஆண்டு மாணவர்கள் ஒரு பத்து பேர் இருந்தார்கள். அங்கே இருந்த NGGO காலனியை சேர்ந்தவனிடம் கேசவன் சமாதானம் பேச முயற்சி செய்தான். ஏன்டா நாளைக்கு ஒருத்தன் கூட காலனியை தாண்ட முடியாதுனு சொன்னியாம். விடுதியில் அவன் என்னிடம் பேசியது அதற்குள் அவர்களுக்கு வந்து சேர்ந்திருந்தது. அதில் ஒருத்தனிடம் செல் ஃபோன் இருந்தது.

அந்த இடத்தை சரியாக மினி பஸ் கடந்து கொண்டிருந்தது. இப்பொழுது முன்பு போல அங்கே முள் செடிகள் இல்லை. ரியல் எஸ்டேட் காரர்கள் அங்கே ஒரு குச்சியில் போர்ட் மாட்டியிருந்தார்கள். தார் ரோட் இருந்தது.

நீ என்ன பெரிய கூ*யாடா? துடியலூர்ல இருந்து பசங்களை வர வெச்சா நாங்க பயந்துடுவோமா? அப்படி அவனுங்க வந்தா மட்டும் எங்களை என்னடா பண்ணுவான். பேசிக் கொண்டிருக்கும் போதே அவன் கையில் மாட்டியிருந்த காப்பு வெளியே வந்து அவன் கைப்பிடிக்குள் வந்தது. ஏதோ தப்பு நடக்க போகிறது என்று எனக்கு தொன்றியது. அந்த நிலவொளியில் அங்கே நடக்கவிருந்த பயங்கரம் எனக்கு புரிய ஆரம்பித்தது. கேசவனும் அதை புரிந்து கொண்டான். ஆனால் அவன் செயல் பட ஆரம்பிப்பதற்குள் அந்த காப்பு கேசவனின் வலது பக்க நெற்றியை பதம் பார்த்தது.

என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டிருந்த நான், அங்கே அருகே ரோடு போட கொட்டி வைத்திருந்த ஒரு கல்லை எடுத்து அவன் பின் தலையில் அடித்தேன். இருவருடைய கெட்ட நேரமும் வேலை செய்தது. கல்லை எடுக்கும் போதோ அவனை அடிக்கும் போதே என் கையிலிருந்து நீண்டிருந்த அதன் ஆறு இஞ்ச் கூர்மையான பகுதியை நான் கவனிக்கவில்லை. அந்த கல் அவன் தலையில் அப்படியே சொறுகி கொண்டது. ஒரு பக்கம் கேசவன் நெற்றியிலிருந்து ரத்தம் ஒழுக, மறு பக்கம் பின் மண்டையில் கல் பாய்ந்த அந்த மாணவன். அவன் தலையிலிருந்து கல்லை என்னால் எடுக்க முடியவில்லை. அங்கே இருந்த அனைவரும் ஓடிவிட்டார்கள்.

நான் அப்படியே அந்த கொட்டி வைத்திருந்த ஜல்லியின் மேல் அமர்ந்து விட்டேன். என்ன நடந்தது, என்ன செய்வது என்றே புரியவில்லை. ஐந்து நிமிடத்தில் அந்த இடத்தில் ஆயிரம் பேர் இருந்தார்கள். ஆம்புலன்ஸ், போலிஸ் ஜீப் இரண்டும் வந்தது. போலிஸ் ஜீப்பில் நானும், ஆம்புலன்சில் கேசவனும், தலையில் கல் சொருகியிருந்தவனும் ஏற்றப்பட்டோம். அன்று அடிப்பட்டவுடன் ஓடியவர்கள் தவறாமல் வந்து சாட்சி சொன்னார்கள். நன்னடத்தையால் ஆறு ஆண்டுகள் முடித்து வெளியே விட்டார்கள். நேராக கேசவனை பார்க்க வந்துவிட்டேன். இதோ
இடிகரை வந்துவிட்டது.

இடிகரையில் இந்த ஆறு ஆண்டுகளில் எந்த மாற்றமும் பெரிதாக காணப்படவில்லை. நேராக என் கால்கள் கேசவன் வீட்டிற்கு அழைத்து சென்றது. கதவு திறந்திருந்தது. நண்பர்கள் புடை சூழ வந்து கேசவனையும், அப்பாவையும் கிண்டல் செய்து கொண்டே சாப்பிட்ட அந்த முன் அறை விரிச்சோடி இருந்தது. அந்த குரல்கள் இன்னும் அந்த சுவர்களுக்குள் ஒளிந்திருக்கும் என்று நினைக்கிறேன். உள்ளே சென்றேன். சிமெண்ட் தரையில் இன்னும் குளிர் இருந்தது. இடது பக்கம் இருந்த அறை இருட்டாக இருந்தது. கேசவன் ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தான். பல நாள் வழிக்கப்படாத தாடி, காலில் விலங்குடன் இருந்தான். அவன் அருகே சென்று அமர்ந்தேன். அவன் கண்களை ஒரு நிமிடத்திற்கு மேல் பார்க்க முடியவில்லை. அவன் கால்களில் நிறைய தழும்புகள். நெற்றியில் வலது பக்கம் இன்னும் அந்த தழும்பு தெரிந்தது. அவனுக்கு நான் யார் என்று தெரியவில்லை. அம்மா சமையலறையில் பாத்திரத்தை உருட்டும் சத்தம் கேட்டது.

வீட்டை விட்டு வெளியே வந்து மினி பஸ்ஸில் சென்று அமர்ந்தேன். பத்து நிமிடம் கழித்து புறப்பட்டது. பஸ்ஸில் நான்கைந்து பேர் மட்டும் இருந்தார்கள். ஆடிட்டோரியத்தை கடந்து செல்லும் பொழுது உள்ளே இருந்து ”தாலு சே தாலு மிலா” கேட்டு கொண்டிருந்தது. ஷாலினி என்னை பார்த்து சிரித்து கொண்டு ஆடிக் கொண்டிருந்தாள்.

நான் சத்தம் போட்டு அழுவதை அந்த எட்டு கண்களும் கவனித்து கொண்டிருந்ததை பற்றி நான் வருத்தப்படவில்லை.

Wednesday, January 21, 2009

இந்திய பயணம் - 1

வந்ததுல இருந்து இந்திய பயணம் பத்தி எதுவுமே எழுதல. எழுதாம இருக்கறதுக்கு முதல் காரணம் எதை எழுதறது எதை விடறதுனு புரியல. எப்பவும் போல நான் வந்தவுடனே வேட்டு வெடிச்சாங்க. முதல் முறை வரும் போது சிவாஜி ரிலிஸ். ரெண்டாவது முறை தீபாவளி முடிஞ்சி வந்தேன். அன்னைக்கும் மிச்சமிருந்த வேட்டு எல்லாம் வெடிச்சிட்டு இருந்தாங்க. இந்த முறை சரியா (தல) தீபாவளிக்கு வந்து சேர்ந்துட்டேன்.

இந்த தீபாவளி சென்னைல கொண்டாடினேன். இந்த வருஷம் தீபாவளி அமாவாசைல வரல. அதனால வந்தவுடனே கறி குழம்பு தான். சென்னைல மக்கள்கிட்ட காசு கொட்டிக்கிடக்கு போலிருக்கு. எவ்வளவு பட்டாசு. மொட்டை மாடில இருந்து வேடிக்கை பார்த்தா சென்னையே வான வேடிக்கைகளால் போர்த்திய மாதிரி இருந்தது. ரெண்டு மணி நேரத்துக்கு மேல வெடிச்சிட்டு இருந்தாங்க. அமெரிக்காவுல ஜீலை 4 அன்று அரசே வெடி வெடிக்கும். ஆனா இந்த அளவுக்கு இருக்காது.

என்னுமோ அமெரிக்காவுலே பொறந்து வளர்ந்த மாதிரி பில்ட் அப் கொடுக்கறயேனு நீங்க மனசுல நினைக்கிறது எனக்கு புரியுது. என்ன செய்ய, கள்ளக்குறிச்சில இப்படி எல்லாம் வான வேடிக்கை விடமாட்டாங்கனு சொன்னா. அது எங்களுக்கே தெரியும்டா வெண்ட்ருனு நீங்க சொல்லிடுவீங்க. அதான் அப்படியே அமெரிக்கா பிட்ட போட்டாச்சு.

இந்த தடவை இந்தியால இருந்த மூணு மாசமும் ரொம்ப பரபரப்பா போயிடுச்சு. பஸ் பயணமும், ட்ரெயின் பயணமும் மாத்தி மாத்தி பண்ணி மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் முடிஞ்ச அளவுக்கு கொடுத்தாச்சு. இதுல ஒரு கொடுமை என்னனா, பெங்களூருக்கு சென்னைல இருந்து ஒரு முறை பஸ்ல போகலாம்னு கோயம்பேடு வந்தேன். தமிழ்நாடு பஸ், கர்நாடகா பஸ் ரெண்டும் இருந்துச்சு. 

கர்நாடகா பஸ் கிளம்பி பத்து நிமிஷத்துல தமிழ்நாடு பஸ் கிளம்பும்னு கண்டக்டர் சொன்னாரு. நானும் சரி நம்ம காசு கொடுக்கறது தான் கொடுக்கறோம், தமிழ்நாட்டுக்கே கொடுப்போம்னு ஒரு இனவெறில தமிழ்நாட்டு பஸ்ஸுக்காக வெயிட் பண்ணி ஏறிட்டேன். தமிழனை ஏமாத்த தமிழனால தான் முடியும்னு நிருபிச்சி ஒரு மணி நேரம் கழிச்சி பஸ் எடுத்தாரு டிரைவரு. அப்ப முடிவு பண்ணது தான். இனிமே இனப்பாசத்தை எல்லாம் பஸ்ல காட்டக்கூடாதுனு. 

அப்பறம் இந்த தடவை தான் அதிகமா ட்ரெயின்ல பயணம் செஞ்சேன். மொத்தமா இதுக்கு முன்னாடி மூணு நாலு தடவை தான் நினைவு தெரிஞ்சி டிரெயின்ல போயிருக்கேன். முக்கிய காரணம், கள்ளக்குறிச்சில டிரெயின் இல்லாதது. பஸ்ஸைவிட ட்ரெயின் பயணம் கொஞ்சம் சுகமா தான் இருக்குது. அப்பர் பர்த்ல ஏறனவுடனே கவுண்டர் இந்த இடத்துல இருந்தா எப்படி இருக்கும்னு நினைச்சு ஒரு காமெடி தோணுச்சு. அதை ஏதோ ஒரு புக்ல உடனே எழுதி வெச்சேன். இந்தியாலயே விட்டுட்டு வந்துட்டேன். யோசிச்சி எழுதறேன். 

விசா இண்டர்வியூக்கு பெங்களூர்ல இருந்து சென்னைக்கு சாப்பாடு கொடுக்கற டிரெயின்ல வந்தேன். அது என்ன சாப்பாடு கொடுக்கற டிரெயினு கேக்கறீங்களா? பெங்களூர்ல புறப்படும் போது சாப்பாடு கொடுக்க ஆரம்பிக்கறானுங்க. சென்னை வர வரைக்கும் சலிக்காம ஏதாவது கொடுத்துட்டே இருக்கானுங்க. நானும் அவுங்க மனசு கஷ்டப்படக்கூடாதுனு எல்லாத்தையும் வாங்கி சாப்பிட்டுட்டேன். அந்த ட்ரெயின் பேரு ஷதாப்தி.

அப்பறம் ரெண்டு மூணு தடவை கொயமுத்தூர் வந்தேன். பெங்களூர்ல இருந்து கோவை வர பஸ் கிடைக்காதவங்க, இதை முயற்சி செஞ்சு பார்க்கலாம். ஓசூர்ல ஒன்பதரைக்கு ஒரு அல்ட்ரா டீலக்ஸ், பத்து மணிக்கு ஒரு அல்ட்ரா டீலக்ஸ் புறப்படுது. கொஞ்சம் கூட்டம் இல்லாம நிம்மதியா வந்து சேரலாம். அது ஏன் அல்ட்ரா டீலக்ஸ்னா, மத்த எல்லா பஸ்லயும் ஹை டெசிபல்ல விஜய் படமோ (வசீகரா, சச்சின்) இல்லை சூர்யா (காக்க காக்க, ஆறு) போட்டு கொல்றானுங்க. எல்லா பஸ்லயும் இப்படி படம் போட்டு டார்ச்சர் பண்ணா என்ன தான் பண்றதுனு தெரியல. (இதுக்கு எல்லாம் யாராவது பொதுநல வழக்கு போட மாட்டாங்களா?) அதுக்கு இந்த அல்ட்ரா டீலக்ஸ் பஸ்ல வந்தா கொஞ்சம் தப்பிக்கலாம்.

சரிங்க. இன்னைக்கு இந்த மொக்கை போதும்னு நினைக்கிறேன். அப்பறம் பொறுமையா அடுத்த மொக்கையை போடலாம்... வர்ட்டா....

Tuesday, September 30, 2008

I am an hosteler - 3

வார நாட்கள்ல தினசரி அட்டவனையை பார்த்தாச்சு. இப்ப வாரயிறுதி அட்டவனையை பார்க்கலாம்.

சனி

5:30 - வழக்கம் போல சனிக்கிழமையும் 5:30க்கு எழுந்திடனும். எப்பவாது வெள்ளிக்கிழமை படம் போட்டிருந்தா 6 மணிக்கு எழுந்திரிக்கலாம். அதே மாதிரி பல்லு விளக்கி, தலை சீவி 5:55 ஸ்டடிக்கு உட்கார்ந்திடனும்.

5:55-7:45 - வழக்கம் போல ஸ்டடி. நடுவுல பத்து நிமிஷம் Recreation டைம்.

7:45 - 8:30 - பிரேக் ஃபாஸ்ட். இன்னைக்கு பொங்கல் போடுவாங்க. ஆனா நான் சனிக்கிழமை விரதம். அதனால சாப்பிட போகமாட்டேன். எனக்கு பொங்கல் ரொம்ப பிடிக்கும். கடைசி வரை அங்க பொங்கல் சாப்பிடவேயில்லை

8:30 - 9:55 - விளையாட்டு நேரம். விளையாடறதுக்கு எல்லாம் ஷார்ட்ஸ் டீ-சர்ட் தான் போட்டிருக்கனும். இதை போன பதிவுல விட்டுட்டேன். இந்த விளையாட்டு பொருட்களை வைக்கறதுக்கு ஒரு ரூம் இருக்கும். அதுக்கு லீடர் பேரு பால் ரூம் மானிட்டர். +1ல நான் பால் ரூம் மானிட்டராத்தான் இருந்தேன். அப்பறம் பாதியிலே பள்ளி மாறிட்டேன். பால் ரூம் மானிட்டரா இருக்கறதுல நிறைய அட்வாண்டேஜ் இருக்கு. முக்கியமான ஒண்ணு, புது தண்ணியில குளிச்சிட்டு லேட்டா ஸ்டடிக்கு போகலாம்.

9:55 - 10:30 - குளியல்.

10:30 - 12:25 - ஸ்டடி. நடுவுல பத்து நிமிஷம் Recreation டைம்.

12:25 - 1:30 - லன்ச் டைம்.

1:30 - 2:30 - Recreation டைம். நான் இந்த நேரத்துல தூங்குவேன். இல்லைனா செஸ் விளையாடிட்டு இருப்பேன். சில சமயம் ராஜேஷ் குமார் நாவல் படிச்சிட்டு இருப்பேன். இல்லைனா துணி துவைக்கிற நண்பர்களுக்கு பக்கத்துல உட்கார்ந்து கதை பேசிட்டு இருப்பேன். நான் 7வதுல இருந்து ஹாஸ்டல்ல படிச்சாலும் துணி துவைச்சதே இல்லை.

வாரம் வாரம் வீட்ல இருந்து வந்து அழுக்கு துணியை வாங்கிட்டு போயிடுவாங்க. ஒரு வாரம் கூட தவறாம ஞாயிற்று கிழமை எங்க அப்பா, அம்மா வந்தது எனக்கு இப்ப ஆச்சரியமா இருக்கு. வீக் எண்ட்னா நாம எல்லாம் ஜாலியா ரெஸ்ட் எடுக்கணும்னு நினைக்கும் போது அவுங்க ஒரு வாரம் கூட தவறாம வந்தது எவ்வளவு பெரிய சாதனைனு இப்ப தெரியுது.

2:30 - 4:30 - ஸ்டடி. நடுவுல பத்து நிமிஷம் Recreation டைம். இந்த ஸ்டடில தான் நிறைய பேர் தூங்கி மாட்டுவாங்க. இந்த ஸ்டெடில தமிழ் தான் படிப்பேன். முதல் ரெண்டு மூணு மாசத்துலயே எப்படியும் எங்க புக் படிச்சி முடிச்சிடுவேன். அதுக்கு அப்பறம் அடுத்த வருஷம் புக் வாங்கி படிப்பேன். அதுவும் ரெண்டு மாசத்துல முடிச்சிட்டு அதுக்கு அடுத்த வருஷம் புக் வாங்கி படிப்பேன். அப்பறம் சீனியரோட வரலாறு புத்தகம் வாங்கி படிப்பேன். 

ஒன்பதாவது படிக்கும் போதே பனிரெண்டாவது வரைக்கும் தமிழ் புத்தகமும் (இலக்கியம் படிக்க கோனார் நோட்ஸ் விளக்கவுரை தான்), ஒன்பதாவது, பத்தாவது வரலாறு புத்தகமும் படிச்சி முடிச்சிட்டேன். சில சமயம் ஏழாவது, எட்டாவது பசங்களோட அறிவியல் புத்தகம் வாங்கி படிப்பேன். அப்ப அது எல்லாம் சுலபமா புரியும் :). ஆனா அதையெல்லாம் பாட புத்தகமா நினைக்காம கதை புத்தகமா படிப்பேன். அப்ப தான் தூக்கம் வராது. அந்த காலத்துல படிக்கறதுக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. (ஆங்கிலத்துக்கு ஜெயக்குமார் நோட்ஸ்னு ஒண்ணு இருக்கும். யாருக்காவது ஞாபகமிருக்கா?)

4:30 _ 5:00 - டிபன். டீ பன் :)

5:00 - 6:00 - விளையாட்டு.

6 - 6:30 - குளியல்

6:30 - 8 - ஸ்டடி.

அப்பறம், சாப்பாடு, தூக்கம். சில சமயம் ஏதாவது கேசட் எடுத்துட்டு வந்து டெக்ல படம் போடுவாங்க.

ஞாயிறு (ரொம்ப சந்தோஷமான நாள்)

6:00 - இந்த ஒரு நாள் மட்டும் ஆறு மணி வரை தூங்கலாம். 6:25க்கு ஸ்டடி.


6:25 - 7:30 - ஸ்டடி.

7:30 - 8:15 ப்ரேக் ஃபாஸ்ட். இன்னைக்கு ரோஸ்ட். ரோஸ்ட்னா கொஞ்சம் மெல்லிசா பெருசா இருக்கும். அதுக்காக ஹோட்டல் மாதிரி எல்லாம் இருக்கும்னு நினைச்சிக்காதீங்க.

8:15:- 9:25 - விளையாட்டு.

9:30 - 10:30 - குளியல். இந்த நாள் ஆயில் பாத். நல்லா நல்லெண்ணெய் தேச்சி, புலி மார்க் சியக்காய் தூள் போட்டு தேச்சி குளிக்கலாம். இதுவும் கம்பல்சரி. மொதல்ல கொஞ்ச நாள் இந்த எண்ணெய், அப்பளம் சுட்டதுல மீதமான எண்ணெய்னு புரளியை நம்பி எண்ணெய் தேச்சி குளிக்காம ஏமாத்திட்டு இருந்தேன். அப்ப டான்சில்ஸ் வேற. அதுக்கு அப்பறம் ஆப்பரேஷன் பண்ணதுக்கப்பறம் தான் எல்லாம் சரியாச்சு. பின்னாடி ஆயில் பாத்னா முதல் ஆளா நிக்க ஆரம்பிச்சிட்டேன். ஆயில் பாத் சுகமே சுகம் தான்.

10:30 - 11:15 - ஸ்டெடி. இனிமே தான் முக்கியான விஷயமே.

11:15 - 11:30 வரை பதினஞ்சி நிமிஷம் Recreation டைம். அப்பவே எங்க அப்பா, அம்மா ரெண்டு பேரும் வந்திடுவாங்க. இது நான் பதினொன்னாவது படிக்கிற வரைக்கும் நடந்தது. அப்ப சமோசா (வெங்காய சமோசா தான். எனக்கு உருளைக்கிழங்கு சமோசா பிடிக்காது), பலாப்பழ சீசன்ல பலாப்பழம் (வர வழியில தான் பண்ரூட்டி இருக்கு), மேங்கோ ப்ரூட்டி எல்லாம் வாங்கிட்டு வருவாங்க. சில சமயம் இட்லி கறிக்குழம்பு. இந்த பதினஞ்சி நிமிஷத்துல இதெல்லாம் சாப்பிட்டு அடுத்த ஸ்டெடிக்கு ஓடிடுவேன்.

11:30 - 12:25 - இந்த ஸ்டடில எதுவுமே படிக்க தோனாது. வெளில அப்பா, அம்மா காத்துட்டிருக்கறதே மனசுல இருக்கும். சில சமயம் அந்த வெறிலயே கூட நிறைய படிப்பேன். அப்ப அப்ப மனசை பொறுத்து மாறும். நான் முதல் முதல்ல ஏழாவதுல அடி வாங்கியது இந்த ஸ்டடி தான். தப்பு செஞ்சா தான் அடிப்பாங்க, நான் தப்பே செய்ய மாட்டேன். என்னை அடிக்கவே முடியாதுனு சொல்லி தான் நான் அந்த பள்ளிக்கூடத்துலயே சேர்ந்தேன். ஆனா தப்பு செய்யாமலும் அடி வாங்க முடியும்னு அப்ப தான் தெரிஞ்சிக்கிட்டேன். 

என் பக்கத்துல இருந்த பையன் என் நட்ராஜ் ஜாமெண்ட்ரி பாக்ஸை கீழ தள்ளிவிட்டுட்டான். அந்த சத்தம் கேட்டு வார்டன் அங்க வந்தாரு. யாரோட ஜியாமட்ரி பாக்ஸ்னு கேட்டு என்னை ஸ்டடி ஹால் நடுவுல வந்து நிக்க சொன்னாரு. நான் தள்ளிவிடலைனு சொன்னேன். ஜியாமட்ரி பாக்ஸ் கீழ விழுந்ததுக்கு ரெண்டு அடி, கூப்பிட்டவுடனே வெளிய வராம பதில் பேசனதுக்கு ரெண்டு அடி. மொத்தம் நாலு அடி. அதுவும் செம்ம அடி. எங்க அப்பா, அம்மா அதை பார்த்தாங்க. எனக்கு அழுகை தாங்கல. 

அது வரைக்கும் யாரும் என்னை அடிச்சதுமில்லை. அடி வாங்கிற மாதிரி நான் நடந்துக்கிட்டதுமில்லை. அதுக்கு அப்பறம் அந்த வார்டனை பார்த்து எங்க அப்பா பேசி நான் அவருக்கு செல்லப்பிள்ளையாகிட்டேன். ஸ்கூல்ல நல்லா படிச்சாலே போதும். எல்லாருக்கும் ஃபேவரைட்டா ஆகிடலாம். அதுக்கு அப்பறம் நிறைய அடி வாங்கிருந்தாலும் இது என்னால வாழ்க்கைலயே மறக்க முடியாது.

12:25 - 2:30 - லஞ்ச் + Recreation. முதல்ல வீட்ல இருந்து எடுத்துட்டு வந்த துவைச்சி, அயர்ன் பண்ணி கொண்டு வந்த துணி, அப்பறம் அந்த ஒரு வாரத்துக்கு சாப்பிட வாங்கிட்டு வந்த தீனி எல்லாம் கொண்டு போய் பாக்ஸ் ரூம்ல வெச்சிட்டு, அழுக்கு துணி எல்லாம் எடுத்துட்டு வருவேன். அப்பறம் வந்து சாப்பாடு. சாதம், ஆட்டு கறி குழம்பு, ஆட்டு கறி வறுவல் கண்டிப்பா இருக்கும் (புரட்டாசி மாதம் தவிர). எங்க அப்பா காலைல 5:00க்கு கடை திறந்த உடனே வாங்கிட்டு வந்துடுவாரு. அதை ஏழுரை மணிக்குள்ள சமைச்சி புறப்பட்டுடுவாங்க.புரட்டாசி மாசம்னா கீரை பருப்பு போட்டு கடைஞ்சிருப்பாங்க அப்பறம் உருளைக்கிழங்கு வறுவல். 1:30க்குள்ள சாப்பிட்டு முடிச்சிட்டு, அப்பா அம்மாவோட ஊர் கதை பேசிட்டு இருப்பேன்.

 எப்பவும் எங்க அம்மா சொல்றது இது தான். “நீ நல்லா படிச்சி உங்க மாமாங்க முன்னாடி எல்லாம் நாம பெருமையா வாழற மாதிரி வரணும் பாலாஜி. அதுக்கு தான் இவ்வளவு கஷ்டப்படறோம். நீ மட்டும் நல்லா படிக்காம போனா எல்லார் முன்னாடியும் உங்க நைனாவுக்கு தலை குனிவாகிடும். வரவுக்கு மீறி செலவு பண்ணி படிக்க வைக்கறோம். எப்படியாவது கஷ்டப்பட்டு படிச்சிடு பாலாஜி. கடலூர்லயே ரெண்டு மாமா (அம்மாவோட அண்ணன்கள். ரெண்டு பேரும் இஞ்சினியர்ஸ். எங்க அப்பா க்ளார்க்) இருந்தும் அவுங்க வீட்ல எல்லாம் உன்னை தங்கி படிக்க வைக்காம இருக்கறதுக்கு காரணம், நாளைக்கு உங்க அத்தைங்க எல்லாம் எதுவும் சொல்லிடக்கூடாதுனு தான். எந்த காரணத்துக்காகவும் உன் படிப்புக்கோ, வேலைக்கோ அவுங்ககிட்ட நிக்கற மாதிரி வெச்சிடாதப்பா” (நாரயணன் அருளால இதை நான் காப்பாத்திட்டேன். அது மட்டுமில்லாம பத்தாவது, பணிரெண்டாவது ரெண்டுலயுமே எங்க குடும்பத்துல இது வரை நான் எடுத்த மார்க் தான் அதிகம். எனக்கு அப்பறம் நிறைய பேர் +2 படிச்சிட்டாங்க. ஆனா இது வரைக்கும் என் மார்க் தான் அதிகம்). இது ஒவ்வொரு முறையும் சொல்லுவாங்க. எங்க அப்பா எதுவும் சொல்ல மாட்டார். அவருக்கு என் மேல எப்பவுமே நம்பிக்கை அதிகம்.

2:30 - 4:15 - ஸ்டெடி. இந்த ஸ்டெடில வெறித்தனமா படிப்பேன். தூக்கம் வந்தா எழுந்து நின்னுட்டு இல்லைனா வார்டன்கிட்ட சொல்லிட்டு முகம் கழுவிட்டு வந்து படிப்பேன். எப்பவும் ஹாஸ்டல்ல முதல் மாணவன்னு என்னை எதுவும் சொல்ல மாட்டாங்க. முகம் கழுவ எழுந்து போறதெல்லாம் எல்லாருக்கும் விட மாட்டாங்க. என்னால கான்சண்ட்ரேட் பண்ண முடியலனு சொல்லிட்டு போய் முகம் கழுவுற தைரியும் நிறைய பேருக்கு இருக்காது.

4:15 - 4:45 - டிபன்

4:45 - 6 - விளையாட்டு

மறுபடியும் வழக்கம் போல தான் 9 மணி வரை.

9 - 10 : நைட் ஸ்டடி. இது மட்டும் என்னால முடியவே முடியாது. 9:30க்கு அப்பறம் கண்டிப்பா தூங்கி மாட்டிக்குவேன். அது என்ன ஞாயிறு மட்டும் நைட் ஸ்டடினு பாக்கறீங்களா? எங்க ஸ்கூல்ல வார வாரம் திங்க கிழமை காலைல பரிட்சை இருக்கும். இதுக்கு பேரு வீக்லி டெஸ்ட். மன்த்லி டெஸ்ட் எல்லாம் கிடையாது. முதல் ரெண்டு பீரியட் சேர்த்து டெஸ்ட் வைப்பாங்க. 25 மார்க். அதை அப்படியே நூத்துக்கு மாத்திக்குவாங்க. அஞ்சு வாரம் முடிஞ்சா ஒரு சைக்கிள் முடிஞ்சிடும். அதனால வார வாரம் ஞாயிறு நைட் ஸ்டெடி தான். சில சமயம் ஃபாதர் வந்தாருனா அவர்கிட்ட நான் எல்லாத்தையும் படிச்சிட்டேன், நீங்க எதுல இருந்து வேணா கேள்வி கேக்கலாம்னு சொல்லி புத்தகத்தை கொடுத்துடுவேன். அவரும் ரெண்டு மூணு கேள்வி கேட்டுட்டு விட்டுடுவாரு. வார்டன் மட்டுமிருந்தா விட மாட்டாரு. கஷ்டப்பட்டு பத்து மணி வரை முழிச்சிருக்கனும்.

இதோட St.Joseph பள்ளி அட்டவணை பதிவு முடியுது. ஆனா எப்படியும் என்னோட தனிப்பட்ட வாழ்க்கை அங்க எப்படி இருந்துச்சு. ஏழாவதுல 40% கூட அட்டெண்டன்ஸ் இல்லாத நான் எட்டாவதுல இருந்து பத்தாவது வரை 100% அட்டெண்டன்ஸ் மெயிண்டெயின் பண்ணது எப்படி? ஏழாவதுல இது பள்ளி கூடமே இல்லை நரகம்னு சொல்லிட்டு இருந்த நான் பின்னாடி இது தான் சொர்கம்னு சொல்ற அளவுக்கு எப்படி மாறினேன். ஏழாவதுல இங்கிலீஷ் மீடியத்துல படிக்கிற பசங்க கூட மட்டுமே பேசிட்டு இருந்த நான் வரும் போது தமிழ் மீடிய பசங்களோட மட்டுமே நண்பனா இருக்கற அளவுக்கு எப்படி மாறினேனு எல்லாம் கண்டிப்பா பதிவெழுதறேன். இந்த பதிவு நிறைய பேர் படிக்கறில்லைனாலும் என்னோட ஆசைக்காக எழுதன தொடர் இது. நிறைய இடங்களில் நான் என் பள்ளிக்கூடத்துல இன்னும் படிக்கிற உணர்வை தந்தது. விளையாடிட்டு வந்து லைன்ல நிக்கும் போது வரும் வேர்வை வாசனையை மீண்டும் நுகர்ந்தேன்.

மீண்டும் நுகர்வேன்....