தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Wednesday, February 28, 2007

70 மார்க் எடுத்தா வெளியே!!!

"டேய் மச்சி கேள்விப்பட்டியா 70 மார்க்குக்கு மேல எடுத்தா வகுப்பை விட்டு வெளிய போயிடனுமாம்... பிரின்சிபல் புது ரூல்ஸ் போட்டுருக்காரு"

"இது என்னடா புது ரூல்ஸ்... ரொம்ப வித்தியாசமா இருக்கு"

"நம்ம டைசன் காப்பி அடிச்சி மாட்டினான் இல்லை. அதனால தான் இந்த ரூல்ஸ்"

"ஏன்டா அவன் காப்பி அடிச்சி மாட்டினதுக்கு எதுக்குடா இப்படி ஒரு ரூல்ஸ் வைக்கனும். அவனை பத்திதான் எல்லாருக்கும் தெரியுமே"

"அவன் மட்டும் இல்லை. இன்னும் கொஞ்சம் பேரும் காப்பி அடிக்கறாங்களாம்"

"அதுக்கு அதை சரி பண்ண எதையாவது யோசிக்கறதை விட்டுட்டு இப்படி அதிக மார்க் எடுக்க கூடாதுனு சொல்றதுல என்னடா நியாயம்?"

"ஏன்டா நம்ம கூடத்தான் நல்லா படிக்கிறோம். நமக்கு 70 மார்க் வரதில்லைதானே. இதுல இருந்து என்ன தெரியுது? 70க்கு மேல எடுக்கறவன் எல்லாம் காப்பி அடிக்கிறானு தானே அர்த்தம்"

"ஏன்டா நமக்கு வரலைனா எல்லாரும் காப்பி அடிக்கறாங்கனு அர்த்தமா?

"டேய் இது தாண்டா நமக்கும் நல்லது. எப்படியும் நம்மளுக்கு 70 மார்க் வர போறதில்லை"

"மச்சி! நமக்கு மார்க் வரலைனா நம்ம மேல எங்கயோ தப்பு இருக்குனு அர்த்தம். மார்க் வாங்கறது ஒரு கலை. அதை நாம சரியா தெரிஞ்சிக்கல இல்லை நமக்கு அதுல பெருசா விருப்பம் இல்லைனு முதல்ல புரிஞ்சிக்கனும். படிக்காமலே அவன் மார்க் வாங்கறான். படிச்சி எனக்கு வரலைனு ஃபீல் பண்ணக்கூடாது. மார்க்ல தான் விருப்பம்னா அதை வாங்கற வித்தைய தெரிஞ்சிக்கனும் இல்லை எனக்கு படிக்கிற மேட்டர் புரிஞ்சா போதும் மார்க் தேவையில்லைனா அதுல மட்டும் கவனம் செலுத்தனா போதும். அவன் மார்க் வாங்கறான் இவன் மார்க் வாங்கறான்னு ஃபீல் பண்ணாத"

"டேய் இதெல்லாம் நீ பேசி பிரோயோஜனமில்ல. ரூல்ஸ் போட்டாச்சி. ஒழுங்க படிக்காம 70 மார்க்குள்ள வாங்கற வழிய பாரு..."


பி.கு:
மக்களே அநியாயத்துக்கு ஆணி புடுங்க சொல்றானுங்க... அதுவில்லாம ஆபிஸ்ல வலைப்பதிவ எல்லாம் பாக்க முடியாம பண்ணிட்டாங்க... அதனால பதில் சொல்ல லேட் ஆகும். தப்பா எடுத்துக்காதீங்க...

Sunday, February 25, 2007

ஒரு வருசம் ஓடி போச்சி!!!

இந்தியாவை விட்டு வந்து இன்னையோட சரியா ஒரு வருஷமாகுதுங்க...

ஊர்ல இருந்து வரும் போது மூணு மாசத்துல வந்துடுவன்னு அம்மாட்டயும், ஆறு மாசத்துல வந்துடுவேன்னு அக்காட்டயும், ஒரு வருஷத்துல வந்துடுவேன்னு அப்பாட்டயும் சொல்லிட்டு வந்தேன். கடைசியா ஒருத்தவங்களை மட்டும் ஏமாத்தலனு ஆயிடுச்சி.

அப்பவெல்லாம் டீவி தான் நம்ம பொழுது போக்கே... இங்க வந்து ஒரு வருசமா தமிழ் சேனலே பார்க்கல...

நான் எங்க விட்டு வந்தேனு சொல்றேன். இப்ப எப்படி இருக்குனு தெரிஞ்சவங்க சொல்லுங்க...

சன் மியூசிக்ல காலைல எழுந்தவுடனே பார்த்தா நம்ம ஹேமா சிங்கா, மகாலட்சுமி ரெண்டு பேரும் அடுத்து அடுத்து வருவாங்க... அப்பறம் நம்ம ஆனந்த கண்ணன், பிரஜன் ராத்திரி வருவாங்க... (இப்ப இதே கோஷ்டியெல்லாம் இருக்கா இல்லை வேற ஆளுங்க வந்துட்டாங்களா?)
எல்லாருமே பொதுவா மொக்கையத்தான் போடுவாங்க. (பிரஜன் மட்டும் கொஞ்சம் நல்லா பேசுவாரு)

அப்பறம் லொள்ளு சபா தான் நம்ம ஃபேவரைட் நிகழ்ச்சி. அப்பதான் சந்தானத்துக்கு பதிலா ஜீவா வர ஆரம்பிச்சாரு. சந்தானம் அளவுக்கு அவரால பண்ண முடியல. இப்ப எப்படி இருக்கு? இன்னும் மனோகர் (கைய ஆட்டி ஆட்டி பேசுவாரே) கலக்கிட்டு தான் இருக்காரா?

கடவுள் பாதி மிருகம் பாதி இன்னும் இருக்கா? (நண்டு, சிண்டு)

கலக்கப் போவது யாருனு புதுசா ஒரு ப்ரோக்ராம் ஆரம்பிச்சாங்க. நம்ம க்ரிக்கெட் ப்ளையர் ரமேஷ் கூட அதுல இருந்தாரு. அவருக்கு அதுல என்ன ரோல்னே புரியல... அது என்னாச்சி?

மதன்'ஸ் திரைப்பார்வைல மதுர மாதிரி குப்பை படத்தையும் ஏதாவது ஆராய்ச்சி பண்ணிட்டு இருந்தாரு மதன். ஒரு வேளை குப்பைல இருந்து கரெண்ட் எடுக்கலாம்னு முயற்சியானு தெரியல. இன்னும் அதையே செய்துட்டு இருக்காரா?

பெப்ஸி உமா இன்னும் அதே மாதிரி டயலாக் பேசிட்டு தான் இருக்காங்களா? (அதாங்க. ரொம்ப நாள் முயற்சி செஞ்சி உங்களுக்கு லைன் கிடைக்காம போயிருக்கலாம். ஆனா தொடர்ந்து முயற்சி செஞ்சா ஒரு நாள் கண்டிப்பா லைன் கிடைக்கும். அதனால தொடந்து முயற்சி செய்ங்க - அப்படி ஒரே அட்வைஸா இருக்கும்).

அதே மாதிரி லைன் கிடைச்ச உடனே மக்கள் எல்லாம் உணர்ச்சி வசப்பட்டு தான் பேசிட்டு இருக்காங்களா?

ரத்னா வழக்கம் போல கதை முழுசா திரை விமர்சனத்துல சொல்லிட்டு க்ளைமாக்ஸ் மட்டும் வெள்ளிதிரைல காண்கனு சொல்றாங்களா?

அப்பறம் நம்ம சுரேஷ் கால் மேல கால் போட்டுக்கிட்டு வீராசாமி வீரம் குறைவில்லைனு சம்பந்தமே இல்லாம எதையாவது சொல்லிட்டு இருக்காரா?

அஞ்சு பொண்ணுங்க கூட்டமா சேர்ந்து அழுவாங்களே ஒரு நாடகம். போஸ் மாமாக்கூட இருப்பாரே. அது முடிஞ்சிடுச்சா?

அபி அழுவறத நிறுத்தினாளா? அப்பா யாருனு அவுங்க கண்டுபிடிச்சிட்டாங்களா? (அதுக்குள்ள கண்டு பிடிச்சிருக்க மாட்டாங்கனு நினைக்கிறேன்)

சுரேஷ் BEனு ஒருத்தர் நாடகத்துல நடிக்கறாரே.. இப்ப அவர் சுரேஷ் ME ஆயிட்டாரா?

குஷ்பு இன்னும் டிசைன் டிசைனா ஜாக்கெட் போட்டுக்கிட்டு ஜாக்பாட் நடத்திட்டு இருக்காங்களா? (அதுக்கு ஜாக்பாட்னு பேர் வெச்சதுக்கு பதிலா ஜாக்கெட்னு பேரு வெச்சிருக்கலாம்)

எல்லா பண்டிகைக்கும் விஜய் பேட்டி சன் டீவில வருதா???

Tuesday, February 20, 2007

சன்யாசி ஆக போகிறேன் - விடை கொடுங்கள்!!!

இந்த உலகத்துல எங்க பார்த்தாலும் சண்டை, சச்சரவுனு இருக்கு. நம்மல சுத்தி பொய், பித்தலாட்டம் பண்ணற கூட்டம்னு நிறைய இருக்கு. எப்படா எவனாவது சிக்குவான், ஏமாத்தலாம்னு அலையறாங்க.

சரி பொது வாழ்க்கைலதான் இவ்வளவு பிரச்சனைனு பார்த்தா, ஆபிஸ்ல இப்பவெல்லாம் புதுசா வேலை செய்ய சொல்லி கொடுமை படுத்தறாங்க. என்னடா இது சின்னப்புள்ள தனமா இருக்கு. வேலை செய்ய சொல்லி என்னைய பார்த்து சொல்றீங்களே உங்களுக்கு இந்த குளுருக்கு ஏதாவது பைத்தியம் பிடிச்சிக்காச்சா, இல்லை இந்த பனி சறுக்கு விளையாடும் போது தலைல எதாவது அடி கிடி பட்டுச்சானு கேட்டா, உன் திறமை உனக்கே தெரியாதுனு சொல்லி புதுசு புதுசா குண்ட தூக்கி போடறானுங்க.

சரி நம்மல காப்பாத்தற கூட்டம் இங்கத்தான் இருக்குனு வலைப்பதிவு பக்கம் வந்தா, நம்ம பதிவுள எல்லாம் ஈ, காக்கா கூட ஒதுங்கறதில்லைனு ஆயிடுச்சி. காமெடியா யோசிச்சி பதிவு போட்டா சிரியஸா ஆயிடுது. சீரியஸ் போஸ்ட் போட்டா எல்லாம் கும்மி அடிச்சி காமெடி போஸ்ட் ஆக்கிடறீங்க.

காதல் கதை எழுதினா உன் சொந்த கதையானு கேக்கறாங்க. அதுவும் லவ் ஃபெயிலரான கதை என்னோட கதையாம். சக்ஸஸான கதை ராயலோட கதையாம். இது எப்படி இருக்கு? இப்படி தமிழுலகமே கை விட்ட பிறகும் எனக்கு இந்த பொது வாழ்க்கை தேவையா?

இதற்கு ஒரு முடிவு கட்டவே சன்யாசியாகி ஆகலாம்னு முடிவு செய்தேன். அதற்கு தகுந்த மாதிரி ஒரு குருநாதரும் கிடைத்துவிட்டார். இனிமேல் இப்படி கதை, காமெடி என்று மொக்கையாக எழுதி மக்களை கொடுமைப்படுத்தாமல் அவருடனே நேரத்தை செலவிட்டு பயனுள்ளதாக்கி கொள்ள முடிவெடுத்துள்ளேன்.

வழக்கம் போல் எனக்கு உங்கள் ஆதரவு கிடைக்குமென்று நிச்சயம் நம்புகிறேன்.

இதோ என் குருஜியின் படம். உங்களுக்காக...

ஆசி பெற்று கொள்ளுங்கள் நண்பர்களே!!!


எலேய் தம்பி,
அதுக்குள்ள ஓடிடுவேனு பார்த்தயா? இப்பதான் 150 தொட்டிருக்கோம். இன்னும் ரொம்ப தூரம் போக வேண்டியதிருக்கு!!!

இரு துருவம்

மக்களே,
ஒரு தொடர் கதை சங்கத்துல எழுதிட்டு இருக்கேன். வழக்கம் போல வெட்டி கதை தான்...
எப்பவும் போல வந்து படிச்சி, துப்பிட்டு போனிங்கனா நல்லா இருக்கும். சுட்டி இதோ

Monday, February 19, 2007

சுடர் - சில விளக்கங்கள்!!!

நண்பர்களே!!!

சர்வேசன் அவர்களின் பதிவை
தற்போதுதான் பார்த்தேன். அதில் சில விதிகள் சரியாக குறிப்பிடவில்லை என்று தளபதி சிபி சொல்லியிருந்தார். அதற்காகத்தான் இந்த பதிவு

இந்த விளையாட்டின் சுவாரசியமே யாரிடமிருந்து யாருக்கு செல்கிறது என்பதில் தான் இருக்கிறது. அது பல சுடர்கள் ஒரே நேரத்தில் ஏற்றுவதால் கெட்டு போகும் என்றே நினைக்கிறேன்.

சுடரை யார் வேண்டுமென்றாலும் ஏற்றுங்கள் பிரச்சனையில்லை. ஆனால் லிங் கொடுக்க வேண்டாமே! தற்போது தேன்கூடு இருக்கும் நிலையில் நாம் மேலும் அவர்களை பிரச்சனைக்குள்ளாக்க வேண்டாமே!!! இதற்கு மேல் விளக்கம் தேவையில்லை என்றே நினைக்கிறேன்.

Sunday, February 18, 2007

மாதா, பிதா, குரு - தெய்வம்?????

இந்த பதிவை படித்தவுடன் என்னால் வருத்தப்படாமல் இருக்க முடியவில்லை. ஏற்கனவே ஆசிரியர்களே நீங்கள் தெய்வங்களா என்று பதிவிட்டிருந்தேன்.

எனக்கும் அதே போல் காலேஜ் முடித்து ஆறு மாதம் கழித்து ஆஃப் கேம்பஸில் நடந்த இண்டர்வியூவில் தேர்வானதற்கு ஆஃபர் லெட்டர் தர 5000 கேட்டார்கள். Placement Cell முன்னேற்றத்திற்காம். அதற்குள் எனக்கு வேறு ஒரு கம்பெனியிலும் ஆஃபர் லெட்டர் கிடைத்திருந்தது. அதனால் ஆஃபர் லெட்டர் வேண்டாமென்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.

அந்த இண்டர்வியூ நடந்தது வேறு கல்லூரியில். ஒரு வேளை எனக்கு அந்த இன்னொரு ஆஃபர் கிடைக்கவில்லையென்றால் கண்டிப்பாக கொடுத்திருப்பேன். அதற்கு பிறகு அந்த ஆஃபர் லெட்டர் எனக்கு ஈ-மெயிலிலே வந்தது என்பது வேறு கதை.

பத்தாம் வகுப்பு படிக்கும் வரை தெய்வங்களாக தெரிந்த ஆசிரியர்கள் அதற்கு பிறகு ஏனோ தெரியவில்லை.

கடலூர் புனித வளனாரில் நான் படிக்கும் போது என்னிடம் டியூஷன் படிக்கவில்லையென்றால் லேப் மார்க்கில் உங்களுக்கு 10 கூட வராது என்று கூறினார் என் கெமிஸ்ட்ரி வாத்தியார். பிரின்சிபலால் கூட என்னை ஒன்னும் செய்ய முடியாது என்று வகுப்பில் வெளிப்படையாகவே கூறினார்.

இவர் சொல்லி குடுப்பதை விட நன்றாக சொல்லி கொடுக்கும் ஆசிரியரிடம் சென்றாலும் வாழ்க்கை பாதிப்படையும். என்ன செய்வதென்று புரியாமல் பாதியிலே பள்ளி மாறி சென்றேன். புதிய பள்ளி, அனைவரும் ஏற்கனவே கூட்டம் கூட்டமாக இருந்ததால் சரியாக பழக கூட முடியாத நிலை. அங்கே நான் சென்ற போது +1 பாடம் முடித்து, +2 ஆரம்பித்திருந்தார்கள். எதுவும் புரியாத நிலைமை. வாழ்க்கையே தடம் மாறியது. அவர் பெயர் கூட இன்னும் நினைவிருக்கிறது.

பிறகு கல்லூரியிலும் முதலாமாண்டு நன்றாக ப்ராக்டிக்கல் செய்திருந்தும் மதிப்பெண்களை குறைத்து போட்டனர். பிறகு சண்டை போட்டதிலிருந்து எனக்கு ஓரளவு சரியான மதிப்பெண்களே வந்தது.

இதைவிட கொடுமை, எங்க EEE டிப்பார்ட்மெண்டில் இந்தியன் கவர்ண்மெண்ட்ல இருந்து அவார்ட் வாங்கின ப்ராஜக்ட் பண்ண பசங்களுக்கு 200க்கு 140 தான் போட்டாங்க. ஃப்ளைட் ஹைஜாக் தடுக்க ஹார்ட் பீட் வெச்சி தடுக்கறதுக்கு Embedded Systems வெச்சி ஏதோ பண்ணாங்க. கம்ப்யூட்டர் டிப்பார்ட்மெண்ட்லையும், மெக்கானிக்கலையும் நல்லா மார்க் போடும் போது இவங்களுக்கு மட்டும் அப்படி என்னனு புரியல!!!

நான் இந்த பதிவுல சொல்லிய நண்பனுடைய தம்பி ரெண்டு வருஷத்துக்கு அப்பறம் போன வாரம் தான் க்ளியர் பண்ணான். எப்படி வேலை வாங்குவான்னு தெரியல. ஒரு இண்டர்னெல் எழுதாதற்கு ஒரு மார்க் போட்ட ஆசிரியருக்கும் பசங்க இருப்பாங்கனு தெரியாம போயிடுச்சி.

இந்த பத்தாவது வரைக்கும் தெய்வங்களா தெரியற ஆசிரியர்கள் அதுக்கு மேல பெரும்பாலும் ராட்சசகர்களாகத்தான் தெரிகிறார்கள். மாணவர்களின் வாழ்க்கை இவர்கள் கையிலிருப்பதால் அதை வைத்து பணம் பண்ண துடிக்கும் கூட்டம் ஒரு பக்கம். அவர்களை தலையில் தூக்கி வைத்து ஜால்ரா அடிக்கும் கூட்டங்களுக்கும், பெண்களிடம் வழிந்து கொண்டும் மார்க் போட்டு கொண்டிருக்கும் கூட்டம் ஒரு பக்கம்.

எனக்கு +2 படிக்கும் போது தோன்றியது, டாக்டராகி +1, +2 எடுக்குற வாத்தியாருக்கு மட்டும் வைத்தியம் பாக்க கூடாதுனு, இல்லைனா தாப்பான ஊசி போட்டுடனும்னு. நல்ல வேளை நான் டாக்டராகல.

Friday, February 16, 2007

Leave Letter

சின்ன வயசுல எத்தனை தடவை இதை எழுதியிருப்போம்... இன்னும் மறக்கல பாருங்களேன்...

From
Vettipaiyal,
vettipaiyal.blogspot.com


To
My blog readers,
Universe (oru build up thaan)

Sub
Regarding leave

Respected vaasagargale,
As I am suffering from work, I am unable to attend your posts and pinnootams for last few days. So please grant me leave for 2 days (from 15-02-2007 to 16-02-2007).

Yours Obediently,
Vetti...


அப்படியே கொசு வத்திய சுத்தினா சின்ன வயசுல எழுதன லீவ் லெட்டரெல்லாம் ஞாபகம் வருது...

தமிழ்ல விடுமுறை விண்ணப்பம் எழுதி
"இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்குமாறுக்கு" பதிலா
"இரண்டு நாட்கள் விடுதலை அளிக்குமாறு"னு எழுதி வாத்தியார்கிட்ட கொட்டு வாங்கனது ஞாபகம் வருது. (அப்பவும் விடுதலை கொடுக்கல)

அப்பறம் ஊருக்கு போக லீவ் கேட்டா தர மாட்டாங்கனு யோசிச்சி
As I will be suffering from fevernu லீவ் லெட்டர் எழுதி பிரம்பால அடிவாங்கனது எல்லாம் ஞாபகத்துக்கு வருது...

Wednesday, February 14, 2007

யாருடா அந்த yaar???

புதுசா கம்பெனில சேர்ந்து ட்ரெயினிங் முடியற வரைக்கும் இந்த பிரச்சனையில்லை. அதுக்கு அப்பறம் ப்ராஜக்ட்ல போட்டானுங்க. நம்மல தவிர எல்லாருக்கும் ஹிந்தி தெரியுது. எங்க ப்ராஜக்ட் லீடா, எப்ப ஆரம்பிச்சாலும் ஹிந்தில தான் ஆரம்பிப்பாங்க. அடிக்கடி உஸ்கே பாத், உஸ்கே பாத்னு சொல்லிக்கிட்டு இருப்பாங்க. நான் கூட காரா பாத், கேசரி பாத் மாதிரி அது ஒரு பாத் போல இருக்குனு நினைச்சிக்கிட்டேன்.

பெங்களூர்ல இந்த காரா பாத் (உப்புமா), கேசரி பாத், சவ் சவ் பாத் (கொஞ்சம் உப்புமா, கொஞ்சம் கேசரி) இதெல்லாம் ஃபேமஸ். நானும் ஒரு நாள் ஓட்டல்ல போய் உஸ்கே பாத் இருக்கானு கேட்டேன். அவன் என்னை பார்த்த லுக் இருக்கே. சரி அந்த கொடுமைய இப்ப எதுக்கு சொல்லிட்டு. அப்பறம் தான் தெரிஞ்சிது அது சாப்பிடற ஐட்டம் இல்லைனு. அதுக்கு அப்பறம் அது என்னனு நான் தெரிஞ்சிக்கிற ஆசைலயே இல்லை.

அப்பறம் நம்ம கூட இருக்கறவனுங்க இங்கிலீஸ்ல பேசும் போதும் What yaar, no yaar, come on yaarனு சொல்லிக்கிட்டே திரியுவானுங்க. நான் கூட அது இங்கிலீஸ் வார்த்தை தான்னு ரொம்ப நாள் நினைச்சிட்டு இருந்தேன். நமக்கு தான் இந்தி வார்த்தையே தெரியாதே (ஏக், தோ, தீன், சார், சே, சௌ மட்டும் தெரியும்). இங்கிலிஸ்லயும் ஸ்டைலா பேச தெரியாது...

அப்பறம் ஒரு நாள் க்ளைண்ட் கால் இருக்கும் போது No yaarனு ஒருத்தவன் சொல்ல. What is that yaarனு அவன் கடைசியா கேட்டான். அப்பதான் இந்த yaar வண்டவாளம் தண்டவாளம் ஏறிடுச்சி. இப்படி பேசிட்டுத்தான் இத்தனை நாள் ஃபாதர் ஆப் ஃபாரின் கண்ட்ரி ரேஞ்சுக்கு பில்ட் அப் கொடுத்திருக்கேங்களாடா???

yaarனா friendly சொல்றதாம். நம்ம பாஷைல சொன்னா மச்சினு வெச்சிக்கோங்களேன். இப்பவெல்லாம் நாமலும் இப்படியே பில்ட் அப் கொடுக்க ஆரம்பிச்சிட்டோம்... மானே தேனே பொன் மானே மாதிரி what yaar, come on yaarனு அடிச்சிவிட ஆரம்பிச்சாச்சி...

காதலர் தினம்!!!

என்னை சூரியன் என்கிறாய்
வான வெளியில் என்ன
திடீர் மாற்றமா?
சூரியன் என்றிலிருந்து
நிலவை மட்டுமே
சுற்ற ஆரம்பித்தது?

வருடத்தில்
ஒரு நாள்
காதலர் தினம் கொண்டாடும்
ஏழைகள் அல்ல நாம்
வருடம் முழுவதையும்
காதலர் தினமாய்
கொண்டாடுவோம்!
முத்தத்தை பரிசாக கொடுத்து!!!

நம் அன்பின் ஆழத்தை
வார்த்தைகளினால் வடிக்க
முடியாது என்று உணர்ந்தே
மண்ணுலகை விட்டு
மறைந்தானாம் கம்பன்!!!

இலக்கிய காதலர்கள்
எல்லாம் பிராம்மா முன்
உண்ணா விரதமிருக்கிறார்களாம்
நம்மை காதலுக்கு
இலக்கணமாய் படைத்ததற்காக!!!

காதலர் தினம்
பிப் 14
குழந்தைகள் தினம்
நவம்பர் 14
கூட்டி கழித்து பார்
கணக்கு சரியாய் வரும்!!!

சரி... மேல இருக்கறதெல்லாம் எனக்கு தான் பயன்படல... உங்கள்ல யாருக்காவது பயன்பட்டா எடுத்துக்கோங்க...

கேவலமா இருக்கு. இத அனுப்பினா கண்டிப்பா செருப்படிதான்னு ஃபீல் பண்ணா கம்பெனி பொறுப்பில்லை.

இந்த நாள் நம்மல கேவல படுத்தத்தான்னு ஃபீல் பண்ணும் என் அருமை நண்பர்களே, பல்லு இருக்கவன் பகோடா சாப்பிடறான்னு ஃபில் பண்ணாம விட்டுடுவோம்...

Tuesday, February 13, 2007

என்ன முடிவு???

நான் பெங்களூர்ல இருந்த வரைக்கும் பொதுவா 9 மணிக்குள்ள வீட்டுக்கு போனதே இல்லை. ஏன்னா வீட்ல போன ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் வர நேரமாகும். சீக்கிரம் போய் என்ன பண்ண போறோம்னு 9 மணி வரைக்கும் ப்ரவுஸ் பண்ணிக்கிட்டு, ஃபோன் பேசிக்கிட்டு இருப்பேன் (சொன்னா நம்பனும்.. பசங்கக்கிட்டதான்).

என் கூட வேலை செய்யறவங்களும் பொதுவா அப்படித்தான் இருப்பாங்க. இந்த பழக்கம் எனக்கு எப்படி ஸ்டார்ட் ஆச்சினா, என்னுடைய முதல் ப்ராஜக்ட் லீட் நல்ல பேர் வாங்கனும்னு எல்லாரையும் 9 மணி பஸ்லதான் போக வைப்பாங்க. டெஸ்ட் கேஸ் ரிவியூவே 8 மணிக்கு தான் ஆரம்பிப்பாங்க. நம்ம 4 மணிக்கு வேலை முடிச்சிட்டாலும் கண்டுக்கவே மாட்டாங்க. ஏதாவது கேட்டா சாப்ட்வேர் கம்பெனினா லேட் நைட் வொர்க் பண்றது ரொம்ப சாதரணம்னு சொல்லிடும்.

சண்டை போட்டா 9 மணி வரைக்கும் வேலை கொடுக்கும்னு புரிஞ்சி போச்சி (வேற என்ன புடுங்கன ஆணியெல்லாத்தையும் திரும்ப அதே எடுத்தல அடிக்க சொல்லும்.) அதுக்கு பேசாம 4 மணில இருந்து 7:30 மணி வரைக்கும் சும்மா ஓபி அடிச்சிட்டு 9 மணிக்கு கடைசி பஸ்ல போனா நல்ல பேரும் கிடைக்கும். கம்பெனி போன், கம்பெனி இண்டர் நெட்னு ஜாலியா எஞ்சாய் பண்ண ஆரம்பிச்சாச்சு.

அப்படியே போக போக புது மேனஜர் வந்தாரு. எப்படியும் எல்லாரும் 9 மணி வரைக்கும் இருக்காங்கனு சொல்லி ப்ளானிங் எல்லாம் அது வரைக்கும் போட ஆரம்பிச்சிட்டாரு. இப்ப கண்டிப்பா குறைந்த பட்சம் 9 மணி வரைக்கும் வேலை செஞ்சாகனும்னு நிலைமை வந்துடுச்சி.

அதுவும் இல்லாம இப்ப டீமை லீட் பண்ற ரேஞ்சுக்கு நாம வந்தாச்சு. ஒரு 4 - 5 கத்துக்குட்டிங்களுக்கு சொல்லி கொடுத்து வேலை வாங்கனும். இதை விட கொடுமையான வேலையே ஒண்ணு இல்லைங்க. (இந்த கத்துக்குட்டிங்களும் ஒரு வருஷம் முடிஞ்சவுடனே உனக்கும் பே பே உங்கப்பனுக்கும் பே பேனு கம்பெனி மாறிடுங்க...) அவுங்க செய்யற வேலைக்கு நாமதான் பொறுப்பு. வேலைக்கு சேர்ந்து 2 - 3 வருஷத்துல இந்த நிலைமை. ஆன்சைட்டிற்கிட்டயும் நாம திட்டு வாங்கணும் (டெலிவரபுல் பாதிக்க கூடாதாம்) அதே சமயம் இந்த பசங்க பண்றதெல்லாத்தையும் நம்ம பார்க்கனும். மேனஜருக்கு டெக்னிக்கலா எதுவும் அதிகம் தெரியாது.

இப்படியே பார்த்தா காலைல எல்லாருக்கும் முன்னாடி வந்து ஆன்சைட்ல இருந்து வந்திருக்க மெயில் பார்த்து அப்பறம் ஆன்சைட் காலுக்கு ரெடியாகி போன் பேசி, யார் யாருக்கு என்ன வெலைனு நாம பிரிச்சி கொடுத்து அவுங்க கூடவே இருந்து பண்ண வைக்கனும். அப்பறம் அதுங்க முடிக்கற வரைக்கும் கூடவே இருந்து வேலை பார்த்து அவுங்க போனதுக்கு அப்புறம் எல்லாத்தையும் சரி பார்த்து ஆன்சைட்டிற்கு மெயில் அனுப்பிட்டு (இந்த மெயில் அடிக்க குறைஞ்சது ஒரு மணி நேரமாவது ஆகும்) நாம கிளம்பனும். இந்த டென்ஷன் இருக்குது பாருங்க...

சில சமயம் நான் மழைல போகும் போது கைல குடை இருக்கறதை கூட மறந்து அப்படியே மழைல நடந்து போயிருக்கேன். அப்புறம் வீட்டுக்கு போனவுடனே கொஞ்ச நேரம் மாடில காத்து வாங்க போயிட்டு ரிலாக்ஸாகி தான் கீழவே வருவேன். எக்ஸிக்யூஷன் சமயத்துல காலைல 8 மணிக்கு போய் ராத்திரி 12 மணிக்கு குறைந்து வர முடியாது. அந்த டென்ஷன்ல ஒரு மாசம் இருந்தா ஒரு வாரம் லீவ் போட்டு தூங்கனும்னு தோனும்.

வேலையே இல்லாத சமயமும் அப்ப அப்ப இருக்கும். அந்த மாதிரி சமயத்துல சும்மா டாக்குமெண்ட் ப்ரிப்பேர் பண்ணுனு சொல்லிடுவாங்க. அப்ப வர கோபம் இருக்கு பாருங்க. சான்ஸே இல்லை. இதவிட கொடுமை ராத்திரி வேலை செய்யற ப்ராஜக்ட்ஸ்...

எனக்கு என்னனா ஒரு வேளை நமக்கு தான் பீப்பிள் மேனேஜ்மெண்ட் தெரியலையோனு கஷ்டமா இருக்கும். காலேஜ்ல டூர் ஆர்கனைஸ் பண்ணிருக்கேன், டிப்பார்ட்மெண்ட் ஃபங்ஷனுக்கு எல்லாம் முன்னாடி நின்னு வேலை பார்த்திருக்கோம். ஆனா இந்த மாதிரி கஷடப்பட்டதில்லை.

ஒரு வருஷத்துக்கு மேல ரிலிஸ் பண்ண சொல்லி கேட்டுட்டு இருந்தேன். கடைசியா எங்க மேனஜர்கிட்ட நான் சொன்னது இதுதான். இந்த ப்ராஜக்ட்ல இருந்து நீங்க என்னை ரிலிஸ் பண்ணலைனா நான் கண்டிப்பா இன்னும் 2 வருஷத்துல ஹார்ட் அட்டாக்ல செத்துடுவேனுதான். கடைசியா என்னை அந்த ப்ராஜக்ட்டை விட்டு ரிலீஸ் பண்ணிட்டாரு... அதுக்கு அப்பறம் பெருசா மாற்றம் இல்லை.

இந்த மாதிரி வொர்க் கல்சர், கண்ட நேரத்துக்கு சாப்பிடறது, ஒரே இடத்துல உக்கார்ந்திருக்கறது, சரியான நேரத்துல தூங்காம இருக்கறது. எல்லாத்துக்கும் மேல சின்ன வயசுல அதிக சுமையே சேத்துக்கறது இதெல்லாம் நம்மல அதிகமா பாதிக்கும்னு சொல்றாங்க.

ஒரு நாளைக்கு நாம அதிக பட்சம் எவ்வளவு நடக்கிறோம்? உடல் உழைப்பும் இல்லை. ஹை கலோரி ஃபுட், இன்னும் சொல்லிக்கிட்டே போகலாம்....
எப்படி நம்மல நாம சரி பண்ணிக்க போறோம்?

போன வருஷம் சென்னைல சாப்ட்வேர் கம்பெனி மற்றும் கால் செண்டர்ல வேலை செய்யற 30- 40 பேர் 32 வயசுக்குள்ள இறந்திருக்கிறார்கள் என்று படித்த நியாபகம்.

ஒரு மரணத்தின் வலியே தாங்க முடியாத நிலை. இதே வாழ்க்கை வாழ்ந்தால் எத்தனை பேரை இழப்போம் என்று தெரியவில்லை. 60 - 70 வயசுல நம்ம அப்பா, அம்மா சம்பாதிச்ச பணத்தை நாம 30 வயசுக்குள்ள சம்பாதிடறோம். அதுக்காக நம்ம வாழ்க்கையையும் அதுக்குள்ளே முடிஞ்சிடனுமா?

இதுக்கு என்ன முடிவுனு தெரியல...

Friday, February 09, 2007

காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு!!!!

காணமல் போனவர் பற்றிய அறிவிப்பு

கடந்த நான்கு மாதமாக தினமும் பதிவு போட்டு கலக்கி கொண்டிருந்த பதிவர் ஒருவரை கடந்த ஒரு மாதமாக காணவில்லை.

அவரை பற்றிய அடையாளங்கள் கீழ்வருமாறு
எல்லாரும் திருப்பதில சாமி கும்பிடறத பதிவா போட்டா இவர் மட்டும் ஸ்ரீதேவிய பார்த்ததை போட்டு எல்லாரையும் திருப்பதிக்கு போகறதால எவ்வளவு நல்ல விஷயமெல்லாம் நடக்கும்னு யோசிக்க வெச்சாரு. அப்பறம் புதிரா புனிதமானு தொடர் போட்டாரு (மாத்ரூ பூதம் டைப்ல இருக்கும்னு நம்பி போன ஆளுங்களுக்கு எல்லாம் ஆப்பு... என்னையும் சேர்த்துதான் சொல்றேன்)

காலைல சாமி எழுப்பறதுக்கு இருக்கற பாட்டு ஒண்ணு போட ஆரம்பிச்சி பாதியிலயே நிறுத்திட்டாரு... சரி தமிழுக்காகத்தான் நிறுத்தினாருனு எல்லாரும் சந்தோஷமா சம்மதிச்சிடாங்க... அப்பறம் வைகுண்ட ஏகாதசிக்கு தொடர்ந்து பதிவு போட்டு கலக்கோ கலக்குனு கலக்கனாரு...
அப்பறம் 4-5 வலைப்பூ ஆரம்பிச்சி எதுல எது போடறதுனே தெரியாம கொஞ்சம் கன்பூயிஸ் ஆயிட்டாருனு நினைக்கிறேன்...

கடைசியா ஒரு நல்ல பதிவ பொங்கலுக்கு போட்டாரு... அப்பறம் ஆள் எங்க போனாருனு தெரியல

காணமல் போன அன்று இவர் பழனியில் தேவயானியை சந்தித்தேன்னு ஒரு பதிவை தயார் செய்து கொண்டிருந்ததாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன... மேலும் இவர் காவி நிற உடை அணிந்து கையில் கமண்டலம் வைத்திருந்ததாக இவரை பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

இவரை பற்றிய தகவல் அறிந்தால் தெரிவிக்க வேண்டிய முகவரி

காவல் துறை கண்காணிப்பாளர்,
எழும்பூர்
சென்னை - ஆறு லட்சத்தி எட்டு (600 008)

Wednesday, February 07, 2007

வீராச்சாமி - விஐபி கமெண்ட்ஸ்

வீராச்சாமியை பார்த்துவிட்டு வந்த பிரபலங்களின் கருத்துக்கள்!!!

கலைஞர்...
கழக கண்மணிகளே!!! எனக்கு மன தைரியம் போய்விட்டது அதனாலே சாய்பாபாவை சந்தித்தேன் என்று சந்து புந்து எல்லாம் போய் சொன்ன அந்த அராஜக அரக்கர்களை அடக்க நான் சிந்தித்த போது, எனக்கு தம்பி விஜய டி.ராஜேந்தரிடமிருந்து அழைப்பு வந்தது.

நம் பாச மிகு தம்பி தாய் கழகத்தை விட்டு வெளியே சென்றாலும் மற்ற புல்லுரிவிகளை போல் எதிர் முகாமில் சேராமல் மீண்டும் நம்முடனே இணைந்தவர். அவரை யாரும் சேத்து கொள்ளவில்லை என்பது வேறு விஷயமாக இருந்தாலும் மீண்டும் நம் அரவணைப்பில் வந்தவர் என்பதை மறக்காததே தமிழர் மரபு.

இந்த பட ட்ரைலரை நம் குடும்ப தொலைக்காட்சியில் பார்த்ததும், நம் வீரத்தை நிருபிக்க வீராச்சாமியை பார்த்தால் போதும் என்று உறுதியாக உணர்ந்தேன். அதை சற்றும் சறுக்காமல் செய்திருக்கிறார் அன்பு தம்பி விஜய டி.ராஜேந்தர். நான் இந்தி எதிர்ப்பு போராட்டத்திலே சிறையிலிருந்ததைவிட கொடுமையான நேரமாகவே அதை உணர்ந்தேன்.


இப்போது எதிர் முகாமிலிருப்பவர்களை கேட்கிறேன், உங்கள் மனதில் துணிவிருந்தால் இந்த படத்தை முழுதும் பார்த்துவிட்டு பேசுங்கள் எங்கள் வீரத்தை பத்தி.

தம்பிகளே! இந்த சவால் எதிர் முனையிலிருப்பவர்களுக்குத்தான். கழக கண்மணிகள் மேல் எனக்கு எப்போதும் பாசமிருக்கிறது என்பதை இதன் மூலம் நீங்கள் உணர்வீர்கள்!!!


விஜயகாந்த்...
இது முழுக்க முழுக்க அரசியல் காரணத்திற்காக எடுத்த படம். நான் புதிதாக வந்தவன், என்னை மிரட்டி பணிய வைக்கலாமென்றே இந்த படத்தை கலைஞர் தூண்டுதலால் எடுத்திருக்கிறார் டி.ராஜேந்தர். படத்தில் நடித்து மக்களை கொடுமைப்படுத்தி "இவன ஜெயிக்க வெச்சா சினிமால நடிக்க மாட்டான் நம்ம தப்பிச்சிடலாம்" என்று மக்களை நினைக்க வைத்த என் ஃபார்முலாவை காப்பி அடித்திருக்கிறார்கள்.

இதற்கு கலைஞரும் அவர் குடும்ப சேனலுமே காரணம். எலக்ஷன் சமயத்தில் நான் பல நூற்றாண்டுகளுக்கு முன் நடித்த கேப்டன் பிரபாகரன், சின்ன கவுண்டர் போன்ற நல்ல படங்களை போட்டு என்னை சினிமா துறையிலே இருக்க வைக்க அவர்கள் முயற்சி செய்தும், மக்கள் நான் கடைசியில் நடித்த எங்கள் அண்ணா, கஜேந்திரா, தென்னவன், நரசிம்மா போன்ற படங்களை மனதில் வைத்து என்னை ஜெயிக்க வைத்தனர்.

தற்போது அதை இந்த டி. ஆரை வைத்து முறியடிக்க முயற்சி செய்கிறது இந்த தி.மு.க அரசு. இதை நான் ஒன்றும் சாட்சியில்லாமல் சொல்லவில்லை. டி.ராஜேந்தர் என்ற பெயரை விஜய டி.ராஜேந்தர் என்று மாற்றியதை மக்கள் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள். இதுவே பெரிய சாட்சி.

நான் யாருடனும் கூட்டணி வைக்க போவதில்லை. எனக்கு சாப்பாட்டில் பிடிக்காதது கூட்டு தான்...

வைகோ...
1960களிலே தமிழன் தென்னமெரிக்காவில் அருமையான படங்களை தயாரித்து ஆஸ்கர் அவார்டுகளை வாங்கினான் என்பது தமிழர் வீர வரலாறு. அதை நான் என்றும் மறந்தவனில்லை.

ஆனால் அதை இன்று இந்த திமுக அரசு மறந்து வீரத்தை விற்று கோழைகளாக இந்த படத்தை எடுத்திருக்கிறார்கள்.

இதை எதிர்த்து எங்கள் இளைஞர் படை கோவை கற்பகம் காம்ப்லக்ஸிலிருந்து நடை பயணத்தை ஆரம்பிக்க போகிறது என்பதை இப்போது தெரிவித்து கொள்கிறேன்.

அதிமுகவுடன் நாங்கள் கூட்டணி வைத்திருந்தாலும் எங்கள் கொள்கையிலிருந்து நாங்கள் விலகவில்லை என்பதை இதன் மூலம் நீங்கள் உணரலாம்.

இதுக்கு நான் போடால உள்ளேயே இருந்திருக்கலாம்...

ஜெயலலிதா...
மக்களே என்னை நீங்கள் ஆட்சியில் உட்கார வைத்திருந்தால் உங்களுக்கு இந்த கொடுமை நடந்திருக்குமா???

என்னுடன் சண்டை போட்டு போனவுடனே இந்த ஆளை சட்டம் ஒழுங்கு பாதிப்புக்கு காரணம்னு சொல்லி போடால உள்ள உக்கார வெச்சி உங்களை காப்பாற்றியிருப்பேன்!!!

அப்படியில்லைனா வனவிலங்குனு சொல்லி முதுமலைக்காட்டுல கட்டி போட்டிருப்பேன்...

தமிழ்நாட்டில் வன்முறை தலைவிரித்தாடுகிறது என்பதற்கு இந்த படமே பெரிய சாட்சி!!!

புரட்சி தலைவர் வாழ்க!!! அண்ணா நாமம் வாழ்க!!!

சிம்பு...
வல்லவனை விட அருமையாக வந்திருக்கிறது வீராச்சாமி. அப்பா அப்பாதான்னு நிருபிச்சிட்டாரு...
இந்த படத்த ஃப்ளாப் ஆக்க ஒரு பெரிய நடிகர் முயற்சி செய்யறது எனக்கு தெரியும். இந்த சின்ன வயசுல நான் டைரக்டரான பொறாமைல தான் இதையெல்லாம் அவுங்க செய்யறாங்க...

படத்துக்கு யாரு ஃபர்ஸ்ட் டிக்கட் வாங்கிட்டு வராங்கனு முக்கியமில்லை படத்தை யார் கடைசி வரைக்கும் பயப்படாம பாக்கறாங்கன்றது தான் முக்கியம்...

Monday, February 05, 2007

திருட்டு விசிடியை ஒழித்த வீராச்சாமி

நம்ம தமிழ்நாட்டு சிங்கம், One Man Army (இவர் கட்சில இவர் மட்டும்தான் மெம்பர், அது மட்டும் இல்லாம இவர் படத்துக்கு பாட்டு எழுதிஃபையிங், மியூசிக் போட்டுஃபையிங், கட்டிங், போஸ்டர் ஒட்டிங், படம் பார்த்திங் எல்லாமே இவர்தான்) ஒரு படம் எடுத்து திருட்டு விசிடியை எப்படி ஒழிக்கறதுனு தமிழ் நாட்டுக்கு சொல்லி கொடுத்துட்டாரு...
எப்படினு கேக்கறீங்களா???

படம் தியேட்டர்ல ரிலிஸ் பண்ணாத்தானே திருட்டு விசிடி எடுப்பீங்க? அப்படியே நேரா உலகத்தொல்லை காட்சியில் முதல் முறையாக திரைக்கு வராமலே ரிலிஸாகும் திரைப்படம்னு போட்டா எவன் திருட்டு விசிடி எடுப்பான்... ஏ டண்டனக்கா ஏ டணக்குனக்கா!!!

சுடர் - துவக்க விழா!!!

சுடர் - என்னடா இதுனு பாக்கறீங்களா?

நம்ம தேன்கூடுல புதுசா ஒரு விளையாட்டு ஆரம்பிச்சிருக்காங்க... அந்த விளையாட்டோட ரூல்ஸ தெரிஞ்சிக்க இங்கே சொடுக்கவும்

நம்பளை எல்லாம் நம்பித்தான் இந்த விளையாட்ட ஆரம்பிச்சிருக்காங்க. அதனால அடிச்சி ஆடுவோம்.

சரி... நானும் அப்படியே அதை கொஞ்சம் சுலபமா சொல்லிடறேன்... இது நம்ம ஆறு விளையாட்டு மாதிரி தான்.. ஆனா இங்க நம்ம ஒருத்தரைத்தான் கூப்பிடனும் அதே மாதிரி அவர கலாய்க்க 5 கேள்வி கேக்கலாம். அப்படியே சங்கிலி தொடரும். கடைசியா இருக்கவங்க என்னைய 5 கேள்வி கேப்பீங்க...நம்ம யாரை கேக்கலாம்னு யோசிக்கும் போது, எவ்வளவு டேக் பண்ணாலும் தாங்கறாண்டா இவன் ரொம்ப நல்லவன்னு நம்ம ப்ளாக் மக்கள் பாராட்டை பெற்றவர், நாட்டாமைனு பாசமாக அழைக்கப்படும் 'தினமும் என்னை கவனி" ஸ்யாம் தான் நியாபகத்துக்கு வந்தாரு...

சரி அவரோட ஆரம்பிக்கலாம்னு முடிவு பண்ணியாச்சி... ஸ்டார்ட் தி மியூசிக்

1.எதுக்கு உங்க ப்ளாகுக்கு தினமும் என்னை கவனின்னு பேரு வெச்சீங்க? இது வீட்ல இருக்கவங்களுக்கு கொடுக்கற மெசாஜா இல்லை....???

2. ஏன்டா கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னு எப்பவாவது தோனியிருக்கா? எப்பவெல்லாம் தோனும்?

3. அமெரிக்க ஃபிகர்களிடம் கடலை போடுவதற்கும் நம்மூர் பெண்களிடம் கடலை போடவதற்கும் உள்ள வித்யாசங்கள் என்ன?

4. உண்மையா சொல்லுங்க.. பிப்ரவரி 14ன்னா உங்களுக்கு உங்க தங்கமணி நியாபகம் வருவாங்களா இல்லை நீங்க இதுவரைக்கும் ப்ரபோஸ் பண்ண பொண்ணுங்க நியாபகம் வருவாங்களா? (அப்படியே எப்படியெல்லாம் பண்ணீங்கனு டிப்ஸ் கொடுத்தா கொஞ்சம் யூஸ் புல்லா இருக்கும்)

5. அமெரிக்கர்களிடம் நீங்கள் கண்ட நல்ல பழக்கங்கள், நம்மூரிலிருந்தால் நன்றாக இருக்கும் என்று நீங்கள் நினைப்பவை எவை?

நாட்டாமை,
ரூல்ஸ் இதோ!!!

தொடர்விளையாட்டுக்கான விதிமுறைகள்:

1) தேன்கூட்டில் திரட்டப்படும் வலைப்பதிவுகள் மட்டுமல்லாது, திரட்டப்படாத வலைப்பதிவில் இருந்தும் இடுகைகள் தொடர்விளையாட்டுக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.

2) இடுகைகளின் தலைப்பில் "சுடர்" என்று ஆரம்பித்திருந்தால் திரட்டியில் சுலபமாகக் காட்டப்படும்.

3) தொடர்விளையாட்டுக்கான இடுகைகள் ஏப்ரல் 14ம் தேதி வரை ஏற்றுக்கொள்ளப்படும். 2007 'சுடர்' தொடர்விளையாட்டுக்கான முடிவு தேதி: ஏப்ரல் 14 2007 நள்ளிரவு 12 மணி இந்திய நேரம் (இன்னும் 69 நாட்கள் மட்டுமே!).

4) ஒருவர் ஒரு முறை மட்டுமே தொடர்விளையாட்டுக்காகப் பதிவு செய்யலாம். ஒரு நாளைக்கு ஒன்று அல்லது அதிக பட்சம் இரண்டு பேரிடம் மட்டுமே சுடர் நகர்வதாக வைத்துக்கொள்ளவும். கேள்விகளின் எண்ணிக்கை ஐந்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒருவரி பதில்கள் தவிர்க்கவும். கேள்விகளுக்கான சில ஆலோசனைகள் வருமாறு :

  • அ) பொன்மொழிகள் - கருத்து சொல்லச்சொல்லி கேட்கலாம்

  • ஆ) ஏதேனும் ஒரு கருத்து - ஏற்புடையதா இல்லையா? விளக்கம் தரச் சொல்லலாம்.

  • இ) ஏதேனும் ஒரு நிகழ்வில் பொருத்திப் பார்த்து பதில் சொல்லச்சொல்லி கேட்கலாம். உதா: உங்கள் பக்கத்துவீட்டுப் பெண்மணிக்கு நீங்கள் ஒரு உதவி செய்கிறீர்கள். ஆனால் உங்கள் மனைவி சொல்லிய வேலையைச் செய்ய மறந்துவிட்டீர்கள். இதை தெரிந்து உங்கள் மனைவி உங்கள் மீது கோபப்படுகிறார்கள். எப்படி சமாளிப்பீர்கள்?:-)

  • ஈ) நீங்கள் கேள்வி கேட்கும் நபரின் தொழில்/திறமை சார்ந்த உங்கள் கேள்விகளைக் கேட்கலாம்.

  • உ) அட, இதுக்கு மேல சொல்லணுமா என்ன?! கலக்கிடமாட்டீங்க?! :-)


5) 'சுடர்' முன்னர் பதில் அளித்த ஒருவருக்கே மீண்டும் கிடைக்கப்பெறுமாயின் அவர் வேறொருவரை கைகாட்ட வேண்டும். பதில்களையும் கேள்விகளையும் ஒரே இடுகையில் இடவேண்டும். (இதன் மூலம் தொடர்ச்சியை சுலபமாக்கலாம்). மேலும், ஒருவரிடமிருந்து பதில் வருவதற்கு அதிகபட்ச காலம் இரு தினங்கள் மட்டுமே. இரண்டு தினங்களுக்கும் மேலாக பதில் வராவிட்டால், 'சுடரி'னை வேறொருவருக்கு கேள்வி கேட்ட பதிவர் மாற்ற வேண்டும்.

6) விளையாட்டினை ஆரம்பித்தவரிடம் மறுபடி 'சுடர்' வருமாகின், அவர் வேறொருவருக்கு மாற்றலாம் (ஏப்ரல் 14 க்குள்).

7) பதில் மற்றும் கேள்வி்களை தமது வலைப்பதிவில் பிரசுரித்து அது குறித்த இணைப்பு http://www.thenkoodu.com/sudar.php - என்னும் முகவரியின் மூலமாக அளிக்கப்பட வேண்டும்.

8) இந்தத் தொடர்விளையாட்டு, ஒரு சுவாரசியத்திற்கே. தொடர்விளையாட்டின் வெற்றி வலைப்பதிவர்,வாசகர்களின் பங்கேற்பில்தான் இருக்கிறது. வலைப்பதிவர்,வாசகர் அனைவரையும் இந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்துக்கொண்டு சிறப்பான பங்களிப்பினைத் தந்து உற்சாகப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்விளையாட்டுக்கான பதிவுகளை http://www.thenkoodu.com/sudar.php என்ற முகவரியிலிருந்து படிக்கலாம்.

9) கேள்விகள் சாதி, மதம் , செக்ஸ், தீவிர அரசியல் ஆகியவற்றினைத் தூண்டுவதாக இருக்கக்கூடாது. சாதி, மத, சமய மற்றும் தனி நபர் தாக்குதல் கொண்ட பதிவுகள் தொடர்விளையாட்டில் சேர்க்க பட மாட்டாது. ஆக்கங்களைப் தொடர்விளையாட்டில் இருந்து நீக்கும் உரிமை நிர்வாகத்திற்கு உண்டு.

10) விதிமுறைகளை மாற்றும் உரிமை நிர்வாகத்திற்கும், முதல் இடுகையாளருக்கும் உண்டு.

11) மேலும் விவரங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்