தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Sunday, June 27, 2010

காதலெந்திரம்

”டேய் மச்சான், இண்டர்வியூ எப்படி அட்டண்ட் பண்ண?” வீட்டிற்குள் நுழையும் பொழுதே ராஜாவின் விசாரிப்பு.

“நல்லா பண்ணிருக்கேன்டா. அடுத்த வாரத்துல HR கால் இருக்கும்னு சொல்லிருக்காங்க”

“சூப்பர்டா. அப்ப இன்னைக்கு ட்ரீட் தாந்னு சொல்லு” இது ஹரி.

“எல்லாம் கன்ஃபார்ம் ஆகட்டும். பெரிய ட்ரீட்டே வெச்சிடலாம்” சொல்லிவிட்டு ஷீ ஷாக்ஸை கழட்டிவிட்டு உள்ளே சென்றேன்.

வெளியே கதவை யாரோ வேகமாகத் திறந்து உள்ளே வரும் சத்தம் கேட்டது.

பக்கத்து அறையில் தங்கியிருக்கும் கார்த்திக் அண்ணா. வேகமாக என்னிடம் வந்தவர், “வாட்ச் எங்க?”

நான் கழட்டிக் கொண்டே, “நீங்க காலை-ல்ல தூங்கிட்டு இருந்தீங்க. நான் கோயான் அண்ணாக்கிட்ட சொல்லிட்டு.....” சொல்லிக் கொண்டே அவர் கையில் வாட்சைக் கொடுத்தேன். அதை வாங்கிப் பாக்கட்டில் வைத்துக் கொண்டார். திடீரென்று என் கன்னத்தில் ஒரு அறை விழுந்தது. இதை நான் எதிர்பார்க்கவில்லை.

”தா$ளிங்களா........இனிமே அண்ணே நொண்ணேனு எவனாவது ரூம் பக்கம் வந்தீங்க அவ்வளவு தான்” சொல்லிவிட்டு வேகமாகச் சென்றுவிட்டான்.

ராஜாவும், ஹரியும் வேகமாக என்னை நோக்கி எழுந்து வந்தனர். நான் கன்னத்தில் கை வைத்து நின்று கொண்டிருந்தேன். என்ன நடந்தது என்றே ஒரு நிமிடம் புரியவில்லை. என்னை அறியாமல் என் கண்ணீல் இருந்து நீர் வந்து கொண்டிருந்தது.

“டேய்....என்னடா நடந்தது? அவருடைய வாட்சை நீ ஏன்டா எடுத்துட்டு போன? என்னோடது எடுத்துட்டு போயிருக்கலாமே” ஹரி.

“டேய் காலை-ல்ல டை வாங்கலாம்னு போனேன்டா. டை பக்கத்துல வாட்ச் இருந்தது. கோயன் அண்ணா-துனு நினைச்சி எடுத்துட்டு போயிட்டேன். அவர்ட சொல்லிட்டு தாண்டா எடுத்துட்டு போனேன். அதுக்காக இப்படியா அறையுவாங்க? எல்லாம் MNCல மாசம் அறுபதாயிரம் வேலை வாங்கற திமிர் அவனுக்கு. எனக்கு வேலை இல்ல-ல்ல? அதான்”

என்னை மீறி சத்தம் போட்டு அழுது கொண்டிருந்தேன். அழக்கூடாது என்று நினைக்க நினைக்க விம்மல் அதிகமானதே தவிர குறையவில்லை. வேகமாக ரூமிற்குள் நுழைந்து கதவை மூடி, தலையணையில் முகத்தைப் புதைத்துக் கொண்டேன்.

கொஞ்சம் என்னைத் தனியா விடுங்க-ன்னு நான் சொன்னவுடன் கதவைத் தட்டுவதை நிறுத்திவிட்டார்கள்.

சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின் மறுபடியும் கதவு தட்டும் சத்தம். எழுந்து கதவைத் திறந்தேன். கார்த்திக் தான்.

“கொஞ்சம் என் கூட வா”

“உங்க வாட்ச் எடுத்ததுக்கு சாரி. இப்ப நீங்க கொஞ்சம் வெளிய போறீங்களா?”

“டேய் தெரியாம அடிச்சிட்டேன். சாரி. இப்ப என்ன உன் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கணுமா?”

”அதெல்லாம் ஒண்ணும் வேணாம். நீங்க கிளம்புங்க”

“முதல்ல நீ வா” என் கையைப் பிடித்து வெளியே இழுத்து வந்தார். நானும் அவருடன் சென்றேன்.

வெளியே சென்று அவர் வண்டியை எடுத்தார்.

“வா. வந்து உட்காரு” எங்கே என்று கேட்காமல் ஏறி உட்கார்ந்தேன்.

நேராக மஞ்சுநாதா பாரில் வண்டியை நிறுத்தினார்.

உள்ளே ஏசி ஹாலிற்கு சென்று அமர்ந்தோம். நல்ல கூட்டமாக இருந்தது.

உடனே கையில் ஒரு பேப்பருடன் ஆர்டர் எடுக்க ஒருவர் வந்துவிட்டார்.

“என்ன சாப்பிடற? பீரா, ஹாட்டா?”

“எனக்கு எதுவும் வேண்டாம்.”

“சும்மா சொல்லுடா. நான் தான் மன்னிப்பு கேட்டுட்டேன்-ல்ல? சொல்லு”

“கிங் ஃபிஷர்”

“ஒரு கிங் ஃபிஷர், RC லார்ஜ்”

”சைட் டிஷ் சார்” ஆர்டர் எடுப்பவர்.

“சிக்கன் லாலி பாப், அப்பறம் சிக்கன் கபாப்”

“ஓக்கே சார்”

நான் இரண்டு பீர் அடிப்பதற்குள் அவர் நான்கு லார்ஜ் முடித்திருந்தார். போகும் பொழுது எப்படியும் நான் தான் வண்டியை ஓட்ட வேண்டி இருக்கும் போல.

திடீரென்று எழுந்து பாக்கெட்டிலிருந்து எதையோ எடுத்து டேபிள் மேல் வைத்தார்.
அவருடைய வாட்ச்.

“நான் எப்பவாது இந்த வாட்ச் கட்டி பார்த்திருக்கியா? உன் பேர் என்ன? மறந்துட்டேன். சாரி”

“வினோத்”

“ஹ்ம்ம். வினோத். நான் எப்பவாது இந்த வாட்ச் கட்டிப் பார்த்திருக்கியா?”

“தெரியல. நான் கவனிச்சது இல்லை. சாரி.”

“இதை யார் கொடுத்தா தெரியுமா வினோத்?”

எப்படியும் ஏதாவது ஒரு பொண்ணு தான்.

“தமிழ். என் தமிழரசி. யூ நோ ஷி இஸ் குயின் ஆஃப் தமிழ். Do you know that?"

இன்னைக்கு நான் மாட்டினேனா? என் நேரமே சரியில்லை. என்ன கதை சொல்லப் போறானோ?

“நான் இதை ஏன் கைல கட்ட மாட்றேன் தெரியுமா? This is a damn leather watch man. இதை தினமும் கைல கட்டினா பிஞ்சு போயிடும். I should have taken a metal strap. I made a very big mistake. அப்ப தெரிஞ்சிருந்தா லெதர் எடுத்திருக்க மாட்டேன். இப்படி ஆகும்னு தெரிஞ்சிருந்தா நான் அவள்ட பேசியே இருந்திருக்க மாட்டேனே. இல்லையில்லை. இப்ப நான் படற கஷ்டத்தை விட அப்ப அதிகமா சந்தோஷமா இருந்தேன். So I was right”

இந்த மாதிரி லவ் ஃபெயிலியர் கேஸுங்க கூட மட்டும் தப்பித் தவறி தண்ணி அடிக்க உட்காரக் கூடாது. அதுவும் தண்ணி அடிச்சா எப்படி தான் இங்கிலிஷ் வருதோ தெரியலை.

"இந்த வாட்ச் அவளோட முதல் மாச சம்பளத்துல எனக்கு வாங்கி கொடுத்தது.
you know what, we were just friends at that time. We believed so. You never know when you start loving someone. Love at first sight எல்லாம் கௌதம் மேனன் படத்துல தான்.

நான் செல் ஃபோன் வாங்கனத்துக்கு அப்பறம் வாட்ச் கட்டறதை நிறுத்திட்டேன். ஒரே விஷயத்துக்கு எதுக்கு ரெண்டு பொருள்-ன்னு. இதை அவள்ட சொன்னேன். அவ ஒத்துக்கல. நான் ஆசையா வாங்கி கொடுத்தா வாங்கிக்க மாட்டியானு கேட்டா? எனக்கு என்ன சொல்றதுனு தெரியல. வாங்கிட்டேன்.

You know one thing, பொண்ணுங்க எதை நினைச்சாலும் சாதிச்சிடுவாங்க. They have that power. You cant stop them. Are you in Love?”

"இல்லை. எனக்கு பொண்ணுங்க ஃபிரண்ட்ஸ் கூட கிடையாது. நான் காலேஜ்ல கூட பொண்ணுங்ககிட்ட பேச மாட்டேன்”

“நானும் அப்படி தான் விஜய். விஜய் தானே?

“வினோத்”

“சாரி. வினோத். நானும் காலேஜ்ல எந்த பொண்ணுக்கிட்டயும் பேசனது இல்லை. தமிழ் தான் ஃபர்ஸ்ட். ஆல்சோ லாஸ்ட். அவள் என் ஃபிரெண்ட் பாஸ்கீயோட கஸினோட ஃபிரெண்ட். அவன் கஸின் கிருத்திகாவும், தமிழும் உங்களை மாதிரி தான் இங்க வீடு எடுத்து தங்கி வேலை தேடிட்டு இருந்தாங்க.

பாஸ்கியும் நானும் அவுங்களுக்கு வேலை தேட ஹெல்ப் பண்ணோம். அப்ப தான் தமிழ் எனக்கு பழக்கமானா. அவளுக்கு Data Structuresல ஏதாவது சந்தேகம்னா என்னைக் கூப்பிடுவா. DSல ஆரம்பிச்சி, கல்கி, சுஜாதா, இளையராஜா, சச்சின் அப்படி நிறைய பேசனோம். ரொம்ப போர் அடிக்கறேனா?”

“இல்லை. இல்லை. சொல்லுங்க”

“காலைல ஆபிஸ் போனவுடனே. வேக வேகமா வேலையை முடிச்சிடுவேன். அவளுக்கு ஃபோன் பண்ணனும்னு ஆசையா இருக்கும். ஆனா எதுக்காக ஃபோன் பண்ணனு சொல்றதுக்கு ஒரு காரணம் வேணுமேனு தயக்கமா இருக்கும். அப்படியே யாஹீ, கூகுள் ஃபிரெஷர்ஸ் குரூப்ல தேடி ஏதாவது ஓப்பனிங்க் இருக்கானு பார்ப்பேன். அதையே காரணமா வெச்சி ஃபோன் பண்ணுவேன். அது அப்படியே ரெண்டு, மூணு மணி நேரம் போகும்.

கொஞ்ச நாள்ல கிருத்திகாக்கு வேலை கிடைச்சி சென்னைப் போயிட்டா. தமிழ்க்கு என்ன பண்றதுனு தெரியல. சென்னைப் போகலாம்னு யோசிச்சா. அப்பறம் பொண்ணுங்க தங்கற PGல தங்கலாம்னு முடிவு பண்ணிட்டா. அவள் PG போறதுக்கு நான் போய் கொஞ்சம் உதவி செஞ்சேன்.

அதுக்கு அப்பறம் வீக் எண்ட் ஆனா ரெண்டு பேரும் மீட் பண்ண ஆரம்பிச்சோம். Forum, Garuda Mall அப்பறம் கோரமங்களால ஒரு பார்க். அங்க உட்கார்ந்து கொஞ்ச நேரம் அவளுக்கு DS, Quants எல்லாம் சொல்லிக் கொடுப்பேன். அப்பறம் அங்க இருந்து Forum போவோம். இன்னொரு பீர் சாப்பிடறயா? பேரர்...........”

“இல்லை வேண்டாம்”

“சும்மா சாப்பிடு. இல்லை கிளம்பலாமா?”

“இல்லை நீங்க சொல்லுங்க”

“வீக் எண்ட்னு இல்லாம சில சமயம் அவள் போர் அடிக்குதுனு சொன்னா, வீக் டேஸ் ஈவனிங் கூட கிளம்பி போவேன். அதுக்காக அவ பசங்க கூட சுத்தறவனு நினைச்சிக்காத. அவ என்னைத் தவிர வேற எந்த பையன்கிட்டயும் பேசி நான் பார்த்தது இல்லை. அவளுக்கும் அந்த ஆச்சரியம். எப்படி என் கூட மட்டும் இவ்வளவு க்ளோஸ் ஆனானு.

ஒரு வீக் எண்ட் ரெண்டு பேரும் வழக்கம் போல பார்க்ல உட்கார்ந்திருதோம். அந்த திங்கக்கிழமை அவளுக்கு ஒரு இண்டர்வியூ இருந்தது. அதுக்காக சொல்லிக் கொடுத்திட்டு இருந்தேன். திடீர்னு ஒரு கூட்டம்.

நெத்தில சிவப்புக் கலர்ல திலகம் மாதிரி வெச்சிட்டு. அங்க நாலஞ்சி couples இருந்தோம். மொத்தமா சுத்தி வளைச்சிட்டாங்க. மொத்தமா எல்லா கப்பில்ஸையும் ஒண்ணா சேர்த்துட்டாங்க.

ஒவ்வொருத்தவங்களையாக் கூப்பிட்டு ராக்கி இல்லை தாலி - ரெண்டுல ஒண்ணு எடுத்து கட்டுங்கனு மிரட்டினாங்க. எங்களுக்கு என்ன பண்றதுனு தெரியல. நாங்க மூணாவதா நின்னுட்டு இருந்தோம். எல்லாம் கன்னடால கெட்ட வார்த்தைல திட்டிட்டு இருந்தானுங்க. எங்களுக்கு முன்னாடி இருந்த ரெண்டு பேரும் வேகமா ராக்கி கட்டிட்டு போயிட்டாங்க. இப்ப நாங்க.

என்ன செய்யறதுனு தெரியல.தமிழ் ரொம்ப பயந்து போய் இருந்தா. புலியைப் பார்த்தா மான் கண்ணு மிரட்சில எப்படி இருக்கும்னு பார்த்திருக்கியா? அவ கண்ணும் அப்படி தான் இருந்தது. அவ பயப்படறது கூட அழகு தான். அந்த இடத்திலயும் என்னை மீறி நான் அதை ரசிச்சிட்டு இருந்தேன்.”

ஒரு நிமிடம் நிறுத்தினார்.

“அவ ராக்கி எடுக்கல. எனக்கு என்ன பண்ணறதுனு தெரியல”

“என்ன பண்ணீங்க?”

“We are friends. We are studying here. அப்படினு கைல வெச்சிருக்க புக்கை காட்டினேன். புக்கை மூடாம, கைல பேனா திறந்து இருந்ததைப் பார்த்து நம்பி விட்டுட்டாங்க. ஆனா ஏதோ கன்னடத்துல திட்டினாங்க. வேகவேகமா அந்த இடத்துல இருந்து பைக்கை எடுத்துட்டு போய் அவளை PG ல விட்டேன்.

வீட்டுக்கு போனதும் பார்த்தா அவள்ட இருந்து மெசேஜ், Thanks னு ஒரே வார்த்தைல. எதுக்கு சொன்னானு புரியலை. அதை நான் தான் சொல்லிருக்கணும். அவ ராக்கி கட்டாததுக்கு. அது ஒரு சாதாரண கயிறு தான்.

அப்படிப் பார்த்தா தாலி கூட சாதாரண கயிறு தான். அந்த கயிறுல நாம வைக்கிற நம்பிக்கை தான் மேட்டர். இல்லையா?”

“ஆமாம்”

“சரி. நேரமாச்சு. கிளம்பலாமா?”

“இன்னும் கதை முடியலையே.”

“கதையா? இது கதை இல்லை வினோத். This is my life. I think you are not getting it”

“சாரி. தப்பா எடுத்துக்காதீங்க. நான் அப்படி mean பண்ணல. அப்பறம் என்ன ஆச்சு?”

“ஒரு வழியா அந்த இண்டர்வியூ அவ க்ளீயர் பண்ணிட்டா. ஒரு மாசத்துல வேலைல சேர்ந்தா. அப்பறம் ஃபோன் பேசறது ஓரளவு குறைஞ்சது. இருந்தாலும் வீக் எண்ட்ல மீட் பண்ணிக்குவோம். ஷாப்பிங் எல்லாம் சேர்ந்து தான் பண்ணுவோம். முதல் மாச சம்பளத்துல வீட்ல எல்லாருக்கும் துணி வாங்கி கொடுத்தா.

எனக்கு மட்டும் வாட்ச். இந்த வாட்ச் தான். நான் வேண்டாம்னு சொன்னாலும் வாங்கி கொடுத்தா. பின்னாடி அதுக்கு அவளே ஒரு காரணம் சொன்னா. துணி வாங்கி கொடுத்தா எப்பவாது தான் போடுவோம். அதே வாட்ச்னா தினமும் கட்டறது. ஒரு நாளைக்கு பல தடவை அதைப் பார்ப்போம். அப்ப எல்லாம் எனக்கு அவ ஞாபகம் வரணும்னு யோசிச்சி வாங்கிக் கொடுத்தாளாம்.

அப்ப எனக்கு அது புரியல. ஏதோ நன்றி கடனுக்கு வாங்கித் தரானு நினைச்சிட்டேன். அவ ஞாபகமா இப்ப என்கிட்ட இருக்கறதும் அந்த வாட்ச் தான். லெதர் ஸ்டராப்னு நான் கைல கட்டறது இல்லை. அதுவும் அந்த வாட்ச்
என்னைப் பொருத்த வரைக்கும் என்னுடைய தமிழ் தான்.

I can't even imagine someone wearing this watch.

அப்படி நான் பார்த்துப் பார்த்து வெச்சிருக்கற வாட்சை நீ கைல கட்டிட்டுப் போன-ன்னு தான் எனக்கு அவ்வளவு கோபம் வந்துடுச்சி. கோபத்துல உன்னை அடிச்சிட்டேன். ஐ ஆம் சாரி”

“இல்லை நான் தான் சொல்லணும். எனக்குத் தெரியாது. ஐ ஆம் சாரி. நீங்க அவுங்களுக்கு ப்ரபோஸ் பண்ணலீயா?”

”ப்ரப்போஸ்? ஐ லவ் யூனு நாங்க வார்த்தைல சொல்லணுமா? ஐ லவ் யூங்கறது ஜஸ்ட் வார்த்தை கிடையாது. உங்க அம்மாட்ட என்னைக்காவது நான் கோபமா இருக்கேன், சோகமா இருக்கேனு சொல்லிருக்கியா வினோத்?”

“இல்லை. என்னுடைய முகத்தையும் ரியாக்‌ஷனையும் பார்த்து அவுங்களா புரிஞ்சிக்குவாங்க”

“காதலும் அப்படித்தானே? நான் உன்னை காதலிக்கிறேனு சொல்லணுமா? அது தானா புரிஞ்சிக்கறது தானே. பொண்ணுங்க மனசைப் புரிஞ்சிக்க முடியாது, கஷ்டம். கடலை விட ஆழம்னு சொல்றது எல்லாம் சுத்த ஹம்பக்.

அவுங்கக் கண்ணைப் பார்த்து பேசினாலே போதும். தானாப் புரிஞ்சிடும். அவளுடைய வார்த்தையைகள் மட்டும் இல்லை, அவ மௌனம் பேசற மொழியும் எனக்குப் புரியும். அவளுக்கும் தான்.

We were simply made for each other. But we were not gifted enough to share our lives.

தமிழோட அப்பாக்கு திடீர்னு உடம்பு சரியில்லாம போயிடுச்சி. என்ன-ன்னு பார்த்தா லிவர்ல கான்சராம். ரொம்ப நாள் தாங்க மாட்டார்னு சொல்லிட்டாங்க. அவளுக்கு உடனே கல்யாணம் பண்ணனும்னு முடிவு எடுத்துட்டாங்க. அப்பா இந்த நிலைமைல இருக்கும் போது எப்படி என்னைப் பத்தி சொல்றதுனு அவளுக்குப் புரியலை.

இருந்தாலும் அப்பா எப்படியும் அவளைப் புரிஞ்சிப்பாருனு தைரியமா சொல்லிருக்கா. அந்த மாதிரி ஒரு நிலைமை எந்த அப்பாவுக்கும் வரக் கூடாது. எந்த அப்பாவும் தன் பொண்ணு சந்தோஷமா இருக்கணும்னு தான் பார்ப்பாங்க. தமிழ் எடுத்த முடிவு சரியா, தப்பானு சிந்திக்கக் கூட அவருக்கு நேரமில்லை. இருந்தாலும் அவர் சொன்னதைத் தமிழ் என்கிட்ட சொன்னதும் எனக்கு என்ன பதில் சொல்றதுனு தெரியல”

ஒரு நிமிடம் அமைதியாக இருந்தார்.

“தமிழ், இன்னும் நான் எத்தனை நாள் இருப்பேனு தெரியலை. ஒரு வாரம் தாங்குவனானு கூட நிச்சயம் இல்லை. நான் இருக்கும் பொழுது நீ காதல் கல்யாணம் பண்ணிட்டா எல்லாரும் என்னைக் கேலி பேசுவாங்க. குறை சொல்லுவாங்க. அதை நான் நிச்சயம் தாங்கிக்குவேன்.

நான் போனதுக்கு அப்பறம்னா எல்லாரும் உன் அம்மாவைத் தானம்மா சொல்லுவாங்க. நாம இன்னும் டவுன்ல தானே இருக்கோம்? நான் போனதுக்கு அப்பறம் நம்ம சொந்தக்காரவங்களோட உதவி நம்ம குடும்பத்துக்கு நிச்சயம் தேவை. நம்ம சொந்தத்துல யாரையாவது நீ கல்யாணம் பண்ணிட்டா நம்ம குடும்பத்துக்கு நான் போனதுக்கு அப்பறமும் சப்போர்ட் கிடைக்கும். அது நிச்சயம் நமக்கு வேணும்னு நான் ஆசைப்படறேன்.

உங்க அம்மாவைத் தனியா நிக்க வெச்சிடாதம்மானு சொல்லிட்டாரு. அவளுடைய மாமா பசங்கள்ல ஒருத்தரை கல்யாணம் பண்ணி வைக்கணும்னு அவுங்க அப்பா ஆசைப்பட்டாறாம். நானும் அது தான் சரினு சொல்லிட்டேன்”

“நீங்க கொஞ்சம் வெயிட் பண்ணிருக்கலாம்ணே”

“நான் காத்திருந்து என்ன பிரயோஜனம்? அவுங்க அப்பா உயிரோட இருக்கும் போழுதே கல்யாணம் பண்ணனும்னு ஒரே வாரத்துல அவளுக்கு கல்யாணம் பண்ணிட்டாங்க. அவ கடைசியா என்கிட்ட ஃபோன்ல பேசினது இது தான்...................அன்னைக்கு பார்க்ல நான் ராக்கி கட்டாததைப் புரிஞ்சிட்டு நீங்க தாலி கட்டிருக்கலாமே கார்த்திக்-ன்னு கேட்டா.

இப்படி எல்லாம் நடக்கும்னு அன்னைக்கு எனக்கு தெரியாம போச்சே!”

”சார், டைம் ஆச்சு. பார் க்ளோஸ் பண்ண போறோம். பார்சல் எதாவது வேணுமா?”

“இல்லைங்க நாங்க கிளம்பறோம்” நான் தான் சொன்னேன்.

ஒரு வழியாக அவரை உட்கார வைத்து வீட்டிற்கு வந்து சேர்ந்தேன். அவரை ரூமிற்கு அழைத்து சென்று படுக்க வைத்து கதவை மூடி விட்டு வந்தேன்.

வாட்சைப் பாக்கெட்லயே வெச்சிருக்காரே. திரும்பிப் படுக்கும் போது உடைஞ்சிடப் போகுதுனு மறுபடியும் அவர் படுக்கை அறைக்கு சென்றேன். அவர் ஒருக்களித்துப் படுத்திருந்தார். அவர் தலையணைக்கு பக்கத்தில் இன்னொரு தலையணை மேல் வாட்ச் இருந்தது. அதையே அவர் பார்த்துக் கொண்டிருப்பதாக ஏனோ என் மனதில் பட்டது.


Friday, June 25, 2010

வெட்டிப் பேச்சு - 25-Jun-10

பதிவு எழுதி எவ்வளவு நாளாச்சு. பதிவு எழுதாம சும்மா இருக்கறதும் ஒரு சுகம் தான்.

போன வருடம் இறுதியில் என் வலைப்பதிவில் ஏதோ வைரஸ் பிரச்சனை. பார்த்தால் தமிலிஷ் லிங் கொடுத்திருந்ததால் என்று தெரிந்தது. அப்படியே டெம்ப்ளேட் மாற்றி விட்டுவிட்டேன்.

ப்ராஜக்ட் முடிந்து இந்தியா சென்று இரண்டு மாதங்களாக இணையப் பக்கம் வராமல் இருந்தேன். அந்த நேரத்தில் vettipaiyal.com, vvsangam.com வலைத்தளங்களுக்கான ரினிவல் மெயில்கள் வந்திருக்கின்றன. அதைத் தவற விட்டுவிட்டேன். அதனால் மறுபடியும் ப்ளாகருக்கே வந்துவிட்டேன்.

மார்ச் முதல் வாரத்தில் மறுபடியும் ஆன் சைட் வந்துவிட்டேன். இந்த முறை ரோட் ஐலாண்ட் என்னும் மாநிலம். அமெரிக்காவில் மிக சிறிய மாநிலம் அது தான். வீட்டின் மிக அருகிலே கடற்கரை. ஆனால் குளிர்காலமாக இருந்ததால் அதிகமாக செல்ல முடியவில்லை.

பிறகு வேலை மாற்றம். ஆறரை ஆண்டுகளாக வேலைப் பார்த்த நிறுவனத்தில் இருந்து சில சொந்த காரணங்களுக்காக வேலை மாற வேண்டி வந்தது. மிகவும் கடினமான முடிவுதான். நிறைய சிந்தனைகளுக்குப் பிறகு மாறினேன்.

தற்பொழுது நியூ யார்க்கில் வேலை. தினமும் மதியம் வெளியே தான் சாப்பிடுகிறேன். சப், பீசா ஏதாவது வாங்கி எடுத்துக் கொண்டு, சுதந்திர தேவி சிலைக்கு செல்லும் படகு சவாரிக்கு அருகில் இருக்கும் பூங்காவில் அமர்ந்து குளிர்ந்த காற்றையையும், கடல் அலையையும் ரசித்த படி சாப்பிட்டு வருகிறேன்.

தினமும் இரண்டு மணி நேரப் பேருந்து பயணம். அது தான் க‌டின‌மாக‌ இருக்கிற‌து.

இர‌ண்டு முறை ப‌திவ‌ர் ஸ்ரீத‌ர் நாராய‌ண‌னை ச‌ந்தித்தேன். அருமையான‌‌ க‌தைக்க‌ள‌ன்க‌ளுட‌ன் கதைகளைச் சொன்னார். எப்பொழுது எழுதுவார் என்று காத்திருக்கிறேன்.

நானும் ஒரு கதை எழுத ஆரம்பித்தேன். எங்கே என் கதையை நானே காப்பி அடிக்கிறேன் என்று யாராவது பிரச்சனை செய்வார்களோ என்று பயத்தால் நிறுத்திவிட்டேன். ப‌ய‌ம் தெளிந்த‌வுட‌ன் அதை எழுதி முடித்து ப‌திவிடுகிறேன்.

மேலும் அறிவு ஜீவி ச‌மூக‌த்திற்கு அடியேனின் வேண்டுகோள். என் ப‌திவு என்னைப் போன்ற‌ மொக்கைக‌ளுக்காக‌த் தான். இல‌க்கிய‌ம் வேண்டுமென்றால் பிராஜ‌க்ட் ம‌துரையில் (http://projectmadurai.org/) நிறைய‌ இருக்கிற‌து. எடுத்து ப‌டித்துக் கொள்ள‌வும்.

Sunday, March 28, 2010

குட்டிப் பாப்பா

அலாரம் சத்தம் கேட்டு மெதுவாக எழுந்தோம். மணி ஐந்து நாற்பது. நான்கு மணியிலிருந்து ஆறு மணிக்குள் பார்த்து விட வேண்டுமென்பது எனது எண்ணம். அறையில் நன்றாக வெளிச்சம் வந்துவிட்டது. ஏற்கனவே கவரிலிருந்து பிரித்து வைத்திருந்த அந்த வெள்ளை நிற பிளாஸ்டிக் குச்சியை தீபாவிடம் கொடுத்தேன். எதுவும் பேசாமல் ஒருவித கலக்கத்துடன் பாத்ரூமிற்கு சென்றாள்.

இரண்டு நிமிடத்திற்கு பின் வெளியே வந்தாள். கையில் எதுவும் இல்லை. என் பார்வையாலே அது எங்கே என்று நான் கேட்டதை புரிந்து கொண்டாள்.

“உள்ள இருக்கு. நீங்களே போய் பாருங்களேன். ப்ளீஸ்”

உள்ளே சென்று பார்த்தேன். வாஷ் பேசின் மேல் இருந்தது. அதை பத்திரமாக எடுத்து வந்து கட்டிலில் அமர்ந்தேன். என் மடியில் தலை சாய்த்து படுத்துக் கொண்டாள். நான் அதையே பார்த்துக் கொண்டிருந்தேன். மெதுவாக ஒரு கோடு தெரிந்தது. இன்னும் சில நிமிடங்கள் காத்திருக்க வேண்டும். இருவருக்கும் இதயத்துடிப்பு அதிகமாகி இருந்தது. இரண்டு நிமிடங்களுக்குப் பின் லேசாக இரண்டாவது கோடு தெரிய ஆரம்பித்தது. நன்றாக உத்துப்பார்த்தேன். அடுத்த இரு நிமிடங்களில் தெளிவாகவே தெரிந்தது.

தீபாவை என் மடியிலிருந்து தூக்கினேன். என்ன ரிசல்ட்? அவள் கண்களில் அந்த கேள்வி தெரிந்தது. இறுக்கமாக அணைத்து நெத்தியில் முத்தமிட்டேன். புரிந்து கொண்டாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர் வர ஆரம்பித்தது. ரொம்ப சந்தோஷப்பட்டா தீபா உடனே அழுதுவிடுவாள்.

“லூசு. அழாத” சொல்லிவிட்டு கண்ணை துடைத்தேன். மீண்டும் மடியில் சாய்ந்து கொண்டாள்.

அறை முழுக்க மௌனமே நிரம்பி வழிந்தது.

“என்னடா குட்டி உங்கம்மாக்கு ஃபோன் பண்ணி சொல்லலாமா?”

“வேணாம். அவுங்க பேச மாட்டாங்க” லேசாக விசும்ப துவங்கினாள்.

அவளை தூக்கி நேராக என் முகத்தைப் பார்க்க வைத்தேன். விசும்பல் சத்தம் குறைந்தது.

”அழாதடா குட்டிப்பையா. இனிமே எல்லாம் சரி ஆகிடும். பாப்பா வர நேரத்துக்குள்ள எனக்கு மறுபடியும் வேலை கிடைச்சிடும். நம்ம ரெண்டு பேர் வீட்லயும் சரி ஆகிடுவாங்க. சரியா?”

“பாப்பானு எப்படி சொல்றீங்க?”

“எனக்கு ஜோசியம் தெரியும்”

“சொல்லுங்க. எப்படி சொல்றீங்க?”

“பெண் குழந்தை பிறந்தா தான் அம்மா அழகா மாறுவாங்களாம். பையன்னா குரங்கு மூஞ்சி மாதிரி மாறிடுமாம். நீ தான் இன்னும் அழகாயிட்டயே. அதான்”

“கதை விடாதிங்க. அதெல்லாம் ஏழு மாசத்துக்கு அப்பறம் தான் தெரியுமாம்”

“நீ வேணா பாரு. நிச்சயம் பாப்பா தான் பொறக்கும்”

”ஏன் உங்க அக்கா பையனுக்கு கொடுக்கணும்னு பாக்கறீங்களா? அதெல்லாம் நான் ஒத்துக்க மாட்டேன்”

“அதெல்லாம் அப்ப பாத்துக்கலாம்டா. நான் போய் இப்பவே இண்டர்நெட்ல பேர் பாக்கறேன். R இல்லைனா Sல தன் வைக்கணும்”

“நீங்க முதல்ல நௌக்ரில இருந்தோ மான்ஸ்டர்ல இருந்தோ ஏதாவது மெயில் வந்திருக்கானு பாருங்க”

“ஒரு வாரத்துல என்ன பெருசா மாறிடும்னு நினைக்கிற. எங்கயும் மேனஜர் போஸ்டிங்கு ஆள் எடுக்குற மாதிரி தெரியலை. ஃப்ரெஷர்னா கொஞ்சம் கஷ்டப்பட்டாவாது கிடைக்கும் போல. எலக்‌ஷன் வரைக்கும் அமைதியா இருந்துட்டு இப்ப கொத்து கொத்தா தூக்கறானுங்க.”

“அதுக்கு என்னங்க பண்ண? இப்ப பாப்பா வேற வர போகுதே சமாளிக்க முடியுமா?”

“ஏய்… ஏன் இப்படி ஃபீல் பண்ணற? வீட்டு லோன் இருபத்தி ரெண்டாயிரம் போக மீதி எட்டாயிரத்துல குடும்பத்தை நடத்திக்கலாம். ஆடம்பர சொலவெல்லாம் குறைச்சிட்டு அத்தியாவசிய தேவைகளை மட்டும் கவனிச்சிக்கலாம்”

“நம்ம ஆடம்பர செலவு எதுவுமே செய்யறதில்லையே”

“நம்ம ரெண்டு பேர் செல்ஃபோன் பில் நாலாயிரம் வருது. நான் என்னோடதை தூக்கப் போறேன். ஏதாவது இண்டர்வியூ கால்னாலும் லேண்ட்லைன்லயே பேசிக்கலாம். நீயும் அதை குறைக்க பாரு. இனிமே நோ சினிமா, ஹோட்டல். அப்பறம் கரெண்ட் பில் ரெண்டாயிரம் வருது. எங்கம்மா நூறு ரூபாய்க்கு மேல கட்டணதே இல்லை. அதையும் குறைக்கணும். இப்படி நிறைய குறைக்க வேண்டியது இருக்கு”

“சமாளிச்சிக்கலாம்னு சொல்றீங்களா? நான் வேணா ஏதாவது பர்சனல் லோன் எடுக்கவா?”

“அதெல்லாம் வேண்டாம்டா. வீட்டு லோனே நிறைய இருக்கு. எப்படியும் மூணு நாலு மாசத்துல சரி ஆகிடும். அப்ப நீயும் லீவு போட வசதியா இருக்கும். எப்படியும் வாங்கிடலாம்டா”

“உங்களை வேலையை விட்டு தூக்கினதுக்கு பதிலா என்னைய தூக்கிருந்தா கூட ஓரளவு சுலபமா சமாளிச்சிருக்கலாம். இன்னும் ஒரு பத்தாயிரம் அதிகமா வரும்”

“ஆமாம். நீயும் ரெஸ்ட் எடுத்த மாதிரி இருந்திருக்கும். உன்னை இப்ப வேலைக்கு அனுப்பவே எனக்கு கஷ்டமா இருக்கு”

“ஏன் அப்படி சொல்றீங்க? எல்லாம் நம்ம தேவைக்குத் தானே.”

“ஹ்ம்ம்ம். எப்படியும் நான் சீக்கிரம் வாங்கிடறேன்”

“சீக்கிரம் வாங்கிடுவீங்கனு எனக்கும் நம்பிக்கை இருக்கு. நீங்க எதுக்கும் கஷ்டப்படாதீங்க” என்னை இறுக்கி அணைத்து முத்தம் கொடுத்துவிட்டு முகம் கழுவ பாத்ரூம் சென்றாள்.

நான் எழுந்து போய் கம்ப்யூட்டர் முன் அமர்ந்தேன். கடைசியாக எப்பொழுது ஆறு மணிக்கெல்லாம் எழுந்து வேலையை ஆரம்பித்தேன் என்று நினைவில்லை.

நௌக்ரியிலிருந்து சம்பந்தமே இல்லாத சில வேலை வாய்ப்பு மெயில்கள் வந்திருந்தன. எனக்கு வேலை போய் சரியாக இன்றோடு பத்து நாட்கள் ஆகின்றன. பத்து தூக்கம் இல்லாத இரவுகள். வீட்டில் பகைத்து கொண்டு செய்த காதல் திருமணம் என்பதால் இருவர் வீட்டிலும் தள்ளி வைத்து விட்டார்கள். அந்த வீராப்பிலே முப்பது லட்ச ரூபாய் செலவு செய்து இந்த அப்பார்ட்மெண்ட் வாங்கியிருந்தோம். ஃபர்னிச்சர் மத்த சாமான்கள் எல்லாம் சேர்ந்து முப்பத்தைந்து ஆகியிருந்தது. கையிலிருந்த அனைத்து சேமிப்புகளும் இதில் கரைந்து விட்டது.

இது வரை என்னுடைய நிறுவனம் எப்பொழுதும் லே ஆஃப் செய்யாத தைரியம் இதையெல்லாம் என்னை செய்ய வைத்திருந்தது. எப்படியும் சமாளித்துவிடலாம் என்றும் நினைத்திருந்தேன். இப்பொழுது தான் பயம் வந்துள்ளது. எப்படியும் சிட்டியில் உள்ள சிறந்த மருத்துவமனையில் தான் தீபாவிற்கு காட்ட வேண்டும். அதை எப்படி சமாளிக்க போகிறோம் என்று தெரியவில்லை. அவசரத்திற்கு நண்பர்களிடமிருந்து கடன் வாங்கலாம். வேலை தேடும் போது நண்பர்களுக்கு நான் கணக்குப் பார்க்காமல் செலவு செய்திருக்கிறேன். ஒருத்தராவது உதவாமலா போய்விடுவார்கள். என் மனதில் உள்ள பயம் தீபாவிற்கு தெரியக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.

காலை டிபனை தீபா தயார் செய்ய, முதன் முதலாக நான் கீழறங்கி குடிநீரை குடத்தில் பிடித்து தூக்கி வந்தேன். இருவரும் சேர்ந்து சாப்பிட்டோம். கடந்த ஒரு வாரமாக அவளை என் வண்டியில் தான் அழைத்து சென்று கொண்டிருந்தேன்.

“குட்டி, இந்த நிலைமைல நீ டூவீலர்ல வரலாமா? பஸ்லயும் தூக்கி தூக்கி போடும் இல்லை? கால் டேக்சி ஏதாவது சொல்லவா?”

“அதெல்லாம் எதுவும் வேண்டாங்க. டூவீலர்லயே போகலாம்”

“ஹ்ம்ம்ம். மதியம் நான் ஏதாவது சமைச்சி கொண்டு வந்து கொடுக்கவா?”

”ஐயா சாமி. அன்னைக்கு நீங்க முட்டையை வேக வெச்சி கொடுத்ததே போதும். ஆஃப் பாயிலா முட்டையை வேக வெச்ச முதல் ஆள் நீங்க தான். எங்களை விட்டுடுங்க” வயிற்றில் கை வைத்து காட்டினாள்.

ஒவ்வொரு ஸ்பீட் ப்ரேக்கிலும் பார்த்து நிதானித்து ஓட்டினேன். வழக்கத்தை விட முப்பது நிமிடம் அதிகமாக எடுத்திருந்தேன். அவளை விட்டுவிட்டு எங்கும் போக மனமில்லாததால் வீட்டிற்கு வந்தேன். ஸ்டாக் மார்க்கெட் பார்க்கவும் மனமில்லை. இரண்டு லட்சம் இன்று முப்பதாயிரமாக மாறி இருப்பதை பார்த்து எரிச்சலடைவதை விட பார்க்காமலிருப்பதே மேல். அம்மாவிற்கு ஃபோன் செய்து விஷயத்தை சொல்லலாமா? ஓரளவு கோபம் குறையவும் வாய்ப்பிருக்கிறது. எதற்கும் டாக்டரிடம் ஒரு முறை சோதித்துவிட்டு இருவர் வீட்டிலும் சொல்லிவிடலாம். சனிக்கிழமை செக் அப் செய்துவிட்டு சொல்லிவிடலாம் என்று திட்டம். இன்னும் நான்கு நாட்கள் இருக்கிறது.

ஒரு வழியாக இன்று வெள்ளிக்கிழமை வந்துவிட்டது. சமையலில் உதவவில்லை என்றாலும் பாத்திரத்தை கழுவி வைத்தேன். அவளை கனமான பொருட்களை தூக்கவிடாமல் பார்த்துக் கொண்டேன். என்னை நம்பி வந்தவளை மகாராணி போல பார்த்து கொள்வது என் கடமை. இரண்டு நாட்களாக தீபா டென்ஷனாகவே இருக்கிறாள். செலவுகளை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்ற பயம் வந்துவிட்டது. வசதியாக வாழ்ந்தவள். எப்படியும் சமாளித்து கொள்ளலாம் என்று அவளுக்கு ஆறுதல் கூறி வந்தேன். சனிக்கிழமை வீட்டில் சொல்லலாம் என்று சொன்னதற்கு அவளிடமிருந்து எந்த பதிலுமில்லை. மௌனம் சம்மதம். வீட்டிலிருந்து உதவி கிடைத்தாலும் அதை ஏற்பதாக இல்லை. சமாளிக்க முடியாத பட்சத்தில் வண்டியை வித்துவிடலாம் என்று முடிவு செய்திருந்தேன். எப்படியும் முப்பதாயிரம் கிடைக்கும். அதை வைத்து மூன்று மாதத்தை ஓட்டிவிட்டால் போதும். வேலை கிடைத்தவுடன் முதல் மாத சம்பளத்திலே புது வண்டி வாங்கி விடலாம். இதை தீபாவிடம் சொல்லவில்லை.

”இந்த காலாண்டில் XXXXX நிறுவனம் 12 சதவிகிதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இது சென்ற வருடத்தின் இதே காலாண்டை காட்டிலும் ஒரு சதவிகிதமே குறைவு. உலக பொருளாதார தேக்க நிலையிலும் 12 சதவிகிதம் வளர்ச்சி அடைந்தது பிரமிக்கத்தக்கது என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்” டீவியில் ஓடிக்கொண்டிருந்தது

தீபா கம்பெனிதான். ஷேர் நஷ்டக்கணக்கு ஓரளவு குறைந்திருக்கும்.

மாலை ஆறு மணி. தீபாவிற்காக காத்திருந்தேன். தேவையில்லாமல் அழைப்பதில்லை என்று முடிவு எடுத்திருந்தோம்.

வீடு திறக்கும் சத்தம் கேட்டது. கம்ப்யூட்டரை விட்டு ஹாலிற்கு வந்தேன்.

தீபாவுடன் வினோ வந்திருந்தாள். அவளைக் கைத்தாங்களாக பிடித்து உள்ளே அழைத்து வந்தாள். எழுந்து போய் தீபாவைப் பிடித்து கொண்டேன். தீபா மிகவும் களைத்துப் போயிருந்தாள்

“என்ன வினோ, தீபாக்கு என்ன ஆச்சு? ஏதாவது மயக்கமா?”

”ஒண்ணுமில்லை. அவளை படுக்க வை”

வைத்தேன்.

“சிவா, ஆபிஸ்ல கொஞ்சம் பிரச்சனை”

“”

“உனக்கே தெரியும் இப்ப சிச்சுவேஷன் சரியில்லை. அதனால பிரக்னண்ட் லேடீஸ் எல்லாத்துக்கும் மூணு மாசம் மேட்டர்னிட்டி லீவ் கொடுத்தா ஆப்பரேட்டிங் மார்ஜின் அஃபக்ட் ஆகும்னு”

“ஆகும்னு”

“தூக்கறாங்களாம். அதான்…”

“திஸ் இஸ் அன்ஃபேர். இவ்வளவு எத்திக்ஸ் பேசிட்டு எப்படி பெண்களுக்கு எதிரா இப்படி ஒரு அநியாயத்தைப் பண்ணறாங்க?”

“பிராஃபிட் கணக்கு காட்டணுமில்லையா?”

“சரி, இப்ப தீபாவை வேலையை விட்டு தூக்கிட்டாங்க. அதானே?”

“இல்லை அவ ப்ரெக்னண்ட்னு ஆபிஸ்ல யாருக்கும் தெரியாது”

“அப்பறம் என்ன பிரச்சனை?”

“உனக்கும் இப்ப வேலை இல்லை. வீட்டு லோன் வேற ஹெவியா இருக்காம்.”

“வினோ. டோண்ட் கில் மி. தீபாக்கு என்ன ஆச்சு?”

”அதுக்கு பயந்து அவ அபார்ஷன் பண்ணிட்டா”

உள்ளே தீபாவின் விசும்பல் சத்தம் கேட்டது. மெதுவாக உள்ளே சென்று அவள் அருகில் அமர்ந்தேன்.

..................................


இந்த கதை ‘உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு’ நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது

Wednesday, February 10, 2010

வாழையடி வாழை

அந்த வீடு தெருவின் கடைசியில் இருந்தது. சிமெண்ட் ரோடிலிருந்து ஒரு அடி உள்வாங்கியிருந்து. காப்பி கலர் பெயிண்ட் அடித்த க்ரில் கதவு ஆள் உயரம் இருந்தது. நீல நிற சுண்ணாம்பு. அடையாளம் சரியாக இருப்பதை உணர்ந்து, வெளியே இருந்து குரல் கொடுத்தாள் சாந்தி. அவள் அணிந்திருந்த அந்த பூப்போட்ட பாவடையில் பூக்கள் உதிர்ந்திருந்தன.


“அக்கா, அக்கா”


உள்ளே ஓடிக்கொண்டிருந்த தொலைக்காட்சியின் சத்தம் இவளுக்கு நன்றாக கேட்டது. அவளுடைய குரல் உள்ளிருப்பவர்களுக்கு கேட்க வாய்ப்புகள் இல்லை என்பதை புரிந்து கொண்டாள்.


க்ரில் கதவை உள்ளே தள்ளிவிட்டு, போர்டிக்கோவிற்குள் சென்றாள். காலிங் பெல்லை அழுத்திய இரண்டாவது நிமிடத்தில் வெல்கம் என்று எழுதியிருந்த ஸ்கிரினை திறந்து வந்த அந்த அம்மாவிற்கு வயது நாற்பத்தைந்து இருக்கலாம்.


“என்னம்மா வேணும் உனக்கு?”


“என் பேரு சாந்திக்கா. வீட்டு வேலைக்கு ஆள் வேணும்னு ரவி அண்ணாக்கிட்ட சொல்லியிருந்தீங்களாம். அவர் தான் அனுப்பனார்” சொல்லிவிட்டு அவளுடைய முகத்தை ஏக்கமாக பார்த்தாள்.


“உன் வீடு எங்கமா இருக்கு?”


“ரெண்டு தெரு தள்ளி இருக்குற அந்த ஆட்டோ ஸ்டாண்டு பின்னாடி இருக்குக்கா”


“படிக்கறியாமா? வீட்ல பெரியவங்க யாரும் இல்லையா?”


“பத்தாவது படிக்கறேன்கா. அப்பா பஸ் ஸ்டாண்ட்ல லோடு எறக்குதுக்கா. அம்மா வீட்டு வேலை பாக்குதுக்கா. ஒரு அக்கா பதினொண்ணாவது படிக்குதுக்கா. ரெண்டு தங்கச்சி இருக்குங்கக்கா”


“இங்க வேலை அதிகம் இல்லைமா. உங்க அம்மாவை வேணும்னா வர சொல்லேன்”


“அம்மா ஏற்கனவே மூணு வீட்ல வேலைப் பாக்குதுங்கக்கா. காலைல ஆறு மணிக்கு போச்சுனா பத்து மணிக்கு தான் வரும். நீங்க காலைல ஏழு மணிக்கு வரணும்னு சொன்னீங்கனு ரவி அண்ணா சொல்லுச்சு. அதான் நான் வந்தேன்க்கா”


“வயசுப் பொண்ண வேலைக்கு வெச்சா ஐயா திட்டுவாருனு பாக்கறேன். வெறும் பாத்திரம் வெளக்குற வேலை தான். துணி தொவைக்கறதுக்கு எல்லாம் மெஷின் இருக்கு. என் பையன் வாங்கி கொடுத்திருக்கான். ரெண்டே பேர் தான். வந்தா அர மணி நேரத்துல முடிஞ்சிடும். மாசம் எரநூறு ரூபா. உங்க அம்மா வர முடியுமானு கேட்டு பாரும்மா”


“பத்து மணிக்கப்பறம்னா பரவாயில்லையாக்கா?”


”பத்து மணிக்கு அப்பறமா? வீட்ல சமையல் எல்லாம் செய்ய வேணாமா? ஏழு மணிக்குள்ள எப்ப வந்தாலும் சரி. கேட்டு சொல்லு”


அதற்கு பிறகு என்ன பேசுவதென்று சாந்திக்கு தெரியவில்லை. வார்த்தைகளை தேடினாள். எதுவும் கிடைக்கவில்லை. அவளுடைய ஏமாற்றம் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.


“சரிக்கா”


முதல் வேலைக்கான இண்டர்வியூவில் தோற்ற சோகம் அவளுடைய நடையில் தெரிந்தது. இரண்டு பேர் இருக்கும் வீட்டில் பாத்திரம் விளக்க மாசம் இருநூறு ரூபாய் அதிகம் என்று அவளுக்கு தெரியும். அவளுடைய அம்மா வேலை செய்யும் டாக்டர் வீட்டில் நானூறு ரூபாயிற்கு துணி துவைத்து, வீட்டை கூட்டி, வெள்ளி மற்றும் விரத நாட்களில் வீட்டை கழுவி, பாத்திரம் விளக்கி, சமையலுக்கும் உதவ வேண்டும். ஏதாவது உடம்பிற்கு முடியவில்லை என்றால் கலர் கலராக மாத்திரை தருவார்கள். வீட்டு வேலை பாதிப்பது அவர்களுக்கு பிடிக்காது.


ஒரு வாரம் சென்ற நிலையில் எலக்ட்ரீஷியன் ரவி அண்ணாவின் குரல் வெளியே கேட்டது. சாந்தியின் அம்மாவிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தார். இவளைப் பற்றி தான் பேசுகிறார்கள் என்று தெரிந்தவுடன் வெளியே சென்றாள்.


“அதெல்லாம் ஏழு மணிக்குள்ள வந்துடுவா. சொல்லிடு” அவளுடைய அம்மா சொல்லிக் கொண்டிருந்தாள். முதல் வேலை கிடைத்துவிட்டது.


பழகிய வேலைதான் என்றாலும் பழகாத இடம் என்பதால் பதட்டத்துடன் சென்றாள்.


“வாம்மா. நான் மொதல்ல ஐயாக்கிட்ட சொல்லும் போது வேணாம்னு தான் சொன்னாரு. அப்பறம் படிக்கிற பொண்ணு, மாசம் இரநூறு ரூபாய் கிடைச்சா படிப்புக்கு உதவும்னு நான் சொன்ன உடனே சரினு சொல்லிட்டாரு”


என்ன சொல்வதென்று தெரியாமல் மெலிதாக சிரித்து வைத்தாள்.


“இங்க பாரும்மா. வேலை அதிகம் இல்ல. பாத்திரம் மட்டும் வெளக்கினா போதும். ரெண்டே பேர் தான். சரியா?”


“சரிக்கா”


“ஏழு மணிக்கு வந்தா அர மணி நேரத்துல ஓடிடலாம். முடிஞ்சா சாயந்திரம் ஆறு மணிக்கு ஒரு நடை வந்துட்டு போ. வேலை பாதியா குறைஞ்சிடும். சரியா?”


“சரிக்கா”



இரண்டு பேருக்கு சமையலுக்கு பயன்படும் பாத்திரத்திற்கும் நான்கு பேருக்கு சமையலுக்கு தேவைப்படும் பாத்திரத்திற்கும் வித்தியாசம் எதுவுமில்லை என்பதை முதல் நாளே புரிந்து கொண்டாள். தினமும் காலை ஏழு மணிக்கு முன்பு வந்து எட்டு மணிக்குள் சென்று கொண்டிருந்தாள். பூஜை விளக்கில் எண்ணெய் சரியாக போகவில்லை, குக்கரில் அரிசி ஒட்டிக் கொண்டிருந்தது என்ற இரண்டு கம்ப்ளைண்ட் மட்டும் தான் ஒரு வாரத்தில் வந்திருந்தது.


ஒரு வாரம் சென்றிருந்த நிலையில், வேலை முடித்து வீட்டுக்கு கிளம்பி கொண்டிருந்தாள்.


“சாந்தி கொஞ்சம் இரு. ஒரு வாய் காபி குடிச்சிட்டு போ”


“இல்லைங்கக்கா” தயங்கினாள்.


“உனக்குனு தனியாவாப் போட போறேன். இரு குடிச்சிட்டு போகலாம்”


வாசளருகே தயங்கி நின்று கொண்டிருந்தாள். எங்கே நிற்பது என்று அவளுக்கு தெரியவில்லை. ஹாலில் பெரிய எல்.சி.டி டீவி இருந்தது. அவ்வளவு பெரிய டீவியை அவள் அதற்கு முன்பு பார்த்ததில்லை. ஓடாத டீவியைக்கூட பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல இருந்தது.


”அப்படியே நிக்கற நேரத்துல, அந்த மூலையில தொடப்பம் இருக்கு பாரு. அதை எடுத்து வீட்டைப் பெருக்கிடுமா. கால் முட்டி எல்லாம் வலிக்குது. அங்கங்க ஆம்பளைங்க சமையலே செய்யறாங்க. இங்க எல்லா வேலையும் நானே செய்ய வேண்டியதா இருக்கு. பொண்டாட்டிக்கு முடியலையே, அவளுக்கும் வயசாச்சே, கொஞ்சமாவது உதவணும்னு இந்த ஆம்பிளைக்கு தோணுதா”


வீட்டம்மா புலம்பல் நிற்பதற்கும் இவள் பெருக்கி முடிப்பதற்கும் சரியாக இருந்தது. பித்தளை டம்ளரில் காப்பி அவளுக்கு தயாராக இருந்தது. அடுத்த நாள் அது டீயாக மாறியிருந்தது. அதன் பிறகு அவளுக்கு தினமும் டீ கிடைத்தது. வெள்ளிக்கிழமைகளிலும் விரத நாட்களிலும் டிபன் கிடைத்தது. அதற்கு காத்திருக்கும் நேரத்தில், வீட்டை தண்ணீர் ஊற்றி கழுவ வேண்டும்.


வேலைக்கு சேர்ந்து நான்கு மாதமாகியிருந்தது.


“சாந்தி, முழாண்டு லீவுக்கு என் பொண்ணும், பேரப் பசங்களும் வரப் போறாங்க. துணி எல்லாம் அதிகமா தொவைக்க வேண்டியது இருக்கும். மெஷின்ல ரெண்டு வாட்டி போட்டா கரண்ட் பில்லு அதிகமாகும், தேவையில்லாம கவர்மெண்ட்க்கு காசு போகும். அதுக்கு பதிலா அது இல்லாதவங்களுக்கு போச்சுனா நல்லது. உங்க அம்மாவை வேணா பதினோரு மணிக்கு அப்பறம் வர சொல்லேன். சேர்த்து நானூரு ரூபாயா வாங்கிக்கலாம்”


“நானே தொவைக்கறேன்கா. எனக்கும் முழாண்டு லீவு தான். வீட்ல சும்மா தான் இருக்கேன்”


“அதுவும் சரிதான். உன் வயசுக்கெல்லாம் நான் கைல பச்சப்புள்ளயோட குடும்பமே நடத்தினேன்”


அவள் நினைத்ததைப் போல துணி துவைப்பது அவ்வளவு சுலபமாக இல்லை. அந்த வீட்டம்மாவின் பேரப் பிள்ளைகள் கிஷ்கிந்தாவிலிருந்து வந்திருப்பார்கள் போல. ஒரு நாளைக்கு இரண்டு மூன்று துணிகள் மாற்றினார்கள். அனைத்தையும் பாரபட்சம் பார்க்காமல் அழுக்காக்கினர். அதை விட அவர்கள் பேசிய ஆங்கிலம் அவளுக்கு சுத்தமாக புரியாதது தான் கஷ்டமாக இருந்தது. அந்த வீட்டம்மாவிற்கும் புரியவில்லை என்பதில் ஒரு திருப்தி. பதினைந்து நாட்களில் அவர்கள் கிளம்பிவிட்டார்கள். நானூறு முன்னூறாகியதில் அவளுக்கு வருத்தம் இல்லை.


”என்ன சாந்தி பத்தாவது பாஸ் பண்ணதுக்கு சாக்லேட் எல்லாம் இல்லையா?”


“சாயந்தரம் வாங்கி தரேனு அம்மா சொன்னாங்கக்கா”


“சரி, மார்க் என்ன?”


“முன்னூத்தி எழுவத்தி எட்டுக்கா”


“என் பையன் நானுத்தி அம்பத்து நாலு வாங்கினான். நீயும் தான் படிக்கிறேன் படிக்கிறேனு சாயந்தரம் ஆறு மணிக்கு எல்லாம் ஓடற. என்னத்த படிச்சியோ தெரியல”


வீட்டம்மாவின் பையன் இதுவரை சாப்பிட்டத் தட்டை நகர்த்தியது கூட இல்லை என்பது அந்த வீட்டம்மாவைத் தவிர யாருக்கும் தெரியாது.


”இந்தா சாந்தி முன்னூறு ரூபா. காசு செலவுப் பண்ணாம புக் வாங்கிக்கோ. ஒழுங்கா படி. புரியுதா?”


“அக்கா எப்படி கேக்கறதுனு தெரியல. இந்த வருஷம் பள்ளிக்கூடத்துக்கு பாவடை தாவணிக் கட்டிட்டு போகணும். புது யூனிஃபார்ம் தைக்கணும். அம்மா வாங்கன காசு அக்காக்கு புக் வாங்கறதுக்கு சரியா போச்சு. ஒரு இரநூறு ரூபா சேர்த்து கொடுத்தா கொஞ்சம் பரவாலயா இருக்கும். சம்பளத்துல அம்பது அம்பது ரூபாயா பிடிச்சிக்கோங்கக்கா”


“இரநூறு ருபாயா? அவ்வளவு பணம் இப்ப இல்லையே. நான் ஐயாகிட்ட கேட்டுட்டு நாளைக்கு சொல்றேன். ஆனா இந்த அம்பது அம்பதா பிடிக்கறது எல்லாம் வேணாம். அடுத்த மாசத்துல மொத்தமா பிடிச்சிக்குவேன். சரியா?”


“சரிக்கா”


எப்படியோ பணம் கிடைத்தால் போதும் என்று நினைத்துக் கொண்டாள்.


பத்து நாட்கள் சென்றிருந்த நிலையில்,


“என்ன சாந்தி, இந்த நேரத்துல வந்திருக்க?”


“பள்ளிக்கூடத்துல இருந்து வரேன்கா” அவள் கண்கள் கலங்கியிருந்தன.


“என்ன ஆச்சு? டல்லா இருக்க”


பேச ஆரம்பிப்பதற்குள் அழ ஆரம்பித்தாள்.


“என்ன ஆச்சு. அழாத சொல்லு”


“போன வருஷமே பள்ளிக்கூடத்துல யூனிஃபார்ம் கலர் மாத்தறேனு சொன்னாங்க. அப்பறம் மாத்தல. இப்ப போனா கலர் மாத்திட்டேனு சொல்றாங்க. நிறையப் பேர் துணி வாங்கி தைச்சிட்டோம்னு சொன்னோம். போன வருஷமே மாத்தறோம்னு சொன்னோம் இல்ல. அதை விசாரிக்காம நீங்க எப்படி எடுக்கலாம்னு திட்டினாங்கக்கா. எல்லாரும் சொல்லியும் கேக்க முடியாதுனு சொல்லிட்டாங்கக்கா. நான் ரெண்டு செட்டு தச்சிட்டேன்கா” திணறி திணறி சொல்லி முடித்தாள்.


“படிக்கிற பொண்ணு இப்படியா இருப்ப? என்ன கலர் யூனிஃபார்ம்னு விசாரிக்காமலா தைப்பாங்க?”


”இல்லைங்கக்கா. அதைப் பத்தி எதுவுமே சொல்லலைங்கக்கா. மார்க் ஷீட் வாங்க போகும் போது கூட எதுவும் சொல்லலை. இப்ப தான் அட்மிஷன் போடும் போது சொல்றாங்க. இப்ப என்ன பண்றதுனு தெரியலைங்கக்கா”


“உனக்கு போன தடவ சேர்த்து காசு கொடுத்தே நான் ஐயாகிட்ட திட்டு வாங்கினேன். இதை சொன்னா எனக்கு திட்டு விழும். படிப்புல அக்கரை இல்லாத பொண்ணுக்கு எல்லாம் எதுக்கு காசு கொடுக்கறனு”


என்ன பேசுவதென்று தெரியாமல் அங்கிருந்து கிளம்பினாள்.


அடுத்த நாள் வழக்கம் போல் ஏழு மணிக்குள் சென்றுவிட்டாள். அவள் கண்கள் வீங்கியிருந்தன. வீட்டம்மா எதுவும் விசாரிக்கவில்லை. அவளே பேச ஆரம்பித்தாள்.


“அக்கா, உங்களுக்கு தெரிஞ்சவங்க யாருக்காவது வீட்டு வேலைக்கு ஆள் வேணும்னா சொல்லுங்கக்கா”


“ஏன்மா படிப்பை நிறுத்திட்டயா?”


“இல்லைக்கா. நேத்து ராத்திரி வீட்ல ஒரே சண்டைங்கக்கா. என்னை ஒரு வருஷம் படிப்பை நிறுத்த சொல்லி அப்பா சொல்லிடுச்சி. எனக்கு தான் தொடர்ந்து படிக்கணும்னு ஆசையா இருக்குக்கா. நான் அழுததைப் பார்த்துட்டு என் தங்கச்சி ரெண்டு பேரும் வீட்டு வேலைக்கு போறேனு சொல்லிட்டாங்கக்கா. அவுங்களுக்கும் என்ன மாதிரியே வேல கிடைச்சா எப்படியும் மொத மாசம் சம்பளம் வாங்கிட்டு பள்ளிக்கூடம் போயிடலாம்கா. இல்லைனா ஒரு வருஷம் வீட்ல தான். அப்பறமும் படிக்க முடியுமானு தெரியல. உங்களுக்கு தெரிஞ்சி ஏதாவது வீடு இருந்தா சொல்லுங்கக்கா. அவுங்களும் என்னை மாதிரியே நல்லா பாத்திரம் வெளக்குவாங்கக்கா”


.........................


இந்த கதை ‘உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு’ நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது