தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Monday, December 31, 2007

புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

ராத்திரி பனிரெண்டு மணி வரைக்கும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம். அப்படியே ஹொசூர் ரோட்டுக்கு போய் போற வர வண்டியெல்லாம் நிறுத்தி ஹேப்பி நியூ இயர்னு கத்திட்டு, ஒரு ரெண்டு மணிக்கா வீட்டுக்கு வந்து விடிய விடிய அரட்டை அடிச்சிட்டு, நடு ராத்திரி ஆறு மணிக்கு தூங்கின காலமெல்லாம் அது ஒரு கனா காலம்னு ஆகி போச்சு :-(

இன்னைக்கு இங்க எல்லாரையும் பாட் லாக் கூப்பிட்டிருக்காங்க. என்ன செய்யறதுனு தங்கமணி (யூ டூ பாலாஜி!!!) க்கு ஐடியா கொடுக்கனும். (ரொம்ப பொறுப்பான பையனா மாறிட்டே வறியே பாலாஜினு யாரும் சொல்லாததால நானே சொல்லிக்கிறேன் ;))

ஒரு வழியா இந்த வருஷம் 100 பதிவு போட்டுட்டேன். அடுத்த வருஷம் எப்படியும் பாதியா குறைஞ்சிடும்னு நினைக்கிறேன். பார்க்கலாம் ;)

சரி அனைவருக்கும் என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!!! ENJOY MAADI :-)

Sunday, December 23, 2007

பொறந்த வீடா? புகுந்த வீடா???

'பொறந்த வீடா புகுந்த வீடா
எந்த இடம் சொந்த இடம்' பாடல் ஒலித்து கொண்டிருந்தது...

"என்னங்க, அந்த காலிங் பெல் அடிக்குது இல்லை. நீங்க தான் போய் திறங்களேன்" மனைவியின் அதட்டல் கேட்டு போய் கதவை திறந்த சபாபதி, வெளியில் நின்றிருந்த போலிஸ் கான்ஸ்டிபலை கண்டு குழப்பமடைந்தார்.

"இது மிஸ்டர் ராம் குமார் வீடு தானே?"

"ஆமாம். அவர் என் சன் தான். ஏன் சார் எதாவது பிரச்சனையா?"

"அவரை கொஞ்சம் கூப்பிடறீங்களா?"

"அவன் வெளிய போயிருக்கான். இப்ப வந்துடுவான். என்ன விஷயம்னு கொஞ்சம் சொல்லுங்களேன். நானும் கவர்ன்மெண்ட் சர்வெண்ட் தான் சார்"

"உங்க மருமகள் உங்க எல்லார் பேர்லயும் வரதட்சனை கொடுமை கேஸ் போட்டிருக்காங்க சார். நீங்க கவர்ன்மெண்ட் சர்வெண்ட்னு தெரிஞ்சுது. அதனால எஸ் ஐ சார் இன்னும் கேஸ் ஃபைல் பண்ணல. உங்களை வர சொன்னார். எப்படியாவது பேசி காம்ப்ரமைஸ் பண்ணி பார்க்க சொன்னார். உங்க சன் செல் வெச்சிருக்காரா?"

"வெச்சிருக்கான் சார்"

"சரி சார். அப்ப அவரை ஸ்டேஷனுக்கு வர சொல்லுங்க. நீங்களும் உங்க வீட்டுக்காரம்மாவும் அப்படியே என் கூட கிளம்பி வந்துடுங்க. ஏன்னா இது நான் - பெயிலபுல் கேஸ்."

"நானும் என் சன்னும் வேணா வரோமே சார்"

"இல்லைங்க. உங்க வீட்டுக்காரம்மா மேல தான் கேஸ் முக்கியமா இருக்கு. நீங்க அவுங்களை கண்டிப்பா கூப்பிட்டு வரனும். இல்லைனா எங்களுக்கு பிரச்சனையாகிடும். கேஸ் கொடுத்தா வாங்காம, காசு வாங்கிட்டு தப்பிக்க விட்டுட்டாங்கனு சொல்லிடுவாங்க. நீங்க வேணா தனியா ஆட்டோல வாங்க. எப்படியாவது சமாதானம் பண்ண பாருங்க. எதுக்கும் அந்த பொண்ணு வீட்டு சைட்லயும் பெரியவங்க கிட்ட ஒரு தடவை ஃபோன் பேசி பாருங்க"

"சரிங்க"

குழப்பமான மனநிலையில் உள்ளே சென்றார் சபாபதி.

அழுது அழுது கண்கள் வீங்கிய நிலையிலிருந்தாள் கவிதா. எவ்வளவு பேசியும் அவள் மனதை மாற்ற முடியவில்லை.

"சம்பந்தி, டி.எஸ்.பி உங்க கிளாஸ் மேட்னு சொன்னீங்களே. கொஞ்சம் பேசி பாருங்களேன்" கவலையுடன் விசாரித்து கொண்டிருந்தார் சபாபதி.

"நான் நீங்க சொன்னவுடனே அவனுக்கு தான் ஃபோன் பண்ணேன். இந்த கேஸ்ல கண்டிப்பா யாருக்கும் உதவ முடியாதுனு சொல்லிட்டான். வரதட்சனை கொடுமைனா நான்-பெயிலபில் வேற"

"என் பொண்ணுக்கு நீங்க எதுவும் சொல்லல இல்லை. அவளுக்கு தெரிஞ்சா ரொம்ப கஷ்டப்படுவா"

"இல்லைங்க. நீங்கதான் ஃபோன்லயே சொல்லிட்டீங்களே யாருக்கும் தெரிய வேண்டாம்னு"

"ஏதோ சின்ன புருஷன் பொண்டாட்டி சண்டை தான். அவனும் ஏதோ டென்ஷன்ல ஒரு அடி அடிச்சிட்டான். அதுக்கு போய் கேஸ் கொடுத்துட்டா"

"எனக்கும் என்ன செய்யறதுனே புரியல" கவலை தொய்ந்த முகத்துடன் அடுத்து என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருந்தார் சபாபதியின் சம்பந்தி முருகானந்தம்.

ஒரு மாதம் முடிந்த நிலையில் கவிதாவை பார்க்க அவள் வீட்டிற்கே சென்றான் ராம் குமார். ராம்குமாரை பார்த்ததும் அழுது கொண்டே வீட்டிற்குள் சென்று விட்டாள் கவிதா.

"வாங்க மாப்பிள. உட்காருங்க. நாங்க எவ்வளவு சொல்லியும் கேட்க மாட்டேனுட்டா இந்த பாவி பொண்ணு. மன்னிச்சிக்கோங்க மாப்பிள" கெஞ்சி கொண்டிருந்தார் கவிதாவின் தந்தை.

"பரவாயில்லை மாமா. நான் அவள்ட கொஞ்சம் பேசலாமா?"

"தாராளமா மாப்பிள்ளை. அந்த ரூம்ல தான் இருக்கா" அவளிருந்த அறையை காட்டினார்

உள்ளே சென்று கதவை மூடினான் ராம் குமார். கட்டிலில் படுத்து அழுது கொண்டிருந்த கவிதாவின் அருகிலமர்ந்து அவள் தலையை தன் மடியில் வைத்து அவள் கண்ணீரை துடைத்தான்.

"கவிதா, என்னை மன்னிச்சிடு. வேற வழி தெரியல"

"இருந்தாலும் நீங்க இப்படி பண்ணியிருக்க கூடாது. என் வீட்டுக்காரர், மாமனார், மாமியார் ஜெயிலுக்கு போக நானே காரணமாயிட்டேனே. அநியாயமா பொய்யா கேஸ் போட வெச்சிட்டீங்களே"

"ஒரு நாள் தான. நீ தான் கேஸை வாபஸ் வாங்கிட்ட இல்லை. நீ செஞ்ச இந்த தியாகத்தை நினைச்சி இன்னும் அம்மா, அப்பா பெருமையா பேசிட்டு இருக்காங்க."

"இருந்தாலும் உங்க சொந்தக்காரவங்க எல்லாம் என்னை பத்தி என்ன நினைப்பாங்க"

"சொந்தக்காரவங்களை எல்லாம் விடு. சேர்ந்து வாழப்போறது நம்ம தானே. நீ அன்னைக்கு கொடுத்த அந்த ஷாக் ட்ரீட்மெண்ட் தான் இன்னைக்கு என் தங்கச்சிய சந்தோஷமா வாழ வெச்சிருக்கு. அன்னைக்கு பயந்தவங்கதான் அவ மாமியார்"

"அதுக்கு உங்க தங்கச்சியவேவிட்டு கேஸ் போட சொல்லியிருக்கலாங்க. நானும் யோசிக்காம விட்டுட்டேன். இங்க தினம் தினம் எங்க அப்பாக்கிட்ட நான் வாங்கற திட்டுக்கு உயிரையே விட்டுடலாம்னு தோனுச்சி"

"இங்க பாரு கவி, என் தங்கச்சி மாமியார் பண்ண கொடுமைக்கு கண்டிப்பா கேஸ் கொடுத்திருக்கலாம். அவுங்களை ஜெயிலுக்கும் அனுப்பியிருக்கலாம். ஆனா அடுத்து அவ அந்த வீட்ல போய் வாழ முடியாது. ஆனா இப்ப நிலைமை அப்படியில்லை. அவுங்களே ஜெயிலுக்கு பயந்து மாறிட்டாங்க. உன்னையும் இனிமே எங்க வீட்ல ராணி மாதிரி நடுத்துவாங்க. அடுத்து என் தங்கச்சி மாமனாரையே அன்னைக்கு மாதிரி சமாதானம் பேச கூப்பிட்டு வரோம். நீ தனிக்குடுத்தனம்னா மட்டும் வருவேனு சொல்லு. ரெண்டு மூணு மாசத்துல அம்மா, அப்பா கூட போய் சேர்ந்திடலாம். சரியா?"

"ஹிம்ம்ம்"

"ஒரு மாசம் உன்னை பார்க்காம எனக்கு ரொம்ப கஷ்டமாயிடுச்சிடா செல்லம். ஒண்ணு கொடேன்"

"ச்சீ. என்ன இது பகல்லயே? அதுவும் அப்பா வேற வெளிய இருக்காரு. நீங்க முதல்ல இங்க இருந்து கிளம்புங்க"

"உனக்கு ஒண்ணு தெரியுமா? தக்காளி விலை தங்கம் மாதிரி தினமும் ஏறிட்டே இருக்காம். உங்க அப்பாவை வேணா மார்கெட் போய் இன்னைக்கு என்ன விலைனு கேட்டு வர சொல்லுவோமா?"

"அடி வாங்க போறீங்க. ஒழுங்கா வீட்டுக்கு கிளம்புங்க"

அடுத்த நாள்

"கவிதா உன் தங்கச்சி லைன்ல இருக்கா, சீக்கிரம் வா" கவிதாவின் அப்பா கத்தியது தெரு முனை வரை கேட்டது.

"இருங்க வரேன்"

"சொல்லு அனிதா, எப்படிடி இருக்க?"

"நல்லா இருக்கேன். நேத்து மாமா வந்தாராமே?"

"ஆமா. அடுத்து தனிக்குடுத்தனம் போறோம். ஒரு மூணு மாசம் கழிச்சி மாமியார் வீட்டுக்கே போயிடறேன்"

"ஹிம்ம்ம்ம்"

"ஏன்டி அழற? மறுபடியும் உன்னை ஏதாவது திட்டினாளா உன் மாமியார்காரி?"

"இல்லை கவி. நீ கேஸ் கொடுத்ததுக்கப்பறம் மாறினவங்க தான். இப்பவும் என் மேல ஒரு பயத்தோட தான் இருக்காங்க. எனக்காக நீ எவ்வளவு ரிஸ்க் எடுத்திருக்க கூடாது கவி"

"என்னடி பண்ண? அவர் தங்கச்சிக்காக அப்படி ஒரு ப்ளான் பண்ணி அவரும் அவுங்க அப்பா, அம்மாவும் ஜெயிலுக்கு போகவே ரெடியாயிருந்தாங்க. எனக்கு தயக்கமாதான் இருந்துச்சி. ஆனா அவர் தங்கச்சி மாமியார் மாதிரி உன் மாமியார் பயந்து மாறினாங்கனா நமக்கும் நல்லது தானேனு ஒத்துக்கிட்டேன். எல்லாம் நல்ல படியா முடிஞ்சிது"

Friday, December 14, 2007

எங்கிருந்தாலும் வாழ்க!!!

சூர்யாவின் கைகளில் அந்த திருமண பத்திரிக்கை மின்னிக்கொண்டிருந்தது. ஆம் நீங்கள் எதிர்பார்த்தது சரிதான். அவன் தன் வாழ்க்கையே இவளுக்காகத்தான் என்று நினைத்து கொண்டிருந்த ராதிகாவின் திருமண பத்திரிக்கை தான் அது.

நாளை மறுநாள் அவளுடைய திருமணம். அவனை அறியாமல் அவன் கண்களில் கண்ணீர் வந்து கொண்டிருந்தது. யாரும் பார்த்துவிடாமலிருக்க அவசரமாக கண்ணீரை துடைத்தான்.

வேகமாக குளித்துவிட்டு வந்து அவனுடைய பீரோவை திறந்தான். மேலே அந்த சிகப்பு நிற டி-சர்ட் அழகாக மடித்து வைக்கப்பட்டிருந்தது. அவன் எவ்வளவோ வேண்டாமென்று சொல்லியும் அந்த டி-சர்டை அவனுடைய பிறந்த நாளுக்கு வாங்கி கொடுத்து அழகு பார்த்தவள் ராதிகா. கிராமத்திலிருந்து வந்ததாலோ ஏதோ காரணத்தால் அவனுக்கு இந்த மாதிரி துணிகள் பிடிப்பதில்லை. ஆனால் ராதிகாவின் பேச்சை தட்ட அவனுக்கு மனம் வராததால் அந்த டி-சர்ட் வாங்கி கொண்டான். அந்த பிறந்த நாள் அவனுக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்.

ராதிகா வாங்கி கொடுத்த அந்த டி-சர்டை அணிந்து கொண்டு அவளை அவனது ஸ்ப்ளெண்டரில் உட்கார வைத்து சினிமாவிற்கு அழைத்து சென்றான். அன்று இரவு டின்னர் கூட முருகன் இட்லி கடையில் சேர்ந்தே சாப்பிட்டனர். அவன் பிறந்த நாள் நியாபகம் வந்தவுடன் அவனுக்கு அவள் கொடுத்த கிரிட்டிங் கார்ட் ஞாபகமும் வந்தது. அதை அவன் பீரோ லாக்கரில் தேடி எடுத்தான்.

Many More Happy Returns Of the Day என்று எழுதியிருந்த வாழ்த்து அட்டையின் உள்ளே I Luv U So Much என்று ராதிகாவின் கையெழுத்து அழகாக தெரிந்தது. அதை பார்த்ததும் மீண்டும் அவனை அறியாமல் கண்ணீர் எட்டி பார்த்தது. அடுத்த நிமிடம் ஏதோ மனதை பிசைவது போலிருந்தது சூர்யாவிற்கு. எடுத்த பொருட்களை மீண்டும் பீரோவில் வைத்து வேகமாக அந்த இடத்தை காலி செய்தான்.

ராதிகாவின் திருமணம் முடிந்தவுடன் சென்னையை காலி செய்வது என்று முடிவு செய்து கொண்டான். சூர்யாவில் மனதை நன்கு தெரிந்த அவன் அக்கா அவனை கிராமத்திற்கு அவளுடனே வந்து தங்குமாறு வற்புறுத்தி கூறியிருந்தாள். அவனுக்கு அவளுடன் தங்கும் எண்ணமில்லை. அவள் வீட்டுக்காரர் சிடுமூஞ்சி. அவனால் அங்கு காலம் தள்ள முடியாது. வேறு எங்காவது சென்றுவிட வேண்டுமென்று முடிவு செய்திருந்தான். ஊரைவிட்டு சென்றால் ராதிகாவின் நினைப்பு மறந்துவிடுமா என்ன? பைத்தியக்காரன்.

அந்த திருமண மண்டபம் மக்கள் கூட்டத்தில் நிறைந்து வழிந்தது. சூர்யாவை பார்க்கும் பொழுது எல்லாம் ராதிகாவின் மனம் வேதனையால் துடித்து கொண்டிருந்தது. என்ன செய்வது? எல்லாம் விதியின் விளையாட்டு. சூர்யாவிற்கும் மனதில் வலியிருந்தாலும் அதை வெளியே காட்டி கொள்ளாமல் சிரித்து கொண்டிருந்தான். ஆண் பிள்ளையில்லவா?

சூர்யாவை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்த மாப்பிள்ளையின் தந்தையை அவன் கவனிக்க தவறவில்லை.

"ஐநூறு ரூபாய்க்கு சேஞ்ச் வெச்சிருக்கீங்களா? கொஞ்சம் அவசரமா தேவைப்படுது"

"இருங்க. தேடி பாக்கறேன்" வேகமாக பர்சை எடுத்து திறந்தான் சூர்யா. அதில் அவன் வைத்திருந்த ராதிகாவுடன் சேர்ந்து எடுத்திருந்த புகைப்படம் அந்த கழுகு கண்களிலிருந்து தப்பவில்லை. சூர்யாவும் அதை கவனித்துவிட்டான்.

"என்னங்க சம்பந்தி பர்ஸில கூட பொண்ணு ஃபோட்டோவா? வீடு முழுக்கத்தான் வெச்சிருந்தீங்கனு பார்த்தா. இதுலயுமா?"

"என்னங்க பண்றது? தாயில்லாத பொண்ணாச்சேனு ரொம்ப பாசத்தை கொட்டி வளர்த்துட்டேன். அதான் அவள் முகத்தை நினைக்கும் போதெல்லாம் பார்க்கலாமேனு பர்ஸில வெச்சிருக்கேன். அவளை இப்ப அமெரிக்காக்கு அனுப்பிட்டு எப்படி இருப்பனோனு புரியல"

"கவலைப்படாதீங்க. சீக்கிரம் என் பையனுக்கு பிராஜக்ட் முடிஞ்சதும் இந்தியா வந்துடுவாங்க. நீங்களும் நம்ம கூடவே வந்து தங்கிக்கோங்க. எல்லாம் சேர்ந்தே இருப்போம்...."

(சர்வேசன் போட்டில கலந்துக்கறது இந்த திருப்பம் போதுமானு கொஞ்சம் சொல்லுங்களேன்!)

Thursday, December 06, 2007

கமு... கபி

நவம்பர் 5
காலை 7 : அலாரம் ஸ்னூஸ் செய்யப்படுகிறது. 8 மணி வரை இது தொடர்கிறது.

டிசம்பர் 5
காலை 7: அலாரம் ஆஃப் செய்யப்படுகிறது. எழுந்திரிச்சி பல்லு விளக்கி ஃபேஸ் வாஷ் பண்ணிக்கோங்க. காஃபி போட்டு வரேன்
7:15: சுட சுட அருமையான காஃபி வருகிறது. அதை குடித்து கொண்டே புலி, தேவ் அண்ணா, ராயலிடம் சேட் நடந்து கொண்டிருந்தது.

நவம்பர் 5:
காலை 8: ஆபிஸிக்கு நேரமாச்சு. சீக்கிரம் குளிச்சிட்டு கிளம்பனும். கார்ன் ஃபிளேக்ஸ் சாப்பிடலாமா இல்லை பிரெட் ஜாம் சாப்பிடலாமா? நேத்து தான் பிரெட் ஜாம் சாப்பிட்டோம். இன்னைக்கு கார்ன் ஃபிளேக்ஸ்.

டிசம்பர் 5
காலை 7:45: பொறுமையாக குளிச்சிட்டு வரலாம். நேத்து தோசை சாப்பிட்டாச்சு. இன்னைக்கு இட்லி ஓகே.
8:30: சூடான இட்லி, வெங்காயச்சட்னி.

நவம்பர் 5
காலை 10: இந்தியால 8:30 ஆச்சு. ஃபோன் பண்ணனும். IP போனுக்கு இணைப்பு ஏற்படுத்தப்படுகிறது.

டிசம்பர் 5
காலை 9:15 : ஆபிஸ் வந்துட்டேன். மதியம் சாப்பாட்டுக்கா? ஏதாவது காய் போட்டு சாம்பார் வெச்சி உருளைக்கிழங்கு வறுத்துடு. எங்க அம்மா செஞ்ச மாதிரி செய்யி. ஞாபகம் இருக்கு இல்லை. ஏதாவது சந்தேகம்னா அம்மாக்கு ஃபோன் பண்ணி கேட்டுக்கோ. மதியம் 1 மணிக்கு வீட்ல இருப்பேன்.

காலை 10: சரி. வேலை செய்யலாம்.
அப்படியே தமிழ்மணம் பார்த்தும் மாசக்கணக்காச்சு. அதுவும் இல்லாம நாம ஒரு முன்னாள் வலைப்பதிவராயிட்டோம். அதை சரி செய்யலாம்.

நவம்பர் 5:
மதியம் 12:30: எல்லாம் எனக்காக வெயிட் பண்றாங்க. நான் சாப்பிட போகனும். ஃபோன் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. முதல் நாள் இரவு செய்த சாப்பாடு மைக்ரோ வேவில் சூடு செய்யப்பட்டு உள்ளே இறங்குகிறது.

டிசம்பர் 5:
மதியம் 12:30: மக்களே! நான் வீட்டுக்கு போய் சாப்பிட்டு வந்திடறேன். நீங்க கண்டினியூ பண்ணுங்க.

மதியம் 1: சுட சுட சாம்பார், ரசம், உருளைக்கிழங்கு வறுவல் எல்லாம் வயிற்றுக்குள் இறங்குகிறது. கொஞ்சம் கொஞ்சம் எங்க அம்மா செய்யற மாதிரி தான் இருக்கு. ஆனா ஏதோ மிஸ்ஸாகுது. எதுக்கும் இன்னைக்கு ராத்திரி ஃபோன் பண்ணும் போது கேட்டுக்கோ.

நவம்பர் 5:
மதியம் 2: வேலை செய்யலாம். போர் அடிக்குது.

டிசம்பர் 5:
மதியம் 2: வெளிய பனி ரொம்ப அதிகமா இருக்கு. பேசாம Working From Home போட்டுக்கலாம்.

நவம்பர் 5:
மாலை 5: இப்ப வீட்டுக்கு போய் என்ன பண்ண? இன்னும் கொஞ்ச நேரம் வேலை செய்யலாம்.

டிசம்பர் 5:
மாலை 5: சரி. மணியாச்சி. நான் நெட்வொர்க்ல இருந்து டிஸ்கனெக்ட் பண்ணிடறேன்.

நவம்பர் 5:
மாலை 7: சரி இப்ப பாத்திரம் விலக்கினாத்தான் 9 மணிக்கு சாப்பிட முடியும். அப்படியே Videoduniyaல படம் பார்த்துட்டே பாத்திரம் விலக்கலாம்.

டிசம்பர் 5:
மாலை 7: இன்னைக்கு சாப்பத்திக்கு தக்காளி கொத்ஸி பண்ணிடு. நேத்து மாதிரியே பட்டாணி குருமா எல்லாம் வேணாம்.

நவம்பர் 5:
இரவு 9: இராத்திரி சுட சுட சாதம் சாப்பிடற சுகமே சுகம் தான். அதுவும் ஐயா சமையலை அடிச்சிக்க ஆளே இல்லை.

டிசம்பர் 5:
இரவு 9: சாப்பாத்தி நல்லா இருக்கு. தக்காளி கொத்ஸி எங்க அம்மா வேற மாதிரி செய்வாங்க. இப்ப ஃபோன் பண்ணி கேட்டுக்கலாம்...

நவம்பர் 5:
இரவு 10: பெங்களூர் ஆபிஸிலிருந்து ஆஃப் ஷோர் கால் - இன்னைக்கு இது தான் வேலை. ஏதாவது சந்தேகமிருந்தா எப்ப வேணா ஃபோன் பண்ணுங்க.

டிசம்பர் 5:
இரவு 10: பெங்களூர் ஆபிஸிலிருந்து ஆஃப் ஷோர் கால் - இன்னைக்கு இது தான் வேலை. ஏதாவது சந்தேகமிருந்தா இப்பவே கேட்டுக்கோங்க. இதுக்கு மேல ஃபோன் பண்ணா ஃபோன் Switch off ஆகியிருக்கும்...

Friday, November 02, 2007

இப்படியிருக்கற நான்.. எப்படியாக போறேன்

இப்படியிருக்கற நான்...


வர நவம்பர் 15ல இருந்து இப்படியாக போறேன்
உங்கள் நல்லாசிகளை வேண்டும் வெட்டி...

Thursday, November 01, 2007

பயணக் கட்டுரை 4

சென்னை வலைப்பதிவர் சந்திப்புக்கு கிளம்புவது அதற்கு முதல் நாள் இரவு தான் முடிவானது. மாமா வீட்டுக்கு கோவை போகலாம்னு இருந்த ப்ளான் கேன்சலானவுடன் இந்த பயணம் பற்றி சிந்திக்க ஆரம்பித்தேன். சரி இவ்வளவு தூரம் வந்தாச்சி எப்படியும் எல்லாரையும் பார்த்துடலாம்னு முடிவு பண்ணி கப்பிக்கு ஃபோன் போட்டு சொல்லி ரெடியாயாச்சு. மூணு மணிக்கு அலாரம் வெச்சி கரெக்டா எழுந்துட்டேன். மூணுரை வண்டியை பிடிச்சி சென்னைக்கு எட்டு மணிக்கு போய் சேர்ந்தேன். சென்னை எனக்கு சுத்தமா பழக்கமில்லாத ஊரு. ஒரு மூணு நாலு தடவை தான் போயிருப்பேன். அதுவும் கௌன்சிலிங், HCL இண்டர்வியூ இந்த மாதிரி.

சென்னைல எட்டு மணிக்கே என்னமா வெயில் அடிக்குது. அதுவும் ஜீன் மாச கடைசில. சரி ஒரு எளனி (இளநீர்) குடிக்கலாம்னு பார்த்தேன். விலைய கேட்டா பதினஞ்சி ரூபானு சொன்னான். நான் ஒரு எளனி தாங்க கேட்டேனு சொன்னேன். அவன் என்னை ஒரு மாதிரி பார்த்தான். எனக்கு உதயகீதம் கவுண்ட மணி தேங்காய் கதை தான் நியாபகத்துக்கு வந்துச்சு. பேசாம எளனில பாம் வெச்சிருக்காங்கனு சொல்லிடலாமானு கூட ஒரு நிமிஷம் யோசிச்சேன். ஆனா வேண்டாம் வம்புனு விட்டுட்டேன். ஒரு நாலு வருஷத்துக்கு முன்னாடி கொயம்பத்தூர்லயே அஞ்சி ரூபாய்க்கு தான் வாங்கினேன். அதுக்குள்ள பதினஞ்சி ரூபாயானு யோசிச்சிட்டு இருக்கும் போதே நிறைய பேர் வாங்கி குடிப்பதையும் பார்த்தேன். எல்லார்டயும் நிறைய காசு இருக்கு போலனு நினைச்சிட்டு இருக்கும் போதே என் அண்ணன் (பெரியம்மா பையன்) வந்து கூப்பிட்டு போனான்.

முதல்ல சரவண பவன் போய் டிபன் சாப்பிடலாம்னு போனோம். எனக்கு கோவை அண்ணபூர்ணா தான் ஃபெவரைட் (எல்லாத்தையும் கொயம்பத்தூரோட கம்பேர் பண்ணாம இருக்க முடியல). முதல்ல ஆளுக்கு ஒரு பொங்கல் ஆர்டர் பண்ணோம். தட்டுல வந்த பொங்கல் அளவை பார்த்ததும் ஒரு பெரிய அதிர்ச்சி. எங்க வீட்ல சாப்பிட்டு முடிச்சதும் எங்க அம்மா பாத்தரத்துல ஒட்டிட்டு இருக்குனு வழிச்சி ஒரு கைல எடுத்து போடுவாங்க. அதைவிட குறைவாதான் இருக்கும். வேணும்னா ஒரு சின்ன கரண்டி அளவுனு சொல்லலாம். கோவில் பிரசாதம் மாதிரி. அதுக்கு சட்னி என்னனா ஒரு டீ ஸ்பூன் அளவு. அடப்பாவிகளானு நினைச்சி சாப்பிட்டு அப்பறம் ஒரு செட் பூரி ஒரு காபி குடிச்சோம். பில் பார்த்தா நூத்து இருபதுக்கு மேல. சென்னைல இந்த மாதிரி சாப்பிடனும்னா கொயம்பத்தூர்ல பணம் அச்சடிக்கனும் போலனு அவன்ட சொல்லிக்கிட்டே வந்தேன். அதுக்கு அவன் எல்லாத்துக்கும் நீங்க தான் (சாப்ட்வேர் இஞ்சினியருங்க) காரணம்னு சொல்லி புலம்பனான். இனிமே இந்த கடைக்கு வரக்கூடாதுனு முடிவு பண்ணிக்கிட்டேன்.

அப்பறம் அண்ணன் வீட்டுக்கு போயிட்டு மதியம் ஒரு மூணு மணிக்கா நம்ம கப்பி நிலவரை சந்திச்சேன். பதிவுல இருக்குற மாதிரியே அதே அந்நோனியம். எப்பவும் சிரிச்ச முகம் (யாரோ கேட்ட மாதிரி தூங்கும் போதும் சிரிப்பியா ராசா?). ரெண்டு பேரும் ஒரு ஹோட்டலுக்கு போயிட்டு காபி குடிச்சிட்டு வலைப்பதிவர் சந்திப்புக்கு கிளம்பினோம். ஒரு வழியா தேடி பிடிச்சி வித்யலோகா புக் செண்டருக்கு போய் சேர்ந்தோம். (நாலு மாசத்துக்கு அப்பறம் எழுதறங்க. அதனால யார் பேராவது விட்டிருந்தா தயவு செஞ்சு மன்னிச்சிடுங்க).

போனவுடனே வெளிய பொன்ஸக்கா ஃபோன் பேசிட்டு இருந்தாங்க. கப்பிய பார்த்து ஒரு சிரிப்பு சிரிச்சிட்டு போன்ல கண்டினியூ பண்ணிட்டு இருந்தாங்க. அடுத்து உள்ள போனவுடனே பாலபாரதி கப்பிக்கிட்ட வாயானு பாசமா கூப்பிட்டாரு. நான் யாருனு யாருக்கும் தெரியாது. பேசாம அனானியா இருந்துடலாமானு ஒரு நிமிஷம் யோசிச்சேன். ஆனா நல்லா இருக்காதுனு பேர் சொல்லியே அறிமுகப்படுத்தி கொண்டேன். ரொம்ப சந்தோஷமா கை கொடுத்து வரவேற்றார்.

அடுத்து அவர் பக்கத்துல ஒரு வயசானவர் நின்னுட்டு இருந்தார். நான் தான் டோண்டு ராகவனு கப்பி நிலவன்கிட்ட கை கொடுத்தார். அடுத்து நானும் அறிமுக படுத்தி கொண்டேன். நம்ம அந்த அளவுக்கு ஃபேமஸில்லாததால் அவருக்கு யாருனு தெரியலைனு நினைக்கிறேன் :-). அங்க இருந்த கொஞ்ச பேர் பாஸ்டன்ல இருந்து பாலாஜினு சொன்னவுடனே பாஸ்டன் பாலாவானு ஆர்வமா கேட்டாங்க. நான் அவ்வளவு பெரிய ஆளு இல்லைங்கோ. நான் வெட்டிப்பயங்கோனு சொன்னவுடனே எல்லாருக்கும் யாருனு தெரியாம "ஓ! அப்படியானு" ஒரு ரியாக்ஷன் கொடுத்தாங்க.

அடுத்து எல்லாரும் வட்டமா உக்கார்ந்தாங்க. என் பக்கத்துல ரொம்ப சாந்தமா ஒருத்தர் உக்கார்ந்தாரு. பாலராஜன்கீதானு சொல்லி கை கொடுத்தாரு. ஏற்கனவே அவரை பற்றி KRS சொல்லி இருந்ததால் ஆர்வமாக அவரிடம் பேச துவங்கினேன். ரொம்ப பாசமா பேசினார். அவர்ட பேசினதில் ரொம்ப ரொம்ப சந்தோஷம்.

அடுத்து வலைப்பதிவர் பட்டரை பத்தி பேச்சு துவங்கியது. பத்ரி, லக்கி லுக், மா.சி, விக்கி (ரொம்ப ஆர்வமா இருந்தாரு), ஐகாரஸ் பிரகாஷ் எல்லாரும் அவுங்க அவுங்க கருத்தை சொன்னாங்க. என்ன கருத்துனு எல்லாம் கேக்க கூடாது. (Unconferenceக்கு தமிழ்ல என்னனு ஒரு அஞ்சு நிமிஷம் விவாதம் நடந்துச்சு :). அது தான் அதிகமா நியாபகம் இருக்கு). ஏன்னா பட்டரை முடிஞ்சே நாலு மாசமாகுது. வரவணையானும், முத்து தமிழினியும் ஏதாவது சொல்லுவாங்கனு ஆர்வமா இருந்தா பாஸ் சொல்லிட்டாங்க. நானும் ஏதோ என் கருத்தை சொல்ல அதை என்னயே செய்ய சொல்லி விக்கி சொல்லிட்டாரு. சரினு நானும் ஒத்துக்கிட்டு வந்து அரை குறையாக செய்திருக்கிறேன் :-(

முத்துலட்சுமி அக்கா குழந்தையோட வந்திருந்தாங்க. வினையூக்கி, அருள் குமார், சிவ ஞானம்ஜி ஐயா எல்லாரும் வந்திருந்தாங்க. சிவஞானம்ஜி ஐயா அண்ணா பல்கலை கழக தமிழ்துறையிடம் பேசி பட்டரைக்கு இடம் வாங்கி கொடுத்தார் என நினைக்கிறேன் (தவறிருந்தால் சொல்லவும்). சந்திப்பு அப்படியே முடிஞ்சிடுச்சி. என்னடா எல்லாரும் மொக்கை போடுவாங்கனு ஆசையா வந்தா பட்டறை பத்தி பேசி முடிச்சிட்டாங்கனு ஏமாற்றம்.

அப்பறம் எல்லாரும் கூட்டம் கூட்டமா பேச ஆரம்பிச்சாங்க. முதல்ல நான் மா.சிக்கிட்ட தான் பேசினேன். மக்களுக்கு பயன்படும் மாதிரி ஏதாவது எழுதனும் என்ன எழுதலாம்னு கேட்டேன். அவர் நீங்க வேலை செய்யற துறை என்னனு கேட்டாரு. நான் Performance Testingனு சொன்னேன். சரி அதை பத்தி எழுதுங்கனு சொன்னாரு. நான் வேணா சாப்ட்வேர் ஃபீல்ட்ல எப்படி Fake போட்டு வேலை வாங்கறதுனு எழுதவானு கேட்டேன். அவர் பார்த்த லுக் இன்னும் மனசிலே இருக்கு. இருந்தாலும் பின்னாடி எப்பவாது இதை பத்தி எழுதுவேன் :-)

அப்பறம் வெளிய கூட்டம் கூட்டமா நின்னு பேசிட்டு இருந்தாங்க. முதல்ல முத்துலட்சுமி அக்காக்கிட்ட பேச துவங்கினேன். உங்க வலைப்பூ தான் நான் முதல்ல படிச்ச வலைப்பூ. அதுக்கு அப்பறம் தான் நான் வலைப்பதிய ஆரம்பிச்சேனு சொன்னாங்க. கப்பி பார்த்து சிரிச்சான். நீங்களே எழுதும் போது நாங்க எழுதக்கூடாதானு ஆரம்பிச்சிருப்பாங்கனு சொல்லிட்டு எஸ்கேப் ஆகியாச்சு. அப்பறம் கப்பி எழுதுன நாய் கதையை பத்தி ஏதோ சொன்னாங்க. அந்த கதை எங்கனு நான் தேடிக்கிட்டே இருக்கேன். (கப்பி அப்ப நீ கொடுத்த ரியாக்ஷனுக்கு இப்ப தான் எனக்கு அர்த்தம் புரியுது)

அடுத்து லக்கிலுக், முத்து தமிழினியோட பேச ஆரம்பிச்சேன். முத்து தமிழினி உங்களோட க்ரீமி லேயருக்கு எதிரான பதிவுக்கு எதிரா பதிவு போடனும்னு நினைச்சேன். ஆனா வேலை பளுல போட முடியலைனு சொன்னாரு. பொறுமையா போடுங்க. எங்க போயிட போறேனு சொன்னேன். சிரிச்சாரு. அப்பறம் இட ஒதுக்கீடு பத்தி ஒரு பத்து நிமிஷம் டிஸ்கஷன் நடந்துச்சு. இன்னும் ஒரு இருபது வருஷத்துக்கு க்ரீமி லேயர் பத்தியே பேசாதீங்கனு சொன்னாரு. க்ளார்க் பசங்க எல்லாம் இப்ப தான் இஞ்சினியர் ஆகறாங்க. அந்த இஞ்சினியர் பசங்க வரும் போது பார்த்துக்கலாம்னு சொன்னாருனு நினைச்சிட்டு விட்டுட்டேன்.

கிருஷ்ணா (லக்கிலுக்) நேர்ல பார்க்கும் போது பதிவு மாதிரி அடிச்சி ஆடற டைப் இல்லைனு பட்டுச்சி. மனுஷன் ரொம்ப அமைதி. பேசறதை எல்லாம் கவனமா கேக்கறாரு. பெரியார் பத்தியும் பெரியார் படம் பத்தியும் நான் பேசனதை ரொம்ப ஆர்வமா கேட்டாரு. தனக்கும் பெரியார் அறிமுகம் இந்த மாதிரி ஒரு சாதரண பத்திரிக்கைல தான் கிடைச்சிதுனு சொன்னாரு. ஒரு நல்ல நண்பர் மாதிரி பேசனாரு.

அடுத்து சோமிக்கிட்ட பேசினேன். பத்தாயிரம் வாலா மாதிரிங்க மனுசன். பட படனு பேசறார். அவர் பேசறதை கேட்கும் போது நம்ம சூப்பர் ஸ்டார் பேசற மாதிரி தான் இருந்துச்சி. செம ஆக்டிவ். சான்ஸ் கிடைச்சா கண்டிப்பா பேசுங்க. நீங்க அவரோட நட்பாகறதுக்கு ரெண்டு நிமிஷத்துக்கு மேல ஆகாது. மொக்கை பதிவுகளை பற்றி சொன்னார். யாழ்பாணத்தில் எரிந்து போன நூலகத்தை பற்றி சொல்லி வருத்தப்பட்டார். எங்கயாவது சோமி வரார்னா அந்த சந்திப்பை தவற விட்டுடாதீங்க.

அப்பறம் கடைய பூட்டிட்டு தல பாலபாரதி வந்தார். வெளிய போய் டீக்குடிச்சிட்டு அவர்ட கொஞ்ச நேரம் பேசினேன். நான் எழுதிய பெரியார் பதிவு ரொம்ப பிடிச்சிதுனு சொன்னார். அந்த ட்விஸ்ட் ரொம்ப நல்லா இருந்துச்சுனு சொன்னார். பெரியார் பத்தி இன்னும் நான் நிறைய எழுதனும்னு சொன்னப்ப கண்டிப்பா பண்ணுனு சொன்னார். ஆனா நான் தான் எழுதாம இத்தனை நாள் வீணாக்கிட்டேன் :-(

அப்பறம் எங்க காதல் முரசு அருட்பெருங்கோவை பத்தி சொல்லாம விட்டுட்டேன். ரொம்ப அமைதியான பையன். அந்த காதல் கவிதை எல்லாம் கற்பனை தான். அனுபவம் இல்லைனு சொன்னான். நானும் நம்ப முயற்சி செய்யறேனு சொன்னேன். இன்னும் முயற்சி செஞ்சிக்கிட்டே இருக்கேன்.

நான் சென்னை வந்ததே சங்கத்து மக்கள்ல கப்பி தவிர யாருக்கும் தெரியாது. ஏன்னா முதல் நாள் இராத்திரி பத்து மணிக்கு முடிவு பண்ணி மூணு மணிக்கு கிளம்பி வந்தது. எல்லார்கிட்டயும் கப்பியை சொல்ல சொல்லிட்டேன். தேவ் அண்ணாவிற்கு நாங்க சொல்லும் போது மணி சாயந்திரம் அஞ்சு ஆயிடுச்சு. அவரால சந்திப்புக்கு வர முடியல. அதனால ஒரு சின்ன மீட்டிங் பீச்ல போட்டுடலாம்னு முடிவு பண்ணோம்.

ரிப்பீட்டே கோபி, காதல் முரசு, தேவ், நான், கப்பி எல்லாரும் பெசண்ட் நகர் பீச்ல ஒரு மணி நேரம் சந்திச்சி பேசனோம். ரிப்பிட்டே கோபியும் ரொம்ப அமைதியான டைப் தான். முதல்ல ரிப்பீட்டே கோபி தான் காதல் முரசுனு மாத்தி தேவ் அண்ணாக்கிட்ட சொல்லியாச்சு. இதுக்கும் கப்பிக்கும் எந்த சம்பந்தமும் இல்லைனு அவன் சொன்னதை அவனே நம்பலை.

காதல் முரசுக்கிட்ட தினமணி பத்திரிக்கை நிருபர் பத்தி தேவ் ஏதோ கேட்க அவர் என் கிளாஸ் மேட் தான் ரிப்பீட்டே கோபி சொல்ல, அம்பது வயசு நிருபர் எப்படி இவன் கூட படிச்சாருனு யோசிச்சி ஒரு வழியா அவரே கண்டிபிடிச்சிட்டாரு. அப்பறம் ஒரு மணி நேரம் நம்ம காதல் முரசை ஓட்டிட்டு கிளம்பியாச்சி. ஜொள்ளுப்பாண்டி வர முடியலைனு ரொம்ப வருத்தப்பட்டார். ஃபோன் பண்ணாததுக்கு ரொம்ப சாரிங்க பாண்டி.

நானும் கப்பியும் ஒரு வழியா சாப்பிட்டோம். அப்பறம் என்னை கோயம்பேடு வந்து பஸ் ஏத்திவிட்டு கிளம்பினான் கப்பி. பாசக்காரப்பையன்... அன்னைக்கு வரேனு சொன்ன அபி அப்பாவையும் சென்ஷியையும் பார்க்காதது தான் பெரிய வருத்தம். எப்படியும் ஒரு நாள் சந்திப்போம்னு நினைச்சிட்டு கிளம்பினேன்...

(தொடரும்...)

Tuesday, October 30, 2007

பயணக் கட்டுரை 3

நான் போன அன்னைக்கு ஊரே பரபரப்பா இருந்ததுக்கு காரணம் "சிவாஜி" ரிலிஸ். நான் இங்க கிளம்பற அப்ப கூகுள் ஸ்டேடஸ்ல கூட "அண்ணன் வந்தா தமிழ்நாடும் அமெரிக்கானு" பில்ட் அப் கொடுத்துட்டு தான் கிளம்பினேன். எங்க ஊர்ல ராத்திரி முழுக்க முழுக்க தேங்காய் உடைச்சிருக்காங்கனு சொல்லிட்டு (எவன் எல்லாத்தையும் அள்ளிட்டு போனானோனு புலம்பிட்டு) இருந்தாங்க. முதல் நாள் டிக்கெட் நூறு ரூபாயாம். அவ்வளவு கொடுத்து எத்தனை பேர் பார்த்திருப்பாங்கனு தெரியல. ஆனா ரெண்டு தியேட்டர்ல போட்டாங்க. ஈஸியா டிக்கெட் கிடைச்சிதுனும் பேசிக்கிட்டாங்க. நான் தியேட்டர் பக்கம் போகலை.

மொக்கை படமா இருந்தாலும் முதல் நாள் பார்க்கற ரகம் நான். ஆனா அன்னைக்கு போனா வீட்ல செம திட்டு விழும்னு முதல் நாலு நாள் போகவேயில்லை. அப்பறம் போனா தியேட்டர்ல ஒரு முப்பது நாப்பது பேர் தான் இருந்திருப்போம். நாப்பது ரூபாய் டிக்கெட் கொடுத்து எவன் பார்ப்பானு பேசிக்கிட்டாங்க. ரொம்ப சந்தோஷமா இருந்துச்சி. நம்மலும் பார்க்காம இருந்திருக்கலாம்னு தோனுச்சி. யாருமே வரலைனா அடுத்த நாளே இருபது ரூபா ஆக்கிடுவான் இல்லை.

வீட்டுக்கு போனவுடனே அம்மா காப்பி போட்டு கொடுத்தாங்க. ஆஹா... இந்த கேப்பசினோ குடிச்சி குடிச்சி நல்ல காப்பி எப்படா கிடைக்கும்னு நினைச்சிட்டு இருந்தேன். அம்மா போட்டு கொடுத்த காப்பி எப்பவும் போல அருமையா இருந்துச்சு. பொதுவா நான் டிபன் சாப்பிட்டு தான் காப்பி குடிப்பேன். சீக்கிரமா போனதால ஒரு காப்பி தேவைப்பட்டுச்சு.

அப்பறம் பொட்டியில இருந்ததையெல்லாம் எடுத்து அம்மாக்கிட்ட கொடுக்க ஆரம்பிச்சேன். சாக்லேட் எல்லாம் எடுத்து ஃபிரிட்ஜ்ல வைக்க கொடுத்தேன். ஒவ்வொன்னும் விலை எவ்வளவுனு கேட்டு ஏன் இவ்வளவு காசு செலவு பண்ணி வாங்கிட்டு வந்தனு கேட்டுட்டு இருந்தாங்க. ஒரு காப்பி 3$ பக்கம் ஆகும்னு சொன்னவுடனே, என்ன ஒரு காப்பி 130 ரூபாயா?னு சொல்லி சொல்லி ஆச்சரியப்பட்டாங்க. அப்படியே இட்லி தோசையெல்லாம் எவ்வளவுனு கேட்டு ஆச்சர்யப்பட்டாங்க. இவ்வளவு காஸ்ட்லியாவா அங்க இருக்கும்னு அப்பாவும் கேட்டுட்டு இருந்தாரு. (இதையே ஒவ்வொருத்தவங்க வரும் போதும் சொல்லிட்டே இருந்தது வேற கதை).

அப்பறம் காலைல சுட சுட இட்லி, மல்லாட்டை சட்னி. மல்லாட்டைனா என்னனு யோசிக்கறீங்களா? அது தான் நிலக்கடலை. எங்க ஊர் பக்கமெல்லாம் அப்படித்தான் சொல்வாங்க. எனக்கு அந்த சட்னி தான் ரொம்ப பிடிக்கும் (மல்லாட்டை வறுத்து, தோல் நீக்கிட்டு, அப்பறம் கொஞ்சம் தேங்காய், காஞ்ச மிளகாய், உப்பு, கொஞ்சம் புளி வைச்சி அரைக்கனும்). அப்பறம் ஒரு வழியா சாப்பிட்டு ஒவ்வொரு சொந்தக்காரவங்க வீட்டுக்கும் சாக்லேட் பிரிச்சி எடுத்துட்டு கிளம்பியாச்சு. ஒவ்வொருத்தவங்க வீட்டுக்கா போய் நல்லா மொக்கையை போட்டுட்டு வந்தேன்.

மதியம் தூங்க வேணாம்னு பார்த்தேன். கண்ணெல்லாம் சிவந்திருக்கு ஒரு அஞ்சு நிமிஷமாவது படுத்து எழுந்திரினு கம்பெல் பண்ணி படுக்க வைச்சாங்க. ரெண்டு மணிக்கு படுத்துட்டு ராத்திரி 9 மணிக்கு எழுந்திரிச்சேன். என்னை எழுப்ப எவ்வளவோ முயற்சி செஞ்சாங்களாம். பழசெல்லாம் மறந்துட்டாங்க போலனு நினைச்சிக்கிட்டேன். சின்ன வயசுல இருந்து என்னை எழுப்பறதுக்கு எங்க வீட்ல ரொம்ப கஷ்டப்படுவாங்க. பாலாஜி எழுந்திரி, பாலாஜி எழுந்திரினு சொல்லிக்கிட்டே இருங்கம்மா உங்களுக்கு புண்ணியம் அதிகமா சேர்ந்துடும் எப்பவும் கிண்டல் பண்ணிட்டு இருப்பேன். அப்பறம் ஒன்பது மணிக்கு மேல தூக்கம் வரலை. வீட்ல இண்டர்நெட்டுல் செம ஸ்லோ. என்ன பண்றதுனு தெரியல. நான் அமெரிக்கா வரதுக்கு ஒரு மாசத்துக்கு முன்னாடி நிறைய சாண்டில்யன், அகிலனோட நாவல் எல்லாம் வாங்கி வெச்சது நியாபகத்துக்கு வந்துச்சு.

ஒரு வழியா தேடி கண்டுபிடிச்சி முதல்ல என் கைல வந்தது யவன ராணி. அப்படியே யவன ராணில முழுகிட்டேன். அடுத்த நாள் வீட்டுக்கு வந்தவங்க யார்கிட்டயும் சரியா பேச விடாம என்னை யவன ராணி பிடிச்சிக்கிட்டா. அப்பறம் வந்த அடுத்த நாள் எங்க அக்கா குழந்தைக்கு மொட்டை அடிச்சி காது குத்த திருச்சி கிளம்பியாச்சி. நான் எங்க அக்கா குழந்தையை முதல் முறை அங்க தான் பார்த்தேன். பதினோரு மாசம் கழிச்சி பார்த்ததுல ஒரு வகைல வருத்தம்னா இன்னொரு வகைல சரியா தாய் மாமன் பேரை காப்பாத்த வந்தாச்சேனு ஒரு சந்தோஷம் (ஒரு மாசம் கழிச்சி போயிருந்தா வேற யார் மடியிலயாவது உக்கார வெச்சி பண்ணிருப்பாங்க). முதல் முறை என் மடில உக்காரும் போது மொட்டையடிச்சாங்க. அடுத்த முறை உக்காரும் போது காது குத்தினாங்க. இவன் சரியான வில்லன் போலனு நினைச்சிதோ என்னுமோ தெரியல. அப்பறம் என்கிட்ட வரவேயில்லை :-((((

யவன ராணி படிச்சிக்கிட்டே திருச்சி போனப்ப காவிரி நிலையை பார்த்துக்கிட்டே போனேன். ரொம்ப வருத்தமா இருந்துச்சு. அப்ப இங்க எப்படி ஓடியிருப்பா இந்த காவிரி. இன்னைக்கு வெறும் மண்ணா இருக்கேனு வருத்தமா இருந்துச்சு. வண்டில போகும் போதும் யவன ராணி படிச்சிக்கிட்டே போனேன். அம்மா, அப்பா ரெண்டு பேரும் சேர்ந்து திட்டினாங்க. ஏன்டா அங்க இருந்து புக் படிக்கவா வந்தனு. நமக்கு தான் திட்டு வாங்கி வாங்கி பழகி போச்சே. அப்படியே திட்டு வாங்கிட்டே படிச்சி முடிச்சிட்டேன்.


அப்பறம் ஊருக்கு போய் ஒரு நாலு நாள் அம்மா, அப்பாவோட மட்டும் டைம் ஸ்பெண்ட் பண்ணேன். அதனால யாருக்கும் போன் பண்ணவுமில்லை. நான் போன் எடுத்தா ஒரு மணி நேரமாவது மொக்கை போடற டைப். ஒரு வாரம் கழிச்சி கப்பி நிலவனுக்கு போன் பண்ணப்ப தான் தெரிஞ்சிது வ.வா.ச பத்தி திணமணில வந்திருக்குனு. ஆஹா நம்ம போட்டோவெல்லாம் வந்திருக்கு, பார்க்காம போயிட்டமேனு ஃபீல் ஆயிட்டேன். அப்பறம் ஒரு வழியா பேப்பரை கண்டு பிடிச்சி பார்த்தேன். ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.

அடுத்த நாள் ஒரு ஃபோன் வந்துச்சு. எங்க அப்பாதான் ஃபோன் எடுத்தாரு. ஏதோ சிங்கப்பூர்ல இருந்து ஃபோனு சொல்லி கொடுத்தாரு. வாங்கி பார்த்தா "சிங்கப்பூர்ல இருந்து கோவி.கண்ணன் பேசறனு". சொல்லுங்க தள கலாய்த்தல் எல்லாம் எப்படி போகுதுனு பேச ஆரம்பிச்சிட்டேன். அப்படியே ராயல், தேவ் எல்லாருக்கும் போன் பண்ணி நான் வந்த விஷயத்தை சொன்னேன். அடுத்து ஒருத்தர் போன் பண்ணாரு. பேரை சொல்லாம ஒரு மணி நேரம் பேசினாரு.

அப்பா போன் எடுத்ததால நான் நம்பர் பார்க்கல. ஹைதிராபாத்ல இருந்து பேசறேனு சொன்னாரு. எவ்வளவு கேட்டும் பேர் சொல்லலை. அனானிமஸ்கிட்ட பேச மாட்டீங்களானு கேட்டாரு. நம்ம எல்லாம் பேர் தெரியலைனாலும் மொக்கை போடுவோம்னு சொல்லிட்டு ஒரு மணி நேரம் பேசிட்டு இருந்தேன். வலை அரசியல் எல்லாம் சொன்னாரு. நமக்கு அந்த அளவுக்கு ஞானமில்லைனு கொஞ்ச நேரத்துல புரிஞ்சிக்கிட்டாரு. ஃபோன் வெச்சதுக்கு அப்பறம் நம்பர் பார்த்தேன். பெண்களூர்னு தெரிஞ்சிது. உடனே புரிஞ்சிடுச்சி அது நம்ம புரட்சி குட்டி ஆணியவாதினு ;). அடுத்து நம்ம சென்ஷி போன் பண்ணார்.

அந்த வாரம் வலைப்பதிவர் சந்திப்புக்கு போக முடியுமானு சந்தேகமா இருந்துச்சு. முதல் நாள் ராத்திரி கோவை பயணம் ரத்தானதுல சென்னை கிளம்பிட்டேன்...

(தொடரும்...)

Tuesday, October 23, 2007

இலையுதிர் காலம்

பாஸ்டன்ல இருந்து இதுக்கூட போடலைனா அவமானம்...

தல CVR ரேஞ்சுக்கு இல்லைனாலும் ஏழைக்கேத்த எள்ளுருண்டை
Monday, October 22, 2007

பயணக் கட்டுரை - 2

தமிழ் பேசறவங்கனு முகத்துலயே நல்லா எழுதி ஒட்டியிருந்தது.

அப்படியே பேச ஆரம்பிச்சதுல வலைப்பதிவை பற்றிய பேச்சு வந்தது.

நீங்க தான் வெட்டிப்பயலானு கேட்டு ஒரே ஆச்சரியம். உங்க ப்ளாக் தினமும் படிப்பேன். கதை எல்லாம் அருமையா எழுதறீங்க. உங்களை பார்ப்பேனு நான் நினைச்சி பார்க்கவேயில்லை. என் ஃபிரெண்ட்ஸ் கிட்ட எல்லாம் உங்க கதையை பத்தி நிறைய பேசியிருக்கேன். கொல்ட்டி உண்மைக் கதையில்லைனு நம்பவே முடியல. தூறல் சான்சேயில்லைங்க... ஆனா சோகத்தை பிழிஞ்சிட்டீங்க. கரிக்கை சோழினு எப்படிங்க பேர் வைச்சிங்க. சூப்பர் பேரு சான்சேயில்லை. அது எப்படிங்க கவுண்ட மணியை வெச்சி இப்படி சூப்பரா எழுதறீங்க. உங்களை பார்த்தேனு போய் ஃபிரண்ட்ஸ்க்கு எல்லாம் மெயில் பண்ணனும்.

"இருந்தாலும் ஆட்டோகிராஃப் கேக்கறதெல்லாம் ரொம்ப ஓவர்ங்க. நான் அவ்வளவு பெரிய ஆள் எல்லாம் இல்லை. ப்ளீஸ் வேண்டாங்க."

"ஏக்ஸ்கியுஸ் மீ... நீங்க கொஞ்சம் முன்னாடி இருக்கற சீட்டுக்கு மாற முடியுமா?" அந்த விப்ரோ பெண்ணின் குரல் கேட்டு நினைவு திரும்பியது. அவள் பின்னால் ஒரு விப்ரோ பையன் நின்றிருந்தான். ஆஹா வலைப்பதிவரா இருக்கறதுல இது ஒரு பிரச்சனை. ஒரே நிமிஷத்துல எவ்வளவு யோசனை போகுது. சரி அவுங்க ஒரு VIPக்கூட ட்ராவல் பண்ற சான்சை மிஸ் பண்ணிட்டாங்கனு நினைச்சிக்கிட்டு முன்னாடி போய் அந்த பையனோட ஜன்னல் ஓர சீட்ல உக்கார்ந்தேன்.

அந்த ஃபிளைட்ல அனுஷ்கா, ரீமா சென் நடிச்ச ரெண்டு படமும், கோபிகா நடிச்ச எமட்டன் மகன் படமும் பார்த்துட்டே போனேன். ஏற்கனவே பார்த்திருந்தாலும் திரும்பவும் பார்த்துட்டு போனேன். குறிப்பிட்ட நேரத்தில் விமானம் சென்னையை சென்றடைந்தது. இரவு ஒரு மணிக்கும் சென்னை பளிச்சென்றிருந்தது... லக்கேஜ் வந்து சேர்வதற்கு ஒரு மணி நேரமானது.

வெளியே நின்ற கூட்டத்தில் அம்மா, அப்பா, தீபன் (என் ஃபிரெண்ட்) மூணு பேரும் அவ்வளவு கூட்டத்திலும் நன்றாக தெரிந்தார்கள். 16 மாதத்திற்கு பிறகு அம்மா, அப்பாவை பார்த்ததில் ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. நான்கு மணி நேரமாக எனக்காக ஏர்போர்டில் நின்று கொண்டேயிருந்ததால், அம்மா சோர்வாக இருந்தாலும் முகத்தில் மகிழ்ச்சி அதிகமாகவேயிருந்தது. 20 மணி நேர பயண் அலுப்பும் அவர்களை பார்த்த ஒரு நொடியில் சென்றுவிட்டது.

அப்பாவும், என் நண்பனும் என்னிடமிருந்து பெட்டியை ஆளுக்கொருவராக வாங்கி கொண்டனர். காருக்கு சென்றவுடன் அம்மா தண்ணி, ஸ்வீட் எல்லாம் கொடுத்தாங்க. ஃபிளைட்ல ரெண்டு நாளா வெறும் கோக் மட்டும் குடிச்சிட்டு போனது அப்ப தான் நியாபகம் வந்துச்சி. எனக்கு ஸ்விட்னா ரொம்ப பிடிக்கும். ஆனா இங்க வந்ததுல இருந்து அதிகமா சாப்பிடறதில்லை. நமக்கு நாமே திட்டத்துல அதெல்லாம் எங்க தோணுது.

ஒரு வழியா நண்பனுக்காக வாங்கி சென்ற Sony DSC H2 கேமராவை அவனிடம் கொடுத்துவிட்டு, கள்ளக்குறிச்சிக்கு புறப்பட்டேன்... வண்டி ஏற்போர்டிலிருந்து வரும் போதே எதிர்ல வந்த வண்டிகளை பார்த்து கொஞ்சம் ஜெர்க்கானேன். எல்லா திசைல இருந்தும் கண்டபடி வண்டி வந்து பார்த்து ஒரு வருஷத்துக்கு மேல ஆயிடுச்சா. அந்த எஃபக்ட் தான். ஒரு வாரத்துக்கு இந்த எஃபக்ட் இருந்துச்சு.

விழுப்புரத்துல ஒரு டீ வாங்கி குடிச்சோம். ஆஹா... இந்த ரோட்டோர டீக்கடைல குடிக்கிற டீக்கு இருக்குற ருசியே தனிதான். ரொம்ப ரசிச்சி குடிச்சேன். அப்பறம் விழுப்புரத்துல இருந்து உளுந்தூர்பேட்டை போற வழியில செம ட்ராஃபிக் ஜாம். என்னனு விசாரிச்சா யாருக்குமே தெரியல. எங்க டிரைவர் விவரமா தார் ரோட்டுக்கு கீழ இருக்குற மண் ரோட்டுலயே ஓட்டிட்டு போயிட்டாரு. கடைசியா பார்த்தா வழியில ஒரு ரயில்வே கேட்ல கொஞ்சம் முன்னாடியே கேட் போட்டிருக்காங்க. அதனால நிறைய டிரைவருங்க அப்படியே தூங்கிட்டாங்க. போற வழியில நாங்க நிறைய பேரை எழுப்பீட்டே போனோம்...

ஒரு வழியா ஊருக்கு 7 மணிக்கு போய் சேர்ந்தாச்சு. எல்லாம் வாசல்ல தண்ணி தெளிச்சி கோலம் போட்டிருந்தாங்க. கள்ளக்குறிச்சில ஒரு வருடத்தில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. 7 மணிக்கு திருக்கோவிலூர் பெண்ணையாற்றிலிருந்து வரும் தண்ணீர் வந்து கொண்டிருந்ததால் எல்லாரும் வெளி பைப்ல தண்ணி பிடிச்சிட்டு இருந்தாங்க.

விடியறதுக்கு முன்னாடி வந்துடனும் இல்லைனா எல்லாரும் பார்த்தா கண்ணு போட்ரூவாங்கனு எங்க பாட்டி சொல்லிருந்தாங்க போல. ஆனா ட்ராபிக் ஜாம் அவுங்களுக்கு எதிரா சதி பண்ணி கரெக்டா தெருவுல எல்லாரும் பார்க்கும் போது தான் விட்டுக்கு வந்து சேர்ந்தேன். வழியெல்லாம் ஒரே விசாரிப்பு. எல்லார்டயும் பேசிட்டு வீட்டுக்கு போனேன். வீட்டுக்குள்ள போனவுடனே அப்படி ஒரு சந்தோஷம். என்ன இருந்தாலும் 20 வருஷமா இருக்குற வீடாச்சே. ரொம்ப பாதுகாப்பான இடத்துல இருக்குற மாதிரி ஒரு மகிழ்ச்சி...

அன்னைக்கு வர வழியில பல இடங்களில் பயங்கரமா பட்டாசு வெடிச்சாங்க. எங்க ஊருல ராத்திரி முழுக்க ஒரு லோடு தேங்காய் உடைச்சிருக்காங்க. இருந்தாலும் இது ரொம்ப ஓவர் இல்லையா? சரி அதை பத்தி அடுத்த பாகத்துல பார்ப்போம்...

தொடரும்...

Friday, October 19, 2007

பயணக் கட்டுரை...

சின்ன வயசுல ரொம்ப ஆசைப்படற விஷயங்கள் கிடைத்த பிறகு வெறுத்து போய்விடவதுண்டு. அதுல எனக்கு தெரிஞ்சி முதலிடம் இந்த விமானப்பயணம் தான். சின்ன வயசுல இருக்கும் போது ஒரு தடவையாவது ஃபிளைட்ல போகனும்கறது என் வாழ்க்கையின் லட்சியமாக இருந்திருக்கிறது.

விட்டில இருக்கும் போது ஃபிளைட் போச்சுனா வெளிய வந்து வேடிக்கை பார்ப்போம், டாட்டா காட்டுவோம் (ஆமாம் இந்த கை ஆட்டறதுக்கு டாட்டா காட்டறதுனு எப்படி பேர் வந்துச்சுனு யாருக்காவது தெரியுமா?). அந்த சத்தமே ஒரு மகிழ்ச்சியை கொடுத்துவிடும். க்ளாஸ்ல இருக்கும் போது ஃபிளைட் போச்சுனா ஜன்னல் வழியா தெரியாதுனு வானத்தை பார்த்து க்ளாஸ் முழுக்கும் வாத்தியாரிடம் திட்டு வாங்கும். அந்த அளவுக்கு பிடித்த விஷயம் இப்ப சுத்தமா பிடிக்காம போயிடுச்சி.

பஸ்ல போகறது ரொம்பவும் பிடிக்கும். வித விதமான மனிதர்கள் ஏறி இறங்குவதை பார்ப்பதற்கு ஒரு விதமான சந்தோஷம் இருக்கும். ஆனா இந்த ஃபிளைட்ல தொடர்ந்து 10 மணி நேரம் உக்கார்ந்து போகறது மரண கடி. இந்த ஜீலைல நான் இந்தியா போன போது அப்படித்தான் இருக்கும்னு நினைச்சிட்டு பயணத்தை ஆரம்பித்தேன்.

கிளம்ப வேண்டிய நாளன்று WFH (Working From Home) போட்டுவிட்டு வேலை பார்த்துக்கொண்டே(செய்து கொண்டேனு சொல்லல. நல்லா கவனிச்சிக்கோங்க) கிளம்பினேன். கிளம்ப வேண்டியதற்கு 10 நிமிடத்திற்கு முன்னால் சங்கத்து சிங்ககளுக்கு நான் இந்தியா வரேனு சொல்லி ஒரு மெயில் தட்டிவிட்ட வந்தேன். நான் கிளம்புவது கடைசி வரை கேள்விக்குறியாகவே இருந்தது. நான் ஊருக்கு கிளம்புவதற்கு சரியாக ஒரு வாரத்திற்கு முன்னால் என் டீம் லீட் பேப்பர் போட்டுட்டாரு. என் நல்ல நேரம் (??? இந்த கேள்விக்குறிக்கு விடை கடைசி பாகத்தில் தெரியலாம்) எனக்கு லீவ் கொடுத்து அனுப்பினாங்க.

நான் தங்கியிருக்குமிடத்திலிருந்து பாஸ்டன் லோகன் ஏர்போர்ட் செல்ல குறைந்தது ஒரு மணி நேரமாகும். என் டீம் லீட் எனக்காக லீவ் போட்டு, அவருடையை புது ப்ரையஸ் காரில் என்னை அழைத்து வந்து ஃபிளைட் ஏற்றிவிட்டார். அமெரிக்கா வந்து முதல் முறையாக செல்வதால் எக்கச்சக்கமாக போருட்கள் எடுத்து சென்றேன். குறிப்பிட்ட அளவைவிட 5 கிலோ அதிகமிருந்ததால் 50$ தண்டம் கட்டி எடுத்து சென்றேன்.

ஏர் ஃபிரான்ஸில் எப்பவும் போல் ஏர் ஹோஸ்டஸ் எல்லாம் அழகாக இருந்தார்கள். எங்க இருந்து தான் பிடிக்கிறானுங்னு தெரியல. நல்லா சிரிச்சி வர வேற்றார்கள். ஒரு வழியா என் இடத்துல போய் உக்கார்ந்துட்டேன். புக் பண்ணும் போது Aisle சீட் தான் வேணும்னு சொல்லி புக் பண்ணிருந்தேன். நான் தான் முதல்ல போய் உக்கார்ந்தேன். பக்கத்துல யார் வர போறாங்களோனு ஆவலா பார்த்துட்டு இருந்தேன்.

எப்பவுமே ஃபிளைட்ல என் பக்கத்துல ஏதாவது பொண்ணுங்கதான் உக்காரனும்னு விதி போல. இந்த முறையும் ஒரு வெள்ளைக்கார அக்கா வந்து உக்கார்ந்தாங்க. இங்கிலிஸ்ல கடலை போடறதுக்கு பேசாம தூங்கலாம்னு தூங்கிட்டேன். அப்ப அப்ப சாப்பிட கொண்டுவரும் போது என்னையறியாமல் என் கண்கள் திறந்து கொண்டன. நல்லா சாப்பிட்டு சாப்பிட்டு தூங்கிட்டு இருந்தேன். ஏதாவது படம் பார்க்கலாம்னு பார்த்தா என் விதி என்னோட டீவி மட்டும் வேலை செய்யல. இது தான் சாக்குனு நானும் ஏர் ஹோஸ்டஸ் ஒருத்தங்களை கூப்பிட்டு சொன்னேன். என்னனு பார்த்துட்டு வரேனு எங்கயோ போனாங்க. போயிட்டு வந்து எதுவும் செய்ய முடியாதுனு சாரி சொல்லிட்டு போயிட்டாங்க.

ஒரு வழியா ஃபிரான்ஸ் போய் சேர்ந்தேன். அங்க ஏர்போர்ட் அட்டகாசமா இருந்துச்சு. சென்னை போற ஃபிளைட்டுக்கு 4 மணி நேரம் காத்திருக்க வேண்டியதிருந்தது. என்ன செய்யறதுனே தெரியல. நமக்குள்ள இருந்த வலைப்பதிவன் முழிச்சிக்கிட்டான். சரினு பாரிஸ் ஏர்போர்ட்ல உக்கார்ந்து எழுத ஆரம்பிச்சிட்டேன். அப்ப எழுதிட்டிருந்த ஆப்பரேஷன் கில்மா நாலாவது பகுதி பாதி எழுதினேன். அடுத்து அலைபாயுதே படத்து விமர்சனம். அப்பறம் பெரியார் பட விமர்சனம். இதெல்லாம் ஊர்லயே விட்டுட்டு வந்தது வேற கதை. பெரியார் படத்துக்கு எழுதன விமர்சனத்தோட முதல் 4 வரிகள் இதோ (வார்த்தைகள் மாறலாம். நாலு மாசமாயிடுச்சி இல்லையா?)...

"நிறைய படிச்சிவங்க இருக்கும் போது வெறும் நாலாவது வரைக்கும் படிச்சிருக்கிற உனக்கு எதுக்கு இந்த வேலைனு நீங்க கேக்கலாம். ஆனா இதையெல்லாம் அவுங்க யாரும் செய்யல. அதனால தான் நான் செய்யறேன்- இது சாக்ரடீஸ் முன்னாடி பெரியார் பேசற வசனம். இதையே தான் நான் படத்தோட இயக்குனர் ஞான.ராஜசேகரனுக்கும் சொல்றேன். பெரியார் படம் சரியில்லைனு நொட்டை சொல்றவங்களுக்கும் இது தான் பதில்..."

அப்ப நான் தீவிரமா எழுதிட்டு இருக்கறதை பார்த்து ஒருத்தர் பக்கத்துல வந்து உட்கார்ந்து "என்ன சார் கவிதை எழுதறீங்களானு கேட்டாரு". சென்னை ஃபிளைட் வர இடங்கறதால அங்க தமிழர்கள் நிறைய பேர் இருந்தாங்க. நான் முன்னாடியே வந்துட்டதால யாரையும் கவனிக்காம எழுத ஆரம்பிச்சிட்டேன். என் பக்கத்துல இருக்கவர் வந்து கேட்ட பிறகு தான் சுத்தி இருந்தவங்களையே பார்த்தேன். அதுலயும் நம்மல பார்த்து கவிதை எழுதறீங்களானு கேட்கும் போது அவர் ரொம்ப அப்பாவியாத்தான் இருக்கனும்னு ஒரு முடிவுக்கு வந்து அந்த பேப்பரையெல்லாம் உள்ள வெச்சிட்டு ஒரு மணி நேரம் அவர்ட மொக்கை போட்டுட்டிருந்தேன்.

அப்பறம் ஒரு வழியா ஃபிளைட் வந்து வழக்கம் போல என் Aisle சீட்ல போய் உட்கார்ந்து என் பக்கத்துல வர போற பொண்ணு யாருனு பார்த்துட்டு இருந்தேன். Wipro Bag எடுத்துட்டு ஒருத்தவங்க வந்து என் சீட் பக்கத்துல நின்னு நம்பர் சரி பண்ணாங்க. தமிழ் பேசறவங்கனு முகத்துலயே நல்லா எழுதி ஒட்டியிருந்தது. வந்தவுடனே என்னுடன் பேச ஆரம்பித்தாள்...

(தொடரும்...)

Thursday, October 18, 2007

சாப்ட்வேர் இஞ்ஜினியர் ஆகலாம் வாங்க-5 (மீள்பதிவு)

சரி, ரெசுமே தயார் செய்வது எப்படினு பாத்தாச்சி.

முதல் சுற்றான Aptitude Testக்கு தயார் செய்வது எப்படினு பார்ப்போம்.

Aptitude Testல என்ன மாதிரி கேள்விகள் எல்லாம் கேட்கலாம்???
1) Numerical Problems (எண்கணிதம்)
2) Logical/Analytical Puzzles
3) Verbal skills
4) C Programming Fundamentals

இனி ஒவ்வொன்றுக்கும் தயார் செய்வது எப்படினு பார்ப்போம்:
1) எண்கணிதம்:
இதற்கு எனக்கு தெரிந்த ஒரே தெய்வம் "Qunatitative Aptitude" by R.S. Aggarwal
இதில் முதல் 4-5 chapters வெட்டி மாதிரி தெரியும். ஆனால் அதுதான் முக்கியமான ஒன்று. எல்லா கணக்கையும் போட்டு பாருங்கள். பார்த்தா தெரிஞ்ச மாதிரி இருக்கு அதனால போட்டு பார்க்க தேவையில்லைனு விட்டுவிடாதீர்கள்.
கணக்கை பொருத்தவரை திரும்ப திரும்ப போட்டு பார்த்தால்தான் வரும்.

எனக்கு தெரிந்த வரை முக்கியமான chapters:
1) Problems on Numbers.
2) Problems on Ages
3) Time and Work
4) Pipes and Cisterns
5) Percentages
6) Profit and Loss
7) Series or Find the Odd ones
8) Venn Diagram (Satyam, CTS...)

Probability & Permutation and Combination அந்த புத்தகத்தில் இருக்காது. அதனால் இதை CAT/GRE படிப்பவர்களிடமிருந்து நகல் எடுத்துக் கொள்ளுங்கள்.
HCL Cisco முதல் சுற்றில் 20ல் 14 கேள்விகள் Probability & Permutation and Combinationல் இருந்து வந்தன. அந்த தேர்வில் நான் தேர்ச்சி பெற அதுவே உதவியது. ஏனென்றால் அனைவரும் R.S. Aggarwal படித்திருந்தனர். (இண்டெர்வியுல ஊத்திக்கிச்சு :-))

2) Logical/Analytical Puzzles:
இதற்கு நான் பயன்படுத்தியது IMS GRE Material. நான் GRE படிக்கவில்லை. ஆனால் நண்பனிடமிருந்து வாங்கி பயன்படுத்திக் கொண்டேன். இதற்கு எல்லாம் பெரிய புத்திசாலிதனம் தேவையில்லை. எல்லாமே 8-10 மாணவர்கள்கூட போட்டுவிடுவார்கள்.
ஒவ்வொரு மாதிரியான puzzlesம் எப்படி அணுக வேண்டுமென்று அந்த புத்தகத்தில் இருக்கும். மகிழ்ச்சியாக படியுங்கள் சுலபமாக கற்றுக் கொள்ளலாம்.
படித்ததை தெரியாதவருக்கு சொல்லிக் கொடுங்கள்.

3) Verbal skills :
இதை பற்றி ஒரு பதிவே போட்டாச்சு.

4) C Programming Fundamentals:
"Let us C", "Pointers in C", "Test ur C Skills"- Yashwant Kanitkar.
இதற்கு மேல் எதுவும் தேவையில்லை. முதலில் "Let Us C"ல் ஆரம்பிக்கவும்.
பிறகு "Pointers in C". "Test ur C Skills"ல் கேள்வி பதில்கள் இருக்கும். தேர்வுக்கு முன்னால் கண்டிப்பாக ஒரு முறையாவது படிக்கவும்.

அடப்பாவி நீ பாட்டுக்கு உன் இஷ்டத்துக்கு இத்தனை புத்தகத்தை சொல்லிட்ட. படிக்கற கஷ்டம் எங்களுக்கு தான தெரியும்னு சொல்லறீங்களா?
கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது கண்ணா...

ஒரு நாள் முழுக்க Quants, அடுத்த நாள் Verbal, அடுத்து Analytical, அடுத்து technicalனு படிக்காதீங்க!!! தினமும் ஒவ்வொன்றிற்கும் 2-3 மணி நேரம் ஒதுக்கி படியுங்கள். இது பெங்களூர், சென்னைனு போய் mansionல தங்கி வேலை தேடுபவர்களுக்கான நேர ஒதுக்கீடு. மற்றவர்கள் அவரவருக்கு தகுந்த மாதிரி ஒதுக்கி கொள்ளவும்.

தொடரும்....

Monday, October 15, 2007

சாப்ட்வேர் இஞ்ஜினியர் ஆகலாம் வாங்க-4 (மீள்பதிவு)

மென்பொருள் துறையில் புதிதாக வேலையில் சேர்பவர்களுக்கான தேர்வு முறை எப்படி இருக்கும்????

பொதுவாக இப்படிதான் எல்லா கம்பெனியும் வேலைக்கு ஆள் எடுப்பார்கள் என்று சொல்ல முடியாது. ஒவ்வொரு கம்பெனியும் ஒவ்வொரு முறையை கையாள்கிறார்கள்.

ஆனால் பெரும்பாலான கம்பெனி கையாளும் முறை என்னவென்றால்,
முதல் சுற்று: Aptitude Test.
இரண்டாவது சுற்று: Technical Interview
மூன்றாவது சுற்று: HR Interview
இதில் ஒரு சில கம்பெனிகளில் Technical Interviewவும், HR Interviewவும் சேர்ந்தே இருக்கும்.

சரி இனி ஒவ்வொரு சுற்றுக்கும் தயார் செய்வது எப்படி, முக்கியமாக ரெசுமே தயார் செய்வது எப்படி என்று பார்ப்போம். வேலை தேட முக்கியாமன ஒன்று ரெசுமே (Resume).

நாங்க வேலை தேடும் போது செய்த பெரிய தவறு, நம்மை முதலில் தயார் செய்து கொண்டு ரெசுமே தயார் செய்யலாம் என்று யோசித்துக் கொண்டுருந்தது. ஆயுள் முழுக்க படித்தாலும் எந்த ஒரு டெக்னாலஜியுலும் அனைத்தையும் தெரிந்து கொள்ள முடியாது என்று உணர்ந்தோம்.

ஆகவே வேலை தேடும் போது முதலில் தேவைப்படுவது ரெசுமே தான்.
ரெசுமே எப்படி இருக்க வேண்டும் என்று எனக்கு தெரிந்தவரை சொல்கிறேன்.

1) முக்கியமாக 2-3 பக்கங்களுக்குள் இருப்பது நல்லது.
2) SSLC, +2, டிகிரி மதிப்பெண்கள் இருக்க வேண்டும்.
3) எனக்கு நிறைய தெரியும் என்று காட்டிக்கொள்ள நினைத்து தெரியாததை எல்லாம் போடாதீர்கள். டிகிரியில் படித்த அனைத்தையும் Area Of Interestல் போடாதீர்கள். நன்றாக தெரிந்ததையே முடிந்த அளவு போடுங்கள். இல்லையென்றால் ரெசுமேவில் இருப்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

நான் பார்த்த ரெசுமே ஒன்றில் இருந்தது:
Known:
Operating System: DOS, Windows 9x/ME/XP, Linux, Unix
Languages: C, C++, Java, COBOL...
Packages: VB, .NET...
DataBase: Oracle 8, MS Access, DB2, Sybase
Area Of Interest**: Data Structure, Object Oriented Concepts, DBMS, Computer Networks, Compiler Design, Microprocessor...
உண்மையில் அவனுக்கு (எனக்கும்) இதில் எதுவுமே ஒழுங்காக தெரியாது. இதில் இருக்கும் அனைத்தையும் தினமும் படிக்க வேண்டும் என்று நினைத்து எதையும் படிக்கமாட்டான்.
4) அதிக பில்ட் அப் கொடுக்காதீர்கள். (Achievements: உண்மையாக ஏதாவது இருந்தால் போடுங்கள் இல்லை என்றால் விட்டுவிடுவது நல்லது. College Symposium எல்லாம் போடுவது தேவையில்லை என நினைக்கிறேன்)
5) ரெசுமேவில் பிறந்த நாள் இருப்பது நல்லது. (ஏனென்றால் இன்போஸிஸ் போன்ற கம்பெனிகள் பார்ப்பது பெயர், பிறந்த நாள், மதிப்பெண்கள் தான். Name, DOB, Marks are the primary keys) . பாஸ்போர்ட் விவரங்கள் எல்லாம் தேவை இல்லை.

**Area Of Interest:
நான் படிக்கும் போது ரொம்ப யோசிச்சி எல்லாம் படிச்சதில்லை. எனக்கு வேலை கிடைத்தால் போதும் என்று நினைப்பவர்கள், Object Oriented Conceptsஐ தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இதில் Freshers க்கு கேட்கும் கேள்விகள் ஒரளவிற்கு சுலபமாகத்தான் இருக்கும்.
(Abstraction, Encapsulation, Inheritance, Diff Bw Structural Approach and OOPs...).
முடிந்த அளவு AOI 1 அல்லது 2க்கு மேல் போட வேண்டாம் என்பது என் எண்ணம்.

படிக்கும் போதே நான் நன்றாக புரிந்து படித்தேன். எனக்கென்று ஒரு லட்சியம் இருக்கிறது. நான் ஜாவா டெவலப்பராகவோ/நெட் ஒர்க் அனலிஸ்டாகவோ/ டேடாபேஸ் அட்மினிஸ்ட்ரேட்டராகவோ தான் ஆவேன் என்பவர்கள் அதற்கான முயற்சியை மட்டும் மேற்கொள்ளுங்கள். கொஞ்சம் லேட் ஆனாலும் நீங்கள் விரும்பிய பணியை செய்யலாம்.

Aptitude Testக்கு தயார் செய்வது எப்படி என்று அடுத்த பதிவில் பார்க்கலாம்.

தொடரும்...

PS:

வைக் அவர்களின் பின்னூட்டம்:
AOI, final year project சம்மந்தப்பட்டதா இருந்தால் நல்லது, அதை பத்தி கேள்வி கேட்டு interview ஓட்டிடலாம் (அதாவது சொந்தமா செஞ்ச project'ஆ இருந்தால் :))

அதாவது அவுங்க கேள்வி கேக்கறதுக்கு முன்னாடி, எனக்கு இது தெரியுங்கற மாதிரி பில்ட் அப் குடுத்தா , உனக்கு என்ன தெரியும்னு அவங்களுக்கு சோதிக்க தோனும் அதனால வேற எதுலேயும் கேள்வி கேட்க மாட்டாங்க.

Friday, October 12, 2007

சாப்ட்வேர் இஞ்ஜினியர் ஆகலாம் வாங்க-3 (மீள்பதிவு)

நாங்க பெங்களூர் வந்தவுடன் புரிந்து கொண்ட விஷயம் நம்மைத்தவிர (தமிழர்களை) எல்லாரும் நல்லா இங்கிலீஸ் பேசுறானுங்க (ஆந்திராக்காரர்கள் நம்மைவிட மோசம்). நம்ம ஊர் பொண்ணுங்களும் பட்டையைக் கிளப்புறாங்க. (இதுக்கு தான் கடலை போடும் போது இங்கிலீஸ்ல பேசறாங்கனு புரிஞ்சிது).

எங்க கூட வந்த ஒருத்தனுக்கு இங்கிலீஸ்ல பேசனா வேலை கிடைத்துவிடும்னு நம்பிக்கை. நம்ம முதல் ரவுண்ட் கிளியர் பண்ணாதான இண்டர்வியூ. அதுக்கு முதல்ல தயார் பண்ணுவோம்னு நான் சொன்னன். அவன் என் பேச்சைக் கேக்காம "Call Center Training"ல 5000 குடுத்து சேர்ந்தான்.

முதல் வாரம் அவர்கள் எடுத்தது Basic Grammer (Tense, Verb, Noun, Adjective...). நம்ம எல்லாம் அதை எட்டாவதுல படித்து இருப்போம். இரண்டாவது வாரம் ஒரு தலைப்பை கொடுத்து 10 நிமிடம் பேச சொன்னார்கள். மூன்றாவது வாரம் GD.கடைசி வாரம் திடீரென்று தலைப்பை கொடுத்து பேச சொல்வார்கள்.இந்த Trainingக்கு எதற்கு 5000?

இதை நாங்களே ரூம்ல செய்யலாம்னு யோசிச்சி பண்ண ஆரம்பித்தோம்.
முடிந்தவரை ஒருவருக்கொருவர் இங்கிலீஸ்லயே பேசிக் கொண்டோம் (இது பயங்கர ஜோக்காக இருக்கும்). தினமும் ஒருவர் மற்றவர்களுக்கு தலைப்பை குடுத்து பேச ஆரம்பித்தோம்.முதலில் மிகவும் சுலபமான தலைப்பை குடுத்துக் கொண்டோம். பிறகு ஒருவனுக்கு நான் சுலபமான தலைப்பு என்று குடுத்தது அவனுக்கு கடினமாக தோன்ற பதிலுக்கு அவன் அடுத்தவனுக்கு கடினமான தலைப்பை குடுக்க... நல்லா சூடு பிடிக்க ஆரம்பித்தது.

கண்ணாடியைப் பார்த்து பேசிப்பழகுவது என் நண்பன் ஒருவன் சொன்ன அறிவுரை. அது எங்கள் அனைவருக்கும் பயன்பட்டது. 2 மாசத்துல எங்களுக்கே நம்பிக்கை வர ஆரம்பித்தது.

நான் சந்தித்த நபர்களில் பெரும்பாலும் எங்களை போலவே ஆங்கிலம் பேச தயங்குபவர்கள் அதிகம். அவர்களுக்கு நான் சொன்னதெல்லாம் இதுதான். ஆங்கிலம் என்பது நம் தாய் மொழியல்ல. அது நம் அறிவின் அளவுகோலும் அல்ல. அதில் நாம் பண்டிதர்களாக வேண்டிய தேவையுமில்லை. ஓரளவிற்கு திக்காமல் திணராமல் நாம் சொல்ல நினைத்ததை சொன்னாலே போதும்.

தினமும் "The Hindu" editorial page சத்தம்போட்டு படிக்கவும். தினமும் குறைந்தது 1-2 மணி நேரம் ஆங்கில செய்தித்தாள் படிக்கவும், GD அல்லது தலைப்பைக் கொடுத்துப் பேச பயன்படுத்திக் கொள்ளலாம். தெரியாத வார்த்தைகளை எழுதி வைத்துக்கொண்டு அதை எப்படியும் தினமும் பயன்படுத்தவும்.

பேசுவதற்கு ஆள் இல்லை என்றால் Airtel/Hutch customer careக்கு போன் செய்து பேசவும். என் பக்கத்து ரூம்ல இருப்பவன் இதை தான் செய்வான். அவனுடைய கேள்விகள் எதுலயும் logic இருக்காது. இருந்தாலும் அவன் தயங்காமல் முப்பது நிமிடம் பேசுவான். (eg. Is Airtel better than Hutch, Y there is no signal in Electronic City?, which is the better plan in Airtel....)

யார் கிண்டல் செய்தாலும் வருத்தப்படாதீர்கள். கிண்டல் செய்ற எந்த நாயும் சுண்டல் கூட வாங்கி தரமாட்டானுங்கனு மனதிற்குள் சொல்லிக்கொள்ளவும் :-).

தயவு செய்து பணத்தை "Call Center training"க்கு குடுத்து வீணாக்காதீர்கள். எந்த மொழியையும் நமக்குள் யாரும் திணிக்க முடியாது, பழக பழக தானாக வந்துவிடும்...

தொடரும்....

Wednesday, October 10, 2007

சாப்ட்வேர் இஞ்ஜினியர் ஆகலாம் வாங்க-2 (மீள்பதிவு)

இப்ப நான் சொல்ல போறது, காலேஜ் முடித்து வேலை தேடுபவர்களுக்கு. (நான் சொல்வது எல்லாம் average மற்றும் Below average மாணவர்களுக்கு. புத்திசாலி மாணவர்களுக்கு சொல்லி தரும் அளவுக்கு என்னிடம் சரக்கு இல்லை)

நீங்க எந்த இஞ்ஜினியரிங் (even MCA/ MSc) வேண்டுமென்றாலும் படித்திருக்கலாம். கம்ப்யூட்டர் இஞ்ஜினியர்களுக்கு மட்டும் தான் Software field என்று நினைக்காதீர்கள்.

எனக்கு மேனாஜராக இருந்தவர்கள் மெக்கானிக்கல் மற்றும் சிவில் படித்தவர்களே. கம்ப்யூட்டர் படித்தவர்களுக்கு கொஞ்சம் ஈஸியாக இருக்கலாம். ஆனால் யார் வேண்டுமென்றாலும் கம்ப்யூட்டர் கற்றுக்கொள்ளலாம். அதற்கு தேவையான ஒன்று ஈடுபாடு மட்டுமே.

நீங்க Fresherஆக வேலை தேடுபவர்கள் என்றால் உங்களிடம் இந்த புத்தகங்கள் இருப்பது அவசியம்.
1) Quantitative Aptitude by R.S. Aggarwal
2) Dictionary (even u can have the E-copy, its OK)
3) Let Us C
4) Pointers in C

இதை எப்படி படிப்பது என்பது பின்னால் சொல்கிறேன். இப்ப எங்க கதைய சொல்றேன்.

நம்ம பசங்களுக்கு எல்லாம் (என்னையும் சேர்த்து) இங்கிலிபிஸ் அவ்வளவு நல்லா பேச வராது. காரணம் காலேஜ்ல நாமாலும் இங்கிலிபிஸ்ல பேச மாட்டோம். பேசறவனையும் விட மாட்டோம். ஏன்னா காலேஜ்ல படிக்கும் நம்மளைப் பொருத்தவரை

இங்கிலீஸில் பேசவது ஒரு பாவச்செயல்.
இங்கிலீஸில் பேசவது ஒரு பெருங்குற்றம்.
இங்கிலீஸில் பேசவது ஒரு மனிதத்தன்மையற்ற செயல்.

கடலை போடுபவர்கள் மட்டும் தான் இங்கிலீஸில் பேசுவார்கள். நம்மல மாதிரி ஆளுங்க எல்லாம் காலேஜ்க்கு வந்தாலே பெரிய விஷயம். அதுல போயி இங்கிலீஸ்ல பேசிட்டாலும் (இதுக்கெல்லாம் பின்னாடி அனுபவித்தோம்).
ஆனால் எங்களை மாதிரி கூட்டம் தான் எல்லா காலேஜ்லயும் அதிகம்.
Cosmopoliton cityல படித்த நாங்களே இப்படினா (சும்மா build-up :-)), மத்த ஊர்ல படித்தவர்களின் நிலைமை இன்னும் மோசம்.

எதுவுமே தெரியலனாலும் Software Industryக்கு நல்லா இங்கிலீஸ் பேச தெரிஞ்சா பொதும். வேலையும் வாங்கிடலாம், வாழ்க்கையும் ஓட்டிடலாம். ஆனால் நமக்கு அங்க தான் தகராறு. Linked List Programகூட 15 நிமிஷத்துல போட்டுடுவன். ஆனால் 15 நிமிஷம் தொடர்ந்து இங்கிலீஸ் பேசனும்னா??? ஆண்டவா ஏன் இப்படி சோதிக்கிறனு தோணும்!!!

ஆனால் நாங்களும் இங்கிலிஸ்ல பேசி வேலை வாங்கனோம். அதுக்கு நாங்க நிறையா கஷ்டப்பட்டோம். நாங்க என்ன செய்தோம்.....

----தொடரும்

Friday, October 05, 2007

சாப்ட்வேர் இஞ்ஜினியர் ஆகலாம் வாங்க-1 (மீள்பதிவு)

இந்த தொடர் மூலம் சாப்ட்வேட் இண்ட்ஸ்ட்ரில வேலை தேடுவது எப்படினு எனக்கு தெரிஞ்ச அளவுக்கு எழுதலாம்னு இருக்கிறேன்.
ஆங்கிலம் அதிகமா பயன்படுத்துவேன். தமிழ் கூறும் நல்லுலகம் என்னை மன்னிக்குமாக.

சாப்ட்வேர் இண்டஸ்ட்ரில வேலை வாங்குவதற்கு கடின உழைப்பைவிட புத்திசாலித்தனமான அணுகுமுறையே போதும். (We need to do Smart Work, no need for Hard work). புத்திசாலித்தனமான அணுகுமுறைக்கு புத்திசாலியா இருக்கனும்னு அவசியமில்லை :-).

சில தவறான புரிதல்கள்: (இதெல்லாம் நாங்க படிக்கும் போது நினைத்துக் கொண்டிருந்தது)
1) இண்டஸ்ட்ரில புதுசா வர டெக்னாலஜி எல்லாம் தெரிஞ்சாதான் வேலை கிடைக்கும்.

2) ஜாவா தெரிஞ்சா தான் வேலை வாங்கலாம்.

3) Resume அதிக பக்கம் இருக்கணும். Area of Interest நிறைய இருக்கணும்.

4) Quants, analytical, Verbal எல்லாம் GRE, GMAT, CAT படிப்பவர்களுக்கு தான்.

5) Shakuntala Devi Puzzles படிச்சா போதும் இன்போஸிஸ்ல வேலைக்கு சேர்ந்துடலாம்.

6) முக்கியமான ஒன்று: பெங்களூர் போன சுலபமா வேலை வாங்கிடலாம். சென்னைல openings கம்மி.

7) அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்குதான் வேலை சுலபமா கிடைக்கும்.

8) தினமும் எல்லா companyக்கும் போய் Resume கொடுக்க வேண்டும்.
(இன்னும் நிறைய இருந்தது. எல்லாம் மறந்து போச்சு. ஞாபகம் இருப்பவர்கள் சொன்னா நல்லா இருக்கும்)

இது எல்லாம் முட்டாள்தனம்னு வேலை தேடும்போது தான் தெரிந்தது.

நான் BE முடித்தது 2003ல். அந்த வருடம் கோவைல PSG, CIT, GCT தவிற மத்த காலேஜ்ல எல்லாம் Campus Placement ரொம்ப கம்மி. சொல்லப் போனால் எங்க காலேஜ்ல எல்லாம் Placementஏ இல்லை. சரி வேலை தேடி எங்கு போகலாம்னு யோசிக்கும் போது சென்னை அல்லது பெங்களூர்னு முடிவு பண்ணோம்.
பெங்களூர்ல தான் சாப்ட்வேட் இண்ட்ஸ்ட்ரிஸ் அதிகம் இருக்கு, அதானால அங்கயே போகலாம்னு முடிவு செய்து அங்கே சென்றோம்.

அந்த நாள்ல Openings கம்மியா இருந்ததால ஒரு சிலர் எல்லாம் வேலை தேடாம சொந்த ஊரிலே விவசாயம் மற்றும் சொந்த பிஸினஸ் பார்க்க சென்று விட்டனர்.

மொதல்ல போன எங்களுக்கு வேலை கிடைக்க 6-10 மாசமானது. அதற்கு பிறகு எல்லா companyயும் போட்டிப் போட்டுக் கொண்டு ஆள் எடுக்க ஆரம்பித்தன.
ஊருக்கு போனவர்கள் எல்லாம் விஷயம் தெரிந்து பெங்களூர் வந்தனர்.
எங்க ரூம் வேடந்தாங்கல் மாதிரி, வேலைத் தேடி வருபவர்களுக்கு வேலை கிடைத்தவுடன் அடுத்த batch வரும் (பொதுவாக வேலை கிடைப்பவர்கள் hyderabad, Noida, Chennai, மைசூர் சென்று விடுவார்கள்) . எப்பொதும் வேலை தேடி வருபவர்கள் ஒரு 3-5 பேர் இருப்பார்கள்.

நான் பெங்களூர்ல இருந்த வரையில் 20-30 பேருக்கு மேல் எங்க ரூம்ல தங்கி வேலை தேடி நல்ல பணியில் சேர்ந்திருக்கிறார்கள். இந்த அனுபவத்தை வைத்து தான் இந்த தொடரை எழுதுகிறேன். இதுல எனக்கு தெரிந்த வரையில் practicalலாக எழுதுகிறேன்.

Thursday, September 27, 2007

முட்டாப்பய

"சிவா நேத்து ஈவனிங் திடீர்னு அம்மாக்கு உடம்பு சரியில்லை. அதான் நீ அவார்ட் வாங்கும் போது வர முடியல. எங்க அந்த அவார்டை கொஞ்சம் காட்டு". ஆர்வமாக வாங்கி பார்த்தாள் நித்யா.

அதை கொடுத்துவிட்டு எதை பற்றியும் சிந்திக்காமல் தன் கணினியில் முழுகினான் சிவா.

Most Valuable Person Of the Company பொன்னெழுத்துக்களில் மின்னி கொண்டிருந்தது.

"ஏய் சொல்ல மறந்துட்டேன். Congrats." சொல்லிவிட்டு அவனிடமிருந்து எந்த பதிலும் வராததால் ஏமாற்றமாக தன் இடத்தில் சென்று அமர்ந்தாள் நித்யா.

"Congrats சொன்னா ஒரு தேங்க்ஸ் கூட சொல்ல தெரியல. இவனுக்கெல்லாம் ஒரு அவார்ட்" மனதிற்குள் நினைத்து கொண்டாள்.

ஒரு மணி நேரத்திற்கு பிறகு மேனஜர் சிவாவை கான்ஃபரன்ஸ் ரூமிற்கு அழைத்து சென்றார்.

"சிவா, நீ டெவலப் பண்ண டூல் இனிமே கம்பெனில இருக்கற எல்லாருக்கும் பயன்பட போகுது. உனக்கு இங்க நல்ல ஸ்கோப் இருக்கு"

"தேங்க்ஸ் சரவ்"

"ஆனா நீ டீம்ல யார்கிட்டயும் சரியா பேச மாட்றனு எல்லாரும் ஃபீல் பண்றாங்க. நானும் நீ டீம்ல மிங்கிலாகி பார்த்ததேயில்லை"

" "

"நீ ப்ரில்லியண்ட்தான். ஆனா இந்த மாதிரி கம்பெனில ப்ரில்லியண்டா இருக்கறதைவிட நல்ல டீம் வொர்க்கரா இருக்கனும். இது உன் கெரியரை
கெடுத்துடக்கூடாதுனு தான் உன்னை தனியா கூப்பிட்டு சொல்றேன். உனக்கு ஏதாவது உதவி வேணும்னா என்கிட்ட சொல்லு. ஐ வில் ட்ரை டு கெட் இட் ரிசால்வ்ட்"

" "

"நீ புத்திசாலியா இருக்கறதால திமிரா இருக்கனு எல்லாரும் நினைக்கிறாங்க"

"அப்படியெல்லாம் இல்லை சரவ்"

"எல்லாம் நீ நடந்துக்கறதுல தான் இருக்கு. சரி. இனிமே டீம்ல எல்லார்கிட்டயும் சகஜமா பழகு. அப்பறமா பேசலாம்"

வெளியே வந்தவுடன் தன் இடத்திற்கு சென்று அமைதியாக வேலையை செய்ய துவங்கினான்.

9 மணி பஸ் பிடித்து கொரமங்களா சென்று சேரும் போது மணி 11 ஆகியிருந்தது. பெங்களூரை தவிர வேறு எந்த ஊரிலும் 15 கிலோமிட்டர்

செல்ல இரண்டு மணி நேரமாகாது என்று நினைத்து கொண்டு வீட்டில் நுழைந்தான்.

அந்த ஒரு படுக்கையறை மட்டும் கொண்ட வீட்டில் சிவா தனியே தங்கியிருந்தான். பெங்களூரிலிருக்கும் கட்டட பொறியாளர்களுக்கு ஜன்னல், ஷெல்ப் எல்லாம் என்ன என்றே தெரியாது என்பதை அந்த வீடும் நிருபித்திருந்தது. உடை மாற்றிவிட்டு படுக்கைக்கு சென்றான் சிவா.

அவனுக்கு அவன் மேனஜரிடம் பேசியதே நினைவில் ஊசலாடிக் கொண்டிருந்தது.

"நீ புத்திசாலியா இருக்கறதால திமிரா இருக்கனு எல்லாரும் நினைக்கிறாங்க"

"நீ புத்திசாலியா இருக்கறதால...நீ புத்திசாலியா இருக்கறதால"

"ஏன்டா உன் மண்டைல இருக்கறது என்ன மூளையா இல்லை களி மண்ணா? ஒரு தடவையாது பாஸாகறயா? எப்படிடா நீ ஒம்போதாம் க்ளாஸ் வரைக்கும் பாஸான?"

அமைதியாக நின்று கொண்டிருந்தான் சிவா.

"சரி கைய நீட்டு"

கையை நீட்டினான். கணக்கு வாத்தியார் சுப்பிரமணி அடித்த அடியில் அந்த பிரம்பு உடைந்து போனது.

"டேய் கோபாலு, போய் ஸ்டாஃப் ரூம்ல இன்னொரு பெரம்பு இருக்கும் அதை எடுத்துட்டு வா. இதுக்கெல்லாம் இவ்வளவு அடி வாங்கனாலும் உறைக்காது. நம்ம கைதான் வலிக்கும்"

கோபால் வேகமாக ஓடி போய் புது பிரம்பை கொண்டு வந்தான்.

ஃபெயிலானவர்கள் ஒவ்வொருவராக அடி வாங்கி கொண்டிருந்தனர்.

"என்னமா கவிதா. நல்லா படிக்கிற பொண்ணு நீ. நீ போய் ஃபெயிலாயிருக்க. என்ன ஆச்சு?"

அமைதியாக தலையை குனிந்த படி நின்றிருந்தாள் கவிதா.

"சரி கையை நீட்டு. இந்த தடவை அடி வாங்கினா தான் அடுத்த முறை நல்லா படிப்ப"

அவள் பயந்து கொண்டே கையை நீட்டினாள்.

"வர வர மாமியா கழுத போல ஆனாளாம். என்ன?" சொல்லி கொண்டே அடித்தார்.

" "

"வர வர மாமியா கழுத போல ஆனாளாம்"

அவள் அழுது கொண்டே அமர்ந்தாள்.

அடுத்த நாள்.

ஆங்கில வகுப்பு

"மெமரி போயம்ஸ் எல்லாம் மூணு தடவை எழுதிட்டு வர சொன்னேனே. எல்லாம் நோட் எடுத்து வைங்க.
எழுதாதவங்க ஒழுங்கு மரியாதையா வெளிய வந்து முட்டி போட்டு எழுதிட்டு உள்ள வாங்க"

முதல் ஆளாக சிவா எழுந்து சென்றான்.

"அதான நீ எல்லாம் எங்க உருப்பட போற. உங்க அப்பா கூட கட்சில சேர்ந்துடு. இந்த பள்ளிக்கூடமாவது உருப்படும்"

முறைத்து கொண்டே சென்றான் சிவா.

"என்னடா முறைக்கிற? ஒழுங்கா போய் முட்டி போடு"

வகுப்பிலிருந்து ஒரு பதினைந்து மாணவர்கள் எழுந்து சென்றனர். கவிதா எழுந்து செல்வதை பார்த்தவுடன் ஆசிரியருக்கு அதிர்ச்சியாக இருந்தது.

"ஏம்மா கவிதா, நேத்து நான் மெமரி போயம்ஸ் எழுதிட்டு வர சொன்னேன் தானே?"

"ஆமா சார்" மெல்லிய குரலில் சொன்னாள் கவிதா.

"அப்ப ஏன் எழுதிட்டு வரல? உடம்பு ஏதாவது சரியில்லையா?"

அமைதியாக இருந்தாள்.

"ஏம்மா ஃபர்ஸ்ட் ரேங் எடுக்கற பொண்ணு. நீயே இப்படி இருக்கலாமா? சரி எல்லாரும் உள்ள போய் உக்காருங்க. நாளைக்கு எழுதிட்டு வாங்க"

அனைவரும் உள்ளே சென்று அமர்ந்தனர். மதிய உணவு வேளையின் போது அழுது கொண்டிருந்தாள் கவிதா. சிவாவிற்கு கவிதா அழுவதை பார்த்து பிடிக்காமல் நேராக அவளிடம் சென்றான்.

"ஏய் இப்ப என்ன ஆச்சுனு இப்படி அழுவற? அவர் தான் முட்டி போட வேணாம்னு சொல்லிட்டார் இல்லை"

"நான் ஒண்ணும் அதுக்கு அழுவல"

"பின்ன? நேத்து அடி வாங்கனதுக்கா? எங்க கையை காட்டு"

அவள் கை சிவந்திருந்தது.

"ஏன் இப்பல்லாம் ஒழுங்கா படிக்க மாட்ற? நல்லா தானே படிச்சிட்டு இருந்த? அத்தை ஏதாவது வேலை செய்ய சொல்லி திட்றாங்களா? இல்லை அந்த கிழவி ஏதாவது சொல்லுதா?"

அவன் கிழவி என்று குறிப்பிட்டது அவன் பாட்டியைத்தான். கவிதா சிவாவின் தாய் மாமன் மகள்.

அவனை சுட்டெரிப்பது போல முறைத்தாள்.

"சரி முறைக்காத. ஒழுங்கா சொல்லு. ஃபெயிலாயிடுவனு சொல்லியிருந்தா, அந்த பேப்பர் கட்டையே சுட்டுட்டு வந்திருப்பேன். நீதான் சொல்லாம விட்டுட்ட. நேத்து உன்னை அடிச்சப்பவே அந்தாள ரெண்டுல ஒண்ணு பார்த்திருப்பேன். அப்பறம் விஷயம் அப்பாக்கிட்ட போயிடும்னு தான் விட்டுட்டேன்"

அவள் அழுது கொண்டே இருந்தாள்.

"இப்ப சொல்றயா இல்லையா?"

"என்னைவிட நீ எத்தனை வருஷம் பெரியவன்?"

"ரெண்டு வருஷம். ஏன் இப்ப அதுக்கு என்ன?"

"ஒழுங்கா படிக்காம நீ ஏற்கனவே ரெண்டு வருஷம் பெயிலாயிட்ட. இப்ப நீ படிக்கற லட்சணத்துக்கு எப்படியும் பாஸாக மாட்ட. நான் நல்லா படிச்சா எங்க அப்பா எனக்கு படிச்ச மாப்பிள்ளையா பார்த்து கட்டி கொடுத்துடுவாறோனு பயமா இருக்கு. அதான் நானும் படிக்காம ஃபெயிலாகலாம்னு முடிவு பண்ணிட்டேன்"

"எனக்கு கட்டி கொடுக்காமவிட்டுடுவாறா என் மாமன். அவ்வளவு தான். உன்னைய தூக்கிட்டு போயாவது கட்டிக்க மாட்டேன்"

"தூக்குவ தூக்குவ" கண்ணை துடைத்து கொண்டே கேலியாக அவள் சொன்னது அவனை என்னமோ பண்ணியது.

"பார்த்துக்கிட்டே இரு. உன்னைய மட்டும் கட்டிகொடுக்க மாட்டேனு சொன்னா எங்க ஆளுங்களோட வீடு புகுறனா இல்லையானு"

"இவ்வளவு பண்றதுக்கு ஒழுங்கா படிச்சி பாஸாகறனு சொல்லலாம் இல்லை"

"ஏய். இதுக்கெல்லாம் படிக்க முடியாது. நான் எவ்வளவு ஈஸியா சொல்லிட்டு இருக்கேன். நீ என்னுமோ கஷ்டப்பட்டு படினு சொல்ற. அதெல்லாம் ஆகற விஷயமா? இந்த பழப்பசங்க தான் படிப்பானுங்க. நாங்க எல்லாம் வீரனுங்க. சூப்பர் ஸ்டார் மாதிரி படிக்காத மேதைங்க. புரியுதா?"

"என்னுமோ பண்ணு. ஆனா நீ பாஸாகற வரைக்கும் நானும் பாஸாக மாட்டேன். நீ வாங்குற அடியை நானும் வாங்கனும். இப்பல இருந்தே நான் உன் பொண்டாட்டியா பழகிக்கிறேன்."

"ஏய். நீ அடி வாங்கறத பார்த்துட்டு என்னால இருக்க முடியாது. உன்னை எந்த வாத்தியாவது அடிச்சானா அவனுக்கு அன்னைக்கு பூச தான். நீயே முடிவு பண்ணிக்கோ"

"இங்க பாரு, நான் பர்ஸ்ட் ரேங் எடுக்கும் போது செகண்ட் ரேங் எடுக்கற பையனோட பேரை என் பேர் பின்னாடி சொல்றாங்க. எனக்கு அது பிடிக்கல. நீ எப்படியும் எனக்கு அடுத்தோ எனக்கு முன்னாடியோ வர போறதில்லை. அதான் உன் இடத்துக்கு நான் வரேன். ஆனா அடி வாங்கும் போது தான் உயிர் போகற மாதிரி வலிக்குது. உனக்கும் அப்படித்தானே வலிக்கும்னு நினைக்கும்போது உன் வலியை அனுபவிக்கும் போது மனசுக்கு சந்தோஷமா இருக்கு"

அவன் எதுவும் பேசாமல் அவனிடத்திற்கு போய் அமர்ந்தான்.

அடுத்த இரண்டு நாட்களில் கவிதா 4 முறை அடி வாங்கினாள். இரண்டு முறை வகுப்பிற்கு வெளியே முட்டி போட்டு கொண்டிருந்தாள்.

அதன் பிறகு சிவாவின் நடத்தையில் மாற்றங்கள் தெரிந்தன. அடுத்து நடந்த மாத தேர்வில் சிவா பாஸ் மார்க் எடுத்திருந்தான். ஏதோ சூழ்ச்சி நடந்திருக்குமென ஆசிரியர்களும், சில மாணவர்களும் நினைத்து கொண்டனர்.

ஒரு ஞாயிறு மாலை அவன் கணக்கு ஆசிரியர் சுப்பிரமணியம் வீட்டிற்கு சென்றான்.

"என்னப்பா? யாரு வேணும்"

"இது கணக்கு வாதியார் சுப்பிரமணியம் வீடு தானே?"

"ஆமாம். நீ யாருப்பா?"

"நான் அவர் ஸ்டுடண்ட் மேடம். சார் இருக்காரா?"

"இருக்காருப்பா. உள்ள வா.
என்னங்க இங்க உங்களை பார்க்க உங்க ஸ்டுடண்ட் யாரோ வந்திருக்காங்க பாருங்க" சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.

"வாப்பா. என்ன விஷயம்? வீடு தேடி வந்திருக்க?"

"சார் உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்"

"சரி உள்ளே வா". தனியாக அவனை ஒரு அறைக்குள் அழைத்து சென்று அவனை அவருக்கு எதிரில் இருந்த நாற்காலியில் உட்கார வைத்தார்.

"சொல்லுப்பா. என்ன பிரச்சனை?"

"சார். எங்க அப்பா கட்சி, அரசியல்னு இருந்துட்டாரு. எனக்கும் சின்ன வயசுல இருந்து யாரும் படிக்கனும்னு பெருசா சொன்னதில்லை. நான் ஃபெயிலானப்ப கூட அதை கேட்டுட்டு அங்க இருந்த எல்லாரும், எந்த வாத்திடா உன்னை ஃபெயிலாக்கனது. சொல்லு. அடிச்சி பாஸாக்க வைச்சிடறோம்னு தான் சொன்னாங்க. தவிர, என்னை படினு யாரும் சொன்னதில்லை. எனக்கு படிக்கனும்னு பெருசா தோனனதுமில்லை. ஆனா இப்ப திடீர்னு படிக்கனும்னு ஆசை வந்துடுச்சி சார். நானும் எவ்வளவோ கஷ்டப்பட்டு போன பரிட்சைக்கு படிச்சேன், ஆனா என்னால பாஸ் மார்க் மேல வாங்க முடியல சார். படிச்சது எல்லாம் பரிட்சைல மறந்து போகுது சார். எனக்கும் கணக்குல 100 மார்க் வாங்கனும், க்ளாஸ் ஃபர்ஸ்ட் வாங்கனும்னு ஆசையா இருக்கு சார். நீங்க தான் உதவி செய்யனும்"

அவனை ஆச்சரியமாக பார்த்தார் சுப்பிரமணியம்.

"நீ இப்படி பேசும் போது ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா. வாழ்க்கைல எந்த ஒரு விஷயத்துல வெற்றி பெறதுக்கு இந்த விஷயங்கள் தான் முக்கியம். அது ஆர்வம், தன்னம்பிக்கை, கடின உழைப்பு, விடா முயற்சி. இது இருந்தா தானா ஜெயிக்கலாம். சரி, போன வருஷம் நடந்த உலக கோப்பைல பாகிஸ்தானோட அதிக ரன் அடிச்சது யாரு?"

"சித்து சார்... 93 ரன் அடிச்சாரு"

"ரஜினியை ராபின் ஹூட்னு எந்த படத்துல சொல்லுவாங்க?"

"நான் சிகப்பு மனிதன் சார்"

"பாரு. இதெல்லாம் உனக்கு எப்படி நியாபகமிருக்கு?"

" "

"எல்லாத்துக்கும் ஆர்வம் தான் காரணம். அப்பறம் அதை நினைச்சிட்டே கொஞ்ச நேரம் இருக்கறது. சித்து 93 எடுத்து அவுட் ஆனப்ப இன்னும் 7 அடிச்சிருக்கலாமேனு கொஞ்ச நேரம் முழுக்க மனசுல இருக்கும். ரஜினி படமும் அப்படிதான். அப்படி யாராவது இருந்து இந்த சமூகத்தை திருத்தினா எப்படி இருக்கும்னு இருக்கும். இப்படி ஒரு விஷயத்தை தெரிஞ்சிக்கிட்டதுக்கப்பறம் அதை பத்தி மனசு கொஞ்ச நேரம் சிந்திச்சா அது அவ்வளவு சீக்கிரம் மறக்காது.

அப்பறம் படிக்கறதை மறக்க கூடாதுனா மூணு "R" முக்கியம். "Read", "Recall" "Revise". படிக்கும் போது வேற எதை பத்தியும் சிந்திக்காம படிக்கனும். அது தான் ரீட். படிச்சதை கொஞ்ச நேரம் கழிச்சி திரும்ப நினைவுக்கு கொண்டு வர பார்க்கனும். அது தான் ரீ கால். அப்பறம் படிச்சதை திரும்ப திரும்ப படிக்கனும். ஏற்கனவே படிச்சிட்டோமேனு நினைக்க கூடாது. அது தான் ரிவைஸ். நானே ஒவ்வொரு வகுப்புக்கும் போறதுக்கு முன்னாடி ரிவைஸ் பண்ணிட்டு போவேன்"

அவர் பேசுவதை ஆர்வமாக அவன் கேட்டு கொண்டிருந்தான். நன்றாக படிக்க வேண்டும் என்ற வெறி அவன் கண்களில் தெரிந்ததை அவர் கவனித்தார். இவன் இவ்வளவு மாறியதற்கு காரணத்தை அவர் அறியவில்லை.

சிவாவின் நடத்தையில் பெரும் மாறுதல் தெரிய ஆரம்பித்தது. அவன் கண் எப்பொழுதும் சிவந்தேயிருந்தது. ஒவ்வொரு வகுப்பிற்கும் முன் அவன் முகம் கழுவி வந்தான். அவன் தண்ணீரை எடுத்து முகத்தில் அடித்து கொள்வதை பார்த்த நண்பர்களுக்கு அவன் ராத்திரி அதிகமாக தூங்குவதில்லை என்பது தெளிவாக தெரிந்தது. அடுத்து நடந்த ஒவ்வொரு தேர்விலும் அவன் படிப்படியாக முன்னேறி கொண்டே வந்தான்.

கவிதாவிற்கு ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. அவளும் அவனுடன் போட்டி போட்டு படிக்க ஆரம்பித்தாள். அவளை சில பாடங்களில் அவன் முந்தியதும், அனைவருக்கும் முன் பதில் சொல்லியதும் அவளுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. அடிக்கடி அவன் வீட்டுக்கு சென்று அத்தையிடம் அவன் படிக்க ஆரம்பித்ததை சொல்லி சந்தோஷப்பட்டாள். அவன் அம்மாவிற்கும் மகிழ்ச்சியாக இருந்தது.

"எங்க இவனும் இவுங்க அப்பா மாதிரியே ஆயிடுவானோனு பயந்துட்டு இருந்தேன். நல்ல வேளைம்மா இவன் படிக்க ஆரம்பிச்சிட்டான். இந்த வருஷம் மட்டும் இவன் பாசாயிட்டா நம்ம கொலதெய்வத்துக்கு கடாவெட்டி பொங்க வைக்கறேனு வேண்டிக்கிட்டிருக்கேன்"

"அத்தை அவர் படிக்கறத பார்த்தா ஸ்டேட் ரேங் எடுத்துடுவாரோனு எனக்கு ஆச்சரியமா இருக்கு. நீங்க என்னனா பாசானா போதும்னு வேண்டிக்கிட்டிருக்கீங்க"

"என்னுமோ நல்லா படிச்சா சரிதான்"

ஒரு வழியாக பத்தாவது தேர்வை நல்ல படியாக எழுதி முடித்தனர் சிவாவும், கவிதாவும். சிவா பெரும்பாலும் கணக்கு வாத்தியார் சுப்பிரமணி வீட்டிலே தங்கி படித்தான். கணக்கில் கண்டிப்பாக நூத்துக்கு நூறு வாங்குவான் என நம்பினார் சுப்பிரமணி.

"சார் தந்தி வந்திருக்கு" போஸ்ட்மேன் சொல்லியதை கேட்டதும் கவிதாவும் அவள் அம்மாவும் பயந்தே விட்டனர்.

கவிதாவின் அப்பா தந்தியை வாங்கி பார்த்தார். மிகவும் சந்தோஷமாக கவிதாவை அழைத்தார்.

"கவிதா இந்த நம்பர் நம்ம சிவாதானு கொஞ்சம் சொல்லு 973654673"

"ஆமாம்பா. மாமாது தான். ஏன்ப்பா? என்னாச்சு?"

"இது உன் நம்பர் தானே 973654662"

"ஆமாம்பா. ஏன்? சீக்கிரம் சொல்லுங்கப்பா"

"நீ 482 மார்க் வாங்கியிருக்கம்மா. நம்ம சிவா 481 மார்க் வாங்கியிருக்கான். அனேகமா டிஸ்ட்ரிக்ட்ல முதல் மார்க் நீ தானு நினைக்கிறேன். என் ஃபிரெண்ட் மெட்ராஸ்ல இருந்து பார்த்து தந்தியடிச்சிருக்கான். இரு நான் போய் சிவாட்ட சொல்லிட்டு வந்திடறேன். என் தங்கச்சி கேட்டா ரொம்ப சந்தோஷப்படுவா"

கவிதாவால் சந்தோஷம் தாங்க முடியவில்லை. அவள் பெயருக்கு பின்னால் அவன் பெயர் திருமண பத்திரிக்கைக்கு முன் தினசரி பத்திரிக்கையில் வர போவதை நினைத்து சந்தோஷப்பட்டு வானத்தில் பறந்து கொண்டிருந்தாள்.

"அப்பா, அத்தைட்ட நான் போய் சொல்லிட்டு வந்திடறேன்பா. ப்ளீஸ்பா"

மகளின் எண்ணத்தை புரிந்து கொண்டு அவளை சைக்கிளில் அனுப்பி வைத்தார். சந்தோஷமாக சைக்களில் வேகமாக மிதித்து வந்தாள் கவிதா.

................

"டேய் சிவா கடைசியா ஒரு தடவை அவளை பார்த்துட்டு வந்துடுடா. அவ கண்ணு உன்னை தான் தேடுதுனு நினைக்கிறேன்" சிவாவின் அம்மா அழுது கொண்டே சொன்னார்.

மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு வெளியே உணர்ச்சியற்று நின்று கொண்டிருந்தான் சிவா. அனைவரும் எவ்வளவு சொல்லியும் அவன் கடைசி வரை கவிதாவை சென்று பார்க்கவில்லை. அவள் மேல் வண்டியேற்றிவிட்டு சென்ற அந்த கார் டிரைவரை எப்படியும் கண்டுபிடித்து கொல்ல வேண்டும் என்று முடிவு செய்து சில நாட்களில் அதையும் விட்டுவிட்டான்.

..............

"கவிதா உன் பேரை தவிர யார் பேருக்கும் பின்னால என் பேரு வரவிடாம இது வரைக்கும் பார்த்துட்டு இருக்கேன். கவிதா உனக்கு ஒண்ணு தெரியுமா? அந்த பழைய முட்டாள் சிவா சந்தோஷமா இருந்தான் கவிதா"

"ஆண்டவா நான் மறுபடியும் முட்டாளாவே ஆயிடறேன். எனக்கு என் கவிதாவை மட்டும் திருப்பி தா. நான் முட்டாளாவே இருந்துடறேன்... நான் முட்டாளாவே இருந்துடறேன். எனக்கு எந்த அவார்டும் வேண்டாம். கவிதாவை மட்டும் கொடு. ப்ளீஸ்"

வழக்கம் போல் அவன் தலையணை முழுதும் கண்ணீரால் ஈரமாகியிருந்தது...

Friday, August 10, 2007

வேங்கையின் மைந்தன்

இந்த பொன்னியின் செல்வன் படிச்சதுக்கப்பறம் வரலாற்று புதினங்கள் படிக்கறதுல ஆர்வம் ரொம்ப அதிகாமாகி, நிறைய புத்தகம் வாங்கி வெச்சேன். அப்ப பார்த்து ஆன்சைட் வந்துடுச்சி. அதனால எல்லாத்தையும் படிக்க முடியாம ஊர்ல விட்டுட்டு வந்துட்டேன். ஆனா இந்த தடவை போனப்ப ஊர்லயே யவன ராணி படிச்சேன். அப்பறம் இங்க வரும் போது ஜல தீபம், ராஜ முத்திரை, வெற்றி திருநகர், வேங்கையின் மைந்தன் எடுத்துட்டு வந்தேன்.

என்கிட்ட ஒரு கெட்ட பழக்கம் என்னனா இந்த மாதிரி புக் படிக்க ஆரம்பிச்சிட்டா அப்பறம் உலகத்தையே மறந்துடுவேன். யவன ராணி படிச்சி வீட்ல செம தீட்டு வாங்கினேன். "இந்த சாண்டில்யன் எப்ப பாரு பொண்ணுங்களை வர்ணிச்சிக்கிட்டே இருப்பாரு. அதை உன் புள்ளை சாப்பிடாம கூட படிச்சிட்டே இருக்கானு" அப்பா, அம்மாட்ட சொல்லிட்டு இருந்தாரு. என் சோழ திருநாடு ஆபத்திலிருக்கும் போது எப்படிங்க சாப்பிட முடியும், தூங்க முடியும்? நீங்களே சொல்லுங்க. சரி அதை பத்தி இன்னோரு பதிவுல சொல்றேன்.

ரெண்டு நாளைக்கு முன்னாடி சரி ஏதாவது படிக்கலாம்னு பார்க்கும் போது இந்த நாலு புக்ல நம்ம வேங்கையின் மைந்தன் தான் ரொம்ப கவர்ந்திழுத்துச்சி. முக்கியமான காரணம் பொன்னியின் செல்வரோட மகன் தான் இந்த வேங்கையின் மைந்தன். அதனால அதோட தொடர்ச்சி இருக்கானு படிக்க ஆரம்பிச்சேன்.

இது அகிலன் எழுதி சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவல். அதுவோ ஒரு ஆர்வத்த ஏற்படுத்துச்சி. அப்பறம் நம்மோட எவர் கிரின் ஹீரோ, சூப்பர் சூப்பர் ஸ்டார் வந்தியத்தேவன் இருக்காரானு பார்க்கனும்னு ஆசை வேற. என்ன இருந்தாலும் வந்தியத்தேவனை மறக்க முடியல. (கதாநாயகில நம்ம ஃபெவரைட் யவன ராணி/மஞ்சளழகி). சரினு படிக்க ஆரம்பிச்சேன்.

ராத்திரி ஒரு 11 மணிக்கு படிக்க ஆரம்பிச்சிருப்பேன். அப்பறம் 7 மணி நேரம் தூங்கினா போதும்னு ஒரு பன்னிரெண்டு மணிக்கா படுத்துடலாம்னு பார்த்தேன். அது அப்படியே 6 மணி நேரம், 5 மணி நேரம், 4 மணி நேரம்னு வந்து 3 மணிக்கு படுத்தேன். அப்பறம் அடுத்த நாள் ஆபிஸிக்கு லீவ் போட்டு படிக்கலாமானு பார்த்தேன். ஆனா கண்டிப்பா போக வேண்டியதிருந்ததால போயிட்டேன். அவ்வளவு ஆர்வமா இருந்துச்சு கதை.

கல்கி அவர்களோட பொன்னியின் செல்வனளவுக்கு இல்லைனாலும் கண்டிப்பா எந்த இடத்திலும் போர் அடிக்கல. அதுவுமில்லாம நம்ம சாண்டில்யனோட வர்ணனையும் இதுல இல்லை, கதா நாயகன் அதிபுத்திசாலியாவும் இல்லை. அதுவே எனக்கு ரொம்ப பிடிக்க காரணம். கதைனா எனக்கு ஒரு விறுவிறுப்பு இருக்கனும். சும்மா கதாநாயகி எப்படி இருந்தானு 4 பக்கத்துக்கு வர்ணிச்சா நமக்கு பிடிக்காது. அந்த வகைல இதுல ரொம்ப வர்ணனையில்லாதது ஒரு சந்தோஷம். கதை ஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கும் ஒரே விறுவிறுப்பு.

கதையோட துவக்கமே ஒரு விறுவிறுப்பு வந்துடுது. கதாநாயகன் இளங்கோ, நம்ம கொடும்பாளுர் இளவரசர் (வானதி - அடிக்கடி மயக்கம் போட்டு விழுவாங்களே, அவுங்க குடும்பத்துல வந்தவர் தான்). இவரோட வீரமும், காதலும் கலந்து அன்று நடந்த அரசியல் மாற்றங்களை சொல்வது தான் இந்த வேங்கையின் மைந்தன். இதை படிச்சா தமிழனு கண்டிப்பா ஒரு பெருமை வருது. டீம்ல இருக்கற ஹிந்திக்காரவங்ககிட்ட எல்லாம் "டேய் நாங்க எல்லாம் அப்பவே அப்படிடானு சொல்லனும் போல இருந்தது".

கதைல நம்ம ஃபேவரைட் கதாநாயகன் வந்தயத்தேவன் இருக்காரு. இதுலயும் அவர் கிட்டதிட்ட கதாநாயகன் தான். வயசானாலும் அவர் குறும்பு இன்னமும் இருக்கு. அப்பறம் இதுல கவரும் இன்னோரு கதாபாத்திரம் ரோகிணி. அவர் ஈழத்திலிருக்கும் ஒரு சிற்றரசின் இளவரசி. இவர் காதலுக்கும், நாட்டு பற்று/குடும்ப பாசம் இவற்றுக்கு நடுவில் ஊஞ்சலாடும் பாத்திரம். ஆனா ரொம்ப அருமையான பாத்திரம். சில சமயம் காதலால் உருகுவதும், சில சமயம் தன் தம்பி மேல் கொண்ட பாசத்தால் காதலனுடன் சண்டை போடுவதும். பிறகு வருந்துவதும்னு இருப்பாங்க. கதாநாயகனும் அப்படியே.

வரலாற்று புதினம் புடிச்சவங்க கண்டிப்பா இந்த புத்தகம் வாங்கி படிக்கலாம்.

சரி கதைல இருக்கற சில முக்கியமான விஷயங்களை மட்டும் ஹிண்டா கொடுக்கறேன். கண்டிப்பா கதை படிக்க போறோம்னு நினைக்கறவங்க இனிமே படிக்காதீங்க...

ஈழத்திலிருக்கும் பாண்டிய மன்னனுடைய மணிமுடி தமிழகத்திற்கு மீண்டு வருகிறது. பொன்னியின் செல்வரால் முடியாததை வேங்கையின் மைந்தன் சாதிக்கிறார்.

பாண்டியர்களுடன் நடக்கும் போரில் இரு பாண்டிய மன்னர்கள் இறக்கிறார்கள். சுந்தர பாண்டியன் இறுதியில் வந்தியத்தேவரால் கைது செய்யப்படுகிறார்.

சாளுக்கியர்களை வென்று காசி வரை சென்று கங்கையை தமிழகத்திற்கு கொண்டு வருகிறார் வேங்கையின் மைந்தன். கங்கை கொண்ட சோழபுரம் அருமையாக கட்டி முடிக்க படுகிறது.

இறுதியில் கடாரத்தை வென்ற பிறகே மணம் முடிக்கிறார் இளங்கோ. கடாரத்தை ராஜேந்திரர் வென்றதை பத்தி கடல் புறால கூட பேசியிருப்பாங்க.

இளங்கோவுக்கும் நம்ம இளைய பல்லவனுக்கும் (கடல் புறா) ஒரு பெரிய தொடர்பு இருக்கு. க்ளைமாக்ஸ்ல... என்னனு கெஸ் பண்ணிக்கோங்க ;) (ஜினியர் NTR படம் பார்க்கறவங்களும் கண்டு பிடிக்கலாம்)

................

சரி அடுத்த இருக்கற மூணு நாவல்ல எதை படிக்கலாம்னு சொல்லுங்க. இந்த வார இறுதியில படிச்சிடலாம்...

Friday, August 03, 2007

கிரீடம் - முள் கிரீடமா?

நேத்து கப்பிக்கு கொடுத்த வாக்குறுதியை மீற கூடாதுனு படம் பார்க்க ஆரம்பிச்சேன். கடைசி வரைக்கும் பார்த்தேன். அஜித் படம்னாவே ஒரு பயம் தான். அது சிட்டிசன்ல ஏற்பட்டது. இன்னும் இருந்துட்டே இருக்கு. இந்த மாதிரி ஒரு 3-4 படம் நடிச்சா மாறிடும்னு நினைக்கிறேன்.

முதல்ல இந்த கதைல நடிச்சதுக்கு அஜித்தை பாராட்டனும். மலையாளத்துல ஹிட்டான கதைனாலும், வாழ்க்கைல தோக்கற ஒருத்தனா, கமெர்ஷியல் ஹீரோவான அஜித் இதுல நடிச்சது கண்டிப்பா ஒரு ஆச்சர்யம்தான். படத்துல அஜித்துக்கு சமமான பாத்திரம் ராஜ்கிரனுக்கு. பின்னி பெடலுடுத்திருக்கிறார். த்ரிஷா தெலுகு படத்துல நடிச்சி அழகாயிட்டாங்க (நல்லா மேக்கப் போட கத்துக்கிட்டாங்க).

ஆரம்பத்தில் வரும் நகைச்சுவை காட்சிகள் நிஜமாலுமே சிரிக்க வைக்கிறது. சந்தானம் டபுள் மீனிங் ஜோக்ஸ் இல்லாம நடிச்சிருக்கார். யாருமே இல்லாத பஸ் ஸ்டாப்ல கூட்டமா இருக்குனு சொல்லி கூட்டமா இருக்கற ரெஸ்டாரண்டுக்கு கூப்பிட்டு போற சீன் சூப்பர். அதே மாதிரி தண்ணி தோட்டில த்ரிஷா பேசறதும், கீழ இருக்கறவங்க கேக்கறதும் நகைச்சுவை வர வைத்தது.

படத்துல பல இடங்களில் அஜித் நடிப்பில் மிளிர்கிறார். ஒரு சீன்னு சொல்ல முடியாது. பல இடங்களில் அவ்ர் முக பாவனை பல வசனங்களை நமக்கு சொல்லிவிடுகிறது. சில இடங்கள்ல வசனம் இல்லாததே ரொம்ப அருமையா இருந்துச்சு. ராஜ்கிரண் மாதிரி பல அப்பாக்கள் இன்னும் இருக்கத்தான் செய்றாங்க. ஒரு சிலருக்கு அது சிரிப்பை வர வைக்கலாம். ஆனா எனக்கு நினைவு தெரிஞ்சி நான் எங்க ஊர்ல இருந்து தனியா பஸ் ஏறி போற மாதிரி இருந்தா எங்க அப்பாதான் என்னை வந்து பஸ் ஏத்திவிடுவார். பெங்களூர்ல வேலைக்கு போகும் போது கூட வந்து என்னை பஸ் ஏத்திவிட்டு நான் கம்ஃபர்டபுல இருக்கனானு பார்த்து கண்டக்டரிடம் என்னை பத்திரமா இறக்கிவிட சொல்லி, (நான் எலக்ட்ரானிக் சிட்டில இறங்குவேன். தூங்கிட்டே போயிடுவனோனு ஒரு பயம்) தண்ணி பாட்டில், படிக்க ஏதாவது ஒரு புத்தகம் வாங்கி கொடுத்து பஸ் புறப்படும் வரை இருந்துவிட்டு தான் புறப்படுவார். இதுவரை அது மாறவே இல்லை. (இப்ப கூட ஃபிளைட்டுக்கு நான் கீழ இருந்தே உன் ஃபிளைட்ட பாக்க முடியுமானு கேட்டு என்கிட்ட நல்லா வாங்கி கட்டிக்கிட்டார்). சரி திரும்ப படத்துக்கு வருவோம்.

அப்படி ஒரு அப்பாவோ, குடும்பமோ இருக்கறது ஒரு சாதாரணமான விஷயம்தான். திரிஷாக்கு வேற இடத்துல கல்யாணம்னு சொன்னதுக்கப்பறம் அவுங்க கல்யாணத்தை ஒரு சோகப்பாட்டுல காட்டததுக்கு டைரக்டருக்கு ஒரு ஸ்பெஷன் நன்றி. க்ளைமாக்ஸ்ல அஜித் அழுவற சீன்ல பட்டைய கிளப்பியிருக்கார். படத்துல அஜித் வில்லன் கூட்டத்தை கண்டு ஓடுவதும், சண்டைக்கு ஏதாவது ஒரு தடியை பயன்படுத்துவதும் ஓரளவிற்கு இயல்பாக இருப்பதை போலவே பட்டது. தல தள படங்களை பார்ப்பதில்லை போலும்.

நீங்க சினிமா ரசிகரா இருந்தா கண்டிப்பா இந்த படம் பார்க்கலாம். படத்துல பாட்டு எல்லாம் இன்னும் நல்லா வந்திருந்தா இது கண்டிப்பா சூப்பர் ஹிட் ஆகியிருக்கும். எப்படி பார்த்தாலும் இது தலைக்கு முள் கிரீடம் கிடையாது.

Wednesday, July 18, 2007

நடிப்புக் கடவுள்

கைலாயத்தில் ஈசன் ஆழ்ந்த சிந்தனையிலிருக்கிறார்.

பார்வதி: ஸ்வாமி! தாங்கள் ஆழ்ந்த சிந்தனையிலிருப்பதன் காரணத்தை நான் அறிந்து கொள்ளலாமா?

ஈசன்: உமா! உனக்கு தெரியாததில்லை. என் பக்தன் ஈசானபட்டன் ஒரு வாரமாக அன்ன ஆகாரமில்லாமல் காட்டில் எம்மை தேடி கொண்டிருக்கிறான். இன்னும் அவன் அந்த இடத்தை நெருங்கக்கூட இல்லை.

பார்வதி: அவர் கனவில் தோன்றிய தாங்களே சரியான இடத்தை சொல்லியிருந்தால் அவர் இந்நேரம் ஆலயமே கட்ட ஆரம்பித்திருப்பார்.

ஈசன்: உமா! கஷ்டப்படாமல் கிடைக்கும் பொருளின் அருமை என்றுமே உணரப்படுவதில்லை. உனக்கு தெரியாதா என்ன? இன்றே அவருக்கு நாம் காட்சியளிப்போம். நீ கவலைப்படாதே.

பார்வதி: உங்கள் திருவிளையாடலால் நன்மை நடந்தால் சரி...

..........................

ஈசன்: தேவதத்தா! உன்னால் எனக்கு ஒரு காரியமாக வேண்டும். அதற்காகவே யாம் உன்னை இங்கே அழைத்தோம்!!!

தேவதத்தன்: கட்டளையிடுங்கள் ஸ்வாமி

ஈசன்: அதோ பார்...
என் பக்தன் ஈசானபட்டன் என்னை தேடி ஒரு வாரமாக அன்ன ஆகாரமில்லாமல் காட்டில் அலைந்து கொண்டிருக்கிறான். நீ அவன் முன் புலியாக தோன்றி அவனை அதோ அந்த காவிரி கரையை நோக்கி வர வைக்க வேண்டும். அங்கே அவன் தானாக எம்மை சந்திப்பான். அப்போது நீ மறைந்துவிட வேண்டும். புரிகிறதா?

தேவதத்தன்: நன்றாக புரிகிறது ஸ்வாமி.. இதோ புறப்படுகிறேன்.

புலியாக மாறிய தேவதத்தன், ஈசானபட்டரை துறத்த ஆரம்பித்தான். பசியால் உடல் இளைத்தாலும், ஈசன் கட்டளையிட்ட பணியை முடிக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் எழ, உயிர் பிழைக்க வேகமாக ஓடினார் ஈசானப்பட்டர். திடீரென அவர் கால் ஒரு கல்லில் (சிவலிங்கம்) தடுக்கிவிட கீழே விழுந்தார் ஈசானப்பட்டர். புலியாக வந்த தேவதத்தன் தன்னை மறந்து ஈசானபட்டர் மேல் பாய்ந்தான். ஈசானபட்டர் மேல் புலி நகங்கள் பட உதிரம் எட்டி பார்த்தது. தன் பக்தனின் உடலிலிருந்து வந்த உதிரம் தரையில் வீழ்வதற்குள் லிங்கத்திலிருந்து வெளிப்பட்ட ஈசன் புலியின் மேல் தன்னுடைய சூலத்தை பாய்ச்சினார். தேவதத்தன் தன் சுய உருவை அடைந்து அங்கே நிகழ்ந்ததை உணர்ந்து அதிர்ச்சிக்குள்ளானான்.

ஈசன்: தேவதத்தா! என் பக்தனை கொல்ல உனக்கு எவ்வளவு துணிச்சல். அவன் இரத்தம் சிந்த காரணமான நீ இந்த பூவுலகில் மனிதனாக பிறக்கக்கடவாய்!

தேவதத்தன்: ஸ்மாமி! என்னை மன்னித்தருளுங்கள். புலியாக உருவெடுத்தப்பின் நான் யாரென்பதையே மறந்துவிட்டேன். புலியின் குணங்கள் முழுதும் பெற்றதால் செய்வதறியாமல் தவறிழைத்துவிட்டேன். மன்னித்தருளுங்கள் ஸ்மாமி. இந்த ஏழைக்கு இரக்கம் காட்டுங்கள்.

ஈசன்: தேவதத்தா! நீ செய்த பாவத்திற்கு பலனை அனுபவித்தே ஆக வேண்டும்.

ஈசனப்பட்டரின் காயங்கள் மறைந்தன. அவருக்கு அருள் புரிந்துவிட்டு ஈசன் மறைந்தார்.

..................................

பார்வதி: ஸ்மாமி! இது என்ன அநியாயம்? உங்களுக்கு உதவ வந்த தேவதத்தனுக்கு இப்படி ஒரு அநீதி இழைத்துவிட்டீர்களே!

ஈசன்: உமா! நான் யாருக்கும் என்றும் அநீதி இழைப்பதில்லை. தேவதத்தனின் புகழை பரப்பவே யாம் இதை செய்தோம். புலியாக மாறிய அவன் புலியாகவே ஆனான். நடிப்பில் அவனை மிஞ்ச யாருமில்லை. பூமியில் பிறக்கும் அவன் மக்களை தன் நடிப்பால் மகிழ்விப்பான். நடிப்பு கலையை உலகுக்கு சொல்லி தருவான். என் திருவிளையாடலைக்கூட மக்களுக்கு நடித்து காட்டுவான். அவனே நடிப்புக் கடவுளாவான்... ஆமாம் அவனே நடிப்புக் கடவுள்.

(வரும் ஜீலை 21 நடிப்புக் கடவுளின் நினைவு தினம்... அதை முன்னிட்டு எழுதிய பதிவு)சில காட்சிகள்
Wednesday, July 11, 2007

H-4

"ஆன் சைட்ல இருந்தா என்னுமோ வானத்துல இருந்து குதிச்ச மாதிரி நினைச்சிக்கிறானுங்க. இவனுங்க மட்டும் தப்பே செய்யாத மாதிரி" பொருமி கொண்டிருந்தாள் சங்கீதா.

"ஏன் சங்கி, என்னாச்சி?"

"நேத்து அனுப்பன டிஃபக்ட் லிஸ்ட்ல ஒண்ணு மிஸ் பண்ணிட்டேன். அதுக்கு என்னனா போன் பண்ணி கத்தறான் அந்த கார்த்தி. அவன் இதுவரைக்கும் எதுவுமே மிஸ் பண்ணாத மாதிரி. போன வாரம் கூட அவன் அனுப்பன மெயில்ல ஒரு டிஃபக்ட் ஸ்டேடஸ் சொல்லாம விட்டுட்டான். நான் தான் அது மறுபடியும் டெஸ்ட் பண்ணி ஸ்டேடஸ் தெரிஞ்சிக்கிட்டேன். நான் என்ன இப்படியா சத்தம் போட்டேன்" படபடப்பாக சொல்லிக்கொண்டிருந்தாள் சங்கீதா.

"கூல் சங்கி. அவன் அங்க க்ளைண்ட்கிட்ட ஏதாவது திட்டு வாங்கியிருப்பான். அதான் கொஞ்சம் டென்ஷனாகியிருப்பான். நீ ஃபீல் பண்ணாத. அவன்கிட்ட நான் பேசிக்கிறேன்" அவளை சமாதானப்படுத்தினான் ஆனந்த்.

ஆனந்த் ஆன்சைட்டிலிருந்து வந்து ஒரு மாதமாகிறது. சங்கீதா இரண்டு வருடமாக ஆறு ப்ராஜக்ட்கள் மாறி இந்த ப்ராஜக்ட்டுக்கு வந்து மூன்று மாதங்களாகிறது. அவளுக்கு போன மாதம் தான் H1 விசா கிடைத்தது. எந்த ப்ராஜக்டிற்கு பறக்கலாம் என்று கனவு கண்டு கொண்டிருந்தாள்.

"ஏன் ஆனந்த். அவன் போய் ஒன்றரை வருஷமாச்சி. நீ போய் ஆறு மாசம்தான் ஆச்சு. அவன் தானே நியாயமா வந்திருக்கனும். அப்பறம் ஏன் நீ வந்த? அவன்கிட்ட சண்டை போட்டிருக்கலாமே"

"அவன் ரிசோர்ஸ் குறைக்க போறாங்கனு தெரிஞ்சவுடனே, மேனஜருக்கு போன் பண்ணி, இந்தியா அனுப்பறதா இருந்தா நான் இங்கயே வேற கம்பெனி மாறிடுவேனு சொன்னான். அவரும் அதுக்கு பயந்து என்னை அனுப்பிட்டாரு"

"சீப் ஃபெலோ. நீயும் அதையே சொல்ல வேண்டியது தானே?"

"அவனுக்கு க்ளைண்ட் கிட்டயும் நல்ல பேர் இருக்கு. அதான் நான் எதுவும் பண்ண முடியல. மோர் ஓவர் என்னை 3 மாசத்துல வேற ப்ராஜக்ட்க்கு அனுப்பறனு சொல்லிதான் அனுப்பனாரு. எப்படியும் அடுத்த மாசம் ட்ரேவல் பண்ணுவேன்"

அவளுக்கு ஏனோ கார்த்திக் மேல் வெறுப்பு அதிகமாகி கொண்டே போனது.

திடீரென்று ஆனந்திற்கு டைபாய்ட் வந்து அவன் சொந்த ஊருக்கு சென்றுவிட்டான். சரியாக அந்த சமயத்தில் மேனஜர் சங்கீதாவை அழைத்தார்.

"சங்கீதா, நம்ம ப்ராஜக்ட்லயே புது மாட்யூலை கவனிக்க இன்னோரு ஆள் ஆன்சைட்ல இருந்தா நல்லா இருக்கும்னு க்ளைண்ட் ஃபீல் பண்றாங்க. இந்த வீக் எண்ட் நீ ட்ரேவல் பண்ண வேண்டியிருக்கும். ரெடியாயிக்கோ" தீர்க்கமாக சொல்லி முடித்தார்

"இன்னும் நாலு நாள்தான் இருக்கு. அதுக்குள்ள எப்படி ரெடியாக முடியும்? அடுத்த வாரம் போகவா?" கவலையாக கேட்டாள் சங்கீதா.

"அடுத்த வாரம் போற மாதிரி இருந்தா ஆனந்த்தான் ட்ராவல் பண்ணியிருப்பான். அர்ஜெண்ட்னு தான் உன்னை கிளம்ப சொல்றேன். ஈவனிங் சீக்கிரம் கிளம்பி போயிக்கோ. வெள்ளிக்கிழமை லீப் போட்டுக்கோ. திங்கள் இல்லைனா செவ்வாய்க்கிழமை நீ அங்க ரிப்போர்ட் பண்ணனும். புரியுதா?" கண்டிப்புடன் சொன்னார் மேனஜர்.

தயங்கியவாறே அங்கிருந்து சென்றாள் சங்கீதா. அந்த நான்கு நாட்களிலும் வேகமாக தயாரானாள் சங்கீதா. அவளுக்கு Air Franceல் டிக்கட் புக் செய்திருந்தார்கள். சென்னையிலிருந்து பாரிஸ் அங்கிருந்து நியூ ஜெர்ஸி அங்கிருந்து மேன்சிஸ்டர். முதல் முறையாக ஏரோப்ளேனில் செல்வதில் ஒரு வித மகிழ்ச்சி இருந்தாலும் இத்தனை இடங்களில் மாறி செல்வதாலும், தனி ஆளாக செல்வதாலும் ஒரு வித பயமே இருந்தது.

ஒரு வித பயத்துடன் கார்த்திக்கிற்கு போன் செய்தாள்.

"ஹலோ, கார்த்திக் ஹியர்"

"கார்த்திக், நான் சங்கீதா"

"சொல்லுங்க. எப்ப வறீங்க?"

"நான் சண்டே ராத்திரி ஏழு மணிக்கு வறேன்"

"ஹோட்டல் புக் பண்ணியாச்சா?"

"ஹிம்... ரெண்டு நாளைக்கு பண்ணிருக்கேன்"

"குட். அதுக்குள்ள இங்க அப்பார்ட்மெண்ட் பார்த்துடலாம்."

"ஹிம்... ஏற்போர்ட்ல இருந்து ஹோட்டலுக்கு எப்படி வறதுனுதான் புரியல"

"ஏற்போர்ட்ல டேக்ஸி இருக்கும். எதுக்கும் கைல டைரக்ஷன்ஸ் கொண்டு வாங்க. யாஹூ மேப்ல டைரக்ஷன்ஸ் பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க. அப்படியே திங்கக்கிழமை காலைல டேக்ஸி பிடிச்சி ஆபிஸ் வந்து எனக்கு போன் பண்ணுங்க. சரியா?"

அவனை ஏற்போர்ட்டிற்கு வர சொல்லலாம் என்று அவள் நினைத்திருந்தாள். அவனுடைய இந்த பேச்சால் அவன் மேலிருந்த வெறுப்பு இன்னும் கூடியது.

"சரிங்க. திங்கக்கிழமை பார்க்கலாம்" சொல்லிவிட்டு போனை வைத்து விட்டாள்.

பெற்றோர்கள் வழியனுப்ப ஒரு வழியாக ஃபிளைட் ஏறினாள். மனதிற்குள் ஒரு பயம் இருந்து கொண்டே இருந்தது. நல்ல படியாக நியூ ஜெர்ஸி வந்து சேர்ந்தாள். இமிக்ரேஷன் செக் எல்லாம் நல்லபடியாக முடிந்தது. ஆனால் மென்சிஸ்டர் செல்லும் விமானம் தாமதமாகிக்கொண்டே போனது. 5 மணிக்கு கிளம்ப வேண்டிய விமானம் பதினோரு மணிக்குத்தான் கிளம்பும் என்று அறிவிப்பு பலகையில் எழுதியிருந்ததை பார்த்ததும் அவளுக்கு மயக்கமே வந்துவிட்டது...

கார்த்திக்கிற்கு போன் செய்யலாமா என்று யோசித்தாள். அவனுக்கு போன் செய்வதைவிட தற்கொலை செய்வதே மேல் என்று அமைதியாக இருந்துவிட்டாள். ஆனால் உள்ளக்குள் ஒரு வித பயம் இருந்து கொண்டேயிருந்தது. அவனை நன்றாக சபித்தாள். அவன் நிச்சயம் ஒரு சைக்கோவாத்தான் இருக்க வேண்டும் என்கிற முடிவுக்கு வந்தாள். அங்கே அவள் அமர்ந்திருந்த 6 மணி நேரமும் அவனை திட்டிக்கொண்டேயிருந்தாள்.

மேன்சிஸ்டரில் அவள் இறங்கும் போது இரவு ஒரு மணி ஆகியிருந்தது. பேக்கேஜிக்காக காத்திருந்தாள். அவள் பின்னாலிருந்து யாரோ அவளை அழைப்பதை போலிருந்தது.

"மிஸ்.சங்கீதா?"

திரும்பி பார்த்தாள்.

"யெஸ்"

"ஐ அம் கார்த்திக்"

அவள் கண்கள் ஆச்சர்யத்தால் விரிந்ததை பார்த்தான். அவள் முகத்திலிருந்தே அவள் மனத்தில் நினைப்பதை புரிந்து கொள்ள முடியும் என்று அவனுக்கு தோன்றியது.

"நீங்க எப்படி இங்க வந்தீங்க?"

"உங்க ஐட்டினரி என்கிட்ட இருந்துச்சி. சரி தனியா வரிங்களேனு செக் பண்ணீட்டே இருந்தேன். ப்ளைட் டிலேனு தெரிஞ்சிது. இராத்திரியாச்சே கஷ்டப்படுவீங்களேனு வந்துட்டேன்"

"ரொம்ப தேங்க்ஸ்"

"நோ ப்ராப்ளம்"

அவள் பேக்கேஜ் சரியாக வந்து சேர்ந்தது. அதை எடுக்க அவளுக்கு உதவினான். ஒரு வழியாக அவள் பேக்கேஜை காரில் போட்டு வண்டியை ஸ்டார்ட் செய்தான்.

"ட்ரெவல் எல்லாம் எப்படி இருந்துச்சி?"

"நல்லா இருந்துச்சு. ஆனா 6 மணி நேர டிலே தான் கொடுமை"

"நீங்க அழகா பாஸ்டனே வந்திருக்கலாம். ஒரு முப்பது நிமிஷம் ட்ரேவல் தான் அதிகமாயிருக்கும்"

"ஆனந்த் தான் எனக்கு இந்த ஏர்போர்ட் சொன்னான்"

"ஒரே ஸ்டேட்னு சொல்லியிருக்கலாம். சரி ஃபீல் பண்ணாதீங்க. நாளைக்கு ரெஸ்ட் எடுத்துட்டு செவ்வாய்க்கிழமை வந்தா போதும்"

"இல்லைங்க. செவ்வாய்க்கிழமை வேண்டாம். நாளைக்கே வந்துடறேன். அப்பறம் நான் தான் சங்கீதானு எப்படி கண்டுபிடிச்சீங்க?"

"ப்ராஜக்ட் பார்ட்டி டீம் போட்டோவை ஆனந்த் அனுப்பி வைச்சான். அதுல இருந்து தெரிஞ்சிக்கிட்டேன்."

"பரவாயில்லை. நானும் உங்க போட்டோவை பார்த்திருக்கேன். நீங்க டூர் போன போட்டோவெல்லாம் ஆனந்த் காண்பிச்சிருக்காரு"

30 நிமிட பயணத்தில் அவள் ஹோட்டல் வந்தது. பேட்டியை கொண்டு போய் ரூமில் வைத்துவிட்டு வந்தான்.

"நாளைக்கு காலைல கண்டிப்பா ஆபிஸ் வரீங்களா?"

"ஆமாங்க. செவ்வாய்க்கிழமைல எதுவும் ஆரம்பிக்க கூடாதுனு எங்க அம்மா சொல்லுவாங்க. நான் நாளைக்கே வரேன்".

அவள் சொல்லியதை கேட்டு அவன் கண்கள் கலங்கியது.

"சரி நாளைக்கு எட்டு மணிக்கு ரெடியாகிடுங்க. நான் வரேன்" சொல்லிவிட்டு வேகமாக அங்கிருந்து நகர்ந்தான்.

அவளுக்கு அவன் நடத்தை விநோதமாக இருந்தது. அடுத்த நாள் சரியாக எட்டு மணிக்கெல்லாம் வந்து அவளை ஆலுவலகத்திற்கு அழைத்து சென்றான். இரண்டு நாட்களில் அவளுக்கு தங்குவதற்கு ஒரு வீடும் ஏற்பாடு செய்து கொடுத்து அவளுக்கு தேவையானதை வாங்க உதவினான். அதை போலவே வேலையிலும் அவளுக்கு தேவையான உதவிகளை செய்தான்.

இந்தியாவிலிருந்த போது அவளுக்கு அவன் மேலிருந்த எண்ணம் லேசாக மாற துவங்கியது. ஒரு வாரம் சென்ற நிலையில்

"ஹேய் என்னாச்சி ஏன் அழுவற?"

"ஒண்ணுமில்லை" சொல்லிக்கொண்டே கண்களை துடைத்து கொண்டிருந்தாள்.

"என்கிட்ட சொல்லனும்னு தோனிச்சினா சொல்லு. இல்லை லீவ் போட்டு வீட்ல போய் இரு. ஆபிஸ்ல உக்கார்ந்து அழுதா எல்லாரும் ஒரு மாதிரி பார்ப்பாங்க"

"சரி. நான் வீட்டுக்கு கிளம்பறேன். என்னால இங்க உட்கார்ந்திருக்க முடியாது"

"நான் வேணா வந்துவிடட்டுமா?"

"இல்லை நான் டேக்ஸி பிடிச்சி போயிடறேன்"

"இல்லை.. நான் வந்து விட்டுட்டு வறேன். வா"

அவளிடம் சொல்லிவிட்டு க்ளைண்ட் மேனஜரிடம் சென்று சங்கீதாவிற்கு உடல் நிலை சரியில்லை அதனால் வீட்டில் விட போகிறேன் என்று சொல்லிவிட்டு அவளை அழைத்து சென்றான்.

காரில் அழுது கொண்டே வந்தாள்.

"சங்கீதா. இங்க பாரு. இப்படி நீ அழுதுக்கிட்டே வந்தா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. ப்ளீஸ் என்னனு எனக்கு சொல்லு"

"எங்க அப்பாக்கு உடம்பு சரியில்லையாம். ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணியிருக்காங்க. நான் இந்தியா போகனும்"

"என்ன இந்தியா போகனுமா? உடம்புக்கு என்னனு சொல்லு. பார்த்துட்டு அப்பறம் போகலாம்"

"ஹார்ட்ல ஏதோ பிரச்சனையாம். உடனே ஆப்பரேஷன் பண்ணனும்னு சொல்றாங்க. அதனால நான் உடனே ஊருக்கு போகனும் கார்த்திக். நான் எங்க வீட்டுக்கு ஒரே பொண்ணு"

"சங்கீதா. உங்க அப்ப இப்ப எந்த ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணியிருக்காங்க"

"கொயம்பத்தூர் ராமகிருஷ்ணா ஹாஸ்பிட்டல்"

"அட்மிட் பண்ணிட்டாங்களா?"

"பண்ணியாச்சி. எங்க சித்தப்பாதான் கூட இருந்து எல்லாம் பார்த்துக்கறாரு. எப்படியும் செலவு 3-4 லட்சமாவது ஆகுமாம். நான் போய் எங்க காட்ட விக்க கையெழுத்து போடனும். நான் அங்க இருந்தாதான் அம்மாக்கும் சரியா இருக்கும். நான் இன்னைக்கே புறப்பட முடியுமா?"

"ஒரு நிமிஷம் இரு சங்கீதா"

அவள் அப்பார்ட்மெண்டில் காரை பார்க் செய்தான் கார்த்திக்.

அவன் செல்போனை எடுத்து இந்தியாவிலிருக்கும் அவன் மாமாவிற்கு போன் செய்தான்

"ஹலோ மாமா, நான் கார்த்தி பேசறேன்"

மறுமுனையிலிருந்து பேசியவரின் குரலும் அவள் காதில் விழுந்தது

"கார்த்திக், என்ன இந்நேரத்தில போன் "

"மாமா, நீ எங்க எங்க இருக்கீங்க?"

"நான் இப்ப தான் வீட்டுக்கு வந்துட்டு இருக்கேன்"

"மாமா ராமகிருஷ்ணால டாக்டர்ஸ் யாராவது தெரியுமா?"

"ஏன் என்னாச்சி? நானே அங்க பீடியாட்ரிக்ஸ்க்கு சர்வீஸ் பண்ணிட்டு தான் இருக்கேன்"

"இங்க என் ஃபிரெண்டோட அப்பாவுக்கு ஹார்ட்ல ப்ராப்ளம்னு அங்க சேர்த்திருக்காங்க. நீங்க உடனே பார்த்து ஸ்டேடஸ் சொல்ல முடியுமா?"

"ரொம்ப அர்ஜெண்டாப்பா? நான் வீட்டுக்கு பக்கத்துல போயிட்டேன்"

"மாமா, ரொம்ப அர்ஜெண்ட். அதுக்கேத்தா மாதிரி தான் அவுங்களுக்கு இங்க டிக்கெட் புக் பண்ணனும். நீங்க நேர்ல போய் பார்த்து சொன்னா நல்லா இருக்கும்"

"சரி டீட்டய்ல்ஸ் சொல்லுப்பா. நான் பார்த்து சொல்றேன்"

அவன் அவரை பற்றி எல்லாவற்றையும் சொல்ல அவர் குறித்து கொண்டார்.

"இன்னும் 30 நிமிஷம் கழிச்சி பண்ணுப்பா. நான் சொல்றேன். "

"சரி மாமா"

போனை வைத்தான்.

"சங்கீதா டோண்ட் வொரி. அந்த மாமா ரொம்ப நல்ல டைப். சீக்கிரமா பார்த்து எல்லாத்தையும் சொல்லுவாரு. இன்னைக்கு நீ கிளம்பனும்னா கஷ்டம். என்ன ஏதுனு விசாரிச்சி அதுக்கேத்த மாதிரி ப்ளான் பண்ணலாம். நீ அழாம இரு. அதுக்குள்ள ஒரு காபி குடிச்சிட்டு வந்துடலாம்" சொல்லிவிட்டு வண்டியை ஸ்டார்பக்ஸிற்கு விட்டான்.

அவள் எதுவும் பேசாமல் அழுது கொண்டே வந்தாள். சரியாக அரை மணி நேரத்திற்கு பிறகு அவளை காரில் அமர வைத்துவிட்டு வெளியே வந்து மாமாவிற்கு போன் செய்தான்.

"மாமா, கார்த்தி பேசறேன். என்ன ஸ்டேடஸ்"

" என் ஃபிரெண்ட் ராமமூர்த்தி தான் இந்த கேஸ் பார்த்துக்கறான். பெரிய ப்ராப்ளம் இல்லை. அப்பரேஷன் பண்ணா சரியாகிடும். எனக்கு தெரிஞ்சி லாஸ்ட் ஒன் இயர்ல எதுவுமே ஃபெயிலரானதே இல்லை. சோ அவுங்களை வருத்தப்பட வேண்டாம்னு சொல்லு. ஆப்பரேஷன் நாளைக்கு காலைல வெச்சிருக்காங்க. நான் பார்த்துக்கறேன். எனி திங் எல்ஸ்"

"மாமா, அவுங்க கைல காசு எவ்வளவு இருக்குனு தெரியல. சோ நான் உங்ககிட்ட இடம் வாங்க கொடுத்த காசை எடுத்து ஆப்பரேஷனுக்கு கொடுங்க. நான் மிச்சத்தை உங்களுக்கு காலைல பேசறேன்" சொல்லிவிட்டு போனை வைத்தான்.

காருக்குள் வந்து அவளிடம் பேச ஆரம்பித்தான்.

"சங்கீதா, உங்க அப்பாக்கு எந்த ப்ராப்ளமும் இல்லை. நாளைக்கு காலைல ஆப்பரேஷனாம். லாஸ்ட் ஒன் இயர்ல அந்த ஆப்பரேஷன் சக்ஸஸ் ரேட் 100%. சோ யூ டோண்ட் நீட் டு வொரி. எங்க மாமா எல்லாத்தையும் பார்த்துக்கறனு சொல்லிட்டாரு. ஆப்பரேஷன் பண்ண போறது கூட அவர் ஃபிரெண்ட் தான்"

"ஹிம்ம்ம். இருந்தாலும் நான் ஊருக்கு போகனும்னு பார்க்கிறேன். எங்க அப்பாக்கு உடம்பு சரியில்லாதப்ப நான் அவர் கூட இருக்கறது தான் சரி"

"சங்கீதா, நீ இப்ப ஊருக்கு போனா திரும்ப இங்க வர சான்ஸ் கிடைக்குமானு சொல்ல முடியாது. மோர் ஓவர் பணம் பத்தியும் நீ பயப்பட வேண்டாம். எங்க மாமா கொடுத்துடறேனு சொல்லிட்டாரு. என் காசு அவர்ட நிறைய இருக்கு. நீ எனக்கு பொறுமையா கொடுத்தா போதும். இப்ப வீட்ல இருந்தா நீ கண்டதையும் நினைப்ப. ஆபிஸ் போகலாம். நாளைக்கு ஆப்பரேஷன் முடிஞ்சதுக்கப்பறம் அம்மாட்ட பேசி முடிவெடு. இப்ப வா போகலாம்" சொல்லிவிட்டு அவளை ஆபிஸிற்கு கூட்டி சென்றான்.

அவளுக்கு அலுவலகத்தில் வேலையே ஓடவில்லை. அவனும் அவளுக்கு நிறைய வேலைகளை கொடுத்து அவளை மறக்க வைக்க முயற்சி செய்து கொண்டிருந்தான்.

அடுத்த நாள் காலை அவள் அம்மாவிற்கு போன் செய்து அப்பாவின் நிலையை அறிந்து கொண்டாள் சங்கீதா. இன்னும் ஒரு வாரம் ஆஸ்பிட்டலில் இருக்க வேண்டுமென்றும், எந்த பிரச்சனையும் இல்லை. அதனால் அவள் வர தேவையில்லை என்று அவள் அம்மா தெரிவித்தார். கார்த்தியின் மாமாவால் மருத்துவமனையில் அவர்களுக்கு எல்லா வேலைகளும் சுலபத்தில் முடிகிறது என்று கூறினாள். சங்கீதா இதனால் ஓரளவு திருப்தியடைந்தாள்.

கார்த்தியும் அவன் மாமாவிடம் பேசி அவர்களுக்கு தேவையானவற்றை செய்து தர சொல்லியிருந்தான். மேலும் அவளுடைய தந்தையின் உடல் நிலையை பற்றியும் தெரிந்து வைத்திருந்தான். அவளுக்கு தினமும் ஆறுதல் சொல்லி அவள் மகிழ்ச்சியாக இருக்க உதவியாக இருந்தான்.
மூன்று மாதம் ஓடியதே இருவருக்கும் தெரியவில்லை. தினமும் அவளை அலுவலகத்திற்கு அழைத்து வருவது, வீட்டுக்கு அழைத்து செல்வது, ஷாப்பிங் செல்வது என்று அனைத்திற்கும் உதவியாக இருந்தான்.

"கார்த்தி, இன்னைக்கு உனக்கு கடைசியா கொடுக்க வேண்டிய ரெண்டாயிரம் டாலரும் அனுப்பிட்டேன். நீ மட்டும் அப்ப எனக்கு ஹெல்ப் பண்ணலைனா என் நிலைமை என்ன ஆகியிருக்கும்னே சொல்ல முடியாது"

"இதுல என்ன இருக்கு. ஊர்ல இருந்து ரொம்ப தூரம் வந்திருக்கோம். ஒருத்தருக்கு ஒருத்தர் உதவலனா நல்லா இருக்காதில்லை"

"எனக்கு என்ன சொல்றதுனே தெரியல கார்த்தி. உன்னை பத்தி ஆஃப்-ஷோர்ல எல்லாரும் எவ்வளவு தப்பா நினைச்சிட்டு இருக்காங்க தெரியுமா? ஆனா நீ அதுக்கெல்லாம் அப்படியே ஆப்போசிட்டா இருக்க"

"தெரியும். ஆனந்த் இந்தியா போக நான் தான் காரணம். நாளைக்கே இங்க ஒரு ரிசோர்ஸ்தான் இருக்கனும்னு சொன்னா, ஒண்ணு நான் கம்பெனி மாறிடுவேன், இல்லை உன்னை அனுப்ப சொல்லி மேனஜருக்கு போன் பண்ணி சொல்லிடுவேன்"

"ஏன் இந்தியா உனக்கு பிடிக்காதா? ஏன் இப்படி இருக்க?"

"ஏனோ இந்தியால ஒர்க் பண்றது பிடிக்கல. அங்க ஒர்க் கல்ச்சரும் சரியில்லை. ரொம்ப வேலை அதிகம். அதான்"

"நீ என்னுமோ பொய் சொல்ற மாதிரி இருக்கு கார்த்தி. என்கிட்ட நீ எதையோ மறைக்கிற. விருப்பம் இல்லைனா விட்டுடு"

"அப்படியெல்லாம் இல்லை"

"நீ என்னை உன் ஃபிரெண்டா நினைச்சா சொல்லு. இல்லைனா வேணாம்"

"அப்பறமா சொல்றேன். இப்ப வேண்டாம்"

"சரிவிடு. உனக்கு எப்ப தோணுதோ சொல்லு"

"ஓகே"

இரண்டு மாதங்கள் ஓடிய நிலையில் கார்த்திக்கிற்கு திடிரென்று உடல்நிலை சரியில்லாமல் போனது. சங்கீதா அவனுடனிருந்து அவனுக்கு தேவையானதையெல்லாம் செய்துவிட்டு ஆபிஸ் சென்றாள். அடுத்த நாள் அவன் அலுலகலம் சென்ற போது அங்கே அவனுக்கு ஒரு இடி காத்திருந்தது.

கார்த்தியை அவன் கம்பெனி மேனஜர் அழைத்து தனியாக பேசினார்.

"கார்த்திக் மறுபடியும் டீம் சைஸ் குறைக்க சொல்லி சொல்லிட்டாங்க. ஆக்சுவலா உன் மாட்யூல் தான் முடியுது. ஆனா நேத்து சங்கீதா எனக்கு போன் பண்ணி அவளுக்கு இங்க இருக்க பிடிக்கல. அதனால இந்தியா போகறேனு சொல்லிட்டா. சோ பிரச்சனையில்லை. நீ அவக்கிட்ட எல்லாத்தையும் கத்துக்கோ"

அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

"சரி... எப்ப கிளம்பனும்?"

"இந்த வீக் எண்ட்... இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு"

அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. மாலையில் வேலை முடிந்ததும் அவளை அழைத்து செல்லும் போது அவளிடம் பேச ஆரம்பித்தான்.

"சங்கீதா, ஏன் எங்கிட்ட இதை சொல்லல?"

"எதை?"

"நேத்து ஆபிஸ்ல நடந்ததை"

"என்ன நடந்தது?"

"இங்க இருக்க பிடிக்கல. அதனால இந்தியா போறனு மேனஜருக்கு போன் பண்ணி சொன்னியா?"

"ஆமாம்"

"ஏன்?"

"இந்த ப்ராஜக்ட்ல ஒருத்தர் தான் இருக்க முடியும்னு தெரிஞ்சிது. நீ போறதுக்கு கஷ்டப்படுவ. சரி உன்னை கஷ்டப்படுத்த வேண்டாமேனு தான் நான் கிளம்பறேன்"

"நான் இந்தியாக்கு ஏன் போக மறுக்கறனு உனக்கு தெரியுமா?"

"தெரியாது. ஆனா அதுல நியாயமான காரணம் ஏதாவது இருக்கனும். உனக்கு யார்கிட்டயும் சொல்ல விருப்பமில்லை. எனக்கு உன்னை கஷ்டப்படுத்த மனசில்லை"

"ஹிம்ம்ம்.. ஒரு காபி குடிக்கலாமா?"

"சரி"

காரை ஸ்டார்பக்ஸிற்கு விட்டான். இருவரும் ஆளுக்கு ஒரு லேட்டே வாங்கி கொண்டு எதிரெதிரில் அமர்ந்தனர்.

"எங்க அப்பா போலிஸ்ல வேலை பார்த்தாரு. ரொம்ப ஸ்ட்ரிக்ட். எங்க அம்மாதான் எனக்கு எல்லாமே. எங்க அண்ணனைவிட எங்க அம்மாக்கு என் மேல தான் பாசம் அதிகம். எங்க அண்ணன் எல்லார்டையும் போவான். நான் சின்ன வயசுல இருந்து யார்கிட்டயும் அதிகம் பேச மாட்டேன். அதனாலயே என் மேல அம்மா அதிகமா அக்கறை எடுத்துக்க வேண்டியதா இருந்துச்சு.

சின்ன வயசுல இருந்தே நான் வீட்ல இருந்தே படிச்சிட்டேன். காலேஜ்ல கூட எனக்கு அதிக ஃபிரெண்ட்ஸ் இல்லை. நான் வேலைக்கு சேர்ந்து ஒரு வருஷத்துலயே ஆன்சைட் வந்துச்சி. நான் எங்க அம்மாவைவிட்டுட்டு வர மாட்டேனு சொல்லிட்டேன். ஆனா அடுத்த ஒரு மாசத்துல எங்க அம்மா மாடில துணி காய வெச்சி எழுத்து வரும் போது கால் தடுக்கி கீழ விழுந்து தலைல அடி பட்டுடுச்சி. எவ்வளவோ முயற்சி செஞ்சும் காப்பாத்த முடியல.

அதுக்கப்பறம் எனக்கு அந்த வீட்ல எங்க பார்த்தாலும் எங்க அம்மாவாதான் தெரிஞ்சாங்க. சாப்பிடும் போது முன்னாடி உக்கார்ந்து "போதுமா கார்த்தி"னு கேக்கற மாதிரி இருக்கு. இராத்திரி கரெண்ட் ஆஃப் ஆன பக்கத்துல உக்கார்ந்து விசிறி விடற மாதிரி இருக்கு. என்னை சுத்தி எப்பவுமே அம்மா இருக்கற மாதிரியே இருக்கு. நானே தனியா பாதி நேரம் பேசிக்கிட்டேன். எனக்கு பைத்தியம்னு எங்க அண்ணி பயந்துட்டாங்க. அப்பதான் மறுபடியும் ஆன்சைட் வந்துச்சி"

ஒரு நிமிடம் நிறுத்தி ஆஸ்வாசப்படுத்தி கொண்டான்.

"உடனே புறப்பட்டு வந்துட்டேன். என்னால திரும்பி அங்க போயி எங்க அம்மா இல்லாத வீட்ல ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது. எங்க அப்பா இப்ப என் அண்ணன் பசங்களை பார்த்துட்டு அங்கயே இருக்காரு. ஆனா என்னால இருக்க முடியாது. என்னை எல்லாரும் திட்டியும் நான் இந்தியா போகாததுக்கு காரணம் இதுதான். இங்க நீ வந்ததுக்கப்பறம் தான் நான் ஓரளவு பழசை எல்லாம் மறக்க ஆரம்பிச்சேன். இப்ப நீயும் என்னை விட்டுட்டு போற"

"கார்த்தி எனக்கு என்ன சொல்றதுனே தெரியல. வேற வழியில்லை. நான் போயிதான் ஆகணும்."

"ஹிம்ம்ம்"

நான்கு கண்களும் கலங்கியிருந்தன...

ஒரு வழியாக சங்கீதா இந்தியா செல்ல தயாரானாள். சாக்லேட், அப்பா/அம்மாவிற்கு வாட்ச், மசாஜர், கேமரா, லேப்டாப் என கிடைத்ததை வாங்கினாள். கார்த்தி அவளை ஏற்போர்ட்டிற்கு வந்து அனுப்பி வைத்தான்.

ஒரு வாரம் லீவ் முடித்து திங்களன்று கார்த்திக்கிற்கு போன் செய்தாள் சங்கீதா.

"கார்த்தி ஹியர்"

"ஹே நான் சங்கீதா பேசறேன்"

"சொல்லு. ஊருக்கு போய் போன் பண்ண உனக்கு ஒரு வாரம் தான் எடுத்துச்சா?"

"இல்லை. நான் இப்ப தான் ஆபிஸ் வந்தேன். ஏன் நீ எனக்கு போன் பண்ண வேண்டியதுதானே?"

"உங்க வீட்டுக்கு போன் பண்ணா எப்படி ஃபீல் பண்ணுவாங்கனு தெரியல. அதான்.." இழுத்தான்

"அதெல்லாம் எதுவும் தப்பா நினைக்க மாட்டாங்க. அப்பறம் ஒரு குட் நியுஸ்."

"என்ன?"

"நான் திரும்ப அங்க வரலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்"

"வாவ். கிரேட். எந்த பிராஜக்ட்"

"புது பிராஜக்ட். ஆனா நீ தான் எனக்கு ஹெல்ப் பண்ணனும்"

"என்ன ஹெல்ப். சொல்லு கண்டிப்பா பண்ணறேன்"

"எனக்கு H1ல வர முடியாதுனு சொல்லிட்டாங்க. நீதான் H4ல கூப்பிட்டு போகனும். கூப்பிட்டுபோவியா?"

சரியாக இரண்டாவது மாதத்தில் H-4ல் பறந்தாள் சங்கீதா...

(முற்றும்...)

கீழ கும்மி இருக்கேனு கவலைப்படாம உங்க கருத்தை சொல்லிட்டு போங்க... கும்மிய பார்த்தா கதை ரொம்ப கேவலமா இருக்கானு ஒரு டவுட்