தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Thursday, August 28, 2008

ஆடு புலி ஆட்டம் - 18

தினேஷ் கிளம்பி போனதுக்கப்பறம் துரை அந்த பொண்ணு இருந்த ரூமுக்கு போனான். ஒரு மணி நேரம் கழிச்சி அவன் வந்தவுடனே குமார் போனான். அந்த பொண்ணு அரை மயக்கத்துலயே இருந்துச்சு. மறுபடியும் மயக்க மருந்து கொடுத்துட்டு கதவை பூட்டிட்டு வந்துட்டாங்க. அப்பறம் ராத்திரி அவளை ஹூசைன் லாட்ஜ்ல வேற ஒரு ரூமுக்கு எடுத்துட்டு போயிட்டாங்க.

அவ எப்ப வேணா எழுந்திரிக்கலாம்னு இருந்துச்சு. காலைல அஞ்சு மணிக்கு அலாரம் வெச்சிட்டு வந்தானுங்க. அப்படியே கதவு பக்கத்துல ஒரு லெட்டரும் வெச்சிட்டு வந்தாங்க. அந்த லெட்டர் எழுதறதுக்கு தினேஷ் உதவி பண்ணான். உதவி பண்ணானு சொல்றதைவிட அவன் தான் அதை தயார் பண்ணானே சொல்லலாம். நீங்களும் அதை படிச்சி பாருங்களேன்.

விஜயலஷ்மி,
உன்னை மாசம் மாசம் மிரட்டி காசு வாங்கறது எங்களுக்கு வெறுத்து போச்சு. இனிமே நாங்களே காசு கேக்காம நீயே கொடுக்கனும்னு இப்படி நடந்துக்க வேண்டியதா போச்சு. நீ போலிஸ்ல போகலாம்னு நினைச்சா, அது உனக்கு எதிரா தான் நடக்கும். போய் அந்த பெட்ல தலையணைக்கு அடில இருக்கற ஃபோட்டோவை பாரு.

என்ன அந்த ஃபோட்டோ எல்லாம் பார்த்தியா? அது நீ ரெண்டு மாசம் காசு கொடுத்தப்ப எடுத்தது. இப்ப நீ பார்த்த வரிசைல பார்த்தா நீ காசு வாங்கின மாதிரி தெரியுதா? வரிசையை மாத்தி பார்த்தா அப்படி தான் தெரியும். நீ காசு வாங்கிட்டு ஒண்ணா எழுந்திரிக்கறது. அவன் கூடவே வெளிய வரைக்கும் போறதை வெச்சி நீ இந்த ஊர்ல ப்ராத்தல் தொழில் பண்ணிட்டு இருந்தனு தாராளமா சொல்ல முடியும். கூடவே நீ பொய் சொல்லி வேலை வாங்கின, அதுக்கு தான் அந்த தொழில் பண்ணனு சொல்ல முடியும்.

நீ அரை மயக்கத்துல எங்க ஆளுக்கூட பண்ணதும் வீடீயோவா ரெக்கார்ட் ஆகி இப்ப CDல இருக்கு. நீ போலிஸுக்கு போனா அந்த CDயை நீயும், உன் அப்பா, அம்மாவும் ஒண்ணா சேர்ந்து பாக்க வேண்டியது இருக்கும். நீ தற்கொலை பண்ணிக்கலாம்னு முடிவு எடுத்தா உன் அப்பா, அம்மா உன்னை கடைசியா நீ பொறந்தப்ப இருக்கற மாதிரி பார்க்க வேண்டியதா இருக்கும். அதுக்கு மேல அவுங்களும் உயிரோட இருக்க மாட்டாங்கனு உனக்கு நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அதுக்கு அப்பறம் இண்டர்நெட்லயும், எல்லார் செல்ஃபோன்லயும் உன் படம் தான் பார்ப்பாங்க.

இதுல இருந்து நீ தப்பிக்கனும்னா ஒரே வழி தான் இருக்கு. மாசா மாசம் எங்களுக்கு தர வேண்டிய காசை கொடுத்துடு. அவ்வளவு தான். இனிமே நீ நேர்ல கூட வர வேண்டாம். நாங்க சொல்ற அக்கவுண்ட்ல மூணு தேதிக்குள்ள காசை போட்டுடு. அப்படி இல்லைனா உனக்கு தான் விபரீதம். எங்களுக்கு பணம் தான் வேணும். நீ தேவையில்லை.

அந்த ஃபோட்டோவையெல்லாம் அதே இடத்துல வெச்சிட்டு எங்கயும் நிக்காம நேரா பஸ் ஸ்டாண்ட் போய் பஸ் பிடிச்சி வீட்டுக்கு போ. யார்கிட்டயும் பேசாம போ. இன்னும் விடியல. அதனால யாரும் உன்னை இங்க பார்க்க மாட்டாங்க. அதனால உடனே கிளம்பு. இந்த கடிதத்தையும் ஃபோட்டோக்கூடவே வெச்சிட்டு போ. தப்பான முடிவ எடுத்தா நஷ்டம் உனக்கு தான். எங்களுக்கு இருபதாயிரத்தோட போச்சு.

......

லெட்டரை பார்த்தீங்களா. எவ்வளவு அட்டகாசமா எழுதியிருக்கான் பார்த்தீங்களா. அதான் தினேஷ். இருந்தாலும் அவனை நான் நம்பல. படிச்சவங்களை எப்பவும் நம்ப கூடாதுங்கறது என்னோட எண்ணம். அப்படி நான் என்ன பண்ணேனு பாக்கறீங்களா.

தினேஷ் எழுதன லெட்டர்ல இருந்த இந்த ஒரு வரியை மட்டும் நான் மாத்தி எழுதினேன்...

"இந்த போட்டோ மட்டும் இல்லாம நீ எந்த துணியும் இல்லாம இருக்கற ஃபோட்டோவும் எங்ககிட்ட இருக்கு. நீ போலிஸுக்கு போனா அந்த போட்டோவை நீயும், உன் அப்பா, அம்மாவும் ஒண்ணா சேர்ந்து பாக்க வேண்டியது இருக்கும். "

இதைத்தான் நான் இப்படி மாத்தியிருக்கேன்

"நீ அரை மயக்கத்துல எங்க ஆளுக்கூட பண்ணதும் வீடீயோவா ரெக்கார்ட் ஆகி இப்ப CDல இருக்கு. நீ போலிஸுக்கு போனா அந்த CDயை நீயும், உன் அப்பா, அம்மாவும் ஒண்ணா சேர்ந்து பாக்க வேண்டியது இருக்கும்."

இப்ப புரிஞ்சிருக்குமே, நான் அவனுக்கு தெரியாம என்ன பண்ணனு. ஆமா, நீங்க நினைக்கிறது சரி தான். அவன் அந்த பொண்ணை பண்ணதை தான் நான் அவனுக்கு தெரியாம வீடியோ எடுத்து வெச்சிருக்கேன். அது அந்த லாட்ஜ்லயே பத்திரமா இருக்கு. நாளைக்கு எனக்கு எதுவும் தெரியாதுனு அவன் விலக சான்ஸ் இருக்கு. அவன் அறிவை வெச்சி எங்களை மாட்டிவிட்டுட்டு அவன் தப்பிச்சி போகவும் வாய்ப்பிருக்கு. அதுக்காக நாங்க மூணு பேரும் சேர்ந்து எடுத்த முன்னெச்சிரிக்கை நடவடிக்கை தான் இது. தினேஷுக்கு இது தெரியாது. இது
கடைசியா பயன்படுத்த வேண்டிய அஸ்திரம்.

ஏதோ தப்பா நடக்க போகுதுனு என் மனசுல சொல்லிட்டே இருக்கு. இருங்க நான் குமாருக்கு ஒரு ஃபோன் பண்ணிடறேன்.

"ஹலோ வெற்றி"

"குமார். நான் நாளைக்கு ஊருக்கு போகலாம்னு இருக்கேன். கைல இருக்கற காசுக்கு ஏதாவது இடம் வாங்க முடியுமானு பாக்க போறேன். இந்த முறை மச்சான் பேர்ல வாங்கலாம்னு இருக்கேன்"

"சரி. அப்படியே எங்க வீட்டுக்கு போயி ஏதாவது காசு கொடுத்துட்டு வாயேன்"

"நீ கவலைப்படாத. உன் ஆத்தாவை பார்த்து காசு கொடுத்துட்டு வரேன்"

"சரி. இப்படி நீ திடீர்னு ஊருக்கு போனா தினேஷ் எதுவும் சொல்ல மாட்டானா?"

"எனக்கு அவன்கூட ஏதாவது பிரச்சனை வந்துடுமானு பயத்துல தான் இருக்கற காசையெல்லாம் பதுக்கறேன்"

"ஏன்? ஏதாவது மிரட்டினானா?"

"இல்லை. முன்னெச்சரிக்கை தான். ஏதாவது மிரட்டினா அவனுக்கு தான் பிரச்சனை"

"ஆமாம்"

"அப்பறம் அந்த CDயை எல்லாம் எதுக்கும் இன்னொரு காப்பி போட்டு வை. நான் வந்ததும் வாங்கி அதை பத்திரமான ஒரு இடத்துல வெச்சிக்கறேன். ஏதாவது பிரச்சனையாகி ஒரு செட் போனாக்கூட இன்னொன்னு இருக்கும்"

"சரி"

"அந்த சின்ன பையன் இருக்கும் போது போய் காப்பி போடு. வேற யாராவது இருந்தா CDல என்னனு கேட்டா பிரச்சனையாகிடும். எல்லாரும் மாட்டிக்குவோம்"

"அதான் தெரியுமே. நீ பயப்படாத"

"சரி. ஜாக்கிரதை"

"இது வெச்சி அவனை மட்டும் தானே மிரட்ட போற?"

"இல்லை. அதுக்கு மட்டுமில்லை. அந்த பொண்ணுங்களையும் மிரட்டி லம்பா வாங்கலாம்னு இப்ப ஒரு திட்டமிருக்கு"

"ஏன் திடீர்னு"

"மொத்தமா வாங்கிட்டு ஊர் பக்கம் போயிடலாம்னு யோசிச்சிட்டு இருக்கேன். ஊர்ல போய் ரியல் எஸ்டேட் பண்ணிக்கலாம்னு ஒரு திட்டம் இருக்கு. நம்ம மூணு பேரும் சேர்ந்தே பண்ணலாம். இதை பத்தி எல்லாம் என் மச்சான்கிட்ட பேச தான் உடனே போறேன்"

"சரி. நான் இன்னொரு காப்பி போட்டு வைக்கறேன்"

"சரி. நான் ஊருக்கு போய் கூப்பிடறேன்"

"சரி. வேற எதுவும் விஷயமில்லையே"

"இல்லை. அப்பறம் பார்க்கலாம்"

சரி. நான் தூங்க போறேன். நாளைக்கு காலைல எழுந்து ஊருக்கு கிளம்பனும்.

...........................................

என்ன மணி ரெண்டாச்சு இன்னும் இவன் தூங்கலயேனு பாக்கறீங்களா? இவ்வளவு நேரம் நித்யாக்கிட்ட தான் பேசிட்டு இருந்தேன். ரூம்ல எல்லாரும் தூங்கிட்டு இருக்காங்க. அசோக் சீக்கிரமே தூங்கிட்டான். நாலு நாளா கோட் பண்ணதுல அவன் பயங்கர டயர்ட் ஆகிட்டான். நானும் தான் கோடிங் பண்ணேன். ஆனா அதெல்லாம் நித்யாகிட்ட சொல்ல முடியாது. அதுவுமில்லாம அவக்கூட பேசும் போது எனக்கு தூக்கமும் வர மாட்டீங்குது.

என்ன வந்தவுடனே லாப்-டாப்பை ஓப்பன் பண்றேனு பாக்கறீங்களா? வெற்றி யாருக்காவது ஏதாவது பேசினானு பார்த்துட்டு தூங்கலாம்.

ஏதோ ரெண்டு ஃபைல் இருக்கு. இருங்க கேட்டுட்டு வரேன்.

(ஆட்டம் தொடரும்...)

வலைப்பதிவர் வாத்தியார்கள்!!!

நம்ம பதிவர்கள் எல்லாம் இப்பவே இந்த ஆட்டம் போடறாங்களே, சின்ன வயசுல எப்படி எல்லாம் அட்டகாசம் பண்ணியிருப்பாங்க. சரி எப்படி எல்லாம் அட்டகாசம் பண்ணிருப்பாங்கனு தெரிஞ்சிக்கனும்னா யாரை கேட்கலாம்? வேற யாரை அவுங்களுக்கு பாடம் எடுத்த வாத்தியார்களை தான். அஞ்சாம் க்ளாஸ்ல எல்லாம் என்ன பண்ணாங்கனு இப்ப ஒவ்வொரு வாதியாருங்களா சொல்ல போறாங்க.

லக்கி லுக் வாத்தியார்:
இவனுக்கு Question Paper கொடுத்தா, நீங்க கேக்கற கேள்விக்கு எல்லாம் பதில் சொன்னா தாவூ தீர்ந்து, நீங்க அடிக்கிற அடில டவுசர் கிழிஞ்சிடும். நானே கேள்வி! நானே பதில்னு சொல்லி அவனுக்கு தெரிஞ்ச கேள்வி எல்லாம் எழுதி அவனே பதில் எழுதிட்டான்பா.

பாஸ்டன் பாலா வாத்தியார்:
கேள்விக்கு பதில் எழுத சொல்லி கேள்வி தாளை கொடுத்தா, எந்த எந்த பதிலுக்கு யார் யார் பேப்பரை பார்க்கனும் பதில் எழுதி கொடுத்தான்.

உண்மைத்தமிழன் வாத்தியார்:
Choose the Best Answerக்கு நாப்பது பக்கத்துக்கு விடை எழுதி என்னை திக்கு முக்காட வெச்சிட்டான்பா. முழு ஆண்டு பரிட்சை எழுதி முடிக்க நேரம் பத்தலனு, கோடை விடுமுறை முழுக்க உக்கார்ந்து நாலாயிரம் பக்கத்துக்கு விடை எழுதிட்டு வந்தான். அதை மியூசியம்ல வைக்க சொல்லி கொடுத்துட்டோம். இப்பவே இப்படி எழுதறான்னா இவன் படிச்சி முடிக்கும் போது இந்தியால ஒரு மரம் கூட மிஞ்சாதுனு அப்ப இருந்த வனத்துறை அமைச்சர் சொன்னாரு.

சுப்பையா ஐயா வாத்தியார்:
சுப்பையா முதல் பெஞ்ச்ல வந்து உக்காருனு சொன்னா, குரு நாலாம் இடத்துல இருக்கான், புதன் எட்டாம் இடத்துல இருக்கான், சுக்கிரம் ஒன்பதாம் இடத்துல இருக்கான். அதனால நான் நாலாவது பெஞ்ச்ல இரண்டாம் இடத்துல தான் இருப்பேனு சொல்லுவான்

ஜ்யோவ்ராம் சுந்தர் வாத்தியார்:

இவன்கிட்ட ஆம கத சொல்லுனு சொன்னா எனக்கு ஆம கதை எல்லாம் தெரியாது "கா"ம கதை தான் தெரியும்னு சொல்லி என்னை கதி கலங்க வெச்சிட்டான். அப்பறம் பசங்க எல்லாம் போனுதுக்கப்பறம் அந்த கதையெல்லாம் நான் தனியா கேட்டுக்கிட்டேன்.

மங்களூர் சிவா வாத்தியார்:
ஒவ்வொருத்தரா மெமரி போயம்ஸ் சொல்லுங்கனு சொன்னா, "முதல் பையன் சொன்னதுக்கு ரீப்பீட்டு"னு சொல்லி அப்பீட்டு ஆகிடுவான். எந்த கேள்வி கேட்டாலும் ஜெர்மனினு தான் பதில் சொல்லுவான். ஒரு தடவை இன்ஸ்பெக்ஷனுக்கு வந்தப்ப, இவனை ஏதாவது கேள்வி கேக்க சொன்னாங்க. ஹிட்லர் எந்த நாடுனு நான் கேட்க அவன் ஜெர்மனினு சொல்ல, இன்ஸ்பெக்ஷனுக்கு வந்த வாத்தியார் இவனுக்கு வாரமலர் பரிசு கொடுத்துட்டு போனாரு.

சர்வேசன் வாத்தியார்:
இவன் ஆரம்பிக்கற தொடர் விளையாட்டால பள்ளி கூடமே கதி கலங்கி போயிடும்பா. ஒண்ணுக்கு போயிட்டு வரதுல ஆரம்பிச்சி லீவ் போடற வரைக்கும் தொடர் விளையாட்டு நடத்திருக்கான்.

பரிசல்காரன் வாத்தியார்:
ஒரு வாத்தியார் திட்டிட்டாரு நான் பள்ளி கூடத்துல இருந்து விலக போறேனு பள்ளிக்கூட சுவத்துல எழுதி இவன் அடிச்ச லூட்டியை இன்னும் பள்ளிக்கூடத்துல யாரும் மறக்கலைங்க.

My Friend வாத்தியார்:
ஒரு வகுப்பு முடிஞ்சி அடுத்த வகுப்பு தொடங்கறதுக்கு வாத்தியார் வந்தா முதல் ஆளா எழுந்து வணக்கம் ஐயானு வேகமா சொல்லிட்டு "மீ தி ஃபர்ஸ்ட்டு"னு குதிப்பா.

கோவி கண்ணன் வாத்தியார்:
எந்த வகுப்பெடுத்தாலும் கடைசியா ஏதாவது கருத்து சொல்லனும்னு சொல்லுவான். நல்ல விஷயம் தானே நினைக்கறீங்களா? கணக்கு பாடத்துல கூட கருத்து கேட்டா எப்படிங்க? அப்படி நாங்க எதுவும் சொல்லலனா அவனே ஏதாவது கண்டுபிடிச்சி சொல்லுவான்.

அய்யனார் வாத்தியார்:
இவன் இது வரைக்கும் எழுதன பதில் எதுவும் ஒரு வாதியாருக்கு கூட புரிஞ்சதில்லைனு எங்க எல்லாருக்கும் சந்தோஷம். கோடிட்ட இடத்தை நிரப்புக கூட புரியாத மாதிரி தான் விடை எழுதுவான்.

குசும்பன் வாத்தியார் :
பள்ளி ஆண்டுவிழால கலந்துகிட்டது குத்தமாய்யா? அதுல எடுத்த ஃபோட்டோல நானும் கணக்கு டீச்சர் கனகாவும் பக்கத்துல நிக்கற மாதிரி ஒரு படம் இருந்துச்சு. நாங்க என்ன பேசிருப்போம் இவன் எழுதன கமெண்டால கோவிச்சிக்கிட்டு அம்மா வீட்டுக்கு போன என் பொண்டாட்டி இன்னும் வீட்டுக்கு வரலைய்யா.

லதானந்த் அங்கிள் வாத்தியார்:
இவன் திடீர்னு "ஆசிரியருக்கு ஒரு பகிரங்க கடிதம்"னு க்ளாஸ் போர்ட்ல எழுதி வெச்சிட்டான்பா. வகுப்பறை ஒரு மாய உலகம்னும், நான் அதிகமா பாடம் எடுக்கறதாவும், அதனால என் தொண்டை கிழியறதை தவிர கிஞ்சித்தும் எந்த பயனும் இல்லைனும், இனிமே நான் அதிகமா பாடம் எடுக்க கூடாதுனும் எழுதி வெச்சிட்டான்.

இதுக்கு மேல உங்களுக்கு தோன்றதை நீங்க பின்னூட்டத்துல சொல்லுங்க :)

பி.கு: இது எல்லாம் வாத்தியாருங்க சொல்ற மாதிரி இருக்கறதால கொஞ்சம் அவன், இவனு இருக்கும். யாரும் தப்பா எடுத்துக்காதீங்க. தப்பா நினைச்சா சொல்லிடுங்க... நீக்கிடறேன் :)

ஆடு புலி ஆட்டம் - 17

நல்ல படியா ட்ரீட் முடிச்சி வீட்டுக்கு வந்தாச்சுங்க. பயப்படற அளவுக்கு பெருசா எதுவுமாகல. இருங்க தினேஷ்கிட்ட இருந்து ஃபோன் வருது.

"சொல்லு தினேஷ். இப்ப தான் வீட்டுக்கு வந்தேன்"

"எதுவும் பிரச்சனையில்லையே?"

"எதுவுமில்ல. எல்லாரும் ஜாலியா பேசிட்டு இருந்தாங்க"

" மறுபடியும் பசங்க எல்லார்கிட்டயும் நீ நல்லா பேசினது நல்லதுக்கு தான். பின்னாடி இந்த பசங்க எல்லாம் தேவைப்படுவாங்க"

"ஆமாம். நானும் அதனால தான் எல்லார்கிட்டயும் பழைய படியே ஜாலியா பேசிட்டு இருந்தேன்."

"எதுவும் சந்தேகப்படற மாதிரி நடக்கல இல்ல"

"இல்ல. ஐயோ ஒண்ணு மறந்துட்டேன். கிஷோர் ஒரு பொண்ணுக்கிட்ட பேசிட்டு இருந்தான். திடீர்னு அவன் ஃபோன் சார்ஜ் தீர்ந்துடுச்சினு என் ஃபோனை வாங்கிட்டு கீழ போயிட்டான். ஒரு பத்து நிமிஷம் கழிச்சி தான் வந்தான்"

"பொண்ணுகிட்ட தான் பேசினான்னு நல்லா தெரியுமா?"

"ஆமா. நான் கூட பேசினேன்"

"சரி அந்த பொண்ணு நம்பர் எனக்கு சொல்லு"

"ஏன்?"

"எதுக்கும் அந்த நம்பருக்கு பூத்ல இருந்து பண்ணி கன்ஃபர்ம் பண்ணிக்கலாம். நம்ம ஜாக்கிரதையா இருக்கறது நல்லது"

"இரு பார்த்து சொல்றேன்"

"ஹ்ம்ம்ம்"

"தினேஷ் அதுல எந்த நம்பரும் இல்லை. கால் ஹிஸ்டரி எல்லாம் டெலிட் பண்ணிட்டான் போல"

"அதக்கூட நீ நோட் பண்ணலயா?"

"அவன் ஃபோன் பேசிட்டு வந்தவுடனே எல்லாரும் அவனை ஓட்டினாங்க. நான் அதுல மறந்து போயிட்டேன்"

"ஹிம்ம்ம்... அவன் மத்தபடி எப்படி பேசினான்?"

"அவன் நல்லா தான் பேசினான். அவன் மேல எதுவும் சந்தேகப்படற மாதிரி இல்லை"

"சரி. எப்படியும் அவன் வேற ஏதாவது நம்பர் தேடிருந்தாலும் கிடைச்சிருக்காது. ஒரு வேளை அந்த பொண்ணு நம்பர் தேவையில்லாம உன் செல்ஃபோன்ல இருக்க வேண்டாம்னு டெலிட் பண்ணிருக்கலாம்"

"வேற எதுவும் பிரச்சனையிருக்காதில்ல"

"வேற எதாவது பிரச்சனை பண்ணா அந்த கிஷோரை கவனிச்சிக்கலாம்"

"என்ன சொல்ற தினேஷ்?"

"அவன் என்னைக்கு ஆன் சைட் போறேனு சொல்லியிருக்கான்?"

"இன்னும் நாலு நாள்ல கிளம்பறேனு சொல்லியிருக்கான்"

"ஒரு வாரம் கழிச்சி ஃபோன் பண்ணுவோம். அப்படி அவன் போகலைனு தெரிஞ்சா அப்பறம் அவனை கவனிச்சிக்கலாம்"

"தினேஷ், அப்படி ஏதாவதுனா நாம பேசாம எஸ்கேப்பாகி ஊருக்கு போயிடலாம்டா. எப்படியும் மாசம் ரெண்டு லட்சம் வருதில்லை. உனக்கு தேவையானதை நம்ம ஏரியாவுலயே மாசம் மாசம் ஏற்பாடு பண்றேன். கிஷோர் கொஞ்சம் பெரிய இடம்டா"

"ஒருத்தனுக்கு பயந்து ஊருக்கு ஓடறதா? பூர்ணிமா ஏற்படுத்துன காயத்துக்கு எனக்கு மருந்து வேணும் வெற்றி. அது இல்லாம என்னால இருக்க முடியாது"

"எனக்கு புரியுது தினேஷ். இருந்தாலும்..."

"எதுவும் பேசாத. பிரச்சனை வந்தா நான் பாத்துக்கறேன். உனக்கு பணம் கிடைக்குதில்லை. எனக்கு மருந்து கிடைக்கணும். அவ்வளவு தான். நம்ம ஊர்ல இருக்கறது எல்லாம் எனக்கு மருந்து இல்லை. இந்த ஊர்ல, இந்த வேலை செய்யறதுங்க தான் எனக்கு மருந்து. புரிஞ்சிதா?"

"சரி. ஏதாவது பிரச்சனைனா உனக்கு சொல்றேன். இனிமே எதுக்கும் ஜாக்கிரதையா இருக்கேன். நீ தூங்கு"

"சரி. நாளைக்கு பார்க்கலாம்"

"சரி"

எப்படி இருந்தவன் இப்ப எப்படி ஆயிட்டான் பார்த்தீங்களா? அவனை என கூடவே வெச்சிக்கனும்னு சொல்லி நான் அவனுக்கு கொடுத்த மருந்தே இப்ப எவ்வளவு பிரச்சனையாகிடுச்சி பாருங்க. இன்னும் அவனுக்கு முதல் தடவை கொடுத்தது ஞாபகமிருக்கு. அந்த பொண்ணு பேரு விஜயலக்ஷ்மி. குமாருக்கு பேச சொல்லி அன்னைக்கு எழுதி கொடுத்ததே நான் தான். தினேஷ்க்கு கூட தெரியாது. அவன் பேசனது இன்னும் என் கண்ணு முன்னாடியே இருக்கு.

"ஹலோ"

"ஹலோ. யார் பேசறது?"

"நாங்க தான் பேசறோம். நாங்க எல்லாரும் நாளைக்கு ஊரைவிட்டு போறோம்"

"தயவு செஞ்சி என்னை விட்டுடுங்களேன். ப்ளீஸ்"

"அதான் நானும் சொல்றேன். இது தான் உனக்கு கடைசி ஃபோன். நாளைக்கு விடிய காலைல நாங்க இந்த ஊரைவிட்டு போறோம். எங்களுக்கு அவசரமா காசு தேவைப்படுது. இதுக்கு மேல உனக்கு எப்பவுமே ஃபோன் பண்ண மாட்டோம். நீ பயப்பட வேண்டாம். நீ காசு கொடுக்கும் போது எடுத்த ஃபோட்டோ எல்லாம் கூட உனக்கு கொடுத்திடறோம். எங்களுக்கு பத்தாயிரம் இப்ப அவசரமா தேவைப்படுது"

"இந்த நேரத்துல நான் எங்க போவேன்"

"இப்ப வேணாம். நாளைக்கு காலைல ஒரு அஞ்சரை மணிக்கா நாங்க சொல்ற இடத்துல வந்து கொடுத்துடு. எங்களுக்கு ஏழு மணிக்கு ட்ரெயின். நீ காசு கொடுக்கறதை வெச்சி தான் நாங்க ஊருக்கு போக முடியும். நீ வரலைனா அப்பறம் ரெண்டு பேருக்குமே கஷ்டம். எவ்வளவோ கொடுத்துட்ட. கடைசி பத்தாயிரம் தான். இதுக்கு மேல உன்னை தொந்தரவு பண்ண மாட்டோம்"

"நிஜமா சொல்றீங்களா?"

"ஆமா. சத்தியமா சொல்றோம். நாளைக்கு காலைல ஒரு அஞ்சரை மணிக்கா கலாசிப்பாளையத்துல இருக்கற ராஜூ கௌடா தெருவுல மூணாவது ஸ்ட்ரீட்ல இருக்கற ஹூசைன் லாட்ஜ் பக்கத்துல வா. நானே வந்து உன்கிட்ட எல்லா சாட்சியையும் கொடுத்துட்டு காசு வாங்கிக்கறேன்"

"அந்த இடத்துக்கு எல்லாம் நான் வர முடியாது. நீங்க வேணா மடிவாலா வந்துடுங்களேன். நான் உங்களுக்கு பணம் எடுத்து தரேன்"

"நீ என்ன பண்ணனும்னு நான் சொல்றேன். நான் என்ன பண்ணனும்னு நீ சொல்லக்கூடாதுனு சொன்னது மறந்து போச்சா? நாங்க இறங்கி வந்துருக்கோம்னு மேல ஏறலாம்னு நினைச்ச உனக்கு தான் விபரீதம். ஒழுங்கா பஸ் பிடிச்சி வா. மார்க்கெட் போற எல்லா பஸ்ஸும் அங்க தான் வரும். வேற யாரையும் கூட்டிட்டு வந்தா நான் வெளியவே வர மாட்டேன். நீ காசோட வரலைனா அப்பறம் உன் வாழ்க்கைலயே பண்ற பெரிய தப்பு இது தான். மறந்துடாத. சரியா காலைல அஞ்சரை மணி"

ஹூசைன் லாட்ஜ் பக்கத்துல தான் முத்து லாட்ஜ். அதுல தான் நம்ம பசங்க குமாரும், துரையும் வேலை செய்யறானுங்க. ரெண்டுத்துக்கும் நடுவுல ஒரு ரெண்டு அடி சந்து இருக்கும். அது சாக்கடை தண்ணி வரதுக்காக ரெண்டு லாட்ஜ் காரங்களும் விட்ட இடம். அந்த சந்தை மறைக்கறதுக்கு ஒரு கதவும் இருக்கும். அது எப்பவும் பூட்டி தான் இருக்கும். அந்த சந்து வழியா போனா முத்து லாட்ஜ் பின் பக்க காம்பௌண்ட் போக முடியும். காம்பௌண்டுக்கும் பில்டிங்கும் நடுவுல நாலு அடி இடம் இருக்கும். அதுல இருந்து சுலபமா வராண்டாவுக்கு போகலாம். அங்க முதல் ரூம் காலியா தான் இருந்துச்சு.

அந்த விஜி பொண்ணு எதிர்பார்த்த மாதிரியே பயந்துக்கிட்டே அந்த லாட்ஜ் பக்கத்துல வந்துட்டு இருந்தா. அங்க இருந்த நாயிங்க கூட தூங்கிட்டு தான் இருந்துச்சு. சரியா அந்த சந்து பக்கத்துல குமார் நின்னுட்டு இருந்தான். அந்த சந்து கதவு திருந்துருந்துச்சு.

அவ பயந்துக்கிட்டே காசை ஹேண்ட் பேக்ல இருந்து எடுக்கற நேரம் பார்த்து பின்னாடி இருந்து வந்த துரை அவ முகத்துல க்ளோரோஃபார்ம் கலந்த துண்டை வெச்சி அழுத்தினான். அப்படியே குமார் அவ காலை பிடிச்சி தூக்கிட்டு சந்துக்குள்ள போயிட்டானுங்க. உள்ள போனவுடனே துரை அந்த கதவை அடைச்சிட்டான். மொத்தமா இதெல்லாம் பத்து நொடிக்குள்ள நடந்துடுச்சு


ஏழு மணிக்கு தினேஷை நான் தான் லாட்ஜிக்கு கூப்பிட்டு வந்தேன். அவனுக்கு என்னனு புரியவே இல்லை. அந்த ரூமுக்கு கூப்பிட்டு போய் கதவை மூடினேன். உள்ள கட்டில்ல விஜி அரை மயக்கத்துல இருந்துச்சு. அவனுக்கு ஒரே அதிர்ச்சி.

"எனக்கு நீ எவ்வளவோ உதவி பண்ணற. அதான் உனக்கு என் கிப்ட்"

"இல்லை வெற்றி. எனக்கு இதுல எல்லாம் இண்ட்ரஸ்ட் இல்லை. அந்த பொண்ணை விட்டுடு"

"தினேஷ். பூர்ணிமா உன்னை எப்படி அசிங்கப்படுத்தினா. இந்த பொண்ணுங்க எல்லாரும் இப்படி தான். உன் வலிக்கு இது தான் மருந்து. நான் சொல்றேன். கேளு. நீ ஆடா இருந்தா உன்னை அடிப்பாங்க. நீ புலியா இரு" சொல்லிட்டு அவனை உள்ள விட்டுட்டு வெளிய வந்து கதவை மூடினேன்.

ஒரு மணி நேரம் கழிச்சி தினேஷ் வந்தான்.

"நீ சொன்னது சரிதான். என் வலிக்கு இது தான் பெஸ்ட் மருந்துனு நானும் நினைக்கிறேன். இப்ப நான் உலகத்தையே ஜெயிச்ச மாதிரி சந்தோஷமா இருக்கேன்... I am the God"

அவன் முகத்துல ஒரு வெறி தெரிஞ்சிது. அது தான் எனக்கும் வேணும்.

"வெற்றி, அடுத்த ஆடு எப்ப கிடைக்கும்?"

(ஆட்டம் தொடரும்...)

Wednesday, August 27, 2008

கவுண்டரும் கடையேழு வள்ளல்களும்

முன்குறிப்பு: சிரிக்க மட்டுமே...

சொர்க லோகத்தில் இருக்கும் கடையேழு வள்ளல்களான பாரி ,எழினி , காரி , ஓரி , நள்ளி , பேகன் , மலையன் ஆகியோருள் யார் சிறந்தவர் என்று வாக்குவாதம் ஏற்படுகிறது. அந்த நேரத்தில் அங்கே வருகிறார் நாரதர்.

அவரிடம் சென்று அவர்கள் நாரதரிடம், எங்களுள் சிறந்தவர் யார் என்று தாங்கள் தான் சொல்ல வேண்டும் என்று வேண்டுகின்றனர்.

நாரதர்: வள்ளல் சிகாமணிகளே!!! எனக்கு கலகம் செய்துதான் பழக்கமே தவிர, தீர்ப்பு சொல்லி பழக்கமில்லை. அதனால் நீங்கள் சரியாக தீர்ப்பு சொல்லும் யாரிடமாவது செல்லலாம்.

பாரி: நான்முகன் புதல்வனே!!! இந்த கடினமான வழக்கிற்கு தீர்ப்பு சொல்ல தகுதியானவரை நீரே கண்டுபிடித்து சொல்ல வேண்டும்.

நாரதர்: மன்னர் மன்னா!!! மேலுலகில் அனைவரும் பிஸியாக உள்ளனர். அதனால் பூவுலகில் இருக்கும் ஒருவரை நீங்கள் அணுகலாம்.

காரி: மூவுலகில் பவனம் வருகின்ற மூர்த்தியே!!! பூவுலகில் இதற்கு சரியாக தீர்ப்பு வழங்கும் தகுதி படைத்தவர் யார் என்றும் நீரே சொல்ல வேண்டும்.

நாரதர்: தானத்தில் சிறந்தவனே!!! பூலோகத்தில் இதற்கு தீர்ப்பு சொல்ல பல பேர் இருக்கிறார்கள். இப்போழுது யார் ஃபிரியாக இருக்கிறார்கள் என்று என் ஞான திருஷ்டியால் பார்த்து சொல்கிறேன்.

நாரதர் தன் ஞான திருஷ்டியால் பார்க்கிறார்.

நாரதர்: குப்புசாமி வாத்தியார்னா பாடம் சொல்லி குடுக்குற வாத்தியார் இல்ல, சிலம்பம் சொல்லி குடுக்குற வாத்தியார்னு ஊருக்கே தெரியாத உண்மையை கண்டுபிடிச்ச "சின்ன கவுண்டர்" தற்போது அரசியலில் பிஸியாக இருக்கிறார்.

கடையேழு வள்ளல்கள்: ஐய்யய்யோ!!!

நாரதர்: கவலைப்பட வேண்டாம். இதை போல் பல பேர் இருக்கிறார்கள்.

மீண்டும் ஞானதிருஷ்டியால் பார்க்கிறார்.

நாரதர்: பைனான்ஸ் கம்பெனில பணத்த போட்டு ஏமாந்தவங்களுக்கு "மழ நிக்கறதுக்குள்ள" னு சொல்லி பணத்தை வாங்கி கொடுத்த ரெட் அஜித்தை காணவில்லை.

க.வ: ஓ!!! நோ

நாரதர்: சரி இதற்கு சரியான ஆள் நம்ம நாட்டமையோட 3வது பங்காளி கவுண்டர்தான்.

பேகன்:பிரபோ!!! அவர் அவ்வளவு பெரிய தில்லாலங்கடியா???

நாரதர்: என்ன இப்படி கேட்டுவிட்டீர்கள். நாட்டாமை தம்பி பசுபதி டீச்சர வெச்சிருந்ததை கண்டு பிடித்தது அவர்தான்.

ஆய்: ஓ!!! அவ்வளவு திறமைசாலியா??? அப்ப அவரிடமே செல்வோம்... அனைவரும் என்ன சொல்கிறீர்கள்???
அனைவரும் ஒத்துக்கொண்டு கவுண்டர் வீட்டுக்கு செல்கிறார்கள்.

வெளியே அவருடைய தந்தை செந்திலை பார்த்து விஷயத்தை சொல்கிறார்கள். செந்தில் அவர்களை உள்ளே அழைத்து செல்கிறார்.

செந்தில்: மை சன்!!!

கவுண்ட்ஸ்: என்னடா பைசன்!!! சவுண்டு கொடுக்கற???

செந்தில்: மை சன்! விருந்தாளிங்க வந்துருக்காங்க... அவுங்க முன்னாடி என்னை அவமானப்படுத்தாதீங்க???

கவுண்ட்ஸ்: உனக்கு எங்க இருந்து வந்துச்சுடா மானம்? அதுசரி அது யார்டா நம்ம வீட்டுக்கு விருந்தாளி???

செந்தில்: கடையேழு வள்ளல்களும் நம்ம வீட்டுக்கு உங்கிட்ட ஒரு வழக்கு சம்பந்தமா வந்துருக்காங்க!!! நீ தான் தீர்ப்பு சொல்லனுமாம்...

கவுண்ட்ஸ்: சத்தியராஜ் நடிச்ச படம் வள்ளல் தெரியும். அதுயார்டா கடையேழு வள்ளல்???

செந்தில்: கடைசியா இருந்த 7 வள்ளல்கள்.

கவுண்ட்ஸ்: அது சரி... நம்மகிட்ட தீர்ப்புகாக வந்துருக்காங்க... அதனால ஐ கிவ் ரெஸ்பெக்ட்யா!!! பிரச்சனை என்ன சொல்லுங்க???

பாரி: எங்களில் யார் சிறந்த கொடையாளி என்று தாங்கள்தான் சொல்ல வேண்டும்.

கவுண்ட்ஸ்: ஓ!!! இது ரொம்ப சாதாரண விஷயம்... சரி நீங்க என்ன என்ன செஞ்சிங்கனு சொல்லுங்க.... ஐ கிவ் தீர்ப்பு...

பாரி: நான் தான் பாரி... பரம்பு மலை அரசன்...

கவுண்ட்ஸ்: அதுக்கு என்ன இப்ப??? நீ என்ன பண்ணனு சொல்லு

பாரி: முல்லை கொடிக்கு தேர் கொடுத்தேன்...

கவுண்ட்ஸ்: எது நம்ம மூணாவது சந்து முக்கு வீட்ல இருக்கே அந்த முல்லைக் கொடிக்கா????

செந்தில்: மை சன்... அவுங்கள பத்தி தப்பா பேசாதீங்க... அவுங்க உங்களுக்கு சித்தி முறை ஆகறாங்க...

கவுண்ட்ஸ்: டேய் தகப்பா... நீ அவளையும் விட்டு வெக்கலயா... இவுங்க எல்லாம் போகட்டும்... உனக்கு இருக்கு

பாரி: இல்லை இல்லை.... நான் சொன்னது செடி, கொடி வகையை சார்ந்த முல்லை கொடி... அது படற வழியில்லாமல் வாடியதை பார்த்து என் மனம் பதைத்ததால் அதற்கு நான் சென்ற தேரை பரிசாக வழங்கினேன்

கவுண்ட்ஸ்: ஏன்டா... ஆனா ஊனா யாரங்கே யாரங்கேனு கையை தட்டுவீங்க... இதுக்கு ஒரு தடவை யாரங்கேனு கைய தட்டி குச்சி நட சொல்றத விட்டுட்டு அவ்வளவு காஸ்ட்லி தேர விட்டுட்டு வந்துருக்க... அது என்ன தேர்ல ஏறி நகர்வலமா வர போகுது. உனக்கு மூளையே இல்ல. யு ஆர் அன்செலக்டட்... நெக்ஸ்ட்...

பேகன்: என் பெயர் பேகன். குளிரில் நடுங்கிய மயிலுக்கு போர்வை வழங்கினேன்.

கவுண்ட்ஸ்: யாரு 16 வயதினிலேல வருமே அந்த மயிலுக்கா???
16 வயது வந்த மயிலே மயிலே
என்னை பாடா படுத்துதடி மயிலே மயிலே

கவுண்டர் தன்னுடைய வழக்கமான பாணியில் கையையும் காலையும் தூக்கி ஆட ஆரம்பிக்கிறார்.

பேகன்: இல்லை இல்லை... நான் சொல்வது பறவை இனத்தை சேர்ந்த மயில்.

கவுண்ட்ஸ்: ஏன்டா உங்க ரவுசுக்கு எல்லாம் அளவே இல்லையா??? அது அப்படியே முச்சு முட்டி செத்துருக்கும்... அப்பறம் கொன்றால் பாவம் தின்றால் தீரும்னு மயில் கறி சாப்பிட்டிருப்பீங்க... யு ஆர் ஸ்ட்ரிக்ட்லி அன்செலக்டட்... நெக்ஸ்ட்

ஆய் எழுனி: என் பெயர் ஆய் எழுனி.

கவுண்ட்ஸ்: என்ன மேன் பெர் இது??? இது பேரா??? இது பேரா??? யு ஆர் ஸ்ட்ரிக்ட்லி அன்செலக்டட்

செந்தில்: மை சன்... அதுக்குள்ள அன்செலக்ட் பண்ணிட்டீங்க...

கவுண்ட்ஸ்: ஏன்டா இது என்ன வாய்ல வர விஷயமா??? ஏன் ஒரு அஜித், விஜய், சூர்யானு பேர் வெச்சிக்க வேண்டியதுதான?... அவன் ஸ்ட்ரிக்ட்லி அன்செலக்டட்.

மற்ற நால்வரும் அவர்கள் செய்த தான தர்மங்களை சொல்ல அஞ்சுகிறார்கள்.

கவுண்ட்ஸ்: ஹு இஸ் தி நெக்ஸ்ட்???

செந்தில்: மை சன். அவுங்க எல்லாம் உங்ககிட்ட சொல்றதுக்கே பயப்படறாங்க...

கவுண்ட்ஸ்: ஆமாம் இவனுங்க என்ன பண்ணிருப்பானுங்கனு தெரியாதா??? இவனுங்கள பத்தி பாட்டு பாடற 4-5 அள்ளக்கைங்கள வச்சிக்கிட்டு அவனுங்களுக்கு மக்கள் வரி பணத்துல இருந்து வர காச அள்ளி வீசிருப்பானுங்க... இவுங்கள எல்லாம் பாத்துதான் இப்ப இருக்குற அரசியல்வாதிங்க எதுவும் தெரியாத ஜால்ரா கேஸ்ங்கல எல்லாம் மந்திரி ஆக்கறானுங்க...

எவன் ஒருத்தன் தான் சொந்தமா சம்பாதிக்கிற காசுல மத்தவங்களுக்கு உதவறானோ அவன் தான் உண்மையான வள்ளல்... இப்படியே எல்லாம் ஓடி போயிடுங்க...

செந்தில்: நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லு....

கவுண்ட்ஸ்: ஏன்டா அந்த முல்லைக்கொடி பொண்ணு அல்லிராணிய எப்படியாவது நான் கரெக்ட் பண்ணலாம்னு பாத்தா அவளை எனக்கு தங்கச்சியாக்கிட்ட... உன்ன நான் இன்னைக்கு பலி போடாம விடமாட்டன்...

கவுண்டர் துரத்த செந்தில் எஸ்கேப் ஆகிறார்.

Tuesday, August 26, 2008

ஆடு புலி ஆட்டம் - 16

அசோக் அன்னைக்கு சாதாரணமா சொல்லிட்டு வந்துட்டாங்க. ஆனா அதை எங்க தேவைக்கேத்த மாதிரி கஸ்டமைஸ் பண்றதுக்கு ரெண்டு பேர் சேர்ந்து வேலை செஞ்சும் மூணு நாள் ஆகிடுச்சு. மூணு நாள்ல நான் ரெண்டு நாள் க்ளாஸ் வேற போகலை. நான் வரலைனு நித்யாவும் போகலை. அவள்ட சரியா பேசவும் முடியல. ரொம்ப கோபமா இருக்கா. அதுக்கு தான் இன்னைக்கு க்ளாஸ் போயிட்டு ரெண்டு பேரும் வெளிய சாப்பிட்டு போகலாம்னு ப்ளான்.

க்ளாஸ்ல ஒரு வார்த்தைக்கூட பேசாம அமைதியா இருக்கா. என்ன ஆகுமோ தெரியல. நான் வேற வெற்றி, ப்ரேம், தினேஷ் எல்லாம் மத்தவங்க கூட எப்படி பேசறாங்கனு பார்க்கறதுலயே இண்ட்ரஸ்டா இருந்ததால அவளுக்கு இன்னும் கோபம் போல.

ஒரு வழியா கிருஷ்ணா கபே வந்து முதல் தடவை உட்கார்ந்த இடத்துலே உட்கார்ந்துட்டோம். நான் எனக்கு முதல்ல இட்லி சொல்லிருக்கேன். அடுத்து இடியாப்பம் சொல்லலாம்னு ப்ளான். அவ மசால் தோசை சொல்லிருக்கா. பேசவே மாட்றா. அமைதியா இருக்கா.

"நித்யா, ஏன் இப்படி அமைதியா இருக்க? என்னாச்சு?"

"ஒண்ணுமில்லை"

அவளோட குரல்ல ஜீவனே இல்லாம இருக்கு.

"சொல்லு. ஏன் இப்படி அமைதியா இருக்க? மறுபடியும் வினோதினி அக்கா ஏதாவது தப்பா முடிவெடுத்தாங்களா?"

நான் கேட்டதும் என்னை முறைக்க ஆரம்பிக்கிறா. இந்த பொண்ணுங்க என்ன நினைக்கிறாங்கனே புரிய மாட்டீங்குதே.

"உனக்கு எப்ப பார்த்தாலும் அதே யோசனை தானா?"

"ஏன்? அதுக்கு இப்ப என்ன?"

"உனக்கு இப்பவெல்லாம் என் ஞாபகமே இருக்கறதில்லை. ரெண்டு நாளா எனக்கு ஃபோன் கூட பண்ணல. அதெல்லாம் அக்கறை இருக்கறவங்களுக்கு தானே ஞாபகம் இருக்கும்"

"இப்ப அது தான் பிரச்சனையா? உன் ஞாபகம் எப்பவும் இருக்கு. ஆனா இப்ப முதல் ப்ரையாரிட்டி வினோதினி அக்கா பிரச்சனை. அதுக்கு அசோக் ரொம்ப கஷ்டப்பட்டுட்டு இருக்கான். நான் உதவலனா எப்படி?"

"எப்பவும் சாப்பிட போறதுக்கு முன்னாடி ஃபோன் பண்ணுவ. ரெண்டு நாளா அது கூட பண்ணல"

ரெண்டு நாளா ஆபிஸுக்கு கூட போகலனு இவக்கிட்ட எப்படி சொல்றது? நேரம் காலம் பாக்காம வேலை செஞ்சி அதை முடிச்சோம். டெஸ்டிங் பண்றதுக்கே ஒரு நாள் முழுசா ஆயிடுச்சு. அதுலயும் எத்தனை விதமா பண்ணோம்னு எங்களுக்கு தான் தெரியும். சரி சமாளிப்போம்.

"அது இல்ல. நான் உன் கூட போன் பண்ணி பேசிட்டு இருந்தா, வைக்கவே மனசு வராது. அசோக் பாவம். அதான்"

"நீ முந்தா நேத்து ஃபோன் பண்ணுவனு மதியம் அஞ்சு மணி வரைக்கும் வெயிட் பண்ணேன். அப்பறம் வினிதா என்னனு விசாரிச்சவுடனே சாப்பிட்டேன்"

"லூசா நீ? நாளைக்கு கல்யாணமாகி போனா என்ன பண்ணுவ?"

"அப்பவும் வெயிட் பண்ணுவேன்"

"உன் புருஷன் கன்னத்துலயே ரெண்டு கொடுப்பான்"

"கொடுத்தா நான் வாங்கிக்கறேன். அதுல உனக்கு என்ன பிரச்சனை? இனிமே நீ ஒழுங்கா சாப்பிட போறதுக்கு முன்னாடி ஃபோன் பண்ணு"

"என்ன பிரச்சனையா? இந்த மாதிரி நான் சாப்பிட போறதுக்கு முன்னாடி ஒரு பொண்ணுக்கு கால் பண்றேனு தெரிஞ்சா என் பொண்டாட்டி என் கன்னத்துல ரெண்டு கொடுப்பா"

"பொண்டாட்டி தானே. கொடுத்தா வாங்கிக்கோ"

"அடிப்பாவி. சரி. இனிமே நான் உனக்கு கால் பண்றேன். அப்படி இல்லைனாலும் ஒரு மணிக்குள்ள நான் ஃபோன் பண்ணலைனா சாப்ட்ரு. நான் ஏதாவது முக்கியமான வேலைல இருந்தா எனக்கு அப்பறம் உன் யோசனைலயே வேலை செய்ய முடியாம போயிடும். என்ன சரியா?"

"ஒரு SMSஆவது பண்ணிடேன். ப்ளீஸ்"

"சரி. இப்ப ஒழுங்கா சாப்பிடறயா?"

"கிருஷ்ணா கபே வந்து நல்லா சாப்பிடாம போவனா? நீ ஒழுங்கா சாப்பிடு"

இவளை சமாளிக்கறது ரொம்ப கஷ்டம் தான் போல...

---------------

ரொம்ப நாளைக்கு அப்பறம் கிஷோர்கிட்ட இருந்து ஃபோன் வந்திருக்கு. ஆன் சைட் போறேன் கூட படிச்ச பசங்க கொஞ்ச பேருக்கும் எனக்கும் சேர்த்து ட்ரீட் கொடுக்கறேனு சொல்றான். நாளைக்கு சாயந்திரம் மடிவாலால இருக்கற மயூராக்கு ஏழு மணிக்கா வர சொல்றான். எதுக்கும் தினேஷ்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு போகலாம்.

"தினேஷ், நம்ம இன்ஸ்டிடியூட்ல ஒரு பத்து மாசத்துக்கு முன்னாடி கிஷோர்னு ஒருத்தன் ஜாவா படிச்சானே. ஞாபகமிருக்கா?"

"ஏன்?"

"அவன் ஏதோ ஆன்சைட் போறேன். அதனால ட்ரீட் கொடுக்கறேனு நாளைக்கு வர சொல்றான். அதான் போலாமானு உன்கிட்ட கேக்கலாம்னு பார்த்தேன்"

"அவன்கூட இதுக்கு முன்னாடி போயிருக்கயா?"

"அவன் கூடனு தனியா போனதில்லை. அவனுங்க நாலஞ்சி பசங்க சேர்ந்து வேலை கிடைச்சப்ப எனக்கு தண்ணி ட்ரீட் வெச்சானுங்க. நான் தான் அப்ப கேட்டேன்"

"அப்படினா ஏற்கனவே அந்த பசங்களோட வெளிய போயிருக்க?"

"ஆமாம்"

"உன் ஃபோன்ல நம்ம பசங்க குமார், துரை நம்பர் எல்லாம் எதுவுமில்லை தானே?"

"நீ தான் அந்த நம்பர் எல்லாம் ஸ்டோர் பண்ணி வைக்க கூடாதுனு சொல்லிருக்கயே. அதனால அவுங்க நம்பர் எல்லாம் மனப்பாடம் தான் பண்ணி வெச்சிருக்கேன். எங்கயும் எழுதிக்கூட வைக்கல"

"நல்லது. அப்ப போ"

பசங்க அப்ப மாதிரியே தான் இப்பவும் அரட்டை அடிச்சிட்டு இருக்கானுங்க. என்கிட்டயும் அதே மாதிரி தான் பேசறானுங்க. கிஷோர் ஃபிரான்ஸ் போறானாம். அங்க இருக்கற பொண்ணுங்க எல்லாம் பயங்கர மாடலா இருப்பாங்களாம். கொடுத்து வெச்ச பையன். நம்ம தினேஷ் மட்டும் அங்க இருந்தான்னா அவ்வளவு தான்.

ஆர்டர் பண்ண ஆரம்பிச்ச பத்து நிமிஷத்துல இருந்து கிஷோர் ஃபோன்லயே பேசிட்டு இருக்கான். யாரா இருக்கும்? இவ்வளவு நேரம் பேசிட்டு இருக்கான்.

"வெற்றி அண்ணா, என் ஃபோன் சார்ஜ் தீர மாதிரி இருக்கு. உங்க ஃபோனுக்கு பண்ண சொல்லட்டுமா?"

"சரி பண்ண சொல்லு. இதான் நம்பர் 98********" அவன் என் நம்பரை கேட்டு அவன் ஃபோன்ல சொல்லிட்டு இருக்கான்.

இருங்க கால் வருது.

"ஹலோ" ஒரு பொண்ணு குரல் தான் கேக்குது. அவன்கிட்ட கொடுத்துடலாம்.

"வெற்றி அண்ணா பொண்ணு தான?" ரமேஷ் தான் கேட்டான்

"ஆமாம்டா. ஏதோ பொண்ணுக்கிட்ட தான் இவ்வளவு நேரம் கடலை போட்டுட்டு இருக்கான்." நான் சொல்லி முடிச்சதும் எல்லாரும் "ஓ"னு சத்தம் போட்றானுங்க. எல்லாரும் திரும்பி பாக்கறாங்க

"அண்ணா நான் ஒரு அஞ்சு நிமிஷத்துல வந்துடறேன். எல்லாம் சாப்பிட்டு இருங்க" சொல்லிட்டு என் பதிலை எதிர்பார்க்காம ஃபோன் பேசிட்டே கீழ இறங்கி போயிட்டான். சரி சின்ன பையன். எப்படியும் வந்து பில் கட்டினா போதும்.

------

ஒரு வழியா அசோக் சொன்ன மாதிரி வெற்றியை கூப்பிட்டு வந்து அவன் செல்ஃபோனை எடுத்துட்டு கீழ வந்துட்டேன். பக்கத்துல இருக்கற ஒரு கடைல அசோக்கும், ரவியும் லேப் டாப்போட காத்துட்டு இருக்காங்க.

"கிஷோர். குட். அந்த ஃபோனை குடு" அசோக் டென்ஷனா இருக்கான். அவனை விட நான் டென்ஷனா இருக்கேன்.

அசோக் அந்த ஃபோனை USBல கணெக்ட் பண்ணி லேப்டாப்ல இருந்து ஏதோ சாப்ட்வேர் இன்ஸ்டால் பண்ணான். ஒரு தடவை அவன் செல்ஃபோன்ல இருந்து கால் பண்ணான். சும்மா டெஸ்ட் டெஸ்ட்னு சொன்னான். கட் பண்ணிட்டு. அவன் லேப்டாப்ல ஒரு ஃபோல்டரை திறந்தான். அதுல ஒரு வேவ் ஃபைல் இருந்தது. அதை ஓப்பன் பண்ணான். அது "டெஸ்ட் டெஸ்ட்" என்றது.

Now we have made this as a Covert Listening Device...

(ஆட்டம் தொடரும்...)

Monday, August 25, 2008

ஆடு புலி ஆட்டம் - 15

ஒரு வழியா அந்த பொண்ணுக்கிட்ட இருந்து இருபதாயிரம் வாங்கியாச்சு. இன்னைக்கு காலைல என்ன பேசினோம்னு நீங்க கேக்கல இல்லை. இதுதான் அவளுக்கு கொடுத்த இண்ஸ்ட்ரக்ஷன்.

"சரியா பத்து மணிக்கு MG ரோட்ல இருக்குற பரிஸ்டா காப்பி ஷாப்புக்கு வர. அங்க மஞ்ச சட்டை கருப்பு பாண்ட் போட்ட ஒரு ஆள் தனியா உக்கார்ந்து காபி குடிச்சிட்டு இருப்பான். நீயும் ஒரு காபி வாங்கிட்டு போய் அவனுக்கு எதிர்ல உக்கார்ந்து காபி குடிக்கற. நீ பாதி குடிச்ச உடனே உன் ஹேண்ட் பேக்ல இருந்து பணம் எடுத்து அவனுக்கு கொடுக்கனும். பணத்தை எந்த கவர்லயும் போட்டு கொடுக்க கூடாது. அதுக்கு அப்பறம் காபி குடிச்சிட்டு அவன் கூடவே எழுந்து வெளிய வர. அவன் போற திசைக்கு எதிர்ல போயிடு. அவ்வளவு தான். எந்த இடத்துலயும் அழக்கூடாது. நீ ஒழுங்கா நடந்துக்கிட்டா நாங்க ஒழுங்கா நடந்துக்குவோம்." அவ்வளவு தான்

பணம் வாங்க குமார் எதுக்கு போனானு பாக்கறீங்களா? என்னையும் தினேஷையும் தான் அந்த பொண்ணுக்கு தெரியுமே. குமாருக்கு அஞ்சாயிரம் ரூபாய். மீதி எல்லாம் எனக்கு தான். குமாரும் அவன் கூட்டாளி துரையும் இங்க ஒரு லாட்ஜ்ல வேலை செய்யறானுங்க.

என்னடா தினேஷுக்கு எதுவும் இல்லைனு யோசிக்கறீங்களா? இன்னும் ஒரு ரெண்டு மாசத்துக்கு அப்பறம் அந்த பணம் கொடுத்த பொண்ணே அவனுக்கு தானே. அதுக்கு மேல அவனுக்கு என்ன வேணும்?

நீங்க பாக்கறதை பார்த்தா தினேஷ் ரொம்ப கெட்டவன்னு நினைக்கிற மாதிரி தெரியுது? அப்படி ஒண்ணும் அவன் ரொம்ப கெட்டவனில்லை. அவன் எந்த பொண்ணையும் ஒரு தடவைக்கு மேல தொட மாட்டான். அதுவும் முதல் தடவை பண்ணனும். அவ்வளவு தான்.

அவனுக்கு பணத்துல ஆசையில்லை. எனக்கு பணம் வேணும். அதனால அவனுக்கு பொண்ணுங்க ஆசையை நான் தான் ஏற்படுத்தினேன். இப்ப என்னை விட பெரிய தப்பை அவன் பண்றான். ஏதாவது மாட்டினா அவனுக்கு தண்டனை அதிகம். அதனால அவன் அதிகமா சிந்திக்கறான். பாதுகாப்பா திட்டம் போடறான். பணத்தோட நான் சந்தோஷமா இருக்கேன்.

தினேஷ் மாதிரி ஒரு புத்திசாலியை நீங்க பார்க்க முடியாது. எங்க கிராமத்துலயே படிச்சி இஞ்சினியரானவன் அவன் தான். அப்பறம் இதே பெங்களூர்ல ஒரு சாப்ட்வேர் கம்பெனில தான் வேலைக்கு சேர்ந்தான். நாலு வருஷம் நல்லா வேலை செஞ்சான்.

அப்ப தான் பூர்ணிமா அங்க சேர்ந்தா. ஆறு மாசத்துக்குள்ள அவனும் பூர்ணிமாவும் காதலிக்க ஆரம்பிச்சாங்க. பூர்ணிமா ரொம்ப அழகு. நல்ல பொண்ணு. ஆனா நல்லா ஊர் சுத்துவா. ஒரு தடவை அவ டீம் பசங்களும் பொண்ணுங்களும் இந்த நாசா பப்புக்கு போய் தண்ணி அடிச்சிருக்குங்க.

அந்த நேரம் பார்த்து அவ டீம்ல இருக்குற ஒரு பொண்ணு தினேஷுக்கு போன் பண்ணி சொல்லிடுச்சு. கோபமா அங்க போன தினேஷுக்கு, பூர்ணிமாக்கும் பப்லயே சண்டை. கோபத்துல அவன் அவளை அடிச்சிட்டான். அதை பார்த்து கோபமான அவ டீமேட் ஒருத்தன் தினேஷை அடிக்க அப்பறம் பப்ல இருந்த எல்லாரும் இவனை போட்டு அடிச்சிட்டாங்க. அன்னைக்கு வேலைக்கு போறதை நிறுத்தினவன் தான். அதுக்கு அப்பறம் பூர்ணிமாவும் இவனுக்கு ஃபோன் பண்ணல.

ஆறு மாசம் ஊர்ல பைத்தியக்காரனாட்டம் சுத்திட்டு இருந்தான். நான் தான் பேசி அவனை நான் வேலை செய்யற ட்ரெயினிங் இன்ஸ்டிடியூட்ல சேர சொல்லி மறுபடியும் பெங்களூர் கூப்பிட்டு வந்தேன். இவன் இன்ஸ்டிடியூட்ல சேர்ந்து பதிமூனு மாசமாச்சு.

நாங்க இந்த வேட்டையை ஆரம்பிச்சி ஒன்பது மாசமாச்சு. இது வரைக்கும் பதினாறு ஆடுங்க மாட்டிருக்குங்க. அதுல பன்னெண்டு ஆடு அவனுக்கு பலி கொடுத்திருக்கேன். இன்னும் நிறைய கொடுப்பேன். அவனுக்கு தெரியாம நான் ஒரு திட்டம் வெச்சிருக்கேன். அது மட்டும் சக்ஸஸாச்சினா இன்னும் ஒரு வருஷத்துல நான் கோடீஸ்வரன் தான்.

எல்லா பொண்ணுங்களுக்கும் நல்லா வேலை கிடைச்சி, கை நிறைய சம்பாதிக்கனும்னு வேண்டிக்கோங்க. என்னடா அவுங்களுக்கு வேலை கிடைக்கனும்னு வேண்டிக்க சொல்றேனு பாக்கறீங்களா. ஆடு கொழுத்தா புலிக்கு சந்தோஷம் தானே.

இருங்க குமார் வந்திருக்கான். பேசிட்டு வரேன்.

"என்ன குமாரு? என்ன பிரச்சனை?"

"அந்த திண்டுக்கல் பொண்ணு போன் நம்பர் மாத்திடுச்சி போல"

"தே@*&%$ மகளுங்க. இவளுகளுக்கு இதே வேலையா போச்சு. மொத மாசம் காசு கொடுத்தவுடனே நம்பர் மாத்திடறாளுங்க. இரு. நம்பர் பிடிச்சி தரேன்"

"சரிண்ணே"

பாருங்க. இதையே தான் எல்லாம் பண்ணுதுங்க. நம்பர் மாத்தினா புது நம்பர் கண்டுபிடிக்க முடியாதா? எப்படியும் நம்பர் மாத்தி ஒரு மாசத்துல கம்பெனி சைட்ல அப்டேட் பண்ணியிருப்பாளுங்க. எங்க இண்ஸ்டிடியூட்ல படிச்சி அங்க வேலைல சேர்ந்திருக்க பசங்களுக்கு சும்மா ஃபோன் பண்ணி வாங்க முடியாதா என்ன?

வேற ஒரு பெரிய கம்பெனில இருந்து ஆஃபர் வந்திருக்கு. அந்த பொண்ணு நம்பர் மாறிடுச்சு போல கொஞ்சம் பார்த்து சொல்லுனு சொன்னா பார்த்து சொல்லிட போறானுங்க. இதெல்லாம் எனக்கு தினேஷ் சொல்லி கொடுத்தது தான். இப்ப புரியுதா நான் ஏன் அவனை இவ்வளவு புகழறனு. கொஞ்சம் இருங்க அந்த திண்டுக்கல் பொண்ணு நம்பர் வாங்கி குமாருக்கு கொடுத்துட்டு வரேன்.

(ஆட்டம் தொடரும்...)

Sunday, August 24, 2008

ஆடு புலி ஆட்டம் - 14

என்னடா இவன் சாதாரண ட்ரெயினிங் இன்ஸ்டிடியூட்ல அசிஸ்டெண்டா இருந்துட்டு இப்படி ஊர்ல நெலமெல்லாம் வாங்கி போடறானு பாக்கறீங்களா? ஒன்றையனா படிப்ப படிச்சிட்டு இவனுங்களே இவ்வளவு சம்பாதிக்கும் போது இவ்வளவு ரிஸ்க் எடுத்துட்டு இருக்கோம். இதுக்கூட இல்லைனா எப்படி?

என்னோட இந்த சந்தோஷமான வாழ்க்கைக்கு முக்கிய காரணம் தினேஷ் தான். எல்லாம் அவனோட ஐடியால தான் ஓடிட்டு இருக்கு. அவனுக்கு ஆரம்பத்துல இருந்தே பணத்துல இஷ்டமில்லை. அறிவிருக்கவன் பணம் சம்பாதிக்கனும் இல்லைனா அவன் அறிவை வெச்சி வேற ஒருத்தவன் பணம் சம்பாதிப்பான். நான் ரெண்டாவத பண்ணிட்டு இருக்கேன். அதுக்காக அவனுக்கு எதுலயுமே இஷ்டமில்லைனு சொல்லிட முடியாது. எனக்கு தேவையான பணத்தை அவன் கொடுக்கறான். அவனை நான் சந்தோஷமா வெச்சிருக்கேன்.

என்னடா இவன் ஏதோ ரொம்ப மர்மமா பேசிட்டு இருக்கானு பாக்கறீங்களா? அப்படி எல்லாம் ஒண்ணுமில்லை. உங்ககிட்ட சொல்லாமலா? ஆனா நான் சொல்றதை மனசோட வெச்சிக்கோங்க. யார்கிட்டயும் சொல்லிடாதிங்க. நான் யாரையும் கொலை பண்ணல. மொத்தமா ஏமாத்தவுமில்லை. எங்க ட்ரெயினிங் இன்ஸ்டிடியூட்ல படிக்கிறவங்க நிறைய பேர் பொய் சொல்லி வேலைக்கு சேராங்க. அவுங்களுக்கு எங்க இன்ஸ்டிடியூட்லயே சர்டிஃபிகேட்டும் அடிச்சி தராங்க.

நான் தான் அந்த சர்டிஃபிகேட்டே பிரிண்ட் அவுட் எடுத்து கொடுக்கறேன். அப்படி ஏமாத்தி பொய் சொல்லி சேரவங்க சம்பளம் மாசம் நாப்பதாயிரம், ஐம்பதாயிரம்னு இருக்கு. அப்படி ஏமாத்தறவன் இவ்வளவு சம்பாதிக்கும் போது, நான் மட்டும் இங்க எதுக்கு இவ்வளவு கஷ்டப்படணும்? இந்த ஊர்ல ஏமாத்தறவன் தான் நல்லா இருக்கான். அதனால நான் அவுங்களை ஏமாத்தி பணம் பறிக்கலாம்னு யோசிச்சேன்.

அதுக்கு தினேஷ் தான் அருமையான யோசனை சொன்னான். பசங்களை மிரட்டலாம்னு என்னோட யோசனை. ஏன்னா இங்க பசங்க தான் அதிகம். பத்துல நாலு பேர் ஏமாந்தாங்கனா கூட மாசம் நாப்பதாயிரம், ஐம்பதாயிரம்னு சம்பாதிக்கலாம்னு நான் யோசிச்சேன். தினேஷ் தான் அது வேண்டாம்னு சொன்னான். பசங்க பத்து பேருக்கு ஃபோன் பண்ணா அதுல ஒருத்தன் கண்டுபிடிச்சாக்கூட பிரச்சனை அதிகமாகிடும்.

பசங்க தப்பு செஞ்சாலும் பயப்பட மாட்டாங்க. பொண்ணுங்களை பிடிக்கலாம். அவுங்க தான் தப்பு செஞ்சா அது வெளிய தெரியக்கூடாது பயப்படுவாங்க. நாலு பசங்களைவிட ஒரு மாசத்துக்கு ஒரு பொண்ணு மாட்டினா போதும். பிரச்சனையில்லாம சம்பாதிக்கலாம்னு அவன் ஐடியா கொடுத்தான். அந்த ஒரு ஐடியா தான் இப்ப நான் மாசம் ரெண்டு லட்சத்துக்கு மேல சம்பாதிக்க வழி பண்ணியிருக்கு.

அப்படி என்னடா மிரட்டுவாங்கனு யோசிக்கறீங்களா? அதெல்லாம் ரொம்ப மிரட்ட மாட்டோம். மணி பத்தரை ஆச்சு. எப்படியும் அந்த பொண்ணு PGக்கு வந்திருக்கும். இதான் சரியான நேரம். இப்ப குமார் ஃபோன் பண்றான் நீங்களே கேளுங்களேன்.

"ஹலோ அகிலாவா?"

"ஆமாம். நீங்க யார் பேசறது?"

"அது இருக்கட்டும். புது வேலையெல்லாம் நல்லா போகுதா?"

"சூப்பரா போகுது. நீங்க யாருனு சொல்லுங்களேன்"

"ஃபேக் போட்டு கம்பெனியை ஏமாத்திட்டு வேலைக்கு போனா எப்படிடீ சூப்பரா போகாம இருக்கும்?"

"நீங்க யாரு? உங்களுக்கு என்ன வேண்டும்?"

"மாசம் நாப்பத்தி மூவாயிரம் சம்பளம் தானே? பொண்ணுங்களுக்கு டேக்ஸ் வேற கம்மியாச்சே. எப்படியும் முப்பத்தி அஞ்சாயிரம் கைக்கு வராது?"

"யார் நீ? உனக்கு என்ன வேண்டும். இந்த பயமுறுத்துற வேலை எல்லாம் என் கிட்ட வேண்டாம். போய் எங்க வேணா சொல்லிக்கோ. மிஞ்சி போனா வேலை போகுமா"

"நீ விருத்தாச்சலம் தானே? உங்க அப்பா ஹிஸ்டரி டீச்சர். அம்மா ஹவுஸ் ஃவைப் தான. நாளைக்கு சாயந்திரம் உன் ஃபோட்டோவோட நீ இப்படி கம்பெனியை ஏமாத்தி வேலைக்கு சேர்ந்திருக்கனு விழுப்புரம் மாலை மலர்ல வரும். உங்க அப்பா, அம்மா பெருமைப்படுவாங்க"

"ஐயோ அப்படி ஏதும் பண்ணிடாதீங்க. உங்களுக்கு என்ன வேணும்? நான் நாளைக்கே வேலையை விட்டுடறேன். அப்படி எதுவும் பண்ணிடாதீங்க"

"முதல் மாசம் சம்பளம் வாங்கிருப்பியே. அந்த ஏமாத்து பணத்தை உன் அப்பனுக்கு கொண்டு போய் கொடுத்துட்டியா?"

"இல்லை. நான் இன்னும் ஊருக்கு போகல. உங்களுக்கு என்ன வேணும்? ப்ளீஸ் சொல்லுங்க"

"சரி உன் சம்பளத்துல இருந்து இருபது ஆயிரம் ரூபாய் எடுத்து ரெடியா வை. எங்க வந்து கொடுக்கனும்னு நாளைக்கு காலைல எட்டு மணிக்கு நான் ஃபோன் பண்ணி சொல்றேன். அதுக்குள்ள ஏதாவது ஏமாத்தலாம்னு யோசிச்சா நஷ்டம் உனக்கு தான்"

"கண்டிப்பா நான் ஏமாத்த மாட்டேன். உங்க அக்கவுண்ட் நம்பர் வேணா சொல்லுங்க. நாளைக்கு காலைலயே ட்ரான்ஸ்ஃபர் பண்ணிடறேன்"

"நான் சொல்றதை மட்டும் நீ செய். இந்த இருபதாயிரத்தோட உன்னை விட்டுடறேன். ஏதாவது தப்பா பண்ணலாம்னு யோசிச்சா உன் வாழ்க்கையே அழிஞ்சிடும். உங்க அப்பா, அம்மாவும் சந்தோஷமா ஊர்ல வாழ முடியாது. அப்பறம் எந்த ஃபிரெண்ட்ஸ்கும் இதை பத்தி ஃபோன் பண்ணி பேசாத. ஏன்னா உன்னை பத்தி சொன்னதே அதுல ஒருத்தன் தான். நீ யாருக்காவது ஃபோன் பண்ணனு தெரிஞ்சா நீ உன் வாழ்க்கையை மறந்துட வேண்டியது தான். உன் ஒரு மாச சம்பளத்துல பாதி பணத்துக்காக நீ உன் வாழ்க்கையையே அழிச்சிக்க மாட்டேனு நினைக்கிறேன்"

"கண்டிப்பா நான் எதுவும் செய்யமாட்டேன்"

"சரி. நாளைக்கு காலைல எட்டு மணிக்கு காசு எடுத்துட்டு ரெடியா இரு. நாங்க உனக்கு எட்டு மணிக்கு ஃபோன் பண்ணுவோம்"

(ஆட்டம் தொடரும்...)

Thursday, August 21, 2008

வீட்ல விசேஷங்க

சரி ரொம்ப நாளா சொல்லலாம்னு பார்த்துட்டு இருந்தேன். ஒவ்வொரு தடவையும் ஏதாவது வந்து வேற பதிவு போடறது மாதிரி ஆகிடுது. இன்னைக்கு வீட்ல வளைகாப்பு நல்ல படியா நடந்துடுச்சு. நான் மட்டும் இங்க இருக்கறதால தவற விட்டுட்டேன் :(

மனைவி இந்தியாக்கு ஜூன்ல கிளம்பி போனாங்க. அதுக்கப்பறம் தனியா இருக்க கஷ்டமா இருந்ததால தான் மறுபடியும் எழுத ஆரம்பிச்சேன். அவுங்க இருக்கறவரைக்கும் ப்ளாக் எழுதி அவுங்களோட இருக்கற நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.

வீட்ல விசேஷமானு அடிக்கடி கேட்ட தொல்ஸ் அண்ணன், ராயலண்ணா, துர்கா தங்கச்சி மற்றும் உறவினர்கள் எல்லாரையும், ஆமாம் அடுத்து தமிழ் புத்தாண்டு, இண்டிபண்டன்ஸ் டே, லேபர் டே, ப்ரெசிடண்ட் டேனு சொல்லி கடுப்பேத்தினதுக்கு தயவு செஞ்சி மன்னிச்சிடுங்க.

எப்படியும் அக்டோபர்ல இந்தியால இருப்பேனு நினைக்கிறேன். இந்த முறை பொட்டிக்கட்டிட்டு வந்துடுவேன். அவ்வளவு தான். அமெரிக்க வாசம் முடிஞ்சிடும்னு நினைக்கிறேன் :-)

ஆடு புலி ஆட்டம் - 13

அட என்னடா திங்கள் கிழமை ராத்திரி இந்த நேரத்துல நித்யா வீட்ல நாங்க எல்லாம் இருக்கோம்னு பாக்கறீங்களா? எப்படியும் இனிமே ஒரு நாள் கூட க்ளாஸ் தவறவிடக்கூடாதுனு தான் போயிட்டு இங்க வந்திருக்கோம். வினோதினி அக்கா பக்கத்துல யாரோ புதுசா ஒரு பையன் உக்கார்ந்திருக்கானு பாக்கறீங்களா?

அண்ணாத்த பேரு கிஷோர். அவர் தான் வினோதினி அக்காவை அங்க இன்ஸ்டிடியூட்ல சேர சொன்ன நல்ல நண்பர். அவரும் அதே இன்ஸ்டிடியூட்ல ஒரு எட்டு ஒன்பது மாசத்துக்கு முன்னாடி படிச்சிருக்காரு. அதான் அவர்கிட்ட இதை பத்தி பேசி பார்க்கலாம்னு நானும் அசோக்கும் இங்க வந்திருக்கோம். வினோதினி அக்கா திரு திருனு முழிச்சிட்டு இருக்காங்க. அவரே பேச ஆரம்பிக்கறாரு. இருங்க

"வினு யாரோ உன்னை மிரட்டினாங்கனு சொல்ற. காசு கொடுத்தேனும் சொல்ற. இவ்வளவு பெரிய பிரச்சனையிருக்கும் போது ஏன் என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லலை"

"கிஷோர். எனக்கு என்ன பண்றதுனே தெரியல. நேரமும் அதிகமா கொடுக்கல. காசு கொடுத்துட்டு வந்தவுடனே தப்பு பண்ணிட்டமோனு பயத்துல யார்கிட்டயும் சொல்லலை. அதுவுமில்லாம அவன் உன் ஃபிரெண்ட்ஸ்ல ஒருத்தர் சொல்லி தான் நாங்க வந்திருக்கோம்னு வேற மிரட்டினான்"

"சரி. இப்ப பிரச்சனை எங்கனு தெரிஞ்சிடுச்சி இல்லை. நம்ம பசங்க ஒரு நாலஞ்சி பேர் போய் அங்க இருக்கவனுங்க எல்லாத்தையும் நாலு தட்டு தட்டினா ஒத்துக்க போறானுங்க"

ஆஹா. இவரு இன்னும் பெருசாக்கிடுவார் போல. இருங்க அவரை கண்ட்ரோல் பண்றேன்.

"அண்ணா. ஒரு நிமிஷம். இந்த மாதிரி அடிதடில இறங்கினா பிரச்சனை திசை மாறிடும். இது பண்றவங்க கொஞ்சம் டேஞ்சர் பார்ட்டிங்களா தான் தெரியறாங்க"

"அவனுங்களா? அந்த ப்ரேம், தினேஷ், வெற்றி எல்லாம் டேஞ்சர் பார்ட்டிங்களா? நாலு சாத்து சாத்தனா ஒத்துக்க போறானுங்க"

"எப்படி இவுங்க மூணு பேர் தானு சொல்றீங்க?"

"ஆமாம். இது பெரிய ரகசியம். தினேஷும் வெற்றியும் ஒரே ஊர்காரனுங்க. தினேஷையே அந்த வெற்றி தான் சேர்த்துவிட்டான். அந்த ப்ரேம் அப்பல இருந்து பொண்ணுங்க பின்னாடியே சுத்திட்டு இருப்பான். இவனுங்க தான் அப்ப இருந்து இருக்கானுங்க. இப்ப எவனாவது புதுசா இவனுங்க கூட சேர்ந்திருந்தாலும் இவனுங்க மூணு பேர் இல்லாம அவனுங்களால எதுவும் பண்ண முடியாது"

"தினேஷும் வெற்றியும் ஒரே ஊர்க்காரவங்களா? அதிகம் பேசி நாங்க பார்த்ததே இல்லை"

"தினேஷ் யார்கிட்டயுமே அதிகம் பேச மாட்டான். வெற்றி எல்லார்கிட்டயும் அதிகமா பேசுவான். நாங்க சேர்ந்த புதுசுல எல்லாம் நூறு இருநூறுனு எல்லார்கிட்டயும் காசு வாங்கிட்டு இருப்பான். நான் அங்க மூணு மாசமா போயிட்டிருந்தேன். சும்மா லேப் யூஸ் பண்றதுக்காவது போவேன். கடைசியா பார்க்கும் போது வெற்றி செயின், புது நோக்கியா N- Series போன் எல்லாம் வெச்சிருந்தான்"

"ஹிம்ம்ம்... ஆனா இப்ப அப்படியெல்லாம் இல்லை. ரொம்ப சாதாரணமா தான் இருக்காரு. ஃபோன் கூட Motorazr தான் வெச்சிருக்காரு. அது கூட பழசு மாதிரி தான் தெரியுது. கைல காசு வந்தவுடனே ஆட்டம் போட்டிருப்பார்னு நினைக்கிறேன். அப்பறம் அவனை அடக்கி வெச்சிருப்பாங்க"

"இருக்கலாம். அவனுக்கு அவ்வளவா விவரம் பத்தாதுனு தான். எப்படியும் தனியா மடக்கி நாலு சாத்து சாத்தினா கண்டுபிடிச்சிடலாம்"

"அதெல்லாம் வேண்டாம். எல்லாரும் இவனை மாட்டிவிட்டுட்டு எஸ்கேப் ஆகிடப்போறாங்க. அதனால மொத்தமா பிடிக்கலாம். அதுக்கு முன்னாடி நீங்க இன்னொரு ஹெல்ப் பண்ணனும்"

"சொல்லுப்பா பண்றேன்."

" இந்த லிஸ்ட்ல காசு கொடுத்த பொண்ணுங்க எல்லார் பேரும் இருக்கு. உங்க பேட்ச்ல படிச்ச ராஜேஸ்வரிங்கற பொண்ணும் காசு கொடுத்திருக்காங்க. அவுங்ககிட்ட நாம பேச ஏற்பாடு பண்ண முடியுமா?"

"ராஜேஸ்வரியா? நல்லா பார்த்து தான் மிரட்டறானுங்க. அந்த பொண்ணு அதிகமா பசங்ககிட்டயே பேச மாட்டா. எனக்கும் பழக்கமெல்லாம் எதுவுமில்லை. நான் கூப்பிட்டா பேச வருவாளானு தெரியல"

"ட்ரை பண்ணி பார்க்கலாமே. அசோக் நீ என்ன நினைக்கிற?"

"மச்சி. எப்படியும் வெற்றியும் இதுல இன்வால்வ் ஆகிருக்கானு தெரியுது. பேசாம அவனை யூஸ் பண்ணியே பிடிக்கலாம்னு நான் நினைக்கிறேன்"

"எப்படிடா?"

"கிஷோர்! நீங்க ஏதாவது பார்ட்டினு கூப்பிட்டா வெற்றி வருவானா?"

"தெரியலை. ட்ரை பண்ணி பார்க்கலாம். ஏன்?"

"அவனை அப்படி வர வெச்சா அவனை வெச்சி மொத்தமா பிடிக்கறதுக்கு நான் வழி பண்றேன்"

"டேய் அடி தடி எல்லாம் வேண்டாம்னு நினைக்கிறேன்"

"ஏன்டா என்னை பார்த்தா அடிதடி பண்றவன் மாதிரியா இருக்கு. அவனை டெக்னாலாஜியை வெச்சியே நாம பிடிக்கலாம். நான் அதுக்கு வழி பண்றேன்"

அசோக் சொல்ல சொல்ல எல்லாரும் அவனை அதிசயமாக பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. எப்படியும் அவன் இதுல தான் வந்து நிப்பானு நினைச்சேன். அவனை சொல்லி குத்தமில்லை. அவன் பிராஜக்ட் அப்படி.

என்னங்க, கடைசியா வெற்றி மாட்றதுக்கு முன்னாடி நித்யாக்கிட்ட நான் மாட்டிக்குவேன் போல. அந்த அளவுக்கு ஐடியா சொல்லிட்டு இருக்கான்.

"அசோக் நீ சொல்றது எனக்கு ஓகேனு படுது. அவனை எப்படியும் பார்ட்டினு சொல்லி எங்கயாவது தள்ளிட்டு வரது என் பொறுப்பு. அதுக்கப்பறம் ஒரு வாரத்துல அவன் மாட்டலனா அடுத்த வாரம் எங்க பசங்ககிட்ட சொல்லி அவனை அடிச்சி நாங்க உண்மையை வாங்கறோம். உங்களுக்கு ஓகேவா"

"சரி. என்னடா ரவி. ஓகே தானே?"

இது ஒர்க் அவுட் ஆகுமா? சரி எதுக்கும் நாமளும் சரினு சொல்லுவோம். எப்படியும் அவர் பார்ட்டினு கூப்பிட்டு வந்துதுக்கப்பறம் ஒரு வாரம் இருக்குல்ல. அப்ப பார்த்துக்குவோம்.

"எனக்கும் ஓகே"

(ஆட்டம் தொடரும்...)

Tuesday, August 19, 2008

தீயினால் சுட்ட புண்

"டேய் கிருஷ்ணா! மணி 5:30 ஆச்சு... எழுந்திரி!" வழக்கம் போல் அம்மாவின் குரல்

"ஏம்மா! இப்படி உயிர வாங்கற!!! 7 மணிக்கு தான முகூர்த்தம்... பொறுமையா போயிக்கலாம்"

"ஏன்டா நேத்து நைட்டே நீ படுக்கறதுக்கு முன்னாடி சொன்னேன் இல்ல. காலைல சீக்கிரம் போகனும்னு"

"நம்ம கரெக்ட் டைமுக்கு போகலன்னா அங்க என்ன மாப்பிள தாலி கட்டறதையா நிறுத்த போறாரு"

"இப்படியெல்லாம் அதிக பிரசங்கித்தனமா பேசாத. உங்க அக்கா மாமனாரோட தம்பி பொண்ணு கல்யாணம். ஏற்கனவே அவ மாமனார் வேற உங்க அப்பா வராததுக்கே கோச்சுக்குவாரானு பயமா இருக்கு. நம்ம லேட்டா போனா அவ்வளவுதான்"

"அந்த ஆள எங்கயாவது போ சொல்லு. அப்பா என்ன ஓடி விளையாடவா போயிருக்காரு. வேலை விஷயமாத்தானே போயிருக்காரு. இவர் தப்பா நெனச்சா நாம ஒண்ணும் பண்ண முடியாது"

"இந்த பேச்சு பேசறதுக்கு நீ எழுந்திரிச்சு குளிச்சி, கெளம்பியிருக்கலாம்"

"சரி. நான் குளிச்சிட்டு வரேன்... காபி போட்டு வைங்க"

"அதெல்லாம் கல்யாண மண்டபத்துல போய் குடிச்சுக்கலாம்... நீ சீக்கிரம் குளிச்சிட்டு வா"

கல்யாண மண்டபத்திற்குள் போய் சேரும் போது மணி சரியாக 6:45.

"ஏம்மா... கொஞ்சம் சீக்கிரம் வரக்கூடாதா?" அக்காவின் குரலில் வழக்கம் போல் அதிகாரம் தெரிந்தது.

"எல்லாம் இவன் பண்ண வேல... இவன எழுப்பறதுக்குள்ள என் உயிரே போகுது"

"ஏன்டா ஒரு நாள் கூட உன்னால சீக்கிரம் எழுந்திரிக்க முடியாதா?"

"ஏன் இப்படி டென்ஷன் ஆகற??? நாங்க தான் முகூர்த்த நேரத்துக்கு முன்னாடி வந்துட்டோம் இல்ல"

"ஆமாம். எங்க உங்க வீட்ல இருந்து யாரையும் காணோம்னு இப்பதான் எங்க மாமியார் கேட்டாங்க"

"ஏன் ஆரத்தி எடுத்து வரவேற்கவா???"

"உனக்கு திமிருதான். அவுங்க முன்னாடி இப்படியெல்லாம் பேசி வைக்காத. அப்பறம் எனக்குத்தான் பிரச்சனை"

"சரி சரி நான் எதுவும் பேசல. அதுவும் இல்லாம நான் முகூர்த்தம் முடிஞ்சவுடனே கிளம்பறேன். எனக்கு கம்பெனில நிறைய வேலை இருக்கு"

"சரி முகூர்த்தம் முடிஞ்சவுடனே ஏழரைக்கு எல்லாம் பந்தி போட்டுடுவாங்க... சாப்பிட்டு போயிடு" அம்மாவின் குரல்

"என்னது பந்தியா??? ஏம்மா உயிர வாங்கற. காலங்காத்தால இவனுங்க கேசரி, இட்லி, வடை, பூரி, பொங்கல்னு தூக்கம் வர ஐட்டமா போட்டு உசுர வாங்குவாங்க. நான் கம்பெனில போய் ஏதாவது சாப்பிட்டுக்கறேன்"

"ஏன்டா ஐநூறு ரூபா மொய் வெக்கறோம். ரெண்டு பேர் கூட சாப்பிடலனா எப்படி?"

"ஏன். தெருல இருக்கறவங்க எல்லாத்தயும் கூப்பிட்டு வர வேண்டியதுதான? போம்மா நீ மொய் வெக்கறதால எல்லாம் என்னால சாப்பிட முடியாது"

எங்க அக்காவோட மாமியார் அவளை பார்த்து ஏதோ ஜாடை செய்து கூப்பிட அவள் இடத்தை காலி செய்தாள். அப்போது எங்களை பார்த்து நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி வந்து கொண்டிருந்தார்.

"நீங்க சாந்தி அம்மாதானே" எங்க அம்மாவை பார்த்து கேட்டார் அவர்.
ஏன் எல்லாம் இப்படி இருக்காங்க? கிருஷ்ணா அம்மானு சொன்னா குறைஞ்சிடுவாங்களா? வீட்ல இருக்குற பொண்ணு பேற சொல்லிதான் எல்லாம் சொல்லுவாங்க. அவளுக்கு தான் கல்யாணமாகி மாமியார் விட்டுக்கு போயிட்டா இல்ல. இனியாவது கிருஷ்ணா அம்மானு சொன்னா என்ன?
இந்த மாதிரி யார் சொன்னாலும் எனக்கு அவர்கள் மேல் வெறுப்புத்தான் வரும். இவர் மேலும் வெறுப்பு வர தவறவில்லை.

"ஆமாம். நீங்க அருண் அம்மாதான?"
எங்க அம்மா நல்லவங்களா இருக்காங்க. பரவாயில்லை!!!

"ஆமாம். பாத்து எவ்வளவு நாள் ஆச்சு. அருண் நாலு வயிசு இருக்கும் போது கொயம்பத்தூர்ல இருந்து கெளம்பனது"

"ஆமாம். பதினஞ்சு பதினாறு வருஷம் ஆகிடுச்சு. அதான் பாத்தவுடனே கொஞ்சம் சந்தேகமா இருந்துச்சு"

"ஆமாம் சாந்தி, கிருஷ்ணா எல்லாம் எப்படி இருக்காங்க. என்ன பண்றாங்க?"

"சாந்திக்கு கல்யாணமாயிடுச்சு. 1 பையன் இருக்கான் 2 வயசு ஆகுது. இதுதான் கிருஷ்ணா. இஞ்சினியரிங் படிச்சுட்டு இங்க ப்ரிக்கால்ல வேலை செய்யறான்"

"ஓ! இவ்வளவு பெரிய பையானா வளந்துட்டான்"

ஆமாம் பதினஞ்சு வருஷமா வளராம அப்பு கமல் மாதிரியா இருப்பாங்க? லேசாக சிரித்து வைத்தேன்.

"சின்ன வயசுல எப்பவும் நீ அவுங்க வீட்லதான் இருப்ப" அம்மா ஒத்து ஊதினார்கள்.

"இப்ப உனக்கு அதெல்லாம் ஞாபகம் இருக்காது. அருண்ட கிள்ளு வாங்கிட்டு அழுதுட்டே உங்க வீட்டுக்கு ஓடிடுவ"

ஓ! இது வேற நடந்துருக்கா... அவனுக்கு இருக்கு.


"ஆமாம் அதுக்குத்தான் இவன் சூடு வெச்சிட்டானே!" அம்மா என்னை பார்த்து முறைத்து கொண்டே சொன்னார்கள்.
ஓ!!! பரவாயில்ல... அப்பவே நம்ம வெயிட்டு காமிச்சிட்டோம். மனதிற்குள் ஒரு சந்தோஷம்.

"ஆமாம் அருண் இப்ப என்ன பண்றா?"

"அருண் இங்க தான் காலேஜ்ல படிக்கறா"

"ஓ!!! காலேஜ் படிக்கிறாளா??? எந்த காலேஜ்"

"இங்கதான் அவினாஸிலிங்கம்ல ஹோம் சயின்ஸ் படிக்கிறா. இங்கதான நின்னுட்டு இருந்தா. எங்க காணோம்???
அங்க நின்னுட்டு இருக்கா. இருங்க கூப்பிட்டு வரேன்"

ஓ!!! அருண் பையன் இல்லயா? மனசன கொழப்பறதுலயே இருங்க...
மம்மி வீட்டுக்கு வா உனக்கு இருக்கு

அந்த ஆண்ட்டி சென்று 2 நிமிடத்திற்குள் வந்தார்கள். இந்த முறை அவருடன் ஒரு அழகான தேவதை இருந்தாள். பிங் சுடிதாரில் அழகாக இருந்தாள்.
பொதுவா சொந்தகாரர்கள் இருக்கும் இடத்தில் நான் நல்ல பிள்ளை. ஆனா இந்த முறை அம்மா பக்கத்துல இருந்ததையும் மறந்துவிட்டேன்.

2 நிமிடத்திற்குள் அறிமுகப்படலம் முடிந்து திரும்பிவிட்டாள். நானோ கனவுலகிலே சஞ்சரித்து இருந்தேன். அக்கா வந்து பேசியவுடன் தான் நினைவு திரும்பியது.

ஒருவழியாக சாப்பாடு பந்தியிலிருந்தும் தப்பித்து வெளியே வந்தேன்.

"ஏன் தம்பூல பையை வாங்காம வந்துட்ட? தேங்கா போட்ருக்காங்க"
அம்மா அக்கறையாக வழியனுப்ப வந்தாங்கனு பாத்தேன்... இல்ல மொய்கணக்க எப்படியாவது சரி பண்ணனும் வந்துருக்காங்க

"அம்மா அசிங்கமா தாம்பூலம் எல்லாம் என்னால வாங்க முடியாது. நீ பொறுமையா வரும் போது வாங்கிட்டு வா"

"சரி. நீ என்ன சொன்னாலும் கேக்கவே மாட்ட"

வெளியே வந்து திரும்பும் போது மண்டபத்திற்கு வெளியில் அவள் நின்று கொண்டிருந்தாள்.

"என்னங்க இங்க நின்னூட்டு இருக்கீங்க?" கூச்சப்படாமல் பேசினேன். அவளை தவிர வேறு யார் நின்றிருந்தாலும் பேசியிருக்க மாட்டேன் என்றே தோன்றியது.

"இல்ல காலேஜ்க்கு நேரமாச்சு. ஆட்டோ கிடைக்குமானு பாத்துட்டு இருக்கேன்"

"நானும் அந்த வழியாத்தான் போறேன். வேணும்னா வாங்க ட்ராப் பண்ணிடறேன்"

"இல்லைங்க உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம்"

"அதெல்லாம் ஒண்ணுமில்லைங்க... நான் அந்த வழியாத்தான் போறேன்"

"சரி எனக்கும் நேரமாச்சு. நீங்க அந்த டர்னிங்ல நிக்கறீங்களா? நான் வந்து ஏறிக்கிறேன். இங்க யாராவது பாத்தா தப்பா நினைப்பாங்க"

"யாருங்க தப்பா நினைக்கப் போறா. நீங்க வாங்க"

"இல்லைங்க வேணாம்" தயங்கினாள்.

"சரி நான் டர்னிங்ல வெயிட் பண்றேன்"
எல்லாமே இப்படித்தான் ஊர ஏமாத்தறாங்களா?

சரியாக மூன்று நிமிடத்திற்குள் வந்து வண்டியில் என் பின்னால் அமர்ந்தாள்.
இன்னைக்கு நல்ல நாள்தான்.

"ஆமாம்... உங்க பேர் கிருஷ்ணாதான?"

"ஆமாம்" இது தெரியாமத்தான் என் பின்னாடி வந்து உட்கார்ந்தாளா? கலிகாலம்.
"உங்க பேர் அருணாங்க?"

"அருண் இல்லைங்க... அருணா. வீட்ல பையன் யாரும் இல்லாததால என்ன அருண்னு கூப்பிட்டு சந்தோஷப்பட்டுக்கறாங்க. சரி நீங்க சாப்பிட்டீங்களா?"

"இல்லை. நீங்க?"

"நானும் சாப்பிடல. முதல் பந்தில உக்காந்தா அசிங்கமா இருக்குமேனு சாப்பிடாமலே வந்துட்டேன். எங்க காலேஜ் முன்னாடி ஒரு அண்ணபூர்ணா இருக்கு அங்க வேணும்னா ரெண்டு பேரும் சாப்பிடலாமா?"

"சாப்பிடலாமே" இன்னைக்கு உண்மையாலுமே அதிர்ஷ்ட நாள்தான்.

இருவரும் ஆளுக்கு ஒரு ரோஸ்ட் ஆர்டர் செய்தோம்.

"உங்களத்தான் நான் நினைவு தெரிஞ்ச நாளா தேடிக்கிட்டு இருக்கேன்"

என்னடா இப்படி சொல்றா? இவ எதுக்கு என்ன தேடனும். ஒரு வேளை "தித்திக்குதே"வா இருக்குமா? ச்ச இத கூட ஞாபகம் வெச்சிக்காம இருந்துட்டேனே. என்னை நானே நொந்து கொண்டேன்.

"என்னையா? ஏன்?"

"இங்க பாருங்க"
அவள் கையை நீட்டினால், அதில் நீட்டமாக ஒரு தழும்பு தெரிந்தது.

"என்னங்க எதோ தழும்பு மாதிரி இருக்கு"

"நல்லா கேளுங்க! நீங்க வெச்சது தான். நான் ஏதோ தெரியாம கிள்ளிட்டன்னு அடுப்புல இருந்து கொள்ளிக்கட்டை எடுத்து என் கைல வெச்சிட்டீங்களாம். எங்க அம்மா சொன்னாங்க"

இது கேக்கத்தான் என் கூட வண்டீல வந்தாளா? அக்கறையா சாப்பிட போகலாம்னு சொன்னது கூட இதுக்குத்தானா? நான் தான் அவசரப்பட்டுட்டனா?

"என்னங்க நான் என்ன தெரிஞ்சா பண்ணேன். ஏதோ தெரியாம கோபத்துல பண்ணது. எனக்கு சத்தியமா ஞாபகம் கூட இல்ல. அப்ப எனக்கு வயசு என்னா ஒரு ஆறு இல்லனா ஏழு இருக்குமாங்க? அப்ப பண்ண தப்புக்கு இப்ப வந்து கேட்டீங்கனா நான் என்ன பண்ண முடியும்? வேணும்னா சொல்லுங்க ப்ளாஸ்டிக் சர்ஜரி பண்ணிக்கலாம்"
அதிகமா பேசின மாதிரி தோன்றியது.

"ஆமாம். இதுக்கு போய் ப்ளாஸ்டிக் சர்ஜரி பண்ணுவாங்களா? தெரியாம ஏதாவது சின்னதா பண்ணியிருந்தா பரவாயில்ல. தண்ணி காயறதுக்கு அடுப்பாங்கறைல வெச்சிருந்த விறகு கட்டய எடுத்துட்டு வந்து வெச்சிருக்கீங்க" கோபமாக பேசினாள். ஆனால் சமாதானமாகிவிடுவாள் என்று தோன்றியது.

"சரி அந்த சம்பவம்(?) உங்களுக்கு ஞாபகம் இருக்கா?"

"இல்ல. எங்க அம்மாதான் சொன்னாங்க"

"பாருங்க உங்களுக்கும் ஞாபகமில்ல. எனக்கும் ஞாபகமில்ல. அப்பறம் எதுக்கு நீங்க இவ்வளவு டென்ஷம் ஆகறிங்க?"

"ஆமாம். உங்களுக்கு என்ன? சின்ன வயசுல எல்லாம் என்ன கரிகால சோழன் மாதிரி இவ கரிக்கை சோழினு ஓட்டுவாங்க. அப்ப இருந்தே உங்க மேல எனக்கு கோபம்"

"கரிக்கை சோழி ரொம்ப நல்லா இருக்கே!"

"என்னது?" முறைத்தாள். ஆனால் செல்லமாக முறைப்பது போல்தான் எனக்கு தோன்றியது.

"இப்ப என்ன பண்ண சொல்றீங்க? வேணும்னா நீங்களும் என் கைய சுட்டுக்கோங்க. தெரிஞ்சே யாராவது இந்த மாதிரி பண்ணுவாங்களா? அதுவும் அழகான பொண்ணு கைய சுடறதுக்கு யாருக்காவது மனசு வருமா?" ஓரளவு வழியாமல் சொன்னேன்.

"ரொம்ப ஐஸ் வெக்காதீங்க. நான் உங்களுக்கு சூடு எல்லாம் வெக்க போறதில்ல. இந்த பில்ல பே பண்ணிட்டு, என்ன காலேஜ்ல இறக்கி விட்டுடுங்க"
சிரித்துக் கொண்டே சொன்னாள்.

"நான் தெரியாம பண்ணிருந்தாலும், ஐ ரியலி ஃபீல் சாரி. மன்னிச்சுடுங்க"

"பரவாயில்ல. உங்க மேல ரொம்ப கோவமா இருந்தேன். இப்ப எல்லாமே போயிடுச்சு"

ஒரு வழியாக அவளை காலேஜில் இறக்கிவிட்டு, வேலைக்கு சென்றேன். நாள் முழுதும் அவள் நியாபகமாகவே இருந்தது. வீட்டிற்கு வந்து சேரும் போது மணி 7 ஆகியிருந்தது.

"இவ எதுக்கு நம்ம வீட்டுக்கு வந்தா? அவ மாமியார் வீட்ல இருந்து துரத்திவிட்டுட்டாங்களா?"

"டேய்! என்ன யாரும் தொரத்தல.. உன்னத்தான் நம்ம வீட்ல இருந்து துரத்திடுவாங்கனு நினைக்கிறேன்" அக்கா சிரித்து கொண்டே சொன்னாள்.

"என்ன யாரும் துரத்த முடியாது. அம்மா சூடா ஒரு கப் காபி கொடேன்"

"ஒரு அஞ்சு நிமிஷம் இரு. கொண்டு வரேன்"

"ஆமாம். அக்கா இன்னைக்கு காலைல ஒரு ஆண்ட்டி நம்ம அம்மாட்ட பேசிக்கிட்டு இருந்தாங்களே, அவுங்கள உனக்கு ஞாபகம் இருக்கா?"

"இருக்கே! நம்ம அருண் அம்மா. ஏன் உனக்கு ஞாபகமில்லையா?"

"இல்ல. அவுங்க நமக்கு என்ன வேணும்?"

"நம்ம பக்கத்து வீட்ல இருந்தாங்க. இப்ப சொந்தக்காரவங்க ஆகிட்டாங்க!" நக்கலாக சிரித்து கொண்டே சொன்னாள். மனசுல பெரிய புத்திசாலினு நினைப்பு.

"கொஞ்சம் தெளிவா சொல்லு" கோபமாக கேட்டேன்

"எங்க மாமனாரோட தங்கச்சி விட்டுக்காரோரோட தம்பியோட சகல விட்டுக்காம்மாவோட தங்கச்சியோட பொண்ணுட பையனைத்தான் அவுங்க கல்யாணம் பண்ணியிருக்காங்க" மறுபடியும் அதே நக்கல் சிரிப்பு.

"அவுங்க நமக்கு என்ன வேணும்" கோபத்தை அடக்கி கொண்டு கேட்டேன்

"அவங்க வீட்டுக்காரர் உனக்கு அண்ணன் முறை ஆகறாரு"

"என்னது? அண்ணனா? அவர் வயசு என்ன? என் வயசு என்ன? இப்ப உண்மைய சொல்லல உன் குழந்தைக்கு மொட்டை அடிக்கும் போது தலைல ப்ளேடு பொட்டுடுவன். ஆமாம்"

"ஏன்டீ அவனோட விளையாடற? அண்ணனும் இல்ல தம்பியுமில்ல. கொஞ்சம் தூரத்து சொந்தம்தான். அந்த பொண்ணு அருண பாத்தவுடனே எனக்கு புடிச்சு போச்சுடா. சரின்னு அவ அம்மாட்ட பேசி பாத்தேன் அவளும் சரி ஜாதகம் அனுப்பறேன் ஒத்து வந்துச்சுனா முடிச்சிக்கலாம்னு சொன்னா. உனக்கு புடிச்சியிருக்கா?"

அம்மா நீயே என் தெய்வம். உனக்கு கண்டிப்பாக கோவில் கட்டணும்.

"ஆமாம். அந்த பொண்ண இவன் "பே"னு பாத்தததான் கல்யாண மண்டபத்துல எல்லாரும் பாத்தாங்களே" அக்கா நக்கலாக சிரித்து கொண்டே சொன்னாள்.
இதுக்குத்தான் அப்ப இருந்து இப்படி நக்கலா சிரிச்சிக்கிட்டே இருந்தாளா?

"என்ன கேக்காம எப்படி நீங்க ஜாதகம் பத்தியெல்லாம் பேசலாம்" கொஞ்சம் பில்ட்-அப் கொடுத்தேன்.

"சரி. அவனுக்கு பிடிக்கலயாம். வேணாம்னு சொல்லிடுங்கம்மா" அக்கா ரொம்ப அக்கறையாக பேசினாள்.

"அதில்லமா... ஜாதகம் எல்லாம் மூட நம்பிக்கை. அது பாக்க வேணாம்னு சொன்னேன்" நான் வழிந்து கொண்டே சொன்னதை பார்த்து அம்மாவும், அக்காவும் சிரித்தனர்.

Monday, August 18, 2008

ஆடு புலி ஆட்டம் - 12

"நம்ம போன் பண்ண பொண்ணுங்களும் வினோதினி அக்கா மாதிரி நம்பர் மாத்திருந்தாங்கனா அவுங்களுக்கு "Number does not exist"னு தானே வரும். நம்ம அதை விட்டுட்டு மத்தவங்க எல்லாருக்கும் பண்ணியிருக்கோம். இந்த பொண்ணுங்க நம்பரை கண்டு பிடிச்சி கால் பண்ணா தான் நம்ம அனாலிஸிஸ் சரியா வரும்"

"ஆமாம்டா மச்சான். அதை எப்படி மிஸ் பண்ணோம்? இது தான் முக்கியமான விஷயமே. சரி இப்ப அவுங்க நம்பர் எங்க இருந்து கண்டுபிடிக்கறது?"

"எப்படியும் அந்த டேட்டா பேஸ்ல யார் யாரு எந்த கம்பெனில வேலை கிடைச்சிருக்குனு லிஸ்ட் இருக்கும். இன்ஸ்டிடியூட்ல எப்படியும் அதை மெயிண்டெயின் பண்ணுவாங்க. அந்த லிஸ்ட்ல இருந்து அவுங்க கம்பெனியை பிடிப்போம். அந்த கம்பெனில நம்ம ஃபிரெண்ட்ஸ் யாராவது இருக்காங்களானு பார்த்து நம்பர் பிடிப்போம்"

"சூப்பர்டா மச்சான். ஆனா நாளைக்கு லீவாச்சே. எப்படி நம்பர் பிடிக்க? நாளான்னிக்கு திங்க கிழமை தானே. அப்ப பிடிப்போம். ஓகே?"

"இல்லை. இதுல இருக்கற லிஸ்ட்ல எப்படியும் TCS, Infy, Wiproல யாராவது சேர்ந்திருப்பாங்க. அங்க இருக்குற நம்ம ஆளுங்க எவனையாவது நாளைக்கு ஆபிஸ் போய் நம்பர் பார்த்து சொல்லுவோம். அதுல எப்படியும் ஓரளவுக்கு நிறைய பேர் கிடைப்பாங்க. சுலபமா கண்டுபிடிச்சிடலாம்"

"ஓகே. டன்"


ஒரு வழியா பத்து பேரோட ஃபோன் நம்பர் பிடிச்சிச்சாசிங்க. இது மட்டும் வொர்க் அவுட் ஆகிடுச்சினா அடுத்து என்ன பண்ணனும் யோசிக்கனும். இப்ப ஃபோன் பண்ண தான் போயிட்டுருக்கேன். கொஞ்சம் கரகரப்பான குரல்ல பேசணும். அவ்வளவு தான். நேத்து நான் பேசும் போது நீங்க கேக்கல இல்லை. இப்ப கேளுங்க.

இருங்க ரிங் போகுது...

"ஹலோ. கவிதாவா?"

"யா ஸ்பீக்கிங்"

"நாங்க தான் பேசறோம். நாளைக்கு காலைல இருபதாயிரம் எடுத்து தயாரா வெச்சிரு"

"வாட். ஹூ ஆர் யூ? ஹூம் டூ யூ வாண்ட்?"

என்னடா உடனே கட் பண்ணிட்டனேனு பாக்கறீங்களா? இதுக்கு மேல பேசினா ஆப்பு தான். இருங்க அடுத்த நம்பருக்கு பண்றேன். இன்னைக்கு எப்படியும் இந்த பத்து பேருக்கு பண்ணிட்டா ஃபிரி ஆகிடலாம்.

"ஹலோ லஷ்மி"

"ஆமாம். நீங்க யார் பேசறது?"

"நாங்க தான் பேசறோம். நாளைக்கு காலைல இருபதாயிரம் எடுத்து தயாரா வெச்சிரு"

"நான் கொடுத்து ரெண்டு வாரம் கூட ஆகலயே. ஏன் இப்படி என் உயிரை எடுக்கறீங்க? என்னை தயவு செஞ்சி விட்டுடுங்களேன். ப்ளீஸ்"

"சரி. மறுபடியும் ஒண்ணாம் தேதி பண்றோம்"

ஓ. காட். அப்ப இதை பண்றது கண்டிப்பா ட்ரெயினிங் இன்ஸ்டிடியூட்ல இருக்கற ஒரு ஆள் தான் பண்ணியிருக்கனும். இல்லை இது ஒரு குருப்பா கூட இருக்கலாம்.

இருங்க அடுத்த நம்பருக்கு பண்றேன்.

இன்னைக்கு பண்ண பத்து பேர்ல ஆறு பேர் ஏற்கனவே காசு கொடுத்திருக்காங்க. அப்ப பிரச்சனை இந்த ட்ரெயினிங் இன்ஸ்டிடியூட் தான். இருங்க உடனே நித்யாக்கு ஃபோன் பண்ணணும்.

"ஹலோ நாந்தான் பேசறேன்"

"நாந்தானு எனக்கு தெரிஞ்சவங்க யாருக்கும் பேர் இல்லையே"

"லூஸு விளையாடறதுக்கு இது நேரமில்லை. ஒரு முக்கியமான விஷயம்"

"சொல்லுங்க சார். நாங்க உங்க கூட எதுவும் விளையாட மாட்டோம்"

"மொதல்ல இந்த விஷயத்தை கேளு. பிரச்சனை எங்கனு நாம கெஸ் பண்ணது கரெக்டா ஒர்க் அவுட் ஆகிடுச்சி. பிரச்சனை அந்த டிரெயினிங் இன்ஸ்டிடியூட்ல தான். ஆனா யார் காரணம்னு போக போக தான் கண்டுபிடிக்கனும்"

"அப்ப நேத்து ராத்திரி நீ சொன்ன ஐடியா ஒர்க் அவுட் ஆகிடுச்சா?"

"ஆமாம். மொத்தம் பத்து நம்பர் கிடைச்சிது. அதுல ஆறு பேர் காசு கொடுத்துட்டு இருக்காங்க. இன்னும் மொத்த லிஸ்டையும் பிடிச்சா எத்தனை பேர்னு தெரிஞ்சிடும்"

"அடப்பாவிகளா. அப்ப இத்தனை பேரோட லிஸ்டையும் எடுத்துட்டு போலிஸூக்கு போயிடலாமா?"

"இல்லை. யார்னு தெளிவா தெரியாம, சரியான விட்னஸ் இல்லாம போனா நமக்கே பேக் ஃபையர் ஆகிடும்னு நினைக்கிறேன். இன்னும் ரெண்டு வாரம் வெயிட் பண்ணுவோம். அதுக்குள்ள இன்னும் பலமான விட்னஸ் கிடைக்கும். அப்ப மொத்த பேரையும் பிடிக்கலாம்"

"உனக்கு யார் மேலயாவது டவுட் இருக்கா?"

"ஆமாம்"

" "

நான் சொன்னதும் நித்யா அதிர்ச்சியாகிட்டா

( ஆட்டம் தொடரும்)

Thursday, August 14, 2008

ஆடு புலி ஆட்டம் - 11

என்னங்க மணி பனிரெண்டு ஆச்சு இன்னும் அசோக்கை காணோம். எனக்கு வேற கொஞ்சம் பயமா இருக்கு. ஏதாவது பிரச்சனைல மாட்டியிருப்பானா? இன்னும் கொஞ்ச நேரம் பார்ப்போம் அப்பறமும் அவன் வரலனா நானே இன்ஸ்டிடியூட் கிளம்பி போக வேண்டியது தான். இருங்க வண்டி சத்தம் கேக்குது. அசோக்னு நினைக்கிறேன்.

"டேய் மச்சான். Finally, I got it"

அசோக் கைல அந்த சிடி தெரியுது. ஒரு வழியா சாதிச்சிட்டானு நினைக்கிறேன்.

"எப்படிடா மச்சான்?"

"எல்லாம் நம்ம வெற்றி அண்ணனை வெச்சி தான். கரெக்டா வெற்றி அண்ணனையும் ப்ரேமையும் வெச்சிக்கிட்டு ஒரு கேம் ப்ளே பண்ணேன் வொர்க் அவுட் ஆகிடுச்சு"

"எக்ஸலண்ட். நீ இந்த சீடி எடுத்தது அவங்களுக்கு தெரியாது தானே"

"ஆமாம். ரொம்ப நேரம் லேப்ல இருக்கேனு ப்ரேம் என்ன விஷயம்னு கேட்டாரு. நானே சொந்தமா ஒரு ப்ராஜக்ட் ட்ரை பண்றேன். வீட்ல ஆரக்கிள் இல்லாததால லேப்லயே பண்றேனு சொன்னேன். ப்ரேம் ஃபீல் ஆகி வெற்றியை கூப்பிட்டு யாருக்கும் தெரியாம ஆரக்கிள் சீடி எடுத்து தர சொன்னாரு."

"அப்பறம்?"

" வெற்றி அந்த ரூமுக்கு கூப்பிட்டு போய் இருந்த சீடி எல்லாம் எடுத்து தேடிட்டு இருந்தாரு. நானும் உள்ள போய் ஒவ்வொரு சீடியா பார்த்துட்டு இருந்தேன். நானும் ஆரக்கிள் சீடி தேடறேனு நினைச்சிட்டு விட்டாரு. இன்ஸ்டிடியூட்டோட மண்த்லி பேக் அப் சீடியை ஒரு வழியா கண்டுபிடிச்சி வெற்றிக்கு தெரியாம சுட்டுட்டேன். ஆனா இது நாலு மாசத்துக்கு முன்னாடி எடுத்தது போல. புதுசு கண்ணுல படல"

"பரவால. எக்ஸலண்ட் வொர்க். சரி நம்ம டேட்டா பேஸ்ல இம்போர்ட் பண்ணுவோம். அப்பறம் உன் போன் என்னாச்சு? நான் ரொம்ப நேரம் ட்ரை பண்ணேன்"

"அது சார்ஜ் போட மறந்துட்டேன். இப்ப போடனும்"

ஒரு வழியா முதல் படியை தாண்டியாச்சுங்க. இதை வெச்சி தான் பிரச்சனை இந்த இன்ஸ்டிடியூட்லயா இல்லை வெளியவானு கண்டு பிடிக்க முடியும். இந்த இன்ஸ்டிடியூட்ல இல்லைனா அடுத்து HR தான். நாளைக்குள்ள இந்த இன்ஸ்டிடியூட்டானு தெரிஞ்சிடும். அப்படி அந்த சீடில என்ன இருக்குனு யோசிக்கறீங்களா?

அதுதான் அந்த இன்ஸ்டிடியூடோட அஃபிஷியல் இன்ஃபர்மேஷன் இருக்கற டேட்டாபேஸோட, பேக் அப் பைல் இருக்கற CD. பெரிய பெரிய கம்பெனி எல்லாம் இன்க்ரிமெண்டல் பேக் அப் தான் எடுப்பாங்க. இந்த மாதிரி சின்ன இன்ஸ்டிடியூட் எல்லாம் டோட்டல் பேக் அப் எடுப்பாங்க. பெரிய கம்பெனி எல்லாம் டெய்லி, வீக்லி, மண்த்லி எடுப்பாங்க. இங்க மாசம் மாசம் எடுக்கறாங்க. இப்ப நம்ம கைல இருக்கற சீடில நாலு மாசத்துக்கு முன்னாடி வரைக்கும் படிச்சவங்களோட இன்ஃபர்மேஷன் இருக்கும். அதை வெச்சி நாளைக்கு நம்ம விளையாட்டை ஆரம்பிக்கலாம்.

இன்னைக்கு காலைல இருந்து நானும் அசோக்கும் நித்யா வீட்ல தான் இருந்தோம். என்ன பேசனும் எப்படி பேசனும்னு வினோதினி அக்காகிட்ட விசாரிச்சிட்டேன். ரொம்ப நேரம் ப்ராக்டிஸ் பண்ணோம். எங்க வீட்டு பக்கத்துல இருக்கற பூத்ல இருந்து பண்ணா தான் சேஃப்டி. நாளைக்கு யாராவது விசாரிச்சாக்கூட அந்த அண்ணன் நம்மல காட்டி கொடுக்க மாட்டாரு. அதான் ரிட்டர்ன் வந்துட்டு இருக்கோம்.

என்னங்க அந்த டேட்டா பேஸ்ல இருந்து எடுத்த போன் நம்பர்ல இருபது பேருக்கு பண்ணிட்டேன் ரியாக்ஷ்னே சரியில்லை. பசங்க ஒரு சிலர் நம்ம மிரட்டினா பதிலுக்கு நம்மல மிரட்டறானுங்க. ஒரு சிலர் மெரள்றானுங்க. எவனுமே இதுக்கு முன்னாடி இந்த மாதிரி கால் வந்த மாதிரியே ரியாக்ட் பண்ண மாட்றானுங்களே. அப்படினா ஒரு வேளை இவங்க டார்கெட் பொண்ணுங்க மட்டும் தானா? அப்ப சுலபமா கண்டுபிடிச்சிடலாமே.

என்னங்க பொண்ணுங்க பாதி பேர் நம்பர் Does Not Existனு வருது மீதி பேர் பயப்படறாங்களே தவிர இதுக்கு முன்னாடி கால் வந்த மாதிரி ரியாக்ட் பண்ணவே மாட்றாங்க. ஒரு வேளை இந்த இன்ஸ்டிடியூட்ல பிரச்சனையில்லையோ? தேவையில்லாம சந்தேகப்பட்டுடமோ? சரி நேரமாச்சு. நாப்பது போன் காலுமாச்சு. இப்ப அடுத்த ஆப்ஷன் HR தான்.

இவ்வளவு கஷ்டப்பட்டு அந்த ட்ரெயினிங் இன்ஸ்டிடியூட் எல்லாம் சேர்ந்து CDயை சுட்டு கடைசியா அங்க எதுவும் பிரச்சனையில்லைங்கற மாதிரி தெரியுது. அதுவும் ஒரு வகைல நல்லது தான் இனிமே கோர்ஸ் போக தேவையில்லை. நித்யா படிக்கனும்னு ஆசைப்பட்டா போகலாம்னு நினைக்கிறேன். ரெண்டு வாரமா தினமும் அவக்கூட பேசி பழக்கமாயிடுச்சு. அதனால அவக்கூட பேசறதுக்காக போகலாம். என்ன சொல்றீங்க?

அசோக் இதுக்கு மேல போக வேண்டாம். இப்ப அடுத்து என்ன பண்றதுனு தெரியல. வினோதினி அக்காவும் அதுக்கப்பறம் புது நம்பர் மாத்திட்டாங்க. வேற எதுவும் ஃபோன் காலும் வரலை. இதோட இந்த கண்டுபிடிக்கறதை நிறுத்திக்கலாமா? HRக்கு போன் பண்ணா பிரச்சனை. அதுக்கு வேற வேலை தேடிட்டு இங்க இருந்து எஸ்கேப் ஆகிடலாம்.

ஓ.காட். மறுபடியும் தப்பு பண்ணிட்ட மாதிரி இருக்கு. ஐ திங் வி வேர் இன் ரைட் ட்ராக்.

"டேய் அசோக். ஒரு முக்கியமான விஷயத்தை நோட் பண்ணாம விட்டுட்டோம்டா"

"என்னடா சொல்ற?"

"நம்ம வினோதினி அக்காக்கு போன் கால் வந்தவுடனே நம்பர் மாத்தினேனு சொன்னாங்க இல்லை"

"ஆமாம்"

"அதே மாதிரி நம்ம போன் பண்ண பொண்ணுங்களும் மாத்திருந்தாங்கனா அவுங்களுக்கு "Number does not exist"னு தானே வரும். நம்ம அதை விட்டுட்டு மத்தவங்க எல்லாருக்கும் பண்ணியிருக்கோம். இந்த பொண்ணுங்க நம்பரை கண்டு பிடிச்சி கால் பண்ணா தான் நம்ம அனாலிஸிஸ் சரியா வரும்"

(தொடரும்...)

Wednesday, August 13, 2008

கடைசியாக பார்த்த சில தெலுகு படங்கள்

கடைசியாய் பார்த்த சில தெலுகு படங்களை பற்றிய எண்ணங்கள்.



Happy Days:
இஞ்சினியரிங் காலேஜை கண் முன் நிறுத்தியிருக்கிறார்கள். அதிலும் அந்த சீனியரை லவ் பண்ணும் பையன் அட்டகாசமாக நடித்திருக்கிறார் (பேர் மறந்துடுச்சு). தமண்ணா சூப்பர் :-) படமும் அருமை. க்ளைமாக்ஸும் அருமை. ஜாலியாக பார்க்கலாம். பாடல்களும் படத்துக்கு ப்ளஸ். பொம்மரில்லுக்கு அப்பறம் நான் ரசிச்சி பார்த்த படம்...



ஆட்டா :
One and only ILEANA. கதை எல்லாம் எதுவும் கிடையாது. இலியானாவை நன்றாக பயன்படுத்தியிருக்கிறார்கள். பேச்சிலர் பசங்களுக்கு மட்டும் சிபாரிசு செய்கிறேன். இயற்கையை ரசிக்க தெரிந்தவர்களும் பார்க்கலாம் :-) (My Friend சித்தார்த்திற்காக பார்க்கலாம்)



தீ :
ஜாலியான படம். புத்தி உள்ளவன் பிழைத்து கொள்வான். அவ்வளவு தான் தீம். படம் நல்ல கலகலப்பா ஜாலியா போகும். ஜெனி வழக்கம் போல சூப்பர் :-). தமிழில் சிம்பு அப்படியே காப்பி பேஸ்ட் செய்தால் (விரலை ஆட்டாம) ஹிட் ஆக சான்ஸ் அதிகம். ஆனா ஸ்ரீ ஹரி ரோலை பிரபு செய்யக்கூடாது. என் சாய்ஸ் சரத்குமார்.

எம தொங்கா :
ஜீனியர் NTR உடம்பை குறைத்து ஸ்மார்ட்டாக இருக்கிறார். படம் ஓரளவுக்கு மோசம் தான். மோகன் பாபு நல்லா நடித்திருக்கிறார். ப்ரியா மணி தெலுகு படத்துக்கு ஒத்து வர மாட்டார்.



கோதாவரி:
அமைதியான அழகான படம். ரசிச்சி பார்க்கலாம். கமலினி சூப்பர். படமும் அழகா ஆர்ப்பாட்டம் இல்லாம அமைதியா போகும். நிச்சயம் பார்க்கலாம்.


ராக்கி:
ஜீனியர் NTR படம் தான். இலியானாக்காக தியேட்டருக்கு போய் பார்த்தேன். வழக்கமான NTR படம். இதுல வித்தியாசமா பாக்கெட்ல பெட்ரோல் வெச்சி, அதை முகத்துல அடிச்சி எரிச்சி கொல்றார். தப்பி தவறி கூட பார்க்க வேண்டாம் :-)



ஜல்சா :
அட்டகாசமான படம். பவன் கல்யாணிற்கு ஒரு ப்ரேக் கொடுத்திருக்கிறது. டோட்டல் ஹைதிராபாத் பிரியாணி (மசாலா). இலியானா சூப்பர். பார்வதி மில்டனை இன்னும் கொஞ்சம் யூஸ் பண்ணியிருக்கலாம். காமெடி கலக்கல். விஜய் ரீ-மேக் பண்ணலாம்.

அதித்தி (Athidhi):
மகேஷ் பாபு படம். நிறைய சண்டை. படம் சுமார். மோசம்னு கூட சொல்லலாம். ஆனா சைனிக்குடுவைவிட பரவாயில்லை.

இது தவிர கொஞ்சம் பழைய படங்கள்ல இதெல்லாம் பார்க்கலாம். ஆர்யா, அனுகோக்குண்ட ஒக்க ரோஜு, அத்தடு.

கொல்ட்டி

"தெலுங்கு படத்துலயெல்லாம் ஏன் இவ்வளவு கேவலமா ட்ரெஸ் போடறாங்க??? மஞ்ச சட்டை, பச்சை பேண்ட்... உங்க ஆளுங்களுக்கு ட்ரெஸ்ஸிங் சென்சே கிடையாதா???"

நான் சொல்லி முடிச்சதும் சுமாவுக்கு பயங்கர கோபம் வந்திடுச்சி.

ஆமாம் என்ன இருந்தாலும் அத்தனை பேர் முன்னாடி நான் அப்படி சொல்லியிருக்கக் கூடாது. அதுவும் எல்லோரும் அவ டீமெட்ஸ்.

சாயந்திரம் 7 மணிக்கு எக்ஸ்டென்ஷனுக்கு கால் வந்தது.

"ரமேஷ் ஹியர்"

"சுமா பேசறேன்"

"ஹிம் சொல்லு"

"சாப்பிட போகலாம்"

"சாப்பிட போகலாமா??? மணி என்ன ஆகுது... இன்னும் புட் கோர்ட்ல சாப்படே ரெடி ஆகியிருக்காது. இன்னும் எப்படியும் அரை மணி நேரமாகும்"

"நான் என் சீட்டில இருந்தா இந்த குங்குமப் பொட்டு வேலை ஏதாவது கொடுக்கும். நீ வா. நம்ம சும்மா வாக்கிங் போயிட்டு அப்பறமா சாப்பிட போகலாம் "

"சரி... நீ என் பில்டிங் கிட்ட வந்து மிஸ்ஸுடு கால் கொடு. நான் வரேன்"

வழக்கம் போல் என்ன பேசினோம்னே தெரியாம பேசினோம்... 8 மணிக்கு அவள் மட்டும் சாப்பிட்டாள். அவளை மல்லேஸ்வரம் பஸ்ஸில் ஏற்றிவிட்டு, நான் கோரமங்களா பஸ் பிடித்து வீட்டிற்கு சென்றேன்.

"டேய் ரமேஷ், அந்த அம்மா சப்பாத்தி செஞ்சிருக்காங்க!!! உனக்கு ஹாட் பாக்ஸ்ல இருக்கு"

"ஏன்டா, சப்பாத்திக்கு தொட்டுக்க குருமாவையே காணோம்???"

"கரு வாயந்தான் கடைசியா சாப்பிட்டான்... அவந்தான் தீர்த்திருப்பான்"

"ஏன்டா சொல்லிருந்தா நான் ஆபிஸ்லயே சாப்பிட்டிருப்பேன்... சரி விடு நான் ஜாம் தொட்டு சாப்பிட்டுக்கறேன்"

சப்பாத்தி சாப்பிட ஆரம்பிக்கும் பொது... மிஸ்டு கால் வந்தது.
சுமா வீட்டிக்கு போய் சேர்ந்துட்டா. சரினு ஜெர்கின் போட்டுட்டு போனை எடுத்துட்டு மொட்டை மாடிக்கு போனேன். கீழே வரும்போது மணி 12:15.

ரூம்ல எல்லோரும் மும்மரமாக ஒருவரை ஒருவர் ஓட்டிக் கொண்டிருந்தனர்.
சப்பாத்தி ஆறிப் போய் அப்பளமாக இருந்தது. ஒருவழியாக சாப்பிட்டு முடித்து கூட்டத்தோடு சேர்ந்து அனைவரையும் ஓட்டிவிட்டு 1 மணிக்கு படுக்கைக்கு சென்றேன்.

தூக்கம் வரவில்லை. என்ன இருந்தாலும் இன்னைக்கு அவளை அத்தனை பேருக்கு முன்னால ஓட்டியிருக்க கூடாது. அதைப் பற்றி அவள் போன்ல கூட ஒரு வார்த்தை பேசல. குற்ற உணர்ச்சியாக இருந்தது.

சுமாவை முதன்முதலாக ட்ரெயினிங்கில் பார்த்தது. அவளை எப்போதும் ஆந்திரா கோஷ்டியுடன் தான் பார்க்க முடியும். ஒண்ணு, ரெண்டு முறை பேசியிருப்போம். அவ்வளவுதான்.

பிறகு ட்ரெயினிங் முடித்து, ஒவ்வொருவரையும் வெவ்வேறு ஊர்களில் வெவ்வேறு பிராஜக்டில் போட்டார்கள்.

நானும், சுமாவும் ஒரே பிராஜக்ட்டில் சேர்ந்தோம். அவளுக்கு தமிழ் தெரியாது, எனக்கு தெலுகு புரியாது. எப்பவுமே இங்கிலிஸில் தான் பேசிக் கொள்வோம். ரெண்டு பேரும் ஒரே மாட்யுல். அடிக்கடி டெட்லைன் மீட் பண்ணுவதற்காக நைட் வேலை செய்ய வேண்டியது வரும்.

பொண்ணுங்க நைட் cabla தனியா போறது எனக்கு எப்பவுமே பிடிக்காது. பல சமயங்களில் அவளை 9:15 பஸ்ஸில் வீட்டிற்கு போக சொல்லிவிட்டு, அவளுடைய மாட்யூலையும் நானே பார்த்துக் கொள்வேன். அந்த மாதிரி சமயங்களில் சில சமயம் எதுவும் புரியாம அவளுக்கு போன் செய்து பேசிக்கிட்டே வேலை செய்வேன். அவளும் எனக்கு போர் அடிக்குமே என்று 2-3 மணி வரைக்கும் கூட பேசிக்கிட்டே இருப்பா... நான் தூங்குனு சொன்னாலும் இல்லை எனக்கு தூக்கம் வரலைனு சொல்லிடுவா.
(நைட் பொதுவாக ஆன் - சைட்டில் Code Review செய்வார்கள். ஏதாவது தவறு இருந்தால் நாம் அதை சரி பண்ண அவர்களுக்கு உதவ வேண்டும்... அதனால் எங்களுக்கு பொதுவாக அதிக வேலை இருக்காது. ஆனால் நாங்கள் அங்கு இருக்க வேண்டும்)

இப்படியே ரெண்டு பேரும் நல்ல பிரெண்ட்ஸ் ஆகிவிட்டோம். அவள் தங்கி இருந்த PGயில் நிறைய தமிழ் பெண்கள் இருப்பதாக சொல்வாள்.

எனக்கு யாரையாவது இண்ட்ரடியூஸ் பண்ணிவிடுனு சொன்னா, எப்பவுமே முறைப்பாள். திடிர்னு ஒரு நாள் புட் கோர்டில் அவள் ரூம் மெட் ராதிகாவை அறிமுகப்படுத்தினாள். ராதிகா அன்று எங்களுடன் தான் சாப்பிட்டாள்.

"ரமேஷ், உனக்கு ஒன்னு தெரியுமா??? சுமா இப்பல்லாம் விழுந்து விழுந்து தமிழ் கத்துக்கிறா!!! "

எனக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. எப்பவுமே தெலுகுதான் தமிழவிட பெருசுனு என்கிட்ட சண்டை போட்ற சுமாவா தமிழ் கத்துக்கிறா??? ஆனால் இதை என்கிட்ட சொல்லவே இல்லையேனு ஒரு வருத்தம். ஜாவால எல்லாம் டவுட் கேக்கறா, எனக்கு நல்லா தெரிஞ்ச தமிழை யார்கிட்டயோ கத்துக்கிறாளே!!!

ஆனால் இதை ராதிகா சொன்னவுடன், சுமா அவளை முறைத்துவிட்டு "அதெல்லாம் ஒண்ணும் இல்லை... அவள் சும்மா விளையாட்டுக்கு சொல்றா"னு வேக வேகமாக சொன்னாள்.

ராதிகாவைப் பார்த்ததும் நல்லதாப் போச்சினு தோனுச்சி.

3 மாசம் கழித்து என்னுடைய பிறந்த நாள்... சனி கிழமையன்று வந்தது...

வெள்ளிக்கிழமை நைட் 9 மணிக்கு போன் செய்தாள். என்னடா இவ்வளவு சீக்கிரமா பண்ணிட்டாளேனு பார்த்தால், 12 மணி வரை பேசிக்கிட்டே இருந்தாள். (எங்கே 12 மணிக்கு சரியாகப் போன் செய்தால் பிஸியாக இருக்குமோனு சந்தேகத்தால் 9 மணிக்கே போன் செய்துவிட்டாள்).

சரியாக பனிரெண்டு மணிக்கு,

"இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்"

"சுமா நீயா பேசறது", ரமேஷால் அவன் காதை நம்ப முடியவில்லை.

"இல்லை உங்க அம்மா"

மறுபடியும் அதிர்ச்சி.

"ரமேஷ், இனிமே நான் உன்கிட்ட தமிழ்ல தான் பேசுவேன். ஓகேவா???"

ரமேஷ்க்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. தெளிவா தமிழ்ல பேசறா. எப்படி இவ்வளவு சீக்கிரத்துல கத்துக்கிட்டா.

"அப்பறம் நாளைக்கு உன் பிளான் என்ன???"

"எதுவும் பெருசா இல்லை"

"நம்ம படத்துக்கு போவோமா???"

"என்ன படம்"

"அதை நாளைக்கு PVR போய் முடிவு பண்ணிக்கலாம்"

"சரி... காலைல எனக்கு ஒரு பதினோரு மணிக்கா போன் பண்ணு"

"ஏன்???"

"நான் எழுந்திரிக்க வேணாமா?"

"அடப்பாவி!!! பதினோரு மணிக்கு எழுந்திரிக்க உனக்கு போன் பண்ணனுமா???"

"கேள்வியெல்லாம் கேக்காத எனக்கு புடிக்காது. சொன்னா கேக்கனும் புரியுதா???"

"சரிங்க சார்... நான் பண்றேன்"

போனை வைக்கும் போது மணி 2.

ரூம்ல யாருக்கும் என் பிறந்த நாள் தெரியாது. என்ன செய்ய எங்க ரூம்ல தங்கியிருக்கிற யாரும் நிரந்தரம் கிடையாது. அதனால் யாருக்கும் பெரிய பற்றுதல் இல்லை.

காலையில் 6 மணிக்கு வீட்டில் இருந்து போன்...

"Happy Birthday to u"

"thx மா"

"பிறந்த நாள் வாழ்த்துக்கள்"

"thxப்பா"

"கண்ணு நானும், அப்பாவும் எழுந்து குளிச்சிட்டு கோவிலுக்கு கெளம்பிட்டு இருக்கோம். சரி நீ எழுந்திரிச்சிருக்க மாட்டேனுதான் இவ்வளவு நேரம் கழிச்சி பண்றோம். சரி நீயும் குளிச்சிட்டு கோவிலுக்கு போயிட்டு வா"

"சரிம்மா... நான் இன்னும் எழுந்திரிக்கவே இல்லை.. நைட் ஆபிஸ்ல வேலை அதிகம்... 2 மணி ஆகிடுச்சி"

"சரி கண்ணு... நீ தூங்கு... கோவிலுக்கு போகும் போது மறக்காமல் ஸ்வீட் வாங்கிட்டு போய்... கோவில்ல வயசானவங்க இருந்தா கொடு... அவுங்க மனசால வாழ்த்தனா நீ நல்லா இருப்ப... சரியா???"

"சரிம்மா... நான் உங்களுக்கு போன் பண்றேன்"

செல் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

பதினொரு மணிக்கு செல்போன் சிணுங்கியது.

Suma Calling....

"ஹாய்...
சொல்லு"

"என்னா...இன்னும் எழுந்திரிக்கலையா???"

"இல்ல... இப்பத்தான் ஏழுந்திரிக்கிறன்"

"அடப்பாவி!!! எத்தனை மணிக்கு சாப்பிட வர???"

"என்ன சாப்பிடவா??? படத்துக்குத் தான சொன்ன???"

"இங்க PGல மதியம் சாப்பாடு கேவலமா இருக்கும். கிருஷ்ணா கபேல மதியம் உன்கூட சாப்பிடலாம்னு பார்த்தேன்"

"சரி வரேன்"

மதியம் 12 மணிக்கு கிருஷ்ணா கபே வந்து சேர்ந்தாள். எனக்கு பிடிச்ச நேவி ப்ளூவில் சுடிதார் போட்டிருந்தாள்.

"என்ன... பர்த்-டேக்கு புது துணியெல்லாம் போடலையா???"

"வீட்ல அம்மா எடுத்து கொடுத்தாங்க... நாந்தான் அதை எடுத்துட்டு வரலை. புது துணியிலெல்லாம் எனக்கு இப்ப இன்ட்ரெஸ்ட் இல்லை. அதுதான் எனக்கு பதில் நீ போட்ருக்கியே அப்பறமென்ன"

"ஏ!!! இது புதுசு இல்ல... நான் காலேஜ்ல போட்டிருந்தது. பெங்களூர் வந்து இப்பதான் பர்ஸ்ட் டைம் போடறேன்."

"சரி வா... சாப்பிட போகலாம்"

நல்ல சாப்பாடு.

பிறகு இருவரும் PVR சென்றோம்.

"என்ன படம் பார்க்கலாம்"

"உனக்கு ரஜினிதான பிடிக்கும், சந்திரமுகி போகலாம்"

"ஏன் தெலுகு படமெல்லாம் கேவலமாக இருக்கனும்னு இப்படி சொல்றியா???"

அவள் கண் கலங்கிவிட்டது.

"ஏ... சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்... சந்திரமுகியே போகலாம் வா"

ரெண்டு பேரும் சந்திரமுகி சென்று பார்த்தோம்.

ஒருவழியாக சந்திரமுகி பத்தாவது முறைப் பார்த்தேன். ஆனால் முதல் முறை பார்த்த மாதிரி இருந்தது.

பார்த்துவிட்டு வெளியில் வந்தவுடன், Forumல் கொஞ்ச நேரம் சுற்றினோம்.
லேண்ட் மார்க் சென்றோம். அங்கே எனக்கு கல்கியின் "பொன்னியின் செல்வன்", "சிவகாமியின் சபதம்", "பார்த்திபன் கனவு" மூன்றும் சேர்ந்த ஒரு பேக்கை வாங்கி பிறந்த நாள் பரிசாக வழங்கினாள்.

எனக்கு கல்கி பிடிக்கும்னு அவளுக்கு எப்படி தெரியும். அதுவும் நான் சொல்லாமலே அவளே எப்படி அந்த தொகுப்பை சரியாக எடுத்தாள்.

"சுமா, தமிழ் படிக்க கத்துக்கிட்டியா???"

"ஏ!!! அதெல்லாம் இல்லை... பேச கத்துக்கிட்டதே ரொம்ப கஷ்டம். எனக்கு சொல்லி கொடுக்க ரொம்ப கஷ்டப்பட்டாங்க... நீ தான் எனக்கு படிக்க சொல்லி தரனும்"

"அப்பறம் எப்படி புக்கை கரெக்ட்டா எடுத்த???"

"நான் நேத்தே என் பிரெண்டோட வந்து பாத்து வெச்சிக்கிட்டேன். அதுதான்"

சிரித்தாள். என்னுமோ தெரியல.. திடிர்னு எனக்கு அவள் தேவதை மாதிரி தெரிந்தாள்.

அப்படியே சுத்திட்டு டின்னரை Forum Transitல் உள்ள சேலம் கிட்சனில் சாப்பிட்டோம்.

அவளை மல்லேஸ்வரத்திற்கு என்னுடைய டூ-வீலரில் அழைத்து சென்று விட்டு வந்தேன்.

இந்த பிறந்த நாளை என் வாழ்வில் மறக்கவே முடியாது.

பிறகு ஒரு மாதத்தில் இருவரையும் வெவ்வேறு பிராஜக்ட்டிற்கு மாற்றினார்கள்.

அப்படியும் காலை பிரேக் பாஸ்ட், மதியம் லன்ச், சாயந்திரம் ஸ்னாக்ஸ், இரவு டின்னர் எல்லாம் ஒன்றாகவே சாப்பிட்டோம்.

பிறகு அவள் வீட்டிற்கு சென்ற பின் போன் செய்து 12 மணி வரை பேசுவோம்.

ரெண்டு பேரும் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டோம்...

அப்படியிருக்கும் நிலையில் அவளை நான் இன்று அப்படி ஓட்டியிருக்க தேவையில்லை. ஒரு வழியாக தூங்கிவிட்டேன்.

தீபாவளிக்கு 3 நாள் லீவு போட்டால் 10 நாள் லீவு கிடைக்கும் போலிருந்தது. ரெண்டு பேரும் 3 நாள் லீவ் போட்டு அவரவர் ஊருக்கு போகலாம் என்று தீர்மானித்திருந்தோம்.

திடிர்னு பத்து நாள் பிரிய போறோம்னு தெரிந்தவுடன், ஏதோ மனசை அழுத்துவதை போல் இருந்தது...

11 மணிக்கு அவளுக்கு டிரெயின்.

மணி 6.

சுமாவின் extensionக்கு போன் செய்தேன்.

"ஏ!!! என்ன சொல்லு...
அந்த குங்குமம் வேற இன்னைக்குனு பாத்து வேலை நிறைய கொடுத்திருக்கு"

"இல்லை... உன்கிட்ட முக்கியமான ஒரு விஷயம் பேசனும்"

"என்ன... சொல்லு
நான் வேற இன்னைக்கு 7:15 பஸ்ஸாவது பிடிக்கனும்"

"சரி... ரயில்-வே ஸ்டஷனுக்கு எத்தனை மணிக்கு வரணும்"

"ஏ!!! அதெல்லாம் தேவையில்லை... நானே போயிக்குவன்"

"நான் உன்கிட்ட வரட்டுமா, வேணாமானு கேக்கல... எத்தனை மணிக்கு நீ ரெயில்-வே ஸ்டெஷன்ல இருப்பனு கேட்டேன்"

"நான் வீட்டில இருந்து புறப்படும் போது உனக்கு போன் பண்றனே... ஓகே வா???"

"சரி"

சுமா அடிக்கடி சொல்லுவா இந்த குங்குமம் வைக்கிற ஆம்பிளைகளையே நம்பக் கூடாதுனு. இன்னைக்கு அவனால எனக்கு பிரச்சனை.

சரி ரயில்வே ஸ்டெஷன்ல பார்த்து பேசிக்கலாம்.

வேலை செய்யவே முடியவில்லை. வீட்டிற்கு சென்றுவிட்டேன்.

8 மணிக்கு போன் அடித்தது. எந்த நம்பர்னே தெரியல... இந்த நேரத்துக்கு எவன்டா பண்றது.

"இது ரமேஷா???"

"ஆமாம்... நீங்க யார் பேசறது"

"நாங்க இங்க வாட்டர் டேங்க் பக்கத்துல இருந்து பேசறோம்... இங்க குமார்னு யாரோ ஒருத்தருக்கு ஆக்ஸிடெண்ட் ஆகியிருக்கு. அவர் உங்க பிரண்டுங்களா???"

"ஆமாம்... அவர் எப்படி இருக்காரு??? எதுவும் பெருசா பிரச்சனையில்லையே"

"இல்லைங்க... தலைல ஹெல்மெட் போட்டீருந்ததால எதுவும் பெருசா இல்லை... இருந்தாலும் கை கால்ல எல்லாம் நல்லா அடிப்பட்டிருக்கு.. இங்க பக்கத்துலதான் St.John's hospitalல சேத்துருக்காங்க... நீங்க யாராவது வந்திங்கனா நல்லா இருக்கும்"

"இதோ உடனே வரேன்"

ஹாஸ்பிட்டல்... எனக்கு பிடிக்காத முதல் இடம். சின்ன வயசுல எனக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போயிடும். அதனால் மருந்து சாப்பிட்டு சாப்பிட்டு மருந்து வாடையே பிடிக்காமல் போய்விட்டது.

குமார் எமெர்ஜென்ஸி வார்டில் இருந்தான். போனில் சொன்னது போல் லேசான அடியில்லை. கொஞ்சம் அதிகமாகவே அடிப்பட்டிருந்தது.

"நீங்க அவர் பிரண்டா???"

"ஆமாம்"

"அவருக்கு அவசரமா இரத்தம் தேவைப்படுது... நீங்க ரத்தம் கொடுக்க முடியுமா???"

"கண்டிப்பா...நான் ஏற்கனவே 2 தடவை கொடுத்திருக்கேன்"

"உங்க பிளட் குருப் என்ன???"

"B +ve"

"கடைசியா எப்ப பிளட் கொடுத்தீங்க???"

"காலேஜ் படிக்கும் போது. 2 வருஷமிருக்கும்"

"சரி வாங்க"

உள்ளே ஹைட், வெயிட் எல்லாம் செக் பண்ணாங்க... அப்பறம் இரத்தம் எடுக்குமிடத்திற்கு அழைத்து சென்றார்கள்.

என் செல் சிணுங்கியது...

Suma Calling....

"செல் போனெல்லாம் ஆப் பண்ணிடுங்க"

சரிங்க... செல் போனை ஆப் செய்தேன்.

பிறகு வெளியே வருவதற்குள் அரை மணி நேரம் ஆகிவிட்டது.

மணி பத்து...

நண்பர்கள் எல்லாம் வெளியே நின்று கொண்டிருந்தனர்.

"டேய்... பெரிய பிரச்சனை எதுவும் இல்லைனு டாக்டர் சொல்லிட்டாங்க!!! இன்னும் 10-15 நாள்ல சரியாயிடுமாம்" கருவாயன் சொன்னான்.

"பணம் ஒரு 10,000 வேணுமாம். நான் போயி எடுத்துட்டு வரேன். ரமேஷ் நீ கொஞ்சம் உன் வண்டி சாவியை தர முடியுமா??? "

"இந்தா பத்திரம்... அப்படியே பெட்ரோல் போட்டுக்கோ"

அப்போழுதுதான் நியாபகம் வந்தது. செல் போனை இன்னும் ஆன் செய்யவில்லை. சரி... எப்படியும் இது செல் போன்ல பேசற விஷயமில்லை.

10 நாள் தானே...

குமாரின் பெற்றோர் வந்தவுடன் ஊருக்கு சென்றேன்...

தீபாவளி ... மனதிற்கு வலியைத்தான் தந்தது... அவள்ட முன்னாடியே பேசியிருக்கலாம்.

சே!!! அவளை ஒழுங்கா, ரோமிங்கோட வாங்குனு சொன்னேன். இப்ப பாரு போன் பேசனும்னு நினைச்சாக் கூட முடியல.

"ஏன் கண்ணு ஒரு மாதிரியா இருக்க???"

"இல்லம்மா... குமார்க்கு அடிப்பட்டுடுச்சி அதனாலத்தான்"

"நீ ஒன்னும் கவலைப்படாதே!!! எல்லாம் சரியாயிடும்"

பத்து நாள் பத்து யுகங்களாக கடந்தது.

திங்கள் கிழமை காலையில் 8 மணிக்கெல்லாம் என் சீட்டில் இருந்தேன்.

சுமாவின் காலுக்காக எதிர்பார்த்து...
அவளுக்கு போன் செய்தாலும் "The number u r trying is currently not reachable"ஏ வந்தது.

செவ்வாய் கிழமை காலை 5:30 மணிக்கு கால் வந்தது...

Suma calling...

"ஏ!!! என்ன இவ்வளவு சீக்கிரம் கூப்பிடற"

"ரமேஷ்! நீ இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரம் ஆபிஸுக்கு வர முடியுமா???"

"ஏன் என்னாச்சி???"

"நீ நேர்ல வா!!! நான் சொல்றேன்"

"சரி...நான் 7:15க்கு சீட்ல இருப்பேன்"

"வேணாம் 8 மணிக்கு வா!!! போதும்"

"சரி"

அதுக்கு அப்பறம் தூக்கமே வரலை.

8 மணிக்கு அவளோட பில்டிங் லாபில வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.

நேராக பஸ்ஸில் இருந்து வந்தவள். என்னைப் பார்த்தவுடன், லேசாக கண் கலங்கினாள்.

"இரு!!! நான் போய் என் சீட்ல என் ஹாண்ட் பேகை வெச்சிட்டு வந்துடரேன்... அப்பறம் சாப்பிட போகலாம்"

"சரி"

2 நிமிடத்திற்குள் வந்தாள்...

"வா!!! போகலாம்"

"என்ன விஷயம் சொல்லு..."

"எங்க வீட்ல எனக்கு மாப்பிள்ளை பார்த்திருக்காங்க!!!"

ஒரு நிமிடம் பூமி சுற்றவது நின்றுவிட்டது போல் ஆகிவிட்டது...

"என்ன சொல்ற???"

"ஆமாம் ரமேஷ்!!! எங்க அப்பாவோட பிரண்ட் பையனாம்... USல இருக்கிறானாம்"

"அதுக்கு நீ என்ன சொன்ன???"

"நான் என்ன சொல்லனும்னு நீ எதிர்ப்பார்க்கிற???"

என்னிடம் பதில் இல்லை...

"ஒரு வாரம் உட்கார்ந்து அழுதேன்... உன்னை ரீச் பண்ணவும் முடியலை. உன் மனசுல என்ன இருக்குனும் எனக்கு தெரியல... நான் என்ன பண்ண முடியும்னு நினைக்கிற ரமேஷ்"

இதற்கும் பதில் இல்லை...

"உன்னைப் பற்றி என் அம்மாட்ட சொன்னேன்... எங்கம்மா என் கால்ல விழுந்து அழுதாங்க!!! என்னால மறுக்க முடியல"

இதை சொல்லவா என்னை 8 மணிக்கு வர சொன்ன???

"ரமேஷ்... நீ எதுவும் சொல்ல வேண்டாம். என்னை பொருத்தவரை நீ எதுவுமே சொல்லமலே இருந்த மாதிரி இருக்கட்டும்..நாம இனிமே பார்க்க வேண்டாம்... நான் இன்னைக்கு பேப்பர் போட போறேன்... நீ நல்லா இருக்கனும் ரமேஷ்"

அழுதுகிட்டே வேகமா திரும்ப போயிட்டா...

அவள் பிறந்த நாளுக்கு மூன்று நாட்களே இருந்தது. நான் உனக்காக தெலுகு பெசவும், எழுதவும் கத்துக்கிட்டேனே... அது எல்லாமே உனக்கு தெரியாமலே போயிடுச்சே???

உனக்கு நான் தெலுகுல என் கையால எழுதி வெச்ச அந்த கார்ட் என்னைக்கும் என் பெட்டியிலே இருக்கும்...

எப்படியோ ஒரு வருடம் ஓடிவிட்டது... நான் இன்னும் உயிரோடத்தான் இருக்கன்றது எனக்கே ஆச்சரியமாக இருந்தது

"டேய் மச்சான் ... குமாருக்கு பிரோமோஷன் வந்திருக்கு... அதனால இன்னைக்கு அவனோட ட்ரீட்... வா PVR போவோம்"

எல்லோரும் PVR சென்றோம்...

முதலில் என் கண்ணில் பட்டது... பிரின்ஸ் மகேஷ் பாபு in "போக்கிரி".

அங்கே கருவாயன் சொல்லிக் கொண்டிருந்தது என் காதில் விழுந்தது "அங்க பாருடா நம்ம கொல்டிய... நேரா தெலுகு பட போஸ்டரை பார்க்க போயிட்டான்"

Tuesday, August 12, 2008

ஆடு புலி ஆட்டம் - 10

Java is an object oriented programming language. I beleive you people will have some knowledge on programming languages like C, C++

என்னடா இவன் இங்க உக்கார்ந்திருக்கறானு பாக்கறீங்களா? சரி என்ன பிரச்சனைனு இறங்கி பார்த்துடலாம்னு இந்த ட்ரெயினிங் இன்ஸ்டிடியூட்ல சேர்ந்துட்டோம். அது என்ன "டோம்"னு சொல்றானு பாக்கறீங்களா? நானும் நித்யாவும் தான் சேர்ந்திருக்கோம். அவளை சேர வேண்டாம்னு நான் எவ்வளவோ சொன்னேன். அவ தான் பொண்ணுங்களுக்கு எங்கயுமே சில அட்வாண்டேஜ் இருக்கும். அதனால ரெண்டு பேருமே சேர்ந்து கண்டு பிடிக்கலாம்னு ப்ளான்.

அப்பறம் வினோதினி அக்கா அன்னைக்கு ஆபிஸ் போகல. அவனுக்கு காசும் கொடுக்கல. அதே மாதிரி அவுங்க ஊர்ல எந்த பத்திரிக்கைலயும் எதுவும் தப்பா வரல. செல் ஃபோனை ஆஃப் பண்ணி வெச்சிட்டு மூணு நாளா எங்கயும் போகாம உக்கார்ந்திருக்காங்க. இன்னும் பயம் இருக்கு.

நான் தினமும் காலைல ஏழு மணிக்கு ஆபிஸ் போயிட்டு மதியம் மூணு மணிக்கு வரேன். அப்பறம் நாலு மணிக்கு இந்த ட்ரெயிங் இண்ஸ்டிடியூட். நாலு மணில இருந்து அஞ்சு மணி வரைக்கும் க்ளாஸ். அப்பறம் லேப் அவர்ஸ்.வேற ஸ்லாட் கிடைக்கல. ரொம்ப கொடுமையா இருக்கு. எப்படியும் இன்னும் ரெண்டு வாரத்துக்குள்ள ஏதாவது க்ளூ கிடைக்காமலா போகும்? அப்படி ஏதாவது கிடைச்சா இந்த கொடுமைல இருந்து எஸ்கேப் ஆகிடலாம்.

எனக்கு சேரும் போதே கொஞ்சம் சந்தேகம் வர மாதிரி தான் இருக்குது. அப்ளிகேஷன்ல நிறைய ஃபில் பண்ண சொல்றாங்க. அப்பா, அம்மா, கூட பிறந்தவங்களை பத்தின விவரம் எல்லாம் கேட்டிருக்கு. ரெண்டு பேரும் எல்லாத்தையும் மாத்தி தான் கொடுத்திருக்கோம்.

இந்த ரெண்டு நாள்ல இங்க இருக்கறவங்களை நோட் பண்ணது இதுதான்.

ரிஸப்ஷனிஸ்ட் ரூபா அழகா இருக்காங்க. தெளிவா பேசறாங்க. இங்க சும்மா விசாரிக்க வந்தவங்க எல்லாம் இந்த இன்ஸ்டிடியூட்ல சேரதுக்கு பாதி காரணம் இவுங்களா தான் இருப்பாங்க.

அஸிஸ்டெண்ட் வெற்றி அண்ணா ரொம்ப நல்லவரா தெரியறாரு. பசங்களுக்கு எல்லாம் நல்லா ஹெல்ப் பண்றாரு. நிறைய ஸ்டெடி மெட்டிரியல்ஸ் எல்லாம் பசங்களுக்கு சைக்லோஸ்டைல் பண்ணி கொடுக்கறாரு. நேத்து கூட ஜாவா படிக்கிற பசங்களுக்கு ஆரக்கிள் மெட்டிரியல் எல்லாம் சைக்லோஸ்டைல் பண்ணி கொடுத்தாரு. அதுக்கு காசும் வாங்கறதில்லை போல. இவரை வெச்சி ஏதாவது கண்டுபிடிக்க ட்ரை பண்ணலாம். பார்க்கலாம்.

ட்ரெயினர்ஸ் பத்தி எதுவும் அதிகமா தெரியல. எல்லாரும் படிச்சி முடிச்சிட்டு வேலை தேடற கூட்டம் மாதிரி தெரியுது. ஒரு சிலர் வேலையும் பார்த்துட்டு இங்க பார்ட் டைமாவும் வேலை செய்வாங்க போல தெரியுது. எங்களுக்கு ஜாவா எடுக்கறது சுகுமாரன். இங்க நிறைய தமிழ் ஆளுங்க தான். இதுக்கு முந்தின பேட்ச்க்கு ஜாவா எடுக்கறவர் கூட தமிழ் தான். ஆரக்கிள் எடுக்கறது, C, யுனிக்ஸ், டாட் நெட் எல்லாத்துக்கும் பாடம் எடுக்கறதுலயும் தமிழ் ஆளுங்க இருக்காங்க.

இப்ப என்னுடைய ப்ளான் ஆராக்கிள் கிளாஸ்க்கு என்னோட ஃபிரெண்ட் அசோக்கை சேர வைக்கறது தான். அது ஏன் ஆராக்கிள் க்ளாஸ்னு யோசிக்கறீங்களா? அதுக்கு காரணம் இருக்கு. உங்களுக்கே போக போக புரியும்.

அவனுக்கு இந்த பிரச்சனை எல்லாம் தெரியும். அவனும் எனக்கு கண்டிப்பா உதவறனு சொல்லியிருக்கான். அடுத்த திங்க கிழமைல இருந்து அவனுக்கு க்ளாஸ். ஏழு மணி பேட்ச்.

---------


இந்த ஒரு வாரத்துல எதுவும் பெருசா எதுவும் நடக்கல. அந்த சுகுமாரனுக்கு ஜாவா ஓரளவுக்கு தான் தெரிஞ்சிருக்குது. நான் கொஞ்சம் கஷ்டமா கேள்வி கேட்டா, நான் அடுத்த க்ளாஸ்ல சொல்றனு சொல்றாரு. அப்பறம் நாங்க லேப்ல இருக்கும் போது தினேஷ் சாரை கூப்பிட்டு வராரு. தினேஷ் அந்த கேள்விக்கு எல்லாம் சாதாரணமா சொல்றாரு. இந்த அளவு கூட ஜாவா தெரியாம சுகுமாரன் எப்படி இங்க காலத்தை ஓட்றாரு. சுகுமாரனும் அந்த ஆரக்கிள் எடுக்கற ப்ரேமும் ரொம்ப க்ளோஸ் போல. ப்ரேம் ரொம்ப கடலை போடறாரு.

நான் கேள்வி கேக்கறதை பார்த்து நித்யாவுக்கு ரொம்ப சந்தோஷம். அதே மாதிரி லேப்ல ரெண்டு பேரும் ஒரே சிஸ்டம் தான். அவளும் இப்ப தான் ஜாவா கத்துட்டு இருக்கா. அவக்கிட்ட சுகுமாரன் ரொம்பவே வழியறாரு. அவருக்கு எப்படியும் ஆப்பு இருக்கும்னு நினைக்கிறேன். வெற்றி அண்ணனையும் இவரு ஓவரா விரட்டிட்டு இருக்காரு. அதனால அந்த அண்ணனை கைல போட்டா வேலை சீக்கிரம் நடக்கும். ஆனா அவர் இப்படி ஓடி ஓடி வேலை செஞ்சிட்டு இருக்காரே. எப்படி இவரை நம்ம மடக்கலாம்னு யோசிக்கனும்.

எப்படியும் அசோக் ஒரு ரெண்டு மூணு நாள்ல அந்த அண்ணனை மடக்கி போட்டுடுவான். அப்ப தான் அடுத்த வேலையை ஆரம்பிக்க முடியும். இன்னைக்கு தான் அவன் சேர்ந்துட்டானே. அடுத்த வாரத்துல எப்படியும் கண்டுபிடிச்சிடலாம்.

---------

அசோக் சேர்ந்து இன்னையோட ஒரு வாரமாச்சு. எதுவும் பெருசா பண்ணாம இருக்கான். அவனுக்கு ஒரு வேலை கொடுத்துருக்கேன். அதை மட்டும் அவன் பண்ணிட்டானா, நாங்க அடுத்த வாரம் கோர்ஸ் போகனுமா இல்லை வேண்டாமானு முடிவு எடுத்துடலாம். மணி பன்னெண்டு ஆச்சு. இன்னும் அவன் ஆளை வேற காணோம். போன் வேற ஸ்விட்ச் ஆஃப் ஆகிருக்கு. ஒன்னுமே புரியலையே. ஏதாவது பிரச்சனையாகிருக்குமா?

(ஆட்டம் தொடரும்...)

Sunday, August 10, 2008

ஆடு புலி ஆட்டம் - 9

"ரவி, உன்னால கண்டிப்பா இது ட்ரெயினிங் இன்ஸ்டிடியுட்ல இருக்கவங்க ஒருத்தவங்க வேலைதானு சொல்ல முடியுமா?"

"நிச்சயமா அவுங்க தானு இப்ப இருக்கற நிலைமைல சொல்ல முடியாது. எனக்கு இன்னும் கொஞ்சம் இன்ஃபர்மேஷன் வேணும்"

"ஹிம்ம்ம்"

"உங்ககிட்ட முதல் தடவை காசு கேக்கும் போது நீங்க காசை அவுங்க அக்கவுண்ட்ல போடறேனு சொன்னீங்களா?"

"நான் சொன்னேன். அவுங்க ஒத்துக்கல"

"அப்பறம்?"

"என்னை நேரா பரிஸ்டா காபி சென்டருக்கு வர சொன்னாங்க. அங்க ஒருத்தர் நீல சட்டையும், கருப்பு பேண்டும் போட்டு தனியா காபி குடிச்சிட்டு இருப்பாரு. நானும் காபி வாங்கிட்டு அவர் எதிர்ல போய் உக்காரணும்னு சொன்னாங்க"

"அப்பறம்?"

"பாதி குடிச்சி முடிச்சவுடனே என் ஹேண்ட் பேக்ல இருந்து பணத்தை எடுத்து கொடுக்கணும்னு சொன்னாங்க"

"ஹிம்ம்ம்"

"அப்பறம் காபி குடிச்சி முடிச்சவுடனே அவர் கூடவே வெளிய வந்து அவர் போற டைரக்ஷனுக்கு ஆப்போசிட்டா போகனும்னு சொன்னாங்க"

"ஹிம்ம்ம்ம். லெட் மீ திங்"

பணத்தை அக்கவுண்ட்ல வேண்டாம்னு சொன்னது சரி. ஆனா மக்கள் வர இடத்துல வந்து அவனுக்கு எதிர்ல உக்கார்ந்து ஏன் காபி குடிக்க சொன்னானுங்க? அப்பறம் ஏன் அவன் எழுந்திரிக்கும் போது கூடவே எழுந்து வெளிய வர சொன்னானுங்க?
சம் திங் ஃபிஷ்ஷி. இல்லைங்களா? பொதுவா இந்த மாதிரி பிரச்சனை பண்றவனுங்க முகத்தையே காட்ட மாட்டாங்களே.

"பணத்தை ஏதாவது கவர்ல வெச்சி கொடுத்தீங்களா?"

"இல்லைப்பா. பணத்தை எந்த கவர்லயும் வைக்காம கொடுக்கனும்னு சொன்னாங்க. எல்லாமே முன்னாடியே தெளிவா சொல்லிட்டாங்க"

"ஹிம்ம்ம்"

இது கொஞ்சம் கஷ்டமான விஷயமா தான் இருக்கும் போல. நம்ம தமிழ் படத்துல எல்லாம் ஒரு பாலிதின் பைல சுத்தி துணி பைல வெச்சி கொடுக்க சொல்லுவாங்க. இவனுங்க ஏன் பணத்தை எதுலயும் போடாம அவன் கைல தர சொல்லியிருக்காங்க. பணத்தை கைல கொடுத்துட்டு சேர்ந்து வெளிய வரணும். இதுல ஏதோ சீரியஸா இருக்கு போல இருக்குங்க. உங்களுக்கு தோணல?

"சரி நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க. இது தான் என்னோட ஆர்டர். முதல்ல உங்க ட்ரெயினிங் இன்ஸ்டிடியூட், அடுத்து உங்க HR, அடுத்து உங்க ஃபிரெண்ட்ஸ் கூட்டத்துல ஒருத்தன். எப்படியும் கண்டுபிடிச்சிடலாம்"

"நாளைக்கு என்னை காசு எடுத்துட்டு ரெடியா இருக்க சொல்லியிருக்கானுங்க"

"அதெல்லாம் போக தேவையில்லை. பார்த்துக்கலாம். வாங்க இப்ப முதல்ல சாப்பிடலாம்"

"இல்லை எனக்கு வேண்டாம்பா"

"வாங்கக்கா. பசியா இருந்தா எனக்கு மூளை வேலை செய்யாது"

"ரவி. எனக்கு ஒரு சந்தேகம்"

"சொல்லுங்கக்கா"

"இவ்வளவு விஷயம் உனக்கு தெரியுது. ஆனா நித்யா உனக்கு எதுவுமே தெரியாது. நீ லூசுனு சொல்லிட்டு இருக்கா. எனக்கு உன் மேலயே சந்தேகமா இருக்கு"

"கிழிஞ்சிது. உங்ககிட்ட மட்டும் உண்மையை சொல்றேன். நித்யாகிட்ட சொல்லாதீங்க"

நான் உண்மையை சொல்லி முடிச்சவுடனே வினோதினி அக்கா முகத்துல பெரிய ஆச்சரியம். என்னால இந்த பிரச்சனையை சமாளிக்க முடியும்னு அவுங்களுக்கு ஓரளவுக்கு நம்பிக்கை வந்துடுச்சிங்க. அவுங்களே சாப்பிட ஓ.கே சொல்லிட்டாங்கனா பாருங்களேன். இருங்க சாப்பிட்டு வந்துடறேன்.

இந்த வீட்ல எனக்கு தெரிஞ்சி யாருமே பேசாம சாப்பிடறது இது தான் முதல் தடவை. நித்யா லூசுக்கூட பேசலை. நானும் எவ்வளவோ டாபிக் ஆரம்பிச்சேன் எதுவும் வொர்க் அவுட் ஆகலைங்க. சரி விடுங்க. நம்ம இப்ப பிரச்சனையை பத்தி யோசிப்போம். வேற எதையும் யோசிக்காம இந்த சினாரியோல மட்டும் கான்சன்ட்ரேஷன் செய்வோம். ஒவ்வொரு ஃபிரேமா பார்க்கலாம்.

பரிஸ்டா காபி ஷாப் அவுட் டோர்ல சேர் போட்டிருப்பாங்க. குடை குடையா இருக்கும். ஒரு குடைக்கு கீழ ஒரு அஞ்சு ஆறு பேர் சேர்ல உக்கார்ந்து காபி குடிக்கலாம். இப்படி இருக்கும் போது அங்க ஒருத்தவன் மட்டும் ஒரு குடைக்கு கீழ காபி குடிக்கறான். அங்க நம்ம வினோதினி அக்கா காபி வாங்கிட்டு போறாங்க. இப்ப அவனுக்கு எதிர்ல நம்ம அக்கா உக்காராங்க. பாதி காபியை குடிச்சதுக்கு அப்பறம் காசு எடுத்து கொடுக்கறாங்க. அந்த பணம் இப்ப நம்ம கண்ணுக்கு தெரியுது. அது எந்த கவர்லயும் இல்லை. இப்ப காபி குடிச்சி முடிக்கறாங்க. ரெண்டு பேரும் ஒட்டுகா எழுந்து வெளிய MG ரோட்டுக்கு வராங்க. ரெண்டு பேரும் வெவ்வேற திசைல போறாங்க.

இது தான் எனக்கு கொஞ்சம் ட்ரிக்கியா இருக்கு. இந்த மாதிரி பொது இடத்துக்கு வர சொல்றவன் ஒண்ணு புத்தியில்லாம சொல்லலாம். இல்லை ரொம்ப புத்திசாலியா இருந்தா சொல்லலாம். நம்ம மாட்டிட்டு இருக்கறது ரெண்டாவது வகையா தான் எனக்கு படுது. முதல் வகைல இருக்கறவன் நம்பர் மாத்தனதுக்கு அப்பறமும் கண்டுபிடிச்சிருக்க மாட்டான். அப்ப அதி புத்திசாலியா இருக்கவன் இந்த மாதிரி செஞ்சா என்ன காரணம் இருக்கலாம்? பணம் மட்டுமே நோக்கமா இருக்காதுனு என் மனசுக்கு படுது.

HR இதை பண்ணலாம். இவுங்களை கண்டுபிடிக்கறது சுலபம். இவுங்க ஃபேக்னு சொல்லி அந்த இண்ஸ்டிடியூட்ல இருந்து பண்ற மாதிரி HRக்கு போன் பண்ணாலாம். அவன் இந்த அக்காவை கூப்பிட்டு விசாரிச்சா நல்லவன். இல்லைனா தப்பு அங்க இருக்கலாம். ஆனா அப்படி பண்ணா இந்த அக்கா வேலை போயிடும். அதனால அந்த ஐடியா கடைசியா வைக்கலாம்.

அடுத்து ட்ரெயினிங் இண்ஸ்டிடியூட். இவனுங்களும் இதே மாதிரி பொண்ணுங்களை தப்பா பயன்படுத்தலாம். இதை கண்டுபிடிக்கவும் வழி இருக்கனும்.

(தொடரும்...)

Thursday, August 07, 2008

ஆடு புலி ஆட்டம் - 8

என்னங்க ஏதாவது லவ் மேட்டரா இருக்கும் சுலபமா சமாளிச்சி சமாதானம் பண்ணி வெச்சா பின்னாடி நமக்கு இந்த அக்கா ஹெல்ப் பண்ணுவாங்கனு பார்த்தேன். பிரச்சனை கொஞ்சம் பெருசா இருக்கும் போல இருக்கு.

மேட்டர் என்னனு ஓரளவுக்கு புரிஞ்சி போச்சி. அக்கா ஃபேக் போட்டு சேர்ந்துருப்பாங்க போல. அது எப்படியும் கம்பெனில தெரிஞ்சிருக்கும். வேலையை விட்டு தூக்கறனு சொல்லியிருப்பானுங்க. ஆனா அதுக்கு தற்கொலை பண்ணிக்கனுமா என்ன? இல்லை இவுங்க ஃபேக்னு தெரிஞ்சி கம்பெனி HRஓ, மேனஜரோ இவுங்களை தப்பா பயன்படுத்திக்க பார்த்திருப்பானுங்களோ? இதுக்கான வாய்ப்பு ரொம்ப அதிகமா இருக்கு. இல்லைனா எவனாவது ஃபிரெண்ட்ஸ் டபுல் கேம் ஆடிருப்பானுங்க. பேசுவோம். பொண்ணுங்க எதுக்கு வேணா எப்படி வேணா முடிவு எடுப்பாங்க.

"வினிதா, நித்யா. வீட்ல சாப்பிட ஏதாவது இருக்கா?"

" "

"என்ன முழிச்சிட்டு இருக்கீங்க? சாப்பிட ஏதாவது தயார் பண்ணுங்க. இன்னும் ஒரு மணி நேரத்துல எல்லாம் சரியாகிடும்"

" "

"போங்க. நான் தான் சொல்றேன் இல்லை"

ரெண்டு பேரும் கிச்சனுக்கு போயிட்டாங்க. அப்பாடா.

"சொல்லுங்கக்கா, வேலை விட்டு தூக்கிடுவோம்னு ஏதாவது சொன்னாங்களா?"

"இல்லை"

அப்ப முதல் விஷயம் இல்லை. இன்னும் கொஞ்சம் சீரியஸ்ஸான விஷயமாத்தான் படுது.

"சரி என்ன கேட்டானுங்க? ஏதாவது தப்பா நடந்துக்கிட்டாங்களா?"

வினோதினி அக்கா முகம் விரிஞ்சதை பார்க்கும் போது அவுங்களுக்கு ஆச்சர்யமும், பயமும் சேர்ந்தே வந்துருக்கும் போல இருக்கு.

"நீங்க சொல்லும் போதே எனக்கு புரிய ஆரம்பிச்சிடுச்சி. கம்பெனி HRஆ, மேனஜரா இல்லை ஃபிரெண்ட்ஸ்னு கூட சுத்தறது யாராவதா?"

"தெரியல?"

"ஏதாவது டிமேண்ட் பண்ணாங்களா?"

"பணம் தான்"

"நீங்க இன்னும் கொஞ்சம் விவரமா சொன்னா, நாளைக்கு காலைல பிரச்சனை தீர்ந்துடும். பயப்படாம என்கிட்ட சொல்லுங்க"

"நான் MCA முடிக்கும் போது கடைசி செமஸ்டர்ல ஒரு பேப்பர்ல ஊத்திக்கிச்சு. நல்லா தான் எழுதியிருந்தேன். அப்படி இருந்தும் ஃபெயிலாயிட்டேன். ஒரு ஆறு மாசம் வீட்ல இருந்துட்டு பரிட்சை எழுதிட்டு ரிசல்ட் வரும் போது கிட்டதட்ட ஒன்பது மாசமாயிடுச்சி. பெங்களூர் தான் பக்கம்னு இங்க வேலை தேட வந்தேன். எதுவும் கிடைக்கல. அப்பறம் ஒரு கால் சென்டர்ல சேர்ந்து ஒரு பத்து மாசம் வேலை செஞ்சேன். அப்பறம் என் ஃபிரெண்ட்ஸ் எல்லாம் கால் சென்டர்ல இருக்கறது பின்னாடி பிரச்சனையாகும்னு சொல்லி ஒரு ட்ரெயினிங் இன்ஸ்டிடியூட்ல ஜாவா படிக்க சொன்னாங்க. நானும் படிச்சேன். அந்த இன்ஸ்டிடியூட்லயே ரெண்டு வருஷம் எக்ஸ்பீரியன்ஸ் சர்டிபிகேட் தந்தாங்க. அதை வெச்சி இந்த கம்பெனில வேலைக்கு சேர்ந்தேன்"

"ஹிம்ம்ம்"

"ஒரு மாசம் கழிச்சி ஒரு ஃபோன் வந்துச்சு. அதுல நான் ஃபேக் போட்டதை பத்தி எங்க ஊர் பத்திரிக்கைல எல்லாம் போட்டு நாறடிச்சிடுவனு சொல்லி பயமுறுத்தி காசு கேட்டாங்க. நானும் பயத்துல காசு கொடுத்தேன். அப்பறம் நான் என் ஃபோன் நம்பரை மாத்திட்டேன். இன்னைக்கு கரெக்டா மறுபடியும் என் புது நம்பருக்கு போன் பண்ணாங்க. நம்பர் மாத்தினா கண்டு பிடிக்க முடியாதானு சொல்லி அசிங்க அசிங்கமா திட்டினாங்க. நாளைக்கு பணம் எடுத்துட்டு வர சொல்லியிருக்காங்க. இல்லைனா நான் ஃபேக் போட்டதையும் அதை மறைக்க காசு கொடுத்ததையும் எங்க ஊர் பத்திரிக்கைல போட்டுடுவேனு மிரட்டறாங்க. எனக்கு பயமா இருக்கு. இவனுங்க என்னை விட்டு வைக்க மாட்டானுங்க போல"

"அழாதீங்க. முதல்ல அழுகையை நிறுத்துங்க. யாரா இருக்கும்னு ஏதாவது யோசிச்சீங்களா?"

"யாருனே எனக்கு சரியா தெரியல"

"முதல்ல நீங்க பயப்படறதை நிறுத்துங்க. இந்த மாதிரி பெரிய கம்பெனில ஃபேக்ல மக்கள் சேராங்கனு எந்த பத்திரிக்கைலயும் அவ்வளவு சீக்கிரம் போடமாட்டாங்க. ஏன்னா அது அந்த கம்பெனியோட வளர்ச்சியையும் ரெப்புட்டேஷனையும் பாதிக்கும். அதுவும் நீங்க வேலைக்கு சேர்ந்திருக்கற கம்பெனி, இந்தியாவுல தலை சிறந்த சாப்ட்வேர் கம்பெனில ஒண்ணு. அதனால எந்த பத்திரிக்கைலயும் அவுங்க கம்பெனி ஆளுங்களை பத்தி தப்பா போட விட மாட்டாங்க. ஏன்னா அவுங்க இண்டர்வியூ ப்ராசஸ் சரி இல்லைனு மத்தவங்க பேச அது வாய்ப்பளிச்சிடும். அதனால பத்திரிக்கைல போடுவோம்னு அவன் சொன்னதை வெச்சி நீங்க பயப்பட வேண்டாம்"

"நிஜமாவா சொல்ற?"

"ஆமாம். சத்தியமா நீங்க என்னை நம்பலாம். அதுவும் இந்த மாதிரி நம்பகத்தன்மை இல்லாத ஆளுங்ககிட்ட இருந்து வரது எல்லாத்தையும் வெச்சிட்டு இந்த மாதிரி போட மாட்டாங்க. அதனால நீங்க அவனுக்கு பயப்படறதை நிறுத்துங்க. இப்ப நாம இது யாரா இருக்க முடியும்னு யோசிப்போம். அதுக்கு ஏத்த மாதிரி நாம அவுங்களை டீல் பண்ணிக்கலாம்"

"ஹிம்ம்ம்"

"உங்ககிட்ட பேசினவங்க தமிழ்ல பேசினாங்களா?"

"ஆமாம்"

"உங்களை இண்டர்வியூ பண்ண HR, உங்க மேனஜர் யாராவது தமிழ் ஆளுங்களா?"

"இல்லை. HR வட இந்தியாக்காரர், மேனஜர் ஆந்திரா"

"ஹும்ம்ம். உங்க டீம்ல எத்தனை பொண்ணுங்க?"

"மொத்தம் நாலு பொண்ணுங்க"

"சரி அதுல எத்தனை பேர் அங்க லேட்ரலா சேர்ந்தாங்க?"

"நான் மட்டும் தான். மீதி எல்லாரும் அந்த கம்பெனிலயே ஃபெரஷரா சேர்ந்தவங்க"

"அப்ப இது உங்க மேனஜர் வேலையா இருக்க வாய்ப்பு குறைவு. ஏன்னா அவுங்க பண்றது ஒரு ப்ராஸஸ் மாதிரி இருக்கு. ஒருத்தருக்காக இவ்வளவு ரிஸ்க் எடுக்க மாட்டாங்க. என்னோட கணிப்பு HR இல்லைனா உங்க ப்ரெண்ட்ஸ் யாராவது ஒருத்தவங்க தான்"

"என் ஃபிரெண்ட்ஸா இருக்க வாய்ப்பில்லை. ஏன்னா நான் நம்பர் மாத்தி எந்த பிரெண்டுக்கும் கொடுக்கல. எல்லாரும் வினிதா நம்பர்ல தான் காண்டாக்ட் பண்றாங்க"

"ஹிம்ம்ம்.... உங்க ஆபிஸ்ல இண்ட்ரா நெட் இருக்குமே. அதுல அப்டேட் பண்ணீங்களா?"

"ஆமாம். என் டீம் லீட் அப்டேட் பண்ண சொன்னாரு. அதனால போன வாரம் தான் பண்ணேன்"

"அப்படினா HRக்கு சான்ஸ் அதிகம். அவுங்க கொஞ்ச பேர் சேர்ந்து இந்த மாதிரி சுலபமா பண்ணலாம். வேலைக்கு சேரும் போதே ஃபேக்னு தெரிஞ்சி ஆள் எடுத்து அப்பறமா அவுங்களை பத்தி மத்த விஷயங்களை தெரிஞ்சிட்டு சுலபமா மிரட்டலாம்"

"இருக்கலாம்"

"அதே மாதிரி உங்க டீம்ல யாருக்காவது உங்க மேல க்ரஷ் இருக்கலாம்னு நீங்க ஃபீல் பண்றீங்களா?"

"அப்படி இருக்கற மாதிரி தெரியல. எல்லாரும் நல்லா தான் பேசறாங்க. அதுவுமில்லாம நான் சேர்ந்தே ரெண்டு மாசம் தான் ஆகியிருக்கு"

"ஹிம்ம்ம்"

"உங்க டீம்ல தமிழ் பசங்களோ இல்லை பொண்ணுங்களோ யாராவது இருக்காங்களா?"

"ஆமாம். ஒரு பையன், ஒரு பொண்ணு"

"அதுல யார் மேலயாவது சந்தேகம் படற மாதிரி?"

"இல்லை. அவுங்க ரெண்டு பேரும் ட்ரெயினிங்ல இருந்து ஒண்ணா இருக்கறவங்க அண்ட் தே ஆர் இன் லவ் வித் ஈச் அதர்ஸ்"

"அப்ப அவுங்களா இருக்க முடியாதுங்கறீங்க?"

"ஆமாம்"

"ஆஹா... ஒரு முக்கியமானதை விட்டுட்டனே. நீங்க ட்ரெயினிங் போனீங்களே. அவுங்க தானே உங்களுக்கு ஃபேக் எக்ஸ்பீரியன்ஸ் கொடுத்தாங்க?"

"ஆமா"

"ஹவ் டிட் ஐ மிஸ்ட்டு இட்? ஷிட்... கம் ஆன். தேர் இஸ் ய ஹை சான்ஸ் ஆஃப் தெம் பீயிங் தி கல்ப்ரிட்ஸ். ஏன்னா திருடனை உருவாக்கறவனுக்கு திருடன்கிட்ட இருந்து திருடறது சுலபம்"

வினோதினி அக்கா முகத்துல ஒரு அதிர்ச்சி தெரிஞ்சிது...

(தொடரும்...)