தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Friday, November 13, 2009

அப்பாவாக‌ இருப்ப‌து...

பாப்பா வந்ததற்கு பிறகு எதுவும் எழுத முடிவதில்லை. வீட்டிற்கு செல்வதற்குள் இருட்டி விடுகிறது. நான் கதவை திறந்தவுடனே என்னை நோக்கி ஓடி வருகிறாள். ஓடி என்றால் ததக்கா புதக்கானு வேகமா நடப்பதை தான் சொல்கிறேன். வந்து காலை பிடித்துக் கொண்டவளை தூக்கலாமா என்று ஒரு நிமிடம் சிந்திக்கிறேன். வெளியே குளிரிலிருந்து வருவதால் கை மிகவும் குளுமையாக இருக்கும்.

இருந்தாலும் அவங்க‌ விட மாட்டாங்க‌. நான் துணி மாற்றி கை அலம்பி அவுங்கள‌ தூக்கும் வரை என்னை பின் தொடர்ந்து கொண்டே இருப்பாங்க. அப்பறம் தூக்கினதுக்கு அப்பறம் இரண்டு பேருக்குமே சந்தோஷம். ஒரு பெண் குழந்தைக்கு அப்பாவாக இருப்பது எவ்வளவு சந்தோஷமான விஷயம்னு வார்த்தைகளால் விவரிக்க முடியாது. சர்க்கரையின் சுவையை சுவைத்தால் தான் உணர முடியும். அதை ஆயிரம் பக்கம் எழுதி உணர வைக்க முடியாது. அது போல தான் இந்த உணர்வையும் எனக்கு விளக்க தெரியவில்லை.

என் மனைவியிடம் நீயும் உன் அப்பாவை இப்படி தான் குழந்தைல கொஞ்சிருப்பியா? அவரும் உன் மேல இதே மாதிரி தான் பாசமா இருந்திருப்பாரு இல்ல அப்படினு அசட்டுத்தனமான கேள்விகளை கேட்கிறேன். என் அக்காவைக் கூட என் அப்பா இப்படி தான் பாசமா வளர்த்திருப்பாருனு நினைத்து பார்க்கிறேன். எந்த பெண் கஷ்டப்பட்டாலும் அவளுடைய அப்பா மனசு எந்த அளவு கஷ்டப்படும் என்று எண்ணி முடிந்த வரை மனைவியை திட்டக் கூடாது என்று நினைக்கிறேன்.

லேப் டாப் முன்னாடி உட்கார்ந்த உடனே வந்து மடியில் அமர்ந்து கொள்கிறாள். அப்பறம் என்ன பண்ண முடியும். அவுங்க பாட்டு தான் யூ ட்யூப்ல ஓடும். வரான் வரான் பூச்சாண்டினு ஒரு பாட்டு இருக்கு. அது என் லாப் டாப்ல ஆயிரம் முறைக்கு மேல ஓடியிருக்கும். அடுத்து குவா குவா வாத்து, அம்மா இங்கே வா வா, எலியாரே எலியாரே, நிலா நிலா இப்படி ஒரு இருபது பாட்டு கேட்பாங்க.

அப்பறம் அவுங்களோட சாப்ட் டாய்ஸ் பிங்கி, டெட்டி, புலி, எலி எல்லாத்தையும் வெச்சிட்டு விளையாடுவாங்க. புலியை விட்டு அப்பாவை கடிக்க வைக்கிறது தான் விளையாட்டு. அதைப் பார்த்து பயங்கரமா சிரிப்பாங்க. ஒவ்வொரு அறையா புலி பொம்மையை எடுத்துட்டு நடப்பாங்க. அவுங்க எங்க சுவற்றுல இடிச்சிப்பாங்களோனு நாங்களும் அவுங்க பின்னாடியே போகனும்.

எனக்கு யாராவது ஃபோன் பண்ணா ஒரு பத்து நிமிஷம் இவுங்க பேசுவாங்க. அப்பவும் ஃபோன் வாங்கிட்டு நடந்துட்டே பேசுவாங்க. இப்படி நடந்து டயர்டானவுடனே குவா குவா வாத்து பார்த்துட்டே ஏதாவது சாப்பிடுவாங்க. அப்பறம் ஒவ்வொரு பாட்டா பார்த்துட்டே தூங்கிடுவாங்க. எப்படியும் மணி பதினொன்று பனிரெண்டு ஆகிடும். அதற்கு பிறகு ஏதாவது மெயில் வந்திருக்கானு பார்த்துட்டு முடிந்த வரை பதில் சொல்லிவிட்டு படுக்கவே நேரம் சரியாக இருக்கிறது.

ஊரில் இருந்தால் இவுங்கள‌ பார்த்துக்க ஒரு பெரிய கூட்டமே இருக்கு. சீக்கிரம் ஊருக்கு போகணும்.