தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Monday, March 30, 2009

இது கண்ணன் பாடல் இல்லையா???

இந்த பாட்டு கண்ணன் பாட்டு இல்லைனு ஒரு ஆன்மீக பதிவர் சொல்றாரு. மக்களே! நீங்களே சொல்லுங்க. இது கண்ணன் பாட்டா இல்லையானு...

இந்த பாடலை பாடியவர் பரவை நாச்சியார் . அவர் கண்ணனை தன் பேரனாக நினைத்து பாடுகிறார்.

மதுர வீரன் தானே...
அவன உசுப்பிவிட்ட வீணே
இனி விசுலு பறக்கும் தானே
என் பேராண்டி மதுரை வீரன் தானே

(இங்கே அவர் சொல்ல வருவது என் பேரன் மதுராவில் அவதரித்த வீரன் (கண்ணன் மதுரா வீரன் தானே). கம்சா அவனை வீணாக உசுப்பி விட்டாய்.
இனி சங்கு (விசில்) முழங்குவது உறுதி. என் பேரன் மதுரா வீரன் தானே...)

ஏ சிங்கம் போல
ஏ சிங்கம் போல நடந்து வரான் செல்ல பேராண்டி
அவனை சீண்டியவன் தாங்க மாட்டான் உதையில தாண்டி
ஏ தில்லா தாங்கு தாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு
ஏ தில்லா தாங்கு தாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு

(காட்டின் அரசனான சிங்கம் போல கம்பீரமாக நடந்து வருகிறான் என் செல்ல பேரன். அவன் சாதாரணமாக யாரிடமும் வம்புக்கு போக மாட்டான். அவனை உன் அசுரர்களை அனுப்பி சீண்டினால், அவர்கள் உதை பட்டு சாவார்கள். வேண்டாம் கம்சா...)

ஏ சீயான் சீயான் சினுக்கு இவனை புத்துருக்கு அனுப்பு
ஏ சீயான் சீயான் சினுக்கு இவனை புத்துருக்கு அனுப்பு

(கண்ணனை நோக்கி, சீமானே, இவர்கள் செய்வது தெரியாமல் பாவ காரியங்களை செய்கிறார்கள். இவர்களை நீ கொல்லாமல், வில்லிப்புத்தூருக்கு அனுப்பு. அங்கே ஆண்டாளின் அழகிய தமிழ் பாசுரங்களை கேட்டால் தானாக மனமுருகி மாறிவிடுவார்கள்)


ஏ புலிய போல
ஏ புலிய போல துணிஞ்சவன்டா எங்க பேராண்டி
உங்களை பஞ்சு மிட்டாய் போல பிச்சு வீச போராண்டி
ஏ தில்லா தாங்கு தாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு
ஏ இந்தா ஏ இந்தா ஏ இந்தா இந்தா இந்தா இந்தாஆஆஆ
ஆ ஆ ஆ இந்தா

(போராடும் குணம் கொண்ட புலியை போல் எதற்கும் அஞ்சாதவன் என் பேரன். அசுரர்களாகிய உங்கள் அனைவரையும் பஞ்சு மிட்டாய் போல் பிய்த்தெரிய போகிறான்.அந்த காலத்தில் பெரும்பாலும் மல்யுத்தமே நடைபெறும். அதில் அனைவரையும் பஞ்சை பிய்ப்பது போல் எளிதாக கொன்றனர் பலராமனும், கண்ணனும்)

ஏ சூறாவளி
ஏ சூறாவளி காத்து போல சுழண்டு வராண்டி
அவனை சுத்தி நிக்கும் பசங்க எல்லாம் மிரண்டு போராண்டி
ஏ தில்லா தாங்கு தாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு
ஏ கோவில்பட்டி முறுக்கு சும்மா குனிய வெச்சி நொறுக்குடாடே


(கண்ணனை அழிக்க சடகாசுரனை அனுப்புகிறான் கம்சன். அவனோ சூறாவளி கற்றாக மாறி ஊரையே அழித்து கொண்டு வருகிறான். அந்த சூறாவளி காற்றை கண்டு அனைவரும் அஞ்சி நடுங்குகிறார்கள். ஆனால் கண்ணனோ சடகாசுரனை அழித்து மக்களை காப்பாற்றுகிறான். அதனால் மகிழ்ந்து அனைவரும் முறுக்கு செய்து தீபாவளி அன்று சாப்பிடுகிறார்கள்.


ஏ ஜல்லிக்கட்டு
ஏ ஜல்லிக்கட்டு காளை போல துள்ளி வராண்டி
உங்கள பனைமரமா புடுங்கி இப்ப வீச போராண்டி
ஏ கும்தலக்கடி கும்மா அடி விட்டான் பாரு யம்மா
ஏ கும்தலக்கடி கும்மா அடி விட்டான் பாரு யம்மாமீண்டும் கண்ணனை அழிக்க விருத்திகாசுரனை அனுப்புகிறான் கம்சன். அவனோ காளையை போல் உருமெடுத்து வருகிறான். அதை உணர்ந்த கண்ணன் அருகிலிருக்கும் பனைமரத்தை பிடுங்கி அடித்து விருத்திகாசுரனை கும்மென்று அடித்து கொன்று விடுகிறான்

இவ்வளவு பலம் வாய்ந்த என் கண்ணனோடு மோதாதே கம்சா என்று எச்சரிக்கிறார் பரவை நாச்சியார்...


இப்பவாது சொல்லுங்க, இது கண்ணன் பாட்டு தானே ;)

Saturday, March 28, 2009

தண்ணீர் தண்ணீர்

இந்தப் பதிவு நான் ரொம்ப நாளா எழுதனும்னு நினைச்சிட்டு இருந்த ஒண்ணு. இன்னைக்கு தான் சரியா நேரம் கிடைச்சிருக்கு.

இன்னைக்கு எல்லாம் பைப்பத் திறந்தா தண்ணி வருது. மோட்டார் போட்டா வீட்ல தண்ணி தொட்டி ரொம்பிடுது. அதை நம்ம இஷ்டத்துக்கும் பயன்படுத்தறோம், நிறைய பேர் தண்ணீரை தேவைக்கு அதிகமா பயன்படுத்தறதும் பார்த்திருக்கேன். ஆனா இந்த தண்ணிக்காக ஒரு காலத்துல நாங்க பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமில்லை. 

எங்க ஊர்ல ஆறுனு பேருக்கு தான் ஒண்ணு இருக்கு. மழை காலத்துல நிறையா தண்ணி ஓடும், ஆனா அது ரெண்டு மூணு மாசத்துலயே வறண்டு போய் மண்ணு தெரிய ஆரம்பிச்சிடும். இன்னமும் அப்படி தான். ஆனா இப்ப திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆத்து தண்ணி எங்க ஊருக்கும் கிடைக்குது. அப்ப எல்லாம் அப்படி இல்லை.

நான் சொல்றது தொன்னூறுகளின் ஆரம்பத்தில். எங்க ஊரை நான் எப்பவும் காஞ்சிப் போன கள்ளக்குறிச்சினு தான் சொல்லுவேன். எப்ப பார்த்தாலும் தண்ணி பஞ்சம் தான் இருக்கும். வீட்டு உபயோகத்துக்கு தேவையான தண்ணீரை (குளிக்கறது, துணி துவைக்கிறது) கிணத்துல இருந்து இறைச்சி தான் பயன்படுத்தனும். அப்ப நான் நாலாவது, அஞ்சாவது தான் படிப்பேன். ஒரு குடத்து தண்ணீரை என்னால முழுசா இறைக்க முடியாது. பொதுவா அப்பா, அம்மா தான் இறைப்பாங்க. ஆனா சில சமயம் அவசரத்துக்கு நானும், அக்காவும் சேர்ந்து தண்ணி இறைப்போம். எங்க கிணறு ஒரு அம்பது அடி ஆழம் இருக்கும். தண்ணி எப்பவும் குறைவா தான் இருக்கும். 

கிணத்துல தண்ணி இறைக்கறதும் ஒரு கலை தான். குடத்தை கீழ விடும் போது ரொம்ப வேகமா விடறோம்னு விட்டா கயிறு கையை கிழிக்கும். கொஞ்சம் பொறுமையா பார்த்து விடணும். அப்பறம் குடத்தை இந்த பக்கம், அந்த பக்கம்னு ஆட்டி முழுசா நிரப்பணும். அப்பறம் ரெண்டு பேர் சேர்ந்து இழுக்கும் போது மாத்தி மாத்தி இழுக்கறதுல ஒரு சின்க் இருக்கனும். இதை விட பெரிய விஷயம், அந்த குடம் மேல வந்தவுடனே, அதிக தண்ணி கீழ சிந்தாம கிணத்தை விட்டு வெளிய எடுக்கனும். கொஞ்சமும் தண்ணீரை வீணாக்காம அதை அண்டா, குண்டா, பக்கெட் எல்லாத்துலயும் ஊத்தணும். எப்படியும் ஒரு நாளைக்கு இருபது குடமாவது தேவைப்படும். 

இது சாதா தண்ணிக்கு, அதே குடிக்கிற தண்ணி பிடிக்கிறது இதை விட ரொம்ப கஷ்டமான விஷயம். ஊரை விட்டு தள்ளி அடிக்கிற பம்ப் இருக்கும். அங்க தண்ணி பிடிக்க சைக்கிள்ல குடத்தை கட்டிக்கிட்டு காலங்காத்தாலயே அப்பா போவாரு. ரொம்ப விடிஞ்சதுக்கு அப்பறம் போனா கூட்டம் அதிகமா இருக்கும். சில சமயம் தண்ணியும் வராம போற வாய்ப்பு இருக்கும். அதனால காலைல அப்பா போகும் போது என்னையும் சைக்கிள்ல உக்கார வெச்சி கூப்பிட்டு போவாரு. 

இந்த சைக்கிள்ல குடத்தை வெச்சிட்டு போறதே ஒரு டெக்னிக் தான். ரெண்டு குடத்தை கயிறு போட்டு கட்டி பின்னாடி கேரியர்ல வைப்பாங்க. இது ரெண்டு பக்கமும் தொங்கிட்டு வரும். ஒரு குடத்தை சைக்கிள் கேரியர் மேல நிக்க வெச்சி, முன்னாடி சீட்ல இருந்து சைக்கிள் டயர் டியூப் போட்டு மாட்டியிருப்பாங்க. அது அப்படியே நிக்கும். சில பேர் இன்னும் ரெண்டு குடத்தை முன்னாடி இருக்குற பார்ல தொங்கவிட்டு எடுத்துட்டு வருவாங்க. ஆனா நான் அப்பாவோட போறதால அந்த முன்னாடி இருக்குற பார்ல நான் உக்கார்ந்துட்டு போவேன். அப்பாவோட அட்லஸ் சைக்கிள்ல முன்னாடி அந்த பார்ல சின்னதா ஒரு குஷன் வெச்ச சீட்டு இருக்கும். அது எனக்கு தான். இதெல்லாம் இப்ப நினைச்சா ஆச்சரியமா இருக்கு.

அப்படி குடத்தை எடுத்துட்டு தண்ணி அடிக்கிற பம்ப்க்கு போனா அங்க நாலு மணில இருந்து க்யூ இருக்கும். எப்படியும் நமக்கு முன்னாடி ஒரு இருபது பேராவது இருப்பாங்க, ஆளுக்கு நாலு அஞ்சி குடத்தோட. இந்த மாதிரி தினமும் தண்ணி பிடிக்க வந்து நண்பர்கள் ஆனவங்களும் இருப்பாங்க. அவுங்க் எல்லாம் அடிச்சி முடிச்சதுக்கு அப்பறம் அப்பா அடிக்க ஆரம்பிப்பாரு. முதல்ல குடத்தை கழுவிட்டு அப்பறம் குடத்து மேல ஒரு துணி போட்டு அடிப்பாங்க. மண்ணு ஏதாவது வந்தா வடிகட்டிடும். நானும் சில சமயம் அடிக்கறனு பிரச்சனை பண்ணுவேன், ஆனா அதுக்கு நேரமாகும் பின்னாடி இருக்கறவங்க எல்லாம் பிரச்சனை பண்ணுவாங்கனு சொல்லி என்னை அடிக்க விட மாட்டாங்க. சில சமயம் கூட்டம் இல்லாத போது நான் முயற்சி செஞ்சி பார்ப்பேன். ஆனா அதுல தண்ணி அடிக்கறது ரொம்ப கஷ்டம்.

இதெல்லாம் எங்களை மாதிரி ஊருல இருந்து ஒரு கிலோ மீட்டர் தள்ளி இருக்கறவங்களுக்கு. டவுன்லயே இருக்கறவங்களுக்கு தெருலயே தண்ணி வரும். ஒரே ஒரு பைப் தான் இருக்கும். அதுல அந்த தெருவே தண்ணி பிடிக்கனும். இது பெண்கள் ராஜியம். ஒரு ஆம்பிளை கூட இந்த இடத்துக்கு வர மாட்டாங்க. எங்க பாட்டி வீட்டுக்கு எதிர்லயே இந்த பைப் இருக்கும். அங்க திண்ணைல உட்கார்ந்து பார்த்தா போதும், ஊருல இருக்குற அத்தனை கெட்ட வார்த்தையும் தெரிஞ்சிக்கலாம். தண்ணி பைப் சண்டை அப்படி நடக்கும். யாராவது குடத்தை வெச்சிட்டு வீட்டுக்கு போயிடுவாங்க. பின்னாடி வரவங்க அதை நகர்த்திட்டு தண்ணி பிடிக்க ஆரம்பிச்சிடுவாங்க. இது தான் தொன்னூறு சதவீதம் நடக்கும். அப்ப திட்டிக்குவாங்க பாருங்க. அப்படியே காதுல தேனா பாயும். குடும்பத்துல ஒருத்தவங்களை விட மாட்டாங்க. டோட்டல் ஃபேமிலி டேமேஜ் தான்.

சில சமயம் எங்க ஏரியால தண்ணி லாரி வரும். இது பொதுவா மே மாசம் தான் வரும். அந்த லாரி வருதுனு தெரிஞ்சவுடனே எல்லாரும் குடத்தோட ரெடி ஆகிடுவோம். வண்டி எங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்குற க்ரவுண்ட்ல தான் வந்து நிக்கும். இப்ப எல்லாம் அங்க ஃபுல்லா வீடு கட்டிட்டாங்க. லாரி வரும் போது அது பின்னாடி தெருவே ஓடுவோம். ஏன்னா லாரில தண்ணி தீரதுக்கு முன்னாடி கிடைக்கணும்னு தான். அதுவும் இதுல ஆளுக்கு ஒரு குடம்னு ரூல்ஸ் இருக்கும். அதனால வீட்ல நாலு பேருமே குடத்தை எடுத்துட்டு ஓடுவோம். அந்த லாரி எப்பவும் உச்சி வெயில்ல தான் வரும். 

வேர்க்க விறுவிறுக்க தண்ணி குடத்தோட ஓடிப்போய் க்யூல நின்னு தண்ணி பிடிக்கனும். இதுல நான், அக்கா எல்லாம் பிடிச்ச உடனே குடத்தை கொஞ்ச தூரம் தள்ளி வெச்சிடுவோம். அப்பா, அம்மா அதை கொண்டு போவாங்க. இங்கயும் பல சண்டைகள் நடக்கும். யாரு முன்னாடி வந்தா, யாரு பின்னாடி வந்தானு செம சண்டை நடக்கும். சில சமயம் பொம்பளைங்க முடிய பிடிச்சி சண்டை போடறதையும் பார்க்கலாம்.

இப்படி கஷ்டப்பட்டு பிடிக்கிற தண்ணீரை கொஞ்சமும் வீணாக்காம சிக்கனமா பயன்படுத்தறது ரொம்ப முக்கியம். எங்க அம்மா அதை ரொம்ப வலியிருத்துவாங்க. இப்ப கூட எங்க அம்மா தண்ணீரை சிக்கனமா தான் பயன்படுத்துவாங்க. எனக்கும் அது தான் பிடிக்கும். இன்னைக்கும் தண்ணி எடுக்க ஏழு எட்டு கிலோ மீட்டர் நடக்குற மக்கள் இருக்காங்க. அதனால தண்ணியோட 
சிறப்பை உணர்ந்து சிக்கனமா பயன்படுத்துங்க மக்களே. தண்ணி சிக்கனமா பயன்படுத்தறவங்க வீட்ல தான் மகாலட்சுமி தங்குவானு எங்க பெரியம்மா சொல்லுவாங்க. அது எந்த அளவுக்கு உண்மையோ தெரியாது ஆனா தண்ணி சிக்கனமா பயன்படுத்துலனா சீக்கிரமா அவுங்க அக்கா நம்ம வீட்டுக்கும், நாட்டுக்கும் வந்துடுவாங்கனு மட்டும் எனக்கு தெரியுது.

தண்ணிரை சிக்கனமாக பயன்படுத்த சில ஆலோசனைகள்.

பல்லு விளக்கும் போது பைப்பை திறந்து விட்டுட்டு விளக்காதீங்க. முடிஞ்ச வரை Mugல தண்ணி பிடிச்சி பயன்படுத்துனா நல்லது.

ஷவர்ல குளிக்கறதை விட பக்கெட்ல தண்ணி பிடிச்சி குளிக்கறது நல்லது.

வெஸ்டர்ன் டாய்லட் பயன்படுத்தினா தேவையில்லாம ஃபிளஷ் பண்ணாதீங்க. (அதுக்குனு தேவையானப்ப ஃபிளஷ் பண்ணாம விட்டுட்டாதீங்க).

ஷேவ் பண்ணும் போது பைப்பை திறந்து விட்டுட்டே ஷேவ் பண்ணாதீங்க. ரேசரை கழுவும் போது மட்டும் தண்ணீரை திறந்து விடவும்.

ஏதாவது பைப்ல இருந்து தண்ணி சொட்டிட்டு இருந்தா பைப்பை டைட்டாக மூடவும். அப்படி இல்லைனா கீழ பக்கெட் ஏதாவது வைத்து தண்ணிரை சேகரிக்கவும்.

பாத்திரம் விளக்கும் போதும் தேவையில்லாமல் பைப்பைத் திறந்து வைக்காதீர்கள்.

ரஜினியோட ஒரு துளி வியர்வையை விட ஒரு துளி தண்ணீருக்கு மதிப்பு அதிகமா குடுங்க. அதான் ஒரு பவுன் காசுக்கு கொடுக்கற மதிப்பை கொடுங்கனு சொன்னேன்.

Sunday, March 22, 2009

கசினோ, காதல் கதைகள் - 2

“What is this story man? I will tell you a story" அப்படினு மொனிஷ் ஆரம்பிச்சாரு. சரி, இதுக்கு மேல தமிழ்ல சொல்றேன்.


“நானும் அந்த பொண்ணும் மூணாவதுல இருந்து பத்தாவது வரைக்கும் ஒண்ணா படிச்சோம். நாங்க ரெண்டு பேரும் நல்ல நண்பர்கள். நான் அந்த பொண்ணை பத்தாவதுல ப்ரொப்போஸ் பண்ணேன். அதை அவள் ஏத்துக்கல. அதுக்கு அப்பறம் காலேஜ் எல்லாம் வேற வேற இடத்துல. அதாவது டென் ப்ளஸ் டூ, இஞ்சினியரிங் எல்லாம். ஒரே ஏரியாவுல இருந்ததால அடிக்கடி பார்த்துக்குவோம். ஆனா பேசிக்கல. நான் யூ.எஸ்க்கு MS படிக்க புறப்பட்டேன். சரியா நான் செக் இன் பண்ண போறதுக்கு முன்னாடி எங்க இருந்தோ வந்தா. என் கைலை ஒரு பிள்ளையார் சிலையை கிப்ட் பண்ணா”


“வாவ்”


“நான் யூ எஸ் வந்தா ஆறாவது நாள், சரியா அவளும் இங்க MS படிக்க வந்தா”


எல்லாருக்கும் ஆச்சரியம்.


"அதுக்கு அப்பறம் ரெண்டு வருஷம். நானும் அவளும் தினமும் பேசிக்குவோம். ரெண்டு பேரும் வேற வேற யுனிவர்சிட்டி. ரெண்டு வருஷம் கழிச்சி நான் மறுபடியும் ப்ரொப்போஸ் பண்ணேன். இந்த தடவை அவ அதை ஏத்துக்கிட்டா”


“வாவ். சூப்பர்”


“அதுக்கு அப்பறம் மூணு வருஷம். நானும் அவளும் அமெரிக்காவுல சுத்தாத இடமே இல்லை. Florida, Vegas அப்படினு எல்லா இடமும் சுத்தினோம். We had lots of fun. ரொம்ப சந்தோஷமா இருந்தோம். அப்பறம் கல்யாணம் பண்ணிக்கலாம்னு வீட்ல பர்மிஷன் கேட்டோம். எங்க வீட்ல ஒத்துக்கிட்டாங்க. ஆனா அவுங்க வீட்ல பயங்கர பிரச்சனை. அவுங்க வேற ஜாதி. அதனால அவுங்க கொஞ்சம் கூட ஏத்துக்கற மாதிரி இல்லை. அவுங்க அம்மா சூசைட் பண்ணிக்குவோம்னு அவளை மிரட்டினாங்க. அவள் வீட்டுக்கு ஒரே பொண்ணு. என்ன பண்றதுனு என்கிட்ட கேட்டாள். உங்க வீட்ல சொல்ற மாதிரி செய்னு சொல்லிட்டேன். அடுத்த மூணாவது மாசத்துல அவ வீட்ல மாப்பிள்ளை பார்த்தாங்க. அவள் கல்யாணம் பண்ணிக்கிட்டா. ரெண்டு வருஷத்துல ஒரு பையன். நான் இங்க இப்படி இருக்கேன்”


ஒரு அஞ்சு நிமிஷம் கார்ல யாரும் பேசாம வந்தோம். என்ன பேசறதுனு யாருக்கும் தெரியலை.


செந்தில் பேச ஆரம்பிச்சாரு. “அதுக்காக நீ இன்னும் கல்யாணம் பண்ணிக்காம இருக்கறது சரியா? நீயும் கல்யாணம் பண்ணிக்கலாம் இல்லை”


“நான் அவ கல்யாணம் பண்ண அந்த சமயத்துலயே கல்யாணம் பண்ணிக்கலாம்னு யோசிச்சேன். ஆனா அது ஏதோ சரியா தெரியலை. கல்யாணம் பண்ணிக்கறது இந்த மாதிரி காரணத்துக்காகவானு யோசிச்சி விட்டுட்டேன்”


“இருந்தாலும் வயசாகிட்டே போகுதில்லை” மறுபடியும் செந்தில். எனக்கு என்ன பேசறதுனே தெரியலை. மொனிஷ்க்கு முப்பது வயசுக்கு மேல ஆச்சு.


“Is age is the only criteria for marraige? I think I am still not ready for the marraige”


“ஆனா இந்த தனிமை கஷ்டமா இல்லையா?” ஏதாவது கேக்கனுமேனு கேட்டேன்.


“நான் தான் எப்பவுமே பசங்களோட இருக்கனே. எனக்கு எதுவும் கஷ்டமில்லை. நிஜமா பார்த்தா காதல்னு ஒண்ணு இல்லை. நமக்கு அந்த பொண்ணு வேண்டும்னு நினைக்கிற எண்ணம் தான் அது. உண்மையான பாசம்னா அது பிள்ளைங்க மேல அப்பா, அம்மாக்கு இருக்குறது தான். மத்தது எல்லாம் பொய்”


மறுபடியும் அமைதி. கொஞ்ச நேரம் கழிச்சி பேச ஆரம்பிச்சாரு.


“பசங்க எப்பவுமே ரொம்ப எமோஷனல். பொண்ணுங்க அப்படி இல்லை. Their brains are segregated. They can change their mind soon. They are very practical. ஆனா பசங்களுக்கு தான் கஷ்டம்”


“அந்த பொண்ணு அதுக்கப்பறம் உங்களுக்கு எதுவும் ஃபோன் பண்ணி உங்களை கல்யாணம் பண்ணிக்க சொல்லி சொல்லலையா?” இது நான்.


“இல்லை. அதுக்கு அப்பறம் அவக்கிட்ட நான் எதுவும் பேசல”


ஒரு பத்து நிமிஷம் எல்லாரும் அமைதியா இருந்தோம்.


அடுத்து பாட்டு சிடி மாத்தினோம்.ஹாய் மாலினி. ஐ அம் கிருஷ்ணன் அப்படினு ஆரம்பிச்சது. நான் அவர்ட பேச ஆரம்பிச்சேன்.


”இந்த படம் தெலுகுல கூட வந்துச்சு. சூர்யா சன் ஆஃப் கிருஷ்ணா அப்படினு வந்துச்சு. அதுல ஹீரோ ஹீரோயினை முதல்ல ட்ரைன்ல பார்ப்பான். உடனே ப்ரப்போஸ் பண்ணிடுவான்...” அப்படினு படத்து கதையை சொன்னேன். முதல் ஹீரோயின் பாம் ப்ளாஸ்ட்ல செத்து போறதோட கதை முடிஞ்சிடுச்சினு நான் சொன்னேன்.


”இதை விட சில கொடுமைகள் எல்லாம் நிஜத்துலயும் நடந்திருக்கு” அப்படினு அவர் ஆரம்பிச்சாரு.


“என் ஃபிரண்ட் ஒருத்தன். காலேஜ்ல அவனும் ஒரு பொண்ணும் ரொம்ப நல்லா பழகிட்டு இருந்தாங்க. சம்மர் வெக்கஷனுக்கு அந்த பொண்ணு அவுங்க வீட்டுக்கு போச்சு. காலேஜ் ஆரம்பிச்சி மூணு மாசமாகியும் வரலை. அவன் ஒரு வழியா அவுங்க வீட்ல விசாரிக்கும் போது தான் தெரிஞ்சிது, அந்த வெக்கஷனுக்கு போகும் போது பஸ் ஆக்சிடெண்ட்ல அந்த பொண்ணு இறந்துடுச்சினு. அதுக்கு அப்பறம் அந்த பையன் தண்ணி, ட்ரக்னு தடம் மாறிட்டான். அவன் வாழ்க்கையே வீணா போயிடுச்சி”


இரண்டு நிமிஷம் கழிச்சி அவரே சொன்னாரு, ”கதையா கேக்க தான் இதெல்லாம் நல்லா இருக்கும். நிஜத்துல இந்த வலி எல்லாம் அனுபவிக்கறது ரொம்ப கொடுமை.” அவரோட குரல்ல அந்த வலி தெரிஞ்சிது.

சிவாஜி ஸ்பெஷல்

இசை கேட்டால்எங்கிருந்தோ வந்தான்
தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
ஒரே ஒரு ஊரிலே
உள்ளதை சொல்வேன்Happy இன்று முதல் Happyஅந்த நாள் ஞாபகம்.. நெஞ்சிலே வந்ததே நண்பனே
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதடாஇதுக்கெல்லாம் நான் விளக்கம் சொல்றதை விட ஜி.ரா அருமையா வந்து சொல்லுவாரு... I am the waiting :)

கசினோ, காதல் கதைகள்

வர வர ஆணி அதிகமாகி கடப்பாரை ரேஞ்சுக்கு ஆகிப்போச்சு. அதனால ஒரு வீக் எண்ட் வேலை இல்லைனாலும் பெரிய கொண்டாட்டமா தெரியுது. அப்படி இந்த வாரம் வேலை இல்லைனு தெரிஞ்சவுடனே என்ன பண்ணலாம்னு ப்ளான் பண்ணும் போது கசினோ போகலாம்னு முடிவாச்சி. புதன் கிழமையே ப்ளானை போட்டாச்சு. வெள்ளிக்கிழமை சாயந்தரம் கிளம்பறோம்னு. நான், என் ரூமெட்ஸ் செந்தில், சுந்தர் அப்பறம் கசினோல சில பல ஆயிரம் டாலர்களை சாதாரணமா சம்பாதிக்கிற தெலுகு ஃபிரெண்ட் ஒருத்தர். அவர் பேரு மொனிஷ்.

வெள்ளிக்கிழமை ஒரு எழரை மணிக்கு அட்லாண்டிக் சிட்டி கிளம்பினோம். இதை எழுதும் போது தான் தோணுது புறப்பட்ட நேரம் சரியில்லாததால தான் பெருசா ஜெயிக்க முடியலைனு. நிறைய ஜெயிச்சாலும் கடைசியா லம்பா ஜெயிக்கலாம்னு நான் சொன்ன ஐடியால ஜெயிச்சதெல்லாம் போயிடுச்சி. புறப்படும் போதே ஆயிரம் டாலர்க்கு மேல ஜெயிச்சா 50 இன்ச் டீவி வாங்கலாம்னு நான் சொன்ன ஐடியாவை நிறைவேத்த முடியல. மணி ரெண்டு ஆகிட்டதால புறப்பட்டோம். சரி அடுத்த மாசம் போயிக்கலாம்னு முடிவு பண்ணிட்டோம். 

வரும் போது வண்டி ஓட்றவர் தூங்கிட கூடாதுனு பேசிட்டே வரலாம்னு சொல்லி பேச ஆரம்பிச்சோம். நான் ஜாலியா ஒரு காதல் கதை எழுதி ரொம்ப நாள் ஆகிடுச்சினு சொன்னேன். உடனே செந்தில் நான் ஒரு கதை சொல்றேன். அடெலசண்ட்ஸ் கதை. அதை நீ எழுதனும்னு சொன்னாரு. சரி அந்த மாதிரி கதையை தான் நானும் எதிர்பார்த்துட்டு இருக்கேன், சொல்லுங்கனு சொன்னேன். உடனே அவர் ஒரு கதையை சொல்ல ஆரம்பிச்சாரு.

சென்னைல ஒரு பெரிய வீடு மாதிரி இருக்கும். அதுல நிறைய ஃபேமிலிஸ் எல்லாம் இருப்பாங்க அப்படினு ஆரம்பிச்சாரு. உடனே நான் கோட்ரஸ் மாதிரியா? அப்படினு கேட்டேன். கோட்ரஸ் மாதிரினு சொல்ல முடியாது. இது மிடிஸ் கிளாஸ் தங்கற மாதிரி ஒரு அறுநூறு சதுர அடி தான் இருக்கும். ஒரு வீட்ல இருந்து பார்த்தா அடுத்த வீடு தெரியும். மத்த ஊருல எல்லாம் இந்த மாதிரி நீ பாக்க முடியாது.

சத்தியமா அந்த வீடு எப்படி இருக்கும்னு எனக்கு புரியலை. சரி அது முக்கியமில்லை, நீங்க கதையை சொல்லுங்கனு சொன்னேன். 

“அங்க நம்ம ஹீரோ இருக்காரு”

”அந்த ஹீரோ நீங்க தானே” உடனே நானும் சுந்தரும் கோரஸா சொன்னோம்.

“அப்ப நீ எழுதற கதை எல்லாத்துலயும் நீ தான் ஹீரோவா”

“நீங்க என்னோட உங்களை கம்பேர் பண்ண முடியாது. நான் ஒரு பிறவி கலைஞன். நமக்கு கற்பனை ஊத்து தானா வரும்”

“ஏன் எங்களால எல்லாம் யோசிக்க முடியாதா?”

“முடியும். ஆனா முகத்துல இவ்வளவு பிரகாசம் தெரியாது” அப்படினு சொன்ன உடனே அவர் சிரிச்சிட்டு சொல்ல ஆரம்பிச்சாரு.

“ஹீரோ ஒன்பதாவது படிக்கிறாரு. அந்த காம்பௌண்ட்ல பக்கத்து வீட்ல இருக்குற பொண்ணு எட்டாவது படிக்குது. அந்த பையனுக்கு அந்த பொண்ணு மேல ஒரு அட்ராக்‌ஷன். அந்த பொண்ணு அவுங்க அம்மாக்கு ஹெல்ப் பண்றதை எல்லாம் அந்த பையன் தினமும் பார்ப்பான். அடுத்து அந்த பையன் அப்படியே பத்தாவது வரான். அந்த பொண்ணை பார்த்துட்டு எங்க போனாலும் அவனுக்கு நல்லதே நடக்குது. அந்த பொண்ணை பார்த்துட்டு ஹோம் வொர்க் பண்ணாம ஸ்கூலுக்கு போனா அங்க டீச்சர் ஹோம் ஒர்க் பத்தி எதுவும் கேக்க மாட்றாங்க. அந்த பொண்ணை பார்த்துட்டு பரிட்சை எல்லாம் எழுதினா எல்லாத்துலயும் நல்ல மார்க் வருது”

”What the fuck man? Its totally crap. There is no such thing called love." மொனிஷ் ஆரம்பிச்சாரு. வேற வழியில்லாம நான் செந்திலுக்கு சப்போர்ட் பண்ண ஆரம்பிச்சேன்.

“அப்படினு அந்த ஹீரோ நம்பறான். அது அவனோட நம்பிக்கை மட்டும் தான்” 

உடனே மொனிஷ் சைலண்ட ஆகிட்டாரு. மறுபடியும் செந்தில் கதையை சொல்ல ஆரம்பிச்சாரு.

“பப்ளிக் எக்ஸாம் ஆரம்பிச்சிது. அந்த நேரத்துல பரிட்சைக்கு போகும் போது அவனால அந்த பொண்ணை பார்க்க முடியலை. அதனால அவனுக்கு மார்க் குறைஞ்சிடுச்சி. இப்ப அந்த பையன் பதினொன்னாவது வந்தான். இப்ப அந்த பையன் கொ எட்ல இருந்து பசங்க மட்டும் படிக்கிற ஸ்கூலுக்கு மாறினான். அவனால முன்னாடி மாதிரி பொண்ணுங்ககிட்ட பேச முடியறதில்லை. அவனுக்கு ஒரே பொழுது போக்கு அந்த பக்கத்து வீட்டு பொண்ணை பார்க்கறது தான். தினமும் அந்த பொண்ணை அவன் வீட்ல இருந்து பார்த்துட்டே இருப்பான்”

“அப்படி அவன் தினமும் பாக்கற அளவுக்கு அந்த பொண்ணு அப்படி என்ன இண்ட்ரஸ்டா பண்ணும்” எனக்குள்ள இருக்குற கதா அலர்ட்டா இருந்தான்.

“சாதாரணமா பண்றது தான். வீட்டுக்கு வந்தவுடனே அவுங்க அம்மாக்கு பாத்திரம் எல்லாம் விலக்கி ஹெல்ப் பண்ணுவா. எப்பவும் ரோஸ் கலர் நைட்டியும், டார்க் ப்ளூ நைட்டியும் தான் போட்டிருப்பா. அவளுக்கு அது அழகா இருக்கும்”

“ரொம்ப முக்கியம்” இது சுந்தர்.

“ஆமாப்பா. அடுத்து அந்த பையன் பனிரெண்டாவது போனான். அந்த பொண்ணு பிளஸ் ஒன். இப்ப அந்த பொண்ணு டியூசன் போனா. இந்த பையனும் அதுக்காகவே அந்த பொண்ணு டியூசனுக்கு போனான். அங்க அந்த பையன் டியூஷன் கிளாஸ் எல்லாம் வேணாம். நான் இங்க உட்கார்ந்து படிச்சிக்கிறேனு ஸ்பெஷலா கேட்டு அந்த பொண்ணை பார்த்துட்டே படிக்கிறான்”

”இதெல்லாம் ஒரு பொழுப்பு” மறுபடியும் சுந்தர்.

“டேய் இதெல்லாம் உனக்கு புரியாதுடா. இப்ப மறுபடியும் பப்ளிக் எக்ஸாம். முதல் கொஞ்ச பரிட்சைக்கு அவனால அந்த பொண்ணை பார்க்க முடியலை. அதனால லேங்வேஜ்ல எல்லாம் மார்க் குறைஞ்சிடுச்சி. அடுத்து வந்த பரிட்சை எல்லாம் அந்த பொண்ணை பார்த்துட்டு போய் எழுதினான். இப்ப எல்லாத்துலயும் நிறைய மார்க். கெமிஸ்ட்ரி பரிட்சைக்கு பார்க்க முடியலை. அதனால மார்க் குறைஞ்சிடுச்சி”

“ஓ! அதான் உங்களுக்கு கெமிஸ்ட்ரி பரிட்சைல மார்க் குறைஞ்ச காரணமா?” இந்த தடவை சுந்தர் நச்சுனு பிடிச்சிட்டார். பப்ளிக் எக்சாம் பத்தி பேச்சு வந்தப்ப செந்திலுக்கு கெமிஸ்ட்ரில மார்க் குறைஞ்சிடுச்சினு போன வாரம் தான் சொல்லிட்டு இருந்தாரு. 

“கதையை கேளுங்கப்பா”

“You don't write these stories man. Better write some sex story. Everyone will read it and they will like it. but they won't tell you that they have read your story" அப்படினு மொனிஷ் சொல்ல ஆரம்பிச்சிட்டாரு.

“ஆஹா. அந்த மாதிரி எல்லாம் நமக்கு எழுத வராது. நான் இப்படியே எழுதறேனே”

"what man, there is not even a kiss so far and that guy is an useless guy" அப்படினு எரிச்சலோட சொன்னாரு. செந்தில்கிட்ட இருந்து எந்த ரெஸ்பாண்டும் இல்லை. சரினு மொனிஷை கொஞ்சம் சமாதானப்படுத்தி செந்திலை கதை சொல்ல சொன்னேன்.

"அடுத்து எண்ட்ரன்ஸ் வந்துச்சி, அதுல அந்த பொண்ணை பார்த்துட்டு போயி இந்த பையன் நிறைய மார்க் எடுத்துட்டான். அவனுக்கு ஒரு நல்ல காலேஜ்ல இஞ்சினியரிங் சீட்டு கிடைச்சிது. ரொம்ப சந்தோஷமா இருந்தான். அந்த நேரம் பார்த்து அந்த பொண்ணுக்கு பர்த் டே வந்துச்சு. இந்த பையன் என்ன பண்ணான். ஒரு கிரிட்டிங் கார்ட் வாங்கி அதை அந்த பொண்ணோட கிளாஸ் மேட் ஒருத்தவன் கிட்ட கொடுத்து கொடுக்க சொல்லிட்டான். அந்த கிரிட்டிங் அந்த பொண்ணோட பெரியப்பாக்கிட்ட மாட்டிக்கிச்சு. அந்த பையனை கூப்பிட்டு நல்லா வாங்கு வாங்குனு வாங்கிட்டாரு.”

“அப்பறம் நீங்க என்ன பண்ணீங்க?” சுந்தர்

“அதுக்கப்பறம் அந்த பொண்ணுக்கூட டச்சே இல்லை” அப்படினு சொல்லி முடிச்சிட்டாரு.

“What is this story man? I will tell you a story" அப்படினு மொனிஷ் ஆரம்பிச்சாரு. சரி, இதுக்கு மேல தமிழ்ல சொல்றேன்.

“நானும் அந்த பொண்ணும் மூணாவதுல இருந்து பத்தாவது வரைக்கும் ஒண்ணா படிச்சோம். நாங்க ரெண்டு பேரும் நல்ல நண்பர்கள். நான் அந்த பொண்ணை பத்தாவதுல ப்ரொப்போஸ் பண்ணேன். அதை அவள் ஏத்துக்கல. அதுக்கு அப்பறம் காலேஜ் எல்லாம் வேற வேற இடத்துல. அதாவது டென் ப்ளஸ் டூ, இஞ்சினியரிங் எல்லாம். ஒரே ஏரியாவுல இருந்ததால அடிக்கடி பார்த்துக்குவோம். ஆனா பேசிக்கல. நான் யூ.எஸ்க்கு MS படிக்க புறப்பட்டேன். சரியா நான் செக் இன் பண்ண போறதுக்கு முன்னாடி எங்க இருந்தோ வந்தா. என் கைலை ஒரு பிள்ளையார் சிலையை கிப்ட் பண்ணா”

“வாவ்”

“நான் யூ எஸ் வந்த ஆறாவது நாள், சரியா அவளும் இங்க MS படிக்க வந்தா”

....

சரி இதுக்கு மேல எழுதினா உ.த அண்ணன் பதிவு மாதிரி ஆகிடும். இதை நாளைக்கு கண்டினியூ பண்றேன்.

(தொடரும்...)Thursday, March 12, 2009

ஹைதராபாத் சிக்கன் பிரியாணி!

நான் முதன்முதல்ல இந்த பிரியாணி சாப்பிட்டது பெங்களூர்ல எங்க ஆபிஸ்ல தான். அதுவரைக்கும் நம்ம ஊர் பிரியாணி தான் நம்ம ஃபெவரைட்டா இருந்தது. அது சாப்பிட்டதுக்கு அப்பறம் நம்ம லிஸ்ட்ல ஹைதரபாதி தம் பிரியாணி டாப் 10ல வந்துடுச்சி.

எங்க ஆபிஸ்ல திங்கள், புதன், வெள்ளி மூணு நாளும் ஹைதராபாத் தம் பிரியாணி போடுவாங்க (காசுக்குத் தான்). அதனால அந்த மூணு நாளும் அதை தவற விடாம இருந்தேன். இங்க வந்ததுக்கப்பறம் அதை சுத்தமா மிஸ் பண்ண ஆரம்பிச்சிட்டேன். 

நம்ம ஸ்டைல் பிரியாணி சூப்பரா இல்லைனாலும் சுமாரா செய்வேன். ஆனா அதுல ஒரு திருப்தி இல்லை. அப்ப தான் யூ ட்யூப்ல தேடும் போது இந்த வீடியோவை பார்த்தேன். அப்ப வீட்டம்மா இங்க தான் இருந்தாங்க. சரி, ட்ரை பண்ணி பார்க்கலாம்னு முயற்சி செஞ்சாங்க (அவுங்க நம்மல விட நல்லா சமைப்பாங்க. இருந்தாலும் அதை நான் ஒத்துக்க மாட்டேன் ;) ). 

அந்த வீடீயோவை அப்படியே ஃபாலோ பண்ணாங்க. சூப்பரா வந்திருந்தது. அதுக்கு அடுத்து அவுங்க ஊருக்கு போனதுக்கப்பறம் நாங்க முயற்சி செஞ்சி பார்த்தோம். கேவலமா வந்திருக்கும்னு நினைக்கறீங்களா? அது தான் இல்லை. அதுவும் சூப்பரா வந்திருந்தது. ஏன்னா அது அவ்வளவு சுலபம். ஆனா உங்களுக்கு தேவைப் பொறுமை. அப்ப சிக்கன் வேணாமானு யாராவது கேட்டுடாதீங்கப்பூ.

இதை பார்த்து அப்படியே செஞ்சு பாருங்க. நிச்சயம் நல்லா வரும். முடிஞ்சா இந்த வார இறுதில செஞ்சி பார்த்து சொல்லுங்க. 

Wednesday, March 11, 2009

வெறுத்துப் போனவை!

சில சமயம் நாம பார்த்து ரொம்ப ஏங்கிய பொருட்கள், கிடைத்த சில நாட்களில் அதன் மேல் இருக்கும் மோகம் குறைந்து வெறுத்துப் போவது உண்டு. அப்படி நான் வெறுத்துப் போன சில விஷயங்களை பற்றிய பதிவு தான் இது.

ஏரோப்ளேன் பயணம்:
சின்ன வயசுல இருந்து ஏரோப்ளேன்னா அவ்வளவு ஆசை. எப்ப ஏரோப்ளேன் சத்தம் கேட்டாலும் வானத்தைப் பார்க்க பெரிய கூட்டமே இருப்போம். வகுப்பறைல‌ உட்கார்ந்திருக்கும் போது சத்தம் கேட்டுச்சுனா எல்லாரோட பார்வையும் ஜன்னல் வழியா வானத்துல தான் இருக்கும்.

சில சமயம் சத்தம் மட்டும் கேட்கும், ஏரோப்ளேன் எங்க இருக்குனு தெரியாது. மேகத்துக்கு நடுவுல ஒளிஞ்சிக்கிட்டு இருக்கும். வெளிய வந்தவுடனே யாராவது பார்த்து "அங்கப் பாரு, அங்கப் பாரு"னு சொன்னவுடனே எல்லாரும் அதை பார்த்து சந்தோஷமாயிடுவோம்.

வீட்ல இருக்கும் போது சத்தம் கேட்டுச்சுனா மொட்டை மாடிக்கு ஓடிப்போய் வேடிக்கைப் பார்ப்போம். அப்ப எங்க எல்லாரோட லட்சியமும் ஒரு தடவையாவது ஏரோப்ளேன்ல போகனும்னு தான்.

இப்ப‌டி சின்ன‌ வ‌ய‌சுல‌ இருந்து ஏங்கிய‌ ஏரோப்ளேன் ப‌ய‌ண‌ம், முத‌ல் முறையா சென்னைல‌ இருந்து பாஸ்ட‌ன் வ‌ந்த‌ ப‌ய‌ண‌த்துல‌யே வெறுத்துப் போச்சு. சென்னைல‌ ஜெட் ஏர்வேஸ்ல‌ ஏறும் போது இருந்த‌ ச‌ந்தோஷ‌மும், குறுகுறுப்பும், பாரிஸ்ல‌ வ‌ந்து இற‌ங்கும் போதே குறைஞ்சி போச்சி.

ஏதோ பஸ் பயணத்துல‌ இருக்குற‌ ஒரு உயிரோட்ட‌ம் ஏரோப்ளேன் ப‌ய‌ண‌த்துல‌ இல்லை. ஒரே இட‌த்துல‌ உட்கார்ந்திருக்க‌ற‌து ம‌ட்டும் தான் கார‌ண‌மா, இல்லை ப‌க்க‌த்துல‌ உட்கார்ந்திருக்க‌ற‌ ம‌னித‌ர்க‌ளின் இறுகிய‌ முக‌ம் தான் கார‌ண‌மானு தெரிய‌ல‌. ஏரோப்ளேன் ப‌ய‌ண‌த்தை ரொம்ப‌ வெறுக்க‌ ஆர‌ம்பிச்சிட்டேன்.

ஒரு வேளை ரெண்டு ம‌ணி நேர‌ம், மூணு ப‌ணி நேர‌ம் ப‌ய‌ண‌மாக‌ இருந்திருந்தால் பிடித்திருக்கும் போல‌. சின்ன‌ வ‌யசுல‌ ஏங்கி இன்று பிடிக்காம‌ல் போன‌ லிஸ்ட்ல முக்கியமான‌ இட‌த்துல‌ இது தான்.

தொலைக்காட்சி :

சின்ன வயசுல டீவி பார்க்கறதுனா அவ்வளவு ஆர்வம் இருக்கும். தூர்தர்ஷன் வந்த புதுசுல எப்படி ஏங்கி ஏங்கி பார்த்திருக்கோம். முன்னோட்டம்னு ஒரு நிகழ்ச்சி இருக்கும், அதுல அடுத்து வாரம் வர போற எல்லா நிகழ்ச்சியை பத்தியும் சொல்லுவாங்க. அதை விடாம பார்த்து முக்கியமான நிகழ்ச்சியை எல்லாம் குறித்து வைத்துப் பார்ப்போம்.

வெள்ளிக்கிழமை ராத்திரியும், ஞாயிறு சாயந்திரமும் எங்க வீட்ல டீவி பார்க்க ஒரு பெரிய பட்டாளமே இருக்கும். எங்க வீட்ல டீவி வரதுக்கு முன்னாடி எங்க பக்கத்துத் தெருல தான் இருக்கும். நாங்க அங்க போய் பார்க்கறது பிடிக்காம எங்க அப்பா டீவி வாங்கினார். அதுவும் இல்லாமல் எங்க அப்பா டீவி எல்லாம் வாங்க மாட்டாரு, டீ தான் வாங்குவாருனு நான் கிண்டல் பண்ணது கூட காரணமா இருக்கலாம். அப்ப நான் அஞ்சாவது படிச்சிட்டு இருந்தேன். அப்பவே நக்கலு, திமிரு எல்லாம் இருந்தது ;)

சில சமயம் டீவி திடீர்னு மக்கர் பண்ணும். உடனே ஆன்டனாவை திருப்பறதுக்கு ஒரு கூட்டமே இருக்கும். பொதுவா எங்க ஏரியால இருந்து ஊட்டி, கொடைக்கானல் ஸ்டேஷன் தான் தெரியும். ஏதாவது மக்கர் பண்ணுச்சுனா, ஆன்டெனா திருப்பறதுக்கு ஒரு கம்பி இருக்கும். அதை எடுத்துட்டு ஒரு நாலஞ்சி பேர் ஓடுவோம். ஊட்டி பக்கம் இருந்தா கொடைக்கானல் பக்கம் திருப்புவோம். அப்படி திருப்பும் போது பார்த்து பார்த்து திருப்பனும்.

ஒரு நாலஞ்சி டிகிரி மாறினாலும் தெளிவா தெரியாது. மாடில இருந்து தெரியுதா தெரியுதானு கீழ நிக்கறவர்கிட்ட கேட்போம். அவுங்க உள்ள இருக்கறவங்க கிட்ட கேட்டு சொல்லுவாங்க. தெரிய ஆரம்பிச்ச உடனே வேகமா கீழ ஓடி வருவோம். சில சமயம், இப்படி செஞ்சி தெரிய ஆரம்பிக்கறதுக்குள்ள ஒலியும் ஒளியும் முடிஞ்சிடும்.

இப்படி ரசிச்சி ரசிச்சி பார்த்த டீவி நிகழ்ச்சிகள், கேபில் வந்தவுடனே மாற ஆரம்பித்தது. ஊட்டி, கொடைக்கானல் மறந்து போனோம். தடங்கலுக்கு வருந்துகிறோம் மறந்து போனோம். அப்ப ரொம்ப சந்தோஷமா இருந்தது. அதன் பிறகு வந்த தொடர் நாடகங்களை எல்லாரும் ரசித்துப் பார்க்க ஆரம்பித்தோம்.

ஆனால் இப்ப அந்த டீவியை பார்த்தாலே எனக்கு எரிச்சல் தான் வருது. கொஞ்ச நேரம் டீவி பார்க்கறேனேனு கெஞ்சிக் கொண்டிருந்த காலம் மாறி கொஞ்சம் டீவியை ஆஃப் பண்ணுங்களேன், ஒரே தலைவலினு சொல்ற மாதிரி இருக்கு. இன்னைக்கு ரேஞ்ச்ல அறிவியல் வளர்ச்சியில் ஏற்பட்ட மாற்றத்தின் முதல் வில்லன் யார் என்று கேட்டால் நான் யோசிக்காமல் சொல்வது டீவியை தான்.

க்ளாடியேட்டர் படத்துல கமாடஸ் மக்கள் எதை பத்தியும் சிந்திக்கக் கூடாதுனு க்ளாடியேட்டர் ஆட்டத்தை நடத்தற மாதிரி, இன்னைக்கு மக்கள் எதைப் பத்தியும் சிந்திக்கக் கூடாதுனு டீவி நிகழ்ச்சிகளை நடத்துற மாதிரி ஒரு எண்ணம்.

செல் ஃபோன் :

வேலைக்குப் போனவுடனே முதல்ல வாங்கனும் நான் நினைச்சது செல் ஃபோன் தான். அது வரை என்னிடம் செல் ஃபோன் இல்லை. சம்பளம் வந்த முதல் மாசமே வாங்கினேன். அந்த அளவுக்கு செல் ஃபோன் மேல ஒரு க்ரேஸ் இருந்தது.

செல் ஃபோன்ல எந்நேரமும் பேசிட்டு இருந்தது எல்லாம் கூட ஒரு கனாக்காலம் மாதிரி தான் இருக்கு.

இப்ப ஏனோ எனக்கு செல் ஃபோன் பிடிப்பதில்லை. ஏதோ என் தனிமையைக் கலைக்க வந்த ராட்சசன் மாதிரி இருக்கு. அதுவும் ஒரு வாரம் விடாம சனி, ஞாயிறு காலைல ஃபோன் பண்ணி, பாலாஜி ரொம்ப முக்கியமான ஒரு பிரச்சனை, உடனே நீ லாகின் பண்ணனும்னு சொல்ற இந்த ஃபோன் கால் தான் எனக்கு இது மேல வெறுப்பு வர முதல் காரணம்.

அடுத்து ஆறு மணிக்கு வீட்டுக்கு போய் ஒரு ஒரு மணி நேரத்துல, பாலாஜி இப்ப ஒரு முக்கியமான டெஸ்ட் ரன் பண்ணனும், நீ கொஞ்சம் பார்த்து ஆரம்பிச்சிடறயா? ஆறு மணி நேரமும் பார்க்க வேண்டியதில்லைனு சொல்லும் போது அதை தூக்கி போட்டு உடைக்கலாமானு ஒரு கோபம் வருது.

லேப் டாப் :

நான் முத‌ன் முத‌லா லேப் டாப் தொட்டு பார்த்த‌து எங்க‌ ஃபைன‌ல் இய‌ர்ல (2003) தான். அதுவும் எங்க டிப்பார்ட்மெண்ட் செக்ர‌ட்ரி (எங்க‌ க்ளாஸ் மேட் தான்), சிம்போசிய‌ம் அப்ப‌ லேப் டாப் எடுத்துட்டு வ‌ந்தான். அவுங்க‌ அப்பா யூ.எஸ்ல‌ இருந்து அதை வாங்கி வ‌ந்து ஒரு வார‌ம் தான் ஆகியிருந்த‌து. அதை தொட்டு பார்க்க‌ற‌துக்கு அப்ப‌ அவ்வ‌ள‌வு போட்டி இருந்த‌து.

அதுக்கு அப்ப‌ற‌ம் நான் க‌ம்பெனில‌ ஜாயின் ப‌ண்ண கொஞ்ச‌ நாள்ல‌ எங்க‌ மேன‌ஜ‌ர் என்னை கூப்பிட்டு சில‌ ச‌ந்தேக‌ங்க‌ளை கேட்கும் போது அவ‌ர் லேப் டாப்பை என்கிட்ட‌ கொடுத்து அந்த‌ குறிப்பிட்ட‌ அப்ளிகேஷ‌னை ப்ர‌வுஸ் ப‌ண்ணிக் காட்ட‌ சொன்னாரு. என‌க்கு அதுல‌ ம‌வுஸ் இல்லாம‌ எப்ப‌டி நேவிக‌ட் ப‌ண்ற‌துனு தெரிய‌லை. அதை அவ‌ர் தான் சொல்லி கொடுத்தாரு.

அப்ப‌ற‌ம் ஆன்சைட் வ‌ரும் போது என‌க்கு எங்க‌ க‌ம்பெனில டொஷிபா லேப்டாப் கொடுத்தாங்க‌. வாங்கும் போது அவ்வ‌ள‌வு ஆசையா வாங்கினேன். ரொம்ப‌ நாள் அது எப்ப‌வும் என்கூட‌வே இருக்கும். ப‌டுக்கும் போது கூட‌ ப‌க்க‌த்துல‌ தான் இருக்கும். தூங்க‌ற‌ வ‌ரைக்கும் ஏதாவ‌து ப‌ண்ணிட்டே இருப்பேன். அப்ப‌ அப்ப‌ எழுந்து பின்னூட்ட‌த்தை வெளியிடுவேன் (2006ல‌).

எங்க ரூம்ல இப்ப ரெண்டு பேருக்கு, மொத்தம் ஆறு லேப் டாப். ஆளுக்கு மூணு லேப் டாப். எங்க கம்பனி லேப் டாப் ஒண்ணு, க்ளைண்ட் லேப் டாப் ஒண்ணு, பர்சனல் லேப் டாப் ஒண்ணு. இதுல‌ க்ளைண்ட் லாப் டாப்பால‌ தான் நிறைய‌ பிர‌ச்ச‌னை. எல்லா நேர‌மும் ஃபோன் ப‌ண்ணி க‌னெக்ட் ப‌ண்ண சொல்லுவாங்க‌. செம‌ டார்ச்ச‌ரா இருக்கும். லேப் டாப் எடுத்தாலே இப்ப‌வெல்லாம் க‌டுப்பா இருக்குது. இதை எவ‌ன்டா க‌ண்டுபிடிச்சான்னு கோப‌ம் வ‌ருது.

இந்த‌ப் ப‌திவுல‌ இருக்க‌ற‌தெல்லாம் நான் ரொம்ப‌ விரும்பி இப்ப‌ வெறுத்து போன‌ விஷ‌ய‌ங்க‌ள். ஒரு சில‌ர் இதை எல்லாம் கொஞ்ச‌ம் முன்னாடியே வெறுத்திருக்க‌லாம், ஒரு சில‌ர் இவைக‌ளை இன்னும் நேசித்து கொண்டிருக்க‌லாம். இதை நீங்க‌ள் வெறுக்க‌ ஆர‌ம்பிக்கும் போது என் ஞாப‌க‌ம் வ‌ர‌லாம்.

Sunday, March 08, 2009

கல்லூரிப் பயணம்

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தை அடையும் பொழுது மணி சரியாக ஏழு ஆகியிருந்தது. இன்னும் கோவை மாநகரம் ஆறு வருடத்திற்கு முன் இருந்ததை போலவே மிதமான குளிரோடு இருந்தது. கோவையில் தங்கியவர்கள் வேறு எங்கும் போக முடியாததற்கு அங்கிருக்கும் பண்பான மக்கள், சிறுவாணி தண்ணிருக்கு அடுத்த காரணம் இந்த குளிர்ச்சி தான்.

பேருந்து நிலையத்தை விட்டு வெளியே வந்தேன். மேட்டுப்பாளையம் செல்லும் தனியார் பேருந்து ஒன்று ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தது. வெளியே தொங்கி கொண்டிருந்த அந்த பதின்ம வயது நடத்துனரிடம், துடியலூர் என்றேன்.

“ஏறிக்கோங்க”

ஏறி அமர்ந்தேன். சத்தமாக பாட்டு ஓடிக்கொண்டிருந்தது. சாய்பாபா காலனியை கடந்து செல்லும் போழுது ”தாலு சே தாலு மிலா” என்று என்னை பார்த்து கொண்டே ஆடிய ஷாலினி ஒரு நிமிடம் மனதில் வந்து மறைந்தாள். எட்டு ஐந்து மணிக்கு துடியலூர் சென்றடைந்தேன். துடியலூர் சுத்தமாக மாறியிருந்தது. நிறைய பேக்கரிகள் அழகழகான சீரியல் லைட்டுடன் இருந்தன. ஆலமரத்தடியில் இருந்த பெஞ்ச் கடை இல்லை.

ஐந்து நிமிட நடையில் மினி பஸ் நிற்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தேன். நான் இரண்டாமாண்டு படிக்கும் போது தான் மினி பஸ் அறிமுகமாகியிருந்தது. அதற்கு முன் டவுன் பஸ் தான்.
அதுவும் காலேஜிலிருந்து இரண்டு கிலோ மீட்டருக்கு முன்னாலே வட்டமலைப்பாளையம் பிரிவில் இறக்கிவிடுவார்கள். முதல் வருடம் முழுவதும் அந்த டவுன் பஸ் தான். மினி பஸ்
வந்தபிறகு டவுன் பஸ்ஸை எல்லோரும் மறந்து போனோம்.

நான் வந்த இரண்டாவது நிமிடம் பஸ் வந்து சரியாக என் முன்னால் நின்றது. நான் எந்த தயக்கமும் இல்லாமல் ஏறி ஒரு ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து கொண்டேன். ”ஏ அசைந்தாடும் காற்றுக்கும், அழகான பூவுக்கும் காதலா, காதலா” ஓடிக்கொண்டிருந்தது. இந்த படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் மினி பஸ்களின் தேசிய கீதம் போல. அடுத்த முப்பது நொடிக்குள் பேருந்து நிரம்பியது. ஐந்தாவது நிமிடத்தில் பயணம் ஆரம்பித்தது. என்னை சுற்றிலும் கல்லூரி மாணவர்கள். என் ஜூனியர்ஸ். எந்த வித பதட்டமோ, வருத்தமோ இன்றி ஒருவரை ஒருவர் கலாய்த்து கொண்டிருந்தனர். இருக்கை கிடைத்த மாணவிகள் அவர்களது வகுப்பு தோழர்களின் பைகளை வாங்கி காலுக்கு அடியிலும், பிடித்தமானவர்களின் பையை மடியிலும் வைத்து கொண்டார்கள்.

அனைவரது முகமும் மலர்ச்சியாக இருந்தது. ஆறு வருடத்திற்கு முன்பு என் முகமும் இப்படி தான் இருந்தது. எந்த வித வருத்தமும் இல்லாமல் அடுத்த நாளை பற்றி கவலைப்படாமல்
மிகவும் சந்தோஷமாக இருந்தேன். என் நினைவுகள் பின்னோக்கி செல்வதை தவிர்க்க நான் முயலவில்லை.

ஆகஸ்ட் இருபத்தி மூன்று, தொன்னுற்றி ஒன்பதாம் ஆண்டு. இந்த நாள் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். அன்று தான் என் கல்லூரி வாழ்க்கையின் முதல் நாள். விடுதிக்கு ஒரு
நாள் முன்பே வந்துவிட்டதால் ஒரு சிலர் நண்பர்களாகி இருந்தார்கள். அவர்களுடன் முதல் நாள் வகுப்பிற்கு சென்று அமர்ந்தேன். அறுபது பேர் வகுப்பில் இருபது பெண்கள் இருந்தார்கள்.

எனக்கு ஒருத்தி மட்டும் தான் கண்ணுக்கு தெரிந்தாள். அவள் பெயர் என்னவாக இருக்கும் என்று நானே யோசிக்க ஆரம்பித்தேன்.

முதல் வகுப்பு கெமிஸ்ட்ரி வகுப்பு. கம்ப்யூட்டர் சயின்ஸிற்கும் கெமிஸ்டிரிக்கும் என்ன சம்பந்தம் என்று புரியவில்லை. இருந்தாலும் பனிரெண்டாவதில் படித்த பாடம் என்றதால் கொஞ்சம் மகிழ்ச்சி. ஒவ்வொருவராக பெயர்களை சொல்லி கொண்டு வந்தார்கள். அவள் எழுந்திரிக்கும் பொழுது அவளை விட எனக்கு பதட்டம் அதிகமா இருந்தது. அவள் ஷாலினி என்று சொல்லி முடித்ததும் ”என்னை தாலாட்ட வருவாளா” பாடல் மனதில் ஒலித்தது.

ஹாஸ்டலுக்கு சென்றவுடன் ரேகிங் தொடங்கியது. தமிழில் உள்ள அனைத்து கெட்ட வார்த்தைகளாலும் திட்டப்பட்டு மிச்ச மீதி இருந்த சொரனையை இழந்தோம். சீனியரை முறைத்தவர்கள்

அதிகமாக ரேகிங் செய்யப்பட்டார்கள். எகத்தாளம் பேசியவர்கள் அடி வாங்கினார்கள். ஒரு முறை என் அருகிலிருப்பவனிடம் ஒரு கெட்ட வார்த்தையை சொல்லி சொல்ல சொன்னார்கள்.
அவனோ ’புத்திசாலி’த்தனமாக “நான் நல்ல குடும்பத்துல இருந்து வந்தவன். நான் கெட்ட வார்த்தையெல்லாம் பேச மாட்டேன்”னு சொல்ல ”அப்ப நாங்க எல்லாம் என்ன @#$%&^ குடும்பத்துல இருந்து வந்தமா?” சொல்லிவிட்டு அவன் கன்னத்தில் ஒரு அரை கொடுத்தார். அவர் கையிலிருந்த சோறும் சாம்பாரும் அவன் கன்னத்தில் இருந்தது. கன்னத்தை தொடைக்காம சாப்பிட சொன்னார்கள். இந்த நல்ல குடும்பத்திலிருந்து வந்தவன் அந்த நான்கு ஆண்டுகளில் பேசாத “நல்ல” வார்த்தைகளே இல்லை என்று மாறி போனான்.

இந்த எல்லா கொடுமைகளிலும் எனக்கு மகிழ்ச்சியான ஒரு விஷயம் காலேஜ் லேப் தான். முதல் ஆண்டில் பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, கம்ப்யூட்டர் சயின்ஸ், வொர்க் ஷாப். மொத்தம் நான்கு லேப். இதில் மகிழ என்ன இருக்கு என்று நீங்கள் யோசிக்கலாம். அட்டெண்டென்ஸில் செந்தில்லுக்கு அடுத்த பெயர் ஷாலினி.

இருவரும் பிசிக்ஸ் லேபில் ஒரே குரூப். மீதி லேப்களில் அருகருகே இருந்தோம். ஷாலினி சாய்பாபா காலனியிலிருந்து வந்து கொண்டிருந்தாள். அவள் பிறந்தது படித்தது எல்லாமே கோயமுத்தூர் தான். கொஞ்சம் கொஞ்சமாக என்னுடன் பேச ஆரம்பித்தாள். பிசிக்ஸ் லேபிள் ஸ்பெக்ட்ரோமிட்டர் பிரசம் வைக்கும் போது அது முக்கோண வடிவத்திற்கு பதிலாக ஹார்டின் வடிவத்தில் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றியது. ரெசனன்ஸ் காலம் அப்பேரட்டஸ் செய்யும் போது கையில் வைத்திருக்கும் இரண்டு ஃபோர்க்கையும் அடித்து பக்கத்திலிருக்கும் மாணவர்கள் காதில் நான் வைக்க அவர்கள் அலறியதை பார்த்து சிரித்தாள். நான் மும்மரமாக ஏதோ செய்து கொண்டிருக்கும் போது என் காதுக்கருகில் அதை வைத்தாள். நான் அலறியதை பார்த்து பழிப்பு காட்டி சிரித்தாள். மத்தவங்களுக்கு இப்படி தானே இருக்கும் என்றாள். அவள் தான் அதை செய்கிறாள் என்று தெரிந்திருந்தால் அது இளையராஜா இசையை விட நன்றாக இருந்தது என்று தோன்றியிருக்கும்.

கெமிஸ்ட்ரி லேபில் அவளுக்கு பிப்பட்டை சரியாக பயன்படுத்த தெரியவில்லை. அவளுடைய பிப்பட்டை வாங்கி உதவ நான் முயலும் போது அவளுடைய துப்பட்டாவால் நன்றாக துடைத்து
கொடுத்தாள். ஒரு மாதிரி இருந்தது. பிப்பட் இனித்ததை போல் இருந்தது. இல்லை வேறு ஏதோ மோசமான சுவை. என்ன என்று நான் யோசிக்கும் முன் சிரிக்க ஆரம்பித்துவிட்டாள். தவறுதலாக சோடியம் ஹைட்ராக்சைடை வேகமாக இழுத்துவிட்டேன். எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் மாதிரி பேசன, இப்படி ஆகிவிட்டதே என்று சொல்வதை போல் இருந்தது அவள் பார்வை. இருந்தாலும் அழகாக சிரித்து கொண்டிருந்தாள். இப்படி நாளொரு லேபும், பொழுதொரு தவறுமாக எங்கள் நட்பு வளர்ந்து கொண்டிருந்தது.

முதல் வருடம் முடிந்து இரண்டாம் வருடத்தில் காலடி எடுத்து வைத்திருந்தோம். பத்து நாட்கள் சென்ற நிலையில் லெட்ரல் எண்ட்ரி மாணவர்கள் வந்து சேர்ந்தனர். அன்று தான் கேசவனும் வந்தான். எங்கே அமர்வது என்று அவன் யோசித்து கொண்டிருக்கும் பொழுது நான் நகர்ந்து இடம் விட்டேன். அவன் பார்வையில் ஒரு அலட்சியம் இருந்தது. இண்டர்வெலில் எங்கள் வகுப்பு மாணவர்களே லேட்டரல்களை ரேகிங் செய்ய ஆரம்பித்தார்கள். நாட்டு சரக்கடிப்பவனை ”எங்க இந்த பீர் அடிச்சிட்டு பேசு”னு சொல்வதை போல் இருந்திருக்கும் . கேசவனை கூப்பிட்டு பாட சொன்னார்கள். அரை நிமிடம் யோசித்தவன், ”சில்லென்று பூத்த சிறுநெருஞ்சி காட்டினிலே, நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாலே” என்று கண்ணை மூடி பாட ஆரம்பித்ததும் அனைவரும் அமைதியானோம். நான்கு நிமிடத்தில் அவன் முடித்ததும் அனைவரும் கை தட்டினார்கள். எதையும் மதிக்காமல் வெளியே சென்றுவிட்டான். அடுத்த ரெண்டு வகுப்பிற்கு அவன் வரவில்லை.

அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக எங்களுடன் பழக ஆரம்பித்தான். அவன் வீடு காலேஜிலிருந்து மூன்று கிலோமீட்டர் தூரம் தான். அதனால் அடிக்கடி அல்லு போட்டு இடிகரைக்கு சாப்பிட போகும் போது அவன் வீட்டிற்கும் செல்வோம். சில சமயம் சனி, ஞாயிறன்று சிக்கன் சாப்பிட அவன் வீட்டிற்கு அழைக்கப்படுவோம். வெக்கம் மானமில்லாமல் அனைவரும் பேய் தீனி தின்று வருவோம். அது மட்டுமில்லாமல் இண்டர்வெலில் அவனுடைய டிபன் பாக்ஸை காலி செய்துவிடுவோம். ஹாஸ்டலில் காலையில் டிபன் சாப்பிடுபவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். சில சமயம் அவனிடம் முதல் நாள் மெனு சொல்லிவிடுவோம். அதிகமாக சொல்லப்படுவது அரிசி, பருப்பு சாதமும் உருளைகிழங்கு வறுவலும் தான். அவனும் சரியாக கொண்டு வந்துவிடுவான்.

எங்களுள் ஒருவனாக அவன் சீக்கிரம் மாறி இருந்தான். ஆனால் பெண்களுடன் பேசுவது அவனுக்கு சுத்தமாக பிடிக்காது. அவன் முதல் நாள் பாடிய பாட்டிற்கு அவனுக்கு ஒரு வழக்கமான ஒரு லவ் ஃபெயிலியர் ஃப்ளாஷ் பேக் இருக்கும் என்று நினைத்து கொண்டிருந்தேன். பின்பு ஒரு நாள் விசாரிக்கும் போது அப்படி எதுவும் இல்லையென்றும் ஏதோ அவனுக்கு பெண்களை பிடிப்பதில்லை என்றும் சொன்னான். அழக ரசிக்க கத்துக்கணும்னு நான் சொன்னவுடன், பருவத்துல பன்னிங்க கூட அழகா தாண்டா இருக்கும் என்றான். கண்டிப்பா ஆண் பன்னிகளுக்கு அழகாத்தான் தெரியும் என்று சொல்ல நினைத்து பேக் ஃபையர் ஆகிவிடும் என்று சொல்லாமல் விட்டுவிட்டேன்.

இந்த நேரங்களில் ஷாலினியுடன் என் நட்பு லேப் தவிற பிற நேரங்களிலும் தொடர்ந்தது. கேசவன் இல்லாத நேரங்களில் அவளுடைய இருக்கைக்கு எதிரில் சென்று அமர்ந்து பேசி கொண்டிருந்தேன். அவளுடைய தம்பி முதல் நாள் அவளிடம் சண்டை போட்டதிலிருந்து கடைசியாக அவள் வாங்கிய புஜ்ஜி வரை என்னிடம் பகிர்ந்து கொண்டாள். புஜ்ஜி அவளுடைய பிங் நிற டெட்டி பொம்மை. பூனைக்கு தான் புஜ்ஜி என்று வைப்பார்கள் என்று நான் சொன்னதை அவள் ஏற்று கொள்ளவில்லை. கடைசியாக டெட்டியிடமிருந்து எனக்கு அந்த பெயர் வந்துவிட்டது. செந்தில் என்று அவள் கூப்பிடுவதை விட புஜ்ஜி என்று கூப்பிடுவது எனக்கு பிடித்திருந்தது. கேசவனுக்கு அந்த பெயர் தெரிந்ததும் என்னடா புஜ்ஜி, பஜ்ஜி என்று கிண்டல் செய்தான்.

மினி பஸ் காலேஜ் நிறுத்தத்தில் வந்து நின்றது. பஸ் முழுதும் காலியானது. இடிகரைக்கு செல்பவர்கள் இரண்டு மூன்று பேர் தான் இருந்தார்கள். காலேஜ் முழுதாக மாறியிருந்தது. தெரிந்த முகங்கள் ஏதாவது தெரிகிறதா என்று பார்த்தேன். வாட்ச்மேன் மாறியிருந்தார். வேறு யாரும் தெரியவில்லை. வண்டி புறப்பட்டது. காம்பவுண்ட் சுவரையும் மீறி பிரமாண்டமான ஆடிட்டோரியம் கண்ணில் பட்டது. அங்கே நடந்த முதல் நிகழ்ச்சி நினைவிற்கு வந்தது.

அப்பொழுது நாங்கள் மூன்றாம் ஆண்டு படித்து கொண்டிருந்தோம். கல்சுரல்ஸ் நிகழ்ச்சி. ”தில் யே பே செனு வே, ரஸ்தே பே நெயின் வே” ஷாலினி வட இந்திய ஆடையுடன் ஆடி கொண்டிருந்தாள். வேகமாக சென்று முதல் சீட்டிலிருந்த ஜீனியர் ஒருவனை எழுப்பிவிட்டு அமர்ந்தேன். ”தாலு சே தாலு மிலா” என்னை பார்த்து கொண்டே ஆடி கொண்டிருந்தாள். அட்டகாசமான நடனம். அவள் நடனம் முடிந்ததும் மேடைக்கு பின்னால் சென்று அவளை வாழ்த்தலாம் என்று புறப்பட்டேன். சரியாக அந்த நேரம் பார்த்து கதவருகே கேசவன் நின்றிருந்தான். இறுதியாக நடக்கும் பாட்டு போட்டியில் அவனை கலந்து கொள்ள சொல்லி அனைவரும் வற்புறுத்தி கொண்டிருந்தனர். அவனை கேட்காமலே அவன் பெயரை நான் கொடுத்திருந்தேன். என்னை பார்த்ததும் பிடித்து கொண்டார்கள்.

எப்படியும் ஷாலினி ஒரு ப்ரைஸ் வாங்கிடுவா. பசங்க சைட்ல இருந்து ஒருத்தவங்க கலந்துக்க வேண்டாமா? சும்மா பாடுடா, நிச்சயம் ப்ரைஸ் நமக்கு தான். எவ்வளவோ ஏத்திவிட்டு அவனை ஒத்துக்கொள்ள வைத்தோம். பிறகு அந்த இடத்தை விட்டு நழுவி ஷாலினியை தேடி சென்றேன். அங்கே ஷாலினி குனிந்து கொண்டு உட்கார்ந்திருந்தாள். நான் அவளை கூப்பிட்டேன். திரும்பவில்லை. விசும்பல் சத்தம் கேட்டது. ஷாலினி அழுது கொண்டுருந்தாள்.

என்ன நடந்தது என்று கேட்டதற்கு எதுவும் சொல்லவில்லை. விசும்பல் மட்டும் வந்து கொண்டிருந்தது. ”என்னடா ஆச்சு. சொல்லுடா” என்று நான் சொன்னதும் என்னையே ஒரு நிமிடம் பார்த்தாள். பிறகு பேச ஆரம்பித்தாள். அவள் ஆடி முடித்து வந்ததும் அவள் மேல் யாரோ மோதிவிட்டானாம். அவள் திரும்பி முறைத்ததற்கு, ”என்னடி பெரிய பத்தினியாட்டம் முறைக்கற. எப்ப பார்த்தாலும் அந்த செந்திலோட உரசிக்கிட்டே தானே சுத்துவ. நான் உரசுனா என்ன வந்துச்சாம்” என்று சொல்லி கொண்டிருக்கும் போதே அவன் டிப்பார்ட்மெண்ட் பசங்கள் அவனை இழுத்து கொண்டு சென்றுவிட்டார்களாம். அவன் MSc சாப்ட்வேர் நான்காம் ஆண்டு மாணவன் என்றும், பெயர் தெரியவில்லை என்றும், தண்ணி அடித்திருந்தான் என்றும் சொன்னாள்.

ஷாலினியுடன் ஆடிய MSc மூன்றாம் ஆண்டு மாணவியின் துணை கொண்டு அவன் யாரென்று கண்டுபிடித்தேன். அவனை தேட ஆரம்பித்தேன். அவன் ஆடிட்டோரியத்திற்கு பின்னால் நின்று
யாராவது வருகிறார்களா என்று பார்த்து கொண்டு தம் அடித்து கொண்டிருந்தான். அவனுடன் நான்கைந்து பேர் இருந்தார்கள். என்னை பார்த்ததும் ஒரு நிமிடம் குழம்பி பிறகு நான் யார் என்பதை புரிந்து கொண்டான். ”சில்லென்று பூத்த சிறுநெருஞ்சி காட்டினிலே, நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாலே” கேட்டு கொண்டிருந்தது. ”வந்துட்டாருடா ரோமியோ” என்று நக்கலாக சொல்லி சிரித்தான். ஒரு நிமிடத்தில் அவன் கண்ணாடி உடைந்திருந்தது. என் சட்டை கிழிந்திருந்தது. என் இடது கண்ணத்தில் லேசாக ரத்தம் வந்து கொண்டிருந்தது. அவன்
நெற்றியில் லேசாக ரத்தம். அவனுடன் இருந்த ஒருவனுடைய சட்டை கை மட்டும் கிழிந்திருந்தது. அங்கே கேட்ட சத்தத்தில் EEE HOD அந்த பக்கம் வந்துவிட்டார். அனைவரும் இருந்த இடம் தெரியாமல் ஓடி விட்டோம்.

நான் ஹாஸ்டலில் என் அறையில் இருந்தேன். இருபது நிமிடத்தில் கேசவன் அங்கே வந்து சேர்ந்தான். அவனுக்கு என்னை அடித்துவிட்டார்கள் என்று மட்டும் தெரிந்திருந்தது. காரணம் தெரியவில்லை. பயங்கர கோபமாக வந்தான். எவன்னு சொல்லுடா, நாளைக்கு ஒருத்தவனும் NGGO காலனியை தாண்ட மாட்டானுங்க. துடியலூர்ல இருந்து பசங்கள வர சொல்லிடறேன். அவனுங்களுக்கு எல்லாம் சூ#$ கொழுப்பெடுத்து ஆடுது போல. நாளைக்கு வாங்கினா தான் தெரியும். சரி, இப்ப நீ என் கூட வா. இன்னைக்கு ராத்திரி எங்க வீட்ல தங்கிக்கோ. நாளைக்கு பார்த்துக்கலாம் என்றான். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவனுக்கு காரணம் சொல்லவும் விருப்பமில்லை. வேறு சட்டை எடுத்து போட்டு கொண்டு கிளம்ப சொன்னான். தயங்கி கொண்டே கிளம்பினேன்.

ஆடிட்டோரியத்திற்கு முன்னால் நின்ற கேசவனுடைய சாமுராயை எடுத்து கொண்டு கிளம்பினோம். யாரோ, ”கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே” பாடி கொண்டிருந்தார்கள். முடிந்தவுடன் யாருக்கு பரிசு என்பதை கேட்டுவிட்டு செல்லலாம் என சொல்ல நினைத்து சொல்லாமல் விட்டுவிட்டேன். அங்கிருந்து கிளம்பி ஒரு கிலோமீட்டர் தூரத்தில் எங்கள் வண்டி நிறுத்தப்பட்டது. MSc நான்காம் ஆண்டு மற்றும் ஐந்தாம் ஆண்டு மாணவர்கள் ஒரு பத்து பேர் இருந்தார்கள். அங்கே இருந்த NGGO காலனியை சேர்ந்தவனிடம் கேசவன் சமாதானம் பேச முயற்சி செய்தான். ஏன்டா நாளைக்கு ஒருத்தன் கூட காலனியை தாண்ட முடியாதுனு சொன்னியாம். விடுதியில் அவன் என்னிடம் பேசியது அதற்குள் அவர்களுக்கு வந்து சேர்ந்திருந்தது. அதில் ஒருத்தனிடம் செல் ஃபோன் இருந்தது.

அந்த இடத்தை சரியாக மினி பஸ் கடந்து கொண்டிருந்தது. இப்பொழுது முன்பு போல அங்கே முள் செடிகள் இல்லை. ரியல் எஸ்டேட் காரர்கள் அங்கே ஒரு குச்சியில் போர்ட் மாட்டியிருந்தார்கள். தார் ரோட் இருந்தது.

நீ என்ன பெரிய கூ*யாடா? துடியலூர்ல இருந்து பசங்களை வர வெச்சா நாங்க பயந்துடுவோமா? அப்படி அவனுங்க வந்தா மட்டும் எங்களை என்னடா பண்ணுவான். பேசிக் கொண்டிருக்கும் போதே அவன் கையில் மாட்டியிருந்த காப்பு வெளியே வந்து அவன் கைப்பிடிக்குள் வந்தது. ஏதோ தப்பு நடக்க போகிறது என்று எனக்கு தொன்றியது. அந்த நிலவொளியில் அங்கே நடக்கவிருந்த பயங்கரம் எனக்கு புரிய ஆரம்பித்தது. கேசவனும் அதை புரிந்து கொண்டான். ஆனால் அவன் செயல் பட ஆரம்பிப்பதற்குள் அந்த காப்பு கேசவனின் வலது பக்க நெற்றியை பதம் பார்த்தது.

என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டிருந்த நான், அங்கே அருகே ரோடு போட கொட்டி வைத்திருந்த ஒரு கல்லை எடுத்து அவன் பின் தலையில் அடித்தேன். இருவருடைய கெட்ட நேரமும் வேலை செய்தது. கல்லை எடுக்கும் போதோ அவனை அடிக்கும் போதே என் கையிலிருந்து நீண்டிருந்த அதன் ஆறு இஞ்ச் கூர்மையான பகுதியை நான் கவனிக்கவில்லை. அந்த கல் அவன் தலையில் அப்படியே சொறுகி கொண்டது. ஒரு பக்கம் கேசவன் நெற்றியிலிருந்து ரத்தம் ஒழுக, மறு பக்கம் பின் மண்டையில் கல் பாய்ந்த அந்த மாணவன். அவன் தலையிலிருந்து கல்லை என்னால் எடுக்க முடியவில்லை. அங்கே இருந்த அனைவரும் ஓடிவிட்டார்கள்.

நான் அப்படியே அந்த கொட்டி வைத்திருந்த ஜல்லியின் மேல் அமர்ந்து விட்டேன். என்ன நடந்தது, என்ன செய்வது என்றே புரியவில்லை. ஐந்து நிமிடத்தில் அந்த இடத்தில் ஆயிரம் பேர் இருந்தார்கள். ஆம்புலன்ஸ், போலிஸ் ஜீப் இரண்டும் வந்தது. போலிஸ் ஜீப்பில் நானும், ஆம்புலன்சில் கேசவனும், தலையில் கல் சொருகியிருந்தவனும் ஏற்றப்பட்டோம். அன்று அடிப்பட்டவுடன் ஓடியவர்கள் தவறாமல் வந்து சாட்சி சொன்னார்கள். நன்னடத்தையால் ஆறு ஆண்டுகள் முடித்து வெளியே விட்டார்கள். நேராக கேசவனை பார்க்க வந்துவிட்டேன். இதோ
இடிகரை வந்துவிட்டது.

இடிகரையில் இந்த ஆறு ஆண்டுகளில் எந்த மாற்றமும் பெரிதாக காணப்படவில்லை. நேராக என் கால்கள் கேசவன் வீட்டிற்கு அழைத்து சென்றது. கதவு திறந்திருந்தது. நண்பர்கள் புடை சூழ வந்து கேசவனையும், அப்பாவையும் கிண்டல் செய்து கொண்டே சாப்பிட்ட அந்த முன் அறை விரிச்சோடி இருந்தது. அந்த குரல்கள் இன்னும் அந்த சுவர்களுக்குள் ஒளிந்திருக்கும் என்று நினைக்கிறேன். உள்ளே சென்றேன். சிமெண்ட் தரையில் இன்னும் குளிர் இருந்தது. இடது பக்கம் இருந்த அறை இருட்டாக இருந்தது. கேசவன் ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தான். பல நாள் வழிக்கப்படாத தாடி, காலில் விலங்குடன் இருந்தான். அவன் அருகே சென்று அமர்ந்தேன். அவன் கண்களை ஒரு நிமிடத்திற்கு மேல் பார்க்க முடியவில்லை. அவன் கால்களில் நிறைய தழும்புகள். நெற்றியில் வலது பக்கம் இன்னும் அந்த தழும்பு தெரிந்தது. அவனுக்கு நான் யார் என்று தெரியவில்லை. அம்மா சமையலறையில் பாத்திரத்தை உருட்டும் சத்தம் கேட்டது.

வீட்டை விட்டு வெளியே வந்து மினி பஸ்ஸில் சென்று அமர்ந்தேன். பத்து நிமிடம் கழித்து புறப்பட்டது. பஸ்ஸில் நான்கைந்து பேர் மட்டும் இருந்தார்கள். ஆடிட்டோரியத்தை கடந்து செல்லும் பொழுது உள்ளே இருந்து ”தாலு சே தாலு மிலா” கேட்டு கொண்டிருந்தது. ஷாலினி என்னை பார்த்து சிரித்து கொண்டு ஆடிக் கொண்டிருந்தாள்.

நான் சத்தம் போட்டு அழுவதை அந்த எட்டு கண்களும் கவனித்து கொண்டிருந்ததை பற்றி நான் வருத்தப்படவில்லை.

Saturday, March 07, 2009

சிவாஜி ஸ்பெஷல்

ஆண்டவன் கட்டளை படத்திலிருந்து ... ஆறு மனமே ஆறு. அட்டகாசமான பாடல். நான் ஒன்பதாவது படிக்கும் போது, நாம பெருசாகி ஒரு படம் எடுக்கனும்னு நினைச்சிட்டு இருந்தேன். ஹீரோ The Perfect Manஆக இருக்கனும்னு காட்டற மாதிரி. இந்த படத்தை பார்த்தவுடன் எனக்கு ஒரே ஆச்சர்யம். நான் நினைச்ச கதைக்கு 60% ஒத்து வந்துச்சு. முதல் சீன்ல சிவாஜி காலேஜ் போகும் போது அதை பார்த்து ஒருத்தர் கடிகாரத்தை திருத்துவார். அந்த அளவுக்கு அட்டகாசமா ஒரே சீன்ல அவரோட கேரக்டரை விளக்கிருப்பாங்க. க்ளைமாக்ஸ் மட்டும் கொஞ்சம் சொதப்பல் (என்னை பொருத்தவரை). இந்த படத்துல எல்லா பாட்டும் அருமையான பாடல்கள் தான். சந்திரபாபு பாடுற புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி பெற்றதில்லை பாட்டு இந்த படம் தான்.புதிய பறவை படத்திலிருந்து... பார்த்த ஞாபகம் இல்லையோ?
ஸ்டைல்னா என்னனு இந்த பாட்டை பார்த்து தெரிஞ்சிக்கோங்க. ரஜினி காந்த் சிவாஜியை ஸ்டைல் சாம்ராட்னு சொன்னது எவ்வளவு உண்மைனு இந்த ஒரு பாட்டை பார்த்தா தெரிஞ்சிக்கலாம். இந்த படத்துல வர  உன்னை ஒன்று கேட்பேன், ஆஹா மெல்ல நட, மெல்ல நட பாட்டும், எங்கே நிம்மதி எங்கே நிம்மதி எனக்கு ரொம்ப பிடிக்கும். சரோஜா தேவி இந்த படத்துக்கு எத்தனை மை டப்பா காலி பண்ணாங்கனு எனக்கு ஒரு சந்தேகம்.
பாவ மன்னிப்பு படத்திலிருந்து... வந்த நாள் முதல் இந்த நாள் வரை. Excellent lyrics. இந்த பாடல் வரிகள் எத்தனை உண்மை.
பட்டிக்காடா பட்டணமா படத்திலிருந்து... அடி என்னடி ராக்கம்மா. செம்ம குத்து. இது செம மசாலா படம். இந்த கதையை கொண்டு நிறைய படம் வந்துடுச்சி. ஜெயலலிதா இதுல சூப்பரா நடிச்சிருப்பாங்க.ஆலயமணி படத்திலிருந்து... கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா? Excellent Lyrics

இந்த படத்துல சிவாஜி Anti-hero. பயங்கரமான சுயநலவாதி.  முதல் காட்சிலயே அதை விளக்கிடுவாரு இயக்குனர். கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியும் இதுல பாந்தமா இருப்பாங்க. வாய்ப்பு கிடைத்தால் தவறாமல் பாருங்க. இதுல எனக்கு பிடிச்ச இன்னொரு பாடல் சட்டி சுட்டதடா கை விட்டதடா. 

Last but Not least... Kathazha kannala Remix


இது தொடர் பதிவா வரும். ஏன்னா ஒரு பதிவுல சிவாஜியை அடைக்க முடியாது. 

இந்த பாடல்களை youtubeல் வலையேற்றியவர்களுக்கு என் நன்றி.

Thursday, March 05, 2009

வெட்டி பேச்சு - மார்ச் 6

இந்த முறை இந்தியா வந்திருந்த போழுது இரண்டு முறை கோவை வந்திருந்தேன். கோவைல தான் செட்டில் ஆகனும்னு இருக்குற எண்ணம் அநேகமா நிறைவேறிடும்னு நினைக்கிறேன். பார்க்கலாம்.

கோவைல இருந்து சென்னைக்கு ட்ரெயின்ல வந்தேன். ரெயில் வே ஸ்டேஷன் முழுக்க சிகப்பு கலர் ட்ரெஸ் போட்ட மக்கள். எல்லாரும் சமயபுரம் போகறாங்களாம். ஸ்பெஷல் ட்ரெயினாம். அடப்பாவிகளா, எப்படிடா இப்படி தானா போய் ஏமாறீங்கனு கேக்கனும்னு தோனுச்சு. கேக்கல. எங்க அம்மாக்கிட்ட சொன்னா அந்த அம்மன் சக்தியான அம்மனு சொல்லுவாங்க. ராமநாராயணன் படத்துல வர அம்மனுக்கு இருக்குற சக்தி இருந்தா கூட ஒரு டேன்ஸை போட்டு கைல வெச்சிருக்குற சூலத்தால குத்திருக்கும். இப்படி நாப்பது அம்பது கார்ல சுத்த விட்டுருக்காது. சரி நமக்கு எதுக்கு அது.

ட்ரெயின்ல அப்பர் பர்த் தான் நமக்கு ஒத்து வரும். அந்த ட்ரெயின்ல பார்த்தா சைட்லயும் மூணு பர்த் வந்ததால நமக்கு மிடில் பர்த் வந்துடுச்சி. என்ன கொடுமை சரவணன்னு யோசிச்சிட்டு இருக்கும் போது ஒரு அக்கா (டாக்டருக்கு படிக்கறாங்க போல) மிடில் பர்த் தான் வேண்டும்னு சொல்லிட்டு இருந்தாங்க. அந்த குளறுபடில அவுங்களுக்கு அப்பர் பர்த் வந்துடுச்சு. நைசா பேசி அப்பர் பர்த் வாங்கியாச்சு. மிடில் பர்த்தை கூட மக்கள் விரும்புவாங்கனு அப்ப தான் தெரிஞ்சிக்கிட்டேன்.

சென்னைக்கு காலைல வந்து சேர்ந்தேன். வீட்டு அம்மணிக்கு போன் பண்ணி KK நகருக்கு பஸ் நம்பர் கேட்டு ஏறி உட்கார்ந்தேன் (11Dனு நினைக்கிறேன்). பார்த்தா அது பெண்கள் உட்கார சீட்டாம். அந்த சீட்டுக்கு மேல கூட பெண்கள்னு எழுதல. தெரியாம நானும் போய் உட்கார்ந்துட்டேன். உடனே அங்க வந்த பொம்பளை மெட்ராஸ் பாஷைல “பையை வெச்சிக்கிட்டு வந்து லேடிஸ் சீட்ல உட்காருது பாரு. போய் அந்த பக்கம் உக்காரு” அப்படினு ரொம்ப மரியாதையா சொன்னாங்க. இத்தனைக்கும் அந்த சீட்டுக்கு முன்னாடி சீட்ல இடம் இருந்துச்சு. 

சென்னைல யாரும் மனஷனை மனஷனா மதிக்க மாட்டாங்க போல. திடீர்னு எல்லார் தலையிலும் கொம்பு இருக்கற மாதிரி தெரிஞ்சுது.

..................


விசா இண்டர்வியூக்கு பெங்களூர்ல இருந்து ஷதாப்தி ட்ரெயின்ல சென்னைக்கு வந்தேன். உள்ளேயே ஹிக்கின்போத்தம்ஸ்ல கொஞ்சம் புக்கை பொறுக்கிட்டு வெளிய வந்தேன். டிசம்பர் 5 ராத்திரி. போலிஸ் கெடுபிடி அதிகமா இருந்தது. அந்த நேரம் நம்ம தலை கைப்ஸ் வேற ஃபோன் பண்ணி என்னப்பா இன்னைக்கு சென்னை புறப்படறாயானு கேட்டாரு. ஆபிஸ் விஷயமா வரதால கொஞ்சம் சீக்கிரமாவே புறப்பட்டு வந்தாச்சு.

முதல் முறையா அப்ப தான் சென்னை செண்டரலுக்கு வந்திருந்தேன். சரி கம்பெனி காசு தரும், அதனால வீட்டுக்கு ஆட்டோலயே போகலாம்னு முடிவு பண்ணிட்டு ஸ்டேஷனை விட்டு வெளிய வந்தேன். ப்ரீ பெய்ட் ஆட்டோல வர சொல்லி மாமனார் சொல்லியிருந்தாரு. நூறு இல்லைனா நூத்தி இருபது ரூபாய் கேப்பாங்கனு சொல்லியிருந்தாரு. 

அன்னைக்கு போலிஸ் கெடு பிடியால அங்க எதுவும் ஆட்டோ இல்லை. கொஞ்சம் தள்ளி தான் ஆட்டோ எல்லாம் நிறுத்திருந்தாங்க. நாம வேற காதுல ஐ பாட், கைல ஹிக்கின்போத்தம்ஸ் பேக், பின்னாடி ஒரு ஷொல்டர் பேக் அதுல சைட்ல ஒரு வாட்டர் பாட்டில் எல்லாம் வெச்சிருந்தோம். 

ஆட்டோவா சார்னு ஒரு சின்ன பையன் வந்து கேட்டான். நானும், ஆமாம் KK Nagar, நெசப்பாக்கம்னு சொன்னேன். ஃபோர் ஹண்ட்ரட் சார்னு சொன்னான். எனக்கு ஒரே அதிர்ச்சி. இரண்டு மடங்கு கேட்டா கூட சரினு ஏமாத்தரதுலயும் ஒரு நியாய தர்மம் பாக்கறாங்கனு பார்க்கலாம். இது அநியாய கொள்ளையா தானே இருக்குது. நான் நூறு ரூபாய் தரேனு சொன்னேன். மனசுக்குள்ளே ஏதோ பேசிட்டு போயிட்டான். அப்பறம் விசாரிச்சி பஸ் பிடிச்சி போனேன். அஞ்சு ரூபாய் தான் செலவு. 

..................

திங்க கிழமை காலைல விசா இண்டர்வியூ இருந்தது. KK நகர்ல இருந்து US Consulateக்கு நூறு ரூபாய் கேட்டாங்க. நானும் எவ்வளவோ பேரம் பேசி எண்பது ரூபாய்ல முடிச்சேன். அறுபது ரூபாய்னு சொல்லி தான் வீட்ல இருந்து அனுப்பினாங்க. 

விசா கிடைச்சி வெளிய வந்தவுடனே ஆட்டோ இருந்தது. 

“விசா கிடைச்சுதா சார்” ஆட்டோக்காரர்

“கிடைச்சிடுச்சுங்க”

“கங்க்ராட்ஸ் சார்”

“நன்றிங்க”

“எங்க சார் போகனும்?”

“KK நகர்”

“ஃபைவ் ஹண்ட்ரட் சார்”

“என்னது?”

“என்னங்க சார் டாலர்ல சம்பாதிக்க போறீங்க. பத்து டாலர் தானே சார்”

“நான் வரும் போது எண்பது ரூபாய் தான் கொடுத்தேன். வேணும்னா நூறு ரூபாய் தரேன்”

“இல்ல சார்”

வீட்ல வேற பாப்பாவை விட்டுட்டு நானும் மனைவியும் வந்திருந்தோம். என்ன பண்ணுதோனு தெரியலைனு ஒரு பயம் வேற. பவுடர் பால் கொடுத்து பழக்கமில்லை. அவுங்க பாட்டி தான் பார்த்துக்கிட்டாங்க. உடனே வீட்டு அம்மணியை கூப்பிட்டு பக்கத்துல இருக்கற பஸ் ஸ்டாப்புக்கு போனேன். ஐடி கார்ட், டை எல்லாம் எடுத்து பைல போட்டேன். சட்டை கையை மடிச்சி விட்டு, டக் இன் பண்ண சட்டையை வெளியே எடுத்து விட்டேன். தலை முடியை கொஞ்சம் கலைச்சி விட்டேன். முதல்ல வந்த ஆட்டோவை நிறுத்தி KK நகர்னு சொன்னேன். 

”ஹண்ட்ரட் ருப்பீஸ் சார்” 

“இல்லைங்க நான் வரும் போது எண்பது ரூபாய் தான் கொடுத்தேன். எண்பதுனா சொல்லுங்க போகலாம்”

”சரிங்க சார். ஏறுங்க”

...................

நமக்கே இவ்வளவு கஷ்டமா இருக்கே. மொழி தெரியாதவங்க சென்னை வந்தா என்ன பண்ணுவாங்க? Chennai is hellனு அவுங்க சொல்றது எனக்கு நியாயமாத்தான் பட்டுது. தமிழ் பேசறாங்கனு ஒரே காரணத்தால இவனுங்க ஏமாத்தறதை என்னால ஏத்துக்க முடியல. பெங்களூர் இஸ் பெட்டர். கோயமுத்தூர் இஸ் பெஸ்ட். 

Wednesday, March 04, 2009

கவுண்டர்’ஸ் டெவில் ஷோ - ’தல’ அஜித்

இப்ப எல்லா டீவிலயும் ஏதாவது ஒரு ப்ரோக்ராம் நடத்தி முடிஞ்சிடுச்சினா, உடனே சீசன் 2, சீசன் 3னு ஆரம்பிச்சி டார்ச்சர் பண்றானுங்க. அதான் சரி நாமலும் கவுண்டர்’ஸ் டெவில் ஷோ சீசன் 2 ஆரம்பிக்கலாம்னு முடிவு பண்ணியாச்சு. சரி யாரை இந்த ஷோவுக்கு கூப்பிடலாம்னு யோசிக்கும் போது போன ரவுண்ட்ல எஸ்கேப்பான ”தல”யை பிடிக்கலாம்னு முடிவு பண்ணியாச்சு. சரி நிகழ்ச்சிக்கு போகலாமா?

கவுண்டர் : வாப்பா அஜித். உட்காரு.

தல : உட்காரலாம். யார் வேணா உட்காரலாம். ஆனா நான் உட்காரணும்னா சூப்பர் ஸ்டார் நாற்காலில தான் உட்காருவேன்.

க : டேய் தல மண்டையா. நீ திருந்தவே மாட்டியா? இப்படி கேவலமா பேசறதுமட்டுமில்லாம உனக்கு சூப்பர் ஸ்டார் நாற்காலி வேணுமா. குசேலனுக்கு அப்பறம் அவரே அந்த நாற்காலில உட்காரதில்லையாம். சரி, நீ நின்னுட்டே பேசு. அப்பறம் அது என்னடா எப்ப பார்த்தாலும் கோட் போட்டுக்கிட்டே சுத்திட்டு இருக்க. காலைல கக்கூஸ்க்கு கோட் சூட் போட்டுட்டு தான் போகறயாம்.

தல : கோட் சூட். பில்லா படத்துல நடிச்சுதுக்கு காசுக்கு பதில் கிடைச்சது. கோட் சூட்.

க : ஓ அது தான் நீ கோட் சூட் போட்டு சுத்தறதுக்கு காரணமா. ஏன்டா பில்லா படத்துக்கு அப்பறம் ஸ்டைலா பேசறனு இப்படி பேசி கொல்லற. உன் ஸ்டைல்ல பேசுடா. அதை ரசிக்க தான் இங்க கூட்டமே

தல: அது! நான் பாத்து பாத்து பேசற வீட்டு மன்ஷனில்ல. தானா பேசற காட்டு மன்ஷன்.

க: டேய். ஸ்டாப் திஸ் பஞ்ச் டயலாக்ஸ். அப்பறம் அது என்னடா உன்னை எல்லாரும் தல, தலனு கூப்பிடறாங்க? ஏன் எங்களுக்கு எல்லாம் உடம்புக்கு மேல தல இல்லாம வாலா இருக்கு?

தல: சின் வயசுல என்ன எல்லாம் தறுதல தறுதலனு கூப்பிடுவாங்க. அது இப்ப ஷார்டா ஆகி தலனு எல்லாரும் கூப்பிடறாங்க.

க: ஓ இதுக்கு இப்படி ஒரு கேவலமான ஃபிளாஷ் பேக் இருக்கா? சரி விடு. அப்பறம் எல்லாரும் ஆரம்பத்துல கேவலமான படத்துல நடிச்சிட்டு அப்பறம் நல்ல படத்துல நடிப்பாங்க. நீ மட்டும் ஆரம்பத்துல நல்ல படத்துல நடிச்சிட்டு இப்ப கேவலமான படத்துல நடிக்கிற. அது எப்படிடா?

தல: ஏ! நான் ஒண்ணும் கேவலமான படத்துல நடிக்கல. எல்லாமே ஓப்பனிங்ல ரெக்கார்ட் பண்ணுது.

க: ஆமாண்டா. உன் ரசிகர்னு சுத்தற கூட்டம் எல்லாம் என்னுமோ ரெண்டாவது நாள் போனா டிக்கெட் கிடைக்காதுனு நினைச்சிக்கிட்டு முதல் நாளே போயிடறானுங்க. ரெண்டாவது நாள் தியேட்டர்ல ஈ ஓடுது. சரி, உனக்கு சனி பிடிச்சது சிட்டிசன் படத்துல தான். அங்க இருந்து நாம ஆரம்பிப்போம். அது ஏன்டா அந்த சிக்கி முக்கி கல்லு மோதுதே பாட்டுல அப்படி ஒரு காஸ்ட்யூம்ல நடிச்ச?

தல: வசுந்தரா தாஸுக்கு என்னைவிட பெரிய தொப்பைனு எல்லாரும் சொன்னாங்க. அதான் யாரோடது பெருசுனு மக்களே முடிவு பண்ணிக்கிட்டும்னு அப்படி ஒரு பாட்டு வெச்சோம். நான் தனி ஆள் இல்லை.

க: அது அந்த படத்தை பார்த்தாலே தெரியுது. அப்பறம் அந்த டயலாக் சொல்லி சொல்லி அன்லிமிடட் மீல்ஸ் நாலஞ்சி வாங்கி சாப்பிட்டதால தான் அப்படி ஆகிடுச்சி. சரி அது பரவாயில்லை, அந்த ரெட்னு ஒரு படம் நடிச்சியே. அது எப்படிடா அந்த மாதிரி ஒரு கொடுமை எல்லாம் நடிக்க முடியுது?

தல : ரெட். R for Revolution, E for Education, D for Development.

க: அதெல்லாம் இருக்கட்டும். அதுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்? நீ என்ன புரட்சி பண்ணிருக்கியா? இல்லை ஒழுங்கா பத்தாவதாவது பாஸ் பண்ணயா? இல்லை இந்த சமுதாய வளர்ச்சிக்கு உதவனியா? அதுல உனக்கும் எதுக்கும் சம்பந்தமில்லை. அப்பறம் ஏன் ராசா இந்த மாதிரி பில்ட் அப் எல்லாம்?

தல: !

க: அது சரி. அப்பறம் அது என்னடா ஆஞ்சனயானு ஒரு படம் நடிச்சியே? அந்த படத்துக்கும் பேருக்கும் என்னடா சம்பந்தம்? ஆஞ்சனெயர் என்னைக்குடா பொண்ணுங்க பின்னாடி பாவாடை, பஞ்சவர்ணம்னு பாட்டு பாடிட்டு போனாரு?

தல: அவன் மட்டும் கில்லினு பேர் வெச்சிட்டு கபடி ஆடலாம். என்னை மட்டும் கேள்வி கேக்கறீங்க?

க: டேய்! அவனே ஒரு குருவி மண்டையன். அவனோட ஏன்டா கம்பேர் பண்ணற? அப்பறம் அந்த ஜனானு ஒரு கொடுமை படம். அதுல நீ சாயந்தரம் கோட், சூட் போட்டு கண்ணாடி போட்டா யாருக்கும் உன்னை அடையாளம் தெரியாதா? அந்த காலத்துல MGR கூட ஒட்டு தாடி, மரூ எல்லாம் வெச்சிட்டு வருவாரேடா?

தல: அவன் மீசையை ட்ரிம் பண்ணிட்டு, கைல டேட்டு குத்திட்டு, கட் பணியன் போட்டு மார்கெட்ல ஆடனாவே தமிழ்நாட்டு போலிஸால கண்டு பிடிக்க முடியல. நான் கண்ணாடி போட்டு, கோட் சூட் போட்டிருக்கேன் என்னை எப்படி கண்டுபிடிக்க முடியும்?

க: டேய் பில்லா ரீமேக் மண்டையா, அந்த காலத்துல MGR, சிவாஜி, ரஜினி, கமல் போட்டியெல்லாம் மக்களை யார் அதிகமா எண்டர்டெயின் பண்றதுனு இருந்துச்சு. நீங்க ரெண்டு பேரும் யார் அதிகமா டார்ச்சர் பண்றதுனு போட்டி போடறீங்களேடா. அப்பறம் அது என்னடா காட் ஃபாதர் படத்துல, கடைசியா அப்பா செத்து காட் ஆகிட்டாரு, காட் ஃபாதர்னு சொல்லி முடிச்சீங்க?

தல: படத்துக்கு முதல்ல பேர் வெச்சாச்சி. அப்பறம் எப்படி யோசிச்சும் கதை வரலை. அதான் கடைசியா அப்பாவை சாகடிச்சி காட் ஃபாதர் ஆக்கிட்டோம்.

க: டேய் காட் ஃபாதர் மண்டையா. இந்த கொடுமையெல்லாம் காதுல கூட விழக்கூடாதுனு தாண்டா மரியோ புசோ செத்து போயிட்டாரு. சரி, அப்பறம் ”ஜி”னு ஒரு படத்துல நடிச்சியே. அதுக்கு அப்பறம் உன்னை எல்லாம் ஜினு தான் கூப்பிடுவாங்கனு அந்த டைரக்டர் கூட சொன்னாரே. அது என்னடா ஜி?

தல: எம்.’ஜி’.ஆர், ர’ஜி’னி, அ’ஜி’த் மூணு பேர்லயும் நடுவுல வர எழுத்து தான் ’ஜி’.

க: அட ச்சீ. இதுக்கு இப்படி ஒரு கேவலமான காரணம் இருக்கா? இந்த பேர் ஆராய்ச்சி பண்ற நேரத்தை கதை கேக்கறதுல பண்ணிருந்தா இந்நேரம் நீ எங்கயோ போயிருப்ப. அப்பறம் அது என்னடா ஆழ்வார் படத்துல சாமி வேஷம் போட்டு துப்பாக்கியால சுட்டுட்டு ”நான் கட்வுள்”, “நான் கட்வுள்”னு சொல்லிட்டு இருந்த?

தல: சாமி வேஷம் போட்டா அடையாளம் தெரியாதுனு தான் அப்படி போட்டேன்.

க: டேய் டேய்... ஏகன் மண்டையா, சாமி வேஷம் போட்டா அடையாளம் தெரியாதுனு சொன்னா ஒத்துக்கறோம். நீ சொல்ற “நான் கட்வுள்”, “நான் கட்வுள்” ஸ்லேங்கை வெச்சே சின்ன சூச்சூ கூட இது அஜித்னு கண்டுபிடிச்சிடுமே. தமிழ்நாட்ல, பேசறதுல ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ற ஒரே ஆள் நீ தானடா ராசா. அது எப்படி நீ பேசினா கண்டுபிடிக்காம போயிடுவாங்க? சரி நீ ஏன் அப்படி பேசனனு மக்களுக்கு தெரியும். நான் கடவுள் படத்துல நீ தொப்பையோட தலைக்கீழ நின்னா எப்படி இருந்திருக்கும்னு நீயே நினைச்சி பாரு. அந்த படமே காமெடி படம் ஆயிருக்காது? அதனால தான் பாலா வேண்டாம்னு சொல்லிட்டாரு. அது தெரியாம இப்படி “நான் கட்வுள்”, “நான் கட்வுள்”னு சொல்லிட்டு இருந்தா நல்லாவா இருக்கு?

தல: அது டைரக்டர் சொன்னது.

க: தப்பிச்சிட்டாண்டா. சரி இனிமே அந்த மாதிரி கேவலமான டைரக்டர் படத்துல எல்லாம் நடிக்காத. அப்பறம் இந்த பி.வாசு, பேரரசு, ராஜு சுந்தரம் கூட எல்லாம் சகவாசம் வெச்சிக்காத. சரியா?

தல: முழிச்சிட்டேன். தோ வரேன்.

க: டேய் தல மண்டையா. இவ்வளவு நேரம் தூங்கிட்டு தான் பேசிட்டு இருந்தியா?

தல: ஏன்ணே நீங்க வேற? இது பஞ்ச் டயலாக். நான் பஞ்ச் டயலாக் பேசினா எல்லாமே காமெடியா போயிடுது.

க: டேய். இந்த ஸ்கிரின பாத்து பேசி மக்களை டார்ச்சர் பண்ணது போதும்டா. இனிமேவாது கதையை கேட்டு நடிச்சி மக்களுக்கு கொஞ்சம் நல்லது பண்ணுங்கடா. இல்லைனா அடுத்த தடவை நான் பேச மாட்டேன். என் கால் தான் பேசும்.

கவுண்டர் காலை தூக்க, தல எஸ்கேப் ஆகிறார்.