தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Friday, February 27, 2009

செல்வி!

ரொம்ப நாளாக அரசல் புரசலாக கேள்வி பட்ட விஷயம் தான். எந்த அளவிற்கு உண்மை என தெரிந்து கொள்ள முயற்சிக்கவில்லை. கடந்த ஒரு வாரமாக ஏற்பட்ட அந்த எண்ணம் இன்று உச்சத்திற்கு சென்றதால் அதைப் பற்றி விசாரிக்கலாம் என முடிவு செய்து கிளம்பிவிட்டேன். மதன் தான் இதற்கெல்லாம் சரியான ஆள். அரசாங்க உத்தியோகத்தில், உயர்ந்த பணியில் இருக்கும் என் ஒரே நண்பன்.சரியாக பதினெட்டு மணிக்கு அவன் அலுவலக கட்டிடத்திற்கு வந்துவிட்டேன். சோதனை செய்யும் ஸ்கானர் அருகே கண்ணை பொருத்திய இரண்டு நொடிகளுக்குள் அருகிலிருக்கும் லிப்ட் தானாக திறந்தது. உள்ளே நுழைந்தவுடன் கதவு மூடி சரியாக அவன் அறைக்கு முன் கதவு திறந்தது. நான் வெளியே வந்ததும் கதவு மூடி அந்த இடத்தில் ஒரு லிஃப்ட் வந்தததற்கோ கதவு திறந்ததற்கோ அறிகுறி இல்லாமல் மறைந்தது."டேய் ரகு. வாடா. உனக்காக தான் இவ்வளவு நேரம் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்" மேசை மீது இரண்டு பாட்டில் விஸ் இருந்தன."எப்படிடா இருக்க?""பார்த்தா எப்படி தெரியுது?""பாட்டில் எல்லாம் பார்த்தா அப்படியே தான் இருக்கற மாதிரி தெரியுது. ஆனா தொப்பை மட்டும் தான் கொஞ்சம் பெருசா இருக்கு"என் பேச்சைக் கேட்டு சத்தமாக சிரித்தான். அரசாங்க உத்தியோகத்தில் உயர் பதவியிலிருப்பவர்களுக்கு மட்டும் உணவு விஷயத்தில் கட்டுப்பாடு கிடையாது என கேள்விப்பட்டது அவனைப் பார்த்ததும் உறுதியாகிவிட்டது."நீ இன்னும் அப்படியே இருக்க"எனக்கு ஒரு கிளாஸ் கொடுத்துவிட்டு அவனும் ஆரம்பித்தான். மூன்று ரவுண்ட் முடியும் வரை பழைய கதைகளைப் பேசி கொண்டிருந்தோம். ஒரு வழியாக நான் வந்த விஷயத்தை பற்றி கேட்டான்."சொல்லுடா ஏதோ முக்கியமான விஷயம்னு சொன்ன?""பிராஜக்ட் EQH உண்மையாவே இருக்கா?""இருக்கு" அவன் முகத்தில் புன்னகை தோன்றி மறைந்தது."வெளில மக்கள் பேசிக்கிற அளவுக்கு இருக்கா?""வெளில மக்கள் என்ன பேசிக்கறாங்க?""நமக்கு யார் மேலயாவது கோபமோ, வெறுப்போ இருந்தா அதை இந்த ஹியுமனாய்ட்ஸ் மூலமா தீர்த்துக்கலாம்னு""இதெல்லாம் பழைய கதை. இப்ப எங்கயோ போயாச்சு""அதுல எதுவும் பிரச்சனையில்லைனா எனக்கு அதை பத்தி முழுசா சொல்லேன்""EQH இந்த நூற்றாண்டின் அற்புதமான கண்டுபிடிப்புனு நிறைய பேர் சொல்லி கேள்விப்பட்டிருக்கேன். எந்த அளவுக்கு உண்மைனு தெரியல. இருந்தாலும் சொல்றேன் கேளு""ம்ம்""பெரும்பாலும் கொலைகள் கோபத்தாலும், வெறுப்பினாலும் தான் நடக்குது. அந்த மாதிரி இறந்தவங்களோட பிணத்தை பார்த்ததும், அவுங்களை கொல்லனும்னு நினைச்சவங்களுக்கு இறந்தவங்க மேல இருக்குற கோபம் மறைஞ்சி அனுதாபம் ஏற்படுது. ஆனா அதுக்கப்பறம் இறந்தவன் உயிரோட வர முடியுமா? ""முடியாது"

"கரெக்ட். அதுக்கு கண்டுபிடிச்சது தான் இந்த பிராஜக்ட். Emotion Quenching Humanoids. இப்ப ஒரு காலேஜ் பொண்ணுக்கு அவ பாய் ஃபிரெண்டு மேல கோபம்னு வை. அந்த பையனை மாதிரியே அச்சு அசலா ஹியுமனாய்ட்ஸ் செஞ்சி அந்த பொண்ணுக்கு கொடுத்துடுவோம். அதை அவள் கோபம் தீர வரைக்கும் அடிச்சி உதைச்சி கொலையே செஞ்சி போடலாம். அப்படி அவன் செத்ததை பார்த்ததுக்கப்பறம் அவளுக்கு அவன் மேல இரக்கம் வந்துடுது. மறுபடியும் பழைய காதல். அவ்வளவு தான். ஒரு உயிரையும், காதலையும் காப்பாத்தியாச்சு""ஹியுமனாய்டை அடிக்கறதுக்கு அந்த பையனை நிஜமாலுமே அடிக்கறதுக்கும் வித்தியாசமிருக்குமில்லையா? அப்பறம் எப்படி அந்த பொண்ணுக்கு திருப்தி ஏற்படும்""எல்லாம் சைன்ஸ் நண்பா. ஹியுமனாய்ட், அச்சு அசலா அவ பாய் ஃபிரண்ட் மாதிரியே இருக்கும். சிலிக்கான் தோல். அடிச்சா வர ரத்தம் கூட நிஜ ரத்தம் மாதிரியே இருக்கும். டெஸ்ட் பண்ணா தான் கண்டுபிடிக்க முடியும். குரல் கூட அவன் குரலே தான். எல்லாருடைய தகவலும் அரசாங்கத்துக்கிட்ட இருக்கும் போது இதெல்லாம் சாதாரணம்.""ம்ம்""இப்ப இதையெல்லாம் தாண்டி எங்கயோ போயாச்சு. பிடிச்ச பொண்ணு சொன்னா கூட செய்து கொடுப்பாங்க. எல்லாம் துட்டு தான். ஆனா இந்த மாதிரி வாங்கறவங்களை எல்லாம் அரசாங்கம் தீவிரமா கண்காணிப்பாங்க. எங்கே நிஜத்திலயும் செஞ்சிடுவாங்களோனு""அப்பறம் எதுக்கு செய்து கொடுக்கனும்""மக்களை திருப்திப்படுத்தனும்னு தான். அதுவும் நம்ம கேக்கற மாதிரி ப்ரோக்ராம் பண்ணி கொடுப்பாங்க. செக்ஸ்காக தயாரிச்சி கொடுக்கறதுல தான் வெரைட்டி ரொம்ப அதிகம். உன்னை விரும்பி வந்து உன் கூட படுக்கற மாதிரியும் பண்ணலாம், உன்னை பிடிக்காம லேசா திமிர மாதிரியும் நீ வலுக்கட்டாயமா மடக்கி சம்மதிக்க வைக்கற மாதிரியும் பண்ணலாம். போன வாரம் என் கீழ வேலை செய்யற ஒருத்தன் ஒரு பொண்ணை சொல்லி நான் அவளை ரேப் பண்ணனும். அதுக்கு ஏத்த மாதிரி ப்ரோக்ராம் பண்ணி கொடுனு சொல்லிருக்கான்""அப்பறம்""அது லேசா திமிரும்னு நினைச்சிருக்கான். கொஞ்சம் எடக்கு முடக்கானதுல அவனோட முன் பல்லு ஒண்ணு காலி""இவ்வளவு கஸ்டமைஸ்டா பண்ணி தருவாங்களா?""தருவாங்க. ஆனா அதுக்கு ஏத்த மாதிரி செலவாகும். அடுத்து அதுக்கு ஏத்த மாதிரி அரசாங்கம் உனக்கு தெரியாம உன்னை தீவிரமா கண்காணிக்கும்""வேற ஏதாவது பிரச்சனை?""வேற எதுவுமில்லை. ஏன் இவ்வளவு தீவிரமா விசாரிக்கற?"சொல்லலாமா?"ஒண்ணுமில்லை. என் கூட வேலை செய்யறவன் ஒருத்தன் சொன்னான், எனக்கு அந்த அளவுக்கு நம்பிக்கையில்லைனு சொல்லிட்டேன்""இது ஓரளவுக்கு பிரச்சனையில்லாதது தான். கவர்மெண்ட் சைட்லயே போட்டிருக்கான் இல்ல. ஆனா விலை அதிகம். இந்த மாதிரி கண்காணிப்பாங்கனு வெளிய தெரியாது. அவ்வளவு தான்""ஹிம்ம்ம்ம்"வீட்டிற்கு வரும் வழியெல்லாம் அதே சிந்தனை மனதில் ஓடிக்கொண்டிருந்தது. செல்வி மேல் இவ்வளவு கோபம் வருமென்று கனவிலும் நினைத்து பார்த்ததில்லை. அவள் எனக்கு ஏதோ ஒரு வகையில் துரோகம் செய்கிறாள் என்று மனதில் பதிந்து விட்டது. அதற்கு காரணம் அவள் சென்ற வாரம் இரண்டு நாள் அலுவலகத்திற்கு செல்லாமல், சென்றேன் என்று பொய் சொன்னது தான் காரணமா இல்லை எனக்கு தெரியாது என்று நினைத்து கொண்டு அவள் இரவு நேரங்களில் பக்கத்து அறையில் செய்யும் அரட்டை தான் காரணமா என்று தெரியவில்லை. ஏதோ ஒரு காரணம். ஆனால் அவள் எனக்கு துரோகம் செய்வதாக என் மனதில் பதிந்து விட்டது. அதை நீக்க வேண்டும். அதுவும் நான் கொடுக்கும் தண்டனையை அவள் ஏற்ற பிறகு. என் காலில் விழுந்து கேட்கும் மன்னிப்பிற்கு பிறகு.இதை என் செல்வி நிச்சயம் செய்ய மாட்டாள். நான் கொடுக்கும் தண்டனைக்கு பிறகு செல்வி என்ன, எந்த மனிதனாலும் மன்னிப்பு கேட்க முடியாது. அதனால் தான் ஹியுமனாய்டை தேர்வு செய்தேன்.ஒரு வழியாக அரசாங்கத்திற்கு மனு போட்டு அதை அரசாங்கம் ஏற்று கொண்டுவிட்டது. மகிழ்ச்சி. இவ்வளவு தெளிவாக கேட்பார்கள் என்று நினைக்கவில்லை. சரியாக பதினைந்து மணிக்கு வீட்டிற்குள் வர வேண்டும். பயத்துடன் என் அருகில் வந்து, நின்று என் தலையை கோத வேண்டும். பிறகு நான் எனக்கு இப்படி துரோகம் செஞ்சிட்டியேனு அவளை மூன்று முறை கத்தியால் குத்துவேன். பிறகு என் காலில் விழுந்து, "நான் எந்த தப்பும் செய்யல, என்னை மன்னிச்சிடுங்க"னு சொல்லி சாக வேண்டும். அவ்வளவு தான். எவ்வளவு சுலபமான விஷயம் இல்லையா?என்னை மாதிரி இவ்வளவு சுலபமான ப்ரோக்ராமிங் வேலை கொடுத்தவன் இந்த நூற்றாண்டில் எவனும் இருக்க மாட்டான். ஆனால் விலை தான் என் மூன்று மாத சேமிப்பை விழுங்கிவிட்டது. பரவாயில்லை.இன்று அலுவலகத்தில் சொல்லி பதினான்கு மணிக்கே கிளம்பிவிட்டேன். நிஜ செல்வி எப்படியும் இருபத்தியொரு மணிக்கு குறைவாக வர மாட்டாள். அதற்குள் நான் ஒப்பாரியையே முடித்துவிடலாம். சரியாக பதினான்கு நாற்பத்தி ஐந்திற்கு டைனிங் டேபிள் அருகே கையில் கத்தியுடன் அமர்ந்துவிட்டேன்.உள்ளே ஒரு பயம் தொற்றி கொண்டுவிட்டது. அரசாங்க அனுமதியுடன் கொல்வாதாக இருந்தாலும் எனக்கு முதல் கொலையல்லவா? அதுவும் செல்வியை போலவே இருக்கும் ஹியுமனாய்டு. அவர்கள் கொடுத்த எண்ணை அழைத்து வேண்டாம் என்று சொல்லிவிடலாமா? இல்லை. இதை செய்தாக வேண்டும். என் செல்விக்காகவாவது செய்தாக வேண்டும். அப்பொழுது தான் நான் அவளுடன் கவலையின்றி குடும்பம் நடத்த முடியும்.


சரியாக பதினைந்து மணி. கதவு திறந்தது. செல்வி பயம் நிறைந்த கண்களோடு என் அருகில் வந்தாள். அறைக்குள்ளிருக்கும் அத்தனை ஆக்சிஜனையும் என் நுறையிரலுக்குள் பாய்ச்சினேன்.


"எனக்கு துரோகம் பண்ணிட்டியே செல்வி" அவள் மேல் பாய்ந்து என் கையிலிருக்கும் கத்தியால் அவளை கோபம் தீரும் வரையில் குத்தினேன். என் கை முழுக்க சிவப்பு நிறமாயிருந்தது.


ரத்தம் வெளியேற வெளியேற சோகை படர கீழே விழுந்தாள் செல்வி. "என்னை மன்னிச்சுடுங்க.. என்னை விட்டுடுங்க". தத்ரூபமான நிரல்.. அருமை.


அழைப்பு மணி அடித்தது

Thursday, February 26, 2009

எதிர்பார்ப்பு!

பெங்களூர்வாசிகளை இன்னும் என்னால் சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை. காலையில் எப்படி கேசரியையும், உப்புமாவையும் ஒரே சமயத்தில் சாப்பிடுகிறார்கள் என இன்று வரை புரியவில்லை. பெயர் வித்தியாசமாக இருக்கிறதே என்று ஏமாந்து நானும் ஒரு முறை சவ் சவ் பாத் வாங்கியிருக்கிறேன். அதிலிருந்து இந்த மாதிரி பெயருக்காக வாங்குவதை நிறுத்திவிட்டேன். இன்றும் எனக்கு முன்னால் டோக்கன் வாங்கியவன் ஏமாந்து வாங்கினானா என்று தெரியவில்லை. சொல்லிவிடலாமா என்று பார்த்தேன். ஆனால் வழக்கம் போல வாய் வரை வந்த வார்த்தை நின்றுவிட்டது.

இந்த ரெசஷன் சமயத்தில் அவசரப்பட்டு மேனஜரிடம் சண்டை போட்டு கம்பெனி மாறியது தவறு என்று மனதிற்குள் உறுத்தி கொண்டிருக்கிறது. பெரும்பாலும் கம்பெனி மாறுபவர்கள் காசுக்காகவோ, பதவி உயர்விற்காகவோ மட்டும் மாறுவதில்லை. அவர்கள் மேனஜரிடம் அவர்களுக்கு ஏற்படும் மனக்கசப்பு தான் முக்கியமான காரணமாக இருக்கும். நான் இந்த கம்பெனிக்கு வந்து சரியாக இன்றோடு பத்து நாள் ஆகிறது. இன்னும் பிராஜெக்டில் போடவில்லை. பிராஜெக்டில் இருந்தால் யாராவது நண்பர்களாவது கிடைத்திருப்பார்கள். இப்பொழுது தனியாகவே சாப்பிட வருகிறேன். புது நிறுவனத்தில் சேருவதற்கும் புது பள்ளியில் சேர்வதற்கும் பெரிதாக வித்தியாசமில்லை. உடனே நண்பர்கள் கிடைக்கமாட்டார்கள். 

தோசை வாங்கிவிட்டு சட்னி சாம்பார் வைத்திருக்கும் இடத்திற்கு சென்றேன். அங்கு தான் அந்த எதிர்பாராத விபத்து நிகழ்ந்தது. விபத்து என்ற பிறகு எதிர்பாராததாகத்தானே இருக்க முடியும். அருகிலிருக்கும் தோழியுடன் பேசிக்கொண்டே அந்த பெண் வேகமாக திரும்ப அவள் கையில் வைத்திருந்த தட்டு என் மேல் பட்டு அதிலிருந்த சாம்பார் எல்லாம் என் மேல் கொட்டியது. 

சரியாக இன்று பார்த்து கருப்பு கலர் பேண்ட் போட்டு வந்திருந்தேன். அதில் மஞ்சள் நிற சாம்பார் அழகாக நிறத்தை பிரித்து காட்டியது. அந்த பெண் முகம் பயத்திலும், குற்றவுணர்ச்சியிலும் சிவந்தது. அங்கே இருந்த அனைவரது கண்களும் எங்கள் மேல் விழுந்தது.


நான் உடனடியாக அந்த இடத்திலிருந்து நகர்ந்து நேராக கை அலம்பும் இடத்திற்கு சென்று முடிந்த வரை சாம்பாரை பேண்டிலிருந்து துடைக்க முயற்சி செய்து கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் ஒரு பெண் குரல் கேட்டது.

“I am terribly sorry. Can you please wait here for 2-3 mins? I will be back soon” சொல்லிவிட்டு வேகமாக சென்றாள். அவளுடன் அவள் தோழியும் வேகமாக சென்றாள். கடைசியாக ஒரு முறை என்னை திரும்பி பார்த்து கொண்டே சென்றாள்.

பொறுமையாக சட்டை, பேண்டை கைக்குட்டையை வைத்து தண்ணியால் துடைத்து முடித்திருந்தேன். சாம்பார் கறை ஒட்டி கொண்டிருந்தது. தண்ணிர் பட்டு கருப்பு நிறம் கொஞ்சம் வித்தியாசமாக தெரிந்தது. ஐந்து நிமிடத்தில் வேகமாக நடையும், ஓட்டமுமாக வந்து கொண்டிருந்தாள். கையில் ஒரு ப்ளாஸ்டிக் பை. அதிலிருந்த வட்டத்தை துளைத்திருந்த கோடு அது Indigo Nation பை என்று காட்டி கொடுத்தது. 

"I am very very sorry. Please take this" சொல்லிவிட்டு அந்த பையை நீட்டினாள். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. வேறு வழியில்லாமல் அந்த பையை அவள் கையிலிருந்து வாங்கினேன். உடனே வேகமாக சென்றுவிட்டாள். சரியாக அவளுடையை ஐடி கார்டில் அவள் பெயரை பார்த்துவிட்டேன். மீனாட்சி கோவிந்தராஜன். தமிழ் பெண் தான் என்பது தெளிவாக அவள் முகத்திலும் அவள் பேசிய ஆங்கிலத்திலும் தெரிந்தாலும், அவள் பெயரை வைத்து உறுதிபடுத்தி கொண்டேன்.

முதல் வேலையாக பாத் ரூம் சென்று அவள் வாங்கி வந்த துணியை எடுத்து பார்த்தேன். எனக்காகவே அளவெடுத்து தைத்தது போலிருந்தது. பேண்ட் சர்ட் நிறமும் நன்றாக இருந்தது. அடர் பச்சை நிறத்தில் சட்டையும், க்ரீம் கலர் பேண்டும் இருந்தது. க்ரீம் கலரீல் இது மூணாவது பேண்ட். நல்ல வேளை அந்த நிறத்தில் சட்டையில்லை. முதல் வேலையாக அவளுடைய எக்ஸ்டென்ஷன் நம்பரை கம்பெனி சைட்டில் தேடினேன். எங்கள் நிறுவனத்தில் ஒரே மீனாட்சி கோவிந்தராஜன் அவள் தான். அதனால் எளிதாக அவள் எண் கிடைத்தது. ஆனால் அவளை அழைக்கலாமா வேண்டாமா என்ற ஒரு தயக்கம் இருந்தது. 

மதியம் சாப்பிடுமிடத்தில் அவளை என் கண்கள் தேடியது. இவ்வளவு கூட்டத்தில் அவளை சந்திப்பது சாத்தியமில்லை என்று தோன்றியது. ஒரு வேளை தமிழ் சினிமாவாக இருந்தால் இது சாத்தியப்படலாம். அடுத்த நாள் காலையிலும் அதே நேரத்திற்கு வந்து தேடி பார்த்தேன். ஒரு ஐந்து நிமிடம் சாம்பார் வைக்குமிடத்தில் காத்திருந்தும் அவளை காண முடியவில்லை. மதியமும் அப்படியே ஓடியது.

சாயந்திரம் 4 மணி வாக்கில் அவளுக்கு நானே அழைத்தேன்.

“ஹலோ மீனாட்சி ஹியர்”

“ஹலோ. நான் கிருஷ்ணா பேசறேன். நேத்து காலைல சாம்பார் கொட்டினீங்களே. அவர் தான்”

ஒரு சில நோடிகள் தயக்கத்திற்கு பின் பேச்சு வந்தது.

“ஐ அம் சாரி. தெரியாம பண்ணிட்டேன். அங்க நிக்கறதுக்கு கொஞ்சம் பயமா இருந்துச்சு. அதான் வேகமா பையை கொடுத்துட்டு வந்துட்டேன்”

“நீங்க கொஞ்சம் ஃபிரியா இருந்தா ஃபுட் கோர்ட்டுக்கு வர முடியுமா?”

எதுவும் பதில் வரவில்லை.

“கவலைப்படாதீங்க. ஆள் எல்லாம் வெச்சி தூக்க சொல்ல மாட்டேன்”

“ஐயோ அதெல்லாம் இல்லை. இப்ப ஒரு மீட்டிங் இருக்கு. ஒரு அரை மணி நேரமாகும்”

“பரவாயில்லை. அரை மணி நேரத்துல வாங்க போதும்” சொல்லிவிட்டு வைத்து விட்டேன். சரியாக இருபத்தி ஐந்தாவது நிமிடத்தில் அங்கு இருந்தேன். அவள் எனக்கு முன்பே வந்துவிட்டாள் போலிருக்கிறது. அவளுடன் அவள் தோழியும் இருந்தாள். டீ வாங்கி கொண்டு அவர்கள் இருக்குமிடத்திற்கு சென்றேன். 

மெலிதாக புன்னகைத்தவாரே பேச ஆரம்பித்தாள்.

“தெரியாம பண்ணிட்டேன். சாரிங்க”

“சாமி. எத்தனை தடவை தான் இதையே சொல்வீங்க. நீங்க இத்தனை தடவை சொல்றதை பார்த்தா உங்க ஃபிரெண்ட்கிட்ட பெட் கட்டிட்டு கொட்டின மாதிரி இருக்கு”

“ஐயய்யோ. அப்படியெல்லாம் எதுவுமில்லை” இருவரும் ஒரே நேரத்தில் சொன்னார்கள்.

“சும்மா சொன்னேங்க. நீங்க கொட்டினது தெரியாம நடந்ததுனாலும், உடனே அதுக்கு பொறுப்பேத்து எனக்கு புது துணியை வாங்கிட்டு வந்து கொடுத்த பண்பு எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அதுக்கு நன்றி சொல்லிட்டு, அந்த துணிக்கு காசு கொடுத்துட்டு போகலாம்னு தான் கூப்பிட்டேன்” பையிலிருந்து ஆயிரத்தி அறுநூறு ரூபாயை எடுத்தேன்.

“வேண்டாங்க. அதெல்லாம் எதுக்கு. நான் செஞ்ச தப்புக்கு தான் அதை வாங்கி கொடுத்தேன்”

“சாம்பார் தானங்க கொட்டினீங்க. என்னுமோ ஆசிடா கொட்டினீங்க. அந்த பேண்டை துவைச்சா அந்த கறை போயிட போகுது. துணியே வீணா போகுற மாதிரி ஏதாவது பண்ணிருந்தா நீங்க சொல்றது சரி. நான் அதை மறுபடியும் பயன்படுத்த தானே போறேன். அதனால உங்களுக்கு குற்றவுணர்ச்சி வேண்டாம். வாங்கிக்கோங்க”

தயங்கியவாரே என் கையிலிருந்த காசை வாங்கி கொண்டாள். 

”சரிங்க நான் வரேன்” சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு கிளம்பிவிட்டேன்.

இரண்டு நாட்கள் சென்ற நிலையில் திடீரென்று ஒரு பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள சொல்லி மேனஜரிடமிருந்து மின்மடல் வந்திருந்தது. அதை முடித்துவிட்டு 7:15 பேருந்தில் கிளம்பினேன். ஜன்னலருகில் அமர்ந்திருந்தேன். திடீரென்று என்னை கடந்து சென்ற ஒரு உருவம், மீண்டும் முன்னால் வந்து என் அருகில் அமர்ந்தது. அது நீங்கள் எதிர்பார்த்தது போல் மீனாட்சி தான். தேடிய பொழுது எல்லாம் கண்ணில் படாமல், நினைக்காத பொழுது வந்து என் அருகில் அமர்கிறாள். இதை தான் விதி என்பார்கள்.

விதி பேச ஆரம்பித்தது.

“எப்படி இருக்கீங்க?”

“நீங்க சாம்பார் கொட்டினதுக்கப்பறம் கொஞ்சம் வாசனையா இருக்கேனு ஃபிரெண்ட்ஸ் எல்லாம் சொல்றாங்க”

சத்தம் போட்டு சிரித்தாள். குழந்தைகளும், பெண்களும் சிரிக்கும் போது நம் பார்வையை அதிலிருந்து விலக்குவது அரிது என்று தோன்றியது.

பிறகு ஒரு மணி நேரம் எங்களுடைய வரலாற்றை பேசிக்கொண்டு சென்றோம். முதன் முதலாக பெங்களூர் டிராஃபிக் ஜாமிற்கு நன்றி சென்னேன். எனக்கு அடுத்த நிறுத்தத்தில்தான் அவள் தன் தோழியுடன் PGயில் தங்கியிருக்கிறாள். அவள் தினமும் காலை அவள் 7:55 பேருந்தில் வருவதாக சொன்னாள். நான் வேலை இல்லாததால் 9 மணிக்கு வந்து கொண்டிருந்தேன். என்னால் 7:55க்கு வர முடியுமா என்று கேட்டாள். பார்க்கலாம் என்று சொல்லியிருக்கிறேன். 

சரியாக அலாரம் 7 மணிக்கு அடிக்க, 7:45க்கு பேருந்து நிலையத்திலிருந்தேன். 8 மணி பேருந்தில் ஏறினேன். இரண்டு பேர் இருக்கையில் மீனாவும் அவள் தோழியும் அமர்ந்திருந்தனர். நேத்து பேசியதில் மீனாட்சி ”மீனா”வாகியிருந்தாள். என்ன செய்வதென்று தெரியாமல் அவள் பின்னாலிருந்த இரண்டு பேர் இருக்கையில் ஜன்னலோரத்தில் அமர்ந்தேன். தோழியின் காதில் ஏதோ பேசி கொண்டிருந்தவள் எழுந்து மூன்று பேர் இருக்கையை நோக்கி சென்றாள். ஜன்னலருகில் அவள் தோழியை அமர செய்து, அவளருகில் மீனா உட்கார்ந்தாள். பக்கத்து இருக்கையை காட்டி அங்கே என்னை அமர சொன்னாள். சில நொடிகள் தயங்கிவிட்டு நான் அங்கே சென்று அமர்ந்தேன்.

“நேத்து ஏதோ பாக்கலாம்னு சொன்னீங்க. இன்னைக்கு சரியா 8 மணிக்கு வந்துட்டீங்க?” அவள் கேள்வியில் நக்கல் இருந்தது.

“8 மணிக்கு பாக்கலாம்னு சொன்னேன். நீ தப்பா புரிஞ்சிக்கிட்ட போல” சொல்லிவிட்டு அதே சிரிப்பை பதிலுக்கு நானும் கொடுத்தேன்.

”இப்படியே பேசிட்டு இருந்தீங்கனா இன்னைக்கு காப்பி அபிஷேகம் தான்”

“அது பிரச்சனையில்லை. இந்த தடவை ஆயிரத்தி அறுநூறு ரூபாய் காந்தி கணக்கு தான்”

“ஹான்ன்ன்... போன தடவை மாதிரி ஓடி போய் வாங்கிட்டு வருவேனு நினைச்சீங்களா? இந்த தடவை ஒரு கர்ச்சிப் கொடுத்துட்டு தொடைச்சிக்கோங்கனு சொல்லிட்டு போயிட்டே இருந்துடுவேன்”

“இதை ஒரு ஹாபியாவே வெச்சிருக்க போல. குட் கேர்ள்”

மறுபடியும் சத்தம் போட்டு சிரித்தாள்.

மூன்று பேரும் சேர்ந்து சாப்பிட்டோம். சாம்பார் எடுக்கும் போது நான் கொஞ்சம் நகர்வதை போல பாவனை பண்ண, ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து கொண்டது வேறு யாருக்கும் புரிந்திருக்காது. அதன் பிறகு மூன்று பேரும் சேர்ந்தே சுத்தி கொண்டிருந்தோம். சில நேரங்களில் மதியம் மூன்று, நான்கு மணிக்கு ஜூஸ் குடிக்க எனக்கு ஃபோன் செய்வாள். அது தவிர, டேக்ஸ் ரிட்டர்ன் பண்ண, ஏதாவது கொரியர் அனுப்ப\வாங்க செல்லும் போழுது ஃபோன் செய்து வர சொல்வாள். சில சமயம் நான் ஏதாவது வேலை பார்த்து கொண்டிக்கும் போது கூப்பிடுவாள். 

வேலை இருக்கு என்று சொன்னால், “ஐயோ இருக்கறது பெஞ்ச். இதுல இவர் வேலை பார்த்து கிழிக்கறாராம். இந்த பெஞ்சை தொடைக்கற வேலையை அரை மணி நேரம் கழிச்சி செஞ்சா தப்பில்லை. இப்ப ஒழுங்கு மரியாதையா வா” என்று மரியாதையோடு சொல்வாள். வேறு வழியில்லாமல் நானும் அவளுடன் செல்வேன்.

இரண்டு மாதம் பெஞ்சில் இருந்ததில் எனக்கு எந்த வருத்தமுமில்லாமல் பார்த்து கொண்டாள். ஒரு நாளைக்கு மூன்று, நான்கு மணி நேரம் நேரில் பேசி கொண்டது போக, மூன்று நான்கு மணி நேரம் அலைபேசியில் பேசி கொண்டோம். 

எல்லாம் நன்றாக சென்று கொண்டிருந்தது. வழக்கம் ஒரு நாள் ஃபோன் செய்து என்னை காபி டேக்கு வர சொன்னாள். என்னவென்று புரியாமல் நானும் சென்றேன். பார்த்தால் அங்கே ஒரு பெரிய பட்டாளமே நின்று கொண்டிருந்தது. அன்று அவள் பிறந்த நாள். அது எனக்கு தெரியாமல் போய்விட்டது. எவ்வளவோ பேசினேன். பிறந்த நாளை கேட்டு ஞாபகப்படுத்தி கொள்ள தவற விட்டுவிட்டேன். 

”நீ இல்லாம செலிபிரேட் பண்றதுக்கு ஒரு மாதிரி இருந்துச்சு. அதான் ஃபோன் பண்ணேன். நாளைக்கு சொல்லலாம்னு தான் பார்த்தேன். ஆனா நீ ரொம்ப ஃபீல் பண்ணுவ. பாவம்னு தான் கூப்பிட்டுட்டேன்”

என்ன சொல்வதென்று புரியாமல் மெலிதாக சிரித்தேன். “பிறந்த நாள் வாழ்த்துகள்”

“கிப்ட் எல்லாம் எதுவுமில்லையா? அதுக்கு தான் முக்கியமா கூப்பிட்டதே. பசங்க வாங்கி வெச்சிருக்குற கேக்கை கொடுத்துட்டு ஒரு கிப்ட் வாங்கிக்கலாம்னு பார்த்தா இப்படி வாயாலயே வாழ்த்து சொல்லிட்டு எஸ் ஆகிடலாம்னு பாக்கறியா?”

இப்படி ஒரு சூழ்நிலையில் எப்படி ரியாக்ட் செய்வதென்று எனக்கு தெரியவில்லை. அதுவும் இத்தனை பேர் இருக்கும் கூட்டத்தில். இரவு அலைபேசியில் பேசும் போது தான் என்னால் நானாக பேச முடிந்தது.

“மீனா, ஒரு வார்த்தை நேத்தே சொல்லியிருக்கலாம் இல்லை”

“சொல்லியிருந்தா என்ன பண்ணிருப்ப?”

“என்ன பண்றன்னு முக்கியமில்லை. இப்படி கூட்டத்துல தனி ஆளா வந்து அசிங்கமா நின்னுருக்க மாட்டேனில்லை”

“இப்ப அது தான் வருத்தமா?”

“இல்லை இல்லை. நேத்து அவ்வளவு நேரம் பேசிக்கிட்டு இருந்தோம். அப்படியே பன்னெண்டு மணிக்கு உனக்கு வாழ்த்து சொல்லிருப்பேன் இல்லை. அதான்”

“அதுக்கெதுக்கு கவலைப்படற. ஃபிரியா விடு”

“ஹ்ம்ம்ம்”

அப்படியே ஒரு மாதம் ஓடியது. காலையில் எட்டு மணி பேருந்தில் இருவரும் காணவில்லை. அவளுடைய அலைப்பேசிக்கு அழைத்தேன். ஒன்பது மணி வண்டியில் வருவதாக சொன்னாள். அவளுக்காக சாப்பிடாமல் காத்திருந்தேன். அவள் சாப்பிட வரவில்லை. பத்தரைக்கு எக்ஸ்டென்ஷனிற்கு அழைத்தாள். காபி டேக்கு வர சொன்னாள். சென்றேன்.

“என்னாச்சு. ஏன் லேட்? சாப்பிட கூட வரலை”

“ஒரு சின்ன பிரச்சனை. அதான்.”

“சொல்லு”

“லதா இருக்கா இல்லை”

“ஆமா. அவளுக்கு என்ன?”

“அவளுக்கு வீட்ல மாப்பிள்ளை பாக்கறாங்க. இந்த வாரம் பொண்ணு பாக்க வராங்களாம்”

“அதுக்கு என்ன? உன்னையும் மணப்பெண் தோழியா வர சொல்றாளா?”

“இல்லை”

“சரி அப்பறம் என்ன?”

“உன்கிட்ட எப்படி சொல்றதுனு தெரியல. ரொம்ப நாளா சொல்லனும்னு முயற்சி செய்யறேன். என்னால சொல்ல முடியலை. இன்னைக்கு சொல்லியே ஆகனும். லதா உன்னை லவ் பண்றா. உன்னை தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப்படறா”

“வாட்?”

“நிஜமாத்தான் சொல்றேன்”

“என்ன இப்படி லூசு மாதிரி பேசற? என்னை பொறுத்த வரைக்கும் லதாங்கற கேரக்டரையே இது வரைக்கும் நான் உன்னோட ஃபிரண்டாதான் ரிலேட் பண்ணிட்டு இருக்கேன். அவள்ட நான் பேசன வார்த்தைகளை விரல் விட்டு எண்ணிடலாம்”

“உன்கிட்ட அதிகமா பேசினா தான் உனக்கு பிடிக்குமா? நீ தான் லூசு மாதிரி பேசற”

“ப்ளீஸ் டோண்ட் இரிடேட் மீ மீனா. ஐ நெவர் ஹேட் எனி ஃபீலிங்ஸ் ஃபார் ஹெர். ஷீ இஸ் நாட் மை டைப். புரிஞ்சிக்கோ. நீயே இப்படி என்கிட்ட இந்த மாதிரி கேக்கலாமா?”

“நான் அவ ஃபிரெண்ட். நான் கேக்கறதுல என்ன தப்பு?”

“பிகாஸ் ஐ அம் இன் லவ் வித் யூ”

அவள் முகத்தில் பெரும் குழப்பத்திற்கான ரேகைகள் தெரிந்தன. இரண்டு நிமிடம் அந்த இடத்தில் மௌனம் அதன் ஆட்சியை செலுத்தியது. 

நான் பேச ஆரம்பித்தேன். ”இங்க பாரு மீனா. நான் ரொம்ப ஃபிராங்காவே சொல்றனே. எனக்கு அந்த பொண்ணு மேல அப்படி ஒரு ஐடியாவே இல்லை. என் மனசுல இத்தனை நாள் லதாங்கற கேரக்டரே மீனாவின் தோழி அப்படி தான் பதிவாகியிருந்தது. இப்ப திடீர்னு நீ வந்து இப்படி சொன்னா? ஐ காண்ட் இமேஜின் இட்”

“இங்க பாரு கிருஷ்ணா. எனக்கும் இத்தனை நாள் நீ லதாவோட ஆளாதான் தெரிஞ்ச. முதல் நாள் நான் உன் மேல சாம்பார் கொட்டின உடனே என்னை வேகமா கடைக்கு கூப்பிட்டு போனது லதா தான். அப்பறம் அன்னைக்கு நீ பஸ்ல வந்தப்ப, மூணு பேர் சீட்டுக்கு மாறனது அவ சொல்லி தான். உன்னை என் பர்த் டே பார்ட்டிக்கு கூட அவ தான் கூப்பிட சொன்னா. சோ தட் ஷீ கேன் ஷோ யூ டூ ஆல் அவர் ஃபிரெண்ட்ஸ்”

“அப்ப நீ தினமும் என் கூட பேசினது பழகினது எல்லாம் அவளுக்காக தானா?”

“அவளுக்காகவும் தான். உன்கிட்ட அவ காதலை சொல்றதுக்கு பயம். என்னை சொல்ல சொன்னா. நானும் தினமும் உன்கிட்ட பேசி எப்படியாவது சொல்லனும்னு பார்த்தேன். சொல்ல முடியலை”

“மீனா, என்னால லதாவை உன் தோழியா தான் பார்க்க முடியும். வேற எப்படியும் பார்க்க முடியாது. ஐ அம் லீவிங்”

“கிருஷ்ணா. ப்ளீஸ் புரிஞ்சிக்கோ”

சரியாக இரண்டாவது மாதம் கம்பெனி மாறி இருந்தேன். கம்பெனி மாறுவது மேனஜர்களால் மட்டுமில்லை. இதை போல வேறு சில காரணங்களும் இருக்கும் என்று புரிந்து கொண்டேன்.

என்றாவது மீனாவிடமிருந்து “லதாவிற்கு நல்லபடியாக திருமணம் முடிந்துவிட்டது. நான் உன் காதலை ஏற்று கொள்கிறேன்” என்று மின்மடலோ, அலைபேசியில் அழைப்போ வரும் என்று காத்து கொண்டிருக்கிறேன். இப்ப கூட மின்மடல் வந்திருக்கிறதா என்று பார்க்க தான் வேகமாக கடவு சொல்லை அடித்து கொண்டிருக்கிறேன்.

Monday, February 23, 2009

நான் கடவுள்! சில பதில்கள், பல கேள்விகள்

நேற்று ஒரு வழியாக நான் கடவுள் பார்த்தாகிவிட்டது. 

பல விமர்சனங்களுக்கிடையே எனக்கு படம் பிடித்திருந்தது. வலைப்பதிவில் பல கேள்விகளை முன் வைத்திருந்தனர் நம் நண்பர்கள். அந்த கேள்விகள் மனதில் பதிந்திருந்து படம் பார்த்ததால் சில எண்ணங்கள் உடனே என் மனதில் பட்டன. அதை பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு. இது விமர்சனமல்ல. எனக்கு விமர்சனம் பண்ணவும் தெரியாது. ஒரு படத்தில் எது பிடித்திருந்தது எது மனதை நெருடியது என்ற மட்டுமே சொல்ல தெரியும்.

முதல் கேள்வி : கண் பார்வையற்றவருக்கு அழகில்லாதவரை திருமணம் செய்து வைத்தால் என்ன தவறு?

என் மனதில் தோன்றிய பதில். இந்த உலகத்தை நாமே பல முறை நம் பெற்றவர்களும், நண்பர்களும், சுற்றி இருப்பவர்களும் போட்டுவிடும் கண்ணாடியால் தானே பார்க்கிறோம். நமக்கு ஒரு சட்டை பிடித்து அதை அணிந்து வருகிறோம் என்று வைத்து கொள்ளுங்கள். அதை பார்த்து ஒரு பத்து பேர் ”என்ன பாலாஜி, இந்த மாதிரி டிசைன்ல சட்டை போட்டிருக்க. உனக்கு இது எடுப்பாக இல்லை” என்று சொன்னால் அடுத்த முறை அந்த சட்டை அணிய எத்தனை முறை யோசிப்போம். அது போலவே அம்சவல்லி உலகை தன்னை சுற்றி இருக்கும் தன் நண்பர்கள் மூலமே அறிகிறாள். அவளை என்ன செய்ய போகிறார்கள் என்பதே அவளுக்கு சொல்லப்படவில்லை. அவளுக்கு ஏதோ பெரிய தீங்க ஏற்பட போகிறது என்பது மட்டுமே அவளுக்கு தெரியப்படுத்துகிறார்கள். 

அவளுக்கு தெரியப்படுத்துபவர்களும் அந்த விஷயத்தை அவர்கள் மனதில் மிகவும் கொடுமையானவன் என்று பதிந்த நாயர் மூலம் தெரிந்து கொள்வதாலே அப்படி ஒரு முடிவுக்கு வருகின்றனர். யாருக்கும் சிந்திக்க அவகாசமில்லை. அப்படி சிந்தித்து முடிவெடுக்கவும் அவர்களுக்கு உரிமையில்லை. அவர்கள் மேல் எதுவும் தப்பிருப்பதாகவும் எனக்கு தோன்றவில்லை. அவர்களால் அருவருப்பாக பார்க்கப்படும் அந்த நபரும் குணத்தால் நல்லவராகவே எனக்கு தெரிகிறார். நல்ல முறையில், அவளுக்கு வேண்டியவர்கள் சொல்லியிருந்தால் அம்சவல்லி அவரை மனந்திருக்கலாம்.

மாற்று திறன் கொண்டவர்களுக்கு\ வாழ முடியாதவர்களுக்கு மரணம் தான் வரமா? அவளுக்கு நல்ல வாழ்க்கையை கொடுத்திருக்க முடியாதா?

இங்கே கடவுள்\கடவுளாக தன்னை நினைத்து கொண்டிருக்கும் ருத்ரன் தானாக வரம் அளிக்கவில்லை. அப்படி அளித்திருந்தால் அங்கே எத்தனை பேருக்கு வரம் அளித்திருக்க வேண்டும். அது அம்சவல்லியாக கேட்ட வரம். அது ருத்ரனுக்கு நியாயமாக பட்டது. அதனால் அதை அவன் அளித்தான். அது ருத்ரனுக்கு மட்டும் தான் நியாயமாக பட்டதா? அப்படி இருந்தால் அவன் அம்சவல்லியை எரித்துவிட்டு வரும் பொழுது அங்கே நின்றிருப்பவர்கள் யாரும் கதறி அழுதிருப்பார்கள். அங்கே அவளை நேசித்தவர்களுக்கும் அது வரமாகவே பட்டது. 

திடீரென்று தாண்டவன் வருவதும்\ தனியாக சண்டை போடுவதும் படத்தில் ஒட்டவில்லை.

இதுல எனக்கு எதுவும் பெருசா ஒட்டாத மாதிரி தெரியல. நீதிமன்றத்தில் இருந்து ருத்ரன் வருவதை தாண்டவன் பார்க்கிறார். நீதிமன்றத்திற்கெதிரில் சண்டை போடவோ, தாக்கவோ முடியாது. ருத்ரன் அங்கிருந்து நேராக செல்லுமிடம் அந்த குன்று தான். அதனால் அதனருகில் சண்டை. அங்கேயும் தாண்டவன் ஏன் தனியாக வந்து சண்டை போடுகிறான். தாண்டவனுடன் இருப்பவர்கள் யாரும் மற்றவர்களை பெரிதும் அடிப்பதோ, காயப்படுத்துவதாகவோ காட்டப்படவில்லை. அது முழுக்க முழுக்க தாண்டவனால் நடத்தப்படுகிறது. தாண்டவனும் நல்ல உடல் வளம் கொண்டவன்தான். அதனால் தனியாக சண்டை போடுவது வித்தியாசமாக தெரியவில்லை.

எனக்கு மனதில் தோன்றிய சில கேள்விகள்\ நெருடல்கள்.

1. ருத்ரன் காசியிலிருந்து புறப்படும் போது உனக்கு எதுவும் உறவுகளில்லை. நீ அனைத்தையும் உதறிவிட்டு வா என்று சொல்லி அனுப்புகிறார். அவன் அதை அவன் தாயிடம் தூமைனா என்னனு தெரியுமில்லை என்ற காட்சியிலே முடித்துவிடுகிறான். அதற்கு பிறகு அவன் அவர்களை சந்திக்கவில்லை. அதன் பிறகு அங்கிருந்து கிளம்பாமல், இரண்டு தண்டனைகளையும், ஒரு வரத்தையும் கொடுக்கும் வரை அங்கு தங்கியிருக்க வேண்டிய அவசியமென்ன? அதற்கு பிறகு அங்கிருந்து காசி கிளம்ப வேண்டிய காரணமென்ன? அவன் காசியிலிருந்த வந்த காரணத்தில் இதுவும் ஒன்றா?

2. அம்சவல்லி பாடும் பாடல்களுக்கு அந்த பின்னனி இசை அவசியமா?

3. நீதிமன்ற காட்சியில் அவரை குற்றவாளியாக நீதிபதி ஏற்காமல் காவல் துறை ஆய்வாளரை கேள்வி கேட்குமிடம் சரியாக புரியவில்லை.

4. இவன் தான் என் பிள்ளை என்று ருத்ரனை அந்த தந்தை கண்டுபிடிப்பது கொஞ்சம் நெருடினாலும், ருத்ரன் தான் அவர்களின் பிள்ளையா? இல்லை ஒரு தாயின் குறையை போக்க அவன் குருஜி அனுப்பி வைக்கிறாரா? ருத்ரன் வீட்டிற்குள் நுழைந்தவுடன் ஒரு படத்தை பார்த்து நிற்பதும், பிறகு அவன் தந்தையிடம் இவனை நீதான் கொன்னயா?னு கேட்குமிடம் அவன் சின்ன வயதில் நம்மை காசியில் விட்டு சென்றார்கள் என்று கோபத்தில் கேட்டதா இல்லை மகனை காசியில் கொண்டு வந்து விட்டு சென்றவன் எதை வேண்டுமானுலும் செய்வான் என்று கேட்பதா?

5. தாண்டவனின் கையாள் முருகனிடம் வேலை செய்வோர், முருகன் கோவிலில் பிச்சை எடுப்பது எதை குறிப்பதற்காக? 

இன்னும் நிறைய கேள்விகள் இருக்கிறது... இன்னும் ஒரு நான்கைந்து முறை பார்த்துவிட்டு கேட்கிறேன்.

Thursday, February 19, 2009

H-4

"ஆன் சைட்ல இருந்தா என்னுமோ வானத்துல இருந்து குதிச்ச மாதிரி நினைச்சிக்கிறானுங்க. இவனுங்க மட்டும் தப்பே செய்யாத மாதிரி" பொருமி கொண்டிருந்தாள் சங்கீதா.

"ஏன் சங்கி, என்னாச்சி?"

"நேத்து அனுப்பன டிஃபக்ட் லிஸ்ட்ல ஒண்ணு மிஸ் பண்ணிட்டேன். அதுக்கு என்னனா போன் பண்ணி கத்தறான் அந்த கார்த்தி. அவன் இதுவரைக்கும் எதுவுமே மிஸ் பண்ணாத மாதிரி. போன வாரம் கூட அவன் அனுப்பன மெயில்ல ஒரு டிஃபக்ட் ஸ்டேடஸ் சொல்லாம விட்டுட்டான். நான் தான் அது மறுபடியும் டெஸ்ட் பண்ணி ஸ்டேடஸ் தெரிஞ்சிக்கிட்டேன். நான் என்ன இப்படியா சத்தம் போட்டேன்" படபடப்பாக சொல்லிக்கொண்டிருந்தாள் சங்கீதா.

"கூல் சங்கி. அவன் அங்க க்ளைண்ட்கிட்ட ஏதாவது திட்டு வாங்கியிருப்பான். அதான் கொஞ்சம் டென்ஷனாகியிருப்பான். நீ ஃபீல் பண்ணாத. அவன்கிட்ட நான் பேசிக்கிறேன்" அவளை சமாதானப்படுத்தினான் ஆனந்த்.

ஆனந்த் ஆன்சைட்டிலிருந்து வந்து ஒரு மாதமாகிறது. சங்கீதா இரண்டு வருடமாக ஆறு ப்ராஜக்ட்கள் மாறி இந்த ப்ராஜக்ட்டுக்கு வந்து மூன்று மாதங்களாகிறது. அவளுக்கு போன மாதம் தான் H1 விசா கிடைத்தது. எந்த ப்ராஜக்டிற்கு பறக்கலாம் என்று கனவு கண்டு கொண்டிருந்தாள்.

"ஏன் ஆனந்த். அவன் போய் ஒன்றரை வருஷமாச்சி. நீ போய் ஆறு மாசம்தான் ஆச்சு. அவன் தானே நியாயமா வந்திருக்கனும். அப்பறம் ஏன் நீ வந்த? அவன்கிட்ட சண்டை போட்டிருக்கலாமே"

"அவன் ரிசோர்ஸ் குறைக்க போறாங்கனு தெரிஞ்சவுடனே, மேனஜருக்கு போன் பண்ணி, இந்தியா அனுப்பறதா இருந்தா நான் இங்கயே வேற கம்பெனி மாறிடுவேனு சொன்னான். அவரும் அதுக்கு பயந்து என்னை அனுப்பிட்டாரு"

"சீப் ஃபெலோ. நீயும் அதையே சொல்ல வேண்டியது தானே?"

"அவனுக்கு க்ளைண்ட் கிட்டயும் நல்ல பேர் இருக்கு. அதான் நான் எதுவும் பண்ண முடியல. மோர் ஓவர் என்னை 3 மாசத்துல வேற ப்ராஜக்ட்க்கு அனுப்பறனு சொல்லிதான் அனுப்பனாரு. எப்படியும் அடுத்த மாசம் ட்ரேவல் பண்ணுவேன்"

அவளுக்கு ஏனோ கார்த்திக் மேல் வெறுப்பு அதிகமாகி கொண்டே போனது.

திடீரென்று ஆனந்திற்கு டைபாய்ட் வந்து அவன் சொந்த ஊருக்கு சென்றுவிட்டான். சரியாக அந்த சமயத்தில் மேனஜர் சங்கீதாவை அழைத்தார்.

"சங்கீதா, நம்ம ப்ராஜக்ட்லயே புது மாட்யூலை கவனிக்க இன்னோரு ஆள் ஆன்சைட்ல இருந்தா நல்லா இருக்கும்னு க்ளைண்ட் ஃபீல் பண்றாங்க. இந்த வீக் எண்ட் நீ ட்ரேவல் பண்ண வேண்டியிருக்கும். ரெடியாயிக்கோ" தீர்க்கமாக சொல்லி முடித்தார்

"இன்னும் நாலு நாள்தான் இருக்கு. அதுக்குள்ள எப்படி ரெடியாக முடியும்? அடுத்த வாரம் போகவா?" கவலையாக கேட்டாள் சங்கீதா.

"அடுத்த வாரம் போற மாதிரி இருந்தா ஆனந்த்தான் ட்ராவல் பண்ணியிருப்பான். அர்ஜெண்ட்னு தான் உன்னை கிளம்ப சொல்றேன். ஈவனிங் சீக்கிரம் கிளம்பி போயிக்கோ. வெள்ளிக்கிழமை லீப் போட்டுக்கோ. திங்கள் இல்லைனா செவ்வாய்க்கிழமை நீ அங்க ரிப்போர்ட் பண்ணனும். புரியுதா?" கண்டிப்புடன் சொன்னார் மேனஜர்.

தயங்கியவாறே அங்கிருந்து சென்றாள் சங்கீதா. அந்த நான்கு நாட்களிலும் வேகமாக தயாரானாள் சங்கீதா. அவளுக்கு Air Franceல் டிக்கட் புக் செய்திருந்தார்கள். சென்னையிலிருந்து பாரிஸ் அங்கிருந்து நியூ ஜெர்ஸி அங்கிருந்து மேன்சிஸ்டர். முதல் முறையாக ஏரோப்ளேனில் செல்வதில் ஒரு வித மகிழ்ச்சி இருந்தாலும் இத்தனை இடங்களில் மாறி செல்வதாலும், தனி ஆளாக செல்வதாலும் ஒரு வித பயமே இருந்தது.

ஒரு வித பயத்துடன் கார்த்திக்கிற்கு போன் செய்தாள்.

"ஹலோ, கார்த்திக் ஹியர்"

"கார்த்திக், நான் சங்கீதா"

"சொல்லுங்க. எப்ப வறீங்க?"

"நான் சண்டே ராத்திரி ஏழு மணிக்கு வறேன்"

"ஹோட்டல் புக் பண்ணியாச்சா?"

"ஹிம்... ரெண்டு நாளைக்கு பண்ணிருக்கேன்"

"குட். அதுக்குள்ள இங்க அப்பார்ட்மெண்ட் பார்த்துடலாம்."

"ஹிம்... ஏர்போர்ட்ல இருந்து ஹோட்டலுக்கு எப்படி வறதுனுதான் புரியல"

"ஏர்போர்ட்ல டேக்ஸி இருக்கும். எதுக்கும் கைல டைரக்ஷன்ஸ் கொண்டு வாங்க. யாஹூ மேப்ல டைரக்ஷன்ஸ் பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க. அப்படியே திங்கக்கிழமை காலைல டேக்ஸி பிடிச்சி ஆபிஸ் வந்து எனக்கு போன் பண்ணுங்க. சரியா?"

அவனை ஏற்போர்ட்டிற்கு வர சொல்லலாம் என்று அவள் நினைத்திருந்தாள். அவனுடைய இந்த பேச்சால் அவன் மேலிருந்த வெறுப்பு இன்னும் கூடியது.

"சரிங்க. திங்கக்கிழமை பார்க்கலாம்" சொல்லிவிட்டு போனை வைத்து விட்டாள்.

பெற்றோர்கள் வழியனுப்ப ஒரு வழியாக ஃபிளைட் ஏறினாள். மனதிற்குள் ஒரு பயம் இருந்து கொண்டே இருந்தது. நல்ல படியாக நியூ ஜெர்ஸி வந்து சேர்ந்தாள். இமிக்ரேஷன் செக் எல்லாம் நல்லபடியாக முடிந்தது. ஆனால் மென்சிஸ்டர் செல்லும் விமானம் தாமதமாகிக்கொண்டே போனது. 5 மணிக்கு கிளம்ப வேண்டிய விமானம் பதினோரு மணிக்குத்தான் கிளம்பும் என்று அறிவிப்பு பலகையில் எழுதியிருந்ததை பார்த்ததும் அவளுக்கு மயக்கமே வந்துவிட்டது...

கார்த்திக்கிற்கு போன் செய்யலாமா என்று யோசித்தாள். அவனுக்கு போன் செய்வதைவிட தற்கொலை செய்வதே மேல் என்று அமைதியாக இருந்துவிட்டாள். ஆனால் உள்ளக்குள் ஒரு வித பயம் இருந்து கொண்டேயிருந்தது. அவனை நன்றாக சபித்தாள். அவன் நிச்சயம் ஒரு சைக்கோவாத்தான் இருக்க வேண்டும் என்கிற முடிவுக்கு வந்தாள். அங்கே அவள் அமர்ந்திருந்த 6 மணி நேரமும் அவனை திட்டிக்கொண்டேயிருந்தாள்.

மேன்சிஸ்டரில் அவள் இறங்கும் போது இரவு ஒரு மணி ஆகியிருந்தது. பேக்கேஜிக்காக காத்திருந்தாள். அவள் பின்னாலிருந்து யாரோ அவளை அழைப்பதை போலிருந்தது.

"மிஸ்.சங்கீதா?"

திரும்பி பார்த்தாள்.

"யெஸ்"

"ஐ அம் கார்த்திக்"

அவள் கண்கள் ஆச்சர்யத்தால் விரிந்ததை பார்த்தான். அவள் முகத்திலிருந்தே அவள் மனத்தில் நினைப்பதை புரிந்து கொள்ள முடியும் என்று அவனுக்கு தோன்றியது.

"நீங்க எப்படி இங்க வந்தீங்க?"

"உங்க ஐட்டினரி என்கிட்ட இருந்துச்சி. சரி தனியா வரிங்களேனு செக் பண்ணீட்டே இருந்தேன். ப்ளைட் டிலேனு தெரிஞ்சிது. இராத்திரியாச்சே கஷ்டப்படுவீங்களேனு வந்துட்டேன்"

"ரொம்ப தேங்க்ஸ்"

"நோ ப்ராப்ளம்"

அவள் பேக்கேஜ் சரியாக வந்து சேர்ந்தது. அதை எடுக்க அவளுக்கு உதவினான். ஒரு வழியாக அவள் பேக்கேஜை காரில் போட்டு வண்டியை ஸ்டார்ட் செய்தான்.

"ட்ரெவல் எல்லாம் எப்படி இருந்துச்சி?"

"நல்லா இருந்துச்சு. ஆனா 6 மணி நேர டிலே தான் கொடுமை"

"நீங்க அழகா பாஸ்டனே வந்திருக்கலாம். ஒரு முப்பது நிமிஷம் ட்ரேவல் தான் அதிகமாயிருக்கும்"

"ஆனந்த் தான் எனக்கு இந்த ஏர்போர்ட் சொன்னான்"

"ஒரே ஸ்டேட்னு சொல்லியிருக்கலாம். சரி ஃபீல் பண்ணாதீங்க. நாளைக்கு ரெஸ்ட் எடுத்துட்டு செவ்வாய்க்கிழமை வந்தா போதும்"

"இல்லைங்க. செவ்வாய்க்கிழமை வேண்டாம். நாளைக்கே வந்துடறேன். அப்பறம் நான் தான் சங்கீதானு எப்படி கண்டுபிடிச்சீங்க?"

"ப்ராஜக்ட் பார்ட்டி டீம் போட்டோவை ஆனந்த் அனுப்பி வைச்சான். அதுல இருந்து தெரிஞ்சிக்கிட்டேன்."

"பரவாயில்லை. நானும் உங்க போட்டோவை பார்த்திருக்கேன். நீங்க டூர் போன போட்டோவெல்லாம் ஆனந்த் காண்பிச்சிருக்காரு"

30 நிமிட பயணத்தில் அவள் ஹோட்டல் வந்தது. பேட்டியை கொண்டு போய் ரூமில் வைத்துவிட்டு வந்தான்.

"நாளைக்கு காலைல கண்டிப்பா ஆபிஸ் வரீங்களா?"

"ஆமாங்க. செவ்வாய்க்கிழமைல எதுவும் ஆரம்பிக்க கூடாதுனு எங்க அம்மா சொல்லுவாங்க. நான் நாளைக்கே வரேன்".

அவள் சொல்லியதை கேட்டு அவன் கண்கள் கலங்கியது.

"சரி நாளைக்கு எட்டு மணிக்கு ரெடியாகிடுங்க. நான் வரேன்" சொல்லிவிட்டு வேகமாக அங்கிருந்து நகர்ந்தான்.

அவளுக்கு அவன் நடத்தை விநோதமாக இருந்தது. அடுத்த நாள் சரியாக எட்டு மணிக்கெல்லாம் வந்து அவளை ஆலுவலகத்திற்கு அழைத்து சென்றான். இரண்டு நாட்களில் அவளுக்கு தங்குவதற்கு ஒரு வீடும் ஏற்பாடு செய்து கொடுத்து அவளுக்கு தேவையானதை வாங்க உதவினான். அதை போலவே வேலையிலும் அவளுக்கு தேவையான உதவிகளை செய்தான்.

இந்தியாவிலிருந்த போது அவளுக்கு அவன் மேலிருந்த எண்ணம் லேசாக மாற துவங்கியது. ஒரு வாரம் சென்ற நிலையில்

"ஹேய் என்னாச்சி ஏன் அழுவற?"

"ஒண்ணுமில்லை" சொல்லிக்கொண்டே கண்களை துடைத்து கொண்டிருந்தாள்.

"என்கிட்ட சொல்லனும்னு தோனிச்சினா சொல்லு. இல்லை லீவ் போட்டு வீட்ல போய் இரு. ஆபிஸ்ல உக்கார்ந்து அழுதா எல்லாரும் ஒரு மாதிரி பார்ப்பாங்க"

"சரி. நான் வீட்டுக்கு கிளம்பறேன். என்னால இங்க உட்கார்ந்திருக்க முடியாது"

"நான் வேணா வந்துவிடட்டுமா?"

"இல்லை நான் டேக்ஸி பிடிச்சி போயிடறேன்"

"இல்லை.. நான் வந்து விட்டுட்டு வறேன். வா"

அவளிடம் சொல்லிவிட்டு க்ளைண்ட் மேனஜரிடம் சென்று சங்கீதாவிற்கு உடல் நிலை சரியில்லை அதனால் வீட்டில் விட போகிறேன் என்று சொல்லிவிட்டு அவளை அழைத்து சென்றான்.

காரில் அழுது கொண்டே வந்தாள்.

"சங்கீதா. இங்க பாரு. இப்படி நீ அழுதுக்கிட்டே வந்தா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. ப்ளீஸ் என்னனு எனக்கு சொல்லு"

"எங்க அப்பாக்கு உடம்பு சரியில்லையாம். ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணியிருக்காங்க. நான் இந்தியா போகனும்"

"என்ன இந்தியா போகனுமா? உடம்புக்கு என்னனு சொல்லு. பார்த்துட்டு அப்பறம் போகலாம்"

"ஹார்ட்ல ஏதோ பிரச்சனையாம். உடனே ஆப்பரேஷன் பண்ணனும்னு சொல்றாங்க. அதனால நான் உடனே ஊருக்கு போகனும் கார்த்திக். நான் எங்க வீட்டுக்கு ஒரே பொண்ணு"

"சங்கீதா. உங்க அப்ப இப்ப எந்த ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணியிருக்காங்க"

"கொயம்பத்தூர் ராமகிருஷ்ணா ஹாஸ்பிட்டல்"

"அட்மிட் பண்ணிட்டாங்களா?"

"பண்ணியாச்சி. எங்க சித்தப்பாதான் கூட இருந்து எல்லாம் பார்த்துக்கறாரு. எப்படியும் செலவு 3-4 லட்சமாவது ஆகுமாம். நான் போய் எங்க காட்ட விக்க கையெழுத்து போடனும். நான் அங்க இருந்தாதான் அம்மாக்கும் சரியா இருக்கும். நான் இன்னைக்கே புறப்பட முடியுமா?"

"ஒரு நிமிஷம் இரு சங்கீதா"

அவள் அப்பார்ட்மெண்டில் காரை பார்க் செய்தான் கார்த்திக்.

அவன் செல்போனை எடுத்து இந்தியாவிலிருக்கும் அவன் மாமாவிற்கு போன் செய்தான்

"ஹலோ மாமா, நான் கார்த்தி பேசறேன்"

மறுமுனையிலிருந்து பேசியவரின் குரலும் அவள் காதில் விழுந்தது

"கார்த்திக், என்ன இந்நேரத்தில போன் "

"மாமா, நீ எங்க எங்க இருக்கீங்க?"

"நான் இப்ப தான் வீட்டுக்கு வந்துட்டு இருக்கேன்"

"மாமா ராமகிருஷ்ணால டாக்டர்ஸ் யாராவது தெரியுமா?"

"ஏன் என்னாச்சி? நானே அங்க பீடியாட்ரிக்ஸ்க்கு சர்வீஸ் பண்ணிட்டு தான் இருக்கேன்"

"இங்க என் ஃபிரெண்டோட அப்பாவுக்கு ஹார்ட்ல ப்ராப்ளம்னு அங்க சேர்த்திருக்காங்க. நீங்க உடனே பார்த்து ஸ்டேடஸ் சொல்ல முடியுமா?"

"ரொம்ப அர்ஜெண்டாப்பா? நான் வீட்டுக்கு பக்கத்துல போயிட்டேன்"

"மாமா, ரொம்ப அர்ஜெண்ட். அதுக்கேத்தா மாதிரி தான் அவுங்களுக்கு இங்க டிக்கெட் புக் பண்ணனும். நீங்க நேர்ல போய் பார்த்து சொன்னா நல்லா இருக்கும்"

"சரி டீட்டய்ல்ஸ் சொல்லுப்பா. நான் பார்த்து சொல்றேன்"

அவன் அவரை பற்றி எல்லாவற்றையும் சொல்ல அவர் குறித்து கொண்டார்.

"இன்னும் 30 நிமிஷம் கழிச்சி பண்ணுப்பா. நான் சொல்றேன். "

"சரி மாமா"

போனை வைத்தான்.

"சங்கீதா டோண்ட் வொரி. அந்த மாமா ரொம்ப நல்ல டைப். சீக்கிரமா பார்த்து எல்லாத்தையும் சொல்லுவாரு. இன்னைக்கு நீ கிளம்பனும்னா கஷ்டம். என்ன ஏதுனு விசாரிச்சி அதுக்கேத்த மாதிரி ப்ளான் பண்ணலாம். நீ அழாம இரு. அதுக்குள்ள ஒரு காபி குடிச்சிட்டு வந்துடலாம்" சொல்லிவிட்டு வண்டியை ஸ்டார்பக்ஸிற்கு விட்டான்.

அவள் எதுவும் பேசாமல் அழுது கொண்டே வந்தாள். சரியாக அரை மணி நேரத்திற்கு பிறகு அவளை காரில் அமர வைத்துவிட்டு வெளியே வந்து மாமாவிற்கு போன் செய்தான்.

"மாமா, கார்த்தி பேசறேன். என்ன ஸ்டேடஸ்"

" என் ஃபிரெண்ட் ராமமூர்த்தி தான் இந்த கேஸ் பார்த்துக்கறான். பெரிய ப்ராப்ளம் இல்லை. அப்பரேஷன் பண்ணா சரியாகிடும். எனக்கு தெரிஞ்சி லாஸ்ட் ஒன் இயர்ல எதுவுமே ஃபெயிலரானதே இல்லை. சோ அவுங்களை வருத்தப்பட வேண்டாம்னு சொல்லு. ஆப்பரேஷன் நாளைக்கு காலைல வெச்சிருக்காங்க. நான் பார்த்துக்கறேன். எனி திங் எல்ஸ்"

"மாமா, அவுங்க கைல காசு எவ்வளவு இருக்குனு தெரியல. சோ நான் உங்ககிட்ட இடம் வாங்க கொடுத்த காசை எடுத்து ஆப்பரேஷனுக்கு கொடுங்க. நான் மிச்சத்தை உங்களுக்கு காலைல பேசறேன்" சொல்லிவிட்டு போனை வைத்தான்.

காருக்குள் வந்து அவளிடம் பேச ஆரம்பித்தான்.

"சங்கீதா, உங்க அப்பாக்கு எந்த ப்ராப்ளமும் இல்லை. நாளைக்கு காலைல ஆப்பரேஷனாம். லாஸ்ட் ஒன் இயர்ல அந்த ஆப்பரேஷன் சக்ஸஸ் ரேட் 100%. சோ யூ டோண்ட் நீட் டு வொரி. எங்க மாமா எல்லாத்தையும் பார்த்துக்கறனு சொல்லிட்டாரு. ஆப்பரேஷன் பண்ண போறது கூட அவர் ஃபிரெண்ட் தான்"

"ஹிம்ம்ம். இருந்தாலும் நான் ஊருக்கு போகனும்னு பார்க்கிறேன். எங்க அப்பாக்கு உடம்பு சரியில்லாதப்ப நான் அவர் கூட இருக்கறது தான் சரி"

"சங்கீதா, நீ இப்ப ஊருக்கு போனா திரும்ப இங்க வர சான்ஸ் கிடைக்குமானு சொல்ல முடியாது. மோர் ஓவர் பணம் பத்தியும் நீ பயப்பட வேண்டாம். எங்க மாமா கொடுத்துடறேனு சொல்லிட்டாரு. என் காசு அவர்ட நிறைய இருக்கு. நீ எனக்கு பொறுமையா கொடுத்தா போதும். இப்ப வீட்ல இருந்தா நீ கண்டதையும் நினைப்ப. ஆபிஸ் போகலாம். நாளைக்கு ஆப்பரேஷன் முடிஞ்சதுக்கப்பறம் அம்மாட்ட பேசி முடிவெடு. இப்ப வா போகலாம்" சொல்லிவிட்டு அவளை ஆபிஸிற்கு கூட்டி சென்றான்.

அவளுக்கு அலுவலகத்தில் வேலையே ஓடவில்லை. அவனும் அவளுக்கு நிறைய வேலைகளை கொடுத்து அவளை மறக்க வைக்க முயற்சி செய்து கொண்டிருந்தான்.

அடுத்த நாள் காலை அவள் அம்மாவிற்கு போன் செய்து அப்பாவின் நிலையை அறிந்து கொண்டாள் சங்கீதா. இன்னும் ஒரு வாரம் ஆஸ்பிட்டலில் இருக்க வேண்டுமென்றும், எந்த பிரச்சனையும் இல்லை. அதனால் அவள் வர தேவையில்லை என்று அவள் அம்மா தெரிவித்தார். கார்த்தியின் மாமாவால் மருத்துவமனையில் அவர்களுக்கு எல்லா வேலைகளும் சுலபத்தில் முடிகிறது என்று கூறினாள். சங்கீதா இதனால் ஓரளவு திருப்தியடைந்தாள்.

கார்த்தியும் அவன் மாமாவிடம் பேசி அவர்களுக்கு தேவையானவற்றை செய்து தர சொல்லியிருந்தான். மேலும் அவளுடைய தந்தையின் உடல் நிலையை பற்றியும் தெரிந்து வைத்திருந்தான். அவளுக்கு தினமும் ஆறுதல் சொல்லி அவள் மகிழ்ச்சியாக இருக்க உதவியாக இருந்தான்.
மூன்று மாதம் ஓடியதே இருவருக்கும் தெரியவில்லை. தினமும் அவளை அலுவலகத்திற்கு அழைத்து வருவது, வீட்டுக்கு அழைத்து செல்வது, ஷாப்பிங் செல்வது என்று அனைத்திற்கும் உதவியாக இருந்தான்.

"கார்த்தி, இன்னைக்கு உனக்கு கடைசியா கொடுக்க வேண்டிய ரெண்டாயிரம் டாலரும் அனுப்பிட்டேன். நீ மட்டும் அப்ப எனக்கு ஹெல்ப் பண்ணலைனா என் நிலைமை என்ன ஆகியிருக்கும்னே சொல்ல முடியாது"

"இதுல என்ன இருக்கு. ஊர்ல இருந்து ரொம்ப தூரம் வந்திருக்கோம். ஒருத்தருக்கு ஒருத்தர் உதவலனா நல்லா இருக்காதில்லை"

"எனக்கு என்ன சொல்றதுனே தெரியல கார்த்தி. உன்னை பத்தி ஆஃப்-ஷோர்ல எல்லாரும் எவ்வளவு தப்பா நினைச்சிட்டு இருக்காங்க தெரியுமா? ஆனா நீ அதுக்கெல்லாம் அப்படியே ஆப்போசிட்டா இருக்க"

"தெரியும். ஆனந்த் இந்தியா போக நான் தான் காரணம். நாளைக்கே இங்க ஒரு ரிசோர்ஸ்தான் இருக்கனும்னு சொன்னா, ஒண்ணு நான் கம்பெனி மாறிடுவேன், இல்லை உன்னை அனுப்ப சொல்லி மேனஜருக்கு போன் பண்ணி சொல்லிடுவேன்"

"ஏன் இந்தியா உனக்கு பிடிக்காதா? ஏன் இப்படி இருக்க?"

"ஏனோ இந்தியால ஒர்க் பண்றது பிடிக்கல. அங்க ஒர்க் கல்ச்சரும் சரியில்லை. ரொம்ப வேலை அதிகம். அதான்"

"நீ என்னுமோ பொய் சொல்ற மாதிரி இருக்கு கார்த்தி. என்கிட்ட நீ எதையோ மறைக்கிற. விருப்பம் இல்லைனா விட்டுடு"

"அப்படியெல்லாம் இல்லை"

"நீ என்னை உன் ஃபிரெண்டா நினைச்சா சொல்லு. இல்லைனா வேணாம்"

"அப்பறமா சொல்றேன். இப்ப வேண்டாம்"

"சரிவிடு. உனக்கு எப்ப தோணுதோ சொல்லு"

"ஓகே"

இரண்டு மாதங்கள் ஓடிய நிலையில் கார்த்திக்கிற்கு திடிரென்று உடல்நிலை சரியில்லாமல் போனது. சங்கீதா அவனுடனிருந்து அவனுக்கு தேவையானதையெல்லாம் செய்துவிட்டு ஆபிஸ் சென்றாள். அடுத்த நாள் அவன் அலுலகலம் சென்ற போது அங்கே அவனுக்கு ஒரு இடி காத்திருந்தது.

கார்த்தியை அவன் கம்பெனி மேனஜர் அழைத்து தனியாக பேசினார்.

"கார்த்திக் மறுபடியும் டீம் சைஸ் குறைக்க சொல்லி சொல்லிட்டாங்க. ஆக்சுவலா உன் மாட்யூல் தான் முடியுது. ஆனா நேத்து சங்கீதா எனக்கு போன் பண்ணி அவளுக்கு இங்க இருக்க பிடிக்கல. அதனால இந்தியா போகறேனு சொல்லிட்டா. சோ பிரச்சனையில்லை. நீ அவக்கிட்ட எல்லாத்தையும் கத்துக்கோ"

அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

"சரி... எப்ப கிளம்பனும்?"

"இந்த வீக் எண்ட்... இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு"

அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. மாலையில் வேலை முடிந்ததும் அவளை அழைத்து செல்லும் போது அவளிடம் பேச ஆரம்பித்தான்.

"சங்கீதா, ஏன் எங்கிட்ட இதை சொல்லல?"

"எதை?"

"நேத்து ஆபிஸ்ல நடந்ததை"

"என்ன நடந்தது?"

"இங்க இருக்க பிடிக்கல. அதனால இந்தியா போறனு மேனஜருக்கு போன் பண்ணி சொன்னியா?"

"ஆமாம்"

"ஏன்?"

"இந்த ப்ராஜக்ட்ல ஒருத்தர் தான் இருக்க முடியும்னு தெரிஞ்சிது. நீ போறதுக்கு கஷ்டப்படுவ. சரி உன்னை கஷ்டப்படுத்த வேண்டாமேனு தான் நான் கிளம்பறேன்"

"நான் இந்தியாக்கு ஏன் போக மறுக்கறனு உனக்கு தெரியுமா?"

"தெரியாது. ஆனா அதுல நியாயமான காரணம் ஏதாவது இருக்கனும். உனக்கு யார்கிட்டயும் சொல்ல விருப்பமில்லை. எனக்கு உன்னை கஷ்டப்படுத்த மனசில்லை"

"ஹிம்ம்ம்.. ஒரு காபி குடிக்கலாமா?"

"சரி"

காரை ஸ்டார்பக்ஸிற்கு விட்டான். இருவரும் ஆளுக்கு ஒரு லேட்டே வாங்கி கொண்டு எதிரெதிரில் அமர்ந்தனர்.

"எங்க அப்பா போலிஸ்ல வேலை பார்த்தாரு. ரொம்ப ஸ்ட்ரிக்ட். எங்க அம்மாதான் எனக்கு எல்லாமே. எங்க அண்ணனைவிட எங்க அம்மாக்கு என் மேல தான் பாசம் அதிகம். எங்க அண்ணன் எல்லார்டையும் போவான். நான் சின்ன வயசுல இருந்து யார்கிட்டயும் அதிகம் பேச மாட்டேன். அதனாலயே என் மேல அம்மா அதிகமா அக்கறை எடுத்துக்க வேண்டியதா இருந்துச்சு.

சின்ன வயசுல இருந்தே நான் வீட்ல இருந்தே படிச்சிட்டேன். காலேஜ்ல கூட எனக்கு அதிக ஃபிரெண்ட்ஸ் இல்லை. நான் வேலைக்கு சேர்ந்து ஒரு வருஷத்துலயே ஆன்சைட் வந்துச்சி. நான் எங்க அம்மாவைவிட்டுட்டு வர மாட்டேனு சொல்லிட்டேன். ஆனா அடுத்த ஒரு மாசத்துல எங்க அம்மா மாடில துணி காய வெச்சி எழுத்து வரும் போது கால் தடுக்கி கீழ விழுந்து தலைல அடி பட்டுடுச்சி. எவ்வளவோ முயற்சி செஞ்சும் காப்பாத்த முடியல.

அதுக்கப்பறம் எனக்கு அந்த வீட்ல எங்க பார்த்தாலும் எங்க அம்மாவாதான் தெரிஞ்சாங்க. சாப்பிடும் போது முன்னாடி உக்கார்ந்து "போதுமா கார்த்தி"னு கேக்கற மாதிரி இருக்கு. இராத்திரி கரெண்ட் ஆஃப் ஆன பக்கத்துல உக்கார்ந்து விசிறி விடற மாதிரி இருக்கு. என்னை சுத்தி எப்பவுமே அம்மா இருக்கற மாதிரியே இருக்கு. நானே தனியா பாதி நேரம் பேசிக்கிட்டேன். எனக்கு பைத்தியம்னு எங்க அண்ணி பயந்துட்டாங்க. அப்பதான் மறுபடியும் ஆன்சைட் வந்துச்சி"

ஒரு நிமிடம் நிறுத்தி ஆஸ்வாசப்படுத்தி கொண்டான்.

"உடனே புறப்பட்டு வந்துட்டேன். என்னால திரும்பி அங்க போயி எங்க அம்மா இல்லாத வீட்ல ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது. எங்க அப்பா இப்ப என் அண்ணன் பசங்களை பார்த்துட்டு அங்கயே இருக்காரு. ஆனா என்னால இருக்க முடியாது. என்னை எல்லாரும் திட்டியும் நான் இந்தியா போகாததுக்கு காரணம் இதுதான். இங்க நீ வந்ததுக்கப்பறம் தான் நான் ஓரளவு பழசை எல்லாம் மறக்க ஆரம்பிச்சேன். இப்ப நீயும் என்னை விட்டுட்டு போற"

"கார்த்தி எனக்கு என்ன சொல்றதுனே தெரியல. வேற வழியில்லை. நான் போயிதான் ஆகணும்."

"ஹிம்ம்ம்"

நான்கு கண்களும் கலங்கியிருந்தன...

ஒரு வழியாக சங்கீதா இந்தியா செல்ல தயாரானாள். சாக்லேட், அப்பா/அம்மாவிற்கு வாட்ச், மசாஜர், கேமரா, லேப்டாப் என கிடைத்ததை வாங்கினாள். கார்த்தி அவளை ஏற்போர்ட்டிற்கு வந்து அனுப்பி வைத்தான்.

ஒரு வாரம் லீவ் முடித்து திங்களன்று கார்த்திக்கிற்கு போன் செய்தாள் சங்கீதா.

"கார்த்தி ஹியர்"

"ஹே நான் சங்கீதா பேசறேன்"

"சொல்லு. ஊருக்கு போய் போன் பண்ண உனக்கு ஒரு வாரம் தான் எடுத்துச்சா?"

"இல்லை. நான் இப்ப தான் ஆபிஸ் வந்தேன். ஏன் நீ எனக்கு போன் பண்ண வேண்டியதுதானே?"

"உங்க வீட்டுக்கு போன் பண்ணா எப்படி ஃபீல் பண்ணுவாங்கனு தெரியல. அதான்.." இழுத்தான்

"அதெல்லாம் எதுவும் தப்பா நினைக்க மாட்டாங்க. அப்பறம் ஒரு குட் நியுஸ்."

"என்ன?"

"நான் திரும்ப அங்க வரலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்"

"வாவ். கிரேட். எந்த பிராஜக்ட்"

"புது பிராஜக்ட். ஆனா நீ தான் எனக்கு ஹெல்ப் பண்ணனும்"

"என்ன ஹெல்ப். சொல்லு கண்டிப்பா பண்ணறேன்"

"எனக்கு H1ல வர முடியாதுனு சொல்லிட்டாங்க. நீதான் H4ல கூப்பிட்டு போகனும். கூப்பிட்டுபோவியா?"

சரியாக இரண்டாவது மாதத்தில் H-4ல் பறந்தாள் சங்கீதா...

SW இஞ்சினியர்கள் மேனஜரிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்

1. ராத்திரி 10 மணிக்கு கூட எங்களுக்கு பர்சனல் ஒர்க் வரக்கூடாதுனு எதிர்பார்க்கறீங்க ஆனா சாயந்திரம் 5 மணி ஆனவுடனே உங்களுக்கு மட்டும் எப்படி பர்சனல் ஒர்க் வந்துடுது?

2. அது எப்படி நாங்க சொல்லி உங்களுக்கு ஏதாவது புரியலைனா Dont make it too complicatedனு சொல்றீங்க. ஆனா நீங்க சொல்லி எங்களுக்கு புரியலைனா He is Dumbனு சொல்றீங்க?

3. அது எப்படி Week end எங்களுக்கு வேலை கொடுத்துட்டு வெள்ளிக்கிழமை நீங்க வீட்டுக்கு கிளம்பும் போது Happy Weekend னு கூச்சபடாம சொல்லிட்டு போக முடியுது?

4. அது எப்படி உங்களுக்கு ஒரு அப்ளிகஷேன் சரியா வேலை செய்யலைனா, அப்ளிகேஷன்ல பிரச்சனைனு சொல்றீங்க. அதே எங்களுக்கு வேலை செய்யலைனா, உனக்கு அப்ளிகேஷன் தெரியலைனு சொல்றீங்க?

5. ஏதாவது நல்ல நாள் வந்தா ஏதோ உங்க வீட்ல மட்டும் விசேஷம் மாதிரி எல்லா வேலையையும் எங்க தலைல கட்றீங்களே. ஏன் எங்க வீட்லயும் விசேஷம் இருக்கும்னு உங்களுக்கு தெரிய மாட்டீங்குது?

6. உங்களுக்கு ஊதிய உயர்வு வரலைனா மட்டும் கம்பெனி ரொம்ப மோசமாகுதுனு சொல்ற நீங்க, எங்களுக்காக மட்டும் பேச மாட்றீங்க?

7. ஏதாவது ஒரு முக்கியமான மெயில் அனுப்ப நீங்க மறந்தா மட்டும், I was very busy in some other issueனு சொல்றீங்க. அதே நாங்க மறந்தா, you should concentrate on workனு சொல்றீங்க?

8. ஆபிஸ் நேரத்துல நீங்க ஃபோன் பேசிட்டு இருந்தா மட்டும், அது ஏதோ தலை போற விஷயம் மாதிரி எடுத்துக்கறீங்க, அதே நாங்க பண்ணா வேலையை சரியா செய்ய மாட்றானு சொல்றீங்க?

9. சாயந்திரம் 5 மணிக்கு நீங்க வீட்டுக்கு போறது தப்பில்லை, ஆனா அப்ப நாங்க ஒரு டீ குடிச்சிட்டு வர போனா மட்டும் ஏதோ கொலை குத்தம் செய்யற மாதிரி பாக்கறீங்க?

10. காலைல வந்ததுல இருந்து ICICI Direct, Geogit, Sharekhanனு செக் பண்ணிட்டு இருக்கீங்க. அதே நாங்க மதியம் சாப்பிட்டு வந்து மெயில் செக் பண்ணா மட்டும் Don't use company resources for your personal workனு சொல்றீங்க?

Monday, February 16, 2009

Tester

சின்ன வயசுல இருந்து எனக்கு பிடிக்காத விஷயம் நாம செய்யற காரியத்துல ஒருத்தவங்க தப்பு கண்டுபிடிச்சி குறை சொல்றது. இது எப்பொழுதிலிருந்து எனக்கு பிடிக்காம போச்சுனு ஞாபகமில்லை. ஒரு வேளை எங்க அம்மாவை எப்பவுமே குறை சொல்லிட்டே இருக்குற எங்க அத்தை தான் காரணமா இருக்கும்னு நினைக்கிறேன். காலேஜ்ல எங்க கூட படிச்ச கார்த்தி அப்படி தான், யார் எது பண்ணாலும் ஏதாவது தப்பு கண்டுபிடிச்சி சொல்லிட்டே இருப்பான். அந்த காரணத்துக்காகவே என் எதிரி லிஸ்ட்ல அவன் நம்பர் ஒன். நான் டாவடிச்ச ஃபிகரை உஷார் பண்ண சுரேஷ் கூட நம்பர் டூல தான் இருந்தான்னா பார்த்துக்கோங்க.

எதுக்குடா இப்படி இவன் வரலாறு எல்லாம் சொல்லிட்டு இருக்கானேனு யோசிக்கறீங்களா? இப்படி எனக்கு சுத்தமா பிடிக்காத ஒரு விஷயமே என் வாழ்க்கையாகி போகும்னு நான் கனவுல கூட நினைச்சி பார்க்கலை. என்ன சொல்றனு புரியலையா? படிக்க ஒரு பிரிவு, வேலைக்கு ஒரு பிரிவுனு கஷ்டப்படும் இஞ்சினியர்களில் நானும் ஒருவன். படிச்சது எலக்ட்ரானிக்ஸ், வேலை கிடைச்சது சாப்ட்வேர் ஃபீல்ட். அதுவும் ஒரு பெரிய இந்தியன் கம்பெனி. மூணு மாசம் ட்ரெயினிங். அட்டகாசமா இருந்துச்சு. 

ட்ரெயினிங் முடிச்சி ஒவ்வொருத்தரையும் ஒவ்வொரு டொமைன்ல போட்டாங்க. எனக்கு மட்டும் என் வாழ்க்கைலயே வெறுக்கற ஒரு வேலைல போட்டாங்க. அது தான் டெஸ்டிங். எவனோ டெவலப் பண்ற ஒரு அப்ளிகேஷன் சரியா வேலை செய்யுதானு பார்த்துட்டு அதுல இருக்குற தவறை (பக்) எல்லாம் கண்டுபிடிக்கனும். அப்படி கண்டுபிடிக்கிற தவறு எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்னு பார்த்து எதுக்கு ஏத்த மாதிரி Severity, Priority எல்லாம் போட்டு டெவலப்பர்ஸ்க்கு அனுப்பனும். 

அவுங்களும் எடுத்தவுடனே அதை ஒத்துக்க மாட்டாங்க. அதுக்கு அப்பறம் அவனோட பங்காளி சண்டை போடணும். ஏதோ மாமியார், மருமக சண்டை மாதிரி இருக்கும். எனக்கு வேலை செய்யுது. நீ சரியா பண்ணலனு அவன் சொல்லுவான். அப்பறம் நாம அவனுக்கு அதை விளக்கனும். நீ டெவலப் பண்ண அப்ளிக்கஷன்ல தப்பு இருக்குடானு சொல்றது ஏதோ திருவிளையாடல் படத்துல நக்கீரன் சொல்ற மாதிரி இருக்கும். அவன் நம்மல பார்க்கும் போது, குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கும் புலவர் ரேஞ்சுக்கு பார்ப்பான். சில சமயம் நம்மல பத்தி சொல்லும் போது பூச்சி பிடிக்கறவனு சொல்லுவாங்க. 

சில சமயம் கம்பெனி மாறி டெக்னாலஜி மாறிடலாம்னு தோணும். ஆனா இன்னைக்கு இந்தியாவுல அதிக பிராஜக்ட்ஸ் டெஸ்டிங்ல தான் இருக்குது, அப்பறம் இதுல இருந்தா சீக்கிரம் ப்ரோமோஷன் கிடைக்கும், டொமைன்ல எக்ஸ்பர்ட் ஆகலாம்னு என் மேனஜர் திரும்ப திரும்ப சொல்லி என்னை இதுலயே இருக்க வெச்சிட்டார். சில சமயம் வியாழக்கிழமை High Priority டிஃபக்ட் கண்டுபிடிக்கும் போது மனசு ரொம்ப கஷ்டமா இருக்கும். இதை சரி செய்ய எவன் வீக் எண்ட் உக்கார போறானோனு இருக்கும்.
 
இப்படி தான் சிவாஜிக்கு ஃபிரெண்ட்ஸ் எல்லாம் புக் பண்ணிட்டு கிளம்பற நேரம் பார்த்து ஒருத்தவன் வர முடியலைனு சொல்லிட்டான். வெள்ளிக்கிழமை அதுவுமா அவன் டெஸ்டிங் டீம்ல நிறைய பக் ரைஸ் பண்ணிட்டாங்க அதனால மொத்த டீமும் சனிக்கிழமை வர வேண்டியதா போச்சுனு சொல்லி, அந்த பக் ரைஸ் பண்ணவன் ஃபர்ஸ்ட் நைட் அன்னைக்கு, அவனுக்கு வேற வேலை வந்து ஃபர்ஸ்ட் நைட்டே கேன்சலாகனும்னு திட்டினான். இந்த மாதிரி எவன் எவன் நமக்கு என்ன சாபம் விடப்போறானோனு இருந்தது. அவன்கிட்ட ஏன்டா மச்சான் இப்படி பர்சனலா திட்றனு கேட்க முடியாது. தப்பு உன் மேல தானனு சொல்லவும் முடியாது. சொன்னா, பார்டா டெஸ்டர் வந்துட்டாருனு நம்மலயே கலாய்ப்பானுங்க.

இந்த வேலைல பொண்ணுங்க சந்தோஷமா செய்யறதை பார்த்திருக்கேன். ஒரு வேளை அது அவுங்க ரத்தத்திலே ஊறனதுங்கறதால இருக்கலாம். ஆனா எனக்கு இது சுத்தமா பிடிக்கலை. 

வெளிய சொல்லும் போதும் டெஸ்டர்னு சொல்றதுக்கு எனக்கு கூச்சமா தான் இருக்கும். வெறும் சாப்ட்வேர் இஞ்சினியர்னு தான் சொல்லுவேன். அப்பறமும் ஜாவாவா, டாட் நெட்டானு யாராவது கேட்டா, வேற வழியில்லாம டெஸ்டிங்ல இருக்கேனு சொல்லும் போது ஏதோ செய்யக்கூடாத வேலை செய்யற மாதிரி இருக்கும். 

சாப்ட்வேர் லைஃப் சைக்கிள், water flow model, V Modelனு எல்லாம் டெஸ்டிங்ல சேர்ந்த புதுசுலயே சொல்லி கொடுத்து என் குற்றவுணர்ச்சியை போக்க பார்த்தாங்க. ஒரு Bugயை ஒரு பிராஜக்ட் ஆரம்ப கட்டத்துல கண்டுபிடிக்கறதுக்கும், அதை நடைமுறை படுத்துன பிறகு கண்டுபிடிக்கறதுக்கு ஆகுற செலவுக்கு எனக்கு வித்தியாசம் தெரியாம இல்ல. இருந்தாலும் இவ்வளவு பெரிய சாஃப்ட்வேர் லைஃப் சைக்கிள்ல நான் ஏன் இப்படி டெஸ்டிங்ல வந்து மாட்டனும்னு ஒரு கஷ்டம். அந்த கஷ்டத்தைவிட பெரிய கஷ்டம் இந்த டெவலப்பர்ஸ் கூட சண்டை போடறது தான். என்னுமோ எல்லாத்தையும் சரியா பண்ண மாதிரி பேசுவானுங்க. ஒரு மண்ணும் ஒர்க் ஆகாது. ஆனா பேசும் போது மட்டும் என்னுமோ பெரிய லார்டு லபக்கு தாஸ் மாதிரி பேசுவானுங்க. ஒரு அப்ளிகேஷன் டெவலப் பண்ணவுடனே அது கொஞ்சமாவது வேலை செய்யுதானு பார்க்கனும். அதை கூட பண்ண மாட்டானுங்க. 

போன வாரம் இப்படி தான் ஒரு அப்ளிகேஷன்ல பிறந்த நாள் தேதி இருந்தது. அதுல நான் பாலாஜினு டைப் பண்ணா, அதையும் எந்த தப்பும் சொல்லாம ஏத்துக்குது. கேட்டா பிறந்த நாள் இடத்துல தேதியை கொடுக்காம நீ உன் பேரை போட்டா அது யார் தப்பு? உன்னை மாதிரி ஆளுங்களா இதை பயன்படுத்த போறாங்க. இதை பயன்படுத்தறவங்களுக்கு எல்லாம் புத்தி இருக்கும்னு சொல்லி சிரிக்கறானுங்க. அந்த கடுப்புல போன வாரம் மட்டும் எங்க டீம் 200 டிஃபக்ட் ரைஸ் பண்ணிருக்கோம். இந்த வாரம் எப்படியும் 100ஆவது ரைஸ் பண்ணனும் டார்கெட் வெச்சிருக்கோம். அவனுங்களை எப்படியும் ஒரு மாசம் தூங்கவிட கூடாதுனு முடிவு பண்ணிட்டோம்.

இருங்க இருங்க இதோ வந்திடறேன், என் மனைவி சாப்பாட்டுல உப்பு, காரமெல்லாம் சரியா இருக்கானு பார்க்க கூப்பிடறா. எப்படியும் கொஞ்சம் கூட குறைய இருந்தாலும், நல்லா இருக்குடா செல்லம்னு சொல்லனும். அப்ப தான் கொஞ்சம் குற்றவுணர்ச்சி குறையும்.

வெண்ணிலா கபடி குழு

எங்க ஏரியால தமிழ் படம் அதிகமா ரிலீஸ் ஆகாது. நிறைய தெலுகு படம் வரும். ஆனா தமிழ் படம்னு பார்த்தா ரஜினி, கமல், விஜய், அஜித் படங்கள் தான் ரிலிஸ் ஆகும். இதுல நாம விஜய், அஜித் படமெல்லாம் காசு கொடுத்தாலும் பார்க்க முடியாது. இப்ப பார்க்கனும்னு ஆசைப்படற படங்கள் எதுவும் இங்க ரிலிஸாகாததால சீக்கிரம் பார்க்க முடியாது. அதுக்குள்ள நம்ம ஆளுங்க அக்கு வேற ஆணி வேறயா பிரிச்சி மேஞ்சிடறாங்க. 

அந்த பிரச்சனைக்கு இப்ப ஓரளவு தீர்வு வர மாதிரி இந்த சைட் வந்திருக்கு. http://www.onlycinema.com. இதுல சில பிரச்சனைகள் இருக்கு. திடீர்னு ஸ்ட்ரக் ஆகிடுது. திரும்ப ஆரம்பிச்சா, நிறைய சீன் மிஸ் ஆகிடுது. ரெசல்யூஷனும் கொஞ்சம் சரி செய்யனும். மத்தபடி இது நல்ல ஐடியா. திருட்டு சிடில பார்க்கலனு நமக்கும் ஒரு திருப்தி.

சரி இப்ப நாம இந்த படத்துக்கு வருவோம். First thing first, படம் அருமை. நிச்சயம் பார்க்கலாம். படத்துல சில குறைகள் இருந்தாலும் இது நிச்சயம் பாராட்டற முயற்சி தான். சில இடங்களை தவிர, படம் பார்க்கற ஃபீலே வரலை. அப்படியே நிஜ மனிதர்களை நம் முன் உலவ விட்டிருக்கிறார் இயக்குனர். படத்துல யாரை பாராட்டறது யாரை விடறதுனு தெரியல. ஒவ்வொருத்தரையும் தனி தனியா பாராட்டினா பதிவு தாங்காது. 

கிஷோர் ஸ்லேங் அருமை. அவரை தமிழ் இயக்குனர்கள் இன்னும் அதிகமா பயன்படுத்தனும். அவரோட பார்வையே பாதி பேசி விடுகிறது. அதுக்காக அவரை வில்லனாவே போட்டு டார்ச்சர் பண்ணிடாதீங்கய்யா. 

இதுக்கு மேல படம் பார்க்கனும்னு ஆசைப்படறவங்க படிக்காதீங்க. May contain spoilers.


படத்துல எனக்கு ரொம்ப நெருடின இடங்கள். ஸ்லாக் ஓவர்னு சொல்ற இண்டர்வெலுக்கு முன்னாடி ஒரு இருபது நிமிடம், அதுக்கு அடுத்து வரும் ஒரு இருபது நிமிடமும் எப்படி ஓட்றதுனு தெரியாம ரெண்டு பாட்டு போட்ட மாதிரி இருக்கு. பாட்டும் ரொம்ப சுமார் தான். அடுத்து, கபடி ஆட்டம் ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்டைல் இருக்கும். ஒரு சிலர் தொடையை தட்டி கையை நீட்டி வாடா, வாடானு சொல்ற மாதிரி கபடி, கபடினு சொல்லுவாங்க (தயவு செஞ்சி இதை கில்லி விஜய் கூட கம்பேர் பண்ணிடாதீங்க). ஒரு சிலர் லைட்டா ஜம்ப் பண்ணிட்டே கபட், கபட், கபட்னு சொல்லுவாங்க, ஒரு சிலர் கையை ரொம்ப நீட்டாம காலால அடிச்சி பாயிண்ட் எடுப்பாங்க. இப்படி ஒவ்வொருத்தருக்கும் ஒரு ஒரு ஸ்டைல் இருக்கும். அது எல்லாம் விட்டுட்டு, அதிகமா ஜம்பிங்கே காட்டிட்டு இருந்த மாதிரி இருந்தது. 

அதுவுமில்லாம கபடி ஆடறவங்க கண்ணு எப்படி மூவ் ஆகும்ங்கறதே பார்க்க அட்டகாசமா இருக்கும். அவ்வளவு வேகமான கருவிழி நகர்வதும், அதுல இருக்குற ஒரு வெறியும் பார்க்க ஒரு புலி வேட்டையாடற மாதிரி இருக்கும். அது கொஞ்சம் மிஸ்ஸிங். ஆனா இந்த படத்துல காட்டிய மாதிரிக்கூட இது வரை எந்த படத்துலயும் காட்டியதில்லை.

அப்பறம் நிறைய க்ளிஷேக்கள். ஹீரோயின் நடக்கறது, சிரிக்கறது எல்லாம் பார்த்தா சுப்ரமணியபுரம் ஸ்வாதி மாதிரியே இருந்தது. கிராமத்து பொண்ணுங்களுக்கு இருக்கற துடுக்குத்தனம் சுத்தமா மிஸ்ஸிங். பொண்ணுங்களே பொதுவா வாயாடிங்க. அதுவும் மதுரைக்கார பொண்ணுங்கனா சொல்லனுமா. ஏதோ சும்மா சிரிச்சி சிரிச்சிட்டு போற மாதிரி இருக்கறது காப்பி, பேஸ்ட் மாதிரி இருக்குது. 

அப்பறம் ப்ராக்டீஸ் பண்றதுனா ஒரு உணர்ச்சிகரமான பாட்டு போடறது எல்லா படத்துலயும் தொடர்கிறது. லகான், சக் தே இந்தியா மாதிரி இந்த படத்துலயும் அந்த சீன்ல ஒரு பாட்டு. அப்பறம் முதல் ஆட்டத்துலயும், கடைசி ஆட்டத்துலயும், வெச்சா குடுமி செரைச்சா மொட்டைங்கற மாதிரி முதல் பாதி ஆட்டம் வரைக்கும் எதுவும் பாயிண்ட் எடுக்காத மாதிரியும், அடுத்த பாதில கிஷோர் அறிவுரையை கேட்டு ஜெயிக்கற மாதிரி காட்டறதும், நாம நிச்சயம் தமிழ் சினமா தான் பாக்கறோம்னு ஞாபகப்படுத்துது. அதே மாதிரி க்ளைமேக்ஸ்ல டிரால இருக்கறதும். ஒரு விறுவிறுப்பை கொண்டு வரணும்னு இந்த மாதிரி விளையாட்டை கதைக்களமா வெச்சி வர எல்லா படங்களும் இதையே ஃபாலோ பண்றாங்க. 

படம் பார்க்காதவங்க இதுக்கு மேல நிச்சயம் படிக்காதீங்க. 

அடுத்து இந்த கொடுமையை என்னால ஏத்துக்கவே முடியல. ஏன்யா நல்ல படம்னா கடைசியா யாராவது செத்து மக்கள் கனத்த இதயத்தோட போகனும்னு ஒரு விதி இருக்கா என்ன? தமிழ்நாட்ல நல்ல படம்னு பேர் வாங்கனும்னா கடைசியா ஹீரோ, ஹீரோயினை சாகடிச்சா போதும்னு ஒரு மோசமான க்ளிஷே உருவாயிடுச்சி. சேதுல ஆரம்பிச்சிதுனு நினைக்கிறேன். அதுல அது நேச்சுரலா இருந்துச்சு. மீதி எல்லா படத்துலயும் அது தினிக்கிற மாதிரி இருக்குது. அதுலயும் குறிப்பா இந்த படத்துல அந்த க்ளைமாக்ஸ் சுத்தமா தேவையே இல்லாத மாதிரி இருந்தது. இந்த படத்துக்கு அழகா எத்தனையோ க்ளைமாக்ஸ் வெச்சிருக்கலாம். ஹீரோ, ஹீரோயின் சேரனும்னு நான் சொல்லலை. ஆனா இப்படி செத்து தான் முடிக்கனும்னு அவசியமில்லை. 


என்னடா படத்துல இவ்வளவு குறையை சொல்லிட்டு படம் நல்லா இருக்குனு சொல்றானேனு பாக்கறீங்களா? இது எல்லாத்தையும் மீறி படத்தை நான் ரொம்ப ரசிச்சேன். அதுக்கு முக்கிய காரணம், படத்துல ரத்தமும், சதையுமாக நடமாடிய மனிதர்கள் தான். நிறைய இடங்கள்ல வாய் விட்டு சிரித்தேன். 

படத்துல நான் ரொம்ப ரசிச்ச சில இடங்கள்.

கதாநாயகன் வீட்ல அவுங்க அம்மா சமைக்கும் போது இட்லி தட்டுல போட்டிருக்கற துணி, அந்த இட்லி வெந்துடுச்சானு கையை விட்டு பார்க்கறது. அதை கை சுட சுட அவுங்க அம்மா எடுத்து போட்டு பாசமா சொல்றது. இதெல்லாம் அப்படியே வீட்டுக்கு கூப்பிட்டு போன மாதிரி இருந்தது.

டேய் தகப்பா, தாய் கிழவினு சொல்லி கொடுக்கற நம்ம தமிழ்சினிமால இப்படி அம்மா மேல பாசமா பையன், நான் நல்லா இருக்குனு சொன்னா எல்லாத்தையும் என்கிட்டயே வெச்சிடும்னு சொல்ற இடமும், அய்யப்பன், அவுங்க அப்புச்சி சைக்கிள்ல கனமா வெச்சி தள்ளிட்டு வரும் போது அதை வாங்கி, கொடு நான் உருட்டிட்டு வரேனு சொல்ற இடமும் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. 

பொங்கல் விழால நடக்குற போட்டியும், அங்க கொடுக்குற கமெண்ட்ரியும் அட்டகாசம். அதுவும் கிஷோர் எதிர் திசைல போகும் போது கொடுக்கற கமெண்ட்ரி அட்டகாசம். அப்பறம் சித்தப்பா புலிபாண்டியை சுத்திவிட்டே மயக்கம் போட வைக்கறது சான்சே இல்லை. அப்புக்குட்டி மாமியாரை அடிக்கறதும் வெயிட்டான சீன். அந்த மாமியார் கொடுக்கற கமெண்டும் செம அட்டகாசம். 

பரோட்டா சீனை எல்லாரும் சொல்லிட்டாங்க. ஆனா அதைவிட அவர் க்ளைமாக்ஸ்ல அழுவுற சீன்ல இன்னும் அருமையா நடிச்சிருக்காரு. 

சரண்யா மோகன் is cute. 

சுசீந்திரன், உங்களோட அடுத்த படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமா இருக்கும். இன்னும் நீங்க அதிகமா உழைக்க வேண்டியதிருக்கும். இப்பொழுதைக்கு ஒரு நல்ல படம் கொடுத்ததுக்கு நீங்க நிச்சயம் பெருமைப்படலாம், வாழ்த்துகள்!!!

Thursday, February 12, 2009

கவுண்டர், செந்தில் இணைந்து கலக்கும் கம்ப்யூட்டர்காரன்!!!

இது நம்ம எல்லோரும் பார்த்து ரசித்த "கரகாட்டக்காரன்" பார்ட்-II

நம்ம டவுசர் புகழ் கி"ராமராஜன்" ஒரு சாப்ட்வேர் கம்பெனி ஆரம்பிச்சிருக்கார்.
ராமராஜன் - CEO/CTO
கவுண்டர்- பிராஜக்ட் மேனஜர்.
செந்தில் - டீம் லீட்
ஜுனியர் பாலைய்யா - சீனியர் சாப்ட்வேர் இஞ்சினியர்.
கோவை சரளா - சாப்ட்வேர் இஞ்சினியர்.

காட்சி 1:
புதுசா ஒரு மெயிண்டனன்ஸ் பிராஜக்ட் வாங்கியிருக்கிறார்கள். மெயிண்டனன்ஸ் பிராஜக்ட் என்பதால் அதில் சேர அனைவரும் தயங்குகிறார்கள்.

ராரா: ஏன்னா நமக்கு இந்த பிராஜக்ட் தேவையா? வேற யாருக்காவது அவுட் சோர்ஸ் பண்ணிடலாம்னு சொன்னாலும் கேக்கமாட்றிங்க!!! வேலை செய்யறதுக்கு எவனும் வர மாட்றான்னு கிளைண்டுக்கு சொல்ல சொல்லி மானத்தை வாங்கறிங்க!!!

கவுண்ட்ஸ்: என்ன தம்பி அப்படி சொல்லிட்ட. இந்த பிராஜக்ட்டை யார் யார் பண்ணாங்கனு தெரியுமில்லை.

ரா.ரா: யார் யாரு???

கவுண்ட்ஸ்: முதல்ல அசன்ச்சர் மெயிண்டயின் பண்ணாங்க! அப்பறம் டி.சி.எஸ் பண்ணாங்க! அப்பறம் இன்போஸிஸ் பண்ணாங்க! அப்பறம் இன்போஸிஸ்ல இருந்து பிரிஞ்ஜி போன ஐ-கதவு மெயிண்டெயின் பண்ணாங்க!!! இப்ப கடைசியா நம்ம கைல வந்து சேர்ந்திருக்கு!!!

செந்தில் கவுண்டர் காதில் ஏதோ சொல்ல கவுண்டர் டென்ஷனாகி ஒரு அரை விடுகிறார்.

கவுண்ட்ஸ்: யாரப் பார்த்து இந்த கேள்வியக் கேட்ட...

ரா.ரா: ஏன்ன அடிச்சிங்க???

கவுண்ட்ஸ்: ஏன் அடிச்சனா? இவன் என்ன கேள்வி கேட்டான் தெரியுமா? அது ஏன்டா என்ன பாத்து அந்த கேள்வியக் கேட்ட???
....

2 நிமிடம் கழித்து

கவுண்ட்ஸ்:அது ஏன்டா என்ன பாத்து அந்த கேள்வியக் கேட்ட? இத்தனை பேர் இருக்காங்களே அவுங்களை கேக்க கூடாதா?

1 நிமிடம் கழித்து:

கவுண்ட்ஸ்: ஹும்!!! ஐயோ!!! அது ஏன்டா என்ன பாத்து கேட்ட?
மீண்டும் செந்திலுக்கு ஒரு அரை விழுகிறது.

ரா.ரா: ஏன்னா சும்மா போட்டு அடிச்சிட்டே இருக்கீங்க? அப்படி என்னதான் கேட்டான்?

கவுண்ட்ஸ்: என்ன கேட்டானா? பிராஜக்ட்ட நம்ம மெயிண்டயின் பண்றோம்... ஐ-கதவு முதலாளி மேல கேஸ் பொட்டுச்சே ஒரு பொண்ணு அதை யாரு மெயிண்டயின் பண்றாங்கனு கேக்கறான்.

ஜி.பாலையா: ஹாஹாஹா

கவுண்ட்ஸ்: அந்த பொண்ண யாரு மெயிண்டேயின் பண்றாங்கனு கணக்கெடுக்கறதா என் வேலை. இல்லை இதுக்கு முன்னாடி நான் அந்த வேலையப் பாத்துட்டு இருந்தனா. ஒரு பிராஜக்ட் மேனஜரைப் பார்த்துக் கேக்கறக் கேள்வியாய இது? கேக்கறதையும் கேட்டுட்டு ஒன்னுமே தெரியாதவன் மாதிரி ஒக்காந்திருக்கான் பாரு பேரிக்கா மண்டையன்.

காட்சி - 2:
செந்தில் கோட் (Code) சொல்ல கோவை சரளா டைப் பண்ணுகிறார். பக்கத்தில் புதிதாக வேலைக்கு சேர்ந்தவர் இருக்கிறார்.

புதுசு: நீங்க சொல்றதையும் மேடம் டைப் பண்ணுவதையும் பார்க்கும் போது. 25 வருஷத்துக்கு முன்னாடியிருந்த நாராயண மூர்த்தியையும், சுதா மூர்த்தியையும் பாக்கற மாதிரியே இருக்கு...

கவுண்ட்ஸ்: ஏய் ஏய்... நாரயண மூர்த்திய நேர்லப் பாத்திருக்கயா?

புதுசு: இல்ல

கவுண்ட்ஸ்: சுதா மூர்த்திய போட்டலயாவது பாத்திருக்கயா?

புதுசு: இல்ல

கவுண்ட்ஸ்: அப்பறம் எதை வச்சிடா இந்த மூஞ்சி நாரயண மூர்த்தி அந்த மூஞ்சி சுதா மூர்த்தினு சொன்ன...ஏய் சொல்லு...சொல்லு

புதுசு: சொல்றங்க!!! அவர்தான் இந்த மாதிரி சொன்னா அப்ரைசல்ல எல்லா டாஸ்க்குகும் "A" போட்றன்னு சொன்னாருங்க..அதுவும் அந்த பிராஜக்ட் மேனஜர் காதுல விழற மாதிரி சொல்லுனு சொன்னாருங்க!!!

கவுண்ட்ஸ்: ஓடிப்போ நாயே!!! (செந்திலைப் பார்த்து): ஏண்டா இப்படி பண்ண?

செந்தில்: ஒரு விளம்பரம்தான்...

கவுண்ட்ஸ்: ஏண்டா!!! இந்த onsiteல இருக்கறவந்தான் இப்படி பில்ட் அப் கொடுக்கறான்!!! நமக்கு எதுக்குட இதெல்லாம்?
(சரளாவைப் பார்த்து): அவன்கூட சேர்ந்துகிட்டு நீ என்னடி பெரிய இது மாதிரி?
லொல்லு????

கோ.சரளா: தோ!! கொஞ்சம் சும்மா இருக்கீகளா!!! என்னை TCSல கூப்டாகோ, Wiproல கூப்டாகோ, infosysல கூப்டாகோ அங்க எல்லாம் போகமா என் கிரகம் இந்த கூட்டத்துல மாட்டிகிட்டேன்...

கவுண்ட்ஸ்: ஹிம்ம்ம்ம்ம்ம்......ரெட்மாண்ட்ல Microsoft கூப்டாகோ, கலிபோர்னியால Oracleல கூப்டாகோ .... என்னடி கலர் கலரா ரீல் விடர? இண்டர்வியூல நீ பம்பனது மறந்துபோச்சா?

கோ.சரளா: ஹிக்க்க்க்ம்...இதுக்கு எல்லாம் ஒன்னும் குறைச்சலில்லை...

கவுண்ட்ஸ்: ஒழுக்கமா ரெண்டு பெரும் வாய மூடிக்கிட்டு வேலையப் பாருங்க!!! இல்லைனா ரெண்டுப் பேத்தையும் வேலைய விட்டு தூக்கிடுவன்! ஜாக்கிரதை!!!

ரெண்டு பேரும் வேலை செய்ய ஆரம்பிக்கிறார்கள்...

Wednesday, February 11, 2009

பொய் சொன்னால்... நேசிப்பாயா? - 3

"கண்டிப்பா முடியாதுனு சொல்லிட்டாங்களா?”

“ஆமாம். எந்த வீட்ல தான் ஒத்துப்பாங்க? நீ லவ் பண்றியானு கேட்டாங்க. நான் இல்லைனு சொன்னேன். அப்ப அந்த பையன்ட சொல்லிடுனு சொல்லிட்டாங்க”

“ஏன் தீபா, உனக்கு என்னை பிடிக்கலையா?”

“பிடிக்குதுங்கறது வேற காதலிக்கறதுங்கறது வேற. உன்னை எனக்கு பிடிக்கும் எங்க வீட்ல உன்னை பார்த்திருந்தாங்கனா நிச்சயம் கல்யாணத்துக்கு நான் ஒத்துக்குவேன். ஆனா உனக்காக எங்க வீட்ல சண்டையெல்லாம் போட எனக்கு விருப்பமில்லை”

“அப்ப உங்க வீட்ல நான் பேசட்டுமா?”

“அதெல்லாம் தேவையில்லை. அது இன்னும் பிரச்சனை தான் ஆகும்”

“எங்க வீட்ல சொல்லி உங்க வீட்ல பேச சொல்லவா?”

“உனக்கு என்ன பைத்தியம் பிடிச்சிடுச்சா? இப்ப எல்லார்கிட்டயும் சொல்லி பெரிய பிரச்சனையாக்க போற. தயவு செஞ்சி அதெல்லாம் பண்ணிடாத. அப்பறம் எங்க வீட்ல என்னை தப்பா நினைப்பாங்க”

“நீ தானே உங்க வீட்ல சொன்னா சந்தோஷமா ஒத்துக்குவேனு சொன்ன?”

“நான் சந்தோஷமா எல்லாம் ஒத்துக்குவேனு சொல்லலை. சோகமா ஒத்துக்க மாட்டேனு சொன்னேன். உனக்கு உலகத்துல ரெண்டே கலர் தானா? வெள்ளை இல்லை கருப்பு. ஒண்ணு கருப்பா இல்லைனா வெள்ளையா இருக்குனு அர்த்தமா?”

””

“இப்ப ஏன் இப்படி அசிங்கமா அழுவுற. முதல்ல இங்க இருந்து எழுந்திரி. நான் சொல்றேன் இல்லை எழுந்திரி”

“டேய் நண்பா எழுந்திரிடா. நேத்து என்ன நடந்துச்சு? மச்சான், எழுந்திரிடா”

ஆ. இவ்வளவும் கனவா! நல்ல வேளை கனவா போச்சு.

“எழுந்திரிடா. நேத்து ராத்திரி நான் வரதுக்குள்ள நீ தூங்கிட்ட. எனக்கும் வேலை பிஸில மறந்தே போச்சு. இப்பவும் சீக்கிரம் கிளம்பனும். அதான், சீக்கிரம் சொல்லு”

“நேத்து அவ வரலைடா. ஃபோன் பண்ணலாமானு பார்த்தேன். எதுக்கு வீணா பிரச்சனைனு பண்ணலை. இன்னைக்கு வரலைனா ஃபோன் பண்ணி கேக்கணும்”

”ச்ச. இப்படி ஆகிடுச்சே. சரி பாஸிட்டிவா இருந்தா உடனே எனக்கு பண்ணு. சரியா. நான் கிளம்பறேன்.”

“சரிடா மச்சான். தேங்க்ஸ் ஃபார் வேக்கிங் மி அப்”

“எதோ மோசமா கனவு கண்டிருக்க போல. இனிமே படுக்காத. அப்படியே எழுந்திரிச்சி கிளம்பு”

”ஓகேடா”

“ஆல் தி பெஸ்ட் மச்சான்”

“தேங்க் யூ”

..............

”என்னடா, இவ்வளவு லேட்டு? நீ சீக்கிரம் வந்துடுவனு நான் சீக்கிரம் வந்துட்டேன். ஃபோன் பண்ணாலும் எடுக்கல. என்னடா ஆச்சு?”

“சாரிடா. கொஞ்சம் லேட்டாகிடுச்சி”

“டேய், இது என்ன காலேஜ்க்கு லேட்டா வந்தா, ஏன் லேட்டுனு லெக்சரர் கேட்டா, சாரி சார் லேட்டாகிடுச்சினு சொல்ற மாதிரி இருக்கு. பத்து மணிக்கு நீ வந்தா அது லேட்டு தான். என்ன நடந்துச்சுனு சொல்லி தொலை. டென்ஷன் தாங்கல”

“இரு சொல்றேன். காலைல எட்டு மணிக்கு ஆபிஸ் போயிட்டேன்”

“இப்ப அந்த கருமத்தை எல்லாம் எவன் கேட்டான். அவ ஓகே சொன்னாலா இல்லையானு சொல்லி தொலைடா”

“இருடா. சொல்றேன். காலைல அவ ஒன்பது மணிக்கு தான் வந்தா. எதுவும் பேசாம அவ சீட்டுக்கு போயிட்டா”

“ம்ம்ம்”

“மதியம், நாங்க நாலு பேர் லஞ்ச்க்கு போகும் போதும் எதுவும் அதை பத்தி பேசலை. நல்லா சிரிச்சி பேசிட்டு தான் வந்தா. ஆனா எதுவுமே தெரியாத மாதிரி”

“எல்லா பொண்ணுங்களும் இப்படி தான். சரி நீ மேட்டருக்கு வா”

“மதியம் மூணு மணிக்கா பிங் பண்ணி, மூன்ரைக்கா காபி குடிக்க போகலாம்னு சொன்னா”

“ம்”

“நான் சரியா மூணு இருபதுக்கு எல்லாம் புறப்பட்டு போயிட்டேன். அவளுக்காக காத்துட்டு இருந்தேன்”

“வந்தாளா வரலையா?”

“சரியா மூன்ரைக்கு வந்துட்டா. வந்து நேரா காபி வாங்க போயிட்டா. நானும் சரினு போய் அங்க காபி வாங்கினேன். அவ அவளுக்கு மட்டும் தான் வாங்கினா. எனக்கு நான் தான் தனியா வாங்கினேன்”

“ரொம்ப முக்கியம். கதையை சொல்லுடா”

“ரெண்டு பேரும் காபி வாங்கிட்டு வந்து சீட்ல உட்கார்ந்தோம். ரெண்டு சிப் குடிச்சிட்டு நான் பேச ஆரம்பிச்சேன். ’சொல்லு தீபா, வீட்ல என்ன சொன்னாங்க?’ அப்படினு கேட்டேன்.
‘நல்லபடியா பொயிட்டு பத்திரமா இருமானு சொன்னாங்க’ அப்படினு ரொம்ப கேஷ்வலா சொன்னா”

“டார்ச்சர்ஸ் ஆஃப் இந்தியாவா இருக்கு. சரி அப்பறம் என்ன ஆச்சு”

“எனக்கும் கடுப்பாயிடுச்சு. ‘தீபா, வீட்ல நம்ம கல்யாணத்தை பத்தி பேசறனு சொன்னியே. என்னாச்சு’.
‘நான் வீட்ல சொல்லலை. எனக்கு எப்படி ஆரம்பிக்கறதுனு தெரியலை. அவுங்க கேட்டா என்ன பதில் சொல்றதும்னு தெரியலை’”

“அடப்பாவி. அப்பறம் எதுக்கு வீட்ல கேட்டு சொல்றேனு சொன்னா?”

”இரு இன்னும் முடியலை. சொல்றேன் கேளு. ‘அப்ப வீட்ல கேட்டு சொல்றேனு சொன்ன’.
‘அப்ப ஏதோ ஒரு தைரியத்துல சொல்லிட்டேன். வீட்டுக்கு போனவுடனே அந்த தைரியமெல்லாம் பயமா மாறிடுச்சு. அவுங்க கல்யாண பேச்சு எடுத்தா அப்ப ஞாபகம் வந்தா சொல்றேன்’”

“விடு மச்சி. ரொம்ப புத்திசாலியா இருக்கா. வேற பொண்ணை பார்த்துக்கலாம்”

“டேய் நாயே இன்னும் முடியல. கேளு. ஒரு நிமிஷம் நானும் எதுவும் பேசாம உட்கார்ந்திருந்தேன். அவளே பேச ஆரம்பிச்சா, ‘எங்க வீட்ல பேசறனு சொன்னதுக்கு பதிலா, உன்னை கல்யாணம் பண்ணிக்க எனக்கு விருப்பமில்லைனு நான் அப்பவே சொல்லிருக்கலாம். என் தப்பு தான். சாரி’”

“”

“ஒரு நிமிஷம் எனக்கு மூளை எல்லாம் ப்ளாங்கா ஆகிடுச்சு. இதே பதிலை அவ அன்னைக்கு சொல்லிருந்தா கூட நான் இந்த அளவுக்கு ஃபீல் பண்ணியிருக்க மாட்டேன். ஆஃப் ஷோர்ல இருந்து கஷ்டப்பட்டு வீசாவெல்லாம் வாங்கிட்டு ஆன் சைட்டுக்கு கிளம்பி ஏர் போர்ட்டுக்கு போனதுக்கப்பறம் ஃபோன் பண்ணி, பிராஜக்ட் ஊத்திக்கிச்சி. நீ ஆன் சைட் எல்லாம் போக வேண்டாம். திங்க கிழமை ஆபிஸுக்கே வா, பேசிக்கலாம்னு சொன்னா எப்படி இருக்கும். விசா ரிஜக்ட் ஆகறதை விட இது கொடுமையில்லையா. அதே மாதிரி தான் எனக்கும் இருந்துச்சு. நிச்சயம் கண்ணு கலங்க கூடாதுனு ஒரு முடிவோட இருந்தேன்”

“வீட்றா மச்சி. இந்த மாதிரி ஏதாவது நடக்கும்னு தெரிஞ்சி தான், நான் வரும் போது MC ஹாஃப் வாங்கிட்டு வந்துட்டேன். ஸ்பிரைட் கூட இருக்கு”

“இருடா. இன்னும் முடியல”

“இன்னும் முடியலையா. இப்பவே இவ்வளவு சொன்னா, இன்னும் அடிச்சிட்டு எவ்வளவு நேரம் பேசப்போறியோ. சரி சீக்கிரம் சொல்லு”

“ஒரு நிமிஷம் அமைதியா இருந்துட்டு, என் முகத்தை பார்த்து சிரிச்சிக்கிட்டே பேச ஆரம்பிச்சா, ’இந்த மாதிரி நான் பொய் சொன்னாலும், நீ என்னை கடைசி வரைக்கும் இதே மாதிரி நேசிப்பாயா’ அப்படினு கேட்டா”

“வாவ்.... சூப்பர்டா மச்சான் “

”டேய் விசிலடிக்கறதை நிறுத்துடா”

“மச்சி... பட்டையை கிளப்பிட்டடா. எப்படிடா ஒன்னைய போய் ஒரு பொண்ணு லவ் பண்ண ஒத்துக்கிச்சு?”

“டேய், இதுல ஒத்துக்கறதெல்லாம் ஒண்ணுமில்லை. அவளுக்கும் என்னை ரொம்ப பிடிக்குமாம். நான் சொன்னப்ப அவளுக்கு உடனே எப்படி ரியாக்ட் பண்றதுனு தெரியலையாம். வீட்ல போய் யோசிக்கும் போது அவளுக்கு என்னை பிடிச்சிருக்குதுனு அவளேக்கே புரிஞ்சிடுச்சாம்”

“சூப்பர்டா மச்சான். இந்த மாதிரி ஏதாவது நடக்கும்னு தெரிஞ்சி தான், நான் வரும் போது MC ஹாஃப் வாங்கிட்டு வந்துட்டேன். ஸ்பிரைட் கூட இருக்கு. வா இதை தண்ணி அடிச்சி எஞ்சாய் பண்றோம்”

(முற்றும்)

Sunday, February 08, 2009

பொய் சொன்னால்... நேசிப்பாயா? - 2

"தீபா, நான் இவ்வளவு சீக்கிரம் எல்லாம் நடக்கும்னு எதிர்பார்க்கவேயில்லை”

“நானும்”

“ரெண்டு பேர் வீட்லயும் ஒத்துக்கிட்டு, இவ்வளவு க்ராண்டா கல்யாணம் நடத்தி, இவ்வளவு அழகான முதல் இரவு அறைல இப்படி நீயும், நானும் இருப்போம்னு நான் சத்தியமா எதிர்பார்க்கவேயில்லை”

”ம்ம்ம்”

“நான் ஒண்ணு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டீயே”

“ “

“ஏன் அப்படி பாக்கற. நான் எதுவும் தப்பா கேக்க மாட்டேன்”

“மட சாம்பிராணி. நீ என் புருஷன். நீ எது கேட்டாலும் தப்பில்லை”

“அடிப்பாவி. நான் கேக்க வந்தது, நீ நிஜமாலுமே என்னை லவ் பண்ணியா இல்லை நான் பேசனதை கேட்டு என்னை பிடிக்க ஆரம்பிச்சிதா?”

”இப்ப எதுக்கு அது?”

”சும்மா தெரிஞ்சிக்கதான். என் கல்யாணம் காதல் கல்யாணமா, இல்லை அரேஞ்சிடு மேராஜானு எனக்கே சந்தேகமா இருக்கு”


ஓ! உங்க கல்யாணமா? நான் கூட நம்ம கல்யாணமோனு நினைச்சேன். உங்க கல்யாணம் எப்படினு நீங்க தான் சொல்லனும். என்னை கேட்டா?”

“ஆமாம். நான், நான் அவனில்லை ஜீவன். அப்படியே நாலஞ்சு கல்யாணம் பண்ணிக்கிட்டேன்”

“ஏன் பண்ணி தான் பாருங்களேன்”

“கோச்சுக்காதடா. நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுவியாம். ப்ளீஸ்”

”சொன்னா என்ன தருவீங்க?”

“நீ சொல்லு அதுக்கேத்த மாதிரி ஒண்ணு தரேன்”

”லவ் மேரேஜ் தான்”


“ச்சீ. என்ன இது இப்படி எச்சி பண்ணிட்டு. ச்சீ. நீ இப்படி பண்ணுவனு தெரிஞ்சிருந்தா நான் சொல்லியிருக்கவே மாட்டேன்”

“ஏ அதுக்கு ஏன் இப்படி அடிக்கற”

“இத்தனை தடவை எழுந்திரி எழுந்திரினு சொல்லி எழுந்திருக்கலனா, உன்னை அடிக்காம என்ன கொஞ்சியா எழுப்புவாங்க? எழுந்திருச்சி தொலைடா”

ச்சி. மறுபடியும் கனவா?

“சனிக்கிழமையானா போதும், இப்படி இழுத்து போட்டுட்டு தூங்கி தொலைய வேண்டியது. எழுந்திரிச்சி தொலைடா. எனக்கு பசிக்குது”

“மணி என்ன?”

“பதினொன்னு ஐம்பத்தஞ்சு. ஏன் இப்ப ஏதாவது கனவை கெடுத்துட்டனா?”

“ஆமாம். ஆனா நல்ல வேளை ஒரு பத்து செகண்ட் கழிச்சி எழுப்பன”

“ஓஹோ. அப்படி போகுது. அப்துல் கலாம் சொன்னதை ஒழுங்கா ஃபாலோ பண்றவன் நீ ஒருத்தன் மட்டும் தான். ஆனா அவர் வேற ஒரு மேட்டருக்கு கனவு காண சொன்னாரு”

“அதெல்லாம் ஒண்ணுமில்லை”

“சரி சரி. இந்த வாரமாவது சொன்னியா இல்லை வாஸ்து சரியில்லை, குரு பெயர்ச்சி வரட்டும்னு சொல்லாம விட்டுட்டயா?”

“சொல்லிட்டன்டா”

“வாவ். என்ன சொன்னா?”

“அவ என்ன சொன்னானு எனக்கு புரியல”

“புரியலையா? ஏன் தெலுகுல சொன்னாளா? அவ தமிழ் பொண்ணா இல்லை கொல்ட்டியா?”

“விளக்கெண்ணெய். அதெல்லாம் ஒண்ணுமில்லைடா. அவ தமிழ் பொண்ணுதான். ஆனா அவ சொன்னதுல இருந்து அவ என்னை காதலிக்கறால இல்லையான புரியல”

“இப்படி பசங்களை அலைய விடறதே அவளுகளுக்கு வேலையா போச்சு. என்ன நடந்ததுனு சொல்லு. நான் வேணா டீகோட் பண்ணி சொல்றேன்”

”இரு பல்லு விளக்கிட்டு வரேன்”

“ஏன்டா, காட்ல சிங்கம், புலி எல்லாம் பல்லா விளக்குது. சொல்லிட்டு போய் பல்லு விளக்கிக்கோடா”

“இரு வரேன்”

...

“சரி. இப்ப சொல்லு. எப்ப சொன்ன? என்ன சொன்ன?”

”நேத்து தான் சொன்னேன். எங்க கம்பெனில எல்லா ப்ராஜக்ட் பார்ட்டியும் நிறுத்திட்டாங்க”

“இது என்ன பிரமாதம், எங்க கம்பெனில எல்லாம் பாதி பேருக்கு வேலையை விட்டே நிறுத்திட்டாங்க”

“சொல்றதை கேளுடா. சும்மா குறுக்க குறுக்க பேசாத”

“சரி சொல்லி தொலை. இன்னைக்கு உனக்கு நல்ல நேரம்”

“கம்பெனில எப்படியும் பிராஜக்ட் பார்ட்டினு தலைக்கு 250 ரூபாய் கொடுப்பாங்க. அந்த பணத்தை நாமலே போட்டு பிராஜக்ட் பார்ட்டி போகலாம். ஒரு ரிலாக்சேஷன் கிடைக்கும்னு எங்க மேனஜர் சொன்னாரு”

“குட் மேனஜர். இவரை மாதிரி நாலு பேர் இருந்தா கம்பெனி தானா முன்னேறிடும்”

“சரி, எப்படியாவது பாதி நாள் ஃபிரியா இருந்தா போதும்னு எல்லாரும் ஓகே சொல்லிட்டோம்”

“இல்லைனா மட்டும் வேலை செய்யற மாதிரி”

“டேய் சொல்றதை கேளு.
நேத்து மதியம், அந்த ரிசார்ட்ல எல்லாரும் ஆளாளுக்கு ஏதோ விளையாடிட்டு இருந்தாங்க. நாங்க நாலு பேரும் ஷெட்டில் கார்க் விளையாடிட்டு இருந்தோம். ஒரு செட் முடிஞ்சவுடனே, ரெண்டு பேர் வந்து அவுங்களையும் சேர்த்துக்க சொல்லி சொன்னாங்க. அந்த சைட்ல இருந்து பேட்டை கொடுத்துட்டு தீபா போனா, நானும் சரினு எங்க சைட்ல இருந்து கொடுத்துட்டு வெளிய வந்துட்டேன்”

“டேய், அது பேட் இல்லைடா ஷெட்டில் ராக்கெட். கிரிக்கெட் பேட்டுக்கும் ஷெட்டில் ராக்கெட்டுக்கும் வித்யாசம் தெரியாம எப்படிடா ஒரு ஆட்டம் ஆடின?”

“இப்ப நீ வாய மூடலைனா நான் சொல்ல மாட்டேன்”

“சரி சரி. சொல்லு சொல்லு. நான் எதுவும் பேசல”

“விளையாடின களைப்புல தீபா தண்ணி குடிக்க போனா. நானும் அப்படியே தண்ணி குடிக்க போனேன்”

“இப்ப தான் விறுவிறுப்பா போகுது. சொல்லு சொல்லு”

“தண்ணி குடிச்சிட்டு ரெண்டு பேரும் அந்த ரூம்ல இருந்து வெளிய வந்தோம். வெளிய அழகா ரோடுக்கு ரெண்டு பக்கமும் செடியெல்லாம் வெச்சி கார்டென் மாதிரி இருந்துச்சு”

“ரொம்ப முக்கியம். கதையை சொல்லுடா”

”சரி இதை விட்டா வேற சான்ஸ் கிடைக்காதுனு நானே அவள்ட பேச ஆரம்பிச்சேன்”

“சூப்பர்டா மச்சான். இப்ப தான் என் ரூமேட்னு ப்ரூவ் பண்ற”

“ம்ம்ம். தீபா, அப்படியே ஒரு வாக் போகலாமானு கேட்டேன்”

“ம்ம்ம்”

“என்னை ஒரு மாதிரி பார்த்தா. அவ பார்வைலயே ஒரு குழப்பம் தெரிஞ்சிது. சரினு சொல்லி ரெண்டு பேரும் நடக்க ஆரம்பிச்சோம்”

“ம்ம்ம்”

“ஒரு ரெண்டு நிமிஷம் ரெண்டு பேரும் அமைதியா நடந்து போனோம். நான் தான் பேச ஆரம்பிச்சேன். தீபா, ஒரு முப்பது வருஷம் கழிச்சி இப்படி நாம நடந்து போனாலும் நான் இப்ப இருக்கற மாதிரி சந்தோஷமா இருப்பேனு தோனுது. எனக்கு வேற எப்படி சொல்றதுனு தெரியல. உன் கூட இந்த வாழ்க்கை முழுசும் இருந்தா நல்லா இருக்கும்னு தோணுது தீபா. எனக்கு இந்த ஃபீலிங்ஸ்க்கு பேற என்னனு சொல்ல தெரியல. ஆனா உன் கூட இருந்தா மன நிறைவா இருக்கு. நீ சந்தோஷப்பட்டா என் மனசும் சந்தோஷமடையுது, நீ கஷ்டப்பட்டா எனக்கும் கஷ்டமா இருக்கு. இந்த ஆயூசு முழுக்க உன்னை சந்தோஷமா வெச்சிட்டு நானும் சந்தோஷமா இருப்பேனு என் உள்மனசு சொல்லுது தீபா”

“வாவ். கலக்கிட்டடா மச்சான். எப்படிடா இப்படியெல்லாம்? சரி.. சரி. அவ என்ன சொன்னா?”

“அவ என்னை வித்தியாசமா பார்த்தா. ப்ரொபோஸ் பண்றியா”?னு கேட்டா. அதுக்கு நான், “தெரியலை. எனக்கு இதுக்கு பேரு என்னனு தெரியலை. என் மனசுல இருக்கறதுக்கு பேரு காதல்னா, நான் உன்னை காதலிக்கிறேன். இப்ப நான் உனக்கு என் மனசுல இருக்கறதை சொல்றதுக்கு பேரு ப்ரோபோஸ்னா நான் உனக்கு ப்ரொபோஸ் பண்றேனு தான் நினைக்கிறேன்”

“கலக்கல்டா மச்சான். அப்பறம்?”

“அவளுக்கு என்ன பேசறதுனே தெரியல. ஒரு நிமிஷம் அமைதியா இருந்தா. அப்பறம் பேச ஆரம்பிச்சா, to be frank, எனக்கு இதுக்கு என்ன பதில் சொல்றதுனு தெரியலை. நான் கொஞ்சம் யோசிக்கனும். எனக்கு ஒரு ரெண்டு நாள் டைம் கொடுப்பீங்களா?”

“ஆஹா. அப்ப திங்க கிழமை தான் தெரியுமா?”

“இருடா. இன்னும் முடியலை”

“ஓ. சொல்லு சொல்லு”

“அப்படியே பார்ட்டி முடிஞ்சி எல்லாரும் ஆபிஸ்க்கு வந்தோம். ப்ளான் எப்படினா, எல்லாரும் ஆறு மணிக்கு ஆபிஸ்க்கு வந்து ஸ்வைப் அவுட் பண்ணிட்டு, அவுங்க அவுங்க பஸ் பிடிச்சி போகற மாதிரி”

“நல்ல விவரமா இருக்கீங்கடா. சரி சொல்லு”

“கொஞ்சம் வேலை இருந்ததால நான் என் சீட்டுக்கு போனேன். கொஞ்ச நேரம் வேலை பார்த்துட்டு இருக்கும் போது, அவ என் பின்னாடி வந்து நின்னு கூப்பிட்டா”

“ம்ம்ம்”

“இதுல நான் யோசிக்கறதுக்கு பதிலா எங்க வீட்லயே கேக்கலாம்னு யோசிக்கிறேன். எங்க அப்பா, அம்மாகிட்ட பேசிடலாம்னு பாக்கறேன். ஆர் யூ ரியல்லி சீரியஸ் அபோட் திஸ்? அப்படினு கேட்டா?”

“அடப்பாவி. என்னடா டைரக்டா, அப்பா, அம்மானு போயிட்டா?”

“எனக்கும் அது தான் ஷாக். இருந்தாலும் அதுல எனக்கும் சந்தோஷம் தான். அவளால மனசளவுல என்னை ஏத்துக்க முடிஞ்சிதுனு. நானும் தெளிவா பேச ஆரம்பிச்சேன், தீபா, வேணும்னா நான் நேர்ல வந்து பேசறதுனாலும் பேசறேன். உனக்கு விருப்பமிருந்தால்... இல்லைனா நீயே பேசிட்டு சொல்லு”

”அட்ரா சக்கை. எப்படிடா டாக் உனக்கு இந்த அளவுக்கு பேச வந்துச்சு?”

“அது என்னுமோ அப்ப வந்துடுச்சு. சரி நான் வீக் எண்ட் முடிஞ்சி வந்து சொல்றேன்னு சொல்லிட்டு கிளம்பிட்டா”

“அப்ப, திங்ககிழமை தான் தெரியுமா?”

“ஆமா...”

(தொடரும்...)

Saturday, February 07, 2009

சூப்பர் ஸ்டார்ஸ்

மக்கள் திலகம் & நடிகர் திலகம்

சூப்பர் ஸ்டார் & உலக நாயகன்இளைய தளபதி & தல

முதல் ரெண்டு வீடியோல இருக்கற நடிப்பையும் கடைசி வீடியோல இருக்கற நடிப்பையும் பாருங்க... என்ன கொடுமை சரவணன். அதுவும் விஜய் நடிப்பு... சான்சே இல்லை.

அந்த பாவத்துக்கு போனா போகுதுனு ஒரு வீடியோ

Software லொள்ளு

டேய் மச்சான், இன்னைக்கு திடீர்னு எங்க க்ளைண்ட் எங்க கம்பெனில எல்லா அக்கௌண்டையும் க்ளோஸ் பண்ணிட்டாண்டா. என்ன பண்றதுனு எல்லாரும் டென்ஷனா இருக்கும் போது எங்க ஹெச்.ஆர் என்னை கூப்பிட்டான். நானும் சரினு போனேன். அப்ப என்னை பார்த்து, 

”என்னங்க சிவா இப்படி ஆகிடுச்சி, படுபாவி பசங்க. எல்லாருமே சேர்ந்து உங்களை இந்த நிலைமைக்கு கொண்டு வந்துட்டாங்களே! சீட்டுக்கு போய் என்ன பண்ண போறீங்க சிவா, டெஸ்டிங் பண்ண போறீங்களா? மெயிண்டனன்ஸா இல்லைனா ஏதாவது ஜாவா கோடிங்... இல்லை நான் வேணா ஏதாவது கால் சென்டர்ல சொல்லி வேலை வாங்கி தரதா? 
ஐயய்யோ ஆனா அதுக்கெல்லாம் முன் அனுபவம் வேண்டுமே. உக்கார்ந்த இடத்துலே நோகாம நோம்பு கும்பிடற ஒரு வேலை இருக்கு செய்யறீங்களா? அதான் Naukriல ரெஸ்யூம் போட்டு வேலை தேடறது.” அப்படினு சொல்லிட்டாண்டா...

.......

எனக்கு ரெசஷன் பயத்தை காட்டிட்டானுங்க பரமா. அவுங்களுக்கு ஏதாவது பண்ணனும் பரமா. ஏதாவது பண்ணனும். 

.......
ஏன்டா பொண்ணு பாக்க போனியே என்ன ஆச்சு?

கூட வெச்சிருக்கவங்களுக்கு எல்லாம் பெட்ரமாக்ஸ் லைட்டு கொடுக்கறது இல்லைங்கற மாதிரி, சாப்ட்வேர் இஞ்சினியருங்களுக்கு எல்லாம் பொண்ணு கொடுக்கறதில்லைனு சொல்லிட்டானுங்கடா...

......
மக்கள் உணர்ந்து கொள்ள இது 2000 ரெசஷனல்ல... ரெசஷனல்ல... ரெசஷனல்ல...
அதையும் தாண்டி மோசமானது.

......
உண்மை கம்பெனி க்ளைண்ட்ஸ்க்கு நாங்க ப்ராஜக்ட் பண்ண மாட்டோம்னு எங்க சொன்னோம். க்ளைண்ட்ஸா வந்து எங்ககிட்ட பிராஜக்ட் கொடுத்தா நல்லா இருக்கும்னு சொன்னோம்

- விநாயக மூர்த்தி

Thursday, February 05, 2009

பொய் சொன்னால்... நேசிப்பாயா?

"ஏ! பயங்கரமா குளிருது. ஒரு முத்தம் கொடேன்”

“என்ன?”

“குளிருக்கு முத்தம் தான் மருந்துனு வெள்ளைக்காரன் சொல்லியிருக்கான். அதான் கேக்கறேன். ப்ளீஸ்”

“உதை வாங்கப் போற. இத்தனை நாள் நல்லா பையனா இருந்துட்டு திடீர்னு அட்டகாசம் பண்றியா?”

“முத்தம் கேட்டா கெட்ட பையனா? லவ் பண்ற பொண்ணுக்கிட்ட கேட்காம தெருவுல போற வரவக்கிட்டயா கேட்பாங்க?”

“ஏன் தைரியமிருந்தா கேட்டு பாரேன்”

“நான் என்ன காரணமில்லாமலா கேட்டேன். -10 டிகிரி ஃபேரன்ஹீட்ல இருந்து உள்ள வந்திருக்கோம். நம்ம ஊர் கணக்கு படி பார்த்தா -25 டிகிரி செல்சியஸ். அதனால தானே கேட்டேன்”

“ “

“என்னது இது கன்னத்துல கொடுக்கற. அதுவும் இதுக்கு பேரு முத்தமா? வெறும் சத்தம்”

“இதுக்கு மேல நீ பேசன உன் கன்னத்துல வரும் ரத்தம்”

“என்ன டீ.ஆர் மாதிரி பேசற. பெரிய கவிஞினு மனசுல நினைப்பா?”

“என்னது கவிஞியா?”

”கவிஞர்க்கு பெண் பால் கவிஞி தானே”

“அப்பா. செம்ம மொக்கை”

“சரி அது இருக்கட்டும். நான் கேட்ட முத்தம் என்னாச்சு”

“நான் சொன்ன ரத்தம் மறந்து போச்சா ?”

“டேய் மணி பன்னெண்டு ஆச்சு... எழுந்திரி”

“ஆஹா முத்தத்துக்கும், ரத்தத்துக்கும் நடுவுல இது என்ன புது சத்தம்?”

“டேய் எழுந்திரிடா. சாப்பிட போகலாம். பசிக்குது”

ஆஹா. இவ்வளவும் கனவா? 

“டேய் இந்த வெயில்ல இழுத்து போத்திட்டு தூங்கிட்டு இருக்க. எழுந்திரிடா”

“டேய் நீ போய் சாப்பிடு. இப்படி ஒரு முக்கியமான கனவு கண்டுட்டு இருக்கும் போது எழுப்பிட்டியேடா பாவி. போய் தொலை”

“டேய் பகல் கனவு பலிக்காதுடி. ஒழுங்கா எழுந்திரி. அப்பறம் தனியா போக போர் அடிக்குதுனு என்னைய மறுபடியும் கூப்பிட்டு டார்ச்சர் பண்ணுவ”

“மச்சான். பகல் கனவு பலிக்காதா?” வேகமாக எழுந்து உட்கார்ந்தான்.

“நாதாரி. பன்னெண்டு மணிக்கு காணறது பகல் கனவாடா? அது மதிய கனவு. இந்த நேரம் வரைக்கும் எந்த நாயும் தூங்காதுனு நினைச்சி எவனும் இது வரைக்கும் பழமொழி சொன்னதில்லை.  நான் வேணா புது மொழியா உனக்காக ஒண்ணு க்ரியேட் பண்றேன். மதிய கனவு மறக்காது. ஓகேவா?”

”அப்படினா?”

“பழமொழி சொன்னா அனுபவிக்கனும். ஆராயக்கூடாது. புரியுதா?”

“டேய். எவ்வளவு சூப்பர் கனவு தெரியுமாடா? இப்படி அநியாயமா கெடுத்துட்டடா”

“சரி என்ன கனவு சொல்லி தொலை”

“நானும் தீபாவும் கார்ல ஆபிஸ்ல இருந்து வீட்டுக்கு வரோம். வெளிய -10 டிகிரி ஃபேரன்ஹீட். கார் பார்க் பண்ற இடத்துல இருந்து வீட்டுக்கு வர வழியெல்லாம் செம குளிர். அதுல அஞ்சு நிமிஷம் நடந்து வீட்டுக்கு வறோம். பயங்கர குளிர்”

“அதான் இந்த சென்னை வெயில்லையும் போர்வையை இழுத்து போட்டு தூங்கனையாக்கும்? அது சரி, இது நடக்கறது எங்க? ஸ்விசர் லேண்ட்லயா? செலவே இல்லாம கூப்பிட்டு போயிட்ட போல?”

”அதெல்லாம் இல்லைடா. நாங்க ரெண்டு பேரும் பாஸ்டன்ல ஆன்சைட்ல இருக்குற மாதிரி கனவு. நேத்து ஆன்சைட் கால்ல ரெண்டு பேரும் இருக்கும் போது அங்க -10னு சொன்னாங்க. அதுக்கு அவ அந்த ரூம்லயே அந்த குளிரோட எஃபக்டை கொடுத்தா. அது மனசுல பதிஞ்சு போச்சு. அதான் கனவுல வந்துடுச்சு. ரெண்டு பேரும் ஒரே அப்பார்ட்மெண்ட். டூ பெட்ரூம்.”

“ஓ. அந்த ரேஞ்சுக்கு போயிட்ட. சரி, அப்பவாது லவ் பண்றனு சொல்லி தொலைச்சயா இல்லை இதயம் முரளி மாதிரி டார்ச்சர் பண்ணிட்டு இருந்தியா?”

“நான் லவ் சொன்னனானு தெரியலை. ஆனா ரெண்டு பெருக்கும் காதலிக்கறோம்னு தெரிஞ்சிருந்தது. முத்தம் கொடுக்க வந்தா, அந்த நேரம் பார்த்து எழுப்பிட்ட. பாவி”

”ஓ. அந்த அளவுக்கு. மொதல்ல லவ்வை சொல்லி தொலைடா. இல்லைனா எவனாவது பிக் அப் பண்ணிட்டு போயிட போறான்”

“நானும் சொல்லலாம்னு தான்டா பாக்கறேன். ஆனா அவக்கிட்ட போனாலே அவ பார்க்கற பார்வைலயே என் வாய்ல வார்த்தை நின்னுடுது”

“இந்த பார்வை, போர்வைனு சொல்லியே வீணா போக போற. மூடிட்டு திங்க கிழமை போனவுடனே சொல்லிடு. சரியா?”

“எப்படி சொல்றதுனு ஏதாவது ஐடியா கொடேன்”

“நான் ஐடியா கொடுக்கறது இருக்கட்டும். நீ போய் பல்லு விளக்கிட்டு வா. கப்பு தாங்கல. இந்த கப்புல நான் யோசிச்சா எதுவும் ஒர்க் அவுட் ஆகாது”

...

“சரி இப்ப சொல்லு”

“நான் சொல்றது இருக்கட்டும், எப்படி சொல்லலாம்னு ஏதாவது நீயே யோசிச்சி வெச்சிருப்பியே. அதை எடுத்து விடு”

"எனக்கும் அடிக்கது தோணும். ரொம்ப சாதாரணமா இப்படி சொல்லலாமா? I want to share the rest of my life with you னு”

“ஏதோ ஷேர் ஆட்டோ பிடிக்க கூப்பிடறனு நினைச்சிக்க போறாடா. என்னுமோ ஃபாதர் ஆஃப் பாரின் கண்ட்ரி ரேஞ்சுக்கு பேசறியே. இந்த மாதிரி எல்லாம் பேசறதுக்கு இது என்ன கௌதம் மேனன் படமா? தமிழ்ல சொல்லுடா என் வெண்ட்ரு”

“கவிதை மொழியில சொல்லலாமா?”

”எங்க சொல்லு பார்க்கலாம்?”

“வானமோ நீலம்...
நீதான் என் பாலம்”


”நிறுத்து நிறுத்து... இது எங்கயோ கேட்ட மாதிரி இருக்கே”

“சென்னை 28ல அவன் இதை ஆரம்பிப்பான். முடிக்காம விட்டுடுவான். அதான் நான் கண்டினியூ பண்ணலாம்னு பார்த்தேன்”

“அதுக்கு 
இலையோ பச்சை
நீ ஒரு எச்சை” னு அவ கண்டினுயூ பண்ணா என்ன பண்ணுவ?”


“ஏன்டா அபசகுனமா பேசிட்டு இருக்க?”

“டேய், ரொம்ப சாதாரணமா சொல்லுடா. இதை இவ்வளவு காம்ப்ளிக்கேட்டடா மாத்தாத. புரியுதா?”

“சாதாரணமானா எப்படி? 

”அவளை உனக்கு எதுக்காக பிடிக்கும்னு யோசிச்சி பாரு. அதையே அவக்கிட்ட சொல்லி புரிய வை”

“அப்படி நான் சொல்லி அவ புரிஞ்சிக்கலைனா?”

“அவ புத்திசாலினு புரிஞ்சிட்டு ஃபிரியா விடு. நல்ல பொண்ணா உங்க வீட்ல பார்ப்பாங்க, அவளை கல்யாணம் பண்ணிக்கோ”

“போடா நாயே. இப்படியெல்லாம் சொல்லாத”

“எப்படியாவது சொல்லி தொலை. இப்ப எனக்கு பசிக்குது. வா சாப்பிட போகலாம்”

(தொடரும்...)