தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்
Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Sunday, September 25, 2011

Dookudu - Telugu Movie

அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளில் தியேட்டரே உறைந்து போகிறது, அடுத்த ஐந்து நிமிடத்தில் சரவெடி காமெடியில் தியேட்டரே அதிர்கிறது, அடுத்து வரும் செண்டிமெண்ட் காட்சியில் பலர் கண்களில் நீர். இது போதாதா சூப்பர் ஹிட் ஆக? தூக்குடு - அமெரிக்காவிலும், ஆந்திராவிலும் தியேட்டரில் நின்று கொண்டு பார்க்கும் அளவுக்கு ஹிட்.



போக்கிரி ஹிட் ஆனது மகேஷ் பாபுவிற்கு நல்லதா? கெட்டதா? என்று ஒரு பட்டிமன்றமே வைக்கலாம். அப்படி வைத்தாலும் வழக்கம் போல வழவழா கொழகொழா முடிவு தான் கொடுப்பார் சாலமன் ஆப்பைய்யா. போக்கிரி எதிர்பார்ப்பில் அடுத்து வந்த அனைத்து படங்களுமே தொடர்ந்து ஃப்ளாப். 3 இடியட்ஸ் ரீமேக் ஆந்திராவில் எப்படி போகும் என்று எனக்கு ஒரு சந்தேகம். ஏனென்றால் தமிழில் காலேஜ் பசங்க ஹிந்தி படம் பார்ப்பது குறைவு. ஆனால் ஆந்திராவில் ஹிந்தி அவர்களுக்கு மூன்றாவது மொழி, மேலும் ஹைதிராபாத்தில் தெலுகுக்கு குறைவில்லாமல் ஹிந்தி பேசும் மக்கள். அதனால் 3 இடியட்ஸ் தெலுகில் சூப்பர் ஹிட் ஆக சான்ஸ் குறைவு என்பது என் எண்ணம்.

அப்படினா மகேஷ் அவ்வளவு தானா என்று நினைத்து கொண்டிருக்கும் போது வந்து அந்த குறையைப் போக்கிவிட்டது தூக்குடு. அப்பாவிடமிருந்து சூப்பர் ஸ்டார் பட்டம் மகேஷுக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆகி ப்ரின்ஸ் மகேஷிலிரிந்து சூப்பர் ஸ்டார் மகேஷ் ஆகிவிட்டார். போக்கிரியைவிட இதில் ஆக்‌ஷன் காட்சிகள் அதிகம். அதைவிட வேகமும் அதிகம். ட்விட்டரில் நண்பர் ஒருவர் மகேஷ் பாபுவிடம் அப்படி என்ன இருக்கிறது? சாக்லேட் பையன் மாதிரி இருக்கிறார் என்றார். அதற்கு ஒரே பதில் ஸ்டைல்.

தூக்குடு கதை ஒன்றும் உலகத்தரக் கதை கிடையாது. தெலுகு மாஸ் ஹீரோக்கள் நடிக்கும் நூறு படங்களில் தொன்னூறு படங்களில் இதே கதை தான். ஒரு நிழலுலக டானை எப்படி கதாநாயகன் அழிக்கிறார் என்பது தான் கதை. ஆனால் அதை சொன்ன விதத்தில் தான் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர் சீனு வைத்லா. ப்ரமானந்தம், MS நாராயணா காமெடி தான் படத்திற்கு மிகப் பெரிய ப்ளஸ். அதிலும் MS நாராயணா நகைச்சுவைக் காட்சிகள் ப்ரமானந்தத்தையே மிஞ்சிவிடும் அளவிற்கு இருக்கிறது. அதுவும் இரண்டுமே கரண்ட் ட்ரெண்ட் வைத்து செய்திருப்பது தான் ஹை லைட். தமிழில் ரீ-மேக் செய்தால் வடிவேலுக்கு அட்டகாசமாக பொருந்தும், இரண்டு வேடங்களுமே. அதான் அம்மாவுக்கும் கேப்டனுக்கும் நட்டு புட்டுக்கிச்சே, இனிமேவாது வடிவேலுவை கொண்டு வாங்கப்பா.

ஆக்‌ஷன் காட்சிகள் போக்கிரிக்கு குறைவில்லாமல் அதே ஸ்டைலில் இருக்கிறது. அத்தடுவில் ஒரு சண்டைக் காட்சியில் தனிக்கல பரணி சொல்லுவார், அவன் அடிக்கறதே வித்யாசமா இருக்கு. ஒண்ணு கோபமா அடிப்பாங்க இல்லை வேகமா அடிப்பாங்க. இவன் என்னடா நிதானமா அடிக்கறான். ஏதோ கோட்டைக் கட்ற மாதிரி, பூ கட்ற மாதிரி ரொம்ப ஜாக்கிரதையா, ரூல்ஸ் ஃபாலோ பண்ற மாதிரி அடிக்கிறான் அப்படினு. அது தான் மகேஷ் பாபு ஸ்டைல். இதுலயும் ஆக்‌ஷன் காட்சிகள் அப்படி தான்.

செண்டிமெண்ட் - அப்பா மகன் செண்டிமெண்ட். பிரகாஷ் ராஜ் மகேஷ் பாபு அப்பா. அவருக்கு அல்வா சாப்பிடற ரோல். முதல் சில நிமிடங்களுக்கு வீரமான பாத்திரம், இரண்டாவது பகுதியில் செண்டிமண்ட் அப்பா பாத்திரம். இதெல்லாம் அவருக்கு ஜுஜூபி. அட்டகாசமாக செய்திருக்கிறார். நாசருக்கு பெரிய பாத்திரம் இல்லையென்றாலும் அவர் இருப்பது ஒரு செண்டிமண்ட் போல. ஹீரோயின் சமந்தா வருகிறார், போகிறார், டான்ஸ் ஆடுகிறார். முகத்தில் கலை இல்லை, கலராக இருக்கிறார். சோனு சூத் வழக்கம் போல டான் கேரக்டர். மொக்கையான வில்லன். இசை பெரிதாக கவரவில்லை.

நான் ரசிச்ச சின்ன சின்ன காட்சிகளெல்லாம் சொல்லி உங்க அனுபவத்தைக் கெடுக்க வேண்டாம் என்பதால் அதைப் பற்றி பெரிதாக சொல்லவில்லை. போக்கிரி, அத்தடு, பிருந்தாவனம் இதெல்லாம் உங்களுக்கு பிடித்திருந்தால் தூக்குடுவும் நிச்சயம் பிடிக்கும். வெறும் மசாலா என்று சொல்ல முடியாது. வேண்டுமென்றால் ஆந்திரா ஃபுல் மீல்ஸ் என்று சொல்லலாம்.

Friday, September 16, 2011

வெட்டிப் பேச்சு - 09/16/2011

2011ல் ஒரு பதிவு கூட இன்னும் எழுதலயேனு தோணுச்சு. சரி எப்பவும் போல ஏதாவது ஒரு மொக்கைப் பதிவு எழுதி ஜீப்ல ஏறிடுவோம்னு முடிவு பண்ணியாச்சு.

.....

நியூ யார்க் அளவிற்கு ஜார்ஜியாவில் வேலைப் பளு இல்லை. அதே போல அங்கு இருந்து அளவிற்கு கட்டுப்பாடும் இல்லை. ஓரளவு ஜாலியாவே வாழ்க்கை போகுது.

நியூ யார்க் விட்டு நாம வந்த நேரம், நில அதிர்வு, புயல், வெள்ளம்னு அங்க நிறைய லீவ் போல. ங்கொய்யாலே, அவன் அவன் கரண்ட் இல்லாம கஷ்டப்பட்டா நீ ஜாலியா லீவு கிடைக்கலையேனு ஃபீல் பண்றியானு நீங்க திட்டலாம். என்ன பண்ண, மழைப் பெஞ்சா பள்ளிக் கூடம் லீவ்னு கொண்டாடியே பழக்கப் பட்டாச்சு.

அதுவும் நான் பத்தாவது படிக்கும் போது (1997) கடலூர்ல அடிச்ச புயல்ல என் அரையாண்டு பரிட்சையே ஒரு மாசம் தள்ளி போச்சு. சாப்பாடு போட முடியாம ஹாஸ்டல்ல இருந்து எல்லாரும் ஊருக்கு போங்கனு சொல்லிட்டாங்க. கஷ்டப்பட்டு பஸ் புடிச்சி போனோம். கண்ணு முன்னாடியே ரோடெல்லாம் அடிச்சிட்டு போச்சு. பாலம் எல்லாம் உடைஞ்சி, சூப்பரா இருந்துச்சு.

.....

பள்ளிக் கூடம்னு சொல்லும் போது தான் ஞாபகம் வருது. சம்ச்சீர் கல்வி எல்லாம் நாம படிக்கும் போதே வந்திருக்க கூடாதானு ஒரே ஏக்கம். மூணு மாசமா பசங்க ஜாலியா ஸ்கூலுக்கு போயிட்டு எதுவும் பாடம் படிக்காம, ஜாலியா கதை பேசிட்டு, அரட்டை அடிச்சிட்டு வந்தாங்களாம்.

ப்ளாக் எல்லாம் படிச்சி ஒரு சமுதாய புரட்சியாளரா உங்களுக்கு கோபம் வரலாம். ஆனா நான் ஸ்கூல் படிக்கும் போது இப்படி இருந்தா ஜாலியா இருந்திருப்பேன். சமச்சீர் வேலை நான் இந்தியா வந்த பிறகு நடக்கணும்னு திருப்பதி பாலாஜியை வேண்டியிருக்கிறேன். பார்க்கலாம்.

......

போன முறை இந்தியா வந்த பொழுது நல்ல படியாக கிரஹப் பிரவேசம் முடிந்தது. வீடு வாடகைக்கு விட்டு வந்தது மட்டும் தான் ஒரு வருத்தம். எப்படியும் ஆறு மாதத்தில் கோவை வந்து செட்டிலாக வேண்டும். பார்க்கலாம்.

......

விஜய் டீவி புகழ் சிவகார்த்திகேயன் சினிமாவில் கதாநாயகனாக நடிக்கிறார் என்று கேள்விப்பட்டேன். சிவா மனசுல சக்தி மாதிரி படங்கள் அவருக்கு நன்றாக செட் ஆகும் என்பது என் எண்ணம். டீவியில் காம்பயரிங்கை நிறுத்தி அவர் சினிமாவில் சீரியசாக முயற்சி செய்தால் ஓரளவு சமாளிக்க முடியும் என்று நினைக்கிறேன். இல்லைனா தெலுகுல சித்தார்த் நடித்த படங்கள் கூட இவருக்கு செட் ஆகும்.

இப்ப உன்கிட்ட யார் கேட்டானு நீங்க நினைக்கலாம். ஏதோ சொல்லணும்னு தோணுச்சு அவ்வ‌ள‌வு தான்.

......

இந்த பதிவு எழுத பத்து நிமிஷம் கூட ஆகலை. "ஆமா இவர் பெரிய காவியம் எழுதிட்டாரு, அப்படியே ஃபீல் பண்றாரு. இதுக்கு பத்து நிமிஷமே அதிகம்"னு நீங்க நினைக்கலாம். ஆனா மாரல் ஆஃப் தி ஸ்டோரி என்னனா, இப்படி வாரத்துல ஒரு பத்து நிமிஷமாவது இந்த வலைப்பதிவுக்கு ஒதுக்கலாம்னு ஒரு முடிவு பண்ணிருக்கேன். பார்க்கலாம்.

Wednesday, September 30, 2009

உன்னை போல் ஒருவன் - ‍மாத்தி யோசி

உன்னை போல் ஒருவனை எல்லாரும் கொத்து பரோட்டா போட்டுட்டாங்க. கூட்டத்தோட கோவிந்தா போடலாம்னு நானும் களம் இறங்கிட்டேன். இங்க எல்லாரும் படத்துல கமல் ரோலை நாசர் செஞ்சிருக்கலாம், பிரகாஷ் ராஜ் செஞ்சிருக்கலாம், சார்லி, ஓமக்குச்சி நரசிம்மன் செய்திருக்கலாம்னு கமலுக்கு நிறைய அட்வைஸ் கொடுத்துட்டாங்க. விஜயகாந்த் படத்துல வாசிம் கானா வருவாரே அவர் பண்ணிருக்கலாம்னு சொல்லாதது தான் மிச்சம்.

இவ்வளவு சிந்திக்கிற மக்கள்ஸ் கொஞ்சமாவது மாத்தி சிந்திச்சி பார்த்தீங்களா? இதே ரோலை விஜய், கவுண்டர், கேப்டன், லொள்ளு சபா மனோகர் இவுங்க எல்லாம் செய்திருந்தா எப்படி இருந்திருக்கும்? அப்படி கற்பனை செஞ்சி பார்த்தது தான் இந்த பதிவு.

இப்ப‌ அந்த‌ சாமானிய‌ன் ரோலை இளைய‌ த‌ள‌ப‌தி டாக்ட‌ர் விஜ‌ய் செய்திருந்தா எப்ப‌டி இருந்திருக்கும்...

அவ‌ர் கைல‌ விதவித‌மா பை எடுத்துட்டு போய் வைக்கும் போது அவ‌ர் கைய காட்டறோம், பையை காட்டறோம். பையைக் காட்டறோம், கையைக் காட்டறோம்.

அடுத்து மார்க்கெட்ல‌ அவ‌ர் காய் வாங்க‌ போகும் போது ஒரு குழ‌ந்தை மேல‌ த‌க்காளி விழ‌ போகுது. அதை அவ‌ர் நாலு கிலோமீட்ட‌ர் தூர‌த்துல‌ இருந்து பார்க்க‌றாரு. அப்ப‌டியே அங்க‌ இருந்து ஜ‌ம்ப் ப‌ண்ணி ப‌ற‌ந்து வ‌ந்து அந்த‌ த‌க்காளியை எட்டி உதைச்சி, அந்த‌ குழ‌ந்தையைக் காப்பாத்த‌றாரு. இப்ப‌ அந்த‌ குழ‌ந்தை ஆச்ச‌ரிய‌மா யாருனு பார்க்குது. அந்த குழந்தை முகத்தை ஜூம் பண்றோம். அப்ப‌டியே சிரிக்குது. இப்ப‌ தான் டாக்ட‌ர் முக‌த்தையே காட்ட‌றோம். இது தான் இண்ட்ரோ.

உட‌னே அங்க‌ ஒரு குத்துப் பாட்டு. டாக்ட‌ர் கை வைக்காத‌ க‌ருப்பு க‌ல‌ர் ப‌னிய‌ன் போட்டு ஆட‌றாரு. அந்த‌ கை வைக்காத‌ ப‌னிய‌ன் எதுக்குனா, அவ‌ர் சாமானிய‌னு சொல்ற‌ குறியீடு. அந்த‌ குத்து பாட்டு முடியும் போது, அங்க‌ ஒருத்த‌ன் ஒரு பொண்ணு இடுப்புல‌ கை வைக்க‌றான். உட‌னே ஒரு ஃபைட். அவ‌னுக்கு துணையா ஆயிர‌ம் பேர் ட்ரெயின்ல வ‌ராங்க. ஆட்டோ, லாரில எல்லாம் அடி ஆள் வரது அந்த காலம். இப்ப டாக்டர் ரேஞ்ச்க்கு ட்ரெயின் தான் கரெக்ட். எல்லாரையும் டாக்ட‌ர் அடிச்சி பிரிச்சி மேய‌ராரு. அவர் கடைசியா மார்கெட்ல ஆனியன் வாங்கல. ஏன்னா அவரே சாம்ஆனியன்.

இது எல்லாம் முடிஞ்ச உடனே மாடில போய் உக்கார்ந்து, கமிஷ்னருக்கு ஃபோன் போடறாரு.

விஜய் : அண்ணா.. வணக்கங்கண்ணா!!!

லால் : சொல்லுங்க விஜய். எப்படி இருக்கீங்க?

விஜய் : தமிழ் நாட்ல என்னைய கண்டுபிடிச்ச முதல் ஆள் நீங்க தான். (இது பஞ்ச்... ஸ்கிரினப் பார்த்து பேசுவாரு)

லால் : தமிழ் நாட்லயே இப்படி இழுத்து இழுத்து பேசற‌ ஒரே ஆள் நீ தான்.

விஜய்னு கண்டுபிடிச்சதுக்கு அப்பறம் படத்தை எப்படி கண்டினியூ பண்ண முடியும்னு நீங்க நினைக்கலாம். ஆனா டாக்டரால அது நிச்சயம் முடியும். என்ன இன்னும் ஒரு நாலு குத்துப் பாட்டு, பத்து ஃபைட் வரும். அவ்வளவு தான். ஏன்னா இதுல நம்ம டாக்டர் ஒரு காமன் மேன்...

..........

இப்ப அந்த காமென் மேன் ரோலை லொள்ளு சபா மனோகரும் கமிஷ்னர் ரோலை சந்தானமும் செய்திருந்தா எப்படி இருக்கும்?

ம‌ : ஹ‌லோ க‌மிஷ்ஷ்ஷ்ன‌ர் இருக்காரா? நான் தான் காஆம‌ன் மேன் பேச‌றேன்.

ச‌ : டேய் ம‌ண்டையா. நீ காம‌ன் மேனாடா. வேணும்னா டாப‌ர் மேனு சொல்லு. அந்த‌ நாயே வ‌ந்து உன் த‌லையை ந‌க்கி பாத்துட்டு செத்து போயிடும்.

ம‌: க‌மிஷ்ன‌ர்.. நாஆன் இந்த‌ ஊரை சுத்தி பாஆம் போட‌ போறேன்.

ச‌ : ஏன்டா. எவ‌னோ காக்காக்கு வெச்சிருந்த‌ ம‌சால் வ‌டையை எடுத்து தின்ன‌து இல்லாம‌ பாம் போட‌ போறேனு என‌க்கே ஃபோன் ப‌ண்ணி சொல்றியா? நீ சாதார‌ண‌மா போட‌ற‌ பாமே தாங்காது. இதுல‌ க‌ட‌லைப் ப‌ருப்பு எஃப்க்ட் சேர்ந்தா ஊர் தாங்காதே. இப்ப‌ நான் என்ன‌ ப‌ண்ணுவேன்.

ம‌ : நான் ஊருக்குள்ள பாம் போடாம‌ இருக்க‌ணும்னா நீங்க‌ நாலு தீவிர‌வாதியை ரிலீஈஈஸ் ப‌ண்ண‌னும்.

ச‌ : நாங்க‌ தீவிர‌வாதியை ரிலீஸ் ப‌ண்றோம்.. அது வ‌ரைக்கும் நீ உன் பாமை ரிலீஸ் ப‌ண்ணாம‌ இரு.

பாருங்க‌ ம‌க்க‌ளே. ஒரு க‌மிஷ்னர் எவ்வ‌ள‌வு க‌ஷ்ட‌ங்க‌ளை ச‌மாளிக்க‌ வேண்டிய‌து இருக்குனு.

.........

சரி.. இப்ப மத்த நடிகர்கள் எல்லாம் ஃபோன் பண்ணிருந்தா எப்படி இருக்கும்னு ஒரு கெஸ்... எது எது எந்த நடிகர்னு நீங்களே கண்டுபிடிச்சிக்கோங்க.

வ‌ண‌க்க‌ம். Gummisioner, நான்... Gaaman man பேசறேன்.
ஏன்னா நான் Gamman Man கூடயும் , க‌ட‌வுளோடையும் தான் கூட்ட‌ணி வைப்பேன்... ஆங்.

ஹலோ கமிஷ்னர்... நான் த‌னி ஆள் இல்லை... காம‌ன் மேன்.
ஏ நான் பேண்டுக்கு வெளிய‌ ஜ‌ட்டி போட‌ற‌ சூப்ப‌ர் மேன் இல்ல.. பேண்டுக்குள்ள‌ ஜ‌ட்டி போட‌ற‌ காம‌ன் மேன்.. அது...

ஹ‌லோ க‌மிஷ்ன‌ர். நான் காம‌ன் மேன் பேச‌றேன் க‌மிஷ்ன‌ர். நான் சொல்ற‌தை கேளுங்க‌ க‌மிஷ்ன‌ர். நான் ஊரை சுத்தி பாம் வெச்சிருக்கேன் க‌மிஷ்ன‌ர். க‌மிஷ்ன‌ர் க‌மிஷ்ன‌ர்... க‌மிஷ்ன‌ர் க‌மிஷ்ன‌ர்...

டேய் அந்த‌ க‌மிஷ்ன‌ன் இருக்கானா? தீஞ்ச மண்டையா நான் தான்டா காம‌ன் மேன் பேச‌றேன்.

க‌ண்ணா... நான் காம‌ன் மேன் பேஸ்றேன்.
கண்ணா... கடலைப் போடற ஃபிகருங்க தான் மிஸ்ஸிடு கால் கொடுக்கும். காமென் மேன் கனெக்ஷன் கால் தான் பண்ணுவான்... இது எப்படி இருக்கு?

Tuesday, July 07, 2009

பாட்ஷா - வலையுலக விமர்சனங்கள்!!!

சூப்பர் ஸ்டார் நடித்த ”பாட்ஷா” படம் வரும் போது தமிழ்ல நிச்சயம் வலைப்பதிவு யாரும் எழுதிருக்க மாட்டாங்க. அதனால பாட்ஷா படம் இன்னைக்கு சூழ்நிலைக்கு வந்திருந்தா இல்லைனா அன்னைக்கு இந்த அளவுக்கு நாம எல்லாம் இருந்திருந்தா நம்ம ஆளுங்க எப்படி எல்லாம் விமர்சனம் எழுதிருப்பாங்கனு ஒரு கற்பனை.


ஏர்சிம் :


பாட்ஷா ‍..
தவறு செய்பவர்களை தண்டிப்பவருக்கு பாட்ஷா, கஷ்டப்படும் ஆட்டோக்காரர்களுக்கு மாணிக்கம். இது தான் முதல் முடிச்சு.


மாணிக்கம் ஏன் பாட்ஷாவாக மாறினான்? அவனுக்கு மட்டன் பிரியாணி கிடைக்காததினாலா? அப்படியே மட்டன் பிரியாணி கிடைத்தாலும் அதில் லெக் பீஸ் கிடைக்காததாலா? அவன் மறுபடி மாணிக்கமான பின்பு அந்த பாட்ஷாத்தனம் என்ன செய்யும்? இது இரண்டாவது முடிச்சி...


இந்த இரண்டு முடிச்சிக்களுக்கு இடையில் இருக்கும் நூலில் ஆட்டோக்காரர்களின் வாழ்க்கையையும் ஆட்டோவையும் தொங்கவிடுகிறது திரைக்கதை....


குறிப்பிட தகுந்த பின்னூட்டம்.


வைத்தியக்காரன் :


ஏர்சிம், நீங்கள் எழுதிய பதிவுகளிலேயே இதுதான் சிறந்தது என்று அடித்து சொல்லலாம்.


'பாட்ஷா' படத்தினுள் இன்னொரு படம் நுணுக்கமாக இருக்கிறது. பிளாஷ் பேக்கிற்குள் ஒரு ஃபிளாஷ் பேக். அதன் அடியை அழகாக பிடித்து இழுத்திருக்கிறீர்கள்.


படம் முழுக்கவே எதிர்மறைகளால் ஆனவைதான். உதாரணமாக, மாணிக்கம், ‍ பாட்ஷா; (இரண்டையும் சேர்த்தால் "மாணிக் பாட்ஷா" அது தான் படத்தோட கதை)


படத்தின் ஆரம்பத்தில் அறிமுகமாகும் மாணிக்கத்தை முதலில் காட்ட மாட்டார்கள். பூசணிக்காயைத் தான் காட்டுவார்கள். அது ஒரு குறியீடு. ஆனால் பாம்பேயில் நேராக பாட்ஷாவைக் காட்டுவார்கள். அதாவது இங்கு மட்டும் தான் அவன் பாட்ஷா. அவனை அவனாகவே ஏற்கிறார்கள்.


மொத்தத்தில் ஒவ்வொரு ப்ரேமிலும் ஒரு அர்த்தம், குறியீடு இருக்கிறது.


சாரி ஏர்சிம். பின்னூட்டம் பதிவை விட நீண்டுவிட்டது.


................................................


சாதுஷா :


பாட்ஷா அண்ணன்களின் காவியம்.


"தங்கச்சிக்கு அண்ணன்னா எனக்கு அண்ணன். எனக்கு அண்ணன்னா உங்களுக்கு அண்ணன். உங்களுக்கு அண்ணன்னா ஊருக்கெல்லாம் அண்ணன். அண்ணன்டா...". நடுமண்டைல பலமான இரும்பு கம்பியால ”நச்சு”னு அடிச்ச மாதிரி இருந்தது இந்த வசனம். தங்கச்சி இருக்குற அண்ணன்களுக்கு தெரியும் அதன் வலிமை.


இது நட்புக்கான படமா? இல்லை. பழிவாங்கும் படமா? இல்லை. அப்பா செண்டிமெண்ட் படமா? இல்லை. பின்ன?


"வள்ளி", சில ஆண்டுகளுக்கு முன் வந்து சினிமா பார்ப்பவர்களின் கண்ணில் காலை விட்டு ஆட்டியது. பீரு தன்னுடைய விமர்சனத்தில் அதை "மொக்கைகளின் காவியம்" என்று குறிப்பிட்டிருந்தார்.


இது ஏன் அண்ணன்களின் காவியம்?


எத்தனை வித அண்ணன்கள். தங்கைகளை, ரம்பையும் ஊர்வசியும் மாதிரி செம சைட்டுடானு ஆனந்த்ராஜ் சொல்லும் போது தலை குனிந்து நிற்கும் ஒரு அண்ணன். அதைக் கேட்டு கோபம் கொள்ளும் ஒரு அண்ணன். தம்பியை தடுத்து நிறுத்தும் ஒரு அண்ணன்.


விஜயக்குமாருக்கு டாட்டராக இருக்கும் யுவராணியை, நீ கண்டிப்பா டாட்டர் ஆகறனு, டாக்டருக்கும் டாட்டருக்கும் வித்தியாசம் தெரியாத ஒரு அப்பாவி அண்ணன். தங்கை ஃபெயிலானதும் அவளை வெறுப்பேற்றி வாசலில் ஆரத்தி எடுக்கும் ஒரு அண்ணன். தன் தங்கை ஒரு டுபுக்கு மண்டையனைக் காதலிக்கிறாள் என்று தெரிந்தவுடன் திருமணத்தை நடத்தி வைக்க போராடும் ஒரு அண்ணன். இப்படி அண்ணன்களில் பல பரிமாணங்கள்.


கஜேந்திரா எடுத்த சுரேஷ் கிருஷ்ணாவா? அடப்போங்கடா. இவரைப் போயி இத்தனை நாளா பாபா, ஆளவந்தானு எடுக்க வைச்சிட்டு வேஸ்ட் பண்ணிட்டீங்களேய்யா என்று எண்ணினேன்.


குறிப்பிட தகுந்த பின்னூட்டம்.


வராதகவுண்டன்:
நக்மா, யுவராணி என்ற இரண்டு அழகு தேவதைகள் பற்றி எழுதாத சாதுஷாவுக்கு கண்டனங்கள்.


....................................................................


காவி.மன்னன் :


பாட்ஷாவும் பார்ப்பனர்களின் சனாதன மதமும்


பழிக்கு பழி, நட்பு இவற்றை அடிப்படையாகக் கொண்ட எத்தனையோ திரைப்படங்கள் வெற்றிப் பெற்றிருக்கின்றன. பழிக்கு பழியும், நட்பும் தனிமனிதனுக்கு இன்றியமையாத ஒன்று என்பதால் திரையுலகினர் அனைவருமே அன்றாடம் புது அரியில் மாவு அரைக்கிறார்கள். பிறகு அந்த மாவில் இட்லி, தோசை என்று சுடுவார்கள். ச்சே. ஒரு ஃப்ளோல அப்படியே வந்துடுச்சி. இப்ப பாயிண்டை பிடிக்கிறேன்.


இந்துவாக இருப்பவன் அப்பாவியாகவும், நேர்மையாளனாகவும், பரோபகாரியாகவும் இருப்பது போல் காட்டியுள்ளார்கள். அதே நபர் முஸ்லீமாக மாறும் போது கொலை செய்பவராகவும், கொடுரமாக ஒரு கிருஸ்துவனின் கையில் கத்தியால் குத்துவதைப் போலவும் காட்டியுள்ளார்கள். அங்கே கூட ஒரு இந்துவின் கையில் கத்தியைக் குத்தவில்லை. பிள்ளையார் சதூர்த்தி கொண்டாடும் இந்துக்களை சென்று காப்பாற்றுகிறார். அதே போல் முஸ்லிமாக இருக்கும் அன்வர் பாட்ஷாவைக் கொல்கிறார்கள். இந்துவாக இருக்கும் மாணிக்கத்தை விட்டு விடுகிறார்கள்.


வில்லனாக ஒரு கிருஸ்துவனைக் காட்டியுள்ளார்கள். அவன் பல கொலைகளை செய்வது போலவும், கள்ளக்கடத்தல், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவது போலவும் காட்டியுள்ளார்கள். அவனை எதிர்க்க, இந்துவாக இல்லாமல் இஸ்லாமியனாக மாறி நாயகனும் கள்ளக்கடத்தல் மற்றும் தாதாவாக மாறுவது போல் காட்டியுள்ளார்கள். கடைசியில் மாணிக்கத்தின் ஆட்களில் ஒரு சீக்கியனைத் தான் கொல்கிறார்கள். அப்பொழுது கூட இந்துக்களுக்கு பிரச்சனை இல்லை.


முன்பெல்லாம் திரையில் வில்லன்களாக கூலிப்படையாக இயங்கும் ஒருவரையோ, அல்லது முரட்டு முகம் கொண்டவர்களையோ காட்டுவார்கள், தற்போதெல்லாம் வில்லன்கள் என்றால் அது கிருஸ்துவர்கள் என்பதாகவே காட்டப்படுகிறது. அதே போல் கள்ளக்கடத்தலில் ஈடுபடுபவர்கள் எல்லாம் இஸ்லாமியர்களாக காட்டப்படுகிறது. இது சனாதன மதத்தைப் பின்பற்றும் இந்துக்களின் பொறாமையே காரணம்.


குறிப்பிட தகுந்த பின்னூட்டம்.


fer0z 9@ndhi :


இதில் சில பொதுவான கருத்துகளில் எனக்கும் உடன்பாடு உண்டு. இந்துக்களின் மன நிலை மாற வேண்டும். எனக்குத் தெரிந்து மற்ற இரு மதத்தினரைவிட மிக ஆபத்தானவர்கள் இவர்கள். படத்தைப் பற்றி சொல்ல எதுமில்லை.. நான் பார்க்கவில்லை.


...............


புறநாழிகை மண் சகாதேவன், லேண்ட் லைனேந்திரன் விமர்சனம் எல்லாம் போடணும்னு பார்த்தேன். பதிவு ஏற்கனவே ரொம்ப பெருசாகிடுச்சி. பதிவு பிடிச்சிருந்தா சொல்லுங்க. அடுத்து நிறைய படத்துக்கு இப்படி விமர்சனம் பார்க்கலாம்.

Sunday, June 14, 2009

பசங்க

”பசங்க படத்தை நிச்சயம் மிஸ் பண்ணிடாத” இதை தேவ் அண்ணா, கைப்ஸ் அண்ணா ரெண்டு பேருமே சாட் பண்ணும் போது சொன்னாங்க.

நேத்து தான் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. என் ரூமெட்கிட்ட பயங்கர பில்ட் அப் கொடுத்துட்டு படம் பார்க்க ஆரம்பித்தோம். இந்த வருஷத்துலயே இதை சிறந்த படம்னு வேற சொல்றாங்க. இன்னொரு அஞ்சலினு சொல்றாங்க அப்படி இப்படினு பயங்கர பில்ட் அப். 



பெயர் போடும் போதே ஓரளவு கிரியேட்டிவிட்டி தெரிஞ்சிது. சின்ன பசங்க விளையாட்டு எல்லாம் பேக் க்ரவுண்ட்ல வரும், பெயர் அப்படியே ப்ளாக் ஸ்கிரின்ல ஓடிட்டு இருக்கும். அதுக்கு அப்பறம் அந்த மூணு வாண்டுகளைப் பத்தி போலிஸ்ல கம்ப்ளைண்ட் கொடுக்கும் போதும் அந்த பசங்களைக் காட்டும் போதும் ஓவர் பில்ட் அப்பா தெரிஞ்சிது. 

அதே மாதிரி அன்புக்கரசு அறிமுகமும் செம பில்ட் அப். அவன் வண்டி ஓட்டறதும், எக்ஸர்சைஸ் செய்யறதும் ஏதோ பத்ரி படம் பார்க்கற எஃபக்ட்ல இருந்தது. எனக்கு அதைப் பார்க்கும் போது செம கடுப்பு. இந்த படத்துக்கு இவ்வளவு பில்ட் அப்பானு. அதுவும் சின்ன பசங்களுக்குள்ள கேங் வார்னு காட்டும் போது அதைவிட எரிச்சல். ஆனா அதுவே போக போக அந்த பசங்களால பெற்றோர்களுக்கிடைய ஆரம்பிக்கும் பிரச்சனைனு களம் மாறும் போது சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது.

அதுக்கப்பறம் அப்பா, அம்மாக்கிடைய நடக்கும் பிரச்சனை பசங்கள எப்படி பாதிக்குதுனு பார்க்கும் போது ஏதோ மனசைக் குத்த ஆரம்பித்துவிட்டது. அன்புக்கரசு அப்பாவும் வாத்தியாரும் பேசிக் கொள்ளும் இடம் மிகவும் ரசித்தேன். இந்த மாதிரி கணவன், மனைவி சண்டை நான் நிறைய பார்த்திருக்கேன். அதனால பாதிக்கப்பட்ட பசங்களும் எனக்கு தெரியும். 

என் அப்பா, அம்மா கூட நாங்க சின்ன வயசுல இருக்கும் போது இப்படி நிறைய சண்டைப் போட்டிருக்காங்க. அன்புக்கரசு அழுத மாதிரி நான் கூட அழுதிருக்கேன். அப்பறம் நான் பெருசாக பெருசாக சண்டை ஓரளவு குறைந்தது. இப்பக்கூட எப்பவாது சண்டைப் போட்டா ”ஆமாம் புது மணத் தம்பதிகள். சண்டை போடறீங்க. நிறுத்துங்க” அப்படினு நான் கிண்டல் பண்றதுல ரெண்டு பேரும் சண்டையை நிறுத்திடுவாங்க.


அப்பறம் அன்புக்கரசு சித்தப்பாக்கும், ஜீவா அக்காக்கும் நடுவுல ஓடற காதல் ட்ராக் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. ரசிக்கும்படியா இருந்தது. அதுவும் பல நாடுகள்ல இருந்து ஃபோன் பண்ற கான்செப்ட் அட்டகாசம். நல்லா சிரிக்க வைத்தது.

ஜீவா, அன்பரசு ரோல் பண்ண சின்ன பசங்க ரெண்டு பேருமே அட்டகாசமா நடிச்சிருந்தாங்க. குறிப்பிட்டு சொல்லனும்னா எனக்கு ஜீவா ரோல்ல பண்ண குட்டிப் பையன் நடிப்பு ரொம்ப பிடிச்சிருந்தது. அதே போலவே பகோடா, குட்டிமணி, அப்பத்தா ரோல்ல நடிச்ச பசங்களும் அருமை. படத்துல நடிச்ச யாருமே குறை சொல்ற மாதிரி நடிக்கல. எல்லாமே இயல்பான நடிப்பு தான். 

சில காட்சிகள்ல இயல்புக்கு மீறி, பிஞ்சிலே முத்தின மாதிரி காட்டியிருந்தாலும் ரசிக்கும் படியாவே இருந்தது. இந்த படத்தை பசங்களுக்கு ரெக்கமெண்ட் பண்றதை விட பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நான் ரெக்கமெண்ட் செய்வேன். நிச்சயம் பாருங்க. முதல் பாதியை இன்னும் கொஞ்சம் நல்லா எடுத்திருந்தா மிகச் சிறந்த படமா வந்திருக்கும். சசிக்குமார் நல்ல இயக்குனர் மட்டுமில்ல நல்ல தயாரிப்பாளரும் கூடனு நிருபிச்சிருக்காரு. இயக்குனர் பாண்டிராஜுக்கு என் வாழ்த்துகளும், நன்றிகளும். 

தியேட்டரில் பார்க்க வாய்ப்பு கிடைத்தால் தவறாமல் பார்க்கவும். 

சும்மா கடைசியா ஒரு பஞ்ச் : “பசங்க” - பசங்களுக்கான படமல்ல. பசங்களைப் பற்றிய படம். பெரியவர்களுக்காக

Thursday, June 11, 2009

காதல்னா சும்மா இல்லை

இன்னைக்கு எங்கயே ஆன்லைன்ல மேஞ்சிட்டு இருக்கும் போது (மேயறதுக்கு நீ என்ன மாடானு கேட்டு புடாதீங்க) ராஜ் டீவி திரை விமர்சனம் பார்க்க வாய்ப்பு கிடைச்சிது. அதுல அ, ஆ, இ, ஈ விமர்சனமும், காதல்னா சும்மா இல்லை விமர்சனமும் பார்த்தேன். ரெண்டு படமும் நல்லா இருக்குற மாதிரி ஒரு எண்ணம். சரி இன்னைக்கு எப்படியும் பார்த்துடுவோம்னு களம் இறங்கினேன். காதல்னா சும்மா இல்லை பார்க்க வாய்ப்பு கிடைச்சிது.

”காதல்னா சும்மா இல்லை” இந்த படத்துக்கு பெரிய மைனஸா நான் நினைக்கிறது படத்தோட பேர் தான். எனக்கு படம் ரொம்ப பிடிச்சிருந்தது. கமிலினியைத் தேடி கதாநாயகன் புறப்படும் இடத்தில் ஆரம்பிக்கும் படம் ரயில்வே ஸ்டேஷனில் கண்டுபிடிக்கும் போது முடிகிறது. கதாநாயகியைத் (கமிலினி) தேடும் படலத்தில் வாழ்க்கையை புரிந்து கொள்கிறார் பணக்கார நாயகன். அவருடைய இருபது லட்ச ரூபாய் பைக்கை ஆட்டயைப்போட (திண்டிவனம் ஏரியால இந்த வார்த்தை எல்லாம் புழங்குவாங்களானு தெரியல) அவருக்கு உதவுவது போல சேருகிறார் ரவி கிருஷ்ணா. பிறகு அவரே நாயகனுக்கு நாயகியைக் கண்டுபிடிக்க உதவுகிறார். 

காதல்ல மொத்தம் மூணு வகை இருக்காம், லவ், பிக் லவ், க்ரேட் லவ். லவ் ரெண்டு மாசம் எஃபக்ட் இருக்குமாம், பிக் லவ் ரெண்டு வருஷம் எஃபக்ட் இருக்குமாம். க்ரேட் லவ்னா மொத்த வாழ்க்கையையே மாத்திடுமாம். இந்த படம் மூணாவது வகை காதலைப் பத்தி தான் பேச போகுதுனு படத்து பேரை வெச்சே சொல்லிடலாம்.

படத்துல எனக்கு பிடித்த விஷயங்களை சொல்லிடறேன்.

படம் பார்க்கவே ஜாலியா இருந்தது. ரவி கிருஷ்ணா இப்படி எல்லாம் கூட நடிப்பாரானு ஒரு சந்தேகம். ஒரு வகைல அவருக்கு ஏத்த கேரக்டர் தான். அதை அழகா செய்திருந்தார். அவர் பேசற தமிழ் எனக்கு ரொம்ப பிடிச்சது. டயலாக்ஸும் அருமை. “உங்க பைக்கு சும்மா பறக்குது பாஸு. ஜப்பான்காரன்னா சும்மாவா? அவன் மூக்கு தான் சப்பை. மூளை செம்ம ஷார்ப்பு” இந்த மாதிரி பல வசனங்கள் எனக்கு பிடிச்சிருந்தது. ரவி கிருஷ்ணா படத்துக்கு பெரிய ப்ளஸ். 7G படத்துக்கு பிறகு அவர் நல்லா பண்ண படமா இது தான் எனக்கு தெரிஞ்சிது. 


கமிலினி வழக்கம் போல ரொம்ப அழகு, ரொம்ப அமைதி. செம ஹோம்லி. 

அடுத்து கதாநாயகனா அறிமுகமான ஷர்வானந்தும் குறை சொல்ற மாதிரி இல்லை. முதல் படத்துக்கு நிறைவா செஞ்சிருக்காருனே சொல்லலாம். குறிப்பா ஆக்‌ஷன் சீன்ல அவரோட பாடி லேங்வேஜ் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. சரியா அழ வரலை. ஆனா முதல் படம்னு மன்னிச்சிடலாம். 

படத்துல டச்சிங் சீன்ஸ் நிறைய இருக்கு. கமிலினி அறிமுகமே அப்படி ஒரு டச்சிங் சீன்ல தான். 


”ஜெய் சம்போ சம்போ சம்போ” பாட்டு எனக்கு பிடிச்சிருந்தது.   

படத்துல சில குறைகளும் இருக்கு. அநேகமா இது தெலுகு படம் காப்பியா இருக்கும்னு நினைக்கிறேன். நக்சலைட் சீன்ஸ் எல்லாம் அப்படி தான் தெரியுது. திண்டீவனம் ஏரியால எங்க நக்சலைட்ஸ் இருக்காங்க? அந்த மாதிரி சீன்ஸ் எல்லாம் தெலுகு படத்துக்கு தான் ஒத்து வரும். அதையெல்லாம் தூக்கிட்டு தமிழ் படத்துக்கு ஏத்த மாதிரி மாத்திருக்கனும். 

அதே மாதிரி படத்தை இன்னும் ரொம்ப அழகா கவிதை மாதிரி சொல்லியிருக்கலாம்னு தோணுது. கொஞ்சம் வெட்டியிருக்கணும். அப்பறம் ரசிக்கிற மாதிரியான காட்சிகளை இன்னும் அதிகமாக்கியிருக்கலாம். 

பார்க்க வாய்ப்பு கிடைத்தா தவறாம பார்க்கலாம். 

Wednesday, April 01, 2009

யாவரும் நலம் - 13 B

பேய் படம் பார்க்கறதுனு முடிவு எடுத்ததுக்கு அப்பறம் லாஜிக் பார்க்கக் கூடாது. பேய் டீவில எப்படி வருது, கரண்ட் போனதுக்கு அப்பறம் எப்படி டீவி தெரியும், மாதவன் ஃபோட்டோ மட்டும் ஏன் கோணலா தெரியுது, நாய் ஏன் வீட்டுக்குள்ள வரலை இப்படி எல்லாம் கேள்வி கேக்கக்கூடாது. இந்த மாதிரி படத்தை எல்லாம் அனுபவிக்கணும். ஆராயக்கூடாது.

எங்க ஏரியால யாவரும் நலம் வரலை. 13B தான். இங்கிலிஷ் சப் டைட்டிலோட பார்த்தாச்சு. உங்களுக்கு அட்ரனலின் சுரக்கறது பிடிக்கும்னா இந்த படம் நிச்சயம் பிடிக்கும். பல இடங்களில் உங்களுக்கு அட்ரனலின் சுரப்பது நிச்சயம். அனைத்து பேய் படத்திலும் இருக்கும் பழிவாங்கல் தான் கதை என்றாலும் அதைப் பிடித்த விதம் அருமை. படத்தின் முதல் நாயகன் PC ஸ்ரீராம் தான். கேமராவை எங்க எங்க வெச்சி எடுத்திருக்காருனு யோசிக்கறதுக்குள்ள அடுத்த ஆச்சரியத்துக்கு எடுத்துட்டு போயிடறாரு.

அடுத்து எல்லாப் பேய் படத்துக்கும் பலம் இசை. ம்யூட் பண்ணி பார்த்தா நிறைய பேய் படம் சிரிப்பு படமாகிடும். இந்த படத்துலயும் பின்னனி இசை பெரிய பலம். நிறைய காட்சிகளில் நமக்கு பயத்தை ஏற்படுத்த இந்த இசை முக்கியமான பணியை செய்கிறது. ஹாரிஸ் ஜெயராஜ் மாதிரி பண்ணாம சில இடங்களில் பின்னனி இசை இல்லாம அமைதி காத்து நமக்கு நம்ம இதய துடிப்பைக் கேட்க வைத்ததற்கு இசை அமைப்பாளரை நிச்சயம் பாராட்டி ஆகணும்.

இது பேய் படம்னாலும் எந்த ஒரு இடத்திலும் முகம் ஃபுல்லா பவுடர் பூசியோ இல்லை உருவம் மோகன் மாதிரி சந்தனம் பூசியோ பயமுறுத்த முயற்சிக்கவில்லை. அங்க நடக்கற ஒவ்வொரு நிகழ்ச்சியும் மாதவன் முகத்துல ஏற்படுத்துற கிலிக்கு குறையாம நமக்கும் ஏற்படுத்துற காட்சி அமைப்புகளுக்காக இயக்குனரை நிச்சயம் பாராட்ட வேண்டும்.




படத்தோட கதையை எங்கயும் சொல்லி உங்களுக்கு கிடைக்க வேண்டிய ஒரு அருமையான அனுபவத்தை கெடுக்கக் கூடாதுனு தான் எந்த காட்சியையும் சொல்லலை. அட்ரனலின் சுரக்கறதை ரசிக்கிற ஆளா நீங்க இருந்தா இந்த படத்தை தவறாம தியேட்டர்ல போய் பாருங்க. நிச்சயம் ஒரு நல்ல அனுபவம் கிடைக்கும். ராத்திரி ஷோக்கு தனியா போயிடாதீங்க.

படத்துல சில பல குறைகள் இருந்தாலும் ஒரு நல்ல த்ரில்லர் கொடுத்ததுக்காக அதை எல்லாம் கண்டுக்காம விட்டுடலாம். 

Saturday, February 07, 2009

சூப்பர் ஸ்டார்ஸ்

மக்கள் திலகம் & நடிகர் திலகம்

சூப்பர் ஸ்டார் & உலக நாயகன்



இளைய தளபதி & தல





முதல் ரெண்டு வீடியோல இருக்கற நடிப்பையும் கடைசி வீடியோல இருக்கற நடிப்பையும் பாருங்க... என்ன கொடுமை சரவணன். அதுவும் விஜய் நடிப்பு... சான்சே இல்லை.

அந்த பாவத்துக்கு போனா போகுதுனு ஒரு வீடியோ

Friday, August 03, 2007

கிரீடம் - முள் கிரீடமா?

நேத்து கப்பிக்கு கொடுத்த வாக்குறுதியை மீற கூடாதுனு படம் பார்க்க ஆரம்பிச்சேன். கடைசி வரைக்கும் பார்த்தேன். அஜித் படம்னாவே ஒரு பயம் தான். அது சிட்டிசன்ல ஏற்பட்டது. இன்னும் இருந்துட்டே இருக்கு. இந்த மாதிரி ஒரு 3-4 படம் நடிச்சா மாறிடும்னு நினைக்கிறேன்.

முதல்ல இந்த கதைல நடிச்சதுக்கு அஜித்தை பாராட்டனும். மலையாளத்துல ஹிட்டான கதைனாலும், வாழ்க்கைல தோக்கற ஒருத்தனா, கமெர்ஷியல் ஹீரோவான அஜித் இதுல நடிச்சது கண்டிப்பா ஒரு ஆச்சர்யம்தான். படத்துல அஜித்துக்கு சமமான பாத்திரம் ராஜ்கிரனுக்கு. பின்னி பெடலுடுத்திருக்கிறார். த்ரிஷா தெலுகு படத்துல நடிச்சி அழகாயிட்டாங்க (நல்லா மேக்கப் போட கத்துக்கிட்டாங்க).

ஆரம்பத்தில் வரும் நகைச்சுவை காட்சிகள் நிஜமாலுமே சிரிக்க வைக்கிறது. சந்தானம் டபுள் மீனிங் ஜோக்ஸ் இல்லாம நடிச்சிருக்கார். யாருமே இல்லாத பஸ் ஸ்டாப்ல கூட்டமா இருக்குனு சொல்லி கூட்டமா இருக்கற ரெஸ்டாரண்டுக்கு கூப்பிட்டு போற சீன் சூப்பர். அதே மாதிரி தண்ணி தோட்டில த்ரிஷா பேசறதும், கீழ இருக்கறவங்க கேக்கறதும் நகைச்சுவை வர வைத்தது.

படத்துல பல இடங்களில் அஜித் நடிப்பில் மிளிர்கிறார். ஒரு சீன்னு சொல்ல முடியாது. பல இடங்களில் அவ்ர் முக பாவனை பல வசனங்களை நமக்கு சொல்லிவிடுகிறது. சில இடங்கள்ல வசனம் இல்லாததே ரொம்ப அருமையா இருந்துச்சு. ராஜ்கிரண் மாதிரி பல அப்பாக்கள் இன்னும் இருக்கத்தான் செய்றாங்க. ஒரு சிலருக்கு அது சிரிப்பை வர வைக்கலாம். ஆனா எனக்கு நினைவு தெரிஞ்சி நான் எங்க ஊர்ல இருந்து தனியா பஸ் ஏறி போற மாதிரி இருந்தா எங்க அப்பாதான் என்னை வந்து பஸ் ஏத்திவிடுவார். பெங்களூர்ல வேலைக்கு போகும் போது கூட வந்து என்னை பஸ் ஏத்திவிட்டு நான் கம்ஃபர்டபுல இருக்கனானு பார்த்து கண்டக்டரிடம் என்னை பத்திரமா இறக்கிவிட சொல்லி, (நான் எலக்ட்ரானிக் சிட்டில இறங்குவேன். தூங்கிட்டே போயிடுவனோனு ஒரு பயம்) தண்ணி பாட்டில், படிக்க ஏதாவது ஒரு புத்தகம் வாங்கி கொடுத்து பஸ் புறப்படும் வரை இருந்துவிட்டு தான் புறப்படுவார். இதுவரை அது மாறவே இல்லை. (இப்ப கூட ஃபிளைட்டுக்கு நான் கீழ இருந்தே உன் ஃபிளைட்ட பாக்க முடியுமானு கேட்டு என்கிட்ட நல்லா வாங்கி கட்டிக்கிட்டார்). சரி திரும்ப படத்துக்கு வருவோம்.

அப்படி ஒரு அப்பாவோ, குடும்பமோ இருக்கறது ஒரு சாதாரணமான விஷயம்தான். திரிஷாக்கு வேற இடத்துல கல்யாணம்னு சொன்னதுக்கப்பறம் அவுங்க கல்யாணத்தை ஒரு சோகப்பாட்டுல காட்டததுக்கு டைரக்டருக்கு ஒரு ஸ்பெஷன் நன்றி. க்ளைமாக்ஸ்ல அஜித் அழுவற சீன்ல பட்டைய கிளப்பியிருக்கார். படத்துல அஜித் வில்லன் கூட்டத்தை கண்டு ஓடுவதும், சண்டைக்கு ஏதாவது ஒரு தடியை பயன்படுத்துவதும் ஓரளவிற்கு இயல்பாக இருப்பதை போலவே பட்டது. தல தள படங்களை பார்ப்பதில்லை போலும்.

நீங்க சினிமா ரசிகரா இருந்தா கண்டிப்பா இந்த படம் பார்க்கலாம். படத்துல பாட்டு எல்லாம் இன்னும் நல்லா வந்திருந்தா இது கண்டிப்பா சூப்பர் ஹிட் ஆகியிருக்கும். எப்படி பார்த்தாலும் இது தலைக்கு முள் கிரீடம் கிடையாது.

Wednesday, July 18, 2007

நடிப்புக் கடவுள்

கைலாயத்தில் ஈசன் ஆழ்ந்த சிந்தனையிலிருக்கிறார்.

பார்வதி: ஸ்வாமி! தாங்கள் ஆழ்ந்த சிந்தனையிலிருப்பதன் காரணத்தை நான் அறிந்து கொள்ளலாமா?

ஈசன்: உமா! உனக்கு தெரியாததில்லை. என் பக்தன் ஈசானபட்டன் ஒரு வாரமாக அன்ன ஆகாரமில்லாமல் காட்டில் எம்மை தேடி கொண்டிருக்கிறான். இன்னும் அவன் அந்த இடத்தை நெருங்கக்கூட இல்லை.

பார்வதி: அவர் கனவில் தோன்றிய தாங்களே சரியான இடத்தை சொல்லியிருந்தால் அவர் இந்நேரம் ஆலயமே கட்ட ஆரம்பித்திருப்பார்.

ஈசன்: உமா! கஷ்டப்படாமல் கிடைக்கும் பொருளின் அருமை என்றுமே உணரப்படுவதில்லை. உனக்கு தெரியாதா என்ன? இன்றே அவருக்கு நாம் காட்சியளிப்போம். நீ கவலைப்படாதே.

பார்வதி: உங்கள் திருவிளையாடலால் நன்மை நடந்தால் சரி...

..........................

ஈசன்: தேவதத்தா! உன்னால் எனக்கு ஒரு காரியமாக வேண்டும். அதற்காகவே யாம் உன்னை இங்கே அழைத்தோம்!!!

தேவதத்தன்: கட்டளையிடுங்கள் ஸ்வாமி

ஈசன்: அதோ பார்...
என் பக்தன் ஈசானபட்டன் என்னை தேடி ஒரு வாரமாக அன்ன ஆகாரமில்லாமல் காட்டில் அலைந்து கொண்டிருக்கிறான். நீ அவன் முன் புலியாக தோன்றி அவனை அதோ அந்த காவிரி கரையை நோக்கி வர வைக்க வேண்டும். அங்கே அவன் தானாக எம்மை சந்திப்பான். அப்போது நீ மறைந்துவிட வேண்டும். புரிகிறதா?

தேவதத்தன்: நன்றாக புரிகிறது ஸ்வாமி.. இதோ புறப்படுகிறேன்.

புலியாக மாறிய தேவதத்தன், ஈசானபட்டரை துறத்த ஆரம்பித்தான். பசியால் உடல் இளைத்தாலும், ஈசன் கட்டளையிட்ட பணியை முடிக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் எழ, உயிர் பிழைக்க வேகமாக ஓடினார் ஈசானப்பட்டர். திடீரென அவர் கால் ஒரு கல்லில் (சிவலிங்கம்) தடுக்கிவிட கீழே விழுந்தார் ஈசானப்பட்டர். புலியாக வந்த தேவதத்தன் தன்னை மறந்து ஈசானபட்டர் மேல் பாய்ந்தான். ஈசானபட்டர் மேல் புலி நகங்கள் பட உதிரம் எட்டி பார்த்தது. தன் பக்தனின் உடலிலிருந்து வந்த உதிரம் தரையில் வீழ்வதற்குள் லிங்கத்திலிருந்து வெளிப்பட்ட ஈசன் புலியின் மேல் தன்னுடைய சூலத்தை பாய்ச்சினார். தேவதத்தன் தன் சுய உருவை அடைந்து அங்கே நிகழ்ந்ததை உணர்ந்து அதிர்ச்சிக்குள்ளானான்.

ஈசன்: தேவதத்தா! என் பக்தனை கொல்ல உனக்கு எவ்வளவு துணிச்சல். அவன் இரத்தம் சிந்த காரணமான நீ இந்த பூவுலகில் மனிதனாக பிறக்கக்கடவாய்!

தேவதத்தன்: ஸ்மாமி! என்னை மன்னித்தருளுங்கள். புலியாக உருவெடுத்தப்பின் நான் யாரென்பதையே மறந்துவிட்டேன். புலியின் குணங்கள் முழுதும் பெற்றதால் செய்வதறியாமல் தவறிழைத்துவிட்டேன். மன்னித்தருளுங்கள் ஸ்மாமி. இந்த ஏழைக்கு இரக்கம் காட்டுங்கள்.

ஈசன்: தேவதத்தா! நீ செய்த பாவத்திற்கு பலனை அனுபவித்தே ஆக வேண்டும்.

ஈசனப்பட்டரின் காயங்கள் மறைந்தன. அவருக்கு அருள் புரிந்துவிட்டு ஈசன் மறைந்தார்.

..................................

பார்வதி: ஸ்மாமி! இது என்ன அநியாயம்? உங்களுக்கு உதவ வந்த தேவதத்தனுக்கு இப்படி ஒரு அநீதி இழைத்துவிட்டீர்களே!

ஈசன்: உமா! நான் யாருக்கும் என்றும் அநீதி இழைப்பதில்லை. தேவதத்தனின் புகழை பரப்பவே யாம் இதை செய்தோம். புலியாக மாறிய அவன் புலியாகவே ஆனான். நடிப்பில் அவனை மிஞ்ச யாருமில்லை. பூமியில் பிறக்கும் அவன் மக்களை தன் நடிப்பால் மகிழ்விப்பான். நடிப்பு கலையை உலகுக்கு சொல்லி தருவான். என் திருவிளையாடலைக்கூட மக்களுக்கு நடித்து காட்டுவான். அவனே நடிப்புக் கடவுளாவான்... ஆமாம் அவனே நடிப்புக் கடவுள்.

(வரும் ஜீலை 21 நடிப்புக் கடவுளின் நினைவு தினம்... அதை முன்னிட்டு எழுதிய பதிவு)







சில காட்சிகள்