தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Thursday, July 30, 2009

சுவாரஸ்ய விருது (?)

சுவாரஸ்யமாக எழுதுவது ஒரு கலை, அது அவ்வளவு எளிதாக கை கூடாது என்பதில் எழுத ஆரம்பித்த புதிதில் எனக்கு உடன்பாடு இல்லாமல் இருந்தது. படிப்பவர்களை கவரும் வண்ணமும் தொடர்ந்து படிக்க வைப்பதும் அவ்வளவு சாதாரணமில்லை என்பது இப்பொழுது எனக்கு புரிகிறது. நான் சமீப காலமாக எழுதும் பதிவுகளில் சுவாரஸ்யமாக இருப்பவை மிக சில தான் என்பது எனக்கும் தெரியும். இருந்தாலும், ”நீயும் ரவுடி தான், வந்து வண்டில ஏறிக்கோ”னு அன்புடன் அழைத்த நண்பர் வசந்த குமாருக்காக இந்த பதிவு.

முதலில் வசந்த குமாருடன் எனக்கு ஏற்பட்ட நட்பைப் பத்தி சொல்லிவிடுவது நல்லது. சிறில் அலெக்ஸ் நடத்திய அறிவியல் சிறுகதை போட்டியில், தவறான புரிதல் காரணமாக எனக்கும் வசந்திற்குமிடைய சிறிய மனக்கசப்பு ஏற்பட்டது.

”அறிவியல்னா வானத்துல இருந்து ஏலியன் வரதும், டைம் மிஷினும்னு தான் நினைக்கற இடத்துல நான் என்ன பண்றது :-)

வெள்ளக்காரன் சொல்றது தான் அறிவியல்னு வானத்தை பார்த்துட்டு ஏலியன் எப்ப வருவானு யோசிட்டு இருக்கவங்களுக்கும், டைம் மிஷின்ல ஏறி போகலாம்னு யோசிச்சிட்டு இருக்கவங்களும் என்னை மன்னிப்பீர்களாக :-))”

இப்படி நான் சொல்லப் போக, அது அப்படியே வளர்ந்து சண்டையாகி, சமாதானமாகி, நட்பாகி விட்டது :)

வசந்த் போட்டியில் வென்ற பிறகு, அவருடைய கல்லூரி நண்பர்கள் குழுவிற்கு அதை தெரியப்படுத்தியிருக்கிறார். அந்த குழுவில் என் அறை தோழனும் இருந்தான். அவன் மிக மகிழ்ச்சியாக சொல்லும் போது தான் எனக்கு வசந்த் அவனுடைய கல்லூரி நண்பர் என்பது தெரிந்தது. என் அறைத் தோழனுக்கு வலையுலக போட்டி, சண்டை எதுவும் தெரியாது :). அதைக் கேள்விப்பட்டதும், ”வசந்த் சண்டை போட்டானா? நம்பவே முடியல” என்று சொன்னான். ஏன்னா நான் சண்டை போடறது ரொம்ப சாதாரண விஷயம்.

அப்பறம் வசந்தோட பதிவுகள் தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன். சிறுகதைகள் எழுதவும், சிறுகதைகளைப் பற்றி தெரிந்து கொள்ளவும் மிகவும் விருப்பமுள்ளவர். உரையாடல் போட்டிக்கு அவர் செய்த பணி குறிப்பிடத்தக்கது. சிறுகதை எழுத ஆர்வமுள்ளவர்கள் இதை நிச்சயம் ஒரு முறை படித்துப் பார்ப்பது நல்லது.

விருதிற்கு நன்றி வசந்த்.

இனி, இந்த விருதை நான் மற்றவர்களுக்கு அளிக்க வேண்டும் என்று சொல்லியுள்ளார். இது தான் மிகவும் கடினமான பணியாக கருதுகிறேன். வெறும் பெயரளவிலோ, நட்பிற்காகவோ இதை நான் செய்ய விரும்பவில்லை. சுவாரஸ்யப் பதிவர்கள் என்பதை, சுவாரஸ்யமாக பதிவு எழுதுபவர்கள் என்று எடுத்து கொள்கிறேன். அதாவது எந்த விஷயத்தை எடுத்தாலும் அதை சுவாரஸ்யமாக கொடுப்பவர்கள் என்ற கணக்கில் எழுத துவங்குகிறேன். இதில் ஒரு சிலருக்கு ஏற்கனவே விருது கிடைத்திருக்கலாம். இருந்தாலும் இன்றைய நிலையில் என் மனதில் தோன்றும் சுவாரஸ்யமான எழுதுபவர்களைப் பற்றி குறிப்பிட விரும்புகிறேன். இதை விருது என்று எடுத்துக் கொண்டாலும் சரி, அல்லது பாராட்டு என்று எடுத்துக் கொண்டாலும் சரி. Just a token of appreciation. விருப்பப்பட்டால் நீங்கள் இதை தொடரலாம்.

டுபுக்கு -
எழுதும் எந்த விஷயத்தையும் சுவாரஸ்யமாக எழுதுபவர். நகைச்சுவை இவருடைய களம். இயல்பான நகைச்சுவையில் பின்னு பெடலுடுப்பவர். இவருடைய பதிவுகளைப் படித்து தான் நான் எழுத துவங்கினேன். பதிவர்களை வைத்தோ, நடிகர்களை வைத்தோ நையாண்டி செய்வது அவ்வளவு கடினமானது இல்லை. ஏனென்றால் அவர்களைப் பற்றிய ஒரு பிம்பம் ஏற்கனவே நம் மனதில் இருக்கும். ஆனால் இவர் பதிவுகளில் அப்படி இருக்காது. எதார்த்தமாக வாழ்வில் நடக்கும் சம்பவங்களையும், நபர்களையும் வைத்து நகைச்சுவையில் புகுந்து விளையாடுவார். என்னுடைய ஆல் டைம் ஃபேவரைட் ஜொள்ளித் திரிந்த காலம், நாமதேவரும் கைப்பிடி சுண்டலும், நான்கெட்டு நீகெட்டு கிரிகெட்டு.

வெறும் நகைச்சுவைக்காக மட்டும் இவரை சொல்லவில்லை, இவருடைய கதைகளில் இருக்கும் சோகமும் எனக்கு பிடிக்கும். மிகவும் பிடித்த கதை, சாமியாண்டி.

கப்பி பய -
மாதத்திற்கு நான்கு பதிவாவது எழுதிவிட வேண்டும் என்று எந்த கணக்கும் வைத்துக் கொள்ளாத பதிவர். எழுத விஷயம் இருக்கும் போது எழுதுவார். மற்ற சமயங்களில் அமைதி காப்பார். நகைச்சுவை, சிறுகதை, பயணக்குறிப்பு, விமர்சனம் என்று ரவுண்டு கட்டி அடிப்பவர். இதில் எதுவும் சுமார் என்று கூட சொல்ல முடியாது. அனைத்தும் தரமானதாக இருக்கும். ”கப்பி மாதிரி வித்தியாசமான களம் எடுத்து முயற்சி செய்யிப்பா” என்று போன மாதம் கூட ஒரு நண்பர் எனக்கு அறிவுரை கூறினார். அப்படி எழுத முடியாததால தான் நான் வெட்டியா இருக்கேனு சொல்லி எஸ் ஆகிட்டேன்.

கப்பியோட குறிப்பிட்ட எந்த பதிவும் நான் கொடுக்கவில்லை. முழு வலைப்பதிவையும் நீங்கள் மேயலாம்.

லக்கி லுக்
லக்கி லுக் சிறுகதைகள் மட்டும் என்னை அவ்வளவாக கவர்வதில்லை. மற்ற படி அவர் எழுதும் அத்தனைப் பதிவுகளும் சர வெடி தான். அரசியல் பதிவாகட்டும், மொக்கைப் படங்களுக்கு அவர் எழுதும் விமர்சனங்களாகட்டும், எதிர் பதிவுகளாகட்டும், புத்தக விமர்சனமாகட்டும், நகைச்சுவைப் பதிவுகளாகட்டும் எதிலும் சுவாரஸ்யத்திற்கு குறை இருக்காது. அது மட்டும் இல்லாமல் லக்கியிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம், அவர் மேல் மற்றவர்கள் குறை சொல்லும் போது அவருடைய பதிவுகளில் விஸ்வரூபம் எடுப்பார்.

போலிப் பிரச்சனை போது அவர் அந்த பிரச்சனைகளில் தலையிடாமல் அட்டகாசமான பதிவுகளை கொடுத்து கொண்டிருந்தார். அப்பொழுது மட்டும் அவர் அந்த பதிவுகளுக்கு எல்லாம் பதில் சொல்லி கொண்டிருந்தால் இந்நேரம் லக்கி லுக், யுவ கிருஷ்ணாவாக மாறியிருப்பாரா என்பதே சந்தேகம். புதிய பதிவர்களும், பிரபல பதிவர்களும் லக்கியிடமிருந்து கற்று கொள்ள வேண்டிய பாடமிது. பிரச்சனையின் பொழுது அதைப் பற்றி நீங்கள் பேசிக் கொண்டிருப்பதை விட தரமான பதிவுகள் கொடுப்பதே உங்கள் வளர்ச்சிக்கு உதவும்.

பினாத்தல் சுரேஷ்
கிரியேட்டிவிட்டி கிங். மார்கெட்டிங் துறையில் இருந்தால் எங்கோ சென்றிருப்பார். அவ்வளவு கிரியேட்டிவிட்டி. இவருடைய ஒரு சில பதிவுகளை புரிந்து கொள்ளவே நமக்கு கொஞ்சம் கிரியேட்டிவிட்டி வேண்டும். இல்லை முன்னெச்செரிக்கை வேண்டும். நகைச்சுவை, சிறுகதை இரண்டிலும் இவர் கில்லி. பினாத்தலாருடைய சிறுகதைகளைவிட அவருடைய அவருடைய நகைச்சுவைப் பதிவுகளும், மூளைக்கு வேலை கொடுக்கும் பதிவுகளும் எனக்கு பிடிக்கும். அவருடைய ஃபிளாஷ் பதிவுகளும், தமிழ் மணத்தில் பிரபங்களில் பதிவும் எனக்கு மிகவும் பிடித்தவை.

இவரை இந்த லிஸ்ட்ல சேர்க்கலாமானு தெரியலை... இருந்தாலும் இவருடைய வலைப்பதிவை நான் தொடர்ந்து படிக்கிறேன். அதனால் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

என்.சொக்கன்
வலையில் நிறைய எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்தது சொக்கனின் எழுத்துக்கள். Blog - Digital Diary போல பயன்படுத்துபவர். அவருடைய அனுபவங்களை அவர் அழகாக சொல்லும் விதம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அவருடைய எழுத்தில் கொஞ்சம் கூட போலித்தனம் இருப்பதாக தெரியவில்லை. அவருடைய ஒரு பதிவைப் படித்தாலும் தொடர்ந்து அத்தனைப் பதிவுகளையும் படிக்க வைக்கும் எழுத்துக்களைப் பார்க்க முடியும்.

Monday, July 20, 2009

அ.முத்துலிங்கத்துடன் சிறு(கதை) பயணம்

வீட்டில் ஒரு வாரமாக இணையம் இல்லை. அலுவலகத்தில் இருந்து எழுத நேரம் இல்லை. எழுத பல விஷயங்கள் கிடைத்த இந்த வாரத்தில் இப்படி அமைந்தது வருத்தமே.

தமிழின் தலைசிறந்த எழுத்தாளர்களான ஜெயமோகனையும், அ.முத்துலிங்கத்தையும் சந்தித்து பேசும் வாய்ப்பு இந்த வாரத்தில் அமைந்தது. ஒரு உண்மை என்னவென்றால் இவர்கள் இருவரின் எழுத்தையும் இவர்களை சந்திப்பதற்கு முன் நான் படித்ததில்லை என்பதால் அவர்களிடம் தரமான கேள்விகளை கேட்க எனக்கு தெரியவில்லை. இருப்பினும் உடன் வந்த நண்பர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர்கள் அளித்த பதில்களில் அவர்களுடைய ஆளுமையை புரிந்து கொள்ள முயன்று கொண்டிருந்தேன்.

ஜெமோவைப் பற்றி எழுத நிறைய, நிறைய இருப்பதால் இந்த பதிவில் அவரைப் பற்றி எதையும் சொல்ல விரும்பவில்லை.

அ.முத்துலிங்கம் அவர்களுடன் காரில் நான்கு மணி நேரம் பயணிக்கும் பொழுது ஓரளவு உரையாட முடிந்தது.

எழுத்தாளர்கள் என்றால் எல்லாம் தெரிந்தவர்களைப் போல பேசுவார்கள் என்ற எனது எண்ணம் நேற்று அடியோடு மாறியது. அ.முத்துலிங்கம் அவ்வளவு அமைதி. எந்த கேள்வியென்றாலும் ஒரு நிமிடம் தன்னை தயார் செய்து கொண்டு நிதானமாக பேச துவங்குகிறார். அவருடைய தமிழ் தேன்.

அவரிடம் பேசும் போது நான் பல அபத்தங்களை செய்தேன். ஆனால் அப்படி செய்தது எனக்கு மிகவும் பயனுள்ளதாகவே அமைந்தது. நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது. நான் க‌ற்றுக் கொண்ட‌வைக‌ளை உங்க‌ளுட‌ன் ப‌கிர்ந்து கொள்கிறேன்.

சென்ற‌ வார‌ம் அசோக‌மித்திர‌னின் மான‌ச‌ரோவ‌ர் ம‌ற்றும் இந்திரா பார்த்தசார‌தியின் வேர்ப‌ற்று ப‌டித்திருந்தேன். மான‌ச‌ரோவ‌ர் க‌தையில் இருக்கும் ஒரு த‌வ‌றை சுட்டிக்காட்டி அதைப் ப‌ற்றி பேசிக் கொண்டிருந்தேன்.

அதற்கு பிறகு நான் ஒரு கதையை சொல்லி, அதை நாவலாக எழுதலாம் என்று யோசித்து கொண்டிருப்பதாக சொன்னேன்.

"எந்த தமிழில் எழுதுவீர்கள்" என்று கேட்டார். எந்த தமிழ் என்றால் என்ன சொல்வதென்று எனக்கு புரியவில்லை.

"நான்காம் வகுப்பு படிக்கும் பிள்ளைகளின் தமிழ் ஒரு மாதிரி இருக்கும். பத்தாம் வகுப்பு பிள்ளைகளின் தமிழ் வேறு மாதிரி இருக்கும். ஒரு எழுத்தாளனின் தமிழ் வேறு மாதிரி இருக்கும். நீங்கள் எந்த தமிழில் எழுதுவீர்கள்?"

நான் மௌனமாக இருந்தேன்.

அவ‌ர் என்னிட‌ம் இந்த‌ கேள்வி கேட்ப‌த‌ற்கு முக்கிய‌ கார‌ண‌ம், அத‌ற்கு முன், "கதை எழுத, புத்தகம் படிக்க வேண்டிய அவசியம் தேவையில்லை" என்று சொன்ன கருத்து தான். அவருக்கு அது ஆச்சரியமாக இருந்தது. நான் சொன்னது தவறு என்று சில நிமிடங்களிலே புரிந்து கொண்டேன்.

மீண்டும் அவ‌ரே ஆர‌ம்பித்தார், உதாரணத்திற்கு ஜெயமோகனின் கிளம்புதல் பதிவில் இவ்வாறு குறிப்பிட்டிருப்பார்

"இன்னும் கொஞ்ச நேரத்தில் சென்னை ஒளிரும் பொற்கம்பளமாக கீழே இறங்கி இறங்கி காணாமல்போகும்"

"இதை நீங்கள் எப்படி எழுதியிருப்பீர்கள்?"

என் நீயூரான்கள் துரிதமாக வார்த்தைகளை தேடின.

"எனது விமானம் புறப்பட்டது என்று எழுதியிருப்பீர்களா?"

இருக்கலாம். இல்லை அதில் சில வார்த்தைகளை சேர்த்து இருக்கலாம். இருந்தாலும் சென்னை ஒளிரும் பொற்கம்பளமாக கீழே இறங்கி காணாமல் போனது என்று நிச்சயம் எழுதியிருக்க முடியாது.

"ஒரு எழுத்தாளனின் மொழி இப்படித்தான் இருக்க வேண்டும்"

மொழியை பயன்படுத்தும் அழகு தான் கதைக்கு உயிர் கொடுக்கிறது. அதை நான் இன்று வரை முயன்றதில்லை. முடியாது என்பது மட்டுமே என் எண்ணம். முடியாது என்று எண்ணுவதை விட முயன்று தோற்றால் ஒரு பெருமை இருக்கும் என்று தோன்றுகிறது.

அதன் பிறகு திண்ணை ராஜாராம் அவர்கள் இல்லத்தில் நடந்த சந்திப்பில், முத்துலிங்கம் அவர்கள் சிறுகதையைப் பற்றி குறிப்பிட்ட சில விஷயங்கள்.

சிறுகதை எழுதுவது நாவல் எழுதுவதை விட மிக கடினமான விஷயம்.

அவர் நேர்காணல் எடுக்க சென்ற உலகின் மிக சிறந்த எழுத்தாளர் ஒருவரின் மேஜையில் ஆறு சிறுகதைகள் பாதி எழுதிய நிலையில் இருந்தனவாம். அவருக்கு ஒரு சிறுகதையை எழுதி முடிக்க குறைந்த பட்சம் ஆறு மாதங்கள் ஆகுமாம்.

பிறகு இரவு திரும்பும் பொழுது மீண்டும் சிறுகதைகளைப் பற்றி கேட்க ஆரம்பித்தேன்.

"ஆங்கிலத்தில் இன்று வரும் சிறுகதைகளுக்கு நிகராக தமிழில் ஒரு கதை கூட வருவதில்லை. ஆங்கிலத்தில் சிறுகதைகள் சுமார் நாற்பது முதல்அறுபது பக்கங்கள் வரை இருக்கின்றன. சமீபத்தில் தமிழில் வந்த மிக சிறந்த சிறுகதை ஊமைச் செந்நாய். அதன் தரத்தை ஒரு முன்னுதாரணமாக வைத்துக் கொள்ளுங்கள்."

ஊமைச் செந்நாய் படித்த பொழுது இது சிறந்த கதை என்பதை நானும் உணர்ந்தேன். படித்து முடித்து ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் ஒரு முறை படித்தேன். அதை மீண்டும் படிக்க வேண்டும்.

இந்த நான்கு ‍ஐந்து மணி நேர உரையாடலில் ஒரு இடத்தில் கூட அவர், "என்னுடைய **** இந்த கதையில்...." என்று குறிப்பிடாதது எனக்கு மிகப் பெரிய ஆச்சரியம்.

அதைப் போலவே அவருடைய சிறுகதை ஒன்றைப் பற்றி உடன் வந்த நண்பர் வேல்முருகன் ஒரு கேள்வியை முன் வைத்தார். ஒரு மகன் தன் தந்தை தன்னிடம் சொன்ன கதையை சொல்வதைப் போல ஒரு கதை. அதில் இவ்வாறு வருகிறது.

"அந்த சந்தையில் தான் நான் முதன்முதலில் அந்த பெண்ணைப் பார்த்தேன்"

இதில் சில வார்த்தைகளில் தவறு இருக்கலாம். "முதன்முதலில் அந்த பெண்ணைப் பார்த்தேன்" என்பது தான் இங்கே விவாதத்திற்கு எடுத்து கொண்ட வாக்கியம். இதில் அந்த பெண் என்பது அவன் தாயை அவர் பார்த்தை தான் குறிப்பிடுகிறது. ஆனால் இது வாசகர்களுக்கு அந்த தந்தை வேறு ஒரு பெண்ணை பார்த்ததாக புரிந்து கொள்ளப்படும் வாய்ப்பு இருப்பதாக வேல்முருகன் சொன்னார். சுஜாதாவைப் போன்ற எழுத்தாளர்கள் இவ்வாறு தவறு செய்ததில்லை என்றும், முத்துலிங்கமும் இவ்வாறு வேறு எங்கும் தவறு செய்ததில்லை என்றும் சொன்னார்.

பாபா இந்த கருத்தை ஏற்றுக் கொள்ள‌வில்லை. முத்துலிங்க‌ம் உட‌ன‌டியாக‌ ஏற்றுக் கொண்டார். அந்த‌ இட‌த்தில் அவ‌ர் ஒரு நிமிட‌ம் சிந்தித்தாக‌வும், அத‌ன் பிற‌கே எழுதிய‌தாக‌வும் சொன்னார். மீண்டும் ஒரு முறை ப‌டித்து அதை மாற்ற‌ ஏதாவ‌து வ‌ழி இருந்தால் செய்வ‌தாக‌ சொன்னார். அவ‌ருடைய‌ இந்த‌ பெருந்த‌ன்மை என‌க்கு மிக‌வும் பிடித்திருந்த‌து.

"அங்கு தான் முதன் முதலில் என் அம்மாவைப் பார்த்தார்" என்று வரலாமா என்று நான் கேட்டேன். அது தவறு என்று இருவரும் சொன்னார்கள். அவர் தந்தை பார்க்கும் போது அவள் அவனுக்கு அன்னை இல்லை. என்னுடைய தவறை உடனடியாக புரிந்து கொண்டேன்.

ஒரு முக்கிய‌மான‌ விஷ‌ய‌த்தை சொல்ல‌ த‌வ‌றிவிட்டேன். நான் அசோக‌மித்திர‌ன் க‌தையைப் ப‌ற்றி சொன்ன‌வுட‌ன், "அசோக‌மித்திர‌ன் க‌தைக‌ள் ப‌டிக்க‌ எளிமையாக‌ இருந்தாலும், ஆழ‌மான‌வை. அவ‌ற்றை ஒரு முறைக்கு மேல் ப‌டிக்க‌ வேண்டும். அவ‌ரைப் போல எளிமையாகவும், அழுத்தமாகவும் எழுதுவ‌து மிக‌வும் க‌டின‌மென்றும் சொன்னார்"

முத்துலிங்க‌த்தின் க‌தைக‌ள் த‌வ‌ற விட‌க்கூடாத‌வை என்று சந்திப்பிற்கு வந்த ட்விட்ட‌ர் புக‌ழ் இல‌வ‌ச‌க் கொத்த‌னாரும் சொன்னார்.

அ.முத்துலிங்கம் அவ‌ர்க‌ளின் புத்த‌ங்க‌ளை இங்கே வாங்க‌லாம். இங்கேயும் வாங்க‌லாம்.

சிறுக‌தைக‌ளை இங்கேயும் வாசிக்க‌லாம். நானும் வாசித்துவிட்டு உங்க‌ளுட‌ன் ப‌கிர்ந்து கொள்கிறேன்.

Wednesday, July 08, 2009

ஃபோர் ஃபைவ் சிக்ஸ்

கவிதை எனக்குப் புரியாத‌ ஒன்று. யார் எழுதியிருந்தாலும். வலைப்பூக்களில் ‘வெட்டிப்பயல்' என்ற புனைப்பெயரில் ஆரம்பகாலம் தொட்டே எழுதிவந்தாலும் சமீபமாக பதிவுலகில் கவிதைகள் படிப்ப‌தைக் குறைத்துவிட்டேன். அதனால் கவிதையுலகும், கவிஞர்களும் பிழைத்தார்கள் என்றெல்லாம் சொல்லவில்லை. ‘கவிதை படியுங்களேன்’ என்று என்னை ஊக்கப்படுத்திக் கொண்டுதான் இருந்தார்கள்.

அவர்களுக்காக ஒரு சில கவுஜைகள்….

&&&&&&&&&&&&&&&&&&&&&&&

ஃபோர் ஃபைவ் சிக்ஸ்

குட்டிசுவற்றில் அமர்ந்து
கடக்கும் ஃபிகர்களை
எண்ணிக் கொண்டிருக்கிறான்
அந்த இளைஞ‌ன்.

வலதுகை சுண்டுவிரலில்
ஆரம்பித்த ஒன்று
இடதுகை பெருவிரலில்
பத்தென முடிய
எண்ணிய பத்தை
பேண்ட்டு பைக்குள் போடுகிறான்.

பையின் ஓட்டைவழியே
விழுந்த பத்து
கால் சுண்டுவிரலில்
பதினொன்றாய் ஆரம்பிக்கிறது.

கடக்கின்றன ஃபிகர்கள்.

இருபது சேரக்
காத்திருக்கிறான் அவன்.
இருப‌த்தி ஒன்றுக்காக‌
காத்திருக்கிறேன் நான்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&

கூப்பிடு தொலைவில்
அவள் இருக்கிறாள்.
கூப்பிடாமலே
நான் இருக்கிறேன்.
என் பக்கத்தில்
என்மனைவி இருக்கிறாள்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&

சண்டை முடிந்து
ஹாலின்நடுவே கிடந்த
ஒற்றை பூரிக்கட்டை மீது
ஏறி நிற்கிறது
என் குழந்தை

&&&&&&&&&&&&&&&&&&&&&&&

அவனும்... நானும்

வகுப்பறையில் அவ‌னுக்கு
ஆசிரியர் தரிசனம் வேண்டுமென்று
தலையை நிமிர்த்தி
பார்க்கிறான் அவன்.

எனக்குப் பின்னாலிருப்பவர்களின்
தரிசன சுகத்திற்காக
த‌லையை டேபிளில்
சாய்க்கிறேன் நான்

&&&&&&&&&&&&&&&&&&&&&&&

க‌டைசி க‌வுஜைக்கு கொஞ்ச‌ம் நிறைய‌ யோசிக்க‌ வேண்டிய‌தா இருக்கு. அதைப் பின்னாடி பார்க்க‌லாம்.

Tuesday, July 07, 2009

பாட்ஷா - வலையுலக விமர்சனங்கள்!!!

சூப்பர் ஸ்டார் நடித்த ”பாட்ஷா” படம் வரும் போது தமிழ்ல நிச்சயம் வலைப்பதிவு யாரும் எழுதிருக்க மாட்டாங்க. அதனால பாட்ஷா படம் இன்னைக்கு சூழ்நிலைக்கு வந்திருந்தா இல்லைனா அன்னைக்கு இந்த அளவுக்கு நாம எல்லாம் இருந்திருந்தா நம்ம ஆளுங்க எப்படி எல்லாம் விமர்சனம் எழுதிருப்பாங்கனு ஒரு கற்பனை.


ஏர்சிம் :


பாட்ஷா ‍..
தவறு செய்பவர்களை தண்டிப்பவருக்கு பாட்ஷா, கஷ்டப்படும் ஆட்டோக்காரர்களுக்கு மாணிக்கம். இது தான் முதல் முடிச்சு.


மாணிக்கம் ஏன் பாட்ஷாவாக மாறினான்? அவனுக்கு மட்டன் பிரியாணி கிடைக்காததினாலா? அப்படியே மட்டன் பிரியாணி கிடைத்தாலும் அதில் லெக் பீஸ் கிடைக்காததாலா? அவன் மறுபடி மாணிக்கமான பின்பு அந்த பாட்ஷாத்தனம் என்ன செய்யும்? இது இரண்டாவது முடிச்சி...


இந்த இரண்டு முடிச்சிக்களுக்கு இடையில் இருக்கும் நூலில் ஆட்டோக்காரர்களின் வாழ்க்கையையும் ஆட்டோவையும் தொங்கவிடுகிறது திரைக்கதை....


குறிப்பிட தகுந்த பின்னூட்டம்.


வைத்தியக்காரன் :


ஏர்சிம், நீங்கள் எழுதிய பதிவுகளிலேயே இதுதான் சிறந்தது என்று அடித்து சொல்லலாம்.


'பாட்ஷா' படத்தினுள் இன்னொரு படம் நுணுக்கமாக இருக்கிறது. பிளாஷ் பேக்கிற்குள் ஒரு ஃபிளாஷ் பேக். அதன் அடியை அழகாக பிடித்து இழுத்திருக்கிறீர்கள்.


படம் முழுக்கவே எதிர்மறைகளால் ஆனவைதான். உதாரணமாக, மாணிக்கம், ‍ பாட்ஷா; (இரண்டையும் சேர்த்தால் "மாணிக் பாட்ஷா" அது தான் படத்தோட கதை)


படத்தின் ஆரம்பத்தில் அறிமுகமாகும் மாணிக்கத்தை முதலில் காட்ட மாட்டார்கள். பூசணிக்காயைத் தான் காட்டுவார்கள். அது ஒரு குறியீடு. ஆனால் பாம்பேயில் நேராக பாட்ஷாவைக் காட்டுவார்கள். அதாவது இங்கு மட்டும் தான் அவன் பாட்ஷா. அவனை அவனாகவே ஏற்கிறார்கள்.


மொத்தத்தில் ஒவ்வொரு ப்ரேமிலும் ஒரு அர்த்தம், குறியீடு இருக்கிறது.


சாரி ஏர்சிம். பின்னூட்டம் பதிவை விட நீண்டுவிட்டது.


................................................


சாதுஷா :


பாட்ஷா அண்ணன்களின் காவியம்.


"தங்கச்சிக்கு அண்ணன்னா எனக்கு அண்ணன். எனக்கு அண்ணன்னா உங்களுக்கு அண்ணன். உங்களுக்கு அண்ணன்னா ஊருக்கெல்லாம் அண்ணன். அண்ணன்டா...". நடுமண்டைல பலமான இரும்பு கம்பியால ”நச்சு”னு அடிச்ச மாதிரி இருந்தது இந்த வசனம். தங்கச்சி இருக்குற அண்ணன்களுக்கு தெரியும் அதன் வலிமை.


இது நட்புக்கான படமா? இல்லை. பழிவாங்கும் படமா? இல்லை. அப்பா செண்டிமெண்ட் படமா? இல்லை. பின்ன?


"வள்ளி", சில ஆண்டுகளுக்கு முன் வந்து சினிமா பார்ப்பவர்களின் கண்ணில் காலை விட்டு ஆட்டியது. பீரு தன்னுடைய விமர்சனத்தில் அதை "மொக்கைகளின் காவியம்" என்று குறிப்பிட்டிருந்தார்.


இது ஏன் அண்ணன்களின் காவியம்?


எத்தனை வித அண்ணன்கள். தங்கைகளை, ரம்பையும் ஊர்வசியும் மாதிரி செம சைட்டுடானு ஆனந்த்ராஜ் சொல்லும் போது தலை குனிந்து நிற்கும் ஒரு அண்ணன். அதைக் கேட்டு கோபம் கொள்ளும் ஒரு அண்ணன். தம்பியை தடுத்து நிறுத்தும் ஒரு அண்ணன்.


விஜயக்குமாருக்கு டாட்டராக இருக்கும் யுவராணியை, நீ கண்டிப்பா டாட்டர் ஆகறனு, டாக்டருக்கும் டாட்டருக்கும் வித்தியாசம் தெரியாத ஒரு அப்பாவி அண்ணன். தங்கை ஃபெயிலானதும் அவளை வெறுப்பேற்றி வாசலில் ஆரத்தி எடுக்கும் ஒரு அண்ணன். தன் தங்கை ஒரு டுபுக்கு மண்டையனைக் காதலிக்கிறாள் என்று தெரிந்தவுடன் திருமணத்தை நடத்தி வைக்க போராடும் ஒரு அண்ணன். இப்படி அண்ணன்களில் பல பரிமாணங்கள்.


கஜேந்திரா எடுத்த சுரேஷ் கிருஷ்ணாவா? அடப்போங்கடா. இவரைப் போயி இத்தனை நாளா பாபா, ஆளவந்தானு எடுக்க வைச்சிட்டு வேஸ்ட் பண்ணிட்டீங்களேய்யா என்று எண்ணினேன்.


குறிப்பிட தகுந்த பின்னூட்டம்.


வராதகவுண்டன்:
நக்மா, யுவராணி என்ற இரண்டு அழகு தேவதைகள் பற்றி எழுதாத சாதுஷாவுக்கு கண்டனங்கள்.


....................................................................


காவி.மன்னன் :


பாட்ஷாவும் பார்ப்பனர்களின் சனாதன மதமும்


பழிக்கு பழி, நட்பு இவற்றை அடிப்படையாகக் கொண்ட எத்தனையோ திரைப்படங்கள் வெற்றிப் பெற்றிருக்கின்றன. பழிக்கு பழியும், நட்பும் தனிமனிதனுக்கு இன்றியமையாத ஒன்று என்பதால் திரையுலகினர் அனைவருமே அன்றாடம் புது அரியில் மாவு அரைக்கிறார்கள். பிறகு அந்த மாவில் இட்லி, தோசை என்று சுடுவார்கள். ச்சே. ஒரு ஃப்ளோல அப்படியே வந்துடுச்சி. இப்ப பாயிண்டை பிடிக்கிறேன்.


இந்துவாக இருப்பவன் அப்பாவியாகவும், நேர்மையாளனாகவும், பரோபகாரியாகவும் இருப்பது போல் காட்டியுள்ளார்கள். அதே நபர் முஸ்லீமாக மாறும் போது கொலை செய்பவராகவும், கொடுரமாக ஒரு கிருஸ்துவனின் கையில் கத்தியால் குத்துவதைப் போலவும் காட்டியுள்ளார்கள். அங்கே கூட ஒரு இந்துவின் கையில் கத்தியைக் குத்தவில்லை. பிள்ளையார் சதூர்த்தி கொண்டாடும் இந்துக்களை சென்று காப்பாற்றுகிறார். அதே போல் முஸ்லிமாக இருக்கும் அன்வர் பாட்ஷாவைக் கொல்கிறார்கள். இந்துவாக இருக்கும் மாணிக்கத்தை விட்டு விடுகிறார்கள்.


வில்லனாக ஒரு கிருஸ்துவனைக் காட்டியுள்ளார்கள். அவன் பல கொலைகளை செய்வது போலவும், கள்ளக்கடத்தல், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவது போலவும் காட்டியுள்ளார்கள். அவனை எதிர்க்க, இந்துவாக இல்லாமல் இஸ்லாமியனாக மாறி நாயகனும் கள்ளக்கடத்தல் மற்றும் தாதாவாக மாறுவது போல் காட்டியுள்ளார்கள். கடைசியில் மாணிக்கத்தின் ஆட்களில் ஒரு சீக்கியனைத் தான் கொல்கிறார்கள். அப்பொழுது கூட இந்துக்களுக்கு பிரச்சனை இல்லை.


முன்பெல்லாம் திரையில் வில்லன்களாக கூலிப்படையாக இயங்கும் ஒருவரையோ, அல்லது முரட்டு முகம் கொண்டவர்களையோ காட்டுவார்கள், தற்போதெல்லாம் வில்லன்கள் என்றால் அது கிருஸ்துவர்கள் என்பதாகவே காட்டப்படுகிறது. அதே போல் கள்ளக்கடத்தலில் ஈடுபடுபவர்கள் எல்லாம் இஸ்லாமியர்களாக காட்டப்படுகிறது. இது சனாதன மதத்தைப் பின்பற்றும் இந்துக்களின் பொறாமையே காரணம்.


குறிப்பிட தகுந்த பின்னூட்டம்.


fer0z 9@ndhi :


இதில் சில பொதுவான கருத்துகளில் எனக்கும் உடன்பாடு உண்டு. இந்துக்களின் மன நிலை மாற வேண்டும். எனக்குத் தெரிந்து மற்ற இரு மதத்தினரைவிட மிக ஆபத்தானவர்கள் இவர்கள். படத்தைப் பற்றி சொல்ல எதுமில்லை.. நான் பார்க்கவில்லை.


...............


புறநாழிகை மண் சகாதேவன், லேண்ட் லைனேந்திரன் விமர்சனம் எல்லாம் போடணும்னு பார்த்தேன். பதிவு ஏற்கனவே ரொம்ப பெருசாகிடுச்சி. பதிவு பிடிச்சிருந்தா சொல்லுங்க. அடுத்து நிறைய படத்துக்கு இப்படி விமர்சனம் பார்க்கலாம்.

Monday, July 06, 2009

அன்புள்ள வெட்டிப்பயல் அவர்களுக்கு...

அன்புள்ள வெட்டிப்பயல் அவர்களுக்கு, (மன்னிக்கவும்...இப்படி தான் உங்கள் பெயர் வெப் சைட்-இல் இருந்தது)


முதலில் இந்த மின்னஞ்சலை உங்களுக்கு அனுப்பும் எண்ணம் எனக்கு ஒரு இருபது நிமிடத்துக்கு முன்புதான் வந்தது. நானும் கடந்த ஆறு மாதங்களாக அனைவரது படைப்புகளையும் மிகுந்த விருப்பத்துடன் படித்து வருகிறேன். முதன் முதலில் இங்கு இருக்கும் நகைசுவையான படைப்புகளுக்காக மட்டும் எல்லாவற்றையும் படித்து கொண்டிருந்தேன். முதன் முதலில் இருந்து என்ன நேற்று இரவு வரை கூட அதே மாதிரிதான்... ஆனால் நேற்று இரவு இரண்டு மணிக்கு மேல் என்னால் என்ன சொல்வதென்றே தெரிவதில்லை. எங்கோ கிடைத்த ஒரு லிங்க் -இல் இருந்து உங்கள் ப்லாக்-க்கு வந்தேன்... முதலில் ஏதோ ஒரு உங்களின் படைப்பை பார்த்துகொண்டிருக்கும் பொது வலது பக்கத்தில் இருக்கும் கதைகள் எனும் தலைப்பை பாத்தேன்... அங்கு "தூறல்" என்ற தலைப்பில் இருந்த ஒரு கதையை படிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது... நான் உண்மையாக சொல்கிறேன் ... இதுவரை அந்த கதையை எத்தனை முறை திரும்ப திரும்ப படித்தேன் என்று எனக்கு தெரியவில்லை...
கதையை முதன் முறை படித்து முடித்த போது எத்தனை துளி கண்ணீர் வந்தது என்றும் எனக்கு தெரியவில்லை. அந்த கதையில் வரும் உரையாடல்களும், நேர்த்தியும் எனக்கு அப்படியே மனப்பாடம் ஆகிவிட்டது. என்னிடம் உள்ள ஒரே நல்ல பழக்கம் என்று நான் சொல்வது, படிப்பது... நான் படித்தது நன்றாக இருந்தால் ஒரு இரண்டு பேரிடமாவது அதை பற்றியும், அதை எழுதியவரை பற்றியும் என்னால் சொல்லாமல் இருக்க முடியாது. ஆனால் இந்த முறை மட்டும் என்னோவோ தெரியவில்லை, உங்களுக்கு என் வாழ்த்துகளுடன் கூடிய நன்றியை சொல்ல வேண்டும் போல் இருந்தது.. நான் முதன் முதலாக அரை பக்கத்துக்கு மேல் ஒரு மெசேஜ் டைப் பண்ணுவது இதுவே முதன் முறை அதுவும் தமிழில். (எதாவது பிழை இருந்தால் மன்னிக்கவும்)

இன்று (சண்டே) முழுவதும் நான் பேருந்தில் மட்டுமே இந்த பெங்களூர் முழுவதயும் சுற்றி வந்தேன் (வேலை விசயமாக). ஆனால் என் முன்னால் எத்தனை கார்த்திக்கும், ஆர்த்தியும் கடந்து சென்றார்கள் என்பதே எனது கனவாக இருந்தது. இன்னும் எத்தனை பேரை சந்திப்பேன் என்பது மட்டுமே என் மனதில் ஓடி கொண்டிருக்கிறது.

( நான் படித்தவர்களில் சிலர் பரிசல், அதிஷா, லக்கிலுக், கார்கி,நர்சிம் என ஒரு பெரிய லிஸ்ட் உள்ளது...) அவர்களின் எழுத்துகளும் எனக்கு மிகவும் பிடிக்கும். (Edited by Vettipayal)

ஒரு வேண்டு கோள், எனக்காக இந்த கடிதத்தை உங்கள் ப்ளாகில் நீங்கள் பதிய வேண்டும்... நான் அதை பார்க்கும் சந்தோஷம் எனக்கு கிடைக்க வேண்டும்.
என்றென்றும் அன்புடன்,
உங்களின் புது வாசகன்...

.............................................

நண்பரே,
உங்களுடைய மடலுக்கு மிக்க நன்றி.

உங்களுடைய மடலில் இருந்து ஒரு வரியை மட்டும் நீக்கி விட்டேன். அது வீணாக பிரச்சனையை உருவாக்கும்...

நீங்கள் முதல் முறை தமிழில் டைப் செய்வதாக சொல்லியிருக்கிறீர்கள். எப்படி செய்தீர்கள் என்று தெரியவில்லை. http://tamileditor.org/ பயன்படுத்தலாம். அல்லது nhm பயன்படுத்தலாம்.

தூறல்” அளவிற்கு எனக்கு பேர் வாங்கி கொடுத்த கதை எதுவும் இல்லைனு நினைக்கிறேன். அந்த கதை தேன்கூடு போட்டி மரணம் என்ற தலைப்புக்காக எழுதியது. ஆனால் ஏனோ அனுப்பவில்லை. தூறல் என்னோட மூணாவது சிறுகதை. அதற்கு பிறகு இருபது கதைகள் எழுதிவிட்டேன். ஆனால் அது அளவுக்கு எதுவும் பிரபலமாகவில்லை :)

கார்த்திக்கும், ஆர்த்திக்கும் நன்றி

நண்பர் சதீஷுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

.................................................

நண்பர்கள் பல முறை சேட்ல என் கதையைப் பற்றி சொல்லும் விஷயங்கள்.

பெங்களூர்
செல் ஃபோன் உரையாடல்கள்
ட்ராஃபிக் ஜாம்
கிருஷ்ணா கஃபே
பஸ் பயணம்
ஃபுட் கோர்ட்
சண்டை
சமாதானம்

இதையெல்லாம் மாத்தி மாத்தி போட்டா ஒரு புது கதை. இது தான் வெட்டி ஸ்டைல்னு :)

உண்மையாக்கூட இருக்கலாம். மாத்த முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன்.

Sunday, July 05, 2009

கசினோவில் காசு சம்பாதிப்பது எப்படி?

வெட்டிப்பேச்சு பேசி ரொம்ப நாளாச்சு.

முதல் காரணம், வாழ்க்கைல பெருசா இண்டரஸ்டிங்கா எதுவும் நடக்கவில்லை. இந்தியாவில் இருந்தா நிறைய விஷயங்கள் இருக்கும். இங்கு மொனொடானஸாக வாழ்க்கை இருப்பதால் பெரிதாக பகிர்ந்து கொள்ள எதுவுமில்லை. அடுத்த மாதம் எப்படியும் பர்மிதா பாப்பா இங்கே வந்துவிட்டால் கொஞ்சம் சுவாரசியமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

..............

இந்த ஆறு மாசத்துல நிறைய தடவை கசினோ சென்று வந்துவிட்டேன். அதிகமாக காசு தேத்தவில்லை என்றாலும் பெரிதாக எதுவும் இழக்கவுமில்லை. அங்க எனக்கு பிடித்த விஷயமே அந்த டென்ஷன் தான்.

நான் ரோலே மட்டும் தான் விளையாடுவேன். அதுவும் அவுட்டர்ல வைக்க மாட்டேன். உள்ளே நம்பர்களில் தான் வைப்பேன். ஆனா பல தடவை அவுட்டரில் நான் சொல்லியது வந்துவிடும். குறிப்பாக எந்த பனிரெண்டில் வரும் என்பது. ஒண்ணு வெச்சா மூணு :)

நான் விளையாடும் போது நடந்த சில சுவாரஸியங்கள். நம்ம லிமிட் எப்பவும் இருநூறு டாலர் தான். அதுக்கு மேல நிச்சயம் விளையாட மாட்டேன். ஒரு தடவை நான் விளையாடிட்டு இருக்கும் போது ஒரு வயசான தாத்தா வந்து பக்கத்துல நின்னு ஒரு ரெண்டு ஆட்டம் பார்த்தாரு. அப்பறம் ரெண்டாயிரம் டாலருக்கு சிப் வாங்கினாரு. எல்லாமே ப்ளாக் (100$) சிப். அதை அப்படியே நம்பர்ல பிரிச்சி வெச்சாரு. ஒரு சில நம்பர்ல ஒரு சிப், ஒரு சில நம்பர்ல ரெண்டு சிப் வெச்சாரு.
விளையாட்டு தெரியாதவங்களுக்கு இங்க ஒரு விஷயம் சொல்லிடறேன். ரோலேல மொத்தம் முப்பத்தி எட்டு நம்பர் இருக்கும். 0, 00, 1-36. இதுல நம்பர்ல வெச்சி, வந்ததுனா ஒரு சிப்க்கு முப்பத்தி ஆறு தருவாங்க (வெச்சதையும் சேர்த்து). Odd, Evenல வெச்சா ஒரு டாலருக்கு ரெண்டு. 0-12, 13-24, 24-36ல வெச்சா ஒரு டாலருக்கு மூணு டாலர். அப்படி எல்லாம் Probability பேஸ் பண்ணி தான்.

இப்ப அவர் இருபது சிப் வாங்கி சில, பல நம்பர்ல வெச்சாரு. கடைசியா சுத்தறதுக்கு முன்னாடி, முப்பத்தி அஞ்சில இருந்த ஒரு சிப் எடுத்து முப்பத்தி நாலுல மாத்தினாரு. முப்பத்தி நாலுல ஏற்கனவே ஒரு சிப் வெச்சிருந்தாரு. இப்ப முப்பத்தி அஞ்சில எந்த சிப்பும் இல்லை. முப்பத்தி நாலுல இருநூறு டாலர் சிப். நான் எப்பவுமே முப்பத்தி நாலுல ஒரு நாலு, அஞ்சி வைப்பேன்.

அவர் முப்பத்தி அஞ்சில இருந்து எடுத்து வெச்சவுடனே எனக்கு டென்ஷன் அதிகமாகிடுச்சி. இப்ப முப்பத்தி அஞ்சில எந்த சிப்புமே இல்லை. சரினு கடைசி நேரத்துல நான் ஒரு ரெண்டு சிப் எடுத்து முப்பத்தி அஞ்சில வெச்சேன்.

அவர் என்னை பார்த்து சிரிச்சிட்டு, May be I am wrongனு சொன்னாரு. எனக்கும் முப்பத்தி நாலுல வந்தா சந்தோஷம் தான். எல்லாருமே செம டென்ஷன். கடைசியா பார்த்தா முப்பத்தி..... நாலு வந்துடுச்சி... ஒரே கொண்டட்டம் தான். இப்ப அவருக்கு ஏழாயிரம் டாலர் கொடுத்தாங்க.

மறுபடியும் சிங்கம் ரெண்டாயிரம் டாலரோட களம் இறங்குச்சு. மறுபடியும் நிறைய நம்பர்ல ஒரு சிப், சில நம்பர்கள்ல ரெண்டு சிப். அந்த தடவை அவர் ஒரு நம்பர்ல வெச்சிருந்தது வந்துச்சு. இப்ப மூவாயிரத்தி ஐநூறு டாலர் ஜெயிச்சாரு.

அடுத்து மறுபடியும் களம் இறங்கினாரு. இந்த தடவை எதுவும் ஜெயிக்கல. உடனே ஒரு இருநூறு டாலர் டிப் கொடுத்துட்டு கிளம்பிட்டாரு. நான் திக்கி, திணறி நானூறு டாலர் தான் ஜெயிச்சேன்.

இது நடந்தது Foxwoodsல.

..............

போன மாசம் நண்பனை பார்க்க Delaware போயிருந்தேன். உடனே அடுத்த நாள் Atlantic City போகலாம்னு முடிவு பண்ணோம். ஒரு தடவை Atlantic Cityக்கு போய் பயங்கர கஷ்டப்பட்டோம். ஆனா அந்த தடவை மூணு ஆட்டம் தான் ஆடினோம். மூணு தடவையும் ஜெயிச்சோம். அது 0-12, 13-24, 24-36ல வெச்சி ஜெயிச்சது. சீசர்ஸ் காசினோல.

இந்த தடவை தாஜ் மகால் கேசினோ போனோம். மூணு பேரா போனதால விளையாடக்கூடாதுனு முடிவு பண்ணிருந்தேன். ஏன்னா மூணு பேர் போனா விளங்காதுனு ஒரு செண்டிமெண்ட். ஒரு தடவை அப்படி போய் இருநூறு டாலரும் போச்சு. ஆனா உள்ள போனவுடனே என் கண்ணு வழக்கம் போல ரோலே டெபில்ல, முன்னாடி ஜெயிச்ச டேபில் நம்பர் எல்லாத்தையும் நோட் பண்ண ஆரம்பிச்சிடுச்சு. அதுல ஒரு டேபில்ல எல்லாமே என் நம்பர் தான். நான் எப்பவும் சில குறிப்பிட்ட நம்பர்கள்ல வைப்பேன். அதே நம்பர்ஸ் வந்திருந்தது. உடனே நண்பன்ட ஒரு நூறு டாலர் கடன் வாங்கி களம் இறங்கினேன்.

முதல் ரவுண்ட், 0 வந்து ஆப்பு அடிச்சிது. ஆஹா... ஆரம்பமே அசத்துதேனு தோணுச்சு. ஆனா அன்னைக்கு என்னுமோ நாம இன்னைக்கு நிச்சயம் பணம் விட மாட்டோம்னு மனசுல தோணுச்சு. சரினு அடுத்த ரவுண்ட். மறுபடியும் 0. நிச்சயம் ஆப்பு தானு முடிவாகிடுச்சி. அடுத்து பதினெட்டு. இதுக்கு முன்னாடி நான் இருநூறு தோக்கும் போதும் கடைசியா முடிச்சி வெச்சது பதினெட்டு தான். நூறு டாலர் அவுட். தாஜ் மகால் ராசி இல்லை. ஏன்னா அது அழுவாச்சி மஹால்னு அப்ப தான் தோணுச்சு.

சரி, விட்றா சண்முகம்னு சீசர்ஸ்க்கு கிளம்பினோம். சீசர்ஸ்ல ஏற்கனவே ஜெயிச்ச ஹிஸ்டரி இருக்கு. ஆனா மூணு பேர்ல விளையாடணும்னு வந்த ரெண்டு பேரும் வேடிக்கை மட்டுமே பார்த்துட்டு வந்தாங்க. சரி ஏழுரையை எவ்வளவு நேரம் தான் நாமலே சுமக்கறதுனு அவுங்களை களம் இறங்க சொன்னேன். ஒரு நண்பன் சீசர்ஸ்ல ரொம்ப நேரமா விளையாடி நூறு டாலரை விட்டான். அப்ப தான் சரி, ஏழரையை பாஸ் பண்ணியாச்சி, இனிமே நாம களம் இறங்கலாம்னு முடிவு பண்ணேன்.

அப்பறம் சாப்பிட்ட Bally's கசினோ போனோம். ரொம்ப நேரமா சுத்திட்டே இருந்தோம். என் நம்பர்ஸ் வர டேபில் எதுவுமே இல்லை. எல்லாமே பயங்கரமான வேரியேஷன் இருந்தது. கொஞ்ச நேரம் போனவுடனே என் நம்பர் வர டேபில் ஒண்ணு பிடிச்சோம். இந்த தடவை சேஃப் கேம் ஆடணும்னு ஆட்டத்துக்கு இருபத்தி அஞ்சி டாலரா பிரிச்சிக்கிட்டேன்.முதல் மூணு ஆட்டம் அவுட். கடைசி இருபத்தி அஞ்சி. இந்த இருநூறும் போச்சுனா இதுக்கு மேல கசினோ பக்கமே கால் வைக்க கூடாதுனு முடிவு பண்ணினேன். கடைசியா நான் ரெண்டு சிப் வெச்சிருந்தது வந்தது. எழுபது டாலர். மறுபடி எழுபதையும் உள்ளே வெச்சேன். அது அப்படியே இருநூறுக்கு மேல வந்துடுச்சி. நண்பன், வாடா பாலாஜி கிளம்பிடலாம்னு சொன்னான். நல்ல நேரம் இருக்கும் போது கிளம்பறது முட்டாள் தனம்னு அதிகமா பெட்டிங் ஆரம்பிச்சேன்.

ஒரு ஐநூறு, அறுநூறு டாலர் பக்கம் வந்துடுச்சி. இப்ப தான் சரி, ரிஸ்க் எடுக்கலாம்னு முடிவு பண்ணேன். அந்த ட்ரிப்புக்கு மொத்த செலவு எவ்வளவோ அதை எடுத்து பாக்கெட்ல போட்டுக்கிட்டேன். மீதி ஜெயிச்ச காசு ஒரு நானூறு இருந்தது. அதை ரெண்டா பிரிச்சி ரெண்டு ஆட்டம் வைக்கலாம்னு முடிவு. ஜெயிச்சா லம்பா கிடைக்கும். தோத்தா நஷ்டம் எதுவுமில்லை. ஒரு சில நம்பர்ல இருபது சிப்புக்கு மேல கூட வெச்சேன்.

அஞ்சில வைக்கலாமா ஏழுல வைக்கலாமானு கடைசியா ஒரு குழப்பம். கிட்டதிட்ட பத்து டோக்கன் இருந்தது, ரெண்டிலும் பிரித்து வைத்திருக்கலாம். ஆனா இதுவே ரிஸ்க் எடுக்க வேண்டும்னு முடிவு பண்ணிட்டு ஆடற கேம். அதனால நோ சேஃப் பெட். ஏழுல வெச்சேன். கரெக்டா அஞ்சு வந்துடுச்சி. சூப்பர்.

அடுத்து கடைசி இருநூறு. இந்த தடவையும் போன முறை மாதிரியே ஹை பெட்ஸ் தான். கடைசியா பதினெட்டுல வந்து நின்னுச்சி. பதினெட்டுல மட்டும் இது வரைக்கும் மூணு தடவை மாட்டி வெளிய வந்திருக்கேன். அப்படி என்னடா இந்த நம்பருக்கும் நமக்கும் எப்ப பார்த்தாலும் தகராறுனு நானும் ரொம்ப யோசிச்சிட்டு இருந்தேன்.

என் கூட வந்த நண்பர் ஒருத்தர் விளையாட ஆரம்பிச்சிட்டாரு. அவரு வெளிய ரெட் ப்ளாக்ல விளையாடிட்டு இருந்தாரு. அப்ப ஒரு சிங்கி வந்தாரு. ரெண்டாயிரத்துக்கு ப்ளாக் சிப் வாங்கினாரு. ஆஹா இன்னைக்கும் ஒருத்தனா? அப்படினு பாக்க ஆரம்பிச்சேன். மனுஷன் அவுட்டர்ல விளையாட ஆரம்பிச்சாரு. தொடர்ந்து அஞ்சு ரெட் வந்திருந்தது. ஆயிரம் டாலரை ப்ளாக்ல வெச்சாரு.

எங்களுக்கு டென்ஷன். கூட வந்தவரு என்ன பண்றதுனு தெரியாம வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சாரு. டீலர் சுத்த ஆரம்பிச்சாரு. நமக்கு டென்ஷன் எகிற ஆரம்பிச்சிது. பார்த்தா ரெட். திரும்பவும் ப்ளாக்ல வெச்சாரு. நமக்கா இங்க ஹார்ட் பீட் எகிறுது. மறுபடியும் ரெட். ரெண்டாயிரம் அவுட்.

திரும்ப ரெண்டாயிரம் டாலர்க்கு சிப் வாங்கினாரு. மறுபடியும் ப்ளாக்லயே வெச்சாரு. மொத்தம் ஏழு தடவை ரெட். நிச்சயம் இப்ப ப்ளாக் தான் வரும்னு கூட இருந்த நண்பரும் ப்ளாக்ல வெச்சாரு. மறுபடியும் டென்ஷன். எல்லாரும் இப்ப அந்த சிங்கி ஜெயிக்கணும்னு வேண்டிக்க ஆரம்பிச்சாங்க. இந்த தடவை.... யும் சிகப்பு தான். எல்லாருக்குமே ஷாக். அவன் அசராம அடுத்து கருப்புலயே வெச்சான். மறுபடியும் சிகப்பு வந்தா நமக்கு ஹார்ட் அட்டாக் வந்துடும்னு அதைப் பாக்கற தைரியம் இல்லாததால நாங்க கிளம்பிட்டோம்.

அப்பறம் பதினெட்டு நம்பரைப் பத்தி யோசிக்க ஆரம்பிச்சேன். எங்க காலேஜ்ல பதினேட்டு ரோல் நம்பர் யாரு, அவனுக்கும் நமக்கும் ஏதாவது தகராறு இருந்திருக்கா, பதினெட்டாவது வயசுல நமக்கு ஏதாவது கஷ்டம் இருந்திருக்கா, சபரி மலைக்கு போகும் போது ஏதாவது தப்பு பண்ணோமா? இப்படி பல சிந்தனை. அப்பறம் பார்த்தா தான் தெரியுது, தங்கமணியோட பிறந்த நாள் பதினெட்டாம் தேதி வருதுனு. இதுக்கு மேல நீ விளையாடின, அவ்வளவு தான் காலி. பேசாம நீ கிளம்புனு வார்னிங் கொடுக்க தான் அப்ப அப்ப வந்து ஆப்பு வெச்சிருக்குனு புரிஞ்சிது.

................

கடைசியா...

கசினோல எப்படி காசு சம்பாதிக்கணும்னு கேட்டா....

ஒரே வழி...

கசினோ நடத்தி தான். விளையாடி எல்லாம் பெருசா எதுவும் ஜெயிக்க முடியாது.

Saturday, July 04, 2009

விடாது கருப்பு - மர்ம தேசம்

ஊன் மெய்க்கு பிரதானம்
மைதூனத்தின் விதானம்
சூதானமாய் யோசித்தால்
விடையோ இரண்டு
நிதானமாய் யோசித்தால்
உண்டு விருந்து

இந்த விடுகதையில் தொடரோட முதல் பகுதி ஆரம்பிக்குது. ஊருக்கே தெரியும் இந்த விடுகதையின் விடையில் தான் ஊரே தேடும் பொன்பானை பொதிந்திருக்கும் ரகசியம் இருக்கிறது.

விடாது கருப்பு, மர்ம தேசம் தொடரின் இரண்டாவது தொடர். இது நான் பனிரெண்டாவது படிக்கும் போது வந்தது. அப்ப ஹாஸ்டல்ல இருந்ததால பார்க்க முடியல. ஆனா க்ளைமாக்ஸ் ஏப்ரல்ல வந்திருக்கும்னு நினைக்கிறேன். ஏன்னா நான் இந்த நாடகத்தோட க்ளைமாக்ஸ் மட்டும் பார்த்தேன். அப்படி ஒரு க்ளைமாக்ஸ் பார்த்ததுக்கு அப்பறம் அந்த நாடகத்தைப் பார்த்தே தீரணும்னு நினைச்சிட்டு இருந்தேன்.

ராஜ் டீவில மறுபடியும் போடும் போதும் பார்க்க முடியல. அப்பறம் இங்க வந்ததுக்கப்பறம் மே லாங் வீக் எண்ட்ல வீட்ல தனியா இருந்தேன். செம போர். அப்ப இண்டர்நெட்ல மேயும் போது இந்த தொடர் முழுதும் rajshri.comல இருந்தது. பார்க்க ஆரம்பித்தேன். மூணு நாள் முழுதும் உட்கார்ந்து எண்பத்தி இரண்டு பகுதியும் பார்த்து முடிச்சிட்டேன். இப்படி ஒரு சீரியல் (வேண்டும்னா சினிமாவையும் சேர்த்துக்கலாம்) என்னை கவர்ந்தது இல்லை. அட்டகாசமான டைரக்‌ஷன்.

இந்த அளவுக்கு ஒரு மர்மம் நிறைந்த திரைக்கதை தமிழ்ல வந்திருக்குமானு சந்தேகம் தான். சினிமாவைப் பொருத்தவரை மர்மம் நிறைந்த திரைப்படங்கள்னு பார்த்தா அந்த நாள், அதே கண்கள் வேற எதுவும் இருக்கானு சட்டுனு நினைவுக்கு வரல. அதிலும் அதே கண்களை லிஸ்ட்ல சேர்த்துக்க முடியாது. ஏன்னா என்னைப் பொருத்தவரை அத்தனை கதாபாத்திரங்களும் முதலிலே தெளிவாக காட்டப்பட வேண்டும். சடார்னு எங்கயோ இருந்து வர மாதிரி காட்றதுல புத்திசாலித்தனம் இல்லை. அந்த வகைல அந்த நாள் அட்டகாசமான படம்.

விடாது கருப்பு நாடகத்தை அந்த விஷயத்தில் பாராட்ட வேண்டும். அதுவும் அன்றும், இன்றும்னு ஒரே பாகத்துல காட்டினது புத்திசாலித்தனம். அதுவும் அன்றும் முழுக்க முழுக்க ராசுவின் பார்வையில் காட்டப்பட்டிருக்கும். அத்தனை சீன்களிலும் அவன் இருந்திருப்பான்.

கதை இது தான். தொட்டக்கார மங்கலம்னு ஒரு கிராமம். அந்த கிராமத்துல நடக்குற தப்புக்கு எல்லாம் கருப்பு சாமி தண்டனை நிச்சயம் உண்டு. அந்த ஊருக்கு தோழியின் காதலை சேர்த்து வைக்க வரும் ஒரு டாக்டர் கம் எழுத்தாளர், அந்த கருப்பு நிச்சயம் கடவுள் அல்ல, மனிதன் தான் என நிருபிக்க முயலுவது தான் கதை. ஆனா கடைசில நாடகம் முடிந்த பிறகும் இது மனிதனின் செயலா அல்லது நம்மை மீறிய சக்தியின் இயக்கமா என யோசிக்க வைப்பது கதாசிரியரின் புத்திசாலித்தனம்.

இந்த கதைக்குள்ளே பல கதைகள், ஊரையே ஏமாற்றி நகைகளை புதைத்து வைத்து செத்துப் போகும் பேச்சிக் கிழவி, வாலிப வயதில் பல பாவங்களை செய்து கருப்புவினால் கையை இழுந்து அதற்கு பிறகு எப்பொழுதும் பேசாத கட்டயன், பொன் பானையைத் தேடும் ஆனைமுடியான் (ஆண்மை உடையார்), கருப்பு தான் கண் கண்ட தெய்வம் என நம்பும் ஆனைமுடியான் மனைவி,
சின்ன வயதிலிருந்தே பேச்சிக்கிழவி, கட்டயன் செய்யும் பாவங்களைப் பார்த்து வளரும் ராசு, திருடனாய் இருந்து திருந்தி, தான் திருடிய நகைகளை அதை சேர்ந்தவர்களிடம் ஒப்படைக்க துடிக்கும் பிரம்மன், இந்த உண்மைகளை எல்லாம் கண்டுபிடிக்க துடிக்கும் ரீனா, இந்த உலகில் தன்னுடைய பங்கு என்ன என தெரிந்து கொள்ள பித்து பிடித்து அலையும் டாக்டர் நந்தா, ஊரையும், ஆனைமுடியான் குடும்பத்தையும் ஆட்டிப் படைக்கும் பூசாரி. இப்படி அட்டகாசமாக படைக்கப் பட்டிருக்கும் பாத்திரங்கள்.

எண்பத்தி ஓராவது பாகம் முடியும் போது இது மனிதனின் செயல் தான் என புரிந்து கொள்ளும் நாம், கடைசிப் பகுதியைப் பார்த்ததும், இது நிஜமாலுமே மனிதனின் செயலா என சிந்திக்க துவங்கிவிடுவோம். அது தான் கதையின் வெற்றி. அதே போல் இது மனிதனின் செயலா அல்லது நம்மை மீறிய சக்தியா என ஆராய்ச்சியை செய்யாமலே இருந்திருக்கலாம் என்றும் தோன்ற ஆரம்பித்தது.

என்னைப் பொருத்தவரை நாடகத்தின் பலமே அன்று பகுதியில் வரும் பேச்சிக்கிழவி, ராசு, கட்டயன் தான். அதுவும் பேச்சிக்கிழவியும் ராசுவும் அட்டகாசமான நடிப்பு. பேச்சிக்கிழவியின் திமிர், இதுவரை நான் பார்த்த வில்லன்களை எல்லாம் தூக்கி சாப்பிட்டு விட்டது போல் தோன்றியது. இவ்வளவு சாமார்த்தியமான கிழவியை (பாத்திரத்தை) இதுவரையில் பார்த்தே இல்லைனு கூட சொல்லலாம். பின்னாடி இந்த கிழவியை அசுரினு சொல்லும் போது, அது எந்த விதத்திலும் குறைவு இல்லைனு தான் தோணும். கருப்பு நிச்சயமா மனுஷன் தான் பின்னாடி ரீனா நம்பறதை விட, கிராமத்திலே இருந்து கருப்பு மனுஷன் தானு அந்த பாட்டி அத்தனை வருஷத்துக்கு முன்னாடி கண்டுபிடிப்பதே அதோட திறமைக்கு சான்று. அப்பறம் ஊரையே ஆட்டிப்படைக்கும் திருடன் மொக்க மாயனை கொன்று அவன் திருடின நகைகளையே கொள்ளை அடிப்பது, பிரம்மனை போலிஸ்ல பிடித்து கொடுப்பது, நியாயம் கேட்டு வரும் ஊர் மக்களை அக்கு வேறு ஆணி வேறாக பிரிப்பது என துவம்சம் செய்திருக்கும் அந்த பாட்டி பாத்திரம். அதுவும் நியாயம் கேக்க வர ஊர்மக்களை பிரிச்சி மேயறது அட்டகாசமான சீன். பேச்சிக்கிழவி பேசும் போது அந்த வீடே அதிர்வது போல் எதிரோலிப்பது அருமை.

சின்ன வயது ராசுவாக நடித்திருக்கும் மாஸ்டர் லோகேஷ் பத்தி சொல்லலைனா என்னை விடாது கருப்பு. அவ்வளவு அட்டகாசமான நடிப்பு. மொத்த நாடகத்தோட கனத்தையும் தாங்கறது அந்த பாத்திரம் தான். ஒவ்வொரு பாகத்திலும் புதிது புதிதாக ஏதாவது விளையாடிக் கொண்டிருப்பான். நல்லவர்கள் கெட்டவர்கள்னு எல்லாருக்குமே அவனைப் பிடிக்கும். அதைப் பார்க்கும் நமக்கும் அவனை நிச்சயம் பிடிக்கும்.

இந்த தொடரைப் பார்க்க விரும்புவர்கள் இங்கே சொடுக்கலாம்.

நாடகம் பார்க்க வேண்டும் என நினைப்பவர்கள் இதற்கு மேல் படிக்காதீர்கள். Contain spoilers...

நாடகம் பார்த்து முடிக்கும் போது மனம் முழுவதும் சின்ன வயது ராசு தான் நிறைந்து இருந்தான். கண்ணு முன்னாடியே நடக்குற அநியாயத்தைப் பார்த்து தட்டிக் கேட்க முடியாமல் துடித்து, மனம் நொந்து அவனுக்குள் கருப்பு ஒரு ஆல்டராக உருவாகுவது அனைவரும் ஏற்றுக் கொள்ள கூடிய ஒன்று. ஆனா பின்னாடி அவனே தப்பு செய்யும் போது அவனுக்கு கிடைக்கும் தண்டனை ஏனோ மனதை பாதிக்கவே செய்தது.

ராசுவோட பாத்திரத்தை அப்படியே உளி கொண்டு செதுக்கும் சிற்ப கலைஞரைப் போல செதுக்கியிருக்கிறார் இயக்குனர் (கதாசிரியர்). இவனுக்கு மல்டிப்பில் பர்சனாலிட்டி டிஸ் ஆர்டர் வருவதற்கான அத்தனை சாத்தியங்களும் நமக்கு புரிந்திருக்கும். ஆனா கடைசியா அவனுடைய கருப்பு ஆல்டரே அவனுக்கு தண்டனைக் கொடுப்பது பாக்கறதுக்கே ரொம்ப கஷ்டமா இருந்தது.

அவனுக்கு இப்படி ஒரு மனநோய் வருவதற்கு காரணம் பேச்சிக்கிழவி மட்டுமல்ல, அவனுடைய அம்மாவும் தான். கருப்பு மேல் அவள் வைத்திருக்கும் தீவிர நம்பிக்கையும் ஒரு வகையில் காரணம் தான். இல்லைனா அவனுக்கும் நம்பிக்கை இருந்திருக்காது. அவனும் அந்த பாட்டியுடன் சேர்ந்திருப்பான். அதே போல கிழவியின் மரணத்திற்கு பிறகு அவளுடைய நம்பிக்கையால் தான் குடும்பமே அந்த பூசாரியின் பேச்சுக்கு அடிமையாகி இருக்கும். இப்படி பல விஷயங்கள் மனதில் ஓடின.

அதே மாதிரி ரீனா அவளுடைய வாழ்க்கையில் நடந்த துன்பத்தை வைத்து இந்த கிராமத்தில் நடக்கும் விஷயங்களை அளந்தது தவறு. அவள் அமைதியாக ஊரை விட்டு போயிருந்தாலும் ராசுவின் மரணம் தவிர்க்க பட்டிருக்கும். எது எப்படியோ, சந்திரமுகி, அந்நியனை விட இது சிறந்த திரைக்கதை அமைப்பு கொண்டது. நாகா, இந்த தொடரை இயக்கியதற்காக பெருமை கொள்ளலாம்.

மின்பிம்பங்கள் இந்த நாடகத்தை ஒரு DVDயில் தர முயற்சி செய்யலாம். மகாபாரதம் சீரியல் இப்படி CDக்களில் பார்த்திருக்கிறேன். பல மொக்கைப் படத்தைப் பார்ப்பதற்கு இப்படி நல்ல சீரியல்களைப் பார்க்கலாம்.