தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Sunday, June 28, 2009

உயர் கல்வியை தேர்ந்தெடுக்க வேண்டியது யார்?

சமீபத்துல விஜய் டீவி நீயா? நானா? நிகழ்ச்சி பார்க்க நேர்ந்தது. அட்டகாசமான ஒரு தலைப்புல பேசிட்டு இருந்தாங்க. உயர்கல்வி படிப்பில் துறையை தேர்ந்தெடுக்க வேண்டியவர்கள் பிள்ளைகளா? பெற்றோர்களா?

இந்த ஒரு தலைப்பை எடுத்து விவாதித்ததற்காகவே கோபிநாத்தை பாராட்ட வேண்டும். ஆனால் அங்கே படித்து கொண்டிருக்கும் மாணவர்களை மட்டுமே கூப்பிட்டு வந்தது தவறாக தோன்றியது. படித்து முடித்து வேலைக்கு சென்ற சிலரையும் அல்லது வேலைத் தேடிக் கொண்டிருக்கும் சிலரையும் கூப்பிட்டு வந்திருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும்.

என்னோட கேஸ்ல நான் டாக்டருக்கு படிக்க வேண்டும் என்பது என் பெற்றோர்களின் விருப்பம். அதனாலே SRVல எங்களுடைய சக்திக்கு மீறி கொண்டு போய் சேர்த்தார்கள். நானும் டாக்டருக்கு தான் படிக்க வேண்டும் என்று படித்து கொண்டிருந்தேன். SRVல என் கூட படித்த டாக்டர் பிள்ளைகள் மிக அதிகம். அவர்களுடன் பேசிக் கொண்டிருந்த பொழுது தான் அந்த தொழிலில் உள்ள கஷ்டங்கள் தெரிய ஆரம்பித்தது.

முதல் தலைமுறை டாக்டர்கள் மிகவும் பாவம் செய்தவர்கள் எனவும், அவர்கள் முதல் பத்து பதினைந்து வருடத்திற்கு மிகவும் கஷ்டப்பட்டார்கள் எனவும், அதன் பிறகே வசதி வாய்ப்பு வந்தது என்றும் என் நண்பர்கள் சொன்னார்கள். எனக்கு மனதில் மூன்று விதமான எண்ணங்கள், டாக்டருக்கு படித்தால் அதை வெறும் சேவை மனப்பாண்மையோடு செய்ய வேண்டும். காசு, பணத்தில் அக்கரை இருக்க கூடாது. ஆனால் இது சாத்தியமில்லை. முதல் சில வருடங்கள் அப்படி இருந்தாலும் பின்னால் காசு, பணம், புகழ் இதை தேடி தானாக சென்று விடுவேன். அப்படி செல்லும் பட்சத்தில் என்னுடைய பெற்றோர்கள் அதை அனுபவிக்க சாத்தியமில்லை. எனக்கு அடுத்த தலைமுறை மட்டுமே அதை அனுபவிக்கும்.

அடுத்து எனக்கு பாடத்தில் பிடித்தது Nuclear Physics. அதைப் படிக்க வேண்டும் என்ற ஆவல் இருந்தது. ஆனால் B.Sc Physics படிக்க போகிறேன் என்று சொன்னால் நிச்சயம் செருப்படி கிடைக்கும். அல்லது பைத்தியக்காரன் என்ற பெயர் கிடைக்கும். நன்றாக படிப்பவன் நன்றாக சம்பாதிக்கும் தொழிலிற்கு செல்ல வேண்டும் என்பது நம் சமுதாயத்தில் எழுதப்படாத சட்டம். இதை உடைக்கும் தைரியம் எனக்கு இல்லை.

மூன்றாவது ஐடி. இதை நான் தேர்ந்தெடுக்க ஒரே காரணம் பணம். சின்ன வயதிலே சம்பாதித்து நல்ல நிலைக்கு வந்துவிடலாம். அப்பா, அம்மாவிற்கும் பெருமை இருக்கும். இது தவறாக கூட தெரியலாம். ஆனால் என் நான்கு தாய் மாமாக்களும் பெரும் பணக்காரர்களாக இருக்கும் பொழுது, ஒரு சாதாரண கிளார்க் மகனான எனக்கு சின்ன வயதிலிருந்தே பணம் சேர்ப்பது தான் குறி.

புனித வளனார் பள்ளிக்கு மட்டும் போகாமல் இருந்திருந்தால் ஒரு மனிதாபிமானமில்லாத பிஸினஸ் மேனாக நான் இருந்திருப்பேன். பள்ளியிலே தினமும் குறைந்தது இரண்டு மூன்று ரூபாய் சம்பாதிப்பேன். பிடி பீரியட் முடிந்து தண்ணி தாகத்தில் இருக்கும் மாணவர்களுக்கு ஒரு மூடி தண்ணிர் ஒரு ரூபாய்க்கு விற்றுருக்கிறேன். இப்படி இருந்த என்னை மாற்றியது நான் ஹாஸ்டலில் படிக்கும் போது ஏற்பட்ட அனுபவங்கள் தான்.

நியாயமான ஒரு முறையில் அரசாங்கத்தை ஏமாற்றாத, ஒழுங்காக டேக்ஸ் கட்டி நிறைய சம்பாதிக்க வாய்ப்பு இருக்கும் ஒரு காரணத்திற்காகவே IT எடுப்பது என முடிவு எடுத்திருந்தேன். இந்த முடிவு நான் எடுத்தது பரிட்சைக்கு ஒரு மாசத்திற்கு முன்பு தான். அதுவரை நான் தூங்கும் போது கூட பயாலஜி புத்தகம் என் கையில் இருக்கும். அதற்கு பிறகு தீர்மானமாக முடிவு எடுத்த பிறகு நான் பயாலஜி படிக்கவே இல்லை.

மதிப்பெண்கள் வந்த பிறகு பார்த்தால் பயாலஜியில் தான் அதிக கட் ஆஃப். 1.5 மதிப்பெண் கட் ஆஃப் சேர்த்து வந்திருந்தால் டாக்டர் சீட் கிடைத்திருக்கும். கடைசி ஒரு மாதத்தில் படித்ததால் இஞ்சினியரிங் கட் ஆஃப் மிகவும் குறைவு தான். வீட்டில் இம்ப்ரூவ்மெண்ட் செய்ய சொன்னார்கள். என் ரூமேட் இருவர் மீண்டும் இம்ப்ரூவ்மெண்ட் சேர்ந்துவிட்டார்கள். அதனால் என்னையும் அதில் சேர்ந்து டாக்டருக்கு படிக்க வைக்க அப்பா அம்மா முடிவு செய்தார்கள். நான் நிச்சயம் முடியாது என்று சொல்லிவிட்டேன். பஞ்சாயத்து பண்ண எங்க மாமா வீட்டிற்கு வந்தார். டாக்டருக்கு சமூகத்தில் கிடைக்கும் அங்கிகாரம் மற்ற இத்யாதிகள் அனைத்தையும் விளக்கினார். எனக்கு தெரியாதது புதிதாக எதுவும் சொல்லிவிடவில்லை.

கடைசியாக என் அம்மாவிடம், உங்களுக்காக நான் படிக்கணும்னா டாக்டருக்கு படிக்கிறேன். ஆனா என் விருப்பம் இஞ்சினியரிங் படிக்கறது தான் அப்படினு சொன்னேன். என் அம்மாவிற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. எனக்காக நீ படிக்க வேண்டாம். உனக்கு என்ன படிக்குதுனு தோணுதோ அதே படினு சொல்லிட்டாங்க. இன்னைக்கு வரைக்கும் அதை சொல்லுவாங்க.

அப்பறம் கவுன்சிலிங் போகும் போது அப்பா கூட வந்தாரு. நான் ஐடினு முடிவு பண்ணிட்டேன். எங்க செட்ல முதல்ல ஃபில் ஆனது ஐடி. அடுத்து கம்ப்யூட்டர் சயின்ஸ். சேரும் போது இது ரெண்டுக்கும் எனக்கு வித்தியாசம் தெரியாது. உள்ள சீட் செலக்ட் பண்றதுக்கு போகும் போது கூட அப்பா, PSGல ஏரோநாட்டிகள் இருக்கு. எடுத்துக்கறயா? இல்லை அண்ணா யுனிவர்சிட்டில சிவில் இருக்கு எடுத்துக்கறயானு கேட்டேட்டே வந்தாரு. நான் எதுவும் சொல்லல. உள்ள போய் முதல் ஆப்ஷன் கோவை ராமகிருஷ்ணா ஐடி, ரெண்டாவது திருவண்ணாமலை அருணைல ஐடி. முதல் ஆப்ஷனே கிடைத்துவிட்டது.

இது நான் இஞ்சினியரிங் சேர்ந்த கதை. எதுவுமே தெரியாம தான் நான் ஐடி சேர்ந்தேன். நான் சேர்ந்த அடுத்த ஆண்டு ஐடி சரியத் துவங்கியது. தவறு செய்துவிட்டோமோ என்று தோன்றியது. ஆனா இது நான் எடுத்த முடிவு. அதை நான் தான் எதிர் கொள்ள வேண்டும். இதையே பெற்றோர்கள் முடிவு செய்திருந்தால் நிச்சயம் பழியை அவர்கள் மேல் போட்டிருப்பேன். நீங்க தான சேர்த்து விட்டீங்க. இப்ப நீங்க தான் செலவு பண்ணனும் என்று திமிர் தனம் செய்திருப்பேன். ஆனால் அதற்கு எல்லாம் வழி இல்லை. அதனால் நன்றாக படிக்க வேண்டும் என்று படித்தேன். எங்க க்ளாஸ்லயே நான் ஒருவன் தான் எல்லா லேபிலும் 90 சதவிகிதத்திற்கு மேல்.

படித்து முடித்த பின்பும் வேலை இல்லை. வீட்டில் உட்கார்ந்திருந்தால் நிச்சயம் எல்லாரும் என்னை கேலி பேசுவார்கள். நாங்க சொன்னதை கேட்டிருக்கலாம் இல்ல. சும்மா ஒரு போர்ட் மாட்டி கிளினிக் வெச்சிருந்தா கூட காசு வரும், இப்ப பார்த்தியானு கூட சொன்னார்கள். இந்த கோபத்தில் உடனே பெங்களூர் கிளம்பினேன். ரொம்ப கஷ்டப்பட்டிருக்கோம். ஆறு மாசம் வெறும் உப்புமா மட்டும். காபி குடிக்க ஆசையாக இருக்கும். ஆனா செலவாகும்னு போகறதுக்கு யோசிப்போம். அஞ்சு பேர் மூணு ரூபாய் போட்டு காபி குடிக்கறதுக்கு வீட்டுக்கு பால் வாங்கி வந்து காபி போட்டா பதிமூணு ரூபாய்ல முடிச்சிடலாம். ரெண்டு ரூபா மிச்சம்னு கணக்கு போட்டு காபி போட்டிருக்கோம். இந்த கஷ்டத்தை எல்லாம் மனசு ஏத்துக்கிட்டதுக்கு ஒரே காரணம் இது நான் தேர்ந்தெடுத்த வழி. எவ்வளவு கஷ்டப்பட்டாலும் இதை நான் தான் தாண்டியாகனும். ஆறு மாசம் கஷ்டத்திற்கு பிறகு ஒரு நல்ல வழி கிடைத்தது. ரெண்டு வேலை வாங்கினேன்.

என் சொத்தக்காரவங்க ஒருத்தர் கூட அப்ப ஐடி துறைல இல்லை. இன்னும் ஒருத்தர் கூட அமெரிக்கால இல்லை. இங்க மூணு, நாலு நாள் லீவு விட்டா நிறைய பேர் சொந்தக்காரவங்க வீட்டுக்கு போவாங்க. ஒரு வழிக்காட்டி கூட இல்லாத நிலையிலும் இந்த துறைல வந்து வெற்றி பெற முடிந்ததுனா ஒரே காரணம், இது நான் தேர்ந்தெடுத்த வழி. கை கொடுத்து தூக்கிவிட ஆட்கள் இருக்க மாட்டார்கள். அதே நேரத்தில் நான் பழி போட்டு தப்பிக்க வழியும் இல்லை. போராடி தான் வெற்றி பெற முடியும். போராட துணிவை இந்த நான் என்ற Ego கொடுக்கும்.

இப்ப நீ என்ன தான் மேன் சொல்ல வரனு கேட்டா, பெற்றோர்களே, பிள்ளைகளை அவர்கள் வழிகளில் விடுங்கள். அவர்கள் முடிவு தவறாகவும் இருக்கலாம். ஆனால் அதை எப்படியும் போராடி வெல்ல துணிவு அவர்களுக்கு இருக்கும். இது அவர்கள் தேர்ந்தெடுத்த வழி என்பதை மட்டும் அவர்களும் நினைவுப் படுத்துங்கள். நல்ல வழியிலே செல்வார்கள்!!!

தலைவர் பாணில சொல்லணும்னா ”உன் வாழ்க்கை உன் கையில்”னு அவுங்களுக்கு சொல்லிடுங்க. நல்லது கெட்டதை சொல்லுங்க. வழியை பிள்ளைகள் தேர்ந்தெடுத்து கொள்ளட்டும்.

34 comments:

புருனோ Bruno said...

//நியாயமான ஒரு முறையில் அரசாங்கத்தை ஏமாற்றாத, ஒழுங்காக டேக்ஸ் கட்டி நிறைய சம்பாதிக்க வாய்ப்பு இருக்கும் ஒரு காரணத்திற்காகவே IT எடுப்பது என முடிவு எடுத்திருந்தேன்.//

ஏன் பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி ஆசிரியர்கள் ஆகியோருக்கும் இது பொருந்தும் அல்லவா

வெட்டிப்பயல் said...

// புருனோ Bruno said...
//நியாயமான ஒரு முறையில் அரசாங்கத்தை ஏமாற்றாத, ஒழுங்காக டேக்ஸ் கட்டி நிறைய சம்பாதிக்க வாய்ப்பு இருக்கும் ஒரு காரணத்திற்காகவே IT எடுப்பது என முடிவு எடுத்திருந்தேன்.//

ஏன் பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி ஆசிரியர்கள் ஆகியோருக்கும் இது பொருந்தும் அல்லவா

//

இப்ப அளவுக்கு சம்பாதிக்க முடியாது இல்லைங்களா டாக்டர்.

நான் கல்லூரியில் சேரும் போது துவக்க சம்பளம் பெரும்பாலான நிறுவனங்களில் 25 ஆயிரத்திற்கு மேல் இருந்தது.

Vijayashankar said...

Where are you and what are you doing now?

--
Regards
Vijayashankar
Bangalore
http://www.vijayashankar.in

வெட்டிப்பயல் said...

//Vijay said...
Where are you and what are you doing now?

--
Regards
Vijayashankar
Bangalore
http://www.vijayashankar.in

//

I am in Boston... working as a SW engg :)

Rajalakshmi Pakkirisamy said...

Good post.. :)

குறை ஒன்றும் இல்லை !!! said...

//தினமும் குறைந்தது இரண்டு மூன்று ரூபாய் சம்பாதிப்பேன். பிடி பீரியட் முடிந்து தண்ணி தாகத்தில் இருக்கும் மாணவர்களுக்கு ஒரு மூடி தண்ணிர் ஒரு ரூபாய்க்கு விற்றுருக்கிறேன்//
என்னா வில்லத்தனம்..

நானும் கூட .. என் பெற்றோர் என்னை டாக்டராக்க வேண்டும் என ஆசை பட்டனர்.. ஆனால் நடந்தது வேறு!!

SUFFIX said...

//பிள்ளைகளை அவர்கள் வழிகளில் விடுங்கள். அவர்கள் முடிவு தவறாகவும் இருக்கலாம். ஆனால் அதை எப்படியும் போராடி வெல்ல துணிவு அவர்களுக்கு இருக்கும். இது அவர்கள் தேர்ந்தெடுத்த வழி என்பதை மட்டும் அவர்களும் நினைவுப் படுத்துங்கள். நல்ல வழியிலே செல்வார்கள்!!!//

ஆஹா வெட்டி, சர்க்கரை கட்டியாட்டம் ஒரு நல்ல பதிவு, இந்த வரிகள் என்னுடைய மகனுக்கு நான் அடிக்கடி கொடுக்கும் ரிமைன்டர்!!

மங்களூர் சிவா said...

@பாலாஜி
டாக்டர் புருனே சொன்னமாதிரி காலேஜ் லெக்சரர்ஸ் அறுபதாயிரம் எழுபதாயிரம் வாங்குறாங்க ரெசசன் கவலை இல்லாத ஒரே துறை.

பதிவு மிக அருமை.

முரளிகண்ணன் said...

அருமையான முத்தாய்ப்பு வெட்டி.

☼ வெயிலான் said...

நல்ல பதிவு பாலாஜி!

Prem said...
This comment has been removed by the author.
Prem said...

என்னோட பழைய பக்கங்கள வேற புத்தகத்துலே படிச்சமாதிரி இருக்குது....
10thல பெருமையா 500க்கு 425 வாங்கீட்டு பெருமையா recommendation இல்லாம +1 சீட் நானே வாங்கமுடியும்னு வீட்டுக்கு வந்தேன். எங்க AHM உக்காரவச்சு எனக்கு தெளிவா இன்ஜினியரிங் எடுக்க maths physics chemistry & Statistics அருமையா வழிகாட்டி இருந்தாரு... சாயங்காலமா எங்கப்பா officeல இருந்த வந்ததும் பெருமையா மார்க்ஷீட் காட்டினேன். பாராட்ட எதிர்பார்த்து நின்னேன். "சைன்ஸ் குரூப் தானே?"
"இல்லே இன்ஜினியரிங் போகிறதுக்கு தத்......"
"பளார்..."
"ஊர்லே இருக்கறவன் பசங்க எல்லாம் டாகடேர், என் பையன் மட்டும் மறுபடியும் இன்ஜினிரா?.. ரெண்டுக்குமே போற மாதிரி biology சேர்த்து எடு!"
அப்புறம் அடுத்த நாள் AHM முன்னாடி நாணி கோணி, "சார்.. அப்பா பயாலஜி எடுக்க சொல்லிட்டார் சார்.... statistics வேணாம் சார்.."
"ம்கம்.... உங்களையெல்லாம் திருத்தவே முடியாது!.." என்று அவர் தலையில் அடித்துக்கொண்டே seat கொடுத்தது தனிக்கதை...
+1 சேருவதற்கே parents recommendationனோட நிற்கும் Que ஒருபுறம், நான் மட்டும் வெகு சிலரைப்போல் அதெல்லாம் இல்லாமல் பழைய ஸ்கூல் 1st group குரூப் எடுத்த சந்தோசம் கூட இல்லாமல்... ச்சே...
ஆனா இன்னைக்கு நான் Mechanical Engineer! :D

சிவக்குமரன் said...

good one

வெட்டிப்பயல் said...

//இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...
Good post.. :)
//

Thanks a lot Raji :)

sriram said...

hi Balaji
Good Post.
Lost your number, Can you please call me when you get a chance or send me your number at nsriram73@gmail.com
regards
sriram

வெட்டிப்பயல் said...

//
குறை ஒன்றும் இல்லை !!! said...
//தினமும் குறைந்தது இரண்டு மூன்று ரூபாய் சம்பாதிப்பேன். பிடி பீரியட் முடிந்து தண்ணி தாகத்தில் இருக்கும் மாணவர்களுக்கு ஒரு மூடி தண்ணிர் ஒரு ரூபாய்க்கு விற்றுருக்கிறேன்//
என்னா வில்லத்தனம்..//

ஹி ஹி ஹி

எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் :)

//நானும் கூட .. என் பெற்றோர் என்னை டாக்டராக்க வேண்டும் என ஆசை பட்டனர்.. ஆனால் நடந்தது வேறு!!
//

இப்ப‌ எப்ப‌டி இருக்கீங்க‌. அதை சொல்லிருந்தா ப‌திவுக்கு இன்னும் வ‌லு சேர்ந்திருக்குமே :)

வெட்டிப்பயல் said...

//ஷ‌ஃபிக்ஸ் said...
//பிள்ளைகளை அவர்கள் வழிகளில் விடுங்கள். அவர்கள் முடிவு தவறாகவும் இருக்கலாம். ஆனால் அதை எப்படியும் போராடி வெல்ல துணிவு அவர்களுக்கு இருக்கும். இது அவர்கள் தேர்ந்தெடுத்த வழி என்பதை மட்டும் அவர்களும் நினைவுப் படுத்துங்கள். நல்ல வழியிலே செல்வார்கள்!!!//

ஆஹா வெட்டி, சர்க்கரை கட்டியாட்டம் ஒரு நல்ல பதிவு, இந்த வரிகள் என்னுடைய மகனுக்கு நான் அடிக்கடி கொடுக்கும் ரிமைன்டர்!!
//

மிக்க நன்றி ஷஃபிக்ஸ்...

தங்கள் மகன் வாழ்வில் நிச்சயம் ஒரு வெற்றியாளனாக வருவான். என்னுடைய வாழ்த்துகள் உங்களுக்கும், அவருக்கும் :)

வெட்டிப்பயல் said...

//மங்களூர் சிவா said...
@பாலாஜி
டாக்டர் புருனே சொன்னமாதிரி காலேஜ் லெக்சரர்ஸ் அறுபதாயிரம் எழுபதாயிரம் வாங்குறாங்க ரெசசன் கவலை இல்லாத ஒரே துறை.

பதிவு மிக அருமை.

//

ஆஹா.. அவ்வ‌ள‌வா?

என்ன‌ ப‌டிச்சிருக்க‌ணும் சிவாண்ணே? நான் வெறும் UG (BE) தான்...

வெட்டிப்பயல் said...

//முரளிகண்ணன் said...
அருமையான முத்தாய்ப்பு வெட்டி.
//

Danks மு.க‌ :)

வெட்டிப்பயல் said...

//☼ வெயிலான் said...
நல்ல பதிவு பாலாஜி!
//

மிக்க நன்றி வெயிலான் :)

வெட்டிப்பயல் said...

பிரேமானந்த் வேலு,
நீங்க பத்தாவது முடிச்சதும் இஞ்சினியரிங்னு முடிவு பண்ணிட்டீங்க.. சூப்பர். ஆனா நான் ப்ளஸ் 2 பரிட்சைக்கு ஒரு மாசம் வரைக்கும் டாக்டர்னு சொல்லிட்டு திரிஞ்சேன் :)

நான் எப்படி மாறினேனு எங்க அப்பா, அம்மாக்கு ஆச்சரியம் (குழப்பம்). ஆனா என் வழிக்கே விட்டது எனக்கு இப்ப ஆச்சரியமா இருக்கு. நான் அவுங்க நிலைல இருந்திருந்தன்னா, பேசியே என் வழிக்கு கொண்டு வந்திருப்பேன் :)

ஆனா எப்படியோ நீங்க நினைச்சதை சாதிச்சிட்டீங்க. என்ன பயலாஜி படிக்கும் போது மட்டும் கடுப்பா இருந்திருக்கும் :)

வெட்டிப்பயல் said...

//இரா.சிவக்குமரன் said...
good one
//

Thanks a lot சிவக்குமரன்

மங்களூர் சிவா said...

//

ஆஹா.. அவ்வ‌ள‌வா?

என்ன‌ ப‌டிச்சிருக்க‌ணும் சிவாண்ணே? நான் வெறும் UG (BE) தான்...
//

MSC with NET (National Eligibility test) pass

UGC (University Grand commision) scale எங்க குடுக்கிறாங்களோ அங்க முட்டி மோதி சேர்ந்துக்கணும்
:)))

Karthik said...

நீங்க சொல்றது உண்மைதாங்ணா! எங்க இஷ்டத்துக்கு விட்ட ரொம்ப சந்தோஷம்! :)

//ஆனால் B.Sc Physics படிக்க போகிறேன் என்று சொன்னால் நிச்சயம் செருப்படி கிடைக்கும். அல்லது பைத்தியக்காரன் என்ற பெயர் கிடைக்கும்.

நான் இதைத்தாங்ணா படிச்சிட்டு இருக்கேன். கலவரப்படுத்துறீங்களே! :(

எம்சிஏ பண்றதுதான் ஒரே வழியா??? :(

குமரன் (Kumaran) said...

+2 படிக்கிறப்பவே இவ்வளவு தெளிவாத் தான் இருந்தீங்களா? பரவாயில்லை. எனக்கெல்லாம் டி.சி.எஸ்ல சேர்ந்தா அமெரிக்கா போகலாம்ங்கறதே டி.சி.எஸ்.ல சேர்ந்த நாலாவது மாசம் தான் தெரியும். வாழ்க்கையைப் பத்தி அம்புட்டு 'தெளிவா' இருந்திருக்கேன். L

வெட்டிப்பயல் said...

//Karthik said...
நீங்க சொல்றது உண்மைதாங்ணா! எங்க இஷ்டத்துக்கு விட்ட ரொம்ப சந்தோஷம்! :)

//ஆனால் B.Sc Physics படிக்க போகிறேன் என்று சொன்னால் நிச்சயம் செருப்படி கிடைக்கும். அல்லது பைத்தியக்காரன் என்ற பெயர் கிடைக்கும்.

நான் இதைத்தாங்ணா படிச்சிட்டு இருக்கேன். கலவரப்படுத்துறீங்களே! :(

எம்சிஏ பண்றதுதான் ஒரே வழியா??? :(

//

ஐயய்யோ.. அப்படியெல்லாம் இல்லை கார்த்திக்... 1122 மார்க் எடுத்துட்டு BSc Physicsனு சொன்னா திட்டு விழும். அந்த பயம் தான்...

மத்த படி மேல புருனோ, மங்களூர் சிவா அண்ணா பின்னூட்டத்தைப் பார்க்கவும்.

சரியான வழியைப் பின்பற்றவும். நிச்சயம் நல்ல நிலைமைக்கு வரலாம்.

நாகா said...

வெட்டி, நாங்களும் உங்களுக்கு முந்தைய Set 2002, நீங்கள் அனுபவித்த அனைத்து சிரமங்களையும் உங்கள் Batch வந்த பிறகும் நாங்கள் அனுபவித்தோம். சென்னைக்கும் பெங்களூருக்கும் மாறி மாறி அலைந்து கொண்டிருந்தோம்.. பழைய நினைவுகளை கிளறியதற்கு நன்றி.

மணிகண்டன் said...

பாலாஜி :- சூப்பரா எழுதி இருக்கீங்க. இது மாதிரி எல்லாம் பிரச்சனை வரும்னா மார்க் கம்மியா எடுத்துடனும் ! இம்ப்ரூவ்மென்ட் எழுத சொன்னா, இன்னும் கம்மியா எடுக்கணும்.

ஆனால் படிப்பை முடித்தவுடன் சென்னையிலோ, பெங்களூரோ செல்வது தான் ஸ்மார்ட் சாய்ஸ். (வேலை கிடைக்கிறதோ இல்லையோ.) சொந்த ஊரில் உட்கார்ந்து இருந்தால் உருப்படாமல் போக நிறைய வழி இருக்கிறது ! ஏதோ ஒரு இடத்தில் சென்று நண்பர்களோடு இருந்து வேலை தேடுவது மிகவும் சுவாரசியமானது.

கார்த்திக் :- உண்மையிலயே உங்களுக்கு ஏதோ ஒரு சப்ஜெக்ட் மீது passion இருக்கும் பட்சத்தில் அதை படிக்கலாம். அப்படியில்லை என்றால் MCA is a safe bet. அவ்வளவே.

Prem said...

//நீங்க பத்தாவது முடிச்சதும் இஞ்சினியரிங்னு முடிவு பண்ணிட்டீங்க.. சூப்பர். ஆனா நான் ப்ளஸ் 2 பரிட்சைக்கு ஒரு மாசம் வரைக்கும் டாக்டர்னு சொல்லிட்டு திரிஞ்சேன் :) //

அட, இல்லே.... இது ஒரு ட்ரைலெர் மட்டும் தான்... +2ல கூட இதே மாதிரி பல கூத்து நடந்தது. நானும் கூட doctor கனவுலே புடிக்கவேயில்லாம, முக்கி, முனகி, record வரைஞ்சு, ஏகப்பட்ட தில்லாலங்கிடி பண்ணி நல்ல பையனா biology madam கிட்ட பேர் வாங்கி திரிஞ்சேன். இந்த கதை நம்மள கடைசீல self financing college வாசல்ல நிருத்துச்சு. அதெல்லாம் தாண்டி, நாமே நம்ம சொந்த கால்லே நிக்கனும்னு, அப்பத்தான் முடிவு பண்ணினென். அப்பொ பயங்கர மோகமா இருந்த கணிப்பொறியியல் கிடைச்சாலும், விட்டு இயந்திரவியல் தான் எடுப்பேன்னு அடம் புடிசேன். ஒண்ணும் பெருசா சாதிச்சு வந்திருலேன்னாலும், நீங்க சொன்ன மாதிரி அது தான் திருப்புமுனை. ஆதுக்கப்புறம் நம்ம வேலை, படிப்புன்னு எதுக்கும் வீட்ல கேக்காம விழுந்து எந்திரிச்சு வருவதுக்கும், நம்பிக்கைக்கும் அது தான் காரணம். ஆப்படி பண்ணுனதுக்கு இன்னைக்கு ஒண்ணும் மோசம் இல்லெனுதான் தோணுது.

வெட்டிப்பயல் said...

//குமரன் (Kumaran) said...
+2 படிக்கிறப்பவே இவ்வளவு தெளிவாத் தான் இருந்தீங்களா? பரவாயில்லை. எனக்கெல்லாம் டி.சி.எஸ்ல சேர்ந்தா அமெரிக்கா போகலாம்ங்கறதே டி.சி.எஸ்.ல சேர்ந்த நாலாவது மாசம் தான் தெரியும். வாழ்க்கையைப் பத்தி அம்புட்டு 'தெளிவா' இருந்திருக்கேன். L

//

என்ன குமரன் பண்ணறது? படிச்சது அப்படி ஒரு ஸ்கூல்ல...

வெட்டிப்பயல் said...

// நாகா said...
வெட்டி, நாங்களும் உங்களுக்கு முந்தைய Set 2002, நீங்கள் அனுபவித்த அனைத்து சிரமங்களையும் உங்கள் Batch வந்த பிறகும் நாங்கள் அனுபவித்தோம். சென்னைக்கும் பெங்களூருக்கும் மாறி மாறி அலைந்து கொண்டிருந்தோம்.. பழைய நினைவுகளை கிளறியதற்கு நன்றி.

9:38 AM//

உண்மையை சொன்னால் எங்களை விட உங்க பேட்ச் தான் அதிக கஷ்டத்தை அனுபவித்தது...

நாங்க சீனியர்கிட்ட உதவி கேட்கலாம்னு பார்த்தா, கடைசியா அவுங்க எங்ககிட்ட கேக்கற நிலைமை வந்துச்சு...

நினைக்கவே கஷ்டமா இருக்கு... GRE எழுதி எஸ்கேப் ஆனவர்கள் கொடுத்து வைத்தவர்கள்...

வெட்டிப்பயல் said...

//மணிகண்டன் said...
பாலாஜி :- சூப்பரா எழுதி இருக்கீங்க. இது மாதிரி எல்லாம் பிரச்சனை வரும்னா மார்க் கம்மியா எடுத்துடனும் ! இம்ப்ரூவ்மென்ட் எழுத சொன்னா, இன்னும் கம்மியா எடுக்கணும். //

எடுத்ததே கம்மியான மார்க் தான் மணிகண்டன்... கொஞ்சம் கடைசி நேரமும் விழுந்து விழுந்து படித்திருந்தால் மெடிக்கல் சீட் கிடைச்சிருக்க வாய்ப்பும் அதிகம் தான்...

இம்ப்ரூவ்மெண்ட் எல்லாம் போயிருந்தா நிச்சயம் குறைவா எடுத்து வாழ்க்கையை வீணாக்கியிருக்க மாட்டேன்... அப்பா, அம்மாவோட சண்டைப் போட்டு வாழ்க்கையை வீணாக்க என்றுமே விரும்பியதில்லை.

//ஆனால் படிப்பை முடித்தவுடன் சென்னையிலோ, பெங்களூரோ செல்வது தான் ஸ்மார்ட் சாய்ஸ். (வேலை கிடைக்கிறதோ இல்லையோ.) சொந்த ஊரில் உட்கார்ந்து இருந்தால் உருப்படாமல் போக நிறைய வழி இருக்கிறது ! ஏதோ ஒரு இடத்தில் சென்று நண்பர்களோடு இருந்து வேலை தேடுவது மிகவும் சுவாரசியமானது.
//
ஊர்ல எனக்கு நண்பர்கள் இல்லை. வெளியூரில படிச்சதால ஊருக்கு போனா வீட்லயே டீவி பார்த்துட்டு தான் இருப்பேன். ஊர் சுத்தறது இருந்திருக்காது. இருந்தாலும் பெங்களூர் சென்றதால் தான் வேலை வாங்க முடிந்தது.

//கார்த்திக் :- உண்மையிலயே உங்களுக்கு ஏதோ ஒரு சப்ஜெக்ட் மீது passion இருக்கும் பட்சத்தில் அதை படிக்கலாம். அப்படியில்லை என்றால் MCA is a safe bet. அவ்வளவே.

//

Perfect :)

வெட்டிப்பயல் said...

Premanand Velu,
யார் மேலயும் பழி போடாம சொந்த கால்ல நிக்கணும்னு தோணுது பாருங்க. அது தான் ஹைலைட்....

எல்லார் வாழ்க்கைலயும் போராட்டம் இருக்க தான் செய்யும். ஆனா அதை தன்னம்பிக்கையோட சந்திக்கிறது தான் அழகு :)

Karthik said...

//சரியான வழியைப் பின்பற்றவும். நிச்சயம் நல்ல நிலைமைக்கு வரலாம்.

நன்றி. :)

@மணிகண்டன்

//உண்மையிலயே உங்களுக்கு ஏதோ ஒரு சப்ஜெக்ட் மீது passion இருக்கும் பட்சத்தில் அதை படிக்கலாம். அப்படியில்லை என்றால் MCA is a safe bet. அவ்வளவே.

பர்ஃபெக்ட். ரொம்ப நன்றி. :)