பாரதப் போரின் ஒன்பதாம் நாள் இரவு.
துரியயோதனன் அந்த கூடாரத்திலிருந்து வெளியேறி சில நாழிகைகள் ஆகியிருந்தன. பிதாமகருக்கு உறக்கம் வரவில்லை. கூடாரத்திற்குள் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தார்.
வெளியே பிணக்குவியல்களை போர்களத்திலிருந்து எடுப்பதில் இரு தரப்பு வீரர்களும் மும்மரமாக ஈடுபட்டிருந்தனர். காயமடைந்த வீரர்களுக்கு மருத்துவ சேவைகளும் ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தது. கை கால்களை இழந்த வீரர்களும் சிகிச்சைப் பெற்றுக் கொண்டிருந்தனர். போர் களத்திற்கு உள்ளே வந்துவிட்டால் வெற்றி அல்லது மரணம் மட்டுமே என்பது அவர்களுக்கு தெரிந்திருந்தது. ஊனத்தைக் காரணம் சொன்னால் உடலில் உயிர் தங்க காரணமிருக்காது என்பது அங்கே எழுதப்படாத விதி.
எதையும் பார்க்க பிடிக்காமல் சிறிது நேரம் கண்மூடி இருக்கலாம் என்ற எண்ணத்தில் அங்கே இருந்த படுக்கையில் தன் பெரும் சரீரத்தை சாய்த்தார்.
அவர் அறியாமலே அவரை நித்திரா தேவி அணைத்துக் கொள்ள முயன்றாள்.
"தேவவிரதா"
"மகனே தேவவிரதா. எழுந்திரு. உன்னைப் போன்ற மாவீரர்கள் போர் களத்தில் உறங்கலாமா?"
திடுக்கிட்டு எழுந்தார் பிதாமகர். இது நிச்சயம் அன்னையின் குரல் தான். சந்தேகமே இல்லை. இந்த அற்புத குரலைக் கேட்டு எத்தனை ஆண்டுகளாகின்றன.
"தாயே! தாங்களா? எங்கிருக்கிறீர்கள்? தங்கள் குரலைக் கேட்டு எத்தனை ஆண்டுகளாகின்றன? தயவு செய்து என் கண் முன்னால் வந்து தரிசனம் தாருங்கள்"
"மகனே! அதற்கான நேரம் வரும் பொழுது நானே உன் கண் முன் தோன்றுவேன். இப்பொழுது உனக்கு வர இருக்கும் அவப்பெயரை நீக்கவே ஓடோடி வந்தேன்"
"அவப்பெயரா? எனக்கா? என்ன தாயே சொல்கிறீர்கள்"
"உலகில் யாரும் செய்ய முடியாத காரியத்தை செய்து தேவவிரதனாக இருந்த நீ அன்று பீஷ்மன் ஆனாய். ஆனால் அந்த பெயருக்கே களங்கம் வரும் செயலில் நீ ஈடுபடலாமா?"
"என்ன தாயே சொல்கிறீர்கள். நான் என்ன தவறு செய்தேன்?"
"மகனே! இந்தப் போரில் துரியோதனன் உடனிருந்து பாண்டவர்களுக்கு எதிராக போரிடுகிறாயே. இது அநீதியல்லவா?"
"நான் என்ன செய்வேன் தாயே. தந்தையில்லாததால் தான் வஞ்சிக்கப்பட்டதாக நினைத்திருக்கும் யுதிஷ்டிரனுக்கும், தந்தை கண் பார்வை இழந்ததால் தான் வஞ்சிக்கப்பட்டதாக நினைத்திருக்கும் துரியனுக்குமிடையே மண் ஆசையால் நடக்கும் போரில் நானும் ஒரு பகடைக்காய் ஆக்கப்பட்டுள்ளேன்"
"மகனே! இது மண்ணிற்காக நடக்கும் போர் அல்ல. இது பல பெண்களுக்கு நீ இழைத்த அநீதிகளுக்காக நடக்கும் போர்"
"நான் பெண்களுக்கு அநீதி இழைத்தேனா? என்ன கொடுமை இது தாயே? என் மீது இப்படி ஒரு அபாண்டமான பழியா?"
"மகனே எந்த தாயும் தன் மகன் மீது எந்த காலத்திலும் பழி சுமத்தியதாக வரலாறு இல்லை. உன்னை பழியிலிருந்து காப்பதற்காகவே ஓடோடி வந்துள்ளேன்"
"என்ன பழி என்று தயவு செய்து சொல்லிவிடுங்கள் தாயே. என் தலையே வெடித்துவிடும் போல் தோன்றுகிறது"
"விசித்ரவீரியன் திருமணத்திற்கு காசி ராஜனின் மகள்களை கவர்ந்தாயே. நினைவு இருக்கிறதா மகனே?"
"சத்ரிய தர்மத்திற்கு எதிராக எதுவும் செய்யவில்லையே தாயே"
"எது சத்ரிய தர்மம் மகனே? உன் பொறுப்பில் வளர்ந்த தம்பியை வீரமாக வளர்த்து அவனை சுயம்வரத்திற்கு அனுப்பி கவர்வது தானே தர்மம். அதைவிடுத்து மாபெரும் வீரனான நீ, உன் தம்பிகளை உனக்கு நிகராக வளர்க்காமல் விட்டாய். கந்தவர்களின் வீரம் தெரிந்திருந்தும் சத்யவதியின் முதல் மகன் சித்ராங்கதனைப் போருக்கு அனுப்பினாய். அவன் வீர சொர்கம் அடைந்தான். அடுத்த மகனை சிறுவயதிலே அரியனையில் ஏற்றி நீயே ஆட்சி புரிந்தாய். அவனை மற்றவர்கள் இகழ வேண்டும் என்று அவன் சார்பில் நீ சென்று பெண்களை கவர்ந்து வந்தாய்"
"போதும் தாயே! தயவு செய்து நிறுத்தவிடுங்கள். இது எதுவும் நான் திட்டுமிட்ட செய்ததல்ல. எல்லாம் தற்செயலானதே"
"நீ சொல்வதை இன்று இந்த உலகம் ஏற்றிருக்கிறது மகனே. அது என்றும் ஏற்கும் என்று சொல்ல முடியாது. நான் சொல்ல வந்ததை சொல்லிவிட்டு சென்றுவிடுகிறேன். மற்றது உன்
விருப்பம்"
"சொல்லுங்கள் தாயே"
“மகனே! பெண்களை நீ கைப்பாவை என்று நினைத்தாய். அதனால் தான் உன் முன்னால் ஹஸ்தினாபுர அரசவையில் உங்கள் நாட்டு மருமகளையே துகிலுருகினான் பாவி துச்சாதனன்”
"தாயே அது என் தவறில்லை. நாட்டிற்காக மனைவியை வைத்தவன் யுதிஷ்டிரன்"
"அதைத் தட்டிக்கேட்காமல் வேடிக்கைப் பார்த்தவன் நீ"
"வார்த்தைகளால் என்னைக் கொல்லாதீர்கள் தாயே"
"மகனே! இதையெல்லாம் விட அவப்பெயர் உனக்கு வரப்போகிறது"
"இதையெல்லாம் மிஞ்சும் அவப்பெயரா? என்ன தாயே அது?"
"காந்தார நாட்டு மன்னன் மகளைக் கவர்ந்து வந்து பார்வையற்ற திருதிராஷ்டிரனுக்கு கட்டி வைத்தாயே. நினைவிருக்கிறதா?"
"நான் கவர்ந்து வரவில்லை. அவளாக விரும்பியே வந்தாள்"
"மகனே! பெண் தரவில்லையென்றால் உன் நாட்டின் மேல் என் படைகள் பாயும், உன் நாடு சின்னா பின்னம் ஆக்கப்படும் என்று நீ சொன்னதைக் கேட்டு எந்தப் பெண் தான் வராமல் போவாள். அப்பொழுதும் அவளைக் காக்க அவள் சகோதரர்கள் நூறு பேர் வந்தார்களே. அந்த மாவீர்களை சிறைப்பிடித்தாய்"
"என் வீரத்திற்கு முன்னால் அவர்கள் கால் தூசு பெறாதவர்கள் தாயே"
"மகனே எது வீரம்? வெற்றி பெறுவோம் என்று தெரிந்து போரிடுவதா? பல தெய்வீக அஸ்திரங்களை வைத்துக் கொண்டும், இச்சை மரணம் என்று வரத்தையும் வைத்துக் கொண்டு போரிடுவதா வீரம்? வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில்லை என்றாலும் ஒரு பெண்ணைக் காக்க போரிட்டார்களே காந்தார மன்னன் குமாரர்கள். அது வீரம்"
"தாயே. இப்பொழுது என்னை சூழ்ந்துள்ள அவப்பெயர் தான் என்ன? அதை மட்டும் சொல்லிவிட்டு தயவு செய்து இங்கிருந்து அகன்று விடுங்கள் தாயே!"
"சொல்கிறேன் மகனே. அதை தடுக்கத் தானே வந்துள்ளேன்"
"சொல்லுங்கள் தாயே. அதை நிச்சயம் செய்கிறேன்"
"கௌரவர்களுக்காக நீ போரிடுவது வேறு எந்த காரணத்திற்காகவும் அல்ல, அவர்கள் உன் மைந்தர்கள் தான் என பரப்பத் திட்டமிட்டுள்ளார்கள் மகனே. காந்தாரியை உன் ஆசைக்கு இணங்க வைக்கவே அவள் சகோதர்கள் நூறு பேரையும் நீ சிறையிலடைத்தாய் என பரப்பத் திட்டம். அது மட்டுமில்லாமல் நீ செய்த தவறுகள் அனைத்தையும் பட்டியிலிட போகிறார்கள். உண்மையும் பொய்யும், பாலும் நீரும் போல கலக்கப்பட உள்ளது மகனே, கலக்கப்பட உள்ளது. அதைப் பிரிக்க அந்த ஈசனாலும் முடியாது என்பது உனக்கே தெரியும்"
"தாயே! என்ன கொடுமை இது. காந்தாரியை என் மகள் போல நினைத்து வாழ்ந்து வருகிறேன். நான் பல தவறுகளை செய்திருக்கலாம். ஆனால் நான் என் தந்தைக்கு கொடுத்த வாக்குறுதியைத் தவறியதில்லை"
"மகனே! உன்னை அறியாதவளா நான்? என் மகன் உத்தமன் என்பது எனக்கு யாரும் சொல்லி தெரிய தேவையில்லை மகனே! நீ செய்த அரும்பெரும் காரியத்தை உனக்கு முன்னும் உனக்கு
பின்னும் செய்யப்போகிறவர்கள் யாரும் இல்லை. இருப்பினும் நீ செய்த சில தவறுகள் எல்லாம் இன்று ஒன்று சேர்ந்து உனக்கு எதிராக ராட்சச உருவம் எடுத்துள்ளன. அதிலிருந்து நீ
தப்பிவிடு மகனே! சத்ரியனுக்கு உயிரை விட மானம் தான் முக்கியம். நான் வருகிறேன்"
"தாயே! தாயே!!!"
பிதாமகர் தரையில் விழுந்து அழதார்.
..................
அந்த கூடாரத்தின் உள்ளே ஒரு உருவம் புகுந்தது
"மகனே காரியம் முடிந்தது” அற்புதக் குரல்
”விதுரரே! இன்னும் எதற்கு கங்கையின் குரல்?”
“மாற்ற மறந்துவிட்டேன் கண்ணா. நாளை அந்த பிதாமகன் ஆட்டம் முடிந்துவிடும்”
யுதிஷ்டிரன் அருகே கையில் புல்லாங்குழலுடன் உட்கார்ந்திருந்தான் கருநீலக் கண்ணன்.
“நாங்கள் வேறு ஏதாவது செய்ய வேண்டுமா சித்தப்பா?”
“ஆமாம் யுதிஷ்டிரா. அந்த துருபதன் மகளை பார்த்தனின் தேரில் ஏற்றி செல்ல சொல்”
“திரௌபதியையா?”
“திரௌபதியை இல்லை மகனே. தன்னை ஆண் என்று சொல்லிக் கொள்கிறாளே அவள் சகோதரி சிகண்டி. அவளை ஏற்றுங்கள்”
“புரிகிறது விதுரரே!. அதற்கு தகுந்த கதையை நான் கட்டிவிடுகிறேன்”
“கதை கட்டுவதில் உன்னை மிஞ்ச முடியுமா கண்ணா!”
...................
கௌரவ சேனையின் அந்த கூடாரத்தின் வெளியே குறுக்கும் நெடுக்குமாக ஒரு உருவம் நடமாடிக் கொண்டிருந்தது. சுமார் ஏழு அடி உயரத்தில் இருந்த அவனுடைய கைகள் அவனுடைய கால் முட்டி வரை நீண்டிருந்தது. ஒன்பது நாட்களாக போர் நடந்தும் தான் எதிர்பார்த்த எந்த ஒரு நிகழ்ச்சியும் நடக்காததில் வருத்ததில் இருந்தான். அவனுடைய கூடாரத்தில் ஏதோ சத்தம் கேட்க வேகமாக உள்ளே நுழைந்தவன், அங்கே நின்றிருந்த உருவத்தைப் பார்த்ததும் மகிழ்ச்சியடைந்தான்.
“வாருங்கள் விதுரரே!”
“காரியம் கச்சிதமாக முடிந்து விட்டது சகுனி. நாளை பிதாமகன் வீழ்வான்”
”நிச்சயமாகவா?”
“ஆமாம். நீ இனி உன் சபதத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம். எனக்கு கொடுத்த வாக்கையும் மறந்துவிடாதே”
“நிச்சயமாக. போரில் அந்த கிழட்டு பிரம்மச்சாரி விழுந்துவிட்டால் மொத்த குருகுலமும் சர்வநாசம் தான். நீங்கள் தான் ஹஸ்தினாபுரத்தின் சக்ரவர்த்தி”
“குருகுலமா?ஹா ஹா ஹா.
பீஷ்மனைத் தவிர இங்கு யார் குருகுலம்? இது வியாச குலம், பராசர குலம்”
“ஆமாம். நீங்கள் சொல்வதும் சரிதான்”
”சகுனி, உனக்கு மேலும் ஒரு காரியம் இருக்கிறது. நான் போரிலிருந்து ஒதுங்கியதைப் பார்த்ததும், கர்ணனை ஒதுக்கி வைத்துவிட்டான் அந்த கிழவன். அதில் ஏதாவது சூழ்ச்சி இருக்கலாம். நாளை கிழவன் விழுந்ததும் கர்ணனையும் சேர்த்துக் கொள். பார்த்தனைக் கொல்ல சக்தி அஸ்திரம் அவனிடம் தான் இருக்கிறது”
“கர்ணன் தானாக வந்து சேர்வான் விதுரரே. துரியன் என்ற மகுடி என் கையிலிருக்கும் வரை கர்ணன் என்ற பாம்பைப் பற்றி கவலை வேண்டாம். இருப்பினும் கர்ணன் மேல் உங்களுக்கு ஒரு பிரியம் இருப்பதாகத்தான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன். பார்த்தன் கையில் அவன் வீழவும் வாய்ப்புகள் அதிகம்.”
“அதைப் பற்றி கவலை வேண்டாம். பிறப்பால் எனக்கு இழைக்கப்பட்ட அநீதியைப் போலவே அவனுக்கும் பல இடங்களில் அநீதி செய்யப்பட்டதால் அவன் மேல் எனக்கு பிரியம் இருந்தது உண்மை தான். ஆனால் இந்த பிதாமகர் அவனை ஒதுக்கி வைத்ததும் எனக்கு ஏதோ சந்தேகம் வந்துவிட்டது. அவன் பிறப்பில் பல ரகசியங்கள் இருக்கலாம். அது வெளிவர நான் விரும்பவில்லை. மேலும் அவனுக்கு பல அநீதிகள் இழைக்கப்பட்டிருந்தாலும், மன்னன் ஆனான். ஆனால் மன்னாள ஆரோக்கியமான ஒருவன் வேண்டும், என்ற நிலையில் உருவாக்கப்பட்ட நான், இன்று குருடனுக்கும், பொறாமைக்காரனுக்கும் கைக்கட்டி சேவகம் செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறேன். நினைவில் வைத்து கொள் சகுனி, ஒருவரும் மிஞ்சக் கூடாது. அந்த சூதாடி யுதிஷ்டிரனையும் சேர்த்து!”
”நிச்சயமாக விதுரரே! நமக்கு இழைத்த அநீதிகளுக்கு இவர்கள் பதில் சொல்லும் காலம் வந்துவிட்டது. நாட்டை ஆள பிறந்த தங்களை தாசியின் மகன் என்று ஒதுக்கி வைத்து துரோகம் செய்ததற்கு பலனை இவர்கள் அனுபவித்தே தீர வேண்டும்”
”தாசியின் மகன் என்று மட்டுமா சொன்னார்கள்? வேசியின் மகன் என்று நடுசபையில் சொன்னான் என் குருட்டு அண்ணன் மகன் துரியோதனன். விசித்ரவீரியனை மணந்து என் தந்தை வியாசருக்கு முந்தானை விரித்த அம்பிகா, அம்பாலிகா பேரர்களுக்கு நிருபிக்கிறேன் யார் வேசி மகன் என்று”
(முற்றும்)
44 comments:
என் கதைக்கு செண்டிமெண்டா நான் முதல் பின்னூட்டம் போட்டுடறேன். நல்லா இருக்கா இல்லையானு ஒரு வார்த்தையாவது சொல்லிட்டு போங்க :)
ஆஹா நான் தான் முதல்லேன்னு நினைத்தேன்...எப்பவும் போல நல்லா இருக்கு!!! வாழ்த்துகள்
//ஹர்ஷினி அம்மா - said...
ஆஹா நான் தான் முதல்லேன்னு நினைத்தேன்...//
டெக்னிகலா நீங்க தான் முதல் :)
//
எப்பவும் போல நல்லா இருக்கு!!! வாழ்த்துகள்
//
மிக்க நன்றி ஹர்ஷினி அம்மா :)
அன்பு வெட்டிஜி...
ஏதோ டி.வி.ல மகாபாரதம் பாக்கற மாதிரி ஒரு ஃபீலிங். கடைசியா உள்ள வந்தவர் யாரு..? சகுனியா..? ஏன்னா அது மாதிரி ஒரு நாடகத்தை ஒன்ஸ் அபான் எ டைம் கோவை ரேடியோல கேட்ட ஞாபகம் வந்தது..!
நல்லா எழுதி இருக்கிறீர்கள். தெள்ளிய தமிழ் கொஞ்சுகின்றது.
வெற்றிக்கு வாழ்த்துக்கள்.
//இரா. வசந்த குமார். said...
அன்பு வெட்டிஜி...
ஏதோ டி.வி.ல மகாபாரதம் பாக்கற மாதிரி ஒரு ஃபீலிங்.//
:-)
Rajshri.com ல மறுபடியும் ஒரு தடவை பார்த்தோமே :)
//
கடைசியா உள்ள வந்தவர் யாரு..? சகுனியா..?//
சகுனியோட கூடாரத்திற்குள் செல்பவர் விதுரர் :-) (Double Game)
மஹாபாரதத்திலே மிகவும் நல்லவர் விதுரர் தான். அதான் கொஞ்சம் மாத்தி யோசிச்சி எழுதியிருக்கேன் :-)
// ஏன்னா அது மாதிரி ஒரு நாடகத்தை ஒன்ஸ் அபான் எ டைம் கோவை ரேடியோல கேட்ட ஞாபகம் வந்தது..!
நல்லா எழுதி இருக்கிறீர்கள். தெள்ளிய தமிழ் கொஞ்சுகின்றது.
வெற்றிக்கு வாழ்த்துக்கள்//
மிக்க நன்றி வசந்த குமார்... உங்க கதை படிச்சதுக்கப்பறம் மனசுல ஏதோ ஓடிட்டே இருக்கு :-)
நல்லா புரியுது. ஆனா புனைவுக்குள்ள இயல்பா ஒரு மர்மத்தொடர்பு விட்டுப்போன மாதிரி ஒரு எண்ணம்.
இது என்னோட கருத்துதான். தவறாயிருந்தா கோச்சுக்காதே!
அப்பறம் போல்ட் பண்ணியிருக்கிற “உண்மையும் பொய்யும், பாலும் நீரும் போல கலக்கப்பட உள்ளது மகனே, கலக்கப்பட உள்ளது” இது இந்த கதைக்கும் பொருந்தும் :-)
//சென்ஷி said...
நல்லா புரியுது. ஆனா புனைவுக்குள்ள இயல்பா ஒரு மர்மத்தொடர்பு விட்டுப்போன மாதிரி ஒரு எண்ணம்.
//
நான் இந்த மாதிரி படிச்சது இல்லை. அதனால எனக்கு சரியா புரியல :(
//இது என்னோட கருத்துதான். தவறாயிருந்தா கோச்சுக்காதே//
கருத்து சொல்றதுக்கு எல்லாம் கோச்சுக்குவோமா? நோ சான்ஸ்.. தாராளமா சொல்லலாம் :-)
கதை சூப்பரூ.... :)
nice one. i will comment in detail
after getting the tamil fond.
போன சாப்ட்வேர் ரிசெசன் கதைக்கும், இதுக்கும் நல்ல வித்தியாசம். மொழிநடை எல்லாம் அசத்தல்.
டுவிஸ்டும் ஓக்கே.
வாழ்த்துக்கள்
//இராம்/Raam said...
கதை சூப்பரூ.... :)//
ஏன் இந்த கொல வெறி :-)
//முரளிகண்ணன் said...
போன சாப்ட்வேர் ரிசெசன் கதைக்கும், இதுக்கும் நல்ல வித்தியாசம். மொழிநடை எல்லாம் அசத்தல்.
டுவிஸ்டும் ஓக்கே.
வாழ்த்துக்கள்//
மிக்க நன்றி முக...
எல்லாமே ஒரு முயற்சி தானே :)
கலக்கல்.. வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்..
வெட்டி கலக்கறீங்க. வெற்றிபெற வாழ்த்துக்கள்!
இப்பவும் எனக்குத் தெளிவா புரியலை. மர்மக்கதைங்கறதால இன்னொரு தடவை படிக்கணும் போல. :-)
உங்க மத்த ரெண்டு ரெஷசன் கதையும் படிச்சேன். பின்னூட்டம் விட மனசில்லை. அதனால இங்க சொல்லிர்றேன். அந்த கதைகளும் நல்லா இருக்கு - சுத்தி நடக்கிறதை நல்லா கவனிச்சு எழுதுறீங்க.
எப்பவும் போல நல்லா இருக்குண்ணா...வித்யாசமாவும் இருக்கு
ஆஹா.. கதை அருமை.
கண்ணனின் லீலையே லீலை.
என்னா வில்லத்தனம் கண்ணனுக்கு..
ஒருத்தரை அவரோட தவறுகளை சுட்டிக்காட்டியே கொன்றுவிடக்கூட முடியும் என்பது போல் உள்ளது இந்த கதையின் மாரல்.
எப்படியோ.. நல்ல கதை. வாழ்த்துக்கள்!!
//♫சோம்பேறி♫ said...
கலக்கல்.. வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்..//
மிக்க நன்றி சோம்பேறி...
நீங்களும் அப்படியே களம் இறங்குங்க :)
//மங்களூர் சிவா said...
வெட்டி கலக்கறீங்க. வெற்றிபெற வாழ்த்துக்கள்!//
மிக்க நன்றி சிவா :)
எல்லாம் ஒரு முயற்சி தானே...
//குமரன் (Kumaran) said...
இப்பவும் எனக்குத் தெளிவா புரியலை. மர்மக்கதைங்கறதால இன்னொரு தடவை படிக்கணும் போல. :-)
//
இது கதையோட நாலவது வெர்ஷன் :)
முதல் வெர்ஷன் போட்டிருந்தா நிச்சயம் யாருக்கும் புரிஞ்சிருக்காது. அதுல சூத்திரதாரிங்குற ஒரு வார்த்தைல மூணு பேரை கொண்டு வந்திருந்தேன் :)
பாண்டுவிற்கு பிறகு கண் பார்வையற்ற திருதிராஷ்டிரனுக்கு பொறுப்பு கொடுத்ததற்கு பதிலாக தனக்கு கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்னு விதுரர் நினைக்கிறார்.
விதுரரை விட அவர் மனைவி பரசவி தேவி ஆசைப்படுகிறார். அதற்காக விதுரர் சகுனியுடன் கூட்டு சேர்ந்து இந்த போரை உருவாக்குகிறார்.
போர் ஆரம்பித்து ஒன்பது நாட்களாகியும் எந்த பயனுமில்லை. பிதாமகர் இருக்கும் வரை பெரிய தலைகள் எதுவும் உருளாது என்று அவரை ஒழித்துக்கட்ட திட்டம் போடுகிறார்.
நல்லவர்கள் பழி பாவத்திற்கு தான் அஞ்சுவார்கள் என தெரிந்து அவரை சரியான இடத்தில் அடிக்கிறார். எப்படியும் பத்தாம் நாள் பார்த்தன் கையில் விழ பிதாமகர் முடிவு செய்துவிட்டார்.
சிகண்டிதான் அம்பையின் மறுபிறப்பு என்பது கண்ணன் விடும் கதை. அதற்கான களம் விதுரர் அமைத்து தருகிறார்.
பிறகு தன் திட்டத்தை சகுனியிடமும் சொல்லிவிட்டு செல்கிறார். இது தான் கதை :)
//உங்க மத்த ரெண்டு ரெஷசன் கதையும் படிச்சேன். பின்னூட்டம் விட மனசில்லை. அதனால இங்க சொல்லிர்றேன். அந்த கதைகளும் நல்லா இருக்கு - சுத்தி நடக்கிறதை நல்லா கவனிச்சு எழுதுறீங்க.//
மிக்க நன்றி குமரன் :)
//Divyapriya said...
எப்பவும் போல நல்லா இருக்குண்ணா...வித்யாசமாவும் இருக்கு//
ரொம்ப நன்றிமா...
கதை புரிஞ்சிதா?
//ரங்கன் said...
ஆஹா.. கதை அருமை.
கண்ணனின் லீலையே லீலை.
என்னா வில்லத்தனம் கண்ணனுக்கு..
ஒருத்தரை அவரோட தவறுகளை சுட்டிக்காட்டியே கொன்றுவிடக்கூட முடியும் என்பது போல் உள்ளது இந்த கதையின் மாரல்.
எப்படியோ.. நல்ல கதை. வாழ்த்துக்கள்!!
3:55 AM//
ரங்கன்,
கதையை ஓரளவுக்கு தான் புரிந்திருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.
இது கண்ணனின் லீலையல்ல. விதுரரின் வேலை :)
good one. but crossed 1000 words i guess,, rules said less than 1000 words
//Anonymous said...
good one. but crossed 1000 words i guess,, rules said less than 1000 words//
மிக்க நன்றி தல...
மொத்தம் 790 வார்த்தைகள் :)
http://allworldphone.com/count-words-characters.htm
சரி பார்த்து கொள்ளலாம் :)
குட்டிப் பாப்பா - 996னு நினைக்கிறேன் :)
வெட்டி,
என்ன சொல்றதுன்னு தெரியல... வாயடைச்சு போயிட்டேன்..
உங்க கை வலிக்கிற வரைக்கும் மானசீகமா குலுக்குறேன்.. வாழ்த்துகள்..
// வெண்பூ said...
வெட்டி,
என்ன சொல்றதுன்னு தெரியல... வாயடைச்சு போயிட்டேன்..
உங்க கை வலிக்கிற வரைக்கும் மானசீகமா குலுக்குறேன்.. வாழ்த்துகள்..//
வெண்பூ,
மிக்க நன்றி...
நானே கூச்சப்படற அளவுக்கு புகழ்ந்துட்டீங்க :-)
வாழ்த்துகள் சகா.. நல்லாத்தான் இருக்கு..
// கார்க்கி said...
வாழ்த்துகள் சகா.. நல்லாத்தான் இருக்கு..//
நல்லாத்தான் இருக்கு... ஆனா ஏதோ மிஸ் ஆகற மாதிரி இருக்குனு சொல்றியா?
ரொம்ப அருமையான எழுத்து நடை.. கதையும் அருமை..
வெற்றி பெற வாழ்த்துக்கள் ...
ரொம்ப நல்ல இருந்தது ...
Selva
வெட்டி - எனக்கு பிடிக்கலை.
மொழிநடை வித்தியாசமா நம்ப தொலைக்காட்சியில் வந்த மகாபாரதம் கணக்கா இருந்தாலும் புனைவு பிடிக்கல.
அடுத்தது இந்த சிறுகதையை புரிஞ்சிக்க/ரசிக்க மகாபாரதம் முழுமையா தெரிஞ்சி இருக்கணும். அது ஒரு மேஜர் மைனஸ் பாயிண்ட் (என்னோட பார்வையில் )
மற்றுமொரு சிறுகதை எழுதி போட்டியில் கலந்துக்கோங்க. உரையாடல் போட்டியிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
பேருந்து சிறுகதை போட்டி என்ன ஆச்சு ? ஒரு மாச பிரேக் பிறகு ப்ளாக் படிக்கறேன். அதான்.
I dont know much mahabharatham. So I could not understand the story first. But I got the point after reading 2/3 times. :-)
Good thinking :-)
கதை எனக்கு பிடிச்சிருக்கு.. வெற்றி பெற வாழ்த்துகள் அண்ணா :)
மகாபாரதம் நிறையப்பேர் படித்திருக்க மாட்டார்கள் என்பது பின்னூட்டங்களில் புரிந்தாலும் எனக்கு கொஞ்சம் ஆச்சரியம். One of the most fascinating stories of mankind. எல்லா மனிதர்களின் வக்கிரங்கள், பலவீனங்கள், பொறாமை என்று "don'ts" கற்றுக்கொள்ள நிறைய இருக்கு இந்தக் காப்பியத்தில்.
விதுரர் மாத்திரம் தான் அப்பழுக்கற்று இருந்தார். பாவி, அவரையும் நீ விட்டு வைக்கல :) சகுனி பற்றி ஏற்கனெவே இந்த கோணத்தில் படித்திருக்கிறேன்.
நல்ல முயற்சி. எனக்குப் பிடித்து இருக்கு. All the best Balaji.
அனுஜன்யா
//செந்தில்குமார் said...
ரொம்ப அருமையான எழுத்து நடை.. கதையும் அருமை..
வெற்றி பெற வாழ்த்துக்கள் ...//
மிக்க நன்றி செந்தில்குமார்..
//Anonymous said...
ரொம்ப நல்ல இருந்தது ...
Selva//
டாங்க்ஸ்டா மச்சான் :)
//மணிகண்டன் said...
வெட்டி - எனக்கு பிடிக்கலை.
மொழிநடை வித்தியாசமா நம்ப தொலைக்காட்சியில் வந்த மகாபாரதம் கணக்கா இருந்தாலும் புனைவு பிடிக்கல.
//
ம்ம்ம்
//
அடுத்தது இந்த சிறுகதையை புரிஞ்சிக்க/ரசிக்க மகாபாரதம் முழுமையா தெரிஞ்சி இருக்கணும். அது ஒரு மேஜர் மைனஸ் பாயிண்ட் (என்னோட பார்வையில் )
//
மகாபாரதம் முழுமையா தெரியணும்னு அவசியம் இல்லை என்பது என் எண்ணம். விதுரர் மகாபாரதத்துல ரொம்ப முக்கியமான கேரக்டர். ஓரளவு பாரதம் தெரிஞ்சிருந்தாலே அவரைத் தெரிந்திருக்கும்.
தர்மத்தை உரைத்த ஒரே நல்லவர் அவர் தானே :)
//
மற்றுமொரு சிறுகதை எழுதி போட்டியில் கலந்துக்கோங்க. உரையாடல் போட்டியிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
//
நிச்சயமா இன்னொரு சிறுகதையும் களத்துல இறங்கும் :)
//பேருந்து சிறுகதை போட்டி என்ன ஆச்சு ? ஒரு மாச பிரேக் பிறகு ப்ளாக் படிக்கறேன். அதான்//
அதுல நண்பர் வெங்கிராஜா முதலிடம், ஸ்ரீதர் இரண்டாமிடம், சொக்கன் மூன்றாமிடம் :)
// Prabu Raja said...
I dont know much mahabharatham. So I could not understand the story first. But I got the point after reading 2/3 times. :-)
Good thinking :-)//
மிக்க நன்றி பிரபு ராஜா. புரியாத போது 2/3 மூறை படிப்பது சிறந்தது. உங்கள் முயற்சிக்கு என் நன்றிகள்!!!
//Poornima Saravana kumar said...
கதை எனக்கு பிடிச்சிருக்கு.. வெற்றி பெற வாழ்த்துகள் அண்ணா :)//
ரொம்ப நன்றிமா!!!
// அனுஜன்யா said...
மகாபாரதம் நிறையப்பேர் படித்திருக்க மாட்டார்கள் என்பது பின்னூட்டங்களில் புரிந்தாலும் எனக்கு கொஞ்சம் ஆச்சரியம். One of the most fascinating stories of mankind. எல்லா மனிதர்களின் வக்கிரங்கள், பலவீனங்கள், பொறாமை என்று "don'ts" கற்றுக்கொள்ள நிறைய இருக்கு இந்தக் காப்பியத்தில்.
விதுரர் மாத்திரம் தான் அப்பழுக்கற்று இருந்தார். பாவி, அவரையும் நீ விட்டு வைக்கல :) சகுனி பற்றி ஏற்கனெவே இந்த கோணத்தில் படித்திருக்கிறேன்.
நல்ல முயற்சி. எனக்குப் பிடித்து இருக்கு. All the best Balaji.
அனுஜன்யா//
வாங்க யூத் :)
கதையில் தர்மத்திற்கு எதிராக யார் செயல்பட்டாலும் தன் குரலை எழுப்பியவர் விதுரர் ஒருவர் தான். ஆனா இவ்வளவு நல்லவரா ஒருத்தர் இருந்திருப்பாரா என்பதே எனக்கு ஆச்சரியமான விஷயம் தான்.
கண்ணனை விட்டுவிடுவோம். அவன் கள்வன். அவனைத் தவிர கதையில் மற்ற அனைவரும் சராசரி மனிதர்களாக இருக்கும் போது இவர் மட்டும் அதிலிருந்து விலகுகிறார்.
ஷத்ரிய தர்மத்தைக் காக்க போராடும் பிதாமகர், வெற்றிக்காக குருவின் மரணத்திற்கு காரணமாகும் சூதாடி யுதிஷ்டிரன், பொறாமைக்கார திருதிராஷ்டிரன், துரியோதனன், பழிவாங்க துடித்திருந்த சகுனி, நெருப்பிலிருந்து வந்த ஆணவத்தில் குருடன் மகன் குருடன் என்று சிரிக்கும் திரௌபதி, செஞ்சோற்று கடனுக்காக துரியன் பக்கமிருக்கும் கர்ணன், சல்லியன் இப்படி எல்லாமே சராசரி மனிதர்கள்.
ஆனால் இவர்களில் இருந்து ஒதுங்கி நீதியை மட்டுமே காப்பாற்ற துடிக்கும் ஒரே ஜீவன் விதுரர்.
ரொம்ப நல்லவர்களாக இருப்பவர்களை ரொம்ப கெட்டவனாக காட்டுவது வெகு சுலபம். அவர்களோட இண்டென்ஷனை மட்டும் மாற்றி சொன்னால் போதும் அப்படியே 180 டிகிரி மாறிவிடும். சீதாப்பிராட்டி லக்குவனனை பழி சொன்னது போல.
அப்படி ஒரு முயற்சி தான் இது :)
போட்டிக்கு வாழ்த்துக்கள்.
இதைப் போன்ற மகாபாரத பின்யுத்தக் கதைகள் ஜெயமோகன் நிறைய எழுதியுள்ளார். இந்தக் கதையைச் செறிவாக்க ஜெமோவின் கதை பாணியில் எழுதலாம்.
வெட்டி,
இந்தக் கதையைப் பற்றி பேச எனக்கு நிறைய இருக்கு. கமெண்டில் அவ்வளவும் சொல்ல முடியாது. இருந்தாலும் முக்கியமான பாயிண்ட்ஸை சொல்றேன்.
கதையின் தமிழ் நடை டிவி மகாபாரதத்தின், வெங்கட் தமிழாக்கம் போல்தான் இருக்கிறது. இன்னும் கொஞ்சம் மாற்றியிருக்கலாம் என்பது என் எண்ணம்.
அப்புறம் மகாபாரதத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாத்திரமே விதுரர்தான். அவரை வில்லனாக்கியிருப்பது எனக்கு முதலில் அதிர்ச்சியையே தந்தது. இருந்தாலும் மாற்று சிந்தனை/கட்டுடைப்பு என்று யோசித்தால், நீங்கள் கொடுக்கும் காரணங்களும் பொருந்தி வருவதால், ஒத்துக் கொள்ளவே தோன்றுகிறது.
சில வருடங்களுக்குமுன் ஒரு மேடை நாடகம் படித்தேன். அதில் போரின் காரணம் சகுனியும், கண்ணனும் ”இணைந்து” செய்யும் சதியே என்பது போல் சித்திரிக்கப்பட்டிருந்தது. ஏனோ இந்தக் கதையையும் எனக்கு அதனோடு பொருத்திப் பார்க்கத் தோன்றியது, கண்ணனுக்கு பதில் விதுரராக!!
கதை ரொம்பவும் ஷார்டாக இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. இந்த மாதிரி கதையை இன்னும் கொஞ்சம் விரித்து எழுதலாமோ என்று எனக்குத் தோன்றுகிறது.
ஆயிரம் நொள்ளை சொன்னாலும், மாற்று சிந்தனை, வித்தியாசமான முயற்சி இவற்றை கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும்.
வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!;-)
பி.கு.:
மொபைல் நம்பர் சொல்ல முடியுமா?
//பி.கு.:
மொபைல் நம்பர் சொல்ல முடியுமா?//
Thala,
201-779-3025 (Hope I will change my mobile number with in a week. Planning to buy iPhone 3G S)
Post a Comment