தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Monday, May 03, 2021

கே வி ஆனந்த் - நினைவு குறிப்புகள்

2005 பெங்களூர்ல நண்பர்களுடன் தங்கி இருந்தேன். அப்ப பெரும்பாலும் தமிழ்ல வர எல்லா படத்தையும் பார்த்துடுவோம். அந்த கூட்டத்துல ஆட்டோகிராஃப் படம் பார்த்துட்டு கோபிகாவோட தீவிர ஃபேன் ஒருத்தன் இருந்தான். அவனுக்காக கனா கண்டேன் படத்துக்கு போனோம்


எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாம பார்க்க ஆரம்பித்த படம். முதல்ல பையன் பொண்ணு பிரண்ட்ஷிப், அப்படியே அழகா லவ், ரொமான்ஸ், தண்ணி பிரச்சனைக்குத் தீர்வு தேடற ஹீரோனு போயிட்டு இருந்த படம், திடீர்னு ஸ்மார்ட்டான செகண்ட் ஹீரோ மாதிரி ஒருத்தர் வந்தவுடனே ட்ராக் மாற ஆரம்பித்தது


அதுவரை நாம பார்த்த வில்லன்களில் இருந்து வித்தியாசமா, ஆனா அதே சமயம் கொடூரமான வில்லனா ப்ரித்விராஜ் மிரட்டியிருந்தார். அதுலயும் நீ ஏன் இப்படி பணம் பணம்னு அலையறனு கோபிகா கேட்கும்போது, க்ளிஷேவா சில டயலாக் சொல்லிட்டு, அதெல்லாம் சொல்லுவேனு பார்த்தையா? இல்லை, I just love the smell of Money நு சொல்லுவார். எவன்டா இவன் இப்படி இருக்கானு தோணும்


ஹீரோவும் க்ளைமாக்ஸ் வரை என்னடா மொக்கை வாங்கிட்டு இருக்கானேனு தோணும் போது, கடைசியா அவர் படிப்பை பயன்படுத்தி White Phosphorus அப்படி இப்படினு சொல்லி ஜெயிப்பார். இப்ப பார்த்தா மொக்கையா கூட இருக்கலாம். ஆனா அப்ப நல்லா, வித்யாசமா இருந்தது. படத்துல சில பாடல்களும் சூப்பரா இருக்கும். அதுலயும் சின்ன சின்ன சிகரங்கள் காட்டி எல்லாம் மிட் நைட் மசாலால தொடர்ந்து வரும்


அதுக்கு அப்பறம் யாருடா டைரக்டர்னு பார்க்கும் போது K V Anand, காமிரா மேனா இருந்து டைரக்டரா மாறியிருக்கார்னு தெரிஞ்சுது. அதே சமயம் கதை சுபா நு தெரிஞ்சுது. நான் பத்தாவது படிக்கும் போது தீவிரமா க்ரைம் நாவல் படிப்பேன். அதுல எனக்கு ராஜேஷ் குமாரைவிட, சுபா தான் பிடிக்கும். இந்த மாதிரி டைரக்டர்ஸ் ரைட்டர்ஸை பயன்படுத்தினா, இப்படி வித்யாசமா கிடைக்குமேனு தோணுச்சு. K V Anand ரெண்டாவது படத்துக்குக் காத்திருந்தேன்.


கிட்டதட்ட நாலு வருஷம் கழிச்சி வந்தது அயன். அப்ப யூ எஸ்ல இருந்தேன். இதுவும் நண்பர்களுடன் தான் பார்த்தேன். படம் தாறுமாறு. படம் முதல் சீன்ல இருந்து கடைசி வரை பரபரப்பு. இதுலயும் ஹீரோ ஹீரோயின் கெமிஸ்ட்ரி செமயா இருக்கும். இது பெரும்பாலும் எல்லாருக்கும் பிடிச்ச படம் தான்


2016 சென்னை ஏர்போர்ட் ட்ரெயினிங் போகும் போது தான் சொன்னாங்க அதுல வந்தது எல்லாம் நிஜமாலுமே சென்னை ஏர்போர்ட்ல பிடிச்ச கேஸுங்கனு. உண்மையாலும் குருவிங்க வாழ்க்கை அதுல வர ஜெகன் மாதிரி தான் இருக்கும்னு சொன்னாங்க. சினிமாங்கறதால ரொம்ப ஹீரோயிசமா காட்டியிருக்காங்கனு புரிஞ்சிது


அடுத்த வந்த கோ வும் நல்ல படம் தான். இதுலயும் செகண்ட் ஹீரோ மாதிரி இருக்கவன் வில்லனா மாறுவது தான் ட்விஸ்ட். அதுலயும் க்ளைமாக்ஸ்ல அஜ்மலோட பாடி லாங்குவேஜ் வேற லெவல். கிட்டதட்ட கனா கண்டேன் ப்ரித்வி ராஜ் வகை தான். ஹாட்ரிக் வெற்றி.


அதற்கு பிறகு தான் சறுக்கல். ரொம்ப கஷ்டப்பட்டு எடுத்த மாற்றான் அவ்வளவு சிறப்பா இல்லை. கதை கேட்கும் போது அட்டகாசமா இருந்திருக்கும். குறிப்பா உலகத்துல பெஸ்டா இருக்கவங்களோட ஜீன்ல இருந்து உருவாகற ஹீரோனு கேக்கும் போது அப்படியே ஜிவ்வுனு இருந்திருக்கும். ஆனா திரைல அதை கொண்டுவரதுல ஏனோ கொஞ்சம் சொதப்பல்


அனேகன் கூட நல்ல கதை தான். எனக்கு பிடிச்சிருந்தது. முன் ஜென்ம காதல், பல தடங்கள்கலால் ஒன்று சேர முடியாதவர்கள் இந்த ஜென்மத்தில் சேருவது. கிட்ட தட்ட நெஞ்சம் மறப்பதில்லையை இந்த காலத்துக்கு பட்டி டிங்கரிங் பண்ண கதை. ஆனா பெருசா ஹிட் அடிக்கல


கவன், காப்பான் ரெண்டுமே ஏனோ K V Anand தரத்துக்கு இல்லாத மாதிரி ஒரு எண்ணம். ஆனா எப்படியும் அயன் மாதிரி மறுபடியும் சூப்பர் ஹிட் படம் கொடுப்பார்னு நம்பிக்கை இருந்தது. என்ன சொல்றதுனு தெரியல


Thank You K V Anand Sir for entertaining us. You will be always remembered for your work. 

 

Wednesday, May 20, 2020

வாழ்க்கையை மாற்றிய அந்த ஒரு குறள்

சமீபத்துல Audibleல Dale Carnegieயோட "How to win friends and influence people" ஒலி புத்தகத்தைக் கேட்டு கொண்டிருந்தேன். வாழ்க்கைல வேற எந்த ஒரு திறமை இல்லைனாலும் இந்த ஒரு குணம் மட்டும் இருந்தா, பெரும்பாலானோர் விரும்பற மாதிரி நல்லபடியா வெற்றிகரமா வாழறதுக்கான ஒரு முக்கியமான விஷயத்தை அந்த புத்தகத்துல சொல்லிருக்காங்க. அதை கேட்கும் போது எனக்கு ஒரு விஷயம் தோணுச்சு. அந்த மொத்த புத்தகத்தையும் ஒரே குறள்ல அடக்கிடலாம்னு.

அடிக்கடி பேருந்துல பயணம் செய்யும் போது அதுல பெரும்பாலும் ஒரு திருக்குறள் பார்த்திருக்கேன். எதுக்குடா ”தெய்வாத்தான் ஆகா தெனினும்...” இல்லாமல் நிறைய பேருந்துல இந்த குறளை எழுதிருக்காங்களே, அப்படி என்ன இருக்கு இந்த குறள்லனு தோணும். எனக்கு தெரிஞ்சி வாழ்க்கைல முன்னேற தேவையான குறள்னா அது “தெய்வத்தான் ஆகா தெனினும்” தான். அது மட்டும் உணர்ந்து செயல்பட்ட வாழ்க்கைல எந்த நிலைமைலயும் முன்னேறிடலாம்னு எனக்கு தோணும். பேருந்துல எழுதி இருக்கற அந்த குறள் மேல எனக்கு அதுவரை பெரிய அபிப்பிராயம் இருந்தது இல்லை. அதை தேர்வு செய்தவர் மேல ஒரு கடுப்பும் இருந்துச்சு. இந்த புத்தகத்தைக் கேட்டதுக்கு அப்பறம் யோசிக்கும் போது தான் எனக்கு ஒரு முக்கியமான தருணத்துல அந்த குறள்ல சொல்லியிருக்குற அந்த ஒரு குணம் எப்படி உதவுச்சுனு நினைவு வந்தது.

மறுபடியும் குடிமைப் பணி நேர்முக தேர்வு சமயத்துல நடந்த நிகழ்வு தான். முதல் முறை நேர்முக தேர்வுக்கு நானும் ஒரு நண்பரும் சென்னைல இருந்து டெல்லிக்கு ஒண்ணா போயிருந்தோம். அடுத்த அடுத்த நாள் தேர்வு. அங்க நேர்முக தேர்வுக்கு போறவங்க பெரும்பாலும் (பழைய) தமிழ்நாடு இல்லத்துல தான் தங்குவோம். அங்க தான் நமக்கு வீட்டு சாப்பாடு மாதிரி கிடைக்கும். அது மட்டும் இல்லாமல் தமிழக அரசே நேர்முக தேர்வுக்கு (சிகப்பு கொண்டை வெச்ச) வண்டில அனுப்பி வைப்பாங்க. ரூம் வாடகையும் மிக குறைவு. கூட்டத்திற்கு ஏற்றார் போல இரண்டு பேரோ அல்லது அதுக்கு மேற்பட்டோரோ தங்கற மாதிரி இருக்கும். நாங்க ரெண்டு பேர் சேர்ந்து போனதால, எங்க ரெண்டு பேருக்கும் ஒரே ரூம் கிடைச்சது. அந்த முறை அவருக்கு ஐஏஎஸ் கிடைத்தது. எனக்கு சர்வீஸ் வரலை.

அடுத்த வருடம், தமிழ் நாட்டைச் சேர்ந்த நிறைய பேருக்கு ஒரே சமயத்துல இண்டர்வியூ வந்திருந்தது. அது மட்டுமில்லாமல் ஒரு ரூம்ல ரெண்டு பேர் கூட, இண்டர்வியூ வந்திருக்கிற பெண் பிள்ளைகளோட அப்பாக்களும் தங்க வைக்கப்படுகிறார்கள்னு ஒரு செய்தி வந்திருந்தது. இது மிகவும் பயம் தரக்கூடிய விஷயம். ஏன்னா நாம பரபரப்பா இருக்கும் போது அவர்கள் ஏதாவது ஆர்வமா பேச ஆரம்பிப்பாங்க. குடிமைப் பணி நேர்முகத் தேர்வு பத்தி நமக்கு கிடைக்கும் பெரும்பாலான விஷயங்கள் இட்டு சொல்லப்படும் கதைகள் தான். அதுல கொடுமை என்னனா வெற்றி பெற்றவர்கள் அப்படி அவுங்க சொன்ன கதைகளை அவுங்களே கொஞ்ச நாள்ல நம்ப ஆரம்பிச்சிடுவாங்க. நேர்முக தேர்வு முடிஞ்சி முதல்ல யார்கிட்ட சொல்றாங்களோ அது மட்டும் தான் 90% உண்மையா இருக்கும். மீதி எல்லாம் நிறைய பேர்ட சொல்லி சொல்லி அப்படியே கதையா மாறிடும்.

இப்ப பிரச்சனை என்னனா, நாம கடைசி நேர தயாரிப்புல இருக்கும் போது இந்த மாதிரி அப்பாக்கள் வந்து அவர்கள் கேள்விப்பட்ட கதைகளைச் சொல்ல ஆரம்பிச்சிடுவாங்க. அதுல பாதி நமக்கு தெரிந்தவர்கள் பத்திய கதையாகவே இருக்கும். நேர்முக தேர்வு நேரத்துல இதெல்லாம் அனுபவிக்கறது ரொம்ப கஷ்டம். ஆனா அவுங்கள்ட எதுவும் பேசவும் முடியாது. இது மிகப் பெரிய ஸ்ட்ரெஸ். இது இல்லாம அந்த ஓரிரு நாட்கள்ல ரூமேட்டும் ஏதாவது பேசிட்டு இருக்கற மாதிரி இருந்தா அதுவும் கஷ்டம் தான்.

இந்த நிலைமைல இந்த முறை தனியா போயிருந்தேன். ரூம் இருக்குமானு தெரியலை. அதுவும் தப்பான யாரோடையாவது கோத்து விட்டா எல்லாமே தப்பா போயிடும். அப்ப தமிழ்நாடு இல்லத்துல ரூம் ஒதுக்கறவர் கொஞ்சம் கடுகடுனு இருந்தார். அவர்ட “ஜி, தப்பா எடுத்துக்காதீங்க. எனக்கு இது கடைசி அட்டெம்ட். அமெரிக்கால பார்த்த வேலையை எல்லாம் விட்டுட்டு வந்து இந்த பரிட்சைக்குத் தயாராகிட்டு இருக்கேன். எனக்குக் கொடுக்கற ரூம்ல யாரும் பேரண்ட்ஸ் மட்டும் இல்லாத மாதிரி பார்த்து கொடுங்க ஜி”னு சொன்னேன். அதுவரை கொஞ்சம் கடுகடுனு முகத்தை வெச்சிருந்தவர், அமெரிக்காவுல இருந்து வேலையை விட்டுட்டு வந்துட்டீங்களா?னு ஆர்வமா பேச ஆரம்பிச்சிட்டார். அப்படியே இந்த மாதிரி வரவங்க எல்லாம் பெரிய அதிகாரி ஆகிடுவாங்கனு என்கிட்ட எல்லாம் இப்படி மதிச்சி பேசவே மாட்டாங்க ஜினு வருத்தப்பட்டார்.

அதுக்கு அப்பறம் எனக்கு நல்ல ரூம் கொடுத்து, நேர்முக தேர்வு முடியற வரை ரெண்டாவதா யாரையும் போடல. ஆனா நான் அவர்ட வேற எந்த ரூம்லயாவது மூணாவதா யாரையாவது போடற மாதிரி இருந்தா, தயங்காம என்னோட ரூம்ல போடுங்க. ஆனா பேரண்ட்ஸ் மட்டும் வேண்டாம்னு சொல்லி இருந்தேன். ஆனா அந்த நிலைமை அந்த ரெண்டு மூணு நாள்ல ஏற்படல. அந்த நேரத்துல அது எவ்வளவு உபயோகமா இருந்ததுனு வார்த்தைகள்ல சொல்ல முடியல. அப்ப ஏதாவது சொதப்பியிருந்தா, நான் எடுத்த முயற்சி எல்லாம் அர்த்தமில்லாமல் ஆகியிருக்கும். அது மட்டுமில்லாமல் தேர்வு முடிஞ்ச உடனே, டெல்லில நிறைய கோவில்களுக்குக் கூப்பிட்டு போனார். உங்களுக்காக வேண்டிக்கிட்டேனு சொன்னார். கேட்கவே ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது. அந்த நேரத்துல அது ரொம்ப தேவையாவும் இருந்தது. நான் அவருக்குப் பெருசா எதுவுமே செய்யல. நான் பண்ணது அவரை மதிச்சி பேசினது தான். இப்பவும் தொடர்புல இருக்கார்.

அந்த குறளை இப்ப நினைச்சிப் பார்த்தா, அதோட பிரமாண்டம் புரியுது. ரொம்ப சாதாரணமான குறள். அதுக்குள்ள இவ்வளவு பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் மந்திரம் இருக்கானு. அதை பேருந்துல எழுதனும்னு முடிவெடுத்தவர் மிக பெரிய சிந்தனையாளரா இருக்கணும்னு தோணுது. ஏன்னா லாஜிக்கலா பார்த்தா அதைவிட அப்பாட்டக்கர் குறள் எல்லாம் நிறைய இருக்கு. ஆனா இதுல மனித மனங்களை வெல்லக் கூடிய மேஜிக் இருக்குனு இப்ப புரியுது. அந்த குறளைப் படிச்சதுக்கு அப்பறம் இதுக்கு இவ்வளவு பில்ட் அப்பானு தோணலாம். ஆனா நீங்க நம்பலனாலும் அது தான் நிஜம். அப்பறம் அந்த குறளைச் சொல்ல மறந்துட்டேன். இது தான் அந்த குறள்:

“இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று”