
போக்கிரி ஹிட் ஆனது மகேஷ் பாபுவிற்கு நல்லதா? கெட்டதா? என்று ஒரு பட்டிமன்றமே வைக்கலாம். அப்படி வைத்தாலும் வழக்கம் போல வழவழா கொழகொழா முடிவு தான் கொடுப்பார் சாலமன் ஆப்பைய்யா. போக்கிரி எதிர்பார்ப்பில் அடுத்து வந்த அனைத்து படங்களுமே தொடர்ந்து ஃப்ளாப். 3 இடியட்ஸ் ரீமேக் ஆந்திராவில் எப்படி போகும் என்று எனக்கு ஒரு சந்தேகம். ஏனென்றால் தமிழில் காலேஜ் பசங்க ஹிந்தி படம் பார்ப்பது குறைவு. ஆனால் ஆந்திராவில் ஹிந்தி அவர்களுக்கு மூன்றாவது மொழி, மேலும் ஹைதிராபாத்தில் தெலுகுக்கு குறைவில்லாமல் ஹிந்தி பேசும் மக்கள். அதனால் 3 இடியட்ஸ் தெலுகில் சூப்பர் ஹிட் ஆக சான்ஸ் குறைவு என்பது என் எண்ணம்.
அப்படினா மகேஷ் அவ்வளவு தானா என்று நினைத்து கொண்டிருக்கும் போது வந்து அந்த குறையைப் போக்கிவிட்டது தூக்குடு. அப்பாவிடமிருந்து சூப்பர் ஸ்டார் பட்டம் மகேஷுக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆகி ப்ரின்ஸ் மகேஷிலிரிந்து சூப்பர் ஸ்டார் மகேஷ் ஆகிவிட்டார். போக்கிரியைவிட இதில் ஆக்ஷன் காட்சிகள் அதிகம். அதைவிட வேகமும் அதிகம். ட்விட்டரில் நண்பர் ஒருவர் மகேஷ் பாபுவிடம் அப்படி என்ன இருக்கிறது? சாக்லேட் பையன் மாதிரி இருக்கிறார் என்றார். அதற்கு ஒரே பதில் ஸ்டைல்.
தூக்குடு கதை ஒன்றும் உலகத்தரக் கதை கிடையாது. தெலுகு மாஸ் ஹீரோக்கள் நடிக்கும் நூறு படங்களில் தொன்னூறு படங்களில் இதே கதை தான். ஒரு நிழலுலக டானை எப்படி கதாநாயகன் அழிக்கிறார் என்பது தான் கதை. ஆனால் அதை சொன்ன விதத்தில் தான் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர் சீனு வைத்லா. ப்ரமானந்தம், MS நாராயணா காமெடி தான் படத்திற்கு மிகப் பெரிய ப்ளஸ். அதிலும் MS நாராயணா நகைச்சுவைக் காட்சிகள் ப்ரமானந்தத்தையே மிஞ்சிவிடும் அளவிற்கு இருக்கிறது. அதுவும் இரண்டுமே கரண்ட் ட்ரெண்ட் வைத்து செய்திருப்பது தான் ஹை லைட். தமிழில் ரீ-மேக் செய்தால் வடிவேலுக்கு அட்டகாசமாக பொருந்தும், இரண்டு வேடங்களுமே. அதான் அம்மாவுக்கும் கேப்டனுக்கும் நட்டு புட்டுக்கிச்சே, இனிமேவாது வடிவேலுவை கொண்டு வாங்கப்பா.
ஆக்ஷன் காட்சிகள் போக்கிரிக்கு குறைவில்லாமல் அதே ஸ்டைலில் இருக்கிறது. அத்தடுவில் ஒரு சண்டைக் காட்சியில் தனிக்கல பரணி சொல்லுவார், அவன் அடிக்கறதே வித்யாசமா இருக்கு. ஒண்ணு கோபமா அடிப்பாங்க இல்லை வேகமா அடிப்பாங்க. இவன் என்னடா நிதானமா அடிக்கறான். ஏதோ கோட்டைக் கட்ற மாதிரி, பூ கட்ற மாதிரி ரொம்ப ஜாக்கிரதையா, ரூல்ஸ் ஃபாலோ பண்ற மாதிரி அடிக்கிறான் அப்படினு. அது தான் மகேஷ் பாபு ஸ்டைல். இதுலயும் ஆக்ஷன் காட்சிகள் அப்படி தான்.
செண்டிமெண்ட் - அப்பா மகன் செண்டிமெண்ட். பிரகாஷ் ராஜ் மகேஷ் பாபு அப்பா. அவருக்கு அல்வா சாப்பிடற ரோல். முதல் சில நிமிடங்களுக்கு வீரமான பாத்திரம், இரண்டாவது பகுதியில் செண்டிமண்ட் அப்பா பாத்திரம். இதெல்லாம் அவருக்கு ஜுஜூபி. அட்டகாசமாக செய்திருக்கிறார். நாசருக்கு பெரிய பாத்திரம் இல்லையென்றாலும் அவர் இருப்பது ஒரு செண்டிமண்ட் போல. ஹீரோயின் சமந்தா வருகிறார், போகிறார், டான்ஸ் ஆடுகிறார். முகத்தில் கலை இல்லை, கலராக இருக்கிறார். சோனு சூத் வழக்கம் போல டான் கேரக்டர். மொக்கையான வில்லன். இசை பெரிதாக கவரவில்லை.
நான் ரசிச்ச சின்ன சின்ன காட்சிகளெல்லாம் சொல்லி உங்க அனுபவத்தைக் கெடுக்க வேண்டாம் என்பதால் அதைப் பற்றி பெரிதாக சொல்லவில்லை. போக்கிரி, அத்தடு, பிருந்தாவனம் இதெல்லாம் உங்களுக்கு பிடித்திருந்தால் தூக்குடுவும் நிச்சயம் பிடிக்கும். வெறும் மசாலா என்று சொல்ல முடியாது. வேண்டுமென்றால் ஆந்திரா ஃபுல் மீல்ஸ் என்று சொல்லலாம்.