வீட்டில் ஒரு வாரமாக இணையம் இல்லை. அலுவலகத்தில் இருந்து எழுத நேரம் இல்லை. எழுத பல விஷயங்கள் கிடைத்த இந்த வாரத்தில் இப்படி அமைந்தது வருத்தமே.
தமிழின் தலைசிறந்த எழுத்தாளர்களான ஜெயமோகனையும், அ.முத்துலிங்கத்தையும் சந்தித்து பேசும் வாய்ப்பு இந்த வாரத்தில் அமைந்தது. ஒரு உண்மை என்னவென்றால் இவர்கள் இருவரின் எழுத்தையும் இவர்களை சந்திப்பதற்கு முன் நான் படித்ததில்லை என்பதால் அவர்களிடம் தரமான கேள்விகளை கேட்க எனக்கு தெரியவில்லை. இருப்பினும் உடன் வந்த நண்பர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர்கள் அளித்த பதில்களில் அவர்களுடைய ஆளுமையை புரிந்து கொள்ள முயன்று கொண்டிருந்தேன்.
ஜெமோவைப் பற்றி எழுத நிறைய, நிறைய இருப்பதால் இந்த பதிவில் அவரைப் பற்றி எதையும் சொல்ல விரும்பவில்லை.
அ.முத்துலிங்கம் அவர்களுடன் காரில் நான்கு மணி நேரம் பயணிக்கும் பொழுது ஓரளவு உரையாட முடிந்தது.
எழுத்தாளர்கள் என்றால் எல்லாம் தெரிந்தவர்களைப் போல பேசுவார்கள் என்ற எனது எண்ணம் நேற்று அடியோடு மாறியது. அ.முத்துலிங்கம் அவ்வளவு அமைதி. எந்த கேள்வியென்றாலும் ஒரு நிமிடம் தன்னை தயார் செய்து கொண்டு நிதானமாக பேச துவங்குகிறார். அவருடைய தமிழ் தேன்.
அவரிடம் பேசும் போது நான் பல அபத்தங்களை செய்தேன். ஆனால் அப்படி செய்தது எனக்கு மிகவும் பயனுள்ளதாகவே அமைந்தது. நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது. நான் கற்றுக் கொண்டவைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
சென்ற வாரம் அசோகமித்திரனின் மானசரோவர் மற்றும் இந்திரா பார்த்தசாரதியின் வேர்பற்று படித்திருந்தேன். மானசரோவர் கதையில் இருக்கும் ஒரு தவறை சுட்டிக்காட்டி அதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தேன்.
அதற்கு பிறகு நான் ஒரு கதையை சொல்லி, அதை நாவலாக எழுதலாம் என்று யோசித்து கொண்டிருப்பதாக சொன்னேன்.
"எந்த தமிழில் எழுதுவீர்கள்" என்று கேட்டார். எந்த தமிழ் என்றால் என்ன சொல்வதென்று எனக்கு புரியவில்லை.
"நான்காம் வகுப்பு படிக்கும் பிள்ளைகளின் தமிழ் ஒரு மாதிரி இருக்கும். பத்தாம் வகுப்பு பிள்ளைகளின் தமிழ் வேறு மாதிரி இருக்கும். ஒரு எழுத்தாளனின் தமிழ் வேறு மாதிரி இருக்கும். நீங்கள் எந்த தமிழில் எழுதுவீர்கள்?"
நான் மௌனமாக இருந்தேன்.
அவர் என்னிடம் இந்த கேள்வி கேட்பதற்கு முக்கிய காரணம், அதற்கு முன், "கதை எழுத, புத்தகம் படிக்க வேண்டிய அவசியம் தேவையில்லை" என்று சொன்ன கருத்து தான். அவருக்கு அது ஆச்சரியமாக இருந்தது. நான் சொன்னது தவறு என்று சில நிமிடங்களிலே புரிந்து கொண்டேன்.
மீண்டும் அவரே ஆரம்பித்தார், உதாரணத்திற்கு ஜெயமோகனின் கிளம்புதல் பதிவில் இவ்வாறு குறிப்பிட்டிருப்பார்
"இன்னும் கொஞ்ச நேரத்தில் சென்னை ஒளிரும் பொற்கம்பளமாக கீழே இறங்கி இறங்கி காணாமல்போகும்"
"இதை நீங்கள் எப்படி எழுதியிருப்பீர்கள்?"
என் நீயூரான்கள் துரிதமாக வார்த்தைகளை தேடின.
"எனது விமானம் புறப்பட்டது என்று எழுதியிருப்பீர்களா?"
இருக்கலாம். இல்லை அதில் சில வார்த்தைகளை சேர்த்து இருக்கலாம். இருந்தாலும் சென்னை ஒளிரும் பொற்கம்பளமாக கீழே இறங்கி காணாமல் போனது என்று நிச்சயம் எழுதியிருக்க முடியாது.
"ஒரு எழுத்தாளனின் மொழி இப்படித்தான் இருக்க வேண்டும்"
மொழியை பயன்படுத்தும் அழகு தான் கதைக்கு உயிர் கொடுக்கிறது. அதை நான் இன்று வரை முயன்றதில்லை. முடியாது என்பது மட்டுமே என் எண்ணம். முடியாது என்று எண்ணுவதை விட முயன்று தோற்றால் ஒரு பெருமை இருக்கும் என்று தோன்றுகிறது.
அதன் பிறகு திண்ணை ராஜாராம் அவர்கள் இல்லத்தில் நடந்த சந்திப்பில், முத்துலிங்கம் அவர்கள் சிறுகதையைப் பற்றி குறிப்பிட்ட சில விஷயங்கள்.
சிறுகதை எழுதுவது நாவல் எழுதுவதை விட மிக கடினமான விஷயம்.
அவர் நேர்காணல் எடுக்க சென்ற உலகின் மிக சிறந்த எழுத்தாளர் ஒருவரின் மேஜையில் ஆறு சிறுகதைகள் பாதி எழுதிய நிலையில் இருந்தனவாம். அவருக்கு ஒரு சிறுகதையை எழுதி முடிக்க குறைந்த பட்சம் ஆறு மாதங்கள் ஆகுமாம்.
பிறகு இரவு திரும்பும் பொழுது மீண்டும் சிறுகதைகளைப் பற்றி கேட்க ஆரம்பித்தேன்.
"ஆங்கிலத்தில் இன்று வரும் சிறுகதைகளுக்கு நிகராக தமிழில் ஒரு கதை கூட வருவதில்லை. ஆங்கிலத்தில் சிறுகதைகள் சுமார் நாற்பது முதல்அறுபது பக்கங்கள் வரை இருக்கின்றன. சமீபத்தில் தமிழில் வந்த மிக சிறந்த சிறுகதை ஊமைச் செந்நாய். அதன் தரத்தை ஒரு முன்னுதாரணமாக வைத்துக் கொள்ளுங்கள்."
ஊமைச் செந்நாய் படித்த பொழுது இது சிறந்த கதை என்பதை நானும் உணர்ந்தேன். படித்து முடித்து ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் ஒரு முறை படித்தேன். அதை மீண்டும் படிக்க வேண்டும்.
இந்த நான்கு ஐந்து மணி நேர உரையாடலில் ஒரு இடத்தில் கூட அவர், "என்னுடைய **** இந்த கதையில்...." என்று குறிப்பிடாதது எனக்கு மிகப் பெரிய ஆச்சரியம்.
அதைப் போலவே அவருடைய சிறுகதை ஒன்றைப் பற்றி உடன் வந்த நண்பர் வேல்முருகன் ஒரு கேள்வியை முன் வைத்தார். ஒரு மகன் தன் தந்தை தன்னிடம் சொன்ன கதையை சொல்வதைப் போல ஒரு கதை. அதில் இவ்வாறு வருகிறது.
"அந்த சந்தையில் தான் நான் முதன்முதலில் அந்த பெண்ணைப் பார்த்தேன்"
இதில் சில வார்த்தைகளில் தவறு இருக்கலாம். "முதன்முதலில் அந்த பெண்ணைப் பார்த்தேன்" என்பது தான் இங்கே விவாதத்திற்கு எடுத்து கொண்ட வாக்கியம். இதில் அந்த பெண் என்பது அவன் தாயை அவர் பார்த்தை தான் குறிப்பிடுகிறது. ஆனால் இது வாசகர்களுக்கு அந்த தந்தை வேறு ஒரு பெண்ணை பார்த்ததாக புரிந்து கொள்ளப்படும் வாய்ப்பு இருப்பதாக வேல்முருகன் சொன்னார். சுஜாதாவைப் போன்ற எழுத்தாளர்கள் இவ்வாறு தவறு செய்ததில்லை என்றும், முத்துலிங்கமும் இவ்வாறு வேறு எங்கும் தவறு செய்ததில்லை என்றும் சொன்னார்.
பாபா இந்த கருத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. முத்துலிங்கம் உடனடியாக ஏற்றுக் கொண்டார். அந்த இடத்தில் அவர் ஒரு நிமிடம் சிந்தித்தாகவும், அதன் பிறகே எழுதியதாகவும் சொன்னார். மீண்டும் ஒரு முறை படித்து அதை மாற்ற ஏதாவது வழி இருந்தால் செய்வதாக சொன்னார். அவருடைய இந்த பெருந்தன்மை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
"அங்கு தான் முதன் முதலில் என் அம்மாவைப் பார்த்தார்" என்று வரலாமா என்று நான் கேட்டேன். அது தவறு என்று இருவரும் சொன்னார்கள். அவர் தந்தை பார்க்கும் போது அவள் அவனுக்கு அன்னை இல்லை. என்னுடைய தவறை உடனடியாக புரிந்து கொண்டேன்.
ஒரு முக்கியமான விஷயத்தை சொல்ல தவறிவிட்டேன். நான் அசோகமித்திரன் கதையைப் பற்றி சொன்னவுடன், "அசோகமித்திரன் கதைகள் படிக்க எளிமையாக இருந்தாலும், ஆழமானவை. அவற்றை ஒரு முறைக்கு மேல் படிக்க வேண்டும். அவரைப் போல எளிமையாகவும், அழுத்தமாகவும் எழுதுவது மிகவும் கடினமென்றும் சொன்னார்"
முத்துலிங்கத்தின் கதைகள் தவற விடக்கூடாதவை என்று சந்திப்பிற்கு வந்த ட்விட்டர் புகழ் இலவசக் கொத்தனாரும் சொன்னார்.
அ.முத்துலிங்கம் அவர்களின் புத்தங்களை இங்கே வாங்கலாம். இங்கேயும் வாங்கலாம்.
சிறுகதைகளை இங்கேயும் வாசிக்கலாம். நானும் வாசித்துவிட்டு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
33 comments:
இங்கேயும் படிக்கலாம்.
அ.முத்துலிங்கம் அவர்களோட சிறுகதைத்தொகுப்பு ஒன்றுக்கு பாலபாரதி லிங்க் கொடுத்திருந்தார். அ. முத்துலிங்கம் கதைகள் - தமிழினி-
ஒரு இரண்டு மூன்று வருடங்கள் முன்பு. கோடைமழை, குங்கிலியக்கலய நாயனார், கடன், ரி அப்படின்னு ஐம்பது கதைகள்.
கொத்தனார் குடுத்த லிங்க் செல்லாது போலருக்கே.
ஐம்பதுன்னு தப்பா சொல்லிட்டேன். அதுல 75 சிறுகதைகள் இருந்தது.
http://noolaham.org/wiki/index.php
போய் அ. முத்துலிங்கம் கதைகள்னு போட்டா PDF கோப்பாவே கிடைக்கும்.
உங்க அனுபவத்தை அழகா சொல்லி இருக்கிங்க. தொடர்ந்து மற்ற இடுகைகளையும் படிக்க ஆவல். வாசிப்பில் ஒரு கட்டத்துக்கு மேல் எழுத்தாளர்களின் மொழி நடைக்காகவே வாசிக்கப் பிடிக்கும். இவங்க ரெண்டு பேருடைய மொழிநடையும் எனக்கு மிகவும் பிடிக்கும். அ.மு அவர்களை 'புன்னகைக்கும் கதை சொல்லி' ன்னு ஜெ.மோ சொல்வதை அவரது படைப்புகளை வாசிப்பவர் அனைவரும் ஒப்புக் கொள்வார்கள்.
சித்ரா
சூப்பரூ... :))
சுட்டிக்கு நன்னி... சிங்கப்பூரூ’லே எல்லா தமிழ் புத்தகங்களும் நூலகத்திலே இருக்கும்... எடுத்து படிக்கனும்... :)
நீண்ட நாட்களுக்குப் பிறகு... :)
தமிழில் எனக்குப்பிடித்த எழுத்தாளர்களின் முதன்மையானவர் அ. முத்துலிங்கம். அவர் மொழியை கையாளும் விதம், சம்பவங்களை விவரிக்கும் நிதானமான தமிழ், மேலதிகமாக அவரது நகைச்சுவை உணர்வு எவராலும் தொட முடியாதது. குறிப்பாக கடன் அட்டை என்ற அவரது கட்டுரையை (கதையை) பலமுறை வாசித்திருக்கிறேன். சமீபத்திய புத்தக சந்தையில்
வியத்தலும் இலமே(ஆங்கில எழுத்தாளர்கள் பற்றிய செவ்வி) மற்றும் உண்மை கலந்த நாட்குறிப்புகள் வாங்கியிருந்தேன்.அவரது எழுத்துக்களை வாசித்தேன் என்று சொல்வதே பெருமையாக இருக்கிறது. அவரை நீ சந்தித்தே இருப்பது குறித்து மகிழ்ச்சி.
மகாராஜாவின் ரயில்பெட்டி
முத்துலிங்கம் சிறுகதைகள்
அங்கே இப்ப என்ன நேரம் ஆகிய ஆகிய மென் நூல்கள் இணையத்தில் கிடைக்கும்.
படிக்க இதமான பதிவு நண்பரே! நல்லா எழுதியிருக்கீங்க!
//முடியாது என்று எண்ணுவதை விட முயன்று தோற்றால் ஒரு பெருமை இருக்கும் என்று தோன்றுகிறது//
செம்ம கருத்து இது!
என்னமோ சொல்றீங்க.. எனக்கு தான் புரிய மாட்டேங்குது..
அப்பாவிடம் கதை கேட்கும் மகிழ்ச்சி அவர் கதைகள் படிக்கும் போது , மிகமிக அருமையான எழுத்தாளர் ,
வெட்டி , ஜெமோ வரப்போவது தெரிந்தாவது சில படைப்புகள் படித்திருக்கலாம்
ரொம்ப நல்ல பதிவு. :)
நான் ஊமை செந்நாய் படித்து பார்க்கிறேன்.
எனது அபிமான எழுத்தாளரை, நண்பரை நீங்கள் நேரில் சந்தித்தது குறித்து மிகவும் மகிழ்ச்சி. இப் பதிவுக்கு நன்றி !
புகைப்படங்களிருந்தால் அதையும் தந்திருக்கலாம். அவர் இந்தியா வந்திருந்தாரா? எங்கு சந்தித்தீர்கள்?
அன்பு வெட்டிஜி...
கலக்குங்க. முடிஞ்சளவுக்கு நிறைய கறந்துடுங்க. அப்புறமா எங்களுக்குச் சொல்லுங்க.
//இலவசக்கொத்தனார் said...
இங்கேயும் படிக்கலாம்.
6:33 PM//
நன்றி கொத்ஸ் :)
சின்ன அம்மிணி... மிக்க நன்றி.
நிச்சயம் பயனுள்ள லிங் கொடுத்திருக்கீங்க.
http://noolaham.org/wiki/index.php/பகுப்பு:முத்துலிங்கம்,_அ.
// Anonymous said...
உங்க அனுபவத்தை அழகா சொல்லி இருக்கிங்க. தொடர்ந்து மற்ற இடுகைகளையும் படிக்க ஆவல். வாசிப்பில் ஒரு கட்டத்துக்கு மேல் எழுத்தாளர்களின் மொழி நடைக்காகவே வாசிக்கப் பிடிக்கும். இவங்க ரெண்டு பேருடைய மொழிநடையும் எனக்கு மிகவும் பிடிக்கும். அ.மு அவர்களை 'புன்னகைக்கும் கதை சொல்லி' ன்னு ஜெ.மோ சொல்வதை அவரது படைப்புகளை வாசிப்பவர் அனைவரும் ஒப்புக் கொள்வார்கள்.
சித்ரா
//
மிக்க நன்றி சித்ரா... அவரைப் பார்த்த பிறகு ஜெ.மோ சொன்னது உண்மை தான் என்று ஒப்புக் கொள்வதில் எந்த தயக்கமும் இல்லை :)
//இராம்/Raam said...
சூப்பரூ... :))
சுட்டிக்கு நன்னி... சிங்கப்பூரூ’லே எல்லா தமிழ் புத்தகங்களும் நூலகத்திலே இருக்கும்... எடுத்து படிக்கனும்... :)
//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :(
இங்க ஆன்லைன்ல தான் படிக்கிறேன். ஆனா படித்த பிறகு சொந்தமாக புத்தகம் வாங்குவேன் :)
வாங்க கதிர்...
//அவரது எழுத்துக்களை வாசித்தேன் என்று சொல்வதே பெருமையாக இருக்கிறது//
இதை தான் எங்களோடு வந்த நண்பர் வேல்முருகனும் சொன்னார். அவர் கதைகளை வாசித்திருக்கிறேன் என்பதே பெருமை என்று.
அவருடைய படைப்புகளைக் குறித்து ஏதாவது பதிவு எழுதினால் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் :)
//VSK said...
படிக்க இதமான பதிவு நண்பரே! நல்லா எழுதியிருக்கீங்க!
//
மிக்க நன்றி டாக்டர் :)
//Divyapriya said...
//முடியாது என்று எண்ணுவதை விட முயன்று தோற்றால் ஒரு பெருமை இருக்கும் என்று தோன்றுகிறது//
செம்ம கருத்து இது!
//
நன்றிம்மா.. இது எனக்கு நானே சொல்லிக் கொண்டது :)
// குறை ஒன்றும் இல்லை !!! said...
என்னமோ சொல்றீங்க.. எனக்கு தான் புரிய மாட்டேங்குது..
//
இதுல என்ன புரியலைனு சொன்னா விளக்க முயல்கிறேன்... ஏன்னா நானே திருவிழாவில் தொலைந்த சிறுவன் போல தான் பார்த்துக் கொண்டிருந்தேன் :)
//மதி.இண்டியா said...
அப்பாவிடம் கதை கேட்கும் மகிழ்ச்சி அவர் கதைகள் படிக்கும் போது , மிகமிக அருமையான எழுத்தாளர் ,
வெட்டி , ஜெமோ வரப்போவது தெரிந்தாவது சில படைப்புகள் படித்திருக்கலாம்
//
மதி, என்ன சொல்றதுனு தெரியலை. ஜெமோ எழுத்து நமக்கு எல்லாம் புரியாது என்ற எண்ணத்திலே காலம் கடத்திவிட்டேன் :(
அவரை சந்தித்த பின்பு ஊமைச் செந்நாய் படித்தேன். நாக்கு, விசும்பு கதைகளை அவர் எனக்கு விவரித்த பிறகு வந்து வாசித்தேன். அதுவும் எனக்கு பிடித்திருந்தது. விசும்பு தொகுப்பு படித்த பிறகு அவருடைய அறிவியல் சிறுகதைகளைப் பற்றி எழுத முயல்கிறேன்.
விஷ்ணுபுரம் பற்றி ஒரு முப்பது நிமிடம் பேசியிருப்பேன். அதையும் படிக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டிருக்கிறது.
ஆனால் அதற்கு முன்பு அசோகமித்திரன் கதைகள் நிறைய படிக்க வேண்டியிருக்கிறது.
// Karthik said...
ரொம்ப நல்ல பதிவு. :)
நான் ஊமை செந்நாய் படித்து பார்க்கிறேன்.
//
தவறாமல் படிக்கவும் கார்த்திக்... எனக்கு மிகவும் பிடித்திருந்தது...
//எம்.ரிஷான் ஷெரீப் said...
எனது அபிமான எழுத்தாளரை, நண்பரை நீங்கள் நேரில் சந்தித்தது குறித்து மிகவும் மகிழ்ச்சி. இப் பதிவுக்கு நன்றி !
//
மிக்க மகிழ்ச்சி ரிஷான்...
//புகைப்படங்களிருந்தால் அதையும் தந்திருக்கலாம். அவர் இந்தியா வந்திருந்தாரா? எங்கு சந்தித்தீர்கள்?
//
காமிராவை மறந்து பாபா காரிலே விட்டுவிட்டேன். நிறைய படங்கள் இருக்கிறது.
இங்கு அமெரிக்காவில் தான் சந்தித்தேன். ஜெமோவை சந்திக்க வந்திருந்தார்.
அவரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் தவற விட்டுவிடாதீர்கள்.
//இரா. வசந்த குமார். said...
அன்பு வெட்டிஜி...
கலக்குங்க. முடிஞ்சளவுக்கு நிறைய கறந்துடுங்க. அப்புறமா எங்களுக்குச் சொல்லுங்க.
//
வசந்த்,
ஜெமோவிடம் ஏதாவது கேட்க வேண்டும் என்று நினைத்தால் தனிமடலிடுங்கள். மீண்டும் சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் கேட்டு சொல்கிறேன்.
அவர் தகவல் சுரங்கம். வெளிப்படையாகவும் பேசுகிறார் :)
ஒரு எழுத்தாளனின் மொழி அலங்காரமாகத்தான் இருக்க வேண்டும் என்று ஜெயமோகன் உங்களிடம் சொல்லியிருக்கிறார். இது மிகவும் தவறான அறிவுரை போல் தோன்றுகிறது. உதாரணமாக, அசோகமித்திரன் அலங்காரமாகவா எழுதுகிறார்? அவர் நல்ல எழுத்தாளர் என்று அறியப்பட்டவர்தானே? எழுதுவதில் ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் ஒவ்வொரு விதமான அணுகுமுறை இருக்கும். அது எழுத எழுதத்தான் அமையும் (அதற்குப் படிப்பதும் முக்கியம்தான்). எழுத்தாளனின் மொழி இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதெல்லாம் பொறுப்பில்லாத அறிவுரை!
//சாத்தான் said...
ஒரு எழுத்தாளனின் மொழி அலங்காரமாகத்தான் இருக்க வேண்டும் என்று ஜெயமோகன் உங்களிடம் சொல்லியிருக்கிறார். இது மிகவும் தவறான அறிவுரை போல் தோன்றுகிறது. உதாரணமாக, அசோகமித்திரன் அலங்காரமாகவா எழுதுகிறார்? அவர் நல்ல எழுத்தாளர் என்று அறியப்பட்டவர்தானே? எழுதுவதில் ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் ஒவ்வொரு விதமான அணுகுமுறை இருக்கும். அது எழுத எழுதத்தான் அமையும் (அதற்குப் படிப்பதும் முக்கியம்தான்). எழுத்தாளனின் மொழி இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதெல்லாம் பொறுப்பில்லாத அறிவுரை!
//
தெய்வமே...
இதுல ஜெயமோகனிடம் பேசியது எதுவுமே சொல்லவில்லையே :(
இது முழுக்க முழுக்க அ.முத்துலிங்கத்துடன் பேசியது. அதிலும் அசோகமித்திரனைப் பற்றிய அவர் கருத்தை சொல்லியிருக்கிறேன் இல்லையா?
மொழி அலங்காரமாக இருக்க தேவையில்லை. ஆனால் ஒரு நல்ல எழுத்தாளனின் மொழி ஒற்றை பரிமாணத்தில் இருக்க கூடாது என்பது அவரிடம் உரையாடியப் பின் என் புரிதல்.
ஜெயமோகன் அதிகமாக பேசியது அசோகமித்திரன் கதைகளைப் பற்றி தான். படிப்பதற்கு எளிமையாக இருந்தாலும் அவை பல பரிமாணங்களை கொண்டவைனு விளக்கி கொண்டு வந்தார். அதை வேற பதிவில் சொல்கிறேன். வேலை பளு அதிகமாகி விட்டது :(
My bad! :-) சரியாகப் படிக்கவில்லை. பெயரை மாற்றிப் படித்துக்கொள்ளுங்கள்!
அன்பு வெட்டிஜி...
கண்டிப்பாகத் தனி மடலிடுகிறேன். மற்றொரு ரசகுல்லா விஷயம். உங்களுக்கு 'சுவாரஸ்ய பதிவர்' விருது கொடுக்கப்பட்டுள்ளது. காண்க ::
http://kaalapayani.blogspot.com/2009/07/blog-post_24.html
சுட்டிக்கு மிக்க நன்றி. ஆஹா நிறைய எழுத்தாளர்களையெல்லாம் நேர்ல சந்திக்கிறீங்க போல...(இங்க காதுல புகை :)) )
உங்களுக்கு நானே மெயில் தட்டனும்ன்னு இருந்தேன். அந்த மர்மதேசம் லிங்க்குக்கு மிக்க நன்றி. நானும் அதுல சில விட்டுப்போன சீரியல்களைப் பார்க்கனும்ன்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன். இப்போ பார்த்துக்கிட்டு இருக்கேன். மிக்க நன்றி வெட்டி.
//அந்த மர்மதேசம் லிங்க்குக்கு மிக்க நன்றி. நானும் அதுல சில விட்டுப்போன சீரியல்களைப் பார்க்கனும்ன்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன். இப்போ பார்த்துக்கிட்டு இருக்கேன். மிக்க நன்றி வெட்டி.//
Could you please publish the link here. thanks in advance.
thyagarajan
Post a Comment