எப்படி பத்து வருஷம் சாப்ட்வேர்ல வேலை செய்துட்டு, அதுவும் அமெரிக்காவுல வேலை செய்துட்டு இப்படி சிவில் சர்வீஸ் தேர்வு எழுத வந்தீங்கனு பல பேர் கேட்டுருக்காங்க. ஏதாவது ஒரு காரணத்தை அந்த நேரத்துக்கு தகுந்த மாதிரி சொல்லிடுவேன். உண்மை என்னனா...
சின்ன வயசுல இருந்தே சிவில் சர்வீஸ் மேல ஒரு ஆசை இருந்தது. ஆனா அந்த எண்ணம் அப்படியே போயிடுச்சு. 2010ல நியூ யார்க்ல வேலை. நியூ ஜெர்ஸில தங்கி இருந்தேன். அப்ப திடீர்னு வாய் முழுக்க புண் வந்து பேசக்கூட முடியாத அளவுக்கு ஆகிடுச்சு. நானும் பேஸ்ட் எல்லாம் மாத்தி பார்த்தேன். ஆனா சரி ஆகல. எந்த அளவுக்குக் கொடுமையா இருக்கும்னா வாயைத் திறந்து பேசவோ சாப்பிடவோ முடியாத அளவுக்கு மோசமான வலி. வேற வழியில்லாமல் மருத்தவர்கிட்ட போய் காட்டினப்ப, இரத்த பரிசோதனைல வைட்டமின் பி குறைவா இருக்குனு சொன்னார். ஒரு மாசத்துக்கு தினமும் ஊசி. அதுக்கு அப்பறமும் மாசத்துக்கு ஒரு தடவை ஊசி.
அந்த சமயத்துல தான் கடைசியா எப்ப Full body check up செய்து பார்த்திங்கனு கேட்டார். நான் அப்படி எதுவும் இதுவரை செய்ததில்லைனு சொன்ன உடனே, எதுக்கும் ஒரு தடவை செய்திடுங்கனு சொன்னார். நானும் இன்சூரன்ஸ் இருக்கேனு ஒத்துக்கிட்டேன். அப்ப ஈசிஜி எடுத்து பார்த்தாங்க. அந்த நர்ஸுக்கு ஏதோ சந்தேகம். ஒரு தடவைக்கு ரெண்டு தடவை எடுத்து பார்த்தாங்க. டாக்டரைக் கூப்பிட்டு வந்து ஏதோ காட்டினாங்க. ஏதோ அவுங்களுக்குள்ளயே பேசிக்கிட்டாங்க. அப்பறம் டாக்டர் உங்களுக்கு ஏற்கனவே ஹார்ட் அட்டாக் ஏதாவது வந்திருக்கா?னு கேட்டார். எனக்கு பயங்கர ஷாக். அப்படி எதுவும் இல்லையேனு சொன்னேன். எப்பவாது உங்களுக்கு சின்னதா நெஞ்சு வலி மாதிரி வந்திருக்கா? நல்லா யோசிச்சி பாருங்க. Report looks like you had an attackனு சொன்னார்.
எனக்கு அந்த மாதிரி எதுவும் ஞாபகமில்லை. ஒரு வேளை நமக்கு ஏதாவது சின்னதா வலி இருந்திருக்குமோனு ஒரு பயம் வந்துடுச்சு. சரி, இதை அடுத்து எப்படி செக் பண்றதுனு அவர்ட கேட்டதும், You need to get an appointment with Cardiologistனு சொல்லிட்டார். இப்ப தான் அடுத்த பிரச்சனை. கார்டியாலஜிஸ்ட் தேடினா அடுத்த ஒரு மாசத்துக்கு அப்பாயிண்ட்மெண்ட் இல்லை. நான் அந்த சமயத்துல நண்பர் ஒருவரோட தங்கி இருந்தேன். மனைவி, பாப்பா எல்லாம் இந்தியால இருந்தாங்க. நிஜமாகவே இப்ப மூச்சு பாரம் இருக்கற மாதிரி உணர ஆரம்பிச்சிட்டேன். கூட இருந்த நண்பர் தவிர யார்கிட்டயும் விஷயத்தைச் சொல்லல. உயிர் பயம்னா என்னனு அப்பதான் தோண ஆரம்பிச்சிது. நிஜமாகவே ஹார்ட் அட்டாக் வந்திருக்கு. ஆனா நமக்கு தெரியலை. மொத்தம் எத்தனை தடவை வரலாம், எவ்வளவு காலத்துக்குள்ள வரும்னு தீவிரமா இண்டர்நெட்ல தேட ஆரம்பித்தேன். எதுவும் நல்லதா இல்லை.
அந்த ஒரு மாசம் முழுக்க மரணம் பற்றிய சிந்தனை தான். அப்ப தான் சரி, நாம இதுவரைக்கும் என்ன வாழ்ந்திருக்கோம்னு யோசிக்க ஆரம்பித்தேன். பிடிச்ச விஷயம்னு எதுவும் பெருசா பண்ணதில்லை. இந்த வேலைக்கூட பிடிச்சி பண்ணல. நிறைய காசு வருதுனு தான் செய்யறோம். எல்லாரும் அப்படி தானே. யாராவது மகிழ்ச்சியா வேலை செய்து ஆரோக்கியமா இருக்காங்களானு யோசிக்க ஆரம்பித்தேன். அப்ப தான் கலைஞர் இந்த வயசுலயும் இவ்வளவு ஆக்டிவா இருக்காரே. எவ்வளவு ஸ்டெரஸ் இருக்கும். ஆனா இவ்வளவு திடமா இருக்காரேனு தோணுச்சு. அதாவது பதவில இருக்கும் போது ஆக்டிவா இருக்கறது வேற. ஆனா எப்பவும் இப்படி ஆக்டிவா இருந்தா அவர் அந்த வேலையை எவ்வளவு ரசிச்சி செய்யறார்னு தோணுச்சு. அவர் உடல் ஆகுற ஸ்ட்ரெஸ்ஸ அவர் மூளை ஏத்துக்குது, அதே மாதிரி அவர் மூளைல இருக்க ஸ்ட்ரெஸ்ஸ அவர் உடல் ஏத்துக்குது. Both are in sync. இது எல்லாம் எனக்குள்ள எழுந்த சிந்தனைகள் தானே தவிர. இது முழுக்க தவறாகவும் இருக்கலாம். ஆனா பிடிச்ச வேலை செய்தா திருப்தியா இருக்கலாம்னு தோண ஆரம்பிச்சிது.
ஒரு வழியா ஒரு மாதம் கழித்து கார்டியாலஜிஸ்டைப் பார்த்தேன். பல வகையான டெஸ்ட் எடுத்துட்டு, ஒரு பிரச்சனையும் இல்லை. ரிப்போர்ட் தப்புனு சொல்லிட்டார். எனக்கு இப்ப நம்பிக்கை இல்லை. மறுபடியும் டெஸ்ட் பண்ணுங்கனு விடாம சொல்ல, அட்வான்ஸ்ட் டெஸ்ட் எல்லாம் எடுத்து ஒரு பிரச்சனையும் இல்லைனு சொல்லிட்டார். அவரோட நடந்த உரையாடல்கூட ரொம்ப சுவாரஸ்யமானது தான். முதல்ல த்ரெட்மில்ல ஓட சொல்லி டெஸ்ட் எடுத்து ஒண்ணும் பிரச்சனை இல்லைனு சொன்னார். நான் கேட்காம அட்வான்ஸ்ட் டெஸ்ட் எடுக்க சொன்னேன். எனக்கு நிஜமாகவே நெஞ்சு வலிக்குது. நைட் தூக்கம் வர மாட்டீது, என் வேலையும் ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸான வேலை தான் அப்படினு. என்ன வேலைனு கேட்டார். சாப்ட்வேர் இஞ்சினியர், ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸான வேலைனு சொன்னேன். ஸ்ட்ரெஸ்ஸான வேலைனா எப்படி, நீங்க ஒரு நொடில தப்பா ஏதாவது முடிவெடுத்தா ஏதாவது மனித உயிர்க்கு பாதிப்பு வருமா?னு கேட்டார். எனக்கு செம ஷாக். உங்களுக்கு ஸ்ட்ரெஸ்ஸான வேலைனா என்னனு புரியல. உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. படுக்கும் பொது மூச்சு அடைக்குற மாதிரி இருந்தா கடினமான பரப்புல தூங்குங்கனு சொல்லிட்டார். அதன் பிறகு ஏதோ செத்து பிழைச்ச மாதிரி இருந்தது.
அதற்கு பிறகு தான் வீட்ல மனைவிக்கு இந்த விஷயத்தைச் சொன்னேன். அதுவும் எந்த பிரச்சனையும் இனிமே இல்லைனு. அதன் பிறகு நிறைய யோசிச்சேன். அந்த சமயத்துல நண்பர் (தமிழோவியம்) கணேஷ் சந்திரா, மதனோட வந்தார்கள் வென்றார்கள் ஆடியோ கொடுத்திருந்தார். அதுல பாபர் என்னோட ஃபேவரைட். பதினோரு வயதுல மன்னர். பனிரெண்டு வயசுல முதல் போர். பதிமூன்று வயதில் ஃபர்கானா மேல படையெடுப்பு. தொடர் தோல்வி. அதிலிருந்து மீண்டெழுதல்னு அப்படி ஒரு இன்ஸ்பிரேஷன். நாம எல்லாம் ஏன் இப்படி வெட்டியா இருக்கோம்னு அதே கேள்வி.
ஏதோ ஒரு வழில மக்களோட நேரடி தொடர்புல இருக்கற மாதிரி வேலை தான் நமக்கு செட் ஆகும்னு தோணுச்சு. I like talking to people and solving their issues. அப்ப தான் ரேடியன் ஐஏஎஸ் அகடமி ஆன்லைன்ல க்ளாஸ் இருக்குனு விளம்பரப்படுத்தி இருந்தாங்க. ஆனா அது TNPSC Group 1, Group 2 வகுப்புகள். அங்க இருந்தே ஆன்லைன் வகுப்புல சேர்ந்தேன். விருப்பப்பட்டு படிச்சா எல்லாமே சுலபமா இருக்கற மாதிரி இருந்தது. இப்படி எதுவும் தெரியாத இருந்திருக்கோம், ஆனா இவ்வளவு விஷயத்தையும் நம்மால புரிஞ்சிக்க முடியுதுனு சந்தோஷமாகவும் இருந்தது. History, Geography, Polity (Civics) இப்படி ஒவ்வொரு பாடமும் ரசிச்சி படிக்கற மாதிரி இருந்தது. இது நடந்தது 2012 ஏப்ரல், மே மாதங்களில். தினமும் காலைல கார்ல போகும் போது ஒரு தடவையும், சாயந்திரம் ஒரு தடவையும் இந்த வீடீயோக்களைப் பார்க்கத் துவங்கினேன். என் மேலயே எனக்கு நம்பிக்கை வர துவங்கியது அந்த நேரத்தில் தான்.
2012 குரூப் 2 பரிட்சைக்கு அமெரிக்காவில் இருந்தே விண்ணப்பத்திருந்தேன். ஆகஸ்ட் மாதம் ஒரு வழியாக இந்தியா வந்துவிட்டோம். குரூப் 2 பரிட்சை சுலபமாக தேர்வானேன். ஆனா எந்த வேலையும் தேர்ந்தெடுக்கல. என்னோட எண்ணம் Group I Deputy Collector தான். ஆனா அந்த வருஷம் Group Iல மொத்தமே 25 காலியிடங்கள் தான். அதுவும் Deputy Collector இரண்டு தான். அந்த சமயத்துல தான் மருத்துவர் புருனோவிடம் பேசினேன். TNPSCக்கும் UPSCக்கும் பெரிய வித்யாசம் எல்லாம் இல்லை. கிட்ட திட்ட ரெண்டும் ஒன்று தான். அப்படினு நம்பிக்கை கொடுத்தார். அதன் பிறகு UPSC தேர்வுக்கு தயார் செய்ய துவங்கினேன். This is the gist of the story :)
7 comments:
இது தான் அந்த இரகசியமா? அருமை பாலாஜி!
Did you achieve your goal?
why this much gap..i hv kept on cheching for updates. atlast you hv posted after 5 years..i like your way of writting.. especially your school studies article gave a inspiration to me.. pls keep on posting..
குமரன்,
நல்லா இருக்கீங்களா?
ஆமாம். இதுதான் அதுக்கான காரணம்.
//பொன்.பாரதிராஜா said...
Did you achieve your goal?//
Yes. Cleared the exam.
//Abirami said...
why this much gap..i hv kept on cheching for updates. atlast you hv posted after 5 years..i like your way of writting.. especially your school studies article gave a inspiration to me.. pls keep on posting..//
Thanks Abirami.
Was busy with the work. Also most of the people have moved to other social media platforms like Twitter and Facebook. I couldnt write much in those platforms because of there is not much of anonymity there.
பதிவு அருமை சொல்லி சென்றவிதம் அருமை... தொடர்ந்து எழுதுங்கள்
Post a Comment