தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Wednesday, February 10, 2010

வாழையடி வாழை

அந்த வீடு தெருவின் கடைசியில் இருந்தது. சிமெண்ட் ரோடிலிருந்து ஒரு அடி உள்வாங்கியிருந்து. காப்பி கலர் பெயிண்ட் அடித்த க்ரில் கதவு ஆள் உயரம் இருந்தது. நீல நிற சுண்ணாம்பு. அடையாளம் சரியாக இருப்பதை உணர்ந்து, வெளியே இருந்து குரல் கொடுத்தாள் சாந்தி. அவள் அணிந்திருந்த அந்த பூப்போட்ட பாவடையில் பூக்கள் உதிர்ந்திருந்தன.


“அக்கா, அக்கா”


உள்ளே ஓடிக்கொண்டிருந்த தொலைக்காட்சியின் சத்தம் இவளுக்கு நன்றாக கேட்டது. அவளுடைய குரல் உள்ளிருப்பவர்களுக்கு கேட்க வாய்ப்புகள் இல்லை என்பதை புரிந்து கொண்டாள்.


க்ரில் கதவை உள்ளே தள்ளிவிட்டு, போர்டிக்கோவிற்குள் சென்றாள். காலிங் பெல்லை அழுத்திய இரண்டாவது நிமிடத்தில் வெல்கம் என்று எழுதியிருந்த ஸ்கிரினை திறந்து வந்த அந்த அம்மாவிற்கு வயது நாற்பத்தைந்து இருக்கலாம்.


“என்னம்மா வேணும் உனக்கு?”


“என் பேரு சாந்திக்கா. வீட்டு வேலைக்கு ஆள் வேணும்னு ரவி அண்ணாக்கிட்ட சொல்லியிருந்தீங்களாம். அவர் தான் அனுப்பனார்” சொல்லிவிட்டு அவளுடைய முகத்தை ஏக்கமாக பார்த்தாள்.


“உன் வீடு எங்கமா இருக்கு?”


“ரெண்டு தெரு தள்ளி இருக்குற அந்த ஆட்டோ ஸ்டாண்டு பின்னாடி இருக்குக்கா”


“படிக்கறியாமா? வீட்ல பெரியவங்க யாரும் இல்லையா?”


“பத்தாவது படிக்கறேன்கா. அப்பா பஸ் ஸ்டாண்ட்ல லோடு எறக்குதுக்கா. அம்மா வீட்டு வேலை பாக்குதுக்கா. ஒரு அக்கா பதினொண்ணாவது படிக்குதுக்கா. ரெண்டு தங்கச்சி இருக்குங்கக்கா”


“இங்க வேலை அதிகம் இல்லைமா. உங்க அம்மாவை வேணும்னா வர சொல்லேன்”


“அம்மா ஏற்கனவே மூணு வீட்ல வேலைப் பாக்குதுங்கக்கா. காலைல ஆறு மணிக்கு போச்சுனா பத்து மணிக்கு தான் வரும். நீங்க காலைல ஏழு மணிக்கு வரணும்னு சொன்னீங்கனு ரவி அண்ணா சொல்லுச்சு. அதான் நான் வந்தேன்க்கா”


“வயசுப் பொண்ண வேலைக்கு வெச்சா ஐயா திட்டுவாருனு பாக்கறேன். வெறும் பாத்திரம் வெளக்குற வேலை தான். துணி தொவைக்கறதுக்கு எல்லாம் மெஷின் இருக்கு. என் பையன் வாங்கி கொடுத்திருக்கான். ரெண்டே பேர் தான். வந்தா அர மணி நேரத்துல முடிஞ்சிடும். மாசம் எரநூறு ரூபா. உங்க அம்மா வர முடியுமானு கேட்டு பாரும்மா”


“பத்து மணிக்கப்பறம்னா பரவாயில்லையாக்கா?”


”பத்து மணிக்கு அப்பறமா? வீட்ல சமையல் எல்லாம் செய்ய வேணாமா? ஏழு மணிக்குள்ள எப்ப வந்தாலும் சரி. கேட்டு சொல்லு”


அதற்கு பிறகு என்ன பேசுவதென்று சாந்திக்கு தெரியவில்லை. வார்த்தைகளை தேடினாள். எதுவும் கிடைக்கவில்லை. அவளுடைய ஏமாற்றம் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.


“சரிக்கா”


முதல் வேலைக்கான இண்டர்வியூவில் தோற்ற சோகம் அவளுடைய நடையில் தெரிந்தது. இரண்டு பேர் இருக்கும் வீட்டில் பாத்திரம் விளக்க மாசம் இருநூறு ரூபாய் அதிகம் என்று அவளுக்கு தெரியும். அவளுடைய அம்மா வேலை செய்யும் டாக்டர் வீட்டில் நானூறு ரூபாயிற்கு துணி துவைத்து, வீட்டை கூட்டி, வெள்ளி மற்றும் விரத நாட்களில் வீட்டை கழுவி, பாத்திரம் விளக்கி, சமையலுக்கும் உதவ வேண்டும். ஏதாவது உடம்பிற்கு முடியவில்லை என்றால் கலர் கலராக மாத்திரை தருவார்கள். வீட்டு வேலை பாதிப்பது அவர்களுக்கு பிடிக்காது.


ஒரு வாரம் சென்ற நிலையில் எலக்ட்ரீஷியன் ரவி அண்ணாவின் குரல் வெளியே கேட்டது. சாந்தியின் அம்மாவிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தார். இவளைப் பற்றி தான் பேசுகிறார்கள் என்று தெரிந்தவுடன் வெளியே சென்றாள்.


“அதெல்லாம் ஏழு மணிக்குள்ள வந்துடுவா. சொல்லிடு” அவளுடைய அம்மா சொல்லிக் கொண்டிருந்தாள். முதல் வேலை கிடைத்துவிட்டது.


பழகிய வேலைதான் என்றாலும் பழகாத இடம் என்பதால் பதட்டத்துடன் சென்றாள்.


“வாம்மா. நான் மொதல்ல ஐயாக்கிட்ட சொல்லும் போது வேணாம்னு தான் சொன்னாரு. அப்பறம் படிக்கிற பொண்ணு, மாசம் இரநூறு ரூபாய் கிடைச்சா படிப்புக்கு உதவும்னு நான் சொன்ன உடனே சரினு சொல்லிட்டாரு”


என்ன சொல்வதென்று தெரியாமல் மெலிதாக சிரித்து வைத்தாள்.


“இங்க பாரும்மா. வேலை அதிகம் இல்ல. பாத்திரம் மட்டும் வெளக்கினா போதும். ரெண்டே பேர் தான். சரியா?”


“சரிக்கா”


“ஏழு மணிக்கு வந்தா அர மணி நேரத்துல ஓடிடலாம். முடிஞ்சா சாயந்திரம் ஆறு மணிக்கு ஒரு நடை வந்துட்டு போ. வேலை பாதியா குறைஞ்சிடும். சரியா?”


“சரிக்கா”இரண்டு பேருக்கு சமையலுக்கு பயன்படும் பாத்திரத்திற்கும் நான்கு பேருக்கு சமையலுக்கு தேவைப்படும் பாத்திரத்திற்கும் வித்தியாசம் எதுவுமில்லை என்பதை முதல் நாளே புரிந்து கொண்டாள். தினமும் காலை ஏழு மணிக்கு முன்பு வந்து எட்டு மணிக்குள் சென்று கொண்டிருந்தாள். பூஜை விளக்கில் எண்ணெய் சரியாக போகவில்லை, குக்கரில் அரிசி ஒட்டிக் கொண்டிருந்தது என்ற இரண்டு கம்ப்ளைண்ட் மட்டும் தான் ஒரு வாரத்தில் வந்திருந்தது.


ஒரு வாரம் சென்றிருந்த நிலையில், வேலை முடித்து வீட்டுக்கு கிளம்பி கொண்டிருந்தாள்.


“சாந்தி கொஞ்சம் இரு. ஒரு வாய் காபி குடிச்சிட்டு போ”


“இல்லைங்கக்கா” தயங்கினாள்.


“உனக்குனு தனியாவாப் போட போறேன். இரு குடிச்சிட்டு போகலாம்”


வாசளருகே தயங்கி நின்று கொண்டிருந்தாள். எங்கே நிற்பது என்று அவளுக்கு தெரியவில்லை. ஹாலில் பெரிய எல்.சி.டி டீவி இருந்தது. அவ்வளவு பெரிய டீவியை அவள் அதற்கு முன்பு பார்த்ததில்லை. ஓடாத டீவியைக்கூட பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல இருந்தது.


”அப்படியே நிக்கற நேரத்துல, அந்த மூலையில தொடப்பம் இருக்கு பாரு. அதை எடுத்து வீட்டைப் பெருக்கிடுமா. கால் முட்டி எல்லாம் வலிக்குது. அங்கங்க ஆம்பளைங்க சமையலே செய்யறாங்க. இங்க எல்லா வேலையும் நானே செய்ய வேண்டியதா இருக்கு. பொண்டாட்டிக்கு முடியலையே, அவளுக்கும் வயசாச்சே, கொஞ்சமாவது உதவணும்னு இந்த ஆம்பிளைக்கு தோணுதா”


வீட்டம்மா புலம்பல் நிற்பதற்கும் இவள் பெருக்கி முடிப்பதற்கும் சரியாக இருந்தது. பித்தளை டம்ளரில் காப்பி அவளுக்கு தயாராக இருந்தது. அடுத்த நாள் அது டீயாக மாறியிருந்தது. அதன் பிறகு அவளுக்கு தினமும் டீ கிடைத்தது. வெள்ளிக்கிழமைகளிலும் விரத நாட்களிலும் டிபன் கிடைத்தது. அதற்கு காத்திருக்கும் நேரத்தில், வீட்டை தண்ணீர் ஊற்றி கழுவ வேண்டும்.


வேலைக்கு சேர்ந்து நான்கு மாதமாகியிருந்தது.


“சாந்தி, முழாண்டு லீவுக்கு என் பொண்ணும், பேரப் பசங்களும் வரப் போறாங்க. துணி எல்லாம் அதிகமா தொவைக்க வேண்டியது இருக்கும். மெஷின்ல ரெண்டு வாட்டி போட்டா கரண்ட் பில்லு அதிகமாகும், தேவையில்லாம கவர்மெண்ட்க்கு காசு போகும். அதுக்கு பதிலா அது இல்லாதவங்களுக்கு போச்சுனா நல்லது. உங்க அம்மாவை வேணா பதினோரு மணிக்கு அப்பறம் வர சொல்லேன். சேர்த்து நானூரு ரூபாயா வாங்கிக்கலாம்”


“நானே தொவைக்கறேன்கா. எனக்கும் முழாண்டு லீவு தான். வீட்ல சும்மா தான் இருக்கேன்”


“அதுவும் சரிதான். உன் வயசுக்கெல்லாம் நான் கைல பச்சப்புள்ளயோட குடும்பமே நடத்தினேன்”


அவள் நினைத்ததைப் போல துணி துவைப்பது அவ்வளவு சுலபமாக இல்லை. அந்த வீட்டம்மாவின் பேரப் பிள்ளைகள் கிஷ்கிந்தாவிலிருந்து வந்திருப்பார்கள் போல. ஒரு நாளைக்கு இரண்டு மூன்று துணிகள் மாற்றினார்கள். அனைத்தையும் பாரபட்சம் பார்க்காமல் அழுக்காக்கினர். அதை விட அவர்கள் பேசிய ஆங்கிலம் அவளுக்கு சுத்தமாக புரியாதது தான் கஷ்டமாக இருந்தது. அந்த வீட்டம்மாவிற்கும் புரியவில்லை என்பதில் ஒரு திருப்தி. பதினைந்து நாட்களில் அவர்கள் கிளம்பிவிட்டார்கள். நானூறு முன்னூறாகியதில் அவளுக்கு வருத்தம் இல்லை.


”என்ன சாந்தி பத்தாவது பாஸ் பண்ணதுக்கு சாக்லேட் எல்லாம் இல்லையா?”


“சாயந்தரம் வாங்கி தரேனு அம்மா சொன்னாங்கக்கா”


“சரி, மார்க் என்ன?”


“முன்னூத்தி எழுவத்தி எட்டுக்கா”


“என் பையன் நானுத்தி அம்பத்து நாலு வாங்கினான். நீயும் தான் படிக்கிறேன் படிக்கிறேனு சாயந்தரம் ஆறு மணிக்கு எல்லாம் ஓடற. என்னத்த படிச்சியோ தெரியல”


வீட்டம்மாவின் பையன் இதுவரை சாப்பிட்டத் தட்டை நகர்த்தியது கூட இல்லை என்பது அந்த வீட்டம்மாவைத் தவிர யாருக்கும் தெரியாது.


”இந்தா சாந்தி முன்னூறு ரூபா. காசு செலவுப் பண்ணாம புக் வாங்கிக்கோ. ஒழுங்கா படி. புரியுதா?”


“அக்கா எப்படி கேக்கறதுனு தெரியல. இந்த வருஷம் பள்ளிக்கூடத்துக்கு பாவடை தாவணிக் கட்டிட்டு போகணும். புது யூனிஃபார்ம் தைக்கணும். அம்மா வாங்கன காசு அக்காக்கு புக் வாங்கறதுக்கு சரியா போச்சு. ஒரு இரநூறு ரூபா சேர்த்து கொடுத்தா கொஞ்சம் பரவாலயா இருக்கும். சம்பளத்துல அம்பது அம்பது ரூபாயா பிடிச்சிக்கோங்கக்கா”


“இரநூறு ருபாயா? அவ்வளவு பணம் இப்ப இல்லையே. நான் ஐயாகிட்ட கேட்டுட்டு நாளைக்கு சொல்றேன். ஆனா இந்த அம்பது அம்பதா பிடிக்கறது எல்லாம் வேணாம். அடுத்த மாசத்துல மொத்தமா பிடிச்சிக்குவேன். சரியா?”


“சரிக்கா”


எப்படியோ பணம் கிடைத்தால் போதும் என்று நினைத்துக் கொண்டாள்.


பத்து நாட்கள் சென்றிருந்த நிலையில்,


“என்ன சாந்தி, இந்த நேரத்துல வந்திருக்க?”


“பள்ளிக்கூடத்துல இருந்து வரேன்கா” அவள் கண்கள் கலங்கியிருந்தன.


“என்ன ஆச்சு? டல்லா இருக்க”


பேச ஆரம்பிப்பதற்குள் அழ ஆரம்பித்தாள்.


“என்ன ஆச்சு. அழாத சொல்லு”


“போன வருஷமே பள்ளிக்கூடத்துல யூனிஃபார்ம் கலர் மாத்தறேனு சொன்னாங்க. அப்பறம் மாத்தல. இப்ப போனா கலர் மாத்திட்டேனு சொல்றாங்க. நிறையப் பேர் துணி வாங்கி தைச்சிட்டோம்னு சொன்னோம். போன வருஷமே மாத்தறோம்னு சொன்னோம் இல்ல. அதை விசாரிக்காம நீங்க எப்படி எடுக்கலாம்னு திட்டினாங்கக்கா. எல்லாரும் சொல்லியும் கேக்க முடியாதுனு சொல்லிட்டாங்கக்கா. நான் ரெண்டு செட்டு தச்சிட்டேன்கா” திணறி திணறி சொல்லி முடித்தாள்.


“படிக்கிற பொண்ணு இப்படியா இருப்ப? என்ன கலர் யூனிஃபார்ம்னு விசாரிக்காமலா தைப்பாங்க?”


”இல்லைங்கக்கா. அதைப் பத்தி எதுவுமே சொல்லலைங்கக்கா. மார்க் ஷீட் வாங்க போகும் போது கூட எதுவும் சொல்லலை. இப்ப தான் அட்மிஷன் போடும் போது சொல்றாங்க. இப்ப என்ன பண்றதுனு தெரியலைங்கக்கா”


“உனக்கு போன தடவ சேர்த்து காசு கொடுத்தே நான் ஐயாகிட்ட திட்டு வாங்கினேன். இதை சொன்னா எனக்கு திட்டு விழும். படிப்புல அக்கரை இல்லாத பொண்ணுக்கு எல்லாம் எதுக்கு காசு கொடுக்கறனு”


என்ன பேசுவதென்று தெரியாமல் அங்கிருந்து கிளம்பினாள்.


அடுத்த நாள் வழக்கம் போல் ஏழு மணிக்குள் சென்றுவிட்டாள். அவள் கண்கள் வீங்கியிருந்தன. வீட்டம்மா எதுவும் விசாரிக்கவில்லை. அவளே பேச ஆரம்பித்தாள்.


“அக்கா, உங்களுக்கு தெரிஞ்சவங்க யாருக்காவது வீட்டு வேலைக்கு ஆள் வேணும்னா சொல்லுங்கக்கா”


“ஏன்மா படிப்பை நிறுத்திட்டயா?”


“இல்லைக்கா. நேத்து ராத்திரி வீட்ல ஒரே சண்டைங்கக்கா. என்னை ஒரு வருஷம் படிப்பை நிறுத்த சொல்லி அப்பா சொல்லிடுச்சி. எனக்கு தான் தொடர்ந்து படிக்கணும்னு ஆசையா இருக்குக்கா. நான் அழுததைப் பார்த்துட்டு என் தங்கச்சி ரெண்டு பேரும் வீட்டு வேலைக்கு போறேனு சொல்லிட்டாங்கக்கா. அவுங்களுக்கும் என்ன மாதிரியே வேல கிடைச்சா எப்படியும் மொத மாசம் சம்பளம் வாங்கிட்டு பள்ளிக்கூடம் போயிடலாம்கா. இல்லைனா ஒரு வருஷம் வீட்ல தான். அப்பறமும் படிக்க முடியுமானு தெரியல. உங்களுக்கு தெரிஞ்சி ஏதாவது வீடு இருந்தா சொல்லுங்கக்கா. அவுங்களும் என்னை மாதிரியே நல்லா பாத்திரம் வெளக்குவாங்கக்கா”


.........................


இந்த கதை ‘உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு’ நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது

14 comments:

குட்டிபிசாசு said...

intha varudaththin muthal idugai. vazhththukkal.

கார்த்தி said...

Enna Vetti post'ku comment'e podalaya... :) sir appo appo veliya vaanga sir.... Aani athihamo?

கார்த்தி said...

Also.. 2010'la first post hmmm :)

கார்த்தி said...

irunthaalum y Repeat...

வெட்டிப்பயல் said...

Thanks for all your comments...

I dont have net access here. I am travelling back next weekend. Will start writing after that

Sridharan said...

Welcome back.....

Sen22 said...

Nalla irunnthathu Sirukathai..

:((Senthil,
Bangalore

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

சமீபத்தில் தான் உங்கள் வலை பதிவை பார்த்தேன். சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் நல்ல எழுத்து நடை. இந்த உரையாடல் கதை மிகவும் நன்றாக உள்ளது. தொடர்ந்து எழுதவும்

அறிவு GV said...

மிகவும் அருமை...! நீண்ட நாட்கள் கழித்து உங்கள் பதிவு/கதை படிப்பதில் மிகவும் மகிழ்ச்சி. பாப்பா எப்படி இருக்கிறாள்...?
இனி தொடர்ந்து எழுதுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்..! :) போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்...!

Priya said...

இதுதான் முதல்முறை உங்கள் வலைப்பக்கத்திற்கு வ‌ருவது. படித்தேன், படிச்சு அனுபவித்தேன், ஆராயவில்லை:-)

விக்னேஷ்வரி said...

ரொம்ப முன்னாடியே இந்தக் கதை வாசித்த நினைவு. நல்ல, யதார்த்தக் கதை.

saybaskar said...

baski said...

bajji i'm reading your blog after a long long time...a good social awareness story ! and you are a good story teller

saybaskar said...

Bajji.....you are a good story teller.

Anonymous said...

முதலாலியம்மாவின் பாத்திரப்படைப்பு மிகவும் இயல்பாக இருந்தது.
எங்கேயோப் பழகிய குணச்சித்திரம். அருமை.