தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Saturday, August 01, 2009

சமீபத்தில் படித்த புத்தகங்கள்!!!

புத்தகங்களை விமர்சிக்க எனக்குத் தெரியாது என்பதால் இது வெறும் வாசிப்பனுபவம் மட்டுமே.

வேர்பற்று - இந்திரா பார்த்தசாரதி
இந்திய சுதந்திர போராட்டத்தின் இறுதி கட்டத்தில் துவங்குகிறது கதை. சாதியத்தை வெறுக்கும் ஒரு பிராமண இளைஞனை (கேசவன்) மையமாக கொண்டு எழுதப்பட்டது. நாவலின் கதையை சொல்லி அதை வாசிக்கும் அனுபவத்தை கெடுக்க விரும்பவில்லை. மேலும் புத்தகம் தற்பொழுது என் கையில் இல்லாததால் சரியான வாக்கியங்களை எடுத்து தர

இயலவில்லை. நினைவில் இருந்து எழுதுகிறேன்.

எனக்கு இந்த நாவலில் பிடித்த சில விஷயங்களை மட்டும் சொல்லி விடுகிறேன்.

சாதி பற்று, சாதி எதிர்ப்பு என்று இரு தரப்பு மக்களையும் விட மனசாட்சிக்கு மட்டுமே கட்டுப்படும் கேசவனுடைய தந்தை நம் மனதில் உயர்ந்து நிற்கிறார்.

ஒரு பெண் அருகில் இருக்கும் போது ஆண்கள் எப்படியெல்லாம் தங்களை வெளிப்படுத்தி கொள்ள முயல்வார்கள் என்பதை அழகாக காட்டியிருப்பார் இ.பா. இதை நான் பல முறை அனுபவத்திருக்கிறேன். சாதாரணமாக நான்கு ஆண்கள் பேசிக் கொள்ளும் போது நடக்கும் உரையாடலில் ஒரு பெண் வந்துவிட்டால், அது சதுரங்க ஆட்டமாக மாறிவிடும். ஒவ்வொரு உரையாடலும் ஒரு சதுரங்க ஆட்ட காய் நகர்த்தலைப் போல இருக்கும். இது இந்நாவலில் அப்பட்டமாக தெரிந்தது. ஆனால் இந்த சதுரங்க ஆட்டத்தில் சில காய்களை அந்த பெண்ணே வெட்டுவது எனக்கு பாலச்சந்தர்தனமாகப் பட்டது. இது என் எண்ணம் மட்டுமே.

கேசவன் ஆதாயத்திற்கு (சைக்கிளுக்காக) கொள்கையை விட்டுக் கொடுத்துவிட்டு, ஏங்கல்ஸை வைத்து நியாயப்படுத்த முயலும் போது, “ஏங்கல்ஸே இவ்வாறு சொல்லியிருக்கிறார்”

(எப்படியும் சக தோழருக்கு ஏங்கல்ஸ் இப்படி சொல்லியிருக்க மாட்டார் என தெரியாது என்ற நம்பிக்கையில்), “அவர் அதை வேற சந்தர்ப்பத்தில சொன்னார்”னு சக தோழர் சொல்லும் போது நம்மை அறியாமல் சிரித்து விடுவோம்.

அதேப் போல கேசவனுடைய பெரியப்பாவை சாமியார் ஆக்க முயலும் போதும் நம்மை அறியாமல் சிரிக்க வைத்து விடுகிறார் இ.பா.

இதை விட நான் ரசித்த இடம், கேசவனுடைய அறைத் தோழன் கிருஷ்ணன் சொல்லும் ஒரு விஷயம். “வார்த்தைகளின் பயன்களை தெரியாமல் நாம் அவற்றை அளவுக்கு அதிகாம பேசி அவற்றின் சாரத்தை இழந்து விட செய்கிறோம். ஒரு வேளை இதை உணர்த்துவதற்க்காகத்தான் காந்திஜி மௌன விரதம் இருக்கிறார் போல”

அதே போல் இந்த வரியும், “நாட்டிற்கு விடுதலை கிடைத்ததும் முதல் பலி. தேசத்தின் தந்தை”

காந்திஜியின் மரணத்தின் பொழுது நம்மை அறியாமல் ஒரு சோகம் மனதில் அப்பிக் கொள்கிறது.

சாதியை எதிர்க்கும் பிராமணனிற்கு மார்க்ஸை விட்டால் வேறு வழியில்லை என கேசவன் நினைப்பதாகவே என் மனதில் பட்டது. பிறகு தன்னுடைய சாதி எதிர்ப்பைக் காட்டவே தமிழில் மேற்படிப்பை படித்து பெரு அவதிக்குள்ளாகிறான். இறுதியில் திருப்பாவை(திருவாய்மொழி?) பாடி வேலை வாங்குகிறான். சாதியை எதிர்த்து பயணப்பட்டவன், திருமண் இட்டுக் கொண்டு வேலைக்கு செல்ல ஆரம்பிக்கிறான். நாவல் முடிகிறது.

மானசரோவர் - அசோகமித்திரன்
ஒரு தமிழ் கதாசிரியனுக்கும் (கோபால்) ஒரு மிக பிரபலமான (சத்யன் குமார்) இந்தி நடிகருக்கும் இடையே இருக்கும் நட்பை அடிப்படையாக கொண்ட நாவல். நல்ல புத்தகம் படிக்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு நிச்சயமாக இந்த புத்தகத்தை நான் சிபாரிசு செய்வேன். (இந்த வாக்கியத்தில் புத்தகம் என்ற வார்த்தை இரண்டு முறை வருகிறது. இதைப் போல ஒரு வாக்கியத்தை அந்த கதாசிரியன் கண்டிப்பாக எழுத மாட்டான்). மானசரோவரை, எளிமையாகப் புனையப்பட்ட கனமான கதை என்று சொல்லலாம்.

எனக்கு நாவலில் பிடித்த விஷயங்களை சொல்வதாக இருந்தால் முழு நாவலையும் கொடுக்க வேண்டியதிருக்குமோ என்ற பயம் ஏற்படுகிறது. பிடித்த இடங்களை குறிக்க ஆரம்பித்து கடைசியில் பார்த்தால் பாதி புத்தகத்திற்கு மேலாக குறிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. முதல் வாசிப்பில் தெரியாத ஒரு தவறு இரண்டாம் வாசிப்பில் பட்டது. இதைத் தான் முத்துலிங்கம் அவர்களுடன் பேசிக் கொண்டு வந்ததாக முந்தையை பதிவில் சொன்னேன். நாவலைப் படிக்காதவர்கள் அடுத்த பத்தியை தயவு செய்து வாசிக்க வேண்டாம்.

கதை முழுக்க தன்மை (First Person) நிலையிலிருந்து சொல்லப்பட்டுள்ளது. அதாவது கதை சொல்லியின் மனவோட்டத்திலிருந்து. இப்படி சொல்லப்படும் கதைகளின் பலவீனமாக நான் கருதுவது, சஸ்பன்ஸைக் காப்பாற்ற முடியாது. அதுவும் ராஜா இறந்த நிலையில், ஜம்பகம் இரும்பு சங்கிலியால் பிணைக்கப்பட்ட ஒரு நிலையிலிருக்கும் போதும் நிச்சயம் சத்யன் குமார் மனதில் அவர்கள் மூவரும் சம்பந்தப்பட்ட அந்த சஸ்பன்ஸ் காட்சி ஓடியிருக்க வேண்டும். அது தான் சாதாரண மனிதனின் மனநிலை. மேலும் சத்யன் குமார் குற்றவுணர்ச்சியில் நடந்த சம்பவத்தை நினைத்து பார்க்காமல் இருந்திருக்க மாட்டார். அப்படி நினைத்துப் பார்க்கும் போது அது நமக்கு சஸ்பன்ஸாக இருக்க முடியாது. இது ஒரு பெரிய சறுக்கலாக என் மனதில் பட்டது. ஆனால் இது இரண்டாம் வாசிப்பில் ஒரு எழுத்தாளனாக பார்க்கும் போது ஏற்பட்டது தானே ஒழிய முதல் வாசிப்பில் அது தோன்றவில்லை.

காலவெள்ளம் - இந்திரா பார்த்தசாரதி
மீண்டும் இந்திரா பார்த்தசாரதி. மீண்டும் பிராமணக்குடும்ப கதை. இந்த கதையின் களம் திருவரங்கம். இது தான் இ.பாவின் முதல் நாவலாம்.

வேர்பற்றில் வரும் அதே வசனம் காலவெள்ளத்திலும் வருகிறது. “மக்களுக்காக புரட்சியா அல்லது புரட்சிக்காக மக்களா?” இது இ.பாவில் மனதில் பல நாட்களாக இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த கதையை நாடகமாக எடுத்தால் ஆயிரம் எபிசோடுகள் எடுக்கலாம். நிச்சயம் ஹிட். என்னைப் பெரிதும் கவரவில்லை.

ஆகாயத் தாமரை - அசோகமித்திரன்
அசோகமித்திரன் எழுத்து என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. ஏன் என்று புரியவில்லை. ஒருவேளை கதையின் அடித்தளத்தில் ஒரு சோகம் ஓடிக் கொண்டிருந்தாலும் கதையில் பல இடங்களில் வாய் விட்டு சிரிக்க வைப்பதினாலா என்று தெரியவில்லை. கசப்பான காபியில் சர்க்கரையின் சுவைத் தெரிவதைப் போல. இவருக்கு நல்ல நகைச்சுவை உணர்வு இருக்க வேண்டும். எவ்வளவு கடினமான விஷயத்தையும் எளிமையாக சொல்லிவிடுகிறார்.

அகாயத் தாமரை, ஒரு இருபத்தைந்து வயது இளைஞனின் கதை. நான்கு நாட்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு மனதிற்கு பிடித்த ஒரு காரியம் செய்யப் போக அதனால் அவன் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றத்தை முன் வைத்து எழுதப்பட்ட கதை. மானசரோவருடன் இதை ஒப்பிட முடியாது என்றே தோன்றுகிறது. சென்னை வாசிகளுக்கு இந்த நாவல் பிடித்து போக வாய்ப்புகள் மிக அதிகம். சென்னைப் பிடிக்காத என்னைப் போன்றோர்களுக்கும் பிடிக்கும் :)

இந்த நான்கு புத்தகங்களுமே கிழக்கு பதிப்பகத்தில் கிடைக்கிறது.

மானசரோவர்
ஆகாயத்தாமரை
வேர்பற்று

தற்போது சுதேசமித்திரனின் ஆஸ்பத்திரி படித்துக் கொண்டிருக்கிறேன். படிக்க வித்தியாசமாக, சுவாரஸ்யமாக பல இடங்களில் நகைச்சுவைக் கலந்து சிந்திக்க வைக்கிறது. படித்து முடித்தவுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


7 comments:

Anonymous said...

சுதேசமித்திரனோட அணிற்பழம் கிடைச்சா படியுங்க.

Anonymous said...

பாலாஜி,

அசோகமித்திரன் எழுத்துக்கள் பேஸிவ் வகை எழுத்து. நைசாக ஊசி ஏற்றுவது போல இருக்கும். இ பா சட் சட்னு சொல்லிச் செல்லும் வகை.

சுதேசமித்திரன் எங்க ஊரு ஆளு நல்ல நக்கல் நையாண்டியோட எழுதுவாரு. அவரோட காக்டெயில் படிங்க நல்லா இருக்கும்.

வெட்டிப்பயல் said...

//சின்ன அம்மிணி said...
சுதேசமித்திரனோட அணிற்பழம் கிடைச்சா படியுங்க.

//

சின்ன அம்மிணி,
மிக்க நன்றி.... நிச்சயம் படிக்க முயற்சி செய்கிறேன் :)

வெட்டிப்பயல் said...

//வடகரை வேலன் said...
பாலாஜி,

அசோகமித்திரன் எழுத்துக்கள் பேஸிவ் வகை எழுத்து. நைசாக ஊசி ஏற்றுவது போல இருக்கும். இ பா சட் சட்னு சொல்லிச் செல்லும் வகை. //

என்ன சொல்றதுனு தெரியலை. இது வரை நான் ரெண்டு தான் படிச்சிருக்கேன். இன்னும் நிறைய படிச்சிட்டு நான் எப்படி ஃபீல் பண்றேனு சொல்றேன்.

எனக்கு தேவையில்லாம ஒருத்தரை புத்திசாலித்தனமா காண்பிச்சா பிடிக்கல. அதுவும் முக்கியமா ரொம்ப ஸ்மார்டா பெண்களைக் காட்டும் போது வித்தியாசமா ஃபீல் பண்றேன். ஏன்னு தெரியலை. அது இ.பாவோட வேர்பற்று, காலவெள்ளம் இரண்டிலும் உணர்ந்தேன். அதுக்காக பெண்கள் புத்திசாலிகள் இல்லைனு சொல்லலை. அவர்கள் ஆண்களை விட புத்திசாலிகள் என்பதில் சந்தேகமில்லை. தேவையில்லாத இடங்களில் நான் பார்த்த வரை பெண்கள் பேசுவது குறைவு. இந்த இரண்டு கதைகளிலும் அவர்கள் பேசுவது அப்படித்தான் தெரிந்தது.

//சுதேசமித்திரன் எங்க ஊரு ஆளு நல்ல நக்கல் நையாண்டியோட எழுதுவாரு. அவரோட காக்டெயில் படிங்க நல்லா இருக்கும்.

//

நிச்சயம் சான்ஸ் கிடைக்கும் போது படிக்கிறேன் :)

நன்றி அண்ணாச்சி :)

Boston Bala said...

அருமை. அறிமுகங்களுக்கு நன்றி.

---கசப்பான காபியில் சர்க்கரையின் சுவை---

ஆஹா... நல்ல ஒப்பீடு!

Porkodi (பொற்கொடி) said...

idhil edhuvume naan padikalai innum.. :( ennavo enaku sujatha novels thavira meedhiyai padikka oru vidhamana bayam! btw, neenga englipis books padipingla? apdina adhai pathiyum podalame? naan famous five, nancy drew padicha kaalathoda freeze agitten!

மின்னுது மின்னல் said...

ரைட்டு :)