தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Friday, August 10, 2007

வேங்கையின் மைந்தன்

இந்த பொன்னியின் செல்வன் படிச்சதுக்கப்பறம் வரலாற்று புதினங்கள் படிக்கறதுல ஆர்வம் ரொம்ப அதிகாமாகி, நிறைய புத்தகம் வாங்கி வெச்சேன். அப்ப பார்த்து ஆன்சைட் வந்துடுச்சி. அதனால எல்லாத்தையும் படிக்க முடியாம ஊர்ல விட்டுட்டு வந்துட்டேன். ஆனா இந்த தடவை போனப்ப ஊர்லயே யவன ராணி படிச்சேன். அப்பறம் இங்க வரும் போது ஜல தீபம், ராஜ முத்திரை, வெற்றி திருநகர், வேங்கையின் மைந்தன் எடுத்துட்டு வந்தேன்.

என்கிட்ட ஒரு கெட்ட பழக்கம் என்னனா இந்த மாதிரி புக் படிக்க ஆரம்பிச்சிட்டா அப்பறம் உலகத்தையே மறந்துடுவேன். யவன ராணி படிச்சி வீட்ல செம தீட்டு வாங்கினேன். "இந்த சாண்டில்யன் எப்ப பாரு பொண்ணுங்களை வர்ணிச்சிக்கிட்டே இருப்பாரு. அதை உன் புள்ளை சாப்பிடாம கூட படிச்சிட்டே இருக்கானு" அப்பா, அம்மாட்ட சொல்லிட்டு இருந்தாரு. என் சோழ திருநாடு ஆபத்திலிருக்கும் போது எப்படிங்க சாப்பிட முடியும், தூங்க முடியும்? நீங்களே சொல்லுங்க. சரி அதை பத்தி இன்னோரு பதிவுல சொல்றேன்.

ரெண்டு நாளைக்கு முன்னாடி சரி ஏதாவது படிக்கலாம்னு பார்க்கும் போது இந்த நாலு புக்ல நம்ம வேங்கையின் மைந்தன் தான் ரொம்ப கவர்ந்திழுத்துச்சி. முக்கியமான காரணம் பொன்னியின் செல்வரோட மகன் தான் இந்த வேங்கையின் மைந்தன். அதனால அதோட தொடர்ச்சி இருக்கானு படிக்க ஆரம்பிச்சேன்.

இது அகிலன் எழுதி சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவல். அதுவோ ஒரு ஆர்வத்த ஏற்படுத்துச்சி. அப்பறம் நம்மோட எவர் கிரின் ஹீரோ, சூப்பர் சூப்பர் ஸ்டார் வந்தியத்தேவன் இருக்காரானு பார்க்கனும்னு ஆசை வேற. என்ன இருந்தாலும் வந்தியத்தேவனை மறக்க முடியல. (கதாநாயகில நம்ம ஃபெவரைட் யவன ராணி/மஞ்சளழகி). சரினு படிக்க ஆரம்பிச்சேன்.

ராத்திரி ஒரு 11 மணிக்கு படிக்க ஆரம்பிச்சிருப்பேன். அப்பறம் 7 மணி நேரம் தூங்கினா போதும்னு ஒரு பன்னிரெண்டு மணிக்கா படுத்துடலாம்னு பார்த்தேன். அது அப்படியே 6 மணி நேரம், 5 மணி நேரம், 4 மணி நேரம்னு வந்து 3 மணிக்கு படுத்தேன். அப்பறம் அடுத்த நாள் ஆபிஸிக்கு லீவ் போட்டு படிக்கலாமானு பார்த்தேன். ஆனா கண்டிப்பா போக வேண்டியதிருந்ததால போயிட்டேன். அவ்வளவு ஆர்வமா இருந்துச்சு கதை.

கல்கி அவர்களோட பொன்னியின் செல்வனளவுக்கு இல்லைனாலும் கண்டிப்பா எந்த இடத்திலும் போர் அடிக்கல. அதுவுமில்லாம நம்ம சாண்டில்யனோட வர்ணனையும் இதுல இல்லை, கதா நாயகன் அதிபுத்திசாலியாவும் இல்லை. அதுவே எனக்கு ரொம்ப பிடிக்க காரணம். கதைனா எனக்கு ஒரு விறுவிறுப்பு இருக்கனும். சும்மா கதாநாயகி எப்படி இருந்தானு 4 பக்கத்துக்கு வர்ணிச்சா நமக்கு பிடிக்காது. அந்த வகைல இதுல ரொம்ப வர்ணனையில்லாதது ஒரு சந்தோஷம். கதை ஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கும் ஒரே விறுவிறுப்பு.

கதையோட துவக்கமே ஒரு விறுவிறுப்பு வந்துடுது. கதாநாயகன் இளங்கோ, நம்ம கொடும்பாளுர் இளவரசர் (வானதி - அடிக்கடி மயக்கம் போட்டு விழுவாங்களே, அவுங்க குடும்பத்துல வந்தவர் தான்). இவரோட வீரமும், காதலும் கலந்து அன்று நடந்த அரசியல் மாற்றங்களை சொல்வது தான் இந்த வேங்கையின் மைந்தன். இதை படிச்சா தமிழனு கண்டிப்பா ஒரு பெருமை வருது. டீம்ல இருக்கற ஹிந்திக்காரவங்ககிட்ட எல்லாம் "டேய் நாங்க எல்லாம் அப்பவே அப்படிடானு சொல்லனும் போல இருந்தது".

கதைல நம்ம ஃபேவரைட் கதாநாயகன் வந்தயத்தேவன் இருக்காரு. இதுலயும் அவர் கிட்டதிட்ட கதாநாயகன் தான். வயசானாலும் அவர் குறும்பு இன்னமும் இருக்கு. அப்பறம் இதுல கவரும் இன்னோரு கதாபாத்திரம் ரோகிணி. அவர் ஈழத்திலிருக்கும் ஒரு சிற்றரசின் இளவரசி. இவர் காதலுக்கும், நாட்டு பற்று/குடும்ப பாசம் இவற்றுக்கு நடுவில் ஊஞ்சலாடும் பாத்திரம். ஆனா ரொம்ப அருமையான பாத்திரம். சில சமயம் காதலால் உருகுவதும், சில சமயம் தன் தம்பி மேல் கொண்ட பாசத்தால் காதலனுடன் சண்டை போடுவதும். பிறகு வருந்துவதும்னு இருப்பாங்க. கதாநாயகனும் அப்படியே.

வரலாற்று புதினம் புடிச்சவங்க கண்டிப்பா இந்த புத்தகம் வாங்கி படிக்கலாம்.

சரி கதைல இருக்கற சில முக்கியமான விஷயங்களை மட்டும் ஹிண்டா கொடுக்கறேன். கண்டிப்பா கதை படிக்க போறோம்னு நினைக்கறவங்க இனிமே படிக்காதீங்க...

ஈழத்திலிருக்கும் பாண்டிய மன்னனுடைய மணிமுடி தமிழகத்திற்கு மீண்டு வருகிறது. பொன்னியின் செல்வரால் முடியாததை வேங்கையின் மைந்தன் சாதிக்கிறார்.

பாண்டியர்களுடன் நடக்கும் போரில் இரு பாண்டிய மன்னர்கள் இறக்கிறார்கள். சுந்தர பாண்டியன் இறுதியில் வந்தியத்தேவரால் கைது செய்யப்படுகிறார்.

சாளுக்கியர்களை வென்று காசி வரை சென்று கங்கையை தமிழகத்திற்கு கொண்டு வருகிறார் வேங்கையின் மைந்தன். கங்கை கொண்ட சோழபுரம் அருமையாக கட்டி முடிக்க படுகிறது.

இறுதியில் கடாரத்தை வென்ற பிறகே மணம் முடிக்கிறார் இளங்கோ. கடாரத்தை ராஜேந்திரர் வென்றதை பத்தி கடல் புறால கூட பேசியிருப்பாங்க.

இளங்கோவுக்கும் நம்ம இளைய பல்லவனுக்கும் (கடல் புறா) ஒரு பெரிய தொடர்பு இருக்கு. க்ளைமாக்ஸ்ல... என்னனு கெஸ் பண்ணிக்கோங்க ;) (ஜினியர் NTR படம் பார்க்கறவங்களும் கண்டு பிடிக்கலாம்)

................

சரி அடுத்த இருக்கற மூணு நாவல்ல எதை படிக்கலாம்னு சொல்லுங்க. இந்த வார இறுதியில படிச்சிடலாம்...

65 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இந்த சாண்டில்யன் எப்ப பாரு பொண்ணுங்களை வர்ணிச்சிக்கிட்டே இருப்பாரு. அதை உன் புள்ளை சாப்பிடாம கூட படிச்சிட்டே இருக்கானு" அப்பா, அம்மாட்ட சொல்லிட்டு இருந்தாரு//

முற்றிலும் உண்மை!
கல்வெட்டில் பொறிக்கப்பட வேண்டிய வாசகம்!!
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை! :-))))

Sridhar Narayanan said...

ஒரு தகவலுக்கு -

//இது அகிலன் எழுதி சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவல். //

சாகித்ய அகாடமி விருது வாங்கியது அவரோட 'சித்திரப் பாவை' நாவல். இது அல்ல.

siva gnanamji(#18100882083107547329) said...

//அகிலனுக்கு சாகித்ய அகாதெமி பரிசு..//

அது
ஞானபீடப் பரிசு என்று நினைவு
செக் பண்ணுங்க,வெட்டி.
தமிழில் முதலில் அகிலனும்,அடுத்து
ஜெயகாந்தனும் தான் ஞானபீடப்பரிசு பெற்றவர்கள் என்று கருதுகிறேன்.
சரிபார்த்துச் சொல்லுங்க.....

Sridhar Narayanan said...

//இந்த சாண்டில்யன் எப்ப பாரு பொண்ணுங்களை வர்ணிச்சிக்கிட்டே இருப்பாரு//

அவர் ஆண்களையும் நன்றாக வர்ணிப்பார். இளஞ்செழியனும், பூவழகியும், ராஜசிம்ம பல்லவனும், மைவிழியும், செம்பகாதேவியும், மஞ்சளளழகியும், வீரபாண்டியனும், கனோஜி ஆங்கிரேயும், விஜயனும் பல்வேறு கதாபாத்திரங்களும் மிகவும் அருமையாக வார்க்கப்பட்டு நம் கண் முன்னாடி நடமாட வைத்துவிடுவார்.

அவருடைய எழுத்தின் சிறப்பு அவர் போர் தந்திரங்களை விவரிக்கும் முறை. யவன ரானியில் இளஞ்செழியன் காம்பஸை மாற்றி கப்பலின் திசையை மாற்றுவதாகட்டும், ராஜ திலகத்தில் ராஜசிம்ம பல்லவன் விருச்சிக வியூகத்தை அமைப்பதாகட்டும் மிக அருமையான கற்பனை மற்றும் காட்சிபடுத்துதல்.

//ஈழத்திலிருக்கும் பாண்டிய மன்னனுடைய மணிமுடி தமிழகத்திற்கு மீண்டு வருகிறது.//

கூடவே இரத்தின ஹாரமும் கூட. :-))

பதிவிற்கும், பழைய ஞாபகங்களை கிளறி விட்டதற்கும் மிக்க நன்றி!

வெங்கட்ராமன் said...

சிவகாமியின் சபதம்,
பொன்னியின் செல்வன்,

இன்னைக்கு படிச்சு முடிக்கப் போற பார்த்திபன் கனவு

வரிசைல

அடுத்த டார்கெட்
வேங்கையின் மைந்தன் தான்.

**********************************
இதை படிச்சா தமிழனு கண்டிப்பா ஒரு பெருமை வருது. டீம்ல இருக்கற ஹிந்திக்காரவங்ககிட்ட எல்லாம் "டேய் நாங்க எல்லாம் அப்பவே அப்படிடானு சொல்லனும் போல இருந்தது".
**********************************
நானும் நினைத்ததுண்டு

இன்றைய நிலையை நினைத்து வருந்துவது உண்டு.

வெங்கட்ராமன் said...

தல வேங்கையின் மைந்தன் புத்தகம் எந்த பதிப்பகம்னு சொன்னா வாங்க வசதியா இருக்கும் . . .

பூனைக்குட்டி said...

பாலாஜி - பொன்னியின் செல்வன் அருள்மொழியை மையப்படுத்தி எழுதியதாலோ என்னவோ எனக்கு வேங்கையின் மைந்தன் இன்னமும் பிடிக்கும். எல்லாப்புகழும் வந்தியத்தேவருக்கு.

எனக்கு இருக்கும் நினைவில் இருந்து, ஹீரோவும் வந்தியத்தேவரும் இலங்கை போவாங்க அங்க நம்ம தல தூங்குவது போல் நடிச்சிக்கிட்டிருப்பாரு, ஹீரோவுக்கு கோபம் வரும். ஆனால் சரியான நேரத்தில் முழிச்சு படம் காண்பிப்பாரு.

ம்ம்ம் ரம்மியமான நாட்கள் நான் வேங்கையின் மைந்தன் படித்த நாட்கள்.

Sridhar Narayanan said...

//ஞானபீடப் பரிசு என்று நினைவு
செக் பண்ணுங்க//

ஆம். சித்திர பாவை - ஞானபீடம் பரிசு பெற்றது. பதிவில் சொன்னபடி வேங்கையின் மைந்தன் சாகித்ய அகாடமி பரிசு வென்றது.

குழப்பத்திற்கு மன்னிக்கவும்.

இங்கே சென்று பார்க்கலாம்

In 1975 the novel 'Chitra pavai' won the prestigious Gnanapit award. This work of his has been translated in all Indian languages. In 1963 his historical novel 'Vengayin mainthan' was awarded by Sahithya academy of Govt of India.

பூனைக்குட்டி said...

//
இறுதியில் கடாரத்தை வென்ற பிறகே மணம் முடிக்கிறார் இளங்கோ. கடாரத்தை ராஜேந்திரர் வென்றதை பத்தி கடல் புறால கூட பேசியிருப்பாங்க.//

கடல்புறாவும் படிச்சிருந்தாலும் நினைவில் வரவில்லை இந்தப் பகுதி. இரண்டும் நடக்கும் காலப்பகுதி வேறயா இருக்கும் என்பதால் வரும் சந்தேகம் மட்டுமே.

ஆனாலும் இளைய பல்லவனும் மஞ்சளழகியும் நெஞ்சிற்குள் நிற்கும் கதாப்பாத்திரங்கள்.

உண்மையில் கருணாகரன் இலக்கியங்களில் கூட இப்படி ஒரு தளபதி இருந்ததில்லை என்று பெயர் பெற்ற உண்மையான கதாப்பாத்திரம். இன்னும் படித்திருக்கிறேன்; சோழர்கள் பற்றி எழுதாமல் தூங்கிக்கொண்டிருப்பதை நினைவில் கொண்டு வந்து விட்டீர்.

வெட்டிப்பயல் said...

Sridhar,
Sahithya Academy award for 1963, an engraved copper plate with the emblem of Akademi and facsimile of Sri Jawarlal Nehru with a cash prize of Rs.5000 was presented by Dr.Zahir Hussain, Vice President of India to the Author Akilan on 15th March, 1964.

இது அந்த புக்ல போட்டிருக்காங்க. இதுக்கு தான் வாங்கியிருக்கறதா அகிலன் நன்றி எல்லாம் வேற சொல்லியிருக்காரு. கல்கிக்கு.

இதுக்கு மேல நீங்க சொன்னா இந்த புக் பிரிண்ட் பண்ணவன் தப்புதான் :-)

வெட்டிப்பயல் said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//இந்த சாண்டில்யன் எப்ப பாரு பொண்ணுங்களை வர்ணிச்சிக்கிட்டே இருப்பாரு. அதை உன் புள்ளை சாப்பிடாம கூட படிச்சிட்டே இருக்கானு" அப்பா, அம்மாட்ட சொல்லிட்டு இருந்தாரு//

முற்றிலும் உண்மை!
கல்வெட்டில் பொறிக்கப்பட வேண்டிய வாசகம்!!
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை! :-)))) //

இதெல்லாம் ஓவர்...

போர்களத்தை கண் முன்னே கொண்டு வருவார் சாண்டில்யன். அதுவும் யவனராணில அந்த சர்ப்ப வியூகமும், கருடனும், அதன் இறக்கைகளை பற்றியும். அவ்வளவு அழகா எழுதியிருப்பாரு.

அந்த வர்ணனை அவரை அடிச்சக்கவே ஆள் இல்லை. அது போர் களமா இருந்தாலும் சரி, கதா நாயகன், கதா நாயகியா இருந்தாலும் சரி.

வெட்டிப்பயல் said...

//siva gnanamji(#18100882083107547329) said...

//அகிலனுக்கு சாகித்ய அகாதெமி பரிசு..//

அது
ஞானபீடப் பரிசு என்று நினைவு
செக் பண்ணுங்க,வெட்டி.
தமிழில் முதலில் அகிலனும்,அடுத்து
ஜெயகாந்தனும் தான் ஞானபீடப்பரிசு பெற்றவர்கள் என்று கருதுகிறேன்.
சரிபார்த்துச் சொல்லுங்க..... //

கீழ ஸ்ரீதர் சொல்லிட்டாரு பாருங்க :-)

வெட்டிப்பயல் said...

//வெங்கட்ராமன் said...

சிவகாமியின் சபதம்,
பொன்னியின் செல்வன்,

இன்னைக்கு படிச்சு முடிக்கப் போற பார்த்திபன் கனவு

வரிசைல

அடுத்த டார்கெட்
வேங்கையின் மைந்தன் தான்.
//

அப்படியே உடையார், கடல் புறா, யவன ராணி எல்லாம் படிங்க...

(நான் இன்னும் உடையார் படிக்கல. ஆனா மீதி ரெண்டுக்கும் நான் கேரண்டி)

// **********************************
இதை படிச்சா தமிழனு கண்டிப்பா ஒரு பெருமை வருது. டீம்ல இருக்கற ஹிந்திக்காரவங்ககிட்ட எல்லாம் "டேய் நாங்க எல்லாம் அப்பவே அப்படிடானு சொல்லனும் போல இருந்தது".
**********************************
நானும் நினைத்ததுண்டு

இன்றைய நிலையை நினைத்து வருந்துவது உண்டு. //

:-((

வெட்டிப்பயல் said...

//வெங்கட்ராமன் said...

தல வேங்கையின் மைந்தன் புத்தகம் எந்த பதிப்பகம்னு சொன்னா வாங்க வசதியா இருக்கும் . . . //

நான் படிக்கறது தாகம் பதிப்பகத்தோடது.

விலாசம்

பு.எண் 4, ப்.எண் 35, சங்கராபாணி தெரு, தி.நகர், சென்னை - 17

Ph: 28340495

Mail : tamilputhakalayam@yahoo.com

Anonymous said...

ஆஹா... பழசைக் கிளறி விட்டுடீங்களே. மறுபடி ஒரு முறை படிக்கணும் போல இருக்கு..

இதுல இளங்கோதான் முக்கியமான கதா பாத்திரம் போல காட்டப்பட்டிருக்கும். ஆனாலும் பாவம் அந்த பொண்ணு ரோகிணியை சுத்த விட்டு வேடிக்கை பார்ப்பாரு. கேட்டா கடமை வீரராமாம்???

சொல்லப்போனால், அந்த ம்குடத்தையும், ரத்தின ஹாரத்தையும் கொண்டு வந்ததும் இளங்கோதான் என்ற அளவில் சொல்லப் பட்டிருக்கும். இது வரலாற்று அளவில் எந்தாளவிற்கு உண்மை என்றும் தெரிய வில்லை. யாராவது தெரிஞ்சா சொல்லுங்க.

மிக அருமையான வரலாற்று நாவல் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

வெட்டிப்பயல் said...

//Sridhar Venkat said...

//ஞானபீடப் பரிசு என்று நினைவு
செக் பண்ணுங்க//

ஆம். சித்திர பாவை - ஞானபீடம் பரிசு பெற்றது. பதிவில் சொன்னபடி வேங்கையின் மைந்தன் சாகித்ய அகாடமி பரிசு வென்றது.

குழப்பத்திற்கு மன்னிக்கவும்.

இங்கே சென்று பார்க்கலாம்

In 1975 the novel 'Chitra pavai' won the prestigious Gnanapit award. This work of his has been translated in all Indian languages. In 1963 his historical novel 'Vengayin mainthan' was awarded by Sahithya academy of Govt of India. //

நல்ல வேளை ஒத்துக்கிட்டீங்க. இல்லைனா Scanner தேடிருக்கனும் :-)

வெட்டிப்பயல் said...

//Sridhar Venkat said...

//இந்த சாண்டில்யன் எப்ப பாரு பொண்ணுங்களை வர்ணிச்சிக்கிட்டே இருப்பாரு//

அவர் ஆண்களையும் நன்றாக வர்ணிப்பார். இளஞ்செழியனும், பூவழகியும், ராஜசிம்ம பல்லவனும், மைவிழியும், செம்பகாதேவியும், மஞ்சளளழகியும், வீரபாண்டியனும், கனோஜி ஆங்கிரேயும், விஜயனும் பல்வேறு கதாபாத்திரங்களும் மிகவும் அருமையாக வார்க்கப்பட்டு நம் கண் முன்னாடி நடமாட வைத்துவிடுவார்.

அவருடைய எழுத்தின் சிறப்பு அவர் போர் தந்திரங்களை விவரிக்கும் முறை. யவன ரானியில் இளஞ்செழியன் காம்பஸை மாற்றி கப்பலின் திசையை மாற்றுவதாகட்டும், ராஜ திலகத்தில் ராஜசிம்ம பல்லவன் விருச்சிக வியூகத்தை அமைப்பதாகட்டும் மிக அருமையான கற்பனை மற்றும் காட்சிபடுத்துதல்.
//

வர்ணனைல அவரை அடிச்சிக்க ஆளே இல்லை. கண் முன்னே காட்சிகள் விரியும்...

//
//ஈழத்திலிருக்கும் பாண்டிய மன்னனுடைய மணிமுடி தமிழகத்திற்கு மீண்டு வருகிறது.//

கூடவே இரத்தின ஹாரமும் கூட. :-))
//
ஆமா :-)

//

பதிவிற்கும், பழைய ஞாபகங்களை கிளறி விட்டதற்கும் மிக்க நன்றி! //

இவ்வளவு விளக்கும் கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி

Anonymous said...

வேங்கையின் மைந்தன் அவ்ளோ நல்ல புக்கா ? சரி அடுத்த் புக் பேர் வரக்கும் வெயிட் மாடி வாங்கிரவேண்டியது தான்..!!!

வெட்டிப்பயல் said...

// மோகன்தாஸ் said...

பாலாஜி - பொன்னியின் செல்வன் அருள்மொழியை மையப்படுத்தி எழுதியதாலோ என்னவோ எனக்கு வேங்கையின் மைந்தன் இன்னமும் பிடிக்கும். எல்லாப்புகழும் வந்தியத்தேவருக்கு.
//
அருள்மொழி வந்தாலும் எனக்கு வந்தியத்தேவனை தான் பிடிக்கும். அதுக்கு அப்பறம் கல்கியே முயற்சி செய்தும் மக்கள் மனதில் கதாநாயகன் வந்தியத்தேவனே!!!

//

எனக்கு இருக்கும் நினைவில் இருந்து, ஹீரோவும் வந்தியத்தேவரும் இலங்கை போவாங்க அங்க நம்ம தல தூங்குவது போல் நடிச்சிக்கிட்டிருப்பாரு, ஹீரோவுக்கு கோபம் வரும். ஆனால் சரியான நேரத்தில் முழிச்சு படம் காண்பிப்பாரு.
//
ஆமாம். தல இண்ட்ரோவே சூப்பர் இல்லை... சமண முனிவரா வேஷம் போட்டு பாண்டிய படைக்கு காவல் காப்பாரு ;)

//
ம்ம்ம் ரம்மியமான நாட்கள் நான் வேங்கையின் மைந்தன் படித்த நாட்கள். //
எனக்கும்...

வெட்டிப்பயல் said...

// மோகன்தாஸ் said...

//
இறுதியில் கடாரத்தை வென்ற பிறகே மணம் முடிக்கிறார் இளங்கோ. கடாரத்தை ராஜேந்திரர் வென்றதை பத்தி கடல் புறால கூட பேசியிருப்பாங்க.//

கடல்புறாவும் படிச்சிருந்தாலும் நினைவில் வரவில்லை இந்தப் பகுதி. இரண்டும் நடக்கும் காலப்பகுதி வேறயா இருக்கும் என்பதால் வரும் சந்தேகம் மட்டுமே.
//

கடல் புறா ராஜேந்திரர் காலத்திற்கு பிற்பாடு வருவது. அதில் ராஜேந்திரர் வென்றதை பற்றியும் வரும். நான் கடல் புறா படிச்சி ரெண்டு வருஷமாகுது. சரியா எந்த இடம்னு நியாபகமில்லை. ஆனா படிக்கும் போது ராஜேந்திரரை பத்தி எந்த புத்தகம் இருக்கும்னு யோசிச்சேன்... அது இன்னும் மனசுல இருக்கு...

//
ஆனாலும் இளைய பல்லவனும் மஞ்சளழகியும் நெஞ்சிற்குள் நிற்கும் கதாப்பாத்திரங்கள்.
//
யவன ராணியும் தான் ;)

//
உண்மையில் கருணாகரன் இலக்கியங்களில் கூட இப்படி ஒரு தளபதி இருந்ததில்லை என்று பெயர் பெற்ற உண்மையான கதாப்பாத்திரம். இன்னும் படித்திருக்கிறேன்; சோழர்கள் பற்றி எழுதாமல் தூங்கிக்கொண்டிருப்பதை நினைவில் கொண்டு வந்து விட்டீர். //
சீக்கிரம் எழுதுங்க தல... உங்களுக்காக ஆவலாக காத்துக்கொண்டிருக்கிறோம்...

Unknown said...

ஹலோ சார்,

எனக்கும் மி்கவும் பிடித்த ஹீரோ வந்தியத்தேவன் தான்.
பொன்னியின் செல்வன் தொடர்ச்சியை "உடையார்" என்ற
புதினத்தில் பாலகுமரன் எழுதியுள்ளதாக கேள்விப்பட்டேன். நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை. பொன்னியின் செல்வன், ஜலதீபம், கடல் புறா, யவனராணி,...... போன்ற புதினங்களை படிக்கும்பொழுது நாம் அந்த காலத்திற்கே சென்று விடுகிறோம். மற்ற புத்தகங்களையும் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை எழுதவும்.

வெங்கட்ராமன் said...

முகவரிக்கு நன்றி தல.

இன்னிக்கு தி.நகர் போரேன். .
நேரம் கிடைச்சா, கண்டிப்பா வாங்கிடுவேன் . . .

கப்பி | Kappi said...

நோட் பண்ணிக்கறேன்...வீக் எண்ட் கடைக்கு போய் ஆட்டைய போட்டுடுவோம் :))

Sridhar said...

யவன ரானியில் இளஞ்செழியன் காம்பஸை மாற்றி கப்பலின் திசையை மாற்றுவதாகட்டும்,


அது கடல் புரா 3ஆவது பாகம் இளைய பல்லவன் செய்வது என்று நினைக்கிரேன்

இராம்/Raam said...

பாலாஜி,

இந்த புத்தகம் எனக்கும் ரொம்ப பிடிச்சத்திலே ஒன்னு...

அடுத்து யவன ராணியை படிச்சிபாரு....

வெட்டிப்பயல் said...

//அடுத்து யவன ராணியை படிச்சிபாரு....//

அண்ணே! பதிவயே படிக்கலையா??? :-((

யவனராணி படிச்சி தானே வீட்ல திட்டு வாங்கினேனு சொல்லியிருக்கேன்...

அடுத்து ஜலதீபம் படிக்கலாம்னு இருக்கேன் :-)

இராம்/Raam said...

/அண்ணே! பதிவயே படிக்கலையா??? :-((

யவனராணி படிச்சி தானே வீட்ல திட்டு வாங்கினேனு சொல்லியிருக்கேன்...

அடுத்து ஜலதீபம் படிக்கலாம்னு இருக்கேன் :-)/

ஐயம் சாரி,

ஸ்மால் டெக்னிகல் ஃபால்ட்....

பல்லவ திலகம் படிச்சி பாரு.... அதுவும் நல்லா இருக்கும்...:)

CVR said...

//சரி கதைல இருக்கற சில முக்கியமான விஷயங்களை மட்டும் ஹிண்டா கொடுக்கறேன். கண்டிப்பா கதை படிக்க போறோம்னு நினைக்கறவங்க இனிமே படிக்காதீங்க...//
இதுக்கு மேல நான் படிக்கலை வெட்டி!!
எனக்கும் இந்த புத்தகத்தை படிக்கனும்ங்கற ஆர்வத்தை கிளப்பி விட்டுட்டீங்க!!!

இந்தியா போய்ட்டு இந்த புத்தகங்களை எல்லாம் ஒவ்வொன்னா படிக்கனும்!! :-)

வெட்டிப்பயல் said...

// sasikala said...

ஹலோ சார்,
//
சார், மோர் எல்லாம் வேணாமே!!!

// எனக்கும் மி்கவும் பிடித்த ஹீரோ வந்தியத்தேவன் தான்.

பொன்னியின் செல்வன் தொடர்ச்சியை "உடையார்" என்ற
புதினத்தில் பாலகுமரன் எழுதியுள்ளதாக கேள்விப்பட்டேன்.
//
ஆமாங்க. அதில் பாண்டியனின் ஆபத்துதவிகளுக்கெல்லாம் நம்ம பொன்னியன் செல்வன் தண்டனை வழங்குவார்.

//
நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை.

பொன்னியின் செல்வன், ஜலதீபம், கடல் புறா, யவனராணி,...... போன்ற புதினங்களை படிக்கும்பொழுது நாம் அந்த காலத்திற்கே சென்று விடுகிறோம். மற்ற புத்தகங்களையும் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை எழுதவும். //
கண்டிப்பா.. அடுத்து ஜல தீபம் :-)

வெட்டிப்பயல் said...

//வெங்கட்ராமன் said...

முகவரிக்கு நன்றி தல.

இன்னிக்கு தி.நகர் போரேன். .
நேரம் கிடைச்சா, கண்டிப்பா வாங்கிடுவேன் . . . //

தல ஒரு சின்ன டெக்னிக்கல் ஃபால்ட்.

புதிய எண் : 34

வெட்டிப்பயல் said...

//கப்பி பய said...

நோட் பண்ணிக்கறேன்...வீக் எண்ட் கடைக்கு போய் ஆட்டைய போட்டுடுவோம் :)) //

கப்பி,
உனக்கு டேட்டிங் போகறதுக்கே நாள் சரியா இருக்குமே. இதெல்லாம் படிக்க கூடவா நேரமிருக்கு ;)

வெட்டிப்பயல் said...

// R. said...

யவன ரானியில் இளஞ்செழியன் காம்பஸை மாற்றி கப்பலின் திசையை மாற்றுவதாகட்டும்,


அது கடல் புரா 3ஆவது பாகம் இளைய பல்லவன் செய்வது என்று நினைக்கிறேன் //

ஆமாங்க... அது கடல் புறாதான் :-)

வெட்டிப்பயல் said...

//CVR said...

//சரி கதைல இருக்கற சில முக்கியமான விஷயங்களை மட்டும் ஹிண்டா கொடுக்கறேன். கண்டிப்பா கதை படிக்க போறோம்னு நினைக்கறவங்க இனிமே படிக்காதீங்க...//
இதுக்கு மேல நான் படிக்கலை வெட்டி!!
எனக்கும் இந்த புத்தகத்தை படிக்கனும்ங்கற ஆர்வத்தை கிளப்பி விட்டுட்டீங்க!!!

இந்தியா போய்ட்டு இந்த புத்தகங்களை எல்லாம் ஒவ்வொன்னா படிக்கனும்!! :-) //

தல,
நீங்க படிச்சா கண்டிப்பா ஒரு மாசத்துக்கு வேற உலகத்துல இருப்பீங்க...

பொன்னியின் செல்வன் படிச்சிருக்கீங்களா? இல்லைனா இப்பவே படிக்கலாம். ஆன்லைன்ல கல்கியோட படைப்புகள் எல்லாம் கிடைக்குது :-)

குமரன் (Kumaran) said...

மஞ்சளழகி. ஆகா. அந்தப் பேரைச் சொன்னாலே ஒரு மாதிரி கிளுகிளுப்பா இருக்கே. பதின்ம வயதில் குமுதத்தில் புரட்டிய/படித்தப் பக்கங்கள் எல்லாம் கண்முன் தெரிகிறதே.

வெட்டிப்பயல் said...

// செந்தழல் ரவி said...

வேங்கையின் மைந்தன் அவ்ளோ நல்ல புக்கா ? சரி அடுத்த் புக் பேர் வரக்கும் வெயிட் மாடி வாங்கிரவேண்டியது தான்..!!! //

புக் ஃபேர் வரதுக்கு இன்னும் 4 மாசம் இருக்கே... இப்பவே வாங்கிடுங்க :-)

வெட்டிப்பயல் said...

//குமரன் (Kumaran) said...

மஞ்சளழகி. ஆகா. அந்தப் பேரைச் சொன்னாலே ஒரு மாதிரி கிளுகிளுப்பா இருக்கே. பதின்ம வயதில் குமுதத்தில் புரட்டிய/படித்தப் பக்கங்கள் எல்லாம் கண்முன் தெரிகிறதே. //

என்ன பண்ண நான் அந்த ஓவியத்தோட எல்லாம் படிக்கலையே :-((

அந்த ஓவியங்களோட போட்டிருந்தா புக் நிறைய விற்பனையாயிருக்கலாம் :-)

இருந்தாலும் வர்ணிச்சே நம்ம கண் முன்னே கொண்டு வந்திடுவார் சாண்டில்யன் :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//பொன்னியின் செல்வன் படிச்சிருக்கீங்களா? இல்லைனா இப்பவே படிக்கலாம்//

ஆகா...யாரைப் பாத்து என்ன கேள்வி கேட்டுட்டீங்க தல!
பொன்னியின் செல்வனில் வரும் வெற்றிக் காதல்/தோல்விக் காதல் எல்லாத்தையும் ஆராய்ச்சி செய்து வைத்துள்ள சிவீஆர் அவர்களைப் பார்த்து இந்தக் கேள்வி கேட்க உமக்கு எப்படி மனம் துணிந்தது?....

பூங்குழலி - அருண்மொழி
வானதி - அருண்மொழி
மணி - வந்தி
குந்தவை - வந்தி
பஞ்சவன் மாதேவி - அருண்மொழி
நந்தினி - ?
என்று இன்னும் காதலர் ஆராய்ச்சி எல்லாம் செய்து வைத்துள்ளார்.

இதுக்காகவே அதையெலாம் பதிவு போட்டு சீவிடுங்க சீவீஆரு....:-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//பொன்னியின் செல்வன் தொடர்ச்சியை "உடையார்" என்ற
புதினத்தில் பாலகுமரன் எழுதியுள்ளதாக கேள்விப்பட்டேன்.
//
ஆமாங்க. அதில் பாண்டியனின் ஆபத்துதவிகளுக்கெல்லாம் நம்ம பொன்னியன் செல்வன் தண்டனை வழங்குவார்//

அது ஒன்னும் பெரிய தண்டனை எல்லாம் கிடையாது பாலாஜி.
உடையார் நாவலில் ஹைலட்டே...
தஞ்சைப் பெரிய கோவில் கட்டுவதை உடன் இருந்து பார்ப்பது தான்...the making of the tanjore temple...

மேலும் ராஜராஜன் மேலைச் சாளுக்கியப் போர், ராஜேந்திர சோழனுக்கு ஆட்சி மாறுவது, மற்றும் சிதம்பர தீட்சிதர்கள் கொட்டம்/சமுதாயம் இதெல்லாம் தான்!

ஒரு சுருக்கப் பதிவு போடட்டுமா?

MSATHIA said...

வெட்டி,
வேங்கையின் மைந்தன்னு பேர பாத்ததும் வந்தேன்.
பதிவ படிச்சுட்டேன். பின்னூட்டம் போடமத்தான் போலாம்னு நினைச்சேன். வார இறுதி படிக்க எதுன்னு கேட்டு இருந்ததால பின்னூட்டம் போட வச்சுட்டீங்க.
இன்னும் பின்னூட்டமெல்லாம் படிக்கலை. அடுத்து ஜலதீபம் படியுங்க. 2\3 பார்ட் இருக்குமே?

ஒரு பார்ட் படிச்சுட்டு பயித்தியம் பிடிச்சு 2வது பார்ட் தேடிப்படிச்சேன்.

அகில் பூங்குன்றன் said...

9ஆம் வகுப்பில் படித்தது வேங்கையின் மைந்தன்
அதற்குஅப்புறம் குறைந்தது 15 தடவைகளாவது படித்தாலும் காட்சிகள்
என்றும் மனதில் இருந்து அகலாது.
அருண்மொழிநங்கையின் அமைதியான காதலும்
ரோகினியின் ஆக்ரோஷமான காதலும்,
வந்தியதேவரின் காதற்குறிப்புகளும்,
காசிபன் மற்றும் ரோகணநாட்டு மந்திரி பகையுணர்வும்,
அம்மங்கையின் கிண்டல்களும் மனதை கட்டி போடும்.

கதை நடையுரையில் அகிலனை அடிச்சுக்க ஆள் இல்லைங்க.
அது வேங்கையின் மைந்தனாகுட்டும் சித்திரபாவையாகட்டும் கயல்விழியாகட்டும்
வெற்றித்திருநகராகட்டும் துனைவியாகட்டும். பின்னி பெடலெடுத்து இருப்பார்.

பாலாஜி வாய்ப்பு கிடைத்தால் சித்திரபாவை வாசித்து பாருங்கள்.

1963 - சாகித்ய அகாதமி விருது (வேங்கையின் மைந்தன்)
1975 - ஞான பீட விருது (சித்திரப்பாவை)

இராஜேந்திரர் பாண்டிய முடியையும் இரத்தினஹாரத்தையும் கொண்டுவரும்
இளங்கோவிற்கு அருண்மொழிநங்கையையும்
ரோகினியையும் மணமுடித்து கொடுப்பார்
வேங்கையின் மைந்தனில்.

இராஜேந்திரர் பலவர்மனை முறியடித்து சாவக தீவுகளெங்கும் சோழகொடி
பறக்கவிட்டஇளையபல்லவனுக்கு காஞ்சனாவையும்
மஞ்சளழகியையும் மணமுடித்து கொடுப்பார் கடல்புறாவில்.

வெட்டிப்பயல் said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//பொன்னியின் செல்வன் படிச்சிருக்கீங்களா? இல்லைனா இப்பவே படிக்கலாம்//

ஆகா...யாரைப் பாத்து என்ன கேள்வி கேட்டுட்டீங்க தல!
பொன்னியின் செல்வனில் வரும் வெற்றிக் காதல்/தோல்விக் காதல் எல்லாத்தையும் ஆராய்ச்சி செய்து வைத்துள்ள சிவீஆர் அவர்களைப் பார்த்து இந்தக் கேள்வி கேட்க உமக்கு எப்படி மனம் துணிந்தது?....

பூங்குழலி - அருண்மொழி
வானதி - அருண்மொழி
மணி - வந்தி
குந்தவை - வந்தி
பஞ்சவன் மாதேவி - அருண்மொழி
நந்தினி - ?
என்று இன்னும் காதலர் ஆராய்ச்சி எல்லாம் செய்து வைத்துள்ளார்.

இதுக்காகவே அதையெலாம் பதிவு போட்டு சீவிடுங்க சீவீஆரு....:-)

//

நந்தினி <- பெ.பழுவேட்டரையர்
நந்தினி <- ஆதித்த கரிகாலன்
நந்தினி <- கந்தமாறன்
நந்தினி <- பார்த்திபேந்திர பல்லவன்
நந்தினி -> வந்தியத்தேவன்

வந்தியத்தேவன் <-> குந்தவை
வந்தியத்தேவன் <- மணிமேகலை

குந்தவை <- பார்த்திபேந்திர பல்லவன்

ஊமை ராணி <-> சுந்தர சோழர்

வெட்டிப்பயல் said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//பொன்னியின் செல்வன் தொடர்ச்சியை "உடையார்" என்ற
புதினத்தில் பாலகுமரன் எழுதியுள்ளதாக கேள்விப்பட்டேன்.
//
ஆமாங்க. அதில் பாண்டியனின் ஆபத்துதவிகளுக்கெல்லாம் நம்ம பொன்னியன் செல்வன் தண்டனை வழங்குவார்//

அது ஒன்னும் பெரிய தண்டனை எல்லாம் கிடையாது பாலாஜி.
உடையார் நாவலில் ஹைலட்டே...
தஞ்சைப் பெரிய கோவில் கட்டுவதை உடன் இருந்து பார்ப்பது தான்...the making of the tanjore temple...

மேலும் ராஜராஜன் மேலைச் சாளுக்கியப் போர், ராஜேந்திர சோழனுக்கு ஆட்சி மாறுவது, மற்றும் சிதம்பர தீட்சிதர்கள் கொட்டம்/சமுதாயம் இதெல்லாம் தான்!

ஒரு சுருக்கப் பதிவு போடட்டுமா? //

சீக்கிரம் போடுங்க தலைவா...

இதுக்கெல்லாம் கேக்கலாமா?

வெட்டிப்பயல் said...

//வெட்டி,
வேங்கையின் மைந்தன்னு பேர பாத்ததும் வந்தேன்.
பதிவ படிச்சுட்டேன். பின்னூட்டம் போடமத்தான் போலாம்னு நினைச்சேன்.//

பதிவு அவ்வளவு மட்டமா? :-(

//
வார இறுதி படிக்க எதுன்னு கேட்டு இருந்ததால பின்னூட்டம் போட வச்சுட்டீங்க.
இன்னும் பின்னூட்டமெல்லாம் படிக்கலை. அடுத்து ஜலதீபம் படியுங்க. 2\3 பார்ட் இருக்குமே?
//
ஆமாங்க 3 பகுதி.. ஒரு மாசமா பெட்டியில தூங்கிட்டு இருக்கா. இன்னைக்கு எடுத்துடுவோம் :-)

//ஒரு பார்ட் படிச்சுட்டு பயித்தியம் பிடிச்சு 2வது பார்ட் தேடிப்படிச்சேன்.//

தெளிஞ்சிதா?

G.Ragavan said...

படிச்சிட்டியா? முடிச்சிட்டியா? பதிவும் போட்டாச்சா? பின்னூட்டங்களும் அள்ளியாச்சா? சூப்பர்.

ஆனா பாரு. பொன்னியின் செல்வன், வேங்கையின் மைந்தனை விட...எனக்குக் கயல்விழி ரொம்பப் பிடிக்கும். அட தெரியலையா? கயல்விழிதாம்ப்பா மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் ;)

பாண்டியர்களை வில்லனாகக் காட்டும் கதைகள் ரிஜெக்டேடு குவாலிட்டி ;) (அப்பாடி..கொழுத்திப் போட்டாச்சு)

வெட்டிப்பயல் said...

// அகில் பூங்குன்றன் said...

9ஆம் வகுப்பில் படித்தது வேங்கையின் மைந்தன்
அதற்குஅப்புறம் குறைந்தது 15 தடவைகளாவது படித்தாலும் காட்சிகள்
என்றும் மனதில் இருந்து அகலாது.
அருண்மொழிநங்கையின் அமைதியான காதலும்
ரோகினியின் ஆக்ரோஷமான காதலும்,
வந்தியதேவரின் காதற்குறிப்புகளும்,
காசிபன் மற்றும் ரோகணநாட்டு மந்திரி பகையுணர்வும்,
அம்மங்கையின் கிண்டல்களும் மனதை கட்டி போடும்.
//
வரிக்கு வரி நியாபகம் வெச்சிருப்பீங்க போல.. அருமை அருமை!!!

//
கதை நடையுரையில் அகிலனை அடிச்சுக்க ஆள் இல்லைங்க.
அது வேங்கையின் மைந்தனாகுட்டும் சித்திரபாவையாகட்டும் கயல்விழியாகட்டும்
வெற்றித்திருநகராகட்டும் துனைவியாகட்டும். பின்னி பெடலெடுத்து இருப்பார்.
//
அடுத்த முறை இந்தியா போகும் போது சித்திரபாவையும், கயல்விழியும் வாங்கிடறேன். வெற்றித்திருநகர் கைல இருக்கு...

//
பாலாஜி வாய்ப்பு கிடைத்தால் சித்திரபாவை வாசித்து பாருங்கள்.
//
நிச்சயம் படிக்கிறேன் அகில்...

// 1963 - சாகித்ய அகாதமி விருது (வேங்கையின் மைந்தன்)
1975 - ஞான பீட விருது (சித்திரப்பாவை)
//
நன்றி...

//
இராஜேந்திரர் பாண்டிய முடியையும் இரத்தினஹாரத்தையும் கொண்டுவரும்
இளங்கோவிற்கு அருண்மொழிநங்கையையும்
ரோகினியையும் மணமுடித்து கொடுப்பார்
வேங்கையின் மைந்தனில்.

இராஜேந்திரர் பலவர்மனை முறியடித்து சாவக தீவுகளெங்கும் சோழகொடி
பறக்கவிட்டஇளையபல்லவனுக்கு காஞ்சனாவையும்
மஞ்சளழகியையும் மணமுடித்து கொடுப்பார் கடல்புறாவில். //

கரெக்ட்.. நீங்க தான் கரெக்டா கடைசி கேள்விக்கு பதில் சொல்லியிருக்கீங்க...

வெட்டிப்பயல் said...

//G.Ragavan said...

படிச்சிட்டியா? முடிச்சிட்டியா? பதிவும் போட்டாச்சா? பின்னூட்டங்களும் அள்ளியாச்சா? சூப்பர்.

ஆனா பாரு. பொன்னியின் செல்வன், வேங்கையின் மைந்தனை விட...எனக்குக் கயல்விழி ரொம்பப் பிடிக்கும். அட தெரியலையா? கயல்விழிதாம்ப்பா மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் ;)

பாண்டியர்களை வில்லனாகக் காட்டும் கதைகள் ரிஜெக்டேடு குவாலிட்டி ;) (அப்பாடி..கொழுத்திப் போட்டாச்சு) //

பாண்டியர்களை வில்லனா பார்த்தே பழகிடுச்சி.. இந்த கதை படிச்சா பிடிக்குமானு தெரியல.

தாய்நாட்டை அடிமைத்தளையிலிருந்து மீட்பதால் கண்டிப்பாக பிடிக்கும் :-)

குமரன் (Kumaran) said...

//பாண்டியர்களை வில்லனா பார்த்தே பழகிடுச்சி.. இந்த கதை படிச்சா பிடிக்குமானு தெரியல.
//

இதென்ன அக்குறும்பா இருக்கு? சோழர் குடி எல்லாம் பின்னால் வந்த குடி. தமிழ் வேந்தன் என்றால் அது தொடக்கத்தில் பாண்டியன் தான். குமரிக்கண்டத்தில் இருந்த தென்மதுரையை ஆண்டவனும் பாண்டியன் தான்; பின்னர் கபாடபுரத்திலும் அப்புறம் மணலூரிலும் அப்புறம் மதுரையிலும் ஆண்டவன் பாண்டியன் தான். அப்புறம் வந்தவர்கள் தானப்பா சோழனும் சேரனும். பாண்டியர் பெருமையையை பழந்தமிழ் நூல்கள் மட்டுமின்றி வடமொழி நூல்களான பாரதம், பாகவதம், இராமாயணம் எல்லாமே பேசுகின்றன.

ஏதோ பிற்கால சரித்திரப் புதினம் எழுதுபவர்கள் இப்படி சோழர்களை பாராட்டி எழுதிவிட்டதால் சோழர்கள் உயர்ந்தவர்கள் ஆகிவிடுவார்களா? எங்கள் அன்னை மீனாட்சியும் அப்பன் சுந்தரேஸ்வர பாண்டியனும் வந்த பாண்டியர் மரபு அறியாமல் பேசுகிறீர்கள்.

G.Ragavan said...

// வெட்டிப்பயல் said...
பாண்டியர்களை வில்லனா பார்த்தே பழகிடுச்சி.. இந்த கதை படிச்சா பிடிக்குமானு தெரியல. //

ஆகா...என்ன கொடுமை. பாராட்ட பாண்டியரை அவதூறாப் பேசிட்டியா? 64 திருவிளையாடல்களை நடத்திய நாட்டைப் பத்தித் தப்பாப் பேசீட்டியா?
விடுவோமா...அடுத்து ஒரு வரலாற்றுப் புதினம் எழுதப் போறேன். சோழந்தான் வில்லன். சோறுடைத்து சோறுடைத்துன்னு சொல்லிக்கிட்டே வயிறு நிறைய சோறடைத்த சோழ மன்னனை வில்லனா வெச்சுக் கதை எழுதுறேன்.

வெட்டிப்பயல் said...

//குமரன் (Kumaran) said...

//பாண்டியர்களை வில்லனா பார்த்தே பழகிடுச்சி.. இந்த கதை படிச்சா பிடிக்குமானு தெரியல.
//

இதென்ன அக்குறும்பா இருக்கு? சோழர் குடி எல்லாம் பின்னால் வந்த குடி. தமிழ் வேந்தன் என்றால் அது தொடக்கத்தில் பாண்டியன் தான். குமரிக்கண்டத்தில் இருந்த தென்மதுரையை ஆண்டவனும் பாண்டியன் தான்; பின்னர் கபாடபுரத்திலும் அப்புறம் மணலூரிலும் அப்புறம் மதுரையிலும் ஆண்டவன் பாண்டியன் தான். அப்புறம் வந்தவர்கள் தானப்பா சோழனும் சேரனும். பாண்டியர் பெருமையையை பழந்தமிழ் நூல்கள் மட்டுமின்றி வடமொழி நூல்களான பாரதம், பாகவதம், இராமாயணம் எல்லாமே பேசுகின்றன.

ஏதோ பிற்கால சரித்திரப் புதினம் எழுதுபவர்கள் இப்படி சோழர்களை பாராட்டி எழுதிவிட்டதால் சோழர்கள் உயர்ந்தவர்கள் ஆகிவிடுவார்களா? எங்கள் அன்னை மீனாட்சியும் அப்பன் சுந்தரேஸ்வர பாண்டியனும் வந்த பாண்டியர் மரபு அறியாமல் பேசுகிறீர்கள். //

குமரன்,
கல்கி எழுதன மாதிரி பாண்டியர்களோட பெருமையை பறை சாற்ற யாராவது எழுதியிருந்தா பரவாயில்லை...

நான் படிச்ச கதைல எல்லாம் பாண்டியர்கள் வில்லனாதான் இருக்காங்க. நான் என்ன பண்ண?

சுந்தர பாண்டியனா MGR நடிச்சாரு. அது சின்ன வயசுல பார்த்தது. மறந்துடுச்சு...

அந்த மாதிரி நீங்களும், ஜி.ராவும் சேர்ந்து ஒரு கதை எழுதுங்களேன். சீரியஸா தான் சொல்றேன்

குமரன் (Kumaran) said...

நாவல் எழுதுனாத் தானா? எத்தனையோ கட்டுரைகள் பாண்டியர் பெருமையைப் பற்றி இருக்கின்றன பாலாஜி. குமரி மைந்தன் கட்டுரைகள் படித்திருக்கிறீர்களா? பாண்டியர் பெருமைக்காக மட்டுமில்லை, பழந்தமிழர் பெருமை, குமரிக்கண்டம், ஆண்டுகளின் வரலாறு என்று பற்பலவற்றைப் பற்றி படிக்கலாம். இணையத்தில் தேடுங்கள்.

வெட்டிப்பயல் said...

//G.Ragavan said...

// வெட்டிப்பயல் said...
பாண்டியர்களை வில்லனா பார்த்தே பழகிடுச்சி.. இந்த கதை படிச்சா பிடிக்குமானு தெரியல. //

ஆகா...என்ன கொடுமை. பாராட்ட பாண்டியரை அவதூறாப் பேசிட்டியா? 64 திருவிளையாடல்களை நடத்திய நாட்டைப் பத்தித் தப்பாப் பேசீட்டியா?
விடுவோமா...அடுத்து ஒரு வரலாற்றுப் புதினம் எழுதப் போறேன்.
//
ஆஹா.. இதுக்காகவே நல்லா சண்டை போடலாம் போல...

//சோழந்தான் வில்லன். சோறுடைத்து சோறுடைத்துன்னு சொல்லிக்கிட்டே வயிறு நிறைய சோறடைத்த சோழ மன்னனை வில்லனா வெச்சுக் கதை எழுதுறேன். //
யாரு? மணிமுடிய ஈழத்துக்கு அனுப்பி வெச்சி அத வாங்ககூட முடியாத பாண்டியர்களை பற்றியா? எழுதுங்க எழுதுங்க... சோழர்களின் பெருந்தன்மையும் வீரமும் எப்பவுமே உங்களுக்கு வராது...

கோவில்னு சொன்னா அது தில்லையும், அரங்கமும் தான். ரெண்டுமே சோழ நாடுதான். அடுத்து நவகிரகத்துக்கு கோவில் அனைத்தும் சோழ நாட்டில் தான் இருக்கு :-)

முடிஞ்சா சோழனை வில்லனா வெச்சி , பாண்டியனை நாயகனா ஒரு புதினம் எழுதுங்க பார்க்கலாம்...

வெட்டிப்பயல் said...

//குமரன் (Kumaran) said...

நாவல் எழுதுனாத் தானா? எத்தனையோ கட்டுரைகள் பாண்டியர் பெருமையைப் பற்றி இருக்கின்றன பாலாஜி. குமரி மைந்தன் கட்டுரைகள் படித்திருக்கிறீர்களா? //

இல்லைங்களே :-(
கண்டிப்பா படிக்கிறேன்

//பாண்டியர் பெருமைக்காக மட்டுமில்லை, பழந்தமிழர் பெருமை, குமரிக்கண்டம், ஆண்டுகளின் வரலாறு என்று பற்பலவற்றைப் பற்றி படிக்கலாம். இணையத்தில் தேடுங்கள். //
சங்கம் வைத்து தமிழ் வளர்த்தவர்களாச்சே!!!

நான் சும்மா ஜி.ராக்கூட சண்டை போட்டுட்டிருக்கேன் :-)

கண்டிப்பா படிக்கிறேன் குமரன்...

Lakshmi said...

oh god,
all the older rememberance are coming..I red all the sandilyan novels with my 2 brothers and 2 sisters. I am youngest one.
Now I am in aborad, no one is near with me...tears are coming from my eyes...
Did you read Moongil Kottai. It is one of the best noval.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

பாண்டி நாட்டு பத்திப் பெருமையாத் தானே எழுதுவாரு கல்கி...
உடையாரில் கூட தஞ்சைப் பெரிய கோவில் கட்ட, பாண்டி நாட்டு அடிமை வீரர்கள் தான் பல ஐடியா கொடுப்பாய்ங்க...மெய்க்காவலை மீறி இராஜராஜர் அவிங்கள அப்படியே அணைச்சிக்குவாரு!

பிற்காலப் பாண்டிய மன்னர்களின் பேராசையும் நேர்மையின்மையும் பொதுமக்களை மதிக்காததும் தான் அவிங்க வீழ்ச்சிக்குக் காரணம்...
கதையில் இதைப் பாண்டி நாட்டு வீரர்களே சொல்லி குமுறுவார்கள்!

சோழநாடு ஒரு புதிய நாகரிகத்தின் தொட்டிலா உருவெடுக்க இதுவும் ஒரு காரணம்...

பாண்டி நாடு முத்துடைத்து
சோழ நாடு சோறுடைத்து
முத்து வேணுமா? சோறு வேணுமா??

ஹைய்யா...ஜிரா கொழுத்திப் போட்டது அணையாம இன்னொன்னும் கொழுத்திப் போட்டாச்சு! :-))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//சோழந்தான் வில்லன்//

ஆமாம்...வில்லு வைச்சிருக்கவன் வில்லன் தானே! :-)))

//சோறுடைத்து சோறுடைத்துன்னு சொல்லிக்கிட்டே வயிறு நிறைய சோறடைத்த சோழ மன்னனை//

சோறுடைத்து சோறுடைத்து சோழன் தன் வயிற்றுக்குள் சோறைத் தள்ளலையே...பாண்டி நாட்டுக்கும், கீழைச் சாளுக்கியத்துக்கும், கங்க தேசத்துக்கும், நுளம்ப பாடிக்கும் அல்லவா அரிசி அனுப்பி வைச்சான்...உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!

சரி...பாண்டவர்கள் கூடப் பாண்டியர்களாமே? எங்கோ பதிவில் தான் படித்த நினைவு!
//பாண்டவ யுத்தத்தில் பாண்டிய மன்னன் ஒருவர் போர்ச்சோறு போட்டதாக ஒரு கதை உண்டு. "பாண்டு" என்ற சொல்லும், "பண்டு" என்ற தமிழ்ச் சொல்லும் தொன்மையைக் குறிப்பன. பாண்டவர்கள் பாண்டிய அரசர்களா என்ன?//

:-))))

Ayyanar Viswanath said...

இந்த கவுஜ எலக்கியம்லாம் எனக்கு ஆவுறதில்ல ன்னு சொன்ன வெட்டிதானா இது :)

வா! ராசா வா!! இன்னும் கொஞ்ச தூரம்தான்

G.Ragavan said...

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
பாண்டி நாட்டு பத்திப் பெருமையாத் தானே எழுதுவாரு கல்கி...
உடையாரில் கூட தஞ்சைப் பெரிய கோவில் கட்ட, பாண்டி நாட்டு அடிமை வீரர்கள் தான் பல ஐடியா கொடுப்பாய்ங்க...மெய்க்காவலை மீறி இராஜராஜர் அவிங்கள அப்படியே அணைச்சிக்குவாரு! //

அடிமைப் பாண்டிய வீரர்கள்...அடடா...அதச் சொல்லிக் காட்டுறதுல என்ன மகிழ்ச்சி. ஏய் அடிமையே..உன்னை அணைச்சிக்கிறேன். நான் பெரிய ஆளு. அதான நீங்க சொல்ல வர்ரது.

// பிற்காலப் பாண்டிய மன்னர்களின் பேராசையும் நேர்மையின்மையும் பொதுமக்களை மதிக்காததும் தான் அவிங்க வீழ்ச்சிக்குக் காரணம்...
கதையில் இதைப் பாண்டி நாட்டு வீரர்களே சொல்லி குமுறுவார்கள்! //

இதெல்லாம் எந்த வரலாற்று நூல்ல இருந்து எடுத்தீங்க ரவி? வின்செண்ட் ஸ்மித்தா? நீலகண்ட சாஸ்திரியா?

// சோழநாடு ஒரு புதிய நாகரிகத்தின் தொட்டிலா உருவெடுக்க இதுவும் ஒரு காரணம்...

பாண்டி நாடு முத்துடைத்து
சோழ நாடு சோறுடைத்து
முத்து வேணுமா? சோறு வேணுமா??
ஹைய்யா...ஜிரா கொழுத்திப் போட்டது அணையாம இன்னொன்னும் கொழுத்திப் போட்டாச்சு! :-)) //

முத்த எங்கையும் பண்டமாத்தலாம்? சோத்த? வடக்க போனா சப்பாத்தி கேப்பான். மேற்க போனா ரொட்டி கேப்பான். கெழக்க போன மீனக் கேப்பான். எனக்கு ஒன்னு மட்டும் புரிஞ்சிருச்சி...சோறு தின்னு சோறு தின்னுன்னு தமிழர்களை சோற்றால் அடித்தப் பிண்டங்களாக்கி..இன்னைக்கு சர்க்கரை நோய் வரவழைக்கக் காரணமே சோழர்கள்தான். அடப்பாவமே! எவ்வளவு பெரிய திட்டம். கொடுமையான திட்டம்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அடிமைப் பாண்டிய வீரர்கள்...அடடா...அதச் சொல்லிக் காட்டுறதுல என்ன மகிழ்ச்சி//

ஜிரா...நல்லாப் பாருங்க...
அடிமைப் பாண்டிய வீரர்கள்-ன்னு சொல்லல!
நான் சொன்னது "பாண்டிய நாட்டு அடிமை வீரர்கள்" - போரில் அடிமையாக்கப்பட்ட "வீரர்கள்"!

//இதெல்லாம் எந்த வரலாற்று நூல்ல இருந்து எடுத்தீங்க ரவி?//

"கதையில்" இதைப் பாண்டி நாட்டு வீரர்களே சொல்லி குமுறுவார்கள்! என்று தான் சொல்லியுள்ளேன் ஜிரா!
வரலாற்றில் வேணும்னா வாங்க, தேடியும் பாக்கலாம்!

//முத்த எங்கையும் பண்டமாத்தலாம்? சோத்த? வடக்க போனா சப்பாத்தி கேப்பான். மேற்க போனா ரொட்டி கேப்பான். கெழக்க போன மீனக் கேப்பான்.//

சூப்பரு! எங்க போனாலும் பண்ட மாத்தணும்னா அவிங்க கிட்ட இல்லாத ஒன்னைத் தானே மாத்த முடியும்! வடக்க மேக்க போனா கோதுமைய கொடுத்தா போடா எங்க கிட்டயே இருக்கும்பான்...ஆனாச் சோறைக் கொடுத்தா மாத்திப்பான்..

போதாக் குறைக்கு வடக்கு, மேக்கு, கெழக்கு - இங்க எல்லாம் உள்ள தமிழர்களை நீங்க மறந்தது ஏனோ? அவிங்களுக்குச் சோறு வேணும்ல! அதக் கொடுத்தது சோழன்ல! :-)))

//இன்னைக்கு சர்க்கரை நோய் வரவழைக்கக் காரணமே சோழர்கள்தான். அடப்பாவமே! எவ்வளவு பெரிய திட்டம். கொடுமையான திட்டம்//

உலக சுகாதார நிறுவனம் கிட்ட தான் முறையிடணும்! ஆனா ஒங்கள அறியாம நீங்க ஒன்னு ஒத்துக்கனீங்க ஜிரா!
சர்க்கரை நோய் வரவழைக்கக் காரணமே சோழர்கள் தான். இந்த நோய் ஒலகம் பூரா இருக்கு! அப்படின்னா சோழன் ஒலகம் பூரா ஆண்டான்-னு (உயர்வு நவிற்சி, உண்மை இல்லை என்றாலும் கூட) சொல்லாம சொல்லிச் சோழனைப் பெருமைப் படுத்திட்டீங்களே! ஆகா! ஓகோ! :-))))

Unknown said...

ஆகா..கடைசியில் விவாதம் சோழர் வெர்சஸ் பாண்டியர்ன்னு ஆயிடுச்சா?சேரர்,சோழர் பாண்டியர் மூவருமே ஆதிகால மன்னர்கள்தாம்.பாண்டியர்கள் மதுரையை ஆண்ட உக்கிரபாண்டிய பூபதி (சிவன்) - மீனாட்சி வழி வந்த மன்னர்கள்.சோழர்கள் ராமனின் இஷ்வாகு வம்சத்தை சார்ந்தவர்கள்.ஒவ்வொரு சோழ மன்னன் பெயரிலும் ராமன் என்ற பெயர் கட்டாயமாக இருக்கும். ஆதித்த சோழன் பெயரே ஆதித்த கோதண்டராம சோழன் தான்.பின்னாளில் சோழர்கள் சைவத்துக்கு மாறிய பிறகும் இஷ்வாகு வம்ச பாரம்பரியத்தை விடாமல் தொடர்ந்து வந்தார்கள்.மனுநீதி சோழன் என்று ராமனின் மூதாதையர் பெயரை சூட்டிக் கொண்டார்கள்.

சேர, சோழ பாண்டிய மன்னர்கள் மூவரும் தமிழகத்தின் தொல்பெரும் மன்னர்கள். பல்லவர்கள் 7ம் நூறாண்டில் ஈரானிலிருந்து வந்து ஆட்சியை பிடித்தவர்கள்.ஈரானில் 1978ல் பதவியை விட்டு துரத்தப்பட்ட மன்னர் பெயர் அஹ்மத்ஷா பாஹ்லவி. நடுவே களப்பிரர் ஆண்ட காலம் இருந்தது.அவர்களும் மாபெரும் வீர வம்சம்தான்.இப்போது அவர்கள் முத்தரையர் என்று அழைக்கப்படுகின்றனர்.

G3 said...

ஆஹா.. இந்த பதிவும் பின்னூட்டங்களும் படிக்கவே எம்புட்டு சந்தோஷமா இருக்கு :)) நானெல்லாம் யார் கிட்டயாவது சாண்டில்யன் நாவல் படிக்கறேன்னு சொன்னா அப்படி ஒருத்தர் எழுதினாரான்னு கேப்பாங்க மக்கள்ஸ் :(

நான் முதல் முதல்ல படிச்ச நாவல் வேங்கையின் மைந்தன் தான்..அது மட்டும் தான் எங்கப்பா வீட்ல வெச்சிருந்தாரு..

//"இந்த சாண்டில்யன் எப்ப பாரு பொண்ணுங்களை வர்ணிச்சிக்கிட்டே இருப்பாரு. அதை உன் புள்ளை சாப்பிடாம கூட படிச்சிட்டே இருக்கானு" //
ஹி..ஹி.. எங்க வீட்ல எங்கப்பா தான் இந்த புக்கெல்லாம் எனக்கு அறிமுகப்படுத்தினதே :)

எனக்கும் எங்கப்பாவுக்கும் புக்க கைல எடுத்துட்டா சாப்பாடு தூக்கம்னு எதுவும் தெரியாது.. எங்கம்மா சூப்பரா திட்டுவாங்க.. அப்படி அதுல என்ன தான் இருக்கோன்னு :)

//அவர் ஆண்களையும் நன்றாக வர்ணிப்பார். //
//அவர் ஆண்களையும் நன்றாக வர்ணிப்பார். //
உண்மையோ உண்மை :)) பத்ம வியூகமெல்லாம் படம் போட்டு சூப்பரா விளக்கி இருப்பாரு..

சாண்டில்யண்துல என்னோட ஃபேவரைட் யவன ராணி தான்.. அதை அடிச்சிக்க முடியாது :)

உங்க லிஸ்ட்ல வெற்றி திருநகர் தவிர மீதி எல்லாம் படிச்சிட்டேன்.. வெற்றி திருநகர் நேத்து தான் ஆரம்பிச்சேன்.. இன்னிக்கு அநேகமா முடிச்சிடுவேன்னு நினைக்கறேன் ;))

Sridhar Narayanan said...

//இதுக்கு மேல நீங்க சொன்னா இந்த புக் பிரிண்ட் பண்ணவன் தப்புதான் :-)//
//நல்ல வேளை ஒத்துக்கிட்டீங்க. இல்லைனா Scanner தேடிருக்கனும் :-)
//
பள்ளியில் படிக்கும் பொழுது படித்த புத்தகம். அதனால் தகவல் தடுமாற்றம். சிவஞானம் ஐயாவின் பின்னூட்டம் படித்தவுடன் தவறு தெரிந்து உடன் மறுப்பு எழுதிவிட்டேன்.

இனி சரிபார்த்தே எழுதுகிறேன். பின்னூட்டம் வெளியிட்டதற்கு மிக்க நன்றி!

வெட்டிப்பயல் said...

//Sridhar Venkat said...

//இதுக்கு மேல நீங்க சொன்னா இந்த புக் பிரிண்ட் பண்ணவன் தப்புதான் :-)//
//நல்ல வேளை ஒத்துக்கிட்டீங்க. இல்லைனா Scanner தேடிருக்கனும் :-)
//
பள்ளியில் படிக்கும் பொழுது படித்த புத்தகம். அதனால் தகவல் தடுமாற்றம். சிவஞானம் ஐயாவின் பின்னூட்டம் படித்தவுடன் தவறு தெரிந்து உடன் மறுப்பு எழுதிவிட்டேன்.
//
இவ்வளவு விஷயங்களை நியாபகம் வெச்சிருக்கறதே கஷ்டம் தாங்க. நான் கதை மட்டும் தான் நியாபகம் வெச்சிருப்பேன். நான் அந்த புத்தகத்தை பார்த்து அடித்ததால் உங்க பின்னூட்டத்துக்கப்பறம் நான் எழுதியிருக்கறது நீக்கல. தப்பா எடுத்துக்காதீங்க :-)

// இனி சரிபார்த்தே எழுதுகிறேன். பின்னூட்டம் வெளியிட்டதற்கு மிக்க நன்றி! //
இவ்வளவு தகவலோட ஆர்வமா பின்னூட்டம் போடறீங்க. நான் தான் நன்றி சொல்லனும் :-)

இளங்குமரன் said...

வணக்கம் நண்பரே. வேங்கையின் மைந்தன் வெற்றித் திருநகர் போன்ற நாவல்கள் இணையத்தில் உள்ளனவா? இருந்தால் இணைப்பு அனுப்ப இயலுமா?

ssdavid63@yahoo.com
ஆவலுடன் தங்கள் பதிலுக்காகக் காத்திருக்கின்றேன்.

SurveySan said...

nice. i will get the book and start reading.

///இந்த பொன்னியின் செல்வன் படிச்சதுக்கப்பறம் வரலாற்று புதினங்கள் படிக்கறதுல ஆர்வம் ரொம்ப அதிகாமாகி///

very true. same blood. :)

Unknown said...

I finished Ponniyin selvan. Now iam going to read Vengaiyin maidhan. This interest comes to me because of Aayirathil oruvan film...