தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Friday, May 08, 2009

பாலம் - சங்கமம் போட்டிக்கு

கூரையிலிருந்து தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்த சத்தம் இரவு முழுக்க கேட்டு கொண்டிருந்தது. வானம் இன்னும் இருட்டாகவே இருந்தது. கோழிக் கூவும் சத்தமோ, பால் கறக்க கறவை மாடுகளை சொசைட்டிக்கு கூப்பிட்டு செல்லும் சத்தமோ கேட்கவில்லை. இருந்தாலும் எனக்கு தூக்கம் கலைந்துவிட்டது. இரவு முழுவதும் ஏதோ கெட்ட கனவாகவே வந்து கொண்டிருந்தது.

பாயிலிருந்து எழுந்து தாழ்வாரத்திற்கு சென்றேன். கிழவி அடுப்பங்கறையில் எருமுட்டையையும், விறகையும் வைத்து போராடிக் கொண்டிருந்தாள். அவள் ஊதாங்குழலை வைத்து ஊதியும் பெரிதாக பயனில்லாமல் இருந்தது. சீமெண்ணையை ஊத்தி முயற்சி செய்து கொண்டிருந்தாள். விட்டு விட்டு பொய்யும் மழையில் எல்லாம் ஈரமாகி இருக்கும்.

“என்னடா குமாரு, அதுக்குள்ள எழுந்திரிச்சிட்ட?”

“ஒண்ணுமில்ல. இந்த மழை சத்தத்துல சரியா தூங்க முடியல. அதான் சத்தத்துல எழுந்திரிச்சிட்டேன்”

“சரி சரி. இன்னைக்கு ஒங்க பள்ளியூடம் இருக்கா?”

“தெரியல. தொடர்ந்து மழை பெஞ்சிட்டே இருக்கு. எல்லா பள்ளிக்கூடமும் லீவு விட்டுட்டாங்க. இவுங்க புது பள்ளிக்கூடம், ரொம்ப ஸ்ட்ரிக்ட்டுனு பேர் வாங்கணும்னு லீவே விட மாட்றாங்க”

”ஏன்யா, அந்த பாலம் வேற விரிசல் விட்டுருக்குனு எல்லாம் பேசிக்கறாங்க. அதைத் தாண்டி பள்ளீயூடம் வெச்சிட்டு லீவு விடமாட்றானுங்களே. புள்ளைங்களுக்கு ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆகிடுச்சினா?”

எனக்கும் அந்த சிந்தனை தான் ஓடிக் கொண்டிருந்தது. நேற்றே அந்த விரிசலைப் பார்த்தேன். எப்படியும் மழை நின்றால் தான் அதை சரி செய்வார்கள். அந்த பக்கமாக நிறைய பேருந்துகளும், லாரிகளும் செல்வதில்லை. அதை கடந்து செல்லும் முப்பது, நாப்பது பெரிய வண்டிகளுள் நான் ஓட்டி செல்லும் பேருந்தும் ஒன்று. என்னுடைய வண்டி முழுதும் குழந்தைகள். ஊரிலிருக்கும் பணக்காரப் பிள்ளைகள் பெரும்பாலும் அந்த பள்ளியில் தான் படிக்கின்றனர். அனைவரும் என் பேருந்தில் தான்.

”அதெல்லாம் ஒண்ணுமில்ல. யாரோ சும்மா கதை கட்டி விட்டுருக்காங்க. அப்படி ஏதாவது இருந்தா நிச்சயம் லீவு விட்ருவாங்க”

சொல்லிவிட்டு போய் மீண்டும் படுத்துக் கொண்டேன். இன்னும் ஒரு மணி நேரம் தூங்கலாம். தூக்கம் வரவில்லை. ராத்திரி முழுக்க மழை பெய்து கொண்டிருந்திருக்கிறது. பள்ளி லீவு விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். கொஞ்ச நேரம் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தேன்.  மெதுவாக கண்விழித்து பார்த்தேன். சுவற்றில் சிவப்பாக மரவட்டை ஒன்று ஊர்ந்து கொண்டிருந்தது. சுவற்றின் சுண்ணாம்பு விழுந்து லேசான பள்ளமானப் பகுதி வந்ததும் அது அப்படியே நின்றுவிட்டது. பிறகு அப்படியே பின்னால் சென்று அதை சுற்றிக் கொண்டு சென்றது. 

எழுந்து போர்வையை மடித்து வைத்து பாயை ஓரமாக எடுத்து வைத்துவிட்டு, சட்டையை மாட்டிக் கொண்டு வெளியே கிளம்பினேன். நேராக லஷ்மி ஒயின்ஸிற்கு நடந்தேன். அது இருபத்தி நான்கு மணி நேரமும் இயங்கும் என்பது எனக்கு தெரியும். காலை நேரத்தில் அண்ணாச்சி இருப்பதற்கான சாத்தியங்கள் மிக அதிகம். நான் எதிர்பார்த்த படி அண்ணாச்சி அங்கே இருந்தார்.

“என்னடா குமாரு. இந்த நேரத்துல இங்க வந்திருக்க? சரக்கு போட்டுட்டு வண்டில ஏறுன, அப்படியே அறுத்துபுடுவேன். கால”

“இல்லைங்க அண்ணாச்சி. இன்னைக்கு பள்ளிக்கூடம் இருக்கானு கேட்டுட்டு போகலாம்னு வந்தேன்”

“இது என்ன கேள்வி. புதன் கிழமை அதுவுமா எதுக்கு பள்ளிக்கூடம் லீவு விடுவாங்க? இன்னைக்கு காந்தி பொறந்த நாளுக்கூட கிடையாதே”

”தொடர்ந்து மழை பெஞ்சிட்டு இருக்கு அண்ணாச்சி. அதான் கேட்டேன்”

“ஏன்டா புள்ளைங்க எல்லாம் மரத்தடியிலையா படிக்க போதுக? அவ்வளவு பெரிய பில்டிங் கட்டிருக்கறேன். எதுக்கு மழைக்கு லீவு விடணும்? எனக்கு ஒயின்ஸ் ஷாப் மாதிரி தான் பள்ளிக்கூடமும். அதுக்கு அவ்வளவு சீக்கிரம் லீவு எல்லாம் விட முடியாது. புரியுதா?”

“இல்லைங்க அண்ணாச்சி. பாலம் லேசா விரிசல் விட்டிருக்கு. அதான்”

”எவன்டா அவன். புரியாத பையனா இருக்கான். அது என்ன பெரிய பாம்பன் பாலமா? கண்ணை மூடி திறந்தா அதை தாண்டிட போற. அதுக்குள்ளவா அது உடைஞ்சிட போகுது. அதுவுமில்லாம நான் பள்ளிக்கூடம் லீவு விட்டா உடனே மத்த பள்ளீக்கூடக்காரனுங்க எல்லாம் இவன் மழைக்கு பள்ளிக்கூடம் லீவு விடறானே. ஒயின்ஸ் ஷாப்புக்கு லீவு விடுவானு கேட்டுடமாட்டாங்க?”

“அது இல்லைங்க அண்ணாச்சி”

“எவன்டா அவன். சொன்னதையே சொல்லிட்டு இருக்கான். ஒழுங்கா பஸ் எடுத்துட்டு பசங்களைக் கூப்பிட்டு போக முடியுமுனா சொல்லு. இல்லை இன்னையோட நின்னுக்கோ. நான் வேற ஆளைப் பார்த்துக்கறேன்”

அந்த இடத்தை விட்டு கிளம்பினேன். வீட்டிற்கு சென்று திண்ணையில் கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தேன். அவர் சொன்ன மாதிரி கண்ணை மூடி திறப்பதற்குள் பாலத்தை தாண்டிவிட முடியாது என்றாலும் பத்து இருபது நொடிக்குள் கடந்துவிடலாம் தான். ஆனால்... மனதில் ஏதோ ஒரு மூலையில் ஒரு மாதிரி பிசைந்து கொண்டிருந்தது. அது என்ன என்று புரியவில்லை.

குளித்து விட்டு கிளம்பினேன். ஏழு மணிக்கு கிளம்பினால் தான் சரியாக இருக்கும். பசங்களை விட்டுவிட்டு ஒன்பது முப்பது மணிக்கெல்லாம் வீட்டிற்கு வந்துவிடலாம். சரியாக ஏழரை மணிக்கு ஒயின்ஸ் ஷாப் எதிரில் இருக்கும் பேருந்தில் இருந்தேன். வழியில் மணிகண்டன் ஏறிக் கொள்வான். அவன் தான் கிளினர். கிளினர் என்று சொல்வதை விட பஸ்ஸில் வரும் வாண்டுகளை மேய்ப்பவன் என்று சொல்லலாம். அவன் இல்லை என்றால் ஒவ்வொரு குழந்தையும் என்ன அட்டகாசம் செய்யும் என்றே சொல்ல முடியாது. எப்படியும் அடுத்த மாதத்திற்குள் அனைத்து ஜன்னல்களையும் சின்ன சின்ன கம்பிகளால் அடைத்து விடலாம் என்று அண்ணாச்சி சொல்லியுள்ளார்.

மணிகண்டன், கணக்குபிள்ளைத் தெரு முனையில் நின்றிருந்தான்.

“பள்ளிக்கூடம் லீவா இருக்கும்னு நினைச்சேன். வழக்கம் போல சர்ருனு வந்துட்ட?”

“அண்ணாச்சிக்கிட்ட கேட்டேன். அதெல்லாம் இல்லைனு சொல்லிட்டாரு”

“நல்ல வேளை. லீவு இல்லை. ராத்திரி முழுசா கூரைல இருந்து வீட்டுக்குள்ள தண்ணி சொட்டிக்கிட்டே இருந்துது. தூங்கவே முடியல. தரையெல்லாம் ஜில்லுனு இருந்துது. பள்ளிக்கூடத்துல புதுசா கட்டுன ரூம்ல எதுலயாவது தூங்கலாம்னு தான் சீக்கிரமே கிளம்பி வந்துட்டேன்”

“சரி சரி. அந்தப் பாலம் எப்படி இருக்குனு யாராவது ஏதாவது சொன்னாங்களா?”

“அதான் நாம நேத்தே பாத்தோமே. விரிசல் விட்டிருக்கு. இப்ப எப்படி இருக்குனு தெரியல. நாம தான் மொதல்ல போறோம்னு நினைக்கிறேன். நீ தான் வந்து சொல்லனும்”


நன்றாக தூறிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு தெருவிலும் பெற்றோர்கள் ஒரு கையில் குடையும் மற்றொரு கையில் பிள்ளைகளை பிடித்து நின்று கொண்டிருந்தனர். பிள்ளைகளும் அவர்கள் தூக்கி கொண்டிருக்கும் அவர்களை விட அதிக எடை இருக்கும் புத்தக பைகளும் நனையாமல் காக்க போராடிக் கொண்டிருந்தார்கள். பெற்றோர்கள் பெரும்பாலும் நனைந்து கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு குழந்தையும் பேருந்தில் நுழைந்ததும் அவர்கள் ஷூவில் இருக்கும் சேறை படிகளிலே துடைத்துவிட்டு சென்று கொண்டிருந்தார்கள்.

ஒவ்வொரு பெற்றோர்களின் முகத்திலும் இந்த மழையிலும் பிள்ளையை பள்ளிக்கு அனுப்பி படிக்க வைக்கிறோம் என்ற பெருமிதம் இருந்தது. ஒவ்வொரு குழந்தையின் முகத்திலும் பள்ளி விடுமுறை விடவில்லை என்ற ஏமாற்றமும், விடமாட்டார்களா என்ற ஏக்கமும் இருந்தது. எனக்கு மட்டும் அடி மனதில் ஏதோ ஒன்று உறுத்தி கொண்டிருந்தது. இந்த பெற்றோர்கள் அண்ணாச்சிக்கு போன் செய்து சொல்லியிருந்தால் இன்று விடுமுறை விட்டிருக்கலாம். இப்படி அவுங்களே அனுப்பும் போது நமக்கு என்ன வந்துச்சு? இதுங்கள பள்ளிக்கூடத்துல விட்டுட்டு நிம்மதியா வந்து தூங்கலாம்.

திடீரென்று ஒரு எண்ணம் வந்தது. கடைசி தெருவில் இருக்கும் பிள்ளையாருக்கு சூடம் ஏற்றிவிட்டு செல்லலாம் என்று தோன்றியது. அந்தத் தெரு முனையில் நிறுத்திவிட்டு இறங்கினேன். மணிகண்டனுக்கு ஒன்றும் புரியவில்லை. இன்று எந்த குழந்தையும் சத்தம் போடாமல் அமைதியாக இருந்ததால் அவனுக்கு வேலை இல்லை. அவனும் என்னுடன் இறங்கினான்.

பக்கத்திலிருக்கும் நாயக்கர் கடையில் சூடமும் தீப்பெட்டியும் வாங்கி விட்டு அந்த தெரு முனை பிள்ளையாருக்கு ஏற்ற சென்றேன். சூடம் ஏற்றும் மாடமும் ஈரமாக இருந்தது. ஏற்றினால் அணைந்துவிடும் அபாயம் அதிகமா இருந்தது. அப்படி அணைந்தால் சுத்துமாக நொறுங்கிவிடுவேன் என்ற பயம் மனதை கவ்வியது. அதனால் அந்த சூடத்தை அப்படியே வைத்துவிட்டு வந்து வண்டியை எடுத்தேன். மணிகண்டனும் எதுவும் பேசாமல் வண்டியில் ஏறினான்.

கடைசித் தெருவில் இருக்கும் குழந்தையையும் ஏற்றி கொண்டு, திரும்பி பார்த்தேன். சில காலி இடங்கள் தெரிந்தாலும், நிறைய குழந்தைகள் வந்திருந்தனர். இன்னும் பத்து நிமிடத்தில் பாலத்தை கடந்து விடலாம். மணிகண்டனிடம் ஏதாவது பேசி நேரத்தைப் போக்கலாம் என்று யோசித்தேன். ஆனால் வார்த்தைகள் எதுவும் கிடைக்கவில்லை. மனம் முழுதும் வெறுமையாக இருந்தது. இப்படி என்றும் எனக்கு தோன்றியதில்லை.

சரியாக பாலத்தின் அருகில் வண்டி நின்றுவிட்டது. நின்று விட்டது என்று சொல்வதைவிட நான் சொல்லிய வேலையை செய்தது என்று சொல்லலாம். வண்டி நின்ற இடத்திலிருந்து பாலத்திலிருந்த விரிசல் சரியாக தெரியவில்லை. மழை பெய்யாமலிருந்தால் ஒரு வேளை தெரிந்திருக்கலாம். பாலத்திற்கு அடியில் தொடர் மழையால் ஓடும் ஆற்று நீரின் சத்தம் மட்டும் நன்றாக கேட்டுக் கொண்டிருந்தது.

வண்டி மீண்டும் ஊர் நோக்கி புறப்பட்டது. குழந்தைகளுக்கு ஒன்றும் புரியவில்லை. மணிகண்டனுக்கும்.

“ஏன்ன வண்டிய ரிவர்ஸ் எடுத்துட்டு ஊருக்கு திரும்ப போற?”

ஒரு நிமிட யோசனைக்குப் பிறகு சொன்னேன்...

 “இன்னைக்குப் பள்ளிக்கூடம் லீவு”

Sunday, May 03, 2009

Tenant Commandments - நான் பார்த்த நாடகம்

எனக்கு ரொம்ப நாளா மேடை நாடகம் பார்க்கணும்னு ஆசை. ஒரு வழியா நேத்து அது நிறைவேறியது. நியூ இங்கிலாந்து தமிழ் சங்கம் நடத்திய சித்திரை திருவிழாவில் ஸ்டேஜ் ஃபிரெண்ட்ஸ் (Stage Friends) நடத்திய டெனண்ட் கமெண்ட்மெண்ட் (Tenant Commandment) நாடகம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.


இது பல ஆண்டுகளுக்கு முன் எஸ்.வி.சேகர் நாடகக் குழுவில் க்ரேஸி மோகன் இருந்த பொழுது நடத்தப்பட்ட நாடகம். அதை தூசி தட்டி ஒரு சில மாற்றங்களுடன் ஸ்டேஜ் பிரெண்ட்ஸால் நடத்தப்பட்டது. கதை, வசனம் : க்ரேஸி மோகன். இயக்கம் : குரு. எஸ்.வி.சேகர் ஏற்று நடத்திய பாத்திரத்தையும் அவரே செய்தார். 

இது நாடகத்தைப் பற்றிய என் விமர்சனமல்ல. எனது எண்ணங்கள். அவ்வளவே.

நாடகத்தின் கதை இது தான், வீட்டு சொந்தக்காரரால் சிரமத்திற்குள்ளாகும் வாடகைக்கு குடியிருக்கும் குடித்தினக்காரர், சொந்தமாக வீடு கட்டி, அதில் வாடகைக்கு குடியேறுபவர்களை பத்து விதிகள் விதித்து கொடுமைப்படுத்தி வீட்டைவிட்டு துரத்துகிறார். அவருடைய லட்சியம் அதைப் போல் நூறு பேரைத் துரத்துவது தான். அவருடைய இந்த செயலை வெறுக்கும் அவர் மகனும், வீட்டு புரோக்கரும் சேர்ந்து அவருக்கு புத்தி வர வைக்கிறார்கள். இரண்டேகால் மணி நேர நாடகத்தை இரண்டு வரிகளில் சொல்வது கஷ்டம். 



சாது சங்கரனா நடிச்ச மோகன் கொன்னுட்டார். அட்டகாசமான நடிப்பு. செம எக்ஸ்ப்ரஷ்ன்ஸ் அண்ட் டைம்லி டயலாக் டெலிவரி. அவரால அட்டகாசமா காமெடி ரோல் பண்ண முடியும். அதே மாதிரி ரொம்ப ரொம்ப இயல்பா நடிச்சிருக்காரு அய்யாசாமி கேரக்டர்ல நடிச்ச ரமணி. அவர் நிஜமா நடிச்ச மாதிரியே தெரியல. அவ்வளவு இயல்பு. அவர் டயலாக் இல்லாதப்பவும் சரியான முகபாவம் காண்பித்து கொண்டிருந்தார். இவுங்க ரெண்டு பேர் நடிப்பும் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.


நாடகத்தை இயக்கி, பத்து வேடத்தை (உடனே தசாவதாரம் கமலுக்கு போட்டியானு நினைச்சிடாதீங்க. இது கேரக்டர் பேரு) ஏற்று எந்த குறையும் இல்லாமல் செய்தார் குரு. அவருடைய நடிப்பிலும் எந்த குறையும் இல்லை. நஷ்ட ஈடு நாதமுனி கேரக்டர் இன்னும் பலமாக அமைத்திருக்கலாம். அவர் எந்த குறையும் இல்லாமலே நடித்தார். அதே போல் செல்வராஜ் கேரக்டர் செய்த பாஸ்கர், கே.டி. பெருமாள் பாத்திரத்தில் நடித்த ராம், ஆரோக்கிய சாமி பாத்திரத்தில் நடித்த அரவிந்த், ஆதிகேசவன் கேரக்டரில் நடித்த ஸ்ரீநிவாசன், நவநீதமாக நடித்த சுரேஷ், குழந்தைசாமி பாத்திரத்தில் நடித்த கணேஷ் சந்திரா அனைவரும் நன்றாகவே நடித்திருந்தார்கள். குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா...

இனி என் இரண்டணாக்கள் :

அமெரிக்காவில் நடத்தப்படும் தமிழ் நிகழ்ச்சிகளுக்கு பெரும்பாலானோர் வருவது தங்கள் பிள்ளைகளுக்கு இதையெல்லாம் பார்க்க வைத்து, அவர்களும் பெருமைப்பட தான். அதனால் இங்கே நடத்தப்படும் நிகழ்ச்சிகள் சில்ட்ரெண் ஃபிரெண்ட்லியாக (Children Friendly) இருக்க வேண்டும். ஆனால் இந்த நாடகத்தில் நிறைய டபுல் மீனிங் டயலாக்ஸ், மேலும் நிறைய so called கெட்ட வார்த்தைகள். அதை இவர்கள் சரி செய்ய வேண்டும்.

அடுத்து டயலாக்ஸ் இன்னும் கொஞ்சம் பிரில்லியண்டாக இருந்திருக்கலாம். என்னடா இவன் க்ரேஸி டயலாக்கையே குறை சொல்கிறான் என்று நினைக்க வேண்டாம். எடுத்துக்காட்டிற்கு வீட்டு புரோக்கர் பரமசிவத்திடம் ஆதிகேசவன் ”உங்க வீட்டு ஓனர் உங்களை கொடுமைப்படுத்தினத்துக்கு நீங்க அவரை பழிவாங்காம டெனண்ட்ஸை பழி வாங்கறது என்ன நியாயம்?” அப்படினு கேக்கற இடத்துல அவர் சொல்ற டயலாக்ஸ் கச கசனு இருக்கு.

அதுக்கு பதிலா, 

ப்ரோக்கர் : உங்க வீட்டு ஓனர் உங்களை கொடுமைப்படுத்தினத்துக்கு நீங்க அவரை பழிவாங்காம டெனண்ட்ஸை பழி வாங்கறது என்ன நியாயம்?

ஆதிகேசவன் : வீட்டு ஓனரை பழி வாங்கறது எப்படினு உனக்கு தெரியுமா?

ப்ரோக்கர் : தெரியாதே

ஆதிகேசவன் : எனக்கும் தெரியலை. அதனால தான் வீட்டில குடியிருக்க வரவங்களை நான் பழிவாங்கறேன்.

அப்படினு சொல்லியிருக்கலாம்.



அப்பறம் ப்ரோக்கர் பரமசிவமாக நடித்த ராஜகோபால் எதிர்ல இருக்கறவரைப் பார்த்தே பேச மாட்றார். எப்பவுமே ஆடியன்ஸை பார்த்தே பேசறார். செம காமெடியா இருந்தது. எதிர்ல இருக்கறவர் ஏதாவது பேசினா இவர் நேரா நம்மல பார்த்து பேசறார். அடுத்து கண்ணை சிமிட்டி சிமிட்டி பேசினா வெக்கப்படறதுனு நினைச்சிட்டார் போல கமலா கேரக்டர்ல நடிச்ச கிரித்திகா. அப்பறம் அவுங்க ரொம்ப டென்ஷனா நடிச்ச மாதிரி இருந்தது. இயல்பா இல்லை. அதே மாதிரி மகமாயி மங்களமா நடிச்ச ராதிகா மேடமும் ரொம்ப டென்ஷனா நடிச்ச மாதிரி இருந்தது.

அப்பறம் கவுண்டர்னு சொல்ற சாது சங்கரன், ஐயர் ஆத்து பாஷைல பேசறார். ரியலிஸ்டிக்கா இல்லை.

நியூ இங்கிலாந்து தமிழ் சங்கத்தினருக்கு ஒரு வேண்டுகோள். நாடகம் நடந்த வேகத்தை விட குழந்தைகள் அங்க இங்கனு ஓடிட்டு இருந்த வேகம் தான் அதிகமா இருந்தது. இது நாடகம் பார்க்கறவர்களை பாதிப்பதை விட நாடகத்தில நடிப்பவர்களுக்கு அதிக இடையூறாக இருக்கும். அவர்களுடைய கவனமும் சிதற வாய்ப்பிருக்கிறது. அதனால் பெற்றோர்களுக்கு முன்னெச்செரிக்கையாக இதை அறிவிக்கலாம். அதே போல் சினிமா தியேட்டர் செல்லும் போது செல்ஃபோன்களை அணைப்பதை போல நாடகம் ஆரம்பிப்பதற்கு முன் அனைவரையும் அதை அணைக்க சொல்லிவிடலாம். நடிப்பவர்களுக்கு இடையூறாக இல்லாமல் இருக்கும். அதே போல் அவர்களுக்கு மரியாதை செலுத்துவதை போலவும் இருக்கும்.

ஒரு நல்ல மாலை பொழுதை எங்களுக்கு அமைத்து கொடுத்த நியூ இங்கிலாந்து தமிழ் சங்கத்துக்கும், ஸ்டேஜ் ஃபிரெண்ட்ஸ் குழுவினருக்கும் என் நன்றிகள் பல. 

Stage Friends, You guys really rock. All the best!!!