தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Tuesday, March 03, 2009

கொலை செய்வது எப்படி - Beta Version

இந்த கதை போன கதையின் இன்னொரு வடிவம் தான். இது தான் முதலில் எழுதிய கதை. பீட்டா வெர்ஷனில் கிடைத்த Feedbackனால் அந்த நடைக்கு மாறியது. மீண்டும் இதை ஏன் பதிவிட்டேன் என்றால், உங்களிடமும் கருத்து கேட்கலாம் என்ற எண்ணம் தான். வலைப்பதிவின் பயன்களில் முக்கியமான ஒன்றும் அது தானே. உடனுக்குடன் வாசகர்களின் கருத்தை அறிய முடியும்.  அதனால் இந்த இரு கதைகளையும் ஆராய்ந்து அலசி, துவைத்து காய போடுமாறு பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்... இதற்கு அடுத்து நிச்சயம் இப்படி ஒரு கதை அடுத்த சில வாரங்களுக்கு வராது என்பதையும் சொல்லி கொள்கிறேன் :)

........................

வாழ்க்கையில ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சியம் இருக்கும். அவனுக்கும் அப்படி தான். ஏதாவது ஒரு தினசரி பத்திரிக்கையில் முதல் பக்கத்தில் அவன் படம் பெயரோடு வர வேண்டும். ஒரு முறை அவன் கிராமத்தில் நடந்த சினிமா ஷூட்டிங் பார்க்க செல்லும் போது கூட்டத்தோடு அவன் இருந்த படம் பத்திரிக்கையில் வந்திருந்தது. அந்த படத்தில் அவனை அடையாளம்  கண்டுபிடிப்பது அவனை தவிர யாராலும் முடியாது. இருந்தாலும் அதை சேகரித்து வைத்திருந்தான்.

அவன் தந்தை ஆரம்பித்த ரைஸ் மில் அவனுக்கு நல்ல வருமானத்தை கொடுத்தது. அதனால் அவனுக்கு பணத்திற்கு குறைவில்லை. பணத்தை செலவழித்து சில காரியங்களை செய்து அவன் லட்சியத்தை அடைய முயற்சி செய்தான். ஆனால் எதுவும் எடுபடவில்லை. ஏதோ ஒரு புத்தகத்தில் படித்ததை வைத்து, இருநூறு மரக்கன்றுகளை நட்டான். அன்னதானம் நடத்தினான். ஆனால் 
அது நான்காம் பக்கத்தில் கூட வரவில்லை. அவனுக்கு அதை யாரிடம் சொல்லி பத்திரிக்கையில் வர வைப்பது என்று தெரியவில்லை.

அவனுடைய மில்லில் வேலை செய்யும் சண்முகத்தின் மச்சான் துரை ஒரு கட்சியில் வட்ட செயலாளராக இருப்பதாக அறிந்தான். துரையின் படம் அடிக்கடி பத்திரிக்கையில் வருமென்று சண்முகம் கூறினான். அதனால் இவனும் அந்த கட்சியில் சேர்ந்தான். ஆனால் அவனுக்கு அரசியல் சுத்தமாக புரியாது. கட்சி நிதிக்காக இருபதாயிரம் பணம் கூட செலுத்தினான். ஒரு முறை அந்த ஊருக்கு மத்திய அமைச்சர் ஒருவர் நிதி திரட்ட வந்திருந்தார். மேடையில் வைத்து பத்தாயிரம் குடுத்தால் அவன் படம் பத்திரிக்கையில் வர வாய்ப்பிருப்பதாக துரை கூறினான். 

சரி, இது தான் கடைசி செலவு என்று முடிவு எடுத்து பணத்துடன் சென்றான். திடீரென்று அவன் பெயரை சொல்லி இப்பொழுது பேசுவார் என்று யாரோ சொல்ல, இவனுக்கு எதுவும் புரியாமல் நின்று கொண்டிருந்தான். வெறும் பணம் கொடுத்து போட்டோ எடுத்தால் போதுமென்று நினைத்தவனுக்கு இது அதிர்ச்சியாக இருந்தது. அவனை ஏதாவது பேசிவிட்டு இருபதாயிரம் பணத்தை  கொடுக்குமாறு துரை கூறி மேடைக்கு அனுப்பினான். இது அவன் ஏற்பாடு தான் என்று அவனுக்கு அப்பொழுது தான் புரிந்தது. 

இது வரை மேடையை கூட பார்க்காதவனுக்கு மேடையில் ஏறி மக்கள் முன் பேசுவது என்பது நினைத்து கூட பார்க்க முடியாததாக இருந்தது. மைக் முன் நின்றதும் அவனை அறியாமல் அவன் கால்கள் நடுங்கின. அவன் இதய துடிப்பு அவன் காதுகளுக்கு நன்றாக கேட்டது. எங்கே அது மைக் வழியாக அனைவருக்கும் கேட்டு விடுமோ என்று கூட நினைத்தான். வாய் குழறி பேச ஆரம்பித்தான். ”என் முன்னால் இருக்கும் மக்களே, என் பின்னால் இருக்கும் அமைச்சரே, கட்சி மக்களே அனைவருக்கும் என் வணக்கம்” என அவன் சொல்லி முடிக்கும் முன் அவனை நைசா அந்த இடத்திலிருந்து நகர்த்தினார் ஒரு கரை வேட்டி பார்ட்டி. அதற்கு மேல் அவன் அந்த பக்கம் செல்லவில்லை.

திடீரென்று அவன் மனதில் அந்த விசித்திர எண்ணம் தோன்றியது, நல்லது செய்து முதல் பக்கத்தில் வருவதை விட தவறு செய்து முதல் பக்கத்திற்கு வருவது மிகவும் எளிது என்று. என்ன தவறு செய்யலாம் என்று சிந்தித்த பொழுது, ஆசிரமம் அமைப்பது, கொள்ளை அடிப்பது, கொலை செய்வது. இது மூன்றும் அவன் மனதில் உடனே தோன்றியது. ஆசிரமம் அமைத்தால் அடுத்த இரண்டும் செய்ய எளிதாக வாய்ப்பு கிடைக்கும். ஆனால் அதற்கு வட மொழியெல்லாம் பேச கற்று கொள்ள வேண்டும். பேச்சு சாமார்த்தியம் வேண்டும். அது அவனுக்கு இல்லை என்று அவனுக்கே தெளிவாக தெரிந்திருந்தது.

கொள்ளை அடிப்பதற்கும் நிறைய பயிற்சி வேண்டும். மேலும் முதல் திருட்டிலே மாட்டி கொண்டால் முதல் பக்கத்தில் நிச்சயம் வராது. அதனால் கொலை தான் சிறந்த வழி என்று அவன் மனதில் தோன்றியது. கொலை செய்வது எப்படி என்று ஏதாவது புத்தகம் இருக்கிறதா என்று தேடினான். குண்டாவது எப்படி, ஒல்லியாவது எப்படி, சமைப்பது எப்படி, சாப்பிடுவது எப்படி என்ற பல எப்படிக்கள் இருந்தன. ஆனால் கொலை செய்வது எப்படி இல்லை. அதை பேசாமல் நாமே எழுதினால் வரலாற்றில் நம் பெயர் நிச்சயம் நிற்கும் என்ற முடிவுக்கும் வந்தான்.

முதல் கொலையை அடுத்த நாளே செய்வது என்ற முடிவுக்கு வந்தான். காலை நான்கு மணிக்கு எழுந்து வெளியே சென்றான். ஏரிக்கரை பக்கம் சைக்கிளை நிறுத்திவிட்டு தண்ணி பம்ப் பக்கம் நடந்து சென்றான். கையில் ஒரு கத்தி வைத்திருந்தான். அங்கே யாரும் இல்லை. முதலில் வருபவரை குத்திவிட்டு சென்று விட வேண்டும் என்று முடிவு செய்திருந்தான். முப்பது நிமிடமாக யாரும் அந்த பக்கம் வரவில்லை. சரி என்று வீட்டிற்கு புறப்பட்டான். அவன் போகும் வழியில் எதிரில் ஒடிசலான தேகத்துடன் வயதான ஒரு பாட்டி நடந்து வந்து கொண்டிருந்தாள். 

உடனே மின்னல் வேகத்தில் அந்த பாட்டியை நோக்கி சைக்கிளை விட்டான். 
அவள் அருகில் சென்றதும் கையிலிருந்த கத்தியை எடுத்து அந்த பாட்டி வயிற்றில் சொருகினான். அந்த பாட்டியின் சத்தம் ஒரு மைல் தூரத்திலிருந்த நாயிற்கு கூட கேட்கவில்லை. மூன்று முறை குத்திவிட்டு, அந்த பாட்டி அந்த இடத்தில் சரிந்து உயிர் விட்டு கொண்டிருந்ததை பார்த்ததும் அவன் கண்களில் பயம் தெரிந்தது. கத்தியை உடனே துண்டால் சுற்றி பையினுள் வைத்து வேகமாக மில்லிற்கு சென்றான். அந்த பையை அரிசி வேக வைக்கும் பாய்லரில் போட்டான். பிறகு அவன் அறையில் சென்று படுத்து கொண்டான்.

நடந்த நிகழ்ச்சி மீண்டும் அவன் கண் முன் தோன்றியது. கொலை செய்வது இவ்வளவு சுலபமா என்ற எண்ணம் வந்தது. அடுத்த முறை இளசாக யாரையாவது கொள்ளலாம் என்று முடிவு செய்திருந்தான். இன்னும் நன்றாக திட்டுமிட்டு கொன்றால் பின்னால் புத்தகம் எழுத வசதியாக இருக்கும் என்றும் நினைத்து கொண்டான். அடுத்து மில்லில் வேலை செய்யும் யாரையாவது கொள்ளலாம் என்ற எண்ணம் தோன்றியது. ஆனால் அப்படி யாராவது செத்தால் முதல் சந்தேகம் அவன் மேல் தான் வரும். அதனால் புத்தகம் எழுதுவது பாதிக்கப்படலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதனால் சம்பந்தமில்லாதவர்களை கொலை செய்து முடித்து விட்டு பிறகு சொந்தக்காரர்களை கொலை செய்வது எப்படி என்று கற்று தரலாம் என்ற முடிவுக்கும் வந்தான். அவனுக்கு ஏதோ கொலை செய்வதில் பல வருட பயிற்சி ஏற்பட்டதை போல் தோன்றியது.

அவன் தூங்கி எழுந்த போழுது எல்லாம் கனவா என்ற பிரமை ஏற்பட்டது. இல்லை அது நிஜம் தான் என்று உறுதிப்படுத்தி கொண்டான். வழக்கம் போல் வேலையை தொடங்கினான். மில்லில் வேலை செய்யும் குமார்தான் அவனுக்கு அந்த விஷயத்தை சொன்னான். காத்தாயி கிழவியை யாரோ திருடன் நகைக்காக கொலை செய்துவிட்டான் என்று. அது எப்படி திருடன் தான் கொலை செய்தான் என்று தெரிந்தது என் அவன் விசாரித்ததற்கு, அந்த பாட்டியின் கயிற்றிலிருந்த இரண்டு சவரன் சங்கிலியை காணவில்லை என்று அவள் மருமகள் போலிசாரிடம் சொன்னதாக சொன்னான். 

ஒரு வேளை அந்த பாட்டி இறக்கும் நேரத்தில் அந்த பக்கம் ஏதாவது ஒரு திருடன் வந்திருக்க வேண்டும். அவன் விஷயம் புரியாமல் சங்கிலியை அறுத்து சென்றிருக்க வேண்டும் என்று நினைத்து கொண்டான். முதல் கொலை இப்படி ஆகி போனதில் அவனுக்கு ஒரு வருத்தம். எங்கே அது அவன் கணக்கில் வராமல் போய் விடுமா என்று. அடுத்த வாரம் அவனுடைய இரண்டாவது கொலையை செய்ய வேண்டும் என்று நினைத்து கொண்டான். இந்த முறை தண்ணீர் பம்ப் அருகே காத்திருந்து அங்கே வரும் முதல் பெண்ணை கொல்லலாம் என்று முடிவு செய்திருந்தான். 

அந்த நாள் வந்தது. இந்த முறை நான்கு முடிந்து இருபது நிமிடமிருக்கும் பொழுது கிளம்பினான். சென்ற முறை போலவே ஏரிக்கரை அருகே நிறுத்திவிட்டு தண்ணீர் பம்பிற்கு வலது புறமிருக்கும் முள்ளு செடிகளுக்கு பின்னால் சென்று அமர்ந்து கொண்டான். வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு அவன் அங்கே இருப்பது தெரியாது. அந்த பக்கம் ஒரு இருபது அடி தாண்டி போனால் பீக்காடு. அங்கே முடித்துவிட்டு ஏரிக்கு சென்று சுத்தம் செய்து கொள்வார்கள். ஆனால் தண்ணீர் பம்ப் அருகே யாரும் அப்படி செய்யமாட்டார்கள். 

ஒரு பத்து நிமிடம் அப்படியே அமைதியாக உட்கார்ந்திருந்தான். தூரத்தில் ஒரு உருவம் கையில் குடத்துடன் தெரிந்தது. இது நிச்சயம் இளசு தான் என்று அந்த உருவத்தை பார்த்ததும் தெரிந்துவிட்டது. இந்த முறை கத்தியால் குத்திவிட்டு முள் காட்டில் தூக்கி போட்டுவிட்டு செல்லலாம் என்று முடிவு செய்திருந்தான். எப்படியும் ஒரு மணி நேரத்தில் தெரிந்துவிடும். ஆனால் அதற்குள் அவன் சாட்சி எதுவுமில்லாமல் தடையங்களை அழித்துவிட்டு தூங்கி கொண்டிருப்பான். 

அந்த உருவம் அவன் அருகில் நெருங்கி வந்தது. அருகில் வந்து தண்ணிர் அடிக்க ஆரம்பித்ததும் பின்னால் சென்று வாயை பொத்தி வயிற்றில் கத்தியால் குத்திவிடலாம் என்று முடிவு செய்தான். கை ரேகையை பத்தி அவனுக்கு பெரிதாக அக்கறை இல்லை. எப்படியும் அவன் மேல் யாருக்கும் சந்தேகம் வராது என்று நம்பினான். அந்த உருவம் அருகில் வந்து குடத்தை வைத்துவிட்டு, பம்பில் நான்கு ஐந்து முறை அடித்துவிட்டு மீண்டும் முன்னால் வந்து குடத்தை கழுவியது. மீண்டும் குடத்தை வைத்து அடிக்க ஆரம்பித்தது. 

மெதுவாக அந்த முள் மரத்தை சுற்றி கொண்டு அந்த உருவத்தின் பின்னால் செல்ல முடிவு செய்து முதல் அடியை எடுத்து வைத்தான். அவன் காலில் ஏதோ குத்தியது போல தோன்றியது. ஏதோ சரென்று அவன் மற்றொரு கால் மேல் படர்ந்து சென்றது. அவன் தன்னை மறந்து அலறினான். அவன் கையிலிருக்கும் கத்தி நழுவியது. அந்த முள் செடியை தாண்டி வந்து வெளியே விழுந்தான். அந்த பெண் அவனை நோக்கி ஓடி வந்தாள்.  அவன் நிலைமையை புரிந்த அந்த பெண் உடனே ஊருக்குள் விஷயம் சொல்லி உதவி பெற ஓடியது. அவனுடைய கண்கள் சொருகின. 

அதற்கு அடுத்த நாள் ஒரு தினசரியின் நான்காம் பக்கத்தில் ”சங்கராபுரத்தருகே பாம்பு கடித்து மில் ஓனர் மரணம்” என்ற செய்தி ஒரு சிறிய கட்டத்திற்குள் வந்திருந்தது.

15 comments:

T.V.Radhakrishnan said...

பாட்டியே பாம்பாய் வந்துவிட்டாளோ..என்று கடைசியாக முச்சு விடும்போது அவனுக்கு தோன்றியது.(கதைதானே விடுகிறோம்..எப்படி சொன்னால் என்ன)

Malar said...

ஃபர்ஸ்ட் கொலை செய்வது எப்படி படிச்சிட்டு எப்படி இருந்திருக்கலாம்- னு நினைச்சனோ அதுதான் இந்த "Beta Version" - ல இருக்கு. நார்மலா படிக்கரவங்களுக்கு "கொலை செய்வது எப்படி - Beta Version" - தான் கரெக்ட்-னு நெனைக்கிறேன்.

கதைய நால்லா நகர்த்தியிருக்கிங்க. வாழ்த்துகள்.

நிலாக்காலம் said...

பீட்டா வெர்ஷன் சூப்பர். சொல்ல வந்ததைத் தெளிவா சொல்லியிருக்கீங்க. :-)

கார்த்தி said...

Anney en intha kolai veri... :)

beta version padikkum pothu muthalavuthu pathippin konar urai maathiri irunthathu....

Divyapriya said...

அத விட இது (beta version) சூப்பர் :)

நாமக்கல் சிபி said...

இது சூப்பர் மாமே!

நாமக்கல் சிபி said...

நல்ல பிராக்டீஸ்+ஹோம் வொர்க் தெரிகிறது!

வெட்டிப்பயல் said...

// T.V.Radhakrishnan said...
பாட்டியே பாம்பாய் வந்துவிட்டாளோ..என்று கடைசியாக முச்சு விடும்போது அவனுக்கு தோன்றியது.(கதைதானே விடுகிறோம்..எப்படி சொன்னால் என்ன)

2:11 AM//

மனசுக்குள்ளே திட்றது கேக்குது :)

எல்லாம் ஒரு ஹோம் வொர்க் தானே :)

வெட்டிப்பயல் said...

// Malar said...
ஃபர்ஸ்ட் கொலை செய்வது எப்படி படிச்சிட்டு எப்படி இருந்திருக்கலாம்- னு நினைச்சனோ அதுதான் இந்த "Beta Version" - ல இருக்கு. நார்மலா படிக்கரவங்களுக்கு "கொலை செய்வது எப்படி - Beta Version" - தான் கரெக்ட்-னு நெனைக்கிறேன்.

கதைய நால்லா நகர்த்தியிருக்கிங்க. வாழ்த்துகள்.//

மிக்க நன்றி மலர் :)

எனக்கு ரெண்டுமே பிடிச்சிருந்தது :)

வெட்டிப்பயல் said...

//நிலாக்காலம் said...
பீட்டா வெர்ஷன் சூப்பர். சொல்ல வந்ததைத் தெளிவா சொல்லியிருக்கீங்க. :-)//

இதை தான் எங்க தல கைப்புவும் சொல்லியிருந்தாரு...

வெட்டிப்பயல் said...

//கார்த்தி said...
Anney en intha kolai veri... :)

beta version padikkum pothu muthalavuthu pathippin konar urai maathiri irunthathu....//

சரி சரி... நோ பிலிங்ஸ்...

அடுத்த கதைல மீட் பண்ணுவோம் :)

வெட்டிப்பயல் said...

//Divyapriya said...
அத விட இது (beta version) சூப்பர் :)//

ரொம்ப நன்றிமா :)

வெட்டிப்பயல் said...

//
நாமக்கல் சிபி said...
இது சூப்பர் மாமே!

1:51 PM//
ரொம்ப நன்றி தள...

எப்பவுமே இந்த ஹோம் வொர்க் பண்றது தான். இந்த தடவை ரீ வோர்க் கொஞ்சம் அதிகம்...

இதைவிட போன வருஷம் எழுதின ஆடு புலி ஆட்டத்துல 5 பகுதி திரும்ப எழுதினேன்...

ஜி said...

Intha pathivoda first para vum antha pathivoda last para vum pottirunthaa innum sirappa irunthirukkumnu nenakiren :))

கிஷோர் said...

ஸாரி நண்பா.
இந்த கதை போன வெர்ஷன் போல இல்லை.

இந்த வெர்ஷன் கொஞ்சம் cliché வாக இருக்கின்றது.

அந்த கதையில் இருந்த லேசான பின்நவீனத்துவ வாசனை இதில் இல்லை :(